அதிகாரம் 59 -- ஒற்றாடல்

திருக்குறள்
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 59
ஒற்றாடல்

581. அமைச்சருக்கு நேர்ந்த அவமானம்!

"அரசே! தாங்கள் விரும்பியபடி தங்கள் புதல்வருக்கு முடிசூட்டி விட்டீர்கள். தங்களுக்குச் சேவை செய்தது போல் தங்கள் புதல்வருக்கும் தொடர்ந்து விஸ்வாசமாகச் சேவை செய்வேன்!" என்றார் அமைச்சர் விஸ்வருபர்.

"விஸ்வரூபரே! உங்கள் பேச்சில் ஒரு முரண்பாடு தெரிகிறதே!" என்றார் குணவர்மர்.

"என்ன முரண்பாடு அரசே?" என்றார் அமைச்சர் குழப்பத்துடன்.

"என் புதல்வருக்கு முடிசூட்டிய பிறகு அவன்தானே அரசன்? அப்புறம் என்னை எப்படி அரசரே என்று அழைக்கிறீர்கள்?" என்றார் குணவர்மர் சிரித்தபடி.

"பின் தங்களை எப்படி அழைப்பது? சரி, இனி தங்களைப் பேரரசே என்று அழைக்கிறேன்!" என்றார் அமைச்சர் சிரித்தபடி.

"அப்படியானால் நீங்கள் இனி பேரமைச்சர்!"

"என்ன சொல்கிறீர்கள் அரசே.. ம்.. பேரரசே!" என்றார் விஸ்வரூபர் தடுமாற்றத்துடன்.

"அரசராக இருந்து ஓய்வு பெற்ற நான் அரசன் என்றால், அமைச்சராக இருந்து ஓய்வு பெறப் போகும் நீங்கள் பேரமைச்சர்தானே?"

விஸ்வரூபர் என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து நிற்க, அரசவையே அதிர்ச்சியுடன் மௌனம் காத்தது.

புதிதாக அரசனாகி இருந்த குணவர்மரின் புதல்வன் இளமாறன் மட்டும் தந்தையைப் பார்த்து, "அப்பா!" என்று ஏதோ சொல்ல முயல, குணவர்மர் அவனைக் கையமர்த்தி விட்டு, விஸ்வரூபனைப் பார்த்து, "விஸ்வரூபரே! தங்களுக்கும் ஓய்வு தேவைதானே! இனி நீங்கள் வீட்டில் இருந்து ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். 'மனித அறம்' என்ற நீதிநூலை எழுதிய புலவர் நல்கீர்த்தியை அமைச்சராக நியமிப்பது என்று புதிய மன்னர் முடிவெடுத்திருக்கிறார்!" என்றார் குணவர்மர்.

அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்த விஸ்வரூபர் தலையைக் குனிந்தபடி அவையை விட்டு வெளியேறினார். குணவர்மர் அவரைத் தடுக்க முயலவில்லை.

"அப்பா! விஸ்வரூபரை ஏன் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினீர்கள்?" என்றான் இளமாறன் குணவர்மரிடம், இருவரும் தனிமையில் இருந்தபோது.

"நான் அரியணையிலிருந்து இறங்கி உனக்கு முடிசூட்டிய அதே காரணத்துக்காகத்தான். என்னைப் போல் அவருக்கும் வயதாகி விட்டது!" என்றார் குணவர்மர்.

"இதை அவரிடம் நீங்கள் தனியே சொல்லி இருக்கலாமே! ஏன் அவையில் சொன்னீர்கள்? அவர் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிறாரே!"

"அவர் அப்படி உணர்ந்தால் அதற்கு நாம் என்ன செய்வது? நான் அவரை அவமானப்படுத்த வேண்டுமென்று நினைக்கவில்லை!"

"அது சரி. புலவர் நல்கீர்த்தியை நான் அமைச்சராக்கி இருப்பதாக அறிவித்தீர்களே, அது ஏன்? "

"ஒரு அரசன் நீதிநூல்களை அறிந்திருக்க வேண்டியது அவசியம். நீ வயதில் சிறியவன். நீதிநூல்களை நன்கறிந்த ஒரு அறிஞர் அமைச்சராக இருந்தால் அது உனக்கு நன்மை பயப்பதாக இருக்கும். அதனால்தான் உன் சார்பாக நானே அவரை நியமித்தேன்!" என்றார் குணவர்மர்.

இளமாறன் தந்தையின் பதிலால் திருப்தி அடையாமல் அங்கிருந்து அகன்றான்.

"அரசே!  உங்கள் தந்தை மறைந்து சில நாட்களே ஆகியிருக்கும் நிலையில் உங்களிடம்  ஒரு கவலையளிக்கும் செய்தியைச் சொல்ல வேண்டி இருக்கிறது" என்றார் ஒற்றைர்படைத் தலைவர் மணிகண்டர்.

"சொல்லுங்கள்! தந்தை இறந்த சமயம் என்றாலும் நாட்டை நிர்வகிக்க வேண்டிய கடமை எனக்கு எப்போதும் இருக்கிறதே!" என்றான் மன்னன் இளமாறன்.

"கண்வ நாட்டு அரசர் நம் மீது படையெடுக்கச் சித்தமாகிக் கொண்டிருக்கிறார்!" என்றார்

"உங்களுக்கு வந்த இந்தத் தகவல்கள் நம்பகமானவைதானா?" என்றான் இளமாறன்.

"நிச்சயமாக மன்னரே! கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக நம் ஒற்றர்கள் கொடுக்கும் தகல்கள் எல்லாமே மிகச் சரியாகத்தான் இருந்து வருகின்றன."

"உங்கள் செயல்பாட்டைப் பாராட்டுகிறேன்! மந்திராலோசனைக் குழுவைக் கூட்டி என்ன செய்வது என்று முடிவெடுப்போம்." 

"அரசே! உங்களிடம் ஒன்று கூற வேண்டும்!" என்றார் மணிகண்டர் சற்றுத் தயக்கத்துடன்.

"கூறுங்கள்!"

"விஸ்வரூபர் எங்கே இருக்கிறார் என்பது தங்களுக்குத் தெரியுமா?"

"எனக்கு எப்படித் தெரியும்? ஒற்றர்படைத் தலைவரான நீங்கள்தானே எனக்குத் தகவல் சொல்ல வேண்டும்!" என்றான் இளமாறன் சிரித்துக் கொண்டே. தொடர்ந்து, "அன்று அவையிலிருந்து கோபத்துடனும் அவமானத்துடனும் வெளியேறியவர் எங்கே போனார் என்றே தெரியவில்லை. என் தந்தைக்குத் தெரியாமல் அவரைத் தேட நான் எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால் அவர் இருக்கும் இடம் தெரியவில்லை. நாட்டை விட்டே போய் விட்டதாகச் சொல்கிறார்கள். அது சரி, அவரைப் பற்றி ஏன் கேட்கிறீர்கள்?"

"இந்தத் தகவல்களையெல்லாம் எனக்கு அனுப்புபவர் விஸ்வரூபர்தான்!"

"அது எப்படி?"

"மன்னிக்க வேண்டும் அரசே! நீங்கள் பதவி ஏற்ற சமயம் கண்வ நாட்டிலிருந்து நமக்கு அதிக அச்சுறுத்தல் இருந்து வந்தது. அதனால் அங்கிருந்து தகவல்கள் பெற ஒரு நல்ல ஒற்றர் வேண்டும் என்று நினைத்து உங்கள் தந்தை ஒரு ஏற்பாடு செய்தார். விஸ்வரூபரை அவமானப்படுத்துவது போல் ஒரு சூழ்நிலையை உருவாக்கி அதன் காரணமாக விஸ்வரூபர் நம் நாட்டை விட்டு வெளியேறி வெவ்வேறு நாடுகளில் இருந்து கொண்டு கண்வ நாட்டிலும், பிற நாடுகளிலும் இருக்கும் நம் ஒற்றர்கள் மூலம் கண்வ நாட்டு மன்னின் செயல்பாடுகளைக் கண்காணித்து முக்கியமான செய்திகளை அனுப்புவது என்று ஒரு திட்டம் போட்டார் உங்கள் தந்தை. அன்று அவையில் நடந்த நாடகம் விஸ்வரூபரின் பங்களிப்புடன் நடந்ததுதான்!

"விஸ்வரூபர் அமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்து வெளியேறி விட்டார் என்று தாங்கள் உட்பட அனைவரும் நினைக்க வேண்டும் என்பதுதான் உங்கள் தந்தையின் திட்டம். அப்போதுதானே விஸ்வரூபர் தன்னை நம் நாட்டின் எதிரி போல் காட்டிக் கொண்டு எளிதாக உளவு வேலையில் ஈடுபட முடியும்!  ஒற்றர்படைத் தலைவன் என்பதால் இந்த ஏற்பாடு பற்றி என்னிடம் மட்டும் கூறிய உங்கள் தந்தை அவர் உயிருடன் இருக்கும் வரை இந்த உண்மையை உங்களிடம் சொல்லக் கூடாது  என்று எனக்கு உத்தரவிட்டிருந்தார். இப்போது உங்கள் தந்தை இறந்து விட்டதால் இந்த உண்மையை உங்களிடம் சொல்கிறேன்!" என்றார் மணிகண்டர்.

"நாட்டில் நல்லாட்சி நடத்த அறநூல்களின்படி எனக்கு ஆலோசனை கூற அறநூல்கள் அறிந்த ஒரு அமைச்சர், எதிரிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க ஒரு சிறந்த உளவு அமைப்பு இரண்டையும் எனக்கு ஏற்படுத்தி விட்டுப் போயிருக்கிறார் என் தந்தை!" என்றான் இளமாறன் நெகிழ்ச்சியுடன்.

குறள் 581:
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.

பொருள்: 
ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசனின் கண்களாகக் கருதப்பட வேண்டும்.

582. நண்பரே ஆனாலும்...

"என்ன மன்னரே! எப்படி இருக்கிறீர்கள்?" என்றார் நற்கீரன்.

"இத்தனை நேரம் நன்றாகத்தான் இருந்தேன்!" என்றார் அரசர் மகுடபதி.

"ஓ! மன்னிக்க வேண்டும். நான் தவறான நேரத்தில் வந்து விட்டேன் போலிருக்கிறது!" என்றார் நற்கீரன், சற்றே புண்பட்டவராக.

"அறிவற்றவனே! என் இளவயது நண்பன் என்னை மன்னரே என்று அழைத்தால் என் மனம் வருந்தாதா?" என்றார் மகுடபதி சிரித்துக் கொண்டே. நற்கீரனின் தோளில் தன் கையை அழுத்தமாகப் பதித்துத் தன் நட்பையும் வெளிப்படுத்தினார்.

"நல்லவேளை! பயந்து விட்டேன். என்னதான் நாம் இளவயது நண்பர்கள் என்றாலும், நீ அரசன், நான் ஒரு சாதாரணக் குடிமகன்தானே!"

"நட்புதான் முதலில். பணம், பதவி, சமூக நிலை எல்லாம் அதற்குக் கீழ்தான் என்று குருகுலத்தில் நம் ஆசிரியர் சொல்லிக் கொடுத்ததை நீ மறந்து விட்டாயா?"

"குருகுலத்தில் நான் எங்கே ஒழுங்காகக் கல்வி கற்றேன்? இந்த நாட்டு இளவரசனே எனக்கு நண்பனாகக் கிடைத்த பெருமிதத்தில் எனக்குப் படிப்பு முக்கியமாகத் தெரியவில்லை! அது இருக்கட்டும். நான் வந்த விஷயத்தைச் சொல்லி விடுகிறேன். அரசர் என் ஆருயிர் நண்பர் என்றாலும், அரசரின் நேரத்தை நான் வீணாக்கக் கூடாது அல்லவா? என் மகளுக்குத் திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. திருமண ஓலை கொடுத்து உன்னையும் அரசியாரையும் திருமணத்துக்கு அழைக்கத்தான் வந்தேன்!" என்ற நற்கீரன் சற்றுத் தள்ளியிருந்த தன் மனைவியைப் பார்க்க, அவள் தன் கையிலிருந்த திருமண ஓலை, பூக்கள், பழங்கள், சந்தனம், குங்குமம் ஆகியவை இருந்த தட்டுடன் நற்கீரன் அருகில் வந்து நிற்க, இருவரும் சேர்ந்து தட்டை மன்னரிடமும் அரசியிடமும் கொடுத்தனர்.

"மிக்க மகிழ்ச்சி நற்கீரா! நீ உன் பெண்ணுக்கு ஒரு சிறந்த கணவனைத்தான் தேர்ந்தெடுத்திருப்பாய் என்று நினைக்கிறேன்!" என்றார் அரசர் மகுடபதி.

"பெற்றோர் பார்த்துத் தங்கள் பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் நம் காலத்தோடு போய் விட்டது மகுடபதி. இப்போதெல்லாம் காதல் திருமணம்தான்!" என்றார் நற்கீரன் பெருமூச்சுடன்.

"உன் பெண் தனக்கு ஏற்ற சிறந்த கணவனைத்தான் தேர்ந்தெடுத்திருப்பாள். அப்படி இல்லாவிட்டால் நீங்கள் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்திருக்க மாட்டீர்களே!" என்றபடியே நற்கீரனின் மனைவியைப் பார்த்துச் சிரித்தார் மகுடபதி.

ற்கீரனும் அவர் மனைவியும் விடைபெற்றுச் சென்றதும், "அவர் மகள் ஒரு வணிகனைக் காதலிப்பதாகச் சில நாட்கள் முன்பே நீங்கள் என்னிடம் கூறினீர்களே! அப்புறம் ஏன் இது தெரியாதது போல் உங்கள் நண்பரிடம் பேசினீர்கள்?" என்றாள் அரசி திலகவதி.

"ஒற்றர் மூலம் கிடைத்த தகவல் இது. உன் மகளை வேவு பார்த்தேன் என்று என் நண்பனிடம் சொல்ல முடியுமா என்ன?" என்றார் அரசர் சிரித்தபடி.

"என்ன? உங்கள் நண்பர் குடும்பத்தையே ஒற்றர்கள் வேவு பார்த்தார்களா? ஏன்?" என்றாள் திலகவதி வியப்புடனும் அதிர்ச்சியுடனும்.

"திலகவதி! நம் எதிரிகள் நமக்கு நெருக்கமானவர்களிடத்தில் கூட ஊடுருவார்கள். அவ்வாறு ஊடுருவிய பின், அந்தத் தொடர்புகளைப் பயன்படுத்தி நம் ரகசியங்களை அறியவோ, நம் நாட்டுக்குத் தீங்கு விளைவிக்கவோ கூட முயல்வார்கள். நற்கீரனின் பெண்ணைக் காதலித்தவன் கூட அவள் மூலம் அவள் தந்தையை நெருங்கி அவர் என் நண்பர் என்பதால், அவர் மூலம் அரண்மனை ரகசியங்களைத் தெரிந்து கொள்ள முயல்பவனாக இருக்கலாம். அவன் அப்படி இல்லைதான். ஆனால் வேவு பார்த்தால்தானே எங்கே ஊடுருவல் இருக்கிறது, யார் நல்லவர், கெட்டவர் என்று தெரியும்? எனவே எல்லோரையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதுதான் ஒற்றரின் வேலை!" என்றான் அரசன்.

"கழுகுக்கு மூக்கில் வியர்ப்பது போல் நீங்கள் ஒற்றர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போதே ஒற்றர்படைத் தலைவர் உங்களைப் பார்க்க வந்து விட்டார். நான் உள்ளே போகிறேன். என்னை வேவு பார்க்கச் சொல்லி அவரிடம் சொல்ல மாட்டீர்களே!" என்று சிரித்துக் கொண்டே கூறியபடி உள்ளே சென்றாள் திலகவதி.

"வாருங்கள், ஒற்றர்படைத் தலைவரே! சொல்லுங்கள்" என்று வரவேற்றார் அரசர்.

"தாங்கள் கூறியபடி அரசியாரின் அண்ணனைக் கண்காணித்தோம். அவரைச் சந்தித்த வெளிநாட்டவர்கள் வியாபாரிகள்தான். அந்நிய நாட்டு உளவாளிகள் அல்ல என்று உறுதிப்படுத்திக் கொண்டு விட்டோம்" என்றார் ஒற்றர்படைத் தலைவர்.

"நல்லவேளை!" என்றார் அரசர் நிம்மதிப் பெருமூச்சுடன்.

குறள் 582:
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.

பொருள்: 
எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.

583. உளவுத்துறை!

ராம்சந்தர் அவர் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்லும், கட்சிக்குள் மற்ற தலைவர்களின் ஆதிக்கமும் வலுவாகவே இருந்தது. அதனால் அமைச்சர்களைத் தெரிவு செய்வதிலும், அமைச்சர்களுக்கான துறைகளை ஒதுக்குவதிலும் நிறைய பிரச்னைகள் ஏற்பட்டன.

கட்சிக்குள்ளும், கட்சியின் மூத்த தலைவர்களிடமும் பலமுறை விவாதிக்கப்பட்ட பிறகு, ஒருவழியாக அமைச்சரவை இறுதியாக்கப்பட்டது. 

அமைச்சர் பதவியை எதிர்பார்த்த சிலருக்கு அந்தப் பதவி கிடைக்கவில்லை. அமைச்சர் பதவி வழங்கப்பட்டவர்களில் சிலருக்கு அவர்கள் கேட்ட துறை கிடைக்கவில்லை. 

 ஆயினும் பதவி வேண்டுமானால் சில சமரசங்கள் செய்து கொள்ளத்தான் வேண்டும் என்ற புரிதலினால் அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட துறைகளை ஏற்றுக் கொண்டு பதவி ஏற்றனர்.

"பொதுவா உள்துறை இலாகாவை முதல்வர்தான் வச்சுப்பாரு. நீங்க பிடிவாதமா இருந்து உள்துறையை வாங்கிட்டீங்க! பெரிய சாதனைதான் இது!" என்றான் உள்துறை அமைச்சர் கணேஷ்பாபுவின் ஆதரவாளன் சதீஷ்.

"பின்னே? முதல்வர் பதவிக்கே நான் போட்டி போட்டிருக்கணும்? ஆனா அதுக்கு இன்னும் நேரம் வரலை. இப்போதைக்கு உள்துறையைக் கையில வச்சுக்கிட்டா நமக்கு வேண்டியதை சாதிச்சுக்கிட்டு, நம்ம எதிரிகளைக் கட்டுப்பாட்டில வச்சு நம்மை வலுப்படுத்திக்கிட்டோம்னா, காலம் வரப்ப முதல்வர் நாற்காலியைப் பிடிக்கிறது சுலபமா இருக்கும்!" என்றார் கணேஷ்பாபு.

"உளவுத்துறை அன்றாடம் சேகரிச்ச தகவல்களை உளவுத்துறை ஐ ஜி தினமும் உள்துறை அமைச்சர்கிட்ட வந்து சொல்லணும்னு ஒரு நடைமுறை இருக்கு இல்ல?" என்றார் கணேஷ்பாபு, காவல்துறைத் தலைவரிடம்.

"ஆமாம்."

"நான் பதவி ஏற்று ஒரு வாரமாச்சு. பதவி ஏற்ற அன்னிக்கு வந்து மரியாதைக்கு என்னைப் பாத்துட்டுப் போனதோட சரி. அதுக்கப்பறம் உளவுத்துறை ஐ ஜி எங்கிட்ட ரிப்போர்ட் பண்ணவே இல்லையே!"

"தெரியாது சார்! அவர் எனக்குக் கீழே இருந்தாலும் அவர் துறை சுதந்திரமா செயல்படணுங்கறதுதான் ரொம்ப நாளா இருக்கற நடைமுறை. அதனால நான் அவரை எதுவும் கேட்க முடியாது. நீங்களே அவரைக் கூப்பிட்டுக் கேக்கறதுதான் சரியா இருக்கும்!" என்றார் காவல்துறைத் தலைவர்.

தான் உளவுத்துறை ஐ ஜியை இரண்டு முறை அழைத்தும் அவர் தன்னை வந்து பார்க்கவில்லை என்பதைக் காவல்துறைத் தலைவரிடம் சொல்லித் தன் அவமான உணர்வைப் பகிர்ந்து கொள்ள விரும்பாத கணேஷ்பாபு, "சரி. நீங்க போங்க. நான் பாத்துக்கறேன்" என்றார்.

"வாங்க!" என்று கணேஷ்பாபுவை வரவேற்றார் முதல்வர் ராம்சந்தர்.

"உளவுத்துறை ஐ ஜி எங்கிட்ட தினசரி அறிக்கை கொடுக்கறதே இல்லை. நான் கூப்பிட்டு அனுப்பினாலும் வரலே! நீங்க உடனே அவரை மாத்திட்டு வேற ஆளைப் போடுங்க!" என்றார் கணேஷ்பாபு கோபத்துடன்.

"வேற ஒத்தரைப் போட்டாலும் அவரும் அப்படித்தான் நடந்துப்பாரு!" என்றார் முதல்வர் சிரித்தபடி.

"என்ன சொல்றீங்க நீங்க?" 

"உளவுத்துறை ஐ ஜி எங்கிட்டதான் ரிப்போர்ட் பண்ணணும், வேற எந்த அமைச்சரோ, காவல்துறைத் தலைவரோ கூப்பிட்டாலும் போகக் கூடாதுன்னு நான்தான் அவருக்கு உத்தரவு போட்டிருக்கேன்!"

"அது எப்படி? அவர் உள்துறை அமைச்சர்கிட்டத்தானே ரிப்போர்ட் பண்ணணும்?" 

"பொதுவா முதல்வர்தான் உள்துறை அமைச்சரா இருப்பாரு. அதனால அந்த வழக்கம் இருந்தது. இப்ப அவர் முதல்வர்கிட்ட ரிப்போர்ட் பண்ணணும்னு நான் நடைமுறையைக் கொஞ்சம் மாத்தி இருக்கேன். அவ்வளவுதான்!" என்றார் ராம்சந்தர்.

"அதுதான் ஏன்னு கேக்கறேன்!"

"கணேஷ்பாபு! முதல்வர் தன் விருப்பப்படிதான் தன் அமைச்சரவையை அமைக்கணும். ஆனா நம் கட்சியில இருக்கற கோஷ்டிப் பிரச்னையால என்னால அப்படி செய்ய முடியல. நிறைய சமரசம் செஞ்சுக்கிட்டிருக்கேன். ஆனா, நாட்டில என்ன நடக்குதுன்னு உளவுத்துறை மூலமா நான் தெரிஞ்சுக்கலேன்னா என்னால ஆட்சியே நடத்த முடியாது."

"அதுக்கு என்ன? உளவுத்துறை எங்கிட்ட சொல்ற விஷயங்களை நான் உங்ககிட்ட பகிர்ந்துப்பேனே!" என்றார் கணேஷ்பாபு, சமாதானமாகப் பேசும் தொனியில்.

"நீங்க மொத்த ரிபோர்ட்டையும் கேட்டுக்கிட்டு, அதில எங்கிட்ட பகிர்ந்துக்க வேண்டிய விஷயம் என்னன்னு முடிவு பண்ணி அதை மட்டும் எங்கிட்ட பகிர்ந்துக்கறதை விட, ஒரு முதல்வரா மொத்த ரிப்போர்ட்டையும் நான் வாங்கிக்கிட்டு, அதில உங்களுக்குத் தெரிய வேண்டிய விஷயங்களை மட்டும் உங்ககிட்ட பகிர்ந்துக்கறதுதான் ஆட்சிக்கு நல்லதுன்னு நான் நினைக்கிறேன்!" என்ற ராம்சந்தர், தொடர்ந்து, "எதிர்காலத்தில நீங்க முதல்வராகி - உங்களுக்குத்தான் அந்த ஆசை இருக்கே! - உள்துறை அமைச்சரா வேற ஒத்தர் இருந்தா, அப்ப இந்த யோசனை உங்களுக்குப் பயன்படும்னு நினைக்கிறேன்!" என்றார் சிரித்துக கொண்டே. 

குறள் 583:
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல்.

பொருள்: 
நாட்டு நிலவரத்தை ஒற்றர்களைக் கொண்டு அறிந்து அதன் விளைவுகளை ஆராய்ந்து நடந்திடாத அரசின் கொற்றம் தழைத்திட வழியே இல்லை.

584. கைதுக்குக் காரணம்?

"என்னங்க, இவ்வளவு லேட்டா வரீங்க? ஃபோன் பண்ணினாலும் எடுக்கல!" என்றாள் சுமதி, சுந்தரராமன் விட்டுக்குள் நுழைந்ததுமே!

"என்ன செய்யறது சுமதி? நான் பாக்கறது சேல்ஸ் எக்சிக்யூடிவ் வேலை  பிராஸ்பெக்ட் யார்கிட்டயாவது பேசிக்கிட்டிருக்கச்சே என் ஃபோன் அடிச்சா, 'ஃபோன் அடிக்குது பாருங்க, எடுத்துப் பேசுங்க!'ன்னு சொல்லிட்டு இதுதான் சாக்குன்னு அவர் நழுவிடுவாரு. அதனாலதான் என் ஃபோனை சைலன்ட்லேயே போட்டு வச்சிருக்கேன். வீட்டுக்குக் கிளம்பறப்பதான் ஃபோனை எடுத்துப் பாத்தேன். நாலஞ்சு தடவை ஃபோன் பண்ணி இருக்க! என்ன விஷயம்?" என்றான் சுந்தரராமன் டையைக் கழற்றியபடியே. 

"ராணி புருஷனை போலீஸ்ல கைது செஞ்சுட்டாங்களாம். அவ ஃபோன் பண்ணி அழறா. எனக்கு வேற யாரும் இல்ல, உன் புருஷன்கிட்ட சொல்லி ஏதாவது செய்யச் சொல்லுன்னு அழுதா. அதுக்குத்தான் உங்களுக்கு ஃபோன் பண்ணினேன். நீங்க என்னன்னா ஃபோனை எடுக்காம ராத்திரி ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வரீங்க!" என்றாள் சுமதி வருத்தத்துடனும், கோபத்துடனும்.

"என்னது உன் அக்கா புருஷனைக் கைது செஞ்சுட்டாங்களா? தங்கமான மனுஷனாச்சே அவரு! என்ன செஞ்சாராம் அவரு?" 

"அவரு என்ன செய்யப் போறாரு? அவருதான் தங்கமான மனுஷன்னு நீங்களே சொல்றீங்களே! ஏதோ கலவரம் விஷயமான்னு சொன்னாங்களாம். அதுக்கு மேல விவரம் சொல்ல மாட்டேன்னுட்டாங்களாம். அவரு பாட்டுக்கு எப்பவும் பேப்பர் படிச்சுக்கிட்டு வீட்டில உக்காந்திருக்கறவரு. அவருக்கும் கலவரத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?"

"சில சமயம் குழப்பத்தில தப்பா யாரையாவது கைது பண்ணிடுவாங்க. காலையில  ஒரு வக்கீலை அழைச்சுக்கிட்டுப் போயி அவரை ஜாமீன்ல எடுக்க முடியுமான்னு பாக்கறேன்" என்றான் சுந்தரராமன்.

றுநாள் காலை 10 மணிக்கு சுமதியைத் தொலைபேசியில் அழைத்த சுந்தரராமன், "உன் அக்கா புருஷனை ஜாமீன்ல எடுக்க முடியாத சட்டத்தில கைது செஞ்சிருக்காங்க சுமதி! அவரு சில கலவரக்காரங்களோட தொடர்பு வச்சுக்கிட்டிருக்காராம். பதினைஞ்ச நாள் காவல்ல வச்சிருக்காங்க. அதுக்கப்பறம் அவர் காவலை நீட்டிக்க அவரை நீதிமன்றத்துக்குக் கொண்டு வருவாங்க. அப்ப ஜாமீனுக்கு முயற்சி செய்யலாம்னு வக்கீல் சொல்றாரு. சாரி! இப்போதைக்கு ஒண்ணும் செய்ய முடியாது" என்று தெரிவித்தான் சுந்தரராமன்.

"கங்கிராட்ஸ், சுந்தரராமன்! உங்க சகலைன்னும் பாக்காம நீங்க கொடுத்த தகவலால கோவிந்தராஜனைக் கைது செய்ய முடிஞ்சுது" என்றார் சுந்தரராமனின் மேலதிகாரி குமாரசாமி.

"எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு சார்! ஏற்கெனவே இன்டலிஜன்ஸ் துறையில வேலை செய்யறேன்னு சொல்ல முடியம ஒரு போலியான நிறுவனத்தில சேல்ஸ் எக்சிக்யூடிவா இருக்கேன்னு என் மனைவி உட்பட எல்லார்கிட்டேயும் பொய் சொல்லிக்கிட்டிருக்கேன். என் சகலையையே வேவு பார்த்து அவருக்குக் கலவரக்காரங்களோட தொடர்பு இருக்குன்னு கண்டுபிடிச்சு சொல்லி அவரைக் கைது செய்ய வச்சு, ஒண்ணுமே தெரியாத மாதிரி அவருக்கு ஜாமீன் எடுக்க முயற்சி பண்ற மாதிரி என் மனைவியை ஏமாத்த வேண்டி இருக்கு. இப்படித்தான் ரெண்டு வருஷம் முன்னால போதைப்பொருள் கடத்தல்ல ஈடுபட்டிருந்த என் நண்பன் ஒத்தனைப் பத்தி துப்புக் கொடுத்து அவனைக் கைது செய்ய வச்சேன். சில சமயம் நினைச்சுப் பாத்தா ரொம்ப வருத்தமா இருக்கு சார்!" என்றான் சுந்தரராமன்.

"என்ன செய்யறது சுந்தரராமன்! நாம பாக்கற வேலை அப்படி. நம்ம டிபார்ட்மென்ட்ல வேலை செஞ்ச ரமணியே கள்ளக் கடத்தல்காரங்களுக்கு உடந்தையா இருந்ததை நான் வேவு பார்த்து அவரைப் பிடிச்சுக் கொடுக்கலியா? கீதையில கிருஷ்ணன் சொன்னாரே, போர்க்களத்துக்கு வந்தப்பறம் சொந்தக்காரங்க, எதிரி, நண்பன்னெல்லாம் பாக்கக் கூடாதுன்னு, அது நாம பாக்கற வேவுத் தொழிலுக்கு நல்லாவே பொருந்தும்!" என்றார் குமாரசாமி.

குறள் 584:
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று.

பொருள்: 
தம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்று கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும்.

585. 'பயண' அனுபவம்

மணிமாறன் பொன்னி நாட்டுக்குள் அடியெடுத்து வைத்து ஒரு வாரம் ஆகி விட்டது. ஒரு சுற்றுப் பயணியாக அவன் பல இடங்களுக்கும் சென்று வந்தான்.

அன்று அவன் அந்த மலைக்கோயிலில் சிற்பங்களை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தபோது, அவன் முதுகில் யாரோ தட்டினார்கள்.

மணிமாறன் திரும்பிப் பார்த்தான். அந்த நாட்டின் காவல் வீரர்கள் இருவர் நின்று கொண்டிருந்தனர்.

"தம்பி! எங்கள் தலைவர் உங்களைப் பார்க்க வேண்டுமாம். கொஞ்சம் எங்களுடன் வருகிறாயா?" என்றான் ஒருவன்.

"நான் அழகாபுரியிலிருந்து வந்திருக்கும் ஒரு சுற்றுப் பயணி" என்றான் மணிமாறன் அமைதியாக.

"நீ யார் என்று நான் கேட்கவில்லையே! பேசாமல் எங்களுடன் வா!" என்றான் காவலன்.

காவல் தலைவர் முன்னிலையில் மணிமாறன் கொண்டு நிறுத்தப்பட்டதும், காவல் தலைவர் மணிமாறனை நீண்ட நேரம் விசாரித்தார். 

மணிமாறன் அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக பதில் சொன்னான்.

"மிகவும் பொறுமையாக, திறமையாக பதில் சொன்னாய் தம்பி! இப்போது நீ போகலாம்!" என்ற காவல் தலைவர், "சிறைச்சாலைக்கு!" என்றார் தொடர்ந்து, சிரித்துக் கொண்டே.

"ஐயா! நான் சொன்னதெல்லாம் உண்மைதான். அழகாபுரி பொன்னி நாட்டின் நட்பு நாடு. என் மீது சந்தேகப்படுகிறீர்களே!" என்றான் மணிமாறன்.

"நீ எந்த நாட்டைச் சேர்ந்தவனாக இருந்தால் என்ன? நீ ஒற்று வேலை செய்ய வந்திருப்பதாக நாங்கள் சந்தேகப்படுகிறோம். இப்போது உண்மையைச் சொன்னால் சித்திரவதையிலிருந்து தப்பலாம்!" என்றார் காவல் தலைவர்.

"ஐயா! உண்மை என்பது ஒன்றுதான். அது மாறாது. அதை நான் முன்பே உங்களிடம் சொல்லி விட்டேன். நான் அழகாபுரி நாட்டைச் சேர்ந்தவன். நான் கலை ஆர்வம் உள்ளவன். பல நாடுகளிலும் உள்ள கலைப் பொக்கிஷங்களைக் காண வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவன். எங்கள் அண்டை நாடான உங்கள் நாட்டில் கலை அம்சம் உள்ள பல இடங்கள் இருப்பதாக எங்கள் நாட்டில் பலரும் கூறுவதால் அவற்றைக் காண வேண்டும் என்ற ஆவலில் இங்கே வந்திருக்கிறேன். ஒரு விருந்தாளியையே சந்தேகப்படுகிறீர்களே!" என்றான் மணிமாறன் பொறுமையாக.

"நீ எங்கள் நாட்டுக்கு விருந்தாளியாகத்தான் வந்திருக்கிறாய் . அதனால்தான் உன்னை அரசாங்க விருந்தாளியாக்கி பலமான விருந்து படைக்கப் போகிறோம்" என்று கூறிப் பெரிதாகச் சிரித்தார் காவல் தலைவர்.

காவலர்கள் மணிமாறனைச் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர்.

டுத்த சில நாட்களுக்கு காவல் தலைவர் கூறியபடி மணிமாறனுக்கு பலமான 'விருந்து' பரிமாறப்பட்டது. நீண்ட நேரம் உணவு, தண்ணீர் கொடுக்காமல் தவிக்க வைத்தல், கசையடி, பிரம்படி என்று அவனைக் காயப்படுத்தித் துடிக்க வைத்தல் என்று பல்வேறு 'விருந்துகள்' பரிமாறப்பட்டன.

ஐந்தாறு நாட்களுக்குப் பிறகு மணிமாறன் விடுவிக்கப்படான். காவல் தலைவர் அவனிடம் வருத்தம் தெரிவித்தார். 

அடுத்த இரண்டு நாட்களுக்கு மணிமாறன் அரண்மனை விடுதியில் தங்க வைக்கப்பட்டு உண்மையாகவே அரசாங்க விருந்தாளியாக நடத்தப்பட்டான். 

அரசாங்க மருத்துவர் அவன் காயங்களுக்கு சிகிச்சை அளித்தார். அறுசுவை உணவு, பஞ்சணையில் ஓய்வு என்று நரகத்திலிருந்து சொர்க்கத்துக்கு மாற்றப்பட்டது போல் இருந்தது மணிமாறனுக்கு.

அதற்குப் பிறகு அவனை ஒரு குதிரையில் ஏற்றி அழகாபுரி நாட்டின் எல்லையில் கொண்டு விட்டார்கள்.

"அற்புதம் மணிமாறா! நீ சோதனையில் தேறி விட்டாய். ஒற்றனாகத் தகுதி பெற்று விட்டாய்!" என்றார் ஒற்றர் படைத் தலைவர்.

"தகுதி பெற்று விட்டேனா? ஏற்கெனவே என்னை ஒற்றனாகத்தானே பொன்னி நாட்டுக்கு அனுப்பினீர்கள்?" என்றான் மணிமாறன்.

"இல்லை மணிமாறா. ஒற்றர்களாகப் பணியாற்ற விரும்புபவர்களுக்கு நாங்கள் வைக்கும் சோதனை இது. பொன்னி நாட்டுடன் எங்களுக்கு ஒரு ஏற்பாடு இருக்கிறது. பயிற்சிக்காக ஒற்றர்களை நாம் அங்கு அனுப்புவோம், அவர்கள் ஒற்றர்களை இங்கே அனுப்புவார்கள். 

"பயிற்சி என்றால் நடைமுறைப் பயிற்சி. உன்னைப் பொன்னி நாட்டுக்கு அனுப்பும்போதே உன்னைப் பற்றிய ஓலையைப் பொன்னி நாட்டின் ஒற்றர்படைத் தலைவருக்கு அனுப்பி விட்டேன். நீ அங்கே போனதிலிருந்து உன்னை அவர்கள் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள். நீ திரும்பி வருவதற்குள் உன்னைப் பற்றிய அறிக்கை ஓலையும் எனக்கு வந்து விட்டது. நீ தேர்ச்சி பெற்று விட்டாய்" என்றார் ஒற்றர்படைத் தலைவர் சிரித்தபடி.

"என்னைப் பற்றிய அறிக்கை ஒலையில் என்ன இருந்தது என்று நான் தெரிந்து கொள்ளலாமா?" என்றான் மணிமாறன் வியப்புடன்.

"நிச்சயமாக. நீ யாரும் சந்தேகிக்கப்பட முடியாத அளவுக்கு நடந்து கொண்டிருக்கிறாய். ஒரு வாரம் உன்னை கவனித்து முதல் கட்டத்தில் நீ தேறி விட்டாய் என்று தெரிந்ததும் இரண்டாவது கட்டமாக உன்னைக் கைது செய்து விசாரித்திருக்கிறார்கள். நீ பதட்டப்படமல் பொறுமை இழக்காமல் பதில் சொல்லி இருக்கிறாய். 

" மூன்றாவது கட்டமாக உன்னைச் சிறையிலடைத்துச் சித்திரவதை செய்திருக்கிறார்கள். உனக்கு இத்தகைய துன்பங்கள் ஏற்பட்டதற்காக நீ என் மீது கோபப்படலாம். ஆனால், ஒரு ஒற்றனாக எதிரி நாட்டில் நீ சிக்கிக் கொண்டால் இதுதானே நடக்கும்? அப்போதும் நீ துன்பங்களைத் தாங்கிக் கொண்டு உன்னைப் பற்றிய உண்மையைக் கூறாமல் இருந்திருக்கிறாய். பாராட்டுக்கள்!"

"தலைவரே! நீங்கள் என்னைப் பொன்னி நாட்டுக்கு அனுப்பியபோது, அது நம் நட்பு நாடாயிற்றே, அங்கே நாம் ஏன் வேவு பார்க்க வேண்டும் என்று நான் கேட்டது தங்களுக்கு நினைவிருக்கும்!" என்றான் மணிமாறன்.

"ஆமாம். நட்பு நாடாக இருந்தாலும், அவர்கள் மீதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும் என்று பதில் சொன்னேன்!"

"தாங்கள் கூறியது உண்மைதான் தலைவரே! பொன்னி நாடு நம் எதிரியான சீதள நாட்டுடன் நெருக்கமாக இருக்க ஆரம்பித்து விட்டது. பொன்னி நாட்டில் நான் இருந்த குறுகிய காலத்தில் நான் கண்டறிந்த உண்மை இது. இதற்கான அடிப்படைகளையும், சான்றுகளையும் இந்த ஓலைச் சுவடிகளில் எழுதி இருக்கிறேன். எனவே பொன்னி நாட்டை இனியும் நாம் நட்பு நாடு என்று கருதாமல் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து" என்றபடியே தன் கையிலிருந்த ஓலைகளை ஒற்றர்படைத் தலைவரிடம் கொடுத்தான் மணிமாறன்.

ஓலைகளை வேகமாகப் புரட்டிப் பார்த்த ஒற்றர்படைத் தலைவர், "நான் உன்னைப் பயிற்சிக்காக அனுப்பியபோதே இவ்வளவு அற்புதமான ஒரு பணியைச் செய்திருக்கிறாயே! மன்னரிடம் கூறி உனக்குச் சிறப்பான பரிசு வழங்கும்படி கேட்கப் போகிறேன்" என்றபடியே மணிமாறனை அணைத்துக் கொண்டார் ஒற்றர்படைத் தலைவர்.

குறள் 585:
கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.

பொருள்: 
சந்தேகப்பட முடியாத தோற்றத்துடனும் அப்படிச் சந்தேகப்பட்டுப் பார்ப்பவர்களின் பார்வைக்கு  அஞ்சாமலும், என்ன நேர்ந்தாலும் மனத்தில் உள்ளதை வெளிப்படுத்தாமலும் உள்ளவர்களே ஒற்றர்களாகப் பணியாற்ற முடியும்.
586. பத்து பொற்காசுகள்!

"நாம் ஆன்மீகப் பணிக்காக இன்னொரு நாட்டுக்கு வந்திருக்கிறோம். நம் பணியை மட்டும் செய்து கொண்டு வேறு எந்த விவகாரங்களுக்கோ, சர்ச்சைகளுக்கோ இடம் கொடுக்காமல் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்!" என்றார் சுவாமி சாந்தானந்தர்.

அவருடைய மூன்று சீடர்களும் தலையசைத்தனர். 

ஆயினும், சில நாட்களுக்குப் பிறகு சாந்தானந்தரும் அவருடைய மூன்று சீடர்களும் காவலர்களால் கைது செய்யப்பட்டு காவல் தலைவரிடம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

"நீங்கள் இங்கே வந்திருக்கும் உண்மையான காரணத்தைச் சொல்லி விடுங்கள். அப்படிச் சொன்னால் உங்களுக்குக் குறைவான தண்டனை கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்!" என்றார் காவல் தலைவர்.

"நாங்கள் இங்கே வந்திருப்பது எங்கள் ஆன்மீகக் கருத்துக்களைப் பரப்பத்தான். அது உங்களுக்குப் பிடிக்காவிட்டால் நாங்கள் எங்கள் நாட்டுக்கே திரும்பிப் போய் விடுகிறோம். எங்களை விட்டு விடுங்கள்!" என்றார் சாந்தானந்தர்.

"அது எப்படி விட முடியும்? இப்போதெல்லாம் ஒற்றர்கள் சாமியார்கள் வேடத்தில் எங்கள் நாட்டுக்குள் வந்த வேவு பார்ப்பது அதிகமாகி விட்டது. சமீபத்தில் அதுபோல் இரண்டு சாமியார்களை நாங்கள் பிடித்து விசாரித்ததில் அவர்கள் உண்மையைக் கக்கி விட்டார்கள்!" என்றார் காவல்துறைத் தலைவர் விஷமமாகச் சிரித்தபடியே. 

கக்கி விட்டார்கள் என்று அவர் கூறிய தொனியிலிருந்தே அவர்கள் எப்படிக் கக்க வைக்கப்படிருப்பார்கள் என்பது குருவுக்கும் அவருடைய மூன்று சீடர்களுக்கும் தெரிந்தது.

"ஒரு சிலர் சாமியார் வேடத்தில் வந்து ஒற்று வேலை செய்தார்கள் என்பதற்காக எல்லா சாமியார்களையும் சந்தேகிப்பது என்ன நியாயம்?" என்றார் சாந்தானந்தர்

"நாங்கள் காரணமில்லாமல் உங்களைச் சந்தேகிக்கவில்லை. சந்தேகப்படும்படியான ஒரு நபர் உங்கள் மடத்துக்கு வந்து போயிருப்பதாக எங்களுக்குத் தகவல் வந்திருக்கிறது!"

"அப்படி யாரும் வரவில்லையே!" 

"உங்கள் மடத்தின் பின்வாசல் வழியே ஒரு ஆள் திருட்டுத்தனமாக வெளியேறியதை ஒரு காவலர் பார்த்திருக்கிறார். அவர் அவனைக் கூப்பிட்டு விசாரித்தபோது அவன் தப்பித்து ஓடி விட்டான்" என்றார் காவலர் தலைவர். 

"அவன் ஒரு திருடனாக இருக்கலாம். எங்கள் மடத்தில் திருடிச் செல்வதற்கான பொருள் எதுவும் இல்லை என்று தெரிந்து பின்புறமாக ஓட முயன்றபோது உங்கள் காவலர் அவனைப் பார்த்திருக்கலாம்!" என்றார் சாந்தானந்தர்.

"இல்லை. உங்கள் மடத்திலிருந்து ஒருவர் அவனுடன் பின்வாசல் அருகே நின்று அவனிடம் பேசி இருக்கிறார். அவன் கையில் அவர் ஏதோ கொடுத்தது போல் இருந்ததாகவும் எங்கள் காவலர் சொல்கிறார். அவன் உங்களுக்கு ஏதோ தகவல் கொடுத்திருக்கலாம், அதற்காக உங்கள் மடத்தைச் சேர்ந்த ஒருவர்  அவனுக்குப் பொற்காசுகள் கொடுத்திருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்!"

"ஐயோ! இது அபாண்டம்!" என்றார் சாந்தானந்தர்.

"உங்கள் நால்வருக்கும் பத்து கசையடிகள் பரிசாகக் கொடுக்கலாம் என்று இருக்கிறேன், அதற்குப் பிறகும் நீங்கள் உண்மையைச் சொல்லாவிட்டால் நீங்கள் இன்னும் அதிகப் பரிசுகளை விரும்புகிறீர்கள் என்று புரிந்து கொண்டு மேலும் கசையடிகள் கொடுப்போம். உங்களில் ஒருவராவது உண்மையைச் சொல்லும் வரையில் பரிசுமழை பொழிந்து கொண்டே இருக்கும்!" என்று சொல்லிக் காவல் தலைவர் கண்ணசைக்க, கசையை எடுத்து வர ஒரு வீரன் உள்ளே சென்றான்.

"அதற்கு அவசியம் இல்லை ஐயா! நான்இப்போதே உண்மையைச் சொல்லி விடுகிறேன். நீங்கள் குறிப்பிட்ட சம்பவம் உண்மைதான். நான்தான் அந்த ஆளுக்கு பத்து பொற்காசுகள் கொடுத்து அவனை வழியனுப்பி வைத்தேன்!" என்றான் குணசீலன் என்ற சீடன்.

குருவும் மற்ற இரு சீடர்களும் வியப்புடனும் அதிர்ச்சியுடனும் அவனைப் பார்த்தனர்.

"பத்து பொற்காசுகாளா? அவ்வளவு குறைந்த தொகைக்கு உன்னிடம் என்ன ரகசியத்தை விற்றான் அந்த துரோகி?" என்றார் காவல் தலைவர் கோபத்துடன்.

"ஐயா! அவன் ஒரு துரோகிதான். ஆனால் அரசாங்க ரகசியத்தை விற்ற துரோகி அல்ல. என்னைப் போன்ற ஒரு ஏழையிடம் பொய் சொல்லி பத்து பொற்காசுகளைப் வஞ்சகமாகப் பெற்றுச் சென்ற ஒரு துரோகி!" என்றான் குணசீலன் ஆத்திரத்துடன்.

"விளக்கமாகச் சொல்!" என்றார் காவல் தலைவர் பொறுமையிழந்து.

"ஐயா! நான் உங்கள் நாட்டுக்கு வருவது இது இரண்டாவது முறை. சென்ற ஆண்டு முதல் முறையாக இங்கே வந்தபோது பூவிழி என்ற ஒரு பெண்ணைச் சந்தித்தேன். அவள் கட்டிட வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண். அவள் மீது கொண்ட காதலால் அவளைத் திரும்பவும் காண வேண்டும் என்ற ஆவலில்தான் சுவாமிகளிடம் சீடனாகச் சேர்ந்து இங்கே வந்தேன். கட்டிட வேலை நடந்து கொண்டிருந்த ஒரு இடத்துக்குப் போய் அவளைப் பற்றி விசாரித்தேன். அப்போது அங்கே இருந்த ஒரு ஆள் பூவிழியைத் தனக்குத் தெரியும் என்றும் அவளை என்னிடம் அழைத்து வருவதாகவும் கூறி செலவுக்காக பத்து பொற்காசுகள் கேட்டான். என்னிடம் காசு இல்லாததால் அவனை மடத்தின் பின்புறம் வரச் சொல்லி மடத்திலிருந்து 10 பொற்காசுகள் திருடி அவனிடம் கொடுத்தேன். பத்து பொற்காசுகளுக்காக அவன் என்னை ஏமாற்றி இருக்க வேண்டும் என்று அப்புறம்தான் எனக்குத் தோன்றியது!" என்று சொல்லி முடித்தான் குணசீலன்.

"அடப்பாவி! கேவலம் பெண்ணாசைக்காகத் துறவி வேடம் போட்டுத் துறவறத்தையே களங்கப்படுத்தி விட்டாயே!" என்றார் சாந்தானந்தர் கோபத்துடன்.

"நீ சொல்வது உண்மை என்று எப்படி நம்புவது? உங்கள் நான்கு பேரையுமே சிறையில் அடைக்கப் போகிறேன். உனக்கு மட்டும் தினமும் பரிசுகள் கிடைக்கும். பரிசுகள் வாங்கிய பிறகு உன்னிடமிருந்து வேறு உண்மை வருகிறதா என்று பார்க்கலாம்! அதற்குள் அங்கிருந்து தப்பி ஓடியவன் காவலர் கையில் சிக்கினால் அவனிடமிருந்தும் உண்மையை வரவழைப்போம்" என்ற காவல் தலைவர், சாந்தானந்தரைப் பார்த்து, "இவன் சொல்வது உண்மையென்றால், உங்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு உங்களை கௌரவத்துடன் உங்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்கிறேன். அதுவரை நீங்கள் ஒரு அரசாங்க விருந்தினராக கௌரவத்துடன் நடத்தப்படுவீர்கள். அதாவது நீங்கள் பூட்டிய அறைக்குள் எல்லா வசதிகளுடனும் இருப்பீர்கள், உங்கள் சீடனுக்குக் கிடைக்கப் போகும் பரிசுகள் உங்களுக்கு இல்லை!" என்றார் சிரித்தபடியே.

தொடர்ந்து வாங்கிய கசையடிகாளால் குணசீலனின் உடல் முழுவதும் புண்ணாகி இருந்தது. ஆயினும் அவன் தான் கூறியதுதான் உண்மை என்றே திரும்பத் திரும்பக் கூறி வந்தான். அவனிடம் பத்து பொற்காசுகள் வாங்கிக் கொண்டு பின்புறமாக ஓடிய மனிதனைக் காவலர்களால் பிடிக்க முடியவில்லை.

பத்து நாட்களுக்குப் பிறகு நான்கு பேரும் விடுவிக்கப்பட்டு அவர்கள் நாட்டின் எல்லையருகே கொண்டு விடப்பட்டனர்.

"வா! குணசீலா! புண்கள் எல்லாம் ஆறி விட்டனவா?" என்று வரவேற்றார் ஒற்றர்படைத் தலைவர் பூபதி 

"அது என் பெயர் இல்லையே தலைவரே!"

"சரி, கதிர்வேலா! குணசீலனின் பணிதான் முடிந்து விட்டதே! நீ சேகரித்து அளித்த தகவல்கள் மிகவும் பயனுள்ளவை. பாராட்டுக்கள். எல்லாவற்றுக்கும் மேல் சாந்தானந்தர் மற்றும் அவருடையை மற்ற இரண்டு சீடர்கள் மீது ஒரு தூசி கூடப் படாமல் நீ காப்பாற்றியது பெரிய விஷயம்!" என்றார் பூபதி.

"நான் ஒரு போலிச் சீடனாக இருந்தாலும் என் குருவுக்கு நான் கொடுத்த சிறிய குருதட்சிணையாகவே அதைக் கருதுகிறேன்" என்றான் கதிர்வேலன்.

குறள் 586:
துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று.

பொருள்: 
செல்ல முடியாத இடங்களுக்கும் கூடத் துறவியர் வேடத்தில் சென்று, அறிய வேண்டுபவற்றை அறிந்து, அங்கே பிடிபட்டால், பிடித்தவர் எத்தகைய துன்பம் செய்தாலும் ரகசியத்தைச் சொல்லாதவரே ஒற்றர்.

587. ஆதாரத்தைத் தேடி...

"ராம்கோபால் இந்த கான்டிராக்டில நிச்சயமா ஒரு பெரிய தொகையை வாங்கி இருக்காரு. ஆனா நம்மால அதை நிரூபிக்க முடியாது. அவரே ஒத்துக்கிட்டாத்தான் உண்டு. நம் நிலைமை எவ்வளவு பரிதாபமா இருக்கு பாருங்க!" என்றார் நிர்வாக இயக்குனர் சாந்தாராம்.

விஜிலன்ஸ் அதிகாரி தயாளன் மௌனமாக இருந்தார்.

'நம் கண்ணுக்கு முன்னால் ஒரு ஊழல் நடந்திருக்கு. ஆனால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லையே உங்களால்!' என்று தன்னைப் பார்த்து நிர்வாக இயக்குனர் கேள்வி எழுப்புவதாக தயாளனுக்குத் தோன்றியது.

டுத்த சில நாட்களுக்கு ராம்கோபாலை நெருக்கமாகக் கண்காணித்தார் தயாளன். தனக்குத் தெரிந்த ஒரு தனியார் துப்பறியும் நிறுவன உரிமையாளர் மூலம் அவர் இதைச் செய்தார்.

இதற்காகத் தனது நிறுவனத்திலிருந்து கட்டணம் எதுவும் செலுத்த முடியாது என்றும் தன் சொந்தச் செலவில்தான் இதைச் செய்வதாகவும் தன் நண்பரிடம் கூறி சற்று குறைந்த கட்டணத்துக்கு அவரை இதைச் செய்ய ஒப்புக் கொள்ள வைத்தார். 

மூன்று நாட்களுக்குப் பிறகு ஒரு பயனுள்ள தகவல் கிடைத்தது. 

ஒவ்வொரு சனிக்கிழமை மாலையும் தன் நண்பர் ஒருவருடன் ஒரு கிளப்புக்குப் போகும் வழக்கம் ராம்கோபாலுக்கு இருப்பதைத் துப்பறியும் நிறுவனம் கண்டுபிடித்துச் சொன்னதும் அவர்களுக்குச் சேர வேண்டிய கட்டணத்தைக் கொடுத்து அவர்கள் சேவையை முடித்துக் கொண்டார் தயாளன். 

மூன்று நாட்களுக்கான கட்டணம் அவ்வளவு அதிகமாக இல்லை என்பது தயாளனுக்கு ஆறுதலாக இருந்தது. ஆனால் அந்தத் தகவல் பயனளிக்குமா என்று பார்க்க வேண்டும்!

'இந்த முயற்சி வெற்றி அடைந்தால் நிர்வாக இயக்குனரிடம் சொல்லி செலவான தொகையை நிறுவனத்திலிருந்து பெற முடியும். பார்க்கலாம்!'

"பிரில்லியன்ட்! எப்படி இதை ரிகார்ட் பண்ணினீங்க?" என்றார் சாந்தாரம் வியப்புடனும் மகிழ்ச்சியுடனும்.

"ராம்கோபால் ஒவ்வொரு சனிக்கிழமையும் தன் நண்பர் ஒத்தரோட ஒரு கிளப்புக்குப் போவார்னு தெரிஞ்சது. பொதுவா இந்த மாதிரி ஆட்கள் தங்களோட தவறான செயல்களைக் கூட பெரிய சாதனை மாதிரி தங்களுக்கு நெருக்கமானவங்க கிட்ட பெருமையா பேசிப்பாங்க. அதனால அந்த நண்பரைப் பிடிச்சு அவர்கிட்ட ஒரு செல்ஃபோனைக் கொடுத்து கிளப்பில இருக்கும்போது அதிலேந்து எனக்கு கால் பண்ணி ஃபோனை அப்படியே வச்சிருக்கணும்னு சொன்னேன். ராம்கோபால்கிட்டேந்து தகவல் வரவழைக்க இயல்பா கேக்கற மாதிரி கேட்க வேண்டிய சில கேள்விகளைக் கேட்கவும் அவருக்கு சொல்லிக் கொடுத்தேன்.

""மூணு சனிக்கிழமையும் சாயந்திரம் மூணு மணி நேரம் அந்த ஃபோன்ல அவங்க பேசறதைக் கேட்டுக்கிட்டே இருந்தேன். மனுஷன் எவ்வளவோ விஷயங்களைப் பத்திப் பேசினாரு. ஆனா இதைப் பத்திப் பேசல!அவர் நண்பர்தான் பாவம் அவங்க பேசறதை நான் கேட்டுக்கிட்டிருப்பேன்னு தெரிஞ்சதால பயந்து பயந்து பேசினாரு. 

"நாலாவது சனிக்கிழமைதான் ஜாக்பாட் அடிச்சது. அந்த கான்டிராக்ட்ல லஞ்சம் வாங்கி உங்களை ஏமாத்தினதைப் பத்தி ரொம்ப பெருமையாப் பேசி இருக்காரு ராம்கோபால். சாரி!" என்றார் தயாளன்.

"அதைப் பத்தி எனக்கு ஒண்ணும் இல்ல. நான் ஒண்ணும் செய்ய முடியாதவனாத்தானே இருந்திருக்கேன்! ஆனா, ராம்கோபால் தன் நண்பர்கிட்ட பேசினதை உங்க ஃபோன்ல கேட்டு ரிகார்ட் பண்ணி இருக்கீங்களே, இது சட்டப்படி செல்லுமா?" என்றார் சாந்தாராம்.

"அதைப் பத்திக் கவலைப்படாதீங்க. நான் ராம்கோபாலைக் கூப்பிட்டு அவர்கிட்ட இந்த ரிகார்டிங்கைப் போட்டுக் காட்டினாலே அவரு எல்லாத்தையும் ஒத்துப்பாரு. வெளியில ரொம்ப தைரியமானவங்களாக் காட்டிக்கிட்டாலும் இந்த மாதிரி ஆசாமிகள்ளாம் கோழைங்க. தப்பு பண்ணிட்டு எப்ப மாட்டிப்பமோ பயந்துக்கிட்டேதான் இருப்பாங்க. விஜிலன்ஸ் அதிகாரி கூப்பிடறார்னாலே பேன்ட்ல ஒண்ணுக்குப் போயிடுவாங்க! எத்தனை பேரைப் பாத்திருக்கேன்! அப்படியே அவர் ஒப்புக்கலேன்னாலும் அவர் நண்பர் வாக்குமூலம் கொடுப்பாரு. அது போதுமே!"

"அது சரி, அவர் நண்பர் எப்படி நீங்க சொன்னதுக்கு ஒத்துக்கிட்டாரு?"

"அதுதான் கொஞ்சம் கஷ்டமா இருந்தது. அவர் பின்னணியைக் கொஞ்சம் தோண்டி அவர் பண்ணின ஒரு தப்பைக் கண்டுபிடிச்சு அதை வச்சு மிரட்டித்தான் அவரை ஒத்துக்க வச்சேன்!" என்றார் தயாளன் சிரித்தபடி.

"நீங்க பயங்கரமான ஆள்! நான் கூட உங்ககிட்ட எச்சரிக்கையாத்தான் இருக்கணும்னு நினைக்கிறேன்!" என்றார் சாந்தாராம் சிரித்தபடி. 

குறள் 587:
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று.

பொருள்: 
ரகசியமாக நடந்த செயல்களையும் அவற்றைச் செய்தவர் வாயாலேயே கேட்டு அறியும் ஆற்றல் படைத்தவராய், கேட்டவற்றுள் எத்தகைய சந்தேகமும் இல்லாதவராய் இருப்பவரே ஒற்றர்.

588. நரேஷின் மனக்குறை

தலைமை அதிகாரி அழைத்ததும் அவர் அறைக்குச் சென்றார் நரேஷ்.

"மிஸ்டர் நரேஷ்! நீங்க ஒரு மூத்த அதிகாரி. நம்ம துறைக்கு உங்க பங்களிப்பு நிறைய இருக்கு. நீங்க சேகரிச்சுக் கொடுத்த தகவல்களால எனக்கு அரசாங்கத்தில நல்ல பேர் கிடைச்சிருக்கு. உங்க பங்களிப்பைப் பத்தி நானும் மேலிடத்தில அப்பப்ப சொல்லிக்கிட்டிருக்கேன்" என்றார் தலைமை அதிகாரி குப்தா.

"இதெல்லாம் எனக்குத் தெரியுமே சார்!" என்றார் நரேஷ்.

"ஆனா கொஞ்ச நாளா நீங்க ஏதோ வருத்தத்தில இருக்கற மாதிரி இருக்கு. உங்க சொந்த வாழ்க்கையில பிரச்னை எதுவுமே இல்லையே?"

"இல்ல சார்!"

"சொல்லுங்க! இங்கே என்ன பிரச்னை உங்களுக்கு?"

"பிரச்னை எதுவும் இல்ல..." என்றார் நரேஷ் தயக்கத்துடன்.

"பிரச்னை இல்லைன்னா மனக்குறை. ஷூட்!" என்றார் குப்தா சிரித்தபடி.

"இல்ல சார்... போன மாசம் நம் எதிரி நாட்டைப் பத்தி ஒரு முக்கியமான தகவலை ரொம்ப கஷ்டப்பட்டு சேகரிச்சுக் கொடுத்தேன். எதிரி நாட்டில இருந்த என் கான்டாக்ட் பெரிய ரிஸ்க் எடுத்து இந்தத் தகவலை எனக்கு அனுப்பி இருந்தாரு..."

"ஆமாம். அதைத்தான் நான் மேல அனுப்பி அதோட அடிப்படையில ஒரு முக்கியமான ஆபரேஷன் கூட நடந்ததே! இதை நான் உங்ககிட்ட சொல்லக் கூடாது, ஆனாலும் சொல்றேன். இதைப் பத்தி நான் உங்க பர்சனல் ஃபைல்ல கூட ரிகார்ட் பண்ணி இருக்கேன்!"

"அப்படியா? ரொம்ப நன்றி சார்!" என்றார் நரேஷ் மலர்ச்சியுடன். தொடர்ந்து, "ஆனால்..." என்றார் சற்றுத் தயக்கத்துடன்.

"ஆனால் என்ன?"

"இல்லை. என் ரிப்போர்ட்டை நீங்க உடனே ஏத்துக்கல. இன்னொரு நாட்டைச் சேர்ந்த இன்டலிஜன்ஸ் ஏஜன்சியிலிருந்த உங்க நண்பர் மூலமா இது சரியான்னு பாக்கச் சொன்னீங்க. அவரு சரின்னு உறுதிப்படுத்தினப்பறம்தான் அரசாங்கத்துக்கு அதைத் தெரிவிச்சீங்க. அதில எனக்குக் கொஞ்சம் வருத்தம் இருந்தது உண்மைதான்!" என்றார் நரேஷ்.

"நரேஷ்! உங்ககிட்ட ஒரு ஃபைலைக் காட்டப் போறேன். இது என்னோட தனிப்பட்ட ஃபைல்." என்று கூறிய குப்தா தன் இருக்கைக்கு அருகிலிருந்த ஒரு சிறிய பீரோவைத் திறந்து அதிலிருந்து ஒரு ஃபைலை எடுத்து அதில் ஒரு பக்கத்தைப் பிரித்து அதை நரேஷிடம் காட்டினார்.

அதைப் படித்துப் பார்த்த நரேஷ் மௌனமாக ஃபைலை குப்தாவிடம் திருப்பிக் கொடுத்தார்.

"ரெண்டு வருஷம் முன்னால நடந்த விஷயம் இது. நானே சேகரிச்ச விஷயம் இது. ஆனா அது ரொம்ப சென்சிடிவ் விஷயம்கறதால, அதை உறுதிப்படுத்திக்கணும்னு நினைச்சு உங்க விஷயத்தில செஞ்ச மாதிரியே இன்னொரு நாட்டு ஏஜன்சியில இருந்த என் நண்பர் மூலமா இதை உறுதிப்படுத்தச் சொன்னேன். அவர் கொடுத்த தகவல் எனக்குப் பெரிய அதிர்ச்சியா இருந்தது. எனக்குக் கிடைச்ச தகவல் கொஞ்சம் பழசு. ஆனா அதுக்கப்பறம் நிலைமை மாறிடுச்சு. இந்த உண்மை தெரியாம என் கான்டாக்ட் அதை எனக்கு அனுப்பி இருக்காரு. அவரும் பெரிய ரிஸ்க் எடுத்துத்தான் அந்தத் தகவலை அனுப்பினாரு. ஆனா அது சரியான தகவல் இல்லேன்னு அவருக்குத் தெரியாது. அதை நான் அப்படியே அரசாங்கத்துக்குத் தெரிவிச்சிருந்தா சில தவறான முடிவுகளுக்கு அது காரணமா ஆகியிருக்கும். அதனால ரொம்ப சென்சிடிவ் ஆன தகவல்களை எப்பவுமே உறுதிப்படுத்திகறது என்னோட கொள்கை. இதனால உங்க திறமையைக் குறைச்சு மதிப்பிட்டதா நீங்க நினைக்காதீங்க!" என்றார் குப்தா.

"இல்லை சார்.இப்ப புரிஞ்சுக்கிட்டேன். முதலிலேயே இதைப் புரிஞ்சுக்காதது என் தவறுதான்!" என்றார் நரேஷ் உண்மையான வருத்தத்துடன்.

குறள் 588:
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.

பொருள்: 
ஓர் ஒற்றன் மறைந்து கேட்டுத் தெரிவித்த செய்தியையும் மற்றோர் ஒற்றனால் கேட்டு வரச் செய்து ஒப்புமை கண்டபின் உண்மை என்று கொள்ள வேண்டும்.

589. மூன்று நாட்கள் அவகாசம்!

"எதுக்கு என்னை அவசரமாப் பாக்கணும்னு சொன்னீங்க?" என்றார் அமைச்சர்.

"ஒரு முக்கியமான தகவல் வந்திருக்கு" என்றார் உளவுத்துறைத் தலைவர் நிர்மல்.

"சொல்லுங்க!"

நிர்மல் கூறிய தகவலைக் கேட்டதும் அதிர்ந்து போன அமைச்சர், "இது ரொம்ப சீரியஸான விஷயமாச்சே! இப்பவே நான் இதை பிரதமர்கிட்ட  சொல்லி என்ன நடவடிக்கை எடுக்கறதுன்னு தீர்மானிக்கணும்" என்றார் பரபரப்புடன்.

"இல்ல. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க."

"எதுக்கு? இது எவ்வளவு சீரியசான விஷயம்னு உங்களுக்குப் புரியலியா?"

"நல்லாவே புரியுது. ஆனா எனக்கு இன்னொரு கான்டாக்ட்கிட்டேந்து வேற ஒரு தகவல் வந்திருக்கு!"

"இது என்ன குழப்பம்? ஏன் ரெண்டு கான்டாக்ட்களை ஒரே விஷயத்தில ஈடுபடுத்திறீங்க? இது வேஸ்ட் ஆஃப் மேன்பவர். அதோட இது மாதிரி குழப்பங்களுக்கும் வழி வகுக்குதே!"என்றார் அமைச்சர்.

"சார்! உளவு பாக்கறதில சில நுணுக்கங்கள் இருக்கு. நிறைய அனுபவம் உள்ள என்னோட சீனியர்கள் எனக்கு சில விஷயங்களை சொல்லிக் கொடுத்திருக்காங்க. ரொம்ப முக்கியமான தகவல்களை ரெண்டு சோர்ஸ் மூலமா சரிபாக்கணுங்கறது ஒரு எழுதப்படாத விதியாகவே இருக்கு" என்று விளக்க முற்பட்டார் நிர்மல்.

"இந்த விவரங்கள் எல்லாம் எனக்கு வேண்டாம். இப்ப என்ன சொல்றீங்க? எந்தத் தகவல் சரின்னு சொல்றீங்க?" என்றார் அமைச்சர் பொறுமையில்லாமல்.

"எனக்கு மூணு நாள் அவகாசம் கொடுங்க" என்றார் நிர்மல்.

"தாமதப்படுத்தினா நிலைமை மோசமாயிடாதா?"

"மூணு நாள் தாமதிக்கிறதால ஒண்ணும் ஆயிடாதுன்னு நினைக்கிறேன். அதுக்குள்ள அவசர நிலைமை ஏதாவது ஏற்பட்டா நான் உங்ககிட்ட வந்து சொல்றேன்!" என்று சொல்லி விட்டு அமைச்சரின் பதிலுக்குக் காத்திருக்காமல் தன் இருக்கையிலிருந்து எழுந்து வெளியேறினார் நிர்மல்.

"என்ன மிஸ்டர் நிர்மல்? ரெண்டு நாளா உங்களுக்கு ஃபோன் பண்ணிக்கிட்டிருக்கேன். ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்கீங்க. உங்க ஆஃபீஸ்ல கேட்டா நீங்க எங்கே போனீங்கன்னே தெரியலைங்கறாங்க. அன்னிக்கு நீங்க சொன்ன விஷயத்தைக் கேட்டதிலேந்து எனக்கு ஒரே டென்ஸா இருக்கு!" என்றார் அமைச்சர், தன் அறைக்குள் நுழைந்த நிர்மலைப் பார்த்து.

"மன்னிச்சுக்கங்க சார்! உங்க டென்ஷனை அதிகப்படுத்தற செய்தியோடதான் நான் வந்திருக்கேன். அன்னிக்கு நான் சொன்ன தகவல் சரிதான். நாம உடனே நடவடிக்கை எடுக்கணும்!" என்றார் நிர்மல், இருக்கையில் அமர்ந்து கொண்டே.

" மை குட்னெஸ்! மூணு நாளை வீணாக்கிட்டமே! இதை நீங்க அன்னிக்கே உறுதியா சொல்லி இருந்தா நாம இத்தனை நேரம் நடவடிக்கை எடுத்திருக்கலாம்!" என்றார் அமைச்சர் குற்றம் சாட்டும் விதமாக.

"என்ன செய்யறது சார்? இது மாதிரி தகவல்களையெல்லாம் உறுதிப்படுத்தறது அவ்வளவு சுலபம் இல்லை. தகவல் தப்பா இருந்துடக் கூடாதுங்கறதுக்காகத்தான் ரெண்டு சோர்ஸைப் பயன்படுத்தறோம். அந்த ரெண்டு சோர்ஸும் வேற விதமா தகவல் சொல்றப்ப ஒரு வலுவான மூணாவது சோர்ஸைப் பயன்படுத்த வேண்டி இருக்கு!"

"கிரிக்கெட் மேட்ச்ல தேர்ட் அம்பயர் மாதிரியா?" என்றார் அமைச்சர். இப்போது அவருடைய இறுக்கம் சற்றுத் தளர்வடைந்து விட்டதாகத் தோன்றியது. "ஆனா இந்த ரெண்டு சோர்ஸுக்கு பதிலா முதலிலேயே அந்த வலுவான தேர்ட் சோர்ஸைப் பயன்படுத்தி இருக்கலாமே!" என்றார் தொடர்ந்து.

"கிரிக்கட் மேட்ச்சை தேர்ட் அம்பயரை மட்டுமே வச்சு நடத்தறதில்லையே சார்!" என்றார் நிர்மல், இலேசாகச் சிரித்து.

"சரி. எப்படி திடீர்னு ஒரு தேர்ட் சோர்ஸ் கிடைச்சது உங்களுக்கு? அவர் சொல்ற எந்த அளவுக்கு நம்மால நம்ப முடியும்?"

"தேர்ட் சோர்ஸ்ங்கறது எப்பவுமே இருக்கறதுதான். ஆனா தேர்ட் அம்பயர் மாதிரி அவரை எப்பவாவதுதான் பயன்படுத்தணும். அவரை நம்ப முடியுமான்னு கேட்டீங்க. முதல்ல அவரு நிறைய அனுபவம் உள்ளவர். ரெண்டாவது நான் அவரை நம்பித்தான் ஆகணும்! என்னையே நான் நம்பலேன்னா எப்படி?"

"என்ன சொல்றீங்க"

"நானே நேரில போய்த் தகவல்களைச் சரி பார்த்துட்டு வந்தேன். மூணு நாளா நான் நம்ம நாட்டிலேயே இல்லை. இது என்னைத் தவிர வேற யாருக்குமே தெரியாது. அதனாலதான் உங்களால என்னைப் பிடிக்க முடியல!" என்றார் நிர்மல்

அமைச்சர் நிர்மலை பிரமிப்புடனும், புதிய மரியாதையுடனும் பார்த்தார்.

குறள் 589:
ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்ஒரு முக்கி
சொற்றொக்க தேறப் படும்.

பொருள்: 
ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி ஆள வேண்டும், அவ்வாறு ஆளப்பட்ட ஒற்றர் மூவரின் சொல் ஒத்திருந்தால் அவை உண்மை எனத் தெளியப்படும்.

குறிப்பு: இந்தக் குறள் மூன்று ஒற்றர்கள் கூறுவதும் ஒத்திருக்க வேண்டுமென்று கூறுகிறது. ஆனால் இந்தக் கதையில், இரு ஒற்றர்களின் தகவல் மாறுபடும்போது மூன்றாவது ஒற்றர் மூலம் உறுதியான தகவல் பெற வேண்டும் என்ற கருத்து அமைந்துள்ளது.

590. ஓய்வுக்குப் பின் ஒரு வேலை!

"ரிடயர் ஆகி ரெண்டு மாசம் ஆயிடுச்சு. பர்சேஸ் மானேஜர்னு நல்ல வேலை, நல்ல சம்பளம். குடும்பத்துக்குச் செய்ய வேண்டியதெல்லாம் செஞ்சுட்டீங்க. ஆனா ஏன் ரிடயர்மென்ட்டுக்கு அப்புறம் ரொம்ப சோர்வா இருக்கீங்க?" என்றாள் வசந்தி.

"இவ்வளவு வருஷம் உழைச்சதுக்கு இவ்வளவுதான் பலனான்னு சில சமயம் தோணுது" என்றார் சிவகுமார்.

"இன்னும் என்ன எதிர்பாக்கறீங்க? உங்களுக்கு வர வேண்டிய பி எஃப் கிராசுவிடி எல்லாம்தான் வந்துடுச்சே!" என்றாள் வசந்தி புரியாதவளாக.

"ஒண்ணுமில்ல. இத்தனை நாளா சுறுசுறுப்பா வேலை பாத்துட்டு இப்ப சும்மா இருக்கறதால கூட இருக்கலாம்" என்று மனைவியிடம் கூறினாலும், தன் மன ஆழத்தில் இருந்த குறையை சிவகுமார் உணர்ந்தே இருந்தார். 

"வசந்தி! எனக்கு ஒரு வேலை கிடைச்சிருக்கு!" என்றார் சிவகுமார் உற்சாகத்துடன்.

"வேலையா? என்ன வேலை? எவ்வளவு சம்பளம்? நீங்க மறுபடி வேலைக்குப் போகணுமா என்ன?" என்று பல கேள்விகளை அடுக்கினாள் வசந்தி.

"ஒரு கம்பெனியில கன்சல்டன்ட். சம்பளத்தைக் கேட்டா நீ மூர்ச்சை போட்டுடவே. நான் வேலையில இருந்தப்ப வாங்கின சம்பளத்தைப் போல ரெண்டு மடங்கு. ஆஃபீசுக்குப் போக வேண்டாம். வீட்டிலேந்தே கம்ப்யூட்டர்ல வேலை செய்ய வேண்டியதுதான். அதோட நமக்குப் பெரிய வீடு, நம் சொந்த உபயோகத்துக்காக டிரைவரோட கார் எல்லாம் கொடுக்கறாங்க!"

"ஆச்சரியமா இருக்கே! ரிடயர் ஆனப்பறம் கிடைச்ச வேலைக்கு இவ்வளவு சம்பளமா! வீடு, கார் எல்லாம் வேற கொடுக்கறதா சொல்றீங்க. நாம சொந்த வீட்டிலதானே இருக்கோம்? நமக்கு எதுக்கு வீடு?"

"இந்த வீட்டை வாடகைக்கு விட்டுட்டு அங்கே போயிடலாம். ஏன்னா, அது பெரிய வீடு. எங்கே இருக்கு தெரியுமா?" என்று இடத்தின் பெயரைச் சொன்னார் சிவகுமார்

"அங்கேயா? அங்கே கம்பெனி எம் டி, சேர்மன் மாதிரி  ரொம்பப் பெரிய ஆளுங்கதான் இருப்பாங்கன்னு கேள்விப்படிருக்கேன்!"

"ஆமாம். அதெல்லாம் கம்பெனி லீஸ்ல இருக்கற வீடுகள்தான். தனிநபர்கள் யாரும் அவ்வளவு வாடகை கொடுத்து அங்கே போக மாட்டாங்க!"

"நீங்க எப்ப இந்த வேலைக்கு அப்ளை பண்ணினீங்க? இன்டர்வியூவுக்குக் கூட எங்கேயும் போகலியே!" என்றாள் வசந்தி.

"நான் அப்ளை பண்ணல. பழைய கம்பெனியிலேந்து என்னைப் பத்திக் கேள்விப்பட்டு அவங்களே இந்த வேலையைக் கொடுத்திருக்காங்க. இன்டர்வியூ எல்லாம் எதுவும் இல்ல. ஃபோன் பண்ணி இந்த வேலையை ஏத்துக்கிறீங்களான்னு கேட்டாங்க."

"நீங்க என்ன சொன்னீங்க?"

"ஏத்துக்கலாம். சம்பளம் ரொம்பக் குறைச்சலா இருக்கேன்னு சொன்னேன்!" என்று சொல்லிச் சிரித்தார் சிவகுமார்.

ஓய்வு பெற்றதிலிருந்து சோர்வுடன் இருந்த கணவரை உற்சாகப்படுத்த இப்படி ஒரு வாய்ப்பு அதிர்ஷ்டகரமாக வந்ததை நினைத்து வியந்தாள் வசந்தி.

புதிய விட்டில் சிவகுமார் ஒரு அறையைத் தன் அலுவலக அறையாக வைத்துக் கொண்டார். அங்கே ஒரு கம்ப்யூட்டரில்தான் அவருடைய வேலை.

ஆனால் சிவகுமார் சற்று நேரமே அறையில் அமர்ந்திருப்பதையும், பெரும்பாலான நேரங்களில் ஹாலில் அமர்ந்து ஏதாவது படித்துக் கொண்டோ, தொலைக்காட்சி பார்த்துக் கொண்டோ, தன்னிடம் பேசிக் கொண்டோ இருப்பதையும் பார்த்த வசந்தி அவருக்கு வேலை அதிகம் இல்லை என்று புரிந்து கொண்டாள்.

"கன்சல்டனட்னா சில சமயம்தான் வேலை இருக்கும். நான் செய்யற வேலையோட மதிப்புதான் கணக்கு, நான் எவ்வளவு நேரம் வேலை செய்யறேங்கறது கணக்கு இல்ல!" என்றார் சிவகுமார் அவள் கேட்காமலே.

காரில் தன் விருப்பப்படி வெளியே போய் வருவது வசந்திக்கு வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.

"என்ன சிவகுமார், எப்படி இருக்கீங்க?" என்றார் ஃபோனில் பேசியவர்.

"ரொம்ப நல்லா இருக்கேன் சார். எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி!" என்றார் சிவகுமார்.

"கல்யாணப் பரிசுன்னு ஒரு திரைப்படத்தில தங்கவேலு மன்னார் அண்ட் கம்பெனிங்கற இல்லாத ஒரு கம்பெனிக்கு மானேஜர்ன்னு தன்னை சொல்லிப்பாரு. அது மாதிரி இல்லாத ஒரு கம்பெனியில பர்சேஸ் மானேஜர்னு சொல்லிக்கிட்டு அரசாங்கத்துக்காக பல ரகசிய வேலைகளை நீங்க செஞ்சிருக்கீங்க. நாட்டுப் பாதுகாப்புக்கு உங்க பங்களிப்புக்கு நிறைய மதிப்பு உண்டு. ரிஸ்க் எடுத்துக்கிட்டு நீங்க செஞ்ச வேலைகளுக்கு உங்களுக்கு எவ்வளவு வெகுமதி கொடுத்தாலும் தகும். உங்களுக்குத் தெரியும், நாங்க ரொம்ப டிஸ்கிரீட்டா இருக்கணும். அதனாலதான் ஏற்பாடு செய்ய கொஞ்சம் கால தாமதமாயிடுச்சு. நீங்க கூட, என்னடா இவங்க நம்மை கவனிக்காம ஒரு சாதாரண ரிடயர்மென்ட் பாக்கேஜ் கொடுத்து அனுப்பிட்டாங்களேன்னு நினைச்சிருக்கலாம்."

"நிச்சயமா அப்படி நினைக்கல சார்!" என்று பொய் சொன்னா சிவகுமார். தொடர்ந்து, "இப்ப கூட அந்த மாதிரி வேலைகளைச் செய்ய நான் தயார்" என்றார்.

"வேண்டாம் சிவகுமார். நீங்க கஷ்டப்பட்டு செஞ்ச வேலைகளுக்குப் பரிசாத்தான் உங்களுக்கு இந்த வேலையில்லாத வேலையைக் கொடுத்திருக்கோம். உங்க ரிடயர்மென்ட்டை அனுபவியுங்க!" என்று சொல்லி ஃபோனை வைத்தார் மறுமுனையில் பேசியவர்.

கணினியில் தான் பார்த்துக் கொண்டிருந்த திரைப்படத்தைத் தொடர்ந்து பார்க்க முயன்ற சிவகுமார் அறைக்கதவைத் திறந்து கொண்டு மனைவி வருவதைப் பார்த்து சட்டென்று கணினியில் வேறொரு வலைப்பக்கத்தைத் திறந்து வைத்தார்.

குறள் 590:
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை.

பொருள்:
ஓர் ஒற்றரின் திறனை வியந்து பிறர் அறியச் சிறப்புச் செய்தால், ஒளிவு மறைவாக இருக்க வேண்டிய செய்தியை, வெளிப்படுத்தியதாகி விடும்.

அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...