அதிகாரம் 86 - இகல் (வெறுப்பு, விரோத மனப்பான்மை)

திருக்குறள்
பொருட்பால்
படையியல்
அதிகாரம் 86
இகல் (வெறுப்பு, விரோத மனப்பான்மை)

1. சிலரை மட்டும்...

அவர்கள் அந்தக் கல்லூரியில் சேர்ந்து ஆறு மாதங்கள் ஆகி விட்டன. புதிய சூழ்நிலை, புதிய மனிதர்கள் என்ற நிலை சிறிது சிறிதாக மாறி, எல்லாம் பெருமளவுக்கு இயல்பாக மாறி விட்டன.

"கல்லூரியில சேர்ந்தப்பறம் வாழ்க்கையே மாறிட்ட மாதிரி இருக்கு, இல்ல?" என்றான் மாதவன்.

"ஆமாம். பள்ளிக்கூட சூழ்நிலை வேற, கல்லூரிச் சூழ்நிலை வேற. இத்தனை நாளா பெற்றவர்களோட அரவணைப்பில கவலையோ, பொறுப்போ இல்லாம இருந்தோம். இப்ப நாம பெரியவங்களா நம் வாழ்க்கையை நாமே தீர்மானிச்சு, செயல்பட்டு வாழற நிலைக்குப் பக்கத்தில வந்துக்கிட்டிருக்கோம்!" என்றான் கௌதம்.

"டேய்! பேருக்கேத்த மாதிரி புத்தர் மாதிரி பேச ஆரம்பிச்சுடாதே! நான் சொன்னது நமக்குப் புது நண்பர்கள் கிடைச்சு, நாம ரொம்ப உற்சாகமா ஒரு புது வாழ்க்கை வாழறதைப் பத்தி!"

"அது சரிதான். நம்ம வகுப்பில உனக்கு எத்தனை நண்பர்கள் இருக்காங்க?"

"பத்து பேர் இருப்பாங்க" என்றான் மாதவன்.

"நம்ம வகுப்பில மொத்தம் அறுபது பேர் இருக்கோம். பத்து பேர் நண்பர்கள்னா, மீதி அம்பது பேர்?"

"எதிரிகளான்னு கேக்கறியா?"

"இல்ல. பத்துப்பேர் நண்பர்கள்னா, மீதி அம்பது பேரோட உன்னோட ரிலேஷன்ஷிப் எப்படின்னு கேக்கறேன்."

"அஞ்சாறு பேரைத் தவிர மத்தவங்களோட  இணக்கமாத்தான் இருக்கேன். ஆனா, நெருக்கமா இருக்கறது பத்து பேரோடதான். ஏன் கேக்கற?"

"அஞ்சாறு பேரைத் தவிரன்னு சொன்னியே, ஏன் அப்படி?" என்றான் கௌதம்

"ஏன்னா, அவங்களை எனக்குப் பிடிக்கல. அவங்களைப் பாத்தாலே எனக்குப் பிடிக்கல. ஒப்புக்கு ஹலோன்னு சொன்னாக் கூட, மனசுக்குள்ள அவங்க மேல ஒரு வெறுப்பு இருக்கு. வகுப்பு விஷயமா ஏதோ கேக்கணும், அப்ப பக்கத்தில வேற யாருமே இல்ல, அவங்கள்ள ஒத்தர்கிட்டதான் கேக்கணும்னா கூட, இவங்ககிட்டயா கேக்கணும்னு நினைச்சு கேக்காமயே கூட இருந்துடுவேன்!" என்றான் மாதவன்.

"ஏன் அப்படி? அவங்க உனக்கு ஏதாவது கெடுதல் செஞ்சாங்களா?"

"சேச்சே! அப்படியெல்லாம் எதுவும் இல்ல. என்னவோ தெரியல. அவங்களைப் பாத்தா எனக்குப் பிடிக்கல. அவங்களை அவாயிட் பண்ணணும்னு தோணுது. அது இருக்கட்டும், என்னைக் குடைஞ்சு குடைஞ்சு கேகறியே, உனக்கு இது மாதிரி தோணலியா?" என்றான் மாதவன், நண்பனை மடக்குவது போல்.

"நிச்சயமா தோணுது. கிட்டத்தட்ட உன்னை மாதிரிதான். சில பேரோட பழக எனக்குப் பிடிக்கல. அவங்க உனக்குப் பிடிக்காத நபர்கள் பட்டியல்ல இல்லாதவங்களாகவும் இருக்கலாம். ஏன் இப்படின்னு யோசிச்சதாலதான், எனக்கு மட்டும்தான் இப்படி இருக்கா, இல்லை எலாருக்குமே இப்படித்தானான்னு தெரிஞ்சுக்கதான் உன்னைக் கேட்டேன்!" என்றான் மாதவன்.

"இவ்வளவுதானா? எந்த மனுஷனை எடுத்துக்கிட்டாலும், அவனுக்கு சில பேரைப் பிடிக்காமதான் இருக்கும். அதுக்குக் காரணமே இருக்காது. ஆனா, அவங்களோட இணக்கமா அவனால இருக்க முடியாது. பல பேர் சேர்ந்து வேலை செய்யற அலுவலகங்கள்ள, ஊழியர்களுக்குள்ள பிரச்னை வரதுக்கு இந்த மனப்பான்மை கூட ஒரு காரணமா இருக்கும்னு நினைக்கறேன்!" என்றான் மாதவன்.

"என்னை புத்தர் மாதிரி பேசறேன்னு சொல்லிட்டு நீதான் தத்துவஞானி மாதிரி பேசற!" என்ற கௌதமன், "ஆனா, என்னால எல்லாரோடயும் இணக்கமாப் பழக முடிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்னு நினைச்சுப் பாக்கறேன். அதுக்கு முயற்சி செய்யப் போறேன்!" என்றான் தொடர்ந்து.

குறள் 851:
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்.

பொருள்: 
இகல் என்பது மற்ற உயிர்களுடன் பொருந்தி வாழ்தல் என்ற பண்பு இல்லாமை ஆகும். 

852. சாரதியின் பிரச்னை

ராகவன் அந்த வீட்டின் ஒரு போர்ஷனுக்குக் குடிபோனபோது, பக்கத்து போர்ஷனில் சாரதி என்றவரின் குடும்பம் இருந்து வருவதாக வீட்டுச் சொந்தக்காரரிடமிருந்து அறிந்து கொண்டான்.

சாரதி தன் போர்ஷனிலிருந்து வெளியே வந்தபோது, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு கையை நீட்டினான் ராகவன். ஆனால், அவர் அவனுடன் கைகுலுக்காமல்  தலையை ஆட்டி விட்டுப் போய் விட்டார்.

சில நாட்கள் அனுபவத்தில், சாரதி தன்னிடம் நட்பாக இருக்க விரும்பவில்லை என்பதை ராகவன் புரிந்து கொண்டான். அத்துடன், தன் மனைவி, குழந்தைகளையும் ராகவன் குடும்பத்தினரிடம் பழக வேண்டாம்  என்று அவர் சொல்லி வைத்திருப்பது போல் தோன்றியது. ஏனெனில், ராகவனின் மனைவியும் மகளும் சாரதியின் குடும்பத்தினருடன் பழக முயன்றபோது, அவர்கள் ஒதுங்கியே இருந்தனர்.

இன்னும் சில நாட்களுக்குப் பிறகு, ராகவன் குடும்பத்தினர் தனக்குத் தொல்லை கொடுப்பதற்காகவே தன் போர்ஷனுக்கு பக்கத்து போர்ஷனுக்குக் குடி வந்து விட்டது போல் நடந்து கொண்டார் சாரதி. பல பிரச்னைகளைக் கிளப்பி,  சண்டை போடத் தொடங்கினார்.

ஒருமுறை, ராகவனின் மனைவி தன் விட்டு வாசலில் நீர் தெளித்துக் கோலம் போடும்போது, சாரதியின் வீட்டு வாசலில் பேப்பர் போடுபவர் போட்டு விட்டுப் போயிருந்த செய்தித்தாளின் ஓரத்தில் ஈரம் பட்டு விட்டதாகப் புகார் செய்தார்.

இரவு நேரத்தில், ராகவன் வீட்டில் அடிக்கடி நாற்காலிகள் இழுக்கப்படுவதாகவும், அதனால் தங்களால் தூங்க முடியவில்லை என்றும் வீட்டுச் சொந்தக்காரரிடம் சாரதி புகார் செய்தார். 

வீட்டுச் சொந்தக்காரர் சிரித்துக் கொண்டே இதை ராகவனிடம் தெரிவித்தபோது, "என்ன சார் இப்படியெல்லாம் சொல்றாரு? பத்து மணிக்கெல்லாம் நாங்க மூணு பேரும் தூங்கிடுவோம். அடுத்த நாள் காலை ஆறு மணிக்குத்தான் எழுந்திருப்போம்! எங்க வீட்டில நாற்காலி எதுவும் இல்லை. சோஃபா மட்டும்தான் இருக்கு. ராத்திரியில அதை யாராவது இழுத்துக்கிட்டே இருப்பாங்களா என்ன? அவர் சொல்ற மாதிரியெல்லாம் எதுவும் நடக்கல!" என்றான் ராகவன், கோபத்துடன்.

"அது எனக்குத் தெரியும் சார். அவர் சொன்னதை உங்ககிட்ட சொன்னேன். அவ்வளவுதான்!" என்றார் வீட்டுக்காரர்.

"அவர் ஏன் சார் இப்படி இருக்காரு? என்னை அவருக்குப் பிடிக்கலையா, இல்லை எல்லார்கிட்டேயும் இப்படித்தான் இருப்பாரா?" என்றான் ராகவன்.

"பொதுவா, அவர் சண்டை போடற ஆளுதான். எங்கிட்டயே அடிக்கடி வீட்டைப் பத்தி ஏதாவது குறை சொல்லி, சண்டை போடுவாரு. நான் அதைப் பொருட்படுத்தறதில்ல. உங்களுக்கு முன்னால இருந்தவர் தனியா இருந்தாரு. அவருக்குக் குடும்பம் இல்ல. அவர் காலையில போனா, ராத்திரிதான் வீட்டுக்கு வருவாரு. ஞாயிற்றுக்கிழமைகள்ள கூட வீட்டில இருக்க மாட்டாரு. அதனால, அவரோட சண்டை போட சாரதிக்கு சந்தர்ப்பம் கிடைக்கலையோ என்னவோ!" என்றார் வீட்டுச் சொந்தக்காரர்.

"இன்னிக்கு ஆஃபீஸ்லேந்து வீட்டுக்கு வந்துக்கிட்டிருக்கறப்ப, வழியில ஒரு ஸ்கூட்டரை ஒரு போலீஸ்காரர் நிறுத்தி விசாரிச்சுக்கிட்டிருந்தாரு. யாருன்னு பாத்தா நம்ம சாரதி!" என்றான் ராகவன், தன் மனைவியிடம்.

"ஏன், போலீஸ்காரர்கிட்ட ஏதாவது சண்டை போட்டுக்கிட்டிருந்தாரா?" என்றாள் அவன் மனைவி.

"ஒன்வேயில போயிட்டாராம். இருநூறு ரூபா ஃபைன் போட்டிருக்காங்க. அவர்கிட்ட பணம் இல்லை. 'ஆட்டோல வீட்டுக்குப் போய்ப் பணம் எடுத்துக்கிட்டு வந்து ஃபைன் கட்டிட்டு, ஸ்கூட்டரை எடுத்துட்டுப் போங்க'ன்னு போலீஸ்கார் சொல்லி இருக்காரு. அவர் வீட்டிலேயும் பணம் இல்லையாம். நாளைக்கு பாங்க்லேந்து பணம் எடுத்துத்தான் கட்ட முடியும்னு சாரதி சொல்லி இருக்காரு. 'அப்படின்னா ஸ்கூட்டரை எடுத்துக்கிட்டுப் போய் போலீஸ் ஸ்டேஷன்ல வச்சுடுவோம், நாளைக்கு ஸ்டேஷனுக்கு வந்து பணம் கட்டிட்டு, ஸ்கூட்டரை எடுத்துக்கிட்டுப் போங்க'ன்னு போலீஸ்காரர் சொல்லிக்கிட்டிருந்தாரு!"

"அடப்பாவமே! உங்ககிட்ட பணம் இருந்திருக்குமே! நீங்க ஃபைன் கட்டி உதவினீங்க இல்ல?" என்றாள் மனைவி.

"அப்படித்தான் செஞ்சேன். என்னதான் அவர் காரணம் இல்லாம நம்ம மேல விரோதமா இருந்து, நமக்கு எரிச்சல் வர மாதிரி நடந்துக்கிட்டிருந்தாலும், அவருக்கு ஒரு கஷ்டம் வரும்போது, உதவி செய்யறதுதானே மனிதாபிமானம்! நான் அப்படித்தான் செஞ்சிருக்கணும்னு நீயும் சொல்றதைக் கேக்கறப்ப ரொம்ப திருப்தியா இருக்கு!" என்றான் ராகவன்.

"பின்ன? நம்மகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருக்காருங்கறதுக்காக, அவருக்கு ஒரு பிரச்னை ஏற்படும்போது, நல்லா கஷ்டப்படடடும்னு விட்டுட்டு வந்திருக்க வேண்டியதுதானேன்னு சொல்லுவேன்னா எதிர்பார்த்தீங்க?" என்றாள் ராகவனின் மனைவி.

குறள் 852:
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.

பொருள்: 
நம்மோடு இணங்கிப் போக முடியாமல் ஒருவர் நமக்கு வெறுப்புத் தருவனவற்றைச் செய்தாலும், அவரைப் பகையாக எண்ணித் தீமை செய்யாதிருப்பது சிறந்த குணம்.

853. பேசக் கூடாது!

ஒரே கல்லூரியில் படித்து, ஒரே ஊரில் வேலை பார்த்து வந்த அந்த எட்டு நபர்கள் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒன்று கூடிப் பேசுவார்கள். 

இந்தச் சந்திப்புகள் பெரும்பாலும் அவர்களில் சிலர் உறுப்பினர்களாக இருக்கும் கிளப்பில் நடக்கும். 

சனிக்கிழமை மாலையில் நடக்கும் இந்தச் சந்திப்புகள் சில மணி நேர அரட்டைக்குப் பிறகு, இரவு உணவுடன் முடியும்.

அத்தகைய ஒரு சந்திப்பு முடிந்து நரேஷும், குமரனும் விடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவர் வீடுகளும் அந்த கிளப்பிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்குள்ளேயே அமைந்திருந்ததால், சந்திப்பு முடிந்ததும் இருவரும் தங்கள் வீடுகளுக்கு நடந்தே சென்று கொண்டிருந்தனர்.

"ஆமாம். இன்னிக்கு ஒண்ணு கவனிச்சேன். நீ வேணுகிட்ட சரியாவே பேசலையே! அவனே வலுவில வந்து உங்கிட்ட பேசினப்ப கூட, நீ சரியா பதில் பேசலையே! என்ன விஷயம்? உங்க ரெண்டு பேருக்குள்ள ஏதாவது சண்டையா? அவன் அப்படிக் காட்டிக்கலையே!" என்றான் குமரன், நரேஷிடம்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லை!" என்றான் நரேஷ்.

"மழுப்பாதேடா! எங்கிட்ட சொல்றதில உனக்கு என்ன தயக்கம்?"

"அவன் என்னை அப்படிப் பேசினப்பறம், அவங்கிட்ட என்னால எப்படி சுமுகமா இருக்க முடியும்?"என்றான் நரேஷ் சட்டென்று வெடித்து.

"என்ன பேசினான்? எப்ப பேசினான்? எனக்குத் தெரியாம எப்ப இப்படி நடந்தது?" என்றான் குமரன், வியப்புடன்.

"உனக்குத் தெரியாம என்ன? நீயும்தானே வாட்ஸ்ஆப் க்ருப்ல இருக்க!"

"வாட்ஸ்ஆப்பா?...ஓ...அதுவா?" என்று பெரிதாகச் சிரித்தான் குமரன்.

"என்னடா சிரிக்கற? அவன் என்னை எப்படியெல்லாம் எகத்தாளமாப் பேசினான்னு நீயும்தானே படிச்சிருப்ப?" என்றான் நரேஷ், கோபத்துடன்.

"படிச்சேன். அரசியல்ல  உனக்கு ஒரு கருத்து இருக்கு, அவனுக்கு வேற ஒரு கருத்து இருக்கு. அதனால, ரெண்டு பேருக்கும் அடிக்கடி கருத்து மோதல் ஏற்படறதை கவனிச்சிருக்கேன். அதுக்காக, நீ அவன்கிட்ட விரோதம் பாராட்டற அளவுக்கு என்ன நடந்தது?"

"விரோதம் பாராட்டலைடா. கருத்துப் பரிமாற்றம் செஞ்சுக்கறப்ப, அவன் ரொம்ப கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினான். அதையெல்லாம் படிச்சப்பறம், என்னால எப்படி அவன் மேல கோபப்படாம இருக்க முடியும்?"

"நரேஷ்! மனிதர்களுக்கு இடையில கருத்து வேறுபாடுகள் இருக்கறது இயல்பான விஷயம்தான். எந்த ரெண்டு பேரை எடுத்துக்கிட்டாலும், அவங்களுக்குள்ள ஏதாவது ஒரு விஷயத்தில கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்யும். ஒருத்தரோட நமக்கு இருக்கற கருத்து வேறுபாடு மனக்கசப்பாகவோ, விரோதமாகவோ ஆகாம பாத்துக்கணும். அப்படி இருந்தாதான், நம்மால எல்லோரோடயும் நல்லாப் பழக முடியும். மனக்கசப்பை வளர்த்துக்கிட்டா, நமக்கு மத்தவங்களோட நல்ல உறவு இருக்காது. அப்புறம், வாழ்க்கையில நம்மால எப்படி மகிழ்ச்சியா இருக்க முடியும்?" என்றான் குமரன்.

"அது சரிதான். ஆனா, கருத்துக்களை விவாதிக்கறப்ப, ஒத்தர் நம்மைக் கடுமையாப் பேசினா, நமக்குக் கோபம் வராதா?"

"வரும்தான். இதைச் சமாளிக்க ரெண்டு வழிதான் இருக்கு. ஒத்தர் எவ்வளவு கடுமையாப் பேசினாலும், அவர் நம்ம கருத்தைத்தான் விமரிசிக்கிறாரு, தம்மை இல்லன்னு புரிஞ்சுக்கிட்டு, அவர் மேல கோப்பபடாம இருக்கற முதிர்ச்சி இருக்கணும்.  இது ஒரு வழி. இன்னொரு வழி..." என்று சொல்லி நிறுத்தினான் குமரன்.

"இன்னொரு வழி என்ன?" என்றான் நரேஷ், ஆவலுடன்.

"கருத்து வேறுபாடு இருக்கற விஷயங்களைப் பேசாமலே இருக்கறது!"

"அது எப்படி முடியும்? பேசும்போதோ, வாட்ஸ்ஆப் உரையாடலின்போதோ, எல்லா விஷயங்களும் வரத்தான் செய்யும். நம்ம கருத்தைச் சொல்லாமயே எப்படி இருக்கறது?"

"நான் இருக்கேனே!"

"என்னடா சொல்ற?"

"என்னோட அரசியல் கருத்துக்கள் உன்னோட கருத்துக்களுக்கு எதிர்மறையானவைதான். ஆனா, அதையெல்லாம் பேசி, அதனால நமக்குள் கசப்பு வரக் கூடாதுங்கறதுக்காகத்தான், நான் இதுவரை ஒரு தடவை கூட என்னோட அரசியல் கருத்துக்களை உங்கிட்ட பேசினதில்ல. நீ ஏதாவது பேசறப்ப, அதை மறுக்கணும்னு எனக்குத் தோணும். ஆனா, அப்படிச் செய்யக் கூடாதுன்னு என்னையே கட்டுப்படுத்திக்கிட்டு இருப்பேன்!" என்றான் குமரன்.

நரேஷ் தன் நண்பனை ஒரு புதிய மரியாதையுடன் பார்த்தேன்.

குறள் 853:
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்.

பொருள்: 
மனவேறுபாடு என்னும் துன்பம் தரும் நோயை மனத்திலிருந்து நீக்கினால், அது ஒருவனுக்குக் கெடாத, அழியாத புகழைக் கொடுக்கும்.

854. ரகுவுக்கு ஏன் கோபம் வரவில்லை?

"புரிஞ்சுதா? இதையெல்லாம் சரியா ஃபாலோ பண்ணணும். இல்லேன்னா, உங்களுக்கும் பிரச்னை, மற்றவங்களுக்கும் பிரச்னை!" என்று அதிகார தொனியில் கூறி விட்டு அகன்றார் குடியிருப்பு சங்கத்தின் செயலாளர் ராமநாதன்.

வாசற்படியிலிருந்து உள்ளே திரும்பிய மணிகண்டன், "எப்படிப் பேசிட்டுப் போறாரு பாரு! ஏதோ, நாம இவர்கிட்ட சம்பளத்துக்கு வேலை செய்யற ஆட்கள் மாதிரி. அவங்களைக் கூட அவங்க முதலாளியால இப்படியெல்லாம் பேச முடியாது! இவரு அசோசியேஷன் செகரட்டரி, நான் இங்கே வாடகை கொடுத்துக் குடியிருக்கறவன். எங்கிட்ட இப்படியெல்லாம் பேச இவருக்கு என்ன அதிகாரம் இருக்குழ. ஹவுஸ் ஓனர்கிட்ட சொல்லி, அசோசியேஷன்ல புகார் கொடுத்து இவரை மாத்தச் சொல்றேன் பாரு!" என்றான் மனைவியிடம், கோபத்துடன்.

சில நாட்கள் கழித்து, வாசலில் செயலாளர் யாரிடமோ கோபமாகப் பேசிக் கொண்டிருப்பது கேட்டது. மணிகண்டன் வாசலில் எட்டிப் பார்த்தபோது, அடுத்த ஃபிளாட்டில் வசிக்கும் ரகுவிடம்தான் அவர் ஏதோ கத்திக் கொண்டிருந்தது தெரிந்தது. ரகு மெதுவான குரலில் அவருக்கு ஏதோ பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

செயலாளர் சென்றதும், மணிகண்டன் தன் வீட்டுக்கு வெளியே வந்தான். தன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த ரகு, அவனைப் பார்த்துச் சிரித்தார்.

"என்ன சார், இவர் இப்படிக் கூச்சல் போடறாரு? செகரட்டரின்னா, என்ன வேணும்னாலும் பேசலாமா? நானாவது வாடகைக்குக் குடி இருக்கறவன். நீங்க வீட்டுச் சொந்தக்காரர் ஆச்சே!அதுக்காகவாவது ஒரு மதிப்புக் கொடுக்க வேண்டாம?" என்றான் மணிகண்டன், ரகுவிடம்.

"வீட்டுச் சொந்தக்காரரா இருந்தா என்ன, வாடகைக்குக் குடி இருப்பவரா இருந்தா என்ன? அவரைப் பொருத்தவரையில, இந்தக் கட்டிடப் பராமரிப்பு அவர் பொறுப்பு. எங்கே தப்பு நடந்தாலும், கேக்கத்தான் செய்வாரு. என் வீட்டில ஒரு சின்ன லீக் இருக்கு. நானே அதை கவனிக்கல. என் வீட்டிலேந்து வெளியே போற தண்ணிக் குழாயில ரொம்ப நேரமா தண்ணி போய்க்கிட்டிருக்கறதைப் பாத்துட்டு வந்து கேட்டாரு. அப்பதான் நான் லீக் இருக்கறதை கவனிச்சேன். உடனே சரி பண்ணிடறேன்னு சொன்னேன். சரின்னுட்டுப் போயிட்டாரு!" என்றார் ரகு.

"ஓ, அதுக்குத்தான் 'உங்களை மாதிரியானவங்களே பொறுப்பு இல்லாம இருந்தா எப்படி சார்? எவ்வளவு தண்ணி வீணாகுது?'ன்னு கத்தினாரா?"

ரகு மௌனமாகத் தலையசைத்தார். 

"அன்னிக்கு அவர் எங்கிட்ட வந்து இப்படித்தான் எதுக்கோ கத்தினப்ப, எனக்கு எவ்வளவு கோபம் வந்தது தெரியுமா! அதுக்கப்பறம், அவர் முகத்தைப் பார்க்கக் கூட எனக்குப் பிடிக்கல. நீங்க என்னன்னா, கொஞ்சம் கூடக் கோபப்படாம அமைதியா இருக்கீங்க!" என்றான் மணிகண்டன், வியப்புடன்.

"அவர் தன்னோட கடமையைச் செய்யறாரு. ஆனா, கொஞ்சம் கடுமையாப் பேசறாரு. அதுக்காக அவர் மேல கோபப்பட்டா. அவரைப் பிடிக்காம போய் விரோத மனப்பான்மை ஏற்படும். யார்கிட்டயும் விரோத மனப்பான்மை வளர்த்துக்கறது நமக்கு நல்லதில்ல. அப்படி வளர்த்துக்கிட்டா, அது நம்ம மனசுக்குள்ள ஒரு உறுத்தலாவே இருந்துக்கிட்டிருக்கும். நம்மால சந்தோஷமாவே இருக்க முடியாது. அதனாலதான் அவர் கோபமாப் பேசறதை நான் பொருட்படுத்தறதில்ல" என்றார் ரகு.

குறள் 854:
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.

பொருள்: 
துன்பங்கள் எல்லாவற்றிலும் மிகக் கொடிதான மனவேறுபாடு எனும் துன்பம், ஒருவனது உள்ளத்துள் இல்லை என்றால், அது அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றிலும் சிறந்த இன்பத்தைத் தரும்.

855. மனக்கசப்பு நீங்கியது!

"அனந்தமூர்த்தின்னு உங்களுக்கு ஒரு நண்பர் இருக்காரா என்ன? இத்தனை நாளா, நீங்க அவரைப் பத்திச் சொன்னதே இல்லையே!" என்றாள் மல்லிகா.

"நெருங்கின நண்பர் இல்ல. என்னோட வேலை செய்யறவர்" என்றான் பரமசிவம்.

"குழந்தை பொறந்து மூணு மாசமாச்சுன்னு சொல்றீங்க. முன்னாடியே போய்ப் பாத்திருக்கலாமே!"

"குழந்தை பொறந்த உடனேயே எல்லோரும் போய்ப் பார்ப்பாங்க. நாம கொஞ்சம் நிதானமாப் போய்ப் பாக்கலாமேன்னுதான் போகல. கிளம்பு. போய்ப் பார்த்துட்டு வந்துடலாம்."

"போகும்போது குழந்தைக்கு ஒரு டிரஸ் வாங்கிக்கிட்டுப் போயிடலாம்!" என்றாள் மல்லிகா.

"குழந்தையைப் பார்த்து விட்டு வந்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. உங்க நண்பரோட மனைவி எங்கிட்ட ரொம்ப நல்லாப் பழகினாங்க. உங்க நண்பருக்கும் ரொம்ப சந்தோஷம்னு நினைக்கிறேன். குழந்தையைப் பார்க்க நாம வருவோம்னு அவர் எதிர்பார்க்கல போல இருக்கு!" என்றாள் மல்லிகா.

"ஆமாம். நாங்க ரொம்ப நெருக்கமான நண்பர்கள் இல்லேன்னு சொன்னேனே! உண்மையில, அவர் குழந்தையைப் பார்க்கப் போகணும்னு நான் திடீர்னுதான் முடிவெடுத்தேன்!" என்றான் பரமசிவம்.

"ஏன் அப்படி?" என்றாள் மல்லிகா, வியப்புடன்.

"கொஞ்ச நாள் முன்னால, அலுவலகத்தில, எனக்கும் அனந்தமூர்த்திக்கும் ஒரு பிரச்னை ஏற்பட்டது. அது முடிஞ்சு போனப்பறம் கூட, எங்களுக்குள்ள ஒரு மனக்கசப்பு இருந்துக்கிட்டே இருந்தது. இதைச் சரி செய்ய என்ன செய்யலாம்னு யோசிச்சேன். அலுவலகத்திலேயே அவரோட சுமுகமா இருக்க முயற்சி செஞ்சேன். ஆனா, அதுக்கும் மேலே ஏதாவது செய்யணும்னு தோணிச்சு. அப்பதான், ரெண்டு மூணு மாசம் முன்னால அவருக்குக் குழந்தை பிறந்திருந்த விஷயம் நினைவு வந்தது. அதனால, அவர் குழந்தையைப் பார்த்துட்டு வந்தா, அதன் மூலமா அவரோட நல்லுறவு ஏற்பட்டு, எங்களுக்குள்ள இருக்கற மனக்கசப்பைப் போக்கிக்கலாம்னு நினைச்சேன். நான் நினைச்ச மாதிரியே, எங்களுக்குள்ள இருந்த மன வேறுபாடு இப்போ நீங்கிடுச்சு!" என்றான் பரமசிவம்.

குறள் 855:
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிக்லூக்கும் தன்மை யவர்.

பொருள்: 
தன் மனத்துள் வேறுபாடு தோன்றும்போது, அதை வளர்க்காமல், அதற்கு எதிராக நடக்கும் வலிமை மிக்கவரை வெல்ல எண்ணுபவர் யார்?

856. மீண்டும் வருக!

"சார்! லக்ஷ்மி என்டர்பிரைசஸ்ல மறுபடி ஆர்டர் கொடுத்திருக்காங்க!" என்றான் கணேசன்.

"போன தடவை சப்ளை பண்ணினப்ப, குவாலிடி சரியா இல்லேன்னு கம்ப்ளைன் பண்ணிட்டு, இப்ப ஏன் மறுபடி கேக்கறாங்க?" என்றார் மதிவாணன், கோபத்துடன்.

"அதான் நம்ம கெமிஸ்டை அனுப்பி, அவங்க கெமிஸ்ட் முன்னாலேயே டெஸ்ட் பண்ணிக் காட்டி, குவாலிடி சரியாதான் இருக்குன்னு நாம நிரூபிச்சப்பறம், அவங்க கெமிஸ்ட் டெஸ்ட் பண்ணினதிலதான் ஏதோ தப்பு நடந்திருக்குன்னு ஒத்துக்கிட்டாங்களே சார்!"

"நம்மகிட்ட தப்பு இல்லேன்னு நாம போய் நிரூபிச்சுக் காட்டினதும் ஒத்துக்கிட்டாங்க. இந்தத் தடவையும் குத்தம் சொன்னா? ஒவ்வொரு தடவையும் நம்ம கெமிஸ்டை அனுப்பி, நம்ம குவாலிடி சரியா இருக்குன்னு அவங்ககிட்ட நிரூபிச்சுக்கிட்டிருக்க முடியாது!"

"சார்! நானும் இதை அவங்ககிட்ட கேட்டேன். ஒரு தடவை ஏதோ தப்பு நடந்துடுச்சு, இனிமே இப்படி நடக்காதுன்னு அவங்க புரொப்ரைட்டரே எங்கிட்ட சொன்னாரு. அவங்க நல்ல பார்ட்டி. பில்லுக்கெல்லாம் சரியான நேரத்தில பணம் கொடுத்துடறாங்க. இந்த ஒரு தடவை சப்ளை பண்ணிப் பாக்கலாமே! இன்னொரு தடவை பிரச்னை பண்ணினா, அப்புறம் நிறுத்திடலாம்!" என்றான் கணேசன்.

"நம்ம ப்ராடக்டைப் பத்தி தப்பா சொன்னவங்களுக்கு சப்ளை பண்றதில எனக்கு இஷ்டம் இல்ல!" என்றார் மதிவாணன், பிடிவாதமாக.

"ஏம்ப்பா! மதிவாணனுக்கு வலது கை மாதிரி இருந்தே! அவரும் உனக்கு நல்ல சம்பளம் கொடுத்து, உன்னை நல்லாத்தானே வச்சுக்கிட்டிருந்தாரு! ஏன் அவர் கம்பெனியிலேந்து விலகிட்ட?" என்றான் கணேசனின் நண்பன் கிட்டு.

"மதிவாணனோட எனக்கு எந்த பிரச்னையும் இல்ல. ஆனா, அவர் எல்லார்கிட்டேயும் விரோதம் பாராட்டறாரு. கஸ்டமர்கிட்டயோ, சப்ளையர்கிட்டயோ ஒரு சின்ன பிரச்னை வந்தா கூட, அவங்களை விரோதிகளா நினைச்சு, அவங்களோட வியாபாரம் வச்சுக்காம வெட்டி விட்டுடறாரு. நான் அவர்கிட்ட எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டேன். அவர் கேக்கல. இது மாதிரி இருந்தா, அவர் கம்பெனி ரொம்ப நாளைக்கு ஓடாதுன்னு எனக்குத் தோணிச்சு. அதான் வேற ஒரு நல்ல வாய்ப்பக் கிடைச்சதும், வந்துட்டேன். அவருக்கு வருத்தம்தான். ஆனா, நான் என் எதிர்காலத்தைப் பாக்கணும் இல்ல?" என்றான் கணேசன்.

"ஆனா இனிமே, அவர் உன்னையும் தன்னோட எதிரியா நினைக்க ஆரம்பிச்சுடுவாரு!"

"உண்மைதான். அதை நினைச்சாத்தான் எனக்கு வருத்தமா இருக்கு!" என்றான் கணேசன்.

ன்று கணேசனுக்கு மதிவாணனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. பல மாதங்களுக்குப் பிறகு அவர் தன்னை அழைத்தது கணேசனுக்கு வியப்பாக இருந்தது.

"எப்படி இருக்கீங்க சார்?"என்றான் கணேசன்.

"கணேசன்! நீங்க சொன்னப்ப நான் கேக்கல. சில நல்ல கஸ்டமர்களையும், சப்ளையர்களையும் விட்டப்பறம் வியாபாரம் ரொம்பக் குறைஞ்சுடுச்சு. கம்பெனியைத் தொடர்ந்து நடத்த முடியுமான்னே தெரியல. நீங்க திரும்ப இங்கே வரணும்!" என்றார் மதிவாணன்.

"என்னால என்ன சார் செய்ய முடியும்?" என்றான் கணேசன்.

"நான் விரோதிச்சுக்கிட்டவங்களை நான் திரும்பப் போய்க் கூப்பிட்டா, அவங்க வர மாட்டாங்க. ஆனா நீங்க பேசினா, அவங்க சமாதானம் ஆகலாம். இனிமே, நான் முழு நிர்வாகத்தையும் உங்ககிட்டயே விட்டுடறேன். நான் எதிலியுமே தலையிடப் போறதில்ல. உங்க அணுகுமுறைதான் சரியானது. உங்களால நிச்சயமா எல்லாத்தையும் பழைய நிலைக்குக் கொண்டு வர முடியும். நீங்கதான் எனக்கு உதவி செய்யணும்!" என்றார் மதிவாணன், இறைஞ்சும் குரலில்.

அவருக்கு என்ன பதில் சொல்வது என்று கணேசன் யோசித்தான்.

குறள் 856:
இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து.

பொருள்: 
பிறருடன் மன வேறுபாடு கொண்டு வளர்வது நல்லதே என்பவன் வாழ்க்கை, அழியாமல் இருப்பதும் சிறிது காலமே; அழிந்து போவதும் சிறிது காலத்திற்குள்ளேயாம்.

857. கணவனுக்கு ஆறுதல்!

"கல்யாணம் ஆகிப் பத்து வருஷம் ஆகுது. இன்னும், எங்க வீட்டு மனுஷங்ககிட்ட விரோதம் பாராட்டிக்கிட்டிருக்கீங்களே, இது உங்களுக்கே தப்பாத் தெரியலையா?" என்றாள் சுகந்தி, கோபத்துடன்.

"அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? உங்க வீட்டு மனுஷங்க அப்படி இருக்காங்க!" என்றான் பத்ரி.

"எப்படி இருக்காங்க?"

"உன் தங்கை கல்யாணத்துக்கு என்னைக் கூப்பிட்டு அவமானப்படுத்தினாங்களே, அதை நான் எப்படி மறக்க முடியும்?"

"இங்கே பாருங்க உங்களை அவமானப்படுத்தணும்னு, யாரும் நினைக்கல. கல்யாணத்தில நிறைய பேரு இருந்தப்ப, உங்களை சரியா கவனிக்காம இருந்திருக்கலாம். அதுகூட, சரியா கவனிக்கலேன்னு நீங்க சொல்றீங்க! அப்படி என்ன கவனிக்காம விட்டுட்டாங்கன்னு உங்களுக்குத்தான் வெளிச்சம்! அப்படியும், எங்கப்பா உங்ககிட்ட வந்து மன்னிப்புக் கேட்டாரே, அப்புறம் என்ன?"

"செய்யறதையெல்லம் செஞ்சுட்டு, மன்னிப்புக் கேட்டுட்டா, எல்லாம் சரியாயிடுமா? என்னை மதிக்கலேங்கறதால, நான் ஒதுங்கி இருக்கேன். அதில யாருக்கு என்ன கஷ்டம்?" என்றான் பத்ரி.

"உங்க தங்கை வீட்டுக்காரர் இருக்காரே, அவரு நம்மகிட்ட எவ்வளவு இயல்பா நடந்துக்கிறாரு!"

"அவனுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை நான் கொடுக்கறேன். அதோட, அவனுக்கு சொரணை கிடையாது. யாராவது சாப்பாடு போடறாங்கன்னு சொன்னா, முதல்ல போய் உக்காந்துடுவான்!"

"உங்க தங்கை வீட்டுக்காரரைப் பத்தி இவ்வளவு இழிவாப் பேசறீங்களே, இது அவரை அவமானப்படுத்தறது இல்லையா?"

"அவன் இல்லாதப்பதானே சொல்றேன்! அவனைப் பத்தின பேச்சு இப்ப எதுக்கு? உங்க வீட்டு விழாவுக்கு நான் வரல. நீ மட்டும் போயிட்டு வா. அவ்வளவுதான்!" என்று விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தான் பத்ரி.

"எப்படியோ போங்க! நீங்க எப்பதான் மாறப் போறீங்களோ?" என்றாள் சுகந்தி, ஆயாசத்துடன். 

ரண்டு நாட்களுக்குப் பிறகு, சுகந்தி தன் பெற்றோர் வீட்டு விழா முடிந்து திரும்பிய போது, பத்ரி சோர்வுடன் வீட்டில் அமர்ந்திருப்பதைப் பார்த்தாள்.

"என்னங்க? இன்னிக்கு ஆஃபீஸ் போகலியா? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? உடம்பு சரியில்லையா?" என்றபடியே, பத்ரியின் நெற்றியில் கையை வைத்துப் பார்த்தாள் சுகந்தி.

"உடம்புக்கு ஒண்ணுமில்ல. எனக்கு ஆஃபீஸ் போகப் பிடிக்கல. இந்த வருஷமும் எனக்கு ப்ரொமோஷன் கிடைக்கல!" என்றான் பத்ரி, சோர்வுடன்.

"விடுங்க. உங்க அருமை உங்க மேலதிகாரிகளுக்குப் புரியல. அடுத்த வருஷம் கண்டிப்பாக் கிடைக்கும். கவலைப்படாதீங்க!" என்றாள் சுகந்தி, அவன் தோள் மீது அறுதலுடன் தன் கையை வைத்தபடி.

'நீங்க இப்படி எல்லோர்கிட்டயும் விரோதம் பாராட்டிக்கிட்டு சண்டை போட்டுக்கிட்டிருந்தீங்கன்னா, உங்களுக்கு எப்படி நல்லது நடக்கும்?' என்று தன் மனதில் தோன்றிய எண்ணத்தை சுகந்தி பத்ரியிடம் கூறவில்லை!

குறள் 857:
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்.

பொருள்: 
பகை உணர்வு கொள்ளும் தீய அறிவுடையவர்கள், வெற்றிக்கு வழிகாட்டும் உண்மைப் பொருளை அறிய மாட்டார்கள்.

858. அழகேசனின் கோபம்

"ஏண்டா, பெரியப்பா வீட்டுக்குப் போக வேண்டாம்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்? ஏன் போனே?" என்றான் அழகேசன், கோபத்துடன்.

"இல்லை... அம்மாகிட்ட சொல்லிட்டுத்தான் போனேன்" என்றான் சங்கரன், சங்கடத்துடன்.

"ஏம்மா, அவரு நம்ம அப்பாவை அவமானப்படுத்தி இருக்காரு. அதனால, அவரோட தொடர்பு வச்சுக்க வேண்டாம்னு நான் சொல்லிக்கிட்டிருக்கேன். நீ பாட்டுக்கு அவனை அவர் வீட்டுக்கு அனுப்பி இருக்க!" என்றான் அழகேசன், தன் தாய் மதுரத்திடம்.

"நான் அனுப்பலடா! பேரன் பிறந்த நாளைக்கு, அவங்க நேரில வந்து கூப்பிட்டாங்க. நீ போக மாட்டேன்னுட்ட. அவன் போறேன்னான். நான் சரின்னேன். அவ்வளவுதான்!" என்றாள் மதுரம்.

"அதான் ஏன்னு கேக்கறேன்? நம்ம அப்பாவை அவமானப்படுத்தினவங்களோட நமக்கு என்ன உறவு வேண்டி இருக்கு?"

"டேய்! அது எப்பவோ நடந்தது. உங்க அப்பாவே அதைப் பெரிசா எடுத்துக்கல. 'ஏதோ கோபத்தில அப்படிப் பேசிட்டான். என் அண்ணன்தானே! பரவாயில்ல'ன்னு உங்க அப்பாவே எங்கிட்ட சொல்லி இருக்காரு. அந்த சம்பவம் நடந்து கொஞ்ச நாள்ள, உங்க பெரியப்பா வேற ஊருக்குப் போயிட்டதால, ரெண்டு பேருக்கும் அதிக தொடர்பு இல்ல. அந்தக் காலத்தில, ஃபோன் எல்லாம் கிடையாது. உங்க அப்பா போயே அஞ்சு வருஷம் ஆச்சு. உங்க அப்பா காரியத்துக்கெல்லாம், உங்க பெரியப்பாவும், பெரியம்மாவும் வந்து இருந்துட்டுத்தான் போனாங்க. இப்ப, அவங்க மறுபடி இந்த ஊருக்கு வந்துட்டாங்க. பேரன் பிறந்த நாளைக்கு நேரில வந்து கூப்பிட்டாங்க. நீதான் அவங்களைப் பாக்கக் கூட மாட்டேன்னு, அறைக்குள்ளேயே இருந்துட்ட. எதுக்கு அவங்களோட விரோதம் பாராட்டணும்?" என்றாள் மதுரம்.

"எப்படியோ போங்க! நான் சொன்னதைக் கேக்க மாட்டீங்க" என்றான் அழகேசன் கோபத்துடன்.

ருபது வருடங்கள் கடந்து விட்டன. அழகேசன், சங்கரன் இருவருக்குமே திருமணம் ஆகித் தனித் தனியே வசித்து வந்தனர். மதுரம் பெரும்பாலும் அழகேசன் வீட்டிலேயே வசித்து வந்தாள்.

"ஏம்மா! சங்கரன் நல்ல வசதியா இருக்கான். அவன் வீடு பெரிசு. உனக்குத் தனி அறை, ஏசி எல்லாம் இருக்கும். அவனும் உன்னைக் கூப்பிட்டுக்கிட்டே இருக்கான். நீ என்னோட இந்தச் சின்ன வீட்டில இருந்துக்கிட்டு, கொசுக்கடியில தூங்கிக்கிட்டு இருக்கே. நீ என்னோட இருக்கறது எனக்கு சந்தோஷம்தான். ஆனா நீ அங்கே இன்னும் வசதியா இருக்கலாமேன்னுதான் சொல்றேன்" என்றான் அழகேசன்.

"நீ சொல்றது எனக்குப் புரியுதுடா. நீ கஷ்டப்படறப்ப, உன் கஷ்டத்தைப் பகிர்ந்துக்கணுமே தவிர, நான் மட்டும் வசதியா இருக்க, எனக்கு எப்படி மனசு வரும்?" என்றாள் மதுரம்.

அழகேசன் மௌனமாக இருந்தான்.

"ஒரு விஷயம் சொல்றேன். யோசிச்சுப் பாரு. நீங்க ரெண்டு பேரும் ஒண்ணாத்தான் வளர்ந்தீங்க. உங்கப்பா உங்க ரெண்டு பேரையும்தான் படிக்க வச்சாரு. ரெண்டு பேரும் ஒரே சூழ்நிலை, ஒரே மாதிரி வசதிகளோட இருந்தும், சங்கரன் நல்லா முன்னுக்கு வந்துட்டான். ஆனா நீ கஷ்டப்பட்டுக்கிருக்கே. இது ஏன்னு யோசிச்சுப் பாத்தியா?" என்றள் மதுரம்.

"இதில யோசிக்கறதுக்கு என்ன இருக்கு? அதிர்ஷ்டம்கறது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்."

"இதுக்கு அதிர்ஷ்டம் மட்டும் காரணம் இல்லடா. உங்களோட இயல்பும்தான் காரணம். நீ எல்லோரோடயும் சண்டை போட்டுக்கிட்டு, விரோத மனப்பான்மையோட நடந்துக்கற. அதனால, உனக்கு மத்தவங்ககிட்டேந்து அதிகம் உதவி கிடைக்கல. யாருக்காவது உனக்கு உதவி செய்யக் கூடிய சந்தர்ப்பம் கிடைச்சாக் கூட, இவன்தான் நம்மகிட்ட விரோதமா இருக்கானே, இவனுக்கு ஏன் உதவி செய்யணும்னு நினைப்பாங்க. சங்கரன் விரோத மனப்பான்மை இல்லாம இருக்கான். எப்பவாவது மனஸ்தாபம் வந்தா, அதை சீக்கிரமே மறந்துட்டு, மனஸ்தாபம் ஏற்பட்டவங்களோட இயல்பாப் பழக ஆரம்பிச்சுடறான். அதனால, அவனுக்கு நண்பர்கள், உதவி செய்யறவங்கன்னு நிறைய பேர் இருக்காங்க. அவன் முன்னுக்கு வந்ததுக்கு அதுவும் ஒரு காரணம்!"

மதுரம் தன் மகனின் முகத்தைப் பார்த்தாள். அவள் சொன்னதை அவன் ஏற்றுக் கொண்டானா என்பது அவளுக்குப் புரியவில்லை.

குறள் 858:
இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிகலூக்கின் ஊக்குமாம் கேடு.

பொருள்: 
மனத்தில் தோன்றும் மாறுபாட்டை எதிர்கொண்டு நீக்கிக் கொண்டால் நன்மையும், அதற்கு மாறாக அதனை மிகுதியாக ஊக்கப்படுத்தி வளர்த்துக் கொண்டால் தீமையும் விளையும்.

859. நண்பன் சொன்ன காரணம்!

"புரொமோஷன் லிஸ்ட்ல என் பேரு இல்லை. அந்த மானேஜர் என் மேல பழி தீத்துக்கிட்டான்!" என்றான் நடேசன், தன் நண்பனும், சக ஊழியனுமான பிரேமிடம்.

பிரேம் பதில் சொல்லவில்லை.

"நான் சொல்றது சரிதானே?"

"சரிதான். ஆனா..." என்று ஆரம்பித்த பிரேம், "அதைப் பத்தி, இப்ப பேச வேண்டாம். நீ முதல்ல மனசை சமாதானப்படுத்திக்க. கம்பெனிகள்ள இப்படியெல்லாம் நடக்கறது சகஜம்தான்!" என்றான்..

சில நாட்கள் கழித்து, நடேசன் பிரேமிடம், "எனக்கு புரொமோஷன் கிடைக்காததுக்கு மானேஜர்தான் காரணம்னு நான் அன்னிக்கு சொன்னப்ப, நீ ஏதோ சொல்ல வந்தியே?" என்றான்.

"ஒண்ணுமில்ல. நீ சொன்னதுதான். மானேஜருக்கு உன் மேல விரோதம்னுதானே நீ சொல்ற?"

"ஆமாம். இல்லேன்னு சொல்லப் போறியா?"

"இல்லேன்னு சொல்லல. ஆனா, நீ அவர் மேல விரோதம் பாராட்டறியா, இல்லையா?"என்றன் பிரேம்.

நடேசன் யோசித்தான்.

"நான் கவனிச்சதை சொல்றேன். ரெண்டு மாசம் முன்னால, மானேஜர் ஆஃபீஸ்ல எல்லாருக்கும் வேலைப் பொறுப்புகளை மாத்திக் கொடுத்தப்ப, உனக்கு முக்கியமில்லாத பொறுப்புகளை கொடுத்துட்டார்னு, நீ அவர்கிட்ட சொன்னே இல்ல?"

"ஆமாம். அவரு அப்படித்தானே செஞ்சாரு?"

"இருக்கலாம். ஆனா, நீ அப்படிச் சொன்னதுக்கு, அவர் என்ன பதில் சொன்னாரு?"

"ரொடேஷன்ல எல்லாருக்கும் பொறுப்புக்கள் மாறி மாறித்தான் வரும். சில சமயம், முக்கியம் இல்லாத பொறுப்புக்களும்தான் வரும்னு சொன்னாரு."

"அதை ஏத்துக்கிட்டு, நீ அந்த விஷயத்தை அதோட விட்டிருக்கலாம். ஆறு மாசம் கழிச்சு, அடுத்த ரொடேஷன்ல, உனக்கு நல்ல பொறுப்புக்கள் கிடைச்சிருக்கும். ஆனா, அதுக்கப்பறம் நீ அவர்கிட்ட விரோத பாவமாகவே நடந்துக்கிட்ட. சில வேலைகள்ள சரியா ஒத்துழைப்புத் தராம, அவருக்குக் கோபம் வரும்படி நடந்துக்கிட்ட!" என்றான் பிரேம்.

"ஏன், என்னோட எதிர்ப்பைக் காட்டக் கூடாதா?" என்றான் நடேசன், கோபத்துடன்.

"காட்டலாம். ஆனா அப்படிக் காட்டினா, அதுக்கான விளைவுகளை சந்திக்கத் தயாரா இருக்கணும். அப்புறம் ஏன் அவர் உன்னைப் பழி தீர்த்துக்கிட்டார்னு சொல்ற? அவர் அப்படித்தான் செய்வார்னு, நீ எதிர்பார்த்திருக்கணும் இல்ல?"

நடேசன் மௌனமாக இருந்தான்.

"ஆனா, இதுக்குக் காரணம் நீ இல்ல, உன்னோட நேரம்தான்!"

"என்னடா சொல்ற?" என்றான் நடேசன். 

"அஞ்சாறு வருஷம் முன்னால, நாம ரெண்டு பேரும் மதுரை பிராஞ்ச்ல வேலை செஞ்சப்ப, நடந்த விஷயம் ஞாபகம் இருக்கா?" என்றான் பிரேம்.

"நீ எதைச் சொல்ற?"

"அந்த பிராஞ்ச் மானேஜர் காரணமே இல்லாம உன் மேல வெறுப்பைக் காட்டினாரு. உனக்கு எவ்வளவோ தொல்லை கொடுத்தாரு. ஆனா நீ ஒரு வார்த்தை கூடப் பேசாம எல்லாத்தையும் பொறுத்துக்கிட்ட. ஞாபகம் இருக்கா?"

நண்பன் சொல்ல வந்ததைப் புரிந்து கொண்டவனாக நடேசன் தலையை ஆட்டினான்.

"நான் கூட உங்கிட்ட கேட்டேன், ஏண்டா இவ்வளவு பொறுமையா இருக்கே, ஒண்ணு ரெண்டு தடவையாவது உன் எதிர்ப்பைப் பதிவு செய்யலாம் இல்லே?'ன்னு. அதுக்கு நீ என்ன சொன்னே? நான் சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் கேட்டிருக்கேன். அது கிடைக்கும் போல இருக்கு. இந்த சமயத்தில இவரை விரோதிச்சுக்கிட்டா, இவர் காரியத்தையே கெடுத்துடுவாரு'ன்னு!"

"ஆமாம். அதுக்கும், என் நேரத்துக்கும் என்ன சம்பந்தம்?"

"அப்ப உன் நேரம் நல்லா இருந்தது. அதனால, அந்த மானேஜர் உனக்கு எவ்வளவோ தொந்தரவு கொடுத்தும், ஒரு எதிர்ப்பு கூடத் தெரிவிக்காம, பொறுமையா இருந்தே. டிரான்ஸ்ஃபர் கிடைச்சு இங்கே வந்தே. ரெண்டு வருஷம் கழிச்சு, நானும் வந்தேன். ஆனா, இப்ப உன் நேரம் நல்லா இல்லாததாலதான், ஒரு முக்கியமில்லாத விஷயத்துக்காக மானேஜர் மேல விரோதத்தை வளர்த்துக்கிட்டு, உனக்கு வர வேண்டிய புரொமோஷன் வராம போயிடுச்சு. அதனால, இது உன் தப்பு இல்லேன்னு நினைச்சுக்க. சீக்கிரமே, உனக்கு இன்னொரு நல்ல வாய்ப்பு வரும். கவலைப்படாதே!" என்றான் பிரேம்.

குறள் 859:
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு.

பொருள்: 
ஒருவனுக்கு நன்மை வரும்போது, காரணம் இருந்தாலும் மனவேறுபாடு கொள்ள மாட்டான். தனக்குத் தானே கேட்டை விளைவிக்க எண்ணுபவன், காரணம் இல்லாவிட்டாலும் மனவேறுபாடு கொள்ள எண்ணுவான்.

860. ஏழரை நாட்டுச் சனி!

"என்னங்க இது? ஒரு சின்ன வாக்குவாதம். அது நடந்து ஒரு மாசம் ஆச்சு. அதுக்காக எங்கிட்ட கோவிச்சுக்கிட்டு, இன்னும் எங்கிட்ட பேசாம இருக்கீங்களே!" என்றாள் பூங்கோதை.

"சண்டை போட்டா, கோபம் இருக்கத்தான் செய்யும்!" என்றான் குமார்.

"அதுக்காக, எங்கிட்ட பேசாமயே இருந்துடுவீங்களா? எத்தனை நாளுக்கு இப்படி இருப்பீங்க? ஆயுள் பூராவா?" என்றாள் பூங்கோதை, கோபத்துடன்.

"நீ என் மனைவிங்கறதால உங்கிட்ட சமாதானம் ஆகி, இப்ப பேசறேன். மத்தவங்கன்னா பேச மாட்டேன்!"

"இப்படி இருந்தீங்கன்னா, எல்லோரையும் விரோதிச்சுக்கிட்டு இருக்க வேண்டியதுதான். நமக்கு உதவி செய்ய யாரும் இருக்க மாட்டாங்க!"

"மத்தவங்க உதவி எனக்குத் தேவையில்லை!" என்றான் குமார், விறைப்புடன். 

"குமாருக்கு இப்ப ஏழரை நாட்டுச் சனி. அதான் எல்லோரோடயும் விரோதம், ஆஃபீஸ்ல, சொந்தக்காரங்ககிட்ட, அக்கம்பக்கத்திலன்னு எல்லார்கிட்டேயும் மனஸ்தாபம். பல பேரோட பேச்சு வார்த்தை கூட இல்ல!" என்றாள் குமாரின் தாய் கமலா.

'ஏன் அத்தை, உங்க பிள்ளை எல்லார்கிட்டேயும் சண்டை போட்டுக்கிட்டு அவங்களோட விரோதபாவத்தோட இருந்தா, அதுக்கு சனி என்ன செய்யும்?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட பூங்கோதை, கணவனை மாற்றுவது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

"ஏழெட்டு வருஷம் கஷ்டப்பட்டப்பறம், இப்பதான் குமாருக்கு நல்லது நடக்க ஆரம்பிச்சிருக்கு. ஆஃபீஸ்ல, புரொமோஷன் கிடைச்சிருக்கு. சொந்தக்காரங்க மனஸ்தாபத்தை மறந்துட்டு வந்து போறாங்க. அக்கம்பக்கத்தில கூட எல்லாரும் நட்பா இருக்காங்க!" என்றாள்  கமலா.

"உங்க பிள்ளை இப்ப ரொம்ப மாறிட்டாரு அத்தை. யாரோடயும் சண்டை போடறதில்ல. எப்பவாவது யார்கிட்டயாவது மனஸ்தாபம் வந்தாலும், அதை மனசில வச்சுக்காம, அவங்களோட இனிமையாப் பழகறாரு. ஆஃபீஸ்ல யாரோடயும் சண்டை போடாம அனுசரிச்சுப் போனதாலதான், மேலதிகாரிகள்கிட்ட நல்ல உறவு ஏற்பட்டு, தனக்குப் பதவி உயர்வு கிடைச்சதா அவரே சொல்றாரு!" என்றாள் பூங்கோதை.

"ஒரு மனுஷனுக்கு நேரம் நல்லா இல்லாதப்ப, அவனோட புத்தியும் சரியா இருக்காது. ஏழரை நாட்டுச் சனி ஆட்டி வச்சதாலதான், அவன் எல்லோரோடயும் சண்டை போட்டு விரோதத்தை வளர்த்துக்கிட்டான். இப்ப சனி விலகி நல்ல நேரம் வந்ததும், அவனோட சிந்தனையும் மாறிடுச்சு!" என்றாள் கமலா.

"அப்படின்னா, இவ்வளவு வருஷமா அவரோட போராடி, அவரைக் கொஞ்சம் கொஞ்சமா மாத்தினேனே, எனக்கு எந்தப் பங்கும் இல்லையா?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் பூங்கோதை.

அன்று இரவு, மாமியார் கூறியதைக் கணவனிடம் கூறிய பூங்கோதை, "ஏழரை நாட்டுச் சனி இருந்தா, நல்லது எதுவும் நடக்காதா? நீங்க என்னைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டதே உங்களுக்கு ஏழரை நாட்டுச் சனி இருந்தப்பதானே!"  என்றாள்.

"அப்படின்னா, என் வாழ்க்கையில வந்த ஏழரை நாட்டுச் சனி நீதான்!" என்றான் குமார், சிரித்தபடி.

பூங்கோதை அவனைக் கோபத்துடன் பார்த்தாள்.

"கோபிச்சுக்கக் கூடாதுன்னு எனக்கு அறிவுறுத்தி, என்னை மாத்தினவ நீதானே! இப்ப, நீயே கோபிச்சுக்கிட்டா எப்படி? நீ என்னோட இயல்பை மாத்தின, நன்மை செய்யும் சனி!" என்றான் குமார்.

குறள் 860:
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு.

பொருள்: 
ஒருவனுக்கு இகலால் துன்பமானவை எல்லாம் உண்டாகும், அதற்கு மாறான நட்பால் நல்ல நீதியாகிய பெருமித நிலை உண்டாகும்.

             அறத்துப்பால்                                               காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...