
தனராஜும், சுதாகர், கணேஷ் என்ற அவனுடைய இரு நண்பர்களும் சேர்ந்து ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அதில் இருந்து வந்தனர்.
மூன்று நண்பர்களுக்கிடையே நல்ல புரிதல் இருந்தது. அதனால் சமையல் செய்தல், பாத்திரங்களைக் கழுவுதல், வீட்டைச் சுத்தம் செய்தல் போன்ற வேலைகளை அவரவர்கள் வீட்டில் இருக்கும் நேரத்தின் அடிப்படையில் பகிர்ந்து கொண்டனர்.
மூவரில் சுதாகர் நல்ல வேலையில் இருந்தான். அவன் ஒரு மடிக்கணினி வைத்திருந்தான். இன்டர்நெட் இணைப்பும் வைத்திருந்தான். அதற்கான மாதாந்தரக் கட்டணத்தை அவன் தனிப்பட்ட முறையில் கட்டி வந்தான். ஆயினும் அவன் பயன்படுத்தாதபோது கணினியை மற்ற இருவரும் பயன்படுத்தலாம் என்று கூறி இருந்தான்.
திரைப்படங்களை ஒளிபரப்பும் சில சேவைகளுக்கும் அவன் சந்தா கட்டி இருந்ததால் விடுமுறை நாட்களில் சில சமயம் மூன்று பேரும் சேர்ந்து கணினியில் புதிய திரைப்படங்கள் பார்ப்பதுண்டு.
கணேஷுக்குத் திரைப்படங்கள் பார்ப்பதில் ஒரு வெறியே உண்டு. எனவே கணினியை அதிகம் பயன்படுத்துபவன் அவன்தான். பொதுவாக வீட்டில் அதிக நேரம் இருப்பவன் அவன்தான் என்பதால் அவனுக்கு இது வசதியாக இருந்தது.
மூவரில் வீட்டில் குறைந்த நேரம் இருப்பவன் தனராஜ்தான். தினமும் இரவில் அலுவலகத்திலிருந்து அவன் வீடு திரும்ப தாமதமாகி விடும். பெரும்பாலும் அவன் வீட்டுக்குத் திரும்பும் நேரத்தில் மற்ற இருவரும் உறங்கப் போயிருப்பார்கள். அவனுக்கான இரவு உணவை எடுத்து வைத்திருப்பார்கள்.
" டேய், சுதாகர்! தனராஜ் தினமும் வீட்டுக்கு வரதுக்கே லேட் ஆயிடுது. சாப்பிட்டுட்டுப் பாத்திரங்களைக் கழுவி வச்சுட்டு, கிச்சனை சுத்தம் பண்ணிட்டுக் கொஞ்ச நேரம் கம்ப்யூட்டர்ல சினிமா வேற பாக்கறான் போலருக்கு. எனக்குத்தான் சினிமாப் பைத்தியம்னு நினைச்சேன். அவன் எனக்கு மேல இருப்பான் போலருக்கு. தூக்கத்தைக் கெடுத்துக்கிட்டு சினிமா பாக்கறான்!" என்றான் கணேஷ்.
"என்னிக்காவது தூக்கம் வராம இருந்தப்ப பாத்திருப்பான்" என்றான் சுதாகர்.
"இல்லடா. நிறைய தடவை பாத்திருக்கேன். பன்னண்டு மணிக்கு மேல கூட உக்காந்து பாத்துக்கிட்டிருக்கான்" என்றான் கணேஷ்.
"சரி விடு. அவனுக்கு அது பிடிச்சிருக்கு போல இருக்கு!" என்றான் சுதாகர்.
அன்று இரவு சுதாகர் தற்செயலாகக் கண் விழித்தபோது பக்கத்து அறையில் விளக்கு எரிந்தது. அறைக்கு வெளியே நின்று பார்த்தபோது தனராஜ் காதுகளில் ஹெட்ஃபோனை மாட்டிக்கொண்டு கணினியில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான்.
கணேஷ் சொன்னது சரிதான் போலிருக்கிறது. மணியைப் பார்த்தான். பன்னிரண்டரை!
அப்படி என்ன பார்த்துக் கொண்டிருக்கிறான் இந்த நேரத்தில்?
சந்தடி செய்யாமல் தனராஜ் அருகே சென்று, அவன் பின்னே நின்று பார்த்தான் சுதாகர் .
தனராஜ் பார்த்துக் கொண்டிருந்தது ஒரு சுய முன்னேற்றப் பேச்சாளரின் வீடியோ!
பார்த்துக் கொண்டிருந்தான் என்பதை விட, கேட்டுக் கொண்டிருந்தான் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.
"எதுக்குடா இதை பாத்துக்கிட்டிருக்க, இவ்வளவு லேட்டா, தூங்காம?" என்றான் சுதாகர்.
தனராஜ் திடுக்கிட்டுத் திரும்பினான். "ஒண்ணுமில்ல சும்மாதான்!" என்றான் ஹெட்ஃபோனைக் கழற்றியபடியே.
"நாள் முழுக்க வேலை செஞ்சுட்டு, கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கறதுக்காக ஏதோ ஜாலியா சினிமா பாத்துக்கிட்டிருக்கேன்னு நினைச்சா, இது மாதிரி சீரியஸான பேச்சையெல்லாம் கேட்டுக்கிட்டிருக்க!" என்றான் சுதாகர்.
"ஒண்ணும் இல்ல. நான் அதிகமாப் படிக்கல. முடிஞ்ச வரைக்கும் தினம் ஒரு அரை மணி நேரம் ஏதாவது உருப்படியான விஷயங்களைக் கேக்கலாமேன்னுதான் இது மாதிரி பேச்சையெல்லாம் கேட்டுப் பாக்கறேன்" என்றான் தனராஜ் சங்கடத்துடன்.
"என்னென்ன டாபிக் எல்லாம் கேக்கற?"
"மோட்டிவேஷன், பொது அறிவு, விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட விஷயங்கள், சில சமயம் ஆன்மிகம் கூட!" என்றான் தனராஜ் கொஞ்சம் தயக்கத்துடன்.
"என்னென்ன டாபிக் எல்லாம் கேக்கற?"
"மோட்டிவேஷன், பொது அறிவு, விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட விஷயங்கள், சில சமயம் ஆன்மிகம் கூட!" என்றான் தனராஜ் கொஞ்சம் தயக்கத்துடன்.
"இதுக்கு ஏண்டா இவ்வளவு சங்கடப்படற? நீ செய்யறது ரொம்ப நல்ல விஷயம். உன்னை நினைச்சா எனக்குப் பெருமையா இருக்கு. தொடர்ந்து கேளு. ஆனா உடம்பைப் பாத்துக்க. தூக்கத்தைக் கெடுத்துக்காமப் பாத்துக்க!" என்று சொல்லி விட்டு அவன் முதுகில் தட்டி விட்டுத் தன் தூக்கத்தைத் தொடர்வதற்காகப் படுக்கைக்குச் சென்றான் சுதாகர்.
பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 42
கேள்வி
குறள் 416:
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
ஆன்ற பெருமை தரும்.
பொருள்:
சிறிய அளவுக்காவது நல்ல விஷயங்களைக் கேட்டறிய வேண்டும். எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்கு அது நமக்குப் பெருமையை அளிக்கும்.