அதிகாரம் 93 - கள்ளுண்ணாமை

திருக்குறள்
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 93
கள்ளுண்ணாமை

921. யாருடன் போட்டி?

"இந்தத் துறையில எதிரிகளை வீழ்த்தினாதான் முன்னுக்கு வர முடியும்" என்றார் முன்னணி நடிகர் வினோதின் ஆலோசகர் வசந்தன்.

"எதிரிகளை எப்படி வீழ்த்த முடியும்? எனக்குன்னு ரசிகர்கள் இருக்கிற மாதிரி, மற்ற நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பாங்க. யாருக்கு அதிக பாபுலாரிடி இருக்கசுணும்கறதை நம்மால எப்படி முடிவு செய்ய முடியும்?" என்றார் வினோத்.

"சார்! இது பழைய காலம் இல்ல. ஒரு கட்சியையோ, தலைவரையோ தேர்தல்ல ஜெயிக்க வைக்கக் கூட உத்திகளைப் பயன்படுத்தற காலம். உங்க பாபுலாரிடி உங்களுக்கு எத்தனை ரசிகர்கள் இருக்காங்கங்கறதை மட்டும் பொருத்தது இல்ல. பொதுமக்கள்கிட்ட உங்களுக்கு எப்படிப்பட்ட இமேஜ் இருக்குங்கறதையும் பொருத்தது. டெக்னாலஜி, சோஷியல் மீடியா இதெல்லாம் வளர்ந்திருக்கிற இந்தக் காலத்தில, ஒத்தரோட இமேஜைத் தூக்கி நிறுத்தவும் முடியும், கீழே போட்டு உடைக்கவும் முடியும்!"

"எனக்குப் புரியல. என்னவோ செய்யுங்க. ஆனா, என்னோட எதிரிகள் என்னோட இமேஜை உடைக்கிற மாதிரி ஏதாவது செஞ்சுடப் போறாங்க!" என்றார் வினோத், சிரித்துக் கொண்டே.

"கவலைப்படாதீங்க. உங்களைப் பாதுகாக்கத்தான் நான் இருக்கேனே! சரி. நான் ஒரு பிளான் போட்டுக்கிட்டு வரேன். அதை நீங்க பார்த்துட்டு அப்ரூவ் பண்ணுங்க!" என்றார் வசந்தன்.

"உங்க பிளான் நல்லாத்தான் இருக்கு. ஆனா, இதில நீங்க ரஞ்சித்தை இல்ல டார்கெட் பண்றீங்க? ரஞ்சித் வளர்ந்து வர ஒரு நடிகர். ஆனா, எனக்கு முக்கியப் போட்டியா இருக்கறவரு விசித்ரன் தானே?" என்றார் வினோத்.

"இல்லை சார். விசித்ரன் உங்களுக்குப் போட்டி இல்லை. உங்களுக்கு மட்டும் இல்ல, வேற எந்த நடிகருக்கும் அவர் போட்டியா இருக்க மாட்டாரு!"

"என்ன சார் சொல்றீங்க? நானும் விசித்ரனும் கிட்டத்தட்ட ஒரே லெவல்ல இருக்கோம். எங்க ரெண்டு பேருக்குள்ளதான் போட்டின்னு சின்னக்  குழந்தைக்குக் கூடத் தெரியுமே!" என்றான் வினோத், சற்றே கோபத்துடன்.

"சார்! அது கடந்த காலத்தில. விசித்ரனுக்கு குடிப்பழக்கம் இருக்கு. அது வெளியில தெரியாது. ஆனா, அது இப்ப அதிகமாயிடுச்சு. அவரால இனிமே ஃபீல்டில நிலைச்சு நிக்க முடியாது!"

"எப்படி அவ்வளவு நிச்சயமா சொல்றீங்க? விசித்ரன் ஒரு கடும் உழைப்பாளிங்கறது எனக்குத் தெரியும்!"

"எப்படிப்பட்ட உழைப்பாளியா இருந்தாலும், குடிப்பழக்கம் அவரை அழிச்சுடும். இப்பவே கொஞ்ச நாளா அவருக்குப் புதுப் படம் எதுவும் புக் ஆகல. நீங்க வேணும்னா ரெண்டு மூணு மாசம் பார்த்துட்டு அப்புறம் என்னைக் கூப்பிடுங்க. அதுக்கப்பறம் இந்த பிளானை நாம செயல்படுத்தலாம்!" என்று சொல்லி விடைபெற்றார் வசந்தன்.

அடுத்த சில வாரங்களிலேயே விசித்ரன் புக் செய்யப்பட்டிருந்த சில படங்கள்  கைவிடப்பட்டன என்ற செய்தி வினோதுக்குக் கிடைத்தது.

குறள் 921:
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.

பொருள்: 
கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும் இழந்து விடுவார்.

922. தனியே ஒருவன்

பரணிதரன் அந்த நிறுவனத்தில் ஒரு இளம் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், நிறுவனத்தின் பயிற்சிக் கல்லூரியில் ஒரு மாதம் பயிற்சிக்கு அனுப்பப்பட்டான். 

அவனுடன் சேர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பது இளம் அதிகாரிகள் அந்தப் பயிற்சியில் கலந்து கொண்டனர்.

பயிற்சி முடியும் தறுவாயில், பயிற்சிக் கல்லூரியின் முதல்வர் அவர்களிடம் பேசினார்.

"ஒரு மாசமா எல்லாரும் பயிற்சியில கலந்துக்கிட்டீங்க. இங்கேயே தங்கி மெஸ்ஸில சாப்பிட்டீங்க. இந்த சாப்பாடு உங்களுக்கு அலுத்துப் போயிருக்கும். அதனால, உங்க எல்லாருக்கும் நாளைக்கு ஹோட்டல் ரத்னாவில டின்னர் ஏற்பாடு செஞ்சிருக்கோம். இந்தப் பயிற்சிக் கல்லூரி வளாகத்தில மது அருந்த அனுமதி இல்ல. ஆனா, நாளைக்கு நடக்கப் போற பார்ட்டியில டிரிங்கஸ் உண்டு!" என்று கூறி, அவர்களைப் பார்த்துக் கண் சிமிட்டினார்.

பலரும் 'ஓ' என்று கூவி அவர் கூறியதை வரவேற்றனர்.

"என்னப்பா! எல்லாரும் பெக் மேல பெக்னு வெளுத்துக்கட்டிக்கிட்டிருக்காங்க. நீ மட்டும் கூல் டிரிங்க்கை வச்சுக்கிட்டு உக்காந்துக்கிட்டிருக்க! பழக்கம் இல்லையா?"என்றார் பயிற்சிக் கல்லூரி முதல்வர், பணிதரனிடம் வந்து.

"இல்லை சார்!" என்றான் பரணிதரன், பணிவுடன்.

"பல பேர் இந்தப் பழக்கம் இல்லாதவங்களாத்தான் இருப்பாங்க. இங்கேதான் ஆரம்பிப்பாங்க. இந்த மாதிரி ஒரு நல்ல ஹோட்டல்ல உயர்தமான சரக்கு கிடைக்கறப்ப, சும்மா விடுவாங்களா? இதையே இந்த ஹோட்டல்ல தனியா வந்து பணம் கொடுத்து சாப்பிட முடியுமா? பரவாயில்ல. கொஞ்சம் குடி" என்று ஒரு கோப்பையை அவனிடம் நீட்டினார் அவர்.

"மன்னிச்சுக்கங்க சார்! எனக்கு வேண்டாம்" என்றான் பரணிதரன், சங்கடத்துடன்.

"என்னப்பா நீ? நாளைக்கே நீ பெரிய அதிகாரியா ஆனப்பறம், நிறைய மீட்டிங் எல்லாம் அட்டெண்ட் பண்ண வேண்டி இருக்கும். மது இல்லாத மீட்டிங்கே கிடையாது. மரியாதைக்காகவாவது கொஞ்சம் குடிக்க வேண்டி இருக்கும். அதனால, பழகிக்க. அளவோட குடிச்சா ஒண்ணும் ஆகாது."

"இல்லை சார். என்னோட கிராமத்தில யாரும் குடிக்கறதில்லேன்னு உறுதியா இருக்காங்க. கிராமத்திலேந்து நகரங்களுக்கு வேலைக்காகப் போனப்பறமும், நாங்க அப்படித்தான் இருக்கணும்னு எங்க ஊர்ப் பெரியவங்க எதிர்பார்ப்பாங்க. அப்படி நகரங்களுக்குப் போய் குடிப்பழக்கத்தை ஏற்படுத்திக்கிட்டவங்க, எங்க ஊர்ப் பெரியவங்க முகத்தல முழிக்க பயந்துகிட்டு கிராமத்துக்கே வரதில்லை."

"என்னப்பா நீ சொல்றது? நீயும் அது மாதிரி கிராமத்துக்குப் போகாம இருந்துட்டுப் போ. அப்படியே போனாலும், எனக்குக் குடிப்பழக்கம் இல்லேன்னு சொல்லிடு. அவங்களுக்குத் தெரியவா போகுது? உன் கிராமத்தில இருக்கற பெரியவங்களுக்காக நீ ஏன் பயப்படணும்?"

"மன்னிச்சுடுங்க சார்! எங்க ஊர்ப் பெரியவங்களை நான் ரொம்ப மதிக்கிறேன். நான் குடிக்காம இருந்தாதான், அவங்களுக்கு என் மேல ஒரு மதிப்பு இருக்கும். அந்த மதிப்பை நான் இழக்க விரும்பல!" என்றான் பரணிதரன், பணிவும் உறுதியும் கலந்த குரலில்.

குறள் 922:
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.

பொருள்: 
மது அருந்தக் கூடாது; சான்றோர்களின் நன்மதிப்பைப் பெற விரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம்.

923. மேகலா சொன்ன பொய்

செந்தில் அலுவலகத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பியதும், அவன் தாய் மேகலா எப்போதும் செய்வது போல், முன்னறையிலிருந்து உள்ளே சென்று விட்டாள்.

அரை மணி நேரம் கழித்து முன்னறைக்கு வந்த மேகலா, அங்கே அமர்ந்திருந்த செந்திலைப் பார்த்து, "சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன். போட்டுக்கிட்டு சாப்பிடு!" என்றாள்.

செந்தில் மௌனமாகத் தலையாட்டினான்.

செந்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அங்கே வந்த மேகலா, "இன்னிக்கு மாமா வந்திருந்தாரு!" என்றாள்.

மேகலா மாமா என்று குறிப்பிட்ட நபர் அவளுடைய சகோதரர் அல்ல. செந்திலின் தந்தை பூபதியின் நண்பர். பூபதி இறந்த பிறகு, அவர்கள் குடும்பத்துக்கு உறுதுணையாக இருந்தவர். செந்தில் அவரை மாமா என்றுதான் அழைப்பான். மேகலா, செந்தில் இருவருக்குமே அவர் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் உண்டு. 

"மாமாவா?" என்றான் செந்தில் வியப்புடன். "போயிட்டாரா? என்னைப் பாக்காம போக மாட்டாரே!"

"அவர் இருந்து உன்னைப் பார்த்துட்டுப் போறேன்னுதான் சொன்னாரு. நான்தான் நீ நைட் ஷிப்ட் பாத்துட்டுக் காலையிலதான் வருவேன்னு பொய் சொல்லி அவரை அனுப்பிட்டேன்."

"ஏம்மா அப்படிச் சொன்னே?"

"ஏண்டா, தினமும் நீ வீட்டுக்கு வரச்சே, குடிச்சுட்டு வர. குடிபோதையில உன்னைப் பார்க்க முடியாமதான், ஒரு அம்மாவா உனக்கு சோறு கூடப் பரிமாறாம, மேஜை மேல சாப்பாடு எடுத்து வச்சுட்டு, உன்னையே போட்டுக்கிட்டு சாப்பிடச் சொல்றேன். அந்த நல்ல மனுஷன், உன் அப்பா போனப்புறம், ஒரு அப்பாவா இருந்து, உன்னைக் கனிவோடயும், கண்டிப்பாவும் வளர்த்தாரு. நீ ஒரு சின்னத் தப்பு பண்ணினாக் கூட, உரிமையோட உன்னைக் கண்டிப்பாரு. உன் மேல அவ்வளவு அக்கறை அவருக்கு! நீ வீட்டுக்கு வரப்ப, குடிபோதையில இருக்கறதை என்னாலேயே பார்க்க முடியலையே, அவர் பார்த்தா, அவர் மனசு உடைஞ்சு போயிடாது? இந்த நிலைமையில உன்னை அவர் பார்க்கக் கூடாதுன்னுதான், அந்த நல்ல மனுஷனை சாப்பிட்டுட்டுப் போங்கன்னு கூடச் சொல்லாம சீக்கிரமே அனுப்பி வச்சுட்டேன்."

பேசி முடிக்கும்போதே, வெடித்து வந்த அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல், விம்மிக் கொண்டே உள்ளே சென்றாள் மேகலா.

குறள் 923:
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.

பொருள்: 
பெற்ற தாயின் முகத்திலும் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும், அப்படியானால், குற்றம் கடியும் இயல்புடைய சான்றோரின் முகத்தில் அது என்னவாகும்?

924. சென்ஸிடிவ் சதா!

"சட்டை போட்டுக்காம உடம்பைக் காட்டிக்கிட்டு வீட்டு வாசல்ல உக்காந்துக்கிட்டிருக்கறவங்க, தெருவில நடந்து போறவங்க இவங்களையெல்லாம் பாத்தா எனக்கு அருவருப்பா இருக்கு!" என்றான் சதா.

"அவங்க எப்படியோ இருந்துட்டுப் போறாங்க. உனக்கென்னடா?" என்றேன் நான்.

"பொது இடத்தில உடம்பைக் காட்டிக்கிட்டிருக்கமேன்னு ஒரு வெட்க உணர்வு இருக்க வேண்டாமா?" என்றான் சதா கோபத்துடன், ஏதோ நானே சட்டை அணிந்து கொள்ளாமல் அவன் முன் நின்றது போல்!

"நீ ரொம்ப சென்ஸிடிவா இருக்கடா!" என்றேன் நான்.

நான் அலுவலகத்தில் இருந்தபோது, எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

சதாதான்!

"என்னடா சதா?" என்றேன் நான்.

ஆனால், தொலைபேசியில் கேட்ட குரல் வேறொருவருடையது.

"சார்! இங்கே ஒருத்தர் சாலை ஓரமா மயக்கம் போட்டு விழுந்திருக்காரு. குடிச்சிருப்பாருன்னு நினைக்கிறேன். அவர் ஃபோன்ல இருந்த கால் லிஸ்ட்ல உங்க பேரு முதல்ல இருந்ததால உங்களுக்கு கால் பண்றேன்" என்றார் .

அலுவலகத்தில் அனுமதி பெற்று, அவர் குறிப்பிட்ட இடத்துக்கு விரைந்தேன்.

சாலை ஓரத்தில் சதா படுத்திருந்தான். அப்போதுதான் மயக்கம் நீங்கியவனாக, உடலை அசைத்துக் கொண்டிருந்தான்.

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் ஒரு சில விநாடிகள் நின்று, அவனைப் பார்த்து விட்டுச் சென்றனர்.

நான் அவன் அருகில் சென்று பார்த்தபோது, அவனுடைய வேட்டி அவிழ்ந்து பரந்து கிடக்க, உள்ளாடை தெரிய மல்லாந்து படுத்துக் கிடந்தான்.

நான் அருகில் சென்றதும், என்னைப் பார்த்து, "என்னைக் கொஞ்சம் கையைப் பிடிச்சுத் தூக்கி விடுடா!" என்றான்.

தன் வேட்டி அவிழ்ந்திருப்பதை அறியாமலோ, அல்லது அதைப் பொருட்படுத்தாமலோ அவன் இருந்தது எனக்கு வேதனை அளித்தது.

குறள் 924:
நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

பொருள்: 
நாணம் என்று சொல்லப்படும் நல்லவள், கள் என்று சொல்லப்படும் விரும்பத்தகாத பெருங்குற்றம் உடையவர்க்கு எதிரே நிற்காமல் திரும்பிக் கொள்வாள்.
925. அண்ணனின் ஆச்சரியம்!

வீட்டுக்குள் நுழைந்ததும், பெட்டியைக் கீழே வைப்பதற்கு முன்பே, "அப்பா எப்படி இருக்காரு?" என்றான் ராமச்சந்திரன், பதட்டத்துடன்.

"இப்ப பரவாயில்லை. இன்னிக்கு சாயந்திரம், ஐ சி யூவிலேந்து சாதாரண ரூமுக்கு மாத்தறதா சொல்லி இருக்காங்க. நாலைஞ்சு நாள்ள டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்களாம்" என்றாள் அவன் தாய் மரகதம்.

"நான் துபாய்க்குப் போன சமயத்திலேயா இப்படி நடக்கணும்! லட்சுமணன் ஃபோன் பண்ணினதும் பதறிப் போயிட்டேன். உடனே கிளம்பி வர முடியல. அங்கே சில ஏற்பாடுகள் பண்ணிட்டுக் கிளம்பி வரதுக்குள்ள, நாலைஞ்சு நாள் ஆயிடுச்சு."

"திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாரு. நான் உள்ளே இருந்தேன். லட்சுமணன் பக்கத்திலேயே இருந்திருக்கான். உடனே ஆம்புலன்சுக்கு ஃபோன் பண்ணி, ஆஸ்பத்திரியில கொண்டு சேர்த்துட்டான். உடனே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வந்ததால காப்பாத்த முடிஞ்சுது, கொஞ்சம் தாமதமாயிருந்தா, கஷ்டமா இருந்திருக்கும்னு டாக்டர் சொன்னாரு" என்றாள் மரகதம்.

"அப்பாவைப் பார்த்துக்க ஆஸ்பத்திரியில யார் இருக்காங்க?" என்றான் ராமச்சந்திரன்.

"ஐசியூ- வில இருக்கறப்ப யாரும் துணைக்கு இருக்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க. சாயந்திரம் அவரை சாதாரண ரூமுக்கு மாத்தினப்பறம், நாம போய்ப் பார்த்தாப் போதும்"

"அப்ப, லட்சுமணன் எங்கே?"

மரகதம் தலையை நிமிர்த்திப் பக்கத்திலிருந்த அறையைக் காட்டினாள்.

ராமச்சந்திரன் புரிந்து கொண்டதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டினான்.

ராமச்சந்திரன் குளித்து. உணவருந்தி விட்டுத் தன் அறைக்குள் இருந்தபோது, அங்கே லட்சுமணன் வந்தான்.

"எப்ப வந்தே?" என்றான் ராமச்சந்திரனைப் பார்த்து.

"ரெண்டு மணி நேரம் ஆகி இருக்கும். நீதான் அப்பாவை ஆஸ்பத்திரியில கொண்டு சேர்த்தியாமே! உடனே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனதாலதான் அவரைக் காப்பாத்த முடிஞ்சுதுன்னு டாக்டர் சொன்னதா அம்மா சொன்னாங்க. நல்ல வேளை, நீ பக்கத்தில இருந்து உடனே செயல்பட்டதால, அப்பாவைக் காப்பாத்த முடிஞ்சுது" என்றான் ராமச்சந்திரன்

"அப்பா திடீர்னு மயக்கம் போட்டு விழுந்ததும், ஒரு நிமிஷம் எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல. அப்புறம்தான் உடனே ஆம்புலன்சுக்கு ஃபோன் பண்ணணும்னு தோணிச்சு!"

"ஆனா, நீ இப்படி செஞ்சது எனக்கு ஆச்சரியமா இருக்கு."

"என்ன ஆச்சரியம்?" என்றான் லட்சுமணன், புரியாமல்.

"நல்ல நினைவோட இருக்கறப்ப, மயக்கம் வரணுங்கறதுக்காகக் காசு கொடுத்து மதுவை வாங்கிக் குடிக்கறவன் நீ! நான் ஊர்லேந்து வந்தப்ப, நீ குடிச்சுட்டு போதையில மயங்கிப் படுத்துக்கிட்டுத்தான் இருந்த. அப்படி இருக்கறப்ப, மயக்கம் போட்டு விழுந்த அப்பா மயக்கத்திலேந்து விடுபடணுங்கறதுக்காக, அவரை ஆம்பலன்ஸ்ல ஆஸ்பத்திரிக்கு அழைச்சுக்கிட்டுப் போனியே, அது ஆச்சரியம் இல்லையா?" என்றபடியே, தம்பியின் முகத்தைக் கூர்ந்து பார்த்தான் ராமச்சந்தரன்.

குறள் 925:
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.

பொருள்: 
ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காக போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும்.

926. விஷம் குடித்தவள்

"அம்மாவுக்கு வயசாயிட்டதால, எப்ப இறந்துடுவாங்களோன்னு பயமாவே இருக்கு. காலையில நான் எழுந்திருச்சதும், அவங்க தூங்கிக்கிட்டிருந்தா, அவங்க முகத்தைப் பார்ப்பேன். தூங்கறாங்களா, இல்லை, தூக்கத்திலேயே இறந்து போயிருப்பாங்களான்னு சந்தேகமாகவே இருக்கும்" என்றான் ஆனந்த்.

"வயசானவங்க சில நாள் அதிக நேரம் தூங்கத்தான் செய்வாங்க. அதுக்காக இப்படியா நினைப்பீங்க? அவங்க காதில விழுந்தா, வருத்தப்படப் போறாங்க!" என்ற அவன் மனைவி சுகந்தி, "ஏற்கெனவே அவங்களுக்கு இருக்கற வருத்தம் போதாதா?" என்றாள், சற்றுத் தணிந்த குரலில்.

மனைவி எதைக் குறிப்பிடுகிறாள் என்பதை உணர்ந்த ஆனந்த், பதில் பேசாமல் நகர்ந்தான்.

ன்று மாலை ஆனந்த் வீடு திரும்பியபோது, சுகந்தி வீட்டில் இல்லை.

"சுகந்தி எங்கே போயிருக்கா?" என்றான் ஆனந்த், தன் அம்மா சரசுவிடம்.

"இன்னிக்கும் குடிச்சுட்டுத்தானே வந்திருக்கே? நீ வீட்டுக்குள்ளே நுழையறதுக்கு முன்னாலேயே, சாராய வாடை உள்ளே வந்துடுதே, யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னேங்கற மாதிரி!" என்றாள் சரசு, கோபத்துடன்.

"அது சாராயம் இல்லேம்மா, விஸ்கி!" என்ற ஆனந்த், "அது இருக்கட்டும். சுகந்தி எங்கே?" என்றான்.

"பக்கத்து வீட்டு நீலா விஷத்தைக் குடிச்சுட்டளாம். அவளை ஆஸ்பத்திரியில சேத்திருக்காங்க. சுகந்தி கூடப் போயிருக்கா. இப்ப வந்துடுவா!"

"விஷத்தைக் குடிச்சுட்டாங்களா? அவங்களுக்கு புத்தி கெட்டுப் போச்சா என்ன?" என்றான் ஆனந்த்.

அப்போதுதான் ஆஸ்பத்திரியிலிருந்து திரும்பிய சுகந்தி, "நீங்க சொல்றது சரிதான். நீலா புத்தி கெட்டுப்போய்தான் விஷத்தைக் குடிச்சிருக்கா. நல்லவேளை, பிழைச்சுட்டா! ஆனா, நீலாவை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகும்போது, விஷம் குடிச்சிருந்த அவளோட முகத்தில இருந்த களையைப் பார்த்தப்ப, நீங்க தினமும் சாயந்திரம் குடிச்சுட்டு வீட்டுக்கு வரச்சே, உங்க முகத்தில நான் பார்க்கிற களை மாதிரியேதான் இருந்தது!" என்றாள், ஆனந்தைப் பார்த்து.

குறள் 926:
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

பொருள்: 
உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் நஞ்சு உண்பவரிலும் வேறுபட்டவர் அல்லர்.

927. குணசீலனின் 'சமூக சேவை!'

"தினம் சாயந்திரம் ஆஃபீஸ்லேந்து வீட்டுக்கு வந்ததும், சமூக சேவைன்னு போயிடறான். ராத்திரி வரச்சே, சோர்வோட வரான். சாப்பிட்டுட்டுப் படுத்துடறான்" என்று தன் மகன் குணசீலனைப் பற்றித் தன் கணவர் தண்டபாணியிடம் அலுத்துக் கொண்டாள் ருக்மணி.

"நாலைஞ்சு நண்பர்கள் சேர்ந்து ஏதோ நல்ல காரியம் செய்யறாங்க. அதை நாம ஏன் குறை சொல்லணும்?" என்றார் தண்டபாணி.

"அதுக்குக் காசு வேற செலவழிக்கிறானே! நிறைய சம்பாதிச்சாலும் பரவாயில்ல. இவனுக்கு வர சுமாரான சம்பளத்தில இதெல்லாம் எதுக்கு?" என்றாள் ருக்மிணி, பெருமூச்சுடன்.

"என்ன குணசீலா, நாளைக்கு மீட்டிங் யார் வீட்டில? மூர்த்தி வீட்டிலேயா?" என்றார் செல்வராஜ். அவர் தண்டபாணியின் நண்பர்.

"என்ன மீட்டிங்?" என்றான் குணசீலன்.

"சமூக சேவை செய்யறதுக்காக, தினம் ஒத்தர் வீட்டில சந்திச்சுப் பேசறீங்களே, அதைக் கேட்டேன்!"

"அதுவா?...ஆமாம்." என்றான் குணசீலன், சற்றே தடுமாற்றத்துடன்.

"கூடிப் பேசறதால என்ன சமூக சேவை செய்ய முடியும்?"

"இல்லை. யார் யாருக்கு என்னென்ன உதவி தேவைப்படுதுன்னு பேசி, அதை யார் செய்யணும், எப்படிச் செய்யணும்னு முடிவெடுப்போம்."

"அது சரி. ஏன் உன்னோட வீட்டில மீட்டிங் போடறதில்ல?"

"அப்பா அம்மாவுக்குத் தொந்தரவா இருக்குமேன்னுட்டுதான்!"

"அதுதான் காரணமா, இல்லை, அப்பா அம்மா முன்னால தண்ணி போடறது கஷ்டமா இருக்கும்னா?" 

"என்ன அங்க்கிள் சொல்றீங்க?" என்றான் குணசீலன், பதட்டத்துடன்.

"நீங்க நாலைஞ்சு பேர் தினம் ஒண்ணா சேர்ந்து தண்ணி அடிக்கிறது யாருக்கும் தெரியாதுன்னு நினைக்கிறியா? அது இந்த ஊருக்கே தெரியும். மூர்த்தியும், குருவும் தனியா இருக்கறதால, அவங்க ரெண்டு பேர் வீட்டிலேயும் மாத்தி மாத்தி உங்க 'சமூக சேவை' மீட்டிங்கை வச்சுக்கறதைப் பத்தி எல்லாரும் பேசிச் சிரிக்கிறாங்க. சும்மா அரட்டை அடிக்கறதா சொல்லி இருந்தா கூட எல்லாரும் நம்பி இருப்பாங்க. சமூக சேவை செய்யறதா சொன்னா, நீங்க என்ன சமூக சேவை செய்யறீங்கன்னு எல்லாருக்கும் கேள்வி வராதா? உன் அப்பா அம்மா பாவம், நீ ஏதோ ஊருக்கு உதவறதா நினைச்சுக்கிட்டிருக்காங்க. இந்தப் பழக்கத்தை விடு. வேலை முடிஞ்சதும் நேரா வீட்டுக்குப் போறதுன்னு பழக்கப்படுத்திக்க. உன்னால இந்தப் பழக்கத்தை விட்டுட முடியும்" என்று கூறி, குணசீலனின் தோளில் ஆதரவாகத் தட்டினர் செல்வராஜ். 

குறள் 927:
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்.

பொருள்: 
கள்ளை மறைந்திருந்து குடித்து அறிவு மயங்குபவரை ஊருக்குள் வாழ்பவர் அறிந்து எப்போதும் இகழ்ந்து சிரிப்பர்.

928. குடிக்காதவன்!

"இந்த பார்ட்டியில மது இருக்கும்னு தெரிஞ்சிருந்தா நான் வந்திருக்கவே மாட்டேனே!" என்றான் சத்யா.

"ஏண்டா, பார்ட்டின்னா டிரிங்க்ஸ் இல்லாமயா? ஏன், நீ குடிக்க மாட்டியா என்ன?" என்றான் சந்திரன்.

"உனக்குத் தெரியாதா? நம்ம சத்யா மகாத்மா காந்தியோட 'சத்திய சோதனை'யை முப்பது தடவைக்கு மேல படிச்சிருக்கான். தண்ணியைத் தவிர அவன் வேற எதையும் குடிக்க மாட்டான். நான் தண்ணின்னு சொல்றது கிணத்தில இருக்குமே அந்தத் தண்ணியை!" என்றான் மனோகர்.

"கிண்டல் எல்லாம் வேண்டாண்டா. நான் குடிக்கறதில்ல. அவ்வளவுதான்!" என்றான் சத்யா.

னோகர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அவனுடைய கைபேசி ஒலித்தது. வண்டி ஓட்டிக் கொண்டிருந்ததால், அவன் அப்போது ஃபோனை எடுக்கவில்லை.

வீட்டுக்குச் சென்றதும் ஃபோனை எடுத்துப் பார்த்தபோது, சத்யாவிடமிருந்து ஃபோன் வந்திருந்தது தெரிந்தது.

உடனே சத்யாவுக்கு ஃபோன் செய்தான்.

மறுமுனையில் ஃபோன் எடுக்கப்பட்டதும், "என்னடா? ஃபோன் பண்ணி இருந்தியே!" என்றான்.

"ஏன் மிஸ்டர், ஃபோன்ல யார் பேசறாங்கன்னு தெரியாம, எடுத்தவுடனேயே வாடா போடான்னா பேசுவீங்க?" என்றார் மறுமுனையில் பேசியவர்.

"சாரி சார். என் நண்பன் சத்யாகிட்டேந்து ஃபோன் வந்திருந்தது. அவன் நம்பருக்குத்தான் ஃபோன் பண்ணினேன். அவன்தான் பேசறான்னு நினைச்சுப் பேசிட்டேன். நீங்க யார்னு தெரிஞ்சுக்கலாமா?" என்றான் மனோகர், பதட்டத்துடன்.

"நான் டிராஃபிக் போலீஸ். உங்க நண்பர் சத்யா பைக் ஓட்டிக்கிட்டிருந்தப்ப அவரை சோதிச்சதில, அவரு குடிச்சிருக்கார்னு தெரிஞ்சது. ஃபைன் கட்ட அவர்கிட்ட பணம் இல்ல. கையில ஏ டி எம் கார்டும் இல்லையாம். அதான் உங்களுக்கு ஃபோன் பண்ணினாரு. நீங்க எடுக்கல. அவரோட ஃபோனை நான் வாங்கி வச்சுக்கிட்டேன். அதனாலதான், ஃபோன் வந்ததும், நான் எடுத்துப் பேசினேன். அவர் ஆயிரம் ரூபா அபராதம் கட்டணும். பணத்தை எடுத்துக்கிட்டு ஆழ்வார்பேட்டை சிக்னலுக்கு வரீங்களா?"

"இருக்காதே! சத்யா குடிக்க மாட்டானே!" என்று சொல்ல வாயெடுத்த மனோகர், உண்மையை உணர்ந்தவனாக, "சரி சார். வரேன்" என்றான்.

குறள் 928:
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.

பொருள்: 
கள்ளுண்பவன், தான் ஒருபோதும் கள்ளுண்டறியேன் என்று சொல்வதை விட வேண்டும், நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றம் கள்ளுண்டபோதே வெளிப்படும்.

929. அறிவுரை சொல்லுங்களேன்!

"சேகருக்கு குடிப்பழக்கம் ரொம்ப முத்திப் போச்சு. நீங்களோ, நானோ சொன்னா, அவன் கேக்க மாட்டான். வேற யாரையாவது விட்டுத்தான் சொல்லச் சொல்லணும்" என்றாள் அன்னம்.

"நானும் அப்படித்தான் நினைக்கிறேன். யாரை விட்டு சொல்லச் சொன்னா சரியா இருக்கும்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன்" என்றார் அவள் கணவர் பரமசிவம்.

சற்று நேரம் கழித்து, "அவன் பள்ளிக்கூட வாத்தியார் சுந்தரமூர்த்தி இப்ப இந்த ஊருக்கு வந்துட்டாராம். நானே அவரைப் போய்ப் பார்த்துட்டு வரணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். அவர் சொன்னா, சேகர் கண்டிப்பாக் கேப்பான். நான் போய் அவரைப் பார்த்துட்டு, அவர்கிட்ட சேகரைப் பத்தி சொல்லிட்டு, அப்புறம் சேகரையும் அழைச்சுக்கிட்டுப் போறேன்" என்றார் பரமசிவம், தன் மனைவியிடம்.

"அவரை நம்ம வீட்டுக்கு சாப்பிட வரச் சொல்லுங்களேன். அப்ப அவர் சேகர்கிட்ட பேசலாம் இல்ல?"

"இல்லை. அவரை இதுக்காகத்தான் நாம சாப்பிடக் கூப்பிட்ட மாதிரி இருக்கும். சாப்பிடறதுக்கு அப்புறமாக் கூப்பிடலாம்" என்றார் பரமசிவம்.

"சேகர் எப்படி இருக்கான்?" என்றார் சுந்தரமூர்த்தி.

"அவனைப் பத்தித்தான் உங்க்கிட்ட பேசணும்னு நினைச்சேன். இப்ப அவனுக்குக் குடிப்பழக்கம் வந்திருக்கு. நானும், அவன் அம்மாவும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டோம். அவன் கேக்கல. உங்ககிட்ட ஒருநாள் அழைச்சுக்கிட்டு வரேன். நீங்கதான் அவனுக்கு புத்தி சொல்லணும்" என்றார் பரமசிவம்.

"சேகர் ரொம்ப நல்ல பையன். அவனுக்கு இந்தப் பழக்கம் வந்திருக்குன்னு கேடக ரொம்ப வருத்தமா இருக்கு. ஆனா, நான் சொல்லி அவன் திருந்துவான்னு எனக்குத் தோணல."

"என்னங்க இப்படி சொல்றீங்க? சேகர் உங்க மேல நிறைய மதிப்பு வச்சிருக்கான். நீங்க சொன்னா கண்டிப்பா கேப்பான்."

"உங்க மேலேயும், உங்க மனைவி மேலேயும் அவனுக்கு மதிப்பு இல்லையா என்ன? நீங்க சொல்லி அவன் ஏன் கேக்கல? கேக்கணும்னுதான் நினைப்பான். ஆனா, அவனால இந்தப் பழக்கத்தை விட முடியாது. இந்தப் பழக்கத்தோட வலிமை அப்படி. நான் சொன்னாலும் அதுதான் நடக்கும். நீங்க அவனை அழைச்சுக்கிட்டு வாங்க. நான் சொல்றேன். ஆனா, அதனால பலன் கிடைக்கும்னு எதிர்பாக்காதீங்க!" என்றார் சுந்தரமூர்த்தி. 

குறள் 929:
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.

பொருள்: 
குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவது, தண்ணீருக்குள் மூழ்கி விட்டவனைத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு போய்த் தேடுவது போன்றது.

930. உணவகத்தில் ஒரு சம்பவம்

செல்வம் தன் பெற்றோருடன் அந்த உணவகத்தில் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்தபோது, பக்கத்திலிருந்த அறையிலிருந்து உரத்த குரல்கள் கேட்டன.

அந்த உணவகம் நான்கைந்து அறைகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததால், என்ன நிகழ்ந்தது என்பது அவர்களுக்கு விளங்கவில்லை. ஆனால், இரண்டு மூன்று பேர் இரைந்து பேசிக் கொள்ளும் சத்தம் மட்டுமேகேட்டது.

"அடுத்த ரூம்ல ஏதோ தகறாரு போல இருக்கு"  என்றார் செல்வத்தின் தந்தை சம்பந்தம்.

"அதைப் பத்தி நமக்கு என்ன? நாம வந்தமா, சாப்பிட்டமா, போகணுமான்னு இருக்கணும்" என்றாள் செல்வத்தின் தாய் சுந்தரி.

அப்போது அங்கே வந்த அந்த உணவக ஊழியர் ஒருவர் செல்வத்திடம் வந்து, "சார், நீங்க பக்கத்துத் தெருவில இருக்கற பாங்க்லதானே வேலை செய்யறீங்க?" என்றார் தயக்கத்துடன்.

"ஆமாம். உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்றான் செல்வம்.

"எனக்கு அங்கேதான்அக்கவுன்ட் இருக்கு. பாங்க்குக்கு வரப்ப உங்களைப் பாத்திருக்கேன்" என்ற அந்த ஊழியர், மீண்டும் சற்றுத் தயங்கி விட்டு, "சார்! உங்க பாங்க்ல வேலை செய்யற ஒத்தரு பக்கத்து ரூம்ல குடிச்சுட்டு கலாட்டா பண்ணிக்கிட்டிருக்காரு. முதலாளி போலீசைக் கூப்பிடப் போறேன்னு சொல்றாரு. நீங்க அவரை சமாதானப்படுத்தி வெளியே அழைச்சுக்கிட்டுப் போயிட்டீங்கன்னா, பிரச்னை இல்லாம இருக்கும். உங்களை நான் பாங்க்ல பார்த்த மாதிரிதான் அவரையும் பார்த்திருக்கேன். எனக்கு அவரைப் பழக்கம் இல்லாட்டாலும், தெரிஞ்சவர்ங்கறதால உதவி செய்யலாம்னுட்டுதான் உங்ககிட்ட கேக்கறேன்" என்றார்.

"அப்படியா?" என்ற செல்வம், பக்கத்து அறைக்குச் சென்று பார்த்து விட்டுத் திரும்பி வந்து, "அப்பா! அவன் என்னோட வேலை செய்யற ராஜவேலுதான். நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு ஆட்டோவில வீட்டுக்குப் போயிடுங்க. நான் அவனை வீட்டில கொண்டு விட்டுட்டு வரேன்" என்று தன் பெற்றோர்களிடம் சொல்லி விட்டுப் பக்கத்து அறைக்குச் சென்றான்.

ரவு செல்வம் வீட்டுக்கு வந்ததும், "என்ன செல்வம், என்ன ஆச்சு?" என்றார் சம்பந்தம்.

"என்னோட வேலை செய்யற ராஜவேலு அதிகமாக் குடிச்சுட்டு, ஹோட்டல் ஊழியரோட தகராறு பண்ணி இருக்கான். சமாதானப்படுத்த வந்த ஒத்தரை அடிக்கப் போயிருக்கான். ஹோட்டல் முதலாளி போலீசுக்கு ஃபோன் செய்யறதா இருந்தாரு. நான் அவரை சமாதானப்படுத்திட்டு, ராஜவேலுவை அவன் வீட்டில கொண்டு விட்டுட்டு வந்துட்டேன்" என்றான் செல்வம்.

"நல்ல காரியம் செஞ்சே!" என்றபடி, மகனை உற்றுப் பார்த்தார் சம்பந்தம்.

"என்னப்பா பாக்கறீங்க?

"நல்லவேளை, உன் நண்பன் ராஜவேலு இடத்தில நீ இல்லாமல் போனியேன்னு நினைச்சு சந்தோஷப்பட்டேன்!"

தனக்கும் குடிப்பழக்கம் இருப்பதால், ராஜவேலுவுக்கு ஏற்பட்ட நிலை தனக்கும் ஏற்படலாம் என்பதைத் தந்தை சுட்டிக் காட்டுவதை உணர்ந்த செல்வம், தலைகுனிந்து கொண்டான்.

குறள் 930:
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.

பொருள்: 
ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது, மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா?
             அறத்துப்பால்                                               காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...