அதிகாரம் 88 - பகைத்திறன் தெரிதல் (பகையின் தன்மையை அறிதல்)

திருக்குறள்
பொருட்பால்
படையியல்
அதிகாரம் 88
பகைத்திறன் தெரிதல்
(பகையின் தன்மையை அறிதல்)

871. பந்தயத்தில் துவங்கிய போட்டி

ஒரு விளையாட்டான பந்தயத்தில்தான் நவீனுக்கும், குமாருக்கும் இடையிலான போட்டி ஆம்பித்தது.

இருவரும் அந்த நிறுவனத்தில் ஒரே நேரத்தில்தான் விற்பனைப் பிதிநிதிகளாகச் சேர்ந்தனர்.

வேலைக்கான பயிற்சி முடிந்ததும், "இன்னும் இரண்டு வாரத்தில் உங்கள் பயிற்சி நிறைவு பெற்றதற்கான விழா நடைபெறப் போகிறது. அதற்குள் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு விற்பனையையாவது கொண்டு வர வேண்டும். இதற்கு முதல் சவால் என்று பெயர். முதல் சவாலில் யார் அதிக விற்பனையைக் கொண்டு வருகிறார்களோ, அவர்களுக்குச் சிறப்புப் பரிசு உண்டு!" என்று அறிவித்தார் பயிற்சியாளர்.

பயிற்சியின்போது நெருங்கிய நண்பர்களாக இருந்த நவீனும், குமாரும் முதல் சவாலில் தங்கள் இருவருக்குள் யார் அதிக விற்பனையைக் கொண்டு வருவோம் என்பது பற்றித் தங்களுக்குள் விளையாட்டாக ஒரு பந்தயம் வைத்துக் கொண்டனர்.

பந்தயத்தில் நவீன் வெற்றி பெற்று விட்டான். குமார் வெளிப்படையாக நவீனைப் பாராட்டினாலும், பந்தயத்தில் நவீனிடம் தோற்றது அவனுக்கு நவீன் மீது பொறாமையையும் கசப்பு உணர்வையும் ஏற்படுத்தி இருந்தது.

"முதல் சவால்ல நீ ஜெயிச்சுட்ட. ஆனா, முதல் மாச விற்பனையில, உன்னை அடிச்சுக் காட்டறேன் பாரு!" என்றான் குமார். இதைச் சொல்லும்போது, அவன் குரலில் ஒரு ஆக்ரோஷம் இருந்தது.

"ஏதோ விளையாட்டா ஒரு பந்தயம் வச்சுக்கிட்டீங்க. அதோட விடுங்க. நாம இவ்வளவு பேர் இருக்கோம். ஒவ்வொரு மாசமும் ஒவ்வொத்தர் அதிக விற்பனையைக் கொண்டு வரலாம். இதில போட்டி எதுக்கு? நாம எல்லாரும் ஒரே நிறுவனத்துக்காகத்தானே வேலை செய்யறோம்?" என்றான் இருவருக்கும் நண்பனான குணசீலன்.

"இருக்கட்டும். குமார் சவால் விட்டிருக்கான். அதை நான் ஏத்துக்கறேன். முதல் மாசத்தில மட்டும் இல்ல, ஒவ்வொரு மாசமும் உன்னை அடிச்சுக் காட்டறேன்!" என்றான் நவீன், குமாரைப் பார்த்து.

"பாக்கலாம்டா! ஒரு தடவை ஃப்ளூக்கில ஜெயிச்சதுக்கே இப்படி ஆட்டம் போடறியா?" என்றான் குமார், ஆத்திரத்துடன்.

"யாருடா ஃப்ளூக்ல ஜெயிச்சது?" என்று நவீன் கையை ஓங்க, குணசீலன் அவன் கையை இறக்கி, "ரெண்டு பேரும் எங்கேயாவது தள்ளிப் போய் நில்லுங்கடா!" என்றான், இருவரையும் பார்த்து.

"இந்த மாசம் விற்பனையில நீ ரெண்டாவது இடத்தில இருக்க. முருகன்தான் முதலிடம்" என்றான் குணசீலன், குமாரிடம்.

"பரவாயில்ல. இந்த மாசம் நவீன் கீழே போயிட்டான் இல்ல, எனக்கு அது போதும்!" என்றான் குமார்.

"டேய்! நாம வேலைக்குச் சேர்ந்து ரெண்டு வருஷம் ஆச்சு. ஆனா இன்னும் நீயும், நவீனும் விரோதிகள் மாதிரி நடந்துக்கறீங்க. வேற யாரு உனக்கு முன்னால வந்தாலும் பரவாயில்ல, நவீன் உனக்குப் பின்னால இருந்தா போதும், இல்ல? என்ன மனப்பான்மைடா இது?" என்றான் குணசீலன்.

"அது அப்படித்தான். ஏன்னா, நவீன் எனக்கு விரோதிதான்!" என்றான் குமார், குரோதத்துடன்.

குறள் 871:
பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று.

பொருள்: 
பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால், அதனை வேடிக்கை விளையாட்டாகக் கூட ஒருவன் கொள்ளக் கூடாது.

872. அக்கவுன்டன்ட்

"என் தொழில்ல, எத்தனையோ விரோதிகளை சந்திச்சிருக்கேன். அவங்களை வெற்றி கொள்றது எனக்கு அவ்வளவு கஷ்டமா இல்லை. ஆனா..."

மனோகர் ஒரு நிமிடம் கண்ணை மூடிக் கொண்டார்.

"சொல்லுங்கப்பா!" என்றான் கார்த்திகேயன்.

"எங்கிட்ட ஒரு அக்கவுன்டன்ட் இருந்தாரு. அவரு நல்லாதான் வேலை செஞ்சுக்கிட்டிருந்தாரு. ஆனா ஒரு தடவை, ஒரு சின்ன தப்பு பண்ணிட்டார்ங்கறதுக்காக, அவரை ரொம்ப கோவிச்சுக்கிட்டேன். கோவத்தில 'வெளியில போ'ன்னு கூட சொல்லிட்டேன்!"

"அப்புறம்?"

"அவரு போயிட்டாரு. திரும்ப வரவே இல்லை. அந்த மாச சம்பளத்தைக் கூட வாங்கிக்கலை. ஆனா, அவர் போய் சில நாட்கள்ள, எனக்கு நிறைய பிரச்னைகள் வர ஆரம்பிச்சது. சேல்ஸ் டாக்ஸ்காரங்க திடீர்னு இன்ஸ்பெக்‌ஷனுக்கு வந்தாங்க. பில் போடாம நடந்த சில விற்பனைகளைக் கண்டுபிடிச்சு, அபராதம் போட்டாங்க. வருமான வரித்துறையில, எப்பவும் நான் கொடுக்கற கணக்கை ஏத்துக்கறவங்க, அந்த வருஷம் திடீர்னு நிறைய கேள்வி கேக்க ஆரம்பிச்சாங்க. நான் பில் போடாம செஞ்ச விற்பனைகள், அதிகமாக் காட்டின சில செலவுகள், எல்லாத்தையும் கண்டுபிடிச்சு, ஒரு பெரிய தொகையை அபராதமா விதிச்சாங்க!"

"இதுக்கெல்லாம் காரணம் அந்த அக்கவுன்டன்ட்தானே? அவர் கொடுத்த தகவல்களாலதான இதெல்லாம் நடந்தது?" என்றான் கார்த்திகேயன், கோபத்துடன்.

"ஆமாம்" என்றார் மனோகர்.

"அவர் வேற இடத்துக்கு வேலைக்குப் போயிருப்பாரு இல்ல? அங்கே சொல்லி, அவர் வேலைக்கு உலை வச்சிருக்கலாமே?"

"அவரு எங்கேயும் வேலை செஞ்சதாத் தெரியல. தனியா, சுயதொழில் மாதிரி ஏதோ பண்ணிக்கிட்டிருந்தாரு போலத்தான் தெரிஞ்சுது."

"என்ன செஞ்சக்கிட்டிருந்தா என்ன? அவரை நீங்க சும்மாவா விட்டீங்க?"

"இரு. இன்னும் நான் சொல்லி முடிக்கல. அதுக்கப்பறம், என்னோட பெரிய வாடிக்கையாளர்கள் சில பேர் என்னை விட்டுட்டு நம்ம போட்டியாளர்கள்கிட்ட போயிட்டாங்க!"

"ஏன் அப்படி?"

"பொருட்களைத் தயாரிக்கறதில சில ரகசியங்கள் இருக்கு."

"ஆமாம். இப்பவும் அப்படித்தானே?"

"ஆனா, அந்த ரகசியங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தெரிஞ்சா, அவங்க நம்ம பொருளை வாங்க மாட்டாங்க. நாம பயன்படுத்தற வழிமுறைகள் பொருளோட தரத்தைக் குறைச்சுடும்னு அவங்க நினைப்பாங்க. அது உண்மையில்லை. ஆனா, அதை அவங்களுக்குச் சொல்லிப் புரிய வைக்க முடியாது."

"அப்படீன்னா, அந்த ரகசியங்கள் தெரிஞ்சுதான் அவங்க நம்மை விட்டுப் போனாங்களா? அப்ப அந்த ரகசியங்களை அவங்ககிட்ட சொன்னது அந்த அக்கவுன்டன்ட்தானா?"

"இருக்கலாம். என்னால நிச்சயமாச் சொல்ல முடியாது."

"அவர் அக்கவுன்டன்ட்தானே? பொருள் தயாரிப்பு பற்றின விவரங்கள் அவருக்கு எப்படித் தெரியும்?"

"ஏன்னா, அவர் புத்திசாலி. அக்கவுன்டன்டா இருந்தாலும், கம்பெனிக்குள்ள என்ன நடக்குதுங்கறதெல்லாம் அவர் கூர்ந்து கவனிச்சிருப்பாரு!"

"சரி. அப்புறம் என்னாச்சு?"

"ரெண்டு மூணு வருஷத்துக்கப்புறம், எல்லாம் சரியாயிடுச்சு. கம்பெனியை உங்கிட்ட ஒப்படைக்கச்சே, எல்லாமே  நல்லா இருக்கற மாதிரிதானே ஒப்படைச்சேன்?"

"ஆமாம். நானும் கம்பெனியை நல்லாத்தான் பாத்துக்கிட்டிருக்கேன். ஆமாம், இப்ப எதுக்கு இந்தக் கதையையெல்லாம் எங்கிட்ட சொல்றீங்க?"

"பணபலம், ஆள்பலம், அரசியல் பலம் இதெல்லாம் உள்ளவங்களைக் கூடப் பகைச்சுக்கலாம், ஆனா, படிச்சவங்க, அறிவுள்ளவங்க, புத்திசாலிங்க இவங்களைப் பகைச்சுக்காதேன்னு உனக்கு சொல்லத்தான்!" என்றார் மனோகர், சிரித்தபடி.

"நீங்க சொல்றது சரிதான். ஆனா, நீங்க அந்த அக்கவுன்டன்ட்டை சும்மா விட்டிருக்கக் கூடாது. நல்லவேளை, இப்ப நம்மகிட்ட அக்கவுன்டன்ட்டா இருக்கறவரு ரொம்பத் தங்கமானவரு. இவர் அப்படியெல்லாம் செய்ய மாட்டாரு. நான் அவரை வேலையை விட்டு அனுப்பவும் மாட்டேன். 'உங்களுக்கு எவ்வளவு வயசானாலும், உங்களால முடியற வரைக்கும் வேலை பாருங்க'ன்னு அவர்கிட்ட சொல்லி இருக்கேன்!" என்றான் கார்த்திகேயன், பெருமையுடன்.

'தங்கமானவர்தான். அதனாலதானே, நான் அவர்கிட்ட மன்னிப்புக் கேட்டப்பறம், திரும்ப எங்கிட்ட வேலைக்குச் சேர்ந்தாரு!' என்று நினைத்துக் கொண்டார் மனோகர்.

குறள் 872:
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை.

பொருள்: 
வில்லை ஆயுதமாகக் கொண்ட வீரரோடு பகை கொண்டாலும், சொல்லை ஆயுதமாகக் கொண்ட அறிஞரோடு பகை கொள்ள வேண்டா.

873. ஜாமீனில் எடுக்க ஒரு ஆள்

"மாதவா! நம்மகிட்ட காசு பணம் கிடையாது. நமக்கு ஆதரவாகவும் யாரும் கிடையாது. நம்ம குடும்பத்தில, நீயும் நானும் மட்டும்தான். அதனால, நம்ம சொந்தக்காரங்ககிட்ட விரோதம் பாராட்டாம, கொஞ்சம் நெருக்கமா இருக்கப் பழகிக்க. நாளைக்கு, நமக்கு ஏதாவது பிரச்னை வந்தா, உதவி செய்யறதுக்கு யாராவது இருக்கணும் இல்லை?" என்றாள் பார்வதி, தன் மகனிடம்.

"நம்ம சொந்தக்காரங்க எல்லாரும் அயோக்கியப் பசங்க. உன் வழியிலேயும் சரி, அப்பா வழியிலேயும் சரி, ஒத்தர் கூட நல்லவங்க இல்லை. நம்மகிட்ட எதையாவது பிடுங்கலாமான்னுதான் பாப்பாங்க. அவங்களைப் பக்கத்திலேயே வர விடக் கூடாதுன்னுதான், அவங்களோட சண்டை போட்டு விலக்கி வச்சிருக்கேன்!" என்றான் மாதவன்.

'பிடுங்கறதுக்கு நம்மகிட்ட என்ன இருக்கு?' என்று நினைத்துக் கொண்டாள் பார்வதி.

மாதவனுக்குத் திருமணம் ஆனதும், மருமகள் சாந்தியின் பெற்றோர், அவர்களுடைய உறவினர்கள் ஆகியோரிடமாவது, மாதவன் நெருக்கமாக இருப்பான் என்று பார்வதிக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டது.

ஆனால், மாதவன் அவர்களிடமும் சண்டை போட்டு, விரோதத்தை ஏற்படுத்திக் கொண்டு விட்டான். அதன் விளைவாக, சாந்தி தன் பெற்றோர் வீட்டுக்குப் போவதுமில்லை, அவர்கள் அவளைப் பார்க்க வருவதுமில்லை.

'என்ன இவன் இப்படி இருக்கான்? உலகத்தையே தனக்கு விரோதியா ஆக்கிப்பான் போலருக்கே!' என்று நினைத்து வருந்தினாள் பார்வதி.

"அத்தை அவரைக் கைது செஞ்சுட்டாங்களாம்!" என்றாள் சாந்தி, அழுது கொண்டே.

"எதுக்கு?" என்றாள் பார்வதி, திடுக்கிட்டு.

"இவர் கம்பெனியில ஏதோ மோசடி நடந்திருக்கு. யாரோ இவரை மாட்டி விட்டிருக்காங்க. கம்பெனியில இவர் மேல புகார் கொடுத்து, போலீஸ்ல இவரைக் கைது செஞ்சிருக்காங்க! இப்பதான் ஸ்டேஷன்லேந்து ஃபோன் வந்தது."

"அடக் கடவுளே! இவனை ஜாமீன்ல எடுக்கக் கூட ஆள் இல்லையே! எல்லாரோடயும் சண்டை போட்டுக்கிட்டிருக்கான். யார் இவனுக்கு உதவ வருவாங்க? இப்படியா ஒத்தன் பைத்தியக்காரனா இருப்பான்?" என்று புலம்பினாள் பார்வதி.

"பைத்தியத்துக்குக் கூடத் தனக்கு எது நல்லதுன்னு தெரியும் அத்தை!" என்ற சாந்தி, "நான் எங்கப்பா வீட்டுக்குப் போய் கேட்டுப் பாக்கறேன். அவர் இரக்கப்பட்டு உதவினாதான் உண்டு"  என்று சொல்லி விட்டுத் தன் பெற்றோர் வீட்டுக்குக் கிளம்ப ஆயத்தமானாள்.

குறள் 873:
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.

பொருள்: 
தன்னந் தனியனாக இருந்து கொண்டு, பலரையும் பகைவர்களாக்கிக் கொள்பவன் பித்தரிலும் அறிவற்றவன்.

874. பகைவர் ஜாக்கிரதை!

சொந்த ஊருக்குக் கிளம்பும்போது, அப்பா சொன்னார்.

"ஊருக்கு உன்னைத் தனியா அனுப்பறதுக்கு எனக்கு மனசே இல்லை. கோவிலுக்கு நம்ம வேண்டுதலை நிறைவேற்றியே ஆகணும். என்னால பயணம் செய்ய முடியாது. அதனாலதான் உங்க ரெண்டு பேரையும் தனியா அனுப்ப வேண்டி இருக்கு" என்றார், என்னையும் என் மனைவியையும் பார்த்து.

"தனியாப் போனா என்னப்பா? நாங்க என்ன சின்னக் குழந்தைங்களா?" என்றேன் நான்.

"உனக்குத் தெரியாது. அருணாசலத்துக்கும் நமக்கும் வெட்டு, குத்து அளவுக்குப் பகை. என்னை அவன் வெட்டி இருக்கான். அவனை நான் வெட்டி இருக்கேன். நீதான் என் உடம்பில தழும்பெல்லாம் பாத்திருக்கியே! நம்ம நிலத்தில கொஞ்சத்தை இப்பவும் அவன் ஆக்கிரமிச்சிருக்கான். போதும் போதாததுக்கு, அவன் கோவில் டிரஸ்டி வேற!"

"அப்பா! அவர் சிவன் கோவில் டிரஸ்டி. நாங்க வேண்டுதலை நிறைவேற்றப் போறது பெருமாள் கோவில்ல. அதனால ஒண்ணும் பிரச்னை வராது."

"அவன் வம்படி பிடிச்சவன். பெருமாள் கோவில்ல கூட வந்து தகராறு பண்ணுவான். ஜாக்கிரதையா இருந்துக்க!" என்று எச்சரித்தார் அப்பா.

நாங்கள் பெருமாள் கோவிலுக்குச் சென்றபோது, அங்கே அருணாசலம் நின்றிருந்தார். அப்பா சொன்னபடியே, தகராறு செய்ய வந்து விட்டார் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.

அவர் என்னைப் பார்த்துச் சிரித்தது போல் இருந்தது. ஆனால், நான் அவர் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்து, வேறு பக்கம் திரும்பிக் கொண்டேன்.

பூஜை முடிந்ததும், தீபாராதனைத் தட்டுடன் வெளியே வந்த அர்ச்சகர், தயக்கத்துடன் அருணாசலம் பக்கம் சென்றார். 'பூஜைக்கு ஏற்பாடு செய்திருப்பது நான், முதல் மரியாதை அருணாசலத்துக்கா?' என்று நான் அர்ச்சகரைக் கேட்க நினைத்தேன். அதற்குள், அருணாசலம் என்னைக் கைகாட்ட, அர்ச்சகர் என்னிடம் வந்தார்.

பூஜை முடிந்து நாங்கள் கிளம்பிய சமயம், அருணாசலம் என்னிடம் வந்து, "தம்பி! நாளைக்குத்தானே ஊருக்குப் போறீங்க? நாளைக்கு சிவன் கோவில்ல பூஜை ஏற்பாடு செஞ்சிருக்கேன். நீங்க நிச்சயம் கலந்துக்கணும். பூஜை முடிஞ்சதும், என் வீட்டில விருந்து. அதிலேயும் நீங்க கலந்துக்கணும்!" என்றார்.

"எதுக்குங்க? வேண்டாம்!" என்றேன், நான் சங்கடத்துடன்.

"நம்ம குடும்பத்துக்குள்ள இருக்கற பகை வேற. அது இன்னும் அப்படியேதான் இருக்கு. உங்க நிலத்தை நான் அபகரிச்சதா உங்க அப்பா சொல்லுவாரு. ஆனா என்னோட நிலம் இன்னும் நிறைய உங்ககிட்ட இருக்குன்னு நான் சொல்லுவேன். இது என் அப்பா, உன் தாத்தா அவங்க காலத்திலேந்தே இருக்கற பிரச்னை. ஆனா, நீ இப்ப நம்ம ஊருக்கு ஒரு விருந்தாளியா வந்திருக்க. ஊருக்கு வர விருந்தாளிகளை உபசரிக்கிறது எங்க குடும்பப் பழக்கம். நீங்க வரப் போறீங்கன்னு தெரிஞ்சுதான், சைவச் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செஞ்சிருக்கேன். வழக்கமா அசைவச் சாப்பாடுதான் இருக்கும். இந்த வருஷம் அசைவச் சாப்பாடு  கிடைக்காதேன்னு ஊர்ல பல பேரு வருத்தப்படறாங்க! அதனால, கண்டிப்பா வந்துடுங்க!" என்ற அருணாசலம், என் மனைவியைப் பார்த்து, "நாளைக்குப் பூஜைக்கும், விருந்துக்கும் உன் புருஷனை அழைச்சுக்கிட்டு வர வேண்டியது உன் பொறுப்பும்மா!" என்றார் சிரித்தபடியே.

குறள் 874:
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு.

பொருள்: 
பகைவர்களையும் நண்பர்களாகக் கருதிப் பழகுகின்ற பண்புள்ளவனின் பெருந்தன்மையில் இந்த உலகம் அடங்கும்.

875. துருவங்கள் இணைந்தால்...

கோபி இண்டஸ்டிரீஸ் அதிபர் ஜெயகோபி, தன் அலுவலகத்துக்கு வந்த கோபால் என்டர்பிரைஸ் அதிபர் ராஜகோபாலையும், அந்த நிறுவனத்தின் நிர்வாகி அசோக்கையும் வரவேற்றார்.

"நீங்க என்னை சந்திக்கணும்னு சொன்னதும் எனக்கு வியப்பா இருந்தது. சொல்லுங்க, என்ன விஷயம்?" என்றார் ஜெயகோபி.

"நாம ரெண்டு பேரும் தொழில்ல போட்டியாளர்கள். கடந்த ரெண்டு மூணு வருஷமா, நாம கடுமையா மோதிக்கிட்டிருக்கோம். நமக்குள்ள, கிட்டத்தட்ட ஒரு விரோத பாவமே வளர்ந்துடுச்சு. அப்படி இருக்கக் கூடாது, அதை மாத்தணும்னு நினைச்சுத்தான், உங்களை சந்திக்க விரும்பினேன். நீங்களும் ஒத்துக்கிட்டீங்க. அதுக்கு நன்றி!" என்றார் ராஜகோபால். 

ஜெயகோபி மௌனமாக இருந்தார்.

"நான் யோசிச்சுப் பார்த்தேன். உலகத்தில போட்டிங்கறது இயல்பானது. போட்டியாளரை நாம ஏன் விரோதியா நினைக்கணும்?" என்று தொடர்ந்தார் ராஜகோபால்.

"நண்பரா நினைச்சு விட்டுக் கொடுத்துடலாமா? நீங்க விட்டுக் கொடுக்கப் போறீங்களா, இல்லை நான் விட்டுக் கொடுக்கணும்னு கேக்கறதுக்காக வந்திருக்கீங்களா?" என்றார் ஜெயகோபி, கேலிச் சிரிப்புடன்.

"விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனா, ஒரு உடன்பாட்டுக்கு வரலாமே?"

"என்ன உடன்பாடு?"

"உங்களுக்குன்னு சில முக்கிய வாடிக்கையாளர்கள் இருப்பாங்க. அவங்களை நாங்க அணுக மாட்டோம். அது மாதிரி எங்களோட முக்கிய வாடிக்கையாளர்களையும் நீங்க அணுகாம இருக்கணும். மற்ற வாடிக்கையாளர்ளைப் பொருத்தவரை, நாம ரெண்டு பேருமே போட்டி போடலாம்."

"இது அவ்வளவு எளிமையா இருக்கும்னு நினைக்கிறீங்களா?" என்றார் ஜெயகோபி.

"அப்படி நினைக்கலை. பேசித் தீர்க்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கு. நானும் என்னோட மானேஜர் அசோக்கும் சேர்ந்து பேசி, ஒரு மெமோ தயாரிச்சிருக்கோம். அதில, நாம எந்த விதங்கள்ள ஒத்துழைக்கலாம், எந்த வகையில போட்டி போடலாம், நாம சேர்ந்து செயல்பட்டா நம்ம சப்ளையர்கள்கிட்டேந்து என்னென்ன சலுகைகளை வாங்க முடியும், ஒத்தருக்கொருத்தர் இடையிலான தகவல் பரிமாற்றத்தால, என்னென்ன நன்மைகள் கிடைக்கும்னெல்லாம் பட்டியல் போட்டிருக்கோம், பாருங்க!" என்று கூறி, ஜெயகோபியிடம் ஒரு கோப்பைக் கொடுத்தார் ராஜகோபால்.

கோப்பைப் பிரித்துப் பார்த்த ஜெயகோபி, சில விநாடிகள் அதைப் புரட்டிப் பார்த்து விட்டு, "இன்டரஸ்டிங். செயல்படுத்தக் கூடிய விஷயங்களாத்தான் தோணுது. நான் இதைப் படிச்சுப் பாக்கறேன். அதுக்கப்புறம், நாம மறுபடி சந்திச்சுப் பேசலாம்" என்றார், புன்னகையுடன். 

முதல்முறையாக, ஜெயகோபியின் முகத்தில் நட்பின் சாயல் தெரிந்ததை ராஜகோபால் கவனித்தார்.

"அப்ப, ரெண்டு நாள் கழிச்சு நான் உங்ளை வந்து பாக்கட்டுமா?" என்றார் ராஜகோபால்.

"எதுக்கு? இப்ப நீங்க என் அலுவலகத்துக்கு வந்திருக்கீங்க. அடுத்த முறை, நான் உங்க அலுவலகத்துக்கு வரதுதானே மரியாதையா இருக்கும்?  நமக்குள்ள ஏற்படப் போற உடன்பாடு, உங்க அலுவலகத்திலேயே இறுதியானதா இருக்கட்டுமே!" என்றபடி, புன்னகையுடன் கைநீட்டினார் ஜெயகோபி.

நம்ப முடியாத மகிழ்ச்சியுடன், ஜெயகோபியின் கையைப் பற்றிக் குலுக்கி விட்டு விடைபெற்றார் ராஜகோபால்.

ருவரும் காரில் வரும்போது, "எதிர் துருவமா இருந்த கோபி இண்டஸ்ட்ரீஸோட இணைஞ்சு செயல்படலாம்னு திடீர்னு எப்படி சார்  உங்களுக்குத் தோணிச்சு?" என்றார் அசோக்.

"நாம ரெண்டு எதிரிகளோட போராட வேண்டி இருந்தது. கோபி இண்டஸ்ட்ரீஸ் ஒரு எதிரின்னா, லக்ஷ்மி என்டர்பிரைசஸ் மற்றொரு எதிரி. ரெண்டு எதிரிகளைச் சமாளிக்கறது கஷ்டமா இருந்ததால, ஒரு எதிரியோட சமரசம் பண்ணிக்கலாம்னு நினைச்சு, கோபி இண்டஸ்ட்ரீஸை அணுகினேன். அவர் நம்ம சமரசத்தை ஒத்துப்பாரு போலத்தான் இருக்கு."

"ஆனா, நீங்க ரெண்டு பேரும் லக்ஷ்மி என்டர்பிரைசஸைப் பத்திப் பேசவே இல்லையே!"

"பேசலை. ஆனா நம்மோட சேர்ந்து செயல்பட்டா, அவங்களுக்கும் லக்ஷ்மி என்டர்பிரைசஸ் மட்டும்தான் எதிரியா இருப்பாங்க, ரெண்டு எதிரிகளோட மோத வேண்டி இருக்காதுன்னு ஜெயகோபி புரிஞ்சுக்கிட்டிருப்பாரே!" என்றார் ராஜகோபால். 

குறள் 875:
தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.

பொருள்: 
தனக்கு உதவியான துணையே இல்லை, பகையோ இரண்டு, தானோ ஒருவன், இந்நிலையில், அப்பகைகளில் ஒன்றை இனிய துணையாகக் கொள்ள வேண்டும்.

876. விரோதியா, இல்லையா?

"இத்தனை வருஷமா இந்த அலுவலகத்தில வேலை செய்யற. குமார் உனக்கு எதிரா வேலை செய்யறாங்கறதை, இன்னுமா நீ புரிஞ்சுக்கல?" என்றான் ரகுவின் சக ஊழியன் சந்திரன்.

"தெரியல. இந்த வருஷம் எனக்குப் பதவி உயர்வு கிடைக்காம போனபோது, அவன்தான் அதுக்குக் காரணமா இருப்பானோன்னு நினைச்சேன். ஜி. எம்முக்கு பி ஏவா இருக்கறதால, என்னைப் பத்தி அவர்கிட்ட தப்பா ஏதாவது சொல்லி இருப்பானோன்னு எனக்கு ஒரு  சந்தேகம் இருந்தது" என்றான் ரகு.

"அதில என்ன சந்தேகம்? அவன்தான் அப்படி செஞ்சிருப்பான். உனக்குப் பதவி உயர்வு கிடைக்காதது எங்க எல்லாருக்குமே அதிர்ச்சியாத்தான் இருந்தது."

"ஆனா, அவனுக்கு என் மேல விரோதம் இருக்க எந்தக் காரணமும் இல்லையேன்னு நினைச்சு, நான் அந்த சந்தேகத்தைப் பெரிசா நினைக்கல."

"இனிமேயாவது எச்சரிக்கையா இருந்துக்க!"

"குமார்கிட்ட எச்சரிக்கையா இருன்னு சொன்னேனே! அப்படியும் அவன்கிட்ட நெருங்கிப் பழகற போல இருக்கே!" என்றான் சந்திரன்.

"ஹோட்டலுக்குப் போறேன், வரியான்னு கூப்பிட்டான். போயிட்டு வந்தேன்" என்றான் ரகு.

"அவன்கிட்ட நெருக்கமா இருக்கலாம்னு முயற்சி செய்யறியா? கவுத்துடுவான்!"

"நெருக்கமா இருக்க முயற்சி செய்யல. ஆனா விலகி இருக்கவும் விரும்பல!"

"அப்படீன்னா? அவன் உனக்கு எதிரா செயல்படறாங்கறதை நீ நம்பலையா?"

"அது எனக்குத் தெரியாது. இப்ப நம்ம கம்பெனி நிலைமை ரொம்ப மோசமா இருக்கறது உனக்குத் தெரியும். சில பேரை வேலையை விட்டுத் தூக்கிட்டாங்க. அடுத்தாப்பல யாரைத் தூக்கப் போறாங்களோன்னு எல்லாருமே பயந்துக்கிட்டிருக்கோம். இந்தச் சூழ்நிலையில, குமார் எனக்கு எதிரா இருக்கானா இல்லையான்னு ஆராய்ச்சி பண்றதில எந்தப் பயனும் இல்லை. அதே சமயம், அவனை விட்டு விலகி இருக்கவும் நான் விரும்பல. இவன் ஏன் தன்கிட்டேந்து விலகிப் போறான்னு அவன் நினைக்கக் கூடாது, இல்ல? அதனால, ஒரு மாதிரி பாலன்ஸ் பண்ணிக்கிட்டிருக்கேன்!" என்றான் ரகு.

குறள் 876:
தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.

பொருள்: 
ஒருவனது பகையை முன்பே அறிந்திருந்தாலும், அறியாமல் இருந்தாலும், ஒரு  நெருக்கடி வரும்போது, அவனை அறிந்து கொள்ள முயற்சி செய்யாமலும், அவனை விலக்காமலும் அப்படியே விட்டு விட வேண்டும்.

877. உதவி கேட்ட எதிரி!

நிர்வாக இயக்குனர் சபாபதியின் அறையிலிருந்து அவருடைய நண்பர் பரமசிவம் வெளியேறியதும், நிறுவனத்தின் மேலாளர் முரளி நிர்வாக அதிகாரியின் அறைக்குச் சென்றார்.

"எப்படி இருக்கு நிலைமை?" என்றார் சபாபதி.

"நாம கொடுத்திருக்கிற செக்குளை கிளியர் பண்ண, நம்ம அக்கவுன்ட்ல இன்னும் அஞ்சு லட்சம் ரூபா டெபாசிட் பண்ணணும். நாம செக் கொடுத்தவங்ககிட்ட சொல்லி, செக்குகளை ரெண்டு நாள் கழிச்சு பாங்க்ல போடச் சொல்லி இருக்கேன். அதுக்குள்ள ஏதாவது ஏற்பாடு செய்யணும்!" என்றார் முரளி.

"என்ன செய்யறதுன்னு தெரியல. நான் ரொம்ப டென்ஸா இருக்கேன். இந்தச் சமயம் பாத்து இந்தப் பரமசிவம் வேற வந்துட்டாரு. என் நிலைமை தெரியாம, அவர் பாட்டுக்குப் பேசிக்கிட்டிருந்தாரு. அவரை அனுப்பி வைக்கறதுக்குள்ள பெரும்பாடா ஆயிடுச்சு!"

"நமக்கு பிரச்னை இருக்குன்னு சொல்லி, அவரை அப்புறம் வரச் சொல்லி இருக்கலாமே சார்!"

"என்னோட கஷ்டங்களை என் நண்பர்கள்கிட்ட சொல்றதை, நான் எப்பவுமே விரும்பறதில்லை. அவங்களாத் தெரிஞ்சுக்கிட்டா, அது வேற விஷயம். சரி. நான் போய் யார்கிட்டேயாவது பண உதவி கிடைக்குமான்னு பாக்கறேன்!" என்று கூறியபடி எழுந்தார் சபாபதி.

"சார்! இன்னொரு விஷயம். சந்திரா இண்டஸ்டிரீஸ்லேந்து ஃபோன் பண்ணினாங்க. அவங்களுக்கு அர்ஜன்ட்டா ஒரு ஆர்டர் வந்திருக்காம். அவங்ககிட்ட சரக்கு இல்லையாம். நம்மகிட்ட கேக்கறாங்க" என்றார் முரளி, தயங்கியபடி.

"தொழில்ல போட்டி போடறவங்களுக்கு உதவி செய்யலாம். ஆனா, சந்திரா இண்டஸ்ட்ரீஸ் நம்மை விரோதிகளா நினைச்சுப் பல காரியங்க செஞ்சிருக்காங்க. நம்மைப் பத்தி கமர்ஷியல் டாக்ஸ் டிபார்ட்மென்ட்டுக்குத் தப்பான தகவல் கொடுத்து, அதனால அவங்க இங்கே ரெயிட் பண்ணினாங்க. நாம கணக்கெல்லாம் சரியா வச்சிருக்கறதால, அவங்களுக்கு எதுவும் கிடைக்கல. ஆனா, ரெய்டுன்னாலே மார்க்கெட்ல நம்மைப் பத்தித் தப்பான ஒரு அபிப்பிராயம் உருவாயிடுதே! அப்புறம், நம்ம சீனியர் டெக்னீஷியன் ஒத்தரை அதிக சம்பளம் கொடுத்து, நம்மகிட்டேந்து எடுத்துக்கிட்டாங்க. இன்னும் பல விஷயங்கள் நடந்திருக்கு. அதனால, அவங்களோட எந்த சமரசமும் செஞ்சுக்கறதில்லேன்னு நாம முடிவு செஞ்சிருக்கோமே!" என்றார் சபாபதி.

"அதில்ல சார். இப்ப நமக்கு இருக்கற பொருளாதாரப் பிரச்னையில, நாம சரக்கு கொடுத்தா, ஒரு லட்ச ரூபா பணம் வரும். பணத்தை நாம முன்னாலேயே வாங்கிக்கிட்டு அப்புறம் சரக்கை அனுப்பலாம். இப்ப நமக்கு அது ரொம்ப உதவியா இருக்குமே சார்!"

"ஒத்தர் நமக்கு எதிரின்னு முடிவு செஞ்சப்பறம், அவங்ககிட்ட எந்தவிதமான மென்மையான அணுகுமுறையும் வச்சுக்கக் கூடாது - அதனால நமக்குப் பயன் கிடைச்சாக் கூட- என்பதுதான் என்னோட நிலை!" என்று கூறி விட்டு வெளியேறினார் சபாபதி.

குறள் 877:
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து.

பொருள்: 
நம் துன்பத்தைப் பற்றி அதை அறியாத நண்பர்களுக்குச் சொல்லக் கூடாது, பகைவரிடத்தில் மென்மை காட்டக் கூடாது.

878. கபால நாட்டின் அச்சுறுத்தல்

"அரசே! கபால நாட்டுப் படைகள் மீண்டும் நம் எல்லை தாண்டி வந்து, நம் வீரர்களைத் தாக்கி இருக்கிறார்கள். இதற்கு நாம் உடனே பதிலடி கொடுக்க வேண்டும்" என்றார் அமைச்சர்.

"அமைச்சரே! கபால நாடு நம்மைவிடப் பெரிய நாடு. அவர்கள் படைபலம் நம் படைபலத்தை விட மிகவும் அதிகம். அவர்களை எதிர்த்துப் போரிடும் வலிமை நமக்கில்லை. எனவே அவர்களுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை" என்றார் அரசர்.

"தாங்கள் கூறுவது சரிதான். நாம் கபால நாட்டுக்கு ஒரு தூதரை உடனே அனுப்பி சமாதானம் பேச வேண்டும்."

"மிகச் சரியாகச் சொன்னீர்கள் அமைச்சரே! அவர்களுடன் சமாதானம் பேசி, அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை அறிந்து வர, ஒரு சிறந்த தூதரை நாம் அனுப்ப வேண்டும். இந்தப் பணியை நீங்களே மேற்கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம்" என்றார் அரசர்.

"தங்கள் விருப்பம் அரசே!" என்றார் அமைச்சர்.

"என்ன அமைச்சரே! உங்கள் தூதுப் பயணம் எவ்வாறு அமைந்தது?" என்றார் அரசர்.

"மகிழ்ச்சிகரமாக இல்லை அரசே! சமாதானத்துக்கு அவர்கள் விதிக்கும் நிபந்தனைகளை, சுயமரியாதை உள்ள எந்த ஒரு நாட்டாலும் ஏற்றுக் கொள்ள முடியாது."

"நல்லது. நாம் அந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம்!" என்றார் அரசர், சிரித்தபடி.

"அப்படியானால்..." என்றார் அமைச்சர், குழப்பத்துடன்.

"அமைச்சரே! நீங்கள் கபால நாட்டுக்குச் சென்றபோது, இங்கே சில விஷயங்கள் நடந்தன. நம் நான்கு அண்டை நாடுகளுக்கும், இரண்டு இளவரசர்களையும் அனுப்பினேன். ஒவ்வொருவரும் இரண்டு நாடுகளுக்குச் சென்றனர் - என் ஓலையுடன். சிறிய நாடுகளான நாம் ஐவரும் இணைந்து செயல்படத் தீர்மானித்தால், நம் ஒன்றுபட்ட படைகளின் வலிமையால் கபால நாடு என்ற ஒரு பெரிய நாட்டை எதிர்த்து நிற்கலாம் என்று நான் யோசனை தெரிவித்தேன். அவர்களுக்கும் கபால நாடு ஒரு அச்சுறுத்தலாக இருப்பதால், நான்கு நாடுகளுமே என் யோசனையை ஏற்றுக் கொண்டு விட்டனர். இனி, கபால நாடு நம்மைத் தாக்கத் துணியாது. ஐந்து நாடுகளின் படைகளும் ஒன்றாகச் செயல்படப் போகின்றன என்ற செய்தியை நம் ஒற்றர்கள் மூலம் கபால நாட்டில் பரப்பி விட்டேன். இனி, நம் எல்லையில் நமக்குத் தொல்லை கொடுக்கும் வேலையில் கபால நாடு ஈடுபடாது!" என்றார் அரசர், பெருமிதத்துடன்.

குறள் 878:
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.

பொருள்: 
செய்யும் வகையை அறிந்து, தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு, தற்காப்புத் தேடிக் கொண்டால், பகைவரிடத்தில் ஏற்பட்ட செருக்கு தானாகவே அழியும்.

879. இலக்கிய அணிச் செயலாளர்

நன்மாறன் அந்தக் கட்சியில் சேர்ந்த சிறிது காலத்துக்குள்ளேயே, கட்சித் தலைவரின் நன்மதிப்பைப் பெற்று விட்டான். அவனுடைய பேச்சுத் திறமை, கட்சி மேடைளில் உரையாற்ற அவனுக்கு நிறைய வாய்ப்புக்களைப் பெற்றுத் தந்தது.

"நன்மாறனுக்குத்  தலைவர் ரொம்பவும்தான் இடம் கொடுக்கறாரு. போற போக்கைப் பாத்தா, அவன் நம்மையெல்லாம் தாண்டிப் போயிடுவான் போல இருக்கே!" என்றார் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏழுமலை.

"தலைவருக்கே சவாலாக வந்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல!" என்றார் மற்றொரு தலைவரான நாகப்பன்.

"தலைவர் அதுக்கெல்லாம் இடம் கொடுக்க மாட்டார்" என்றார் கரிகாலன் என்ற மற்றொரு மூத்த தலைவர்.

இந்த நிலையில், நன்மாறன் கட்சியில் தனக்கென்று ஒரு ஆதரவு அடித்தளத்தை அமைத்துக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகின

"தலைவர் இன்னுமா வேடிக்கை பாத்துக்கிட்டிருக்காரு? அவனைக் கட்சியை விட்டுத் தூக்க வேண்டாம்?" என்றார் ஏழுமலை, ஆவேசத்துடன்.

"இப்ப அவனைக் கட்சியை விட்டுத் தூக்கினா, கட்சிக்குள்ள அவன் வளருவதைப் பொறுக்காமதான், தலைவர் அவனைக் கட்சியை விட்டு நீக்கிட்டதா சொல்லுவாங்க. அதோட, அவன் மேல அனுதாபம் வரும். நம்ம கட்சியிலேந்தே சில பேர் அவன் பின்னால போவாங்க. அதானால, தலைவர் அப்படிச் செய்ய மாட்டாரு" என்றார் நாகப்பன்.

"சட்டமன்றத் தேர்தல்ல அவனுக்கு சீட் கொடுத்து, அவன் ஜெயிச்சான்னா, அவனுக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பாப்பாரோ என்னவோ!" என்றார் ஏழுமலை, கேலியாக.

"ஆபத்தானவங்களைப் பக்கத்தில வச்சுக்கறது கூட ஒரு நல்ல உத்திதான்!" என்றார் நாகப்பன்.

"நீங்க யாருமே தலைவரைப் புரிஞ்சுக்கல. தலைவரோட அணுகுமுறையே வித்தியாசமா இருக்கும். கட்சியில தன்னிச்சையா செல்படறவங்களை, அவர் விட்டு வைக்க மாட்டார். அவங்க தனக்குச் சவாலா வருவாங்கன்னு அவருக்குத் தெரியும். அவங்களை முளையிலேயே கிள்ளி எறிஞ்சுடுவாரு. இதுக்கு எத்தனையோ உதாரணங்களை என்னால சொல்ல முடியும்!" என்றார் கரிகாலன்.

'நீங்களே ஒரு உதாரணம்தானே! கட்சியில இரண்டாம் இடத்தில இருந்துக்கிட்டு, தலைவரைக் கவிழ்க்கப் பாத்த உங்களை ஒண்ணுமில்லாம ஆக்கி, எங்களோட உக்காந்து பேசிக்கிட்டிருக்கிற நிலைக்குக் கொண்டு வந்துட்டாரே!' என்று நினைத்துக் கொண்டார் நாகப்பன்.

சில நாட்கள் கழித்து, நன்மாறன் கட்சியின் இலக்கிய அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டதாகச் செய்தி வந்தது.

அந்தக் கட்சியில் ஒருவர் இலக்கிய அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டால், கட்சிக்குள் அவருடைய அரசியல் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாகப் பொருள். அவரிடமிருந்து ஒதுங்கியே இருக்க வேண்டும் என்று கட்சியில் அனைவருக்கும் கொடுக்கப்படும் சமிக்ஞை அது.

"நான் சொன்னேன் இல்ல, தலைவர் அவனை விட்டு வைக்க மாட்டார்னு? இனிமே அவன் ஆள் இல்லாத அரங்குகள்ள, 'தலைவரோட வெற்றிக்குக் காரணம் அவரது அரசியல் ஆளுமையா, அல்லது நிர்வாகத் திறமையா?'ன்னு பட்டிமன்றப் பேச்சாளர்களை வச்சு, பட்டிமன்றங்கள் நடத்திக்கிட்டிருக்க வேண்டியதுதான். கூட்டச் செலவுக்குக் கூடக் கட்சியில பணம் கொடுக்க மாட்டாங்க!' என்று சொல்லிச் சிரித்தார் கரிகாலன்.

குறள் 879:
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.

பொருள்: 
முள் மரத்தை இளையதாக இருக்கும்போதே வெட்ட வேண்டும், காழ்ப்பு ஏறி முதிர்ந்த நிலையில், வெட்டுகின்றவரின் கையை அது வருத்தும்.

880. முன்னாள் பார்ட்னர்

"தம்பிதுரை என் பார்ட்னரா இருந்தவர்தான். அவர் கணக்கில மோசடி பண்ணி, என்னை ஏமாத்தினதைக் கண்டுபிடிச்சு, அவரை நீக்கிட்டு,நான் இந்த நிறுவனத்தைத் தனியா நடத்திக்கிட்டிருக்கேன். ஆனா, வெளியில போனதிலேந்து, அவர் எனக்கு தொந்தரவு கொடுத்துக்கிட்டே இருக்காரு" என்றார் சிவசுப்பிரமணியன்.

"என்ன மாதிரி தொந்தரவு?" என்றார் சண்முகம். சண்முகம் சிவசுப்பிரமணியனின் நிறுவனத்துக்கு மூலப்பொருட்கள் சப்ளை செய்பவர்.

"பலவிதமான தொந்தரவுகள். உதாரணமா, எனக்கு நிறைய கடன் இருக்கு. என்னால சப்ளையர்களுக்குப் பணம் கொடுக்க முடியாதுன்னு ஒரு வதந்தியை சந்தையில பரப்பி இருக்காரு. இது உண்மையான்னு தெரிஞ்சுக்க, நீங்க என்னைப் பார்க்க நேரில வந்திருக்கீங்க. எத்தனை பேரு இந்த வதந்தியை நம்பி, என்னோட வியாபாரத் தொடர்பே வச்சுக்க வேண்டாம்னு முடிவு செஞ்சிருக்காங்களோ!"

"வேற என்ன தொந்தரவுகள்ளாம் கொடுப்பாரு?"

"வியாபாரத்தைக் கெடுக்க என்னென்ன செய்ய முடியுமோ, அதெல்லாம் செய்வாரு. என் வாடிக்கையாளர்கள்கிட்ட போய், சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் நான் கடன்ல பொருட்களை சப்ளை பண்றதா சொல்லி, அவங்களுக்கும் அது மாதிரி கடன்ல பொருட்களை சப்ளை பண்ணச் சொல்லி எங்கிட்ட கேட்கச் சொல்லித் தூண்டி விடுவாரு. நான் கணக்கில காட்டாம வியாபாரம் செய்யறதா இன்கம் டாக்ஸ், சேல்ஸ் டாக்ஸ் அதிகாரிகளுக்கெல்லாம் மொட்டைக் கடுதாசி எழுதிப் போடுவாரு. நான் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு வச்சிருக்கேன்னு லேபர் டிபார்ட்மென்ட்டுக்கு எழுதுவாரு."

"அடப்பாவமே!"

"அது மட்டுமா? என் ஆஃபீஸ்ல வேலை செஞ்ச ஒரு பொண்ணோட எனக்குத் தொடர்பு இருக்கறதா ஒரு பொய்யைப் பரப்பினாரு. என் மனைவி இதை நம்பல. ஆனா, அந்தப் பொண்ணு பாவம், அந்த அவதூறுக்கு பயந்து வேலையை விட்டுப் போயிட்டாங்க."

"இப்படிப்பட்ட எதிரிகளை விட்டு வைக்கக் கூடாது சார்!"  என்றார் சண்முகம்.

"என்ன செய்ய முடியும்?"

"போலீஸ்ல புகார் கொடுக்கணும். அல்லது ஏதாவது செஞ்சு அவரை முடக்கணும். இந்த மாதிரி எதிரிகளோட வாழறது உயிர்க்கொல்லி நோய்களோட வாழற மாதிரி. நம்ம வாழ்க்கைக்கே அச்சுறுத்தலானவங்க இவங்க!" என்றார் சண்முகம்.

குறள் 880:
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.

பொருள்: 
பகைவரின் சக்தியை அழிக்க முடியாதவர்கள், மூச்சு இருக்கும் வரை உயிர் வாழ்வார்கள் என்று கூற முடியாது.

             அறத்துப்பால்                                               காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...