Monday, September 13, 2021

514. முதல் மூவர்

அந்த நிறுவனத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்பு துவங்கியது.

நிறுவனத்தின் பொது மேலாளர் கண்ணன் அறிமுக உரை நிகழ்த்தினார்.

புதிய அதிகாரிகளை வரவேற்று, பயிற்சி பற்றி அவர்களுக்கு விளக்கி விட்டு, "பயிற்சியைத் துவக்கி வைக்குமாறு நம் நிறுவனத் தலைவர் மார்க்கபந்து அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்" என்றார் அவர். 

எளிய உடையணிந்து அமைதியாக மேடையில் அமர்ந்திருந்த அந்த முதியவர் எழுந்து மைக் முன் நின்று பேசத் தொடங்கினார்.

"நீங்க உக்காந்துகிட்டே பேசலாம் சார்!" என்றார் கண்ணன்.

"இல்லை. நின்னுகிட்டே பேசறேன். என்னை மாதிரி வயசானவங்களுக்கு, இது மாதிரி நின்னுக்கிட்டே பேசறது கூட ஒரு உடற்பயிற்சி மாதிரிதானே? அதோட நின்னுகிட்டே பேசினாதான் கால்வலி வந்து பேச்சை சீக்கிரம் முடிக்க வைக்கும்!" என்று மார்க்கபந்து கூறியதும் அமர்ந்திருந்தவர்களிடையே மெல்லிய சிரிப்பு எழுந்தது.

"இருபது வருடங்களுக்கு முன்பு இந்த நிறுவனத்தை நான் துவங்கியபோது மூன்று அதிகாரிகளைத்தான் வேலைக்கு எடுத்தேன். இன்று ஒரே நேரத்தில் இருபது அதிகாரிகளை வேலைக்கு எடுக்கற அளவுக்கு நம் நிறுவனம் வளர்ந்திருப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது.

"பொதுவாக எந்த வேலையையும் முறையாகச் செய்ய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருப்பவன். அதிகாரிகளை நியமிப்பதிலும் அப்படித்தான் செய்தேன். என் நண்பர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்கள் சிலரைப் பரிந்துரை செய்தார்கள். அவர்கள் நம்பிக்கையானவர்களாக இருப்பார்கள் என்று சொன்னார்கள்.

"நம்பிக்கையானவர்களாக இருந்தால் மட்டும் போதுமா? அறிவு, செயல்திறன், முடிவெடுக்கும் திறன், விரைவாகச் செயல்படுதல், முன்முயற்சி எடுத்துச் செயல்படுதல் போன்ற பல தன்மைகளை மதிப்பீடு செய்துதான் சிறந்த ஊழியர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைத்து, பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து, விண்ணப்பம் செய்தவர்களில் வடிகட்டி எடுத்த சிலரை நேரில் அழைத்துப் பேசி, அவர்கள் பின்னணியை ஆராய்ந்து ஒரு நீண்ட விரிவான வழிமுறையைப் பின்பற்றி மூன்று பேரைத் தேர்ந்தெடுத்தேன்.

"ஊழியர்களிடம் இருக்க வேண்டிய சில தன்மைகளின் அடிப்படையில் என் முதல் மூன்று அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்தாக நான் கூறினேன். நீங்கள் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால் உங்களிடம் அந்தத் தன்மைகள் இருப்பதாக நினைத்து நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளாலாம். வாழ்த்துக்கள்!"

கேட்டுக் கொண்டிருந்தவர்களின் முகங்களில் இயல்பான புன்னகை தெரிந்தது. ஒரு சிலர் கைதட்ட ஆரம்பித்த பிறகு, மற்ற பலர் கைதட்டாததால் நிறுத்திக் கொண்டனர்.

"என்ன தயக்கம்? கைதட்டுங்கள். நம்மை நாமே கொண்டாடிக் கொள்வது மிகவும் முக்கியம்!" என்று மார்க்கபந்து கூறியதும் அனைவரும் உற்சாகத்துடன் கைதட்டினர்.

"நான் பேசுவது கதை சொல்வது போல் உங்களுக்குத் தோன்றி இருக்கலாம், கதை என்றால் அதில் ஒரு திருப்பம், ஒரு ட்விஸ்ட் இருக்க வேண்டுமே!" என்று சொல்லி நிறுத்தினார் மார்க்கபந்து.

சில விநாடிகள் முன்புதான் ஆரவாரமாகக் கைதட்டியவர்கள் இப்போது முழு அமைதியுடன் தங்கள் நிறுவனத் தலைவர் சொல்லப் போவதைக் கேட்கக் காத்திருந்தனர்.

"நான் தேர்ந்தெடுத்த மூவரும் அறிவு, திறமை. ஆளுமை எல்லாவற்றிலும் நிறந்தவர்கள்தான். ஆனால் காலப்போக்கில் சில மாறுதல்கள் ஏற்பட்டன. இந்த மூவரில் ஒருவர் மோசடி செய்து கண்டுபிடிக்கப்பட்டு நான் கொடுத்த புகாரினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் தண்டனை கொடுக்கப்பட்டு சிறைக்குச் சென்று விட்டார்.

"இன்னொருவர் வேலையில் அதிக ஆர்வம் காட்டாமல் சராசரியாகச் செயல்பட்டு வந்தார். சில வருடங்கள் கழித்து, தனக்குப் பதவி உயர்வு கிடைக்கவில்லை என்ற ஏமாற்றத்தால் வேலையை விட்டுப் போய் விட்டார். அவர் போய்ச் சேர்ந்த நிறுவனத்திலும் அவருக்கு அதிக முன்னேற்றம் ஏற்பட்டிருக்காது என்று நினைக்கிறேன்..

"அதற்குப் பிந்தைய காலத்தில் நான் தேர்ந்தெடுத்து நியமித்த சில அதிகாரிகளிடமும் இது போன்ற மாறுபாடுகளை நான் பார்த்தேன். முதலில் இது எனக்கு ஏமாற்றம் அளித்து, என் மீதே கோபத்தை ஏற்படுத்தியது.

"இது இயல்பானது என்று புரிந்து கொள்ள எனக்குப் பல வருடங்கள் பிடித்தன. என்னதான் விண்ணப்பம் செய்தவர்களை நாம் ஆய்வு செய்து அவர்களில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுத்தாலும், இயல்பாகவே மனிதர்கள் வேறுபட்ட சிந்தனைகளும், செயல்வகைகளும் உள்ளவர்கள். அதனால் இத்தகைய வேறுபட்ட செயல்பாடுகள் ஏற்படத்தான் செய்யும் என்று புரிந்து கொண்டேன்.

"ஒரு விதத்தில் இது என் ஈகோவுக்குக் கிடைத்த அடி என்று கொள்ளலாம். நம்மால் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியும் என்பது தவறான நம்பிக்கை என்று இந்த அனுபவங்கள் எனக்குப் புரிய வைத்தன.

"சமீப காலங்களில் ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பதில் நான் எந்தப் பங்கும் பெறுவதில்லை. உங்களைச் சிறந்த முறையில் ஆய்வு செய்துதான் தேர்ந்தெடுத்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியும், எனவே நீங்கள் பல விதங்களிலும் சிறந்தவர்கள்தான் என்பதில் சந்தேகமில்லை. 

"ஆனால் உங்களை நிலைநிறுத்திக் கொள்வதும், உங்களை உயர்த்திக் கொள்வதும் உங்கள் கைகளில், உங்கள் செயல்பாடுகளில்தான் இருக்கிறது. இதை நீங்கள் புரிந்து கொண்டு செயல்பட்டால், இந்த நிறுவனத்தில் மட்டுமின்றி உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் பெருமளவில் உயர முடியும்."

மார்க்கபந்து அமர்ந்ததும் பெரும் கைதட்டல் எழுந்தது.

கைதட்டல் அடங்கியதும், ஒருவர் தயக்கத்துடன் எழுந்து, "சார்! ஒரு சந்தேகம். கேட்கலாமா?" என்றார்.

"கேளுங்கள்."

"நீங்கள் துவக்கத்தில் பணியமர்த்திய மூன்று அதிகாரிகளில் இரண்டு பேரைப் பற்றிக் கூறினீர்கள். மூன்றாவது நபர் பற்றிக் கூறவில்லையே!" என்றார் அவர்.

"ஓ! மறந்து விட்டேன். அல்லது வேண்டுமென்றேதான் கூறவில்லை என்றும் வைத்துக் கொள்ளலாம்!" என்று சிரித்துக்கொண்டே கூறிய மார்க்கபந்து, "அவர் தன் சிறப்பான செயல்பாட்டினால் முன்னேறி இன்று இந்த நிறுவனத்தின் பொது மேலாளராகி விட்டார்" என்றபடியே தன் அருகில் அமர்ந்திருந்த பொது மேலாளர் கண்ணனைப் பெருமையுடன் பார்த்து அவர் தோளில் தட்டினார்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 52
 தெரிந்து வினையாடல்

குறள் 514:
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்.

பொருள்:
எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும் (செயலை மேற்கொண்டு செய்யும் போது) செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலர் உண்டு.
 அறத்துப்பால்                                                                              காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1061. ஏன் உதவி கேட்கவில்லை?

"இன்னும் ஒரு வாரத்தில ஆபரேஷன் பண்ணணும்!" என்றார் டாக்டர். "முடிவு பண்ணிட்டுச் சொல்லுங்க!" டாக்டரின் அறையிலிருந்து வெளியே...