அதிகாரம் 76 - பொருள் செயல்வகை (பொருள் ஈட்டல்)

 

திருக்குறள்
பொருட்பால்
கூழியல்
அதிகாரம் 76
பொருள் செயல்வகை (பொருள் ஈட்டல்)

751. கல்விக் கொடை வள்ளல்!

"இந்தப் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவுக்கு என்னைச் சிறப்பு விருந்தினராக அழைத்த இந்தப் பல்கலைக் கழகத்தின் வேந்தர் டாக்டர் துளிசிராமன் அவர்களுக்கு என் நன்றி!" என்று கூறித் தன் பேச்சை முடித்துக் கொண்டார் டாக்டர்  துருவ் மல்லிக்.

விழா முடிந்து துருவ் மல்லிக் ஓட்டல் அறைக்குத் திரும்பியபோது ஓட்டலில் அவருக்காகக் காத்திருந்தார் அவருடைய நண்பர் பேராசிரியர் பட்டாபிராமன்.

"வாங்க பட்டாபி. ரொம்ப நேரமா காத்துக்கிட்டிருக்கீங்களா?" என்றார் துருவ் மல்லிக்.

இருவரும் அறைக்குள் நுழைந்து அமர்ந்து சற்று நேரம் பொதுவாகப் பேசியபின், "பட்டமளிப்பு விழா எப்படி இருந்தது?" என்றார் பட்டாபிராமன்.

"விழா நல்லாத்தான் இருந்தது. ஆனா..."

"சொல்லுங்க!"

"அந்தப் பல்கலைக் கழகம் புகழ் பெற்றதுன்னு நினைச்சுத்தான் பட்டமளிப்பு விழாவுக்கு வர ஒத்துக்கிட்டேன். ஆனா அங்கே இருந்த மனுஷங்களையும், சூழ்நிலைகளையும் பார்த்தப்ப எனக்கு அந்தப் பல்கலைக் கழகத்தைப் பத்தி அவ்வளவு நல்ல அபிப்பிராயம் ஏற்படல!" என்றார் துருவ் மல்லிக்.

"புகழ் பெற்றதுன்னா அதோட பேரு எல்லாருக்கும் தெரியும்னு அர்த்தம். தரமானதுன்னு அர்த்தம் இல்லை!" என்றார் பட்டாபிராமன் சிரித்தபடி.

"பின்னே எப்படி இந்தியா முழுக்க அவங்க பேர் தெரிஞ்சிருக்கு?" 

"பட்டமளிப்பு விழாவுக்கு ஏன் சண்டிகர்லேந்து உங்களைக் கூப்பிட்டிருக்காங்கன்னு தெரியுமா?"

"தெரியல. நான் கூட யோசிச்சேன். எதுக்கு அவ்வளவு தூரத்திலேந்து என்னைக் கூப்பிட்டிருக்காங்கன்னு."

"பப்ளிசிடிக்காகத்தான். உங்களைக் கூப்பிட்டதால நீங்க வேலை செய்யற பல்கலைக் கழகம், உங்க நண்பர்கள் இது மாதிரி பல பேருக்கு இந்தப் பல்கலைக் கழகத்தைப் பத்தித் தெரிய வருமே!"

"ஒ! நான் அப்படி யோசிக்கல. ஆமாம் அந்த யூனிவர்சிடியோட சான்சலர் டாக்டர் துளசிராமனோட பின்னணி என்ன?"

"டாக்டர் துளசிராமனா? பதினைஞ்சு வருஷம் முன்னால அவர் ஒரு கல்லூரியை ஆரம்பிச்சப்ப, அவரோட கல்வித் தகுதி என்னன்னே யாருக்கும் தெரியாது. பள்ளி இறுதித் தேர்வைக் கூட முடிக்காதவர்னுதான் பலரும் சொன்னாங்க. அப்புறம் பாத்தா, சில வருஷங்கள்ள தன் பேருக்குப் பின்னால  பி ஏ-ன்னு போட்டுக்கிட்டாரு. கரெஸ்பாண்டன்ஸில படிச்சார்னு சொன்னாங்க. பரீட்சை கூட அவருக்கு பதிலா வேற யாரோ எழுதினதாத்தான் சொன்னாங்க.."

"அது எப்படி சார்?"

"அதெல்லாம் அடையாள அட்டை, கண்காணிப்பு கேமரா இதெல்லாம் இல்லாத காலம். தமிழ்ல வசூல் ராஜான்னு ஒரு சினிமா வந்தது. இந்தியிலேந்து வந்ததுதான். இந்தியில அதுக்கு முன்னாபாய்னோ என்னவோ பேரு!"

"புரியுது. சொல்லுங்க!" என்றார் துருவ் மல்லிக் சிரித்தபடி.

"அப்புறம் எம் ஏ பட்டம் வந்தது! அவர் காலேஜ் டீம்ட் யூனிவர்சிடி ஆகி அப்புறம் யூனிவர்சிடியாகவும் ஆயிடுச்சு. அதுக்குக் கீழே இன்னும் சில கல்லூரிகளைக் கூட ஆரம்பிச்சிருக்காரு. அவரு பி எச் டி பண்றாருன்னு ஒரு செய்தி வந்தது. அப்புறம் டாக்டர் பட்டமும் வந்துடுச்சு. அதுவும் கௌரவ டாக்டர் பட்டம் இல்ல, படிச்சு, ஆராய்ச்சி செஞ்சு வாங்கின டாக்டர் பட்டம்!" என்று சிரித்தார் பட்டாபிராமன்.

"அவர் பேருக்கு முன்னால ஏதோ ஒரு பட்டம் சொன்னாங்களே, எனக்கு அது சரியாப் புரியல. என்ன அது?"

"கல்விக் கொடை வள்ளல்!"

"அப்படின்னா?"

பட்டாபிராமன் விளக்கினார்.

"அவரோட கல்லூரிகள்ள பணம் வாங்காம இலவசக் கல்வியா கொடுக்கறாங்க?" என்றார் துருவ் மல்லிக் வியப்புடன்.

"நீங்க வேற! அதிகமா கட்டணம் வாங்கற கல்லூரிகள் பட்டியல்ல அவரோட எல்லாக் கல்லூரிகள் பெயரும் வரும். அதைத் தவிர நன்கொடைன்னு பெரிய தொகை வாங்கறதா வேற புகார்கள் வருது. இதெல்லாம் ஒரு போலித்தமான பட்டம்தான்!"

"அவரோட பொருளாதாரப் பின்னணி என்ன? கல்லூரி ஆரம்பிக்க முதலீடு எப்படி வந்தது? குடும்பச் சொத்து நிறைய இருந்ததா?"

"குடும்பச் சொத்து எதுவும் இல்லை. தான் சின்ன வயசில சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டதா அவரு பெருமையா சொல்லிப்பாரு! ஒரு பெரிய அரசியல் தலைவருக்கு நெருக்கமாகி அவருக்கு நிறைய வேலைகள் செஞ்சு கொடுத்ததாகவும், அதில சம்பாதிச்ச பணம்தான் எல்லாம்னும் சொல்லுவாங்க. வருமான வரித்துறையில கணக்குக் கேட்டிருக்க மாட்டாங்களான்னு கேக்காதீங்க!"

ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்ட துருவ் மல்லிக், "எந்த ஒரு சிறப்போ, திறமையோ, படிப்போ இல்லாத ஒரு ஆளு இவ்வளவு பெரிய மனுஷரா மதிப்போடயும், மரியாதையோடயும் இருக்காருன்னா, அதுக்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்னு இப்ப எனக்குப் புரியுது!" என்றார்.

"அதிர்ஷ்டம்னு சொல்றீங்களா?" என்றார் பட்டாபிராமன்.

"இல்லை, பணம்!" என்றார் துருவ் மல்லிக்.

குறள் 751:
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.

பொருள்: 
ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், மதிப்புடையவராகச் செய்வது பொருள்(பணம்)தான். அதை விடச் சிறப்புடைய பொருள் வேறு இல்லை.

752. உமாவின் அண்ணன்கள்


"உன் பெரிய அண்ணனோட அறுபதாம் ஆண்டு நிறைவு விழா நல்லா நடந்தது இல்ல?" என்றான் சோமு, தன் மனைவி உமாவிடம்.

"என்னத்த நடந்தது? வந்திருந்தவங்களை சரியா வரவேற்று உபசரிக்கல. சாப்பாடு சுமார்தான். இருக்கறது ஒரே தங்கச்சி. எனக்கு ஒரு நல்ல புடவையா வாங்கி இருக்கக் கூடாது?" என்றாள் உமா.

"உன் அண்ணன் மணமேடையில உக்காந்திருந்தாரு. அப்படியும் அப்பப்ப எழுந்து வந்து வந்தவங்களைப் பார்த்து வரவேற்பு சொல்லி விசாரிச்சுக்கிட்டுத்தான் இருந்தாரு. எனக்கென்னவோ சாப்பாடு நல்லா இருந்த மாதிரிதான் இருந்தது. புடவையைப் பத்தி எனக்குத் தெரியாது!" என்றான் சோமு.

"என் சின்ன அண்ணன் பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயமாகி இருக்காம். அடுத்த மாசம் கல்யாணம்!" என்றாள் உமா, பேச்சை மாற்றி.

"அப்படியா? எனக்குத் தெரியாதே! எப்ப நிச்சயமாச்சு? நம்மகிட்டல்லாம் ஒரு வார்த்தை கூடச் சொல்லல!" என்றான் சோமு.

"திடீர்னு நிச்சமாயிருக்கும் போல இருக்கு. அதான் கல்யாணத் தேதியைக் கூட சீக்கிரமா வச்சிருக்காங்க. பெரிய அண்ணனோட அறுபதாம் கல்யாணத்தும்போதுதான் சின்ன அண்ணன் எங்கிட்ட இதைச் சொன்னாரு!"

"எங்க சின்ன அண்ணனோட பொண்ணு கல்யாணம் எவ்வளவு சிறப்பா நடந்துது பாத்தீங்களா?" என்றாள் உமா, தன் கணவனிடம், பெருமையுடன்.

"கல்யாணம் நல்ல ஆடம்பரமாத்தான் நடந்தது. ஆனா கல்யாணத்துக்கு வந்தவங்களை வாங்கன்னு கூட யாரும் கூப்பிடல. உங்க அண்ணனும், அண்ணியும் மணமேடையை விட்டு இறங்கவே இல்லை!" என்றான் சோமு.

"பெண்ணோட கல்யாணம்னா அவங்க மணமேடையில இருக்க வேண்டாமா? உங்களுக்கு ஏதாவது குற்றம் சொல்லணும்!"

"ஆமாம். சாப்பாடு எப்படி இருந்தது?"

"பரவாயில்லை."

"சாப்பாடு நல்லா இல்லேன்னு நிறைய பேர் பேசிக்கிட்டதை நான் கேட்டேன்!"

"கல்யாணத்தில நிறைய பேருக்கு சமைக்கறப்ப எல்லாமே பிரமாதமா இருக்கும்னு சொல்ல முடியாது!"

"நல்லாதான் சப்பைக் கட்டு கட்டற! அது சரி. உனக்குப் புடவை எதுவும் வாங்கிக் கொடுக்கலியா உங்க அண்ணன்?"

"கல்யாணத் தேதியை சீக்கிரமே வச்சுட்டதால எல்லாருக்கும் புடவை வாங்க நேரம் இல்லையாம். அதனால அண்ணன் புடவைக்கு பதிலா ஐநூறு ரூபாய் பணம் கொடுத்துட்டாரு!"

"உன் பெரிய அண்ணன் அவரோட அறுபதாம் கல்யாணத்துக்காக உனக்கு வாங்கிக் கொடுத்த புடவையோட விலை ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு மேல இருக்கும் இல்ல?" என்றான் சோமு.

உமா மௌனமாக இருந்தாள்.

"உன் பெரிய அண்ணன் தன் அறுபதாம் கல்யாணத்தில உனக்குப் புடவை வாங்கிக் கொடுக்கறதிலேந்து, வந்தவங்களை உபசாரம் செய்யறது, சாப்பாடு நல்லா இருக்கும்படி பாத்துக்கறதுன்னு எல்லாத்தையும் கவனமா பாத்துத் பாத்து செஞ்சாரு. ஆனா நீ அவர் மேல ஆயரம் குற்றம் சொன்ன. ஆனா உன் சின்ன அண்ணன் தன் பொண்ணு கல்யாணத்தில நம்மை மதிச்சு நடந்துக்கல, ஒரே தங்கையான உனக்குப் புடவை வாங்கிக் கொடுக்கல, கல்யாணச் சாப்பாடு நல்லா இருக்கணுங்கறதில கூட அக்கறை எடுத்துக்கல. ஆனா நீ அவரைப் புகழற! நான் சுட்டிக் காட்டின  குறைகளையெல்லாம் இல்லைன்னு சாதிக்கற. இதுக்கு ஒரே காரணம்தான்!" என்றான் சோமு.

"என்ன காரணம்?" என்றாள் உமா.

"உன் பெரிய அண்ணன் அவ்வளவு வசதியானவர் இல்ல. ஆனா உன் சின்ன அண்ணன் பணக்காரர்!"

"அப்படியெல்லாம் இல்லை..."

"அப்படித்தான். ஆனா இது உன்னோட தப்பு இல்ல. ஒத்தன் பணக்காரனா இருந்தா அவனைத் தலையில தூக்கி வச்சுக்கிட்டு ஆடறதும், ஒத்தன் ஏழையா இருந்தா அவனை ஏளனமாப் பேசறதும்தானே இந்த உலகத்தோட இயல்பாகவே இருக்கு!" என்றான் சோமு.

குறள் 752:
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.

பொருள்: 
பொருள் உள்ளவர்களைப் புகழ்ந்து போற்றுவதும் இல்லாதவர்களை இகழ்ந்து தூற்றுவதும்தான் இந்த உலக நடப்பாக உள்ளது.

753. டெண்டர் கிடைக்குமா?

"இந்த முறை டெண்டர் எனக்குக் கிடைக்காது போல இருக்கு!" என்றார் தொழிலதிபர் பாலமுருகன், தன் நண்பர் சதாசிவத்திடம்.

"ஏன்?" என்றார் சதாசிவம்.

"புதுசா ஒரு போட்டி நிறுவனம் வந்திருக்கு. அவங்க ரொம்பக் குறைஞ்ச தொகைக்கு டெண்டர் கேக்கப் போறதா எனக்குத் தகவல் வந்திருக்கு."

"நீ அந்தத் தொகைக்குக் கீழே கோட் பண்ண முடியாதா?"

"அவங்களோடது சின்ன நிறுவனம். எனக்கு இருக்கற மாதிரி செலவுகள் அவங்களுக்குக் கிடையாது. அதோட இந்த ஒரு டெண்டருக்கு நான் குறைவா கோட் பண்ணினா என்னோட மத்த கான்டிராக்ட்களுக்கும் நான் விலையைக் குறைக்கும்படியா இருக்கும். என் போட்டி நிறுவனத்துக்கே நீண்ட கால அடிப்படையில இது லாபகரமா இருக்காது. ஆனா அதைப் புரிஞ்சுக்காம இந்த டெண்டரை எப்படியாவது ஜெயிச்சுடணும்னு அவங்க வெறித்தனமா செயல்படறாங்க."

சற்று யோசித்த சதாசிவம், "டெண்டர் நோட்டீஸ் வந்துடுச்சா?" என்றார்.

"இல்லை. ரெண்டு மூணு நாள்ள வரும்னு சொல்றாங்க"  என்றார் பாலமுருகன்.

"சரி. நீ நாளைக்கு ராத்திரி எனக்கு ஃபோன் பண்ணு!" என்றார் சதாசிவம்.

றுநாள் இரவு பாலமுருகன் சதாசிவத்துக்கு ஃபோன் செய்தபோது, "முடிஞ்சுடுச்சு!" என்றார் சதாசிவம்.

"அப்படீன்னா?"

"நாளைக்குக் காலையில டெண்டர் நோட்டீஸ் வரும். அதைப் பாத்துட்டு எனக்கு ஃபோன் பண்ணு. அப்புறம்..."

"சொல்லு!" என்றார் பாலமுருகன் சற்றுப் பதட்டத்துடன்.

சதாசிவம் கூறியதைக் கேட்டதும், "அவ்வளவா?" என்றார் பாலமுருகன் அதிர்ச்சியுடன்.

மறுநாள் காலை பாலமுருகன் சதாசிவத்துக்கு ஃபோன் செய்தபோது அவர் மிகவும் உற்சாகமாக இருந்தார். 

"சதாசிவம்! இதை நான் எதிர்பாக்கல. இந்த வருஷம் டெண்டரோட கண்டிஷன்ளை எல்லாம் மாத்தியிருக்காங்க. என்னோட போட்டியாளரால இந்த டெண்டர்ல கலந்துக்கவே முடியாது. சொல்லப் போனா, இந்த டெண்டர் எனக்குக் கிடைக்கணுங்கறதுக்காகவே இந்த டெண்டர் நோட்டீஸ் அமைஞ்சிருக்கற மாதிரி இருக்கு!"

"பின்னே? நேத்திக்கு நான் சொன்னப்ப, அவ்வளவான்னியே! சும்மாவா சொன்னாங்க, ஏதோ ஒண்ணு பாதாளம் மட்டும் பாயும்னு!" என்றார் சதாசிவம், சிரித்தபடியே.

குறள் 753:
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.

பொருள்: 
பொருள் என்ற அணயா விளக்கு, நினைத்த இடத்துக்குச் சென்று ஏற்பட்டுள்ள இடையூற்றை அழித்து விடும்.

754. இரு சந்திப்புகள்

நிர்வாக அதிகாரி சரவணகுமாரின் அறையிலிருந்து  வெளியே வந்த நீலகண்டனின் முகம் வெளிறி இருந்தது.

நீலகண்டன் சென்றதும், மானேஜர் பூபதியைத் தன் அறைக்கு அழைத்த சரவணகுமார், "இப்ப வந்துட்டுப் போனாரே, இவர் யார் தெரியும் இல்ல? சாரதா இண்டஸ்ட்ரீஸ் பர்சேஸ் மானேஜர் நீலகண்டன். ரொம்ப நாளா இந்த கம்பெனிகிட்ட நாம ஆர்டர் வாங்க முயற்சி பண்ணிக்கிட்டிருக்கோமே! இவருக்கு ரெண்டு பர்சன்ட் கமிஷன் கொடுத்தா நமக்கு ஆர்டர் கொடுக்கறாராம். இவருக்குக் கொடுக்கற கமிஷனை நாம விலையில ஏத்திக்கலாமாம். என்ன சொல்றீங்க?" என்றார்.

"நீங்க இதுமாதிரி ஏற்பாடுகளுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டீங்களே சார்!" என்றார் பூபதி.

"ஒத்துக்கிட்டிருந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறீங்களா?"

"சார்! உண்மையைச் சொல்லணும்னா, நான் உங்க இடத்தில இருந்திருந்தா, இதுக்கு ஒத்துக்கிட்டிருப்பேன்னு நினைக்கிறேன். ஆனா நீங்க சில கொள்கைகளை வச்சுக்கிட்டிருக்கீங்க. நேர்மையா சம்பாதிக்கணும், வரியையெல்லாம் ஒழுங்காக் கட்டணும், வாடிக்கையாளர்கள், சப்ளையர்கள்கிட்ட நேர்மையா நடந்துக்கணும். உங்ககிட்ட வேலை செய்யறவங்ககிட்டயும் நியாயமா நடந்துக்கணுங்கற மாதிரி பல கொள்கைகள். உங்ககிட்ட வேலை செய்யறது எனக்குப் பெருமையா இருக்கு சார்!" என்றார் பூபதி.

"என்னோட கொள்கைகளால நான் நிறைய வாய்ப்புகளை இழந்துட்டதா நினைக்கிறீங்களா?" என்றார் சரவணகுமார்.

ஒரு நிமிடம் யோசித்த பூபதி, "சில வாய்ப்புகளை இழந்திருக்கலாம் சார்! ஆனா நம்ம கம்பெனி ரொம்ப நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு? வேற கம்பெனிகள்ள வேலை செய்யற சில பேரை எனக்குத் தெரியும். மற்ற கம்பெனிகள்ள பல பிரச்னைகள் இருக்கு. ஆனா நம்ம கம்பெனியில எல்லாமே ஸ்மூத்தாப் போயிக்கிட்டிருக்கு. அது எனக்கு எப்பவுமே ஆச்சரியமா இருக்கும். நீங்க நேர்மையா இருக்கறதால உங்களுக்கு இயல்பாவே எல்லாம் நல்லா நடக்குதுன்னு நினைக்கிறேன். அதோட உங்க தொழில் நேர்மை உங்களை வேறு பல விதங்களிலேயும் நியாயமாகவும், தர்ம சிந்தனையோடும், மனிதாபமானத்தோடயும் நடக்க வைக்குதுன்னு நினைக்கிறேன். இன்னிக்கு உங்களைப் பார்க்க ரெண்டு பேர் வந்தாங்க. ஒத்தர் அனாதை ஆசரமத்துக்கு நன்கொடை கேட்டு வந்தாரு. அவரு உங்ககிட்டேந்து ஒரு பெரிய தொகையை நன்கொடையா வாங்கிக்கிட்டு சந்தோஷமாப் போனாரு. இன்னொத்தர் தனக்கு கமிஷன் கொடுத்தா ஆர்டர் தரேன்னு சொல்லிட்டு நீங்க ஒத்துக்காததால ஏமாற்றத்தோட போனாரு. இந்த ரெண்டு சந்திப்புகளும் சேர்ந்து உங்க வாழ்க்கையைப் பிரதிபலிக்குதுன்னு நான் நினைக்கிறேன்!" என்றார்.

உடனேயே, "சாரி சார்! நான் கொஞ்சம் அதிகமாப் பேசி இருந்தா என்னை மன்னிச்சுடுங்க. நீங்க கேட்டதால சொன்னேன்!" என்றார் 

"இல்லை, இல்லை. நாம செய்யறது சரின்னு நமக்குத் தெரிஞ்சாலும், சில சமயம் நமக்கு மத்தவங்ககிட்டேந்து ஒரு கன்ஃபர்மேஷன் வேண்டி இருக்கு இல்லையா? அதுக்காகத்தான் உங்ககிட்ட கேட்டேன். நீங்க விவரமா பதில் சொன்னதுக்கு நன்றி!" என்றார் சரவணகுமார்.

குறள் 754:
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.

பொருள்: 
சேர்க்கும் திறம் அறிந்து, தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப்பட்டு வந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும், இன்பத்தையும் கொடுக்கும்.

755. அப்பாவின் வீடு

"ஏண்டா, அப்பா போனதிலேந்து அந்த வீட்டைப் பூட்டியே வச்சிருக்கியே! அது பெரிய விடு. நாம அங்கே போய் இருக்கலாம் இல்ல?" என்றாள் மீனாட்சி.

"இத்தனை வருஷமா வெளியூர்ல இருந்தேன். இங்கே வந்ததும் நானே ஒரு வீடு வாங்கிட்டேன். அப்பா போனதுக்கப்பறம் நீயும் என்னோடதான் இருக்கே. அதனால அப்பாவோட வீட்டைப் பயன்படுத்தல. இந்த வீடு நமக்குப் போதாதா? பெரிய வீடுங்கறதுக்காக அங்கே போகணுமா?" என்றான் முத்து.

"அப்ப அதை வாடகைக்காவது விடலாம் இல்ல? சும்மா பூட்டி வச்சிருக்கறதில என்ன பயன்?"

"வேற ஒரு யோசனை வச்சிருக்கேம்மா!" என்றான் முத்து.

"நீ செஞ்சிருக்கறது ரொம்ப நல்ல காரியம்டா. அப்பாவோட வீட்டைப் பூட்டி வச்சிருக்கியேன்னு கவலைப்பட்டேன். இப்ப அதை ஒரு அநாதை இல்லத்துக்கு லீஸுக்கு விட்டிருக்க, அதுவும் வாடகை இல்லாம! எனக்கு இது சந்தோஷமாவும், பெருமையாகவும் இருக்கு!" என்றாள் மீனாட்சி.

"எனக்கும்தான்!" என்ற முத்து, 'ஆனா எனக்கு சந்தோஷம் மட்டும்தான், பெருமை இல்லை. வட்டிக்குக் கடன் கொடுத்துக்கிட்டிருந்த அப்பா, கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத ஒத்தர்கிட்டேந்து கடனுக்கு ஈடா எழுதி வாங்கின வீடு அது. அதில குடியிருக்க எனக்கு இஷ்டமில்ல. அந்த வீட்டிலேந்து எனக்கு எந்தப் பயனும் கிடைக்கக் கூடாதுன்னுதான் அதை வாடகை இல்லாம ஒரு அனாதை இல்லத்தோட பயன்பாட்டுக்குக் கொடுத்திருக்கேன். ஆனா இதை அம்மாகிட்ட சொல்ல முடியாதே!' என்று நினைத்துக் கொண்டான்.

குறள் 755:
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.

பொருள்: 
அருளோடும், அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கி விட வேண்டும்.

756. அமைச்சரின் யோசனை

"அரசாங்கத்துக்கு எவ்வளவு வருவாய் வந்தாலும் போதவில்லையே! என்ன செய்வது?" என்றார் அரசர்.

"அரசே! வருவாய் போதவில்லையென்றால், ஒன்று செலவினங்களைக் குறைக்க வேண்டும், அல்லது வருவாயைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!" என்றார் அமைச்சர்.

"நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் வருவாயை உயர்த்துவதற்கான வழி இல்லை. மக்கள் மீதான வரிச் சுமையை ஏற்ற நான் விரும்பவில்லை. எனவே செலவினங்களைக் குறைப்பதற்கான வழிவகைகளை ஆராயுங்கள்."

"அரசே! அரசாங்கச் செலவுகளை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்து விட்டோம். தாங்களே மிகவும் எளிமையாகத்தான் வாழ்கிறீர்கள். இனி செலவுகளைக் குறைப்பதென்றால் மக்கள் நலனுக்கான செலவுகளைத்தான் குறைக்க வேண்டும்!" என்றார் அமைச்சர்.

"நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் அமைச்சரே?"

"அரசே! வரிகளை உயர்த்தாமல் வேறு வகைகளில் நம் வருவாயை அதிகரிப்பது பற்றி நாம் பரிசீலிக்க வேண்டும்."

"வேறு வகைகளில் என்றால், மற்றொரு நாட்டின் மீது படையெடுத்து வென்று அவர்களிடமிருந்து கப்பம் பெறுவதா?" என்றார் அரசர், சிரித்தபடி.

"அதுவும் ஒரு வழிதான் அரசே! ஆனால் அதற்கான வாய்ப்பு வரும்போதுதான் அதைச் செய்ய முடியும்."

"அத்துடன் மற்றொரு நாட்டிடமிருந்து கப்பம் பெறுவது அந்த நாட்டு மக்களிடமிருந்து அடித்துப் பிடுங்குவது. அதை நான் எப்போதுமே ஏற்றுக் கொண்டதில்லை!"

"தங்கள் உயர்ந்த உள்ளத்தை நான் அறிவேன் அரசே! நான் சொல்ல வந்தது வெளிநாட்டு வணிகர்களைத் தங்கள் பொருட்களை இங்கே விற்க அனுமதித்து, அந்தப் பொருட்களின் மீது சுங்கவரி விதித்து அதை அவர்களிடமிருந்து வசூலிப்பது!"

"வெளிநாட்டுப் பொருட்களை இங்கே விற்கச் செய்தால், நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களின் விற்பனை பாதிக்கப்படாதா?"

"அரசே! நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படாத பல பொருட்கள் உள்ளன. அவற்றை வாங்குவதில் நம் நாட்டு மக்கள் ஆர்வம் காட்டக் கூடும். நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சில பொருட்களை வெளிநாட்டு வணிகர்கள் விற்றாலும், அவற்றின் விலை உள்நாட்டுப் பொருட்களின் விலையை விட அதிகமாக இருக்கும் அளவுக்கு நாம் சுங்கவரி விதிக்கலாம். இங்கே உள்ள வசதியுள்ள சிலர் மட்டுமே அந்தப் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்குவார்கள். அதனால் உள்நாட்டுப் பொருட்களின் விற்பனை பெருமளவு பாதிக்கப்படாமல் நாம் பார்த்துக் கொள்ளலாம். அத்துடன்..."

தான் கூறுபவற்றை அரசர் எப்படி எடுத்துக் கொள்கிறார் என்று அறிய விரும்புவதுபோல் அரசரின் முகத்தைப் பார்த்தார் அமைச்சர்.

"சொல்லுங்கள்!" என்றார் அரசர், ஆர்வத்துடன்.

"இங்கே வணிகம் செய்ய வரும் வெளிநாட்டு வணிகர்கள் நம் நாட்டுப் பொருட்களை வாங்கிச் சென்று தங்கள் நாட்டில் விற்கலாம். ஏன், அந்த வணிகர்களைப் பர்த்து விட்டு நம் நாட்டு வணிகர்களில் சிலர் கூட வெளிநாடுகளுக்குச் சென்று தங்கள் பொருட்களை விற்கும் முயற்சியில் ஈடுபடலாம். இவையெல்லாம் நம் நாட்டுக்கு நன்மை பயத்து, நம் வருவாயையும் அதிகரிக்கச் செய்யும் அல்லவா?" என்று முடித்தார் அமைச்சர்

"சிறந்த யோசனை அமைச்சரே! நீங்கள் ஒரு சிறந்த பொருளாதார நிபுணர்!" என்றார் அரசர், பாராட்டும் தொனியில்.

குறள் 756:
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.

பொருள்: 
வரியும், சுங்கமும், வெற்றி கொள்ளப்பட்ட பகை நாடு செலுத்தும் கப்பமும் அரசுக்குரிய பொருளாகும்.

757. பணத்துக்கு மரியாதை!

"ஆன்மீகத்தைப் பரப்புகிற நம் மடத்தில பணத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கல!" என்றான் விஜயன், சரவணனிடம்.

இருவரும் அந்த மடத்தில் சீடர்களாக இருப்பவர்கள்.

மடத்தின் தலைவர் சாந்தானந்தர் மடத்துக்கு நன்கொடை அளித்தவர்களை கௌரவிப்பதற்காக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்ததைப் பற்றித்தான் விஜயன் இவ்வாறு குறிப்பிட்டான்.

நிகழ்ச்சி நடப்பதற்கு ஒரு வாரம் முன்பு, மடத்தில் உள்ள சீடர்கள் அனைவரையும் அழைத்து, நிகழ்ச்சி எப்படி நடைபெற வேண்டும் என்பது பற்றி விவாதித்தார் சாந்தானதர்.

இறுதியில், "இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யற குழுவில பொருளாளர் இருக்கறதால, இந்த நிகழ்ச்சி முடிகிற வரையில் பொருளாளரோடவேலையை விஜயன் பாத்துக்கட்டும்!" என்ற சாந்தானந்தர், பொருளாளரைப் பார்த்து, "கையில இருக்கற பணத்தை விஜயன்கிட்ட ஒப்படைச்சு, செய்ய வேண்டிய வேலைகளைப் பத்தி அவன்கிட்ட சுருக்கமா சொல்லிடுங்க. அவன் தனியா கணக்கு எழுதி, நிகழ்ச்சி முடிஞ்சதும் உங்ககிட்ட கொடுக்கட்டும். அப்புறம் நீங்க முறையா கணக்கு எழுதிக்கலாம்!" என்றார்.

"என்ன விஜயா?" என்றார் சாந்தானந்தர், விஜயனைப் பார்த்துச் சிரித்தபடி

விஜயன் எதுவும் புரியாமல் தலையாட்டினான்.

நிகழ்ச்சி முடிந்து விஜயன் கணக்குகளைப் பொருளாளரிடம் ஒப்படைத்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவனை சாந்தானந்தர் அழைத்தார்.

கணக்கில் ஏதேனும் தவறு நேர்ந்திருக்குமோ, அதை விசாரிக்கத்தான் தன்னை அழைக்கிறாரோ என்று பயந்தபடியே சாந்தானந்தரைப் பார்க்கச் சென்றான் விஜயன்.

"வா, விஜயா! உக்காரு. பொருளாளரோட வேலையை சிறப்பா செஞ்சு கணக்கெல்லாம் சரியாப் பராமரிச்சிருக்கேன்னு பொருளாளர் சொன்னாரு. பாராட்டுக்கள்!" என்றார் சாந்தானந்தர்.

விஜயன் எதிர்பாராத மகிழ்ச்சியில், என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்தான்.

"சரி. நீ பொருளாளரா இருந்த ஒரு வாரத்தில, சுமாரா எவ்வளவு பணம் வரவு செலவு பண்ணி இருப்பே?"

விஜயன் ஒரு நிமிடம் யோசித்து விட்டு, "அஞ்சு லட்சம் ரூபா இருக்கும்" என்றான். 

"அப்படின்னா, நம்ம மடத்தில மாசம் இருபது இருபத்தைஞ்சு லட்சம் ரூபா புழங்குதுன்னு வச்சுக்கலாமா?"

விஜயன் தலையாட்டினான்.

"சரி. இந்த இருபத்தைஞ்சு லட்சம் ரூபாயில உன்னோட பங்களிப்பு எவ்வளவு?" என்றார் சாந்தானந்தர், சிரித்தபடி.

"சுவாமிஜி!" 

"என்னடா இது, நாம சம்பளம் இல்லாம இந்த மடத்தில உழைச்சுக்கிட்டிருக்கோம், இவரு நம்மகிட்ட வந்து நீ எவ்வளவு பணம் கொடுத்தேன்னு கேக்கறாரேன்னு பாக்கறியா? சரி, நான் எவ்வளவு கொடுத்தேன்னு தெரியுமா?"

விஜயன் மௌனமாக இருந்தான்.

சாந்தானந்தர் தன் ஆள்காட்டி விரலால் காற்றில் ஒரு வட்டம் போட்டார்.

"இந்த மடத்தில இருக்கறவங்க யாருமே - நீயோ, நானோ, வேற யாருமோ - ஒரு பைசா கூட இந்த மடத்துக்காக சம்பாதிச்சுக் கொடுக்கல. ஆனா, இந்த மடத்தில இவ்வளவு நல்ல வேலைகள் நடக்குதே - அனாதை ஆசிரமம் நடத்தறோம், அன்னதானம் செய்யறோம், இன்னும் பல நல்ல காரியங்கள் செய்யறோம். இதுக்கெல்லாம் பணம் எங்கேந்து வருது?"

சுவாமிஜி பணத்துக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று தான் சரவணனிடம் பேசியதை சாந்தானந்தர் கேட்டிருக்க வேண்டும் என்று விஜயனுக்குப் புரிந்தது.

"சுவாமிஜி! நான் தெரியாம..." என்றான் விஜயன், சங்கடத்துடன்.

"விஜயா! உனக்கு இந்தக் கேள்வி வந்தது தப்பு இல்ல. அதுக்கு விளக்கம் சொல்ல வேண்டியது என் கடமை. நாம சில அனாதைக் குழந்தைகளை எடுத்து வளக்கறோம். அவங்க பெற்றோர்கள்தான் அவங்களை உருவாக்கினாங்க. ஆனா அனாதையா விடப்பட்ட அவங்களை நம்மை மாதிரி யாராவது எடுத்து வளர்க்கலேன்னா அந்தக் குழந்தைகளால எப்படி ஜீவிக்க முடியும், எப்படி வளர முடியும்? நமக்கு எல்லார்கிட்டேயும் அன்பு இருக்கு. நம்மகிட்ட கருணை இருக்கு. ஆனா பணம் இல்லேன்னா நம்மகிட்ட இருக்கற அன்புக்கும், கருணைக்கும் பலன் இல்லாம போயிடும். நமக்குப் பணம் கொடுத்து உதவறவங்கதான் நம் அன்புக்கும், அருளுக்கும் உயிர் கொடுக்கறாங்க. அதனாலதான் அவங்களுக்கு நம் நன்றியைத் தெரிவிக்கிற விதமா, அவங்களைப் பாராட்ட ஒரு விழா ஏற்பாடு செஞ்சேன். புரிஞ்சுதா?" 

"சுவாமிஜி!" என்றுபடியே சாந்தானந்தரின் காலில் விழுந்தான் விஜயன்.

குறள் 757:
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.

பொருள்: 
அன்பு என்கிற அன்னை பெற்றெடுக்கும் அருள் என்கிற குழந்தை, பொருள் என்கிற செவிலித் தாயால் வளரக் கூடியதாகும்.

758. நண்பனின் கோபம்!

வங்கி மேலாளரைப் பார்க்க வீரா சென்றபோது, ஏற்கெனவே சிலர் அவரைப் பார்ப்பதற்காக அறைக்கு வெளியே காத்திருந்தனர். 

தன் முறை வருவதற்கு நீண்ட நேரம் ஆகும் என்று தோன்றியதால், மற்றொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து வீரா இருக்கையிலிருந்து எழுந்திருக்க முயன்றபோது, வங்கி மேலாளரின் அறைக்குள்ளிருந்து வெளியே வந்த பியூன், வீராவைப் பார்த்து, "சார்! மானேஜர் உங்களை உள்ளே வரச் சொல்றாரு!" என்றான்.

உள்ளே சென்ற வீரா, வங்கி மேலாளரிடம், "வெளியில அஞ்சாறு பேர் காத்துக்கிட்டிருக்கறதால, உங்களைப் பார்க்க நேரம் ஆகும்னு நினைச்சேன்!" என்றான்.

"அவங்களும் உங்களை மாதிரி தொழிலதிபர்கள்தான். அவங்கள்ளாம் தங்களோட கடன் தவணையைக் கட்டாததால பாங்க்லேந்து நோட்டீஸ் அனுப்பிட்டோம், அதைப் பாத்துப் பதைபதைச்சுப் போய் 'நடவடிக்கை எதுவும் எடுத்துடாதீங்க, இன்னும் கொஞ்சம் அவகாசம் கொடுங்க!'ன்னு கேக்கறதுக்காக வந்திருக்காங்க. உங்களுக்குத்தான் அந்தப் பிரச்னை இல்லையே! நீங்க கடனே வாங்காம தொழில் பண்றவரு. எப்பவாவது வாங்கினாலும் சரியாத் திருப்பிக் கட்டிடறவரு. அனாலதான் கண்ணாடி வழியா உங்களைப் பார்த்ததும், உங்களை முதல்ல பார்த்துடலாம்னு வரச் சொன்னேன்!" என்றார் வங்கி மேலாளர்.

வங்கி மேலாளரிடம் பேசி விட்டு வெளியே வந்த வீரா, அங்கே பதட்டத்துடனும், கவலையுடனும் அமர்ந்திருந்த தொழிலதிபர்களின் முகங்களைப் பார்த்தான். உடனே அவனுக்குக் கண்ணனின் நினைவு வந்தது.

ண்ணன், வீரா இருவரும் பொறியியல் கல்லூரியில் படித்தபோதே சொந்தத் தொழில் துவங்க வேண்டும் என்ற லட்சியத்தைக் கொண்டிருந்தனர். படிப்பை முடித்ததும் இருவரும் ஒரு பெரிய தொழில் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தனர்.

வேலையில் சேர்ந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு, கண்ணன் வீராவிடம், "இந்த ரெண்டு வருஷத்தில நாம தொழிலை நல்லாக் கத்துக்கிட்டோம்.  நாம சொந்தத் தொழில் ஆரம்பிச்சுடலாம். அரசாங்கத்தில புதுக்கோட்டை பக்கத்தில புதுசா ஒரு தொழிற்பேட்டை ஆரம்பிக்கறாங்க. நாம அப்ளை பண்ணினா நமக்கு இடம் கிடைக்கும் - கட்டிடத்தோட. அதுக்குத் தவணை முறையில பணம் கொடுத்தாப் போதும். பாங்கல கடன் வாங்கி இயந்திரங்கள் வாங்கிக்கலாம். நாலஞ்சு வருஷத்தில கடனையெல்லாம் அடைச்சுடலாம்!" என்றான்.

"நம்மகிட்ட இருக்கற பணத்தை வச்சு சின்னதா ஒரு தொழில் ஆரம்பிச்சு அந்தத் தொழில் வளர்ந்தப்பறம் கடன் வாங்கினா பரவாயில்ல. கடன் வாங்கித் தொழில் ஆரம்பிக்கறது சரியா இருக்குமா? ரெண்டு மூணு வருஷம் ஆகட்டும். நம் கையில கொஞ்சம் பணம் சேத்துக்கிட்டு அப்புறமா தொழில் ஆரம்பிக்கலாம்!" என்றான் வீரா.

"அப்படியெல்லாம் என்னால காத்துக்கிட்டிருக்க முடியாது. நீயும் என்னோட சேர்ந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன். பரவாயில்ல. நான் தனியாவே ஆரம்பிக்கறேன்!" என்றான் கண்ணன். 

அடுத்த சில நாட்களில் கண்ணன் வேலையை விட்டுச் சென்று விட்டான். போகும்போது வீராவிடம் சொல்லிக் கொள்ளக் கூட இல்லை. தன் யோசனையை நண்பன் ஏற்றுக் கொள்ளாதது அவனுக்கு ஏமாற்றத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

சில வருடங்களுக்குப் பிறகு, வீரா தான் திட்டமிட்டபடியே தான் சேமித்த பணத்தை முதலீடு செய்து, சிறிதாகத் தொழில் ஆரம்பித்து சில வருடங்களில் அதை நிலைபெறச் செய்து விட்டான். 

தொழில் வளர்ச்சி அடைந்த பிறகு, அவ்வப்போது தேவைக்காக வங்கியில் கடன் வாங்கி அதை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தான் வீரா.

கண்ணனைப் பற்றி அப்புறம் தகவல் ஏதுமில்லை. நிச்சயம் தான் விரும்பியபடி அவன் தொழிலை ஆரம்பித்திருப்பான். கடன் வாங்கித்தான் ஆரம்பித்திருப்பான்!

கடன் தொகையைத் திரும்பச் செலுத்த முடியாமல் வங்கி மேலாளரின் அறைக்கு வெளியே பதட்டத்துடன் அமர்ந்திருந்த தொழிலதிபர்களின் நிலை தன் நண்பனுக்கு ஏற்பட்டிருக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டான் வீரா.

குறள் 758:
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.

பொருள்: 
தன் கைப்பொருளைக் கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்கிக் கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப் போன்றது.

759. முத்துக்குமரனின் பண ஆசை!

"இந்த கம்பெனியில யாருமே ஓவர்டைம் செய்ய விரும்ப மாட்டாங்க. ஏன்னா, இங்கே வேலை ரொம்ப கஷ்டம். நீ ஒத்தன்தான் விருப்பப்பட்டு ஓவர்டைம் செய்யற!" என்றான் முத்துக்குமரனின் சகதொழிலாளி கந்தன்.

முத்துக்குமரன் பதில் சொல்லாமல் சிரித்தான்.

"ரொம்பக் கஷ்டப்படாதேடா! நாம குடும்பம் நடத்த உன் சம்பளம் போதும். எதுக்கு ஓவர்டைம் எல்லாம் பார்த்து உடம்பைக் கெடுத்துக்கற?" என்றாள் முத்துக்குமரனின் அம்மா சியாமளா. ஆனால் முத்துக்குமரன் ஓவர்டைம் செய்து பணம் சம்பாதிப்பதில் குறியாக இருந்தான்.

முத்துக்குமரன் வேறு நல்ல வேலைக்குப் போன பிறகும், பிறகு சொந்தத் தொழிலைத் துவங்கிய பிறகும் கூட, மேலும் எப்படிப் பொருள் ஈட்டலாம் என்பதிலேயே கவனம் செலுத்தி வந்தான்.

"ஏண்டா இப்படிப் பணம், பணம்னு அலையற?" என்றாள் சியாமளா.

திருமணத்துக்குப் பிறகு அவன் மனைவி ரம்யாவும் இதைத்தான் கேட்டாள். ஆனால், முத்துக்குமரன் பணம் சம்பாதிப்பதுதான் தன் வாழ்க்கையின் ஒரே நோக்கம் என்பது போல் செயல்பட்டான்.

முத்துக்குமரன் தன் குடும்பத்துடன் தங்கள் குல தெய்வம் கோவிலுக்குப் போனான். வழிபாடு முடிந்ததும், முத்துக்குமரன் தன் தாயிடம், "அம்மா! நம்ம ஊருக்குப் போயிட்டு வரலாமா?" என்றான்.

சியாமளாவின் முகம் மாறியது. 

"அங்கே எதுக்குடா போகணும்?" என்றாள் அவள்.

"கந்தப்பனைப் பார்க்கத்தான்!" என்றான் முத்துக்குமரன், சிரித்தபடி.

"உன் அப்பா வாங்கின கொஞ்சம் கடனுக்காக அவரை ஏமாத்தி ஏதோ பத்திரத்தில எல்லாம் கையெழுத்து வாங்கிக்கிட்டு, அவர் போனப்பறம் நம்ம சொத்தையெல்லாம் பிடுங்கிக்கிட்டு நம்மை நடுத்தெருவில நிக்க வச்சு நம்மை ஊரை விட்டே விரட்டிட்டானே அந்தக் கந்தப்பன், அவனைப் பார்க்கவா?" என்றாள் சியாமளா கோபத்துடனும், ஆற்றாமையுடனும்.

"ஆமாம்மா!" என்றான் முத்துக்குமரன் சிரித்தபடி.

ந்தப்பன் விட்டு வாசலில் காரை நிறுத்திய முத்துக்குமன், "கந்தப்பன் இருக்காரா?" என்று காரிலிருந்தபடியே உரக்கக் கூவினான்.

வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்த கந்தப்பன், "யாரு?" என்றான்.

"என்ன கந்தப்பன் மாமா, என்னைத் தெரியலியா? இதோ பின்னால உக்காந்திருக்காங்களே என் அம்மா, அவங்களைக் கூடவா தெரியல?" என்றான் முத்துக்குமரன் சிரித்தபடி.

கந்தப்பனின் முகம் வெளிறியது.

"இப்ப எதுக்கு இங்க வந்திருக்க?" என்றான் அவன்.

"இதென்ன கேள்வி? எனக்கு இந்த ஊர்ல நாலு வீடு இருக்கு. நான் இங்கே வரக் கூடாதா?"

"என்ன சொல்ற?" என்று கந்தப்பன் கேட்டபோதே, அவனுக்கு உண்மை புரிய ஆரம்பித்தது. 

சென்னையிலிருந்து ஒருவர் அந்த ஊரில் நான்கு வீடுகளை வாங்கி இருப்பதாகவும், சில நாட்களில் ரிஜிஸ்திரேஷன் நடக்கப் போவதாகவும், வீட்டை வாங்கியவர் யார் என்பது அப்போதுதான் தெரிய வருமென்றும் இண்டு நாட்களுக்கு முன் அந்த ஊரில் ஒரு செய்தி பரவி அவன் காதுக்கும் எட்டி இருந்தது.

'அப்ப அந்த நாலு வீட்டையும் வாங்கினது இவன்தானா?'

"எங்க சொத்தையெல்லாம் பறிச்சுக்கிட்டு எங்களை இந்த ஊரை விட்டே போக வச்சீங்க. இப்ப இந்த ஊர்ல எங்களுக்கு நாலு வீடு இருக்கு. இந்த ஊர்ல நாங்க வந்து இருக்கப் போறதில்ல. ஆனா நீங்க எங்ககிட்டேந்து பிடுங்கின ஒரு வீட்டுக்கு பதிலா இப்ப எங்ககிட்ட நாலு வீடு இருக்கு. இதை உங்ககிட்ட சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்!"

கந்தப்பனின் பதிலை எதிர்பார்க்காமல் காரைக் கிளப்பினான் முத்துக்குமரன்.

"என்னடா இதெல்லாம்?" என்றாள் சியாமளா.

"நம்ம சொத்தையெல்லாம் பிடுங்கிக்கிட்டு நம்மை நடுத்தெருவில நிறுத்தன எதிரியைப் பழி வாங்க நல்ல வழி நாம நிறையப் பணம் சம்பாதிச்சு அதை அவன் கண்ணுக்கு நேரா காட்டி அவனை வயிறெறிய வைக்கறதுதான். அதனாலதான் நான் ஆரம்பத்திலேந்தே பணம் சம்பாதிக்கறதிலே குறியா இருந்தேன்!" என்றான் முத்துக்குமரன், தன் தாயிடம்.

குறள் 759:
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.

பொருள்: 
ஒருவர் பொருள் ஈட்ட வேண்டும்; பகைவரின் செருக்கை அறுக்கும் வாள் அதை விடக் கூரியது இல்லை.

760. பார்த்திபனுக்குப் புரிந்தது!

பல தொழில் நிறுவனங்களைத் தொடங்கி நடத்தி வந்த தனசேகர், அந்த நிறுவனங்களில் தான் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ஓய்வு பெறப் போவதாக அறிவித்தார்.

"ஏன் திடீர்னு இந்த முடிவு?" என்றாள் அவர் மனைவி கோகிலா.

"திடீர்னு எனக்கு 65 வயசு ஆயிடுச்சு இல்ல! அதனாலதான்!" என்றார் தனசேகர் சிரித்துக் கொண்டே.

"நீங்க நிர்வாகத்தில ஈடுபடாம இருந்தாலும், நிறுவனங்கள்ள ஒரு டைரக்டரா இருந்தா எனக்கு வழிகாட்டியா இருக்க முடியும், இல்ல?" என்றான் அவர் மகன் பார்த்திபன்.

"பார்த்திபா! நீ அஞ்சாறு வருஷமா நம்ம நிறுவனங்களைப் பாத்துக்கற. இதுக்கு மேல உனக்கு நீயேதான் வழிகாட்டியா இருக்கணும். நீ சைக்கிள் ஓட்டக் கத்துக்கிட்டது நினைவிருக்கா? உனக்கு கத்துக் கொடுக்கறவரு நீ ஓட்டறப்ப பின்னால பிடிச்சுக்கிட்டே வருவாரு. கொஞ்ச நேரம் கழிச்சுக் கையை விட்டுடுவாரு. அவரு சைக்கிளைப் பிடிச்சுக்கிட்டிருக்காருன்னு நினைச்சுக்கிட்டு நீ ஓட்டிக்கிட்டிருப்ப! அப்புறம் திரும்பிப் பாத்தாத்தான் தெரியும், அவரு எப்பவோ கையை விட்டுட்டு ஒதுங்கி நின்னுட்டாருன்னு. அது மாதிரி நான் உனக்கு வழிகாட்டறதா நீ நினைச்சுக்கிட்டிருக்கே! ஆனா, ரெண்டு மூணு வருஷமா நீயேதான் நம் நிறுவனங்களை நடத்திக்கிட்டிருக்கே. நான் சும்மா வேடிக்கை பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன்!"

பார்த்திபன் மௌனமாக இருந்தான்.

"ஆனா, நீ என் வாழ்க்கையை ஆரம்பத்திலேந்துபாத்ததில்ல. அது முழுமையா இருக்கறப்பதான் பாத்திருக்க!" என்றார் தனசேகர் தொடர்ந்து.

"முழுமையான்னா?"

"உனக்கு நினைவு தெரிஞ்ச வயசில என் தொழில் சிறப்பா நடந்துக்கிட்டிருந்தது. எனக்கு வாழ்க்கையில எல்லா வசதிகளும் இருந்தது. எல்லாமே மகிழ்ச்சியா இருந்தது. அதைத் தவிர என் வருமானத்தில ஒரு பகுதியை கஷ்டப்படறவங்களுக்கு உதவறதுக்காக நன்கொடைகள் மூலமும், அறக்கட்டளைகள் மூலமும் பயன்படுத்திக்கிட்டிருந்தேன். அதில கிடைச்ச திருப்தியும், மனநிறைவும் என் வாழ்க்கையை இன்னும் வளமா ஆக்கின."

"ஆமாம்ப்பா. 'தொழில்ல வெற்றிகரமா இருக்கறவங்கள்ள பல பேருக்கு வாழ்க்கையில பல பிரச்னைகள் இருக்கும், நிறையப் பணம் இருந்தும் மகிழ்ச்சி இருக்காது, நிம்மதி இருக்காது, அல்லது திருப்தி இருக்காது. ஆனா உங்க அப்பா ஒரு நிறைவான வாழ்க்கை வாழறார்'னு எங்கிட்ட சில பேர் சொல்லி இருக்காங்க. நீங்க முழுமையான வாழ்க்கைன்னு சொன்னீங்களே, அதைத்தான் அவங்க குறிப்பிட்டாங்கன்னு நினைக்கிறேன்!" என்றான் பார்த்திபன்.

"கரெக்ட்! இதுக்கு என்ன காரணம்னு நினைக்கற?"

"உங்களோட கடின உழைப்புதான் நினைக்கிறேன்!"

"கடின உழைப்பு மட்டும் இல்ல. எந்த சந்தர்ப்பத்திலேயும் முறையில்லாத வழியில பணம் சம்பாதிக்கக் கூடாதுன்னு நான் உறுதியா இருந்ததுதான் எனக்கு வாழ்க்கையில வளத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்ததோட, என்னை அறவழியிலேயும் நடக்க வச்சுதுன்னு நினைக்கறேன்!"

தனசேகர் பார்த்திபனை உற்றுப் பார்த்தார். பார்த்திபன் சங்கடத்துடன் நெளிந்தான்.

"ஒரு உதாரணம் சொல்றேன். தொழில் ஆரம்பிச்ச புதுசில, எனக்கு ரொம்பப் பண நெருக்கடி. ஆர்டர்கள் கிடைக்கல. தொழிற்சாலையை நடத்த முடியாத நிலைமை. உன் அம்மாவோட நகையை நிறைய தடவை அடகு வச்சுத்தான் தொழிலை நடத்தி இருக்கேன்!" என்றுபடியே மனைவியைப் பார்த்தார் தனசேகர்.

"அதுதான் ஒவ்வொரு தடவையும் மீட்டுக் கொடுத்துடுவீங்களே!" என்றாள் கோகிலா.

"மீட்டாத்தானே மறுபடி நெருக்கடி வரும்போது அடகு வைக்க முடியும்! அப்ப சில பேர் எனக்கு ஒரு யோசனை சொன்னாங்க. என்னோட மூலப்பொருளா இருந்த ஒரு ரசாயனப் பொருளுக்கு அப்ப தட்டுப்பாடு இருந்தது. அதை அரசாங்கத்தில கோட்டா முறையில கொடுப்பாங்க. எனக்கு கோட்டாவில கிடைச்சதை சில பெரிய நிறுவனங்கள் மூணு நாலு பங்கு விலை கொடுத்து பிளாக்கில வாங்கிக்கத் தயாரா இருந்தாங்க. அப்படி நான் வித்திருந்தா என் பண நெருக்கடி பெருமளவு குறைஞ்சிருக்கும். ஆனா நான் அப்படி செய்யக் கூடாதுன்னு பிடிவாதமா இருந்தேன். எனக்குத் தேவைப்படாதபோது என்னோட கோட்டாவை வாங்கவே மாட்டேன். எல்லாரும் என்னைப் பைத்தியக்காரன்னு கூட சொன்னாங்க. அறவழியிலதான் பணம் சம்பாதிக்கணும்னு அப்படியெல்லாம் உறுதியா இருந்ததுதான் எனக்கு வாழ்க்கையில நிறைவைக் கொடுத்திருக்கு."

"இதையெல்லாம் எதுக்கு இப்ப அவங்கிட்ட சொல்றீங்க?" என்றாள் கோகிலா.

"எதுக்கு சொல்றேன்னு அவனுக்குப் புரியும்!" என்றார் தனசேகர், பார்த்திபனைப் பார்த்தபடி.

சில முறையற்ற செயல்கள் மூலம் அதிக லாபம் சம்பாதிக்க முடியும் என்று தன்னிடம் சில நண்பர்கள் யோசனை கூறியதைப் பற்றித் தெரிந்து கொண்டுதான் தந்தை இதைத் தன்னிடம் கூறுகிறார் என்பது பார்த்திபனுக்குப் புரிந்தது.

குறள் 760:
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.

பொருள்: 
நல்ல வழியில் மிகுதியாகப் பணம் சேர்த்தவர்க்கு மற்ற இரு விழுப் பொருட்களான அறமும் இன்பமும் எளிதாகக் கிடைக்கும்.

அதிகாரம் 77 - படைமாட்சி
அதிகாரம் 75 - அரண்

 அறத்துப்பால்                                               காமத்துப்பால்  

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...