Saturday, June 15, 2024

1078. கிராமத்துக்கு ஒரு சாலை

கட்டுப்பட்டி கிராமத்தை, அருகிலுள்ள முக்கிய சாலையுடன் இணைக்கும் ஐந்து கிலோமீட்டர் மண் சாலையைத் தார் சாலையாக மாற்றக் கோரி, அந்த ஊர் மக்கள் போராட்டம் நடத்தத் தொடங்கி, இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன.

அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், தேர்தலில் நின்றபோது, அந்தச் சாலையை அமைத்துத் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அவர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.

அந்த ஊரின் பிரதிநிதிகள் சிலர் ஐந்தாறு முறை சட்டமன்ற உறுப்பினரைச் சந்தித்துப் பேசினர். ஆனால், அவர் அவர்களுக்கு உறுதியான பதில் எதையும் அளிக்கவில்லை.

முதல்முறை சந்தித்தபோது, "தேர்தல்போது சொல்றதையெல்லாம் செய்யணும்னு எதிர்பாக்க முடியாது. நீங்க மனுக் கொடுங்க. நான் பரிசீலிக்கறேன்" என்று அலட்சியமாக பதிலளித்தார்.

மனு அளித்து விட்டு, இரண்டு மூன்று முறை அவரைச் சந்தித்தபோதும், அவர் சரியாக பதிலளிக்கவில்லை. 

"சட்டமன்ற உறுப்பினர் நிதி இன்னும் அரசாங்கத்திலேந்து வரலை" என்று ஒருமுறை கூறினார். ஆயினும், அவருடைய சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து வேறு சில பணிகள் நடப்பது தெரிந்தது.

அந்த ஊரிலிருந்து ஆயிரம் பேர் முக்கிய சாலைக்குச் சென்று சாலை மறியல் செய்வதென்று தீர்மானித்தனர். 

சாலை மறியல் கவனம் பெற்று, ஊடகங்களில் செய்தியாக வெளியாகியது. ஒரு தொலைக்காட்சி சேனலிலிருந்து சிலர் வந்து, ஊர்மக்களிடம் பேட்டி எடுத்துத் தங்கள் சேனலில் ஒலிபரப்பினார்கள். 

அதற்குப் பிறகும் எதுவும் நடக்கவில்லை.

பிறகு ஒருநாள், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, அந்த ஊரிலிருந்து பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரம் பேர் கிளம்பிச் சென்று, சட்டமன்றக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, சட்டமன்றக் கட்டிடம் அருகே சென்று முழக்கம் எழுப்பினர். 

முழக்கம் எழுப்பியவர்கள் உடனே கைது செய்யப்பட்டாலும், போராட்டம் பற்றிய செய்தி, ஊடகங்களில் பெரிதாக ஒளிபரப்பப்பட்டது. 

முதலமைச்சர் அந்தச் சட்டமன்ற உறுப்பினரை அழைத்து விசாரித்து, அந்தச் சாலையை உடனே அமைத்துத் தரும்படி உத்தரவிட்டார்.

சாலைப்பணிகள் துவங்கிய பிறகு ஒருநாள், கட்டுப்பட்டி கிராமத் தலைவர் கூத்தன், தன் நண்பரும் பள்ளி ஆசிரியருமான கார்மேகத்திடம் பேசிக் கொண்டிருந்தார்.

"இந்தச் சாலையைப் போட வைக்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருந்தது! இதுக்கு முன்னால இருந்த எம்.எல்.ஏ.கிட்ட ஏதாவது கோரிக்கை வச்சா உடனே பரிசீலிப்பாரு. இந்த எம்.எல் ஏ-ஐச் செயல்பட வைக்க இத்தனை போராட்டங்கள் நடத்த வேண்டி இருந்தது!" என்றார் கூத்தன்.

"திராட்சைப் பழத்தைக் கையால அழுத்தினாலே ஜூஸ் வரும். கரும்பை மெஷின்ல போட்டு அழுத்திப் பிழிஞ்சாதானே சாறு வரும்? அது மாதிரிதான், ஒத்தர் நல்லவரா இருந்தா, மத்தவங்க கஷ்டங்களைக் காது கொடுத்துக் கேப்பாரு, தீர்க்க முயற்சி செய்வாரு. ஆனா, ஒத்தர் மோசமானவரா இருந்தா, அவரோட போராடித்தான் நம்ம கோரிக்கையை நிறைவேத்திக்க முடியும்!" என்றார் கார்மேகம்.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 108
கயமை (தீய குணம்)

குறள் 1078:
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.

பொருள்: 
சான்றோர்களை அணுகி, நம் குறைகளைச் சொல்லிய அளவிலேயே, நமக்கு உரிய பயன் கிடைக்கும். ஆனால், கரும்புபோல் அழுத்திப் பிழிந்தால்தான், கீழ்மக்களிடம் நமக்கு உரியதைப் பெற முடியும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...