அதிகாரம் 65 - சொல்வன்மை

திருக்குறள்
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 65
சொல்வன்மை

641. வாயுள்ள பிள்ளை!

"பையனை காலேஜில படிக்க வைக்க வசதி இல்லை. பள்ளிக்கூடம் முடிச்சுட்டு வீட்டில உக்காந்திருக்கான். வாயுள்ள பிள்ளை பிழைச்சுக்கும்னு சொல்லுவாங்க. இவன் இரைஞ்சு கூடப் பேச மாட்டான்.இவனுக்கு தைரியமாப் பேசிக் காரியத்தை சாதிக்கிற சாமர்த்தியமும் கிடையாது!" என்று தன் மகன் ராஜுவைப் பற்றி அலுத்துக் கொண்டாள் செங்கமலம்.

பல முயற்சிகளுக்குப் பிறகு ராஜுவுக்கு சென்னையிலிருந்த ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியர் நலத் துறையில் உதவியாளராக வேலை கிடைத்தது. தன் ஊரை விட்டு வர செங்கமலம் மறுத்து விட்டதால், ராஜு மட்டும் சென்னையில் தனியே தங்கி இருந்து வேலை பார்த்து வந்தான்.

தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தியபோது நிர்வாகத்தின் தரப்பில் பர்சனல் மானேஜர் இருந்தார். அவருக்குத் தகவல்களை எடுத்துக் கொடுப்பதற்காக ராஜு சில கோப்புகளுடன்அவர் அருகில் அமர்ந்திருந்தான்.

தொழிற்சங்கப் பிரதிநிதி ஒரு வாதத்தை எழுப்பியபோது, கோப்பிலிருந்து ஒரு தகவலைப் படித்துக் காட்டும்படி பர்சனல் மானேஜர் ராஜுவிடம் கூறினார்.

குறிப்பிட்ட தகவல்களை ராஜு படித்துக் காட்டியதும், தொழிற்சங்க நிர்வாகி அந்தத் தகவல்கள் பற்றி  ஒரு கேள்வியை எழுப்பினார். 

பர்சனல் மானேஜர் அதற்கு பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார். ராஜு பர்சனல் மானேஜரைப் பார்த்தான். அவர் எதுவும் சொல்லவில்லை. ராஜு தயக்கத்துடன் தொழிற்சங்க நிர்வாகி கேட்ட கேள்விக்கு பதில் கூறினான்.

அதைத் தொடர்ந்து அவர் மேலும் சில கேள்விகளை எழுப்ப, ராஜு அவற்றுக்கு பதில் கூறினான்.

ராஜு தன்னை அறியாமலேயே அடுத்த சில நிமிடங்களுக்குத் தொழிற்சங்க நிர்வாகியுடன் வாதம் செய்து கொண்டிருந்தான்!

பர்சனல் மானேஜர் இந்த விவாதத்தை சுவாரசியமாக கவனித்துக் கொண்டிருந்தார். தொழிற்சங்க நிர்வாகியும் தொடர்ந்து ராஜுவுடனேயே வாதம் செய்து கொண்டிருந்தார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு தொழிற்சங்க நிர்வாகி ராஜுவின் கருத்தை ஏற்றுக் கொண்டார். அப்போது அவர் ராஜுவைப் பார்த்த பார்வையில் ஒரு மரியாதை இருந்தது. 

பிறகு தொழிற்சங்க நிர்வாகி பர்சனல் மானேஜரிடம் தனியாகப் பேசும்போது, "பேச்சுவார்த்தைக்கு சரியான ஆளைத்தான் அழைச்சுக்கிட்டு வந்திருக்கீங்க சார்! எவ்வளவு அழகா, தெளிவா, பாயின்ட்டோட பேசினாரு! பொறுமையா, நிதானமா, உணர்ச்சி வசப்படாம அவர் எனக்கு பதில் சொன்னப்ப இப்படி ஒரு ஆளு நம்ம பக்கம் இருந்தா நல்லா இருக்குமேன்னு தோணிச்சு!" என்றார் சிரித்துக் கொண்டே.

பர்சனல் மானேஜர் சிரித்தபடி அவர் கூறியதை ஏற்றுக் கொண்டார்.

தற்குப் பிறகு, பர்சனல் மானேஜர் ஜெனரல் மானேஜரிடம் ராஜுவைப் பற்றிக் கூறினார். 

"இந்தப் பையனுக்கு நல்ல பேச்சுத் திறமை இருக்கு. மற்றவல்கள் ஏற்றுக் கொள்கிற மாதிரி தெளிவா. அழகா, நிதானமா, பாயின்ட் பை பாயின்ட்டா பேசறான். ரொம்ப சாஃப்டாதான் பேசறான். ஆனா மத்தவங்க கவனிக்கிற மாதிரி பேசறான். அவனோட வாதங்களுக்கு பதில் சொல்றது கூட கஷ்டம். . நம்ம கம்பெனிக்கு அவன் ஒரு அசெட். அவன் ஒரு அசிஸ்டன்ட்தான்னாலும் அவனோட திறமையை நாம பயன்படுத்திக்கணும். எல்லாப் பேச்சு வார்த்தைகளிலேயும் அவனைக் கூட வச்சுக்கலாம்னு பாக்கறேன்!"

"நீங்க சொல்றதைப் பார்த்தா அவன் ரொம்ப நாளைக்கு அசிஸ்டன்ட்டா இருக்க மாட்டான் போல இருக்கே!" என்றார் ஜெனரல் மானேஜர்.

"நீங்க சொல்றதைப் பார்த்தா என் பதவிக்கே ஆபத்து வந்துடும் போல இருக்கே!" என்றார் பர்சனல் மானேஜர் சிரித்தபடி.

செங்கமலம் ராஜுவுக்கு ஃபோன் செய்து ஒரு உறவினர் திருமணத்துக்காக அவனை ஊருக்கு வருமாறு அழைத்தபோது, "அன்னிக்கு தொழிலாளர் யூனியனோட ஒரு பேச்சு வார்த்தை இருக்கும்மா. நான் அதில கலந்துக்கணும்!" என்றான் ராஜு.

'இவனுக்கு என்ன பேசத் தெரியும்னு நினைச்சு இவனைப் பேச்சுவார்த்தையில கலந்துக்கச் சொல்லி இருக்காங்க!' என்று நினைத்தாள் செங்கமலம்.

குறள் 641:
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று.

பொருள்:
நாவன்மை என்னும் நலம் ஒருவகைச் செல்வம் ஆகும், அந்த நாநலம் தனிச்சிறப்புடையது, ஆகையால் மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று.


"என்ன செல்வம், நீங்க கம்பெனியோட தொழிற்சங்கத் தலைவரா இருக்கீங்க, உங்களுக்குக் கொஞ்சமாவது பொறுப்பு இருக்க வேண்டாமா?" என்றார் அந்தத் தொழிற்சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் சொங்குட்டுவன்.

"என்னங்க நீங்க சொல்றது? முதலாளியோட அடக்குமுறைக்குப் பணிஞ்சு போகணும்னு சொல்றீங்களா?" என்றான் செல்வம்.

"சூரியாங்கற தொழிலாளி சூப்பர்வைஸரை மரியாதை இல்லாம பேசி இருக்காரு. அதுக்காக அவரை சஸ்பெண்ட் பண்ணி இருக்காங்க. நீங்க முதலாளியைப் பாத்துப் பேசறப்ப, சமாதானமாப் பேசி சஸ்பென்ஷனை விலக்கிக்கச் செய்யறதை விட்டுட்டு அவரோட சண்டை போட்டுட்டு வந்திருக்கீங்க. இப்ப அவரு அந்தத் தொழிலாளி மேல கடுமையான நடவடிக்கை எடுக்கப் போறதா இன்னும் தீவிரமான நிலையை எடுத்துட்டாரு. நிலைமை இன்னும் சிக்கலாயிடுச்சே!"

"அந்தத் தொழிலாளி சூரியா ஏதோ கோபத்தில தப்பா ஒரு வார்த்தை பேசிட்டாரு. அதுக்காக அவரை சஸ்பெண்ட் பண்ணுவீங்களான்னு முதலாளிகிட்ட கேட்டேன். அது அவருக்குப் பிடிக்கல!"

"நீங்க அது மட்டுமா சொன்னீங்க?  'உங்களுக்குக் கோபம் வரப்ப நீங்க உங்க உதவியாளரை பாஸ்டர்டுனு தகாத வார்த்தை சொல்லித் திட்டறதில்லையா?'ன்னு அவரைக் கேட்டிருக்கீங்க! எனக்கு எப்படித் தெரியும்னு கேக்காதீங்க. உங்க முதலாளியே சொன்னாரு!" என்றார் செங்குட்டுவன்.

"நீங்க என் முதலாளிகிட்ட பேசினீங்களா? எப்ப? நான் கூட இல்லாம நீங்க அவர்கிட்ட தனியாப் பேச மாட்டீங்களே?" என்றான் செல்வம் அதிர்ச்சியுடன்.

"ஆமாம், பேசினேன். நீங்க செஞ்ச தப்பை சரி பண்ணத்தான் அவர்கிட்ட பேசினேன். அப்ப உங்களை எப்படிப் பக்கத்தில வச்சுக்க முடியும், பூனையை மடியில கட்டிக்கிட்டு சகுனம் பாக்கற மாதிரி? நீங்க மறுபடி ஏதாவது தப்பாப் பேசி நிலைமையை இன்னும் சிக்கலாக்கிட்டீங்கன்னா? ஆனா நான் தனியாப் போகல. துணைத்தலைவர் மணிகண்டனையும் அழைச்சுக்கிட்டுத்தான் போனேன். அவர்தானே நீங்க முதலாளிகிட்ட பேசறப்ப உங்களோட இருந்தாரு?"

தனக்குப் போட்டியாக வரக் கூடும் என்று தன்னால் கருதப்படும் மணிகண்டனை செங்குட்டுவன் உடன் அழைத்துச் சென்றது செல்வத்துக்கு மேலும் அதிர்ச்சியை அளித்தது.

"என்ன தலைவரே இது? தலைவரா இருக்கற என்னைப் புறக்கணிச்சுட்டு, எங்கிட்ட சொல்லாம  துணைத்தலைவரா இருக்கற மணிகண்டனை அழைச்சுக்கிட்டுப் போய் முதலாளியைப் பாத்திருக்கீங்க. இது நியாயமா?"

"நீங்க தவறான வார்த்தைகளைப் பேசிட்டு, அதுக்கு எந்த விளைவும் ஏற்படாதுன்னு நினைச்சா எப்படி?" என்றார் செங்குட்டுவன் சற்று கோபத்துடன்.

" சரி. முதலாளி கிட்ட என்ன சொன்னீங்க? சூரியா சூப்பர்வைஸரைத் தப்பாப் பேசினதுக்கு மன்னிப்புக் கேட்டுக்கிட்டிங்களா?"

"அதுக்கு அவசியமே ஏற்படல. அவரு அதைப் பத்திக் கேக்கவும் இல்லை. நீங்க அவர்கிட்ட  பேசின முறைக்கு அவர்கிட்ட வருத்தம் தெரிவிச்சேன். அவர் தானாகவே சூரியாவோட சஸ்பென்ஷனை விலக்கிக்கிறதா சொல்லிட்டாரு. சூரியா செஞ்சது தப்புதான்னு அன்னிக்கே நீங்க ஒரு வார்த்தை சொல்லி இருந்தா அவரு அப்போதே சஸ்பென்ஷனை ரத்து செஞ்சிருப்பாரு. அதுக்கான கிரடிட் உங்களுக்குக் கிடைச்சிருக்கும். உங்க கடுமையான பேச்சால அந்த நல்ல வாய்ப்பை நழுவ விட்டதோட கெட்ட பேரையும் வாங்கிக்கிட்டிருக்கீங்க. இனிமேயாவது பேச்சில கவனமா இருங்க!" என்றார் செங்குட்டுவன்.

குறள் 642:
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.

பொருள்: 
ஆக்கமும் அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால், எந்தவொரு சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டும்.

642. முதலாளியுடன் பேச்சு வார்த்தை

"என்ன செல்வம், நீங்க கம்பெனியோட தொழிற்சங்கத் தலைவரா இருக்கீங்க, உங்களுக்குக் கொஞ்சமாவது பொறுப்பு இருக்க வேண்டாமா?" என்றார் அந்தத் தொழிற்சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் சொங்குட்டுவன்.

"என்னங்க நீங்க சொல்றது? முதலாளியோட அடக்குமுறைக்குப் பணிஞ்சு போகணும்னு சொல்றீங்களா?" என்றான் செல்வம்.

"சூரியாங்கற தொழிலாளி சூப்பர்வைஸரை மரியாதை இல்லாம பேசி இருக்காரு. அதுக்காக அவரை சஸ்பெண்ட் பண்ணி இருக்காங்க. நீங்க முதலாளியைப் பாத்துப் பேசறப்ப, சமாதானமாப் பேசி சஸ்பென்ஷனை விலக்கிக்கச் செய்யறதை விட்டுட்டு அவரோட சண்டை போட்டுட்டு வந்திருக்கீங்க. இப்ப அவரு அந்தத் தொழிலாளி மேல கடுமையான நடவடிக்கை எடுக்கப் போறதா இன்னும் தீவிரமான நிலையை எடுத்துட்டாரு. நிலைமை இன்னும் சிக்கலாயிடுச்சே!"

"அந்தத் தொழிலாளி சூரியா ஏதோ கோபத்தில தப்பா ஒரு வார்த்தை பேசிட்டாரு. அதுக்காக அவரை சஸ்பெண்ட் பண்ணுவீங்களான்னு முதலாளிகிட்ட கேட்டேன். அது அவருக்குப் பிடிக்கல!"

"நீங்க அது மட்டுமா சொன்னீங்க?  'உங்களுக்குக் கோபம் வரப்ப நீங்க உங்க உதவியாளரை பாஸ்டர்டுனு தகாத வார்த்தை சொல்லித் திட்டறதில்லையா?'ன்னு அவரைக் கேட்டிருக்கீங்க! எனக்கு எப்படித் தெரியும்னு கேக்காதீங்க. உங்க முதலாளியே சொன்னாரு!" என்றார் செங்குட்டுவன்.

"நீங்க என் முதலாளிகிட்ட பேசினீங்களா? எப்ப? நான் கூட இல்லாம நீங்க அவர்கிட்ட தனியாப் பேச மாட்டீங்களே?" என்றான் செல்வம் அதிர்ச்சியுடன்.

"ஆமாம், பேசினேன். நீங்க செஞ்ச தப்பை சரி பண்ணத்தான் அவர்கிட்ட பேசினேன். அப்ப உங்களை எப்படிப் பக்கத்தில வச்சுக்க முடியும், பூனையை மடியில கட்டிக்கிட்டு சகுனம் பாக்கற மாதிரி? நீங்க மறுபடி ஏதாவது தப்பாப் பேசி நிலைமையை இன்னும் சிக்கலாக்கிட்டீங்கன்னா? ஆனா நான் தனியாப் போகல. துணைத்தலைவர் மணிகண்டனையும் அழைச்சுக்கிட்டுத்தான் போனேன். அவர்தானே நீங்க முதலாளிகிட்ட பேசறப்ப உங்களோட இருந்தாரு?"

தனக்குப் போட்டியாக வரக் கூடும் என்று தன்னால் கருதப்படும் மணிகண்டனை செங்குட்டுவன் உடன் அழைத்துச் சென்றது செல்வத்துக்கு மேலும் அதிர்ச்சியை அளித்தது.

"என்ன தலைவரே இது? தலைவரா இருக்கற என்னைப் புறக்கணிச்சுட்டு, எங்கிட்ட சொல்லாம  துணைத்தலைவரா இருக்கற மணிகண்டனை அழைச்சுக்கிட்டுப் போய் முதலாளியைப் பாத்திருக்கீங்க. இது நியாயமா?"

"நீங்க தவறான வார்த்தைகளைப் பேசிட்டு, அதுக்கு எந்த விளைவும் ஏற்படாதுன்னு நினைச்சா எப்படி?" என்றார் செங்குட்டுவன் சற்று கோபத்துடன்.

" சரி. முதலாளி கிட்ட என்ன சொன்னீங்க? சூரியா சூப்பர்வைஸரைத் தப்பாப் பேசினதுக்கு மன்னிப்புக் கேட்டுக்கிட்டிங்களா?"

"அதுக்கு அவசியமே ஏற்படல. அவரு அதைப் பத்திக் கேக்கவும் இல்லை. நீங்க அவர்கிட்ட  பேசின முறைக்கு அவர்கிட்ட வருத்தம் தெரிவிச்சேன். அவர் தானாகவே சூரியாவோட சஸ்பென்ஷனை விலக்கிக்கிறதா சொல்லிட்டாரு. சூரியா செஞ்சது தப்புதான்னு அன்னிக்கே நீங்க ஒரு வார்த்தை சொல்லி இருந்தா அவரு அப்போதே சஸ்பென்ஷனை ரத்து செஞ்சிருப்பாரு. அதுக்கான கிரடிட் உங்களுக்குக் கிடைச்சிருக்கும். உங்க கடுமையான பேச்சால அந்த நல்ல வாய்ப்பை நழுவ விட்டதோட கெட்ட பேரையும் வாங்கிக்கிட்டிருக்கீங்க. இனிமேயாவது பேச்சில கவனமா இருங்க!" என்றார் செங்குட்டுவன்.

குறள் 642:
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.

பொருள்:
ஆக்கமும் அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால், எந்தவொரு சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டும்.

643. ரயில் பயணிகள்

"நீங்க எந்த ஊருக்குப் போறீங்க" என்றார் ரயிலில் குருசாமியின் அருகில் அமர்ந்திருந்த பயணி.

"கும்பகோணம். நீங்க?" என்றான் குருசாமி.

"நானும் கும்பகோணம்தான் போறேன். நீங்க எங்கேந்து வரீங்க?"

"நாங்க சென்னையிலேந்து வரோம். ஆனா சிதம்பரம் போயிட்டு இப்ப அங்கேந்து வரோம்."

குருசாமி 'நாங்க' என்று கூறியது அவர் பக்கத்தில் கண்களை மூடி அமர்ந்திருந்த மனிதரையும் சேர்த்து என்று அந்தப் பயணி புரிந்து கொண்டார்.

"நான் பூந்தோட்டம்ங்கற ஊர்லேந்து வரேன். பூந்தோட்டத்திலேந்து அஞ்சு மைல் தள்ளி இருக்கற ஒரு கிராமத்திலேந்து வரேன். அங்கேந்து பூந்தோட்டத்துக்கு சைக்கிள்ள வந்து பூந்தோட்டம் ஸ்டேஷன் பக்கத்தில எனக்குத் தெரிஞ்சவரு கடையில சைக்கிளை வச்சுட்டு, அங்கேந்து ரயிலேறி மாயவரத்துக்கு வந்து, மாயவரத்திலேந்து இந்த ரயிலேறி வரேன்!" என்றார் அந்தப் பயணி தொடர்ந்து.

"அவ்வளவு கஷ்டப்பட்டு வரணுமா?"

"என்ன செய்யறது? எங்க ஊர்லேந்து கும்பகோணம் 18 மைல்தான். ஆனா பஸ் வசதி இல்லாததால ரெண்டு ரயில் ஏறி அம்பது மைல் சுத்தி வர வேண்டி இருக்கு. "

"இவ்வளவு கஷ்டப்பட்டு வரீங்கன்னா, ஏதாவது முக்கியமான வேலையாத்தான் இருக்கும்!" என்றான் குருசாமி.

"ஆமாம்" என்ற பயணி, "ஆமாம். நீங்க சென்னையிலேந்து வரதால கேட்கறேன். நீங்க புலவர் முருகப்பனோட பேச்சையெல்லாம் கேட்டிருக்கீங்களா?" என்றார்.

குருசாமி சற்று வியப்புடன், "சென்னையில இருந்துக்கிட்டு அவரோட சொற்பொழிவைக் கேக்காம இருக்க முடியுமா? அவரோட கம்பராமாயணச் சொற்பொழிவைக் கேக்க வெளியூர்லேந்தெல்லாம் கூட வருவாங்களே! ஏன் கேக்கறீங்க?" என்றார்.

"அவர் சொற்பொழிவு அவ்வளவு நல்லா இருக்குமா என்ன?"

"அவர் கம்பராமாயணம் சொல்றதைக் கேட்டா நாத்திகர்கள் கூட ராம பக்தர்கள் ஆயிடுவாங்க! அவ்வளவு அழகாப் பேசுவாரு அவரு. உங்களுக்கு அவரைப் பத்தி எப்படித் தெரியும்?"

"அவரைப் பத்தித்தான் பேப்பர்ல அடிக்கடி வருதே. நானும் ரேடியோவில அவர் சொற்பொழிவை ஒலிபரப்ப மாட்டாங்களான்னு பாத்துக்கிட்டிருக்கேன். இதுவரை அவங்க ஒலிபரப்பல. எங்க ஊர்லேந்து சென்னைக்குப் போய் விட்டு வரவங்க சில பேர் அவர் பேச்சைக் கேட்டுட்டு வந்து அவர் பேச்சு ரொம்ப நல்லா இருக்குதுன்னு சொல்லுவாங்க. அதனால எனக்கும் அவர் பேச்சைக் கேக்கணும்னு ரொம்ப நாளா ஆவல். ஆனா சென்னைக்குப் போக எனக்கு இதுவரையிலும் சந்தர்ப்பம் கிடைக்கல. ஆனா அவர் பேச்சைக் கேட்க இப்ப ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு!" என்றார் பயணி திடீர் உற்சாகத்துடன்.

"எப்படி?" என்றான் குருசாமி. 

அவன் பக்கத்தில் அமர்ந்திருந்து கண்களை மூடிக் கொண்டிருந்தவரும் விழித்துக் கொண்டு அவர்கள் பேச்சை கவனித்துக் கொண்டிருந்தார்.

"முருகப்பன் கும்பகோணத்துக்கு வராரே! இன்னிக்கு சாயந்திரம் அவர் பேச்சு இருக்கு. அதைக் கேக்கத்தான் போய்க்கிட்டிருக்கேன்!" என்றார் பயணி.

தன் பக்கத்தில் அமர்ந்திருந்தவரைத் திரும்பிப் பார்த்த குருசாமி, "இன்னிக்கு சாயந்திரம் நீங்க அவர் பேச்சைக் கேக்கலாம். ஆனா இப்பவே அவரை சந்திக்கலாம். இவர்தான் புலவர் முருகப்பன்!" என்று தன் பக்கத்தில் அமர்ந்திருந்தவரை அறிமுகப்படுத்தினான் குருசாமி.

குறள் 643:
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.

பொருள்:
சொல்லும்போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்.

644. பேராசிரியர் கற்பித்த பாடம்!

எங்கள் கல்லூரியின் விடுதியுடன் இணைக்கப்பட்டிருக்கும் உணவுக் கூடத்தில் உணவு சமைத்து மாணவர்களுக்கு வழங்குவதற்காக ஒரு ஒப்பந்ததாரரை முடிவு செய்ய வேண்டும். 

அதற்காக விண்ணப்பித்திருந்த ஐந்து பேரிடமும் பேசி அவர்களில் ஒருவரை  முடிவு செய்யும் பொறுப்பை விடுதியின் உணவுப் பிரிவு செயலாளரான எனக்கும் விடுதியின் வார்டனான எங்கள் ஆங்கிலப் பேராசரியருக்கும் எங்கள் கல்லூரி முதல்வர் அளித்திருந்தார்.

எங்கள் ஆங்கிலப் பேராசிரியர் வகுப்பில் முழுவதும் ஆங்கிலத்தில்தான் பேசுவார். தப்பித் தவறி கூட ஒரு தமிழ் வார்த்தையை அவர் பேசி நான் கேட்டதில்லை. 

 விண்ணப்பதாரர்களைச் சந்தித்துப் பேச, தன்னுடைய அறையிலிருந்து விடுதி அலுவலகத்துக்கு வரும்போது கூட அவர் என்னிடம் ஆங்கிலத்தில்தான் பேசிக்  கொண்டிருந்தார். நான் தட்டுத் தடுமாறி அவருக்கு ஆங்கிலத்தில் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன்.

விண்ணப்பதாரர்களுடன் அவர் எப்படிப் பேசுவாரோ என்ற மெல்லிய அச்சம் எனக்கு எழுந்தது. அநேகமாக நானேதான் அவர்களிடம் பேசி முடிவு செய்ய வேண்டி இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

முதல் விண்ணப்பதார் அறைக்குள் வந்ததும் அவசரமாக நானே முதலில் பேசி அவருக்கு எங்கள் தேவைகளை விளக்க ஆரம்பித்தேன். அவர் தலையாட்டிய விதத்திலிருந்து நான் விளக்கிக் கூறியவற்றை அவர் எந்த அளவுக்குப் புரிந்து கொண்டார் என்று என்னால் தீர்மானிக்க முடியவில்லை .

சட்டென்று பேராசிரியர் என்னை இடைமறித்து, "நீ சொன்னது அவருக்குச் சரியாகப் புரியலை போல இருக்கு!" என்று என்னிடம் ஆங்கிலத்தில் கூறி விட்டு, விண்ணப்பதாரரிடம் பேச ஆரம்பித்தார். - தமிழில்!

முதல் முறையாக அவர் தமிழில் பேசியதைக் கேட்க எனக்கு வியப்பாக இருந்தது. அதை விட அவர் ஒரு குழந்தைக்கு விளக்குவது போல் மிகவும் எளிதாக விளக்கியது எனக்கு இன்னும் வியப்பாக இருந்தது.

நான் மௌனமாக அவர் பேசியதைக் கேட்டுக் கொடிருந்தேன். எங்கள் தேவைகள் பற்றிப் பேராசிரியர் விளக்கியதும், தான் சேவை வழங்கும் விதம் பற்றி அந்த விண்ணப்பதாரர் கூறினார். அவர் கூறியவற்றைக் குறித்துக் கொண்டு அவரை அனுப்பி வைத்தோம்.

அந்த விண்ணப்பதாரர் சென்றதும், "என்னப்பா! என் தமிழ் ஒண்ணும் மோசமா இல்லையே!" என்றார் பேராசிரியர் சிரித்துக் கொண்டே.

"ரொம்பத் தெளிவா, எளிமையா விளக்கினீங்க சார்!" என்றேன் நான் உண்மையான உணர்உடன்.

"நான் வகுப்பில ஆங்கிலத்தில மட்டுமே பேசறதால எனக்கு ஆங்கிலத்தைத் தவிர வேற எந்த மொழியும் தெரியாதுன்னு நிறைய மாணவர்கள் நினைச்சக்கிட்டிருக்கிறது எனக்குத் தெரியும்!" என்றார் அவர் சிரித்துக் கொண்டே.

பிறகு, "ஒரு விஷயம். நீ அவர்கிட்ட பேசறப்ப, நிறைய ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தின. இது மாதிரி பேசி நமக்குப் பழக்கமாயிடுச்சு. ஆனா அதிகம் படிக்காதவங்களுக்கு நாம பேசற எல்லா வார்த்தைகளும் புரியும்னு சொல்ல டியாது. உதராணமா, நீ 'பர் ஹெட்'னு சொன்னது அவருக்குப் புரியலைங்கறதை நான் கவனிச்சேன். அதனாலதான் நான் பேசறப்ப 'தலைக்கு'ன்னு சொன்னேன். உன்னைக் குத்தம் சொல்லல. இது மாதிரி வியங்கள்ள கவனமா இருக்கணுங்கறதுக்காகச் சொன்னேன்!" என்றார் என்னிடம்.

ஆங்கிலப் பேராசிரியர் என்பதால் விண்ணப்பதாரருக்குப் புரியாத மொழியில் அவர் பேசுவார் என்று நான் அஞ்சிக் கொண்டிருந்தபோது, நானே இன்னும் எளிமையாகவும் இன்னும் புரியும்படியும் பேச வேண்டும் என்று அவர் எனக்குச் சுட்டிக் காட்டிது எனக்குச் சற்று அவமானமாக இருந்தாலும், ஒரு விதத்தில் சற்று விசித்திரமாகவும் இருந்தது. நான் எதிர்பார்த்து பயந்தது என்ன, நடந்தது என்ன!

குறள் 644:
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்.

பொருள்:
எவரிடம் பேசகிறோமோ அவருடைய திறனை அறிந்து பேச வேண்டும்.; அப்படிப் பேசுவதைவிட உயர்ந்த அறமும் பொருளும் வேறு இல்லை.

645. என்ன என்ன வார்த்தைகளோ!

"என்னங்க இவ்வளவு நேரமா பேச்சைத் தயார் பண்ணிக்கிட்டிருக்கீங்க? எப்பவும் உங்களுக்கு இவ்வளவு நேரம் ஆகாதே?" என்றாள் லட்சுமி..

அடித்து அடித்து எழுதி ஐந்தாறு தாள்களைக் கிழித்துப் போட்டிருந்த ரங்கராஜன்  "சரியா வர மாட்டேங்குதே!" என்றார்.

"எவ்வளவோ மேடைகள்ள முன்கூட்டியே பேச்சைத் தயாரிச்சு வச்சுக்காம நேரடியாப் பேசி இருக்கீங்க. இன்னிக்கு மட்டும் ஏன் இப்படி?"

"நான் படிச்ச விஷயங்களைப் பத்திப் பேசணும்னா கொஞ்சம் நினைவு படுத்திக்கிட்டாப் போதும். புது விஷயங்களைப் பேசணும்னா தயார் செஞ்சுதான் பேசணும்."

"சரி. எனக்கென்ன தெரியும்! ஆனா அதுக்கு ஏன் இவ்வளவு சிரமப்படறீங்க? பாயின்ட் கிடைக்கலையா?"

"வார்த்தைகள் கிடைக்கல!"

"என்ன வார்த்தை கிடைக்கலையா? உங்களுக்கு 'சொல்வீச்சுச் செம்மல்'னு ஒரு பட்டம் உண்டே!"

"பட்டம் இருக்குதான். ஆனா, யாரா இருந்தாலும் சரியான சொற்களைப் பயன்படுத்தணும் இல்ல? சரியான சொல்லைப் பயன்படுத்தலேன்னா தப்பா ஆயிடுமே!" 

"நீங்க சொல்றது எனக்குப் புரியல. ஏதோ நீதிமன்றத்தில வாக்குமூலம் கொடுக்கற மாதிரி வார்த்தைகள் எல்லாம் ரொம்பச் சரியா இருக்கணும்னு சொல்றீங்களே! அப்படி எதைப் பத்திப் பேசப் போறீங்க?"

"ஒத்தரைப் பாராட்டிப் பேசணும்!" என்றார் ரங்கராஜன்.

"அவ்வளவுதானே! கொஞ்சம் தாராளமாவே பாராட்டற மாதிரி வார்த்தைகளைப் போட்டுட்டா சரியாப் போச்சு!" என்றாள் லட்சுமி சிரித்தபடி.

"ஏது? பேச்சாளர்களுக்கு நீயே பயிற்சி கொடுப்ப போல இருக்கே! நீ சொல்றது சரிதான். ஆனா, அது போலியான பேச்சா இருக்கும். உண்மையான பாராட்டுன்னா சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தி அளவாப் பேசணும். நாம யாரைப் பாராட்டறமோ அவங்களும் சரி, கேக்கறவங்களும் சரி பாராட்டு உண்மையா, பொருத்தமா இருக்குன்னு நினைக்கணும். போதுமான அளவு பாராட்டாட்டாலும் ஏதோ பாராட்டணுங்கறதுக்காக பாராட்டற மாதிரி இருக்கும். மிகையான வார்த்தைகளைப் பயன்படுத்தினா போலின்னு தெரிஞ்சுடும். அதனாலதான் சரியான வார்த்தைகளைத் தேடிக்கிட்டிருக்கேன்."

"அடேயப்பா! பாராட்டறதில இவ்வளவு விஷயம் இருக்கா? மத்த வகைப் பேச்சக்களுக்கும் இது மாதிரி நியதிகள் இருக்கா?" என்றாள் லட்சுமி வியப்புடன்.

"எல்லா பேச்சுக்குமே இது முக்கியம். உங்கிட்ட பேசறப்ப கூட சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தணும். இல்லாட்டா நான் ஏதோ ஒப்புக்கு உனக்கு பதில் சொல்றதாகவோ இல்லை அல்லது உனக்குப் புரியாதுன்னு நினைச்சு நான் அலட்சியமாப் பேசறதாகவோ உனக்குத் தோணும்!" என்றார் ரங்கராஜன் சிரித்துக் கொண்டே.

"எனக்கு அப்படித் தோணல!" என்ற லட்சுமி தொடர்ந்து, "ஏன்னா நீங்கதான் சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தறவராச்சே!" என்றாள் சிரித்துக் கொண்டே.

குறள் 645:
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

பொருள்:
இந்தச் சொல்லை விடப் பொருத்தமான இன்னொரு சொல் இருக்காது என்று உணர்ந்த பிறகே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

646. என் பேச்சை யாரும் கேட்பதில்லை!

"ஆஃபீஸ் மீட்டிங்கிலேயும் சரி, நான் யார்கிட்டயாவது தனியாப் பேசினாலும் சரி, நான் பேசறதை யாரும் காது கொடுத்துக் கேக்க மாட்டேங்கறாங்க!" என்று அலுத்துக் கொண்டான் அரவிந்தன்.

"எல்லாருக்கும் சில சமயம் இப்படித் தோணும்!" என்றான் அவன் நண்பன் சாரதி.

"நேத்திக்கு ஆஃபீஸ்ல ஒரு மீட்டிங். நான் அருமையா ஒரு யோசனை சொன்னேன். ஜி எம் உட்பட யாரும் அதை கவனிச்ச மாதிரி கூடத் தெரியல. ஆனா பரந்தாமன் சொன்ன யோசனையைப் பிரமாதம்னு எல்லாரும் பாராட்டினாங்க. இத்தனைக்கும் பரந்தாமனுக்கு சரியா ஆங்கிலம் பேச வராது. தப்ப்த் தப்பாப் பேசுவான். நிறைய பேர் அதைக் கேட்டு சிரிப்பாங்க, அப்புறமா தங்களுக்குள்ள கிண்டல் பண்ணிப் பேசிப்பாங்க. ஆனா அவன் ஏதாவது சொன்னா வாயைப் பொளந்துக்கிட்டு கேட்டுக்கறாங்க!"

"இங்கிலீஷ் தெரியாட்டா என்ன? அவர் சொன்ன யோசனை மத்தவங்களுக்குப் பிடிச்சிருந்தா அதை ஏத்துக்கறது இயல்புதானே?"

"முட்டாள் மாதிரி பேசாதேடா! நான் சொன்னதுக்கும் அவன் சொன்னதுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல. நான் பேசினப்ப எருமை மாடு மேல மழை பேஞ்ச மாதிரி உக்காந்திருந்தவங்க அவன் பேசறப்ப மட்டும் கவனிச்சுக் கேக்கறாங்களே அது எப்படி?" என்றான் அரவிந்தன் கோபத்துடன்.

'அது ஏன்னு உனக்குப் புரியலேன்னா நீதான் பெரிய முட்டாள்!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட சாரதி, "சரி, நான் வரேன்!" என்று கிளம்பினான்.

"என்னடா கிளம்பிட்டே? நான் முட்டாள்னு சொன்னதில கோபமா?" என்றான் அரவிந்தன் சமாதானமாக.

"நீ என்னை முட்டாள்னு சொன்னா நான் ஏன் கோவிச்சுக்கப் போறேன்? நீ என் நண்பன்தானே! அதனால கேட்டு சிரிச்சுட்டுத்தான் போவேன். ஆனா எனக்கு ஒரு சந்தேகம். உன் ஆஃபீஸ்ல யாராவது வேற கருத்தைச் சொன்னா அவங்களையும் முட்டாள்னுதான் திட்டுவியா?" என்றான் சாரதி.

"என்னோட மேலதிகாரிகளை அப்படிச் சொல்ல முடியுமா?"

"அப்படின்னா, உன் சக ஊழியர்களையும், கீழே வேலை செய்யறவங்களையும் அப்படிச் சொல்லுவ!" என்றான் சாரதி சிரித்தபடி.

"இல்லை" என்று ஆரம்பித்த அரவிந்தன் சற்று தயக்கத்துக்குப் பின், "சில சமயம் அப்படிச் சொல்லி இருக்கேன்!" என்றான்.

"அரவிந்தா! நான் கம்யூனிகேஷன் ஸ்பெஷலிஸ்ட் இல்ல. எனக்குத் தெரிஞ்சதைச் சொல்றேன். நான் கவனிச்ச வரையில. நீ எதையாவது சொல்றப்ப ஒருவித அவசரத்தோடயும், அழுத்தத்தோடயும் சொல்ற. நீ சொல்றதை மத்தவங்க ஏத்துக்கணுமேங்கற கவலையோடயும் பயத்தோடயும் அப்படிப் பேசற மாதிரி எனக்குத் தோணுது. ஆனா நீ அப்படிப் பேசினா கேக்கறவங்களுக்கு அது பிடிக்காது. அதனால தங்களை அறியாமலே அவங்க உன் பேச்சில கவனம் செலுத்த மாட்டாங்க. அதனால நீ சொல்லி முடிச்சதும் நீ என சொன்னேன்னே அவங்களுக்குத் தெரிஞ்சிருக்காது. 

"ரெண்டாவது, மத்தவங்க பேசறபோது நீ அதைக் காது கொடுத்துக் கேக்கறதில்ல. குறுக்கே பேசி அவங்களை கட் பண்ணுவ. இல்லைன்னா பொறுமையில்லாம அதை 'முட்டாள்தனமா இருக்கு, சரியா வராது'ன்னு சொல்லுவ. நீ இப்படி நடந்துக்கிறதால உன் மேல அவங்களுக்கு ஒரு எதிர்ப்பு உணர்வு வரும். அதானல, நீ பேசறதை கவனிக்கறதில அவங்க ஆர்வம் காட்ட மாட்டாங்க!"

"கம்யூனிகேஷன் எக்ஸ்பர்ட் இல்லைன்னு சொன்னே, இதையெல்லாம் எப்படிச் சொல்ற? ஏதாவது புத்தகத்தில படிச்சியா?" என்றான் அரவிந்தன். கோபப்படாமல் பொறுமையாக அவன் இப்படிக் கேட்டது சாரதி கூறியதில் உண்மை இருக்குமோ என்று அவன் யோசிப்பது போல் இருந்தது.

"புத்தகத்தில படிக்கல. உன்னோட பழகி, உன்னை கவனிச்சதில நான் புரிஞ்சுக்கிட்டது இது. இன்னொண்ணும் சொல்றேன். பரந்தாமன் பேசினா எல்லாரும் கேட்டுக்கறாங்கன்னு சொன்னியே, அவரு பொறுமையா, இனிமையாப் பேசறவரா, மத்தவங்க பேசறதை கவனமாக் கேக்கறவரா இருப்பாரு. நீ கவனிச்சுப் பாத்தா இது உனக்குப் புரியும்!" என்றான் சாரதி.

அரவிந்தன் பதில் சொல்லாமல் யோசித்துக் கொண்டிருந்தான்.

குறள் 646:
வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்.

பொருள்:
மற்றவர்கள் விரும்பிக் கேட்கும்படியாகப் பேசுவதும், மற்றவர்கள் கூறும் சொற்களின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதும் அறிவுடையார் செயலாகும்.

647. புதிய போர்முறைகள்

"இப்பல்லாம் காலம் மாறிப் போச்சுங்க. சமூக ஊடகங்கள்தான் இப்ப போர்க்களம். போர்ல அதிக ஆயுதங்கள் உள்ள படை வெற்றி பெறுகிற மாதிரி, சமூக ஊடகங்கள்ள அதிக பலம் உள்ளவங்கதான் அரசியல் பிரசாரத்தில வெற்றி பெற முடியும்!" என்றான் கண்ணன்.

"சமூக ஊடகங்கள்ள அதிக பலம் பெற என்ன செய்யணும்?" என்றார் சண்முகம்.

"அதுக்கெல்லாம் சில நிபுணர்கள் இருக்காங்க. அவங்க நிறைய வாட்ஸ் ஆப் குழுக்கள், யூடியூப் வீடியோக்கள், டிவிட்டர், ஃபேஸ்புக் பதிவுகள்னு உருவாக்கி அதையெல்லாம் நிறைய பேருக்குப் போய்ச் சேருகிற மாதிரி பரவச் செஞ்சுடுவாங்க கொஞ்சம் பணம் செலவழியும், அவ்வளவுதான்!"

"பணம் செலவழிக்கறதைப் பத்திக் கவலை இல்லை. இளங்கோவோட இமேஜைக் கெடுத்துத் தேர்தல்ல அவன் கட்சி நமக்கு ஒரு சவாலா இல்லாத மாதிரி பாத்துக்கணும். அவ்வளவுதான்!"

"ரெண்டு மாசத்தில பாருங்க. தன்னோட இமேஜ் டேமேஜ் ஆறதைப் பார்த்து இளங்கோ எப்படி அலறப் போறாரு பாருங்க!" என்றான் கண்ணன் உற்சாகத்துடன்.

"என்னப்பா சமூக ஊடகங்களை வச்சு இளங்கோவோட பேரைக் கெடுத்துடலாம்னு சொன்ன! நாம எவ்வளவோ பணம் செலவழிச்சு அவனுக்கு எதிரா நிறைய விஷயங்களைப் பரப்பினோம். ஆனா அவன் முன்னை விட இன்னும் வலுவா இல்ல ஆகிக்கிட்டிருக்கான்?" என்றார் சண்முகம்.

"அவரோட பேச்சுத் திறமையால எல்லாத்தையும் சமாளிச்சுடறாருங்க. அவரைப் பத்தி தப்பா  ஏதாவது வந்தா, ரொம்ப சுருக்கமா புத்திசாலித்தனமாவோ, நகைச்சுவையாகவோ அதுக்கு பதில் சொல்லி, அதை ஒண்ணுமில்லாம ஆக்கிடறாருங்க. இத்தனைக்கும் அவருக்கு சமூக ஊடக பலம் அதிகமா இல்ல. ஆனா அவரு பேச்சு சுவாரசியமா இருக்கறதால அவர் சொல்றதை சமூக ஊடகங்கள்ள இருக்கற பல பேரு பரப்பி அவர் பேச்சு எல்லாருக்கும் போய்ச் சேர வச்சுடறாங்க. சொல்லப் போனா, இளங்கோவைப் பத்தி நாம ஏதாவது தப்பான விஷயத்தைப் பரப்பினா, அந்த விஷயத்தை விட அவரு அதுக்கு எப்படி பதில் சொல்றாருங்கறதைத் தெரிஞ்சுக்கத்தான் மக்கள் ஆவலா இருக்காங்க. அதனால களம் இளங்கோவுக்கு சாதகமாத்தான் போய்க்கிட்டிருக்கு!" என்றான் கண்ணன்.

"சரி. இதையெல்லாம் குறைச்சுடு. ஒரேயடியா நிறுத்தினா நாம தோத்துட்ட மாதிரி இருக்கும். நான் அவனை வேற வழியில சமாளிக்கிறேன்!" என்றார் சண்முகம்.

டுத்த சில மாதங்களுக்கு சண்முகத்தின் மறைமுகமான தூண்டுதலின் பேரில் இளங்கோவின் மீது பல்வேறு நீதிமன்றங்களில் அவதூறு, ஊழல் போன்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வழக்குகள் போடப்பட்டன. பல்வேறு ஊர்களில் உள்ள காவல் நிலையங்களிலும் புகார்கள் அளிக்கப்பட்டன.

ஆனால் இளங்கோ அயரவில்லை. தன் மீது போடப்பட்ட வழக்குகளை உடனே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நீதிமன்றங்களில் மனுப் போட்டான். 

தன் மீது புகார் அளிக்கப்பட்ட காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று தன் மீதுள்ள புகார்களை உடனே விசாரித்து அவற்றின் உண்மைத் தன்மையைக் கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்தினான்.

இதனால் புகார் கொடுத்த பலர் பயந்து தங்கள் புகார்களையும் மனுக்களையும் திரும்பப் பெற்றனர்.

இளங்கோ எதற்கும் அஞ்ச மாட்டான், தன் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களை எதிர்கொள்வதில் சிறிதும் சோர்வடைய மாட்டான் என்பதை உணர்ந்து இளங்கோவை இது போன்ற போர்முறைகளால் வெல்ல முடியாது, அரசியல் ரீதியாகத்தான் அவனை எதிர்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு சண்முகம் வந்தார்.

குறள் 647:
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

பொருள்:
சொல்லாற்றல் படைத்தவனாகவும், சோர்வு அறியாதவனாகவும், அஞ்சா நெஞ்சம் கொண்டவனாகவும் இருப்பவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது.

648. ஒட்டுக் கேட்டு அறிந்தது!

"எனக்குக் கீழே இருக்கற ரெண்டு டீம் லீடர்ஸ்ல நீதான் சீனியர். எனக்கு புரொமோஷன் கீடைச்சா என் இடத்துக்கு நான் உன்னைத்தான் பரிந்துரைப்பேன்னும் எல்லாருக்கும் தெரியும். ஆனா உன்னோட டீம் செயல்பாடு அவ்வளவு திருப்திகரமா இல்லையே! மனோகரோட டீம் செயல்பாடு சிறப்பா இருக்கு. இப்படியே தொடர்ந்தா நான் மனோகரைத்தான் என் இடத்துக்குப் பரிந்துரைக்க வேண்டி இருக்கும்!" என்றார் புராஜக்ட் மானேஜர் அறிவழகன்.

"என்னவோ தெரியல சார்! என் டீம் உறுப்பினர்கள் நான் சொல்றபடி நடந்துக்க மாட்டேங்கறாங்க. கேட்டா, நீங்க அப்படித்தானே சார் சொன்னீங்கன்னு தப்பை என் மேல போடறாங்க. சில சமயம் எங்கிட்ட ஏதோ விரோத பாவத்தோட நடந்துக்கற மாதிரி இருக்கு. என் டீம் உறுப்பினர்கள்கிட்ட ஏதோ தப்பு இருக்கு. ஆனா அது என்னு எனக்குப் புரியல" என்றான் சிவராஜ்.

ரண்டு நாட்கள் கழித்து சிவராஜை அழைத்த அறிவழகன், "சிவராஜ்! நேத்து நீ உன் டீம் உறுப்பினர்கள்கிட்ட பேசினப்ப நான் பக்கத்து அறையிலே இருந்து கேட்டேன்!" என்றார்.

"என்ன சார் இது?" என்றான் சிவராஜ் சற்று சங்கடத்துடன்.

"இதில ரகசியம் எதுவும் இல்ல. நீ பேசறப்ப நான் உன் பக்கத்தில உக்காந்து கூட கவனிச்சிருக்கலாம். ஆனா அதனால நீ நர்வஸ் ஆகலாங்கறதாலதான் உங்கிட்ட சொல்லாம அடுத்த அறையிலிருந்து கவனிச்சேன். அது கூட உனக்கு உதவத்தான்!"

"சார்! என் டீம் உறுப்பினர்களை மாத்ததினாத்தான் சரியா வரும். அவங்க ஆட்டிட்யூடே சரியா இல்லை!" என்றன் சிவராஜ்.

"உன் டீம் உறுப்பினர்கள்கிட்ட சில குறைகள் இருக்கலாம். ஆனா அவங்க எப்படி இருந்தாலும், அவங்களை வச்சுக்கிட்டுத்தான் நாம நம்ம வேலைகளைச் செய்யணும்."

"அது எப்படிசார்?" என்றான் சிவராஜ்.

"எப்படின்னு சொல்றேன். அதுக்கு முன்னால, நீயும் நானும் சேர்ந்து மனோகர் தன் டீம் உறுப்பினர்கள்கிட்ட எப்படிப் பேசறான்னு பாக்கலாம், அதாவது கேக்கலாம்!" என்றார் அறிவழகன்.

"பக்கத்து ரூம்ல இருந்தா சார்?" என்றான் சிவராஜ் சிரித்துக் கொண்டே.

"தேறிட்ட!" என்றார் அறிவழகன், சிவராஜின் முதுகில் தட்டி.

"நீ என்ன கவனிச்ச?" என்றார் அறிவழகன்.

"ஒரு விஷயத்தை நான் ஒத்துக்கணும் சார்! மனோகர்  ரொம்பத் தெளிவா கோர்வையாப் பேசறான். நான் அந்த அளவுக்கு இல்ல. சொல்லப் போனா சில பாயின்ட்களை ல்ல வேண்டிய இடத்தில சொல்ல மறந்துட்டு அப்புறம் சொல்வேன். நானே இதை மாத்திக்கணும்னு நினைக்கிறேன்!" என்றான் சிவராஜ்.

"நீ உன் குறையை வெளிப்படையா ஒத்துக்கிட்டது நல்ல விஷயம். இந்தப்  எல்லாருக்கும் ஏற்படறதுதான். பேசறதுக்கு முன்னால என்ன பேசணும்னு யோசிச்சு பாயின்ட்களை வரிசையாக் குறிச்சு வச்சுக்கிட்டா இந்த பிரச்னை வராது. ஆரம்பத்தில குறிப்புகளைப் பாத்துப் பேசினாலும், கொஞ்ச நாள்ள குறிப்புகளைப் பாக்காமயே கோர்வையாப் பேச வந்துடும். இதற்கு முயற்சியும் பொறுமையும் வணும்." என்றார் அறிவழகன்.

"சரி சார்! அது ஒண்ணுதான் எனக்குத் தெரிஞ்சது. மத்தபடி நான் பேசறதுக்கும் மனோகர் பேசறதுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்ல. இன் ஃபேக்ட், என்னோட லாங்க்வேஜ் அவனோடதை விட இன்னும் சிறப்பா இருக்கும்!"

"ஆமாம். அதை நான் கவனிச்சேன். லாங்கவேஜ் வலுவா இருக்கறது ஒரு அட்வான்டேஜ்தான். ஆனா இன்னொரு விஷயத்தை நீ கவனிக்கல."

"என்ன சார் அது?"

"மனோகர் பேச்சில ஒரு இனிமை இருக்கு. அவன் பயன்படுத்தற வார்த்தைகள், குரலோட தொனி எல்லாமே ஒரு நண்பன்கிட்ட பேசற மாதிரி இருக்கு. உன்னோட பேச்சு  கட்டளையிடற தொனியில இருக்கு. அது கட்டளைதான். ஆனா கேக்கறவங்களுக்கு அப்படித் தெரியக் கூடாது. இன்னும் கொஞ்சம் இனிமையா, மென்மையாப் பேச நீ பழகிக்கணும். இந்த ரெண்டு விஷயங்களிலேயும் நீ கவனம் செலுத்தினா உன் டீம் உறுப்பினர்களை இந்த ஏழாவது மாடியிலேந்து குதிக்கச் சொல்லி நீ சொன்னா கூட அவங்க கேள்வி கேக்காம குதிச்சுடுவாங்க!" என்றார் அறிவழகன்.

சிவராஜின் முகத்தில் விரிந்த புன்னகையிலிருந்து தான் சொன்னதை அவன் சரியாக எடுத்துக் கொண்டிருக்கிறான் என்று அறிவழகன் புரிந்து கொண்டார்.

குறள் 648:
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

பொருள்:
சொல்ல வேண்டியவற்றைக் கோர்வையாகவும், இனிமையாகவும் சொல்லும் ஆற்றலை ஒருவர் பெற்றிருந்தால், அவர் சொல்பவற்றை உலகம் விரைந்து ஏற்றுக் கொள்ளும்.

649. பேச்சாளர் கேட்ட நேரம்

"பொதுவா நம்ம கிளப்ல பேச்சாளர்களுக்கு முக்கால் மணி நேரத்துக்கு மேல கொடுக்கறதில்லையே! அழகர்சாமிக்கு மட்டும் எப்படி ரெண்டு மணி நேரம் கொடுக்க முடியும்?" என்றார் கிளப் செயலாளர் தங்கதுரை.

"சார்! அழகர்சாமி பெரிய தமிழறிஞர். பொதுவா இலக்கிய மன்றங்கள்ள எல்லாம் அவர் மூணு மணி நேரம் பேசுவாரு. எல்லாரும் சுவாரசியமா கேட்டுக்கிட்டிருப்பாங்க. இது கிளப் மீட்டிங் என்பதால ரெண்டு மணி நேரமா சுருக்கிக்கறேன்னு சொல்றாரு!" என்றார் சீதாராமன். அவர்தான் அழகர்சாமியை கிளப் கூட்டத்தில் பேச அழைத்தவர்.

"சார்! நம் கிளப் உறுப்பினர்கள் அவ்வளவு நேரம் பேச்சைக் கேக்க மாட்டாங்க. அதோட பேச்சாளர் வரதுக்கு முன்னால நம் கிளப் விஷயங்களைப் பத்தின விவாதங்கள் இருக்கும். அதுக்கே ஒரு மணி நேரம் வேணும். அதனாலதான் பேச்சாளர்களுக்கு 45 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கறதுன்னு வச்சிருக்கோம். இவருக்கு வேணும்னா ஒரு மணி நேரம் ஒதுக்கலாம். அதுக்கு ஒத்துக்கிட்டார்னா அவரைக் கூப்பிடலாம்" என்றார் செயலாளர் உறுதியாக.

"என்ன சார், அழகர்சாமி பேச்சைப் பத்தி நம் உறுப்பினர்கள் என்ன சொல்றாங்க?" என்றார் சீதாராமன்.

"நீங்க என்ன நினைக்கிறீங்க? அதைச் சொல்லுங்க!" என்றார் தங்கதுரை..

"ம்..எதிர்பார்த்த அளவுக்கு இல்ல!" என்றார் சீதாராமன் தர்மசங்கடத்துடன்.

"எதிர்பார்த்த அளவுக்கு இல்லையா? மோசமா இருந்ததுன்னு சொல்ல ஏன் தயங்கறீங்க?"

"அப்படிச் சொல்ல முடியாது. அவரு நல்ல பேச்சாளர்தான். ஆனா பேச்சு கொஞ்சம் நீளமா இருந்ததுன்னு நினைக்கறேன். இன்னும் கொஞ்சம் சுருக்கமாப் பேசி இருந்தா நல்லா இருந்திருக்கும்!"

"அதான் சார் விஷயம். அவர் ரெண்டு மணி நேரம் கேட்டாரு. நாம ஒரு மணி நேரம் கொடுத்தோம். ஆனா அவர் பேசின விஷயத்தை இருபது நிமிஷத்திலேயே சொல்லி முடிச்சிருக்கலாம். நீட்டி மடக்கிப் பேசறது, சொன்ன விஷயங்களையே திரும்பத் திரும்ப வேற வார்த்தைகள்ள சொல்றது, பொருத்தமில்லாத நகைச்சுவை, குட்டிக்கதைகள்னு மசாலா சேர்க்கறது இதெல்லாம் இல்லாம பேசி இருக்கலாமே!" என்றார் தங்கதுரை.

"ஆனா அவர் நல்ல பேச்சாளர்னு பெயர் வாங்கினவராச்சே சார்!"

"இருக்கலாம். என்னோட பார்வையில அவருக்கு ஒரு விஷயத்தை சுருக்கமா நேரடியா சொல்லத் தெரியல. அதனலதான் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் நீட்டி முழக்கறாரு. அதனாலதான் அவருக்கு அதிக நேரம் தேவைப்படுது. நல்ல வேளை நாம அவருக்கு ஒரு மணி நேரம்தான் கொடுத்தோம். ரெண்டு மணி நேரம் கொடுத்திருந்தா மனுஷன் நம்மையெல்லாம் போரடிச்சே கொன்னிருப்பாரு!"

குறள் 649:
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.

பொருள்:
குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவாகப் பேச இயலாதவர்கள் பல சொற்களைப் பயன்படுத்திப் பேச விரும்புவர்.

650. பேராசிரியருக்குக் கூடுதல் ஓய்வு!

"சார்! இன்னொரு நூல் எழுதி இருக்கேன்!" என்றபடி தன் கையிலிருந்த புத்தகத்தைக் கல்லூரி முதல்வர் கணேசனிடம் காட்டினார் தமிழ்ப் பேராசிரியர் முத்துக்கண்ணன்.

"பத்தகத்தை வாங்கிப் பார்த்த கணேசன் 'புறநானூறு - சில புதிய சிந்தனைகள்'  என்ற தலைப்பைப் பார்த்து விட்டு, "இது மட்டும் எத்தனை புத்தகங்கள் எழுதி இருக்கீங்க?" என்றார்.

""முப்பத்தேழு நூல்கள்!" என்றார் முத்துக்கண்ணன் பெருமையுடன்.

"வாழ்த்துக்கள்!" என்றபடியே புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்த கணேசன், தொண்டையைச் செருமிக் கொண்டே, "பி ஏ முதல் ஆண்டுக்கு வகுப்பு எடுக்கறீங்க இல்ல, அது இனிமே வேண்டாம்!" என்றார்.

"ஏன் சார்?" என்றார் முத்துக்கண்ணன் ஏமாற்றத்துடன்.

"புதுசா வேலைக்கு எடுத்திருக்கமே அருணாசலம், அவருக்கு இன்னும் கொஞ்சம் பயிற்சி கொடுக்கலாம்னு நினைக்கிறேன். அதனால நீங்க எடுக்கற பி ஏ வகுப்பை அவருக்குக் கொடுத்திருக்கேன்."

"ஏற்கெனவே அவருக்கு நிறைய வகுப்புகள் இருக்கே!"

"பரவாயில்லை. அவரு அதிக வகுப்புகள் எடுக்கத் தயாராத்தான் இருக்காரு. நான் என்ன நினைச்சேன்னா, நீங்க சீனியர்ங்கறதால நீங்க எம் ஏ, பி ஏ ரெண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு வகுப்புகள் மட்டும் எடுங்க. பி ஏ தமிழ் முதல் ஆண்டு,  மற்ற பி ஏ, பி எஸ் சி, பி காம் வகுப்புகள் எல்லாம் அருணாசலமே பாத்துக்கட்டும்!" என்றார் கணேசன்.

முத்துக்கண்ணன் ஏதோ சொல்ல வாயெடுத்து, பிறகு ஏதும் சொல்லாமல், "சரி சார்! உங்க விருப்பம். எனக்குக் கிடைக்கிற கூடுதல் நேரத்தை படிக்கறதுக்குப் பயன்படுத்திக்கறேன்" என்று கூறி விடைபெற்றார்.

'படியுங்க, படியுங்க! எத்தனை புத்தகம் படிச்சு என்ன? மாணவர்களுக்குப் புரியற மாதிரி உங்களால விளக்க முடியாது! பி ஏ மாணவர்கள் வந்து புகார் செய்யறாங்க. எம் ஏ மாணவர்கள்னா லட்சியம் பண்ண மாட்டாங்க. நீங்க நடத்தறது புரியலேன்னா வகுப்பை கட் பண்ணிட்டு, தாங்களே படிச்சுப்பாங்க. நீங்க ஓய்வு பெறுகிற வரையில உங்களை வச்சுத்தானே சமாளிக்கணும்!" என்று நினைத்துக் கொண்டார் கணேசன். 

குறள் 650:
இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.

பொருள்:
கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.

அறத்துப்பால்                                                            காமத்துப்பால்


No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...