Saturday, May 29, 2021

488. காலம் வரும்!

பாஸ்கர் ஒரு வங்கியில் உதவி மானேஜராக இருந்தபோது நடந்த ஒரு சம்பவம் அவன் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விட்டது.

மானேஜர் மூர்த்தி அன்று விடுப்பில் இருந்ததால், பாஸ்கர் அன்று பொறுப்பில் இருந்தான்.

ரோகிணி கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் என்ற ஒரு நிறுவனம் அந்த வங்கியில் நீண்ட நாட்களாகக் கணக்கு வைத்திருந்தது.

சமீபத்தில்தான் அவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய்க்கு பாங்க் காரன்ட்டி என்ற வசதி அந்த வங்கியின் மண்டல அலுவலகத்தால் அனுமதிக்கப்பட்டிருந்தது. அந்த காரன்ட்டியின் அடிப்படையில்தான் அவர்களால் அரசாங்கத்தின் டெண்டர்களில் பங்கேற்க முடியும்.

பாங்க் காரன்ட்டியை வழங்குவதற்கு ஈடாக அந்த நிறுவனம் இருபது லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்தைப் பிணையாக வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அந்த வசதி அனுமதிக்கப்பட்டிருந்தது.

அதற்கான அனுமதிக் கடிதம் மண்டல அலுவலகத்திலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்புதான் வந்திருந்தது. ரோகிணி கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் நிறுவனம் இன்னும் இதற்கான வங்கி ஆவணங்களில் கையெழுத்திடவில்லை. பிணைச் சொத்துக்கான பத்திரங்களை வங்கியில் ஒப்படைக்கவும் இல்லை.

அன்று ரோகிணி கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸின் பங்குதாரர்களில் ஒருவரான பார்த்திபன் வங்கிக்கு வந்து அரசாங்க டெண்டருக்கு அன்றுதான் கடைசி தினம் என்பதால் பத்து லட்ச ரூபாய்க்கான பாங்க் காரன்ட்டியை உடனே வழங்க வேண்டும் என்று கேட்டார்.

"நீங்க இன்னும் டாகுமென்ட்ல எல்லாம் கையெழுத்துப் போடல. சொத்துப் பத்திரங்களைக் கொடுக்கல. மானேஜர் வேற இன்னிக்கு லீவு.  நான் எப்படி உங்களுக்கு பாங்க் காரன்ட்டி கொடுக்க முடியும்?" என்றான் பாஸ்கர்.

"சார்! உங்க மானேஜர் லீவுங்கறதுக்காக எங்க தொழில் பாதிக்கப்படணுமா?" என்றார் பார்த்திபன்.

"சார்! அது பிரச்னை இல்லை. நீங்க டாகுமென்ட்ஸ்ல இன்னும் கையெழுத்துப் போடல. உங்க சொத்துப் பத்திரங்களைக் கொடுக்கல. சொத்துப் பத்திரங்களை எங்க பாங்க் வக்கீல்கிட்ட காட்டி அவர் எல்லாம் சரியா இருக்குன்னு சொன்னப்பறம்தான் நாங்க அந்த பாங்க் காரன்ட்டியைக் கொடுக்க முடியும்" என்றான் பாஸ்கர்.

"சார்! நாங்க உங்க நீண்ட நாள் வாடிக்கையாளர். என் அண்ணன் ஊர்ல இல்ல. அவர் வர ரெண்டுநாள் ஆகும். எல்லாப் பத்திரங்கள்ளேயும் நாங்க ரெண்டு பேரும்தான் கையெழுத்துப் போடணும். சொத்துப் பத்திரம் எல்லாம் எங்கே இருக்கும்னும் அவருக்குத்தான் தெரியும். இன்னிக்கு நாங்க இந்த டெண்டருக்கு அப்ளை பண்ணியே ஆகணும். கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க" என்றார் பார்த்திபன் கெஞ்சும் குரலில்.

"சரி. மானேஜருக்கு ஃபோன் பண்ணிக் கேக்கறேன்" என்று மானேஜர் மூர்த்தியின் வீட்டுக்கு ஃபோன் செய்தான் பாஸ்கர்.

"பாஸ்கர்! அவங்க ரொம்ப நல்ல பார்ட்டி. பல வருஷமா நம்மகிட்ட அக்கவுன்ட் வச்சிருக்காங்க. கையெழுத்தெல்லாம் அப்புறம் வாங்கிக்கலாம். நீங்க அவங்க கேக்கற பாங்க் காரன்ட்டியைக் கொடுத்துடுங்க. உங்களுக்குத்தான் கையெழுத்துப் போடற அதிகாரம் இருக்கே! நீங்க கையெழுத்துப் போட்டுக் கொடுத்துடுங்க. டாகுமென்ட் எல்லாம் நான் அப்புறம் வாங்கிக்கறேன்" என்றான் மூர்த்தி.

"சார்! இன்னும் சொத்துப் பத்திரங்களை அவங்க கொடுக்கலியே!" என்றான் பாஸ்கர்.

"அதான் பார்த்திபன் அவங்க அண்ணன் ரெண்டு நாள்ள வந்துடுவார்னு சொல்றாரே! அப்ப எல்லாத்தையும் வாங்கிடலாம். ரெண்டு நாள்ள எல்லாம் சரியாயிடும். நான் பாத்துக்கறேன், கவலைப்படாதீங்க!" என்றான் மூர்த்தி.

வங்கியின் பாங்க் காரன்ட்டியை பாஸ்கர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தான்.

திர்பாராமல், அடுத்த நாளே தலைமை அலுவலகத்திலிருந்து இன்ஸ்பெக்‌ஷனுக்கு அதிகாரிகள் வந்தார்கள். 

மானேஜரின் அறையில் அமர்ந்து இன்ஸ்பெக்டர்கள் கணக்குகளையும், ஆவணங்களையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

அன்று மதியம் மூர்த்தி, இன்டர்காமில் பாஸ்கரைத் தன் அறைக்கு அழைத்தான். 

பாஸ்கர் உள்ளே சென்றதும், "மிஸ்டர் பாஸ்கர்! நீங்கதான் இந்த காரன்ட்டியைக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தீங்களா?" என்றார் இன்ஸ்பெக்டர்களில் ஒருவர்.

"ஆமாம்" என்றபடியே மூர்த்தியைப் பார்த்தான் பாஸ்கர். "நேத்திக்கு மானேஜர் லீவு" என்றான் தொடர்ந்து.

"அது சரி. ஆனா, டாகுமென்ட்ஸ் வாங்காம, சொத்துப் பத்திரங்கள் வாங்காம, காரன்ட்டியைக் கொடுத்திருக்கீங்களே!"

பாஸ்கர் மூர்த்தியைப் பார்த்தான். 'நான்தான் கொடுக்கச் சொன்னேன்'என்று இவர் ஏன் சொல்லவில்லை?'

"மானேஜர் கொடுக்கச் சொன்னதாலதான் கொடுத்தேன்" என்றான் பாஸ்கர் மூர்த்தியைப் பார்த்தபடி.

"பாஸ்கர்! டாகுமென்ட்ஸ் எல்லாம் வாங்கிக்கிட்டுக் கொடுங்கன்னுதானே நான் சொன்னேன்?" என்றான் மூர்த்தி, பாஸ்கரைப் பார்த்து.

பாஸ்கரின் உடலில் குப்பென்று வியர்வை பரவியது. அதிர்ச்சி, திகைப்பு, பயம் என்று பலவித உணர்ச்சிகள் அவனை அழுத்தின.

'எப்படி இவனால் என் முகத்தை நேரே பார்த்துப் பொய் சொல்ல முடிகிறது?'

"சரி. நீங்க போங்க!" என்றார் இன்ஸ்பெக்டர்.

அடுத்த நாள் காலை பாஸ்கர் அதுவலகத்துக்கு வந்ததுமே, மூர்த்தி அவனைத் தன் அறைக்கு அழைத்தான்.

"ஒரு சின்ன விஷயத்தை அந்த இன்ஸ்பெகடர்கள் பெரிசு பண்ணிட்டாங்க. உடனேயே ஹெட் ஆஃபீசுக்கு ஃபோன் பண்ணிட்டாங்க, அவங்களும் இதைப் பெரிசா எடுத்துக்கிட்டு... சாரி! பாஸ்கர்! உங்களை சஸ்பெண்ட் பண்ணி ஹெட் ஆஃபீஸ்லேந்து ஃபேக்ஸ் வந்திருக்கு" என்றபடி ஃபேக்ஸை அவனிடம் நீட்டினான் மூர்த்தி.

அதிர்ச்சியுடன் ஃபேக்ஸை வாங்கிப் படித்துப் பார்த்த பாஸ்கர், "என்ன சார் இது? நீங்க சொன்னதாலதானே நான் செஞ்சேன்? முதல்ல முடியாதுன்னுதானே அவங்ககிட்ட சொன்னேன்..." 

பேசிக் கொண்டிருக்கும்போதே பாஸ்கரின் குரல் கம்மியது. அழுது விடுவோமோ என்று பயந்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

"நான் சொல்லித்தான் நீங்க செஞ்சிருந்ததா நான் சொல்லி இருந்தாலும், விதி மீறலுக்கான பொறுப்பு உங்களுக்கு உண்டு. ரெண்டு பேரையும் சஸ்பெண்ட் பண்ணி இருப்பாங்க. ஒண்ணும் கவலைப்படாதீங்க. எப்படியும் நான் டாகுமென்ட்ஸ்ல கையெழுத்து வாங்கி, சொத்துப் பத்திரங்களையும் வாங்கிடுவேன். அதுக்கப்பறம் உங்களை மன்னிச்சு, சஸ்பென்ஷனை ரத்து பண்ணிருவாங்க. ரெண்டு மூணு வாரம்தான். அதுவரையிலேயும் வீட்டில ஜாலியா இருங்க" என்றான் மூர்த்தி.

'தப்பே செய்யாத எனக்கு தண்டனை, அப்புறம் மன்னிப்பு! தப்பு செய்த உனக்கு ஒரு பாதிப்புமில்லை!' என்று பாஸ்கர் மனதுக்குள் கொந்தளித்தான்.

பாஸ்கரின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டவன் போல் மூர்த்தி, "இந்த சஸ்பென்ஷனால உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது. சஸ்பென்ஷன் ரத்தானதும் நீங்க பழையபடியே உங்க வேலையைப் பாக்கலாம். ஆனா, நான் சஸ்பெண்ட் ஆனா, அப்புறம் என்னை மானேஜராத் தொடர அனுமதிக்க மாட்டாங்க. எங்கேயாவது தூக்கி அடிச்சுடுவாங்க. உயரத்திலேந்து கீழே விழுந்தா பாதிப்பு அதிகமா இருக்கும் இல்லையா?" என்று தன் செயலை நியாயப்படுத்திப் பேசினான்.

'இதை விட இன்னும் பெரிய உயரத்திலேந்து நீ விழுவடா! அப்ப உனக்குப் பெரிய அடி படும். அதை நான் பாக்கத்தானே போறேன்!' என்று மனத்துக்குள் கறுவிக்கொண்டே மூர்த்தியின் அறையை விட்டு வெளியேறினான் பாஸ்கர்.

மூர்த்தி தான் சொன்னபடியே, சில நாட்களில், ரோகிணி கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்க வேண்டிய பத்திரங்கள், ஆவணங்கள் எல்லாவற்றையும்  வாங்கி விட்டான். அதைத் தலைமை அலுவலகத்துக்குத் தெரிவித்து விட்டான்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு பாஸ்கருக்கு ஒரு எச்சரிக்கை வழங்கப்பட்டு, அவன் சஸ்பென்ஷன் நீக்கப்பட்டது. 

ஆனால் இடையில் அவனுக்கு நேர்ந்த அவமானம், அவன் தவறு செய்திருப்பானோ என்று அவன் அலுவலகத்திலும், வெளியேயும் பலரும் நினைத்திருக்கக் கூடும் என்ற சிந்தனையால் அவனுக்கு ஏற்பட்ட வலி, அன்று மூர்த்திக்கு ஃபோன் செய்யாமல் தன் நிலையில் உறுதியாக இருந்திருக்கலாமே, அல்லது மூர்த்தி சொன்னபடி செய்ய மறுத்து உறுதியாக இருந்திருக்கலாமே போன்ற மனத்தை உளைத்தெடுத்த சிந்தனைகள் என்று எத்தனை மனவேதனைகள்!

வேலையில் மீண்டும் சேர்ந்ததும், பாஸ்கர் வேறு வேலைக்கு முயற்சி செய்ய ஆரம்பத்தான். 

சில மாதங்களுக்குப் பிறகு அவனுக்கு ஒரு நிதி நிறுவனத்தில் வேலை கிடைத்தது. வங்கியில் அவன் பார்த்துக் கொண்டிருந்த வேலைக்கு இணையானது இல்லைதான் அது. ஆயினும் அந்த அனுபவத்துக்குப் பிறகு வங்கியில் அவன் தொடர விரும்பவில்லை.

வங்கி வேலையை ராஜினாமா செய்து விட்டுப் புதிய வேலையில் சேர்ந்தான் பாஸ்கர். 

அது சிறிய நகரம் என்பதால் சில சமயம் மூர்த்தியை எங்காவது சந்திக்க நேரும். அவனைப் பார்த்ததுமே தன் மனதில் பொங்கி எழும் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, அவனைப் பார்த்துப் புன்னகை செய்வான் பாஸ்கர். மூர்த்தியும் எதுவும் நடக்காதது போல், பாஸ்கரிடம் இயல்பாகப் பேசுவான்.

சில சமயம் மூர்த்தி தன் பெருமைகளையும், சாதனைகளையும் பற்றி பாஸ்கரிடம் பேசும்போது, பாஸ்கர் ஓரிரு நிமிடங்கள் அதைக் கேட்டு விட்டுத் தனக்கு வேலை இருப்பதாகச் சொல்லி, அங்கிருந்து அகன்று விடுவான்.

சில வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் பாஸ்கர் மூர்த்தியைச் சந்திக்க நேர்ந்தபோது, "பாஸ்கர்! ஒரு நல்ல செய்தி. எனக்கு ப்ரமோஷன் கிடைச்சிருக்கு. நான் பம்பாய்க் கிளைக்கு சீஃப் மானஜராப் போறேன்!" என்றான் பெருமையுடன்.

"வாழ்த்துக்கள்" என்றான் பாஸ்கர் சுருக்கமாக.

'உனக்கு ஒரு கேடு வந்தால் அதுதான் எனக்கு நல்ல செய்தி. ஆயினும், இப்போதைக்கு நீ என் கண்ணில் படாமல் வேறு ஊருக்குப் போவதே எனக்கு நல்ல செய்திதான்' என்று நினைத்துக் கொண்டான் பாஸ்கர்.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மூர்த்தியைப் பற்றி எந்தச் செய்தியும் பாஸ்கரின் காதுகளுக்கு வரவில்லை. ஆனால் அவன் நினைவும், அதைத் தொடர்ந்து அவன் மீது ஒரு ஆத்திரமும் அடிக்கடி வந்து கொண்டிருந்தன.

ரு நாள் ஒரு செய்திப் பத்திரிகையின் உட்பக்கங்கள் ஒன்றில் 'வங்கி மோசடி' என்ற தலைப்பில் வந்திருந்த ஒரு சிறிய செய்தியை பாஸ்கர் அதிக ஆர்வம் இல்லாமல் பார்த்தபோது, அதில் இடம் பெற்றிருந்த ஒரு பெயர் அவன் கண்ணில் பட்டதும், அந்தச் செய்தியை ஒருவிதத் துடிப்புடன் படித்தான். 

ஒரு தொழிலதிபர் சில வங்கிகளில் கோடிக்கணக்கில் மோசடி செய்து விட்டதாகவும், அந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த சில வங்கி அதிகாரிகளை சி பி ஐ கைது செய்திருப்பதாகவும் அந்தச் செய்தி கூறியது. 

கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலில், அவன் பணி செய்த வங்கியின் பெயர் குறிப்படப்பட்டு அந்த வங்கியின் பம்பாய்க் கிளையின் சீஃப் மானேஜர் மூர்த்தியின் பெயரும் இருந்தது.

அரசியல் இயல்
அதிகாரம் 49 
 காலமறிதல்  
குறள் 488
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.

பொருள்:
பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்ல வேண்டும், அப் பகைவர்க்கு முடிவு காலம் வரும்போது அவர் வீழ்ச்சி அடைவார்.
அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...