Friday, November 6, 2020

427. தோழிக்குத் தெரிந்தது...

பல வருடங்களாக கிராமத்தில் வசித்து வந்த தன் சிறு வயதுத் தோழி சந்திரா தான் வசிக்கும் நகரத்துக்குக் குடி வந்தது அருணாவுக்கு மிகவும் உற்சாகமளித்தது.

நேரம் கிடைக்கும்பொதெல்லாம் தோழிகள் இருவரும் சந்தித்து அரட்டை அடிப்பது, கடைகள், கோவில்கள், சினிமா தியேட்டர் போன்ற இடங்களுக்குச் சென்று வருவது என்று சேர்ந்து பொழுதைக் கழித்தனர்.

பல வருடங்கள் கிராமத்திலேயே வாழ்ந்து அதிகமாக வேறெங்கும் செல்லாமலே கிணற்றுத் தவளையாக இருந்து விட்ட சந்திராவுக்கு நகர வாழ்க்கையின் சிறப்புகளைக் காட்டுவதில் அருணா அதிக ஆர்வம் கொண்டிருந்தாள்.

ஷாப்பிங் மால் போன்ற புதிய நகர அதிசயங்களைப் பார்த்து சந்திரா மலைத்து நின்றபோது, 'இப்படி நகர வாசனையே இல்லாத கிராமத்துப் பெண்ணாக இருக்கிறளே இவள்!' என்று நினைத்தாள் அருணா.

ன்று அருணா அவளை ஒரு நகைக்கடைக்கு அழைத்துச் சென்றாள். அந்தக் கடையில் அருணா நகைச்சீட்டு போட்டு வந்தாள்.

அந்த மாத சீட்டுப் பணத்தைக் கட்டி விட்டுத் தோழிக்குக் கடையைச் சுற்றிக் காட்டி விட்டு வெளியே வந்தபோது, "கடை எப்படி இருக்கு?" என்றாள் அருணா தோழியிடம்.

"நல்லாத்தான் இருக்கு" என்ற சந்திரா, "ஆமாம்! இதில சீட்டு போடறியே, அதனால உனக்கு என்ன லாபம்?" என்றாள்.

துவக்கத்தில் கொடுக்கப்படும் விலை மதிப்புள்ள பரிசு, சீட்டு முடிந்ததும் கட்டிய பணத்தை விடக் கூடுதலான தொகைக்கு (பாங்க்கில் ரெகரிங் டெபாசிட் போட்டால் கிடைக்கும் தொகையை விட அதிகம் என்று விளக்கினாள் அருணா), செய்கூலி, சேதாரம் இல்லாமல், சந்தை விலையை விடக் கணிசமான அளவு குறைந்த விலையில் நகை வாங்கிக் கொள்ளும் சலுகை போன்ற பலன்களை அருணா விளக்கினாள். 

"இதெல்லாம் அவங்களுக்கு எப்படிக் கட்டுப்படியாகும்?" என்றாள் சந்திரா.

"கட்டுப்படி ஆகறதாலதானே கொடுக்கறாங்க? இது மாதிரி சலுகைகள் எல்லாக் கடைகளிலேயுமே கொடுக்கறாங்க. ஆனா இவங்க அளவுக்கு வேற யாரும் சலுகைகள் கொடுக்கறதில்ல!" என்றாள் அருணா.

"அதனாலதான் கேக்கறேன்" என்றாள் சந்திரா.

"நீ கூட இதில சீட்டு சேரலாம்" என்றாள் அருணா.

"எனக்கு வேண்டாம்மா! நீ கூட இதில போடறது ரிஸ்க்குன்னுதான் எனக்குத் தோணுது!"

சந்திரா தனக்கு ஆலோசனை சொன்னது அருணாவுக்கு வியப்பாக இருந்தது. ஆனால் அவள் பதில் ஏதும் சொல்லவில்லை.

டுத்த மாதம் சீட்டுப்பணம் கட்ட அந்தக் கடைக்கு அருணா சென்றபோதும் சந்திரா அவளுடன் சென்றாள்.

வெளியே வந்ததும், "சீட்டுக் கட்டறதை நிறுத்திட்டு கட்டின பணத்தையோ, அதற்கு ஈடான நகையையோ கேட்டா கொடுப்பாங்களா?" என்றாள் சந்திரா.

"கொடுக்க மாட்டாங்க. ஏன் கேக்கறே?" என்றாள் அருணா வியப்புடன்.

"எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு. போன தடவை பாத்ததுக்கு இப்ப பல தட்டுகள் காலியா இருக்கு!"

"இருந்தா என்ன? அங்கே இருந்த நகையெல்லாம் வித்திருக்கும். வியாபாரம் நல்லா இருக்குன்னுதானே அர்த்தம்?"

"விற்பனை ஆயிடுச்சுன்னா அந்த இடத்தில புதுசா நகைகளை வாங்கி வைப்பாங்க. பொதுவா கடைகள்ள தட்டுகளைக் காலியா வைக்க மாட்டாங்க" என்றாள் சந்திரா.

அருணா பதில் சொல்லவில்லை.

இரண்டு மாதங்களில் அந்த நகைக்கடை மூடப்பட்டது. அருணாவைப் போல் நகைச்சீட்டு போட்டவர்கள் அனைவரும் தங்கள் பணத்தை இழந்தனர்.

அதிகம் விஷயம் தெரியாத கிராமத்துப் பெண் என்று தான் நினைத்த சந்திரா அறிவுள்ள பெண்ணாக இருந்திருக்கிறாள், விஷயம் தெரிந்தவளாகத் தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் தான் அந்த அளவுக்கு அறிவுள்ளவளாக நடந்து கொள்ளவில்லை என்ற கசப்பான உண்மையை அருணா உணர்ந்து கொண்டாள்.

பொருட்பால் 
அரசியல் இயல்
அதிகாரம் 43
அறிவுடைமை 
குறள் 427:
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.

பொருள்:
அறிவுடையோர் நடக்கப் போவதை முன்பே அறிந்து கொள்வார்கள். அறிவு இல்லாதவர்கள் அவ்வாறு அறிய மாட்டார்கள்.
அறத்துப்பால்                                                                                      காமத்துப்பால்


No comments:

Post a Comment

1056. உள்ளிருந்து வந்த உதவி!

"வாங்க. எங்கே இவ்வளவு நாள் கழிச்சு?" என்று வரவேற்றார்பரமசிவம். தயங்கிக் கொண்டே பரமசிவத்தின் வீட்டுக்குள் நுழைந்த பாலன் "சும்ம...