அதிகாரம் 69 - தூது

திருக்குறள்
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 69
தூது

681. கம்சனின் தூதர்

"கிருஷ்ணனைக் கொல்ல நான் செய்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. பூதகி, சகடன், திரிணவர்த்தன், அகன், பகன், வடன் என்று நான் அனுப்பிய பல அசரர்களையும் கொன்று விட்டான் அந்த கிருஷ்ணன். இப்போது அவன் பல தீரச் செயல்கள் செய்தவனாக நம் யாதவ குலத்தினரின் அன்பையும் மதிப்பையும் பெற்றுத் திகழ்கிறான். அவனை இனியும் நான் கொல்ல முயற்சி செய்தால் நம் யாதவ குலத்தினர் ஒட்டு மொத்தமாக நமக்கெதிராகத் திரும்பி விடுவார்கள்!" என்றான் கம்சன் கவலையுடன்.

"நீங்கள் சொல்வது சரிதான். இனி அவனை வஞ்சகமாகத்தான் கொல்ல வேண்டும்" என்றான் கம்சனின் நண்பனும், ஆலோசகனுமான சாணூரன்.

"எப்படி?"

"அரசே! இவ்வளவு காலம் நீங்கள் கிருஷ்ணன் இருக்கும் இடத்துக்குச் சிலரை அனுப்பி அவனைக் கொல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டீர்கள். அவை தோல்வி அடைந்து விட்டன. கிருஷ்ணனை நம் இடத்துக்கு வரவழைத்தால் அவனை எப்படியாவது கொன்று விடலாம்!"

"அவனை எப்படி இங்கே வரவழைப்பது? வரவழைத்தபின் எப்படிக் கொல்வது?"

"கொல்வதற்குப் பல வழிகள் உள்ளன. கிருஷ்ணன் நம் அரண்மனைக்கு வரும் வழியிலேயே நம்மிடம் இருக்கும் மதம் பிடித்த யானையான குவலயபீடத்தை அவன் மீது ஏவி அவனைக் கொல்ல வைக்கலாம். அதை ஒரு விபத்து என்றுதான் அனைவரும் கருதுவார்கள். ஒருவேளை அவன் யானையிடமிருந்து தப்பித்து விட்டால், அவனை மல்யுத்தத்துக்கு அழைக்கலாம். மல்யுத்தத்தில் என்னை வெல்ல யாரும் இல்லையே! என்னுடன் அவனை மல்யுத்தம் செய்ய அழைத்து நான் அவனைக் கொன்று விடுவேன்!" என்றான் சாணூரன் உற்சாகத்துடன்.

"நீ சொல்வது நல்ல யோசனைதான். ஆனால் கிருஷ்ணனை இங்கே எப்படி வரவழைப்பது?" என்றான் கம்சன் யோசனையுடன்.

"நம் தலைநகரில் தனுர்யாகம் (வில்லை வளைத்து நாணேற்றும் போட்டி) நடக்க இருக்கிறதல்லவா? அதற்கு கிருஷ்ணனையும் பலராமனையும் வரும்படி அழைப்பு விடுப்போம்!"

"நல்ல யோசனைதான். ஆனால் ஒரு தூதரை அனுப்பி முறையாக அழைப்பு விடுத்தால்தான் அவர்கள் வருவார்கள்" என்றான் கம்சன்.

"நம் வீரர்களில் ஒருவனிடம் ஓலை அளித்து அனுப்பி அவர்கள் இருவரையும் இங்கு அழைத்து வரச் செய்யலாம்!" என்றான் சாணூரன்.

"யாராவது ஒரு வீரனை தூதனாக அனுப்ப முடியாது. தூதராகச் செல்லச் சில தகுதிகள் வேண்டும்!" .

"அவை என்ன தகுதி கள்?"

"தூதருக்கு இருக்க வேண்டிய முக்கியமான குணம் அன்புடன் நடந்து கொள்வது. வேறு சில குணங்களும் வேண்டும்!"

"அவை என்ன குணங்கள்?"

"நல்ல குடியில் பிறந்தவராக இருக்க வேண்டும். அரசர்கள் பாராட்டக் கூடிய பண்பு உள்ளவராக இருக்க வேண்டும்" என்றான் கம்சன்

"அத்தகைய குணங்கள் உள்ள யாராவது நம்மிடையே இருக்கிறார்களா?" என்றான் சாணூரன்.

"ஒருவர் இருக்கிறார். அமைச்சர் அக்ரூரர்!"

"அவர் மிகவும் மென்மையானவராயிற்றே?"

"அவருடைய இயல்பான குணங்களான அன்பு, பண்பு இவற்றினால் வரும் மென்மைதான் அது. அவர் என் சிறிய தகப்பனாரின் புதல்வர். கிருஷ்ணனுக்கும் தாய்மாமன் முறை. அதனால் அவர் கூறுவதை கிருஷ்ணன் ஏற்றுக் கொள்வான். அவரையே தூதராக அனுப்பி கிருஷ்ணனையும், அவன் அண்ணன் பலராமனையும் அழைத்து வரச் சொல்கிறேன்" என்றான் கம்சன்.

குறள் 681:
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.

பொருள்:
அன்பான குணமும், நல்ல குடிப்பிறப்பும், அரசினர் பாராட்டக் கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரிய தகுதிகளாகும்.

682. வெளிநாட்டு தூதர்

"ஒரு பெரிய நாட்டுக்கு தூதரா போற வாய்ப்பு யாருக்குக் கிடக்கும்னு தெரியல. மூணு பேரை ஷார்ட்லிஸ்ட் பண்ணி இருக்காங்களாம். ஆனா மூணு பெயர்களையும் பார்த்த உடனேயே யாருக்கு இந்தப் பதவி கிடைக்கும்னு நான் ஊகிச்சுட்டேன்!"

"யாருக்குக் கிடைக்கும்?"

"சந்திரமூர்த்திக்குத்தான்!"

"எதை வச்சு சொல்றீங்க?"

"சந்திரமூர்த்தி பிரதமருக்கு நல்லா தெரிஞ்சவரு. பிரதமர் நிதி அமைச்சரா இருந்தப்ப, சந்திரமூர்த்தி நிதித்துறைச் செயலரா இருந்தாரு. அப்ப ரெண்டு பேரும் ரொம்ப இணக்கமா பணியாற்றினாங்க."

"மற்ற ரெண்டு பேரும் கூட திறமையும் அனுபவமும் உள்ளவங்கதானே?"

"மூணு பேருமே சிறந்த கேண்டிடேட்ஸ்தான். அதனலதானே அவங்களை ஷார்ட்லிஸ்ட் பண்ணி இருக்காங்க! ஆனாலும் சந்திரமூர்த்திக்குத்தான் கிடைக்கும். நீங்க வேணும்னா பாருங்க!"

"நீங்க சொல்றது சரியா இருக்கலாம். ஆனா எனக்கென்னவோ மத்த ரெண்டு பேர்ல ஒத்தருக்குத்தான் கிடைக்கும்னு தோணுது!"

"மத்த ரெண்டு பேர்ல யாரு?"

"ரெண்டு பேரில யாரா வேணும்னா இருக்கலாம். ஆனா சந்திரமூர்த்தியை விட அவங்க ரெண்டு பேர்ல ஒத்தருக்குத்தான் அதிக வாய்ப்புன்னு எனக்குத் தோணுது!"

"எதனால அப்படி நினைக்கிறீங்கன்னு சொல்ல மாட்டீங்களா?"

"சொல்லலாம். மூணு பேருக்கும் பொதுவா ரெண்டு குணங்கள் இருக்கு. மூணு பேருமே அறிவாளிகள், விஷயம் தெரிஞ்சவங்க, மத்தவங்ககிட்ட அக்கறையோட இனிமையாப் பழகுவாங்க. ஆனா இன்னொரு முக்கியமான குணம் சந்திரமூர்த்திகிட்ட இல்ல. மத்த ரெண்டு பேர்கிட்டேயும் இருக்கு. அதனாலதான் அவங்க ரெண்டு பேர்ல ஒத்தருக்குத்தான் வாய்ப்புன்னு நான் நினைக்கறேன்!"

"அது என்ன குணம்?"

"அதை இப்ப நான் சொன்னா சரியா இருக்காது. ஒருவேளை சந்திரமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டா, அந்த குணத்தைப் பத்தி என்னோட புரிதல் தப்புன்னு நினைச்சுப்பேன். வேற ஒத்தர் தேர்ந்தெடுக்கப்பட்டா என்னோட புரிதல் சரின்னு ஆகும். அந்த குணம் என்னங்கறதை அப்ப நான் சொல்றேன்!"

"இன்னிக்கு சாயந்திரத்துக்குள்ள அறிவிப்பு வரும்னு சொல்றாங்க. அறிவிப்பு வந்தவுடனே நான் உங்களுக்கு ஃபோன் பண்றேன்." 

"ஹலோ! கங்கிராசுலேஷன்ஸ்! உங்க கணிப்பு சரியாயிடுச்சு. சந்திரமூர்த்தி தேர்ந்தெடுக்கப்படல. சந்திரமூர்த்திகிட்ட இல்லைன்னு நீங்க குறிப்பிட்ட அந்த குணம் என்னன்னு இப்ப சொல்றீங்களா?"

"சொல்றேன். ஒரு தூதருக்கு இருக்க வேண்டிய முக்கியமான குணங்கள், ஒண்ணு - மத்தவங்ககிட்ட அன்போடயும், புரிதலோடயும் நடந்துக்கறது, இரண்டாவது - நுணுக்கமான அறிவு, மூணாவது - பேசும்போது ஆராய்ந்து பேசறது. இந்த மூணாவது குணம் சந்திரமூர்த்திகிட்ட அவ்வளவு வலுவா இல்லேன்னு நினைக்கிறேன். அதனாலதான் அவர் தேர்ந்தெடுக்கப்படற வாய்ப்பு குறைவுன்னு நினைச்சேன்."

"சந்திரமூர்த்திகிட்ட இந்த குணம் இல்லேன்னு எப்படி சொல்றீங்க?"

"நீங்களே சொன்னீங்க இல்ல, பிரதமர் நிதி அமைச்சரா இருந்தப்ப சந்திரமூர்த்தி நிதித்துறைச் செயலரா இருந்தாரு, அப்ப ரெண்டு பேரும் ரொம்ப இணக்கமா செயல்பட்டாங்கன்னு?"

"ஆமாம். அது அவருக்கு சாதகமான விஷயம்னுதானே நான் சொன்னேன்?"

"ரெண்டு பேரும் இணக்கமா இருந்தது உண்மைதான். ஆனா சந்திரமூர்த்தி சில சமயங்கள்ள சரியா யோசிக்காம தெரிவித்த சில கருத்துக்களினால அன்றைய நிதி அமைச்சருக்கு சில சங்கடங்கள் ஏற்பட்டன. மத்தவங்க அதை மறந்திருக்கலாம். ஆனா அப்ப நிதி அமைச்சரா இருந்து இப்ப பிரதமரா இருக்கறவரு அதையெல்லாம் மறந்திருக்க மாட்டார், இல்ல? வெளிநாட்டு தூதரா இருக்கறப்ப கவனக் குறைவா ஒரு வார்த்தை பேசினாலும் பெரிய பிரச்னை ஆயிடுமே! அதனாலதான் சந்திரமூர்த்தி தேர்ந்தெடுக்கப்படறதுக்கான வாய்ப்பு குறைவுன்னு நான் நினைச்சேன்!"

"மறுபடியும் வாழ்த்துக்கள் உங்களோட ஆழமான பார்வைக்காக!"

குறள் 682:
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.

பொருள்:
அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.

683. தூது செல்லப் பொருத்தமானவர்

"கந்தர்வ நாடு நம் நாட்டின் மீது படையெடுக்கும் எண்ணத்தில் இருப்பதாக நம் ஒற்றர்கள் மூலம் செய்தி வந்திருக்கிறதே! அவர்களை எதிர்த்து நம்மால் வெற்றி பெற முடியும் என்றாலும், போர் இரண்டு நாட்களுக்குமே கேடு விளைக்கும் என்பதால் போர் நடப்பதைத் தடுக்க நாம் முயல வேண்டும். என்ன செய்வது?" என்றான் அரசன் நீதிவர்மன்.

"கந்தர்வ நாட்டுக்கு உடனே ஒரு தூதரை அனுப்பிப் போரைத் தடுக்க முயல வேண்டும்" என்றார் அமைச்சர்.

"அவர்கள் போர் தொடுக்கப் போகிறார்கள் என்று அறிந்து நாம் தூதரை  அனுப்பினால் அதை நம் பலவீனமாக அவர்கள் நினைக்க மாட்டார்களா? நாம் போருக்கு அஞ்சுகிறோம் என்று கூட அவர்கள் நினைக்கலாம்."

"அப்படித்தான் நினைப்பார்கள். ஆனால் ஒரு திறமையான தூதரால் அந்த எண்ணத்தை மாற்றி, நம் இரு நாடுகளின் நலனைக் கருதித்தான் நாம் போரைத் தடுக்க விரும்புகிறோம் என்ற எண்ணத்தை உருவாக்க முடியும். ஏன், போரைத் தவிர்ப்பது அவர்களுக்குத்தான் அதிக நன்மை பயக்கும் என்ற எண்ணத்தைக் கூட ஏற்படுத்த முடியும்!"

"நீங்கள் சொல்வது சரிதான் அமைச்சரே! அதனால் நாம் பொருத்தமான ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை தூதராக அனுப்ப வேண்டும்!" என்றான் நீதிவர்மன் அமைச்சரைப் பார்த்துச் சிரித்தபடி.

"அந்தப் பொருத்தமான நபர் யார் என்பது குறித்து எனக்கு ஒரு எண்ணம் இருக்கிறது. தாங்கள் அதை ஏற்றுக் கொண்டால் அவரையே அனுப்பலாம்!" என்றார் அமைச்சர் புன்னகை செய்தபடி.

"நீங்களும் நானும் நினைப்பது ஒரே நபரைப் பற்றித்தான் என்று நினைக்கிறேன். அந்தப் பொருத்தமான நபர்..."

"சொல்லுங்கள் அரசே!"

"நீங்களேதான்! உங்கள் பெயரை நீங்களே சொல்லத் தயங்குவது எனக்குப் புரிகிறது!" என்றான் அரசன்."

"இல்லை அரசே! நான் நினைத்தது இன்னொரு நபரை."

"யார் அந்த நபர்?"

"இளவரசர்தான்!"

"இளவரசனா? அவனுக்கு அனுபவம் போதாது. தூதனாகச் செல்வதற்கு அவன் எப்படிப் பொருத்தமானவனாக இருப்பான்?" என்றான் அரசன்.

"அரசே! கந்தர்வ நாட்டு மன்னிடம் இரண்டு செய்திகளைச் சொல்ல வேண்டும், நம் நாடு எப்போதுமே போரை விரும்பியதில்லை. நம்மை விடச் சிறிய நாடுகளுடன் கூட நாம் நட்பாகவே இருக்க விரும்பி இருக்கிறோம். நம் முயற்சிகளையும் மீறிப் போர் ஏற்பட்டபோதெல்லாம் நாம்தான் வெற்றி பெற்றிருக்கிறோம் . இந்த இரண்டு செய்திகளையும் வலாற்றுப் பின்னணியில் புலவர்கள் மற்றும் வரலாற்று அறிஞர்கள் எழுதி வைத்துள்ள நூல்களை ஆதாரம் காட்டி அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். தூதராகச் சென்று இதைச் செய்ய இந்த இளம் வயதிலேயே பல நூல்களைப் பயின்று ஆய்ந்த அறிவுடன் விளங்கும் நம் இளவரசரை விடப் பொருத்தமானவர் வேறு யார் இருக்க முடியும்?" என்றார் அமைச்சர்.

குறள் 683:
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.

பொருள்:
வேற்று நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி உரைத்திடும் தூதுவன், நூலாய்ந்து அறிந்தவர்களிலேயே வல்லவனாக இருத்தல் வேண்டும்.

684. அமைச்சரின் பரிந்துரையை ஏற்காதது ஏன்?

எதிரி நாட்டுக்குத் தூது சென்று திரும்பிய அறிவானந்தம் அரசரைச் சந்தித்து எதிரி நாட்டு அரசரிடம் தான் பேசியதையும் அவர் கூறிய பதிலையும் கூறினார்.

அறிவானந்தம் சென்றதும் அமைச்சரை அழைத்த அரசர், "அமைச்சரே! தூது சென்ற அறிவானந்தம் திரும்ப வந்து விட்டார். நாம் கூறிய யோசனையை பரிதி நாட்டு மன்னர் கதிர்வேலர் ஏற்றுக் கொண்டு விட்டார்" என்றார்.

"மிக்க மகிழ்ச்சி அரசே!" என்றார் அமைச்சர்.

"உங்கள் வார்த்தையில் தொனிக்கும் மகிழ்ச்சி உங்கள் முகத்திலோ, குரலிலோ பிரதிபலிக்கல்லையே!"என்றார் அரசர் சிரித்தபடி. 

"அப்படி ஒன்றும் இல்லை மன்னரே!" என்றார் அமைச்சர்.

"எனக்குத் தெரியும் அமைச்சரே! நீங்கள் பரிந்துரைத்த ராமதாசரை நான் தூதராக அனுப்பவில்லை என்ற வருத்தம் உங்களுக்கு இருப்பது நியாயம்தான்!"

"அப்படி எதுவும் இல்லை அரசே! ராமதாசர் அறிவுக் கூர்மை மிகுந்தவர், நிறைந்த கல்விப் புலமை அமைந்தவர். அப்படிப்பட்ட ஒருவர் தூதராகச் சென்றால் சிறப்பாக இருக்கும் என்று கருதினேன். அவ்வளவுதான்."

"நீங்கள் கூறியபடி ராமதாசரை அழைத்து அவரை தூதுவராகப் போகும்படி சொன்னேன். அவர்தான் அந்தப் பணிக்குத் தான் பொருத்தமாக இருக்க மாட்டேன் என்று கூறி அறிவானந்தத்தைப் பரிந்துரைத்தார். அறிவானந்தத்துக்கு தூது செல்வது பற்றி ராமதாசர் விரிவாக ஆலோசனைகள் கூற வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன். அதன்படியே ராமதாசரிடம் ஆலோசனை பெற்றுதான் அறிவானதம் தூதராகச் சென்று வந்து தன் பணியை வெற்றிகரமாக முடித்திருக்கிறார்! நீங்கள் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்ததால் உங்களிடம் இந்த விவரங்களை நான் முன்பே கூறவில்லை" என்று விளக்கினர் அரசர்.

 "தான் இந்தப் பணிக்குப் பொருத்தமானவர் இல்லை என்று ராமதாசர் ஏன் கூறினார் என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது அரசே! அப்படி அவர் தன்னைப் பொருத்தமானவர் இல்லை என்று கருதினால் தூதராகச் செல்பவருக்கு அவர் ஆலோசனை வழங்கியது மட்டும் எப்படிப் பொருத்தமாக இருக்க முடியும்?" என்றார் அமைச்சர் குழப்பத்துடன்.

"அமைச்சரே! தூதருக்கு இருக்க வேண்டிய அறிவுக் கூர்மை, கல்வி இரண்டும் ராமதாசரிடம் நிரம்ப இருப்பதால் அவர்தான் தூது செல்லத் தகுதியானவர் என்று நீங்கள் கூறியதை அவரிடம் சொன்னபோது அவர் என்ன சொன்னார் தெரியுமா?"

"என்ன சொன்னார்? "

"'தூதராக இருப்பவருக்கு இன்னொரு தகுதியும் இருக்க வேண்டும் - தோற்றப் பொலிவு! அது என்னிடம் இல்லை. என் மீது கொண்ட அன்பினால் அமைச்சர் அதைப் பொருட்படுத்தவில்லை போலும்! ஆனால் தோற்றப் பொலிவும் தூதருக்கு முக்கியம். அறிவுக் கூர்மை, தோற்றப் பொலிவு, கல்விப் புலமை மூன்றும் நிறைந்த ஒருவர்தான் தூது செல்லத் தகுந்தவர்' என்று கூறி அறிவானந்தத்தைப் பரிந்துரைத்தார்!" என்று கூறி அமைச்சரின் முகத்தைப் பார்த்தார் அரசர்.

ராமதாசரின் அம்மை வடுக்கள் நிறைந்த முகம் அமைச்சரின் மனதில் வந்து போக, அதைத் தான் எப்படிக் கருத்தில் கொள்ளாமல் போனோம் என்று வியந்தார் அமைச்சர்.

குறள் 684:
அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.

பொருள்:
தூது உரைக்கும் செயலை மேற்கொள்பவர் அறிவு, தோற்றப் பொலிவு, ஆய்ந்து தெளிந்த கல்வி ஆகிய மூன்றும் நிறைந்தவராக இருத்தல் வேண்டும்.

685. கதிர்வேந்தனின் கேள்விகள்!

"தூது போகிறவர்கள் தனியாகத்தானே போவார்கள்?" என்று கேட்டான் கதிர்வேந்தன்.

"பொதுவாக அப்படித்தான். ஏன் கேட்கிறாய்?" என்றான் குமாரவிசயன்.

"இல்லை. நீங்கள்தான் தூதர். என்னை ஏன் உங்களுடன் அனுப்பி இருக்கிறார்கள்?"

"நீ எனக்கு உதவியாக இருப்பாய் என்று நினைத்து அனுப்பி இருப்பார்கள்!"

"ஆனால் நான் உங்களுக்கு எந்த விதத்திலும் உதவவில்லையே! அதற்கான தேவையோ, வாய்ப்போ கூட ஏற்படவில்லையே!"

"அப்படியானால் உன்னை ஏன் என்னுடன் அனுப்பி இருக்கிறார்கள் என்பதை நீயே சிந்தித்துத் தெரிந்து கொள்!"

"அதற்கான அவசியத்தைக் கூட அமைச்சர் எனக்கு விட்டு வைக்கவில்லை. உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளத்தான் என்னை உங்களுடன் அனுப்பி வைப்பதாகவும், வாயை மூடிக் கொண்டு உங்கள் பின்னால் சென்று, நீங்கள் பேசுவதையும், செய்வதையும் மட்டும் கவனிக்கும்படி கிளம்பும்போதே அமைச்சர் என்னிடம் சொல்லி விட்டார்!"

"அப்படியானால் என்னிடம் ஏன் கேட்கிறாய்?"

"ஒருவேளை நீங்கள் வேறு ஏதேனும் காரணம் சொல்வீர்களோ என்று நினைத்தேன். உங்களிடம் என்னைப் பற்றி அமைச்சர் என்ன சொன்னார் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?"

"ஓ! நிச்சயமாக. 'இந்தப் பையன் எதிர்காலத்தில் ஒரு சிறந்த தூதனாக வருவான். அப்போது நீ உயிருடன் இருப்பாயோ, என்னவோ! அதனால் இப்போதே அவனைப் பார்த்துக் கற்றுக் கொள்!' என்று சொல்லி அனுப்பினார்!"

"கேலி வேண்டாம் குமாரவிசயரே! உங்களிடம் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் எனக்கு இருக்கிறது. உங்களிடம் சில கேள்விகளையும், விளக்கங்களையும் கேட்கலாமா?"

"தாராளமாகக் கேட்கலாம். ஆனால் அமைச்சர் உன்னை வாயை மூடிக் கொண்டு இருக்கச் சொன்னதாக நீதானே சொன்னாய்!"

"மறுபடியும் கேலியா? உங்களிடம் கற்றுக் கொள்ளும் ஆவலில்தானே கேட்கிறேன்!"

"சரி, கேள்."

"முதலில் என் வியப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். சொல்ல வேண்டிய விஷயங்கள் அனைத்தையும் மிகவும் அழகாக, சுருக்கமாகத் தொகுத்துக் கூறினீர்களே! இந்நாட்டு மன்னர் கூட நீங்கள் சொன்ன விதத்தைக் கேட்டு வியந்தார் என்பதை கவனித்தேன்."

"சொல்ல வேண்டியவற்றைச் சுருக்கமாக, கோர்வையாக, எதையும் விட்டு விடாமல் தொகுத்துச் சொல்ல வேண்டியது ஒரு தூதனுக்கு இருக்க வேண்டிய அடிப்படைத் திறமை. நீ ஒரு தூதனாக வேண்டுமென்றால் இதை முதலில் கற்றுக் கொள்ள வேண்டும்!"

"சரி. நம் நாட்டு வளங்கள் எப்படி இருக்கின்றன என்று அந்த மன்னர் கேட்டதற்கு, இந்த ஆண்டு பருவ மழை அதிகம் பெய்து, பயிர்களில் ஒரு பகுதி சேதமாகி விட்டதால் விவசாயப் பொருள் உற்பத்தி சற்று குறைந்து விட்டதாகக் கூறினீர்கள். உண்மையில் இந்த ஆண்டு நம் நாட்டில் விளைச்சல் அமோகமாக இருந்திருக்கிறதே!"

"உண்மைதான். வரும்போது கவனித்தேன். இவர்கள் நாட்டில் ஓரளவு வறட்சி நிலவுகிறது. இந்த நிலையில் நம் நாட்டில் விளைச்சல் அமோகம் என்று சொன்னால் தங்கள் நாட்டில் வறட்சி நிலவும்போது இவர்கள் நாட்டில் மட்டும் விளைச்சல் அமோகமாக இருந்திருக்கிறதே என்ற எண்ணம் இந்த மன்னர் மனதில் தோன்றக் கூடும். ஒருவர் எவ்வளவு நல்ல மனிதராக இருந்தாலும், இது போன்ற ஒப்பீடுகளும், அதனால் சில எதிர்மறை எண்ணங்களும் ஏற்படத்தான் செய்யும். நம் நாட்டிலும் சிறிது பாதிப்பு இருக்கிறது என்பது அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும். இது மனித இயல்பு. அதனால் நிலைமையை சற்றே மாற்றிச் சொன்னேன். இது பொய் கூறுவதல்ல!"

"புரிகிறது. ஆனால் ஒரு பொய்யையும் நீங்கள் கூறி இருக்கிறீர்கள்!"

"என்ன பொய் அது?"

"நாம் வரும் வழியில் எல்லாம் இந்த நாட்டு மக்கள் நமக்கு உணவும், உறைவிடமும் அளித்ததாகவும் இந்த நாட்டு மக்களின் விருந்தோம்பல் பண்பை வியப்பதாகவும் கூறினீர்கள். அப்படி யாரும் நமக்கு விருந்தோம்பல் அளிக்கவில்லையே! கிடைத்ததை உண்டு அரைப்பட்டினியுடன்தானே பயணம் செய்தோம்?"

"மன்னரிடம் அவர் நாட்டு மக்களைப் பற்றி உயர்வாகச் சொன்னால் அவர் மனம் மகிழாதா? அவர் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தால் நாம் சொல்பவற்றை அமைதியுடன் கேட்டு நமக்கு ஆதரவான பதிலைக் கூற வாய்ப்பு அதிகம் உள்ளது அல்லவா?"

"அப்படித்தானே நடந்திருக்கிறது! தன் நாட்டுக்கு நன்மை பயக்கும் விதத்தில் ஒரு தூதர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை உங்களுடன் வந்த இந்த ஒரு பயணத்திலேயே நிறையக் கற்றுக் கொண்டேன்!" என்றான் கதிர்வேந்தன்.

குறள் 685:
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது.

பொருள்:
அடுத்த அரசிடம் சொல்லவேண்டியவற்றைத் தொகுத்துச் சொல்லியும், அவருக்கு வெறுப்பூட்டக் கூடியவற்றை விலக்கியும், இனிய சொற்களால் அவர் மனம் மகிழும்படி பேசியும், தம் சொந்த நாட்டிற்கு நன்மையைத் தேடித் தர வேண்டியது தூதரின் பண்பாகும்.

686. தேவை ஒரு தூதர்

"நாம் தூதரை அனுப்பப் போவது களஞ்சிய நாட்டுக்கு. களஞ்சிய நாட்டு மன்னன் சேர்வராயன் அறிவாளி. நூல்கள் பல கற்றவன். அதனால் நம் தூதரிடம் நியாயமாகப் பேசுவது போல் வாதிடுவான். பல சரித்திர நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டி தர்க்கம் செய்வான். 

"அதனால் அவனிடம் உண்மைகளை எடுத்துக் கூறவும், அவன் வாதங்களுக்கு பதில் கூறவும் நாம் அனுப்பும் தூதர் நல்ல கல்வி அறிவு உள்ளவராக இருக்க வேண்டும். அவனிடம் நம் கருத்துக்களைத் துணிவாகவும், தெளிவாகவும் எடுத்துச் சொல்லக் கூடியவராக இருக்க வேண்டும். 

"சேர்வராயனிடம் இன்னொரு குணம் உண்டு. தன் வாதங்கள் எடுபடாமல் போனாலோ, மற்றவர் தன் கருத்தில் உறுதியாக இருந்தாலோ அவர்களை அச்சுறுத்த நினைப்பான். தூதர்களுக்கு எந்தத் தீங்கும் இழைக்கக் கூடாது என்ற மரபு இருந்தாலும் தன் கோபமான பார்வையாலும், அச்சுறுத்தும் பேச்சுக்களாலும் துதராக வந்தவரை மிரட்டப் பார்ப்பான். இவற்றையெல்லாம் சமாளிக்கக் கூடிய ஒருர்தான் தூதராகச் செல்ல வேண்டும்."

அரசன் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த அமைச்சர் பதில் கூறவில்லை.

"என்ன அமைச்சரே! நான் குறிப்பிட்ட தகுதிகள் உள்ள யாரும் உங்கள் கவனத்துக்கு வரவில்லையா?"

"ஒருவர் இருக்கிறார் அரசே! ஆனால் அவரைத் தூதராக அனுப்ப முடியுமா என்று தெரியவில்லை!" என்றார் அமைச்சர் தயக்ககத்துடன்.

"யார் அவர்? அவரை ஏன் அனுப்ப முடியாது?"

"தாங்கள் விருப்பப்பட்டால் அனுப்பலாம். ஆனால் அவர் இப்போது சிறையில் இருக்கிறார்!" என்றார் அமைச்சர்.

"சிறையில் இருக்கிறாரா? யார் அவர்?"

"உங்கள் ஒன்று விட்ட சகோதரர் நந்திவர்மர்!" என்றார் அமைச்சர் தயக்கத்துடன்.

"நந்திவர்மனா? ராஜதுரோகக் குற்றத்துக்காகச் சிறையில் இருக்கும் அவன்தான் உங்களுக்குக் கிடைத்தானா?" என்றான் அரசன் கோபத்துடன்.

"அரசே! தாங்கள் அவருக்கு நிர்வாகத்தில் ஒரு பொறுப்புக் கொடுத்தீர்கள். ஆனால் அவர் செய்த சில விஷயங்கள் உங்களுக்குப் பிடிக்கவில்லை. நீங்கள் அவரைக் கூப்பிட்டு விசாரித்தபோது அவர் தன் பக்கத்து நியாயங்களை உங்களிடம் எடுத்துக் கூறினார். அவர் கருத்துக்களை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. 

"தனக்குச் சரியென்று தோன்றும் விதத்திலும் நாட்டு நலனுக்கு எது உகந்தது என்று சிந்தித்தும்தான் செயல்படுவதாக அவர் கூறினார். நீங்கள் கோபமடைந்து அவரைப் பதவிநீக்கம் செய்ததுடன் சிறையிலும் அடைத்து விட்டீர்கள். அவர் தங்களுக்கு எதிராகவோ, நாட்டு நலனுக்கு எதிராகவோ எதையும் செய்யவில்லை. தங்கள் கோபத்துக்கு அஞ்சாமல் தன் கருத்துக்களில் உறுதியாக இருந்ததுதான் அவர் செய்த குற்றம். 

"யோசித்துப் பார்த்தால் தூதராகச் செல்பவருக்கு இருக்க வேண்டிய குணங்கள் அவரிடம் இருப்பதை உணர்வீர்கள். தாங்கள் அவரைச் சிறையிலிருந்து விடுவித்து தூதராக அனுப்புவதுடன் அரசுப் பணிகளில் அவரைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்வது தங்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது என்பது என் பணிவான கருத்து!"

அமைச்சர் தன் கருத்தைக் கூறி விட்டு அரசன் என்ன சொல்லப் போகிறானோ என்ற தயக்கத்துடன் நின்றார்.

ஒரு நிமிடம் மௌனமாக இருந்த அரசன், "அமைச்சரே! உங்கள் பேச்சைக் கேட்டதும், தூதருக்கு இருக்க வேண்டும் என்று நான் குறிப்பிட்ட குணங்கள் நந்திவர்மனிடம் மட்டுமல்ல, உங்களிடமும் இருக்கின்றன என்று அறிந்து கொண்டேன். நந்திவர்மனை விடுதலை செய்து மரியாதையுடன் அழைத்து வரச் சொல்லுங்கள். நானே அவனிடம் பேசுகிறேன்!" என்றான் அரசன்.

குறள் 686:
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது.

பொருள்:
கற்க வேண்டியவற்றைக் கற்று, பிறருடைய பகையான பார்வைக்கு அஞ்சாமல் கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லி, காலத்துக்குப் பொருத்தமானதை அறிந்து செயல்படுபவனே தூதன்.

687. தூதனின் உடல்நிலை

"மரகத நாட்டிலிருந்து தூதர் வந்திருப்பதாகச் சொன்னீர்களே!" என்றான் அரசன் சுபகீர்த்தி.

"ஆம் அரசே! நேற்று இரவு வந்தார். அவரை நம் விருந்தினர் விடுதியில்தான் தங்க வைத்திருக்கிறோம். இன்று காலை தங்களைச் சந்திக்கலாம் என்று கூறி இருந்தோம். ஆனால் இன்று காலை திடீரென்று அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் விட்டது. அதனால் நாளைதான் அவரை அரசவைக்கு அழைத்து வர முடியும் என்று நினைக்கிறேன்."

"உடல்நிலை சரியில்லாவிட்டால் என்ன? அரசவைக்கு வந்து செய்தி சொல்லி விட்டுப் போக வேண்டியதுதானே!" என்றான் சுபகீர்த்தி சற்று எரிச்சலுடன்.

"அவருக்குக் கடுமையான வயிற்றுப் போக்கு அரசே!" என்றார் அமைச்சர் சற்றுத் தயக்கத்துடன்.

டுத்த நாளும் தூதர் வரவில்லை. அரண்மனை வைத்தியர் அவருக்கு மருந்து கொடுத்தும் அவருடைய வயிற்றுப் போக்கு நிற்கவில்லை என்று தகவல் வந்தது.

"அப்படியானால் நீங்களே அவரைச் சந்தித்துச் செய்தி என்ன என்று கேட்டு அறிந்து வாருங்கள்!" என்றான் அரசன், அமைச்சரிடம்.

"அதற்கு முயற்சி செய்தேன் அரசே! ஆனால் செய்தியைத் தங்களிடம்தான் சொல்ல வேண்டும் என்று மரகத நாட்டு மன்னர் அவரிடம் கூறி இருப்பதாகச் சொல்கிறார்!" என்றார் அமைச்சர்.

"அப்படியானால் ஒன்று செய்யலாம். இன்று மாலை நானே விருந்தினர் விடுதிக்குச் சென்று அவரைப் பார்த்து மரகத நாட்டு மன்னர் அவரிடம் சொல்லி அனுப்பியுள்ள செய்தியைக் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன்!" என்றான் சுபகீர்த்தி.

"அரசே! தூதர் இருக்கும் இடத்துக்குத் தாங்கள் செல்வது பொருத்தமாக இருக்காது!"

"ஏலத்தீவு யாருக்குச் சொந்தம் என்பது பற்றி நமக்கும் மரகத நாட்டுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்கும் நிலையில் மரகத நாட்டு மன்னர் என்ன செய்தி சொல்லி அனுப்பி இருப்பார் என்று தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்!" என்றான் அரசன்.

"என்ன தூதரே, உடல்நிலை எப்படி இருக்கிறது?" என்றான் அரசன்.

கட்டிலில் படுத்திருந்த தூதன் மேகநாதன் திடுக்கிட்டவனாக,"அரசே! தாங்களா?" என்றபடி தலையைத் தூக்கி எழுந்திருக்க முயன்றான்.

"சிரமப்பட வேண்டாம். படுத்த நிலையிலேயே நீர் கொண்டு வந்த செய்தியைச் சொல்லும்!" என்றான் சுபகீர்த்தி அதிகார தொனியில்.

"அரசே! தாங்கள் நின்று கொண்டிருக்கும்போது, நான் படுத்துக் கொண்டு தங்களிடம் பேசுவது..."

அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்த அரசன் "இப்போது சொல்லும்!" என்றான்.

மேகநாதன் மெல்லிய குரலில் பேசியது அரசனுக்குக் காதில் சரியாக விழாததால் குனிந்து மேகநாதனின் வாயருகில் காதை வைத்துக் கொண்டு கேட்க வேண்டி இருந்தது.

மேகநாதன் பேசி முடித்ததும் அரசனின் முகம் சிவந்தது. கோபத்தில் வாளை உருவப் போனவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு எழுந்தான்.

அகிலிருந்த அமைச்சர் அரசனின் படபடப்பைப் பார்த்து விட்டு, "அரசே! தூதர் கூறிய செய்தி என்ன?" என்றார் தயக்கத்துடன்.

"ஏலத்தீவு மரகத நாட்டுக்குச் சொந்தமானதாம். அங்கிருக்கும் நம் படைகளை நாம் உடனே விலக்கிக் கொள்ளாவிட்டால், மரகத நாட்டின் கப்பல் படையை அனுப்பி அந்தத் தீவில் இருக்கும் நம் மொத்தப் படைகளையும் அழித்து விடுவானாம்! இந்தச் செய்தியை இவன் நம் அரசவையில் கூறி இருந்தால் எனக்குப் பெருத்த அவமானமாகி இருக்கும். அந்த நிலையில் இவனை என்ன செய்திருப்பேனோ தெரியாது. இவனுக்கு உடல்நிலை சரியனாலும், சரியாகாவிட்டாலும், இவனை நாளைக் காலை நம் நாட்டின் எல்லைக்கு வெளியே கொண்டு விடச் செய்யுங்கள்!" என்று அமைச்சரிடம் கூறி விட்டுக் கோபமாக வெளியேறினான் சுபகீர்த்தி.

மேகநாதனின் முகத்தைப் பார்த்த அமைச்சருக்கு அவன் இதழோரத்தில் ஒரு புன்னகை தவழ்ந்ததாகத் தோன்றியது. 

குறள் 687:
கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை.

பொருள்:
தன் கடமை இன்னதென்று தெளிவாக அறிந்து, அதைச் செய்வதற்கு ஏற்ற காலத்தைக் கருத்தில் கொண்டு, தக்க இடத்தையும் ஆராய்ந்து செய்தியைச் சொல்கின்றவனே தூதன்.

688. தூதரைப் பின்தொடர்ந்து...

"சித்திரச் செல்வனை முதல்முறையாக தூதராக அனுப்புகிறோமே, அவர் சரியாகச் செயல்படுவாரா?" என்றான் அரசன்.

"எவருக்கும் முதல்முறை என்று ஒன்று இருக்கிறது அல்லவா அரசே? நந்தி நாடு நம் நட்பு நாடுதானே! அங்கே சென்று வரும் அனுபவம் அவருக்குப் பயனுள்ளதாக இருக்கும்" என்றார் அமைச்சர்.

"சரி. போய்விட்டு வரட்டும். பார்க்கலாம்!" என்றார் அரசர்.

"அமைச்சரே! சித்திரச் செல்வன் தூது சென்று வந்து விட்டார். அவர் தன் பணியைச் சரியாகச் செய்திருப்பதாகத்தான் தோன்றுகிறது!" என்றான் அரசன்.

"ஆம் அரசே! அதை என்னால் உறுதியாகவே சொல்ல முடியும்" என்றார் அமைச்சர்.

"அது எப்படி?"

"அரசே! என்னை மன்னிக்க வேண்டும். உங்கள் அனுமதி இல்லாமல் தூதரைக் கண்காணிக்க ஒரு ஏற்பாடு செய்தேன்!" என்றார் அமைச்சர்.

"அது என்ன ஏற்பாடு?"

"நந்தி நாட்டில் இருக்கும் நம் ஒற்றன் ஒருவனிடம் சித்திரச் செல்வனைக் கண்காணிக்கச் சொல்லிச் செய்தி அனுப்பினேன். சித்திரச் செல்வன் நந்தி நாட்டில் அடி வைத்தது முதல் அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் அந்த ஒற்றன் கண்காணித்திருக்கிறான். சித்திரச் செல்வன் திரும்பி வருவதற்குள் சங்கேத மொழியில் அந்த ஒற்றன் அனுப்பிய ஓலை எனக்கு வந்து சேர்ந்து விட்டது."

"தூதரை ஒற்றன் மூலம் கண்காணிக்கச் செய்தது முறையற்றதல்லவா?"

"உண்மைதான் அரசே! ஆனால் முதல் முறை தூதராகச் செல்பவர் எப்படிச் செயல்படுகிறார் என்று அறிந்து கொள்ள வேண்டாமா? நீங்கள் கூட இது பற்றிக் கவலை தெரிவித்தீர்களே!" என்றார் அமைச்சர் தயக்கத்துடன்.

"சரி, இருக்கட்டும். ஒற்றன் சொன்ன தகவல்களைக் கூறுங்கள்."

"நந்தி நாட்டில் இருந்தபோது தன் ஒழுக்கத்தைக் காப்பாற்றிக் கொள்வதில் சித்திரச் செல்வன் மிகவும் முனைப்பாக இருந்திருக்கிறார். என் ஒற்றனே அவரிடம் ஒரு விலைமகளை அனுப்பி அவரைச் சோதித்திருக்கிறான். சித்திரச் செல்வன் அவளிடம் மயங்காமல் அவளைத் திருப்பி அனுப்பி விட்டார்.

"இரண்டாவதாக, அந்த நாட்டில் தனக்கு உதவ, அறிவும், துணிவும் மிகுந்த ஒரு உள்ளூர் மனிதருடன் சித்திரச் செல்வன் நட்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

"மூன்றாவதாக நந்தி நாட்டு மன்னரிடம் தாங்கள் அனுப்பிய செய்தியைச் சொல்லும்போது துணிவுடன் செயல்பட்டிருக்கிறார். மன்னர் கேட்ட கேள்விகளுக்கு உண்மையான விடைகளைக் கூறி இருக்கிறார். அவர் தெரிவிக்கக் கூடாத சில விவரங்களை மன்னர் துருவிக் கேட்டபோது அவை தனக்குத் தெரியாது என்றும், தெரிந்தாலும் தான் அவற்றை வெளிப்படுத்த மாட்டேன் என்றும் துணிவுடன் கூறி இருக்கிறார்."

"நல்லது அமைச்சரே! தூதரைப் பற்றிய இந்த விவரங்களை நீங்கள் கண்டறிந்தது பற்றி மகிழ்ச்சி. ஆயினும் தூதரைப் பின்தொடர்ந்து ஒரு ஒற்றரை அனுப்பினீர்களே, அதை..." என்றான் அரசன்.

அமைச்சர் மௌனமாக அரசரின் முகத்தைப் பார்த்தார்.

"அதை என்னால் குற்றம் என்று கருத முடியாது. ஏனெனில் நானும் அதே குற்றத்தைச் செய்திருக்கிறேன்!" என்றான் அரசன்.

"என்ன சொல்கிறீர்கள் அரசே?" என்றார் அமைச்சர் குழப்பத்துடன்.

"தூதரின் செயல்பாட்டைக் கண்காணிக்க நீங்கள் ஒரு ஒற்றனை அனுப்பியது போல் நானும் ஒரு ஒற்றனை அனுப்பினேன்.  நான் அனுப்பிய ஒற்றனும் நீங்கள் அனுப்பிய ஒற்றன் கூறிய அதே தகவல்களைத்தான் கூறினான்!" என்றான் அரசன் சிரித்தபடி.

குறள் 688:
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.

பொருள்:
தூய ஒழுக்கம், நல்ல துணை, துணிவு இம்மூன்றுடன் சேர்ந்த வாய்மை இவற்றைக் கொண்டு தூதுரைப்பதே தூதரின் பண்பு.

689. சொல்ல நினைத்து...

தூதனாக வந்த சிரவணன் தான் கொண்டு வந்த செய்தியை மன்னன் அபிஷேகவல்லபனிடம் சொல்லி முடித்து விட்டான். மன்னனுக்கு சிரவணனை மிகவும் பிடித்துப் போய் விட்டது.

அதனால் சிரவணனை இருக்கையில் அமரச் செய்து அவனிடம் சற்று நேரம் உரையாடினான் மன்னன்.

பேசிக் கொண்டிருந்தபோது, அபிஷேகவல்லபன், "உங்கள் மன்னருக்கு அவருடைய ஒன்று விட்ட சகோதரர்கள் பிரச்னை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறதே!" என்றான்.

"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை!" என்றான் சிரவணன், தங்கள் நாட்டு அரச குடும்பத்தின் விஷயங்களை இன்னொரு நாட்டு மன்னனிடம் பேச விரும்பாமல்.

"உங்கள் மன்னரின் ஒன்று விட்ட சகோதரர் சூரியகேசி தனக்கு எதிராகச் சதி செய்து வருவதாக உங்கள் மன்னரே என்னிடம் கூறி இருக்கிறாரே!" என்றான் அபிஷேகவல்லபன் விடாமல்.

"எனக்குத் தெரியாது அரசே! எங்கள் அரசருக்கு மக்கள் ஆதரவு நிறைய இருக்கிறது. ஏனெனில் அவர் முறையாக..." என்று ஆரம்பித்த சிரவணன் தான் செய்யவிருந்த தவற்றை உணர்ந்து "முறையாக ஆட்சி செய்து வருகிறார்!" என்று புன்னகையுடன் கூறி முடித்தான்.

'நல்ல வேளை! 'எங்கள் மன்னன் முறையாகப் பிறந்தவர்!' என்று நான் சொல்ல ஆரம்பித்ததைச் சொல்லி முடித்திருந்தால், தன் தந்தைக்கு முறையாகப் பிறக்காமல் அவருக்கு முறையாகப் பிறந்த இளவரசரைக் கொன்று விட்டு ஆட்சிக்கு வந்த அபிஷேகவர்மன் அதைத் தன்னைக் குத்திக் காட்டுவதாக எடுத்துக் கொண்டிருப்பான். அதனால் நான் வெற்றிகரமாகச் செய்து முடித்த தூது பயனில்லாமல் போய் இரு நாடுகளுக்கும் விரோதம் கூட ஏற்பட்டிருக்கும். ஒரு பெரும் அபாயத்திலிருந்து என்னையும், என் நாட்டையும் காத்து விட்டேன். உரிய நேரத்தில் என் சிந்தனையைச் சரியாகச் செயல்பட வைத்து நான் செய்ய இருந்த தவறைத் தடுத்த இறைவனுக்கு நன்றி!' என்று நினைத்துக் கொண்டான் சிரவணன்.

குறள் 689:
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்கணவன்.

பொருள்:
ஓர் அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன், வாய் தவறிக் கூட, குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதி படைத்தவனாக இருத்தல் வேண்டும்.

690. தோளில் விழுந்த வெட்டு!

"பொன்னி நாட்டுக்குத் தூது போகும் உனக்கு ஏற்படக் கூடிய ஆபத்துகளைத் தெரிவிக்க வேண்டியது என் கடமை!" என்றார் அமைச்சர்.

"ஆபத்துகள் பற்றி எனக்கு அச்சம் இல்லை அமைச்சரே!" என்றான் தூது செல்லத் தேர்ந்தெடுக்கப்பட்ட காத்தவராயன்.

"காத்தவராயா! உனக்கு அச்சம் இல்லை என்பதை நான் அறிவேன். அதனால்தான் உன்னைத் தூதனாக அனுப்ப அரசரிடம் பரிந்துரை செய்தேன். ஆயினும் வரக் கூடிய  ஆபத்துகளை முன்பே அறிந்திருப்பதுதானே புத்திசாலித்தனம்!"

அமைச்சர் கூறியவற்றை கவனமாகக் கேட்டுக் கொண்டான் காத்தவராயன்.

"பாராட்டுக்கள் காத்தவராயா! உன் தூதை வெற்றிகரமாக முடித்திருக்கிறாய். நாம் அனுப்பிய சமாதான யோசனையைப் பொன்னி நாட்டு மன்னர் ஏற்றுக் கொண்டு உன் மூலமே பதில் ஓலை அனுப்பி இருக்கிறாரே! போரைத் தவிர்த்து விட்டோம். இது நம் நாட்டு மக்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் செய்தி!" என்றார் அரசர்.

"அரசே! தூதர் தங்களை ஒரு கையால் வணங்கினாரே, அது தவறு இல்லையா?" என்றார் அமைச்சர்.

"காத்தவராயர் தன் தூதை வெற்றிகரமாக முடித்துப் பொன்னி நாட்டு மன்னரிடமிருந்து ஒரு நல்ல செய்தியுடன் வந்திருக்கிறார். அவர் ஒரு கையால் வணங்கியதை நான் கவனிக்கவில்லை. கவனித்திருந்தாலும் பொருட்படுத்தி இருக்க மாட்டேன். காத்தவராயர் மரியாதை தெரிந்தவர். அவர் ஒரு கையால் வணங்குகிறார் என்றால் இன்னொரு கையில் சுளுக்கு ஏற்பட்டிருக்கலாம்!" என்றார் மன்னர் சிரித்தபடி.

"சுளுக்கு இல்லை அரசே! அவருடைய வலது தோளில் வாளால் வெட்டப்பட்ட காயம் உள்ளது!" என்றார் அமைச்சர்.

"என்ன, வாள் வெட்டா? அது எப்படி நேர்ந்தது?" என்றர் அரசர் அதிர்ச்சியுடன்.

"அரசே! பொன்னி நாட்டு அரசருக்கு எதிராகச் செயல்படும் அவருடைய உள்நாட்டு எதிரிகள் சிலர் நம் இரு நாடுகளிடையே போரை விரும்புகிறார்கள். அப்படி ஒரு போர் நடந்தால், பொன்னி நாட்டு மன்னர் போரில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போது அரண்மனையில் உள்ள சில சதிகாரர்கள் உதவியுடன் அவரைச் சிறைப்பிடித்து விட்டு தங்களில் ஒருவர் அரசுக் கட்டிலில் அமரலாம் என்று அவர்கள் திட்டமிட்டிருப்பதை ஒற்றர்கள்  மூலம் நான் அறிந்தேன். அதனால் நம் சமாதான முயற்சியைச் சீர்குலைக்க அவர்கள் முயல்வார்கள் என்றும், அதன் ஒரு பகுதியாக, அவர்கள் நம் தூதரின் உயிருக்கே ஆபத்து விளைவிக்க முயல்வார்கள் என்றும் நான் எதிர்பார்த்தேன். அதனால் இங்கிருந்து கிளம்பும்போதே காத்தவராயரை எச்சரிக்கை செய்துதான் அனுப்பினேன்" என்றார் அமைச்சர்.

"ஆனால் உங்கள் எச்சரிக்கை பயனளிக்காமல் போய் விட்டதே! தூதர் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்றால் அவரை அனுப்பியதையே தவிர்த்திருக்கலாமே!" என்றார் அரசர்.

"நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு, போரைத் தவிர்ப்பதற்கான முயற்சியில், தூதரை அனுப்ப வேண்டியது அவசியமாக இருந்தது. அவருடைய உயிருக்கு நேரக் கூடிய ஆபத்து பற்றியும், அதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் பற்றியும் காத்தவராயரிடம் அவர் கிளம்புவதற்கு முன்பே விரிவாக விளக்கினேன். தன் உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்று தெரிந்துதான் அவர் தூது செல்ல ஒப்புக் கொண்டார். ஆபத்தை உணர்ந்து அவர் எச்சரிக்கையுடன் இருந்ததால்தான் அவர் மீது நடந்த தாக்குதலிலிருந்து அவர் உயிர் தப்பினார். அத்துடன் காத்தவராயர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி அறிந்த பொன்னி நாட்டு அரசர் சதிகாரர்களைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்து விட்டார். அதனால் அவர் பதவிக்கு ஏற்படவிருந்த ஆபத்தும் நீங்கி விட்டது. காத்தவராயர் தாக்கப்பட்டது ஒரு விதத்தில் பொன்னி நாட்டுக்கு நன்மை பயத்திருக்கிறது! தனக்குக் காயம் ஏற்பட்டது பற்றித் தங்களிடம் கூற வேண்டாம், அது தங்களுக்கு மனவருத்தம் ஏற்படுத்தும் என்று காத்தவராயர் என்னிடம் கேட்டுக் கொண்டார். ஆயினும் அவர தன் உயிருக்கு ஏற்படக் கூடிய ஆபத்தையும் பொருட்படுத்தாமல் தூது சென்று வந்தது தங்களுக்குத் தெரிய வேண்டும் என்பதால்தான் அவர் தங்களை ஒரு கையால் வணங்கினார் என்று அவர் மீது குற்றம் கூறுவது போல் ஆரம்பித்து உங்களிடம் அவர் தாக்கப்பட்டதைக் கூறினேன்!" என்றார் அமைச்சர்.

"தன் உயிருக்கு ஏற்படக் கூடிய ஆபத்தைப் பற்றி அஞ்சாமல் தூது சென்று தன் பணியைச் சிறப்பாக முடித்து இரு நாடுகளுக்குமே பெரும் நன்மையை விளைவித்திருக்கும் காத்தவராயருக்கு எத்தகைய பரிசை வழங்கினாலும் தகும்!" என்றார் அரசர், காத்தவராயனைப் பெருமையுடன் பார்த்தபடி.

குறள் 690:
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.

பொருள்:
தம் அரசு சொல்லி அனுப்பிய செய்தியை அடுத்த அரசிடம் சொல்லும்போது தம் உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் அஞ்சாமல் தம் அரசிற்கு நன்மை தேடித் தருபவரே நல்ல தூதர்.


             அறத்துப்பால்                                               காமத்துப்பால்   


No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...