மகுட நாட்டு மன்னன் பரகேசரி கூட்டிய ரகசிய ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர் கண்ணபிரான், படைத்தலைவர் தடந்தோளன் ஆகிய இருவர் மட்டுமே கலந்து கொண்டனர்.
"நம் நாட்டின் வட எல்லையில் இருக்கும் முப்பது கிராமங்களை முல்லை நாடு ஆக்கிரமித்துக் கொண்டு ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. அவற்றை மீட்க இப்போது நமக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இப்போது அவர்கள் தங்கள் கிழக்கு எல்லையில் இருக்கும் பாரிஜாத நாட்டுடன் போரில் ஈடுபட்டிருக்கிறார்கள். இப்போது நாம் போய்த் தாக்கினால், அவர்களால் நம்மை எதிர்கொள்ள முடியாது. என்ன சொல்கிறீர்கள்?" என்றார் மன்னர்.
"தாக்கலாம் மன்னவா! ஆனால் நம் வட எல்லைப் பகுதி பெரும்பாலும் மலைப்பாங்கானது. நாம் கீழிருந்து மேலே ஏற வேண்டும். அவர்கள் படைகள் மேட்டில் இருப்பதால், நம் படைகளைப் பார்ப்பதும், தாக்குவதும் அவர்களுக்கு எளிதாக இருக்கும். அதனால், தாக்குதல் நடத்துவதற்குச் சரியான இடத்தை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்" என்றார் படைத்தலைவர் தடந்தோளன்.
"அப்படிப்பட்ட இடம் ஏதாவது இருக்கிறதா?" என்றார் மன்னர்.
படைத்தலைவர் அமைதியாக இருந்தார்.
அரசர் அமைச்சரைப் பார்த்தார்.
"மன்னா! நம் எல்லையிலிருந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது மிகவும் கடினம்" என்றார் அமைச்சர், தயக்கத்துடன்.
"முடியாது என்று சொல்வதற்காகவா உங்கள் இருவரையும் கூப்பிட்டேன்?" என்றார் மன்னர், சீற்றத்துடன்.
தொடர்ந்து, "இப்போது முல்லை நாட்டின் கிழக்கு எல்லையில் போர் நடக்கும்போது, அவர்கள் படைகள் எல்லாம் அவர்கள் கிழக்கு எல்லையில்தான் இருக்கும். அவர்கள் தெற்கு எல்லையில், அதாவது அவர்கள் ஆக்கிரமித்திருக்கும் நம் நாட்டின் பகுதியில் அதிகப் படைகள் இருக்காது. இப்போது நாம் தாக்குதல் நடத்தாவிட்டால், பின் எப்போது நாம் இழந்த பகுதிகளை எப்போது மீட்பது?" என்றார் அரசர், ஆற்றாமையுடன்.
"மன்னிக்க வேண்டும் அரசே! எதிரியை நாம் சுலபமாக எடை போட்டு விடமுடியாது. அவர்களுடைய திட்டங்கள் என்ன என்பதை நாம் கண்டறிய வேண்டும். இந்தக் கூட்டத்துக்கு ஒரு முக்கியமான நபரைத் தாங்கள் அழைக்கவில்லை. அவரிடம் தகவல் பெறாமல் நாம் எந்த ஒரு முடிவும் எடுப்பது பொருத்தமாக இருக்காது" என்றார் அமைச்சர்.
சற்று யோசித்த அரசர், "ஒற்றர்படைத் தலைவரைச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். சரி, அவர் அரண்மனையில் இருந்தால் உடனே வரச் சொல்லுங்கள்!" என்றார்.
"இல்லை அரசே! எதிரி நாட்டிலுள்ள நம் ஒற்றர்களிடமிருந்து தொடர்ந்து தகவல் பெறும் பணியில் அவர் ஈடுபட்டிருக்கிறார். அவர் இப்போது அரண்மனையில் இல்லை. எல்லாத் தகவல்களையும் பெற்று, இன்னும் இரண்டு நாட்களில் அரண்மனைக்குத் திரும்புவதாக அவர் என்னிடம் சொல்லி விட்டுச் சென்றிருக்கிறார். அவர் திரும்ப வந்ததும், நாம் மீண்டும் கூடி ஆலோசிக்கலாம் என்பது என் விண்ணப்பம்" என்றார் அமைச்சர்.
அரசர் மௌனமாகத் தலையாட்டினார்.
மூன்று நாட்களுக்குப் பிறகு நடந்த கூட்டத்தில், ஒற்றர்படைத் தலைவரும் இருந்தார். தனக்குக் கிடைத்த தகவல்களை, அவர் விரிவாகப் பகிர்ந்து கொண்டார்.
"ஒற்றர்படைத் தலைவர் தெரிவித்த தகவல்களின்படி, முல்லை நாட்டு மன்னன் பாரிஜாத நாட்டுடன் சமாதானம் செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறான். அத்துடன், அவன் ஆக்கிரமித்துள்ள நம் நாட்டின் பகுதிகளுக்குள் பரவலாகப் பல இடங்களில் அவன் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், நாம் நம் எல்லையிலிருந்து தாக்குதல் நடத்தினால், அவர்கள் அனைவரும் எல்லைப் பகுதிக்கு வந்து நம்மைத் தாக்குவார்கள். என்ன செய்யலாம், சொல்லுங்கள்?" என்றார் அரசர், அமைச்சரைப் பார்த்து. இப்போது அவர் குரலில் சோர்வும், இயலாமையும் தென்பட்டன.
"எனக்கு ஒரு யோசனை இருக்கிறது, அரசே! முல்லை நாட்டின் மேற்குப் பகுதியில் கோரையாறு ஓடுகிறது. அந்த ஆறு முல்லை நாட்டுக்கும் செண்பக நாட்டுக்கும் பொதுவானது. அங்கே முல்லை நாட்டின் படைகள் அதிகம் இல்லை. சில வீரர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். அதை நம் ஒற்றர்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். செண்பக நாடு நம் நட்பு நாடுதான். முல்லை நாட்டுடன் அவர்களுக்குப் பகை இல்லாவிட்டாலும், நட்பும் இல்லை. எனவே, செண்பக நாட்டு மன்னரின் அனுமதியுடன், நம் படை விரர்கள் படகுகளில் சென்று, ஆக்கிரமிக்கப்பட்ட நம் நாட்டுப் பகுதிக்குள் மேற்கு எல்லை வழியே நுழைந்து, அங்கிருக்கும் முல்லை நாட்டுப் படைகளை வளைத்துக் கொண்டால், அவர்களால் எதுவும் செய்ய முடியாது. அதே சமயம், தெற்கிலிருந்தும் நம் படைகள் முன்னேறலாம். படைத் தலைவரிடமும் இது பற்றி ஆலோசித்தேன். அவரும் இது சாத்தியம்தான் என்றுதான் கூறுகிறார்" என்றார் அமைச்சர்.
அரசர் உற்சாகம் அடைந்தவராக, "அருமையான யோசனை அமைச்சரே! அன்று நீங்கள் சில தடைகளைச் சொல்லி விவாதத்தைத் தள்ளிப் போட்டபோது, உங்கள் மீது எனக்கு அதிருப்தி ஏற்பட்டது உண்மைதான். உங்கள் சிந்தனை இப்போதுதான் எனக்குப் புரிகிறது. தாக்குதலுக்குச் சரியான இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டியதன் அவசியத்தையும், எதிரியைக் குறைத்து மதிப்பிடாமல், அவர்கள் நிலையை அறிந்து செயல்பட வேண்டிய அவசியத்தையும் கருத்தில் கொண்டு கூறப்பட்ட உங்கள் யோசனை பாராட்டுக்குரியது" என்றார்.
அரசியல் இயல்
செய்வதற்கு ஏற்ற இடத்தை முழுமையாகக் கண்டறிவதற்கு முன், எந்தச் செயலையும் தொடங்கக் கூடாது, பகைவரை இகழ்வாக நினைக்கவும் (குறைத்து மதிப்பிடவும்) கூடாது.