அதிகாரம் 61 - மடியின்மை (சோம்பலின்மை)

 

திருக்குறள்
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 61
மடியின்மை (சோம்பலின்மை)

601. நூலக உதவியாளர்!

"அவங்க பரம்பரைப் பணக்காரங்களாம். அதோட ஊர்ல அவங்க குடும்பத்து மேல ரொம்ப மரியாதை வச்சிருக்காங்க. யாரைக் கேட்டாலும், 'அவங்களா? அவங்க மாதிரி நல்ல மனுஷங்களைப் பாக்கவே முடியாதே!' ன்னு சொல்றாங்க. இந்த மாதிரி ஒரு சம்பந்தம் கிடைக்க நாம கொடுத்து வச்சிருக்கணும்!" என்றார் அய்யாசாமி.

"அது சரி. மாப்பிள்ளை என்ன செய்யறாரு?" என்றாள் அவர் மனைவி லட்சுமி.

"மாப்பிள்ளை படிச்சிருக்காரு. ஆனா வேலைக்குப் போகல. அவரோட அப்பா அம்மா இறந்துட்டாங்க. நிறைய சொத்து இருக்கு. மாப்பிள்ளை சொத்துக்களைப் பாத்துக்கிட்டு ஊரிலேயே இருக்காரு" என்ற அய்யாசாமி, "நீ என்னம்மா சொல்றே?" என்றார் மகள் தங்கத்தைப் பார்த்து.

"நீங்களாப் பார்த்து என்ன செஞ்சாலும் சரி அப்பா!" என்றாள் தங்கம்.

திருமணம் ஆகித் தங்கம் கணவன் வீட்டுக்கு வந்து மூன்று மாதங்கள் ஆகி விட்டன. தன் கணவன் தண்டபாணி பெரும்பாலும் வீட்டிலேயே இருப்பதை அவள் கவனித்தாள்.

ஒருநாள் அவனிடம், "ஏங்க,  நீங்க வயலுக்குப் போய்ப் பார்க்க வேண்டாமா?" என்றாள்.

"நான் எதுக்குப் போகணும்? நிலத்தையெல்லாம் குத்தகைக்குத்தானே விட்டிருக்கோம்? அறுவடை ஆனதும் நெல்லை வாங்கிப் போட்டுக்கறதுதான் நம்ம வேலை. அது கூட நமக்கு சாப்பாட்டுக்கு வேணுங்கற நெல்லை மட்டும் கொடுத்துட்டு மீதி நெல்லை வித்து எங்கிட்ட பணமாக் கொடுத்துடுவாரு குத்தகைக்காரரு!" என்றான் தண்டபாணி பெருமையுடன்.

'உரிச்ச வாழைப்பழம்!' என்று தனக்குள் முணுமுணுத்த தங்கம், "ஆமாம், நமக்கு ரைஸ்மில் இருக்கே, அங்கே கூட நீங்க போறதில்லையே?" என்றாள்.

"ரைஸ் மில்லுக்கு மானேஜர்னு ஒத்தரை எதுக்குப் போட்டிருக்கோம்? அவரு தினம் சாயந்திரம் வந்து எங்கிட்ட கணக்கு கொடுத்துட்டு அன்னிக்குக் கிடைச்ச வருமானத்தைக் கொடுத்துட்டுப் போறாரே, பாக்கலியா?"

"உங்க அப்பா, தாத்தா காலத்திலேந்தே இப்படித்தானா?"

"எங்க தாத்தா நிலங்களை அவரேதான் பாத்துக்கிட்டிருந்தாரு. என் அப்பா நிலங்களைக் குத்தகைக்கு வித்துட்டு ரைஸ் மில் ஆரம்பிச்சு அதைப் பாத்துக்கிட்டிருந்தாரு. இப்ப அது நல்லா ஓட ஆரம்பிச்சுட்டதால நான் அதுக்கு ஒரு மானேஜரைப் போட்டு நடத்திக்கிட்டிருக்கேன்!" என்றான் தண்டபாணி பெருமையுடன்.

"நீங்க புதுசா ஏதாவது தொழில் ஆரம்பிக்கப் போறீங்களா என்ன?" என்றாள் தங்கம்.

"இல்லையே! எதுக்குக் கேக்கற?"

"உங்க தாத்தா நிலங்களைப் பாத்துக்கிட்டிருந்தாரு. உங்க அப்பா ரைஸ் மில் ஆரம்பச்சு நடத்தினாரு. நீங்க ரெண்டையுமே பாத்துக்கறதில்லையே அதான் கேட்டேன்!"

"அதுதான் உன்னைப் பாத்துக்கறேனே, அது போதாதா?" என்றான் தண்டபாணி.

சில நாட்கள் கழித்து, "என்னங்க, இந்த ஊர்ல ஒரு இலவச நூலகம் இருக்கு இல்ல?" என்றாள் தங்கம்.

"ஆமாம். ஒரு வயசான அம்மா நடத்திக்கிட்டிருக்காங்க. நான் கூடப் போய்ப் பார்த்தேன். ஆனா எனக்குப் புத்தகங்கள் படிக்கிறதில ஆர்வம் இல்ல. அதனால சும்மா பாத்துட்டு வந்துட்டேன். ஆனா நல்லா நடத்தறாங்க. இவ்வளவு புத்தகங்களை எப்படி வாங்கினாங்கன்னு தெரியல. எதுக்கு ஒரு லைப்ரரி வச்சு அதை எல்லாரும் படிக்கறதுக்கு இலவசமாக் கொடுக்கறாங்கன்னும் தெரியல! ஆனா வயசான காலத்தில ரொம்ப கஷ்டப்பட்டு இதைச் செய்யறாங்க."

"ஆமாம். அவங்களுக்குக் கஷ்டமாத்தான் இருக்காம். உதவிக்கு யாராவது இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னாங்க. நான் அங்கே போய் அவங்களுக்கு உதவி செய்யலாம்னு பாக்கறேன்!" என்றாள் தங்கம்.

"உனக்கு எதுக்கு இந்த வேலை? நமக்குப் பணம் தேவையில்ல. அவங்களால அதிகமா சம்பளம் கொடுக்கவும் முடியாது!" என்றான் தண்டபாணி.

"சம்பளத்துக்கு இல்லேங்க. சும்மாதான் அவங்களுக்கு உதவியா இருக்கலாம்னு பாக்கறேன்."

"ஏன், வீட்டில உனக்குப் பொழுது போகலியா? பொழுது போகலேன்னா அந்த லைப்ரரியிலேந்து புத்தகம் வாங்கிப் படி!"

தங்கம் சற்றுத் தயங்கி விட்டு,"அதுக்கில்லீங்க. நம்ம குடும்பத்துக்கு ஊர்ல நல்ல மதிப்பு இருக்கு. உங்க அப்பா, தாத்தா எல்லாரும் தொழிலையோ, விவசாயத்தையோ பாத்துக்கிட்டிருந்தாங்க. ஆனா நீங்க ரெண்டையுமே பாக்கல. எதுவும் செய்யாம நாம சும்மா உக்காந்துக்கிட்டிருந்தா, நம்ம குடும்பத்துக்கு இருக்கிற நல்ல பேரும், மரியாதையும் கொஞ்சம் கொஞ்சமாத் தேஞ்சுடும். நாம ஏதாவது ஒரு செயல்ல ஈடுபட்டுக்கிட்டிருந்தாதான் நம்ம குடும்பத்துக்கு இருக்கிற மதிப்பு தொடர்ந்து இருக்கும். அதனால நீங்க உங்களை ஏதாவது ஒரு வேலையில ஈடுபடுத்திக்கற வரையில நான் இது மாதிரி சின்னதா ஏதாவது வேலை பார்க்கலாம்னு நினைக்கிறேன்" என்றாள். 

குறள் 601:
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்..

பொருள்:
ஒருவனிடம் சோம்பல் என்னும் இருள் நெருங்கினால் அவன் பிறந்த குடும்பமாகிய அணையாத விளக்கு ஒளி மங்கி அழிந்து போகும்.

602. நந்தனின் திட்டங்கள்!

"என்ன சார், எம்.டி. என்ன சொல்றாரு?" என்றான் சுகுமார், நிர்வாக இயக்குனர் அறைக்குச் சென்று வந்த ஜெனரல் மானேஜர் பிரபுவைப் பார்த்து.

சீனியாரிடி காரணமாக பிரபுவுக்கு ஜெனரல் மானேஜர் என்ற பதவி அளிக்கப்பட்டிருந்தாலும் அந்தச் சிறிய நிறுவனத்தில் மற்ற ஊழியர்களுடன்  கிட்டத்தட்ட சமமான நிலையில்தான் இருந்தார் அவர்.

"தினம் புதுசு புதுசா ஏதோ திட்டங்களைச் சொல்றாரு. அதையெல்லாம் எப்படி நிறைவேற்றப் போறார்னு தெரியல. எனக்குத் தலையை சுத்துது!" என்றார் பிரபு.

"உங்களை அதையெல்லாம் நிறைவேற்றச் சொல்றாரா?"

"அப்படிச் சொல்லல. தன் மனசில உள்ளதை யார்கிட்டேயாவது சொல்லணும்னு நினைக்கிறாரு. அதுக்காக என்னைப் பயன்படுத்தறாருன்னு நினைக்கிறேன். ஆனா எனக்குக் கொஞ்சம் பயமா இருக்கு?"

"என்ன பயம்?"

"அவரோட திட்டங்களை நிறைவேற்ற முயற்சி எடுக்கிற அளவுக்கு எனக்குத் திறமையோ, அனுபவமோ கிடையாது. ஒருவேளை நான் பிரயோசனமில்லைன்னு நினைச்சு என்னை வேலையை விட்டு அனுப்பிட்டு வேற யாரையாவது நியமிச்சுடுவாரோன்னுதான்!"

"அப்படியெல்லாம் நடக்காது. நீங்க அவர் அப்பா காலத்திலேந்தே இருக்கீங்க. உங்களையே தூக்கிடுவார்னா, என் கதியெல்லாம் என்ன ஆறது?" என்று பிரபுவின் பயத்தை அதிகப்படுத்தினான் சுகுமார்.

"இவரோட அப்பா ஒரு பெரிய சாதனையாளர். தான் பாத்துக்கிட்டிருந்த நல்ல வேலையை விட்டுட்டு இந்தத் தொழிலை ஆரம்பிச்சாரு. எவ்வளவோ சோதனைகளை சந்திச்சுத் தொழிலை இந்த அளவுக்கு வளர்த்திருக்காரு. இப்ப தொழில் ரொம்ப ஸ்டெடியாப் போய்க்கிட்டிருக்கு. ஆட்டோபைலட்ன்னு சொல்லுவாங்க. அது மாதிரி நாம ஒண்ணுமே செய்யாட்டாக் கூடத் தொழில் அது பாட்டுக்குப் போகும். ஆனா இவரு தன் பங்குக்கு ஏதோ செய்யணும்னு நினைக்கிறார் போல இருக்கு!"

"என்னோட அப்பா இப்படி ஒரு நிறுவனத்தை உருவாக்கி இருந்தார்னா, நான் ஜாலியா உக்காந்துக்கிட்டு வருமானத்தை வாங்கிக்கிட்டு வாழ்க்கையை அனுபவிச்சுக்கிட்டிருப்பேன்!" என்றான் சுகுமார் பெருமூச்சுடன்.

"பிரபு சார்! சில நாட்களா உங்ககிட்ட என்னோட திட்டங்களைப் பத்தி சொல்லிக்கிட்டிருக்கேன் இல்ல, அதையெல்லாம் பத்தி என்ன நினைக்கிறீங்க?" என்றான் நிர்வாக இயக்குனர் நந்தன்.

"ரொம்ப பிரமிப்பா இருக்கு சார்! ஆனா இதெயெல்லாம் செயல்படுத்த நமக்கு ஒரு செட் அப் வேணுமே!" என்ற பிரபு சற்றுத் தயங்கி விட்டு, "இப்பவே நம்ம கம்பெனி சிறப்பாத்தானே சார் போய்க்கிட்டிருக்கு?" என்றார்.

"நீங்க சொன்ன  ரெண்டுமே கரெக்ட்தான். நம்ம கம்பெனி நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு. என் அப்பா இதை ரொம்ப நல்ல நிலைக்குக் கொண்டு வந்து விட்டுட்டுத்தான் போயிருக்காரு. நான் கையைக் கட்டிக்கிட்டு உக்காந்துக்கிட்டிருந்தாலே போதும்தான். ஆனா, நம் பெற்றோர்களை நாம பின்பற்றி நடந்துக்கணும், அவங்க செஞ்சு வச்சதை அனுபவிச்சுக்கிட்டிருந்தா மட்டும் போதாதுன்னு நான் நினைக்கிறேன். அதனால நம் நிறுவனத்தை விரிவுபடுத்தலாம்னு நினைச்சுத்தான் அது தொடர்பா என் யோசனைகளை உங்ககிட்ட சொன்னேன்."

தான் ஏதாவது சொன்னால் தவறாகி விடுமோ என்று நினைத்து பிரபு மௌனமாக இருந்தார்.

"ஆனா, நீங்க சொன்ன மாதிரி, அதுக்கான செட் அப் நம்மகிட்ட இல்ல. இப்ப இருக்கிற செட் அப்பை வச்சுக்கிட்டு அதைச் செய்ய முடியாது. அதனால புது செட் அப் ஒண்ணை உருவாக்கப் போறேன். முதல்ல ப்ராஜக்ட் மானேஜர் ஒத்தரை நியமிக்கப் போறேன்."

நந்தன் தொடரந்து என்ன சொல்லப் போகிறானோ என்ற பயத்துடன் பிரபு காத்திருந்தார்.

"ஆனா, அது இப்ப இருக்கிற செட் அப்பை பாதிக்கக் கூடாது. அதனால ஒரு புது டிவிஷனை உருவாக்கி அதுக்கு ப்ராஜக்ட் மானேஜரை பொறுப்பானவரா போடப் போறேன். இந்த ஆஃபீஸ் பக்கத்தில புதுசா ஒரு கட்டிடம் கட்டி அதை ப்ராஜக்ட் ஆஃபீஸா ஆக்கப் போறேன். அப்பதான் உங்க ஆஃபீஸுக்கும் அதுக்கும் தொடர்பு இல்லாம இருக்கும். ஆனா உங்க ஆஃபீஸ்லேயும் சில மாற்றங்களைக் கொண்டு வரணும்!"

மாற்றங்கள் தன்னை எப்படி பாதிக்குமோ என்ற கவலையில் பிரபு காத்திருந்தார்.

"உங்களுக்கு ஜெனரல் மானேஜர்னு டெசிக்னேஷன் கொடுத்திருந்தாலும், உங்களுக்கு ஒரு கேபின் கூட இல்லை. அதனால உங்களுக்கு ஒரு கேபின் கொடுத்து, உங்களுக்கு சில அதிகாரங்கள் கொடுத்து, மற்றவங்களுக்கும் பொறுப்புகளை வரையறுத்துச் சில மாறுதல்களைச் செய்யணும். என்ன சொல்றீங்க?" என்றான் நந்தன்.

"உங்க அப்பா  உருவாக்கினதை இன்னும் பெரிசா, சிறப்பா ஆக்கணுங்கற உங்க சிந்தனை ரொம்ப உயர்ந்தது யார்!" என்றார் பிரபு.

குறள் 602:
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.

பொருள்: 
தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்க வேண்டும். 

603. அரசர் ஏன் அப்படிச் சொன்னார்?

"அரசே! உங்கள் முன்னோர்கள் யாரும் செய்யாத அளவுக்கு உங்கள் சாம்ராஜ்யத்தை விஸ்தரித்திருக்கிறீர்கள். சரித்திரத்தில் உங்கள் பெயர் நிச்சயம் இடம் பெறும்!" என்றார் அமைச்சர் மழவராயர்.

"சரித்திரம் என்பது ஒரு தொடர் நிகழ்வு. கடந்த காலம் மட்டும் சரித்திரம் இல்லை. எதிர்காலமும் சரித்திரத்தில் இடம் பெறுமே!" என்றார் அரசர் சூரிய கீர்த்தி.

"ஆம் அரசே! ஆனால் அதைப் பற்றி என்ன?"

"ஒன்றுமில்லை!" என்றார் சூரியகீர்த்தி விட்டத்தைப் பார்த்தபடி.

அமைச்சர் அரசரைச் சற்றுக் குழப்பத்துனும், மிகுந்த கவலையுடனும் பார்த்தார்.

பல நாடுகளை வென்று தன்னை ஒரு பேரரரசராக நிலை நாட்டிக் கொண்ட பிறகும், அரசர் சூரியகீர்த்தி சிறிது காலமாக ஏதோ கவலையுடன் இருப்பதையும், தன் கவலையைப் புதிரான பேச்சுக்களால் வெளிப்படுத்துவதையும் அமைச்சர் கவனித்தார். 

ஆனால் அதற்கான காரணம் அமைச்சருக்குப் புரியவில்லை. அரசரிடம் நேரே கேட்பதற்கும் தயக்கமாக இருந்தது. 

அரசரே ஒருநாள் தன்னிடம் தன் மனக்கவலையைப் பற்றி விரிவாகக் கூறுவார் என்று அமைச்சர் எதிர்பார்த்தார். 

ஆனால் அந்த சந்தர்ப்பம் வரவில்லை. விரைவிலேயே சூரியகீர்த்தி காலமாகி விட்டார்.

"அரசே! உங்கள் தந்தை சில நாடுகளை வென்று நம் நாட்டுடன் இணைத்து விட்டார். வேறு சில நாடுகளை நாம் வென்ற பின், அந்த மன்னர்கள் நமக்கு சிற்றரசர்களாக மாறி நம் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். அந்த நாடுகளுக்கெல்லாம் உங்கள் தந்தை அவ்வப்போது சென்று மக்களைச் சந்தித்து வருவார். அதனால் அந்த மக்களும் மன்னர் மீது அன்பு கொண்டிருந்தனர். இப்போது நீங்கள் அந்த நாடுகளுக்குச் சென்று சிற்றரசர்களையும், மக்களையும் சந்திக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு நம் மீது தொடர்ந்து அன்பும் விஸ்வாசமும் இருக்கும்" என்றார் அமைச்சர் புதிய மன்னர் வீரமானிடம்.

"அவையெல்லாம் தேவையற்றவை அமைச்சரே! எல்லா ஊர்களிலும் அரசு அதிகாரிகள் நிர்வாகத்தைப் பார்த்துக் கொள்கிறார்கள் அல்லவா, அது போதும்" என்றான் வீரமான்.

சற்று விட்டுப் பிடிக்கலாம் என்று நினைத்து அமைச்சர் சிறிது காலம் கழித்து மீண்டும் இது பற்றி வீரமானிடம் பேசினார். ஆனால் அப்போதும் வீரமான் அதற்கு இணங்கவில்லை.

வீரமான் அரண்மனைக்குள்ளேயே அடைந்திருந்து அறுசுவை உணவு, மது, மாது என்று உல்லாச வாழ்க்கையிலேயே ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தான்.

"அரசே! சில சிற்றரசர்கள் சிறிய அளவில் தொந்தரவு கொடுக்க ஆரம்பத்திருக்ககிறார்கள். நாட்டின் சில பகுதிகளில் கலகங்களும் ஏற்படத் துவங்கி இருக்கின்றன. நீங்கள் ஒருமுறை அந்த இடங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்துப் பேசி விட்டு வந்தால் கலகங்கள் அடங்கி விடும். குழப்பம் விளைவிக்கும் சிற்றரசர்களையும் நீங்கள் ஒருமுறை நேரில் சந்தித்தால் அவர்கள் அடங்கி விடுவார்கள்" என்றார் அமைச்சர்.

"எல்லாவற்றையும் மன்னர்தான் செய்ய வேண்டுமென்றால்  அதிகாரிகள், அமைச்சரான நீங்கள் எல்லாம் எதற்கு" என்று கேட்டு விட்டு வீரமான் அந்தப்புரத்துக்குள் சென்று விட்டான்.

வீரமான் நாட்டைப் பாதுகாப்பான் என்று நம்புவது முட்டாள்தனம் என்று அமைச்சருக்குப் புரிந்தது. தானே தன்னால் முடிந்த அளவுக்கு ஏதாவது செய்தால்தான் உண்டு. இல்லாவிட்டால் பேரரசர் சூரியகீர்த்தி உருவாக்கிய இந்த சாம்ராஜ்யம் அவர் புதல்வர் காலத்திலேயே அழிந்து விடக் கூடும்.

சூரியகீர்த்தி "சரித்திரம் என்பது கடந்த காலம் மட்டுமல்ல, எதிர்காலமும் சேர்ந்ததுதான்" என்று ஒருமுறை கூறியது அமைச்சருக்கு நினைவு வந்தது.

அதன் பொருள் அவருக்கு இப்போது புரிந்தாற்போல் இருந்தது. தன் மகனைப் பற்றி அறிந்திருந்ததால்தான் சூரியகீர்த்தி அப்படிச் சொல்லி இருக்கிறார். அவர் கவலைக்கும் காரணம் அதுதான். 

தான் உருவாக்கிய சாம்ராஜ்யம் தன் மகனின் காலத்திலேயே அழிந்து விடுமோ என்ற அச்சத்தினால்தான் அவர் எதிர்காலமும் சரித்திரத்தில் இடம் பெறுமே என்று கவலையுடன் கூறி இருக்கிறார்.

சூரியகீர்த்தியின் அச்சம் உண்மையாகி விடக் கூடாதே என்று கவலைப்படத் தொடங்கினார் அமைச்சர். 

குறள் 603:
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.

பொருள்:
அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவில்லாதவன் பிறந்த குடி அவனுக்கு முன் அழிந்துவிடும்.

604. தடைபட்டுப் போன சடங்கு!

"என்னை மாதிரி வறுமையான குடும்பத்தில பிறந்து, படிப்பு இல்லாம இருக்கிறவங்க பொழைக்கறதுக்காகத் திருட்டுத் தொழில்ல ஈடுபடறது சகஜம்தான். மாட்டிக்காம இருக்கணும். ஆனா நான் மாட்டிக்கிட்டேன். ரெண்டு வருஷம் உள்ளே போட்டுட்டாங்க. ஆமாம், நீ என்ன தப்பு பண்ணிட்டு உள்ளே வந்தே?" என்றான் சத்யா, மாணிக்கத்தைப் பார்த்து.

மாணிக்கம் மௌனமாக இருந்தான்.

"அவரு எல்லாம் வேற விதம்ப்பா! நம்மை மாதிரி பிக் பாக்கெட் அடிக்கிறது, வீடு புகுந்து திருடறது எல்லாம் இல்ல. ஜென்டில்மேன்னு சொல்வாங்களே,அது மாதிரி ஆளு அவரு!" என்றான் சேகர் என்ற மற்றொரு கைதி.

மற்ற கைதிகள் இதைக் கேட்டுச் சிரித்தனர்.

"ஓ, ஒயிட் காலர் கிரைம்னு சொல்லுவாங்களே, அந்த மாதிரிக் குற்றம் செஞ்ச ஆளா நீ" என்றான் ஓரளவு படித்திருந்த ஒரு கைதி.

மாணிக்கம் தலை குனிந்தபடி எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தான்.

மாணிக்கத்தைப் பார்க்க சிறைக்கு வந்திருந்த அவன் அம்மா மங்களம், "உனக்கு ஏண்டா இந்த கதி!" என்று அழுதாள்.

சற்று நேரம் மகனுடன் பொதுவாகப் பேசிய பிறகு, "அடுத்த வாரம் உன் அப்பாவோட சடங்கு வருது. அவரு போனதிலேந்து அஞ்சு வருஷமா ஐயரை வச்சு முறையா அவருக்கு சடங்கு செஞ்சுக்கிட்டிருந்தே. இந்த வருஷம் அது நடக்காது!" என்றாள் வருத்தத்துடன்.

மாணிக்கம் தன் தந்தையைப் பற்றி நினைத்துப் பார்த்தான் எவ்வளவு பெரிய மனிதர் அவர்! ஊரில் அவருக்கு எவ்வளவு மதிப்பு இருந்தது!

தன் அப்பாவின் நற்பெயரே தனக்கு ஒரு பெரிய சொத்தாக இருந்தும், அப்பா மறைந்த பிறகு, சோம்பலினால் நீண்ட காலம் வேலைக்கு முயற்சி செய்யாமல் இருந்து விட்டு, பிறகு குடும்ப நிலை மோசமானதும் வேறு வழி இல்லாமல் ஒரு சிறிய வேலையில் சேர்ந்து, வருமானம் போதாததால், முதலாளியின் கையெழுத்தைப் போட்டுக் காசோலையையை மாற்ற முயன்று மாட்டிக் கொண்டு இப்போது சிறையில் இருக்கும் நிலைமைக்கு வந்திருப்பதை நினைத்தான்.

'அப்பாவோட பேருக்குக் களங்கம் ஏற்படுத்தி நான் அவருக்கு செஞ்சிருக்கிற துரோகத்தோட ஒப்பிடறப்ப, அவருக்கு சடங்கு செய்ய முடியாம போறது பெரிய விஷயம் இல்லை!' என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் மாணிக்கம்.

குறள் 604:
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.

பொருள்:
சோம்பலில் அகப்பட்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்க்கு குடியின் பெருமை அழிந்து குற்றம் பெருகும்.

605. விஸ்வநாதா, வேலை தேடு!

"ஏண்டா படிப்பை முடிச்சுட்டே. வேலைக்கு முயற்சி பண்ண வேண்டாமா?" என்றார் அருணாசலம்.

"பண்ணிக்கிட்டுத்தானேப்பா இருக்கேன்?" என்றான் விஸ்வநாதன்.

"என்னத்தைப் பண்ற? பரீட்சைஎல்லாம் முடிஞ்ச உடனேயே பேப்பரைப் பாத்து அப்ளிகேஷன் போடுன்னு சொன்னேன். நீ கேக்கல?"

"ரிசல்ட் வந்தப்பறம்தானே அப்பா அப்ளை பண்ண முடியும்?"

"ரிசல்ட்டை எதிர்பார்க்கறவங்க கூட விண்ணப்பிக்கலாம்னு எத்தனையோ விளம்பரங்கள்ள வந்திருக்கு. நான் அதைப் பாத்துட்டு உங்கிட்ட எடுத்துக் கொடுத்திருக்கேன். ஆனா நீ எல்லாத்துக்கும் விண்ணப்பிக்கல. ஒண்ணு ரெண்டுக்குத்தான் விண்ணப்பம் போட்ட!"

"பரீட்சை முடிஞ்சப்பறம் கொஞ்ச நாள் ரிலாக்ஸ்டா இருக்கலாம்னு நினைச்சேன்!"

"வேலை தேடிக்கிறது வாழ்க்கையில முக்கியம் இல்லையா? வேலை கிடைச்சப்பறம் ரிலாக்ஸ்டா இருக்கலாமே! உன் ஃபிரண்ட் ரகுவைப் பாரு. பரீட்சை முடிஞ்ச அடுத்த நாள்ளேந்து பேப்பர்ல விளம்பரங்களைப் பாத்து தனக்குப் பொருத்தமான வேலை அத்தனைக்கும் விண்ணப்பம் போட்டான். இப்ப அவனுக்கு ஒரு நல்ல கம்பெனியிலேந்து இன்டர்வியூ வந்திருக்கு!"

"அவன் ஒரு புத்தகப் புழுப்பா, காலேஜில படிக்கறப்ப புத்தகங்களைப் படிச்சுக்கிட்டிருந்தான். இப்ப பேப்பர்ல விளம்பரங்களைப் படிச்சுக்கிட்டிருக்கான். வேலை  கிடைச்சாலும் இன்னும் நல்ல வேலை கிடைக்குமான்னு பேப்பர் விளம்பரங்கள்ள தேடிக்கிட்டிருப்பான். ரிடயர் ஆனப்பறம் கூட அப்படித்தான் பண்ணுவான். அவனை மாதிரி என்னால இருக்க முடியாது!"

"அவனை மாதிரி இருக்க வேண்டாம். பரீட்சை முடிஞ்சு ரெண்டு மாசம் ஜாலியா இருந்துட்ட. பத்து மணி வரையிலும் தூங்கின, ஊரைச் சுத்தின. இப்ப ரிசல்ட் வந்து புரொவிஷனல் சர்ட்டிஃபிகேட் கூட வாங்கியாச்சு. தினம் ஒரு அரை மணி நேரம் பேப்பர்ல வேலை விளம்பரங்களைப் பாக்கலாம் இல்ல? 

"நான் பாக்கறப்பல்லாம் பேசும் படம், பொம்மைன்னு சினிமாப் பத்திரிகைகளைப் படிச்சுக்கிட்டிருக்க. பொது அறிவை வளர்த்துக்க எதையாவது படிச்சா உபயோகமா இருக்கும்! நான் பேப்பர்ல தேடிப் பார்த்து விளம்பரங்களைத் தேடி எடுத்து உங்கிட்ட காட்டினா அதுக்கும் அப்ளிகேஷன் போட மாட்டேங்கற!"

"நீங்க காட்டினதுக்கெல்லாம் விண்ணப்பம் போட்டேனே அப்பா!"

"எங்க போட்ட? நான் பத்து காட்டினா, அதில ரெண்டு, மூணுக்குத்தான் போடற. அதுவும் நான் திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்தனதால. சில சமயம் மறந்துட்டேன்னு சொல்லுவ. அதுக்குள்ள கடைசித் தேதி முடிஞ்சிருக்கும். 

"நீ படிப்பை முடிச்சு அஞ்சு மாசம் ஆச்சு. உன்னோட படிச்சவங்கள்ள ஏழெட்டு பேரு வேலைக்குப் போயிட்டாங்க. எனக்குத் தெரியாதவங்க இன்னும் சில பேரு கூடப் போயிருக்கலாம். 

"காலையில பத்து மணிக்குத்தான் எழுந்திருக்கற. அப்புறமும் உருப்படியா ஒண்ணும் செய்யாம சோம்பேறித்தனமா இருக்க. செய்ய வேண்டிய விஷயங்களை நேரத்தில செய்யாம, மறந்து போயிட்டேன்னு சாதாரணாமா சொல்ற! 

"இப்படியே போனா உன் எதிர்காலம் எப்படி இருக்குமோன்னு எனக்குக் கவலையா இருக்கு!" என்றார் அருணாசலம் கவலையுடனும், வருத்தத்துடனும்.

"இனிமே சுறுசுறுப்பா இருக்கேம்ப்பா. என்னை மாத்திக்கறேன்!" என்றான் விஸ்வநாதன்.

ஆனால் விஸ்வநாதன் தன்னை மாற்றிக் கொள்ள முயற்சி செய்யவில்லை.

விஸ்வநாதன் படிப்பை முடித்து ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டன. இன்னும் அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கவில்லை. இப்போதெல்லாம் அருணாசலம் தன் மகனுக்காக வேலை விளம்பரங்களைப் பார்ப்பதில்லை. சலிப்படைந்து ஓய்ந்து விட்டார்.

"பப்ளிக் செக்டார்ல புதுசா ஒரு தொழிற்சாலை ஆரம்பிக்கறாங்க. நிறைய பேரை வேலைக்கு எடுக்கப் போறாங்க. இன்னிக்கு பேப்பர்ல விளம்பரம் வந்திருக்கு. இதுக்கு அப்ளை பண்ணினா நமக்கு வேலை கிடைக்க நல்ல வாய்ப்பு இருக்கு. நல்ல கம்பெனி, நல்ல வேலை. நல்ல சம்பளம். வாழ்க்கையில செட்டில் ஆயிடலாம்! நான் இன்னிக்கே அப்ளை பண்ணப் போறேன். நீயும் பண்ணிடு" என்றான் விஸ்வநாதனின் நண்பன் குமார்.

"பண்ணிடறேன்!" என்றான் விஸ்வநாதன்.

வீட்டுக்குப் போனதும் பேப்பரை எடுத்து அந்த விளம்பரத்தைப் பார்க்க நினைத்த விஸ்வநாதன், வீட்டில் அப்பா இருந்ததால் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டான். அப்பாவுக்குத் தெரிந்தால் இன்றைக்கே விண்ணப்பம் போடச் சொல்லி அவசரப்படுத்துவார். 

அதுதான் நேரம் இருக்கிறதே என்று அடுத்த இரண்டு மூன்று நாட்கள் பேசாமல் இருந்து விட்டான். 

அதன் பிறகு வீட்டுக்கு யாரோ உறவினர்கள் வந்து இரண்டு நாட்கள் தங்கி விட்டுப் போனதில் விஸ்வநாதனின் கவனம் சிதறியது. உறவினர்கள் சென்ற பிறகு, விஸ்வநாதனுக்கு அந்த விஷயம் மறந்தே போய் விட்டது.

இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு அந்த விஷயம் நினைவுக்கு வந்ததும் விளம்பரம் வந்த பேப்பரைத் தேடினான் விஸ்வநாதன். அது எந்தத் தேதி என்று நினவுக்கு வரவில்லை. பத்துப் பதினைந்து நாட்களுக்கு முன்பிருந்தே ஒவ்வொரு பேப்பராக எடுத்துத் தேடினான்.

விளம்பரம் கிடைக்கவில்லை.

குமார் விளம்பரத்தை வெட்டி வைத்திருப்பான். ஆனால் அவன் ஊரில் இல்லை.

சரியாகப் பார்த்திருக்க மாட்டோம் என்று நினைத்து மீண்டும் தேட நினைத்தான். சோம்பலாக இருந்ததால் அடுத்த நாள் தேடலாம் என்று நினைத்து அன்றைய தேடலை முடித்துக் கொண்டான்.

அடுத்த நாள் மீண்டும் பொறுமையாகத் தேடியபோது விளம்பரம் கிடைத்தது.

'அப்பாடா!' என்று நிம்மதியடைந்து விளம்பரத்தைப் பார்த்தபோதுதான் ஒரு விஷயம் புரிந்தது.

வேலைக்கான விண்ணப்பப் படிவத்தைப் பெற, தபால் தலை ஒட்டிய உறையைடன் டில்லியில் இருக்கும் அந்தப் பொதுத்துறை நிறுவனத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவர்களிடமிருந்து விண்ணப்பப் படிவம் வந்ததும், அதைப் பூர்த்தி செய்து, சான்றிதழ்களின் நகல்களையும், பத்து ரூபாய் போஸ்டல்  ஆர்டரையும் இணைத்து அனுப்ப வேண்டும். 

விண்ணப்பங்கள் சென்றடைவதற்கான கடைசித்தேதிக்கு ஐந்து நாட்கள்தான் இருந்தன. டெல்லி அலுவலகத்துக்குத் தபால்தலை ஒட்டிய உறையை அனுப்பி அவர்களிடமிருந்து விண்ணப்பம் வந்து  குறைந்தது நான்கு நாட்கள் ஆகும். 

அதற்குப் பிறகு அன்றே விண்ணப்பத்தை அனுப்பினாலும் அது டில்லி அலுவலகத்தை அடையக் குறைந்தது இரண்டு நாட்கள் ஆகும். இடையில் ஒரு ஞாயிற்றுக் கிழமை வேறு வருகிறது. அதனால் விண்ணப்பம் போய்ச் சேரும்போது கடைசித்தேதி தாண்டி இருக்கும்!

இந்த வேலைக்கு விண்ணப்பிப்பது இயலாத செயல் என்று நினைத்து பேப்பரை மூடி வைத்தான் விஸ்வநாதன். 

கொஞ்சம் சோம்பல் படாமல் இருந்திருந்தால் இந்த வேலைக்கு விண்ணப்பித்திருக்கலாமே என்ற இலேசான வருதம் அவன் மனதில் எழுந்தது.

அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்த அருணசலம், மகன் பழைய பேப்பர்களை எடுத்து வைத்து விளம்பரங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, 'பரவாயில்லை. இப்பவாவது இவனுக்குப் பொறுப்பு வந்திருக்கே!' என்று நினைத்துக் கொண்டார்.

மூன்று மாதங்கள் கழித்து குமாருக்கு அந்தப் பொதுத்துறை நிறுவனத்திலிருந்து வேலை நியமன உத்தரவு வந்தது.

"எனக்கே இந்த வேலை கிடைச்சிருக்கறப்ப உனக்கு இது நிச்சயமாக் கிடைச்சிருக்கும். என்னை விட நீ எல்லா விதத்திலேயும் பெட்டர் ஆச்சே! நீ ஏண்டா அப்ளை பண்ணாம விட்டே?" என்றான் குமார்.

தன் சோம்பேறித்தனத்தால் தனக்கு எவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்ற எண்ணம் முதல் முறையாகத் தோன்றி விஸ்வநாதனின் மனதை அழுத்தியது.

குறள் 605:
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.

பொருள்: 
காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாகும்.

606. முருகனின் நண்பர்

"ஏண்டா, ஒரு வேலை வெட்டிக்குப் போகாம எப்பப் பாத்தாலும் வீட்டில வெட்டியா உக்காந்துக்கிட்டிருக்க. ராத்திரி முழுக்கத் தூங்கிட்டு, அப்புறம் பகல் தூக்கம் வேற!

"அப்பப்ப  வாசல் திண்ணையில உக்காந்துக்கிட்டு, தெருவில போறவங்களையெல்லாம் கூப்பிட்டு வெட்டிப் பேச்சு பேசிக்கிட்டிருக்கே. இப்படியே இருந்தா எப்படி உருப்படறது?" என்று முத்துலட்சுமி தன் மகனிடம் பலமுறை சொல்லிப் பார்த்து விட்டாள்.

"அதான் அப்பா நமக்கு நிறைய சொத்து விட்டுட்டுப் போயிருக்காரே! நான் எதுக்கு வேலைக்குப் போகணும்!" என்பான் முருகன்.

"குந்தித் தின்றால் குன்றும் கரையும்னு சொல்லுவாங்க."

"குன்று கரையக் கொஞ்ச நாள் ஆகும் இல்ல? அது கரைஞ்சப்பறம் பாத்துக்கலாம்!"

திருமணம் ஆனதும், அவன் மனைவி உமாவும் இதையேதான் சொல்லி வந்தாள். ஆயினும், முருகன் தன் இயல்பை மாற்றிக் கொள்ள முயலவில்லை.

ஒருநாள் முருகன் வீட்டு வாசலில் நான்கைந்து கார்கள் வந்து நின்றன.

கார் சத்தத்தைக் கேட்டு முருகன் புருவத்தை உயர்த்தினான். ஆனால் எழுந்து வாசலுக்குச் சென்று பார்க்க முயலவில்லை. 

உமா பரபரப்புடன் வாசலுக்குச் சென்று பார்த்தாள். 

முன்னால் இருந்த கார்களிலிருந்து இரண்டு போலீஸ் அதிகாரிகள் இறங்க, மத்தியில் இருந்த காரிலிருந்து இறங்கியவரைப் பார்த்ததும் உமாவுக்கு அதிர்ச்சி.

முதலமைச்சர்!

உமாவுக்கு வணக்கம் தெரிவித்த முதல்வர், "முருகன் வீடு இதானே? இருக்காரா?" என்றார்.

"இருக்காரு...வாங்க!" என்றாள் உமா தடுமாற்றத்துடன். அவளுக்கு எதுவும் புரியவில்லை.

உமா வீட்டுக்குள் நுழைய, அவள் பின்னே இரண்டு போலீஸ் அதிகாரிகளும், முதல்வரும் சென்றனர்.

வீட்டுக்குள் அவர்கள் நுழைந்ததும், அவர்களைப் பார்த்த முருகன் வியப்புடன் சட்டென்று எழுந்து நின்று, "செல்வம், நீயா?" என்றான்.

"நான்தான் முருகா! எப்படி இருக்கே?" என்றார் முதல்வர் செல்வம்.

பிறகு உமாவைப் பார்த்துச் சிரித்தபடி, "நானும் முருகனும் பள்ளியில் ரெண்டு வருஷம் சேர்ந்து படித்தோம். அப்புறம் அவன் குடும்பம் இந்த ஊருக்கு வந்துடுச்சு. சொல்லி இருப்பானே! அப்போது நாங்க நெருக்கமான நண்பர்கள். இப்பவும்தான்!" என்ற செல்வம், முருகனைப் பார்த்துச் சிரித்து விட்டு, "இல்லையாடா?" என்றார்.

"ஆமாம்" என்றான் முருகனும் சிரித்தபடியே.

சிறிது நேரம் முருகனிடம் பேசி விட்டுக் கிளம்பிய செல்வம், முருகனிடம், "உனக்கு எந்த உதவி வேணும்னாலும் எங்கிட்ட கேளு. நீ எப்ப ஃபோன் பண்ணினாலும் உடனே எங்கிட்ட ஃபோனைக் கொடுக்கணும்னு என் உதவியாளர்கிட்ட சொல்லிடறேன்" என்றார்.

உமாவைப் பார்த்து, "கும்பகோணத்துக்குக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்தபோது, பக்கத்தில இருக்கற இந்த ஊர்ல முருகன் இருக்கான்னு நினைவு வந்தது. அதனால அவனைப் பாத்துட்டுப் போகலாம்னு உடனே வந்துட்டேன். முன்னறிவிப்பு இல்லாம வந்தது உங்களுக்குத் தொந்தரவா இருந்திருக்கும். நீங்க கொடுத்த காப்பி ரொம்ப நல்லா இருந்தது, வரேன், வணக்கம்!" என்று சொல்லி விட்டுச் சென்றார்.

முதல்வர் சென்ற பிறகு, உமா முருகனிடம், "முதல்வர் செல்வம் உங்களோட படிச்சவர்னு நீங்க சொல்லவே இல்லையே!" என்றாள்.

"அதை ஒரு முக்கியமான விஷயமா நான் நினைக்கல!" என்றான் முருகன்.

'எந்த உதவி வேண்டுமானாலும் கேள், எப்போது வேண்டுமானாலும் என்னைத் தொடர்பு கொள்!' என்று முதல்வர் சொல்லி விட்டுப் போனதை நினைத்துப் பார்த்தாள் உமா.

ஒரு தொழிலோ, வியபாரமோ தொடங்கினால், அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்கக் கூடும். அப்படி இல்லாவிட்டால் கூட, முருகன் முதல்வரின் நண்பன் என்று இப்போது பலருக்கும் தெரிந்து விட்டதால், அதுவே அவர்களுக்கு ஒரு மதிப்பையும் அங்கீகாரத்தையும் கொடுக்கும். அவர்கள் செய்யும் எந்த முயற்சிக்கும் அது உதவும்.

ஆனால் இதைப் பயன்படுத்திக் கொண்டு தன்னை உயர்த்திக் கொள்வதற்கான, அல்லது குடும்பத்தை முன்னேற்றுவதற்கான செயல் எதிலும் முருகன் ஈடுபடுவான் என்ற நம்பிக்கை உமாவுக்கு இல்லை.

குறள் 606:
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.

பொருள்:
நாட்டை ஆளும் தலைவருடைய உறவு தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.

607. நாற்பது வயதில் ஒரு வேலை!

"நாப்பது வயசு ஆகுதுங்கறீங்க. இதுவரையிலும் எந்த வேலைக்கும் போகலியா?"

நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்த அந்த நடுத்தர வயது மனிதரைப் பார்த்து அந்த நிறுவனத்தின் மேலாளர் சண்முகம் வியப்புடன் கேட்டார்.

"இல்லை" என்றான் கேசவன் சுருக்கமாக.

"ஏன்?"

"குடும்பச் சூழ்நிலை..." 

"அப்படின்னா?"

"அப்பா படுத்த படுக்கையா இருந்தாரு. அம்மாவால எதுவும் முடியாது. அவங்களும் பலவீனமா இருந்தாங்க. நான்தான் வீட்டில எல்லாத்தையும் பாத்துக்கிட்டேன்."

"உங்க சகோதர சகோதரிகள்?"

"அண்ணன் வெளியூருக்கு வேலைக்குப் போயிட்டான். தங்கச்சி கல்யாணம் ஆகிப் புகுந்த வீட்டுக்குப் போயிட்டா."

"நீங்க தனியா மாட்டிக்கிட்டீங்களாக்கும்!" என்று சற்று இரக்கப்படுவது போல் கூறிய சண்முகம், "ஆனா நீங்க ஏன் பத்தாது வகுப்பு வரைக்கும் கூடப் படிக்கல?" என்றார் தொடர்ந்து.

"அதான் சொன்னேனே சார்! நான் சின்னப் பையனா இருந்ததிலேந்தே அப்பா அம்மாவை கவனிக்கிறதுதான் என் முழுநேர வேலையா இருந்தது!"

"சாரை உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"எங்கப்பாவோட நண்பர் ஒத்தர்தான் சார்கிட்ட என்னைப் பத்தி சொல்லி எனக்கு அவரோட கம்பனியில வேலை போட்டுத் தரச் சொன்னாரு. சாரை வீட்டில போய்ப் பாத்தேன். அவர்தான் ஆஃபீசுக்குப் போய் மானேஜரைப் பாருன்னு சொன்னாரு!" என்றான் கேசவன்.

"இங்க பாருங்க கேசவன்! இது ஒரு சின்ன கம்பெனி. இங்க பியூன் வேலைதான் காலி இருக்கு. சம்பளம் குறைச்சலாத்தான் இருக்கும்" என்றார் சண்முகம் சற்றுத் தயக்கத்துடன்.

"எந்த வேலையா இருந்தாலும் பரவாயில்ல சார்!"

"பியூன்னா, எல்லா வேலையையும் செய்யணும். ஆஃபீல எல்லாருக்கும் டீ, காப்பி வாங்கிக்கிட்டு வரதிலேந்து, வெளியே பல இடங்களுக்குப் போறது வரை நிறைய வேலை இருக்கும். எடுபிடி வேலை மாதிரிதான் இருக்கும். பொதுவா நாங்க  இந்த வேலைக்கு சின்னப் பையங்களைத்தான் எடுப்போம். அவங்கதான் கௌரவம் பாக்காம எல்லா வேலையும் செய்வாங்க. நீங்க வயசில கொஞ்சம் பெரியவரா வேற இருக்கீங்க..."

"அதனால பரவாயில்ல, சார்."

"சரி" என்ற சண்முகம் பக்கத்து அறையில் ஏதோ அரவம் கேட்டதும், "முதலாளி வந்துட்டாரு போலருக்கு. நான் அவர்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்துடறேன்" என்று எழுந்து பக்கத்து அறைக்குப் போனார்.

பக்கத்து அறைக்குள் அவர்கள் பேசிக் கொண்டது கேசவனுக்கு நன்றாகக் காதில் விழுந்தது. 

அவன் காதில் விழுந்து விடக் கூடாதே என்பது போல் மானேஜர் சண்முகம் சற்று மெல்லிய குரலில் பேசியதாகத் தோன்றியது. ஆனால் இயல்பிலேயே உரத்த குரல் கொண்ட முதலாளி மெதுவாகப் பேச முயற்சி செய்யவில்லை.

முதலாளியிடமிருந்து பெரிய சிரிப்புச் சத்தம் கேட்டது.

"அப்படியா சொன்னான்? அவங்க அப்பா அம்மா போய்ப் பல வருஷங்கள் ஆயிடுச்சு. இத்தனை வருஷமா சோம்பேறியா சுத்திக்கிட்டு அவங்க சம்பாதிச்சு வச்ச சொத்தையெல்லாம் அழிச்சுட்டு இப்ப வேற வழியில்லாம நாப்பது வயசில வேலைக்கு வரான். 

"கல்யாணம் ஆகிக் குழந்தை கூட இருக்கே! குடும்பத்தைக் காப்பாத்தணுமே! எவ்வளவோ வருஷமா பெண்டாட்டி சொல்லியும் வேலைக்கு முயற்சி பண்ணல. சின்ன வயசில ஒழுங்காப் படிக்கவும் இல்ல. இப்ப அப்பா அம்மா மேல பழி போடறான்!

"என் நண்பர் அவன் அப்பாவோட குடும்ப நண்பர். அவர் எல்லாத்தையும் எங்கிட்ட விவரமா சொன்னாரு. அவர் கூட எவ்வளவோ சொல்லியும் அவன் இத்தனை வருஷமா வேலைக்குப் போகல. அவன் மனைவி, குழந்தை மேல இரக்கப்பட்டுத்தான் அவனுக்கு வேலை கொடுக்கச் சொல்லி அவர் எங்கிட்ட சொன்னாரு. அடிப்படையில அவன் ஒரு சோம்பேறி. வேலையிலேயும் சோம்பேறித்தனமாத்தான் இருப்பான். ஸ்டிரிக்டா இருங்க!"

முதலாளியின் பேச்சு கேசவனின் காதுகள் வழியே உள்ளே புகுந்து அவன் இதயத்தைத் துளைத்தது. முன்பின் தெரியாதவர்களிடமிருந்து இப்படிப்பட்ட சொற்களைக் கேட்க வேண்டிய நிலைமையை நினைத்து அவமானத்தால் அவன் உடல் குறுகியது.

குறள் 607:
இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.

பொருள்:
சோம்பலை விரும்பி மேற்கொண்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர் பிறர் இடித்துக் கூறி இகழ்கின்ற சொல்லைக் கேட்கும் நிலையை அடைவர்.

608. ஏன் இந்த நிலை?

"ஏண்டா, செல்வம் என்டர்பிரைசஸ் கொடுக்க வேண்டிய பணத்தை வசூல் பண்ணச் சொன்னேனே,வசூல் பண்ணினியா இல்லையா?" என்றான் கோபாலசாமி.

"இல்லீங்க! தினம் போய் கேட்டுக்கிட்டுத்தான் இருக்கேன். அவரு நாளைக்கு நாளைக்குன்னு இழுத்தடிச்சுக்கிட்டே இருக்காரு!" என்றான் வேல்முருகன்.

"நீ ஒரு சோம்பேறியாச்சே! அவங்க சொன்ன நேரத்துக்குப் போயிருக்க மாட்டே! சம்பளம் கொடுக்க இன்னும் நாலு நாள்தான் இருக்கு. அதுக்குள்ள நீ அந்தப் பணத்தை வசூலிக்கலேன்னா உனக்கு இந்த மாசம் சம்பளம் கிடையாது!"

முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டு முதலாளியின் அறையிலிருந்து வெளியே வந்த வேல்முருகனைப் பச்சாதாபத்துடன் பார்த்தார் அக்கவுன்டன்ட் குணசீலன்.

சற்று நேரத்தில் வேல்முருகன் வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் வசூலிக்க வெளியே கிளம்பி விட்டான்.

வேல்முருகன் வெளியே சென்றதும், "பாவம்! பெரிய இடத்துப் பிள்ளை! இவன்கிட்ட அடிமைப் பொழைப்பு பொழைக்கணும்னு அவனுக்குத் தலையெழுத்து!" என்றார் குணசீலன் தன் அருகிலிருந்த ஊழியன் சபாபதியிடம்.

"பெரிய இடத்துப் பிள்ளையா?" என்றான் சபாபதி வியப்புடன்.

"ஆமாம். வேல்முருகனோட அப்பா அவங்க ஊர்ல ஒரு பெரிய மனுஷர். ஊர்ல அவருக்கு ரொம்ப மரியாதை உண்டு. வேல்முருகன் அவருக்கு ஒரே பையன். அவர் போனப்பறம் வேல்முருகன் வேலைக்குப் போகாம வெட்டியா வீட்டில உக்காந்து பொழுதைக் கழிச்சுக்கிட்டிருந்தான். அவன் அம்மாவும் இறந்தப்பறம் அவனுக்கு புத்தி சொல்ல யாரும் இல்ல. அப்பா விட்டுட்டுப் போன சொத்து கரைஞ்சுக்கிட்டே இருந்தது அவனுக்குத் தெரியல. "கல்யாணம் ஆகிக் குடும்பமும் ஏற்பட்டப்பறம்தான் குடும்பம் நடத்தவே பணம் இல்லேங்கற நிலைமை வந்தது அவனுக்குப் புரிஞ்சுது"

"நிறைய சொத்து இருந்த்துன்னு சொன்னீங்களே!"

"எவ்வளவு சொத்து இருந்தா என்ன? சம்பாதிக்காம சொத்தை வித்துத் தின்னுக்கிட்டிருந்தா  சொத்து எவ்வளவு வேகமாக் கரையுங்கறது அந்த நிலைமையை அனுபவிச்சங்களுக்குத்தான் தெரியும். நீங்க அனுபவிச்சிருக்கீங்களான்னு கேக்காதே! இந்த அனுபவம் பல பேருக்கு ஏற்பட்டதை நான் பாத்திருக்கேன்!" என்றார் குணசீலன்.

"அப்புறம்?" என்றான் சபாபதி கதை கேட்கும் ஆர்வத்துடன்.

"அப்புறம் என்ன? வேல்முருகன் வேலை தேட ஆரம்பிச்சான். எதுவும் கிடைக்கல. கடைசியில நம்ம ஆள்கிட்ட வந்து மாட்டினான். இதில சோகம் என்னன்னா நம் முதலாளியோட அப்பாவுக்கும் வேல்முருகனோட அப்பாவுக்கும் ஆகாது. இப்ப அவர் பையன் வேல்முருகன் மேல இரக்கப்பட்டு அவனுக்கு வேலை கொடுக்கற மாதிரி கொடுத்துட்டு அவனை ஒரு அடிமை மாதிரி. நடத்தறான். தன்னை விட வயசில பெரியவன்னு கூட பாக்காம வேல்முருகனை வாடா போடான்னு பேசறதும், விரட்டறதும், கடுமையாப் பேசறதும், எனக்குப் பாக்கறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு!" என்றார் குணசீலன்.

குறள் 608:
மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.

பொருள்:
நல்ல குடியில் பிறந்தவனிடம் 
சோம்பல் வந்து பொருந்தினால், அது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்து விடும்.

609. மகன் கேட்ட கேள்வி!

"ஏம்ப்பா என்னோட படிக்கிற எல்லாப் பையங்களோட அப்பாவும் வேலைக்குப் போறாங்க. நீ மட்டும் ஏன் போகல?"

ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகன் கேட்ட கேள்வி தங்கப்பனுக்கு ஆச்சரியமளிக்கவில்லை, ஆனால் எரிச்சலூட்டியது.

"முதல்ல என்னோட அம்மா கேட்டாங்க. அப்புறம் உன்னோட அம்மா கேட்டா. இப்ப நீ கேக்கறியா?" என்றான் தங்கப்பன் எரிச்சலுடன்.

"பையன்கிட்ட ஏன் எரிஞ்ச விழறீங்க? நீங்க வேலைக்குப் போகாம இருக்கறதைப் பத்தி ஊர்ல எல்லாரும்தான் பேசறாங்க!" என்றாள் அவன் மனைவி சுமங்கலி.

"எனக்குப் பரம்பரை சொத்து இருக்கு. நான் எதுக்கு வேலைக்குப் போகணும்?"

"பரம்பரை சொத்து உங்கப்பாவுக்கும் தானே இருந்தது? ஆனா அவரு வீட்டில உக்காந்துக்கிட்டு இருக்கலியே! வயல் தோட்டம்னு அலைஞ்சு எல்லாத்தையும் பாத்துக்கிட்டு சொத்தைப் பெருக்கி உங்களுக்கு விட்டுட்டுப் போனாரே!"

"அவருக்கு அது பிடிச்சிருந்தது. வேலை செய்யறது எனக்குப் பிடிக்கல. வீட்டில உக்காந்துக்கிட்டிருக்கறதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு!"

"நான் கூட வசதியான குடும்பத்திலேந்து வந்தவதான். அதுக்காக சமையல் வேலை செய்ய மாட்டேன்னு நான் சும்மா இருந்தா எப்படி இருக்கும்?" என்றாள் சுமங்கலி கோபத்துடன்.

"இருந்துட்டுப் போயேன். சமையலுக்கு ஆள் வச்சுக்க முடியாதா நம்மால?" என்றான் தங்கப்பன் சிரித்தபடி.

"பள்ளிக்கூடத்தில எல்லாரும் உன் அப்பா என்ன வேலை பாக்கறாருன்னு கேக்கறாங்க. நான் என்ன சொல்றது?" என்றான் சிறுவன் விடாமல்.

"என் அப்பாதான் எல்லாருக்கும் வேலை கொடுக்கறாருன்னு சொல்லு!" என்றான் தங்கப்பன்.

"என்னவோ போங்க! எல்லாரும் உங்கப்பாவைப் பத்திப் பெருமையாப் பேசிட்டு அவரோட பையன் இப்படி இருக்காரேன்னு என் காது படவே பேசிக்கறப்ப எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு!" என்றபடியே உள்ளே சென்றாள் சுமங்கலி, யார் என்ன சொன்னாலும் தன் கணவன் மாறப் போவதில்லை என்ற விரக்தியுடன்.

"ரெண்டு மூணு நாளா எங்கேயோ வெளியில போயிட்டு வரீங்களே என்ன விஷயம்?" என்றாள் சுமங்கலி.

"ஒரு வியாபாரம் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்!" என்றான் தங்கப்பன் புன்சிரிப்புடன்.

"வியாபாரமா, என்ன வியாபாரம்?" என்றாள் சுமங்கலி வியப்புடன்.

"நெல் வியாபாரம்தான். சுத்தி இருக்கிற ஊர்ல உள்ள சின்னச் சின்ன விவசாயிகள் கிட்டல்லாம் நெல்லை வாங்கி டவுன்ல இருக்கற பெரிய வியாபாரிங்ககிட்ட விக்கறது. அதுக்காக மாட்டு வண்டிகள், கூலி ஆட்கள் எல்லாம் ஏற்பாடு பண்ணத்தான் வெளியில போயிட்டு வந்தேன். வர வெள்ளிக்கிழமை அன்னிக்கு பூஜை போட்டுட்டு வியாபாரத்தை ஆரம்பிக்க வேண்டியதுதான்!" என்றான் தங்கப்பன் உற்சாகத்துடன்.

"உண்மையாவா? எப்படிங்க, திடீர்னு இப்படி ஒரு முடிவை எடுத்தீங்க?" என்றாள் சுமங்கலி வாய் நிறைய சிரிப்புடன்.

"இத்தனை வருஷமா என்னோட அம்மாவும், நீயும், இன்னும் பல பேரும் சொல்லி இருக்கீங்க. அப்பல்லாம் எனக்கு அது உறைக்கல. ஆனா உன்னோட அப்பா என்ன செய்யறார்னு கூடப் படிக்கிற பையன்கள்ளாம் கேட்டா என்ன சொல்றதுன்னு நம்ம பையன் கேட்டது என் மனசை உறுத்திக்கிட்டே இருந்தது. என் அப்பா எல்லாருக்கும் வேலை கொடுக்கறார்னு சொல்லுன்னு அன்னிக்கு அவங்கிட்ட ஒப்புக்கு ஒரு பதிலைச் சொன்னேன். அப்படியே செஞ்சா என்னன்னு தோணிச்சு. அப்புறம் யோசிச்சு இந்தத் தொழில்தான் எனக்கு ஒத்து வரும்னு இதைத் தேர்ந்தெடுத்தேன். தொழிலை ஆரம்பிக்கறதுக்கான எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு உங்கிட்ட சொல்லலாம்னு நினைச்சேன்."

"ரொம்பப் பெருமையா இருக்குங்க!"

"ஆனா ஒரு பிரச்னைதான்" என்றான் தங்கப்பன்.

"என்ன பிரச்னை?" என்றாள் சுமங்கலி கவலையுடன்.

"இந்த வியாபாரம் வருஷத்தில நாலஞ்சு மாசம்தான் நடக்கும். மத்த நாட்கள்ள என்ன செய்யறதுன்னு தெரியல!"

"அவ்வளவுதானா? எப்ப ஒரு தொழில் செய்யறதுன்னு இறங்கிட்டீங்களோ, அப்புறம் உங்களால சும்மா இருக்க முடியாது. வேற ஏதாவது செய்வீங்க. இனிமே உங்களை சோம்பேறின்னோ, நல்ல குடும்பத்தில பிறந்துட்டு இப்படி இருக்காரேன்னோ யாரும் பழிச்சுப் பேச மாட்டாங்க. எனக்கு அது போதும்!" என்றாள் சுமங்கலி மனத்திருப்தியுடன்.

குறள் 609:
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.

பொருள்:
ஒருவன் தான் சோம்பலால் ஆளப்படும் தன்மையை மாற்றிவிட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்த குற்றம் தீர்ந்து விடும்.

610. "ராஜேந்திர சோழன்"

"அரசே! உங்கள் தந்தை பல சிறிய நாடுகளை வென்று தன் சாம்ராஜ்யத்தைப் பெருக்கி உங்களிடம் ஒப்படைத்திருக்கிறார். இந்தப் பரந்த சாம்ராஜ்யத்தைப் பராமரிப்பது உங்கள் பொறுப்பு!" என்றார் அமைச்சர்.

"என் தந்தை பல சிறிய நாடுகளை வென்றார் என்று கூறினீர்கள். பெரிய நாடு எதையும் அவர் வெல்ல முயற்சி செய்யவில்லையா?" என்றான் அப்போதுதான் முடிசூட்டிக் கொண்ட அரசன் இளவழகன்.

அமைச்சர் சற்று வியப்புடன் அரசனைப் பார்த்தார்.

"அரசே! பெரிய நாடுகளுடன் போரிட்டு வெல்வது கடினம். போரில் தோற்றால், இருக்கும் நாட்டையும் இழக்க நேரிடும். அதனால்தான் புத்திசாலியான உங்கள் தந்தை பல சிறிய நாடுகளை வென்று அவற்றை நம் நாட்டுடன் இணைத்து நம் நாட்டைப் பெரிய நாடாக ஆக்கினார். சில அரசர்கள் சிறு நாடுகளை வென்ற பிறகு, அந்த நாடுகளின் அரசர்களிடம் கப்பம் வாங்கிக் கொண்டு அவற்றைத் தனி நாடுகளாக இருக்க அனுமதிப்பார்கள். ஆனால் உங்கள் தந்தை அவ்வாறு செய்யாமல் அவற்றை நம் நாட்டின் ஒரு பகுதியாக ஆக்கி விட்டார்" என்று விளக்கினார் அமைச்சர்.

"அப்படியானால் இனி நாம் பெரிய நாடுகளை வென்று அவற்றை நம்முடன் இணைத்துக் கொண்டால் உலகிலேயே மிகப் பெரிய நாடாக விளங்கலாமே!" என்றான் அரசன் உற்சாகத்துடன்.

"அரசே! பெரிய நாடுகளைப் போரில் வெல்வது எளிதல்ல. நீங்கள் இப்போதுதான் முடிசூட்டிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு இளம் வயது. சில ஆண்டுகள் அரச சுகத்தை அனுபவித்து விட்டு அதற்குப் பிறகு நாட்டை மேலும் விரிவாக்குவதைப் பற்றிச் சிந்திக்கலாம் என்பது என் கருத்து!" என்றார் அமைச்சர்.

"அமைச்சரே! நாளைக்கே போருக்குக் கிளம்ப வேண்டும் என்று நான் கூறவில்லை. பெரிய நாடுகளுடன் போரிட நாம் விரிவாகத் திட்டமிட வேண்டும், நம் படைகளை இன்னும் வலுவாக்கிக் கொள்ள வேண்டும், ஒற்றர்கள் மூலம் முக்கியத் தகவல்களைப் பெற வேண்டும். இவற்றுக்கெல்லாம் சில ஆண்டுகள் பிடிக்கும் என்பதை நான் அறிவேன். ஆனால் அவற்றுக்கான முயற்சிகளை இப்போதே துவங்க வேண்டாமா? முதலில் பல ஆலோசனைக் கூட்டங்களை நடத்த வேண்டும். அவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள். ஓய்வெடுப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. அதனால் முயற்சிகளை உடனே தொடங்கலாம்!" என்றான் அரசன்.

"அரசே! நாட்டை விரிவாக்குவதில் நீங்கள் உங்கள் தந்தையையே மிஞ்சி விட்டீர்கள். மிகக் குறைந்த காலத்திலேயே சில பெரிய நாடுகளை வென்று  பல பகுதிகளிலும் நம் கொடியைப் பறக்க விட்டு விட்டீர்கள். அபாரமான சாதனை உங்களுடையது!" என்றார் அமைச்சர்.

"என் தந்தையுடன் இணைந்து பணியாற்றிய தங்களைப் போன்ற அறிவும், அனுபவமும் கொண்ட பலரது ஆலோசனை, படைத்தலைவரின் வியூகங்கள், படைவீரர்களின் வீரம், தியாக உணர்வுடன் நம் மக்கள் நம் முயற்சிகளுக்கு அளித்த ஆதரவு ஆகியவைதான் இந்த வெற்றிக்கு முக்கியமான காரணம்!" என்றான் அரசன்.

"அரசே! உங்கள் அயராத உழைப்பு, விடாமுயற்சி, மன உறுதி, வீரம் இவற்றைப் போல் உங்கள் அடக்கமும் மிக உயர்ந்தது. மூன்று அடிகளால் உலகை அளந்த வாமனர் போல் நீங்களும் பெரிய நிலப்பரப்பை வென்று விட்டீர்கள். இதற்கான உத்வேகம் உங்களுக்கு எப்படி வந்தது என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது."

"அந்த உத்வேகத்தை அளித்தவர் தாங்கள்தான் அமைச்சரே!" என்றான் அரசன் சிரித்தபடி.

"நானா? நான் என்ன செய்தேன்?" என்றார் அமைச்சர் வியப்புடன்.

"என் முடிசூட்டு விழாவின்போது ராஜராஜ சோழருக்கு நிகரான புகழுடன் விளங்கிய அவரது புதல்வர் ராஜேந்திர சோழரைப் போல புகழ் பெற்று விளங்க வேண்டும் என்று தாங்கள் என்னை வாழ்த்தினீர்கள். அதற்குப் பிறகு ராஜேந்திர சோழரின் வரலாற்றைப் படித்துப் பார்த்தேன். ராஜராஜர் அருகிலுள்ள இலங்கையை வென்றார் என்றால், ராஜேந்திரர் கடல் கடந்து தொலைவில் இருந்த கடாரத்தை வென்றதுடன், வடக்கிலும் கங்கைக் கரையிலிருந்த நாடுகள் வரை வென்று தன் சாம்ராஜ்யத்தைப் பெருக்கினார் என்று அறிந்து கொண்டேன். அதற்குப் பிறகுதான் சாம்ராஜ்யத்தை விரிவாக்க வேண்டும் என்ற உத்வேகம் எனக்கு ஏற்பட்டது!" என்றான் இளவழகன்.

"உத்வேகம் வேண்டுமானால் என்னிடமிருந்து வந்திருக்கலாம். ஆனால் உங்கள் ஓய்வில்லாத உழைப்புதான் உங்கள் வெற்றிக்குக் காரணம்" என்றார் அமைச்சர்.

குறள் 610:
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.

பொருள்:
அடியால் உலகத்தை அளந்த கடவுள் கடந்த பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒருசேர அடைவான்.


அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...