Wednesday, November 11, 2020

428. தேர்தல் "வியூகம்"

அந்தத் தொகுதியின் சட்டமன்றஉறுப்பினராக இருந்த சரவணகுமார் மாவோயிஸ்ட்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, தேர்தல் ஆணையம் அங்கே இடைத்தேர்தலை அறிவித்தது. 

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்துக்குள்ளேயே, அந்தத் தொகுதியில் தேர்தல் நடத்தக் கூடாதென்றும், அப்படி நடத்தினால் தேர்தல் நடைபெறுவதைத் தாங்கள் அனுமதிக்க முடியாதென்றும் மவோயிஸ்ட்களிடமிருந்து அறிவிப்பு வெளியாகியது.

கொல்லப்பட்ட சரவணகுமார் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர். தேர்தல் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே ஆளும் கட்சி தன் வேட்பாளரை அறிவித்து விட்டது. 

மாவோயிஸ்ட்களின் அச்சுறுத்தலின் பின்னணியில் முக்கியமான எதிர்க்கட்சியைத் தவிர மற்ற கட்சிகள் எல்லாம் தாங்கள் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று அறிவித்து விட்டன.

எதிர்க்கட்சியின் தலைவர் சண்முகம் துணிச்சலுக்குப் பெயர் பெற்றவர். தன் ஐம்பது கால அரசியல் வாழ்க்கையில் பல்வேறு சவால்களையும், அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டவர். அவருக்கு "அஞ்சாநெஞ்சர்" என்றே ஒரு பட்டப் பெயர் உண்டு. அவர் என்ன செய்யப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் ஆளுங்கட்சித் தலைவரும் முதலமைச்சருமான பரணிகுமாரிடமிருந்து ஒரு அறிக்கை வெளியாகியது. 

"மாவோயிஸ்ட்களின் அச்சுறுத்தலால் தொகுதியில் ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. அது எங்கள் வசம் இருந்த தொகுதி. எதிர்க்கட்சித் தலைவர் அங்கே வேட்பாளரை நிறுத்தாமல் இருந்தால் எங்கள் கட்சி வேட்பாளர் போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்படுவார். தேர்தலுக்கே அவசியம் இருக்காது. இதனால் மவோயிஸ்ட்களின் வன்முறை தடுக்கப்படும். மக்கள் நலனையும், அமைதி நிலவ வேண்டிய அவசியத்தையும் கருத்தில் கொண்டு எதிர்க் கட்சித் தலைவர் ஒரு நல்லமுடிவை எடுப்பார் என்று நம்புகிறேன்" என்று அந்த அறிக்கையில் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

பொதுவாக இது போன்ற அறிக்கைகளுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்கும் இயல்புள்ள எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து இரண்டு நாட்கள் எந்த பதிலும் வரவில்லை.

ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு எதிர்க் கட்சித் தலைவர் சண்முகம் முதலமைச்சரை அவர் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

"என் வேண்டுகோள் மீது என்ன முடிவெடுத்திருக்கிறீர்கள்?" என்றார் முதலமைச்சர் பரணிகுமார்.

"உங்கள் அறிக்கையைப் பார்த்தேன். உங்கள் வேண்டுகோளை ஏற்கிறேன். நாங்கள் வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை!" என்றார் சண்முகம்.

"மிகவும் நன்றி. இதை நேரே சொல்லத்தான் என்னைப் பார்க்க வந்தீர்களா?".என்றார் பரணிகுமார் மகிழ்ச்சியுடன்.

"இல்லை அதை நான் அறிக்கை மூலமே அறிவித்திருக்கலாம். நான் உங்களைப் பார்க்க வந்தது உங்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்க!"

"சொல்லுங்கள்!" என்றார் பரணிகுமார், என்ன கேட்கப் போகிறாரோ என்ற எச்சரிக்கை உணர்வுடன்.

"உங்கள் கட்சி வேட்பாளரையும் நீங்கள் விலக்கிக் கொள்ள வேண்டும்!"

"எதற்கு? அப்புறம் தேர்தலே ரத்தாகி விடும். மவோயிஸ்ட்கள் விரும்பியது நடக்கும். அதுவா நம் நோக்கம்?"

"சரி. உங்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார். அதற்குப் பிறகு, அவரை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்ற மாவோயிஸ்ட்கள் அனுமதிப்பார்களா? அவர் தொகுதிக்குப் போகும்போது அவரைக் கொலை செய்ய முயற்சி செய்ய மாட்டார்களா?"

"செய்வார்கள். அவருக்கு அரசாங்கம் அதிகப் பாதுகாப்பு கொடுக்கும்."

"உங்கள் பாதுகாப்பை மீறி அவர் கொல்லப்பட மாட்டார் என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா? சொல்ல வேண்டாம். உங்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கிறதா?"

"அதற்காக? மாவோயிஸ்ட்களின் மிரட்டலுக்கு பயந்து நாம் செயல்பட முடியாது!" என்றார் பரணிகுமார்.

"சில விஷயங்களுக்கு நாம் பயந்துதான் ஆக வேண்டும். உங்கள் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஒரு தொலைபேசி வந்தால் உடனே அனைவரும் வெளியில் ஒட மாட்டீர்களா? பயப்பட வேண்டிய விஷயங்களுக்கு பயந்துதான் ஆக வேண்டும். இன்றைய சூழலில் மவோயிஸ்ட்களின் மிரட்டலை நாம் புறக்கணிக்க முடியாது. உங்கள் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரை மவோயிஸ்ட்கள் கொல்ல முயற்சிகள் செய்யும்போது பொது மக்கள் பலரும் கூட பாதிக்கப்படுவார்கள். அதையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். சிறிது காலத்துக்கு அந்தத் தொகுதிக்குச் சட்டமன்ற உறுப்பினர் இல்லாமல் இருப்பதுதான் நல்லது. மாவோயிஸ்ட்களை பேச்சு வார்த்தை மூலமோ, நேரடி மோதல் மூலமோ வழிக்குக் கொண்டு வரும் வரையில் அவர்கள் அச்சுறுத்தல்களை மதித்து நடப்பதுதான் நடைமுறைக்கு ஏற்ற வழி" என்றார் அஞ்சாநெஞ்சர் சண்முகம். 

பொருட்பால் 
அரசியல் இயல்
அதிகாரம் 43
அறிவுடைமை  
குறள் 428:
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.

பொருள்:
அஞ்ச வேண்டிய விஷயங்களுக்கு அஞ்சாமல் இருப்பது அறியாமையாகும். அஞ்ச வேண்டிய விஷயங்களுக்கு அஞ்சுவது அறிவுடையோர் செயல்
அறத்துப்பால்                                                                                      காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...