அதிகாரம் 71 - குறிப்பறிதல்

திருக்குறள்
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 71
குறிப்பறிதல்

701. சுருக்கெழுத்தாளரின் குறிப்புகள்!

பிரதீப் என்டர்பிரைசஸ் நிர்வாகிகளுடனான முக்கியமான சந்திப்புக்காக விஜய் எஞ்சினியரிங் நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் தங்கள் அலுவலகத்தின் கான்ஃபரன்ஸ் அறையில் கூடி இருந்தனர்.  

நிர்வாக இயக்குனரின் சுருக்கெழுத்தாளனான கிருஷ்ஷும் குறிப்புகள் எடுத்துக் கொள்வதற்காகப் பின் வரிசை இருக்கை ஒன்றில் அமர்ந்திருந்தான்

பிரதீப் என்டர்பிரைசஸைத் தங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளராக ஆக்குவதற்கான முயற்சிக்கான சந்திப்பு அது.

கூட்டம் துவங்குமுன் விஜய் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விஜயன் பிரதீப் என்டர்பிரைசஸ் நிர்வாக இயக்குனர் பிரதீப்பிடம், "சார்! உங்களுக்கு ஆட்சேபம் இல்லேன்னா நாம விவாதிக்கிற முக்கியமான பாயின்ட்களை எங்க ஸ்டெனோ கிருஷ் குறிப்பு எடுத்துப்பாரு" என்றார்.

பிரதீப் ஆமோதிப்பதுபோல் தலையசைத்தார்.

கூட்டம் முடிந்ததும் கூட்டத்தில் கலந்து கொண்ட மூத்த மானேஜர்களைத் தன் அறைக்கு அழைத்தார் நிர்வாக இயக்குனர் விஜயன். கிருஷ்ஷும் அழைக்கப்பட்டு மானேஜர்களுக்குப் பின்னால் அமர வைக்கப்பட்டான்.

பிரதீப் என்டர்பிரைசஸ் அதிகாரிகளுடன் தாங்கள் பேசிய விவரங்கள் பற்றி அவர்கள் விவாதித்தனர்.

"சார்! நாம சொன்ன இந்த யோசனை அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்!" என்றார் மார்க்கெடிங் மானேஜர் தனபால் உற்சாகமாக.

விஜயன் பின்னால் உட்கார்ந்திருந்த கிருஷ்ஷைப் பார்க்க, கிருஷ் தலையைப் பக்கவாட்டில் ஆட்டினான்.

"தனபால்! ஐ திங்க் யூ ஆர் ராங். அவங்களுக்கு இந்த யோசனை பிடிக்கலேன்னு நினைக்கிறேன்!" என்றார் விஜயன்.

"எப்படி சார் சொல்றீங்க?" என்றார் தனபால்.

"கிருஷ்ஷோட நோட்ஸில அப்படித்தான் இருக்கு. இல்லை, கிருஷ்?" என்றார் விஜயன்.

அனைவரும் பின்னால் திரும்பி கிருஷ்ஷைப் பார்த்தனர். அவன் மௌனமாகத் தலையாட்டினான்.

"இல்லை சார்! எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. அவங்க இதை மறுத்து எதுவும் சொல்ல. கிருஷ் தப்பா நோட்ஸ் எழுதி இருக்காரு!" என்றார் தனபால் உறுதியாக.

"அவங்க எதுவும் சொல்லல தனபால். ஆனா அதனால அவங்க அதை ஏத்துக்கிட்டாங்கன்னு அவசியம் இல்லை. ஒரு மரியாதைக்காக அவங்க மறுப்பு சொல்லாம இருந்திருக்கலாம்!"

"அப்ப எப்படி சார் கிருஷ் எடுத்த நோட்ஸில அவங்க அதை ஏத்துக்கலேன்னு இருக்கும்?"

"தனபால்! கிருஷ் எடுத்தது ஷார்ட்ஹேண்ட் நோட்ஸ் இல்ல. அவங்களோட முகக் குறிப்பிலேந்து அவர் புரிஞ்சுக்கிட்டதைத்தான் அவர் குறிப்பு எடுத்திருக்கார்!" என்றார் விஜயன் சிரித்தபடி.

அனைவரும் குழப்பத்துடன் விஜயனைப் பார்த்தார்.

"நாம மத்தவங்களோடபேசறப்ப அவங்க பேச்சைக் கேட்கறதிலதான் கவனம் செலுத்தறோம். அவங்க முகக் குறிப்பை கவனிக்கறதில்ல. மனிதர்கள் மௌனமாக இருக்கறப்ப கூட பல செய்திகளை அவங்க முகக் குறிப்பிலேந்து நாம புரிஞ்சுக்க முடியும். கிருஷ் என்னோட சுருக்கெழுத்தாளரா இருக்கற இந்த ரெண்டு மாசத்தில அவர்கிட்ட இந்தத் திறமை இருக்குன்னு நான் புரிஞ்சுக்கிட்டேன். என் அறைக்கு வந்து யாராவது எங்கிட்ட பேசிட்டுப் போனப்பறம், அவங்க முகக் குறிப்பிலேந்து தான் புரிஞ்சுக்கிட்டதை கிருஷ் எங்கிட்ட சொல்லுவாரு. அதெல்லாம் சரியா இருந்திருக்கு. என்னால உணர முடியாத விஷயங்களை அவரு எனக்கு உணர்த்தி இருக்காரு. அதனாலதான் இந்த முக்கியமான மீட்டிங்குக்கு அவரை வரச் சொன்னேன்!" என்றார் விஜயன். 

குறள் 701:
கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி.

பொருள்:
ஒருவர் எதுவும் பேசாமலிருக்கும் போதே அவர் என்ன நினைக்கிறார் என்பதை முகக்குறிப்பால் உணருகிறவன் உலகத்திற்கே அணியாவான்.

702. முதலீடு வேண்டாம்!

ரமணி, குரு இருவரும் தாங்கள் ஆரம்பிக்க இருக்கும் புதிய தொழிலுக்குப் பொருளாதார உதவி கோர, நிதி முதலீட்டாளர் சண்முகத்தைச் சந்திக்கச் சென்றனர்.

அவர்கள் சொன்ன விவரங்களைக் கேட்டுக் கொண்ட சண்முகம், "என்னைப் பொருத்தவரையிலும் உங்க பிசினஸ் பிளான் நல்லாத்தான் இருக்கு. இதில நான் முதலீடு செய்ய முடியும்னு நினைக்கறேன். ஆனா உங்க ப்ராஜக்டை என்னோட ஃபைனான்ஸ் டீம் படிச்சுப் பார்த்து அப்ரூவ் பண்ணினப்பறம்தான் என்னோட இறுதி முடிவைச் சொல்லுவேன். பொதுவா ஒரு ப்ராஜக்டை மேலோட்டமாப் பாக்கறப்பவே எனக்கு அது லாபகரமானதா இல்லையான்னு தெரிஞ்சுடும். இதுவரையிலும் என்னோட முடிவைத்தான் என் ஃபைனான்ஸ் டீமூம் சொல்லி இருக்காங்க. ஆனாலும் இப்படி ஒரு சிஸ்டம் வச்சிருக்கேன். சிஸ்டம் வேணும் இல்ல?" என்று சொல்லிச் சிரித்தார் சண்முகம்.

"சரி சார்!" என்றான் ரமணி.

"அதுக்கு முன்னால என்னோட டர்ம்ஸை சொல்லிடறேன்" என்ற சண்முகம் தன் நிபந்தனைகளைக் கூறினார்.

சண்முகம் தன் நிபந்தனைகளைக் கூறி முடித்ததும், "சரி சார்!" என்று கூறி இருவரும் எழுந்தனர்.

"ப்ராஜக்ட் ரிபோர்ட்டைக் கொடுக்காம போறீங்களே!அதைப் படிச்சுப் பார்த்துத்தானே என்னோட டீம் முடிவு செய்யணும்?" என்றார் சண்முகம்.

"இல்லை சார். இதில ஒண்ணு ரெண்டு மாறுதல்கள் செய்ய வேண்டி இருக்கு. சின்ன மாறுதல்கள்தான். ஃபினிஷிங் டச்சஸ் மாதிரி. உங்க டீம் இதைப் படிக்கறப்ப அது பர்ஃபெக்டா இருக்கணும் இல்ல? அதானால இதை ஃபைனலைஸ் பண்ணிட்டு அப்புறம் கொண்டு வந்து கொடுக்கறோம்!" என்றான் குரு.

வெளியில் வந்ததும், "ப்ராஜக்ட் ரிபோர்ட்ல என்ன மாறுதல்கள் செய்யப் போற?" என்றான் ரமணி.

"ஒரு மாறுதலும் இல்ல. இவரோட முதலீடு நமக்கு வேண்டாம்னு நினைக்கிறேன்!" என்றான் குரு.

"ஏன்? அவர் சொன்ன நிபந்தனைகள் உனக்குப் பிடிக்கலையா!" என்றான் ரமணி.

"அவர் சொன்ன நிபந்தனைகள் பொதுவா எல்லாருமே சொல்றதுதான். அதில தப்பா எதுவும் இல்ல. ஆனா அவரோட நோக்கம் சரியானது இல்லேன்னு நினைக்கிறேன்!" என்றான் குரு.

"என்ன நோக்கம்?"

குரு தன் சந்தேகத்தை விளக்கியதும், "எந்த அடிப்படையில இப்படிச் சொல்ற?" என்றான் ரமணி வியப்புடன்.

"எனக்கு அப்படித் தோணுது. நாம வேணும்னா அவர்கிட்ட ஏற்கெனவே முதலீடு வாங்கினவங்க சில பேரைத் தேடிப் பிடிச்சு அவங்ககிட்ட கேட்டுப் பாக்கலாம்!"

"சரி" என்றான் ரமணி.

"ரமணி! நான் உன்னோட ஒர்க்கிங் பார்ட்னர்தான். நீதான் முதலீடு செய்யப் போற. அதனால நான் இப்படிச் சொல்றது அதிகப்பிரசங்கித்தனமா இருந்தா...."  என்றான் குரு தயக்கத்துடன்.

"சேச்சே! என்னடா இது? உன்னோட ஆலோசனை எனக்கு வேணுங்கறதுக்காகத்தானே உன்னை ஒர்க்கிங் பார்ட்னரா இருக்கச் சொல்லிக் கேட்டுக்கிட்டேன். உன் மனசில தோணினதை நீ வெளிப்படையா சொன்னது எனக்கு சந்தோஷமா இருக்கு. நாம விசாரிச்சுப் பார்த்துடலாம்!" என்றான் ரமணி, குருவின் முதுகில் தட்டியபடி.

நான்கைந்து நாட்களுக்குப் பிறகு குருவைத் தொலைபேசியில் அழைத்த ரமணி, "நீ நினைச்சது முழுக்க முழுக்க சரிதான். சண்முகம் இதுக்கு முன்னால முதலீடு செஞ்ச சில நிறுவனங்களை அவை லாபமா நடக்க ஆரம்பிச்சப்பறம் தானே எடுத்துக்க முயற்சி செஞ்சிருக்காரு. சில நிறுவனங்களை கபளீகரம் பண்ணிட்டாரு. சில பேரு இன்னும் அவரை எதிர்த்துப் போராடிக்கிட்டிருக்காங்க. ஆமாம், அவர் மனசில இப்படி ஒரு நோக்கம் இருக்கறதை நீ எப்படி தெரிஞ்சுக்கிட்ட?" என்றான்.

"எங்க வீட்டில ஒரு பூனை இருந்தது. ஒரு இரையைப் பாத்துட்டா அதை முழுங்கப் போறோங்கற ஒரு ஆனந்தமும், பெருமிதமும் அதோட கண்ணில தெரியும். சண்முகத்தோட கண்ணில அப்படி ஒரு உணர்வு இருந்த மாதிரி எனக்குத் தோணிச்சு. அதான் அப்படிச் சொன்னேன். நல்லவேளை என் சந்தேகம் தப்பா இருந்து ஒரு முதலீடு வாய்ப்பை நீ இழக்கக் காரணமா இருந்துடுவேனோன்னு பயந்துகிட்டே இருந்தேன்!" என்றான் குரு நிம்மதியுடன்.

"மத்தவங்க மனசில என்ன இருக்குங்கறது கடவுளுக்குத்தான் தெரியும்னு சொல்லுவாங்க. அது உனக்கும் தெரியுதுன்னா உங்கிட்ட இருக்கறது ஒரு தெய்வீக சக்திதான். உன்னை எனக்குத் துணையா வச்சுக்கிட்டதுதான் நான் செஞ்ச புத்திசாலித்தனமான விஷயம்!" என்றான் ரமணி உற்சாகத்துடன்.

குறள் 702:
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.

பொருள்:
அடுத்தவனின் மனக்கருத்தைச் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் கண்டுகொள்ளும் ஆற்றல் உள்ளவனைத் தெய்வத்திற்குச் சமமாக மதிக்க வேண்டும்.

703. வரதுவுக்கு என்ன வேலை அங்கே?

"பூனையை மடியில கட்டிக்கிட்டு சகுனம் பாக்கற மாதிரி, சேம்பர் ஆஃப் காமர்ஸ் மீட்டிங்குக்குப் போறப்ப இந்த வரதுவை ஏன் கூட அழைச்சுக்கிட்டுப் போறாரு நம்ம எம். டி?" என்றான் சாந்தன் எரிச்சலுடன்.

"ஏன், உன்னை அழைச்சுக்கிட்டுப் போகலியேன்னு உனக்குப் பொறாமையா?" என்றாள் அவன் பக்கத்து இருக்கையில் அமைந்திருந்த சரளா.

"மானேஜர்னு ஒத்தர் இருக்காரு. அவரையே அழைச்சுக்கிட்டுப் போகல. என்னை அழைச்சுக்கிட்டுப் போகலையேன்னு நான் ஏன் வருத்தப்படப் போறேன்?" என்றான் சாந்தன்.

"மானேஜரை அழைச்சுக்கிட்டுப் போனா உங்களையெல்லாம் யார் கட்டி மேய்க்கறது? மானேஜர் அவர் அறைக்குள்ள இருக்கறப்பவே நீங்க இப்படி அரட்டை அடிக்கிறீங்க. அவரும் ஆஃபீஸ்ல இல்லேன்னா இது ஆஃபீஸ் மாதிரியா இருக்கும்?" என்றார் மூத்த ஊழியர் குமாரசாமி.

"பெரிசுக்குத் தான் மட்டும்தான் வேலை செய்யறதா நினைப்பு! இவரு மாய்ஞ்சு மாய்ஞ்சு செய்யற வேலையை விட நாம பேசிக்கிட்டே செய்யற வேலை அதிகம்!" என்று சரளாவுக்கு மட்டும் கேட்கும்படி சிரித்துக் கொண்டே முணுமுணுத்தான்  சாந்தன்.

சேம்பர் ஆஃப் காமர்ஸ் கூட்டம் நடந்து கொண்டிருந்த அறைக்குள் வரதராஜன் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தான்.

நல்லசிவம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் கூட்டங்களுக்குத் தன் உதவியாளர் ஒருவரை அழைத்து வருவது மற்ற உறுப்பினர்களுக்குப் பிடிக்காவிட்டாலும், அவ்வாறு ஒரு உதவியாளரை அழைத்து வருவதற்கு விதிகளில் அனுமதி இருந்ததால் அதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

கூட்டம் முடிந்து தன் அலுவலகத்துக்கு வந்து தன் அறைக்குள் சென்ற நல்லசிவம் சில நிமிடங்களுக்குப் பிறகு வரதராஜனைத் தன் அறைக்கு அழைத்தார்.

"ரெண்டு பேரும் சேர்ந்து மீட்டிங் போயிட்டு இப்பதானே வந்தாங்க! அதுக்குள்ள எதுக்கு அவனைக் கூப்பிடறாரு எம் டி?" என்றான் சாந்தன் சரளாவிடம்.

"சேம்பர் ஆஃப் காமர்ஸ் மீட்டிங்ல நடந்த விஷயங்களைப் பற்றி விவாதிக்கறதுக்காக இருக்கும்!" என்றாள் சரளா கேலியாக.

"சொல்லு வரதா?" என்றார் நல்லசிவம்.

"நீங்க ஜாடை காட்டினப்பல்லாம் நீங்க ஜாடையில குறிப்பிட்டுக் காட்டின ஆட்களை கவனிச்சேன். சம்பந்தம் சார் பேசினதை நிறைய பேர் விரும்பல, கதிரேசன் சார் சொன்ன யோசனை பல பேருக்குப் பிடிச்சிருந்தது. சுந்தரேசன் சார், சண்முகம் சார் ரெண்டு பேருக்கு மட்டும் அதில விருப்பமில்லை. அப்புறம்..."

வரதராஜன் சொன்னதை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த நல்லசிவம், அவன் சொல்லி முடித்ததும், "எப்படிடா! நான் பக்கத்தில உக்காந்து அவங்க முகங்களைப் பார்த்துக்கிட்டிருக்கேன். நீ தூரத்தில உக்காந்துக்கிட்டிருக்க. எனக்குப் புலப்படாத விஷயங்களெல்லாம் உனக்குப் புலப்படுதே! ஒவ்வொரு தடவையும் இதைப் பாத்து ஆச்சரியப்படறேன் நான்!" என்றார்.

"எனக்குத் தோணினதை சொல்றேன் சார். நான் சொல்றதெல்லாம் சரியாங்கறது உங்களுக்குத்தான் தெரியும்!" என்றான் வரதராஜன் சங்கடத்துடன் நெளிந்தபடி.

"அதுதான் ஒவ்வொரு தடவையும் சரியா இருக்கே! உனக்கு இருக்கற திறமை கடவுள் உனக்குக் க் கொடுத்த ஒரு கிஃப்ட். நீ எனக்குக் கிடைச்ச கிஃப்ட்!" என்ற நல்லசிவம், "மீட்டிங்குக்கெல்லாம் உன்னை ஏன் நான் அழைச்சுக்கிட்டுப் போறேன்னு ஆஃபீஸ்ல யாராவது கேட்டாங்களா?" என்றார் தொடர்ந்து.

"கேட்டாங்க. நீங்க சாப்பிட வேண்டிய மாத்திரைகளை உங்களுக்கு நேரத்துக்கு எடுத்துக் கொடுக்கறதுக்காகத்தான் என்னை அழைச்சுக்கிட்டுப் போறீங்கன்னு சொல்லி இருக்கேன்!" என்றான் வரதராஜன்.

"குட்!" என்றார் நல்லசிவம். 

குறள் 703:
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.

பொருள்:
தான் குறிப்புச் செய்ய, அதைக் கண்டு பிறர் முகத்தையும் கண்ணையும் பார்த்தே அவர் மனக்கருத்தைக் கண்டு சொல்லும் திறம் மிக்கவரைத் தன்னிடம் இருக்கும் செல்வங்களுள் எதைக் கொடுத்தேனும் துணையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

704. என்னைப் போல் ஒருவன்!

"சார்! உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும். தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே?" என்றான் கேசவன்.

"கேளுப்பா!" என்றார் கிளை மேலாளர் கண்ணன்.

"நானும் மாதவனும் ஒரே படிப்புதான் படிச்சிருக்கோம். ஒரே நேரத்திலதான் இந்த நிறுவனத்தில வேலைக்குச் சேர்ந்தோம். ரெண்டு பேருமே ஒரே வேலைதான் செய்யறோம். ஒரே சம்பளம்!"

"இன்னும் சில ஒற்றுமைகளை விட்டுட்டியே?"

"எதை சார்?"

"ரெண்டு பேருக்குமே ரெண்டு கை, ரெண்டு கால், ரெண்டு கண், ஒரு வாய், ஒரு மூக்குதான் இருக்கு!"

"சார்!"

"விளையாட்டுக்குச் சொன்னேன். சொல்லு."

"நாங்க ரெண்டு பேரும் உங்ககிட்டதான் நேரடியா வேலை செய்யறோம். ஆனா நீங்க அவன்கிட்ட நிறைய விஷயங்களை சொல்றீங்க. ஆனா எங்கிட்ட அப்படி சொல்றதில்ல."

கண்ணன் கேசவனை உற்றுப் பார்த்தார்.

"சார்! நான் கேட்டது தப்பா இருந்தா மன்னிச்சுடுங்க. நீங்க எங்ககிட்ட இயல்பாப் பேசறீங்க. எதுவா இருந்தாலும் தயக்கம் இல்லாம கேக்கலாம்னு சொல்லி இருக்கீங்க. அதனாலதான் கேட்டேன்!" என்றான் கேசவன், தவறாகக் கேட்டு விட்டோமோ என்ற அச்சத்துடன்.

"நீ கேட்டது தப்புன்னு நான் சொல்லலியே! உன் கேள்விக்கு எப்படி பதில் சொல்றதுன்னு யோசிச்சேன், அவ்வளவுதான். சரி. நான் உங்ககிட்ட சொல்லாத விஷயங்களை மாதவன்கிட்ட சொன்னேன்னு எப்படிச் சொல்ற?"

"எங்க ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி வேலைதான் நீங்க கொடுக்கறீங்க. ஆனா மாதவன் கூடுதலா சில வேலைகளைச் செய்யறான். நீங்க சொல்லித்தானே அவன் அப்படிச் செஞ்சிருப்பான். எங்கிட்ட சொல்லி இருந்தா நானும் அதையெல்லாம் செஞ்சிருப்பேனே!"

"ஒரு நிமிஷம் இரு!" என்ற கண்ணன் மணியை அடித்து பியூனை அழைத்து மாதவனை அழைத்து வரச் சொன்னார்.

மாதவன் வந்ததும், "மாதவன்! போன வருஷத்து ஆடிட் ரிபோர்ட்டை எனக்கு அனுப்பி இருக்கியே! நான் அதைக் கேக்கலையே?" என்றார்.

"இல்லை சார். ரெண்டு மூணு நாள்ள ஆடிட்டர்கள் வருவாங்க, எல்லா ரிகார்டுகளையும் எடுத்து வைன்னு சொன்னீங்க. அவங்க வரும்போது போன வருஷம் ஆடிட்ல சொன்ன விஷயங்களை சரி பண்ணிட்டோமான்னு நீங்க பார்க்க விரும்புவீங்கன்னு நினைச்சேன். அதெல்லாம் வேண்டாமா சார்?" என்றான் மாதவன், சற்றுக் குழப்பத்துடன்.

"வேணும். நான் கேக்கறதுக்கு முன்னாலே நீயே அதையெல்லாம் எடுத்து வச்சுட்டியேன்னுதான் கேட்டேன். குட் ஜாப். சரி. நீ போகலாம்!" என்றார் கண்ணன்.

மாதவன் சென்றதும், "கேசவன்! இப்ப புரிஞ்சுதா? அவன்கிட்ட நான் அதிகமா சொல்றேன், உங்கிட்ட சொல்லலைங்கறது இல்லை. நான் சொன்னதுக்கு மேலேயும் என் மனசில என்ன இருக்கும்னு  புரிஞ்சுக்கிட்டு மாதவன் வேலை செய்யறான். நீ அப்படிச் செய்யாததை நான் ஒரு குறையா நினைக்கலை. ஆனா நீயும் முயற்சி செஞ்சா, மத்தவங்க சொல்றதுக்கு மேல அவங்க மனசில என்ன இருக்கும்னு யோசிச்சுச் செயல்படலாம். இது உனக்கு வாழ்க்கையில பலவிதங்களிலும் உதவியா இருக்கும்!" என்றார் கண்ணன்.

குறள் 704:
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு.

பொருள்:
ஒருவர் மனதில் கருதியதை அவர் கூறாமலே அறிந்து கொள்ள வல்லவரோடு மற்றவர் உறுப்பால் ஒத்தவராக இருந்தாலும் அறிவால் வேறுபட்டவர்.

705. திலகனின் குறுக்கீடு

"நீங்க எங்களுக்கு ஆர்டர் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி சார். எங்களோடது ரொம்ப சின்ன நிறுவனம். உங்களை மாதிரி பெரிய நிறுவனத்துக்கிட்டேயிருந்து எங்களுக்கு இந்த ஆர்டர் கிடைச்சதை நாங்க ரொம்பப் பெருமையா நினைக்கிறோம் சார்!" என்றான் பவித்ரன். 

அவன் அருகில் அமர்ந்திருந்த அவனுடைய பார்ட்னர் திலகன் ஆமோதிப்பது போல் தலையாட்டினான்.

"பெரிய நிறுவனம் என்ன, சின்ன நிறுவனம் என்ன? எங்களுக்கு வேண்டிய பொருளை நீங்க தயாரிக்கிறீங்க. அதை நாங்க வாங்கிக்கறோம். அவ்வளவுதான்!" என்றார் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பரந்தாமன்.

"சரி சார். நாங்க கிளம்பறோம்!" என்று பவித்ரன் எழுந்தபோது, "என்ன அவசரம்? இங்கே எங்க தோட்டத்தில தென்னை மரங்கள் வச்சிருக்கோம். இளநீர் சாப்பிட்டுட்டுப் போங்க. வெயிலுக்கு இதமாக இருக்கும்!" என்றார் பரந்தாமன்.

பிறகு பியூனை அழைத்து இளநீர் கொண்டு வரச் சொன்னார்.

இளநீர் வரும் வரை தொழில் நிலவரங்களைப் பற்றிப் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தனர். திலகன் பொதுவாக அதிகம் பேசாத இயல்பு கொண்டவன்.  எனவே உரையாடல் பெரும்பாலும் பவித்ரனுக்கும் பரந்தாமனுக்கும் இடையில் மட்டுமே நடந்து கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் அரசாங்கத்தை விமரிசித்து பவித்ரன் சில கருத்துக்களைச் சொன்னான். 

"இந்த அரசாங்கம் ரொம்ப மோசமா இருக்கு. தொழில் செய்யறவங்களோட பிரச்னைகளைக் கொஞ்சம் கூடப் புரிஞ்சுக்காம நமக்கு எப்படி எல்லாம் தொந்தரவு கொடுக்கலாம்னு ரூம் போட்டு யோசிச்சு நம்மளை டார்ச்சர் பண்றாங்க!" என்றான் பவித்ரன்.

இவ்வளவு நேரம் மௌனமாக இருந்த திலகன் சட்டென்று குறுக்கிட்டு, "நோ, நோ! அப்படிச் சொல்ல முடியாது. சில பிரச்னைகள் இருக்குதான். ஆனா இந்த அரசாங்கத்தில நமக்கு நிறைய நன்மைகள் செஞ்சிருக்காங்க, இல்லையா சார்?" என்றான், பரந்தாமனைப் பார்த்துச் சிரித்தபடி.

பரந்தாமன் புன்னகை செய்தபடியே தலையாட்டினார்.

பரந்தாமன் அறையிலிருந்து வெளியில் வந்ததும், "திலக்! நீதானேடா இந்த அரசாங்கத்தை எப்பவும் குறை சொல்லிக்கிட்டிருப்ப? இப்ப நான் அரசாங்கத்தைக் குறை சொன்னதும் அவசரமா என்னை மறுத்துப் பேசி அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்கற! என் காலை வேற அழுத்தின. எதுக்குன்னு புரியல. அதனால நான் அதுக்கு மேல பேசாம இருந்துட்டேன். என்ன விஷயம்?" என்றான் பவித்ரன்.

"நீ அரசாங்கத்தைக் குறை சொல்லிப் பேச ஆரம்பச்சதும் பரந்தாமனோட முகம் கொஞ்சம் மாறிடுச்சு. நீ சொன்னது அவருக்குப் பிடிக்கலேன்னு புரிஞ்சுக்கிட்டேன். பல பேருக்கு ஒரு அரசியல் சார்பு இருக்கும். அவரு ஆளும் கட்சியை ஆதரிக்கறவரா இருக்கலாம். அதனால நீ அரசாங்கத்தைக் குறை சொன்னது அவருக்குப் பிடிக்கலியோ என்னவோ! இப்பதான் அவர் நமக்கு ஆர்டர் கொடுத்து நமக்குள்ள ஒரு நல்ல உறவு உண்டாயிருக்கு. அதைக் கெடுத்துடக் கூடாதுன்னுதான் அரசாங்கத்தை ஆதரிச்சுப் பேசினேன். அதில அவருக்கு சந்தோஷம்தாங்கறதை அவர் வெளிக்காட்டினாரே!" என்றான் திலகன்.

"நீ கவனிச்சதை நான் கவனிக்காம விட்டுட்டேனே! கண் இருந்தும் குருடனா இருந்திருக்கேன். நல்லவேளை அதிகம் பேசாத நீ சரியான சமயத்தில பேசி  நிலைமையை சரி செஞ்சுட்டே!" என்றான் பவித்ரன் திலகனின் கையைப் பற்றியபடி.

குறள் 705:
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்.

பொருள்:
ஒருவரது முகக்குறிப்பைக் கண்ட பின்பும் அவருடைய மனக்கருத்தை அறிய முடியவில்லை என்றால், உறுப்புகளுள் சிறந்த கண்களால் என்ன பயன்?


706. என்ன வேகம் நில்லு பாமா!

சுற்றுலாப் பயணிகளுக்கு அந்தப் பழைய கால அரண்மனையைச் சுற்றிக் காட்டிக் கொண்டிருந்த வழிகாட்டி, ஒரு அறைக்குள் வந்ததும், "இது என்ன அறைன்னு சொல்லுங்க பாக்கலாம்!" என்றார்.

கரடுமுரடான தரையில் எங்கே பள்ளம் இருக்குமோ என்று பயந்து கொண்டே கீழே பார்த்தபடி நடந்து வந்து கொண்டிருந்த சுற்றுப் பயணிகள் சற்றே நிமிர்ந்து பார்த்தனர்.

'எல்லாமே பாழடைஞ்சு கிடக்கு. அறை எது, கூடம் எதுன்னு அடையாளம் காண்றதே கஷ்டம். இதில இது என்ன அறைன்னு வேற கண்டுபிடிச்சுச் சொல்லணுமா?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட கமலநாதன் அருகில் நடந்து வந்து கொண்டிருந்த தன் மனைவி சத்யபாமாவைப் பார்த்து, "உனக்குத் தெரியுதா பாமா, இது என்ன அறைன்னு?" என்றார் சிரித்துக் கொண்டே.

சத்யபாமா பதில் கூறவில்லை.

"குளியல் அறையா? மேலே ஒரு ஓட்டை இருக்கே, அதிலேந்து கொட்டற மழைத் தண்ணிதான்  அரண்மனைவாசிகளுக்கு ஷவர் குளியல்னு சொல்லப் போறீங்களா?" என்றார் ஒரு பயணி விளையாட்டாக.

"கிட்டத்தட்ட சரியா சொல்லிட்டீங்க! இரு குளியல் அறை இல்லை. ஒப்பனை அறை. குளியலுக்குப் பிறகு ஒப்பனைதானே?" என்றார் வழிகாட்டி சிரித்தபடி.

"ஒப்பனை அறைன்னு எப்படிச் சொல்றீங்க?" என்றார் ஒரு பயணி.

"அப்படிக் கேளுங்க. இந்தக் கல்லைப் பாத்தீங்களா?"

"உடைஞ்சிருக்கே! ஆனா பளபளன்னு இருக்கு" என்றபடியே அருகில் சென்ற ஒருவர், "அட! முகம் தெரியுதே! இது என்ன கல்லா, கண்ணாடியா?" என்றார் வியப்புடன்.

"கல்தான். கண்ணாடி மாதிரி பிரதிபலிக்கிற அருமையான பளிங்குக்கல். ஆளுயரக் கண்ணாடி  மாதிரி அமைச்சிருக்காங்க . இதுக்கு முன்னால நின்னு ஒப்பனை செஞ்சுக்கலாம். இப்ப நிறைய கல்லு உடைஞ்சு போய் ஒண்ணு ரெண்டுதான் மீதி இருக்கு. அதனால பக்கத்தில போய் நின்னு பாத்தாத்தான் தெரியும்!" என்றார் வழிகாட்டி பெருமிதத்துடன்.

சுற்றுப்பயணிகள் பலர் அந்தப் பளிங்குக் கல்லின் அருகில் சென்று அதில் தங்கள் முகம் தெரிகிறத என்று பார்த்து விட்டு வந்தனர்.

அருகில் சென்று பார்த்து விட்டு வந்த கமலநாதன், "பாமா, வா! இங்கே வந்து பாரு!" என்று மனைவியை அழைத்தபடியே திரும்பினார்.

ஆனால் சத்யபாமா அங்கே இல்லை. விறுவிறுவென்று நடந்து முன்னே போய்க் கொண்டிருந்தாள். கமலநாதன் குழப்பத்துடன் மனைவியுடன் சேர்ந்து கொள்ளும் நோக்கில் வேகமாக நடந்தார்.

எல்லோருக்கும் பின்னால் வந்து கொண்டிருந்த வழிகாட்டி, தன் அருகில் வந்து கொண்டிருந்த உதவியாளனிடம், "அந்தம்மா ஏதோ கோவமா இருக்காங்க போலருக்கு. அவங்க முகத்தைப் பாத்தாலே தெரிஞ்சது. ஆனா அவரு அதை கவனிக்காம ஏதோ பேசிக்கிட்டிருந்தாரு. அந்த அம்மாவுக்குக் கோபம் இன்னும் அதிகமாகி வேகமா நடந்து முன்னே போயிட்டாங்க! இவரு பாவம் ஒண்ணும் புரியாம பின்னால ஓடறாரு!" என்று தணிவான குரலில் சொல்லிச் சிரித்தார்.

குறள் 706:
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.

பொருள்:
தனக்கு அருகில் உள்ள பொருளின் பிம்பத்தைக் காட்டும் பளிங்கைப் போல், மனதில் மிகுந்திருக்கும் உணர்வை முகம் வெளிக்காட்டி விடும்.

707. சந்திப்புக்குப் பின்...

"என் நிறுவனத்தோட முக்கிய அதிகாரிகளை உங்களுக்கு அறிமுகப்படுத்தறேன்!" என்றார் செந்தில்குமார்.

"இப்ப எதுக்கு சார்? அப்புறம் பாத்துக்கலாம். உங்ளோட ஆர்டரை நிறைவேத்தறப்ப அவங்களோட தொடர்பு கொள்ள வேண்டி இருக்குமே!" என்றார் மருதாசலம்.

"அதுக்குத்தான் நீங்க அவங்களை இப்பவே தெரிஞ்சுக்கறது நல்லதுன்னு நினைக்கிறேன்!" என்ற செந்தில்குமார், பியூனை அழைத்து, சில அதிகாரிகளின் பெயர்களைச் சொல்லி அவர்களை அழைத்து வரச் சொன்னார்.

சில நிமிடங்களில் செந்தில்குமார் அழைத்த ஐந்து மூத்த அரிகாரிகளும் அவர் அறைக்குள் வந்து அமர்ந்து கொண்டனர்.

அதிகாரிகளின் பதவிகளையும், பெயர்களையும் சொல்லி இருவருக்கும் அவர்களை அறிமுகப்படுத்திய செந்தில்குமார், தன் அதிகாரிகளைப் பார்த்து, "இவர் தனம் இண்டஸ்டிரீஸ் எம். டி. மருதாலம், அவர் ஜெனரல் மானேஜர்... பேர் என்ன சொன்னீங்க ...ஆங், தண்டபாணி! இவங்க நம்ம புராஜக்ட்ல சப்-கான்டிராக்டரா இருக்கப் போறாங்க. அவங்க உங்களோட இன்டராக்ட் பண்ண வேண்டியிருக்கும். அதனாலதான் உங்களை அவங்களுக்கு அறிமுகப்படுத்தணும்னு நினைச்சேன்!" என்றார்.

செய்ய வேண்டிய புராஜக்ட் பற்றி அனைவரும் சிறிது நேரம் விவாதித்தனர். பிறகு மருதாசலமும், தண்டபாணியும் விடைபெற்றுக் கிளம்பினர். 

காரில் வரும்போது மருதாசலம் சற்று நேரம் ஏதோ யோசனை செய்தபடி வந்தார். பிறகு சட்டென்று தண்டபாணியிடம் திரும்பி, "தண்டபாணி! இந்த கான்டிராக்டை நாம எடுத்துக்க வேண்டாம்னு பாக்கறேன்!" என்றார்.

"ஏன் சார்? இது லாபகரமான புராஜக்ட். கடும் போட்டிக்கு நடுவில நமக்கு இந்த கான்டிராக்ட் கிடைச்சிருக்கு. அடுத்த வாரம் ஒர்க் ஆர்டர் கொடுக்கறதா சொல்லி இருக்காங்க. இப்ப போய்...?" என்றார் தண்டபாணி.

"நல்லவேளை அவங்க இன்னும் ஒர்க் ஆர்டர் கொடுக்கல. நம்மைக் கூப்பிட்டு நமக்கு இந்த கான்டிராக்டைக் கொடுக்கறதா வாய் மூலமாத்தான் சொல்லி இருக்காங்க. நாம ஆஃபீசுக்குப் போனதுமே இந்த கான்டிராக்ட் நமக்கு வேண்டாம்னு மெயில் அனுப்பிடலாம்!"

"அது சரி சார்! ஆனா ஏன் இந்த கான்டிராக்ட்டை வேண்டாம்னு சொல்றீங்க? செந்தில்குமாரோ, மற்ற அதிகாரிகளோ தப்பா ஏதாவது பேசினீங்களா என்ன? நான் கவனிக்கலையே!" என்றார் தண்டபாணி குழப்பத்துடன்.

"அவங்க பேச்செல்லாம் நல்லாத்தான் இருந்தது. ஆனா செந்தில்குமாருக்கு தன்னோட அதிகாரிகள் மேல மதிப்பு இல்லை. அவங்களுக்கும் அவர் மேல ஒரு வெறுப்பு இருக்கு. அதனால நாம கான்டிராக்ட்டை எடுத்து செய்யறப்ப நிறைய பிரச்னைகள் வரும். அதிகாரிகள் பொறுப்பு எடுத்துக்க மாட்டாங்க. செந்தில்குமாரும் அவங்களை எதையும் முடிவு செய்ய விட மாட்டாரு. அதனால நமக்குதான் பாதிப்பு வரும்!"

"எப்படி சார் சொல்றீங்க? அவங்க பேசினதிலேந்து அப்படியெல்லாம் இருக்கறதா எனக்குத் தெரியலியே!" 

"பேச்சில என்ன இருக்கு தண்டபாணி? அவங்க பேசும்போது அவங்க முகத்தைப் பாத்துத் தெரிஞ்சுக்கிட்டதுதான் இது. ஒத்தரோட விருப்பு வெறுப்புகளை அவர் முகம் வெளிப்படத்தற அளவுக்கு அவரோட வெளிப்படையான பேச்சு கூட வெளிப்படுத்த முடியாது!" என்றார் மருதாசலம் சிரித்தபடி.

"எனக்கு பயமா இருக்கு சார்! ஒருவேளை நான் வேற வேலைக்குப் போகணும்னு நினைச்சா அதைக் கூட என் முகத்தைப் பாத்துக் கண்டுபிடிச்சுடுவீங்க போலருக்கே!" என்றார் தண்டபாணி.

"இத்தனை நாளா உங்க முகத்தைப் பாத்துக்கிட்டிருக்கேன். என்னால அதைக் கண்டுபிடிக்க முடியாதா? ஏற்கெனவே கண்டுபிடிச்சுட்டேன்!" என்றார் மருதாசலம் தண்டபாணியின் முகத்தைப் பார்த்தபடி.

"என்ன சார் சொல்றீங்க?" என்றார் தண்டபாணி, சற்று அதிர்ச்சியுடன்.

"நான் கழுத்தைப் பிடிச்சுத் தள்ளினா கூட நீங்க என்னை விட்டுப் போக மாட்டீங்கங்கறதை நான் எப்பவோ கண்டுபிடிச்சுட்டேனே!" என்று சிரித்துக் கொண்டே கூறி தண்டபாணியின் தோளை அன்புடன் பற்றிக் கொண்டார் மருதாசலம்.

குறள் 707:
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்.

பொருள்:
உள்ளத்தில் உள்ள விருப்பு வெறுப்புகளை முந்திக் கொண்டு வெளியிடுவதில் முகத்தைப் போல அறிவு மிக்கது வேறெதுவுமில்லை.

708. இரண்டாவது விசாரணை

காவல்துறை துணை ஆய்வாளரின் விசாரணைக்குப் பிறகு சரவணன் வேறொரு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.

தான் குற்றம் செய்யவில்லை என்று கூறியதைத் துணை ஆய்வாளர் ஏற்றுக் கொண்டாரா என்று சரவணனுக்குத் தெரியவில்லை. 

தன்னை அடித்துத் துன்புறுத்துவார்களோ என்ற அச்சம் சரவணனுக்கு இருந்தது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. துணை ஆய்வாளர் துருவித் துருவிக் கேட்டார், பொய் சொன்னால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று எச்சரித்தார். அவர் மேசை மீது லத்தி இருந்தது. ஆனால் அதை அவர் பயன்படுத்தவில்லை.

சரவணன் அழைத்துச் செல்லப்பட்ட அறையில் ஒருவர் சீருடை இல்லாமல், சாதாரண உடையில் அமர்ந்திருந்தார். தனக்கு எதிரில் இருந்த நாற்காலியில் சரவணனை உட்காரச் சொல்லி விட்டு அவன் முகத்தைச் சற்று நேரம் பார்த்தார் அவர். பிறகு தன் மேசை மீதிருந்த ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார். அவ்வப்போது படிப்பதை நிறுத்தி விட்டு சரவணன் முகத்தை மீண்டும் சில விநாடிகள் பார்த்தார்.

பத்து நிமிடங்களுக்குப் பிறகு, சரவணனைக் காவல் நிலையத்திலிருந்த சிறைக்குள் அழைத்துச் சென்றனர். அவனை அங்கே வைத்துப் பூட்டினர்.

சில நிமிடங்களுக்குப் பிறகு சிறைக் கதவு திறக்கப்பட்டது. துணை ஆய்வாளர் உள்ளே நுழைந்தார். அவர் கையில் லத்தி இருந்தது. சரவணன் அச்சத்துடன் அவரைப் பார்த்தபோதே அவன் மீது லத்தி பாய்ந்தது.

சில நிமிடங்களுக்குப் பிறகு சரவணன் குற்றத்தை ஒப்புக் கொண்டான்.

"ஏன் சார், நாம செய்யறது சட்டப்படி சரியா?" என்றார் கான்ஸ்டபிள் சேகர், துணை ஆய்வாளரிடம்.

"முன்னே எல்லாம் சந்தேகப்பட்டவங்க எல்லாரையும் அடிச்சு விசாரிப்போம். இப்ப நாம சாதாரணமா விசாரிச்சுட்டு குற்றத்தை ஒப்புக்காதவங்களை சுந்தர்கிட்ட அனுப்பறோம். அவர் கொஞ்ச நேரம் அவங்க முகத்தைப் பாத்துட்டு அவங்க மனசில என்ன ஓடுது, அவங்க உண்மை சொல்றாங்களா, பொய் சொல்றாங்களான்னு சொல்லிடறாரு.

"உண்மை சொல்றாருன்னு அவர் சொன்னவங்களை உடனே வெளியே விட்டுடறதில்ல. அவங்களைக் கொஞ்ச நாள் வச்சிருந்து அடிக்காம துருவித் துருவி விசாரிக்கறோம். அநேகமா அவங்க குற்றம் செய்யாதவங்களாத்தான் இருக்காங்க. பல சமயங்கள்ள உண்மையான குற்றவாளிங்க கிடைச்சுடறாங்க. அப்படிக் கிடைக்காட்டாலும் அவங்க குற்றம் செய்யலேன்னு தீர்மானிச்சு வெளியே விட்டுடறோம்!

"பொய் சொல்றாங்கன்னு சுந்தர் கண்டுபிடிச்சுச் சொன்னவங்களை மட்டும் அடிச்சு விசாரிக்கறோம். அவங்க அநேகமா உண்மையை ஒத்துக்கறாங்க. இந்த முறையினால அப்பாவிங்களை அடிக்காம தவிர்க்கறோம் இல்லையா?"

"ஆனாலும் இது சட்டப்படி சரி இல்லையே சார்?"

"சுந்தர் யாரு? போலீஸ்ல பணி செஞ்சு ஓய்வு பெற்றவர்தானே? அவரோட நீண்ட அனுபவத்தினால, ஒரு ஆள் முகத்தைப் பாத்ததுமே அவன் மனசில என்ன நினைக்கிறாங்கறதை அவரால ஊகிக்க முடியுது. அப்பப்ப அவரை இங்கே வரச் சொல்லி அவர் அனுபவத்தை நாம பயன்படுத்திக்கறோம். அவ்வளவுதானே?" என்றார் துணை ஆய்வாளர்.

குறள் 708:
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின்

பொருள்:
அகத்தில் உள்ளதை உணர்ந்து கொள்ளும் திறமையிருப்பின், அவர் ஒருவரின் முகத்துக்கு எதிரில் நின்றாலே போதுமானது.

709. பார்வை ஒன்றே போதுமே!

கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து கொண்டிருந்த குகனும் அவன் தம்பி அரவிந்தனும் அரவிந்தனின் திருமணத்துக்குப் பிறகு சொத்துக்களைப் பிரித்துக் கொண்டு தனித் தனியே வாழ்ந்தனர்.

அதற்குப் பிறகு அவர்களிடையே தொடர்பு விட்டுப் போய் விட்டது. 

பத்து வருடங்களுக்குப் பிறகு, திடீரென்று ஒருநாள் அரவிந்தன் தான் குகனைச் சந்திக்க விரும்புவதாக அவர்கள் ஒன்று விட்ட மாமா சங்கரன் மூலம் செய்தி சொல்லி அனுப்பினான். அவர்களுக்கு வேறு நெருங்கிய உறவினர்கள் இல்லை.

சங்கரன் மூலமே நிகழ்ந்த ஓரிரு செய்திப் பரிமாற்றங்களுக்குப் பிறகு இருவரும் சங்கரன் வீட்டில் சந்திப்பதென்று முடிவாயிற்று.

இந்தச் சந்திப்பு குகனின் மனைவி புவனாவுக்குப் பிடிக்கவில்லை.

"பத்து வருஷம் கழிச்சு எதுக்கு இந்தச் சந்திப்பு? அறுந்து போன உறவு அறுந்து போனதாகவே இருக்கட்டும்!" என்றாள் புவனா.

"ஏன் இப்படிச் சொல்ற? என் தம்பி நல்லவன்தான். கல்யாணத்துக்கப்பறம் பெண்டாட்டி பேச்சை கேட்டுக்கிட்டு சொத்தைப் பிரிச்சுக்கிட்டுப் போனான். இப்ப மனசு மாறி உறவைப் புதுப்பிச்சுக்கணும்னு நினைக்கறான். சொந்தமா தொழில் செஞ்சுக்கிட்டு காரும் பங்களாவுமா இருக்கான். அவனுக்கு நம் தயவு தேவையில்லை. அவன் மனம் திருந்தி வரப்ப, முடியாதுன்னு சொல்லணுமா?" என்றான் குகன்.

"உறவு முறிஞ்சதுக்கு அவர் மனைவி காரணம் இல்லீங்க. சுமதி ரொம்ப நல்ல பொண்ணு. உங்க தம்பிக்கு எப்பவுமே உங்க மேல ஒரு வெறுப்பும் விரோதமும் உண்டு. அவருதான் பிடிவாதமா இருந்து சொத்தைப் பிரிச்சுக்கிட்டுப் போனாரு. சுமதியை ஏன் குற்றம் சொல்றீங்க?"

"என் தம்பி பெண்டாட்டியை நீ விட்டுக் கொடுக்காம பேசறது நல்லாத்தான் இருக்கு. ஆனா என் தம்பியைப் பத்தி உனக்கு என்ன தெரியும்? அவன் எங்கிட்ட எவ்வளவு பாசமா, மரியாதையா இருந்தான் தெரியுமா?"

"நான் கவனிச்சதை வச்சு சொல்றேன். வெளியில அவரு உங்ககிட்ட அன்பா நடந்துக்கிட்டிருந்திருக்கலாம். ஆனா அவரு உங்களை விரோதியாத்தான் நினைச்சாரு. அவருக்கு உங்க மேல இருந்த வெறுப்பு அவர் பார்வையிலேயே எனக்குத் தெரிஞ்சது. தேவையில்லாம அதை உங்ககிட்ட சொல்லி உங்களுக்குள்ள பிளவை உண்டாக்க வேண்டாம்னுதான் நான் எதுவும் சொல்லாம இருந்தேன்!" என்றாள் புவனா.

"இப்பவும் அப்படியே இரு  அதுதான் குடும்பத்துக்கு நல்லது!" என்றான் குகன், மனைவியை அடக்கும் விதமாக.

ங்கரன் வீட்டில் அரவிந்தனைச் சந்தித்துப் பேசி விட்டு வந்த குகனிடம், "எப்படி இருந்தது சந்திப்பு?" என்று கேட்டாள் புவனா.

"ரொம்ப நல்லா இருந்தது. என் தம்பி மாறவே இல்லை. சொந்தமாத் தொழில் செஞ்சு வசதியா இருக்கறப்பவும் எங்கிட்ட அதே அன்போடயும், மரியாதையோடயும்தான் இருக்கான். நம்ம ரெண்டு பேரையும் அவன் வீட்டுக்கு வரச் சொல்லி இருக்கான். அடுத்த வாரம் போகலாம். இனிமே நாங்க ரெண்டு பேரும் பழையபடி நெருக்கமாத்தான் இருப்போம்!" என்றான் குகன் உற்சாகமாக.

ரண்டு நாட்கள் கழித்து சங்கரன் குகன் வீட்டுக்கு வந்தார்.

"குகா! நீயும் அரவிந்தனும் என் வீட்டில சந்திச்சுப் பேசினப்பறம் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. அரவிந்தன்கிட்ட ஏதோ தப்பா இருக்கற மாதிரி தெரிஞ்சது. அவனைப் பத்தி விசாரிச்சேன். அவன் தொழில்ல நிறைய நஷ்டமாம். எல்லா சொத்துக்களும் பறி போகிற நிலையில இருக்கானாம். அதானாலதான் உன்னோட உதவி தனக்குத் தேவைப்படும்னு நினைச்சு, உறவைப் புதுப்பிச்சுக்க வந்திருக்கான்!" என்றார் சங்கரன்.

"அதனால என்ன? என் தம்பிக்கு ஒரு கஷ்டம்னா அவனுக்கு உதவறதில எனக்கு சந்தோஷம்தான்" என்றான் குகன்.

"நீ இவ்வளவு நல்ல மனசு உள்ளவனா இருக்கே. ஆனா உன் தம்பி இன்னும் உன் மேல விரோத பாவத்தோடதானே இருக்கான்?" என்றார் சங்கரன்.

"விரோத பாவமா? எப்படிச் சொல்றீங்க?" என்றான் குகன் அதிர்ச்சியுடன். 

'புவனா கூறியதையே இவரும் கூறுகிறாரே!'

குகனின் கண்கள்  அவன் அறியாமலே புவனாவைப் பார்த்தன. புவனா சங்கரனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"அவன் உன்னைப் பார்த்த பார்வையில விரோதம் இருந்த மாதிரி எனக்குத் தோணிச்சு. அதானாலதான் அவனைப் பத்தி விசாரிச்சேன். அவன் நல்ல நோக்கத்தோட உறவைப் புதுப்பிக்க விரும்பறதா எனக்குத் தோணல. நீ அவனை அதிகம் நெருங்க விடாதே! முறிஞ்சு போன உறவு முறிஞ்சு போனதாகவே இருக்கட்டும்!" என்றார் சங்கரன்.

'முறிஞ்சு போன உறவு முறிஞ்சு போனதாகவே இருக்கட்டும்!' 

கிட்டத்தட்ட புவனா சொன்ன அதே வார்த்தைகள்! 

அரவிந்தனின் பார்வையில் இருந்த விரோதம் புவனாவுக்கும், தன் மாமா சங்கரனுக்கும் புரிந்தது போல் தனக்கு ஏன் புரியவில்லை என்று வியந்தான் குகன்.

குறள் 709:
பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்.

பொருள்:
பார்வையின் வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளக் கூடியவர்கள், ஒருவரின் கண்களைப் பார்த்தே அவர் மனத்தில் இருப்பது நட்பா, பகையா என்பதைக் கூறி விடுவார்கள்.

710. அப்பா காலத்திலிருந்தே இருப்பவர்!

சக்தி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சீனியர் பார்ட்னர் நிர்மல்குமார் மற்றும் சில மூத்த அதிகாரிகளுடன் ஒரு முக்கியமான தொழில்முறை ஒப்பந்தம் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்த, கருணா என்டர்பிரைசஸிலிருந்து அதன் நிர்வாகி வேலு தலைமையில் நான்கு மூத்த அதிகாரிகளைக் கொண்ட குழு வந்திருந்தது.

பேச்சுவார்த்தை அநேகமாக நிறைவடைந்து விட்டது.

"டிஸ்கஷனுக்கு நீங்க நாலு பேர் வந்திருக்கீங்க. அதில மூணு பேர்தான் பேசினீங்க. ஒத்தர் வாயையே திறக்கலையே!" என்றார் நிர்மல்குமார்.

"அவர் எப்பவுமே அப்படித்தான். அவர் அதிகமாப் பேச மாட்டாரு!" என்றார் வேலு.

"அப்புறம் எதுக்கு அவரை அழைச்சுக்கிட்டு வந்தீங்க?" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார் நிர்மல் குமார்.

"அப்ப நாங்க வரோம். நாம பேசின விவரங்களை எங்க புரொப்ரைடர்கிட்ட சொல்றோம். அவர் உங்ககிட்ட பேசுவாரு" என்று கூறி விடைபெற்றார் வேலு.

அவர்கள் கிளம்பிச் சென்றதும், நிர்மல்குமார் பேச்சுவார்த்தையின்போது தன்னுடன் இருந்த மூத்த நிர்வாகிகளைப் பார்த்து, "என்ன நினைக்கிறீங்க? நம்ம புரொபோசலை ஏத்துப்பாங்களா?" என்றார்.

"நிச்சயமா சார்! உங்க பிரசன்டேஷன்ல அவங்க ரொம்ப இம்ப்ரஸ் ஆயிட்டாங்க!" என்றார் ஒரு மூத்த அதிகாரி.

"பேச்சு வார்த்தை எப்படிப் போச்சு? என்ன சொல்றாரு நிர்மல்குமார்?" என்றார் கருணா என்டர்பிரைசஸ் அதிபர் கருணானந்தம்.

"அவரோட புரொபோசல் அட்ராக்டிவா இருக்கறதாத்தான் நாங்க நினைக்கிறோம். ஆனா சார்தான் வேற விதமா நினைக்கிறாரு!" என்றார் வேலு.

'சார்' என்று குறிப்பிடப்பட்ட செல்வமணியைப் பார்த்தார் கருணானந்தம்.

"நிர்மல்குமார்கிட்ட உண்மை இல்லை தம்பி! அவரு நம்மை ஏமாத்த நினைக்கிறாரு" என்றார் செல்வமணி.

"எப்படிச் சொல்றீங்க?" என்றார் கருணானந்தம்.

"நிர்மல்குமாரோட கண்ணைப் பாத்தே கண்டுபிடிச்சிருப்பாரு!" என்றார் பேச்சு வார்த்தையின் கலந்து கொண்ட இன்னொரு அதிகாரியான குணசேகர்.

"கேலியாப் பேசாதீங்க குணசேகர். நீங்க இங்கே புதுசாச் சேர்ந்தவரு. செல்வமணி சார் என் அப்பா காலத்திலேந்தே இருக்காரு. 'இந்த நிறுவனத்தில என்ன மாற்றங்களை வேணும்னா செஞ்சுக்க, ஆனா செல்வமணி சாரை மட்டும் எப்பவுமே உன் கூட வச்சுக்க'ன்னு என் அப்பா எங்கிட்ட சொல்லி இருக்காரு. கடந்த காலங்கள்ள மனிதர்களைப் பத்தின அவரோட ஜட்ஜ்மென்ட் எப்படி நமக்கு உதவியா இருந்திருக்கு, எப்படி தவறான முடிவுகளை எடுக்காம நம்மைக் காப்பாத்தி இருக்குங்கறதையெல்லாம் வேலு மாதிரி மூத்த அதிகாரிகள்கிட்டக் கேட்டுத் தெரிஞ்சுக்கங்க!" என்றார் கர்ணானந்தம் கடுமையாக.

"சாரி சார்!" என்றார் குணசேகரன் சங்கடத்துடன்.

"தம்பி குணசேகரன் சொன்னது சரிதான். நான் கண்ணைப் பாத்துத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். நிர்மல்குமார் பொய்யான விஷயங்களைச் சொன்னப்ப அது அவரோட கண்ல எனக்குத் தெரிஞ்சுது. அந்த சமயத்தில அவரோட அதிகாரிகள் கண்களைப் பாத்தப்பவும், 'நம் முதலாளி இப்படிப் பொய் சொல்றாரே'ன்னு அவங்க நினைச்சது அவங்க கண்லேயும் தெரிஞ்சது!" என்றார் செல்வமணி, தன் கண்ணாடியைக் கழற்றி அதைக் கைக்குட்டையால் துடைத்தபடியே.

குறள் 710:
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற.

பொருள்:
நுண்ணறிவாளர் எனப்படுவோர்க்கு பிறரின் மனத்தில் உள்ளதை அளந்தறியும் கோலாகப் பயன்படுவது அவரது கண் அல்லாமல் வேறு எதுவுமில்லை.



             அறத்துப்பால்                                               காமத்துப்பால்   

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...