"தேர்தல்ல நீ யாருக்கு ஓட்டுப் போடப் போற, தமிழ் மக்கள் கட்சிக்கா, அனைத்துலக தமிழர் கட்சிக்கா?"
"அதைத் தீர்மானிக்கத்தான், ரெண்டு கட்சிகளோட தேர்தல் அறிக்கைகளையும் ஒப்பிட்டுப் பாத்துக்கிட்டிருக்கேன்."
"தேர்தல் அறிக்கைகளை மட்டும் பார்த்தா போதுமா, கட்சிகளோட கொள்கைகள், தலைவர்களோட தன்மை, இரண்டு கட்சிகளும் ஆட்சியில இருந்தப்ப செஞ்ச நன்மைகள், கெடுதல்கள் எல்லாத்தையும் பார்க்க வேண்டாமா?"
"பார்க்கணும்தான். முதல்ல, தேர்தல் அறிக்கைகளை ஒப்பிட்டுப் பார்ப்போம், ஏன்னா, தேர்தல் அறிக்கைதானே, ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தா என்ன செய்யப் போகுதுங்கறதுக்கான செயல் திட்டம்?"
"அது சரிதான். ஆனா, ரெண்டு கட்சிகளும் ஒரே மாதிரியான பல வாக்குறுதிகளைக் கொடுத்திருக்காங்க. யாரு அதிக எண்ணிக்கையில, அல்லது அதிக மதிப்பில வாக்குறுதிகள் கொடுத்திருக்காங்கன்னு பாக்கப் போறமா?"
"கடந்த காலத்தில மக்கள் அப்படிப் பார்த்து ஓட்டுப் போட்டுதான் ஏமாந்திருக்காங்க. அதனாலதான், கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில விரிவான செயல் திட்டத்தைக் கொடுக்கணும்னு புது நெறிமுறை வந்திருக்கு."
"ஆமாம். நிறைய விவரங்கள், கணக்குகள் எல்லாம் கொடுத்திருக்காங்க. பார்த்தேன். ஆனா, அதையெல்லாம் படிச்சுப் பார்க்க எனக்குப் பொறுமையில்ல!"
"கொஞ்சம் கவனமாப் படிச்சா, நிறைய தெரிஞ்சுக்கலாம்!"
"சரி. நீ படிச்சுத் தெரிஞ்சுக்கிட்டதை சொல்லு."
"ஒரு கட்சி அதிகமா வாக்குறுதிகள் கொடுத்திருக்கு. ஆனா, அதுக்கெல்லாம் நிதி எங்கேயிருந்து வரும்கறதைப் பத்தித் தெளிவா விளக்காம, பொதுவாச் சொல்லி மழுப்பி இருக்கு. ஆனா, இன்னொரு கட்சி மாநிலத்தோட வளங்களை எப்படிப் பெருக்கப் போறாங்க, அதிலேருந்தெல்லாம் எவ்வளவு வருமானம் வரும், அந்தக் கூடுதல் வருமானத்தை வச்சு எப்படி அவங்க வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான செயல்திட்டங்களை உருவாக்கப் போறாங்க என்பதையெல்லாம் விளக்கமா, புள்ளி விவரங்களோட கொடுத்திருக்காங்க."
"அப்படியா?"
"அதோட இல்லாம, திட்டங்களை நிறைவேற்றும்போது என்னென்ன சுற்றுச் சூழல் பிரச்னைகள் வரும், அவற்றை எப்படி சமாளிக்கப் போறாங்க, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்றும்போது, அங்கே வசிக்கிற ஏழை மக்களை எங்கே குடியமர்த்தப் போறாங்க என்பதையெல்லாம் கூட விளக்கி இருக்காங்க!"
"ஆச்சரியமா இருக்கே! நிபுணர்களைக் கலந்தாலோசிச்சுத் தயாரிச்சிருக்கிற மாதிரி இல்ல இருக்கு? இன்னோரு கட்சியோட அறிக்கையில இதெல்லாம் இல்லையா?"
"இல்லை. சும்மா எதையோ எழுதிப் பக்கங்களை நிரப்பி இருக்காங்க."
"சரி. எந்தக் கட்சி இப்படி விரிவான அறிக்கை தயாரிச்சிருக்கு?"
"த.ம.க!"
"அப்ப உன் ஓட்டு த.ம.க.வுக்குத்தானா?"
"ஆமாம்."
"அப்ப, என் ஓட்டும் த.ம.க.வுக்குத்தான்!"
"நீ வேற சில விஷயங்களைப் பார்க்கணும்னு சொன்னியே!"
"அதன்படி பாத்தா, த.ம.க.வைத்தான் தேர்ந்தெடுக்க முடியும்னு எல்லோருக்குமே தெரியுமே!
குறள் 512:
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.
No comments:
Post a Comment