அதிகாரம் 60 - ஊக்கமுடைமை

திருக்குறள்
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 60
ஊக்கமுடைமை

591. "முதல்" உதவி

புதிய தொழில் முனைவோருக்கு முதலீட்டு நிதி வழங்கி உதவும் அந்த வெஞ்சர் காபிடல் நிறுவனத்தில் புதிய தொழில் முனைவோர்களின் நேர்காணல் நடந்து முடிந்தது. 

நேர்காணல் முடிந்த பிறகு, எந்த நிறுவனங்களுக்கு நிதி உதவுவது என்று முடிவு செய்ய தேர்வுக்குழு உறுப்பினர்கள் கூடி விவாதித்தனர். 

அந்த ஆண்டு அவர்கள் உதவத் திட்டமிட்ட ஐந்து நிறுவனங்களில் நான்கு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன.

"நாம ஷார்ட்லிஸ்ட் பண்ணின தொழில் முனைவர்கள்ள மூணு பேர் மீதி இருக்காங்க. அவங்கள்ளேந்து ஒத்தரை நாம தேர்ந்தெடுக்கணும்" என்றார் தேர்வுக்குழுத் தலைவர் கார்த்திகேயன்.

சிறிது நேர விவாதத்துக்குப் பிறகு ஒரு தொழில் முனைவர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டார். 

"இந்த ரெண்டு பேர்ல ஒத்தரை நாம தேர்ந்தெடுக்கணும். யாரைத் தேர்ந்தெடுக்கலாம்?" என்றார் குழுவின் தலைவர்.

"என்னோட தேர்வு மூர்த்திதான். அவரோட அகாடமிக் பேக்ரவுண்ட் பிரில்லியன்ட்டா இருக்கு. அவர் பொருளாதாரப் பின்னணியும் பரவாயில்ல. அவர் குடும்பப் பின்னணியைப் பாக்கறப்ப அவருக்கு நிறைய தொடர்புகள் இருக்கும்னு தோணுது. அவரோட தொழில் முயற்சி வெற்றி அடைய நிறைய வாய்ப்பு இருக்கு" என்றார் சண்முகம் என்ற உறுப்பினர்.

மற்ற சிலரும் அவர் கூறியதை ஆமோதித்தனர்.

ரமணி மட்டும் மௌனமாக இருந்தார்.

"என்ன மிஸ்டர் ரமணி! நீங்க ஒண்ணும் சொல்லலியே?" என்றார் தலைவர்.

"ரெண்டு பேருக்குக் கொடுக்கலாம்னா மூர்த்திக்குக் கொடுக்கறதை நான் ஆமோதிப்பேன். ஆனா ஒத்தருக்குத்தான் கொடுக்க முடியுங்கறப்ப என்னோட தேர்வு செந்தில்தான்!" என்றார் ரமணி.

"என்ன சார் இது? அவரை எப்படி நாம ஷார்ட்லிஸ்ட் பண்ணினோம்னே எனக்கு ஆச்சரியமா இருக்கு! அவரோட ப்ராடக்ட் நல்லா இருக்குங்கறதுக்காக அவரை ஷார்ட்லிஸ்ட் பண்ணிட்டோம்னு நினைக்கிறேன். அதிலேயே எனக்கு உடன்பாடு இல்ல. கடைசியில தேர்வு பண்றப்ப பாத்துக்கலாம்னு அப்ப ஒண்ணும் சொல்லாம இருந்தேன். அவருக்கு நல்ல பின்னணியே இல்ல. முதல் தலைமுறைப் பட்டதாரி. கம்யூனிகேஷன் ரொம்ப புவரா இருக்கு. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவே தடுமாறினாரு. பயம் வேற. பொருளாதாரப் பின்னணி, சமூகப் பின்னணி எல்லாம் ரொம்ப பலவீனமா இருக்கு. ஒரு தொழில்ல வெற்றி அடைய இதெல்லாம் முக்கியம் இல்லையா?" என்றார் சண்முகம் சற்று ஆவேசமாக.

"முக்கியம்தான். ஆனா அதையெல்லாம் விட முக்கியம் உற்சாகமும், விடாமுயற்சியும். செந்திலைப் பொருத்தவரையில, நீங்க சொன்ன காரணங்களால, அவரு படிப்பில கவனம் செலுத்தி நல்ல மார்க் வாங்கி ஒரு நல்ல வேலை தேடிக்கிறதுதான் அவருக்கு எளிதா இருந்திருக்கும். ஆனா அவர் கஷ்டப்பட்டு இந்த ப்ராடக்டை டெவலப் பண்ணி இருக்காரு. நிறைய பிரச்னைகளை சந்திச்சு, தோல்வி அடைஞ்சு தன் ஊக்கத்தைக் கைவிடாம இந்த ப்ராடக்டை டெவலப் பண்ணி இருக்காரு. அவரோட நேர்காணலிலேயே இதையெல்லாம் அவர் சொன்னாரே! தன் முயற்சிகளைப் பத்திப் பேசறப்ப அவரு எவ்வளவு உற்சாகமா இருந்தாரு பாத்தீங்களா? மார்க்கெடிங், ஃபைனான்ஸ் எல்லாம் அவருக்கு சவாலாத்தான் இருக்கும். ஆனா அவரோட உற்சாகமும், விடாமுயற்சியும் அவருக்குக் கை கொடுக்கும்னு நினைக்கிறேன்" என்றார் ரமணி.

"எதுக்கு இவ்வளவு ரிஸ்க் எடுத்து அவருக்கு நாம உதவணும்?" என்றார் சண்முகம்.

"வெஞ்சர் காபிடல்ங்கறதே ரிஸ்க் உள்ள முயற்சிகளுக்கு உதவறதுதானே?" என்றார் ரமணி சிரித்தபடி.

தலைவர் நடத்திய ஓட்டெடுப்பில் பெரும்பாலோர் மூர்த்திக்கு உதவுவதற்கே வாய்ப்பளித்தனர்.

"இங்கே பாத்தீங்களா?" என்றார் ரமணி, சண்முகத்திடம்.

"உங்க பேருக்கு யாரோ செக் கொடுத்திருக்காங்க. அதை ஏன் எங்கிட்ட காட்டறீங்க?" என்றார் சண்முகம்.

"இது டிவிடெண்ட் செக். செந்திலோட கம்பெனியிலேந்து வந்திருக்கு!"

"செந்தில்? யார் அது? ஓ, ரெண்டு வருஷம் முன்னால வெஞ்சர் காபிடலுக்கு அப்ளை பண்ணி இருந்தாரே! ஆனா நாம அவருக்கு ஃபைனான்ஸ் பண்ணல. உங்களுக்கு எப்படி டிவிடெண்ட் செக்..? ஓ..அப்படின்னா, நீங்க...?" என்றார் சண்முகம்.

"ஆமாம். நான் தனிப்பட்ட முறையில அவர் நிறுவனத்தில முதலீடு செஞ்சேன். அவர்கிட்ட இருந்த உற்சாகமும், விடாமுயற்சியும் எனக்கு அவர் மேல ஒரு வலுவான நம்பிக்கையைக் கொடுத்ததால ரிஸ்க் எடுத்து என் சொந்தப் பணத்தை முதலீடு செஞ்சேன். ரெண்டாவது வருஷத்திலேயே லாபம் சம்பாதிச்சு டிவிடெண்ட் கொடுத்திருக்காரு!" என்றார் ரமணி உற்சாகமாக.

'ஆனா மூர்த்தியோட நிறுவனம் இன்னும் டேக் ஆஃப் ஆகவே இல்லையே!' என்று நினைத்துக் கொண்டார் சண்முகம். 

குறள் 591:
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.

பொருள்:
ஊக்கம் உடையவரே எதையும் உடையவர்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதை உடையவர் என்றாலும் உடையவர் ஆவாரோ?

592. எப்படி இருந்த நான்...

தாமோதரனை மாலா திருமணம் செய்து கொண்டபோது அவன் ஒரு சிறிய நிறுவனத்தில் ஒரு விற்பனைப் பிரதிநிதியாகத்தான் பணியாற்றிக் கொண்டிருந்தான். 

சில வருடங்கள் கழித்து வேலையை விட்டு விட்டு கமிஷன் அடிப்படையில் சில பொருட்களை வாங்கி விற்க ஆரம்பத்தான். 

வியாபாரம் வெற்றிகரமாக நடக்க ஆரம்பித்ததும் சிறு முதலீட்டில் பொருட்களை வாங்கி விற்க ஆரம்பத்தான்.

தாமோதரனின் படிப்படியான முயற்சிகள் அவனுக்கு வேகமான வளர்ச்சியை அளித்தன. தாமோதரன் இண்டஸ்டிரீஸ் என்ற பெயரில் ஒரு தொழிற்சாலையை நடத்தும் அளவுக்கு அவன் வளர்ச்சி உயர்ந்தது.

"நம்ம நிலைமைக்கு ஒரு சாதாரண இடத்திலதான் உனக்குக் கல்யாணம் செஞ்சு கொடுத்தோம். ஆனா மாப்பிள்ளை இன்னிக்கு ஒரு தொழிலதிபரா இருக்காரு. உனக்கு நல்ல அதிர்ஷ்டம்தான்!" என்றார் மாலாவின் தந்தை. 

"அவளோட அதிர்ஷ்டம்தான் அவ புருஷனை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கு!" என்றாள் அவள் அம்மா.

"அதிர்ஷ்டம்தான் காரணம்னா அவரோட முயற்சிக்கு மதிப்பு இல்லையா?" என்றாள் மாலா.

"எப்படி புருஷனை விட்டுக் கொடுக்காம பேசறா பாரு! நீ இப்படி என்னிக்காவது எனக்கு ஆதரவாப் பேசி இருக்கியா?" என்று தன் மனைவியைச் சீண்டினார் அவள் அப்பா.

" 'எப்படி இருந்த நான் எப்படி ஆயிட்டேன்'னு விவேக் ஒரு படத்தில சொல்லுவாரு. அது மாதிரி ஆயிடுச்சு என் நிலைமை!" என்றான் தாமோதரன்.

"ஏன் அப்படிச் சொல்றீங்க?"

"இன்னும் என்ன ஆகணும்? கஷ்டப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமா மேலே வந்தேன். இப்ப திடீர்னு ஒரு பெரிய நஷ்டம் வந்து எல்லாம் போயிடுச்சு. தொழிலையே இழுத்து மூட வேண்டிய நிலைமை வந்துடும் போலருக்கு. நம்மகிட்ட இருந்த எல்லாம் போயிடுச்சு."

"எல்லாம் போனா என்னங்க? கல்ணம் ஆனதிலேந்து உங்ககிட்ட நான் பாக்கிற ரெண்டு விஷயங்கள் அப்படியேதானே இருக்கு?" என்றாள் மாலா.

"அது என்ன ரெண்டு விஷயம்?"

"உற்சாகம், விடாமுயற்சி. இந்த ரெண்டையும் வச்சுதானே நீங்க எல்லாத்தையும் சாதிச்சீங்க? அந்த ரெண்டும் உங்ககிட்ட இருக்கறப்ப நீங்க மறுபடியும் பல விஷயங்களை சாதிக்கலாமே!" என்றாள் மாலா.

"அந்த ரெண்டு விஷயங்கள் எங்கிட்ட இருக்கறதை எனக்கு ஞாபகப்படுத்த நீ இருக்கறப்ப என்னால நிச்சயம் சாதிக்க முடியங்கற நம்பிக்கை எனக்கு இப்ப வந்திருக்கு!" என்றான் தாமோதரன் உற்சாகத்துடன்.

குறள் 592:
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.

பொருள்:
ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும், மற்றப் பொருளுடைமை நிலைத்து நிற்காமல் நீங்கி விடக் கூடியவை.

593. வீழ்ச்சிக்குப் பின்...

என் கல்லூரி நண்பன் செல்வத்தைப் பல வருடங்கள் கழித்துத் தற்செயலாகச் சந்தித்தேன்.

கல்லூரிப் படிப்பை முடித்ததும் எங்களில் பெரும்பாலோர் ஏதாவது ஒரு வேலை கிடைக்காதா என்று முனைந்து ஏதோ ஒரு வேலையைத் தேடிக் கொண்டோம். 

ஆனால் செல்வம் மட்டும் சொந்தத் தொழில் துவங்கப் போவதாகச் சொல்லி வேலைக்கே முயற்சி செய்யவில்லை.

"அவன் ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அவனைக் கல்லூரியில படிக்க வைக்கறதுக்கே அவங்க அப்பா அம்மா ரொம்ப கஷ்டப்பட்டிருப்பாங்க. படிப்பை முடிச்சதும் ஏதோ ஒரு வேலைக்குப் போனா அவங்க பெற்றோருக்கு உதவியா இருக்கும். அதை விட்டுட்டு சொந்தத் தொழில் ஆரம்பிக்கப் போறேன்னு இறங்கி இருக்கான். கையில கால் காசு இல்லாம எப்படித் தொழில் ஆரம்பிக்கப் போறான்னு புரியல!" என்று என் நண்பர்கள் சிலர் அப்போது விமரிசனம் செய்தார்கள்.

ஆனால் செல்வம் எப்படியோ சிறிய அளவில் ஒரு தொழிலைத் துவங்கி, நாளடைவில் பெரிய வளர்ச்சியும் பெற்று விட்டான்.

நான் கொல்கத்தாவில் வேலை செய்து வந்ததால், சென்னையில் தொழில் செய்து வந்த செல்வத்துடன் எனக்குத் தொடர்பு இல்லை. அவனைப் பற்றிய செய்தியெல்லாம் என் பிற நண்பர்கள் மூலம் கேட்டறிந்ததுதான்.

"முதல்ல எல்லாரும் அவனோட சொந்தத் தொழில் முயற்சி முட்டாள்தனமானதுன்னுதான் நினைச்சோம். ஆனா அவன் ஒரு தொழிலை ஆரம்பச்சதோட இல்லாம அதை இந்த அளவுக்குப் பெரிசாக் கொண்டு வந்தது பிரமிப்பாத்தான் இருக்கு!" என்று சில நண்பர்கள் வியந்தனர்.

"நினைச்சதை முடிக்கணுங்கற அவனோட உறுதி, கடுமையான உழைப்பு, தடைகளை உடைச்சுக்கிட்டு மேல போறது இதெல்லாம்தான் அவன் வெற்றிக்குக் காரணம்!" என்று பலரும் கூறினர்.

நான் செல்வத்தின் வீட்டுக்குச் சென்றபோது, அவன் என்னை மிகவும் உற்சாகமாக வரவேற்றான். கல்லூரி நாட்கள் பற்றிப் பல விஷயங்களை நினைவு கூர்ந்து மகிழ்ச்சியுடன் பேசினான். கேலி, உற்சாகம், உல்லாசம் எல்லாம் கலந்து எங்கள் உரையாடல் இரண்டு கல்லூரி மாணவர்கள் பேசிக் கொள்வது போலவே இருந்தது.

செல்வத்தைச் சந்தித்து ஓரிரு நாட்களுக்குப் பிறகு என் ரு நண்பன் சுந்தரைச் சந்தித்தேன். செல்வத்தைச் சந்தித்துப் பேசியதைப் பற்றி அவனிடம் கூறினேன்.

"அவன் அதே வீட்டிலேயா இருந்தான்? வீடு மாறி இருப்பானே?" என்றான் சுந்தர்.

"ஆமாம். ஆனா விடு மாறப் போறதா சொன்னான். சில பொருட்களை பேக் பண்ணி வச்சிருந்தான். அவன் குழந்தைகள் பாட்டி வீட்டுக்குப் போயிருந்தாங்க. ஃபர்னிச்சர் எதையும் காணோம். அதெல்லாம் முன்னாடியே புது வீட்டுக்குப் போயிடுச்சு போலருக்கு" என்றேன் நான்.

"அதையெல்லாம் வித்தாச்சு!"

"வித்தாச்சா, ஏன்?" என்றேன் நான் புரியாமல்.

"உங்கிட்ட அவன் விஷயத்தைச் சொல்லல போலருக்கு. அவனுக்கு பிசினஸ்ல பெரிய அடி. வீடு ஏலத்துக்கு வரப் போகுது. நகைகள், ஃபர்னிச்சர், இன்னும் மதிப்புள்ள பொருட்களையெல்லாம் வித்துட்டான். சின்னதா ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருக்கான். அங்கே குடி போகப் போறான். அதனாலதான் தற்போதைக்கு குழந்தைகளை மாமனார் வீட்டுக்கு அனுப்பி இருக்கான் போல இருக்கு!" என்றான் சுந்தர்.

"அடப்பாவமே! எங்கிட்ட எதையுமே சொல்லியே? அவ்வளவு உற்சாகமாப் பேசிக்கிட்டிருந்தான்! அவன் மனைவிதான் கொஞ்சம் டல்லா இருக்கற மாதிரி இருந்தது. உடம்பு சரியில்லையோன்னு நினைச்சேன்."

"பல வருஷங்கள் கழிச்சு உன்னைப் பாக்கறதால தன்னோட நிலைமை பத்தி இப்ப உங்கிட்ட சொல்ல வேண்டாம்னு நினைச்சிருப்பான். ஆனா, சீக்கிரமே வேற ஒரு தொழில் ஆரம்பிச்சுடுவேன்னு எங்கிட்ட சொன்னான். அவன் குரல்ல இருந்த உறுதியையும், அவனோட கடந்த கால செயல்பாடுகளையும் பாக்கறப்ப அவன் மறுபடியும் ஒரு உயர்ந்த நிலைக்கு சீக்கிரமே வந்துடுவான்னு நினைக்கிறேன். எனக்கு அதில சந்தேகம் இல்லை!" என்றான் சுந்தர், உறுதியான குரலில்.  

குறள் 593:
ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்.

பொருள்:
ஊக்கத்தைத் தம் கைவசம் கொண்டவர், செல்வத்தை இழந்தாலும், இழந்து விட்டோமே என்று மனம் கலங்க மாட்டார்.

594. ஆர்டர் கிடைக்குமா?

"நீங்களும் ரெண்டு வருஷமா முயற்சி செஞ்சுக்கிட்டிருக்கீங்க. உங்க தயாரிப்பை யாரும் வாங்க மாட்டேங்கறாங்க. பேசாம இந்தத் தொழிலுக்கு முழுக்குப் போட்டுட்டு ஏதாவது வேலை தேடிக்கங்க. சம்பளம் குறைச்சலா இருந்தாலும் ஒரு நிலையான வருமானமாவது வரும்!" என்றாள் மீனாட்சி சலிப்புடன்.

"முயற்சி செஞ்சவங்கள்ளாம் கொஞ்ச நாளிலேயே மனம் தளர்ந்து தங்க முயற்சியைக் கைவிட்டிருந்தா இந்த உலகத்தில இவ்வளவு முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்குமா?" என்றான் ராம்குமார்.

"தத்துவம் சோறு போடாதுங்க!"

ரு நிறுவனத்திலிருந்து தன் தயாரிப்புக்கு ஆர்டர் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக அறிந்து அங்கே சென்றான் ராம்குமார். 

அந்த நிறுவனத்தின் பொது மேலாளரிடம் தன் தயாரிப்பைப் பற்றி ராம்குமார் விளக்கிய பிறகு, மற்ற பலரும் சொன்னது போல் அவரும், "யோசிச்சு சொல்றேன்!" என்று சொல்லி அவனுக்கு விடை கொடுத்தார்.

நம்பிக்கையுடன் வந்திருந்த ராம்குமார் ஏமாற்றதுடன் அங்கிருந்து கிளம்ப யத்தனித்தான். 

அப்போது பொது மேலாளரிடம் ஏதோ கேட்பதற்காக, அவர் அறைக்குள் வந்த அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சிகாமணி, ராம்குமாரைப் பார்த்து விட்டு, பொது மேலாளரிடம், "'யார் இவரு?" என்று சாதாரணமாக விசாரித்தார்.

"அவரோட ப்ராடக்ட் பற்றி விளக்கறதுக்காக வந்தாரு. யோசிச்சு சொல்றதா சொல்லிக்கிட்டிருந்தேன்" என்றார் பொது மேலாளர்.

ராம்குமாரை உற்றுப் பார்த்த சிகாமணி அவன் முகத்தில் இருந்த ஏமாற்றத்தை கவனித்து விட்டு, "உள்ளே வாங்க. உங்க ப்ராடக்ட் பத்தி நானும் தெரிஞ்சுக்கறேன்!" என்று சொல்லி ராம்குமாரைத் தன் அறைக்கு அழைத்துச் சென்றார்.

சிகாமணி ராம்குமாருடன் தன் அறைக்குள் சென்றதும், பொது மேலாளர், அருகிலிருந்த தன் உதவியாளரிடம், "சாருக்கு ரொம்ப இரக்க குணம். இந்த ராம்குமார் மேல இரக்கப்பட்டு ஒரு சின்ன ஆர்டர் கொடுப்பாரு. அவரோட ப்ராடகட் எப்படி இருக்குமோ தெரியாது. அதனாலதான் யாரையுமே சாரைப் பாக்க விடாம நானே பேசி அனுப்பிடுவேன்!" என்றார்.

ராம்குமார் தன் நிறுவனம் பற்றியும், தன் தயாரிப்பு பற்றியும், அதன் சிறப்புகளைப் பற்றியும் கூறியதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட சிகாமணி, "மிஸ்டர் ராம்குமார்! உங்களுக்கு நான் ஆர்டர் கொடுக்கலாம். ஆனா அது உங்களுக்குப் பெரிசா உதவாதுன்னு நினைக்கிறேன்" என்றார்.

ராம்குமார் சற்று ஏமாற்றத்துடன், "சின்ன ஆர்டரா இருந்தாலும் பரவாயில்ல சார்!" என்றான்.

"சின்ன ஆர்டர்தான் கொடுக்கப் போறேன். ஆனா உங்க தயாரிப்புக்கு நல்ல மார்க்கெட் இருக்குன்னு நினைக்கிறேன். அதனால உங்க ப்ராடக்டைப் பயன்படுத்திப் பாத்துட்டு அது நல்லா இருந்தா நானே அதை டிஸ்டிரிப்யூட் பண்றேன். எனக்குப் பெரிய மார்க்கெடிங் நெட்வொர்க் இருக்கு. அதனால உங்க விற்பனை பலமடங்கு அதிகரிக்கும். உங்க உற்பத்தியையும் நீங்க அதிகரிக்க வேண்டி இருக்கும். அதுக்கு நீங்க தயாரா?" என்றார் சிகாமணி.

"நிச்சயமா சார்! ஒரு ஆர்டரை எதிர்பார்த்துதான் நான் வந்தேன், இவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைக்கும்னு எதிர்பாக்கல!" என்றான் ராம்குமார் பொங்கி வந்த மகிழ்ச்சியுடன்.

குறள் 594:
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.

பொருள்:
தளர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கம் (செல்வம்) தானே அவன் உள்ள இடத்திற்கு வழி கேட்டுக் கொண்டு போய்ச் சேரும்.

595. அப்பா சொன்ன அறிவுரை!

அந்தக் கல்லூரியின் ஆண்டு விழாவுக்கான சிறப்பு விருந்தின தொழிலதிபர் ஆறுமுகம் பேசத் தொடங்கினார்:

"நான் பள்ளிப் படிப்பையே முடிக்காதவன். படிக்க வசதி இல்லாததால, அஞ்சாவது வகுப்போட என் படிப்பு நின்னு போச்சு. கல்லூரியில படிக்கிற உங்களுக்கு நான் சொல்றதுக்கு என்ன இருக்குன்னு தெரியல. கல்லூரி நிர்வாகம் என்னைக் கூப்பிட்டப்ப அவங்க கூப்பிட்டதுக்கு மரியாதை கொடுக்கணும்னுதான் வந்தேன்.

"என் அப்பா எனக்கு சில விஷயங்களை சொல்லிக் கொடுத்திருக்காரு. அதையெல்லாம் உங்ககிட்ட பகிர்ந்துக்கலாம்னு நினைக்கிறேன். என் அப்பாவும் அதிகம் படிக்காதவர்தான். அதனால அவர் எனக்கு சொல்லிக் கொடுத்த விஷயங்கள் உங்களுக்கு எந்த அளவுக்குப் பயன்படும்னு தெரியல. ஆனா எங்கிட்ட சொல்றதுக்கு வேற விஷயம் இல்லையே!

"எங்க ஊர்ல ஒரு குளம் இருக்கும். அதுல தாமரை, அல்லி இன்னும் சில வகை நீர்ப்பூக்கள் இருக்கும். நீர்ப்பூக்களை நீங்க கவனிச்சீங்கன்னா, பூக்கள் எல்லாம் நீர்மட்டத்தில மிதக்கும். அவற்றோட தண்டு தண்ணிக்குள்ள இருக்கும். சில சமயம் ஒரு சிறு பகுதி வெளியில தெரியும்.

"குளத்தில சில சமயம் தண்ணி அதிகமா இருக்கும், சில சமயம் குறைவா இருக்கும். ஆனா தண்ணி அளவு எப்படி இருந்தாலும், பூ தண்ணிக்கு மேலேயும், தண்டு தண்ணிக்குள்ளேயும் இருக்கும். எனக்கு அது ஆச்சரியமா இருக்கும். குளத்தில அஞ்சு அடி தண்ணி இருந்ததுன்னு வச்சுக்கங்க, அப்ப தண்ணிக்குள்ள இருக்கற தண்டும் கிட்டத்தட்ட அஞ்சு அடிநீளம் இருக்கும் இல்லையா?

"தண்ணி அளவு மூணு அடியாக் குறையுதுன்னு வச்சுப்போம். அஞ்சு அடி நீளம் இருந்த தண்டுல இப்ப மூணு அடிதானே தண்ணிக்குள்ளே இருக்கு, மீதி ரெண்டு அடி தண்ணிக்கு மேலே வெளியே நீட்டிக்கிட்டிருக்கணும் இல்ல? ஏன் அப்படி இல்லேனு எனக்குப் புரியல. இதை என் அப்பாகிட்ட கேட்டேன். அவரு சொன்னாரு. 'தண்ணி மட்டம் எந்த அளவுக்கு இருக்கோ அந்த அளவுக்குத்தான் தண்டோட நீளம் இருக்கும். தண்ணி மட்டம் மேலே போச்சுன்னா தண்டு வளர்ந்து தண்ணி மட்டம் அளவுக்கு வரும். தண்ணி மட்டம் குறைஞ்சுடுச்சுன்னா தண்டு நீளம் தண்ணி மட்டம் அளவுக்கு சுருங்கிடும்.' 'ஏன் அப்படி?'ன்னு நான் கேட்டதுக்கு, அதுதான் இயற்கையோட விதின்னு சொன்னாரு.

"பந்தைத் தூக்கிப் போட்டு விளையாடச் சொல்லுவாரு. முதல்ல பக்கத்தில ஒரு இடத்தைக் காட்டி அது மட்டும் தூக்கிப் போடச் சொல்லுவாரு. அஞ்சாறு தடவை தூக்கிப் போட்டப்புறம், தூரமா ஒரு இடத்தைக் காட்டி அங்கே போடச் சொல்லுவாரு. அவ்வளவு தூரம் போட முடியாதேன்னு நான் சொன்னா, 'அவ்வளவு தூரம் போடணும்னு மனசுக்குள்ள தீர்மானிச்சுக்கிட்டு, முயற்சி செஞ்சு போடு'ம்பாரு.

"முதல் தடவை என்னால பந்தை அவ்வளவு தூரம் போட முடியாது. 'பரவாயில்ல, முன்னை போட்ட தூரத்தை விட அதிகமாப் போட்டிருக்க, இல்ல? முயற்சி பண்ணிக்கிட்டிருந்தே இருந்தா முடியும்'னு சொல்லுவாரு. அவர் சொன்னபடியே முயற்சி செஞ்சதில என்னால அந்த தூரம் போட முடிஞ்சது. அது மட்டும் இல்ல. அதுக்கப்புறம் முயற்சி செஞ்சு இன்னும் அதிக தூரமும் போட முடிஞ்சது.

"என் அப்பா சொன்ன இந்த அறிவுரைகள்தான் என் வாழ்க்கையில எனக்கு அடிப்படையா அமைஞ்சுது. உயர்ந்த லட்சியங்களை உருவாக்கிக்கிட்டு விடாமுயற்சியோட செயல்பட்டதாலதான் என்னால வாழ்க்கையில வெற்றி பெற முடிஞ்சதுன்னு நான் நம்பறேன். நான் உங்களுக்கு சொல்ல விரும்பறதும் இதுதான். உங்க லட்சியங்கள், உறுதி, உழைப்பு இவற்றோட அளவுக்குதான் உங்களோட உயர்வு இருக்கும், அதனால உயர்ந்த இலக்குகளை வகுத்துக்கிட்டு, அவற்றை அடையணுங்கற உறுதியோட சிறப்பா முயற்சி பண்ணுங்க. நிச்சயமா வெற்றி பெறுவீங்க!"

ஆறுமுகம் பேசி முடித்ததும், மாணவர்களிடையே பலத்த கரவொலி எழுந்தது. 

கரவொலி அடங்கியதும் ஒரு மாணவன் எழுந்து, "சார்! ஒரு கேள்வி. உங்கப்பா உங்களுக்குச் சொன்ன அறிவுரைகளைப் பத்தி சொன்னீங்க. உங்க அப்பா இதையெல்லாம் அவர் வாழ்க்கையில எந்த அளவுக்குப் பயன்படுத்தினார்னு சொல்ல முடியுமா?" என்றான்.

ஆறுமுகம் அந்த மாணவனை சற்று நேரம் உற்றுப் பார்த்து விட்டு, "தம்பி! உங்க புத்திசாலித்தனமான கேள்வியைப் பாராட்டறேன். உங்க கேள்விக்கு பதில் இந்த அறிவுரைகளை என் அப்பா அவரோட வாழ்க்கையில பயன்படுத்தல!" என்றார்.

ஒரு நிமிடம் அரங்கில் மௌனம் நிலவியது. 

ஆறுமுகம் தொடர்ந்து பேசினார்.

"எனக்கு அறிவுரை சொன்ன என் அப்பா தன் வாழ்க்கையில இதை ஏன் பயன்படுத்தலைங்கற சந்தேகம் உங்க எல்லாருக்கும் வரும். இந்த அறிவுரைகள் என் அப்பா சொன்னவை இல்லை. என் அப்பா முகமே எனக்கு நினைவில்ல. நான் குழந்தையா இருந்தப்பவே அவர் இறந்து போயிட்டாரு.

"இங்கே என்னைப் பேசக் கூப்பிட்டப்ப முதல்ல எனக்கு என்ன பேசறதுன்னு தெரியல. என் உதவியாளர்கிட்ட சொல்லி ஒரு பேச்சை எழுதிக் கொடுக்கச் சொல்லி அதைப் பேசிடலாமான்னு நினைச்சேன். என் தொழில் சம்பந்தப்பட்ட கூட்டங்கள்ள அப்படித்தான் செய்வேன். அப்புறம், வாழ்க்கையில நான் கத்துக்கிட்ட ஒண்ணு ரெண்டு விஷயங்களை எளிமையா சொன்னா உங்களுக்குப் பயனுள்ளதா இருக்குமேன்னு நினைச்சேன். அதையெல்லாம் என்னோட அறிவுரை மாதிரி சொன்னா வகுப்பில பாடம் எடுக்கற மாதிரி இருக்கும், அதனால என் அப்பா எனக்குச் சொன்ன மாதிரி ஒரு கதை மாதிரி சொன்னேன். இந்த உண்மையை இப்ப சொல்றதில தப்பு இல்லேன்னு நினைக்கிறேன். ஏன்னா நான் சொன்ன விஷயம் உங்க மனசில நல்லாப் பதிஞ்சுடுச்சுங்கறதை என் பேச்சை நீங்க ஆர்வமாக் கேட்டதிலேந்து புரிஞ்சுக்கிட்டேன்.நன்றி!"

இப்போது எழுந்த கரவொலி முன்பு எழுந்ததை விடப் பல மடங்கு அதிகமாக இருந்தது.

குறள் 595:
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.

பொருள்:
நீர்ப்பூக்களின் உயரம் (அவை மலர்ந்துள்ள குளத்தின்) நீர்மட்டத்தின் அளவே. இருக்கும். அது போல மக்களின் உயர்வும் அவர்களின் மன ஊக்கத்தின் அளவே.

596. விற்பனை இலக்கு

"இந்த வருஷமும் வழக்கம் போல பக்கத்தில போக முடியாத அளவுக்கு சேல்ஸ் டார்கெட் கொடுத்திருக்காரு நம் எம் டி!"

"ஒவ்வொரு வருஷமும் இந்தக் கதைதானே நடக்குது! ஆனா கடந்த காலத்திலேந்து அவர் பாடம் எதுவும் கத்துக்கிட்ட மாதிரி தெரியலியே!"

"இதெல்லாம் முடியாது சார்னு நம்ம சேல்ஸ் மானேஜர் தைரியமா சொல்லணும்! ஆனா அவரு எம் டியை எதிர்த்துப் பேச முடியாம மௌனமா உக்காந்திருந்தாரு. ஆனா டார்கெட்டை சொல்லி சொல்லி நம்ம உயிரை எடுப்பாரு!"

விற்பனை பட்ஜெட் கூட்டம் முடிந்து வெளியே வந்த விற்பனைப் பிரதிநிதிகள் தங்களுக்குள் பேசிக் கொண்டவை இவை.

"சார்! மீட்டிங்ல எதுவும் சொல்ல வேண்டாம்னு பேசாம இருந்தேன். ஆனா நாம கொடுத்த டார்கெட் ரொம்ப அதிகம்னு தோணுது" என்றார் சேல்ஸ் மானேஜர் விக்கிரமன்.

"ரொம்ப அதிகம்னு நீங்க சொல்றதைக் கேக்க சந்தோஷமா இருக்கு. கொஞ்சம் அதிகம்னு சொல்லியிருந்தீங்கன்னா, அடாடா, இன்னும் அதிகமாக் கொடுத்திருக்கலாமேன்னு நினைச்சிருப்பேன்!" என்றார் நிர்வாக இயக்குனர் செந்தில் சிரித்துக் கொண்டே.

"சார்! நான் சொல்றேனேன்னு தப்பா நினைக்காதீங்க. ஒவ்வொரு வருஷமும் நாம பெரிய டார்கெட் கொடுக்கறோம். ஆனா அதில ஐம்பது அல்லது அறுபது சதவீதம்தான் நம்மால விற்பனை செய்ய முடியுது. இது விற்பனைப் பிரதிநிதிகளை டிஸ்கரேஜ் பண்ணாதா?"

"விற்பனை இலக்கை எட்டலை என்பதற்காக நாம யாரையும் வேலையை விட்டு அனுப்பல, அவங்களுக்கு நல்ல இன்க்ரிமென்ட் கொடுக்கறோம். கடந்த மூணு வருஷங்கள்ள ஒண்ணு ரெண்டு பேரைத் தவிர வேற யாரும் வேலையை விட்டுப் போகவும் இல்ல" என்றார் செந்தில்.

"ஆமாம் சார்! நீங்க ரொம்பப் பெருந்தன்மையா, தாராளமா நடந்துக்கிறீங்கன்னு விற்பனைப் பிரதிநிதிகள் பல பேர் எங்கிட்ட சொல்லி இருக்காங்க. அவங்க உங்களுக்கு விஸ்வாசமாத்தான் இருக்காங்க. ஆனா டார்கெட் அன்ரியலிஸ்டிக்கா இருக்கக் கூடாதுன்னு ஒரு பிரின்சிபிள் இருக்கு இல்ல?"

"இருக்கு. ஆனா நான் பின்பற்றுவது வேற பிரின்சிபிள். நம் இலக்குகள் உயர்வா இருக்கணும்கறது என் பிரின்சிபிள்!" என்று சொல்லிச் சிரித்தார் செந்தில்.

"அது நடைமுறைக்கு சரியா வராதே சார்!"

"உங்ககிட்ட ஒரு விஷயத்தைப் பகிர்ந்துக்கலாம்னு நினைக்கிறேன். நான் வாழ்க்கையில பல விஷயங்களுக்கு எயிம் பண்ணியிருக்கேன். ஆனா, பெரும்பாலும், எனக்குக் கிடைச்சது நான் எயிம் பண்ணினதை விட ரொம்பக் குறைவாத்தான் இருக்கும். ஆனா மறுபடியும் நான் இன்னொரு பெரிய விஷயத்துக்குத்தான் குறி வைப்பேன். 

"ஆரம்பத்தில நான் ஒரு நிறுவனத்தில வேலை பார்த்தேன்.நான் வேலை பார்த்த நிறுவனத்திலேயே மேலே வரணும்னு முயற்சி பண்ணினேன். ஆனா ஓரளவுக்குத்தான் என்னால மேல வர முடிஞ்சது அப்புறம்தான் சொந்தத் தொழில் ஆரம்பிச்சேன். ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனமா வரணுங்கறது என்னோட இலக்கு. ஆனா நாம இன்னும் ஒரு சின்ன நிறுவனமாத்தான் இருக்கோம்.

"ஆனா இன்னும் என் இலக்கை நான் கைவிடல. சிறு நிறுவனங்களுக்குள்ளேயே நாம ஓரளவு பெரிய நிறுவனமா இருக்கோம்னா அதுக்கு என்னோட உயர்வான இலக்குகள்தான் காரணம்னு நான் நினைக்கிறேன்!"

"நீங்க சொல்றது சரியா இருக்கலாம் சார். ஏன்னா, நம்ம செயல்பாடு நம் இலக்கை விடக் குறைவா இருந்தாலும், நம் வளர்ச்சி இந்தத் தொழிலோட சராசரி வளர்ச்சியை விட அதிகமா இருக்கு. நீங்க சொன்னதைக் கேட்டப்புறம்,  உங்களோட உயர்ந்த இலக்குகள்தான் இதற்குக் காரணமா இருக்கும்னு தோணுது!" என்றார் விக்கிரமன். 

குறள் 596:
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.

பொருள்:
எண்ணங்கள் எல்லாம் உயர்வாகவே இருக்க வேண்டும். அவை  கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக் கூடாது.

597. மகேஷ் செய்த மோசடி

"நிலைமை இவ்வளவு மோசமாயிடுச்சே, என்ன செய்யப் போறீங்க?" என்றாள் பரிமளா.

பரந்தாமன் பதில் சொல்லவில்லை.

ஐந்து ஆண்டுகளாகச் செய்து வந்த தொழிலில் கடந்த சில மாதங்களாகப் பல பின்னடைவுகள்.

அவன் நிறுவனத்தில் மானேஜராக இருந்து தொழிலை கவனித்துக் கொண்ட மகேஷ் திடீரென்று வேலையை விட்டுப் போவதாக அறிவித்தான். காரணம் கேட்டதற்கு ஏதோ குடும்பப் பிரச்னை என்று சொன்னான்.

மகேஷை நம்பிப் பல பொறுப்புகளை விட்டு விட்டுத் தொழிலை விரிவாக்குவதில் கவனம் செலுத்தி வந்த பரந்தாமன் மகேஷ் பார்த்துக் கொண்டிருந்த அன்றாட வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தபோதுதான் ஒரு அதிர்ச்சியான உண்மை அவனுக்குப் புரிந்தது.

அவர்கள் தொழிலில் பல பரிவர்த்தனைகள் ரொக்கத்திலேயே நடந்து வந்ததால், அதைப் பயன்படுத்தி மகேஷ் பல மோசடிகளைச் செய்திருந்தான். சில வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் வரவு வைக்கப்படவில்லை. பணம் நிலுவையில் இருப்பது பற்றி அவர்களிடம் கேட்டபோது, ஏற்கெனவே மகேஷிடம் பணம் கொடுத்து விட்டதாகக் கூறினார்கள்.

ஒரு சிலர் கோபித்துக் கொண்டு தொழில் உறவை முறித்துக் கொண்டனர். "ரொக்கப் பரிவர்த்தனை நடக்கிற இடத்தில நம்பிக்கைதான் முக்கியம். கொடுத்த பணத்தை இல்லைன்னு சொல்ற உங்களோட எப்படித் தொழில் செய்ய முடியும்?" என்றார்கள். 

தவறு நடந்து விட்டதாக பரந்தாமன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதை ஓரிருவர் மட்டும்தான் ஏற்றுக் கொண்டனர். அவர்களும் இனி தன்னிடம் பழைய நம்பிக்கையுடன் இருக்க மாட்டார்கள் என்று பரந்தாமனுக்குப் புரிந்தது.

அது போல் பொருட்கள் சப்ளை செய்திருந்த சிலருக்குப் பணம் கொடுக்கப்பட்டதாகக் கணக்கில் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கொடுக்கப்பட்டவில்லை என்பது அவர்கள் பணம் கேட்டபோதுதான் தெரிந்தது.

அது போல் செலவுகளிலும் பண மோசடிள் நடந்திருந்தன. சில தொழிலாளர்களுக்கு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டதாகக் கணக்கு எழுதப்பட்டு பணம் கையாடப்பட்டிருந்தது.

வேலையை விட்டுப் போன மகேஷைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. வீடு மாறி விட்டான். எங்கே போனான் என்று தெரியவில்லை. திட்டமிட்டு ஏமாற்றி இருக்கிறான் என்று தெரிந்தது.

"போலீஸ்ல புகார் கொடுக்க முடியாதா?" என்றாள் பரிமளா.

"எதையுமே நிரூபிக்க முடியாதே! போலீஸ்ல அவனைப் பிடிச்சாலும் கொஞ்ச நாள் உள்ளே வச்சு விசாரிச்சுட்டு வெளியில விட்டுடுவாங்க. கோர்ட்ல கேஸ் நிற்காது. எல்லாத்துக்கும் மேல அவங்கிட்டேந்து ஒரு ரூபா கூடத் திரும்ப வாங்க முடியாது. நேரம்தான் வீணாகும்!" என்றான் பரந்தாமன்.

"என்னவோ பக்கம் பக்கமா எழுதிக் கிட்டிருக்கீங்களே! அவன் கையாடின விவரங்களைத்தானே எழுதிக்கிட்டிருக்கீங்க?"

"அதையெல்லாம் எழுதி என்ன பிரயோசனம்? போனது போனதுதான். அவன் இது மாதிரி மோசடிபண்ணக் காரணம் நான் ஆஃபீஸ்ல சரியான சிஸ்டத்தை உருவாக்காததுதான். ஒரு மகேஷ் போயிட்டான்னா ஒரு ரமேஷையோ, சுரேஷையோ வச்சுத் தொழிலை நடத்தித்தானே ஆகணும்? அப்பதானே என்னால தொழிலை விரிவாக்கறதில கவனத்தைச் செலுத்த முடியும்? அப்ப மறுபடி இது மாதிரி தப்பு நடக்கக் கூடாது இல்ல? இனிமே இது மாதிரி நடக்காம இருக்க ஆஃபீஸ்ல சில சிஸ்டம்ஸ், ஒழுங்குமுறைகளைக் கொண்டு வரணும். அதையெல்லாம்தான் யோசிச்சு விவரமா எழுதிக்கிட்டு இருக்கேன்!" என்றான் பரந்தாமன்.

குறள் 597:
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.

பொருள்:
உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும் யானை தன் பெருமையை நிலைநிறுத்தும், அதுபோல் ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளர மாட்டார்.

598.  உதவி செய்ய விரும்பியும்...

"நான் வேலையில இருந்தப்ப  சில அனாதை ஆசரமங்கள், முதியோர் இல்லங்கள்  இதுக்கெல்லாம் மாசாமாசம் ஒரு தொகையை நன்கொடையாக் கொடுத்துட்டு இருந்தேன். ஆனா இப்ப அப்படி கொடுக்க முடியல!" என்றான் கதிரேசன்.

"ஏன், இப்பதான் சொந்தத் தொழில் செஞ்சு முன்னை விட அதிகமா சம்பாதிக்கிறீங்களே, இப்ப ஏன் கொடுக்க முடியலை?" என்றாள் அவன் மனைவி குமாரி.

"அதுதான் எனக்கும் புரியல. கணக்குப் பாத்தா, வேலையில இருந்தப்ப எனக்குக் கிடைச்ச சம்பளத்தை விட சொந்தத் தொழில்ல வர வருமானம் நிச்சயமா அதிகமாத்தான் இருக்கு. ஆனா எந்த ஒரு கமிட்மென்ட்டும் வச்சுக்கத் தயக்கமா இருக்கு!"

"நான் கூட முன்னேயெல்லாம் நகைச்சீட்டு போட்டுக்கிட்டிருந்தேன். இப்ப நகைச்சீட்டில சேரவே தயக்கமா இருக்கு. குறிப்பிட்ட தேதிக்குள்ள மாசாமாசம் பணம் கட்டணும். உங்ககிட்ட கேட்டா நீங்க கொடுப்பீங்களான்னு தெரியல. 'இப்ப பணம் இல்ல. ஒரு பெரிய ஆர்டரை எதிர்பார்த்துக்கிட்டிருக்கேன். அது வந்தப்பறம்தான் கையில பணம் புரளும்'னு சொல்லிட்டீங்கன்னா?" 

தான் சிலமுறை இவ்வாறு சொல்லி இருப்பது நினைவு வந்ததால் கதிரேசன் பேசாமல் இருந்தான்.

திரேசன் தன் நண்பன் தனசேகரனைப் பார்க்கச் சென்றிருந்தான். தனசேகரனும் சொந்தத் தொழில் செய்பவன்தான். ஆனால் கதிரேசனுடன் ஒப்பிடும்போது அவன் தொழில் சிறியது, வருமானமும் குறைவுதான்.

தனசேகரனின் நிறுவனத்தில் அவன் அறையில் கதிரேசன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, அவனைப் பார்க்க ஒருவர் வந்தார்.

"ஒரு நிமிஷம்" என்று கதிரேசனிடம் சொல்லி விட்டு அவரிடம்  சில வார்த்தைகள் பேசிய தனசேகரன் அவரிடம், "கொஞ்சம் வெளியில உட்காருங்க. மானேஜர்கிட்ட சொல்லி செக் கொடுக்கச் சொல்றேன்" என்றான்,

பிறகு மானேஜரை அழைத்தான்.

"எங்க ஊர் கோவில்ல ஆடி மாசம் நடக்கிற அன்னதானத்துக்கு எப்பவும் நன்கொடை கொடுப்போம் இல்ல, அவரு வந்திருக்காரு. பத்தாயிரம் ரூபாய்க்கு அவருக்கு செக் போட்டுடுங்க" என்றான் தனசேகரன் மானேஜரிடம்.

மானேஜர் சற்றுத் தயங்கி விட்டு, "சார்! இப்ப நிலைமை ரொம்ப டைட்டா இருக்கு" என்றபடியே அவன் அருகில் வந்து ஒரு கணக்குப் புத்தகத்தைக் காட்டினார்.

சற்று யோசித்த தனசேகரன், மானேஜரிடம் சில விவரங்களைக் கேட்டு விட்டு, "ஒரு நிமிஷம் இருங்க!" என்றவன் அறைக்கு வெளியே போய் விட்டு சில விநாடிகளில் திரும்பி வந்தான்.

மானைஜரைப் பார்த்து, "பத்து நாள்  கழிச்சுப் பணம் கிடைச்சாப் போதும்னு அவரு சொல்றாரு. அதனால நான் சொன்னபடி நீங்க போஸ்ட் டேடட் செக் கொடுத்துடுங்க" என்றான்.

மானேஜர் வெளியே சென்றதும், தனசேகரன் கதிரேசனைப் பார்த்து,"என்னடா, பசிக்கு சோறு கேட்டா பத்து நாள் கழிச்சு வான்னு சொல்ற மாதிரி, அன்னதானத்துக்கு நன்கொடை கேட்டா இவன் போஸ்ட் டேடட் செக் கொடுக்கறானேன்னு நினைக்காதே! நான் உன்னை மாதிரி பெரிய பிசினஸ்மேன் இல்ல. எங்கிட்ட பணப்புழக்கம் கம்மிதான். ஆனா நல்ல விஷயங்களுக்கு உதவணுங்கற எண்ணம் இருக்கு. அதனால இது மாதிரி ஏதாவது அட்ஜஸ்ட் பண்ணித்தான் உதவி செய்ய முடியுது. ஆனா உதவணும்னு உறுதி இருக்கிறதாலேயோ என்னவோ, எனக்குத் தேவையான பணம் கிடைச்சுடுது. இப்ப பத்து நாள் தள்ளித் தேதி போட்டு செக் கொடுத்திருக்கேன்னா அந்த செக் என் பாங்க்குக்கு வரப்ப எனக்கு ஏதாவது பணம் வந்திருக்கும். இதுவரையிலேயும் ஒரு தடவை கூட பாங்க்ல பணம் இல்லாம போய், 'தயவு செஞ்சு இந்த செக்கை பாஸ் பண்ணிடுங்க சார்'னு பாங்க் மானேஜர்கிட்ட கெஞ்சற நிலைமை வந்ததில்ல!" என்று சொல்லிச் சிரித்தான்.

நண்பனை வியப்புடன் பார்த்தான் கதிரேசன்.

குறள் 598:
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு.

பொருள்:
ஊக்கம் இல்லாதவர் பிறர்க்கு உதவும் வள்ளல் யாம் என்னும் மன உயர்வைப் பெறமாட்டார்.

599. முருகன் என்று ஒருவன்! 

அந்தச் சிறிய கிராமத்தில்தான் முருகன் தன் பிரசாரத்தைத் தொடங்கினான்.

அருகில் இருந்த நகரத்துக்கு வந்து, அங்கிருந்த ஒரு சிறிய ஹோட்டலில் தங்கினான். அங்கிருந்து பஸ் பிடித்து அந்த ஊரில் வந்து இறங்கிய முருகன் அருகிலிருந்த டீக்கடைக்குச் சென்றான். 

அங்கே டீ வாங்கி அருந்தியபடியே அங்கே இருந்தவர்களிடம் இயல்பாகப் பேச ஆரம்பித்தான். அவர்கள் அவன் சொன்னதை வியப்புடன் கேட்டனர். 

டீக்கடை உரிமையாளரும் ஆர்வத்துடன் கேட்டார். டீக்குக் காசு கொடுக்கும்போது, டீக்கடை உரிமையாளரிடமும் பேசினான். அவர் தயக்கத்துடன் தலையாட்டினார்.

பிறகு, அங்கு வந்த பஸ்ஸைப் பிடித்து உடனே நகரத்தில் தான் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்று விட்டான் முருகன்.

மாலை ஆறு மணிக்கு முருகன் மீண்டும் அந்த கிராமத்துக்கு பஸ்ஸில் வந்து இறங்கியபோது பஸ் நிறுத்தத்துக்கு அருகே அவனுக்காகக் காத்திருப்பது போல் பதினைந்து இருபது பேர் நின்று கொண்டிருந்தனர்.

அவர்களிடம் ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டு அவர்களுடன் சென்றான் முருகன்.

ஒரு பெரிய தெருவுக்கு அவனை அவர்கள் அழைத்துச் சென்றனர். அங்கே ஐம்பது அறுபது பேர் கூடி இருந்தனர்.

முருகன் அவர்களுக்கு முன்னால் நின்று பேச ஆரம்பத்தான். அப்போது அருகிலிருந்த ஒரு பெரிய வீட்டில் அமர்ந்திருந்தவர், "இந்தத் திண்ணையில உக்காந்துக்கிட்டுப் பேசுங்க. அப்பதான் உங்களை எல்லாராலயும் பாக்க முடியும்" என்றார்.

முருகன் அந்தத் திண்ணையில் அமர்ந்து பேச ஆரம்பித்தான்.

"வணக்கம். என் பெயர் முருகன். நான் இந்த ஊர்க்காரன் இல்ல. ஆனா இந்த நாட்டுக் குடிமகன். அந்த உரிமையிலதான் இந்த ஊருக்கு வந்திருக்கேன். இந்தத் தொகுதியிலேந்து ஜெயிச்ச தலைவர் நாலரை வருஷமா பதவியில இருக்காரு. 

"அவர் மக்களுக்கு எந்த நன்மையும் செஞ்சதில்ல. ஆனா எல்லாரையும் நல்லா ஏமாத்திக்கிட்டிருக்காரு. யாராவது அவரை எதிர்த்துப் பேசினா அவங்களைப் பத்தி அவதூறுப் பிரசாரம் பண்ணுவாரு, தன்னோட அதிகாரத்தை வச்சு அவங்களை  சிறையில தள்ளுவாரு, அவங்க நாட்டுக்கே எதிரின்னு சித்தரிப்பாரு. 

"கொஞ்சம் பெரிய அளவில எதிர்ப்பு வந்தா மக்களுக்குள்ள பிரிவினைகளை ஏற்படுத்தி  சில பேர் மேல வெறுப்பை விதைச்சு அந்த வெறுப்பு வெள்ளத்தில கரையேந்தி வந்துடுவாரு.

"அரசியல்ல அவரை எதிர்க்க வேண்டியவங்க ஏனோதானோன்னு செயல்படறதால அவர் வலுவாகிக்கிட்டே போறாரு. அடுத்த தேர்தல்லேயும் அவர்தான் ஜெயிக்கப் போறாருன்னு பேசிக்கறாங்க. 

"அவர் விலை கொடுத்து வாங்கின ஊடகங்களும், அவரால் மிரட்டப்பட்ட ஊடகங்களும் அவர் செஞ்ச தப்புகளை மறைச்சு அவர் செய்யாத நல்லதையெல்லாம் செஞ்சதா சொல்லி அவருக்கு லாலி பாடிக்கிட்டிருக்காங்க.

"ஒரு சமூகத்தில ஒரு தப்பான விஷயம் நடக்கும்போது, அதைத் தொடர்ந்து நடக்க விட்டா அது அந்த சமூகத்துக்குக் கேடு, அவமானம். அந்த அவமானம் நடக்கக் கூடாதுன்னு நான் நினைக்கிறேன். என்னை மாதிரி நினைக்கிறவங்க உங்கள்ளேயும் பல பேர் இருப்பீங்க. அப்படி நினைக்காதவங்களுக்கு உண்மையைச் சொல்லிப் புரிய வைக்கிறது என்னோட கடமைன்னு நினைக்கிறேன்.

"ஒரு பூனை மாதிரி அமைதியா உள்ளே வந்தவரு இன்னிக்கு ஒரு யானை மாதிரி வளர்ந்து, மதம் பிடிச்சுப் போய் எல்லாத்தையும் மிதிச்சு நாசமாக்கிக்கிட்டிருக்காரு. 

"பூனைக்கு யார் மணி கட்டறதுன்னு ஒரு பழமொழி இருக்கு. பூனைக்கு மணி கட்ட எலிகள் பயப்படறது நியாயம்தான். ஆனா யானையைக் கண்டு சிங்கம், புலி எல்லாம் பயப்படக் கூடாது இல்ல? ஆனா நம்மைச் சுத்தி இருக்கறவங்க எலி மாதிரி ஒடுங்கிக்கிட்டுத்தானே இருக்காங்க. நாம் எல்லாம் எலிகள் இல்லை, புலிகள், நம்மால மதம் பிடிச்ச யானையை அடக்க முடியும்!

"உங்களை ஏமாத்திக்கிட்டிருக்கிற தலைவரை எதிர்த்து அடுத்த தேர்தல்ல நான் நிக்கப்போறேன். நான் தனி ஆள்தான். சக்தி உள்ள கட்சிகள் ஒண்ணும் செய்யாம கையைப் பிசைஞ்சுக்கிட்டு உக்காந்திருக்கறதால மதம் பிடிச்ச யானையை மக்கள் சக்தியைத் திரட்டி அடக்கற முயற்சியை நான் துவங்கி இருக்கேன். 

"இன்னிக்கு நான் யாரோ ஒரு ஆள்தான். தேர்தலுக்கு இன்னும் ஆறு மாசம் இருக்கு. அதுக்குள்ள மக்கள்கிட்ட உண்மையை எடுத்துச் சொல்லி நிலைமையை மாத்த முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.

"அவரோட தொகுதியில இந்தத ஊர்ல நான் என் பிரசாரத்தைத் தொடங்கினதுக்குக் காரணம் இந்த ஊரோட பேரு சத்தியபுரின்னு இருக்கறதுதான். இது சத்தியத்துக்கான போராட்டம். அதை சத்தியபுரில தொடங்கறதுதானே பொருத்தமா இருக்கும்?

"இப்ப நான் ஒரு ஆளாத்தான் இருக்கேன். 'நூறு இளைஞர்களைக் கொடுங்க, இந்த நாட்டையே நான் மாத்திக் காட்டறேன்' னு விவேகானந்தர் சொன்ன மாதிரி நூறு பேர் என்னோட இருந்தா போதும், என்னால என் முயற்சியில வெற்றி அடைய முடியும்னு நம்பறேன். இன்னிக்கு இந்த ஊர்லேந்து ஒத்தர் கிடைச்சாக் கூடப் போதும். அதையே ஒரு வெற்றிகரமான ஆரம்பம்னு நான் நினைப்பேன்!"

முருகன் தன் பேச்சை நிறுத்தியதும் ஐந்து பேர் கையைத் தூக்கினார்கள்.

"நீங்க கண்டிப்பா ஜெயிப்பீங்க தம்பி!" என்று கூட்டத்தில் பின்னால் நின்றிருந்த ஒருவர் உரத்துக் கூவினார்.

குறள் 599:
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.

பொருள்:
யானை பருத்த உடம்பை உடையது, கூர்மையான கொம்புகளை உடையது, ஆயினும் ஊக்கமுள்ளதாகிய புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்.

600. அப்பா வளர்த்த மரங்கள்!

"வயசு இருபத்தைஞ்சு ஆகப் போகுது! இன்னும் ஒரு வேலையைத் தேடிக்காம உக்காந்திருக்கியே!" என்றாள் திலகம்.

"தேடிக்கிட்டுத்தானே இருக்கேன்!" என்றான் நடராஜன்.

"என்னத்தைத் தேடற? அதிகம் படிக்காத நான் பேப்பர்ல வர வேலை அறிவிப்புகளைப் பாத்து உனக்கு ஏற்றதா இருந்தா அப்ளை பண்ணச் சொல்லி உங்கிட்ட சொல்ல வேண்டி இருக்கு. அதிலேயும் நீ ஒண்ணு ரெண்டுக்குத்தான் அப்ளை பண்றே!"

"எனக்கு ஏற்ற வேலை ன்னு எனக்குத்தானே அம்மா தெரியும்? நீ சொன்னதுக்காக எல்லா வேலைக்கும் நான் அப்ளை பண்ண முடியாது."

"சரி, தெரிஞ்சவங்க யார்கிட்டயாவது சொல்லி அவங்க மூலமா ஏதாவது வேலை தேடிக்கலாம் இல்ல? நான் யார்கிட்டயாவது சொன்னாலும் நீ அவங்களைப் போய்ப் பாக்க மாட்டேங்கற!"

"நீ சொல்ற ஆட்களையெல்லாம் போய்ப் பாத்து அவங்ககிட்ட நான் வேலைப் பிச்சை கேட்க முடியாது!" என்றான் நடராஜன் கோபத்துடன். தொடர்ந்து, "இப்ப என்ன நாம சாப்பாட்டுக்கு இல்லாம கஷ்டப்பட்டுக்கிட்டா இருக்கோம்?" என்றான்.

"இப்படியே இருந்துட முடியுமா? நாளைக்கே உனக்குக் கல்யாணம் ஆகி, குடும்பம் உண்டாயிடுச்சுன்னா நிலையான வருமானம் வேண்டாமா? சின்ன வயசிலேயே உன்னை எங்கிட்ட விட்டுட்டு உங்கப்பா போய்ச் சேர்ந்துட்டாரு. நான் கஷ்டப்பட்டு உன்னை வளர்த்தேன். படிக்கிற காலத்திலேயுயும் ஒழுங்காப் படிக்க மாட்டேன்னுட்ட. உன்னை காலேஜில படிக்க வைக்கணும்னு கஷ்டப்பட்டு காசு சேர்த்தேன், ஆனா நீ பள்ளிக் கூடத்தைத் தாண்டல. இப்ப வேலைக்கும் சரியா முயற்சி செய்ய மாட்டேங்கற. உன் எதிர்காலத்தை நினைச்சா எனக்கு பயமா இருக்கு. ஆனா உனக்கு அந்த பயம் கூட இல்லையே!" என்று பொரிந்து தள்ளினாள்.திலகம்.

நடராஜன் கோபத்துடன் எழுந்து சென்று விட்டான்.

திலகம் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது சிவகாமி வந்தாள்.

"என்ன திலகம் உன் பையனுக்கு வேலை கிடைச்சுதா?" என்றாள் சிவகாமி.

"இல்லை. இன்னும் தேடிக்கிட்டிருக்கான்!" என்றாள் திலகம்.

"இந்த மரம் எல்லாம் நல்லா வளர்ந்துடுச்சே!" என்றாள் சிவகாமி.

"எல்லாம் அவர் இருந்தப்ப வச்ச செடிகள். இப்ப மரமா வளர்ந்துடுச்சு!" என்றாள் திலகம். அப்போது வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்த நடராஜனைப் பார்த்த திலகம் அவனுக்கும் இந்த மரங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று நினைத்துக் கொண்டாள்.

குறள் 600:
உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு.

பொருள்:
ஒருவனுக்கு வலிமையானது ஊக்க மிகுதியே, அவ்வூக்கம் இல்லாதவர் மரங்களே, (வடிவால்) மக்களைப் போல் இருத்தலே வேறுபாடு.


                                                                                                                                               அறத்துப்பால்                                               காமத்துப்பால்   

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...