Thursday, February 28, 2019

393. கோவிலில் கேட்ட கதை

"சார் போஸ்ட்!" 

கடிதத்தை வீட்டுக்குள் போட்டு விட்டு சைக்கிளில் விரைந்து விட்டார் தபால்காரர்.

உள்ளிருந்து வந்த வெங்கடாசலம் கடிதத்தை எடுத்துப் பார்த்தார். இன்லாண்ட் கடிதம். அநேகமாக மகனிடமிருந்து வந்திருக்கலாம். 

வெங்கடாசலம் தன்னைக் கடிதத்தைப் பிரித்துப் படிக்கச் சொல்வார் என்று தபால்காரருக்குத் தெரியும். 

கார்டு என்றால் சீக்கிரம் படித்துச் சொல்லி விட்டுப் போய் விடலாம், இன்லாண்ட் கடிதத்தைப் படிக்க நேரம் ஆகும் என்றுதான் தான் வருவதற்குள் தபால்காரர் கடிதத்தை வீசி விட்டுப் போய் விட்டார் என்பது வெங்கடாசலத்துக்குப் புரிந்தது. 

இப்போது கடிதத்தைப் படித்துக் காட்ட, தெருவில் யாராவது வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டு நிற்க வேண்டும்!

ஒழுங்காகப் பள்ளிக்கூடம் போய் ஐந்தாம் வகுப்பு வரையாவது படித்திருந்தால் படிக்கத் தெரிந்திருக்கும்! வெங்கடாசலம் முதல் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது, ஆசிரியர் வெங்கடாசலத்தை அடித்து விட்டார் என்பதால் அவர் தந்தை கோபித்துக் கொண்டு வெங்கடாசலத்தின் படிப்பையே நிறுத்தி விட்டார்.

"உனக்கு எதுக்குடா படிப்பு? நமக்குத்தான் பத்துத் தலைமுறைக்கு உக்காந்து திங்கற அளவுக்கு சொத்து இருக்கே? வாத்திகிட்ட அடி வாங்கிக்கிட்டுப் படிக்கணும்னு உனக்குத் தலையெழுத்தா?" என்று அவர் அப்பா சொன்னது வெங்கடாசலத்துக்கு அப்போது புரியவில்லை. வளர்ந்த பிறகும் புரியவில்லை! வசதியாக இருந்தால் படிப்பு தேவையில்லையா என்ன?

அப்பாவால் நின்று போன படிப்பைத் தொடர வெங்கடாசலம் பிற்காலத்திலும் முயற்சி எதுவும் எடுக்கவில்லை. ஆனால் எதையும் படித்துப் புரிந்து கொள்ள மற்றவர் உதவியை எதிர்பார்க்க வேண்டிய சந்தர்ப்பங்களில், தான் படிக்கவில்லையே என்ற வருத்தம் வெங்கடாசலத்துக்கு ஏற்படும்.

ஒரு படித்த பெண்ணையாவது மணந்து கொண்டிருக்கலாம். ஆனால் கணவனை விட மனைவி அதிகம் படித்திருக்கக் கூடாது என்ற நடைமுறை வழக்கத்தின் அடிப்படையில் அவர் ஒரு படிக்காத பெண்ணைத்தான் மணந்து கொண்டார்.

ஒரு பையன் பிறந்து, அவன் பள்ளிக்குச் சென்று படிக்க ஆரம்பித்ததும்தான் வெங்கடாசலத்துக்குச் சற்று உதவியாக இருந்தது. இப்போது அவனும் படிப்பை முடித்து வெளியூரில் வேலைக்குப் போய் விட்டான். இப்போது அவனிடமிருந்து வரும் கடிதத்தைப் படிக்கக் கூட யாரையாவது எதிர்பார்க்க வேண்டிய நிலைமை!

கோவிலில் யாரோ ஒருவர் ராமாயணக் கதை சொல்கிறார்கள் என்று அதைக் கேட்கப் போனார் வெங்கடாசலம். கையில் ஒரு பேப்பர் கூட வைத்துக் கொள்ளாமல் பல ஸ்லோகங்கள், செய்யுள்களை மனப்பாடமாகச் சொல்லி அற்புதமாக உபன்யாசம் நிகழ்த்தினார் சொற்பொழிவாளர். 

அவர் சொற்பொழிவு சிறப்பாக இருந்தாலும் அவரிடம் ஏதோ ஒன்று உறுத்தலாகப் பட்டது வெங்கடாசலத்துக்கு. உபன்யாசம் முடிந்து அவரை ஒருவர் பாராட்டிப் பேசியபோதுதான் வெங்கடாசலத்துக்குத் தெரிய வந்தது. அவர் பார்வை இல்லாதவராம். அதுதான் இரவு நேரத்தில் கூடக் கருப்புக் கண்ணாடி அணிந்து கொண்டே பேசி இருக்கிறார்!

பிறவியிலேயே பார்வை இல்லாத அவர் முதலில் தன் தந்தையிடமும், பிறகு பல ஆசிரியர்களிடமும் செவி வழியாகப் பாடம் கேட்டே பல இலக்கியங்களையும் ஆன்மீக விஷயங்களையும் அறிந்து கொண்டார் என்று அவரைப் பற்றிப் பேசியவர் கூறியபோது வெங்கடாசலத்துக்குக் கண்ணில் நீர் வந்து விட்டது.

'கடவுளே! கண் இல்லாத ஒருத்தர் இத்தனை படிச்சிருக்காரு. நான் ரெண்டு கண் இருந்தும் குருடன் மாதிரி இருந்துட்டேனே!' என்று மௌனமாகப் புலம்பினார் வெங்கடாசலம்.   
பொருட்பால்
அரசியல் இயல் 
அதிகாரம் 40
கல்வி
குறள் 393:
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.

பொருள்:
கல்வியறிவு பெற்றவரே கண்ணுடையவர். மற்றவர்களுக்குக் கண்கள் இருந்தாலும், அவை முகத்தில் இரு புண்களைப் போன்றதுதான்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

அறத்துப்பால்                                                                                      காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...