அதிகாரம் 99 - சான்றாண்மை (சிறந்த பண்பு)

திருக்குறள்
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 99
சான்றாண்மை

981. "தெருவிளக்கு எரியவில்லை"

"சார்! உங்களை ஏ.டி. கூப்பிடறாரு" என்றான் பியூன்.

பஞ்சநதம் துணை இயக்குனரின் அறைக்குச் சென்றார்.

"உக்காருங்க பஞ்சநதம்!" என்றார் துணை இயக்குனர்.

பஞ்சநதம் உட்கார்ந்தார்.

"உங்களுக்கு ஒரு ஃபைல் அனுப்பி இருந்தேனே, பார்த்தீங்களா?"

"அதை கிளியர் பண்ணி உங்களுக்கு அனுப்பிட்டேனே!"

"அப்படியா?" என்று வியப்புடன் கூறிய துணை இயக்குனர், தன் மேசை மீதிருந்த கோப்புகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தார்.

"ஆமாம், வந்திருக்கு!" என்றபடியே குறிப்பிட்ட கோப்பைப் பிரித்துப் பார்த்த துணை இயக்குனர், மகிழ்ச்சியுடன், "உங்களுக்கு இந்த ஃபைலை அனுப்பறதுக்கு முன்னால வேற ரெண்டு அதிகாரிகளுக்கு அனுப்பி இருந்தேன். அவங்க அதை தங்களோட டிபார்ட்மென்ட் ஃபைல் இல்லைன்னு சொல்லித் திருப்பி அனுப்பிட்டாங்க. அப்புறம்தான் உங்களுக்கு அனுப்பினேன்" என்றார்.

பஞ்சநதம் மௌனமாக இருந்தார்.

"இந்த ஃபைல் மூணு டிபார்ட்மென்ட் சம்பந்தப்பட்டது. மூணு டிபார்ட்மென்ட்ல எந்த டிபார்ட்மென்ட்டும் இந்த ஃபைலை ஹேண்டில் பண்ணலாம். ஆனா, இது ஒரு அரசாங்க நிறுவனம்கறதால, மத்த ரெண்டு டிபார்ட்மென்ட் அதிகாரிகளும் இது தங்களோட வேலை இல்லைன்னு சொல்லி ஃபைலைத் திருப்பி அனுப்பிட்டாங்க. மூணாவது டிபார்ட்மென்ட் அதிகாரியான நீங்களும் அப்படிச் சொல்லிடப் போறீங்களோன்னு நினைச்சுதான் உங்களைக் கூப்பிட்டேன். ஆனா நீங்க, அதுக்குள்ள வேலையை முடிச்சு, ஃபைலை எனக்கு அனுப்பிட்டீங்க. வெரிகுட் பஞ்சநதம்" என்றார் துணை இயக்குனர், பாராட்டும் தொனியில்.

"என் டிபார்ட்மென்ட் தொடர்பான விஷயங்களும் இதில இருக்கும்போது, இது என்னோட வேலை இல்லைன்னு நான் எப்படிச் சொல்ல முடியும்?" என்றார் பஞ்சநதம்.

"எல்லா விவரங்களையும் முழுசா ஃபில் அப் பண்ணி இருக்கீங்களே! மற்ற ரெண்டு டிபார்ட்மென்ட் விவரங்களை எப்படி ஃபில் அப் பண்ணினீங்க?" என்றார் துணை இயக்குனர், கோப்பைப் படித்தபடியே..

"அந்த ரெண்டு டிபார்ட்மென்ட்டுக்கும் போய் ,அவங்களோட உக்காந்து, விவரங்களைக் கேட்டு, ஃபில் அப் பண்ணினேன்" என்றார் பஞ்சநதம்.

'உங்களுக்கு ஏன் சார் இந்த வேண்டாத வேலை?' என்று அந்த டிபார்ட்மென்ட்டின் ஊழியர்களும், அதிகாரிகளும் அலுத்துக் கொண்டதைப் பஞ்சநதம் துணை இயக்குனரிடம் சொல்லவில்லை!

"உங்களுக்கு இருக்கற மனப்பான்மை எல்லாருக்கும் இருந்தா, நாம எவ்வளவோ சிறப்பா செயல்படலாம்" என்று பெருமூச்சுடன் கூறிய துணை இயக்குனர், "தாங்க் யூ வெரி மச்!" என்றார் பஞ்சநதத்தைப் பார்த்துச் சிரித்தபடி.

"சார்! போன வாரம் வந்த அந்தப் பெரிசு மறுபடி வந்திருக்கு சார்!" என்றான் பியூன்.

'இந்த ஆளோட பெரிய தொந்தரவாப் போச்சே!' என்று தனக்குள் அலுத்துக் கொண்ட நகராட்சியின் உதவிப் பொறியாளர், "சரி உள்ளே அனுப்பு!" என்றார் பியூனிடம்.

உள்ளே வந்த அந்த முதியவர், "சார்! நீலகண்டன் தெருவில தெருவிளக்கு எரியல" என்றார்.

"போன வாரம் வந்தீங்க இல்ல?"

"ஆமாம்."

"அப்ப, வேற தெரு பேரு சொன்னீங்களே!"

"ஆமாம். அது நான் குடி இருக்கிற இளங்கோ தெரு. அங்கே தெருவிளக்கு எரியலேன்னு சொன்னேன். அதைச் சரி பண்ணீட்டீங்க. நன்றி!"

"நீலகண்டன் தெருவைப் பத்தி நீங்க ஏன் புகார் கொடுக்கறீங்க? உங்க சொந்தக்காரங்க யாராவது அங்கே இருக்காங்களா?"

"அதெல்லாம் இல்லை. நேத்து ராத்திரி அந்தத் தெரு வழியா வந்தபோது கவனிச்சேன்."

"ஆனா, அது நீங்க இருக்கற தெரு இல்லையே! அங்கே தெருவிளக்கு எரியலேன்னு நீங்க ஏன் புகார் கொடுக்கறீங்க?"

"சார்! அந்தத் தெருவில நடந்து வந்தபோது தெருவிளக்கு எரியலேன்னு நான் பார்த்ததால, உங்ககிட்ட வந்து சொல்றேன். தெருவிளக்கு எரிஞ்சா, அந்தத் தெருவில இருக்கறவங்களுக்கு நல்லதுதானே! ஒரு நல்ல விஷயத்துக்காக யார் வேணும்னா முயற்சி செயலாமே சார்!"

அந்த முதியவரை வியப்புடன் பார்த்த உதவிப் பொறியாளர், தனக்கு அருகிலிருந்த ஷெல்ஃபிலிருந்து ஒரு நோட்டை எடுத்து, "சரி. உங்க புகாரை எழுதிக்கறேன். புகார் கொடுத்தவங்க பேரை இதில எழுதணும். உங்க பேர் சொல்லுங்க" என்றார்.

"பஞ்சநதம்" என்றார் முதியவர். 

குறள் 981:
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.

பொருள்: 
நாம் செய்யத் தக்க கடமை இது என்று சான்றாண்மையை மேற்கொண்டு வாழ்பவர்க்கு, நல்லவை எல்லாம் அவர்களுக்கு இயல்பான கடமைகளாக இருக்கும்.

982. தேடி வந்த கௌரவம்!

சிறிய அளவில் ஒரு தொழிற்சாலையை நடத்திக் கொண்டிருந்த முருகேசனைச் சந்திக்க, சிறுதொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நான்கு பேர் அவர் அலுவலகத்துக்கு வந்தது அவருக்கு வியப்பை ஏற்படுத்தியது.

"வாங்க. இது ரொம்ப சின்ன ஆஃபீஸ். இங்கே, நீங்க நாலு பேரும் உக்காந்துக்கறதுக்கு நாற்காலிகள் கூட இல்லை!" என்ற முருகேசன், தொழிலாளி ஒருவரை அழைத்து, தொழிற்சாலையிலிருந்து இரண்டு ஸ்டூல்களை எடுத்து வரச் சொல்லி, அவர் அமர்ந்திருந்த நாற்காலி உட்பட அங்கிருந்த மூன்று நாற்காலிகளிலும், ஒரு ஸ்டூலிலும் வந்தவர்களை அமரச் செய்து, தான் ஒரு ஸ்டூலில் அமர்ந்து கொண்டார்.

"சாரி. இது ரொம்ப சின்ன ஆஃபீஸ். இங்கே பொதுவா விசிட்டர்கள் யாரும் வரது இல்ல" என்றார் முருகேசன், சங்கடத்துடன்.

"பரவாயில்ல சார். எங்களை நீங்க அசோசியேஷன் கூட்டங்கள்ள பார்த்திருப்பீங்க. ஆனா, எங்க பேரெல்லாம் உங்களுக்குத் தெரியுமோ என்னவோ! என் பேரு சங்கரன், இவர் பழனி, அவர் மாயாண்டி, இவர் மருதாசலம்" என்று தங்களை அறிமுகப்படுத்துக் கொண்டார், வந்திருந்தவர்களில் ஒருவர்.

"சொல்லுங்க சார்!"  என்று முருகேசன் சொல்லிக் கொண்டிருந்தபோதே, ஸ்டிரா செருகப்பட்ட இளநீர்க் காய்களுடன் வந்த இரண்டு தொழிலாளிகள்,  ஒவ்வொருவர் கையிலும் ஒரு இளநீரைக் கொடுத்து விட்டுச் சென்றனர்.

"இங்கே காப்பி, கூல் டிரிங்க் எதுவும் கிடைக்காது. பக்கத்தில ஒரு இளநீர்க்கடைதான் இருக்கு!" என்றார் முருகேசன்.

"இந்த வெயிலுக்கு இளநீரை விட எதுவும் பெட்டர் இல்லை சார்!" என்றார் மாயாண்டி.

"அது சரி. நீங்க சொல்லாமலேயே உங்க ஆள் இளநீர் வாங்கிக்கிட்டு வந்துட்டாரே, அது எப்படி?" என்றார் பழனி.

"என்னைப் பார்க்க யாராவது வந்தா, இளநீர் வாங்கிக்கிட்டு வரச் சொல்லி முன்னாடியே சொல்லி இருக்கேன்" என்ற முருகேசன், "இங்கே பக்கத்தில டீக்கடை எதுவும் இல்லாதால, தொழிலாளிகளுக்கு கம்பெனி செலவில தினம் ஒரு இளநீர் வாங்கிக் கொடுக்கறோம். இதனால, சில தொழிலாளிகள் காப்பி, டீ குடிக்கறதையே விட்டுட்டாங்க!" என்றார்.

"அருமையான விஷயம் சார்! எல்லாருமே இதைப் பின்பற்றலாம்" என்ற சங்கரன், தொடர்ந்து, "நாங்க இங்கே வந்தது, வரப் போற நம்ம அசோசியேஷன் தலைவரைத் தேர்ந்தெடுக்கறதைப் பத்திப் பேசத்தான்" என்றார்.

"சொல்லுங்க சார்! நீங்க யாராவது தேர்தல்ல நிக்கறீங்களா? ஆனா, நம்ம  அசோசியேஷன் தலைவரைப் போட்டி இல்லாமதானே தேர்ந்தெடுக்கறது வழக்கம்?"

"ஆமாம். இந்த முறை உங்களைத் தேர்ந்தெடுக்கலாம்னு இருக்கோம். அதுக்கு உங்க சம்மதத்தைக் கேக்கத்தான் வந்திருக்கோம்!"

"என்னையா?" என்றார் முருகேசன் நம்ப முடியாமல். "நான் ஏதோ ஒரு சின்னத் தொழிலை நடத்திக்கிட்டிருக்கேன். அசோசியேஷன் செயல்பாடுகளைப் பத்தி எனக்கு எதுவுமே தெரியாது."

"அதுக்குத்தான் செகரட்டரின்னு ஒத்தரை நியமிச்சிருக்கோமே, அவர் எல்லாத்தையும் பார்த்துப்பாரு. தலைவர்ங்கறது ஒரு கௌரவப் பதவிதான். இந்த முறை, அந்த கௌரவத்தை உங்களுக்குக் கொடுக்கலாம்னு இருக்கோம்" என்றார், இவ்வளவு நேரம் மௌனமாக இருந்த மருதாசலம்.

"ஆனா, என்னை எப்படி சார்...?" என்றார் முருகேசன், என்ன சொல்வதென்று தெரியாமல்.

"சார்! நீங்க சின்ன தொழில் நடத்தறவரா இருக்கலாம். ஆனா, நீங்க எல்லார்கிட்டேயும் பண்பாப் பழகறது உங்க மேல எல்லாருக்குமே ஒரு மதிப்பை ஏற்படுத்தி இருக்கு. அதையும் தவிர, தொழில்ல நீங்க நேர்மையானவர்னு பேர் வாங்கி இருக்காங்க. நீங்க எல்லாத்தையும் முறையாச் செய்யறவரு, யாருக்கும் ஒரு பைசா கூட லஞ்சம் கொடுக்க மாட்டீங்கன்னு அரசு அதிகாரிகளே உங்களைப் பத்தி சொல்றாங்க. இங்கே வந்தப்புறம், உங்களைப் பத்தி நாங்க நினைச்சது சரிதான்னு எங்களுக்கு உறுதியாயிடுச்சு. தொழிலாளிகளுக்கு தினம் கம்பெனி செலவில இளநீர் கொடுக்கற ஒரே தொழிலதிபர் நீங்களாத்தான் இருப்பீங்க. உங்க விருந்தோம்பல் பண்பு எப்படிப்பட்டதுன்னு நாங்க நேரிலேயே பார்த்தோம். உங்க நாற்காலியை எங்களுக்குக் கொடுத்துட்டு, நீங்க ஸ்டூல்ல உக்காந்திருக்கீங்க! உங்களை மாதிரி பண்பாளர், பெரிய தொழிலதிபரா இருக்கணும்னு அவசியமில்லை. சொல்லப் போனா, பெரிய தொழிலதிபரா இருக்கறது, சாதனைகள் செய்யறது எல்லாத்தையும் விட இப்படி ஒரு பண்பாளரா இருக்கறதுதான் உயர்வான விஷயம். தயவு செஞ்சு, எங்களோட கோரிக்கையை ஏத்துக்கிட்டு நம்ம அசோசியேஷனுக்குத் தலைவரா இருக்க ஒத்துக்கங்க!" என்றார் சங்கரன்.

குறள் 982:
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.

பொருள்: 
சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவருடைய பண்புகளின் நலமே, மற்ற நலன்கள், நலன்கள் அல்ல.

983. சோமசேகரின் தோல்வி!

"உலகத்தில நல்லவங்களே கிடையாது" என்றார் சோமசேகர்.

"உன்னையும் சேர்த்துத்தானே சொல்ற?" என்றார் மாணிக்கம்.

"என்னை மட்டும் இல்லை, உன்னையும் சேர்த்துத்தான்!" என்று பதிலளித்தார் சோமசேகர்.

"ரிடயர் ஆன காலத்தில, ஏதோ பேசிப் பொழுதைப் போக்கறதை விட்டு, இப்படியெல்லாம் பேசி, விரோதத்தை உண்டாப்பீங்க போல இருக்கே!" என்றார் குப்புசாமி.

"சரி. ஒரு விளையாட்டு. நாம அஞ்சு பேரு இருக்கோம். ஒவ்வொத்தரும் நம்ம அஞ்சு பேருக்கும் தெரிஞ்சவங்களுக்குள்ள ஒத்தரை நல்லவர்னு தேர்ந்தெடுக்கணும். அவர்கிட்ட ஏதாவது குற்றம் இருந்தா, மத்தவங்க சொல்லலாம். எல்லாருமே ஏத்துக்கக் கூடிய நல்லவர் ஒத்தராவது இருக்காரான்னு பார்க்கலாம். நாளைக்கு சாயந்திரம் நாம சந்திக்கறப்ப, ஒவ்வொத்தரும் ஒரு நல்லவரோட பேரைச் சொல்லணும். சரியா?" என்றார் மாணிக்கம்.

"என்னப்பா இது, ரிடயர் ஆனப்புறம் ஹாய்யா விட்டில இருக்கலாம்னு பார்த்தா, ஹோம் ஒர்க் எல்லாம் கொடுத்துக் கஷ்டப்படுத்தற!" என்றார் செந்தில்வேல்.

றுநாள் ஐந்து பேரும் சந்தித்தபோது, "எல்லாரும் ஒரு நல்லவரைத் தேர்ந்தெடுத்திருக்கீங்க இல்ல? ஒவ்வொத்தரா, தேர்ந்தெடுத்த பேரைச் சொல்லுங்க!" என்றார் மாணிக்கம்.

"நீதானப்பா இந்த ஐடியாவைக் கொடுத்தது? நீயே ஆரம்பி!" என்றார் கேசவன்.

"சரி, சொல்றேன். அருள்!" என்றார் மாணிக்கம்.

"அருள் ஓரளவுக்கு நல்லவர்தான். ஆனா, அவர் பேர்லதான் அருள் இருக்கே தவிர, அவருக்கு மத்தவங்க மேல அன்பே கிடையாது. தன் குடும்பம் மட்டும்தான் முக்கியம் அவருக்கு. சுயநலம் பிடிச்சவர்" என்றார் சோமசேகர்.

"சரி. அடுத்த பேரை நான் சொல்றேன். நாதன்!" என்றார் கேசவன்.

"நாதனா? அவர் வேலை செஞ்ச கம்பெனியில அவர் பண்ணின மோசடி பத்தித் தெரியாதா உனக்கு? அதுக்காக அவரை வேலையை விட்டுத் தூக்கிட்டாங்க. வேலை போனப்புறம், கொஞ்சம் கூட வெக்கம் இல்லாம, மத்தவங்களுக்கு சேவை செய்யற மாதிரி வேஷம் போட்டுக்கிட்டிருக்காரு. பொண்டாட்டி சம்பளத்தில குடும்பம் ஓடுது!" என்ற குப்புசாமி, "நான் சொல்ற பேரை எல்லாரும் ஒத்துப்பீங்கன்னு நினைக்கறேன். முத்து!" என்றார்.

"முத்துவா? அவர் சாலையில வண்டி ஓட்டறப்ப, சிக்னலைக் கூட மதிக்க மாட்டாரு. எந்த ஒரு சட்டத்தையும், ஒழுங்கையும் மதிக்க மாட்டாரு. அவரை எப்படி நல்லவர்னு சொல்ற?" என்றார் மாணிக்கம்.

"மூணு பேர் அவுட்டு. நான் சொல்ற பேரை எல்லாரும் ஒத்துப்பீங்கன்னு நினைக்கறேன். ராஜா!" என்றார் செந்தில்வேல்.

"கொஞ்சம் கூட இரக்கமோ, பரிவோ இல்லாத மனுஷன். பட்டினியாக் கிடக்கறனுக்குக் கூட பத்து பைசா போட மாட்டாரு. 'மத்தவங்களுக்கு இரக்கப்பட்டா, நான் ஓட்டாண்டி ஆக வேண்டியதுதான்'னு எங்கிட்ட ஒரு தடவை சொன்னாரு. அவரை எப்படி நல்லவர்னு ஏத்துக்க முடியும்?" என்றார் கேசவன்.

"சோமசேகர், நீதான் பாக்கி!" என்றார் குப்புசாமி.

"முருகப்பன்!" என்றார் சோமசேகர்.

மற்ற நால்வரும் மௌனமாக இருந்தனர்.

"மத்த நாலு பேரைப் பத்தியும் நீங்க சொன்ன குறைகள் முருகப்பன்கிட்ட இல்லை. அவர் எல்லார்கிட்டேயும் அன்பா இருப்பாரு. தெரியாம ஒரு சின்ன தப்பு பண்ணிட்டாக் கூட, அதுக்காக அவமானமா உணர்வாரு. முறைப்படி நடந்துப்பாரு. விதிகளை மட்டும் இல்லாம, மரபுகளையும் மதிச்சு நடந்துப்பாரு. எல்லார்கிட்டயும் பரிவோடயும் அன்போடயும் நடந்துப்பாரு. இந்த நாலு விஷயங்களைத் தவிர, அஞ்சாவதா ஒரு நல்ல குணமும் அவர்கிட்ட இருக்கு" என்றார் சோமசேகர்.

"என்ன அது?" என்றார் செந்தில்வேல்.

"உண்மை பேசற குணம். எப்பவும், எதுக்காகவும் பொய் சொல்ல மாட்டாரு!"

"நீ ஜெயிச்சுட்ட சோமசேகர். ஒரு சிறந்த மனுஷனை அடையாளம் கண்டுட்ட!" என்றார் குப்புசாமி.

"நான் ஒத்துக்க மாட்டேன்!" என்றார் மாணிக்கம்.

"ஏன் ஒத்துக்க மாட்ட?" என்றார் கேசவன்.

"சோமசேகர் நேத்திக்கு என்ன சொன்னாரு? உலகத்தில நல்லவங்களே யாரும் கிடையாதுன்னாரு. இன்னிக்கு அவரே ஒரு நல்லவரை அடையாளம் காட்டி இருக்காரு. அதனால, அவர் நேத்திக்கு சொன்னது தப்புன்னு ஆயிடுச்சு இல்ல? அப்ப அவர் தோத்துட்டாருன்னுதானே அர்த்தம்?" என்றார்.

ஐவரும் சேர்ந்து சிரித்தனர்.

குறள் 983:
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண்.

பொருள்: 
அன்பு, நாணம், ஒப்புரவு (ஒழுங்கு, கட்டுப்பாடு), கண்ணோட்டம் (இரக்கம், பரிவு), வாய்மை, என்னும் ஐந்து பண்புகளும், சான்றாண்மை என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.

984. நல்ல வேலையை விட்டது ஏன்?

நீண்ட நாள் கழித்துத் தன் நண்பன் சிவராமனைச் சந்தித்த சாரதி, அவனை இரவு உணவுக்கு ஒரு ஓட்டலுக்கு அழைத்தான்.

"வரேன். ஆனா, நான் இப்ப சுத்த சைவம். அதனால ஒரு நல்ல வெஜிடேரியன் ஓட்டலுக்குப் போகலாம்" என்றான் சிவராமன்.

"எப்படிடா? கல்லூரியில படிக்கறப்ப, நீ அசைவ உணவை ரொம்ப விரும்பிச் சாப்பிடறவனா இருந்தியே!"

"இருந்தேன். சில வருஷங்களுக்கு முன்னால, எனக்கு வள்ளலார் மேல ஈடுபாடு ஏற்பட்டது. அவரைப் பத்தி நிறையப் படிச்சேன்,  அவரோட கொள்கைகளைப் பத்திப் பல அறிஞர்கள் பேசினதைக் கேட்டேன். உயிர்களைக் கொல்லக் கூடாதுங்கற அவர் கொள்கையை ஏத்துக்கிட்டு, அசைவத்தை விட்டுட்டேன்!"

"ரொம்ப விரும்பி சாப்பிட்ட உணவை அடியோட விடறதுன்னா, அதுக்கு நிறைய மனத்தென்பு வேணும். உனக்கு அது இருக்கறது பெரிய விஷயம்" என்றான் சாரதி.

"ஆரம்பத்தில கஷ்டமாத்தான் இருந்தது. ஆனா, ஒவ்வொரு நாளும், விரதம் இருக்கற மாதிரி நினைச்சுக்கிட்டு, அசைவம் சாப்பிடாம இருந்தேன். இப்ப, அது இயல்பா ஆயிடுச்சு" என்றான் சிவராமன்.

ஓட்டலில் உணவு அருந்தும்போது, இருவரும் தங்கள் வாழ்க்கை அனுபவங்களைப் பரிமாறிக் கொண்டனர்.

சாரதி ஒரு பெரிய நிறுவனத்தில் பல ஆண்டுகள் வேலை செய்த பிறகு, அந்த வேலையை விட்டு விட்டு, இப்போது ஒரு சிறிய நிறுவனத்தில் வேலை செய்வதாகச் சொன்னான்.

"ஏன் அந்தப் பெரிய கம்பெனியை விட்டுட்டு, ஒரு சின்ன கம்பெனிக்கு வந்தே?" என்றான் சிவராமன்.

அந்தப் பெரிய நிறுவனத்தில் தான் நன்கு முன்னேறி வந்து கொண்டிருந்த நாட்கள் சாரதியின் நினைவில் வந்து போயின. 

சாரதியைத் தனக்குப்  போட்டியாக நினைத்த அவனுடைய சக ஊழியன் ஒருவன் திட்டம் போட்டு சாரதியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதும், அதன் விளைவாக அந்த நிறுவனத்திலிருந்து தான் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதும், அதற்குப் பிறகு பல மாதங்கள் வேறு வேலை கிடைக்காமல் தவித்ததும்,  பிறகு வேறு வழி இல்லாமல், ஒரு சிறிய நிறுவனத்தில் ஒரு சாதாரண வேலையை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதையும் நினைத்தபோது சாரதியின் மனம் கனத்தது.

ஆயினும், தன் சக ஊழியன் ஒருவன் தனக்குச் செய்த தீமையைப் பற்றித் தன் நண்பனிடம் ஏன் பேச வேண்டும் என்று நினைத்த சாரதி ,"எனக்கு அங்கே ஒத்து வரலை" என்றான்.

"பல வருஷமா அங்கேதானே வேலை செஞ்சே, ஏன் திடீர்னு ஒத்து வரலை?"

"மேலதிகாரிகள் மாறும்போது, சில சமயம் அப்படிப்பட்ட நிலைமை உருவாகத்தான் செய்யும்!" என்ற சாரதி, "இந்த ஹோட்டல்ல எல்லாமே ரொம்ப நல்லா இருக்குல்ல?" என்று பேச்சை மாற்றினான். 

குறள் 984:
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.

பொருள்: 
தவம் (நோன்பு) ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது, சால்பு பிறருடைய தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது.

985. பதவி உயர்வு யருக்கு?

வேலாயுதம், சிவபாலன் இருவரும் அந்த நிறுவனத்தில் ஒரே நேரத்தில்தான் வேலைக்குச் சேர்ந்தனர்.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, இருவருமே துணை மேலாளர் பதவிக்கு உயர்ந்து விட்டனர்.

வேலைக்குச் சேர்ந்த புதிதில் இருவருக்கும் இடையே இருந்த நெருக்கம் காலப்போக்கில் குறைந்து கொண்டு வந்து, ஒரு கட்டத்தில் பகைமை உணர்வாக மாறத் தொடங்கி விட்டது. இதற்குக் காரணம், முன்னுக்கு வருவதில் இருவருக்கும் இருந்த போட்டிதான்.

இருவரில், வேலாயுதம் கடுமையான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பவர். அவருக்குக் கீழே பணி புரிந்தவர்கள் ஒருவித பய உணர்வுடனே பணியாற்றி வந்தனர்.

இதற்கு மாறாக, சிவபாலன் அனைவரிடமும் பணிவாக நடந்து கொள்பவர் என்று பெயர் பெற்றவர். தனக்குக் கீழே பணி புரிபவர்களுக்கு அவர் உத்தரவு போடும்போது கூட, அது வேண்டுகோள் விடுப்பது போல்தான் இருக்கும்.

"இவ்வளவு மென்மையா நடந்துக்கறவரு மானேஜரா இருக்கவே லாயக்கு இல்லாதவர். ஆனா எப்படியோ முன்னுக்கு வந்து, டி.ஜி.எம். லெவலுக்கு வந்துட்டாரு!" என்று வேலாயுதம் தனக்கு நெருக்கமானவர்களிடம் அடிக்கடி கூறுவார்.

பொது மேலாளர் அழைத்ததால், அவர் அறைக்குச் சென்றார் வேலாயுதம்.

"மிஸ்டர் வேலாயுதம்! நான் இன்னும் ரெண்டு மாசத்தில ஓய்வு பெறப் போறேன். அதுக்கப்புறம், உங்க ரெண்டு பேர்ல ஒத்தரை என்னோட இடத்துக்குப் பரிந்துரை செய்யணும். யாரைப் பரிந்துரை செய்யணும்னு நீங்க நினைக்கறீங்க?" என்றார் பொது மேலாளர்.

"சார்! இந்த மாதிரி கேட்டா, யாருமே தன்னைத்தான் பரிந்துரை செய்யணும்னுதான் சொல்லுவாங்க! ஆனா நீங்க நடுநிலையில இருந்து யோசிச்சா, பொது மேலாளரா வரதுக்கு எனக்குத்தான் அதிகத் தகுதி இருக்குன்னு கருதுவீங்கன்னு நினைக்கறேன்!" என்றார் வேலாயுதம்.

"நீங்க ரொம்ப ஸ்டிரிக்ட் ஆனவர், உங்ககிட்ட வேலை செய்யறவங்க நீங்க சொல்றதைச் சரியா செஞ்சு முடிச்சுடுவாங்கன்னு உங்களுக்கு ஒரு இமேஜ் இருக்குங்கறது உண்மைதான். ஆனா பர்ஃபாமன்ஸ்னு பார்த்தா, சிவபாலனோட ரிகார்ட்தான் உங்களுடையதை விடச் சிறப்பா இருக்கு!"

"அப்படி இருக்கவே முடியாது சார்!" என்றார் வேலாயுதம், அதிர்ச்சியுடன்.

"சீனியர் மானேஜ்மென்ட்ல இருக்கறவங்களோட பர்ஃபாமன்ஸை மதிப்பிடறப்ப, அவங்களுக்குக் கீழே வேலை செய்யறவங்களோட பர்ஃபாமன்ஸ், புரொடக்டிவிடி, மோடிவேஷனல் லெவல், எந்தூசியாஸம் எல்லாத்தையும் கணக்கில எடுத்துக்கிட்டுத்தான் மதிப்பீடு செய்வோம்ங்கறது உங்களுக்குத் தெரியும். அப்படிப் பாக்கறப்ப, சிவபாலன்கிட்ட வேலை செய்யறவங்களோட புரொடக்டிவிடி, மோடிவேஷனல் லெவல் எல்லாமே அதிகமா இருக்கு. உங்களுக்குக் கீழே வேலை செய்யறவங்க, உங்களுக்கு பயந்து வேலை செய்யறாங்க. ஆனா, அவங்ககிட்ட அதிக உற்சாகமோ, ஈடுபாடோ இல்ல. அதோட, அடுத்த பொது மேலாளரா யார் வரணும்னு ஒரு வாக்கெடுப்பு எடுத்துப் பார்த்தோம். சிவபாலனுக்குத்தான் அதிகம் பேர் ஓட்டுப் போட்டிருக்காங்க. உங்களுக்குக் கீழே வேலை செய்யறவங்கள்ள கூட பல பேர் சிவபாலனுக்குத்தான் ஓட்டுப் போட்டிருக்காங்க!"

வேலாயுதம் அதிர்ச்சியில் என்ன சொல்வதென்று தெரியமல் பேசாமல் இருந்தார்.

"உங்ககிட்ட கேட்ட அதே கேள்வியை சிவபாலன்கிட்ட கேட்டேன். அவர் என்ன சொன்னார் தெரியுமா?"

வேலாயுதம் மௌனமாக இருந்தார்.

"நாங்க ரெண்டு பேரும் எப்பவுமே ஒரே லெவல்ல இருந்திருக்கோம். ரெண்டு ஜி. எம். போஸ்ட் இருந்தா நல்லா இருக்கும். ஆனா, நீங்க எப்படி முடிவு செஞ்சாலும் எனக்கு ஓகேதான்னு சொன்னார்."

"ஸோ நைஸ் ஆஃப் ஹிம்!" என்றார் வேலாயுதம், நெகிழ்ச்சியுடன்.

"நல்ல செய்தி என்னன்னா, அவர் யோசனைப்படி உங்க ரெண்டு பேரையுமே பொது மேலாளரா புரொமோட் பண்ணிடலாம்னு எம்.டி.கிட்ட ரெகமண்ட் பண்ணப் போறேன். அவர் இதுக்கு ஒத்துப்பார்னு நினைக்கறேன்!" என்றார் பொது மேலாளர், சிரித்தபடி.

"ரொம்ப நன்றி சார்!" என்றார் வேலாயுதம், தழுதழுத்த குரலில்.

பொது மேலாளரின் அறையிலிருந்து வெளியே வந்த வேலாயுதம் நேரே சிவபாலனின் அறையை நோக்கிச் சென்றார் - அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு, இத்தனை நாட்களாக எதிரியாக நினைத்த அவரை நண்பராக்கிக் கொள்ள!

குறள் 985:
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.

பொருள்: 
ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும், அது சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும்.

986. அன்பரசனின் சவால்!

"சார்! இந்த வருஷம் அன்பரசனும் டெண்டர்ல கலந்துக்கப் போறானாம்!" என்றார் நிறுவனத்தின் நிர்வாகி பாலசந்திரன்.

நிர்வாக இயக்குனர் கண்ணன் ஒரு முறை புருவத்தை உயர்த்தி விட்டு, "டெண்டர்ல கலந்துக்க எல்லாருக்கும் உரிமை இருக்கே!" என்றார்.

"வழக்கமா இந்த டெண்டர் நமக்குத்தான் கிடைக்கும். இந்த முறை அது நமக்குக் கிடைக்காது, தனக்குத்தான் கிடைக்கப் போகுதுன்னு பல பேர்கிட்ட அவன் சொல்லிக்கிட்டிருக்கான்."

"அவன் யார்கிட்ட என்ன சொன்னா நமக்கு என்ன?"

"இல்லை சார்! எனக்கே ஃபோன் பண்ணிச் சொன்னான்!" என்றார் பாலசந்திரன், தயக்கத்துடன்.

"என்ன சொன்னான்?" 

"தலைகீழா நின்னாலும், இந்த வருஷம் உங்களுக்கு டெண்டர் கிடைக்காது, எனக்குத்தான் கிடைக்கும்னு சொன்னான். நம்ம கம்பெனியில வேலை செஞ்சுட்டு நமக்குப் போட்டியா தொழில் ஆரம்பிச்சதோட இல்லாம, அவன் இப்படி எல்லாம் பேசறதைக் கேக்க, எனக்கே ரொம்பக் கோபம் வருது. உங்களுக்கு எப்படி இருக்குமோன்னு நினைச்சுதான், உங்ககிட்ட இதைச் சொல்றதுக்குக் கூட யோசனை பண்ணினேன்."

"இது சீரியசான விஷயம்தான். இந்த டெண்டர்ல நமக்கு ஒரு தனி அட்வான்டேஜ் இருக்கு. அவன் இங்கே வேலை செஞ்சதால, நாம எப்படிக் கணக்குப் போட்டு டெண்டர் கோட் பண்றோம்கறது அவனுக்கு ஓரளவு தெரிஞ்சிருக்கலாம். ஆனா, இதோட காஸ்டிங் ரொம்ப காம்ப்ளிகேடட். அதெல்லாம் அவனுக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்லை. எந்த தைரியத்தில இப்படி சொல்றான்னு தெரியல. நாம இந்த சவாலை எதிர்கொள்ளத்தான் வேணும்!" என்றார் கண்ணன்.

வ்வொரு வருஷமும் செய்வது போல், டெண்டர்கள் திறக்கப்படும் தினத்தன்று, குறிப்பிட்ட அரசு அலுவலகத்துக்குக் கண்ணனும், பாலசந்தரனும் சென்றிருந்தனர்.

டெண்டர் விண்ணப்பங்கள் திறக்கப்படும் முன்பு, பாலசந்திரன் "சார்! அன்பரசன் வரல. அவனோட  மானேஜரைத்தான் அனுப்பி இருக்கான். தனக்கு டெண்டர் கிடைக்காதுன்னு அவனுக்குத் தெரிஞ்சிருக்கு. சும்மா வாய்ச்சவடால்தான் விட்டிருக்கான்" என்று கண்ணனின் காதில் கிசுகிசுத்தார்.

ஆனால், டெண்டர் அன்பரசனின் நிறுவனத்துக்குத்தான் கிடைத்தது!

காரில் நிறுவனத்துக்குத் திரும்பும்போது, "சார்! இது எப்படி நடந்ததுன்னே தெரியலை. நம்மை விட ஆயிரம் ரூபா குறைவா கோட் பண்ணி டெண்டரை வாங்கிட்டான். நம்ம கம்பெனியிலிருந்து நாம எவ்வளவு கோட் பண்ணப் போறோங்கறதை யாரோ அவனுக்கு லீக் பண்ணி இருப்பாங்கன்னு நினைக்கறேன்" என்றார் பாலசந்திரன்.

"எப்படி இருந்தா என்ன? சவால் விட்டான். ஜெயிச்சுட்டான். தட்ஸ் வாட் கவுண்ட்ஸ்!" என்ற கண்ணன், சட்டென்று ஏதோ தோன்றியவராக, "உங்களுக்கு அன்பரசனோட கம்பெனி எங்கே இருக்குன்னு தெரியுமா?" என்றார்.

"தெரியும் சார். ஏன் கேக்கறீங்க?"

"காரை அங்கே விடச் சொல்லுங்க!" 

"சார்! அவனோட ஆஃபீசுக்குப் போய் அவனோட சண்டை போட்டா நல்லா இருக்காது..." என்று ஆரம்பித்த பாலசந்திரன், கண்ணன் அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் கண்களை மூடிக் கொண்டதைக் கண்டதும், டிரைவரிடம் காரை அன்பரசனின் நிறுவனத்துக்கு விடச் சொன்னார்.

ன் முன்னாள் முதலாளி கண்ணனும், மானேஜர் பாலசந்திரனும் திடீரென்று தன் அறைக்குள் நுழைந்ததைக் கண்டு திகைத்த அன்பரசன், "வாங்க சார்!" என்றான், பலவீனமான குரலில்.

"கங்கிராசுலேஷன்ஸ், அன்பரசன்! சவால் விட்டபடி எங்களை ஜெயிச்சு டெண்டரை வாங்கிட்டியே! கிரேட் ஜாப்!" என்றபடி அன்பரசனின் கையைப் பிடித்துக் குலுக்கி விட்டு, அவனுடைய பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்து வெளியேறினார் கண்ணன்.

குறள் 986:
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.

பொருள்: 
சான்றாண்மையை உரைத்துப் பார்த்து அறியப்படும் உரைகல் எதுவென்றால், தமக்குச் சமநிலையில் இல்லாதவர்களிடம் கூடத் தன் தோல்வியை ஒத்துக் கொள்வதே ஆகும்.

987. ஒற்றுமையைக் குலைத்தவர்

"ராமருக்கு லட்சுமணர் மாதிரி இருந்த உங்க தம்பியை உங்களுக்கு எதிராத் தூண்டி விட்டு, உங்ககிட்டேந்து பிரிச்சவர்தானே அந்த சுந்தரமூர்த்தி?" என்றாள் வசுமதி.

நரேந்திரன் கண்களை மூடிக் கொண்டான். இப்படி ஒரு ஒற்றுமையான அண்ணன் தம்பியா என்று ஊரே வியக்கும் அளவுக்குத் தானும் தன் தம்பி சுரேந்திரனும் தங்கள் சொந்த ஊரில் வாழ்ந்த நாட்கள் அவன் நினைவுக்கு வந்தன.

திருமணத்துக்குப் பிறகு கூட, சகோதரர்கள் இருவரும் ஒரே வீட்டில்தான் வாழ்ந்தார்கள். அவர்கள் தாய் காஞ்சனாவும் அப்போது இருந்தாள்.

"அண்ணன் தம்பி ஒற்றுமையா இருக்கலாம். ஆனா, அவங்களோட மனைவிகளும் ஒற்றுமையா இருக்கறது ஆச்சரியம்தான். அம்மா இருக்கறவரை ஒற்றுமையா இருப்பாங்க. அம்மா போனப்புறமும் ஒற்றுமை நீடிக்குதான்னு பார்க்கலாம்!" என்று ஊரில் சிலர் பேசிக் கொண்டனர்.

ஆனால் காஞ்சனா இறந்த பிறகும், அவர்கள் ஒற்றுமையாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தனர் - சுந்தரமூர்த்தி அந்த ஊருக்கு வரும் வரை!

சுந்தரமூர்த்தி ரெவின்யூ இன்ஸ்பெக்டராக வேலை மாற்றல் பெற்று, அந்த ஊருக்கு வந்தான்.

சுந்தரமூர்த்திக்கும், சுரேந்திரனுக்கும் நெருக்கம் ஏற்பட்டது.

சுந்தரமூர்த்தியுடன் பழக ஆரம்பித்த சில மாதங்களில், சுரேந்திரனின் போக்கில் சில மாறுதல்கள் ஏற்பட்டன.

குடும்பச் சொத்துக்களிலிருந்து வரும் வருமானம் பற்றி நரேந்திரனிடம் கேள்விகள் கேட்டான் சுரேந்தரன்.

"நீ குத்தகைக்காரங்ககிட்ட கடுமையா இருக்கணும், அண்ணே! அவங்க உன்னை நல்லா ஏமாத்தறாங்க!" என்றான் சுரேந்திரன்.

"நம்ம அப்பா இருந்தபோது எப்படிக் கொடுத்தாங்களோ, அதே மாதிரிதான் கொடுத்துக்கிட்டிருக்காங்க" என்றான் நரேந்திரன்.

அதற்குப் பிறகு, நரேந்திரனிடம் வரவு செலவுகள் பற்றிக் கேட்க ஆரம்பித்தான் சுரேந்திரன்.

"நமக்கு வர வருமானத்தையும், செலவுகளையும் வச்சுப் பார்த்தா, நிறைய பணத்தை சேமிச்சிருக்கணுமே!" என்றான் சுரேந்திரன்.

நரேந்திரன் பொறுமையாக வரவு செலவுக் கணக்குகளை விளக்கிக் கூறினான்.

பிறகு ஒரு நாள் எல்லோரும் இருக்கும்போதே, சுரேந்திரன், தன் மனைவி ரம்யாவிடம், "வீட்டு வேலை எல்லாத்தையும் நீயே செய்யாதே! அண்ணியும் கொஞ்சம் செய்யட்டும்!" என்றான்.

"முக்காவாசி வேலையை அவங்கதான் செய்யறாங்க. என்னை அவங்க வேலை செய்யவே விடறதில்ல" என்றாள் ரம்யா.

"என்னங்க, உங்க தம்பி இப்படிச் சொல்றாரு, நான் ஏதோ ரம்யாவை நிறைய வேலை வாங்கற மாதிரி!" என்றாள் வசுமதி நரேந்திரனிடம், அவர்கள் தனிமையில் இருந்தபோது.

"விடு. அதான் ரம்யாவே அவனுக்கு பதில் சொல்லிட்டாளே!" என்றான் நரேந்திரன்.

"ரம்யா கூட எங்கிட்ட வருத்தப்பட்டுப் பேசினா. 'அவருக்கு என்னவோ ஆயிடுச்சு, அக்கா, நீங்க வருத்தப்படாதீங்க' ன்னு சொன்னா. ஆனா எங்கிட்ட இவ்வளவு அன்பா இருந்த உங்க தம்பி இப்படிப் பேசினதை என்னால பொறுத்துக்க முடியல!" என்றாள் வசுமதி.

சுந்தரமூர்த்தியின் தூண்டுதலால்தான் சுரேந்திரன் இப்படி நடந்து கொள்கிறான் என்று நரேந்திரனுக்குப் புரிந்தது. ஆனால், அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.

ஒருநாள், சுரேந்திரன் நரேந்திரனிடம் வந்து, "அண்ணே! நாம சொத்துக்களைப் பிரிச்சுக்கலாம். நாம இனிமே சேர்ந்து இருக்க வேண்டாம். இந்த வீட்டை நான் எடுத்துக்கறேன். நீ வேற வீட்டுக்குப் போயிடு!" என்றான்.

"இது உங்க பரம்பரை வீடு. உங்க அண்ணனுக்கும் இதில உரிமை இருக்கு!" என்றாள் வசுமதி, கோபத்துடன்.

"உங்களுக்கு உரிமை இல்லையில்லையே! நீங்க வெளியிலேந்து வந்தவங்கதானே! நாங்க பேசிக்கறோம். நீங்க ஒதுங்கி இருங்க!" என்றான் சுரேந்திரன்.

"என்னங்க இப்படிப் பேசறீங்க?" என்றாள் ரம்யா.

"நான் அண்ணிக்குச் சொன்னது உனக்கும் பொருந்தும். நீயும் வெளியிலேந்து வந்தவதானே!" என்று மனைவியை அடக்கினான் சுரேந்திரன்.

"சரி. பங்கு பிரிச்சுடலாம்!" என்றான் நரேந்தரன்.

சொத்துக்கள் பிரிக்கப்பட்டு, வீடு சுரேந்திரனுக்கு ஒதுக்கப்பட்டது. நரேந்திரன் வேறொரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு போய் விட்டான்.

"அந்த சுந்தரமூர்த்திதானே உங்க தம்பியை உங்களுக்கு எதிராத் தூண்டி விட்டது? அவருக்கு இதனால என்ன லாபம்?" என்றாள் வசுமதி.

"சில பேரு அப்படித்தான் இருப்பாங்க" என்றான் நரேந்திரன், சுருக்கமாக.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, நரேந்திரன் அந்த ஊரில் இருக்கப் பிடிக்காமல், தன் சொத்துக்களை விற்று விட்டு, வேறு ஊருக்குக் குடி போய், அங்கே ஒரு சிறிய வியாபாரத்தைத் தொடங்கி நடத்தி வந்தான்.

சுரேந்திரன் பற்றியோ, சுந்தரமூர்த்தி பற்றியோ, அதற்குப் பிறகு அவனுக்கு எந்தத் தகவலும் வரவில்லை.

அதற்குப் பிறகு, இரு குடும்பங்களுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, வசுமதி தற்செயலாக சுந்தரமூர்த்தியின் யின் மனைவி  வள்ளியை வழியில் சந்தித்தபோது, அவர்கள் அந்த ஊரில்தான் இருப்பதாகவும், சுந்தரமூர்த்தி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வள்ளி தெரிவித்த விவரத்தைத் தன் கணவனிடம் தெரிவித்தபோதுதான், சுந்தரமூர்த்தி அவர்கள் குடும்பத்துக்குச் செய்த தீமையைக் குறிப்பிட்டுப் பேசினாள் வசுமதி.

"சுந்தரமூர்த்தி எப்படி இருக்காராம்?" என்றான் நரேந்திரன்.

"இன்னும் கொஞ்ச நாள் ஆஸ்பத்திரியில இருக்கணுமாம். 'ரொம்ப கஷ்டமா இருக்கு, ஆஸ்பத்திரிச் செலவுகளைச் சமாளிக்க முடியலே'ன்னு சொல்லி அழுதா வள்ளி."

"ஏன்? சுந்தரமூர்த்திதான் அரசாங்கத்தில வேலை பார்க்கறவராச்சே!"

"அஞ்சாறு வருஷம் முன்னால அவருக்கு வேலை போயிடுச்சாம். அதுக்கப்புறம், ரொம்பக் கஷ்டப்படறதா சொன்னா. எனக்கே அவளைப் பார்க்கப் பாவமாத்தான் இருந்தது!"

"எதனால வேலை போச்சாம்?"

"அதை அவ சொல்லல. நானும் கேக்கல. ஏதாவது லஞ்சம் வாங்கி மாட்டிக்கிட்டிருப்பாரு. காரணமே இல்லாம நம்ம குடும்பத்துக்குக் கெடுதல் செஞ்சவரு, வேலையில நேர்மையாவா இருந்திருப்பாரு?"

"எந்த ஆஸ்பத்திரின்னு சொன்னாங்க இல்ல? நான் அவரைப் போய்ப் பார்த்துட்டு வரேன்" என்று கிளம்பினான் நரேந்திரன்.

"எதுக்குங்க?"

"என்ன இருந்தாலும் தெரிஞ்சவரு இல்லையா?"

ருத்துவமனையிலிருந்து நரேந்திரன் திரும்பியதும், "சுந்தமூர்த்தியைப் பார்த்தீங்களா? எப்படி இருக்காரு?" என்றாள் வசுமதி.

"பார்த்தேன். பலவீனமாத்தான் இருக்காரு."

"உங்களைப் பார்த்ததும் ஏதாவது சொன்னாரா?"

"அடையாளம் தெரிஞ்சுக்கிட்டுத் தலையை ஆட்டினாரு. பலவீனமா இருந்ததால பேச முடியல" என்ற நரேந்திரன், தயங்கி விட்டு, "ஒரு விஷயம் நடந்தது" என்றான்.

"என்ன விஷயம்?"

"நர்ஸ் ஒரு பிரிஸ்கிரிப்ஷனைக் கொடுத்து, அதில எழுதியிருந்த மருந்தையெல்லாம் உடனே வாங்கணும்னாங்க. 'எங்கிட்ட பணம் இல்லையே! என்ன செய்யறது?'ன்னு வள்ளி 'ஓ'ன்னு அழுதாங்க. நான் என் கிரடிட் கார்டுல அந்த மருந்துகளை வாங்கிக் கொடுத்தேன். பத்தாயிரம் ரூபாய் ஆச்சு."

"நமக்குக் கெடுதல் செஞ்சவருக்கு நீங்க ஏன் உதவி செஞ்சீங்க?"

"அவரு நமக்குக் கெடுதல் செஞ்சிருக்கலாம். ஆனா, அவர் கஷ்டப்படும்போது அவருக்கு உதவி செய்யலேன்னா, நாம நம்மை நல்லவங்கன்னு நினைச்சுக்கறதில என்ன அர்த்தம் இருக்கு?" என்றான் நரேந்திரன்.

குறள் 987:
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.

பொருள்: 
தமக்குத் தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்யாவிட்டால் சான்றாண்மையினால் பயன்தான் என்ன?

988. முன்னாள் முதலாளி!

பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அந்த நபரை, முதலில் மணிக்கு அடையாளம் தெரியவில்லை.

சில விநாடிகள் கழித்துத்தான், திடீரென்று ஒரு பொறி தட்டியது.

 'கருணாகரனா இவர்? எப்படி மாறி விட்டார்!'

"சார்!" என்று அவர் அருகில் சென்று அழைத்தான் மணி.

திரும்பிப் பார்த்த கருணாகரன், உடனேயே அவனை அடையாளம் கண்டு கொண்டவராக, "அட, மணி! எப்படி இருக்கே?" என்றார்.

"எப்படி சார் உடனே அடையாளம் கண்டுபிடிச்சீங்க? எனக்கு உங்களை உடனே அடையாளம் கண்டுபிடிக்க முடியலியே!"

"நான் மாறி இருக்கலாம். நீ மாறாம அப்படியேதானே இருக்கே! இப்ப எங்கே வேலை செய்யற?"

"கார்த்திக் இண்டஸ்டிரீஸ்ல சார்!"

"ஓ, ஞாபகம் வருது. நம்ம கம்பெனியிலேந்து அங்கேதானே போனே! வேலை எல்லாம் எப்படி இருக்கு?"

"எல்லாம் நல்லா இருக்கு சார். நீங்க ஏன் சார் பஸ்ஸ்டாப்ல நிக்கறீங்க? கார் ரிப்பேரா?"

"காரே இல்லைப்பா. இருந்தாதானே ரிப்பேர் ஆறதுக்கு?" என்ற கருணாகரன், "என்னோட பஸ் வந்துடுச்சு. நான் வரேன். ஆல் தி பெஸ்ட்" என்று கூறி விட்டு, பஸ்ஸில் ஏறிப் போய் விட்டார்.

வீட்டுக்குச் சென்றதும் மணி, கருணாகரனின் நிறுவனத்தில் தன்னுடன் பணி புரிந்த பாஸ்கரின் தொலைபேசி எண்ணைத் தேடி எடுத்து, அவனுக்கு ஃபோன் செய்தான் 

கருணாகரனின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுத் தொழிலை நடத்த முடியாமல் அவர் அதை மூடி விட்டதாகவும், இப்போது வேறொரு நிறுவனத்தில் வேலைக்குச் செல்வதாகவும் பாஸ்கர் கூறினான்

"தொழிலை மூடினப்புறம், அவர் ஏன் வேலைக்குப் போகணும்? அவருக்கு வேற சொத்தெல்லாம் இருந்தது போல இருக்கே!" என்றான் மணி .

"இருந்தது. அதையெல்லாம் வித்து, கொடுக்க வேண்டிய கடனையெல்லாம் கொடுத்துட்டாரு. வக்கீல் கூட 'அதெல்லாம் அவசியமில்ல. உங்க தனிப்பட்ட சொத்தையெல்லாம் யாரும் அட்டாச் பண்ண முடியாது, கடன் கொடுத்தவங்க கோர்ட்டுக்குப் போனா, கேஸ் பல வருஷங்கள் இழுத்தடிக்கும், அப்புறமும் உங்களுக்கு சாதகமாத்தான் தீர்ப்பு வரும்'னு சொன்னாராம். ஆனா கருணாகரன் சார், 'எனக்கு நஷ்டம் ஏற்பட்டதுங்கறதுக்காக எனக்குக் கடன் கொடுத்தவங்க யாரும் பணத்தை இழக்கக் கூடாது' ன்னு சொல்லித் தன் சொத்துக்களை வித்துக் கடன்களை எல்லாம் செட்டில் பண்ணிட்டாரு. அதோட, அவர் கம்பெனியில வேலை செஞ்ச எங்களுக்கெல்லாம் நஷ்ட ஈடா பெரிய தொகை கொடுத்தாரு. சட்டப்படி என்ன கொடுக்கணுமோ அதுக்கு மேலேயே கொடுத்ததோட, எங்களைத் தொடர்ந்து வேலையில வச்சுக்க முடியலையேன்னு எங்ககிட்ட மன்னிப்புக் கேட்டாரு. நஷ்ட ஈடா அவர் கொடுத்த பணத்தை வச்சுத்தான் சின்னதா ஒரு வியாபாரம் ஆரம்பிச்சு, நான் பொழச்சுக்கிட்டிருக்கேன். அவரை மாதிரி ஒரு உயர்வான மனுஷனைப் பார்க்கவே முடியாது!" என்றான் பாஸ்கர்.

"அப்படிப்பட்ட நல்ல மனுஷன் இப்ப கஷ்டப்படறாரே! நாப்பது பேருக்கு வேலை கொடுத்தவரு, இன்னிக்கு சம்பாத்தியத்துக்காக வேலைக்குப் போறாரு. கார்ல போயிக்கிட்டிருந்தவரு, இப்ப பஸ்ல இல்ல போறாரு!" என்றான் மணி, வருத்தத்துடன்.

"ஆனா, அதெயெல்லாம் அவர் பெரிசா நினைக்கவே இல்லையே! அவர்கிட்ட அப்பப்ப பேசுவேன். வேலைக்குப் போறதையோ, பஸ்ஸில போறதையோ அவர் கௌரவக் குறைச்சலா நினைக்கல, அதுக்காக வருத்தப்படவும் இல்ல. முதலாளியா இருந்தப்ப எப்படி இருந்தாரோ, அதே மாதிரிதான் அமைதியா, சந்தோஷமா இருக்காரு! எனக்கே ரொம்ப ஆச்சரியமா இருக்கு!" என்றான் பாஸ்கர்.

குறள் 988:
இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

பொருள்: 
சான்றாண்மை எனப்படும் மன ஆற்றல் மட்டும் ஒருவனிடம் இருந்து விடுமானால், வறுமை அவனுக்கு இழிவு ஆகாது.

989. பூங்காவுக்கு வராதவர்!

அந்த நண்பர்கள் வழக்கம் போல் மாலை நேரத்தில் பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். 

"இந்தக் காலத்தில நல்லவங்களா இருக்கறது இயலாத காரியம்."

"ஆமாம். புராணங்களிலேயே சொல்லி இருக்கே, ஒவ்வொரு யுகத்திலும் நல்ல விஷயங்கள் குறைஞ்சுக்கிட்டே வரும்னு. இந்தக் கலியுகத்தில நல்லவங்களைத் தேடிப் பிடிக்கறதே கஷ்டம்."

"நல்லவங்களா இருக்கறவங்க கூட, கஷ்டகாலம் வந்தா மாறிடுவாங்க."

"எப்படிச் சொல்ற?"

"எனக்குத் தெரிஞ்ச ஒரு அரசு அதிகாரி இருந்தாரு. ரொம்ப நேர்மையானவரு. அவரோட துறையில காசு கொடுக்காம எந்த வேலையும் நடக்காது. ஆனா, அவர் மட்டும் ஒரு பைசா வாங்க மாட்டாரு. இப்படி இருந்தவரு கடைசி காலத்தில மாறிட்டாரு!"

"லஞ்சம் வாங்க ஆரம்பிச்சுட்டாரா?"

"ஆமாம். அவர் எங்கிட்ட என்ன சொன்னாரு தெரியுமா, 'இத்தனை வருஷமா நேர்மையா இருந்து என்ன பயனைக் கண்டேன்? என்னோட வேலை செஞ்சவங்கள்ளாம் பெரிசா வீடு கட்டிக்கிட்டு, வசதியா வாழறாங்க. பிள்ளைங்களைப் பெரிய படிப்பு படிக்க வச்சு, ஆடம்பரமா கல்யாணம் செஞ்சு கொடுக்கறாங்க. ஆனா, என்னால என் பையனையும், பொண்ணையும் அதிக ஃபீஸ் கட்டி நல்ல காலேஜில படிக்க வைக்க முடியல. அவங்க ரெண்டு பேரும் நான் அவங்களைக் கைவிட்டுட்ட மாதிரி நினைக்கறாங்க. மீதி இருக்கிற காலத்திலேயாவது, கொஞ்சம் சம்பாதிச்சுக் குடும்பத்துக்கு விட்டுட்டுப் போகலாம்னு பாக்கறேன்'னு."

"அரசு அதிகாரிகளுக்கு நல்ல சம்பளம் கொடுக்கறாங்க. அவங்களே இப்படிச் சொன்னா, மத்தவங்க என்ன செய்யறது?"

"இதுக்கு நேர்மாறா ஒத்தர் இருக்காரு!"

"அவர் என்ன செஞ்சாரு?"

"அவரும் நீங்க சொன்ன அரசு அதிகாரி மாதிரிதான். லஞ்சம் வாங்க மாட்டாரு. தன்னோட பிள்ளைகளைத் தன் வசதிக்கு ஏத்த அளவில படிக்க வச்சாரு. சொந்த விடு இல்லை. திடீர்னு அவர் மனைவிக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு. ஒரு தனியார் மருத்துவமனையில சேத்தாரு. அவங்க டெஸ்ட் எல்லாம் பண்ணிட்டு, அவங்களுக்கு இதயம், நுரையீரல்ல எல்லாம் பிரச்னை இருக்குன்னு சொல்லி, அதையெல்லாம் சரி பண்ணப் பல லட்சங்கள் செலவாகும்னு சொன்னாங்க. அவரோட ஆஃபீஸ்ல இருந்தவங்க விஷயத்தைக் கேள்விப்பட்டு, ஆஸ்பத்திரிக்கு வந்தாங்க. அவர்கிட்ட இருக்கற ஒரு ஃபைலை அவர் கிளியர் பண்ணினா, அவர் மனைவியோட மருத்துவச் செலவை எல்லாம் அந்த ஃபைலுக்குத் தொடர்பு உடையவர் பாத்துப்பார்னு அவரோட மேலதிகாரி அவர்கிட்ட சொன்னாரு. ஆனா, அவர் விதிகளை மீறி எதுவும் செய்ய மாட்டேன்னு சொல்லிட்டாரு. அவர் மனைவியை அரசு மருத்துவமனையில சேர்த்திருக்காரு. தினம் ஆஃபீஸ் முடிஞ்சதும், மருத்துவமனைக்குப் போய்  பார்த்துட்டு வராரு."

சற்று நேரம் அங்கே மௌனம் நிலவியது.

"கல்யாணம் சார் இப்பல்லாம் இங்கே வரதில்லையே!"

"விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டுன்னு சொல்லுவாங்க. அது மாதிரி இருக்கு! இத்தனை நேரம் இவர் யாரைப் பத்தி சொல்லிக்கிட்டிருந்தாரு? கல்யாணம்தான் தினம் மனைவியைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குப் போயிடறாரே!"

"சாரி. நான் இங்கே தினம் வரதில்லையே! அதனால, இவர் சொன்னது கல்யாணம் சாரைப் பத்தித்தான் எனக்குத் தெரியல."

குறள் 989:
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.

பொருள்: 
சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப்படுபவர், ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்தாலும், தாம் வேறுபடாமல் இருப்பர்.

990. நல்லவர் என்றும் நல்லவரே(!)

"சில வருஷங்களுக்கு முன்னால, ராமசாமி தன் பெண் கல்யாணத்துக்காக எங்கிட்ட ஐம்பதாயிம் ரூபாய் கடன் வாங்கினாரு. ரெண்டு மூணு வருஷத்தில வட்டியோட திருப்பிக் கொடுத்துட்டாரு. ரொம்ப நேர்மையான மனுஷன்!" என்றான் ராஜவேல்.

"புரோநோட், பத்திரம் ஏதாவது எழுதி வாங்கினியா?" என்றான் அவன் நண்பன் மாதவன்.

"எதுவும் இல்லை. வெறும் வாய் வார்த்தைதான். அவரை மாதிரி மனுஷனுக்கெல்லாம் புரோநோட் எல்லாம் தேவையில்லை. புரோநோட்டை விட அவர் வாய் வார்த்தைக்கு மதிப்பு அதிகம்.

"நல்லவரா இருக்கறவங்க எப்பவுமே அப்படி இருப்பாங்கன்னு எப்படிச் சொல்ல முடியும்?"

"அப்படி இருக்கறவங்களைத்தான் நல்லவர்னு சொல்றோம்!"

"நீயும் நானும் வேலை செஞ்சோமே சரவணா அண்ட் கோ, அதோட முதலாளி சரவணனைப் பத்தி நீ என்ன நினைக்கறே?"

"ரொம்ப கண்ணியமானவரு, நேர்மையானவரு, நாணயமானவரு. நாம அங்கே வேலை செஞ்சப்ப, வாடிக்கையாளர் யாராவது நாம கொடுத்த சரக்கு தரமா இல்லேன்னு சொன்னா, தன்னோட செலவிலேயே அதைத் திருப்பி எடுத்துக்கிட்டு வந்து, அவங்களோட மொத்தப் பணத்தையும் திருப்பிக் கொடுத்திருக்காரே! வேற நல்ல வேலை கிடைச்சுதுன்னு அவர் கம்பெனியை விட்டு வந்தாலும், நாம வருத்தத்தோடதானே அங்கேந்து வெளியில வந்தோம்?"

"அப்படிப்பட்டவர் என்ன செஞ்சிருக்காரு தெரியுமா? வியாபாரத்துக்காக, தெரிஞ்சவங்க சில பேர்கிட்ட லாபத்தில பங்கு தரேன்னு சொல்லிக் கடன் வாங்கிட்டு, இப்ப பங்கு கொடுக்காம ஏமாத்தறாராம்!"

"அது எப்படி முடியும்?"

"ஏன்னா, கடன் பத்திரத்தில, அது அஞ்சு வருஷத்துக்கான வட்டியில்லாக் கடன்னு மட்டும்தான் எழுதி இருந்ததாம். லாபத்தில பங்கு  கொடுக்கறதைப் பத்தி எதுவும் குறிப்பிடலையாம். கேட்டதுக்கு, சட்டப்படி அதையெல்லாம் பத்திரத்தில எழுத முடியாது, ஆனா 15 சதவீதத்துக்குக் குறையாம வருமானம் கிடைக்கும்னு சொல்லி இருக்காரு. அவர் சொன்னதை நம்பி அவருக்குத் தெரிஞ்சவங்க சில பேரு பத்தாயிரம் ரூபாயிலேந்து ஒரு லட்சம் ரூபாய் வரை முதலீடு செஞ்சிருக்காங்க. இப்ப கேட்டா, தொழில்ல லாபம் இல்லை, அதனால எதுவும் கொடுக்க முடியாதுன்னு சொல்றாராம்!"

"உண்மையீலேயே லாபம் வரலையோ என்னவோ!"

"நீ வேற! லாபம் வந்துக்கிட்டுத்தான் இருக்காம். ஆனா, கடன் கொடுத்தவங்களை அவர் நல்லா ஏமாத்திட்டாருன்னு அங்கே வேலை செய்யறவங்க சொல்றாங்க. அவங்களோட நான் தொடர்பில இருக்கேன்னு உனக்குத் தெரியுமே!"

"என்னால நம்பவே முடியலியே! அவ்வளவு நேர்மையா இருந்தவர், எப்படி இப்படி ஒரு காரியத்தைச் செஞ்சாரு?"

"தொழில்ல முதலீடு செய்ய அவருக்குப் பணம் தேவையா இருந்திருக்கு. யாரோ ஒரு ஆலோசகர் சொன்ன யோசனைப்படி, இப்படி செஞ்சுட்டாரு. அதான் அஞ்சு வருஷம் கழிச்சு முதலைத் திருப்பிக் கொடுக்கப் போறோமே, அதனால இது ஒண்ணும் ஏமாத்தறது இல்லைன்னு தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கறாரோ என்னவோ!"

"எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. சரவணன் மாதிரி நல்லவங்கள்ளாம் இப்படி மாறினா, இந்த உலகம் என்ன ஆகுமோன்னு எனக்கு பயமா இருக்கு!" என்றான் ராஜவேல்.

குறள் 990:
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.

பொருள்: 
சான்றோர் தம் சான்றாண்மைப் பண்பிலிருந்து விலகிக் குறைவுபடுவார் என்றால், இப்பூவுலகம் தன் பாரம் தாங்காமல் அழியும்.
             அறத்துப்பால்                                               காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...