அதிகாரம் 89 - உட்பகை

திருக்குறள்
பொருட்பால்
படையியல்
அதிகாரம் 89
உட்பகை

881. ஆதரவு கொடுத்தவர்

"நீ பொறந்த அஞ்சாறு மாசத்திலேயே உன் அப்பா நம்மை விட்டுட்டுப் போயிட்டாரு. அப்ப உன் மாமா மட்டும் இல்லேன்னா, என்னால சமாளிச்சு உன்னை ஆளாக்கி இருக்கவே முடியாது" என்று கணபதியின் அம்மா சரசு, அவனிடம் அடிக்கடி சொல்லி இருக்கிறாள்.

அம்மா சொன்னதை ஏற்றுத் தன் மாமா பரஞ்சோதியிடம் நன்றியுடனும், விசுவாசத்துடனும் இருந்து வந்தான் கணபதி.

கணபதி படித்துப் பட்டம் வாங்கி சொந்தமாகத் தொழில் ஆரம்பித்தான்.

"உன் மாமாவை உன் கம்பெனியில வேலைக்குச் சேத்துக்கடா!" என்றாள் சரசு.

தன் மாமா ஏன் எந்த வேலைக்கும் செல்லவில்லை என்று முன்பே ஒருமுறை கணபதி சரசுவிடம் கேட்டபோது, தங்கள் சொத்துக்களைப் பார்த்துக் கொள்ள வேண்டி இருப்பதால்தான், பரஞ்சோதி வேலைக்குச் செல்லவில்லை என்று சரசு சொல்லி இருந்தாள்.

அம்மா சொன்னதால், தன் தொழில் நிறுவனத்தைப் பார்த்துக் கொள்ளும் மேலேளராகப் பரஞ்சோதியை நியமித்தான் கணபதி.

"அம்மா! மாமாவை வேலையை விட்டு நீக்கிட்டேன்!" என்றான் கணபதி சரசுவிடம்.

"ஏண்டா? அவர் உன் கம்பெனியில் வேலை பாக்க ஆரம்பிச்சு, ஆறு மாசம் கூட ஆகி இருக்காதே!" என்றாள் சரசு, அதிர்ச்சியுடன்.

"அவரை நான் வேலைக்கு வச்சதிலிருந்தே, அவர் பொய்க்கணக்கு எழுதி, கம்பெனி பணத்தைக் கையாடிக்கிட்டு இருந்திருக்காரு. என் கம்பெனியில வேலை செஞ்சவங்க, இதைப்பத்தி முன்னாடியே எங்கிட்ட சொன்னாங்க. இன்னிக்கு, நானே அவரைக் கையும் களவுமாப் பிடிச்சுட்டேன். அதனால, வேலையை விட்டுப் போகச் சொல்லிட்டேன். அதோட, நம் குடும்பச் சொத்துக்களையெல்லாம் இனிமே அவர் பாத்துக்க வேண்டாம்னும் சொல்லிட்டேன்."

"ஏண்டா அப்படிச் சொன்ன? உங்கப்பா நம்மைத் தவிக்க விட்டுட்டுப் போனப்பறம், உன் மாமா மட்டும் இல்லைன்னா..."

"போதும்மா! இதை நான் ஆயிரம் தடவை கேட்டுட்டேன். அவர் நமக்குத் துணையா இருந்ததுக்கு, அவர் மேல எனக்கு நன்றி இருக்கு. ஆனா, அவரு நம் சொத்துக்களைப் பாத்துக்கறேன்னு சொல்லிட்டு, நம் வருமானத்தில பெரும்பகுதியை எடுத்துக்கிட்டிருந்திருக்காரு. இதைப் பத்தி ஏற்கெனவே சில பேர் எங்கிட்ட சொன்னப்பவும்,  அவர் நமக்கு ஆதரவா இருந்திருக்கார்னுதான் பேசாம இருந்துட்டேன். இப்ப, அவர் பணம் கையாடற வரைக்கும் போனப்பறம், அவரோட உறவைத் துண்டிக்கறதைத்தவிர வேற வழியில்லை" என்றான் கணபதி.

"நிழல் கொடுத்த மரத்தை வெட்டக் கூடாதுடா!" என்றாள் சரசு.

"நாம மரத்தை வெட்டலேம்மா. அதோட நிழல்லேந்து விலகி வந்துட்டோம், அவ்வளவுதான். சில மரங்களோட நிழல்ல உக்காந்திருக்கறது உடம்புக்கு நல்லது இல்லேன்னு ஊர்ல சொல்லுவாங்க இல்ல? அது மாதிரி!" என்றான் கணபதி.

குறள் 881:
நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்.

பொருள்: 
இன்பம் தரும் நிழலும், நீரும் நோய் செய்வனவாக இருந்தால், தீயனவே ஆகும். அதுபோலவே, சுற்றத்தாரின் தன்மைகளும் துன்பம் தருவானால், தீயனவே ஆகும்.

882. நள்ளிரவில் நிகழ்ந்த மாற்றம்!

மாநில சட்டமன்றத் தேர்தலில், இரண்டு முக்கிய கட்சிகளுக்குமே பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் கிடைக்கவில்லை. இரு கட்சிகளும் கிட்டத்தட்ட சமமான அளவில் இடங்களைப் பெற்றிருந்தன.

அந்த நிலையில், ம.ஜ.க கட்சியின் தலைவர் திருமூர்த்தி விரைவாகச் செயல்பட்டு, மூன்று சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற்று, பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை உருவாக்கி விட்டார்.

திருமூர்த்தி தன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலை ஆளுனரிடம் கொடுத்துத் தன்னை முதல்வராகப் பதவி ஏற்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று கோரினார். அவர் கோரிக்கையைப் பரிசீலித்து விரைவிலேயே முடிவை அறிவிப்பதாக ஆளுனர் அறிவித்தார்.

"ஆளுனர் நாளைக்கு என்னை முதல்வரா நியமிச்சுக் கடிதம் கொடுத்துடுவார்னு நினைக்கறேன். நாளைக்கே பதவி ஏற்பு விழாவை வச்சுக்கலாம். ரொம்பக் கஷ்டப்பட்டு, இந்த முறை ஆட்சியைப் பிடிச்சிருக்கோம். எல்லாம் நல்லபடியா நடக்கணும். கட்சியில எனக்குப் போட்டியா இருந்த தனபால், என் தலைமையை ஏத்துக்கிட்டாலும், அவன் எப்ப என்னைக் கவுத்துடுவானோன்னு எனக்கு ஒரு பயம் இருந்துக்கிட்டிருக்கு. அவன் மேல மட்டும் ஒரு கண் வச்சுக்க" என்றார் திருமூர்த்தி, அவரது  வலது கரம் என்று கருதப்படும் ஆறுமுகத்திடம்.

"என்ன ஆறுமுகம்? எதுக்கு இந்த அதிகாலையில ஃபோன் பண்ற?" என்றார் திருமூர்த்தி, அதிகாலை உறக்கத்திலிருந்து எழுப்பப்பட்ட எரிச்சலுடன்.

"தலவரே! குடி முழுகிப் போச்சு! நம்ம கட்சி எம் எல் ஏக்கள் 20 பேர்  நள்ளிவில ஆளுனரைச் சந்திச்சு, இ.ம.க. கட்சித் தலைவர் பரந்தாமனுக்கு ஆதரவு கொடுக்கறதாக் கடிதம் கொடுத்திருக்காங்க. அதனால, ஆளுனர் இ.ம.க.வுக்குப் பெரும்பான்மை இருக்குன்னு தீர்மானிச்சு, பரந்தாமனுக்கு அதிகாலையிலேயே பதவிப் பிரமாணம் செஞ்சு வச்சுட்டாரு!" என்றான் ஆறுமுகம், பரபரப்புடன்.

"இது எப்படி நடந்தது? நான் சந்தேகப்பட்டது சரியாப் போச்சு. தனபால் தன் புத்தியைக் காட்டிட்டான். கட்சிக்கு துரோகம் பண்ணி..."

"ஐயா! ஒரு நிமிஷம். தனபால் இப்பவும் நம்ம கட்சியிலதான் இருக்காரு. உங்களுக்கு ஆதரவாத்தான் இருக்காரு. துரோகம் பண்ணினது அவர் இல்ல. உங்க தம்பி பையன்தான்!" என்றான் ஆறுமுகம்.

"என்னது? சதீஷா?" என்றார் திருமூர்த்தி, அதிர்ச்சியுடன்.

"ஆமாம். அவர்தான் நம்ம கட்சியிலேந்து 20 எம் எல் ஏக்களைக் கூட்டிக்கிட்டுப் போய் ஆளுனரைச் சந்திச்சவரு. அதுக்குப் பரிசா, அவருக்குத் துணை முதல்வர் பதவி கொடுத்திருக்காங்க!" என்றான் ஆறுமுகம்.

குறள் 882:
வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.

பொருள்: 
வாளைப்போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை, ஆனால் உறவினரைப் போல் இருந்து, உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.

883. ஏன் இந்தக் கடுமை?

"என்னங்க. இந்த ராஜவேல் உங்களைப் பத்தியே தப்பாப் பேசி இருக்காரு? என்ன செய்யப் போறீங்க?" என்றார் வ.ம.க. கட்சியின் பொதுச் செயலாளர் அன்பரசன்.

"ஏதோ உணர்ச்சி வசப்பட்டுப் பேசி இருப்பார்னு நினைக்கறேன். விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புங்க. வருத்தம் தெரிவிச்சார்னா, மன்னிச்சு விட்டுடலாம்!" என்றார் கட்சித் தலைவர் மாசிலாமணி.

"என்னங்க இது? இவ்வளவு மென்மையா இருக்கீங்க? இப்படிப் பேசினதுக்கு, அவரைக் கட்சியை விட்டே தூக்கணும். அப்பதான் மத்தவங்களுக்கு ஒரு பயம் இருககும்."

"எப்பவாவது உணர்ச்சி வசப்பட்டுத் தப்பா எதையாவது பேசறது எல்லாருக்கும் இயல்புதான். அவரு கட்சியில ரொம்ப வருஷமா இருக்காரு. நல்ல உழைப்பாளி. ஒரு வாய்ப்புக் கொடுக்கலாம். மறுபடி இப்படிப் பேசினார்னா, அப்ப நடவடிக்கை எடுக்கலாம். ஆனா, அப்படி நடக்காதுன்னு நினைக்கறேன்!" என்றார் மாசிலாமணி, சிரித்தபடி.

"தங்கப்பன் பேசினதைப் பாத்தீங்க இல்ல?" என்றார் மாசிலாமணி.

"கொஞ்சம் அதிகமாத்தான் பேசி இருக்காரு. உடனே வருத்தம் தெரிவிச்சுட்டாரே!" என்றார் அன்பரசன்.

"வருத்தம் தெரிவிச்சா சரியாப் போச்சா? கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, கட்சிப் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தற மாதிரி பேசினார்னு சொல்லி அவரைக் கட்சியிலேந்து நீக்கிடுங்க!" என்றார் மாசிலாமணி.

"என்னங்க இது? அன்னிக்கு, ராஜவேல் விஷயத்தில அவ்வளவு மென்மையா நடந்துக்கிட்டீங்க. அவரு உங்களையே தாக்கிப் பேசினாரு. இவரு கட்சியோட செயல்பாடு பற்றிப் பொதுவாத்தான் பேசி இருக்காரு. ராஜவேல் பேசினதோட ஒப்பிடச்சே, தங்கப்பன் பேசினது ஒண்ணுமே இல்லை. ஏன் தங்கப்பன் விஷயத்தில இவ்வளவு கடுமை காட்டறீங்க?" என்றார் அன்பரசன், புரியாமல்.

"ராஜவேல் என்னைத்தான் விமரிசனம் செஞ்சார். அது பரவாயில்ல. தங்கப்பன் கட்சிக்கு எதிராப் பேசி இருக்காரு. அதை மன்னிக்க முடியாது" என்றார் மாசிலாமணி.

கட்சிக்குள் மாசிலாமணிக்கு எதிரான ஒரு குழுவை உருவாக்கிக் கொண்டிருந்த தங்கப்பனைக் கட்சியிலிருந்து எப்படி வெளியேற்றுவது என்று யோசித்துக் கொண்டிருந்த மாசிலாமணி, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டதை அவர் அன்பரசனிடம் வெளிப்படையாகச் சொல்லவில்லை!

குறள் 883:
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்.

பொருள்: 
உட்பகைக்கு அஞ்சித் தம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்; காக்காது போனால், நமக்குத் தளர்வு வந்தபோது, மண்கலத்தை அறுக்கும் கைக்கருவிபோல உட்பகை நம்மை உறுதியாக அழித்து விடும்.

884. வாசுவின் கோபம்

"உன் அண்ணன், தனக்கு ரயில்வேயில உயர் அதிகாரி ஒத்தரைத் தெரியும், அவர் மூலமா எமர்ஜன்சி கோட்டாவில ரிசர்வேஷனை கன்ஃபர்ம் பண்ணிடறேன்னு சொன்னதாலதானே, மூட்டை முடிச்சையெல்லாம் தூக்கிக்கிட்டு ஸ்டேஷனுக்குப் போனோம்? ஆனா, டிக்கட் கன்ஃபர்ம் ஆகல. மறுபடி பெட்டியையெல்லாம் தூக்கிக்கிட்டு, வீட்டுக்கு வரும்படி ஆயிடுச்சு. என்னைத் திட்டம் போட்டுப் பழி வாங்கி இருக்காரு உன் அண்ணன்!" என்றான் வாசு, கோபத்துடன்.

"அவன் எதுக்குங்க உங்களைப் பழி வாங்க நினைக்கணும்? முயற்சி செஞ்சிருக்கான், முடியல. இதுக்கு முன்னால சில பேருக்கு அவன் இது மாதிரி செஞ்சு கொடுத்திருக்கான். நம்பிக்கை இல்லாம ஸ்டேஷனுக்குப் போனவங்க, ரிசர்வேஷன் கன்ஃபர்ம் ஆனதைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்காங்க!" என்றள் அவன் மனைவி புவனா.

"அதனாலதான் சொல்றேன். என்னைத் திட்டம் போட்டுப் பழி வாங்கி இருக்கார்னு. ஒருவேளை, நம்ம கல்யாணத்தில, என் வீட்டுக்காரங்க யாராவது அவர்கிட்டக் கோபமாப் பேசி இருப்பாங்க. அதுக்காக, என்னைப் பழி வாங்கி இருக்காரு!"

"அது மாதிரி எதுவும் இல்லை. ஏன் இப்படி நினைக்கிறீங்க?" என்று புவனா கூறியதை வாசு ஏற்றுக் கொள்ளவில்லை.

அடுத்த நாள், புவனாவின் அண்ணன் கணேஷ், அவர்கள் வீட்டுக்கு வந்து, எமர்ஜன்சி கோட்டாவில் கன்ஃபர்ம் செய்வதாகச் சொன்ன அதிகாரியால் ஏதோ காரணத்தால் அப்படிச் செய்ய முடியாமல் போய் விட்டது என்று சொல்லி, வாசுவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்ட பிறகும், வாசு சமாதானமடையவில்லை.

அதற்குப் பிறகு, எத்தனையோ வருடங்கள் ஆகியும், கணேஷின் மீதிருந்த கோபம், வாசுவின் மனதை விட்டு நீங்கவில்லை.

"நீங்க இன்னும் என் அண்ணன் மேல விரோத பாவத்தோடதான் இருக்கீங்க. இப்படி இருக்கறது உங்களுகே நல்லது இல்லைங்க" என்று புவனா பலமுறை வாசுவிடம் கூறி இருக்கிறாள்.

"அப்படியெல்லாம் எதுவும் இல்லை" என்று வாசு உதட்டளில் மறுத்தாலும், தன் மனதில் கணேஷன் மீது ஒரு விரோத பாவம் இருப்பதை அவனால் உணர முடிந்தது.

"நம்ம இருபத்தைந்தாவது திருமண விழாவுக்குக் கூப்பிட்டிருந்தவங்கள்ள பல பேர் வரல. என் தம்பி கூட வரல. ஏன்னு தெரியல!" என்றான் வாசு.

"நீங்க இப்படி மனசில விரோத பாவத்தோட இருந்தா எப்படி வருவாங்க?" என்றாள் புவனா.

"என்ன சொல்ற நீ? எனக்கும் என் தம்பிக்கும் எந்தப் பிரச்னையும் இல்லேயே! அவன் ஏன் வரல?"

"அதை நீங்க அவர்கிட்டதான் கேக்கணும். ஆனா நான் கவனிச்ச ஒரு விஷயத்தை சொல்றேன். நீங்க என் அண்ணனை விரோதியா நினைக்க ஆரம்பிச்சதிலேந்தே, மற்றவங்களோட உங்களுக்கு இருந்த நெருக்கமும் குறைய ஆரம்பிச்சுடுச்சு. ஆரம்பத்தில உங்களுக்கு ரொம்ப நெருக்கமா இருந்த உங்க தம்பி, கொஞ்சம் கொஞ்சமா விலகிப் போய்க்கிட்டிருக்கறதை நான் கவனிச்சிருக்கேன். இனிமேலாவது, யார் மேலேயும் மனசில விரோதம் வச்சுக்காம, மத்தவங்ககிட்ட  குற்றம், குறை இருந்தா கூட, அதையெல்லாம் உடனே மறந்து, இயல்பா இருக்கப் பழகுங்க. நான் உங்களுக்கு உபதேசம் பண்றதா நினைக்காதீங்க. நான் பார்த்ததை வச்சு சொல்றேன்!" என்றாள் புவனா.

குறள் 884:
மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்.

பொருள்: 
மனம் திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வு ஒருவனுக்கு ஏற்பட்டு விடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும்.

885. பெண் கேட்கச் சென்றபோது...

தண்டபாணி தன் மகன் ராம்குமாருக்குத் தன் தங்கை சுமதியின் மகள் அனுராதாவைப் பெண் கேட்கச் சென்றபோது, சுமதியின் கணவன் பரமசிவம் சிரித்தான்.

"என்ன மச்சான் இது? நீங்க எந்தக் காலத்தில இருக்கீங்க? அத்தை பொண்ணைக் கட்டிக்கறது, மாமன் மகனைக் கட்டிக்கறதெல்லாம் இந்தக் காலத்தில சரியா வருமா? சினிமாவிலதான் இதையெல்லாம் இன்னும் தூக்கிப் புடிச்சுக்கிட்டிருக்காங்க. உறவுக்குள்ள கல்யாணம் செஞ்சுக்கிட்டா, அவங்களுக்குப் பிறக்கற குழந்தைங்களோட ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கறதா, விஞ்ஞான ரீதியாக் கண்டு பிடிச்சிருக்காங்க" என்றான் பரமசிவம்.

"உன் பொண்ணைக் கொடுக்க இஷ்டம் இல்லேன்னு சொல்லு. அதை விட்டுட்டு இல்லாத கதையெல்லாம் ஏன் சொல்ற?" என்றான் தண்டபாணி, கோபத்துடன்.

"என்ன மச்சான் மாப்பிள்ளைங்கற மரியாதை கூட இல்லாம பேசறீங்க?" என்றான் பரமசிவம், பொறுமையுடன்.

"உனக்கெல்லாம் என்னடா மரியாதை? உன் பொண்ணு யாரையோ காதலிக்கறா. அதை மறைக்கறதுக்காக, இல்லாத கதையெல்லாம் சொல்ற. பொண்ணை ஒழுங்கா வளர்க்கத் தெரியல. எனக்கு நீ விஞ்ஞானப் பாடம் எடுக்கறியா?" என்றான் பரமசிவம்.

"என்னடா சொன்ன?" என்றபடியே, பரமசிவம் தண்டபாணியின் சட்டையைப் பிடிக்க, சுமதி வேகமாக வந்து இருவரையும் விலக்கினாள்.

கோபமாக வெளியேறினான் தண்டபாணி.

அன்றே, இரு குடும்பங்களுக்கும் இடையிலான உறவு முறிந்தது.

"இனிமே நீ உன் மகளைப் பாக்கப் போறேன்னு அந்த வீட்டுக்குப் போறதா இருந்தா, இங்கே திரும்பி வராதே!" என்று தன் தன் அம்மா பாக்கியலட்சுமியிடம் உறுதியாகச் சொல்லி விட்டான் பரமசிவம்.

"உனக்கும் மாப்பிள்ளைக்கும் சண்டைன்னா, அதுக்கு நான் ஏண்டா என் பொண்ணைப் பாக்காம இருக்கணும்?" என்று பாக்கியலட்சுமி கூறினாலும், மகனின் கோபத்துக்கு பயந்து, அவள் மகளைப் பார்க்கப் போகவில்லை.

பரமசிவமும் தன் மனைவி சுமதி தன் அம்மாவைப் பார்க்க தண்டபாணி வீட்டுக்குப் போகக் கூடாது என்று கூறி விட்டதால், அவளும் அம்மாவைப் பார்க்க வரவில்லை.

சில மாதங்கள் கழித்து, சுமதிக்கு உடல்நிலை சரியில்லை என்று பரமசிவத்திடமிருந்து செய்தி வந்தது. தண்டபாணி, அவன் மனைவி சாரதா, தாய் பாக்கியலட்சுமி ஆகிய மூவரும் பரமசிவத்தின் வீட்டுக்கு விரைந்தனர்.

கட்டிலில் சோர்வாகப் படுத்திருந்த மகள் சுமதியைப் பார்த்ததும், "என்னடி ஆச்சு உனக்கு?" என்று வெடித்து வந்த அழுகையுடன் கேட்டபடியே, சுமதியின் தலையில் ஆதரவாகக் கையை வைத்தாள் பாக்கயலட்சுமி. 

சுமதியின் கண்களில் நீர் வழிந்தது. ஏதோ பேச நினைத்து முடியாமல், அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள் அவள்.

"என்ன ஆச்சு மாப்பிள்ளை?" என்றான் தண்டபாணி, பரமசிவத்தைப் பார்த்து.

"கொஞ்ச நாளாவே கொஞ்சம் சோர்வா இருந்தா. அம்மாவைப் பார்க்க முடியலியேன்னு வருத்தமா இருக்கும்னு நினைச்சேன். சரி, உன் அண்ணன் வீட்டுக்குப் போய் உன் அம்மாவைப் பாத்துட்டு வான்னு சொல்லலாம்னு நினைச்சேன். ஆனா, அதுக்குள்ள ஒருநாள் திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டா. அவளுக்கு ஏற்கெனவே சர்க்கரை வியாதி இருந்ததா, கொஞ்ச நாளா சரியா சாப்பிடாததால, சர்க்கரை அதிகமாயிடுச்சு. ஆஸ்பத்திரியில சேத்தேன். அங்கே ஒரு வாரம் சிகிச்சை கொடுத்து அனுப்பி இருக்காங்க. சர்க்கரை அதிகமா இருக்கறதால, இனிமே தினம் ரெண்டு வேளை இன்சுலின் ஏத்தணும், உடம்பை ஜாக்கிரதையாப் பாத்துக்கணும். இல்லேன்னா உயிருக்கே ஆபத்தாயிடும்னு டாக்டர் சொல்லி இருக்காரு" என்றான் பரமசிவம். பேசும்போதே அவன் குரல் தழுதழுத்தது.

"அடப்பாவிங்களா! உங்களுக்குள்ள போட்ட சண்டையால, என் பொண்ணு உயிருக்கே ஆபத்து ஏற்படற நிலைக்குக் கொண்டு வந்துட்டீங்களே! ஏன் மாப்பிள்ளை, ஆஸ்பத்திரியில சேத்தப்பறம் கூடவா எனக்கு சொல்லி அனுப்பக் கூடாது? உயிரே போயிடுங்கற நிலைமை வந்தாதான் நீங்க மனசு மாறுவீங்களா?" என்று அழுகையுடனும், ஆத்திரத்துடனும் கத்தினாள் பாக்கியலட்சுமி.

தண்டபாணியும், பரமசிவமும் ஏதும் பேசாமல் தலைகுனிந்து நின்றனர்.

குறள் 885:
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.

பொருள்: 
உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது ஒருவனுக்கு மரணம் போன்ற கொடிய துன்பம் பலவற்றையும் கொடுக்கும்.

886. சேகர் பிரதர்ஸ்

"நீங்களும் உங்க தம்பியும் பத்து வருஷமா ஒற்றுமையா தொழில் செய்யறீங்க. மார்க்கெட்ல முன்னணியில இருக்கீங்க. இப்ப பங்கு பிரிச்சுக்கிட்டு தனித் தனியாத் தொழில் செய்யணும்னு நினைக்கறது புத்திசாலித்தனம் இல்ல. இது உங்க தொழிலை பாதிக்கும்" என்றார் ஆடிட்டர் குமார்.

"இல்லை சார். இந்தத் தொழில் வெற்றிக்கு முழுக் காரணம் என்னோட உழைப்புதான். என் தம்பி ராஜசேகரோட பங்களிப்பு எதுவுமே இல்ல. ஆனா, அவன் அதிகாரம் செலுத்தறதில மட்டும் குறியா இருக்கான். இதை என்னால அனுமதிக்க முடியாது. எங்களுக்கு இருக்கற தொழிற்சாலைகள், கடைகள் எல்லாத்தையுமே அவனுக்கு, எனக்குன்னு பிரிச்சுடப் போறேன். அவன் பங்குக்கு வரதை மட்டும் அவன் பாத்துக்கட்டும்!" என்றார் தனசேகர், உறுதியாக.

"உங்க விருப்பம்!" என்றார் ஆடிட்டர்.

"சேகர் பிரதர்ஸை வீழ்த்தணும்னு இவ்வளவு வருஷமா முயற்சி செஞ்சுக்கிட்டிருக்கேன், முடியல. இப்ப அவங்களே எனக்கு வழி விட்டுருக்காங்க!" என்றார் அருண் என்டர்பிரைசஸ் அதிபர் அருணன்.

"அவங்க க்ரூப் ரெண்டாப் பிரிஞ்சதைச் சொல்றீங்களா? தனசேகரோட நிறுவனம் வலுவாத்தான் இருக்கும்னு நினைக்கறேன். ராஜசேகர்தான் கொஞ்சம் பலவீனமானவர். அவரால நிலைச்சு நிற்க முடியாது" என்றார் அருணின் நண்பர் மூர்த்தி.

"தனசேகரும் அடி வாங்குவாரு. ரொம்ப வலுவா இருந்து, குடும்பத் தகராறால பிரிஞ்ச பல நிறுவனங்கள் இருந்த இடம் தெரியாம போனதை நாம பாத்திருக்கமே! ரெண்டு வெவ்வேற நிறுவனங்கள் தொழில்ல போட்டி போடறதை விட, அண்ணன் தம்பி போட்டி ரொம்ப ஆக்ரோஷமா இருக்கும். அவங்களே ஒத்தரை ஒத்தர் அழிச்சுப்பாங்க. என்ன நடக்கப் போகுதுன்னு நீங்களே பாருங்களேன்!" என்றார் அருண்.

அருண் கணித்தபடியே, அடுத்த சில ஆண்டுகளில் தனசேகர், ராஜசேகர் ஆகிய இருவருடைய நிறுவனங்களும் பெரும் இழப்பைச் சந்தித்த பின் மூடப்பட்டன.

குறள் 886:
ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.

பொருள்: 
ஒருவனுடைய உற்றாரிடத்தில் பகைமை ஏற்படுமானால், அந்த உட்பகையால் அவன் அழியாமலிருத்தல் எப்போதும் அரிது.

887. ஜாடியும் மூடியும்

'சமூகப் பார்வை' பத்திரிகையின் மூத்த நிருபர் கஜபதியும், சமீபத்தில்தான் அந்தப் பத்திரிகையில் ஒரு பயிற்சி நிலை நிருபராகச் சேர்ந்திருந்த தனபாலும், ம.த.க. கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு விட்டுச் சிற்றுண்டி அருந்த ஒரு உணவகத்துக்குச் சென்றனர்.

 "பொதுவா, ஒரு கட்சிக்கு ஒரு தலைவர்தான் இருப்பாரு. ஆனா, ம.த.க. கட்சிக்கு மட்டும் 'அமைப்பாளர்கள்'னு ரெண்டு தலைவர்கள் இருக்காங்க. எந்த முடிவையுமே ரெண்டு பேரும் சேர்ந்துதான் எடுக்கறாங்க. இப்படி ஒற்றுமையா செயல்படற ரெண்டு தலைவர்களை வேற எந்தக் கட்சியிலும் பார்க்க முடியாது. நான் சொல்றது சரிதானே சார்?" என்றான் தனபால். 

"குங்குமச் சிமிழ் பாத்திருக்கியா?" என்றார் கஜபதி. 

"பாத்திருக்கேன் சார். எதுக்குக் கேக்கறீங்க?"

"சிமிழும், மூடியும் ஒட்டின மாதிரி இருக்கும். ஆனா, கொஞ்சம் அழுத்தி எடுத்தா, ரெண்டும் தனித்தனியா வந்துடும். இதோ இந்த மேஜை மேல ஒரு உப்பு ஜாடி இருக்கே, அதோட மூடி, அது மேல எப்படி சரியாப் பொருந்தி இருக்கு பாரு! ஆனா, ரெண்டையும் தனியாப் பிரிச்சுடலாமே! அது மாதிரிதான் இவங்க ரெண்டு பேரும். 

"சாமிநாதன் ம.த.க. தலைவரா இருந்தப்ப, அவர் தனக்கு அடுத்த நிலையில எந்தத் தலைவரும் இருக்கக் கூடாதுன்னு, எல்லாரையும் அடிமைகள் மாதிரியே வச்சிருந்தாரு. அவர் திடீர்னு இறந்தப்பறம், அந்தக் கட்சியோட உயர்மட்டக் குழுவில 'பொறுப்பாளர்கள்'னு ஒரு ரெட்டைப் பதவியை உருவாக்கி, இவங்க ரெண்டு பேரையும் அந்தப் பதவியில உக்காத்தி வச்சிருக்காங்க."

"அது சரிதான் சார். ஆனா, ரெண்டு வருஷமா, அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேந்து கட்சியை நடத்திக்கிட்டிருக்காங்களே!"

"அது வெளிப் பார்வைக்குத்தான். ஒவ்வொரு முடிவையும் எடுக்கறதுக்குள்ள, ரெண்டு பேருக்குள்ள எவ்வளவு குடுமிப்பிடிச் சண்டை நடக்குதுங்கறது கட்சியில உள்ள சில மூத்த தலைவர்களுக்கு மட்டும்தான் தெரியும்!" என்ற கஜபதி, "அவங்கள்ள சில பேர் என்னை மாதிரி மூத்த பத்திரிகைக்காரங்ககிட்ட இதையெல்லாம் சொல்றதால எங்களுக்கும் தெரியும்!" என்று சொல்லிச் சிரித்தார்.

"அப்படி ரெண்டு பேருக்குள்ளேயும் புகைச்சல் இருந்தா, இந்த ஏற்பாடு ரொம்ப நாளைக்கு நீடிக்காதே!" என்றான் தனபால்.

"சரியாச் சொன்ன!" என்று சொல்லிச் சிரித்தார் கஜபதி.

"அப்படீன்னா?"

"கொஞ்சநாள்ள உனக்கே தெரியும். உனக்கென்ன, இந்த உலகத்துக்கே தெரிய வரும்!"

சில மாதங்கள் கழித்து நடந்த ம.த.க. கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில், கட்சியின் விதிகள் திருத்தப்பட்டு, தலைவர் என்ற பதவி உருவாக்கப்பட்டு, இரண்டு அமைப்பாளர்களில் ஒருவரான முருகேசன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்றொரு அமைப்பாளரான பாண்டியன் இதை எதிர்த்ததால், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அந்தக் கூட்டத்திலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குறள் 887:
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி.

பொருள்: 
செப்பு எனப்படும் சிமிழில் அதன் மூடி பொருந்தியிருப்பது போல் வெளித் தோற்றத்துக்கு மட்டுமே தெரியும் அவ்வாறே உட்பகையுள்ளவர்கள் உளமாரப் பொருந்தியிருக்க மாட்டார்கள்.

888. மூன்றாம் தலைமுறை

"உங்க தாத்தா தங்கவேலு காலத்தில ஆரம்பிக்கப்பட்ட ஒரு தொழில் நிறுவனம், அவருடைய பிள்ளைகள் காலத்தில பன்னிரண்டு நிறுவனங்களா விரிவடைஞ்சுது. 

"நிர்வாக வசதிக்காக, இன்னிக்கு அவரோட ஆறு பேரன்களும், ஒவ்வொத்தரும் ரெண்டு நிறுவனங்களை நிர்விகிக்கறதுன்னு முடிவு செஞ்சு, கடந்த அஞ்சு வருஷமா அது மாதிரி நிர்வகிச்சுக்கிட்டிருக்கீங்க. 

"இப்பவும், இந்த ஆறு நிறுவனங்களையும் 'வேலு க்ரூப்'னுதான் எல்லாரும் சொல்றாங்க ஆனா, நீங்க ஒரு க்ரூப் மாதிரி செயல்படாம, தனித்தனியா செயல்படறீங்க. 

"மூன்றாம் தலைமுறையான உங்க நிர்வாகத்தில, முந்தின ரெண்டு தலைமுறைகள்ள இருந்த வளர்ச்சியோ, லாபமோ இல்லைங்கறது வருத்தமான விஷயம். ஒரு ஆடிட்டரா, பல கவலைப்படற அம்சங்களை உங்க நிறுவனங்கள்ள நான் பாக்கறேன். நீங்க ஆறு பேரும் ஒருங்கிணைந்து செயல்பட்டா, உங்க நிறுவனங்களோட சரிவைத் தடுக்க முடியும். 

"உங்க தாத்தா தொழிலை ஆரம்பிச்சப்ப, என்னோட அப்பாதான் அவருக்கு ஆடிட்டரா இருந்தாரு. அதுக்கப்பறம், நான் ஆடிட்டரா இருக்கேன். என்னோட சின்ன வயசில என் அப்பாவோட உதவியாளனா இருந்ததிலேந்தே, உங்க தாத்தாவோட செயல்பாட்டை நான் பக்கத்தில இருந்து பாத்திருக்கேன். உங்க பெற்றோர்களோட செயல்பாட்டையும் பாத்திருக்கேன். அவங்களோட கடின உழைப்பால உருவானதுதான் இந்த க்ரூப். 

"நீங்க ஒருங்கிணைஞ்சு செயல்பட்டு, உங்க க்ரூப்பை பழைய நிலைக்குக் கொண்டு வரணுங்கறது என்னோட விருப்பம். இதைச் சொல்றதுக்குத்தான், உங்க ஆறு பேரையும் என் வீட்டுக்கு விருந்துக்குக் கூப்பிட்டேன்!"

ஆடிட்டர் சண்முகத்தின் பேச்சுக்குப் பின், சற்று நேரம் மௌனம் நிலவியது.

"நீங்க சொல்றது சரிதான். ஆனா, சுந்தர் தன் தொழிற்சாலைக்கு வேண்டிய மூலப் பொருளை எங்கிட்ட வாங்காம, என்னோட போட்டி நிறுவனத்திலேந்து வாங்கறானே! அப்படி இருக்கறப்ப, நாங்க எப்படி ஒருங்கிணைந்து செயல்பட முடியும்?" என்றான் குணசேகர்.

"குணா! உன்னோட பினாமி பேரில ஒரு கம்பெனி ஆரம்பிச்சு, அதில என்னோட கம்பெனி தயாரிப்பை நீ உற்பத்தி செய்யறது எனக்குத் தெரியாதுன்னு நினைக்கறியா?" என்றான் சுந்தர்.

அதைத் தொடர்ந்து, மற்றவர்களும் ஒருவர் மீது ஒருவர் குறைகளைக் கூற ஆரம்பித்தனர்.

'நீங்க ஒவ்வொத்தரும் மத்தவங்களுக்கு எதிரா உள்ளடி வேலைகள் செஞ்சுக்கிட்டிருக்கறது தெரியாம, நீங்க ஒருங்கிணைந்து செயல்பட்டு உங்க க்ரூப்பை வளர்க்கணும்னு சொன்னேனே!' என்று தனக்குள் நொந்து கொண்டார் சண்முகம்.

குறள் 888:
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி.

பொருள்: 
உட்பகை உண்டான குடி (அல்லது அமைப்பு) அரத்தினால் தேய்க்கப் பட்ட இரும்பு போல் வலிமை குறைக்கப்பட்டுத் தேய்ந்து போகும்.

889. கட்சி நலன்

தேர்தலில் ஜ.ம.க. கட்சி வெற்றி பெற்றதும், யார் முதல்வர் என்ற கேள்வி எழுந்தது.

கட்சியின் மூத்த தலைவரும், மூன்று முறை முதல்வராக இருந்தவருமான கண்ணப்பன், ஒரு இளம் தலைவராக உருவாகிக் கட்சியின் வெற்றிக்காகக் கடுமையாக உழைத்தவரான மூர்த்தி ஆகிய இருவருமே முதல்வர் பதவிக்குப் பொருத்தமானவர்களாகக் கருதப்பட்டனர். இருவருக்குமே கட்சிக்குள்ளும், மக்களிடையேயும் பெரும் ஆதரவு இருந்தது.

கட்சித் தலைமை இருவருக்குமிடையே சமசம் செய்ய முயன்றது.

"மூர்த்தி இளைஞர். எனக்கு இதுதான் கடைசி வாய்ப்பு. இனி, நான் தேர்தலிலேயே போட்டியிடப் போவதில்லை. நான் சிறப்பாக ஆட்சி செய்து, நம் கட்சி அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறச் செய்வேன். அப்போது மூர்த்தி முதல்வராகலாமே!" என்றார் கண்ணப்பன்,.

"கண்ணப்பன் மூன்று முறை முதல்வராக இருந்து விட்டார். அவருக்கே மீண்டும் வாய்ப்புக் கொடுப்பது, என் போன்ற இளம் தலைவர்களுக்குச் செய்யப்படும் அநீதி!" என்றார் மூர்த்தி.

கட்சித் தலைமை ஒரு சமரச முடிவை எடுத்தது. அதன்படி முதல் இரண்டரை ஆண்டுகளுக்குக் கண்ணப்பன் முதலமைச்சராக இருப்பது என்றும், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு, மூர்த்தி முதலமைச்சராக இருப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

மூர்த்திக்கு இதில் திருப்தி இல்லை என்றாலும், வேறு வழி இல்லாமல் அதை ஏற்றுக் கொண்டார். கண்ணப்பன் முதலமைச்சராகப் பதவி ஏற்க, மூர்த்தி துணை முதலமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்டார்.

று மாதங்களுக்குப் பிறகு, கண்ணப்பன் முதல்வர் பதவியிலிருந்து விலகினார். இளைய தலைமுறைக்கு வாய்ப்பளிக்கவே, தான் பதவியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.

"ஏண்ணே, இப்படி செஞ்சீங்க? இன்னும் ரெண்டு வருஷம் முதல்வரா நீடிச்சிருக்கலாம் இல்ல?" என்றார் கண்ணப்பனின் ஆதரவாளர் துரைக்கண்ணு.

"கட்சித்தலைமையோட இந்த சமரச ஏற்பாட்டை மூர்த்தி வெளிப்படையா ஏத்துக்கிட்டாலும், அவருக்கு இது ரொம்ப ஏமாற்றமாத்தான் இருந்தது. அவரோட வாய்ப்பை நான் தட்டிப் பறிச்சுட்ட மாதிரிதான் அவர் நடந்துக்கிட்டாரு. வெளிப்பார்வைக்குத் தெரியாட்டாலும், அவர் என்னை ஒரு விரோதியா நினைக்கறதை, என்னால உணர முடிஞ்சது. உயர்மட்டத்தில இருக்கற ரெண்டு பேருக்குள்ள இப்படிப்பட்ட விரோத பாவம் இருக்கறது நல்லது இல்ல. மூர்த்தியோட மனோபாவத்தை இயல்பானதா நினைச்சு, நான் ரெண்டரை வருஷத்தை சமாளிச்சு ஓட்டி இருக்கலாம். ஆனா, இது மாதிரி கோபம், ஆத்திரம், ஏமாற்றம், அதனால ஏற்படற விரோத பாவம் எல்லாம் சின்னதாத் தெரிஞ்சாலும், அதெல்லாம் எப்ப வேணும்னா திடீர்னு வெடிக்கலாம். அப்படி நடந்தா, அது நம்ம கட்சியையும், ஆட்சியையும் பாதிக்கும். அது நடக்கக் கூடாதுன்னுதான் நான் விலகிட்டேன். ஏற்கெனவே மூணு தடவை முதல்வரா இருந்தாச்சு. இப்ப நாலாவது முறையாவும் ஆறு மாசம் இருந்தாச்சு. இது போதாதா?" என்றார் கண்ணப்பன், சிரித்தபடி.

"ஐயா! எல்லாரும் கட்சி நலம்னு வாய் கிழியப் பேசுவாங்க. ஆனா நீங்க கட்சி நலனுக்காக உங்க முதல்வர் பதிவியையே விட்டுட்டு வந்திருக்கீங்களே! நீங்க கட்சிக்குப் பெரிய சொத்து ஐயா!" என்றார் துரைக்கண்ணு, உணர்ச்சிப் பெருக்குடன்.

குறள் 889:
எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு.

பொருள்: 
எள்ளின் பிளவுபோன்று சிறிதாக இருந்தாலும், உட்பகையால் பெருங்கேடு விளையும்.

890. தொடர முடியாத கூட்டணி!

"சயாமிய ரெட்டையர்னு கேள்விப்பட்டிருக்கியா?" என்றான் பழனி, தன் நண்பன் மோகனிடம்.

"ஆமாம். ஒட்டிக்கிட்டே பிறந்தவங்க. அது மாதிரி ஒட்டிக்கிட்ட உடம்புகளோட அவங்க அத்தனை வருஷம் எப்படி வாழ்ந்தாங்கன்னு நான் ஆச்சரியப்பட்டிருக்கேன்" என்றான் மோகன்

"அப்படின்னா, என்னையும் பார்த்து ஆச்சரியப்படு. நான் என் பார்ட்னர் வீரமணியோட சேர்ந்து தொழில் நடத்திக்கிட்டிருக்கேனே, அதுவும் சயாமிய ரெட்டையர் வாழ்க்கைதான். சேர்ந்து இருக்கறதும் கஷ்டமா இருக்கு. பிரிஞ்சு போகவும் முடியல!"

"ஏன் பார்ட்னரா இருக்கீங்க? ஏன் பிரிஞ்சு போக முடியல?"

"என்னோட அப்பாவும், வீரமணியோட அப்பாவும் நண்பர்கள். அவங்க சேர்ந்து இந்தத் தொழிலை ஆம்பிச்சு, அதை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு வந்துட்டாங்க. அவங்க காலத்துக்கப்பறம், நானும் வீரமணியும் பார்ட்னரா இருக்கோம். எங்க ரெண்டு பேருக்கும் ஒத்துப் போகலை, ஒத்தர் மேல ஒத்தருக்கு நம்பிக்கை இல்லை. அதனால, பல விஷயங்கள்ள முடிவு எடுக்கவும் முடியலை, எடுக்காம இருக்கவும் முடியல!"

"அப்ப ஏன் சேர்ந்து தொழில் பண்றீங்க?"

"எங்க பிசினஸை ரெண்டாப் பிரிக்க முடியாது. ஒரு பார்ட்னரை விலக்கணும்னா, அவரோட பங்கோட தற்போதைய மதிப்பை  இன்னொரு பார்ட்னர் அவருக்குக் கொடுக்கணும். அது பல லட்ச ரூபா வரும். அவ்வளவு பணத்தை எங்க ரெண்டு பேராலேயுமே புரட்ட முடியாது."

"சரி. என்ன செய்யப் போறீங்க? இப்படியே தொடரப் போறீங்களா?"

"இல்லை. இப்பதான் ஒரு முடிவு எடுத்திருக்கோம்."

"என்ன முடிவு?"

"எங்க பிசினஸை யாருக்காவது வித்துட்டு, நாங்க  ரெண்டு பேரும் தனித்தனியா வேற தொழில் ஆரம்பிக்கலாம்னு!"

"நல்ல முடிவுதான். இந்த முடிவையாவது ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்தீங்களே, ஆச்சரியம்தான்!"

"ஆனா, வாங்கறதுக்கு ஆள் வரணுமே! அதுவரையிலேயும் கஷ்டம்தான். ஒவ்வொரு நாளும், பாம்போட ஒரே வீட்டில குடித்தனம் நடத்தற மாதிரிதான் போயிக்கிட்டிருக்கு!"

"ரெண்டு பேர்ல யாரு பாம்பு?" என்றான் மோகன்.

பழனி தன் நண்பனை முறைத்தான்.

குறள் 890:
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.

பொருள்: 
மனப் பொருத்தம் இல்லா‌தவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை, ஒரு குடிசைக்குள்ளே பாம்புடன் சேர்ந்து வாழ்வது போலாகும்.

             அறத்துப்பால்                                               காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...