Tuesday, June 1, 2021

489. புதிய முதல்வர்

முதல்வர் சாந்தலிங்கத்தின் மீதான ஊழல் வழக்கில் அவருக்கு எதிராகத் தீர்ப்பு வந்து அவர் முதல்வர் பதவியை இழந்ததும், அவர் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முருகனைப் புதிய முதல்வராகத் தேர்ந்தெடுத்தனர்

கட்சியில் தான் ஒருவர்தான் தலைவர் மற்ற அனைவரும் தனக்கு அடிமைகள் என்ற வகையில்தான் சாந்தலிங்கம் தன் கட்சியை நடத்தி வந்தார்.  

தீர்ப்பினால் சாந்தலிங்கம் பதவி இழந்ததும், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தலைவராக முருகனைத் தேர்ந்தெடுத்ததும் சாந்தலிங்கத்தின் விருப்பத்தின்படிதான். 

சமீபத்தில்தான் அமைச்சராக்கப்பட்டிருந்த, அமைச்சரவையிலும் சரி, கட்சியிலும் சரி ஜூனியராக இருந்த, மக்களால் அதிகம் அறியப்படாத முருகன் பெயரை சாந்தலிங்கம் அறிவித்தது, தங்களுக்கு முதல்வராகும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த, பல வருடங்கள் அமைச்சர்களாக இருந்த அனுபவம் பெற்ற மூத்த தலைவர்கள் சிலருக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், எதுவும் செய்ய முடியாமல் அவர்கள் அமைதியாக இருந்தனர்.

புதிய முதல்வருக்கும் பிற அமைச்சர்களுக்கும் ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தபோது அவர்களுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது.

சாந்தலிங்கத்தின் அமைச்சரவையில் இருந்த பல அமைச்சர்களுக்குத் தன் அமைச்சரவையில் முருகன் இடமளிக்கவில்லை. புதிதாகப் பலருக்கு வாய்ப்பளித்திருந்தான்.

பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்து, முருகன் முதல்வர் அறைக்கு வந்து அமர்ந்ததும், மூன்று முன்னாள் அமைச்சர்கள் அவன் அறைக்குள் நுழைந்தனர்.

நுழைந்தவுடனேயே, "என்னப்பா நினைச்சுக்கிட்டிருக்கே நீ?" என்றார் ஆதிமூலம் என்ற மூத்த தலைவர் கோபத்துடன். 

மூன்று முதல்வர்களின் அமைச்சரவையில் இரண்டாம் இடத்தில் இருந்ததால் ஆதிமூலத்துக்கு நிரந்தர நம்பர் 2 என்ற செல்லப்பெயர் உண்டு. இப்போது அந்த 'நிரந்தர' இடமும் அல்லவா போய் விட்டது!

"இங்கே பாருங்க! முதல்வர்கிட்ட பேசறபோது கொஞ்சம் மரியாதையாப் பேசணும்" என்றான் முருகன்.

பொங்கி வந்த கோபத்தை அடக்கிக் கொண்ட ஆதிமூலம், "இந்த முதல்வர் பதவியே தலைவர் உங்களுக்குப் போட்ட பிச்சை. அதை மறந்துட்டு நடந்துக்கிறீங்க நீங்க! தலைவரோட அமைச்சரவையிலிருந்த அதே அமைச்சர்களை வச்சுக்கிட்டு அவங்க சொல்றபடி ஆட்சி நடத்திக்கிட்டு, தலைவர் திரும்பி வந்ததும் அவர்கிட்ட நீங்க ஆட்சியை ஒப்படைக்கணுங்கறதுதான் அவர் உங்ககிட்ட எதிர்பார்த்தது. நீங்க என்னடான்னா எங்களையெல்லாம் விட்டுட்டுப் புதுசா உங்க இஷ்டத்துக்கு அமைச்சரவையை அமைச்சிருக்கீங்க!" என்றார்.

"ஐயா! உங்களுக்குத் தெரியாதது இல்ல. ஆளுநர் ஒத்தரை முதலமைச்சரா நியமிச்சப்பறம், தன்னோட அமைச்சரவையை அமைக்கறது அவர் விருப்பம், அவர் உரிமை!" என்றான் முருகன் அமைதியாக.

"உனக்குத் திமிர் ரொம்ப ஏறி இருக்கு. நாளைக்கே சிறையிலே தலைவரைப் போய்ப் பாத்துப் பேசி உன்னை இந்த நாற்காலியிலேந்து தூக்கி எறியறேனா இல்லையா பாரு!" என்று கோபமாகக் கூறியபடியே வெளியேறினார் ஆதிமூலம். மற்ற இருவரும் அவரைப் பின் தொடர்ந்தனர்.

ஆதிமூலம் சென்றதும்,தலைமைச் செயலாளர் உள்ளே வந்தார்.

பியூனை அழைத்த முருகன்,"கொஞ்ச நேரத்துக்கு யாரையும் உள்ள விடாதீங்க" என்றான்.

"வாழ்த்துக்கள்!" என்றார் தலைமைச் செயலாளர்.

"நன்றி சார். உங்க மேல எனக்கு நிறைய மதிப்பு உண்டு. நீங்க திறமைசாலி, நேர்மையானவர்னு நிறைய பேர் சொல்லக் கேட்டிருக்கேன். நானும் கவனிச்சிருக்கேன். உங்க உதவி எனக்கு நிறைய வேணும்" என்றான் முருகன்.

"உங்களுக்கு உதவி செய்ய வேண்டியது என் கடமை" என்ற தலைமைச் செயலாளர், சற்றுத் தயக்கத்துக்குப் பின், "நீங்க முதல்வர் என்பதற்காக இதைச் சொல்லல. உங்க செயல்பாடுகளை நான் கவனிச்சிருக்கேன். உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும்னு நினைச்சிருக்கேன். ஆனா இவ்வளவு சீக்கிரமே உங்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும்னு நான் எதிர்பாக்கல" என்றார்.

"நன்றி சார். உங்ககிட்ட வெளிப்படையா சில விஷயங்களைச் சொல்லலாம்னு நினைக்கறேன். மக்களுக்கு நல்லது செய்யற வாய்ப்புன்னு நினைச்சுதான் நான் அரசியலுக்கு வந்தேன். ஆனா அது அவ்வளவு சுலபம் இல்லேன்னு உள்ள வந்தப்பறம்தான் தெரிஞ்சுது. 

"நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைச்சா, அப்ப நம்மால முடிஞ்சதைச் செய்யலாம்னு நினைச்சேன். எப்படியோ தலைவர் கண்ணில பட்டு நான் சட்ட மன்ற உறுப்பினராகி, உடனே அமைச்சரும் ஆயிட்டேன். ஆனா அமைச்சர் ஆனப்பறமும் என்னால அதிகமா எதையும் செய்ய முடியல.  

"ஒரு அமைச்சர் மக்களுக்கு நல்லது செய்யறதை விட கட்சிக்கும், கட்சிக்கு வேண்டிய சில பேருக்கும் சேவை செய்யத்தான் தன் பதவியைப் பயன்படுத்தணும்னுதான் எதிர்பாக்கறாங்கன்னு புரிஞ்சது. ஆனாலும், என்னால முடிஞ்ச வரைக்கும் செயல்பட்டுக்கிட்டிருந்தேன். அப்பதான், எதிர்பார்க்காம இந்த வாய்ப்புக் கிடைச்சது.

"தலைவர் என்னை ஏன் தேர்ந்தெடுத்தார்னு எனக்குத் தெரியல. மூத்த தலைவர் யார்கிட்டயாவது இந்தப் பொறுப்பைக் கொடுத்தா, தான் திரும்பி வரப்ப தன்கிட்ட இந்தப் பதவியைத் திருப்பிக் கொடுக்க மாட்டாங்களோன்னு பயந்து ஒரு லைட் வெயிட்டான என்கிட்ட கொடுத்திருக்கார்னு நினைக்கிறேன்.

"அவர் திரும்பி வரப்ப நிச்சயமா நான் பதவி விலகிக்கிட்டு அவர்கிட்ட ஆட்சியை ஒப்படைச்சுடுவேன். ஆனா அதுக்கு இன்னும் ஒரு வருஷமாவது ஆகும்னு நினைக்கிறேன். எப்படியும் ரெண்டு வருஷத்தில தேர்தலே வந்துடும். அதனால எனக்கு இருக்கற இந்தக் குறுகிய காலத்தில ஒரு நல்ல ஆட்சியைக் கொடுத்து மக்களுக்கு நம்மால முடிஞ்ச நன்மைகளைச் செய்யலாம்னு முடிவு செஞ்சிருக்கேன்.

"மூத்த தலைவர்கள் அமைச்சர்களா இருந்தா நான் விரும்பின விஷயங்களைச் செய்ய விட மாட்டாங்கங்கறதாலதான், புதுசா பல பேரை அமைச்சர்களாப் போட்டிருக்கேன். அவங்களும் என்னை மாதிரியே மக்களுக்கு நல்லது செய்யலாம்னு நினைச்சு அரசியலுக்கு வந்தவங்கதான்.

"எனக்கு சில திட்டங்கள் இருக்கு. அதையெல்லாம் செயல்படுத்த, உங்களை மாதிரி நல்ல அதிகாரிகளோட ஆலோசனைகளும், ஒத்துழைப்பும் எனக்கு நிறைய வேணும்."

"நீங்க சொல்றதைக் கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்களை மாதிரி சிந்தனைகள் உள்ளவங்ககிட்ட வேலை செய்ய மாட்டோமான்னு நானும் ஏங்கிக்கிட்டுத்தான் இருக்கேன். ஆனா உங்களுக்கு ஒரு பெரிய சிக்கல் இருக்குங்கறதை நீங்க  உணர்ந்திருக்கீங்களான்னு தெரியல!" என்றார் தலைமைச் செயலாளர்.

"நீங்க சொல்ல வரது எனக்குப் புரியுது. என்னை உடனே மாத்தப் பார்ப்பாங்கங்கறதைத்தானே சொல்றீங்க?"

"ஆமாம்.இது ரெண்டு மூணு நாட்களிலேயே நடக்கலாம்" என்றார் தலைமைச் செயலாளர்.

"அப்படி நடக்க வாய்ப்பு இல்லைன்னு நினைக்கிறேன். நான் தலைவரை சிறையில போய்ப் பாக்கப் போறதில்ல.  தண்டனை பெற்றுச் சிறையில் இருப்பவரை ஒரு முதலமைச்சர் சிறையில போய்ப் பார்க்க முடியாது. இது தலைவருக்கும் புரியும். 

"அதனால, இப்போதைக்கு என்னைப் பதவி விலகச் சொல்லி அவர் எங்கிட்ட நேரடியாகச் சொல்ற வாய்ப்பு வராது. அதோட எங்க கட்சிக்கு சட்டமன்றத்தில பெரும்பான்மையை விட அஞ்சு உறுப்பினர்கள்தான் அதிகமா இருக்காங்க. அதனால ஜாமீன்ல வெளியில வந்தப்பறமும், அவங்க அவசரப்பட்டு எதுவும் செய்ய மாட்டாங்க. 

"சட்டமன்றம் கூட எப்படியும் ஒரு மாசம் ஆகும். அதுக்கு முன்னால அவங்க எதுவும் செய்ய மாட்டாங்க. அதுக்குள்ள நான் சில நல்ல விஷயங்களை செஞ்சு மக்கள்கிட்ட இந்த ஆட்சியைப்  பத்தி ஒரு நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்திட்டேன்னா, அப்புறம் என்னை மாத்தறது அவங்களுக்குக் கஷ்டமா இருக்கும். அப்படி மாத்தினாலும் பரவாயில்ல. 

"ஒரு மாசத்தில எவ்வளவோ நல்ல விஷயங்களைச் செய்யலாமே! ஒரு முதல்வர் ரெண்டு வாரத்துக்குள்ள பல நல்ல விஷயங்களை செஞ்சு எல்லோரையும் பிரமிக்க வச்சதெல்லாம் நடக்கலையா என்ன?" என்றான் முருகன் சிரித்துக்கொண்டே. 

அரசியல் இயல்
அதிகாரம் 49 
 காலமறிதல் 
குறள் 489
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.

பொருள்:
கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்.
          குறள் 488          
அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...