Saturday, February 29, 2020

399. ஆத்திச்சூடி

"தாத்தா! நீ சொல்லிக் கொடுத்த தமிழ் ரைம் சொல்லிக் காட்டட்டுமா?" என்றான் ரித்விக்.

"தமிழ் ரைமா? நான் எப்ப சொல்லிக் கொடுத்தேன்?" என்றார் பெரியசாமி.

"அதான் தாத்தா 'அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம்.' "

"ஓ, அதுவா? அது பேரு ரைம் இல்ல, ஆத்திச்சூடி!"

"அதான்! சொல்றேன். சரியா இருக்கான்னு பாரு" என்ற ரித்விக் ஆத்திச்சூடியின் 13 வரிகளையும் சொல்லி முடித்தான். 

"சரியாச் சொல்லிட்டியே! அடிக்கடி சொல்லிப் பாத்துக்க. அப்பதான் மறந்து போகாம இருக்கும்" என்றார் பெரியசாமி. 

சில நாட்களுக்குப் பிறகு, ரித்விக் தன் வகுப்புத் தோழன் ஒருவனையும், அவன் அம்மாவையும் வீட்டுக்கு அழைத்து வந்தான். நேரே பெரியசாமியிடம் வந்து, "தாத்தா! இவனும் என் கிளாஸ்தான் பேரு. அஸ்வின்" என்றான். 

"வாப்பா!" என்ற பெரியசாமி அஸ்வினின் அம்மாவைப் பார்த்தார். 

அவருக்குக் கைகூப்பி வணக்கம் தெரிவித்த அந்தப் பெண்மணி, "வணக்கம் அங்க்கிள்! நான் அஸ்வினோட அம்மா. ரித்விக் அழகா ஆத்திச்சூடி சொல்றதைப் பாத்து, அஸ்வின் தானும் கத்துக்கணும்னு ஆசைப்படறான். உங்களுக்கு நேரம் இருந்தா அவனுக்கும் சொல்லித் தரீங்களா?" என்றாள் 

"தாராளமா! நான் சும்மாதானே இருக்கேன்! தினம் 10 நிமிஷம் கத்துக்கிட்டாப் போதும். அஞ்சாறு நாள்ள முழுசாக் கத்துக்கலாம்" என்றார் பெரியசாமி.

"தாங்க்ஸ் அங்க்கிள்!" என்றாள் அவள். 

ரண்டு மூன்று நாட்கள் கழித்து அஸ்வினின் அம்மா இன்னும் மூன்று பெண்களுடன் வந்தாள்.

"அங்க்கிள்! அஸ்வின் ஆத்திச்சூடி கத்துக்கறது தெரிஞ்சதும், இன்னும் சில பெற்றோர்களும் தங்களோட குழந்தைகளும் ஆத்திச்சூடி கத்துக்கணும்னு ஆசைப்படறாங்க. மொத்தம் 10 குழந்தைங்க இருப்பாங்க. நீங்க அவங்களுக்கு தினம் அரை மணி நேரம் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் மாதிரி விஷயங்கள்ளாம் சொல்லிக் கொடுத்தா நல்லா இருக்கும். தப்பா நினைச்சுக்காதீங்க. இதை ஒரு டியூஷன் மாதிரி வச்சுக்கங்க. எல்லாருமே ஏதாவது ஃபீஸ் கொடுக்க விரும்பறாங்க!" என்றாள் அஸ்வினின் தாய்.

"சாரிம்மா! நான் ஆசிரியர் இல்ல. நான் படிச்சதில எனக்கு ஞாபகம் இருக்கற விஷயங்களை என் பேரனுக்கு சொல்லிக் கொடுத்தேன். வேற யாருக்காவது ஆர்வம் இருந்தா சொல்லித் தரேன். இதுக்கு நான் ஃபீஸ் எதுவும் வாங்க மாட்டேன். எனக்குத் தெரிஞ்சதும் கொஞ்சம்தான்!" என்றார் பெரியசாமி.

'உங்களுக்குத் தெரிஞ்சதை சொல்லிக் கொடுங்க அங்க்கிள் அது போதும். ஏன்னா, இதெல்லாம் இவங்களுக்கு ஸ்கூல்ல சொல்லிக் கொடுக்கறதில்ல. எங்களுக்கும் இதெல்லாம் ஞாபகம் இல்ல. முன்ன படிச்சதெல்லாம் மறந்து போச்சு. என் பையன் சொல்றதைக் கேட்டுட்டு, நானே இதையெல்லாம் மறுபடி கத்துக்கறேன். என் வீட்டுக்காரர் கூட, இதையெல்லாம் மறுபடி கேக்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குன்னு சொல்றாரு!" என்றாள் அஸ்வினின் அம்மா.

"சரிம்மா! ஆர்வம் இருக்கற குழந்தைகளை வரச் சொல்லுங்க. எனக்குத் தெரிஞ்சதை சொல்லித் தரேன்!" என்றார் பெரியசாமி. 

"என்னப்பா, லைப்ரரியிலேந்து கம்பராமாயணம், சிலப்பதிகாரம் எல்லாம் எடுத்துப் படிக்க ஆரம்பிச்சுட்டீங்க?" என்றான் பெரியசாமியின் மகன் வியப்புடன்.

"இந்தப் பையன்களுக்கு ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நாலடியார், நன்னெறி எல்லாம் சொல்லிக் கொடுக்கறேன் இல்ல? இதையெல்லாம் கத்துக்கறதில பையங்க ரொம்ப சந்தோஷப்படறாங்க. அவங்க பெற்றோர்களும் இதையெல்லாம் மறுபடி கத்துக்கறோம்னு சொல்லி சந்தோஷப்படறாங்க. அதனால எனக்கும் இன்னும் பல விஷயங்களைப் படிச்சுத் தெரிஞ்சுக்கணும்னு ஆர்வம் வந்திருக்கு!" என்றார் பெரியசாமி.   

பொருட்பால் 
அரசியல் இயல் 
அதிகாரம் 40
கல்வி
குறள் 399:
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

பொருள்:
தமக்கு இன்பம் அளிக்கும் கல்வி உலகத்தாருக்கும் இன்பம் அளிப்பதைக் கண்டு கற்றவர்கள் கல்வியின் மீது மேலும் விருப்பம் கொள்வார்கள்.
      அறத்துப்பால்                                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...