Tuesday, October 30, 2018

381. இருவரில் ஒருவர்

"சி ஈ ஓ போஸ்டுக்கு ரெண்டு பேரை ஷார்ட்லிஸ்ட் பண்ணி இருக்கேன். அதைப் பத்தி உங்ககிட்ட கலந்து பேசணும்" என்றார் நிர்வாக இயக்குனர் சுந்தரேசன்.

"நீங்களே ஒத்தரை செலக்ட் பண்ணி இருக்கலாமே? எங்கிட்ட கலந்து பேச வேண்டியது அவசியம் இல்லையே?" என்றார் நிறுவனத் தலைவர் அகர்வால்.

"இல்லை. நம்ப கம்பெனியில இருக்கிற அஞ்சு டிவிஷன்ல, ரெண்டு டிவிஷனோட ஜெனரல் மானேஜர்களை ஷார்ட்லிஸ்ட் பண்றது சுலபமா இருந்தது. ஆனா அவங்க ரெண்டு பேருக்குள்ள ஒத்தரை செலக்ட் பண்றது ரொம்ப கஷ்டமா இருந்தது. ரெண்டு பேரும் கம்பெனிக்கு நிறைய கான்ட்ரிபியூட் பண்ணியிருக்காங்க. நான் சில பராமீட்டர்ஸைப் பயன்படுத்தி ஒரு முடிவு எடுத்திருக்கேன். அதை உங்ககிட்ட டிஸ்கஸ் பண்றது நல்லதுன்னு நெனச்சேன். முதல்ல ரெண்டு பேரோட ப்ரொஃபைல் பாருங்க. சுருக்கமா எழுதியிருக்கேன்."

அகர்வால் இருவரைப் பற்றிய விவரங்களையும் விரைவாகப் படித்து முடித்தார். 

"நீங்க சொல்றது கரெக்ட்தான். ரெண்டு பேருமே சமமா இருக்கற மாதிரிதான் இருக்கு. நீங்க யாரை செலக்ட் பண்ணினீங்க? என்ன பராமீட்டர்ஸைப் பயன்படுத்தினீங்க?"

"குமார், ரமேஷ் ரெண்டு பேருல குமாரோட டிவிஷன் கொஞ்சம் பெரிசு. லாபமும் அதிகம் வருது.  அதனால குமார்தான் இயல்பான சாய்ஸாத் தெரிவாரு. ஆனா ரெண்டு பேரும் எங்கிட்ட நேரடியா ரிப்போர்ட் பண்றதாலயும், அவங்களுக்குக் கீழே வேலை செய்யற பல எக்சிக்யூட்டிவ்ஸ் கிட்ட நான் அடிக்கடி பேசறதாலயும் எனக்கு சில விஷயங்கள் தெரியும்."

"அப்ப ரமேஷ்தான் உங்க சாய்ஸ்னு தெரியுது. சஸ்பென்ஸ் வைக்காம சொல்லிட்டீங்களே!" என்றார் அகர்வால் சிரித்துக்கொண்டே.

"சஸ்பென்ஸ் இருக்கா இல்லையான்னு உங்களுக்கு நான் முழுசா  சொன்னப்பறம்தான் தெரியும்!" என்றார் சுந்தரேசனும் சிரித்தபடியே. "ஆனா, சஸ்பென்ஸ் இருக்காங்கறதை விட நான் சொல்ற விஷயங்கள்ள  சப்ஸ்டன்ஸ் இருக்கான்னு நீங்க சொல்லணும்ங்கறதாலதான் உங்ககிட்ட என் அணுகுமுறையை விவரமா சொல்றேன்."

"சொல்லுங்க."

"நான் ஆறு பராமீட்டர்ஸ் எடுத்துக்கிட்டேன். முதல்ல ரெண்டு பேரோட மார்க்கெட்டிங் டீமையும் ஒப்பிட்டுப் பாத்தேன். ஒரு நாட்டுக்கு ராணுவம் மாதிரிதான் ஒரு நிறுவனத்துக்கு மார்க்கெட்டிங் டீம். அதோட வலிமைதான் நிறுவனத்தோட வலிமையைத் தீர்மானிக்கும். குமாரோட மார்க்கெட்டிங் டீம் பெரிசு. அவங்களுக்கு வருமானம், இன்சென்ட்டிவ் எல்லாம் அதிகம். ஆனா ரமேஷோட மார்க்கெட்டிங் டீம் உற்சாகமா இருக்கற மாதிரி குமார் டீம் இல்ல. இத்தனைக்கும் ரமேஷோட டிவிஷன்லதான் மார்க்கெட்டிங் ரொம்ப கஷ்டம். ஆனா அவங்க எல்லாரும் உற்சாகமா வேலை செய்யறாங்க. இதுக்குக் காரணம் ரமேஷ் தன் மார்க்கெட்டிங் டீம்ல இருக்கறவங்களோட அடிக்கடி பேசி அவங்க பிரச்னைகளைக் கேட்டு, அவங்களை உற்சாகப்படுத்தறது."

"இப்பவே குமாரோட விக்கட் போயிடுச்சே. சஸ்பென்ஸுக்கு வாய்ப்பே இல்லையே!" என்றார் அகர்வால். 

"சப்ஸ்டன்ஸ் சார்! அது இருக்கான்னு பாருங்க. ரெண்டாவது விஷயம் ஊழியர்கள் மனநிலை. வெளிப்படையா, ரெண்டு டிவிஷன்லியுமே எல்லாரும் சந்தோஷமா இருக்கறமாதிரிதான் இருக்கு. ஆனா குமார் டிவிஷன்ல வேலையை விட்டுப் போறவங்களும், அதுக்கு பதிலா புதுசா சேரறவங்களும் அதிகம்."

"எம்ப்ளாயீ டர்னோவர்னு  சொன்னாலே எனக்குப் புரியும் சார். எனக்கும் கொஞ்சம் மானேஜ்மென்ட் ஜார்கன்லாம் தெரியும்!" என்றார் அகர்வால் சிரித்தபடி.

"சார்! எனக்குத் தெரிஞ்சது எதுவும் உங்களுக்குத் தெரியாம இருக்காதுன்னு எனக்குத் தெரியும். ஜார்கன் எதுவும் பயன்படுத்த வேண்டாம்னுதான் அப்படிச் சொன்னேன். மூணாவது விஷயம் ஊழியர்களுக்கான வசதிகள். நாம ஒவ்வொரு டிவிஷனும் சுதந்திரமா பல விஷயங்களை முடிவு பண்ண விட்டிருக்கோம். ரமேஷோட டிவிஷன்ல லாபம் குறைவானாலும், ஊழியர்களுக்கு சலுகைகள் அதிகம் இருக்கு, காண்ட்டீன் சப்ஸிடி கூட குமார் டிவிஷனை விட அதிகம்."

"அதனாலதான் லாபம் குறைவா இருக்கோ என்னவோ!"

"இல்லை சார். இது ஊழியர்களோட உற்சாகம் சம்பந்தப்பட்ட விஷயம். குமார் சிலவகை ஊழியர்கள் முக்கியமானவங்கன்னு நினைச்சு செயல்படற மாதிரி அவங்களுக்கு அதிகச் சலுகை, மத்தவங்களுக்கு குறைந்த சலுகைங்கற கொள்கையைப் பின்பத்தற மாதிரி தெரியுது. உதாரணமா, அட்மினிஸ்ட்ரேஷன்ல இருக்கறவங்க ரொம்பப் புறக்கணிக்கப்பட்டவங்களா உணரறாங்க."

"நாலாவது, ஆலோசகர்கள். குமார் ஒரு சில சீனியர் எக்ஸிக்யூட்டிவ்களை மட்டும்தான்  கன்சல்ட் பண்றாரு. ரமேஷ் அப்படி இல்ல. அவர் எல்லாரோட யோசனைகளையும் காது கொடுத்துக் கேக்கறவரு. நல்ல யோசனை யார் சொன்னாலும் அதைப் பரிசீலனை பண்ற இயல்பு ரமேஷுக்கு உண்டு."

"இன்னும் என்ன சார் இருக்கு?"

"இன்னும் ரெண்டு இருக்கு சார்! நீங்க எதிர்பாக்கற சஸ்பென்ஸும் இருக்கு! சஸ்பென்ஸனு சொல்றதை விட சர்ப்ரைஸ்ன்னு சொல்றது பொருத்தமா இருக்கும். அஞ்சாவது விஷயம், கான்டாக்ட்ஸ். ரமேஷுக்கு பல நிறுவனங்களோட எக்ஸிக்யூடிவ்ஸோட நெருக்கம் இருக்கு. ஏதாவது பிரச்னைன்னா அவங்ககிட்ட உதவி கேக்க முடியும் ஒரு தடவை மூலப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டப்ப,  ரமேஷ் அவருக்குத் தெரிஞ்ச ஒரு நிறுவனத்திலேந்து கொஞ்சம் மூலப்பொருள் வாங்கி சேமிப்பில வச்சுட்டாரு எனக்குக் கூட இது அப்புறம் தான் தெரியும்."

"சரி. ஆறாவது?"

"இது ரொம்ப முக்கியம்னு நினைக்கறேன். முன்னெச்சரிக்கை. வரக் கூடிய ஆபத்துகளுக்கு எதிரான பாதுகாப்பு. ரமேஷ்கிட்ட இந்தப் பாதுகாப்பு உணர்வு இருக்கு. ஒருவேளை நம்ம தயாரிப்புக்கான டிமாண்ட் குறைஞ்சுட்டா, அல்லது போட்டியா வேற மாற்றுப் பொருள் வந்துட்டா, அதை எப்படி சமாளிக்கறதுங்கறதுக்காக ஒரு ரிஸர்ச் டிபார்ட்மெண்ட்டே வச்சிருக்காரு. லாபம் குறைய இதுவும் ஒரு காரணமா இருக்கலாம். ஆனா இது ஒரு இன்ஷ்யூரன்ஸ் மாதிரிதானே?"

"ஆகக்கூடி ரமேஷ் உங்க ஆறு பராமீட்டர்ஸ்லேயும் குமாரை மிஞ்சிட்டாரு. அதனால அவர்தான் அடுத்த சி ஈ ஓ. இதுதானே உங்க முடிவு?"

"என்னோட அணுகுமுறை சரியான்னு உங்ககிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கணும்னுதான் உங்ககிட்ட இதை விவரமா சொன்னேன்."

"பிரில்லியண்ட். நீங்க எம் பி ஏ இல்லையே! இதையெல்லாம் எங்கே படிச்சீங்க? அது இருக்கட்டும். சஸ்பென்ஸ் அல்லது சர்ப்ரைஸ் இருக்கும்னீங்களே, அது என்ன?"

"நீங்க என்னோட அப்ரோச் தப்புன்னு சொல்லியிருந்தீங்கன்னா அதுதான் சஸ்பென்ஸா இருந்திருக்கும்!"

"இல்லை. வேற என்னவோ இருக்குன்னு நினைக்கறேன். நீங்க பின்பற்றின முறையை ஒரு புத்தகமா எழுதலாமே!"

"முடியாது சார்! ஏற்கெனவே ஒத்தர் எழுதிட்டாரு."

ஓ! இதுதான் சர்ப்ரைஸா? அமெரிக்கன் ஆதர்தானே?"

"இல்லை சார். இந்தியன் ஆதர்தான். அதுவும் ரெண்டாயிரம் வருஷம் முன்னாலேயே எழுதிட்டாரு - தமிழ்ல!" என்றார் சுந்தரேசன்.

பொருட்பால் 
அரசியல் இயல் 
அதிகாரம் 39
இறைமாட்சி (அரசனின் பெருமை)

குறள் 381:
படைகுடி கூழ் அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.

பொருள்:
படை, குடிமக்கள், அமைச்சர்கள், (குடிமக்களுக்கு) உணவு, பிற அரசர்களுடன் நட்பு, பாதுகாப்பு என்ற ஆறு அங்கங்களும் சிறப்பாக உள்ளவனே அரசர்களில் சிறந்தவன்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்





2 comments:

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...