Sunday, August 2, 2020

417. கருணாகரனின் தயக்கம்

கருணாகரன் சுவாமி தன்மயானந்தாவின் பேச்சினால் கவரப்பட்டு அவர் சொற்பொழிவுகளுக்கு அதிகம் செல்ல ஆரம்பித்தான். ஒரு கட்டத்தில் அவருடன் அவனுக்கு அறிமுகமும் ஏற்பட்டது.

அப்போதுதான் ஒருமுறை தன்மயானந்தா அவனிடம் சொன்னார்: 

"உனக்கு ஆன்மீக விஷயங்களில் நிறைய ஆர்வம் இருக்கிறது. ஓரளவுக்குத் தேர்ச்சியும் இருக்கிறது. நீ எங்கள் மிஷனில் சேர்ந்து பயிற்சி பெற்று எங்கள் ஆன்மீகக் கருத்துக்களைப் பரப்பும் சொற்பொழிவாளர் ஆகலாமே!"

"நான் திருமணம் ஆனவன். ஒரு தொழில் செய்து வருகிறேன். எனக்குத் துறவியாக விருப்பம் இல்லை சுவாமிஜி!" என்றான் கருணாகரன்.

"இவையெல்லாம் ஒரு தடை இல்லை. பயிற்சி வகுப்புகள் மாலையில் மட்டும்தான் நடக்கும். 6 மாதம் பயிற்சி பெற்ற பிறகு நீ சொற்பொழிவுகள் செய்ய ஆரம்பிக்கலாம். எங்கள் மிஷனில் எல்லா ஏற்பாடுகளும் செய்வார்கள். நீ தலைப்புக்கேற்றவாறு தயார் செய்து கொண்டு பேசினால் போதும். உன் தொழிலுக்கு எந்த பாதிப்பும் வராது" என்றார் தன்மயானந்தர். 

சிறிது யோசனைக்குப் பிறகு கருணாகரன் அவர் யோசனைக்கு ஒப்புக் கொண்டான்.

று மாதங்களுக்குப் பிறகு கருணாகரன் தன்மயானந்தரைத் தனியாகச் சந்தித்தான்.

"பயிற்சியைச் சிறப்பாக முடித்து விட்டாய். பாராட்டுக்கள்" என்றார் தன்மயானந்தர்.

"சுவாமிஜி! ஒரு சந்தேகம்."

"கேள்!"

"ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டிருப்பவர்கள் திருமண வாழ்க்கையில் ஈடுபடக் கூது என்று உங்கள் குரு கூறியிருப்பதாகப் பயிற்சியின்போது நீங்கள் கூறினீர்கள்."

"ஆமாம். அதற்கென்ன?"

"பிறகு, நான் எப்படி ஆன்மீக விஷயங்கள் பற்றிப் பேச முடியும்?"

"உனக்கு ஒருவர் வேலை கொடுப்பதாகச் சொல்கிறார். அப்போது அதற்கான தகுதி உனக்கு இல்லை என்று நீ சொல்வாயா?"

தன் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல் அவர் தவிர்க்கிறார் என்பது கருணாகரனுக்குப் புரிந்தது.

"மன்னிக்க வேண்டும் சுவாமிஜி. உங்கள் குருவின் பேச்சுக்கள் சிலவற்றின் பதிவுகளைப் போட்டுக் காட்டினீர்கள். அவை எல்லாவற்றிலும் வாழ்க்கையை கடவுள் நமக்கு அளித்த ஒரு பரிசாக நினைத்து நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றுதான் அவர் சொல்கிறார். பிரம்மச்சரியம் பற்றி அவர் எதுவும் பேசவில்லை. இது முரண்பாடாக இருப்பதாகத் தோன்றுகிறதே!"

"நீ என்ன சொல்ல வருகிறாய்? என் குரு சொல்லாத விஷயத்தை நான் சொல்வதாகவா? அவருடைய இறுதிக் காலத்தில் அவரால் பேச முடியாதபோது அவர் சில கருத்துக்களை சுருக்கமாக எழுதி என்னிடம் கொடுத்தார். அவருடைய கருத்துக்களைப் பரப்ப வேண்டிய என் கடமையைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். அவர் கருத்துக்களில் முரண்பாடு இருக்கிறதா என்று ஆராய நான் எப்போதும் துணிந்ததில்லை."

தன்மயானந்தரின் பேச்சில் கோபம் இருப்பது தெரிந்தது.

"நான் அதிகப் பிரசிங்கித்தனமாகப் பேசி இருந்தால் என்னை மன்னிக்க வேண்டும் சுவாமிஜி. எனக்குச் சிறிது குழப்பமாக இருக்கிறது. எனவே தெளிவு பெற்ற பிறகு நீங்கள் குறிப்பிட்ட பணியில் ஈடுபடுவது பற்றி முடிவு செய்கிறேன். தவறாக நினைக்காதீர்கள்" என்று சொல்லி அவரிடமிருந்து விடை பெற்றான் கருணாகரன்.

ரண்டு நாட்களுக்குப் பிறகு தன்மயானந்தர் அவனைச் சந்திக்க விரும்புவதாக தன்மயானந்தரின் அலுவலகத்திலிருந்து அவனுக்குத் தொலைபேசியில் ஒரு செய்தி வந்தது.

சற்றுத் தக்கத்துடன் தன்மயானந்தரைச் சந்திக்கச் சென்றான் கருணாகரன்.

அவனை உற்சாகமாக வரவேற்ற தன்மயானந்தர், "வா கருணகரா! நான் உனக்கு நன்றி சொல்ல வேண்டும்!" என்றார்.

"என்ன சொல்கிறீர்கள் சுவாமிஜி?"

."உனக்கு ஏற்பட்ட சந்தேகம் என் மனதிலும் நீண்ட நாட்களாக உறுத்திக் கொண்டிருந்த விஷயம்தான். ஆனால் அதைப் பற்றி நான் பெரிதாக ஆராயவில்லை. ஆனால் உன்னிடம் அன்று பேசிய பிறகு என் குரு எழுதிய குறிப்பை எடுத்துப் படித்தேன். அவர் ஆங்கிலத்தில் எழுதி இருந்தார். ஆன்மீகத்தில் ஆர்வம் உள்ளவர்கள் celebate செய்ய வேண்டும் என்று அவர் எழுதி இருந்தார். celebate என்றால் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது என்றுதானே பொருள்? 

"ஆனால் உன்னிடம் பேசிய பிறகு என் குரு தன் கைப்பட எழுதிய குறிப்புத் தாளை எடுத்துப் பார்த்தேன். அப்போதுதான் ஒரு விஷயம் உறைத்தது. அவர் எழுதி இருந்தது celebrate என்று! அவர் கையெழுத்து தெளிவாக இல்லாததால், நான் ஒரு துறவியாக  இருந்ததால் அதை celebate  என்று படித்து விட்டேன். 

"வாழ்க்கையைக் கொண்டாடுவதுதான் ஆன்மீகம் என்றுதான் அவர் சொல்லி இருக்கிறார். எனவே அவர் கூறியதில் முரண்பாடு எதுவும் இல்லை. நீ தெளிவாகச் சிந்தித்ததால் எனக்கும் தெளிவைக் கொடுத்து விட்டாய். என் குருவின் கருத்துக்களைப் பரப்ப என்னை விடவும் அதிகத் தகுதி உனக்குத்தான் இருக்கிறது!" என்றார் தன்மயானந்தர். 

பொருட்பால் 
அரசியல் இயல் 
அதிகாரம் 42
கேள்வி 
குறள் 417:
பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.

பொருள்:
நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவு உடையவர்கள் ஒருவேளை எதையாவது தவறாகப் புரிந்து கொண்டாலும், அறிவற்ற விதத்தில் பேச மாட்டார்கள்.
அறத்துப்பால்                                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...