"சார்! உலகம் மாறிக்கிட்டே வருது. நாமும் அதுக்குத் தகுந்தாப்பல மாறணும்!" என்றான் சேல்ஸ் மானேஜர் கார்த்திகேயன்.
"நான் அப்படி எல்லாம் மாற வேண்டிய அவசியம் இல்லை!" என்றார் நிர்வாக இயக்குனர் முருகப்பன்.
"சார்! அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க மாட்டேங்கற உங்க கொள்கை சரிதான். அதுல உறுதியா இருந்து இத்தனை வருஷமா உங்க நிறுவனத்தை வெற்றிகரமா நடத்திக்கிட்டு வரீங்க. ஆனா இப்ப லஞ்சம்கறது எல்லா இடத்திலேயும் பரவிடுச்சு. நம்ப தயாரிப்புகளை விநியோகிக்கற நிறுவனங்களோட உயர் அதிகாரிகள் கூட கமிஷன் கேக்கறாங்க. அவங்களுக்குக் கொடுக்கற கமிஷனை நாம விலையில ஏத்திக்கலாம். நமக்கு ஒரு பிரச்னையும் வராது."
"விநியோகஸ்தர்களுக்குத்தான் கமிஷன் கொடுக்கறமே!"
"சார்! உங்களுக்குத் தெரியாதது இல்ல. நான் சொல்றது பர்சேஸ் மானேஜர் மாதிரி அதிகாரிகள் கேக்கற கமிஷன், அதாவது லஞ்சம்! முதலாளிகளா இருக்கற விநியோகஸ்தர்கள் கூடக் கேக்கறாங்க. ஏன் சார் உங்களுக்குக் கொடுக்கற கமிஷனை உங்க பில்லிலேதானே கூட்டப் போறோம்னு கேட்டா, வருமான வரின்னு ஒண்ணு இருக்கே தெரியாதான்னு சிரிச்சுக்கிட்டே கேக்கறாங்க!"
"லஞ்சம் கொடுக்கக் கூடாதுன்னு நாம உறுதியா இருக்கறப்ப, தனியார் நிறுவன அதிகாரிகளுக்கும், நிறுவன முதலாளிகளுக்கும் மட்டும் கொடுக்கலாமா?"
"சார்! ஒரு சேல்ஸ் மானேஜரா எனக்கு இது ஒரு பிரச்னையா இருக்கு. எங்கிட்ட வேலை செய்யற சேல்ஸ் ரெப்ரசன்டேடிவ்கள் எல்லாம், எல்லா நிறுவனங்களும் கமிஷன் கொடுக்கறப்ப, நாம மட்டும் கமிஷன் கொடுக்காம எப்படி ஆர்டர் வாங்க முடியும்னு கேக்கறாங்க. இப்பல்லாம் கடையில ஒரு சோப் வாங்கறவங்க கூட சோப் விலையில அம்பது பைசாவாவது தள்ளுபடி கிடைக்குமான்னு பாக்கறாங்க. கமிஷன் எதிர்பாக்கறதும் அப்படித்தான் சார்!" என்றான் கார்த்திகேயன்.
சற்று நேரம் யோசித்த முருகப்பன், "நீங்க சொல்றதில அர்த்தம் இருக்கு. இதைப் பத்தி யோசிக்கறேன்" என்றார்.
தன் பிடிவாத குணத்தைத் தளர்த்திக் கொண்டு தான் சொன்னதை யோசித்துப் பார்க்க முருகப்பன் ஒப்புக் கொண்டது கார்த்திகேயனுக்கு வியப்பு கலந்த மகிழ்ச்சியை அளித்தது.
ஒரு வாரம் கழித்து கார்த்திகேயனை அழைத்த முருகப்பன், "நீங்க சொன்னபடி, இப்ப மக்கள் கிட்ட கமிஷன், தள்ளுபடி எல்லாம் எதிர்பாக்கற மனநிலை வளர்ந்திருக்குங்கறது உண்மைதான். உலகத்துக்கு ஏற்ப நாம அனுசரிச்சுப் போக வேண்டியதுதான். ஆனா அதுக்காக நேர்மை, கொள்கை இதையெல்லாம் விடணும்னு அவசியமில்லை!" என்றார்.
"பின்னே எப்படி சார்?" என்றான் கார்த்திகேயன், ஏமாற்றத்துடன்.
"மக்கள் தள்ளுபடியை விரும்பறதைப் பயன்படுத்தி நாமே ஒரு டிஸ்கவுன்ட் ஸ்டோர் ஆரம்பிச்சுடலாம். நாம நேரடியா விக்கறதால நிறைய டிஸ்கவுன்ட் கொடுக்க முடியும். அதனால விற்பனையும் அதிகமா இருக்கும், வியாபாரமும் நேர்மையானதா இருக்கும். முதலீடு, செலவுகள் பத்தி எல்லாம் ஆடிட்டர்கிட்ட விவரமாப் பேசிட்டேன். முதல்ல கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் ரெண்டு வருஷத்தில இப்ப வர லாபம் வந்துடும்னு சொல்றாரு. சேஸ்ஸ் ரெப்ரசன்டேடிவ்களை நம்ம ஸ்டோர்லயே பயன்படுத்திக்கலாம். கமிஷன் இல்லாம நம்ம கிட்ட வாங்க விரும்பற விநியோகஸ்தர்களுக்கு மட்டும் விக்கலாம். சில வருஷங்கள்ள நிறைய ஸ்டோர்களைத் திறந்து நம்ம வியாபாரம் பெரிய அளவில வளர்வதற்குக் கூட வாய்ப்பு இருக்கு!" என்றார் முருகப்பன், உற்சாகத்துடன்.