அதிகாரம் 75 - அரண்

திருக்குறள்
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 75
அரண்

741. எதிர்பாராத படையெடுப்பு

"அரசே! நம் அண்டை நாட்டு மன்னர் வீரகேசரி கோட்டையிலிருந்து பல குடும்பங்களை வெளியேற்றி அவர்களைக் கோட்டைக்கு வெளியே குடியமர்த்திக் கொண்டிருக்கிறாராம்" என்றார் அமைச்சர்.

"இதற்கான காரணம் உங்களுக்குப் புரிகிறதா அமைச்சரே?" என்றான் மன்னன் கீர்த்திவளவன்.

"நாம் அவர்கள் மீது படையெடுக்கப் போகிறோம் என்று அஞ்சுகிறார் என்று நினைக்கிறேன். அதனால்தான் கோட்டைக்குள் குறைவான எண்ணிக்கையில் நபர்கள் இருந்தால் கோட்டைக்குள் அதிக காலம் இருந்து கொண்டு நம் முற்றுகையைச் சமாளிக்க முடியும் என்று நினைத்துத் திட்டமிடுகிறார் என்று எண்ணுகிறேன்" என்றார் அமைச்சர்.

"சரியாகச் சொன்னீர்கள் அமைச்சரே! பெயர்தான் வீரகேசரி. ஆனால் உண்மையில் பெரிய கோழை. நமக்கு அவர்கள் மீது  படையெடுக்கும் எண்ணம் எதுவும் இல்லை. ஆனால் அப்படி நினைத்துக் கொண்டு அவர்கள் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கட்டும். அவர்கள் பயத்தை நாம் ரசித்துக் கொண்டிருக்கலாம்!" என்றான் கீர்த்திவளவன் உரக்கச் சிரித்தபடி.

"என்ன அமைச்சரே இது? திடீரென்று வீரகேசரி நம் மீது படையெடுத்து வந்திருக்கிறான்! நாம் இதை எதிர்பார்க்கவில்லையே! நம் ஒற்றர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?" என்றான் கீர்த்திவளவன் அதிர்ச்சியுடனும், கோபத்துடனும்..

"நாம் நினைத்தது போல் வீரகேசரி நம் படையெடுப்பை எதிர்பார்த்து பயந்து கோட்டையிலிருந்து பலரை வெளியேற்றவில்லை, நம் மீது படையெடுப்பதற்கான ஏற்பாடுகளை ரகசியமாகச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் சாதாரண மக்களைக் கோட்டைக்குள்ளிருந்து வெளியேற்றி விட்டு, ஆயுதங்கள் தயாரித்தல், படைகளுக்குப் பயிற்சியளித்தல் போன்றவற்றை மட்டும் கோட்டைக்குள் செய்து கொண்டிருந்திருக்கிக்கிறார். போருக்கான எல்லா ஏற்பாடுகளும் கோட்டைக்குள் நடந்ததாலும், சாதாரண மக்கள் ஒரு சிலரே கோட்டைக்குள் இருந்ததாலும் கோட்டைக்குள் நடப்பவற்றை நம் ஒற்றர்களால் கண்டறிய முடியவில்லை!" என்று கூறிய அமைச்சர், 'கோட்டைஎன்பது எதிரியின் படையெடுப்பின்போது தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான இடம் மட்டுமல்ல, எதிரியின் மீது போர் தொடுப்பதற்கான ஏற்பாடுகளை சத்தமில்லாமல் செய்யும் இடம் கூட என்பதை வீரகேசரி புரிந்து வைத்திருக்கிறார்!" என்று தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.

குறள் 741:
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.

பொருள்: 
பகைவர் மீது படையெடுத்துச் செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முனைவோர்க்கும் கோட்டை பயன்படும்.

742. நால்வகை அரண்கள்!

"அரசே! நீங்கள் இத்தனை ஆண்டுகள் இந்தக் காட்டில் மறைவாக வாழ்ந்து ஒரு நல்ல சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தது வீண் போகவில்லை. ருத்ரபதியின் கொடுங்கோல் ஆட்சியைத் தாள முடியாமல் மக்களே அவனை விரட்டி அடித்து விட்டனர். ருத்ரபதியால் சதி செய்து விரட்டப்பட்ட உங்களை மீண்டும் அரியணையில் அமர வைக்க மக்கள் ஆவலாக உள்ளனர்" என்றார் அமைச்சர். 

அமைச்சருடன் வந்திருந்த பிற அரசு அதிகாரிகள் அமைச்சர் கூறுவதை ஆமோதித்துத் தலையாட்டினர். 

"மக்கள் விருப்பபடி மீண்டும் அரசனாவதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் ஒரு நிபந்தனை!" என்றான் மகரபூபதி.

"என்ன நிபந்தனை அரசரே!" என்றார் அமைச்சர்.

"நான் இந்த இடத்திலிருந்தே ஆட்சி புரிய விரும்புகிறேன்!"

"இந்தக் காட்டிலிருந்தா? அரசே! ஒரு அரசர் எப்போதுமே பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டுதான் ஆட்சி புரிய வேண்டும். கோட்டைக்குள் இருக்கும் அரண்மனையில் இருந்தபடி நீங்கள் ஆட்சி புரிவதுதான் பொருத்தமாக இருக்கும்" என்றார் அமைச்சர்.

"அமைச்சரே! இத்தனை ஆண்டுகளாக நான் இங்கேதான் வழ்ந்து கொண்டிருந்தேன். இங்கே தன் படைகளை அனுப்பி என்னைக் கொல்லவும், சிறைபிடிக்கவும் ருத்ரபதி எத்தனையோ முறை முயற்சி செய்தான். ஆனால் அவனால் முடியவில்லை. காரணம் இந்த இடமே ஒரு இயல்பான அரணாக அமைந்திருப்பதுதான். அந்தப் பக்கம் மலைத் தொடர். படையெடுத்து வரும் எவரும் அந்த மலையைக் கடந்துதான் வர வேண்டும். அந்த முயற்சியில் யாராவது ஈடுபட்டாலே நம்மால் அதை இங்கிருந்தே முறியடித்து விட முடியும். இது மலை கொடுக்கும் பாதுகாப்பு.

"இங்கே ஓடும் ஆற்றில் நீர் எப்போதும் வற்றுவதில்லை. அதனால் இங்குள்ள மக்களுக்கு விவசாயத்துக்கும், உணவுக்கும் இன்றியமையாததான நீர்வளம் இங்கே இருக்கிறது. அதனால் ஒருவேளை எதிரிகள் மலைக்கருகே முற்றுகையிட்டால் கூட இங்குள்ள மக்கள் கோட்டைக்குள் பாதுகாப்பாக இருக்கும் மக்களைப் போல் பாதுகாப்பாக இருக்கலாம். இது நீர் கொடுக்கும் பாதுகாப்பு.

"இன்னொரு புறம் அடர்ந்த காடு. அந்தக் காட்டுக்குள்தான் நான் வாழ்ந்து கொண்டிருந்தேன். காட்டுக்கு மறுபுறத்தில் உள்ள நாடுகளிலிருந்து எவரும் இந்தக் காட்டைக் கடந்து வந்து நம்மைத் தாக்க முடியாது. இது காடு கொடுக்கும் பாதுகாப்பு.

"நான்காவதாக, அருகே இருக்கும் பரந்த வெளி. அதைத் தாண்டிப் பகைவர்கள் வருவதற்குள் நம் படைகள் அந்தப் படைகளைப் பார்த்து விட்டு அவற்றை விரட்டி அடித்து விடுவார்கள். அத்துடன் நம் வீரர்கள் வெளியே வந்து போர் செய்யவும் இந்த வெட்ட வெளி மிகவும் ஏற்புடையது. இது நிலம் கொடுக்கும் பாதுகாப்பு.

"இவ்வாறு மலை அரண், நீர் அரண், வன அரண், நில அரண் என்று நான்கு வகை அரண்களைக் கொண்ட இந்த இயற்கை அரணை விட அதிகப் பாதுகாப்பான இடம் வேறு எதுவாக இருக்க முடியும்?"

அரசன் கூறியதை ஏற்றுக் கொள்வது போல் அமைச்சர் தலையசைத்தார். 

குறள் 742:
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.

பொருள்: 
மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே அரண் ஆகும்.

743. புலவர் சொன்ன செய்தி

"வாருங்கள் புலவரே! செண்பக நாட்டுச் சுற்றுப் பயணம் எப்படி இருந்தது?"

"சிறப்பாக இருந்தது அரசே! செண்பக நாட்டு மக்களின் விருந்தோம்பல் அற்புதமாக இருந்தது."

"செண்பக நாட்டு மக்களின் விருந்தோம்பலைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக உங்களை நான் அங்கே அனுப்பி வைக்கவில்லை என்று நினைக்கிறேன்!"

"மன்னிக்க வேண்டும் அரசே! செண்பக நாட்டைத் தாக்குவதற்கு முன்னேற்பாடாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளை ஆய்வு செய்யத்தான் ஒரு சுற்றுப் பயணி போல் அங்கே சென்று வரும்படி நீங்கள் என்னை அனுப்பினீர்கள் என்பதை நான் மறக்கவில்லை."

"அப்படியானால் அதைப் பற்றிப் பேசுங்கள்!"

"மன்னிக்க வேண்டும் அரசே! நான் சொல்லப் போவது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்காது. அதனால்தான் பீடிகையாக அந்நாட்டு மக்களின் விருந்தோம்பலைப் பற்றி ஆரம்பித்தேன்!"

"சீதையைத் தேடிச் சென்ற அனுமன் 'கண்டேன் சீதையை' என்று ரத்தினச் சுருக்கமாக  ராமனுக்குச் செய்தி சொன்னது போல், நீங்களும் 'மகிழ்ச்சி அளிக்காது' என்ற இரண்டு சொற்களிலேயே எனக்கான செய்தியைச் சொல்லி விட்டீர்கள்! அப்படியானால் செண்பக நாட்டைப் போரில் வெல்வது அரிது என்று சொல்கிறீர்கள்?"

"அரிது என்று சொல்வதை விட இயலாது என்று சொல்வதுதான் உண்மை நிலைக்கு நெருக்கமாக இருக்கும்!"

"செண்பக நாடு ஒரு சிறிய நாடு. அதைப் போரில் வீழ்த்துவது எளிது என்று நினைத்தேன். சரி. அவர்களைப் போரில் வெல்ல முடியாது என்று ஏன் சொல்கிறீர்கள்?"

"அந்த நாட்டுக்கு அரணாக இருக்கும் கோட்டையை வைத்துத்தான். எவ்வளவு உயரம்! சுவர்கள் எவ்வளவு அகலம்! செயற்கையாக ஒரு மலையையே உருவாக்கியது போல் கோட்டையைக் கட்டி இருக்கிறார்கள். அதை எப்படிக் கட்டினார்கள் என்று தெரியவில்லை. அதன் பழமையைப் பார்க்கும்போது அது மிகவும் உறுதியாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. பல முறை அந்தக் கோட்டையின் மீது தாக்குதல்கள் நடந்திருப்பதாகவும், எல்லாத் தாக்குதல்களும் முறியடிக்கப்பட்டிருப்பதாகவும் கோட்டைக்குள் உள்ள கல்வெட்டுகளில் பொறித்து வைத்திருக்கிறார்கள். கோட்டை முற்றுகை இடப்பட்டால் நீண்ட காலம் கோட்டைக்குள்ளேயே இருந்து கொண்டு  முற்றுகையிட்டிருக்கும் படைகளை உள்ளிருந்தே தாக்கி முற்றுகையை எதிர்கொள்வதற்கான பல அமைப்புகளும் சாதனங்களும் கோட்டைச் சுவர்களில் அமைக்கப்பட்டுள்ளன."

"நீங்கள் சொல்வதைப் பார்த்தால்  செண்பக நாட்டை வெற்றி கொள்ள எளிதான ஒரு வழி இருப்பது போல் தோன்றுகிறதே!"

"என்ன அரசே அது? அப்படி எதையும் நான் கூறவில்லையே!"

"அவர்கள் விருந்தோம்பலைப் பற்றிக் கூறினீர்களே! அவர்களுடன் நட்பு கொண்டு அவர்கள் மனங்களை வென்று அவர்களுடைய விருந்தோம்பலை ஏற்றுக் கொள்ளும் வழியைத்தான் சொன்னேன்!"

தன் செய்தி அளித்த ஏமாற்றத்தைப் போக்கிக் கொள்ள அரசர் நகைச்சுவையை நாடி இருக்கிறார் என்பது புலவருக்குப் புரிந்தது.

குறள் 743:
உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.

பொருள்: 
உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும் அமைந்திப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்.

744. முற்றுகை விலகியது!

"கோட்டை வெளியே பார்ப்பதற்குப் பெரிதாக இருக்க வேண்டும், பெரிய பரப்பை வளைத்துக் கோட்டையின் சுற்றுச் சுவர்களைக் கட்ட வேண்டும், ஆனால் கோட்டைக்குள் கட்டிடங்கள் மிகக் குறைவாகவே இருக்க வேண்டும், உள்ளே அரண்மனையைச் சேர்ந்தவர்கள், கோட்டையைக் காவல் செய்யும் வீரர்கள். தேவையான சில அங்காடிகள் இவை தவிர வேறு யாரும்/ எதுவும் இருக்கக் கூடாது" என்று சிற்பி கூறியபோது அந்த யோசனை மன்னனுக்கு முதலில் விந்தையாகத் தோன்றியது.

"ஏன் அப்படி?" என்று கேட்டான் மன்னன்.

"அரசே! கோட்டை என்பது மன்னரையும் முக்கியமான வேறு சிலரையும் படையெடுத்து வரும் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பாக வைத்திருக்கும் இடம். பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் இருக்கும் இடம் சிறிதாக இருந்தால்தான் அதைச் சிறப்பாகப் பாதுகாக்க முடியும். கோட்டை பெரிதாக இருக்க வேண்டும். கோட்டைச் சுவர் அதிக சுற்றளவைக் கொண்டிருந்தால் அது தாக்குவதற்குக் கடினமானது என்ற தோற்றத்தைக் கொடுக்கும்.

"சுவர்களில் பல இடங்களில் சிறு ஓட்டைகள் மூலம் வெளியே சூழ்ந்திருக்கும் படைகளை உள்ளிருந்து தாக்குவதற்கான வசதிகளை அமைத்துக் கொள்ளலாம். இவற்றில் ஓரிரண்டு இடங்களிலிருந்து தாக்குதல் நடத்தினால் கூட, வெளியே இருக்கும் படை மிரண்டு விடும். அடுத்தாற்போல் எந்தப் பகுதியிலிருந்து தாக்குதல் வரும் என்று தெரியாமல் அவர்கள் அச்சத்திலும், குழப்பத்திலும் இருப்பார்கள். 

"கோட்டைக்குள் மையப்பகுதியில் மட்டும் குறைவான கட்டிடங்களை உருவாக்கி, சுற்றுச் சுவரிலிருந்து கட்டிடங்கள் உள்ள மையப்பகுதிக்கு முன் வரை வெட்ட வெளியாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஒருவேளை எதிரிப்படைகள் கோட்டைக்குள் நுழைந்து விட்டாலும், வெட்டவெளியைத் தாண்டி மையப்பகுதிக்கு அவர்கள் வருவதற்குள் அவர்களைப் பல இடங்களிலிருந்தும் தாக்கிப் பின்வாங்கச் செய்ய முடியும்."

சிற்பியின் விளக்கத்தைக் கேட்ட பிறகு, சிற்பி கூறியபடியே கோட்டையைக் கட்டமைத்தான் மன்னன்.

"என்ன இது, இவ்வளவு பெரிய கோட்டை! இதை நாம் எதிர்பார்க்கவே இல்லையே!" என்றான் வடுக நாட்டின் மீது படையெடுத்து வந்திருந்த விசாக நாட்டின் படைத்தளபதி..

"ஒரு சிறிய நாடு இவ்வளவு பெரிய கோட்டையை அமைத்திருப்பது விந்தையாக இருக்கிறது!" என்றான் துணைத்தளபதி .

அப்போது எங்கிருந்தோ விரைந்து வந்த சில அம்புகள் படையின் முன்னணியிலிருந்த சில குதிரை வீரர்களைத் தாக்க, அவர்கள் குதிரைகளிலிருந்து விழுந்தனர். அதனால் குதிரைகள் அச்சமடைந்து தறிகெட்டு ஓட, அதன் விளைவாகப் படையின் பல பகுதிகள் நிலைகுலைந்தன.

"முதலில் நாம் இங்கிருந்து திரும்ப வேண்டும். சற்றுத் தொலைவில் எங்காவது நின்று என்ன செய்வதென்று ஆலோசிக்கலாம்" என்ற தளபதி  படை முழுவதையும் திரும்பிச் செல்ல ஆணையிட்டான்.

சற்று தூரத்தில் ஒரு திறந்த வெளியில் படைகளை நிறுத்தி விட்டு படைத்தளபதி துணைத்தளபதியுடன் கலந்தாலோசித்தான்.

"இந்தப் படையெடுப்பே தவறான முடிவு. இவ்வளவு பெரிய கோட்டையைத் தாக்கி உள்ளே செல்லக் கூடிய வலிமை நம் படைகளுக்கு இல்லை. நாம் திரும்பிச் செல்வதுதான் உத்தமம்!" என்றான் துணைத்தளபதி.

"மன்னருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ஆனால் நாம் கோட்டையை முற்றுகையிட்டால். நம்மால் கோட்டையைப் பிடிக்கவும் முடியாது, உயிரோடு திரும்பிச் செல்லவும் முடியாது. மன்னரிடம் விளக்கிச் சொல்வோம். நமக்கு வேறு வழியில்லை!" என்றான் தளபதி.

"நம் மீது படையெடுத்து வந்த விசால நாட்டுப் படைகள் திரும்பச் சென்று விட்டன!" என்று அரசரிடம் தெரிவித்தான் வடுக நாட்டின் கோட்டைத் தளபதி.

குறள் 744:
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்.

பொருள்: 
காவல் செய்யவேண்டிய இடம் சிறியதாயும், கோட்டையின் சுற்றுப் பெரியதாயும், சண்டையிட வரும் பகைவர்க்கு மலைப்பைத் தருவதாயும் அமைவது அரண்.

745. கோட்டை முற்றுகை!

"இப்படி ஒரு கோட்டையை எப்படிக் கட்டினார்கள் என்றே தெரியவில்லை. தகர்க்க முடியாத வலிமை, உள்ளே படைக்கலங்கள், உணவுப் பொருட்கள் போன்றவற்றைச் சேமித்து வைக்க ஏராளமான இடம், நூற்றுக் கணக்கான போர் வீரர்கள் தங்க வசதி, அரசருக்கான அரண்மனை, அதைத் தவிர பொதுமக்களுக்கான குடியிருப்புக்கள்!" என்று வியந்து பாராட்டினார் தர்மசேனர்.

தர்மசேனர் பல நாடுகளுக்கும் சென்று வரும் பயணி. தான் சமீபத்தில் சென்று வந்த குமார தேசத்தின் தலைநகரில் இருந்த கோட்டையைப் பற்றித்தான் இன்னொரு நாட்டில் பயணம் செய்து கொண்டிருந்தபோது சில பயணிகளிடம் அவர் இவ்வாறு கூறிக் கொண்டிருந்தார்.

சற்றுத் தள்ளி நின்று தர்மசேனர் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு மனிதன், அவர் அருகில் வந்து அவருடைய கையை இறுக்கமாகப் பிடித்து, அவர் காதுக்குள், "ஐயா! நான் அரசாங்க ஒற்றன். குமார தேசத்தின் கோட்டையைப் பற்றிய பெருமையை மன்னரே உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்புகிறார். என்னுடன் வருகிறீர்களா?" என்று கூறி அவரை அழைத்துச் சென்றான்.

ரண்டு நாட்களுக்குப் பிறகு தர்மசேனர் அரண்மனை சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்தபோது அவர் உடலில் காயங்கள் இருந்தன.

"படைத்தலைவரே! குமார தேசத்துக்குச் சென்று வந்த பயணியிடமிருந்து அந்த நாட்டின் தலைநகரில் உள்ள கோட்டையைப் பற்றிய எல்லா விவரங்களையும் அறிந்து கொண்டு விட்டோம். அவர் எதையும் மறந்து விடாமல் எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் என்பதற்காக அவரைக் கொஞ்சம் அதிகமாகவே கவனிக்க வேண்டி இருந்து விட்டது!அவரிடமிருந்து கிடைத்த விவரங்களை வைத்து நாம் அந்தக் கோட்டையைத் தாக்க முடியும் அல்லவா?" என்றான் அரசன்.

"நிச்சயமாக அரசே! கோட்டை அமைப்பைப் பார்க்கும்போது குமார தேசத்து மன்னர்கள் எப்படிப்பட்ட கோழைகளாக இருந்திருக்கிறர்கள் என்று தெரிகிறது. யாராவது போர் தொடுத்தால் பல மாதங்கள் கோட்டைக்குள்ளேயே ஒளிந்திருந்து வெளியே நிற்கும் படைகள் சலிப்படைந்து திரும்பிப் போக வேண்டும் என்ற நோக்கில் கட்டப்பட்டிருக்கிறது அந்தக் கோட்டை. நாம் பல மாதங்கள் காத்திருக்கும் அளவுக்கு நம்மைத் தயார் செய்து கொண்டு கோட்டைக்கு வெளியே காத்திருந்தால் சரணடைவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை!" என்றான் படைத்தலைவன்.

"அப்படியனால் விரைவிலேயே குமார தேசத்துக் கோட்டையை முற்றுகை இடுவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்குங்கள்!" என்றான் அரசன்.

"என்ன படைத்தலைவரே! கோட்டையை முற்றுகையிட்டு, பல மாதங்கள் ஆனாலும் பொறுமையாகக் காத்திருந்து கோட்டைக்குள் ஒளிந்திருப்பவர்களைச் சரணடையச் செய்வேன் என்று சொல்லி விட்டுப் போனீர்கள். இப்போது முற்றுகையைக் கைவிட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று ஓடி வந்திருக்கிறீர்களே!" என்றான் அரசன் கோபத்துடனும், எகத்தாளத்துடனும்.

"மன்னிக்க வேண்டும் அரசே! ஒரு பயணி சொன்ன விவரங்களை வைத்து நாம் அந்தக் கோட்டையை முற்றுகையிட்டது தவறாகப் போய் விட்டது. அந்தக் கோட்டை உள்ளே இருப்பவர்களின் பாதுகாப்புக்காக மட்டும் கட்டப்படவில்லை. வெளியே முற்றுகை இடுபவர்களைப் பல்முனைகளிலிருந்தும் தாக்க உதவும் வகையிலும் அமைக்கப்பட்டிருக்கிறது. கோட்டையின் மேற்புறத்திலிருந்து தூரத்திலிருந்து தெரியாத துளைகள் மூலம் நம் படைகள் மீது அம்பு மழை பொழிந்தது. நாம் சுதாகரித்துக் கொள்வதற்குள் கோட்டைக்குள்ளிருந்த ரகசிய சுரங்கப் பாதை வழியே வெளியே வந்த, தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாத வீரர்களைக் கொண்ட ஒரு சிறிய படை பூமியிலிருந்து முளைப்பது போல் திடீரென்று நம் படைகளுக்கு நடுவே வந்து நம் படைகளைத் தாக்கத் துவங்கி விட்டது. தாக்குதலை நம் படைகளால் சமாளிக்க முடியவில்லை!" என்று தலையைக் குனிந்து கொண்டே கூறினான் படைத்தலைவன்.

குறள் 745:
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்.

பொருள்: 
பகைவரால் கைப்பற்ற முடியாததாய், கோட்டைக்குள் இருப்போர்க்குத் தேவையான அளவு உணவுப் பொருள் கொண்டதாய், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதற்கு எளிதாகிய தன்மை உடையது அரண்.

746. ஒற்றர்கள் அளித்த செய்தி 

"அரசே! மந்தார நாட்டின் கோட்டைக்குள் சென்று பார்த்த நம் ஒற்றர்களிடமிருந்து ஒரு நல்ல செய்தி வந்திருக்கிறது!" என்றான் ஒற்றர்படைத் தலைவன்.

"என்ன செய்தி?" என்றான் குந்தள நாட்டு அரசன் ரவிவர்மன்.

"மந்தார நாட்டின் கோட்டை வலுவாகக் கட்டப்பட்டிருக்கிறது. அதை வெளியிலிருந்து தகர்ப்பது கடினம்..."

"ஆயினும்...?" என்றான் அரசன் மகிழ்ச்சியான எதிர்பார்ப்புடன்..

"ஆனால் கோட்டைக்குள் நிலைமை மிகவும் பலவீனமாக இருக்கிறது. பொதுவாக ஒரு கோட்டைக்குள் பெரும் தானியக் கிடங்குகள் இருக்கும் முற்றுகைக் காலத்தில் பயன்படுத்துவதற்காக அவற்றில் நிறைய தானியங்களைச் சேமித்து வைத்திருப்பார்கள்."

"நம் நாட்டில் அப்படித்தானே செய்திருக்கிறோம்!"

"ஆனால் குந்தள நாட்டின் கோட்டைக்குள் பெரிய தானியக் கிடங்குகள் எதுவும் இல்லை. அத்துடன் கோட்டைக்குள் படைவீரர்கள் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறார்கள். படைக்கலங்களுக்கான கிடங்கும் சிறிதாகவே இருக்கிறது. எனவே நாம் முற்றுகையிட்டால், உள்ளே தானியச் சேமிப்பு இல்லாத நிலையில் அவர்களால் அதிக நாள் தாக்குப் பிடிக்க முடியாது. அத்துடன் குறைந்த அளவு படைக்கன்களையும், குறைவான எண்ணிக்கையில் படைவீரர்களையும் வைத்துக் கொண்டு அவர்களால் நம்முடன் போரிடவும் முடியாது!" என்றான் ஒற்றர்படைத் தலைவன் உற்சாகத்துடன்.

"அப்படியானால், மந்தார நாட்டின் மீது உடனே படையெடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்!" என்றான் அரசன் படைத்தலைவனைப் பார்த்து.

ந்தார நாட்டின் கோட்டைக்கு வெளியே குந்தள நாட்டுப் படைகள் முற்றுகையிட்டிருந்தன.

நான்கு நாட்களுக்கு கோட்டைக்குள்ளிருந்து எந்த எதிர்த் தாக்குதலும் வரவில்லை. கோட்டை வலுவாக இருந்ததால் கோட்டையைத் தகர்க்கும் முயற்சியில் குந்தள நாட்டுப் படைத்தலைவன் ஈடுபடவில்லை.

"எப்படியும் முற்றுகையைச் சமாளிக்க முடியாமல் மந்தார நாடு நம்மிடம் சரணடையத்தான் போகிறது. சில நாட்கள் காத்திருப்போம்!" என்றான் படைத்தலைவன், படையின் முன்னணித் தலைவர்களிடம்.

ஐந்தாம் நாள் அதிகாலையில் கோட்டைக்குள்ளிருந்து அம்புகளும், ஈட்டிகளும் பறந்து வந்தன. கூடாரங்களில் உறங்கிக் கொண்டிருந்த குந்தள நாட்டுப் படைவீரர்கள் அலறி அடித்துக் கொண்டு எழுந்து தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர்.

"நாம் நினைத்தது சரிதான். தானிய இருப்பு நான்கு நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் நம்மை அச்சுறுத்தலாம் என்று எண்ணித் தாக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் அதிக வீரர்களோ, படைக்கலன்களோ இல்லை. அதனால் இந்தத் தாக்குதலை அவர்களால் நீண்ட காலம் தொடர முடியாது. விரைவிலேயே அவர்கள் சரணடைந்து விடுவார்கள். தைரியமாகப் போராடி அவர்கள்  தாக்குதலை முறியடிப்போம்!" என்றான் படைத்தலைவன்.

ஆனால் இரண்டு நாட்கள் முடிவில் குந்தள நாட்டுப் படைகளுக்குப் பெருத்த சேதம் ஏற்பட்டது. மந்தார நாட்டு வீரர்கள் தொடர்ந்து கோட்டைக்குள்ளிருந்து தங்கள் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தனர்.

மூன்றாம் நாள் மாலை தங்கள் படையில் கணிசமான வீரர்களை இழந்த நிலையில் குந்தள நாட்டுப்படை முற்றுகையை முடித்துக் கொண்டு தங்கள் நாட்டுக்குத் திரும்பியது.

"குந்தள நாட்டுப் படையின் முற்றுகையை நாம் வெற்றிகரமாக முறியடித்து விட்டோம். நம் படைத்தலைவருக்கும் வீரர்களுக்கும் பாராட்டுக்கள்!" என்றார் மந்தார நாட்டு அமைச்சர்.

"இதற்கு முக்கிய காரணம் நம் அமைச்சரின் தீக்கதரிசன சிந்தனைதான்!" என்றான் மந்தார நாட்டின்  படைத்தலைவன்.

"ஆமாம். கோட்டைக்குள் இருக்கும் வீரர்களில் பெரும்பாலானோரைச் சாதாரணக் குடிமக்கள் போல் கோட்டைக்குள் தங்க வைத்து, அவர்கள் விடுகளுக்குள்ளேயே தானியங்களைய்ம், ஆயுதங்களையும் சேமித்து வைப்பதற்கான சிறிய கிடங்குகளை ஏற்படுத்தி, கோட்டைக்குள் வந்து பார்க்கும் எவருக்கும் கோட்டைக்குள் தானிய சேமிப்புக் கிடங்குகளோ, ஆயதக் கிடங்குகளோ இல்லை, கோட்டைக்குள் அதிக வீரர்களும் இல்லை என்ற தவறான புரிதலை ஏற்படுத்தி, முற்றுகை இடுபவர்களைச் சில நாட்கள் காத்திருக்க வைத்து அதன் பிறகு அவர்களை அதிர்ச்சி அடையும் விதத்தில் தாக்குவது என்ற அமைச்சரின் உத்தியின்படி கோட்டை அமைப்பை உருவாக்கியதால்தானே நம்மால் குந்தள நாட்டின் பெரிய படையின் முற்றுகையை முறியடித்து அவர்களைப் பின்வாங்கச் செய்ய முடிந்தது!" என்றான் அரசன், அமைச்சரைப் பெருமையுடன் பார்த்து.

747. "பாதுகாப்பு வல்லுனர்"

"அரசே! பாதுகாப்பு வல்லுனர் என்று தன்னைக் கூறிக் கொள்ளும் இந்த மனிதரின் ஆலோசனையை நாம் கேட்க வேண்டுமா என்ன?" என்றார் அமைச்சர்.

"இதற்கு முன் இரண்டு நாடுகளுக்குப் பாதுகாப்பு அமைப்பு பற்றி ஆலோசனை கூறி இருப்பதாகவும், அவர் யோசனையைக் கேட்டு அவர்கள் தங்கள் கோட்டைகளை வலுப்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறுகிறார். அவர் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்டுக் கொள்வதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன். அவரை வரச் சொல்லுங்கள். உங்களையும், என்னையும் தவிர, கோட்டைத் தலைவரும், படைத் தலைவரும் கூட இருக்கட்டும்!" என்றான் அரசன்.

"அரசே! ஒரு கோட்டை இரண்டு விதங்களில் பாதுகாப்பு அளிக்க வேண்டும். எதிரி நாட்டுப் படைகளால் தாக்கப்படமுடியாத அளவுக்கு வலுவாக இருக்க வேண்டும். அதனால் தாக்க வரும் படைகள் கோட்டையை முற்றுகை இடுவார்கள். அந்த முற்றுகையை நீண்ட காலம் தாக்குப் பிடிக்கும் அளவுக்குக் கோட்டைக்குள் வசதிகள் இருக்க வேண்டும்.

"இரண்டாவதாக, ஒருவேளை எதிரி நாட்டுப் படைகள் நம் கோட்டைக்குள் நுழைந்து விட்டால், அர்களுடைய தாக்குதலை எதிர்கொள்ளும் வலுவும் நமக்கு இருக்க வேண்டும்!"

"அற்புதமான யோசனைகள் வல்லுனரே! ஆனால் எல்லா நாட்டின் கோட்டைகளுமே இந்த இரண்டு நோக்கங்களையும் கருத்தில் கொண்டுதானே அமைக்கப்பட்டிருக்கும்?" என்றான் அரசன்.

"உண்மைதான் அரசே! ஆயினும் கோட்டைகளைக் கட்டமைக்கும்போது சில பலவீனங்கள் ஏற்பட்டிருக்கக் கூடும். கோட்டையைச் சுற்றிப் பார்க்க என்னை அனுமதித்தால் நான் அந்த பலவீனங்களைக் கண்டறிந்து அவற்றைப் போக்குவதற்கான வழிகளைக் கூறுவேன்" என்றார் வல்லுனர்.

"அப்படியே செய்து விடலாம். கோட்டைத் தலைவரே! வல்லுனருக்குக் கோட்டையைச் சுற்றிக் காட்டுங்கள். அப்போதுதான் அவர் கோட்டையில் உள்ள அமைப்புகளை  நன்கு பார்த்து அவற்றை நம் எதிரி நாட்டு மன்னரிடம் எடுத்துச் சொல்ல முடியும்!" என்றான் அரசன் சிரித்தபடி.

"அரசே!" என்றார் வல்லுனர் திடுக்கிட்டு.

"வல்லுனரே! கோட்டையை முற்றுகையிட்டோ, முற்றுகையிடாமலோ தாக்குவதைத் தவிர மூன்றாவதாக ஒரு வழி இருக்கிறது. அதுதான் வஞ்சனை மூலம் கோட்டையின் ரகசியங்களைத் தெரிந்து கொண்டு பயன்படுத்துவது. அதற்காகத்தான் எங்கள் எதிரி, ஒற்றரான உங்களை ஒரு வல்லுனர் போல் அனுப்பி இருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். எங்கள் மன்னர் உங்களிடம் சற்று விளையாடிப் பார்க்க நினைத்தார். அவ்வளவுதான்!" என்றார் அமைச்சர் சிரித்தபடி.

"துரதிர்ஷ்டவசமாக உங்களால் கோட்டையைப் பார்க்க முடியாது. நீங்கள் பார்க்கப் போவது எங்கள் பாதாளச் சிறையைத்தான். உங்கள் நாட்டுச் சிறை அளவுக்கு அது வசதியாக இருக்குமா என்று தெரியாது" என்ற அரசன் கோட்டைத் தலைவனைப் பார்த்துக் கண்ணசைக்க, கோட்டைத் தலைவன் "வல்லுனரை" சிறைக்கு அழைத்துச் செல்லக் காவலர்களை அழைத்தான்.

குறள் 747:
முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்.

பொருள்: 
முற்றுகையிட்டோ, முற்றுகையிடாமலோ அல்லது வஞ்சனைச் சூழ்ச்சியாலோ பகைவரால் கைப்பற்றப்பட முடியாத வலிமையுடையதே அரண் எனப்படும்.

748. ஏன் இந்த தாமதம்?

அவர்கள் அந்தக் கோட்டையை முற்றுகையிடத் தொடங்கி ஒரு மாதம் ஆகி விட்டது.

"நம்மால் எத்தனை மாதங்கள் வேண்டுமானாலும் முற்றுகையை நீட்டிக்க முடியும். கோட்டைக்குள்ளிருந்து கொண்டு அவர்களால் என்ன செய்ய முடியும்? எத்தனை நாட்கள்தான் உள்ளே பதுங்கி இருக்கிறார்கள் என்று பார்க்கலாம்!" என்றான் படைத்தலைவன்.

மேலும் சில நாட்கள் கடந்தன. எதுவும் நடக்கவில்லை.

"உள்ளே யாராவது இருக்கிறார்களா இல்லையா?" என்றான் படைத்தலைவன் எரிச்சலுடன்.

"நாம் வருவது தெரிந்து முன்பே கோட்டையைக் காலி செய்து விட்டுப் போய் விட்டார்களோ என்னவோ!" என்றான் படையின் துணைத் தலைவன்.

படைத்தலைவன் அவனை முறைத்துப் பார்த்து விட்டு, ஏதோ சொல்ல வாயெடுத்தபோது எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு அம்பு அவர்களுக்கு அருகில் வந்து விழுந்தது.

படைத்தலைவன் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான்.

அடுத்த சில நிமிடங்களில் கோட்டைக்குள்ளிருந்து முழு அளவிலான தாக்குதல் தொடங்கியது.

"முற்றுகை இட்டவர்கள் மூட்டை கட்டிக் கொண்டு ஓடி விட்டனர்!" என்றான் கோட்டைத்தலைவன் சிரித்தபடி.

"நம் தாக்குதலை இரண்டு நாட்கள் கூடத் தாக்குப் பிடிக்காமல் ஓடி  விட்டார்கள்!" என்றான் ஒரு வீரன் உற்சாகத்துடன்.

"கோட்டைத் தலைவரே எனக்கு ஒரு சந்தேகம்!" என்றான் இன்னொரு வீரன்.

"என்ன சந்தேகம்?"

"நாம் ஏன் இத்தனை நாட்கள் காத்திருந்தோம்? அவர்கள் முற்றுகையைத் துவக்கியபோதே தாக்கி இருந்தால் அவர்களை அப்போதே விரட்டி இருக்கலாமே!"

"முற்றுகையைத் தொடங்கியபோது அவர்கள் புத்துணர்ச்சியுடனும், தென்புடனும் இருந்திருப்பார்கள். அந்த நிலையில் அவர்களை நாம் தாக்கி இருந்தால் அவர்களைத் தோற்கடிப்பது கடினமாக இருந்திருக்கும். நாம் இத்தனை நாட்கள் அமைதியாக இருந்ததால் உள்ளிருந்து தாக்குவதற்கான போதிய பலம் நம்மிடம் இல்லை என்று நினைத்து அவர்கள் சற்று அலட்சியமாக இருந்திருப்பார்கள். அத்துடன் இத்தனை நாட்கள் காத்திருந்ததில் அவர்களுக்கு அலுப்பும், சலிப்பும்தான் ஏற்பட்டிருக்கும். ஒன்றுமே செய்யாமல் சற்று நேரம் சும்மா இருந்தாலே நம் உடலில் வலுவில்லாதது போல் தோன்றுமே! இத்தனை நாட்கள் சும்மா இருந்து விட்டு திடீரென்று போரை எதிர்கொள்வது அவர்களுக்குக் கடினமாக இருந்திருக்கும். அதனால்தான் நாம் இத்தனை நாட்கள் காத்திருந்து தாக்கினோம்!" என்று பெருமையுடன் விளக்கினான் கோட்டைத் தலைவன்.

குறள் 748:
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.

பொருள்: 
முற்றுகையிடும் வலிமை மிக்க படையை எதிர்த்து, உள்ளேயிருந்து கொண்டே போர் செய்து வெல்வதற்கு ஏற்ற வகையில் அமைந்ததே அரண் ஆகும்.

749. சிறிய கோட்டைதான்...

"அதோ தெரிகிறதே, அதுதான் கோட்டை!" என்று சுட்டிக் காட்டினான் சங்கு தேசத்தின் படைக்கு வழி காட்டி நடத்தி வந்த கார்வண்ணன்.

"மிகவும் சிறிய கோட்டையாக இருக்கிறதே! இதை வைத்துக் கொண்டா இந்த வல்லப நாடு இவ்வளவு ஆட்டம் போடுகிறது?" என்றான் படைத்தலைவன் இந்திரவர்மன்.

சொல்லி முடிப்பதற்குள், அருகிலிருந்து "ஐயோ!" என்ற குரல் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பிய இந்திரவர்மன். தன் வீரர்களில் ஒருவன் மீது ஈட்டி பாய்ந்திருப்பதைக் கண்டான்.

"எங்கிருந்து வந்தது இந்த ஈட்டி? யார் இதை வீசினார்கள்?" என்றான் இந்திரவர்மன் கோபத்துடன்,

"கோட்டையிலிருந்துதான் ஈட்டி வீசப்பட்டிருக்கிறது!" என்றான் ஒரு வீரன்.

"அவ்வளவு தூரத்திலிருந்து எப்படி வீச முடியும்? வேறு யாரோ அருகிலிருந்து மறைந்திருந்து வீசி இருக்க வேண்டும்!"

"இல்லை படைத்தலைவரே! கோட்டையிலிருந்துதான் வந்திருக்கிறது. எப்படி இவ்வளவு தூரம் வீசினார்கள் என்று தெரியவில்லை!" என்றான் மற்றொரு வீரன்.

"பலவீனமான ஒரு கோட்டையை வைத்துக் கொண்டு நாம் அதை எளிதாகத் தகர்த்து விடுவோம் என்பதால் நம்மைக் கோட்டைக்கு அருகிலேயே வர விடாமல் தடுக்க முயல்கிறார்கள். இதற்கெல்லாம் நாம் அஞ்சப் போவதில்லை. வாருங்கள் முன்னேறிச் செல்வோம்!" என்றான் இந்திரவர்மன்.

படைவீரர்கள் தயக்கத்துடன் நடக்கத் தொடங்கினர். 

சில அடிகள் நடந்ததும் இன்னொரு ஈட்டி பாய்ந்து வந்தது. இந்த முறை அது தரையில் விழுந்ததால் யருக்கும் அடிபடவில்லை.

படைக்கு வழிகாட்டி அழைத்து வந்த கார்வண்ணன், "படைத்தலைவரே! வல்லப நாட்டின் கோட்டை சிறிதாக இருந்தாலும் அதற்குள்ளிருந்து போர் செய்து எதிரிப்படைகளைத் தொலைவில் வரும்போதே தாக்க வகையாக, கோட்டைச் சுவர்களில் அவர்கள் இயந்தரங்களைப் பொருத்தி இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஓரிரு ஈட்டிகளை மட்டும் வீசி அவர்கள் நமக்கு எச்சரிக்கை விடுக்கிறார்கள். நாம் தொடர்ந்து முன்னேறினால் அவர்கள் அதிக எண்ணிக்கையில் ஈட்டிகளை வீசக் கூடும். நாம் கோட்டைக்கு அருகில் செல்வதற்குள் நம் படையில் பாதி அழிந்து விடும். மீதமிருப்பவர்களுக்கும் போரிடுவதற்கான மன உறுதி இருக்காது!" என்றான்.

"அப்படியானால் நாம் திரும்பிச் செல்ல வேண்டும் என்கிறீர்களா?" என்றான் இந்திரவர்மன் கோபத்துடன்.

"வல்லப நாட்டின் கோட்டை சிறியது, அதை எளிதாகத் தாக்கி அழித்து விடலாம் என்று தகவல் சொன்னது நான்தான். ஆனால் கோட்டைக்குள்ளிருந்து கொண்டே எதிரிப் படைகளைத் தொலைதூரத்திலேயே அழிக்கும் அமைப்புகளை அவர்கள் உருவக்கி இருப்பதை நான் அறியவில்லை. ஆனால் நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்!"

"இப்போது நாம் திரும்பச் செல்வோம். வேறு விதத்தில் திட்டமிட்டு மீண்டும் வருவோம்!" என்றான் இந்திரவர்மன், தன் தோல்வியை மறைத்துக் கொண்டு. 

குறள் 749:
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்.

பொருள்: 
போர் முனையில் பகைவர் அழியும்படியாக (உள்ளிருந்தவர் செய்யும்) போர்ச் செயல்வகையால் பெருமை பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும்.

750. படைத்தலைவரின் வருத்தம்

"அமைச்சரே! தங்களிடம் ஒன்று கேட்கலாமா!"

"கேளுங்கள் படைத்தலைவரே!"

"கோட்டையைக் காப்பதற்கென்று நாம் ஒரு படையை உருவாக்கி இருக்கிறோம். அந்தப் படை கோட்டைத் தலைவரின் கட்டுப்பாட்டில் இயங்கும்."

"ஆமாம். முக்கியப்படை உங்கள் தலைமையில் இயங்கும். நாம் வேறு நாட்டின் மீது படையெடுத்தாலோ, அல்லது கோட்டைக்கு வெளியே சென்று போரிட்டாலோ அந்தப் படையைத் தலைமை தாங்கி நடத்திச் செல்லப் போவது  நீங்கள்தான்!"

"அது சரிதான் அமைச்சரே! ஆனால் என் படையிலிருந்து பல வீரர்களை எடுத்து கோட்டையைக் காக்கும் படையில் சேர்த்திருக்கிறீர்களே, அது ஏன்?"

"நான் அவ்வாறு செய்யவில்லை படைத்தலைவரே! மன்னரின் உத்தரவைச் செயல்படுத்தி இருக்கிறேன். அவ்வளவுதான்!"

"தெரியும் அமைச்சரே! ஆனால் மன்னரிடம் நான் இது பற்றிக் கேட்க முடியாது அல்லவா? அதுதான் உங்களிடம் கேட்கிறேன்."

அமைச்சர் தன் அருகிலிருந்த ஒரு நீண்ட ஆயுதத்தை எடுத்துப் படைத்தலைவரிடம் கொடுத்து, "படைத்தலைவரே! இது ஒரு புதுவகை ஆயுதம். கடல்கடந்த சில நாடுகளில் இதைப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்களாம். வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு வணிகர் இதை நம்மிடம் விற்பதற்காகக் கொண்டு வந்திருக்கிறார். இதை உங்களால் பயன்படுத்த முடியுமா என்று பாருங்கள்!" என்றார்.

அந்த ஆயுதத்தைக் கையில் வாங்கிப் பார்த்த படைத்தலைவர், "இது ஒரு தடி போல் இருக்கிறது. ஆனால் வலுவாக இல்லை. ஒரு புறம் மெல்லிய குழாய் போல் இருக்கிறது. மறுபுறம் சற்று அலமாகவும், தடிமனாகவும் இருக்கிறது. எது முன்பக்கம், எது பின்பக்கம் என்று தெரியவில்லை. இதை விட ஒரு சாதாரண தடியே இன்னும் வலிமையான ஆயுதமாக இருக்கும் போலிருக்கிறதே!" என்றார்.

"படைத்தலைவரே! இதன் பெயர் துப்பாக்கி, இதற்குள் குண்டுகளைப் போட்டு இந்த விசையை இழுத்தால் வில்லிலிருந்து அம்பு செல்வது போல் இந்த குண்டு பாய்ந்து சென்று குறியைத் தாக்கி அழித்து விடும். இது இவ்வளவு வலுவான ஆயுதமாக இருந்தாலும், இதை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாவிட்டால், இதனால் எந்தப் பயனும் இல்லை அல்லவா? ஆற்றலும், அனுபவமும் வாய்ந்த உங்கள் கையிலேயே இது ஒரு விளையாட்டுப் பொருள் போல்தானே இருக்கிறது?"

"மன்னிக்க வேண்டும் அமைச்சரே! இந்த ஆயுதத்தை நான் இப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கிறேன். இதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை விரைவிலேயே கற்றுக் கொண்டு..."

"நான் சொல்ல வந்தது அதுவல்ல படைத்தலைவரே! சமீபத்தில் நம் கோட்டையின் அமைப்பை நாம் சிறப்பானதாக மாற்றி இருக்கிறோம். கோட்டைக்குள் இருந்து கொண்டே வெளியே இருக்கும் எதிரிகளைத் தாக்குவதற்கான சில அற்புதமான சாதனங்களை அமைத்திருக்கிறோம். எதிரிகள் உள்ளே வந்தால் கூட, அவர்கள் கண்களில் படாமல் ஒளிந்து கொண்டு தாக்குவதற்கான மறைவிடங்கள், இன்னும் பல வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்தி இருக்கிறோம்."

"அறிவேன் அமைச்சரே! ஆனால் அதற்கும்..."

"அந்த வசதிகளைச் சிறப்பாகப் பயன்படுத்த நமக்குத் திறமையான வீரர்கள் வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், துப்பாக்கி போன்ற சக்தி வாய்ந்த ஆயுதம் இருந்தும் அதைப் பயன்படுத்தும் திறமை இல்லாவிட்டால், அது பயனில்லாமல் போவது போல், கோட்டையில் பல அற்புதமான வசதிகளும், சாதனங்களும் இருந்தும் அவை நமக்குப் பயன்படாமல் போய் விடும். அதனால்தான் அந்த வசதிகளைச் சிறப்பாகப் பயன்படுத்தும் வகையில் உங்கள் படையிலிருந்து சில திறமையான வீரர்களைக் கோட்டையைக் காக்கும் படைக்கு மாற்ற வேண்டும் என்று மன்னர் விரும்பினார்."

அமைச்சர் சொன்னதைப் புரிந்து கொண்டதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டினானர் படைத்தலைவர்.

குறள் 750:
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.

பொருள்: 
கோட்டைக்குத் தேவையான எல்லாவித சிறப்புகளும் இருந்தாலும்கூட உள்ளிருந்து செயல்படுவோர் திறமையற்றவர்களாக இருந்தால் எந்தப் பயனும் கிடையாது.


             அறத்துப்பால்                                               காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...