அதிகாரம் 87 - பகைமாட்சி

திருக்குறள்
பொருட்பால்
படையியல்
அதிகாரம் 87
பகைமாட்சி

861. இப்போது மட்டும் ஏன் இப்படி?

"சூப்பர்வைசரை எதிர்த்துப் பேசறது ஒழுங்கு மீறல். அதனால, சங்கரை ஒரு வாரம் சஸ்பெண்ட் பண்ணிடுங்க!" என்றார் பொது மேலாளர் சிவகுரு.

பர்சனல் மானேஜர் தனஞ்சயன் சற்றுத் தயங்கி விட்டு, "சார்! இது கொஞ்சம் கடுமையான தண்டனையா இருக்கு. இந்தத் தப்புக்காக சஸ்பெண்ட் பண்ணணுமா? வார்னிங் கொடுத்து விட்டுடலாமே!" என்றார்.

"இல்லை, மிஸ்டர் தனஞ்சயன். சங்கர் ஒரு யூனியன் லீடர். அவருக்குக் கொஞ்சம் கடுமையான தண்டனை கொடுத்தாத்தான், மத்த தொழிலாளிகளுக்கு பயம் இருக்கும். சஸ்பென்ஷங்கறது அவ்வளவு பெரிய தண்டனை இல்லை. ஆனா, ஒரு யூனியன் லீடரை நாம சஸ்பெண்ட் பண்ணினா, அது அவருக்குப் பெரிய அவமானம். அதனால, மற்ற தொழிலாளர்களுக்கு பயம் வரும். அவங்க இன்னும் கொஞ்சம் கட்டுப்பாடோட இருப்பாங்க. சங்கரைப் பொருத்தவரை, அவருக்கு இது ஒரு பலவீனமா இருக்கும். அதனால, எதிர்காலத்தில அவர் நம்மோட மோதறதுக்கு பயப்படுவாரு!" என்று விளக்கினார் சிவகுரு.

"சார்! நீங்க தப்பா நினைக்கலேனனா, ஒண்ணு கேக்கலாமா?"

"கேளுங்க!"

"இதுக்கு முன்னால யூனியன் தலைவரா இருந்த தனபால், பல சமயங்கள்ள, இதை விட மோசமா நடந்துக்கிட்டிருக்காரு. சூப்பர்வைசர்களெல்லாம் அவரைப் பார்த்து பயப்படுவாங்க. அவர் பிரச்னை பண்ணினப்பல்லாம், அவரைக் கூப்பிட்டுப் பேசி, சமாதானமாப் போயிருக்கோமே தவிர, ஒரு தடவை கூட அவர் மேல நடவடிக்கை எடுக்கலையே! இப்ப மட்டும் ஏன் கடுமையான நடவடிக்கை எடுக்கணும்னு சொல்றீங்க?" என்றார் தனஞ்சயன்.

"தனபால் முரட்டுத்தனமா செயல்படறவரு. தைரியசாலி. அவர் ஒரு வலுவான தலைவரா இருந்தாரு. அவர் என்ன சொன்னாலும் தொழிலாளர்கள் கேட்பாங்க. அவர் மேல கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தா, அவர் தொழிலாளர்களை வேலைநிறுத்தம் செய்யச் சொல்லி இருப்பாரு .அவங்களும் அவர் சொன்னதைக் கேட்டு வேலைநிறுத்தத்தில ஈடுபட்டிருப்பாங்க. நமக்குப் பெரிய பிரச்னை வந்திருக்கும். புரொடக்‌ஷன் நின்னு போய், கம்பெனிக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும். அதைத் தவிர்க்கத்தான் அவரோட ஒத்துப் போக வேண்டி இருந்தது. இப்ப அவர் ரிடயர் ஆயிட்டாரு. அவர் இடத்துக்கு சங்கர் வந்திருக்காரு. ஆனா, சங்கர் அவ்வளவு வலுவானவர் இல்ல. வேலைநிறுத்தம் மாதிரி செயல்கள்ள இறங்க மாட்டாரு. அவர் ஸ்டிரைக் பண்ணச் சொன்னாலும், எல்லாத் தொழிலாளர்களும் அவர் சொல்றதைக் கேட்டு ஸ்டிரைக் பண்ண மாட்டாங்க. எதிரி பலசாலியா இருக்கறப்ப, நாம அவனோட மோதறதைத் தவிர்க்கத்தான் செய்யணும். எதிரி பலவீனமானவனா இருந்தா, இறங்கி அடிக்கலாம் இல்ல?"

தன் விளக்கத்தைத் தானே ரசிப்பது போல் சிரித்தார் சிவகுரு.

குறள் 861:
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.

பொருள்: 
பகைவர் நம்மிலும் வலியர் என்றால், அவரை எதிர்ப்தைத் தவிர்க்க வேண்டும்; மெலியர், என்றால் உடனே எதிர்த்துச் செயல்பட வேண்டும்.

862. படை உதவி

"அரசே! காளிங்க நாட்டு மன்னர் ஓலை அனுப்பி இருக்கிறார். நந்தி நாடு அவர்கள் மேல் படையெடுத்து வரத் தயாராகிக் கொண்டிருக்கிறதாம். நம் படையை உடனே அனுப்பி உதவ வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறார்."

"காளிங்க நாட்டு மன்னர் என் உற்ற நண்பர். அவர் உதவி கேட்டால், செய்யாமல் இருக்க முடியுமா? நம் படைகளில் ஒரு பகுதியை உடனே அனுப்புங்கள்!"

"அரசே! மன்னிக்க வேண்டும். தற்போதைய சூழலில், காளிங்க நாட்டுக்கு உதவியாக, நம் படைகளை அனுப்புவது உசிதம் அல்ல என்பது என் பணிவான கருத்து!"

"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் அமைச்சரே? நந்தி நாட்டின் படை வலிமை வாய்ந்தது என்று அஞ்சுகிறீர்களா? நம் இரு நாட்டுப் படைகளும் சேர்ந்து போரிட்டால், நந்தி நாட்டுப் படைகளை முறியடிக்க முடியாதா?"

"நந்தி நாட்டின் படை வலிமை வாய்ந்தது என்பதால் மட்டும் நான் அப்படிச் சொல்லவில்லை. காளிங்க நாடு மிகவும் வலுவற்ற நிலையில் இருக்கிறது. அவர்களால் போரில் வெல்ல முடியாது. அவர்களுக்கு உதவியாகப் போனால், நம் படைகளுக்கும் சேதம்தான் ஏற்படும்."

"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? காளிங்க நாட்டின் படை வலிமை வாய்ந்ததுதானே! போரில் அவர்களால் வெல்ல முடியாது என்று எப்படிச் சொல்கிறீர்கள்?"

"காளிங்க நாட்டின் படை வலிமையை நான் குறைத்து மதிப்பிடவில்லை அரசே. அந்த நாட்டின் நிலையை வைத்துச் சொல்கிறேன்!"

"நீங்கள் சொல்வது புரியவில்லை அமைச்சரே!"

"அரசே! தங்கள் நண்பரான காளிங்க நாட்டு ரைப் பற்றி நான் தவறாகக் கூறுவதாக நினைக்கக் கூடாது. உண்மை நிலையைக் கூறுகிறேன். நம் நாட்டு மக்கள் மீது தாங்கள் எவ்வளவு அன்பு செலுத்துகிறீர்கள்! மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தி, அவற்றைத் தீர்க்கும் வகை பற்றிச் சிந்திக்கிறீர்கள். ஆனால், காளிங்க நாட்டு மன்னர் மக்கள் மீது சிறிதும் அக்கறை இல்லாமல் இருக்கிறார். மக்கள் பிரச்னைகளைப் பற்றிக் கவலைப்படாமல், தான் இன்னும் அதிக உல்லாசமாக வாழ்வதற்கான செயல்களை மட்டுமே செய்து கொண்டிருக்கிறார். அதனால், காளிங்க நாட்டு மக்கள் தங்கள் மன்னரின் மீது கோபமும் வெறுப்பும் கொண்டிருக்கிறார்கள். நம் ஒற்றர்கள் அளிக்கும் தகவல் இது!"

"நானும் இது பற்றிக் கேள்வியுற்றேன். ஆனால், இதனால் மட்டும் அவர்கள் போரில் தோற்று விடுவார்கள் என்ன்று சொல்ல முடியுமா?"

"வேறு காரணங்களும் இருக்கின்றன அரசே. காளிங்க நாட்டு மன்னர் தங்ளைப் போல் ஆற்றல் மிகுந்தவர் அல்ல என்பது மற்றொரு காரணம்."

"என்னைப் புகழ வேண்டாம் அமைச்சரே!"

"நான் கூறியது தவறுதான் அரசே! அவர் தங்களுடன் ஒப்பிடத் தக்கவரே அல்லர்! அவர் ஆற்றலில் மிகவும் குறைந்தவர் என்பதுதான் எனக்குக் கிடைத்த தகவல்!"

"இன்னொரு காரணமும் இருக்கிறது அமைச்சரே! தன்னடக்கத்தால் நீங்கள் அதைச் சொல்லவில்லை என்று நினைக்கிறேன்!"

"அரசே! தாங்கள் சொல்ல வருவது..."

"அரசனுக்குச் சரியான ஆலோசனை கூறி, அவனை முறையாக வழி நடத்தக் கூடிய உங்களைப் போன்ற அறிவார்ந்த துணை காளிங்க நாட்டு மன்னருக்கு இல்லை. சரிதானே?"

"அவரிடம் இருந்த நல்ல அமைச்சர்கள் அவரை விட்டு விலகி விட்டார்கள். தவறாக வழிநடத்துபவர்களையே அவர் தன்னுடன் வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது உண்மைதான்!"

"தற்போதைய நிலையில், நம்மால் படைகளை அனுப்பி உதவ முடியாது என்று மென்மையாகத் தெரிவித்துக் காளிங்க நாட்டு மன்னருக்கு ஓலை அனுப்பி விடுங்கள். நந்தி நாட்டின் படையெடுப்பிலிருந்து காளிங்க நாட்டைக் காப்பாற்றும்படி இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன், படை உதவி செய்ய முடியவில்லை. இந்த அடிப்படை உதவியையாவது செய்கிறேன்!"

குறள் 862:
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு.

பொருள்: 
மக்களிடத்தில் அன்பு இல்லாத, வலுவான துணையும் இல்லாத, ஆற்றலும் அற்ற அரசின் மீது ஆற்றல் மிக்க பகை வந்தால், அப்பகையின் வலி‌மையை அந்த அரசால் எப்படி அழிக்க முடியும்?

863. பட்டத்து இளவரசர்!

"அமைச்சரே! மூத்த மகனுக்குத்தான் பட்டம் கட்ட வேண்டும் என்பது மரபு. ஆனால், என் மூத்த மகன் பரகாலனுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், இளைய மகன் அநிருத்தனுக்குப் பட்டம் கட்டலாமா என்று யோசிக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்றார் அரசர். 

"நாடு இருக்கும் நிலையில், நீங்கள் ஒரு சங்கடமான முடிவை எடுக்க வேண்டி இருக்கிறது அரசே! நம் அண்டை நாட்டு மன்னன் மகுடபதி நமக்கு அவ்வப்போது தொந்தரவு  கொடுத்து வருகிறான். எதிரியைச் சமாளிக்க, நாம் வலுவாக இருக்க வேண்டும். பரகாலரின் உடல்நிலை சரியில்லாத நிலையில், அவர் மன்னரானால், எதிரி நம்மை பலவீனமாக நினைப்பான். அநிருத்தருக்கு முடிசூட்ட வேண்டும் என்று நீங்கள் நினைப்பது சரியான முடிவு!" என்றார் அமைச்சர்.

"சரி. அப்படியே செய்து விடுகிறேன். பரகாலன் ஓய்வெடுத்துக் கொண்டு, தன் உடல்நிலையை மேம்படுத்திக் கொள்வதுதான் முக்கியம் என்பதை அவனிடம் சொல்லிப் புரிய வைக்கிறேன்!" என்றார் மன்னர்.

"நம் அரண்மனை வைத்தியர் இளவரசரை குணப்படுத்தி விடுவார். பரகாலர் ஓய்வெடுத்துக் கொண்டு, வைத்தியர் கொடுக்கும் மருந்துகளை அருந்தி வந்தால் போதும். அநிருத்தர் மன்னர் பொறுப்பேற்று  எதிரிகளை முறியடிப்பார்!" என்றார் அமைச்சர்.

"என்ன அமைச்சரே! என்னை இப்படி ஒரு தர்மசங்கடத்தில் மாட்டி விட்டு விட்டீர்களே! பரகாலருக்கு வந்த சாதாரண மயக்கத்தைப் பெரிய நோய் என்றும், அவர் ஓய்வில் இருந்து, பல ஆண்டுகள் மருந்து உட்கொண்டால்தான் அவருக்கு நோய் குணமாகும் என்றும் சொல்ல வைத்து விட்டீர்களே!" என்றார் அரண்மனை வைத்தியர்.

"பரகாலருக்கு நோய் இருப்பது உண்மைதானே!" என்றார் அமைச்சர்.

"என்ன நோய்! அதிகமாக மது அருந்தி, கேளிக்கைகளில் ஈடுபட்டதால், மயங்கி விழுந்து விட்டார்  அவர் உடலில் வேறு எந்த நோயையும் நான் காணவில்லையே!"

"அவருக்குப் பல நோய்கள் இருக்கின்றன. நீங்கள் நாடியைப் பிடித்துப் பார்த்தால், அவை புலப்பட மாட்டா! அவரை அருகில் இருந்து பார்த்ததால், அவை என் புலன்களுக்குத் தென்பட்டன!"

"அப்படி என்ன நோய்கள் அவை?"

"நாட்டை ஆளும் மன்னனுக்கு இருக்கக் கூடாத நோய்கள்! பரகாலர் அச்சம் மிகுந்தவர். எந்த ஒரு விஷயத்திலும் துணிவாக முடிவெடுக்க மாட்டார். சிந்திக்கும் திறனும் குறைவு. நீங்களே சொன்னீர்கள், அவர் அதிகம் மது அருந்தி, கேளிக்கைகளில் ஈடுபட்டதாக. ஒரு அரசனுக்கு இருக்கக் கூடாத பண்புகள் இவை. மற்றவர்களுக்கு ஈயும் பழக்கமும் அவரிடம் இல்லை. இவற்றைத்தான் நான் நோய்கள் என்று சொன்னேன். இந்த நோய்கள் உள்ள ஒருவரை, எதிரியால் எளிதாக வென்று விட முடியும். அப்படிப்பட்டவர் அரசரானால், இந்த நாட்டுக்கு எத்தகைய பேராபத்து விளையும்! அதனால்தான், அவருக்கு வந்திருப்பது பெரிய நோய் என்று சொல்லும்படி உங்களிடம் கேட்டுக் கொண்டேன். இனி, பரகாலர் அரண்மனையில் ஓய்வாக இருந்து கொண்டு, நீங்கள் கொடுக்கப் போகும் தாது புஷ்டி லேகியங்களை அருந்தி வருவார்! அநிருத்தர் மன்னராகி, எதிரிகளை வீழ்த்தி நம் நாட்டை உயர்த்துவார். நீங்கள் நாட்டுக்கு எத்தகைய நன்மை செய்திருக்கிறீர்கள் என்று புரிகிறதா?"

குறள் 863:
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.

பொருள்: 
ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய், பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால், அவன் பகைவர்க்கு மிக எளியவன்.

864. வெல்வது எளிது!

"டேய், ரகுபதி! பரஞ்சோதி இந்தத் தொழில்ல ஒரு சக்கரவர்த்தி மாதிரி கோலோச்சிக்கிட்டிருக்காரு. அவரை எதிர்த்து நம்மால போட்டி போட முடியுமா?" என்றான் கோவிந்தன்.

"ஒத்தரைப் போட்டி போட்டு ஜெயிக்கணும்னா, அவரோட பலவீனம் என்னன்னு தெரிஞ்சுக்கணும். அதுக்குத்தான், அவரைப் பத்தின எல்லா விவரங்களையும் சேகரிச்சேன்."

"ஆமாம். நீ அலைஞ்சு திரிஞ்சு, பலபேர்கிட்ட அவரைப் பத்தி விசாரிச்சே. ஆனா, அவரைப் பத்தி எல்லாரும் நல்ல விதமாத்தானே சொல்றாங்க?"

"ஆமாம். வாடிக்கையாளர்கள்கிட்ட அவருக்கு நல்ல பேர் இருக்கு. பண விஷயங்கள்ள கரெக்டானவர்னு சொல்றாங்க. அவர் நிறுவனத்தில வேலை செய்யறவங்களுக்குக் கூட, அவர் மேல பெரிசா குறை எதுவும் இருக்கற மாதிரி தெரியல!"

"அப்புறம்?"

"அவர் தனக்குப் போட்டியா யாரும் வர விடாம பாத்துக்கிட்டு, இந்தத் தொழில்ல ஒரு தனிக்காட்டு ராஜாவா இருக்காரு. அவரோட வலுவான அடித்தளத்தை அசைச்சுப் பாக்கணும்னு நினைக்கறேன்!"

"நீ நினைச்சாப் போதுமா? நீயே சொல்ற, அவரு தனக்குப் போட்டியா யாரையும் வர விடலேன்னு! அப்படி இருக்கச்சே, நம்மை மட்டும் அவர் விட்டு வைப்பாரா என்ன?"

"நான் எல்லாத்தையும் ஆழமாத் தோண்டிப் பாத்துட்டேன். அவருக்குப் போட்டியா வந்தவங்க எல்லாருமே ஏற்கெனவே வேற தொழில்ல ஈடுபட்டு இருந்தவங்கதான். இது நல்ல லாபகரமான தொழிலா இருக்கே, இதில பரஞ்சோதி ஒத்த ஆளா ஆட்டம் போட்டுக்கிட்டிருக்காரேன்னு நினைச்சு, இதில இறங்கிப் பாத்திருக்காங்க. ஆனா, பரஞ்சோதி அவங்க ஏற்கெனவே செஞ்சுக்கிட்டிருந்த தொழில்ல அவங்களுக்குச் சில பிரச்னைகளை ஏற்படுத்தி, அவங்களைப் பின்வாங்க வச்சுட்டாரு. நாம அப்படி இல்ல. நாம வேற தொழில் செய்யல. இந்தத் தொழில்லதான் முழுமூச்சா இறங்கப் போறோம். அதனால, பரஞ்சோதியால நமக்கு எந்தப் பிரச்னையும் கொடுக்க முடியாது!" என்றான் ரகுபதி, உறுதியாக.

"இந்தத் தொழிலிலேயே நமக்கு அவர் பிரச்னை கொடுக்கலாம் இல்ல?" என்றான் கோவிந்தன்.

"கொடுப்பாரு! அதை நாம சமாளிப்போம். ஆனா, அவருக்கு ரெண்டு முக்கியமான பலவீனங்கள் இருக்கு. இந்த பலவீனங்கள் உள்ள மனுஷங்களை நிச்சயமா வீழ்த்த முடியும்!"

"என்ன பலவீனங்கள்? அதான், அவரைப் பத்தி யாரும் தப்பா எதுவும் சொல்லலையே!"

"யாரும் தப்பா எதுவும் சொல்லலதான். ஆனா, அவருக்கு நெருக்கமானவங்க மூலமா நான் தெரிஞ்சுக்கிட்ட ரெண்டு விஷயங்கள் அவருக்குப் பெரிய பலவீனமா இருக்குங்கறதில எனக்கு சந்தேகம் இல்லை!"

"அது என்ன ரெண்டு விஷயங்கள்?"

"ஒண்ணு, அவர் ஏதோ குடும்ப விஷயமா அவரோட அப்பாவோட சண்டை போட்டுக்கிட்டு, அஞ்சாறு வருஷத்துக்கு மேல அவரோட பேசாம இருக்காரு!"

கோவிந்தன் பெரிதாகச் சிரித்தான். "என்னடா, சீரியசாத்தான் பேசறியா? அது எப்படி பலவீனமா இருக்கும்? அது நமக்கு எப்படி பயன்பட முடியும்?"

"ஒரு மனுஷன் கோபத்தை ரொம்ப நாளா மனசில வச்சுக்கிட்டிருக்கான்னா, அது அவனுக்கு எவ்வளவு பெரிய கெடுதலா இருக்கும் தெரியுமா? பரஞ்சோதியோட அப்பா இவர்கிட்ட பேச முயற்சி செஞ்சிருக்காரு, அவர் குடும்பத்தினரும் அவரை சமாதானப்படுத்த முயற்சி செஞ்சிருக்காங்க. ஆனா, இவரு பிடிவாதமா தன் கோபத்தைக் கைவிடாம இருக்காரு. இப்படிப்பட்ட பலவீனம் உள்ளவரோட கோபத்தைத் தூண்டி விட்டு, அவருக்கு நெருக்கமா இருக்கறவங்களையே அவருக்கு எதிரியா ஆக்கிடலாம்!"

"என்னவோ சொல்ற! சரி. ரெண்டாவது விஷயம்?"

"அவருக்கு ரத்ததில சர்க்கரை கட்டுப்படுத்த முடியாத அளவில இருக்கு!"

"இதுக்கு மொதல்ல சொன்னதே பரவாயில்ல போலருக்கு! ரத்தத்தில சர்க்கரை இருந்தா? அதனால சீக்கிரமே செத்துடுவாரு, அப்புறம் நமக்குப் போட்டி இருக்காதுன்னு சொல்றியா?"

"சேச்சே! அவர் நீண்ட நாள் நல்லா வாழட்டும். அவரோட சக்கரை அளவை அவரால கட்டுப்படுத்த முடியாததுக்குக் காரணம், அவர் உணவுக் கட்டுப்பாடு இல்லாம இருக்கறதுதானாம். மனவிக்குத் தெரியாம, ஓட்டல்களுக்குப் போய் நிறைய ஸ்வீட் சாப்பிடுவாராம்."

"அதனால?"

"புரியலையா? அவரால தன்னோட மனசைக் கட்டுப்படுத்த முடியல. கோபம் ஆறாம மனசில வச்சுக்கறது, தன் மனசைக் கட்டுப்படுத்த முடியாதது - இந்த ரெண்டு பலவீனங்கள் உள்ள ஒத்தரைப் போட்டியில ஜெயிக்கறது கஷ்டம் இல்ல!" என்றான் ரகுபதி.

குறள் 864:
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.

பொருள்:
 ஒ
ருவன் சினம் நீங்காதவனாய், மனத்தை அடக்கியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால், அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவர்க்கும் (வீழ்த்துவதற்கு) எளியவன்.

865. எதிரிகள் யாரும் இல்லை!

"கண்ணுக்கு எட்டியவரை நமக்கு எதிரிகளே இல்லை!" என்றார் முதலமைச்சர் ஜெயகுமார்.

"இப்படிச் சொன்னவங்க கதி எல்லாம் என்ன ஆயிருக்கு தெரியுமா?" என்று முணுமுணுத்தார் அமைச்சர் சின்னசாமி. மூத்த தலைவரான தன்னைப் பின்தள்ளி விட்டு ஜெயகுமார் முதலமைச்சர் ஆகி விட்ட கோபம் அவருக்கு.

அவர் அருகிலிருந்த மற்றொரு அமைச்சர் நல்லக்கண்ணு, "ஜெயகுமார் நல்லாத்தானே ஆட்சி நடத்திக்கிட்டிருக்காரு? மக்கள் ஆதரவு அவருக்கு நிறைய இருக்கு. அந்த நம்பிக்கையிலதான் இப்படிப் பேசறாரு!" என்றார், சின்னசாமியிடம்.

சின்னசாமி பதில் சொல்லவில்லை.

சில மாதங்கள் கழித்து, இருவரும் தனிமையில் இருந்தபோது, "நிறைய இடங்கள்ள, சட்டவிரோதமா சூதாட்டம் நடக்குது. முதல்வர் நடவடிக்கை எடுக்க மாட்டேங்கறாரே!" என்றார் சின்னசாமி.

"எப்படி எடுப்பாரு? அவருக்கு வருமானம் வந்துக்கிட்டிருக்கு இல்ல?" என்றார் நல்லக்கண்ணு, சிரித்தபடி.

"நீங்கதானே அவரு நல்ல ஆட்சி நடத்தறாருன்னு சொன்னீங்க?"

"ஆமாம், சொன்னேன். ஆனா, எதிர்க்கட்சி பலவீனமா இருக்கறதால, தன்னைத் தட்டிக் கேக்க யாரும் இல்லைங்கற தைரியத்தில, இப்ப நிறைய தவறு செய்ய ஆரம்பிச்சுட்டாரு. சட்டவிரோத சூதாட்ட கிளப்கள் மேல நடவடிக்கை எடுக்காம இருக்காரு. மக்களுக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றாம மெத்தனமா இருக்காரு. அவர் மேலேயே ஊழல் புகார்கள் வருது. அதையெல்லாம் பத்தியும் கவலைப்படாம இருக்காரு. எனக்குக் கொஞ்சம் கவலையாத்தான் இருக்கு!" என்றார் நல்லக்கண்ணு.

"எதிர்க்கட்சி பலவீனமா இருக்கறப்ப, நாம ஏன் கவலைப்படணும்னு தெனாவெட்டா இருக்காரு போல இருக்கு!"

சில மாதங்களுக்குப் பிறகு நடந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், ஜெயகுமார் சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, சின்னசாமி புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

"சாதிச்சுட்டீங்களே! ஆம்பத்திலேயே நீங்கதான் முதல்வரா வந்திருக்கணும். ஆனா, ஜெயகுமார் இளைஞர்ங்கறதால அவருக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்க நினைச்சு, எல்லாரும் அவரைத் தேர்ந்தெடுத்தாங்க. எதிர்க்கட்சி பலவீனமா இருக்கறதால, அவரு சமாளிச்சுடுவார்னு எல்லாரும் நினைச்சோம். ஆனா, நீங்க அமைதியா இருந்து, சந்தர்ப்பம் பார்த்து அவரை வீழ்த்திட்டீங்க!" என்றார் நல்லக்கண்ணு.

"என்ன செய்யறது? ஜெயகுமார் நல்லா செய்வார்னு நினைச்சு, அவருக்கு வாய்ப்புக் கொடுத்தாங்க. ஆனா, தன்னோட தவறான செயல்களால, அவரு தன்னை பலவீமானவரா ஆக்கிக்கிட்டாரு. ஒருத்தர் பலவீனமா ஆயிட்டப்பறம், அவரை வீழ்த்தறது சுலபம்தானே! அவ எதிர்க்கட்சி பலவீனமா இருக்குங்கற தைரியத்தில இருந்தாரு. அவரை எப்ப வீழ்த்தலாம்னு காத்துக்கிட்டு அவர் பக்கத்திலேயே நான் இருந்தது அவருக்குத் தெரியல!" என்றார் சின்னசாமி.

"வாழ்த்துக்கள் புதிய முதல்வரே!" என்றார் நல்லக்கண்ணு.

குறள் 865:
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது.

பொருள்: 
ஒருவன் நல்வழியை நோக்காமல், பொருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால், அவன் பகைவர்க்கும் எளியனவான்.

866. தூது சென்ற அமைச்சர்!

"அரசே! காளிங்கர் நம்மை மிகவும் சீண்டிப் பார்க்கிறார். அவருக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும்!" என்றார் அமைச்சர்.

"அவசரப்பட வேண்டாம் அமைச்சரே! எதிரி எப்படிப்பட்டவர் என்று தெரியாமல், அவரோடு அவசரப்பட்டு மோதக் கூடாது. இரு நாட்டின் பிரச்னைகளையும் பேசித் தீர்க்க ஒரு சமாதானத் தூதுவரை அனுப்புவதாகக் காளிங்கருக்கு ஒரு ஓலை அனுப்புங்கள்!" என்றார் அரசர்.

"அரசே! காளிங்கரிடமிருந்து பதில் வந்து விட்டது. நாம் சமாதானத் தூதுவரை அனுப்ப விரும்புவதாகக் கூறிய யோசனையை அவர் ஏற்றுக் கொண்டு விட்டார்!" என்றார் அமைச்சர்.

"நல்லது அமைச்சரே! நீங்களே தூதுவராகச் சென்று வாருங்கள்!" என்றார் அரசர்.

"நானா?" என்றார் அமைச்சர், தயக்கத்துடன்.

"ஏன், தூதுவராகச் செல்வதை கௌரவக் குறைவாக நினைக்கிறீர்களா? பாண்டவர்களுக்காக, அந்தக் கண்ணபிரானே தூதுவராகச் செல்லவில்லையா?"

"அதற்கில்லை!.."

"அமைச்சரே தூதுவராக வந்திருப்பதைக் காளிங்கர் நாம் அவருக்கு அளிக்கும் உயரிய கௌரவமாக நினைப்பார். அதனால் அவர் சற்று இறங்கி வரலாம்" என்றார் அரசர்.

தூது சென்று வந்த திரும்பிய அமைச்சர் அரசரைச் சந்தித்தார்.

"அரசே! தங்கள் கணிப்பு மிகச் சரியாக இருந்தது. அமைச்சரான என்னையே தூதுவராக அனுப்புவீர்கள் என்பதைக் காளிங்கர் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் அவருக்கு அளித்த கௌரவத்தால் அவர் மனம் மகிழ்ந்து, தன் நிலையிலிருந்து இறங்கி வந்திருக்கிறார். அவருடைய கோரிக்கைகள் தொடர்பாகத் தங்களைச் சந்தித்துப் பேச விருப்பம் தெரிவித்திருக்கிறார். அவரது யோசனைப்படி, நீங்கள் இருவரும் சந்தித்துப் பேசினால், ஒரு சுமுகமான முடிவு எட்டப்படும் என்று நினைக்கிறேன்'' என்றார் அமைச்சர்.

"அவசியமில்லை அமைச்சரே! நான் இறங்கி வரத் தயாராயில்லை. இனி காளிங்கன் வாலாட்டினால், அவனுடன் போர் புரியவும் தயாராயிருக்கிறேன்!" என்றார் அரசர்.

"புரியவில்லை அரசே! தாங்கள்தானே நல்லெண்ணத் தூதரை அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்து, என்னை அனுப்பினீர்கள்?" என்றார் அமைச்சர், குழப்பத்துடன்.

"உண்மையில், இது நல்லெண்ணத் தூது இல்லை, வஞ்சகத் தூதுதான்! உங்களை அனுப்பினால், காளிங்கன் நான் அவனுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக நினைத்து, சற்று அலட்சியத்துடன் இருப்பான் என்று நினைத்தேன். அதனால், உங்களுடன் சென்றவர்களில் ஒருவர் ஒற்றராகச் செயல்பட்டுக் காளிங்கனைப் பற்றி அவனைச் சுற்றி இருப்பவர்களிடமிருந்தே பல தகவல்களைப் பெற்று வந்ததை அவன் கவனிக்கவில்லை!'

"என்ன தகவல்கள் அரசே!'"

"காளிங்கன் நன்மை எது, தீமை எது என்று ஆராய்ந்து பார்க்காமல், தன் மனம் போனபடி செயல்படுபவன். தனக்கு வேண்டியவர்கள், நெருக்கமானவர்கள், உதவி செய்பவர்கள் என்பதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், யாரையும் மதிக்காமலும், அனைவரிடமும் அலட்சியமாகவும் நடந்து கொள்பவன். அதிகம் கோபம் கொள்பவன். பெண்ணாசை மிகுந்தவன். இப்படிப்பட்ட ஒருவன் எதிரியாக அமைந்தால், அவனை வீழ்த்துவது சுலபம். அவனுக்கு நாம் அஞ்ச வேண்டியதுமில்லை, அவனிடம் சமாதானமாகப் போக வேண்டியதுமில்லை!" என்றார் அரசர்.

குறள் 866:
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.

பொருள்: 
நன்மை தீமை, வேண்டியவர் வேண்டாதார் என்றெல்லாம் எண்ணாது, கோபம் மிக்க, மேலும் மேலும் பெருகும் பெண்ணாசையை உடைய அரசின் பகைமை, பிறரால் விரும்பப்படும்.

867. ராஜினாமா முடிவு!

"சார்! உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்றான் சந்திரமோகன்.

"சொல்லுங்க சந்திரமோகன்!" என்றார் பிரபாகர்.

"நான் பத்து வருஷமா உங்ககிட்ட வேலை செய்யறேன். நான் வந்தப்பறம், தொழிற்சாலையில நிறைய இம்ப்ரூவ்மென்ட் கொண்டு வந்திருக்கேன்!"

"இதெல்லாம் எனக்குத் தெரியுமே!"

"நான் கொண்டு வந்த சில புராசஸ் இம்ப்ரூவ்மென்ட் எல்லாம் இந்த இண்டஸ்ட்ரியில வேற யாரும் செஞ்சிருக்க மாட்டாங்க!"

"ஆமாம்! நானே அப்படிச் சொல்லி இருக்கேன்! நீங்க செஞ்ச இம்ப்ருவ்மென்ட்டுக்கெலாம் உங்களை ரிவார்ட் பண்ணி இருக்கேன். நான் உங்களுக்குக் கொடுக்கற சம்பளம், உங்களுக்கு வேற எங்கேயும் கிடைக்காது!" என்றார் பிரபாகர், சற்று எரிச்சலுடன்.

'கிடைச்சிருக்கே!' என்று மனதுக்குள் நினைத்துப் புன்னகைத்த சந்திரமோகன், "ஆனா, சில காரணங்களால, நான் வேலையிலேந்து விலகிக்கறேன்!" என்று சொல்லி விட்டு பிரபாகரைப் பார்த்தான்.

பிரபாகர் முகத்தில் சிறிது வியப்புத் தெரிந்தது. "நீங்க இன்னும் அதிக சம்பளம் எதிர்பார்த்தா, என்னால கொடுக்க முடியாது. வேலையை விட்டுப் போறது உங்க விருப்பம்!" என்றார் பிரபாகர்.

பிரபாகர் தன்னைச் சமாதானப்படுத்தி, தான் போகாமல் தடுக்க முயல்வார் என்று எதிர்பார்த்த சந்திரமோகனுக்குச் சற்றே ஏமாற்றமாக இருந்தது.

"சம்பளத்துக்காக நான் போகலேங்கறது உங்களுக்கே தெரியும்!"

"சந்தரமோகன்! நீங்க போகறதுன்னு தீர்மானிச்சுட்டீங்க. அதனால, இதைப் பத்திப் பேசறதில பிரயோசனமில்லை. நீங்க எந்த கம்பெனிக்குப் போறீங்கன்னு கூட நான் கேட்க மாட்டேன். நீங்க எந்த கம்பெனிக்குப் போனாலும், அவங்களுக்கு ஒரு அஸெட்டாத்தான் இருப்பீங்கங்கறதில எனக்கு சந்தேகம் இல்லை. உங்களை மாதிரி திறமையான ஒருத்தர் எங்களுக்குக் கிடைக்கிறது கஷ்டம்தான். ஆனா என்ன செய்யறது? ஆல் தி பெஸ்ட்!" என்றார் பிரபாகர்.

"சந்திரமோகன் போறாரே! நீங்க அவரைப் போக வேண்டாம்னு சொல்லியா?" என்றார் அக்கவுன்டன்ட் கதிரேசன்.

"போக வேண்டாம்னா, கேக்கவா போறாரு?" என்றார் பிரபாகர், சிரித்துக் கொண்டே.

கதிரேசன் சற்றுத் தயக்கத்துடன், "கொஞ்ச நாளாவே, சந்திரமோகனால கம்பெனியில நிறைய பிரச்னைகள் வந்துக்கிட்டிருக்கே!" என்றார்.

"ஆமாம். சந்திரமோகன் எல்லார்கிட்டேயும் திமிரா நடந்துக்கறரு, தன்னை விட சீனியர்களைக் கூட அதிகாரம் பண்றாரு. அவர் தொழிற்சாலையில நிறைய முன்னேற்றங்களை ஏற்படுத்தி இருக்கறதால, எனக்கு அவர் மேல நிறைய மதிப்பு இருக்கு, அதனால, மத்தவங்க அவரோட அதிகாரத்துக்கு பயப்படறாங்க, அவருக்கு எதிரா எங்கிட்ட புகார் கொடுக்கக் கூட பயப்படறாங்க, சமீபத்தில ரெண்டு மூத்த ஊழியர்கள் வேலையை விட்டுப் போனதுக்கு அவர்தான் காரணம் அப்படின்னெல்லாம் நீங்கதானே சொன்னீங்க!" என்றார் பிரபாகர், சிரித்தபடி.

பிரபாகரின் தந்தை காலத்திலிருந்தே அந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர் என்ற உரிமையில், நிறுவனத்தின் பிரச்னைகளைப் பற்றி, பிரபாகரிடம் வெளிப்படையாகப் பேசக் கூடியவர் அக்கவுன்டன்ட் கதிரேசன்.

"அப்படீன்னா...?"

"நீங்க நினைக்கறது சரிதான்! அவர் போக வேண்டிய சூழ்நிலையை நானேதான் ஏற்படுத்தினேன். அவர் மற்ற ஊழியர்கள்கிட்ட நடந்துக்கற விதம் சரியில்லேன்னு அவர்கிட்ட சொல்லிப் புரிய வைக்க முயற்சி செஞ்சேன். ஆனா, அவர் தன்னை மாத்திக்கல. தான் இந்த கம்பெனிக்கு நிறைய கான்ட்ரிபியூட் பண்ணி இருக்கறதால, அவரை நான் எதுவும் செய்ய மாட்டேன்னு நினைச்சாரு. அதனாலதான், சமீப காலமா, அவரோட மதிப்பைக் குறைக்கிற மாதிரி சில நடவடிக்கைகளை எடுத்தேன். அவர் காயப்பட்டதா உணர்ந்து, வேற வேலையைத் தேடிக்கிட்டாரு!"

"அவர் நமக்குக் கிடைச்ச பெரிய அஸெட், அவர் நம்ம தொழிற்சாலை நிறைய இம்ப்ரூவ்மென்ட்லாம் செஞ்சிருக்காரு, அவர் நிரந்தரமா நம்ம கம்பெனியிலேயே இருக்கற மாதிரி பாத்துக்கணும்னெல்லாம் சொல்லுவீங்களே!"

"உண்மைதான். சொல்லப்போனா, அவர் நம்ம போட்டி நிறுவனத்திலதான் சேரப் போறாரு. நமக்கு அது நல்லது இல்லைதான். ஆனா என்ன செய்யறது? நம்ம நிறுவனத்தோட அடித்தளம் மாதிரி இருக்கற ஊழியர்கள்கிட்ட அவர் சரியா நடந்துக்காம, அதனால அவங்கள்ள சில பேர் வேலையை விட்டுப் போற அளவுக்கு வந்துடுச்சு. நான் அவர்கிட்ட சொல்லியும், அவர் மாறல. அதனால, அவரைப் போக வைக்கறதைத் தவிர வேற வழியில்லையே? அதனால நமக்கு சில பிரச்னைகள் வந்தா, அதையெல்லாம் எதிர்கொள்ள வேண்டியதுதான்!" என்றார் பிரபாகர்.

குறள் 867:
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.

பொருள்: 
தன்னை அடுத்துத் தன்னோடிருந்தும், பொருந்தாதவற்றைச் செய்பவனுடைய பகையைப் பொருள் கொடுத்தாவது கொள்ள வேண்டும். 

868. சிறிய தந்தை

"எனக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது. என் ஆயுள் முடிவதற்குள், உன்னை அரசனாக்கிப் பார்க்க வேண்டும்" என்றார் இளந்திரையர்.

"இத்தனை ஆண்டுகளாக, இளவரசரை இந்தக் காட்டுப் பகுதியில் வைத்துப் பாதுகாத்து வருகிறீர்கள். சிறிது சிறிதாக, ஒரு வலுவான படையையும் உருவாக்கி விட்டீர்கள். தலைநகரைத் தாக்கிச் செங்கோடனைச் சிறையெடுத்து, அரசாட்சியைக் கைப்பற்றுவதற்கான நேரம் நெருங்கி வருகிறது. இளவரசரை அரியணையில் அமர வைக்க வேண்டும் என்ற உங்கள் நோக்கம், உங்கள் வாழ்நாளிலேயே நிறைவேறத்தான் போகிறது!" என்றான் படைத்தலைவன் காங்கேயன்.

"சிறிய தந்தையே! அரசராக இருந்த என் தந்தை, எப்படி செங்கோடனால் முறியடிக்கப்பட்டார்? இந்தக் கேள்வியை நான் எத்தனையோ முறை உங்களிடம் கேட்டும், நீங்கள் எனக்கு விடையளிக்கவில்லையே!" என்றான் இளவரசன் பரிதி.

"சொல்கிறேன் பரிதி! நீ சிறுவனாக இருந்தவரை, விவரங்களை உனக்குத் தெரிவிக்க விரும்பவில்லை. இன்னும் ஒரு மாதத்தில், நாம் தலைநகரைத் தாக்கத் திட்டமிட்டிருக்கிறோம். தாக்குதல் துவங்கிய ஓரிரு நாட்களில், செங்கோடனை வெற்றி கொண்டு, அரண்மனையைப் பிடித்து விடுவோம். அதற்குப் பிறகு, நீ மன்னனாக முடிசூட்டிக் கொள்ளப் போகிறாய். அதனால், இந்த விவரங்கள் உனக்குத் தெரியத்தான் வேண்டும்" என்ற பீடிகையுடன் ஆரம்பித்தார் இளந்திரையர்.

"நான் சொல்வதைக் கேட்டு நீ அதிர்ச்சி அடையக் கூடாது. உன் தந்தை அவ்வளவு நல்ல மனிதரல்ல. அவர் மது, மாது என்ற இரு போதைகளிலேயே எப்போதும் இருந்தார். உன் தாய் அவரைத் திருத்த முயற்சி செய்தார். ஆனால் அவை பலனளிக்கவில்லை. 

"உன் தந்தை பெரும்பாலும் மதுபோதையில் இருந்ததால், மற்றவர்களிடம் நியாயமாக நடந்து கொள்ளவில்லை. இதனால் அவருக்கு நண்பர்கள், துணைவர்கள் யாருமே இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. இந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, உன் சிறிய தந்தை செங்கோடன், உன் தந்தையை அரண்மனையிலேயே சிறை வைத்து விட்டு, ஆட்சியைப் பிடித்து விட்டான்.

"உன் தாயையும், உன்னையும், செங்கோடனிடமிருந்து காப்பாற்ற எண்ணி, என் நண்பர்கள் சிலரின் உதவியுடன், உங்கள் இருவரையும் அரண்மனையிலிருந்து வெளியே அழைத்து வந்து, இந்தக் காட்டுப் பகுதியில்  தங்க வைத்தேன். உன் தந்தை சிறைபிடிக்கப்பட்ட துயரில், உன் தாய் விரைவிலேயே இறந்து விட்டார். உன் தந்தையும், ஒரு சில ஆண்டுகளில் சிறையிலேயே இறந்து விட்டார்.

"அரச குடும்பத்துக்கு விசுவாசமாக இருக்கும் இந்தக் காட்டுவாசிகளின் உதவியோடு உன்னை வளர்த்து, உன்னை அரசனாக்க ஒரு படையையும் உருவாக்கி விட்டேன். உன் தந்தையைப் பற்றிய கசப்பான உண்மைகள் உனக்கு அதிர்ச்சியாக இருக்கும் என்பதால்தான், இத்தனை நாட்களாக நான் இவற்றை உன்னிடம் கூறவில்லை!"

ஒரு நிமிடம் மௌனமாக இருந்த பரிதி, "செங்கோடன் என் சிறிய தந்தை என்கிறீர்கள். நீங்களும் என் சிறிய தந்தைதானே! அப்படியானால், செங்கோடன் உங்கள் சகோதரர்தானே?" என்றான்.

"இல்லை பரிதி. நான் உன் சிறிய தந்தை இல்லை. உன் தந்தையின் நண்பன். அவ்வளவுதான். நீ என்னை நெருக்கமானவனாக நினைக்க வேண்டும் என்பதற்காகத்தான், நீ என்னைச் சிறிய தந்தை என்று அழைக்கும்படி பழக்கப்படுத்தினேன்!"

பரிதி மீண்டும் மௌனமாக இருந்தான்.

"உன் தந்தையைப் பற்றி நினைத்து வருந்தாதே, பரிதி! உன் தந்தையைப் பற்றிய விவரங்களை உன்னிடம் சொல்லி இருக்கவே மாட்டேன். ஆனால், அரசனாகப் போகும் நீ, உன் தந்தை செய்த தவறுகளைச் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், அவற்றை உன்னிடம் கூறினேன்!" என்றார் இளந்திரையர்

"சிறிய தந்தையே - நான் உங்களை இப்போதும் என் சிறிய தந்தையாகத்தான் கருதுகிறேன். நீங்கள் என் தந்தை பற்றிக் கூறியவற்றில் ஒரு விஷயம் தவறு என்று நினைக்கிறேன்!"

"எதைத் தவறு என்கிறாய், பரிதி?"

"என் தந்தைக்கு நல்ல குணங்கள் இல்லாததாலும், அவரிடம் இருந்த குற்றங்கள் காரணமாகவும் அவருக்கு நண்பர்களோ, துணைவர்களோ இல்லாமல் போய்விட்டார்கள் என்று கூறினீர்களே?"

"ஆமாம், உண்மைதானே அது?"

"அது எப்படி உண்மையாக இருக்க முடியும்? என் தந்தைக்கு உற்ற துணைவராக நீங்கள் இருந்திருக்கிறீர்களே!" என்றான் பரிதி.

குறள் 868:
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப் புடைத்து..

பொருள்: 
ஒருவன் குணம் இல்லாதவனாய், குற்றம் பல உடையவனானால் இருந்தால், அவன் துணை இல்லாதவன் ஆவான், அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும்.

869. எங்கிட்ட மோதாதே!

"நீ மலையோட மோதற! ஜாக்கிரதை!" என்று பலரும் தாமோதரனை எச்சரித்தார்கள்.

ஆனால் 'மலை' என்று குறிப்பிடப்பட்ட சதாசிவத்திடம் மோதுவது என்று தாமோதரன்  முடிவு செய்து விட்டான்.

தாசிவம் சாலைப்பணிகளைச் செய்யும் ஒரு ஒப்பந்தக்காரர். 

சிறிய ஒப்பந்தக்காரராக இருந்த அவர், முதலில் சில அரசியல் செல்வாக்குகளை உருவாக்கிக் கொண்டும், பிறகு அந்த அரசியல் செல்வாக்குகளைப் பயன்படுத்திப் பிற ஒப்பந்ததாரர்களைத் தன்னுடன் போட்டிக்கு வர முடியாமல் செய்தும், அதற்கும் அடுத்த நிலையில், சில ஒப்பந்ததாரர்களுடன் பேசி, ஒவ்வொரு ஒப்பந்ததாரரும் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பணிகளுக்கு விண்ணப்பிப்பது என்ற ஒரு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டும், தனக்கான பகுதிகளில் போட்டியின்றித் தனிக்காட்டு ராஜாவாகக் கோலோச்சி வந்தார் 

குறிப்பிட்ட சில பகுதிகளில் நடக்கும் எல்லா சாலைப் பணிகளுக்கும், சதாசிவம் மட்டும்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்ற ஒரு எழுதப்படாத விதியை அவர் உருவாக்கி விட்டார்.

ஒரு சில சிறிய ஒப்பந்தப் பணிகளைச் செய்து அனுபவம் பெற்றபின், தாமோதரன் சாலைப் பணிகளுக்கான டெண்டர்களில் பங்கு பெற முடிவு செய்து, "சதாசிவத்தின் பகுதி" யில் ஒரு பணிக்கான டெண்டரில் கலந்து கொள்ள முடிவு செய்தபோதுதான், சிலர் அவனை சதாசிவத்துடன் மோத வேண்டாம் என்று எச்சரித்தனர். ஆனால், அந்த எச்சரிக்கைகளை தாமோதரன் பொருட்படுத்தவில்லை.

"பத்து வருஷமா, சதாசிவம் யாரையும் இந்த ஏரியாவையே நெருங்க விடாம, இது தன்னோட கோட்டைங்கற மாதிரி ஆட்டம் போட்டுக்கிட்டிருந்தாரு. நீ எப்படி தைரியமா அவரோட கோட்டைக்குள்ள நுழைஞ்சு ஜெயிச்சே?" என்றான் தாமோதரனின் நண்பன் குலசேகரன்.

"அடிப்படையில, சதாசிவம் ஒரு கோழை. அதோட, அவர் ஒண்ணும் பெரிய அறிவாளி இல்லை. அப்படி இருந்திருந்தா, இந்தத் துறையில நுழைஞ்சு வெற்றி பெற்றப்பறம், புதுசா சில ப்ராஜக்ட்கள்ள இறங்கி இருப்பார். ஆனா, அவரு இந்த ஒரு வேலையே பிடிச்சுக்கிட்டு, தனக்கு யாரும் போட்டியா வந்துடாம பாத்துக்கிட்டிருக்காரு. அப்படிப்பட்டவரை ஜெயிக்கறது கஷ்டமா இருக்காதுன்னு நினைச்சேன்!" என்றான் தாமோதரன்.

"அவர் கோழைன்னு எப்படிச் சொல்றே?"

"தன்னோட யாரும் போட்டிக்கு வரக் கூடாதுன்னு நினைக்கறதே, பயத்தால வர எண்ணம்தானே? போட்டிக்கு வரவங்களோட, போட்டியில நின்னு ஜெயிக்கறதுதான் தைரியம், வலிமை. அந்த தைரியம் இல்லாததாலதான், போட்டியை ஒழிக்க, அவர் குறுக்கு வழியில முயற்சி செஞ்சிருக்காரு. இவரை மாதிரி நபர்கள் எல்லாம், எதிரி கையை ஓங்கினாலே பயந்துடுவாங்க. அதனாலதான், நான் தைரியமா அவரோட போட்டியில இறங்கினதும், அவரால என்னை எதுவும் செய்ய முடியல. இவர் மாதிரி போட்டியாளர்கள் இருக்கற வரைக்கும், நாம ஜெயிச்சுக்கிட்டே இருக்கலாம்!" என்றான் தாமோதரன்.

குறள் 869:
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.

பொருள்: 
அறிவு இல்லாத, அஞ்சும் இயல்புடைய பகைவரைப் பெற்றவனுக்கு, அவரை எதிர்த்துப் பகை கொள்வதால் கிடைக்கும் இன்பங்கள், விரைவில் நீங்காமல், நிலைத்து இருக்கும்.

870. அரசியல் எதிரி

"தலைவரே! ஒரு விஷயம் சொன்னா, தப்பா நினைச்சுக்கக் கூடாது!" என்று பீடிகை போட்டார் நமச்சிவாயம்.

"நீங்க சொன்னா, நான் தப்பா எடுத்துப்பேனா என்ன?" என்றார் த.ந.க. கட்சியின் தலைவர் புகழ்ச்செல்வன்.

"ப.த.க. நமக்கு எதிர்க்கட்சி. அந்தக் கட்சியோட முக்கியமான தலைவர்கள் எல்லோரையும் நீங்க கடுமையா விமரிசிக்கிறீங்க. ஆனா, ஆடலழகனை மட்டும் அவ்வளவு கடுமையா விமரிசிக்கறதில்ல. உங்களுக்கும் அவருக்கும் ஏதோ டீலிங் இருக்குன்னு நம்ம கட்சித் தொண்டர்களே வெளிப்படையாப் பேசிக்கறாங்க!"

"அப்படியா? நீங்களும் அப்படித்தான் நினைக்கிறீங்களா?"

"சேச்சே! என்ன தலைவரே இது? உங்க அரசியல் பயணத்தில, ஆரம்பத்திலேந்தே உங்களோட இருக்கறவன் நான். எனக்கு உங்களைப் பத்தித் தெரியாதா?" என்று நமச்சிவாயம் கூறினாலும், அவருக்கும் அத்தகைய ஒரு ஐயம் இருக்கிறது என்பதை புகழ்ச்செல்வன் புரிந்து கொண்டார்.

"அப்படின்னா, மத்தவங்க பேசறதைப் பத்திக் கவலைப்படாதீங்க!" என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் புகழ்ச்செல்வன்.

"தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடிதான் வந்திருக்கு. ஆனா, ஆடலழகன் தோற்றுப் போவார்னு யாரும் எதிர்பாக்கல. அவரைத் தோற்கடிக்கணுங்கறதில நீங்க அதிக அக்கறை எடுத்துக்கிட்டு செயல்பட்டதா, ஊடகங்கள்ள பேசறாங்க!" என்ற நமச்சிவாயம், சற்றுத் தயங்கி விட்டு, "எனக்குக் கூட அப்படித்தான் தோணுது!" என்றார்.

"ஆடலழகனோட எனக்கு ரகசிய டீலிங் இருக்கறதா, நீங்கதான் கொஞ்ச நாளைக்கு முன்னேசொன்னீங்க. இப்ப, நான் அவரைத் தோற்கடிக்க அதிக முனைப்பு எடுத்துக்கிட்டேன்னும் நீங்கதான் சொல்றீங்க!" என்றார் புகழ்ச்செல்வன், சிரித்தபடி.

"நான் சொல்லல தலைவரே!"

"நான் உங்களைச் சொல்லல. இப்படிப் பேசற எல்லாரையும்தான் சொல்றேன். தேர்தல்ல, எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களைத் தோற்கடிக்க, எல்லாவிதத்திலும் முயற்சி செய்யறது, எல்லாக் கட்சித் தலைவர்களும் இயல்பா செய்யக் கூடியதுதானே?"

"ஆனா, மற்ற தலைவர்களை விமரிசனம் செய்யற அளவுக்கு நீங்க ஆடலழகனைக் கடுமையா விமரிசனம் செஞ்சதில்லேங்கறது உண்மைதானே?" என்றார் நமச்சிவாயம், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.

"உண்மைதான். ஆடலழகனைப் பத்தி எனக்கு ஒரு விஷயம் தெரியும். அவர் அரசியலுக்கு வரதுக்கு முன்னால, அவர் ஒரு தொழில் செஞ்சுக்கிட்டிருந்தாரு. அப்ப, அவர் தன்னோட நண்பர் ஒத்தருக்கு நிறைய சம்பளம் கொடுத்து, மானேஜரா வச்சுக்கிட்டிருந்தாரு. ஆனா, அவரு தொழிலைக் கத்துக்கிட்டு, வேலையை விட்டுட்டு, ஆடலழகனுக்குப் போட்டியா அதே தொழிலை ஆரம்பிச்சாரு. 

"ஆனா, அவரால தொழில்ல வெற்றி பெற முடியல. தான் முதலீடு பண்ணின எல்லாப் பணத்தையும் இழந்துட்டு, நடுத்தெருவுக்கு வந்துட்டாரு. அப்ப, ஆடலழகன் அவரைக் கூப்பிட்டு, மறுபடி தன் நிறுவனத்திலேயே வேலை கொடுத்தாரு. தன் நண்பன்ங்கறதுக்காக, அவர் தனக்கு துரோகம் நெஞ்சதைக் கூடப் பொருட்படுத்தாம, பழைய நட்பு குறையாம நடந்துக்கிட்டாரு. 

"இது எனக்கு எப்படித் தெரியும்னு கேக்கறீங்களா? ஆடலழகனுக்கு துரோகம் செஞ்ச அவரோட நண்பர், என்னோட தூரத்து உறவினர்தான். இப்படிப்பட்ட பண்பு உள்ள ஆடலழகன் மேல எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு. அதனால, அவரைப் பத்திப் பேசும்போது கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தறதை, என்னை அறியாமலே நான் தவிர்த்திருக்கலாம். ஆனால், அரசியல்ல அவர் என் எதிரிங்கறப்ப, ஒரு எதிரியை தேர்தல்ல தோற்கடிக்க என்னவெல்லாம் செய்யணுமா, அதையெல்லாம்தான் நான் செஞ்சேன!"

"மன்னிச்சுக்கங்க தலைவரே!  நான் கூட உங்களுக்கு அவரோட ஏதோ டீலிங் இருக்குமோன்னு நினைச்சுட்டேன்!" என்றார் நமச்சிவாயம், மன்னிப்புக் கோரும் குரலில்.

"உங்களைச் சொல்லிக் குற்றம் இல்லை. அரசியல்னாலே இப்படடிப்பட்ட டீலிங் எல்லாம் இருக்குங்கற நிலைமைதானே இருக்கு!" என்றார் புகழ்ச்செல்வன்.

குறள் 870:
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி.

பொருள்: 
நீண்ட நாள் நண்பர்கள் பிழையே செய்தாலும், அவருடன் பகை கொள்ளாது, தம் நட்பை விடாதவர், பகைவராலும் விரும்பப்படுவர்.
             அறத்துப்பால்                                               காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...