"சேல்ஸ் எக்சிக்யூடிவ் பேரு?" என்றார் நிர்வாக இயக்குனர் தெய்வசிகாமணி.
நித்யானந்தம் தன்னுடன் வந்திருந்த தன் சக ஊழியர் சிதம்பரத்தைப் பார்க்க, "தனபால்!" என்றார் சிதம்பரம்.
"தனபால் வேலையை விட்டுப் போயாச்சே!"
"அவர் வேலையை விட்டுப் போனா என்ன சார்? அவர் உங்க கம்பெனி ஊழியராத்தானே எங்ககிட்ட பேசினாரு? அவர் சொன்னதை நீங்க நிறைவேற்ற வேண்டாமா?"
"இப்படியெல்லாம் அதிகப்பிரசங்கித்தனமா நடந்துக்கிட்டதாலதான், அவரை வேலையை விட்டு அனுப்பிட்டேன்!"
"சரி சார்! அவர் சொன்னதை விடுங்க. உங்க சரக்கு தரக்குறைவா இருந்ததுன்னு இப்ப நாங்க உங்ககிட்ட சொல்றோம், இல்ல? அதுக்கு என்ன சொல்றீங்க?" என்றார் நித்யானந்தம், சற்றுக் கோபத்துடன்.
"நான் இந்த கம்பெனியோட எம்.டி. நீங்க உங்க கம்பெனியில மானேஜராவோ என்னவாவோ இருக்கீங்க. உங்களுக்கு நான் எதுக்கு பதில் சொல்லணும்?" என்றார் தெய்வசிகாமணி.
"என்ன சார் நீங்க பேசறது? உங்க சேல்ஸ் எக்சிக்யூடிவ்கிட்ட சொன்னோம்னு சொன்னா, அவர் வேலையை விட்டுப் போயிட்டாருன்னு சொல்றீங்க. உங்ககிட்ட சொன்னா, நாங்க சொல்றதுக்கு பதில் சொல்ல மாட்டேங்கறீங்க. எங்க எம்.டியை விட்டே உங்களுக்கு ஃபோன் பண்ணச் சொல்லட்டுமா?"
"நான் இப்ப பிசியா இருக்கேன். நீங்க போயிட்டு அப்புறம் வாங்க!" என்ற தெய்வசிகாமணி, தொலைபேசியை எடுத்து யாரிடமோ பேசத் தொடங்கினார்.
நித்யானந்தமும், சிதம்பரமும் கோபத்துடன் வெளியே வந்தனர்.
அவர்கள் இருவரும் வெளியே வந்து அவர்கள் வந்த காரில் ஏற முயன்றபோது, உள்ளிருந்து ஒருவர் வேகமாக ஓடி வந்து, "சார்! கொஞ்சம் நில்லுங்க!" என்றார்.
இருவரும் நின்றனர்.
"சார் பேசினதை மனசில வச்சுக்காதீங்க. நான் உங்களுக்கு வேற சரக்கு அனுப்ப ஏற்பாடு செய்யறேன். இதுக்காகக் கோவிச்சுக்கிட்டு இனிமே ஆர்டர் கொடுக்காம இருந்துடாதீங்க. நீங்க அப்படிப் பண்ணினா, எங்க பிழைப்பில மண் விழுந்துடும்! இங்கே இருபது பேர் வேலை செய்யறோம்!" என்றார் அவர்.
"உங்க எம்.டி எங்களை மதிச்சுப் பேசக் கூட மாட்டேங்கறாரு. நீங்க யாரு? நீங்க சொல்றதை நாங்க எப்படி ஏத்துக்க முடியும்?" என்றார் நித்யானந்தம்.
"சார்! நான் அவரோட அப்பா காலத்திலேந்து இங்கே வேலை செய்யறேன். நான் அவர்கிட்ட சொல்லிப் புரிய வைக்கிறேன். நான் சொன்னா அவர் கேப்பாரு. ரெண்டு நாள் வெயிட் பண்ணுங்க. உங்களுக்கு நல்ல சரக்கு வந்துடும். நல்ல சரக்கைக் கொடுத்துட்டு, முன்னே கொடுத்த சரக்கைத் திருப்பி எடுத்துக்கறோம். எதிர்காலத்தில ஏதாவது பிரச்னைன்னா, எனக்கு ஃபோன் பண்ணுங்க. நான் அதை சரி செஞ்சு கொடுக்கறேன். என் பேர் கஜேந்திரன்" என்றார் அவர்.
"சரி. நீங்க சொல்றதுக்காக, ரெண்டு நாள் வெயிட் பண்றோம்!" என்று சொல்லி விட்டுக் காரில் ஏறினார் நித்யானந்தம்.
காரில் போகும்போது, "இவரை மாதிரி ஒத்தர் இங்கே இருக்கறதாலதான் இந்த கம்பெனி இன்னும் ஓடிக்கிட்டிருக்கு. இல்லேன்னா, தெய்வசிகாமணி நடந்துக்கற லட்சணத்துக்கு, இந்த கம்பெனி இருந்த இடமே தெரியாம அழிஞ்சு போயிருக்கும்!" என்றார் சிதம்பரம்.
"இந்த கம்பெனி மட்டும் இல்ல, சிதம்பரம்! இந்த உலகதில சில பேராவது பண்புள்ளவங்களா இருக்கறதாலதான், இந்த உலகமே இயங்கிக்கிட்டிருக்கு. இல்லேன்னா, இந்த உலகமே அழிஞ்சு போயிடும்!" என்றார் நித்யானந்தம்.
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 100
பண்புடைமை
குறள் 996:
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்
No comments:
Post a Comment