"சார்! இன்னிக்கு 11 மணிக்கு சேம்பர் ஆஃப் காமர்ஸ் மீட்டிங்ல பேசறீங்க, சாயந்திரம் 6 மணிக்கு இலக்கிய மன்ற விழாவில தலைமை ஏற்றுப் பேசறீங்க" என்று, கோவிந்தராஜனின் அன்றைய முக்கிய நிகழ்ச்சிகளை அவருக்கு நினைவுபடுத்தினான் அவருடைய உதவியாளன் சபாபதி.
"சரி" என்று தலையாட்டிய கோவிந்தராஜன், தன் மேஜை இழுப்பறையிலிருந்த நோட்டை வெளியே எடுத்தார்.
"சார்! ஒண்ணு கேட்டா, தப்பா நினைக்க மாட்டீங்களே!"
"கேளு!" என்றார் கோவிந்தராஜன், சிரித்தபடி.
"நீங்க ஒரு சிறந்த பேச்சாளர். எத்தனையோ கூட்டங்கள்ள, தயார் பண்ணிக்காமயே நீண்ட நேரம் சுவாரசியமாப் பேசறீங்க. ஆனா சில கூட்டங்களுக்கு மட்டும், தயார் பண்ணி வச்சுக்கிட்டு, அதையும் பல தடவை பாத்துக்கறீங்களே, அது ஏன்?"
"அது பேச வேண்டிய விஷயத்தைப் பொருத்தது. பொதுவான விஷயங்கள் இருக்கு. அதையெல்லாம் பத்தி, என்ன வேணும்னா சொல்லலாம், எவ்வளவு வேணும்னா சொல்லலாம். அந்த மாதிரி சந்தர்ப்பங்கள்ள, தயார் பண்ணிக்காம, அப்ப எனக்குத் தோணற சில விஷயங்களைப் பேசுவேன். நான் அதிகம் கூட்டங்கள்ள பேசிக் கிடைச்ச அனுபவத்தால, சில பேச்சுகள் நல்லா அமைஞ்சிருக்கலாம். குறிப்பான விஷயங்களைப் பத்திப் பேசணும்னா, நிச்சயமா தயார் பண்ணிக்கிட்டுத்தான் பேசணும்."
"ஆனா, இன்னிக்கு சேம்பர் ஆஃப் காமர்ஸ்ல நீங்க பேசப் போற சப்ஜெக்ட் உங்களுக்கு நல்லாத் தெரிஞ்சதாச்சே!"
"இருக்கலாம். ஆனா, நான் சொல்ல வேண்டிய விஷயங்கள் எதுவும் விட்டுப் போகக் கூடாது இல்லியா? அதுதான் முன்கூட்டியே யோசிச்சு, பேச வேண்டிய பாயின்ட்களைக் குறிச்சு வச்சுக்கறேன். எதுவும் விட்டுப் போயிடக் கூடாதுங்கறதுக்காக, எத்தனை பாயின்ட்னு கணக்கு வச்சுப்பேன். அப்படியும் விட்டுப் போச்சுன்னா பாத்துக்கறதுக்காக, பாயின்ட்களை சுருக்கமா ஒண்ணு ரெண்டு வார்த்தையில நம்பர் வாரியா ஒரு துண்டுக் காகிதத்தில எழுதி சட்டைப்பையில வச்சுப்பேன். ஆனா, பொதுவா அதைப் பார்க்க வேண்டிய அவசியம் எனக்கு வரதில்ல" என்றார் கோவிந்தராஜன்.
"இலக்கிய மன்றக் கூட்டத்தில பேசவும் தயார் பண்ணியிருக்கீங்களா?"
"ஆமாம். அது எனக்கு அதிகம் தெரியாத சப்ஜெக்ட் ஆச்சே! என்னை மதிச்சுக் கூப்பிட்டிருக்காங்க. அதுக்காக, உருப்படியா ஒண்ணு ரெண்டு விஷயம் சொல்லணும் இல்லையா?"
"சார்! எனக்கு ஒண்ணு தோணுது. இது மாதிரி கூட்டங்கள்ள பேசறதுக்கே இந்த அளவுக்குத் தயார் பண்றீங்களே, உங்க வாழ்க்கைக்கு எந்த அளவுக்குத் திட்டமிட்டிருப்பீங்க?" என்ற சபாபதி, சற்று அதிக உரிமை எடுத்துக் கொண்டு பேசி விட்டோமா என்று நினைத்து, "சாரி சார்! ஏதோ ஒரு ஆர்வத்தில கேட்டுட்டேன்!" என்றான்.
"நீ கேட்டதில தப்பு எதுவும் இல்ல. சொல்றேன். அதுக்கு முன்னால உங்கிட்ட ஒண்ணு கேக்கறேன். சில விஷயங்களைச் செய்யணும்னு நினைச்சு, அப்புறம் மறதியாலேயோ, சோம்பேறித்தனத்தாலேயோ அதைச் செய்யாம விட்டு, அப்புறம் அதுக்காக வருத்தப்பட்டிருக்கியா?" என்றார் .
"எத்தனையோ தடவை!"
"இது மாதிரி செய்ய வேண்டியவைகளச் செய்யாம விட்டதனால வாழ்க்கையில எவ்வளவு இழக்கறோம்கறதை, சின்ன வயசிலேயே நான் புரிஞ்சுக்கிட்டேன். அதுக்கப்பறம் ஒண்ணு செஞ்சேன்" என்ற கோவிந்தராஜன், தன் மேஜை இழுப்பறையிலிருந்து இன்னொரு நோட்டை எடுத்து அவனிடம் காட்டினார்.
அதில், 'செய்ய வேண்டியவை' என்ற தலைப்பில், பல பணிகள் வரிசையாகக் குறிப்பிடப்பட்டிருந்தன. அவற்றில் பெரும்பாலானவை அடிக்கப்பட்டிருந்தன.
"ஒரு விஷயத்தைச் செய்யணும்னு எனக்குத் தோணின உடனேயே, அதை ஒரு துண்டுச் சீட்டில குறிச்சுப்பேன். இதுக்காகவே, சட்டைப்பையில ஒரு துண்டுக் காகிதம் வச்சிருப்பேன். பல எண்ணங்கள் நம் மனசில தோணி, உடனே எவாபரேட் ஆயிடும். அந்த எண்ணம் திரும்ப வரும்னு கூடச் சொல்ல முடியாது அதனாலதான், அதை உடனே பிடிச்சு வச்சுக்கற மாதிரி, எழுதி வச்சுக்கறது முக்கியம்.
"ராத்திரி தூங்கறத்துக்கு முன்னால, துண்டுச் சீட்டில குறிச்ச விஷயங்களை இந்த நோட்டில எழுதி வைப்பேன். தினமும் இந்த நோட்டைப் பார்த்து, நான் செய்ய நினைச்ச சில விஷயங்களை அன்னிக்கு செய்ய முடியுமான்னு பார்த்து, அன்றைய திட்டங்கள்ள எழுதிப்பேன்.
"சில விஷயங்களை வேண்டாம்னு பின்னால கைவிடலாம். சில விஷயங்களை செய்ய முடியாம போகலாம். ஆனா முக்கியமான பல விஷயங்களை செஞ்சு முடிக்க முடியும். செஞ்சு முடிச்சதையெல்லாம் அடிச்சுடுவேன்.
"தினமும் இந்த நோட்டுப் புத்தகத்தைப் பாக்கறப்ப, இவ்வளவு விஷயங்களை செஞ்சிருக்கோமேன்னு நினைச்சு சந்தோஷமாகவும், உற்சாகமாவும் இருக்கும். இன்னும் பல விஷயங்களைச் செய்யவு உந்துதலாகவும் இருக்கும். வாழ்க்கையில என்னால பல விஷயங்களை சாதிக்க முடிஞ்சதுக்கு, நான் இந்த முறையைப் பின்பற்றினது ஒரு முக்கியக் காரணம்னு நினைக்கறேன். நீயும் இதை முயற்சி செஞ்சு பாக்கலாமே!" என்றார் கோவிந்தராஜன்
"நிச்சயமா சார்!" என்றான் சபாபதி, உற்சாகத்துடன்.
"அப்ப, நான் சீக்கிரமே வேற உதவியாளரைத் தேட வேண்டி இருக்கும்னு சொல்லு!"
"ஏன் சார்?" என்றான் சபாபதி, அதிர்ச்சியுடன்.
"இது மாதிரி செய்ய ஆரம்பிச்சா, கொஞ்ச காலத்திலேயே, நீ முன்னேறி மேல போயிடுவியே! அப்ப, நான் புதுசா வேற ஒத்தரைத்தானே உதவியாளரா வச்சுக்கணும்?" என்றார் கோவிந்தராஜன், சிரித்தபடியே.
குறள் 540:
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.
No comments:
Post a Comment