அதிகாரம் 82 - தீநட்பு

திருக்குறள்
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 82
தீநட்பு

811. ரயில் சிநேகிதம்

ஒரு ரயில் பயணத்தின்போது கணேசனுக்கு அறிமுகமானவன்தான் சந்திரன். 

கணேசனிடம் உடனே ஏற்பட்டு விட்ட பிடிப்பினால், அவனுடைய மொபைல் எண்ணை வாங்கிக் கொண்டான் சந்திரன்.

ரயில் பயணத்தில் சந்தித்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு, கணேசனுக்கு ஃபோன் செய்தான் சந்திரன்.

"நான் சந்திரன் பேசறேன்!"

"சந்திரனா? எந்த சந்திரன்?" என்றான் கனேசன்.

"ஒரு சந்திரன்தானே உண்டு வானத்தில!" என்று சொல்லிச் சிரித்த சந்திரன், "என்ன கணேசன், அதுக்குள்ள மறந்துட்டீங்களா? ரயில்ல சந்திச்சோமே!" என்றான்.

"ஓ, நீங்களா? சட்டுனு தெரியல!"

சற்று நேரம் இருவரும் பொதுவாகப் பேசிக் கொண்டனர்.

இன்னும் சில தடவைகள் ஃபோனில் பேசிக் கொண்ட பிறகு, இருவருக்கும் இடையே ஒரு நெருக்கம் ஏற்பட்டது. 

ஓரிரு முறை நேரில் சந்தித்துப் பேசிய பிறகு, ஒருமையில் பேசிக் கொள்ளும் அளவுக்கு இருவரும் நெருக்கமானார்கள்.

சந்திரன் தன் மனைவியுடன் கணேசன் வீட்டுக்கு ஒருமுறை சென்றான். கிளம்பும்போது கணேசனையும், அவன் மனைவியையும் தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தான்.

சந்திரன் கிளம்பிச் சென்றதும், "ஒரு நாளைக்கு அவங்க வீட்டுக்குப் போயிட்டு வரலாம்!" என்றான் கணேசன்

"எதுக்கு?" என்றாள் அவன் மனைவி வந்தனா.

"கூப்பிட்டிருக்கான் இல்ல? அவங்க நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க. நாமும் போயிட்டு வரதுதானே மரியாதை?"

"எனக்கு அவங்க வீட்டுக்குப் போறதில ஆர்வம் இல்ல. நீங்க வேணும்னா போயிட்டு வாங்க!" என்றாள் வந்தனா.

"உனக்கு எதனாலேயோ சந்திரனைப் பிடிக்கலேன்னு நினைக்கிறேன்!"

"பிடிக்கிறது, பிடிக்கலேன்னு இல்ல. ஏதோ ரயில்ல பார்த்தோம், பேசினோம்.  அதுக்கப்பறம் அவரு உங்ககிட்ட நட்பு பாராட்டறாரு. உங்களுக்கே இதில அதிக ஆர்வம் இல்லேன்னு நினைக்கிறேன். அவரு உங்ககிட்ட நெருக்கமா இருக்கறதால, நீங்களும் நெருக்கமா இருக்க முயற்சி செய்யற மாதிரிதான் எனக்குத் தோணுது!" என்றாள் வந்தனா.

ணேசன் பதில் பேசவில்லை. 

"சந்திரன் என் மேல கோவமா இருப்பான்னு நினைக்கிறேன்!" என்றான் கணேசன், வந்தனாவிடம்.

"ஏன், நாம அவர் வீட்டுக்குப் போகலேங்கறதாலயா?"

"அதில்ல. அவன் ஏதோ பிசினஸ் பண்ணப் போறானாம். அவன் வாடகை வீட்டில இருக்கறதால, நம்ம வீட்டு அட்ரஸை பிசினஸ் அட்ரஸாப் பயன்படுத்திக்கலாமான்னு கேட்டான். 'அட்ரஸ் மட்டும்தான் இதுவா இருக்கும், ஆனா, நான் என் வீட்டில இருந்தபடியேதான் பிஸினஸ் பண்ணப் போறேன். உனக்கு எந்த பாதிப்பும் வராது' ன்னு சொன்னான். நான் அதுக்கு ஒத்துக்கல. நண்பனுக்காக இந்தச் சின்ன உதவி கூடச் செய்யலேன்னா. நீ எல்லாம் என்ன நண்பன்?'னு கோபமாக் கேட்டுட்டுப் போயிட்டான்."

"நல்ல வேளை! நண்பன் கேக்கறான்னு ஒத்துக்காம இருந்தீங்களே!" என்றாள் வந்தனா.

"அவன் என் மேல கோபமா இருக்கறதுதான் எனக்கு வருத்தமா இருக்கு."

"அவர் உண்மையான நண்பரா இருந்தார்னா, தான் கேட்ட உதவியைச் செய்யலேங்கறதுக்காக உங்க மேல கோபப்பட மாட்டாரு. இதுக்காகக் கோவிச்சக்கிட்டு உங்க நட்பை முறிச்சுக்கிட்டாருன்னா, அது உங்களுக்கு நல்லதுதான். எனக்கென்னவோ அவர் ஏதோ நன்மையை எதிர்பார்த்துத்தான் உங்களோட நட்பா இருந்திருக்காருன்னு தோணுது. உண்மையான நண்பரா இருந்தா, அவர் இந்தக் கோபத்தை மறந்துட்டு உங்ககிட்ட நட்பாவே இருப்பாரு. பார்க்கலாம், அவர் என்ன செய்யறாருன்னு!" என்றாள் வந்தனா.

அதற்குப் பிறகு, சந்திரன் கணேசனைத் தொடர்பு கொள்ளவில்லை.

குறள் 811:
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.

பொருள்: 
அன்பு மிகுதியால் உருகுபவர்போல் தோன்றினாலும், நற்பண்பு இல்லாதவரின் நட்பு வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது.

812. புதிய வீட்டில் கிடைத்த நட்பு

அழைப்பு மணி அடித்ததும் கதவைத் திறந்து பார்த்தாள் லட்சுமி.

"வணக்கம். என் பேரு தயாளன். நான் மூணாவது மாடியில இருக்கேன். நீங்க இங்கே புதுசாக் குடி வந்திருக்கீங்க இல்ல?" என்றார் வெளியே நின்றவர்.

"ஆமாம். ரெண்டு நாள் முன்னாலதான் வந்தோம்."

"செகரட்டரி சொன்னாரு. சார் இல்லையா?"

"அவரு இன்னும் ஆஃபீஸ்லேந்து வரலையே. என்ன விஷயம்?" என்றாள் லட்சுமி.

"விஷயம் எதுவும் இல்ல. நீங்க புதுசா வந்திருக்கறதால, உங்களைப் பார்த்து அறிமுகப்படுத்திக்கிட்டு, ஏதாவது உதவி வேணுமான்னு கேக்கத்தான் வந்தேன். சார் வந்தப்பறம் வந்து பாக்கறேன்" என்று சொல்லி விடைபெற்றார் தயாளன்.

சற்று நேரத்துக்குப் பிறகு, நாதன் வீட்டில் இருந்தபோது வந்து, அவரைப் பார்த்துப் பேசி விட்டுப் போனார் தயாளன். அப்போது தன் மனைவியையும் அழைத்து வந்து, லட்சுமிக்கு அறிமுகம் செய்து வைத்தார். 

சற்று நேரம் பேசி விட்டு, இருவரும் கிளம்பினார்கள். கிளம்பும்போது, தயாளன், "செகரட்டரி கிட்ட உங்களை அறிமுகப்படுத்தி வைக்கறேன். ஏதாவது பிரச்னைன்னா, அவர் கிட்டே சொன்னா தீர்த்து வைப்பார்" என்றார்.

"பரவாயில்ல. இப்ப வேண்டாம். ஏதாவது பிரச்னைன்னா, அவர்கிட்ட சொல்றேன்" என்றார் நாதன்.

சில நாட்கள் கழித்து, "புதுசா  இந்த அபார்ட்மென்ட்டுக்கு வந்தப்பறம், இங்கே நமக்குத் தெரிஞ்சவங்க யாரும் இல்லையேன்னு நினைச்சேன். நல்லவேளையா, தயாளன் குடும்பத்தோட நட்பு நமக்குக் கிடைச்சது!" என்றாள் லட்சுமி.

"ஆமாம். பொதுவா, அபார்ட்மென்ட்கள்ள யாரும் பக்கத்து அபார்ட்மென்ட்ல இருக்கறவங்க யாருன்னு தெரிஞ்சுக்கக் கூட முயற்சி செய்ய மாட்டாங்க. ஆனா, தயாளன் தானே வந்து நம்மகிட்ட அறிமுகப்படுத்திக்கிட்டாரு. அப்புறம், அவர் மனைவியையும் அழைச்சுக்கிட்டு வந்து, உங்கிட்ட அறிமுகப்படுத்தினாரு. எங்கிட்ட ரொம்ப நல்லாப் பழகறாரு. ரொம்ப ஃப்ரண்ட்லியான மனுஷன்!" என்றார் நாதன்.

"ஆமாம். அவர் மனைவியும் எங்கிட்ட நல்லாத்தான் பழகறாங்க" என்றள் லட்சுமி..

ரண்டு மூன்று வாரங்கள் கழித்து ஒருநாள்,"என்னங்க, இப்பல்லாம் தயாளன் மனைவி இங்கே வரதில்ல. முன்னெல்லாம் அடிக்கடி வருவாங்க. நான் அவங்க வீட்டுக்குப் போயிருந்தேன். அப்பவும் அவங்க எங்கிட்ட சரியாப் பேசல. வேற ஏதோ வேலையில மும்முரமா இருக்காங்கன்னு நினைக்கிறேன்!" என்றாள் 

"இருக்கலாம்!" என்றார் நாதன்.

இரண்டு நாட்கள் கழித்து, "தயாளன் மனைவி பத்தி நீ சொன்னப்ப, அவங்களுக்கு வேற வேலையோ, பிரச்னையோ இருக்கும்னு நினச்சேன். ஆனா இப்பதான் கவனிக்கிறேன். தயாளனும் எங்கிட்ட சரியாப் பேசறதில்ல. என்னைப் பாத்தாலும் பாக்காத மாதிரி போறாரு!"  என்றார் நாதன், தன் மனைவியிடம்.

"ஏன், உங்க மேல ஏதாவது கோபமா?"

"ஆமாம். கோபம்தான். இப்பதான் எனக்கே புரியுது!" என்றார் நாதன் சிரித்தபடி.

"எதுக்குக் கோபம்? நீங்க என்ன செஞ்சீங்க?"

"செய்யலேன்னுதான் கோபம்."

"என்ன செய்யல?"

"தயாளன் எங்கிட்ட அறிமுகப்படுத்திக்கிட்டு என்னோட பழகினதே நான் புளூமூன் டிவியில உயர்ந்த பதவியில இருக்கேங்கறதாலதான்னு இப்பதான் எனக்குப் புரியுது. எங்க டிவியில நடக்கற பாட்டுப் போட்டி நிகழ்ச்சியில கலந்துக்க அவரோட பெண்ணுக்கு ஒரு வாய்ப்பு வாங்கிக் கொடுக்க முடியுமான்னு நாலஞ்சு நாள் முன்னால எங்கிட்ட கேட்டாரு. அதுக்குன்னு ஒரு தேர்வுமுறை இருக்கு, அதன்படிதான் யாரையும் தேர்ந்தெடுப்பங்கன்னு சொன்னேன். நான் சொன்னதைப் புரிஞ்சுக்கிட்டு அதோட விட்டுடுவார்னு நினைச்சேன். ஆனா, அதுக்கப்பறம் அவர் மனைவி உங்கிட்டேந்து ஒதுங்கிப் போனதையும், தயாளனும் எங்கிட்டேந்து விகிப் போறதையும் பாத்தப்பறம்தான் எனக்கு உண்மை புரிஞ்சுது" என்றார் நாதன்.

"இப்படிப்பட்ட ஆட்களோட சிநேகிதமே நமக்கு வேண்டாம். அவங்க விலகிப் போனதே ரொம்ப நல்லது!" என்றாள் லட்சுமி.

குறள் 812:
உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்.

பொருள்: 
தமக்குப் பயன் உள்ளபோது நட்பு செய்து, பயன் இல்லாதபோது நீங்கிவிடும் தகுதியில்லாதவரின் நட்பைப் பெற்றாலும் என்ன பயன், இழந்தாலும் என்ன பயன்?
813. அவிநாஷின் நண்பர்கள்!

சமீபத்தில் அறிமுகமாகி இருந்த தன் வகுப்பு நண்பன் சபாவைத் தன் விடுதி அறைக்கு அழைத்து வந்தான் சந்தோஷ்

"உன் ரூம்மேட் யாரு?" என்றான் சபா.

"அவிநாஷ்!"

"ஓ! அவிநாஷா? ரொம்ப புத்திசாலியான மாணவன்னு கேள்விப்பட்டிருக்கேன். என் செக்‌ஷன் இல்ல, ஆனா, அவனைத்தான் எல்லாருக்குமே தெரியுமே! ஆமாம், எங்கே அவன்? வெளியில போயிருக்கானா?"

"அவன் எப்பவுமே அறையில இருக்கறதில்ல. எப்பவுமே எங்கேயாவது வெளியில சுத்திக்கிட்டிருப்பான், என் ரூம்மேட்னுதான் பேரு. ஆனா, இன்னும் நான் அவனோட சரியாப் பேசினது கூட இல்ல. ஆள் அறையில இருந்தாத்தானே?"

"இப்பதானே எல்லாருமே காலேஜில சேர்ந்து, ஹாஸ்டலுக்கு வந்திருக்கோம்! பழகிப் புரிஞ்சுக்க கொஞ்ச நாள் ஆகும். நானும் நீயும் சந்திச்சுப் பேசவே ஒரு மாசம் ஆகலியா?"

சற்று நேரம் சந்தோஷிடம் பேசி விட்டு சபா விடைபெற்றான்.

சில வாரங்களுக்குப் பிறகு, சந்தோஷின் அறைக்கு வந்த தனுஷ் என்ற மாணவன், "அவிநாஷ் இல்லையா?" என்றான்.

"இல்லையே! எங்கேயோ சினிமாவுக்குப் போகப் போறதா சொன்னான். உன்னோடதான் போயிருப்பான்னு நினைச்சேன்!" என்றான் சந்தோஷ்.

"அவன் சினிமாவுக்குப் போகப் போறதா எங்கிட்ட சொல்லவே இல்லையே!" என்றபடியே, ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றான் தனுஷ்.

அவிநாஷ் அறைக்கு வந்ததும், "நீ தனுஷோட சினிமாவுக்குப் போகலியா" என்றான் சந்தோஷ்.

"இல்ல. ஏன் கேக்கற?"

"அவன் உன்னைத் தேடிக்கிட்டு வந்தான். நீ சினிமாவுக்குப் போறதே அவனுக்குத் தெரியாதாமே!"

"அவன்கிட்ட சொல்லிட்டுத்தான் நான் சினிமாவுக்குப் போகணுமா என்ன?" என்றான் அவிநாஷ், அலட்சியமாக.

அவிநாஷுக்கு தனுஜுடன் ஏதோ பிணக்கு ஏற்பட்டிருக்கிறது போலும் என்று நினைத்துக் கொண்டான் சந்தோஷ்

"உன் ரூம்மேட் அவிநாஷ் படிப்பில மட்டும்தான் புத்திசாலின்னு நினைச்சேன். எல்லாத்திலியுமே புத்திசாலியா இருப்பான் போல இருக்கே!" என்றான் சபா.

"ஏன் அப்படிச் சொல்ற?"

"யார் அவனுக்கு ஓட்டல், சினிமான்னு கணக்கு பாக்காம செலவு பண்ணுவாங்களோ, அவங்ககிட்ட போய் ஒட்டிக்கறான். முதல்ல தனுஷோட சுத்திக்கிட்டிருந்தான். இப்ப தனுஷ் அவனுக்காகச் செலவழிக்கறதில்லேன்னதும், அவன் தனுஷைக் கண்டுக்கறதே இல்லை. இப்ப ரமேஷோட சுத்திக்கிட்டிருக்கான். ரமேஷ் பணக்கார வீட்டுப் பையன். நண்பர்களுக்காக செலவழிக்கறது கௌரவம்னு நினைச்சு, தாராளமா செலவு பண்ணுவான். அதான்!"

"நீ சொன்னப்பறம்தான் எனக்கு ஞாபகம் வருது. ஹாஸ்டலுக்கு வந்த புதிசில, அவனோட ஒரு சினிமாவுக்குப் போனேன். நான்தான் டிக்கட் வாங்கினேன். ஆனா, அப்புறம் அவனோட டிக்கட் பணத்தை அவங்கிட்ட கேட்டு வாங்கிட்டேன். அது அவனுக்குப் பிடிக்கலேன்னு அப்பவே தெரிஞ்சது. அதனாலதான், ரூம்மேட்டா இருந்தாக் கூட எங்கிட்ட அவன் நெருங்கிப் பழகறதில்ல!" என்றான் சந்தோஷ்.

"ஆனா, இவ்வளவு புத்திசாலியா இருந்தாலும் அவிநாஷுக்கு ஒண்ணு புரியல. அவன் நோக்கத்தை எல்லாரும் சுலபமாப் புரிஞ்சுப்பாங்க. இப்பவே, நிறைய பேர் அவனைப் பத்திக் கேலியாப் பேசறாங்க!"

"ஒருத்தர்கிட்ட நமக்கு என்ன கிடைக்கும்னு எதிர்பார்த்து நட்பு வச்சுகறது ஒரு வியாபாரம்தான். அவிநாஷ் என் ரூம்மேட்டா இருந்தாலும், எங்கிட்ட நெருக்கமா இல்லையேன்னு எனக்குக் கொஞ்சம் வருத்தம் இருந்தது. ஆனா, அவன் எப்படிப்பட்டவன்னு இப்ப தெரிஞ்சப்புறம், இப்படிப்பட்டவன் என் நண்பனா இல்லைங்கறது எனக்கு சந்தோஷமாவே இருக்கு!" என்றான் சந்தோஷ். 

குறள் 813:
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.

பொருள்: 
இவரிடம் நட்புக் கொள்வதால் தமக்கு என்ன கிடைக்கும் என்று எண்ணிப் பார்ப்பவரின் நட்பும், தமக்குத் தரும் கூலியை ஏற்றுக் கொள்ளும் பாலியல் தொழிலாளரும், திருடர்களும் ஒருவருக்கொருவர் சமமானவர்களே.

814. கலவரம் மூண்டபோது...

சோமு அவன் பணி செய்த நிறுவனத்தில் உதவி மானேஜராகப் பதவி உயர்வு பெற்றதும்,  டெல்லி அலுவலகத்திலிருந்து மதுரை அலுவலகத்துக்கு மாற்றப்பட்டபோது, அவன் மீண்டும் குணாவைச் சந்திக்க நேர்ந்தது.

மதுரை அலுவலகத்தின் கிளை நிர்வாகி அவனை அங்கே பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

"இவர் குணா. ஸ்டோர்ஸ் இன்சார்ஜ்" என்றார் கிளை நிர்வாகி.

சோமு குணாவை அடையாளம் கண்டு கொண்டாலும், அறிமுகம் ஆனவன் போல் காட்டிக் கொள்ளாமல், "ஹலோ!" என்றான்.

"என்ன சோமு, என்னைத் தெரியலியா? நாம ஒரே ஊர்தானே?" என்றான் குணா.

"தெரியுது!" என்றான் சோமு, சுருக்கமாக.

அறிமுகங்கள் முடிந்ததும், சோமு கிளை நிர்வாகியுடன் அவர் அறைக்குத் திரும்பினான்.

"குணா உங்க ஊரா?" என்றார் கிளை நிர்வாகி.

"ஆமாம். ரெண்டு பேரும் பக்கத்துப் பக்கத்து வீடுதான்!"

"அப்படின்னா, நெருக்கமா இருந்திருப்பீங்களே? ஆனா. சொல்லமுடியாது. பல சமயம், பக்கத்து வீட்டுக்காரங்களோட விரோதம்தான் இருக்கும்!" என்ற கிளை நிர்வாகி, தன் நகைச்சுவையைத் தானே ரசித்துச் சிரித்தார்.

"அப்படி இல்ல. அப்ப நாங்க நண்பர்களாத்தான் இருந்தோம்!" என்றான் சோமு, மெலிதான சிரிப்புடன்.

"குணா உங்க கிட்ட நெருக்கமானவராக் காமிச்சுக்கிட்டாரு. ஆனா நீங்க கொஞ்சம் விலகி இருக்கற மாதிரி தெரிஞ்சது. அதான் கேட்டேன்!"

"நீங்க சொல்றது சரிதான். இப்ப நாங்க நெருக்கமா இல்ல. பத்து வருஷமா எங்களுக்குள்ள தொடர்பு இல்ல. இப்பதான் சந்திக்கிறோம்" என்றான் சோமு.

"அது சரி. ஒரு காலத்தில நெருக்கமா இருக்கறவங்க வேற ஒரு காலத்தில நெருக்கம் இல்லாம போறது சகஜம்தானே!" என்றார் கிளை நிர்வாகி.

சோமுவும் குணாவும் அடுத்தடுத்த வீடுகளில் இருந்தபோது, மிகவும் நெருக்கமாகத்தான் இருந்தனர். இருவருக்குமே திருமணமாகவில்லை. பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 

சோமு உள்ளூரிலேயே ஒரு சிறு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். குணா வேலை தேடிக் கொண்டிருந்தான். வேலை நேரம் போக மற்ற நேரங்களில் எல்லாம் சோமு குணாவுடன்தான் இருப்பான்.

தங்கள் வாழ்க்கைக் கனவுகள், தங்களுக்கு வரப் போகும் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பது போல் பல விஷயங்களைப் பற்றி இருவரும் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருப்பார்கள்.

ஒருநாள், சோமு அலுவலகத்தில் இருந்தபோது, அவர்கள் பகுதியில் ஒரு ஜாதிக் கலவரம் வெடித்திருப்பதாகச் செய்தி வந்தது. 

வீட்டில் தனியாக இருக்கும் பெற்றோர்கள் பற்றி சோமு கவலைப்பட்டாலும், பக்கத்து வீட்டில் குணா இருப்பதால், அவன் அவர்களைப் பார்த்துக் கொள்வான் என்ற ஆறுதலுடன் இருந்தான்.

அலுவலகத்தில் அனுமதி கேட்டுப் பெற்று சோமு வீட்டுக்கு விரைந்தபோது, அவன் வீடு இருந்த தெருவில் பல வீடுகள் சேதப்படுத்தப்பட்டிருந்தன.

சோமுவின் வீட்டுக் கதவு உடைத்துத் திறக்கப்பட்டிருந்தது. சோமு  பதைபதைப்புடன் வீட்டுக்குள் நுழைந்தான். வீட்டுக்குள் ஒரு மூலையில் அவன் பெற்றோர் நடுக்கத்துடன் அமர்ந்திருந்தனர். வீட்டில் பல பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன.

சோமுவைப் பார்த்ததும், அவன் பெற்றோர் பெரிதாக அழ ஆரம்பத்தினர்.

"அழாதீங்க. உங்களுக்கு ஒண்ணும் ஆகலையே!" என்றான் சோமு, தன் பெற்றோர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு

"வயசானவங்கங்கறதால எங்களை ஒண்ணும் செய்யல. ஆனா வீட்டில இருக்கற எல்லாத்தையும் அடிச்சு நொறுக்கிட்டாங்க. பக்கத்தில இருக்கற வீடுகளிலேந்தெல்லாம் நிறைய அலறல் சத்தம் கேட்டது. பல பேரை அடிச்சுக் காயப்படுத்தி இருப்பாங்க போல இருக்கு!" என்றார் அவன் அப்பா.

சோமு பதைபதைப்புடன் குணாவின் வீட்டுக்குச் சென்று பார்த்தான். அவன் வீட்டுக் கதவு பூட்டப்பட்டிருந்தது.

மாலைக்குள் அந்தப் பகுதியில் அமைதி திரும்பி இருந்தது.

இரவில் குணா மட்டும் வீடு திரும்பினான்.

"எங்கேடா போயிட்ட? கலவரத்தில உங்களுக்கெல்லாம் ஒண்ணும் ஆகலியே! உங்க அப்பா அம்மா எங்கே?" என்றான் சோமு.

"இல்ல. கலவரம் நடக்கப் போகுதுன்னு தெரிஞ்சதும், வீட்டைப் பூட்டிட்டு எங்கப்பா அம்மாவோட பக்கத்து ஊர்ல இருக்கற என் அத்தை வீட்டுக்குப் போயிட்டேன். அவங்க அங்கேதான் இருக்காங்க. ரெண்டு மூணுநாள் கழிச்சு அவங்களை அழைச்சுக்கிட்டு வரலாம்னு இருக்கேன்" என்றான் குணா.

"ஏண்டா, எங்கப்பா அம்மா வீட்டில தனியா இருந்தாங்களே, அவங்களையும் அழைச்சுக்கிட்டுப் போயிருக்கலாம் இல்ல? இல்லே கலவரம் நடக்கப் போகுதுன்னு அவங்க கிட்ட சொல்லி இருந்தா, அவங்க வேற எங்கேயாவது போய்ப் பாதுகாப்பா இருந்திருப்பாங்க இல்ல?" என்றான் சோமு, கோபத்துடன்.

"இந்த மாதிரி சமயத்தில எல்லாம் நம்மைப் பாதுகாத்துக்கறதைப் பத்தித்தான் யோசிக்கத் தோணும்!" என்றான் குணா.

அதற்குப் பிறகு, சோமு குணாவுடன் பழகுவதை விட்டு விட்டான். சில மாதங்களில், அவனுக்கு டெல்லியில் வேலை கிடைத்து விட்டதால், பெற்றோரை அழைத்துக் கொண்டு அந்த ஊரை விட்டே போய் விட்டான்.

தற்செயலாக, குணாவும் அதே நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து, மதுரை நிறுவனத்தில் பணி புரிந்து வந்ததால், சோமு அவனே அங்கே சந்திக்க நேர்ந்திருக்கிறது!

"நீங்க சொல்றது சரிதான் சார். சில நட்புகள் விட்டுப் போனதைப் பத்தி, நாம வருத்தப்படறதே இல்லை!" என்றான் சோமு, கிளை நிர்வாகியிடம்.

குறள் 814:
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.

பொருள்: 
போர்க்களத்தே நம்மைக் கீழே தள்ளி விட்டுப் போய்விடும் கல்வியற்ற குதிரையைப் போன்றவரின் நட்பைக் காட்டிலும், தனிமையாக இருப்பதே சிறந்தது.

815. வேலைமாற்றல் உத்தரவு

"இத்தனை வருஷமா, இந்த நிறுவனத்திலே வேலை செய்யறேன். ஒரு உயர்ந்த பதவியில இருக்கேன். என் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. அவருக்கு இந்த ஊர்லதான் சிகிச்சை கொடுக்கணும். அதுக்காக இந்த டிரான்ஸ்ஃபரை ரத்து செய்யுங்கன்னு கேட்டேன். இந்தக் கோரிக்கையை நிராகரிச்சுட்டாங்களே!" என்றான் செல்வராகவன், தன் மனைவி சாரதாவிடம்.

"உங்க நண்பர் சங்கர்தானே இங்கே பிராஞ்ச் மானேஜரா இருக்காரு? அவருக்கு நீங்க எவ்வளவோ உதவி செஞ்சிருக்கீங்களே! அவர் ரெகமண்ட் பண்ணினா, உங்க ஹெட் ஆஃபீஸ்ல ஒத்துக்க மாட்டாங்களா?" என்றாள் சாரதா.

"அவன் ரெகமண்ட் பண்ணி இருக்கான் ஆனாலும் ஹெட் ஆஃபீஸ்ல ஒத்துக்க மாட்டேன்னுட்டாங்க."

"அவன் ரெகமண்ட் பண்ணல!" என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தான் அவன் அலுவலக நண்பன் சேகர். அவன் உள்ளே நுழைந்தபோதே,  அவர்கள் பேசியது அவனுக்குக் கேட்டிருக்க வேண்டும்.

"என்னடா சொல்ற?" என்றான் செல்வராகவன்.

"இப்பதான் ஹெட் ஆஃபீஸ்ல பர்ஸனல் டிபார்ட்மென்ட்ல இருக்கற என் நண்பன்கிட்ட பேசினேன். டிரான்ஸ்ஃபர் பாலிசியிலேந்து உன்னை மாதிரி ஒரு மூத்த அதிகாரிக்கு விலக்குக் கொடுத்தா, அதை சுட்டிக் காட்டி டிரான்ஸ்ஃபர் ஆர்டர் வந்திருக்கற இன்னும் சில பேரு விலக்குக் கேட்பாங்க. அது நிறுவனத்துக்கு நல்லது இல்லன்னு ஹெட் ஆஃபீசுக்கு எழுதி இருக்கான் உன்னோட அருமை நண்பன் சங்கர்!" என்றான் சேகர்.

"ஸ்ட்ராங்கா ரெகமெண்ட் பண்ணி இருக்கேன்னு சொன்னானே எங்கிட்ட?"

"மனிதாபிமானம் இல்லாம நடந்துக்கறவனுக்குப் போய் சொல்றது ஒரு பெரிய விஷயமா?" என்றான் சேகர்

"என்னங்க உங்க நண்பர் இப்படிப் பண்ணிட்டாரு? நீங்க ரெண்டு பேரும் ஒண்ணாத்தான் வேலைக்குச் சேர்ந்தீங்க.  வேலைக்குச் சேர்ந்த நாலஞ்சு வருஷத்தில அவருக்கு டிரான்ஸ்ஃபர் உத்தரவு வந்தப்ப, அவருக்கு ஏதோ குடும்பப் பிரச்னைங்கறதுக்காக, ஆஃபீஸ்ல சொல்லி, அவரோட டிரான்ஸ்ஃபரை நீங்க வாங்கிக்கிட்டுப் போனீங்க. நான் கூடக் கேட்டேன் என்னதான் நண்பர்னாலும், அதுக்காக இவ்வளவு பெரிய உதவி செய்வாங்களான்னு! அதுக்கு நீங்க 'எப்படியும் ஒண்ணு ரெண்டு வருஷத்தில எனக்கும் டிரான்ஸ்ஃபர் வரும். என் நண்பனுக்கு உதவறத்துக்காக கொஞ்சம் முன்னாலேயே போறேன், அவ்வளவுதான்!'னு சொன்னீங்க. இன்னிக்கு அவரு உங்களை விட சீக்கிரம் புரொமோஷன் கிடைச்சு பிராஞ்ச் மானேஜர் ஆயிட்டாரு. அன்னிக்கு அவருக்கு அவ்வளவு பெரிய உதவி செஞ்ச உங்களுக்கு உங்க கோரிக்கையை ஆதரிச்சு ஹெட் ஆஃபீசுக்கு எழுதற ஒரு சின்ன உதவியைச் செய்யக் கூட அவருக்கு மனசு வல்லை. இவரெல்லாம் ஒரு நண்பரா?" என்று கோபத்துடன் வெடித்தாள் சாரதா.

"அவனோட டிரான்ஸ்ஃபரை நீ உனக்கு மாத்திக்கிட்டியா? அது எனக்குத் தெரியாதே! அதைக் கூட நினைச்சுப் பாக்காத இவன் பக்கத்தில இருக்கறது கூட உனக்கு நல்லது இல்ல. நீ போற இடத்தில உன் அப்பாவுக்கு இன்னும் நல்லபடியாவே சிகிச்சை கிடைக்கும். கவலைப்படாதே!" என்றான் சேகர். 

குறள் 815:
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.

பொருள்: 
நாம் பல வகையில் உதவி செய்தாலும், நமக்குப் பாதுகாப்பாக இராத அற்பர்களின் நட்பு இருப்பதிலும் இல்லாதிருப்பதே நல்லது.

816. வயலில் மேய்ந்த மாடு!

"கந்தசாமி மறுபடியும் நம்ம மாட்டைப் பிடிச்சுக் கட்டிப் போட்டிருக்கான்!" என்றான் மாதவன், தன் மனைவி செண்பகலட்சுமியிடம்.

"ஏன் திரும்பத் திரும்ப இப்படிச் செய்யறாரு?" என்றாள் செண்பகலட்சுமி, கவலையுடன்.

"நம்ம மேல உள்ள விரோதத்தினாலதான். நேரடியா நமக்கு எதிரா ஏதாவது செஞ்சா தப்பாயிடும். நம்ம மாடு அவன் வயல்ல போய் மேஞ்சுதுன்னு சொல்லி அதைப் பிடிச்சுக் கட்டினா, அவனைத் தப்பு சொல்ல முடியாது இல்ல? நான் அவங்கிட்ட போய்க் கெஞ்சித்தானே ஆகணும்? அப்படியும், ஒவ்வொரு தடவையும் பயிர்களை மேஞ்சதுக்கு நஷ்ட ஈடுன்னு இருநூறு ரூபா வாங்கிடறான்."

"நம்ம மாடு அங்கே போகாதபடி செய்ய முடியாதா?"

"எல்லாருமே மாட்டை வெளியிலதான் மேய விடுவாங்க. வயல் பக்கம் வந்தா, அங்கே இருக்கறவங்க விரட்டி விடுவாங்க. இவன் வேணும்னே மாட்டை விரட்டாம, ஓரமா கொஞ்சம் மேய விட்டு, அப்புறம் பிடிச்சுக் கட்டறான். என்ன செய்யறது?"

"நீங்களும் ஒவ்வொரு தடவையும் போய்ப் பேசித்தான் பாக்கறீங்க. அவரு தொடர்ந்து இப்படியே செஞ்சுக்கிட்டிருக்காரே! இப்ப என்ன செய்யப் போறீங்க?"

"என் நண்பன் சபாபதியை அழைச்சுக்கிட்டுப் போய், கந்தசாமி கிட்ட பேசலாம்னு பாக்கறேன், சபாபதி கொஞ்சம் தைரியமா அடிச்சுப் பேசுவான்!"

"அப்படியே செய்யுங்க. உங்களை மாதிரி பயந்த சுபாவம் உள்ள ஆளுங்களால கந்தசாமி மாதிரி முரட்டு ஆளுங்களை சமாளிக்க முடியாது!" என்றாள் செண்பகலட்சுமி.

ரு மணி நேரம் கழித்து மாதவன் திரும்பி வந்தபோது, அவன் முகம் சோர்வடைந்திருந்தது.

"என்ன ஆச்சு? மாட்டை விட்டுட்டாரா?" என்றாள் செண்பகலட்சுமி.

"விட்டுட்டான், ஐநூறு ரூபா வாங்கிக்கிட்டு!"

"என்னது ஐநூறு ரூபாயா? அக்கிரமமா இருக்கே! எப்பவும் இருநூறு ரூபாதானே கேப்பாரு? உங்க நண்பர் சபாபதியை அழைச்சுக்கிட்டுப் போகலியா நீங்க?" என்றாள் செண்பகலட்சுமி, குற்றம் சாட்டும் தொனியில்.

"அவனை அழைச்சுக்கிட்டுப் போனதாலதான் இப்படி ஆயிடுச்சு! கொஞ்சம் சாமர்த்தியமாப் பேசுவான்னு நினைச்சுத்தான் கூட்டிக்கிட்டுப் போனேன். ஆனா அவன் முட்டாள்தனமாப் பேசி, கந்தசாமிக்குக் கோபத்தை உண்டாக்கிட்டான்!"

"அப்படி என்ன பேசினாரு?"

" 'மாட்டை வெளியில மேய விட்டா, சில சமயம் வயல்ல இறங்கி மேயத்தான் செய்யும். நீ உன் வயலுக்குக் காவல் போடணும், இல்லேன்னா மின்சார வேலி போடணும், மாட்டைப் பிடிச்சுக் கட்டறது என்ன அயோக்கியத்தனம்?'னு கேட்டான்."

"இப்படியா பேசுவாரு ஒத்தரு? ஏதோ தப்பு நடந்து போச்சு, விட்டுடுங்க, இனிமே ஜாக்கிரதையா இருந்துக்கறோம்னு சொன்னா பொருத்தமா இருந்திருக்கும்!"

"சபாபதியை அழைச்சுக்கிட்டுப் போனதுக்கு உன்னை அழைச்சுக்கிட்டுப் போயிருக்கலாம் போல இருக்கே!" என்றான் மாதவன், சிரித்தபடி.

"கேலி செய்யாதீங்க!"

"கேலி இல்ல. உண்மையாவே, சபாபதி இது மாதிரிதான் பேசி இருக்கணும். இப்படி முட்டாள்தனமா நடந்துப்பான்னு நான் எதிர்பாக்கல. எதிரி மோசமானவன்னு தெரியும், ஆனா நண்பன் இப்படி முட்டாளா இருப்பான்னு தெரியாது. எதிரி மோசமானவன்னு தெரிஞ்சப்பறம், இனிமே நான்தான் ரொம்ப கவனமா இருக்கணும். இன்னொரு முறை இப்படி நடக்காம பாத்துக்கணும்!" என்றான் மாதவன்.

குறள் 816:
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்.

பொருள்: 
அறிவற்றவனின் மிக நெருக்கமான நட்பைக் காட்டிலும் அறிவுடையார்களின் பகை கோடி நன்மையாம்.

817. ஒர்க்கிங் பார்ட்னர்

"தொழில்ல நிறைய விரோதிகள் இருக்கத்தான் செய்வாங்க. அது எதிர்பார்க்கக் கூடியதுதானே?" என்றான் கண்ணன்

"விரோதிகள் இருக்கலாம்தான். அதுக்காக, உனக்கு இந்த ப்ராஜக்ட் கிடைக்கக் கூடாதுங்கறதுக்காக எல்லா குறுக்கு வழிகளையும் கையாள்றானே, இந்த ஆறுமுகம், அதை நினைச்சாத்தான் எனக்கு ஆத்திரம் வருது!" என்றான் குமரேசன்.

"நீ ஒர்க்கிங் பார்ட்னரா இருக்கற வரைக்கும் எனக்கு என்ன கவலை?" என்றான் கண்ணன், சிரித்தபடி.

"ஒரு ஒர்க்கிங் பார்ட்னரா இருந்தா மட்டும் நான் இதைப் பத்திக் கவலைப்பட மாட்டேன். உன்னோட நண்பனா இருக்கறதாலதான், நம் தொழில் விரோதிகள் பண்றதைப் பார்த்து எனக்குக் கோபம் வருது!"

"நாமதான் ரொம்ப குறைஞ்ச தொகை கோட் பண்ணி இருக்கோம்னு நினைக்கிறேன். பார்க்கலாம்!" என்றான் கண்ணன்.

னால், அந்த டெண்டர் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அவர்களுக்கு எதிராகக் குறுக்கு வழிகளைக் கையாள்வதாகக் குமரேசனால் குற்றம் சாட்டப்பட்ட ஆறுமுகத்தின் நிறுவனத்துக்கும் கிடைக்கவில்லை. சாந்தி இண்டஸ்ட்ரீஸ் என்ற ஒரு சிறிய நிறுவனத்துக்குத்தான் கிடைத்தது.

"ஹலோ!" என்றான் கண்ணன்.

"என்ன கண்ணன், கோட்டை விட்டுட்டீங்க போல இருக்கே!" என்றார் மறுமுனையில் பேசிய ஆறுமுகம்.

"நீங்களும்தானே!"

"நான் கோட் பண்ணினது ரொம்பப் பெரிய தொகைக்கு. ஆனா, சாந்தி இண்டஸ்ட்ரீஸ் உங்களை விட ஆயிரம் ரூபா குறைச்சலா கோட் பண்ணி டெண்டர்ல ஜெயிச்சுட்டாங்களே! எப்படின்னு யோசிச்சீங்களா?" என்றார் ஆறுமுகம்.

"டெண்டர்ல இதெல்லாம் சகஜம்தானே?"

"எது? உங்களை விட ஆயிரம் ரூபா மட்டும் குறைச்சு கோட் பண்றதா?  கோட் ஆயிரங்கள்ள இருக்கணுங்கறதால இப்படி! அந்த கண்டிஷன் இல்லேன்னா சினிமாவில எல்லாம் வர மாதிரி, உங்களை விட ஒரு ரூபா குறைச்சு கோட் பண்ணி இருப்பாங்க!"

"நீங்க என்ன சொல்ல வரீங்க?"

"தொழில் முறையில நான் உங்களோட எதிரிதான். நான் உங்களோட நேரடியா மோதறவன். ஆனா உங்க கூடவே இருந்து ஒத்தன் உங்களுக்குக் குழி பறிச்சிருக்கானே, அது உங்களுக்குத் தெரியுமா?"

"குமரேசனையா சொல்றீங்க? அவன் என் நண்பன்!" என்றான் கண்ணன். சொல்லும்போதே அன்று கண்ணன் அலுவலகத்துக்கு வரவில்லை என்பதும், காலையிலிருந்தே அவன் தொலைபேசி ஸ்விட்ச் ஆஃப் செய்திருப்பதும் சற்று நேரமாகவே தன் அடிமனதில் உறுத்திக் கொண்டிருந்ததை அவன் உணர்ந்தான்.

"யோசிச்சுப் பாருங்க. சாந்தி இண்டஸ்ட்ரீஸ் சமீபத்திலதான் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம். அவங்களால எப்படி இந்த ப்ராஜக்டுக்கு கோட் பண்ண முடியும், அதுவும் உங்களை விட ஆயிரம் ரூபா குறைவா? சாந்தி இண்டஸ்ட்ரீஸ் குமரேசனோட உறவினரோட நிறுவனம்னு கேள்விப்பட்டேன். அவனே உண்மையான உரிமையாளராவும் இருக்கலாம். உங்ககிட்டேந்து அவன் போகறதுக்கு முன்னால, உங்க கம்பெனியில அவன் பணமோசடி ஏதாவது செஞ்சிருக்கானான்னு செக் பண்ணுங்க. செஞ்சிருந்தா, தயங்காம போலீஸ் புகார் கொடுங்க. இவனை மாதிரி நண்பனா நடிச்சு ஏமாத்தறவனையெல்லாம் சும்மா விடக் கூடாது!" என்று சொல்லி ஃபோனை வைத்தார் ஆறுமுகம்.

கண்ணன் தன் மின்னஞ்சல் செய்திகளை அவசரமாகப் பார்த்தான். சொந்தக் காரணங்களுக்காகத் தான் விலகுவதாகக் குமரேசனிடமிருந்து ஒரு மின்னஞ்சல் செய்தி சில நிமிடங்களுக்கு முன் வந்திருந்தது.

குறள் 817:
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.

பொருள்: 
சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும், பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும்.

818. கல்லூரியில் ஒரு இடம்!

அந்தப் பொறியியல் கல்லூரியில் தன் மகன் வினோதைச் சேர்ப்பதற்கான வழிமுறைகளை முடித்து விட்டு, கல்லூரியிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தபோது. தற்செயலாகத் தன் கல்லூரி நண்பன் சந்துருவைச் சந்தித்தான் முரளி.

"டேய் சந்துரு எப்படிடா இருக்கே? பார்த்து எவ்வளவு வருஷம் ஆச்சு!". என்றான் முரளி, உற்சாகத்துடன்.

சந்துருவும் தன் மகனை அந்தக் கல்லூரியின் சேர்க்கத்தான் வந்திருக்கிறான் என்று தெரிந்தது.

"வினோதுக்கு ஏரனாடிக்ஸ் எஞ்சினிரிங் படிக்க விருப்பம். ஏரனாடிக்ஸ் எஞ்சினியரிங்குக்கு சாந்தா காலேஜ்தானே பெஸ்ட்? அதில சேர்க்கதான் முயற்சி பண்ணினேன். ரொம்ப நேரோவா மிஸ் ஆயிடுச்சு. சாந்தா காலேஜுக்கு அடுத்த நிலையில இருக்கறது இதுதானே? அதனால இதில சேர்த்தேன். சாந்தா காலேஜில சேர முடியாதது வினோதுக்கு வருத்தம்தான். என்ன செய்யறது? நாம ஆசைப்படறது எல்லாமே கிடைச்சுடுதா என்ன?" என்றான் முரளி, பெருமூச்சுடன்.

"உன் நண்பன் கிருஷ்ணமணிக்கு சாந்தா காலேஜில செல்வாக்கு உண்டே? அவன் சிபாரிசு பண்ணினா, சீட் கிடைச்சிருக்குமே, அவன்கிட்ட கேக்கலியா நீ?" என்றான் சந்துரு.

"கேட்டேன். அவன் அப்பா இருந்தப்ப, அவர் சிபாரிசு பண்ணின ரெண்டு மூணு பேருக்கு சீட் கொடுத்துக்கிட்டிருந்தாங்களாம். ஆனா, அவன் அப்பா இறந்தப்பறம், அவன் சிபாரிசை அவங்க மதிக்கிறதில்லையாம். அதனால என்னால முடியாதுன்னு ரொம்ப வருத்தப்பட்டு சொன்னான். அவனால முடிஞ்சா அவன் செஞ்சிருப்பான்!"

"கிருஷ்ணமணி அப்பா இறந்து பத்து வருஷம் ஆகி இருக்குமே! இந்தப் பத்து வருஷமா அவன் யாருக்குமே சீட் வாங்கிக் கொடுக்கலையா என்ன?" 

"ஆரம்பத்தில, ரெண்டு மூணு வருஷம் அவன் சிபாரிசு பண்ணினவங்களுக்குக் கொடுத்திருப்பாங்க. அப்புறம் அவன் சிபாரிசை மதிக்கலையோ என்னவோ!"

சந்துரு சற்றுத் தயங்கி விட்டு, "இதை உங்கிட்ட சொல்லலாமோ என்னவோ தெரியல. ஏன்னா, கிருஷ்ணமணி உனக்கு நெருக்கமான நண்பன். ஆனா, உன்னோட நண்பனா எனக்குத் தெரிஞ்ச உண்மையை உங்கிட்ட சொல்லணும்னு நினைக்கிறேன். உன் அளவுக்கு கிருஷ்ணமணி எனக்கு நெருக்கமானவன் இல்ல. ஆனா, போன வருஷம் நானே அவங்கிட்ட கேட்டு என் பாஸோட பையனுக்கு சாந்தா காலேஜில சீட் வாங்கிக் கொடுத்திருக்கேன்!" என்றான்.

"எப்படிடா இது? தான் சிபாரிசு பண்ணினா கொடுக்க மாட்டாங்கன்னு எங்கிட்ட சொன்னானே அவன்?"

"என்னோட பாஸ் சென்னை கிரிக்கட் கிளப்ல உறுப்பினர். கிருஷ்ணமணிதான் கிரிக்கட் பைத்தியமாச்சே! என் பாஸோட பையனுக்கு சாந்தா காலேஜ்ல சீட் வாங்கிக் கொடுக்க முடியுமான்னு நான் கேட்டேன். சென்னையில நடக்கற T-20 மேட்ச்சுக்கு உன் பாஸால எனக்கு ரெண்டு டிக்கட் வாங்கிக் கொடுக்க முடியுமான்னு அவன் கேட்டான். அவ்வளவுதான்! டீல் முடிஞ்சு போச்சு. உங்கிட்ட இந்த மாதிரி டீல் எதுக்கும் வாய்ப்பு இல்லைங்கறதலதான், தன்னால முடிஞ்ச ஒரு விஷயத்தை முடியாதுன்னு பொய் சொல்லி இருக்கான்!" 

முரளி மௌனமாக இருந்தான்.

"என்னடா யோசிக்கற?" என்றான் சந்துரு.

"யாருக்கோ கொடுக்கணும்னு சொல்லி எங்கிட்ட பணம் கேட்டிருந்தா கூடக் கொடுத்திருப்பேன். என் பையன் சாந்தா கலேஜில சேர எவ்வளவு ஆர்வமா இருந்தான்னு கிருஷ்ணமணிக்கு நல்லாத் தெரியும். ஆனா தன்னால முடியக் கூடிய விஷயத்தை முடியாதுன்னு எங்கிட்ட பொய் சொல்லி இருக்கான்! ஒத்தன் எப்படிப்பட்டவன்னு தெரியாம அவன் எனக்கு நெருக்கமான நண்பன்னு நினைச்சுக்கிட்டிருந்தேனே, என்னோட அந்த முட்டாள்தனத்தைப் பற்றி நினைச்சுக்கிட்டிருக்கேன்!" என்றான் முரளி.

குறள் 818:
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.

பொருள்: 
தம்மால் செய்யக்கூடிய உதவியையும் செய்ய முடியாதவர் போல் நடித்துச் செய்யாமல் விடுபவரின் நட்பை, அவரிடம் சொல்லாமலேயே விட்டு விடவும்.

819. வேண்டாம் வெள்ள நிவாரணம்!

"போன வருஷம் வெள்ளம் வந்தப்ப, அரசாங்கத்தில இந்த ஏரியாவில ஒவ்வொரு வீட்டுக்கும் ஐயாயிரம் ரூபா நிவாரணம் கொடுத்தாங்க. ஆனா நான் அதை வாங்கிக்கல!" என்றான் சங்கர்

"ஏன்?" என்றான் முத்துவேல்.

"அரசாங்கம் நிவாரணம் கொடுக்க வேண்டியது ஏழைகளுக்குத்தான். என்னை மாதிரி வசதியானவங்கள்ளாம் அதை வாங்கிக்கக் கூடாதுங்கறது என்னோட கொள்கை. அரசாங்கத்துக்கிடேந்து நிவாரணம் வாங்கிக்காதது மட்டும் இல்ல. நான் வெள்ள நிவாரண நிதிக்கு ரெண்டாயிரம் ரூபா நன்கொடை கொடுத்தேன்!"

"பெரிய விஷயம் சார்!"

"என்னோட இயல்பு அப்படி. நான் இதைப் பெரிசா நினைக்கல. நீங்க இந்த ஏரியாவுக்குப் புதுசா வந்திருக்கீங்க. ஏதாவது உதவி வேணும்னா எங்கிட்ட தயங்காம கேளுங்க!" என்று சொல்லி விட்டுக் கிளம்பினான் சங்கர்.

"இந்தக் காலத்தில இப்படி ஒரு மனுஷனா ஆச்சரியமா இருக்கு!" என்றான் முத்துவேல், தன் மனைவி திரௌபதியிடம்.

"ஆச்சரியமாத்தான் இருக்கு. இந்த ஏரியாவுக்கு நாம புதுசா வந்திருக்கறப்ப, இப்படி ஒருத்தரோட நட்பு உங்களுக்குக் கிடைச்சிருக்கிறது நம்ம அதிர்ஷ்டம்தான்!" என்றாள் திரௌபதி.

"என்னங்க, உங்களைத் தேடி போலீஸ்காரர் வந்திருக்காரு!" என்றாள் திரௌபதி, பதட்டத்துடன்.

அதே பதட்டத்துடன், முத்துவேல் அறையிலிருந்து விரைவாக வாசலுக்கு வந்தான்.

"சார்! நீங்கதானே முத்துவேல்?" என்றார் போலீஸ்காரர்.

"ஆமாம்."

"நீங்க கவர்ன்மென்ட் ஆஃபீசரா?"

"ஆமாம். அதுக்கென்ன?"

"சங்கர் உங்கள் நண்பரா?"

முத்துவேல் சற்றுத் தயங்கி விட்டு, "எனக்குத் தெரிஞ்சவர்தான்!" என்றான் எச்சரிக்கை உணர்வுடன்.

"விசாரிக்கறதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு அழைச்சுக்கிட்டுப் போனோம். அவரு உங்க பேரைச் சொல்லி, நீங்க அரசங்கத்தில பெரிய அதிகாரி, அவருக்கு நண்பர்னு சொன்னாரு. உங்களை ஸ்டேஷனுக்கு வரச் சொல்றது மரியாதையா இருக்காது இல்ல? அதான் இன்ஸ்பெக்டர் என்னை அனுப்பி  விசாரிச்சுட்டு வரச் சொன்னாரு!" என்றார் போலீஸ்காரர்.

"அவரைக் கைது பண்ணி இருக்கீங்களா? எதுக்கு?"

"இன்னும் கைது பண்ணல. போன வருஷம் வெள்ளம் வந்தப்ப, அரசாங்கத்தில நிவாரணம் கொடுத்தாங்க இல்ல, அதை வாங்கிக் கொடுக்கறதா சொல்லி அவர் சில பேர் கிட்ட ஐநூறு ஆயிரம்னு பணம் வாங்கி இருக்காரு..."

"நிவாரணம் கொடுத்தது மாநில அரசு. நான் சென்ட்ரல் கவர்ன்மென்ட்" என்று அவசரமாகக் குறுக்கிட்டுச் சொன்னான் முத்துவேல்.

"அய்யய்யோ! நீங்க சம்பந்தப்பட்டிருக்கறதா சொல்லல சார். நீங்க அவரோட நண்பர்னு சொன்னதால, உங்களை விசாரிக்கிறோம். நீங்க ஸ்டேஷனுக்கு வந்து ஒரு கையெழுத்துப் போட்டீங்கன்னா, அவரைக் கைது பண்ணாம கேஸ் மட்டும் புக் பண்ணுவோம். அவ்வளவுதான்."

"கொஞ்சம் உள்ளே வாங்க!" என்றாள் திரௌபதி, முத்துவேலின் அருகில் வந்து, அவனுக்கு மட்டும் கேட்கும்படியாக.

"ஒரு நிமிஷம்!" என்று போலீஸ்காரரிடம் சொல்லி விட்டு, மனைவியுடன் உள் அறைக்குச் சென்றான் முத்துவேல்.

"இங்க பாருங்க. நீங்க கையெழுத்து எதுவும் போடாதீங்க!" என்றாள் தமயந்தி, உத்தரவு போடுவது போல்.

"நான் என்ன முட்டாளா? பொதுவாகவே ஒரு அரசு ஊழியர் இது மாதிரி ஜாமீன் கையெழுத்தெல்லாம் போடக் கூடாது. அதுவும் இவனை மாதிரி ஃபிராடுக்கெல்லாம் கையெழுத்துப் போட்டா, அது என் வேலைக்கே ஆபத்தா முடியும். ஏதோ பெரிய கொள்கையோட நடக்கறவன் மாதிரி, வெள்ள நிவாரணம் வேண்டாம்னு சொன்னதா சொன்னான். இப்ப பாத்தா, வெள்ள நிவாரணம் வாங்கிக் கொடுக்கறதா சொல்லி, நிறைய பேர் கிட்ட கமிஷன் வாங்கி இருக்கான். போலீஸ் ஸ்டேஷன்ல போய் என் பேரைச் சொல்லி இருக்கான். இவனை மாதிரி ஆளையெல்லாம் நம் வீட்டு வாசலுக்குக் கூட வர விடக் கூடாது!" என்றான் முத்துவேல், கோபத்துடன்.

பிறகு, முத்துவேல் வாசலுக்குச் சென்று, போலீஸ்காரரிடம், "சார்! சங்கர் இந்த ஏரியாவில இருக்காரு. அவரைப் பாத்திருக்கேன், மத்தபடி அவரைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது. நான் அவருக்காகக் கையெழுத்து போட முடியாது. இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்லிடுங்க!" என்றான், உறுதியான குரலில்.

"சரி சார்!" என்ற போலீஸ்காரர், 'இவரு கையெழுத்துப் போட்டிருப்பாரு. அந்த அம்மாதான் போடக் கூடாதுன்னு தடுத்துட்டாங்க. பாவம் அந்த சங்கர்! இன்ஸ்பெக்டர் அவனை உள்ள போட்டுடுவாரு' என்று நினைத்துக் கொண்டே அங்கிருந்து சென்றார்.

குறள் 819:
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.

பொருள்: 
செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவருக்குக் கனவிலும் துன்பம் தருவதாகும்.

820. யூனியன் மீட்டிங்

"நாளைக்கு யூனியன் மீட்டிங் இருக்கே, வரே இல்ல?" என்றான் சுபாஷ்.

"இல்லை. நாளைக்கு  வீட்டுக்கு  விருந்தாளிங்க வராங்க. அதனால என்னால வர முடியாது. நீ போகப் போறியா?" என்றான் கிரி.

"ஆமாம்."

"என்ன நடந்ததுன்னு திங்கட்கிழமை சொல்லு."

திங்கட்கிழமை அலுவலகத்துக்குச் சென்றதும், யூனியன் மீட்டிங்கில் நடந்தது பற்றி சுபாஷிடம் கேட்டான் கிரி.

"முக்கியமா ஒண்ணும் இல்ல. வெவ்வேறு விஷயங்கள்ள தனக்கு உதவறதுக்காக ஒரு குழுவை அமைக்கறது பத்தித் தலைவர் பேசினாரு. அவ்வளவுதான்!" என்றான் சுபாஷ்.

"ஓ! குழு அமைச்சாச்சா? குழுவில யார் யாரு இருக்காங்க?"

"யார் யார்ங்கறதை அவர் இன்னும் முடிவு செய்யல. சில பெயர்களைக் குறிப்பிட்டாரு. அவங்களைப் பத்தி, சில பேர் சில ஆட்சேபணைகளை எழுப்பினாங்க. யார் யார்ங்கறதை முடிவு செஞ்சு, ரெண்டு மூணு நாள்ள சர்க்குலர் அனுப்பறேன்னு சொல்லிட்டாரு!" என்றான் சுபாஷ்.

ன்று மாலை, கிரி அலுவலகத்தை விட்டுக் கிளம்புவதற்கு முன், யூனியன் தலைவர்  கிருஷ்ணன் அவனை இன்டர்காமில் அழைத்தார்.

"என்ன கிரி, வீட்டுக்குக் கிளம்பிட்டீங்களா?" என்றார் கிருஷ்ணன்

"ஆமாம் கிருஷ்ணன். சாரி. நேத்திக்கு மீட்டிங்குக்கு வர முடியல!" என்றான் கிரி.

"உங்களுக்கு வீட்டுக்குப் போக அவசரம் இல்லேன்னா என்னோட காப்பி சாப்பிட வரீங்களா?"

"சந்தோஷமா!" என்றான் கிரி.

இருவரும் அருகிலிருந்த, அவர்கள் எப்போதும் போகும் ஓட்டலுக்குச் சென்றனர்.

"உங்களுக்கு உதவ ஒரு குழு அமைக்கப் போறீங்களாமே?" என்றான் கிரி.

"ஆமாம். அது விஷயமாத்தான் உங்ககிட்ட பேசணும்னு நினைச்சேன். குழுவில உறுப்பினரா இருக்க உங்களுக்கு விருப்பமா?" என்றார் கிருஷ்ணன்.

"நிச்சயமா! நீங்க எந்தப் பொறுப்பு கொடுத்தாலும், அதைச் செய்யத் தயாரா இருக்கேன்னு உங்களுக்குத்தெரியுமே! ஆனா, நீங்க நேத்திக்கு சில பெயர்களைச் சொன்னப்ப சில பேர் ஆட்சேபிச்சாங்களாமே! எனக்கு ஏதாவது ஆட்சேபம் வருமான்னு பாத்துக்கங்க!" என்றான் கிரி, சிரித்துக் கொண்டே.

ஒரு நிமிடம் மௌனமாக இருந்த கிருஷ்ணன், "நேத்திக்கு மீட்டிங்க்ல உங்க பேரையும் நான் சொன்னேன். அதுக்கு ஒத்தர்கிட்டேயிருந்துதான் ஆட்சேபம் வந்தது!" என்றார்.

"'யார்கிட்டேருந்து?"

"உங்க நண்பர் சுபாஷ்கிட்டே இருந்துதான்!"

"என்ன சொல்றீங்க? அவன் என்னோட நெருங்கின நண்பனாச்சே!"

"நேத்திக்கு அவர் மீட்டிங்கில உங்களைப் பத்திப் பேசின விஷயங்களைக் கேட்ட யாரும் அவரை உங்க நண்பர்னு சொல்ல மாட்டாங்க! பொறுப்பு இல்லாதவன், தனக்கு எது நல்லதுன்னு மட்டும் பாக்கறவன் இப்படியெல்லாம் உங்களைப் பத்தி அவர் அவதூறா சொன்ன பல விஷயங்களைக் கேக்க எனக்கே அதிர்ச்சியா இருந்தது. நீங்க நெருங்கின நண்பரா நினைக்கிற  ஒத்தரைப் பத்தி நீங்க சரியாப் புரிஞ்சுக்கணுங்கறதுக்காகத்தான் உங்களைத் தனியாப் பார்த்து அவர் உங்களைப் பத்திப் பேசினதை உங்ககிட்ட சொல்ல விரும்பினேன்!" என்றார் கிருஷ்ணன்.

குறள் 820:
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு.

பொருள்: 
தனியே இருக்கும்போது நட்புடன் பழகி, பலர் கூடிய மன்றத்தில் பழித்துப் பேசுவோரின் தொடர்பைச் சிறிதளவும் சேர விட வேண்டா.

அதிகாரம் 83 - கூடா நட்பு
அதிகாரம் 81 - பழைமை

 அறத்துப்பால்                                               காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...