என் கல்லூரிப் படிப்புக்குப் பிறகு, நான் ஒரு மத்திய அரசு வேலையில் சேர்ந்து, டில்லியில் குடியேறி விட்டேன்.
கல்லூரி நண்பர்களுடன் ஒரு சில ஆண்டுகளுக்குக் கடிதத் தொடர்பு இருந்தது. ஊருக்கு வரும்போது, சிலரை நேரில் சந்தித்துப் பேசுவேன்.
ஆனால், காலப்போக்கில் கடிதத் தொடர்புகள் குறைந்து, பிறகு நின்றும் போய் விட்டன. நான் ஊர்ப்பக்கம் வருவதும் குறைந்து விட்டதால், பல நண்பர்களுடனான தொடர்பு அற்றுப் போய் விட்டது.
வீட்டில் தொலைபேசி வசதி என்பது ஒரு சிலருக்கே சாத்தியம் என்று இருந்த அந்தக் காலத்தில், கடிதப் போக்குவரத்து மூலம் தொடர்புகளை நிலைநிறுத்திக் கொள்வது என்பது பலருக்கும் ஒரு சவாலாகவே இருந்தது - குறிப்பாக, என் போன்று சோம்பேறித்தனம் மிகுந்தவர்களுக்கு!
அவ்வாறு தொடர்பு விட்டுப் போனவர்களில் ஒருவன்தான் சசிகுமார்.
வேலையிலிருந்து ஓய்வு பெற்று நான் சென்னையில் வந்து குடியேறிய பிறகு, இன்னொரு நண்பன் மூலம் சசிகுமாருடன் எனக்கு மீண்டும் தொடர்பு ஏற்பட்டது.
முதலில் தொலைபேசியில்தான் பேசினோம். ஒரு தனியார் நிறுவனத்தில் இருபது ஆண்டுகள் வேலை செய்து விட்டு, இப்போது ஒரு தொழிற்சாலையைத் தொடங்கி நடத்தி வருவதாகச் சொன்ன சசிகுமார், தன் தொழிற்சாலைக்கு வரும்படி என்னை அழைத்தான்.
சசிகுமாரின் தொழிற்சாலைக்கு நான் சென்றதும், என்னை வரவேற்று உபசரித்து, அவன் அறையில் அமர வைத்தான் அவன்.
எங்கள் கடந்த கால வாழ்க்கை பற்றிய பல விஷயங்களை நாங்கள் விரிவாகப் பேசிக் கொண்டிருந்தோம்.
சில நிமிடங்களுக்கு ஒருமுறை, சில ஊழியர்கள் அவன் அறைக்கு வந்து அவனிடம் ஏதோ கேட்க, அவனும் அவர்களுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தான்.
பொதுவான பல விஷயங்களைப் பற்றிப் பேசியதும், "சரி! உன் தொழிற்சாலை பற்றிச் சொல்லு" என்றேன் நான்.
அவன் தொழிற்சாலை செயல்பாடுகள் பற்றி விளக்கி விட்டு, "ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில வேலை செஞ்சதில நிறையக் கத்துக்கிட்டேன், குறிப்பா, வேலைகளை எப்படிப் பிரிச்சுக் கொடுக்கறது, யாருக்கு எந்த வேலையைக் கொடுக்கறதுங்கறதை. திறமையும், அனுபவமும் உள்ளவர்களை வேலைக்கு எடுத்து, அவங்க அவங்களுக்கு எதில அதிகத் திறமை இருக்கோ, அந்த வேலையைக் கொடுத்திருக்கேன். எல்லாரும் பொறுப்போட, சிறப்பா செயல்படறாங்க!" என்றான் சசிகுமார் பெருமையுடன்.
"நல்ல காரியம் செஞ்சிருக்கே!" என்றேன் நான்.
அப்போது, ஒரு ஊழியர் வந்து அவனிடம் ஏதோ கேட்டு விட்டுப் போனார்.
அவர் சென்றதும், "இவர் என்னோட பர்சேஸ் மானேஜர். ஒரு பர்சேஸை ஃபைனலைஸ் பண்றதுக்கு முன்னே, எங்கிட்ட அப்ரூவல் வாங்கிட்டுப் போறாரு" என்றான் சசிகுமார், பெருமையுடன்.
"இதுக்கு முன்னால சில பேர் வந்து உங்கிட்ட ஏதோ கேட்டுட்டுப் போனாங்களே, அவங்கள்ளாம்?"
"எல்லாருமே வெவ்வேற டிபார்ட்மென்ட்களுக்கு மானேஜர்கள்தான்!"
"உங்கிட்ட அப்ரூவல் வாங்கிட்டுத்தான் உன் மானேஜர்கள் எதையுமே செய்வாங்களா?"
"பின்னே? அப்ரூவல் மட்டும் இல்ல, ஒவ்வொரு ஸ்டேஜிலேயும் எங்கிட்ட கேட்டுட்டுத்தான் மேற்கொண்டு செயல்படுவாங்க" என்றான் சசிகுமார்.
"நான் வேலை செஞ்சது அரசாங்கத்தில. எனக்குக் கீழே வேலை செய்யறவங்களை நான் தேர்ந்தெடுக்க முடியாது. அரசாங்கத்தில யாரை நியமிச்சிருக்காங்களோ, அவங்களை வச்சுக்கிட்டுத்தான் நான் சமாளிக்கணும். சில ஊழியர்கள் சராசரியானவங்களாத்தான் இருப்பாங்க. ஆனா அவங்களுக்குக் கூட ஓரளவு சுதந்திரம் கொடுத்து செயல்பட வச்சப்ப, அவங்க நல்லாவே செயல்பட்டாங்க" என்றேன் நான்.
"நீ என்ன சொல்ல வர?" என்றான் சசிகுமார், புரியாமல்.
"நீ ஒவ்வொரு வேலைக்கும் பொருத்தமான திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்திருக்க. ஆனா அவங்களுக்கு எந்த அதிகாரமும் கொடுக்காம, எல்லாத்தையும் உங்கிட்ட கேட்டுத்தான் செய்யணுங்கற மாதிரி அமைப்பை உருவாக்கி இருக்கே. ஒத்தருக்கு பொறுப்பு கொடுத்து, அதை நிறைவேத்தறதுக்கான அதிகாரத்தையும் அவங்களுக்குக் கொடுத்தா, அவங்க இன்னும் சிறப்பா செயல்படுவாங்க, உனக்கும் சுமை குறையும். நீ வேணும்னா, ஒண்ணு ரெண்டு சின்ன விஷயங்களில் இதை முயற்சி செஞ்சு பாரு. உனக்கே தெரியும்" என்றேன் நான்.
நான் சொல்வதை யோசித்துப் பார்ப்பது போல் சசிகுமார் சற்று மௌனமாக இருந்தான்.
(குறிப்பு: திருவள்ளுவர் இந்தக் குறளில் delegation என்னும் 'பொறுப்பு மற்றும் அதிகரப் பகிர்வு' பற்றிக் குறிப்பிடுகிறார் என்று கூறுவது சற்று மிகையாக இருக்கக் கூடும். ஆயினும், 'ஒரு செயலுக்கு உரிய (பொருத்த) நபரைத் தேர்ந்தெடுத்து, அவரை அந்தச் செயலுக்கு உரியவராக ஆக்க வேண்டும்' என்று பொருள்படும் இந்தக் குறளில் வரும் 'உரியனாகச் செயல்' என்ற சொற்றொடருக்கு ஏற்ப, ஒருவரை ஒரு செயலுக்கு உரியவர் என்று தீர்மானித்த பிறகு, அந்தச் செயல் புரியத் தேவையான உரிமை, சுதந்திரம் அல்லது அதிகாரம் அவருக்கு அளிக்கப்பட வேண்டும் என்று சற்றே நீட்சியான பொருளை எடுத்துக் கொண்டு இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது.)
குறள் 518:
வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.
No comments:
Post a Comment