"நான் இந்த நிறுவனத்தை ஆரம்பிச்ச நாளிலேருந்து, என் வலது கையா இருந்து எனக்கு உதவுகிறவர் இந்த பாலுதான்!" என்றுதான் தொழிலதிபர் சிவானந்தம் பாலுவை எல்லோருக்குமே அறிமுகம் செய்து வைப்பார்.
பட்டப்படிப்பை முடித்ததும், சிவானந்தத்தின் சிறிய நிறுவனத்தில் வேலை கிடைத்தபோது, அதை ஒரு தற்காலிக வேலையாக நினைத்துத்தான் அங்கே வேலைக்குச் சேர்ந்தான் பாலு.
ஆனால் சிவானந்தம் அவனிடம் காட்டிய அன்பும், அவனுக்குக் கொடுத்த முக்கியத்துவமும், அவனை அந்த நிறுவனத்திலேயே தொடர்ந்து பணி செய்ய வைத்தன. வேறு வேலைக்கு முயற்சி செய்யாமல், தன் எதிர்காலத்தை அந்த நிறுவனத்துடனேயே இணைத்துக் கொண்டான் பாலு.
பாலுவை விட அதிகம் படித்தவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கணினி நிபுணர்கள், மார்க்கெடிங் நிபுணர்கள் என்று சிலர் அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தாலும், அவர்கள் அனைவரும் பாலுவுக்குக் கீழ்தான் பணியாற்ற வேண்டும் என்ற நிலையை உருவாக்கினார் சிவானந்தம்.
"நம்ம கம்பெனிக்கு ஒரு பெரிய விரிவாக்கத் திட்டம் வச்சிருக்கேன். அது நிறைவேறும்போது, உனக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கிடைக்கும்" என்று பாலுவிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார் சிவானந்தம்.
"பாலு! நான் ரொம்ப நாளா திட்டம் போட்டுக்கிட்டிருந்த விரிவாக்கத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துடுச்சு!" என்றார் சிவானந்தம்.
"ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்!" என்றான் பாலு,
"சரியா சொல்லணும்னா, இது விரிவாக்கம் இல்ல, ஒரு புது ப்ராஜக்ட். வேற ஒரு கம்பெனியை ஆரம்பிச்சு, அதிலதான் இதை செயல்படுத்தப் போறோம்" என்ற சிவானந்தம், "இந்த ப்ராஜக்டை நிர்வகிக்க, புது கம்பெனியோட சீ ஈ ஓ-வா ரமணனைப் போடலாம்னு இருக்கேன்" என்றபடி, பாலுவின் முகத்தைப் பார்த்தார்.
பாலு எதுவும் சொல்லவில்லை. ஆனால், அதிர்ச்சியும், ஏமாற்றமும் அவன் முகத்தில் பிரதிபலித்தன.
"இந்த ப்ராஜக்டை செயல்படுத்தறப்ப, உன்னைத்தான் புது கம்பெனிக்கு சீ ஈ ஓ-வாப் போடறதா இருந்தேன். ஆனா, இந்த ப்ராஜக்ட் ரொம்ப காம்ப்ளிகேடட். ஒவ்வொரு ஸ்டேஜிலேயும் நிறைய அப்ரூவல்கள் வாங்கணும். தொழிற்சாலைக்குக் கட்டிடம் கட்டறதிலேருந்து, இயந்திரங்கள் நிறுவற வரை, கான்ட்ராக்டுகள் கொடுத்து, கான்டிராக்டர்களோட மல்லுக்கு நின்னு, வேலைகளை சரியான விதத்தில, குறிப்பிட்ட காலத்துக்குள்ள முடிக்கிறவரை, எல்லாமே சவாலான வேலைகள்தான்.
"நீ திறமையானவன்தான். ஆனா, இந்த ப்ராஜக்டை நிர்வகிக்க, கொஞ்சம் கடினத்தன்மை வேணும். குறிப்பிட்ட சில வகை அனுபவங்கள் வேணும். அதனால, ரமணன்தான் இதுக்குத் தகுந்தவனா இருப்பான்.
"ஆனா, உன்னோட முக்கியத்துவம் குறையாது. உன்னை நான் எக்சிக்யூடிவ் செகரட்டரி டு சேர்மனா நியமிக்கப் போறேன். அதனால, ரமணன் கூட என் அனுமதிகளைப் பெற, உன் மூலமாத்தான் வரணும். இப்ப இருக்கிற கம்பெனி, புது கம்பெனி ரெண்டிலேயுமே எனக்கு அடுத்த நிலையில நீ இருப்ப. சரிதானே?" என்றார் சிவானந்தம்
தான் ஏமாற்றம் அடையக் கூடாது என்பதற்காகத்தான் சிவானந்தம் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறார் என்பது பாலுவுக்குப் புரிந்தது.
தான் எதிர்பார்த்திருந்த பொறுப்பு கிடைக்காவிட்டாலும், சிவானந்த்தின் முடிவில் இருந்த நியாயத்தையும், தான் ஏமாற்றம் அடையக் கூடாது என்பதற்காக, அவர் தனக்கு இன்னொரு உயர் பொறுப்பைக் கொடுத்திருப்பதையும் புரிந்து கொண்டவனாக, பாலு மௌனமாகத் தலையாட்டினான்.
குறள் 515:
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.
No comments:
Post a Comment