Friday, July 10, 2020

415. நண்பரிடம் கேட்ட ஆலோசனை

"இவ்வளவு வருஷமா உங்ககிட்ட நம்பிக்கையா வேலை செஞ்ச சங்கர் இப்படிப் பண்ணிட்டானே!" என்றாள் சாந்தா அங்கலாய்ப்புடன். 

"பணத்தாசை யாரை விட்டது? ரெண்டு லட்சம் ரூபாயைப் பாத்ததும் சபலம் வந்துடுச்சு போலருக்கு. பாங்க்ல கட்டச் சொல்லிக் கொடுத்த பணத்தை எடுத்துக்கிட்டுக் கம்பி நீட்டிட்டான்" என்றார் செல்வரங்கம்.

"இதுக்கு முன்னால எவ்வளவோ தடவை பாங்க்ல பணத்தைக் கட்டிட்டு வந்திருக்கானே!"

"அதெல்லாம் சின்னத் தொகை. அம்பதாயிரம் ரூபாய்க்குள்ளதான் இருக்கும். நேத்திக்கு ஒரு பெரிய வியாபாரம் நடந்ததால இவ்வளவு கேஷ் சேர்ந்து போச்சு. ரெண்டு லட்ச ரூபாயைப் பாத்ததும் சபலம் வந்துடுச்சு. எடுத்துட்டு ஓடிட்டான். இது அவனுக்கு எவ்வளவு நாளைக்குத் தாங்கும்? பெண்டாட்டி பிள்ளைங்களைக் கூட விட்டுட்டு ஓடி இருக்கானே!" என்று புலம்பினார் செல்வரங்கம்.

"ஆமாம். அவன் வீட்டில விசாரிச்சீங்களா?"

"அவன் வீட்டுக்குப் போய் விசாரிச்சுட்டேன். என்னையும் புள்ளைங்களையும் விட்டுட்டுப் போயிட்டாரே, நான் என்ன பண்ணுவேன்னு அவன் பெண்டாட்டி கதறி அழறா!"

"சரி. போலீஸ்ல சொல்லிட்டீங்களா?"

"இனிமேதான் சொல்லணும்!" என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்  செல்வரங்கம்.

ற்று நேரம் கழித்து  செல்வரங்கம் வீட்டுக்குத் திரும்பி வந்ததும், "என்ன போலீஸ்ல புகார் கொடுத்தீட்டிங்களா?" என்றாள்  சாந்தா.

"இல்ல. இனிமேதான் போகணும்."

"இப்ப எங்கே போயிட்டு வந்தீங்க?'

"சிவராமனைப் பாத்துட்டு வந்தேன்."

"அவரை எதுக்குப் பாக்கணும்? அவரு என்ன போலீசா, இல்ல ஓடிப்போனவன் எங்க இருக்கான்னு மை போட்டு சொல்றவரா?" என்றாள் சாந்தா சற்று எரிச்சலுடன்.

"இங்க பாரு சாந்தா! சிவராமன் என் நண்பன் மட்டும் இல்ல. எனக்கு ஒரு வழி காட்டியும் கூட."

"ஏங்க, அவரு ஒரு சாதாரண மனுஷன். எதோ கொஞ்சம் படிச்சிருக்காரு, விஷயம் தெரிஞ்சவரு. அதுக்காக இதுக்கெல்லாம் கூட அவர் கிட்ட யோசனை கேட்கணுமா?"

"சாந்தா! சிவராமனை மாதிரி ஒழுக்கமா, நேர்மையா இருக்கறவங்க கிட்ட யோசனை கேட்டு நடந்துக்கிட்டா நான் செய்யற காரியத்தில் தப்பு நடக்காம பாத்துக்க முடியுங்கறது என்னோட அனுபவம். மகாபாரதத்தில வர விதுரர் நேர்மையும் ஒழுக்கமும் கொண்டவர். திருதராஷ்டிரனோட தம்பிதான் அவர், ஆனாலும் திருதராஷ்டிரன் அவர் கிட்ட யோசனை கேப்பாரு. ஆனா அவர் சொன்னபடி திருதராஷ்டிரர் நடந்துக்கல. துரியோதனன் அவரை மதிக்கவே இல்ல. ஆனா பாண்டவர்கள் எப்பவுமே அவர்கிட்ட யோசனை கேட்டு நடந்தாங்க. மகாபாரதக் கதையில யாருக்கு என்ன ஆச்சுன்னுதான் உனக்குத் தெரியுமே!"

"அதெல்லாம் புராணக் கதைங்க. நடைமுறை வாழ்க்கை இல்லை."

'சரி, நம்ப காலத்துக்கே வருவோம். மகாத்மா காந்தி எவ்வளவு பெரிய மனுஷன்! அவரு ஒரு தடவை உண்ணாவிரதம் இருக்கச்சே, உண்ணாவிரதம் இருக்கும்போது எலுமிச்சம்பழச் சாறு குடிக்கலாமான்னு ராஜாஜி கிட்ட கேட்டாராம். அதுக்கு ராஜாஜி, எலுமிச்சம்பழத்தில ஊட்டச்சத்து இருக்கு, அதனால உண்ணாவிரதம் இருக்கறப்ப எலுமிச்சம்பழச் சாறு குடிக்கிறது சரியா இருக்காதுன்னு சொன்னாராம்! அதன்படியே காந்தியும் உண்ணாவிரதம் இருக்கறப்ப தண்ணியை மட்டும் குடிச்சாரு. தனக்குச் சரியா வழி காட்டினதால ராஜாஜியை தன்னோட 'மனச்சாட்சியோட காவலர்'னு காந்தி சொல்லுவாரு!" 

"சரி. உங்க நண்பர் என்ன சொன்னாரு?"

"பாதிக்கப்பட்டது நான் மட்டும்தான் நான் நினைச்சுக்கிட்டிருந்தேன். சங்கரோட குடும்பமும் பாதிக்கப்பட்டிருக்குங்கறதை நினைவில் வச்சுக்கிட்டு நடந்துக்கச் சொல்லி சிவராமன் சொன்னான். ஒரு தப்பும் பண்ணாத அவங்களுக்கு இன்னும் அதிக பாதிப்பு வராம பாத்துக்கணும்னு சொன்னான். போலீஸ்காரங்க சங்கர் குடும்பத்தைதான் முதல்ல விசாரிப்பாங்க. அதனால அவங்க மேல தப்பு இல்லேன்னு போலீஸ்ல நான் சொல்லி அவங்களுக்குக் கஷ்டம் வராம பாத்துக்கறதோட, இந்த நிலைமையிலேந்து அவங்க மீண்டு வரதுக்கு என்னால ஆன உதவியை அவங்களுக்கு செய்யணும்னு சொன்னான். அவன் சொன்னப்பறம்தான் எனக்கு இது தோணலியேன்னு உறைச்சுது. அதனால போலீஸ் ஸ்டேஷனுக்குப் போறப்பவே சங்கரோட மனைவியையும் அழைச்சுக்கிட்டுப் போய் எல்லாத்தையும் விவரமா சொன்னா போலீஸ்காரங்க புரிஞ்சுப்பாங்கன்னு நினைக்கிறேன்."

செல்வரங்கம் சாந்தாவின் முகத்தைப் பார்த்தார்.

அவள் எதுவும் சொல்லவில்லை.     

பொருட்பால் 
அரசியல் இயல் 
அதிகாரம் 42
கேள்வி 
குறள் 415:
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.

பொருள்:
வழுக்கல் மிகுந்த பாதையில் உதவும் ஊன்றுகோல் போல் ஒழுக்கம் உடையவர்களின் சொற்கள் ஒருவருக்கு உதவும்.
அறத்துப்பால்                                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...