அதிகாரம் 85 - புல்லறிவாண்மை (தாழ்ந்த அறிவைப் பயன்படுத்துதல்)

திருக்குறள்
பொருட்பால்
படையியல்
அதிகாரம் 85
புல்லறிவாண்மை

841. கரை சேர்த்த கல்வி

சுப்பிரமணி சிறு வயதிலிருந்தே வறுமையை அனுபவித்தவன். ஆயினும் கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வம் அவனிடம் இருந்தது.

சரியான உணவு இல்லாமல் வாடிய நிலையிலும் படிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்து பள்ளிப் படிப்பை முடித்தான்.

ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து திருமணமும் செய்து கொண்டான். ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்குக் கண்ணன் என்று பெயர் வைத்தான்.

சில ஆண்டுகளில் வேலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, ஓரளவு வசதியும் வந்தது.

படிப்புதான் தன் வாழ்க்கையில் தனக்கு அதிகம் உதவியது என்று பலரிடமும் சொல்லிக் கொண்டிருப்பான் சுப்பிரமணி.

ஆனால் அவன் நண்பன் முத்துசாமி, "படிப்பு மட்டும் இருந்தாப் போதாதுடா. புத்திக் கூர்மை இருக்கணும். அது பிறவியிலேயே இருக்கணும். என்னை எடுத்துக்க. நான் பட்டப்படிப்பு படிச்சிருக்கேன். ஆனா பள்ளிப்படிப்பு மட்டுமே படிச்ச நீ என்னை விட நல்லா முன்னுக்கு வந்திருக்க. அதுக்குக் காரணம் உனக்கு இயல்பாகவே இருக்கிற அறிவுதான். அந்த அறிவு எனக்குக் கொஞ்சம் மட்டுதான்!" என்றான் சிரித்துக் கொண்டே.

முத்துசாமி  பொறாமை உணர்வு இல்லாமல், சுப்பிரமணியை உயர்த்தியும் தன்னைத் தாழ்த்தியும் பேசியது அவன் மீது சுப்பிரமணிக்கு மதிப்பை ஏற்படுத்தினாலும், முத்துசாமியின் கூற்றை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

முத்துசாமி சரியாக முயற்சி செய்திருக்க மாட்டான் என்று நினைத்துக் கொண்டான். ஆயினும் முத்துசாமியிடம் இதைச் சொல்லி அவன் மனதைப் புண்படுத்த சுப்பிரமணி விரும்பவில்லை. 

ண்ணனைப் பள்ளியில் சேர்த்து சில ஆண்டுகள் ஆகி விட்டன. அவன் மூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான்.

"கண்ணன் சரியாவே படிக்க மாட்டேங்கறான். மூணாம் வகுப்பு படிக்கிறான். இன்னும் கூட எழுத்துக் கூட்டி சரியாப் படிக்க வரலை!" என்றாள் சுப்பிரமணியின் மனைவி சாவித்திரி.

"நாமதான் சொல்லிக் கொடுக்கணும். சரி. நான் சொல்லிக் கொடுத்துப் பாக்கறேன்!" என்றான் சுப்பிரமணி.

ஆனால் அவன் சொல்லிக் கொடுத்த பிறகும் கண்ணனிடம் முன்னேற்றம் ஏற்படவில்லை. ஒருவேளை முத்துசாமி சொன்னது போல் அறிவு என்பது இயல்பாகவே இருக்க வேண்டிய ஒரு விஷயமோ என்று சுப்பிரமணிக்குத் தோன்றியது. 

பள்ளிக்குச் சென்று வகுப்பாசிரியரிடம் கேட்டபோது, "கண்ணன் படிப்பில வீக்காத்தான் இருக்கான்" என்றார்.

"பாடங்களைப் புரிஞ்சுக்கற அறிவு அவனுக்கு இல்லைன்னு சொல்றீங்களா?" என்றான் சுப்பிரமணி.

"அப்படிச் சொல்ல முடியாது. குறும்புத்தனமா சில வேலைகள்ளாம் செய்யறான். அதுக்கு புத்திசாலித்தனம் வேணும், இல்ல? அறிவைச் சரியான வழியில பயன்படுத்த மாட்டேங்கறான். நான் அதை மாத்த முயற்சி செஞ்சுக்கிட்டிருக்கேன். நீங்களும் முயற்சி பண்ணுங்க!"என்றார் பள்ளி ஆசிரியர்.

கண்ணனின் பிரச்னை தான் அனுபவித்த வறுமையை விடத் தீவிரமானது என்று சுப்பிரமணிக்குத் தோன்றியது.

குறள் 841:
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு.

பொருள்: 
அறிவின்மையே இல்லாமை எல்லாவற்றிலும் கொடிய இல்லாமையாகும், மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது.

842. விநாயகத்தின் மனமாற்றம்!

"விநாயகத்தோட அப்பா தன் வீட்டில நிறைய புத்தகங்கள் வச்சிருந்தாரு. வெளியில எங்கேயும் கிடைக்காத சில புத்தகங்கள் எல்லாம் அவன் வீட்டில இருக்கு, விநாயகம் அதையெல்லாம் புரட்டிக் கூடப் பாத்திருக்க மாட்டான். நான் சில புத்தகங்களைப் படிச்சுப் பார்த்துட்டுத் தரேன்னு கேட்டேன். கொடுக்க மாட்டேன்னுட்டான்" என்றார் தமிழ்ப் பேராசிரியர் பரமசிவம் வருத்தத்துடன்.

" 'முட்டாப் பசங்களையெல்லாம் தாண்டவக்கோனே,
    காசு முதலாளியாக்குதடா தாண்டவக்கோனே!'
என்று 'பராசக்தி' படத்தில ஒரு பாட்டு இருக்கு. இந்த வரிகள் நம் விநாயகத்துக்கு அப்படியே பொருந்தும்" என்றான் வாசு.

"என்னப்பா இது? அவன் ஏதோ தொழில் செஞ்சு நல்லா சம்பாதிக்கிறான். அவனைப் போய் முட்டாள்ங்கறியே!" என்றார் பரமசிவம்.

"அவன் அப்பா ஆரம்பிச்ச தொழில் அது. அது பாட்டுக்குத் தானே ஓடிக்கிட்டிருக்கு. இவன் ஆஃபீசுக்கே போறதில்ல. எல்லாத்தையும் ஒரு மானேஜர் பாத்துக்கறாரு. அவன் ஆஃபீஸ் போகாம இருக்கறது நல்லதுக்குத்தான். இவன் போய் நிர்வாகம் செய்யறேன்னு ஆரம்பிச்சா, எல்லாத்தையும் குட்டிச்சுவராக்கிடுவான். அப்புறம் தொழிலையே இழுத்து மூட வேண்டி இருக்கும்!"

"சரி. அதெல்லாம் நமக்கு எதுக்கு?"

"வீட்டில சும்மா கிடக்கற புத்தகங்களை உங்களை மாதிரி ஒரு ஆராய்ச்சியாளருக்கு இலவசமாவே கொடுத்திருக்கலாம். ஆனா படிச்சுப் பாக்கக் கூடக் கொடுக்க மாட்டேன்னா அவன் என்ன ஆளு?" என்றான் வாசு.

சில நாட்கள் கழித்து வாசுவுக்கு ஃபோன் செய்த பரமசிவம், "வாசு! ஒரு ஆச்சரியமான விஷயம். விநாயகம் எனக்கு ஃபோன் செஞ்சான். அவன் வீட்டில இருக்கற எல்லாப் புத்தகத்தையும் சும்மாவே எடுத்துக்கிட்டுப் போகச் சொல்லிட்டான். நூறு புத்தகங்களுக்கு மேல இருக்குமாம். என்னால நம்பவே முடியல!" என்றார் மகிழ்ச்சியுடன்.

"என்னாலயும்தான். உடனே கார் எடுத்துக்கிட்டுப் போய் அள்ளிப் போட்டுக்கிட்டு வந்துடுங்க. அப்புறம் அவனுக்கு மனசு மாறிடப் போகுது!" என்றான் வாசு.

"என்னப்பா நீ! எவ்வளவு நல்ல மனசோட புத்தகங்களை எனக்குக் கொடுக்கறேன்னு சொல்லி இருக்கான். அவன் பரந்த மனசைப் பாராட்டாம,..?"

''ஒருவேளை பழைய பேப்பர்காரர் இதையெல்லாம் விலை கொடுத்து எடுத்துக்க முடியாதுன்னு சொல்லி இருப்பாரு' என்று மனதில் நினைத்துக் கொண்ட வாசு, "பரந்த மனசெல்லாம் இல்ல சார்! ஏதோ உங்களோட அதிர்ஷ்டம் அவனுக்கு திடீர்னு இப்படித் தோணி இருக்கு!" என்றான்.

குறள் 842:
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்.

பொருள்: 
அறிவற்றவன் மனம் மகிழ்ந்து ஒன்றைப் பிறர்க்குத் தந்தால், அது பெறுகின்றவன் செய்த நல்வினையே.

843. ஏழுமலையின் திட்டங்கள்

"உனக்கு என்னடா குறைச்சல்? உங்கப்பா உனக்கு நிறைய சொத்து வச்சுட்டுப் போயிருக்காரு. நிலத்தில வர வருமானத்தை வச்சுக்கிட்டு ஆயுசுக்கும் உக்காந்தே சாப்பிடலாமே!"

ஏழுமலையைப் பார்த்து அவன் நண்பர்களும் உறவினர்களும் அடிக்கடி சொன்னது இது.

ஏழுமலையின் அம்மா செண்பகம் மட்டும், "குந்தித் தின்னா குன்றும் கரையும்பாங்க. அதனால ஏதாவது வேலைக்குப் போ. சம்பளம் குறைவா இருந்தாலும் பரவாயில்ல. நிலத்தில வர வருமானம் குறைஞ்சா, அதை வச்சு ஈடு கட்டிக்கலாம்" என்றாள்.

ஏழுமலை அதைக் கேட்கவில்லை.

ழுமலைக்குத் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் பிறந்ததும், செலவுகள் அதிகமாகின. நிலத்திலிருந்து வந்த வருமானத்தை வைத்து நீண்ட காலம் சமாளிக்க முடியாது என்பதை ஏழுமலை உணர்ந்து கொண்டான். 

"அம்மா! நிலத்தில வருமானத்தை வச்சு ரொம்ப காலத்துக்கு சமாளிக்க முடியாது. அதனால நிலத்தையெல்லாம் வித்துட்டு டவுன்ல நிலம் வாங்கி வீட்டு மனைகள் போட்டு விக்கப் போறேன்!" என்றான் ஏழுமலை.

"வேண்டாண்டா. உன் அப்பா சேர்த்து வச்ச சொத்து. அதை ஒண்ணும் செய்யாதே. நீயா சம்பாதிச்சுப் பணம் சேர்த்து அதை வச்சு ஏதாவது செஞ்சுக்க!" என்றாள் செண்பகம்.

"அது இப்போதைக்கு நடக்குமா? இன்னிக்கு ரியல் எஸ்டேட் பிசினஸ் நல்லா இருக்கு. இப்பவே ஆரம்பிச்சாதான் உண்டு!"

மகன் பிடிவாதமாக இருப்பதை உணர்ந்த செண்பகம், "நமக்கு சாப்பாட்டுக்கு நெல்லு வர அளவுக்காவது நிலத்தை வச்சுக்கிட்டு மீதியை வேணும்னா வித்துக்க" என்றாள்.

அவன் மனைவி முத்துலட்சுமியும் அதை ஆமோதித்தாள்.

"பிசினஸ்லதான் வருமானம் வருமே!" என்று சொல்லி, அவர்கள் யோசனையை ஏற்க மறுத்து விட்டான் ஏழுமலை.

ஏழுமலை விளைநிலங்களை விற்று, அருகிலிருந்த நகரத்தில் நிலம் வாங்கி, அவற்றில் வீட்டு மனைகள் போட்டு விற்பனை செய்யும் தொழிலைத் துவக்கினான்.

"நீ வீட்டு மனைகள் போட்டு ரெண்டு வருஷம் ஆச்சு. நீ போட்ட அம்பது மனைகள்ள அஞ்சு மனைதான் வித்திருக்கு. நிலத்திலிருந்த வருமானம் போச்சு. மனையை விக்க விளம்பரம், மனையைப் பாக்க வரவங்களைக் கார்ல அழைச்சுக்கிட்டுப் போறதுன்னு செலவு பண்ணிக்கிட்டிருக்க. இப்ப, நமக்கு சாப்பாட்டுக்கே வழி இல்லாத நிலைமை வந்துடுச்சு. இங்கே இருந்தா குழந்தைகள் கூடப் பட்டினி கிடக்க வேண்டியதுதான்னு நினைச்சு, உன் மனைவி குழந்தைகளை அழைச்சுக்கிட்டு அவ அப்பா வீட்டுக்குப் போயிட்டா. நீயும் நானுமே அரைப்பட்டினி கிடக்கோம். உன்னைப் பாக்க முடியாம உன் குழந்தைகள் ஏங்கறாங்க. குழந்தைகளைப் பாக்க முடியாம நீ ஏங்கற. உனக்கு இந்தக் கஷ்டம் எல்லாம் தேவைதானா?" என்றாள் செண்பகம்.

"என்ன செய்யறது? நான் நினைச்ச மாதிரி வீட்டு மனைகள் விக்கல! எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு" என்றான் ஏழுமலை வருத்தத்துடன்

"வீட்டில உக்காந்து சாப்பிடற அளவுக்கு உங்கப்பா உனக்கு சொத்து வச்சுட்டுப் போனாரு. நீ எல்லாத்தையும் வித்துட்டுத் தெரியாத தொழில்ல இறங்கின. சாப்பாட்டுக்கு அரிசி வர அளவுக்குக் கொஞ்சம் நிலத்தையாவது வச்சுக்கலாம்னு நானும் சொன்னேன், உன் மனைவியும் சொன்னா. நீ கேக்கல. இப்ப இவ்வளவு கஷ்டப்படற. உங்கப்பாவுக்கு எதிரிகள் இருந்தாங்க. அவரு அவங்களை சமாளிக்க வேண்டி இருந்தது. ஆனா உனக்கு எதிரிகள்னு யாரும் இல்லை. எதுக்கு? நீ ஒத்தன் இருக்கியே, போதாதா?" என்று கோபத்திலும், துக்கத்திலும் வெடித்தாள் செண்பகம்.

குறள் 843:
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.

பொருள்: 
அறிவில்லாதவர் தமக்குத் தாமே விளைவித்துக் கொள்ளும் துன்பம் அவருடைய பகைவராலும் செய்ய முடியாத அளவினதாகும்.

844. எல்லாம் தெரிந்தவன்!

"அக்கவுன்ட்ஸ்க்கு எதுக்கு டியூஷன்? நானே சொல்லித் தருவேனே!" என்றான் கிருஷ்ணமணி.

"உங்களுக்கு அக்கவுன்ட்ஸ் தெரியுமா என்ன? நீங்க பி எஸ் சிதானே படிச்சீங்க?" என்றாள் அவன் மனைவி பூர்ணா.

"காலேஜில படிச்சாத்தான் தெரியணுமா? என் ஆஃபீஸ்ல அக்கவுன்ட்ஸ் ஸ்டேட்மென்ட்ஸ் எல்லாம் பாத்திருக்கேனே! எனக்குத் தெரியும்!"

"வேண்டாம்ப்பா! நான் டியூஷனே போய்க்கறேன்" என்றான் அவர்கள் மகன் அட்சய்.

"உன் அக்கவுன்ட்ஸ் புத்தகத்தைக் கொண்டு வா பாக்கறேன்" என்றான் கிருஷ்ணமணி விடாமல்.

"பி காம் படிச்சவங்களுக்கே சொல்லித் தரது கஷ்டமாத்தான் இருக்கும். உங்களால எப்படி முடியும்? அவன் டியூஷனுக்கே போகட்டும்!" என்றாள் பூர்ணா உறுதியாக.

"என்னால முடியும்னா கேக்க மாட்டியே!"

"அன்னிக்கு அப்படித்தான் என் மொபைல் ஸ்லோவா இருக்குன்னு சொன்னேன். நான் சரி பண்றேன்னு சொல்லி ஏதோ செஞ்சீங்க. டேட்டா எல்லாம் போயிடுச்சு. சமையலுக்கு ஐடியா கொடுக்கறேன்னீங்க. நீங்க சொன்னபடி செஞ்சதை நீங்க உட்பட யாருமே சாப்பிடல. மிக்ஸியை சரி பண்றேன்னு சொல்லி பிளேடையெல்லாம் வளைச்சுட்டீங்க. உங்களுக்குத் தெரிஞ்ச விஷயங்களை மட்டும் செய்யுங்க. எல்லாம் தெரியும்னு நினைச்சுக்காதீங்க!" என்றாள் பூர்ணா, சற்றுக் கோபத்துடன்

"எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும். அதைச் சொன்னா. நீ ஒத்துக்க மாட்டே!"

"ஒத்துக்கறேன். உங்களுக்கு எல்லாமே தெரியும்னு ஒத்துக்கறேன். ஆனா எதையும் செய்யறேன்னு வந்துடாதீங்க!"

"சார்!" என்று வாசலில் யாரோ அழைத்தார்கள்.

அவர்கள் குடியிருப்பின் பராமரிப்பைப் பார்த்துக் கொள்ளும் ராமலிங்கம்.

"பம்ப்ல தண்ணி குறைச்சலா வருது. ஏதோ வால்வை அட்ஜஸ்ட் பண்ணினா சரியாயிடும்னீங்களே, வந்து பாக்கறீங்களா?" என்றார் ராமலிங்கம்.

கிருஷ்ணமணி ஒருமுறை மனைவியைப் பார்த்து விட்டு, "நான் சரி  செஞ்சுடுவேன். ஆனா நம்மகிட்ட டூல்ஸ் எல்லாம் சரியா இல்ல. எதுக்கும் பிளம்பரையே வந்து பாக்கச் சொல்லிடுங்க!" என்றான்.

குறள் 844:
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.

பொருள்: 
ஒருவன் தன்னைத் தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும் ஆணவத்துக்குப் பெயர்தான் அறியாமை எனப்படும்.

845. பொருளாதார வல்லுனர்

அந்தச் சங்கத்தின் ஆண்டு விழாவுக்குத் தலைமை ஏறகப் பொருளாதார வல்லுனர் சூரியமூர்த்தி அழைக்கப்பட்டிருந்தார்.

'வரலாற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்' என்ற தலைப்பில் அவர் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

"ஒரு பொருளாதார வல்லுனர் பொருளாதாரத்தைப் பத்திப் பேசினால்தானே பொருத்தமா இருக்கும்? ஏன் இவருக்கு வேற தலைப்பு கொடுத்திருக்காங்கன்னு புரியல!" என்றான் பட்டாபி.

"நீ வேற! பொருளாதாரத்தைப் பத்திப் பேசி போர் அடிக்கப் போறாரோன்னு பயந்தேன். நல்ல வேளை வேற தலைப்பு கொடுத்து நம்மைக் காப்பாத்திட்டாங்களேன்னு நான் சந்தோஷப்பட்டுக்கிட்டிருக்கேன்!" என்றான் அவன் நண்பன் சுந்தரேசன்.

விழா முடிந்ததும், "எப்படி இருந்தது பேச்சு?" என்றான் பட்டாபி.

"நான் உன் அளவுக்குப் படிச்சவன் இல்ல. ஆனா எனக்குத் தெரிஞ்ச அளவுக்குக் கூட அவருக்கு வரலாறு தெரியாது போல இருக்கே!".

"ஆமாம். நிறைய தப்பான தகவல்களைச் சொன்னாரு. அசோகர் தமிழ்நாட்டை ஆண்டப்பதான் புத்தமதம் தமிழ்நாட்டுக்கு வந்ததுன்னாரு. சிவாஜி பிரிட்டிஷ்காரங்களை எதிர்த்துப் போராடினார்னு சொன்னாரு. பாரதியார் திருக்குறளுக்கு உரை எழுதி இருக்காருன்னு சொன்னாரு!"

"தனக்குத் தெரியாத விஷயங்களைத் தெரிஞ்சதா நினைச்சுக்கிட்டா அப்படித்தான்!"

"இதுல என்ன சோகம்னா, இன்னிக்கு இவர் பேச்சைக் கேட்டவங்க இவருக்குப் பொருளாதாரத்தைப் பத்திக் கூட சரியாத் தெரியுமோ, தெரியாதோன்னு நினைப்பாங்க!" என்றான் பட்டாபி.

"நான் கூட அப்படித்தான் நினைக்கிறேன்!"

"இல்ல. பொருளாதராத்தில அவர் ஒரு மேதைதான் நான் அவரோட கட்டுரைகளையெல்லாம் படிச்சிருக்கேன்."

"அது சரி. என்னை மாதிரி எவ்வளவு பேரு நினைக்கிறாங்களோ! அப்படி அவங்க நினைச்சா, அதுக்குக் காரணம் அவர்தானே?" என்றான் சுந்தரேசன்.

குறள் 845:
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.

பொருள்: 
ஒருவர் தான் அறியாதவற்றையும் அறிந்தது போல் போலித்தனமாகக் காட்டிக் கொள்ளும்போது, அவர் நன்கு கற்றறிந்துள்ள விஷயங்கள் பற்றிய சந்தேகமும் மற்றவர்களுக்கு உருவாகும்.

846. முழுக்கை சட்டை!

பேராசிரியர் சம்பந்தம் அன்றைய தன் பாடத்தை முடிக்கும்போது, வகுப்பு முடிவதற்கு ஐந்து நிமிடங்கள் இருந்தன.

வழக்கமாக எல்லா ஆசிரியர்களிடமும் சந்தேகம் பேட்கும் முதல் வரிசை குணசீலன் எழுந்து ஒரு சந்தேகம் கேட்டான்.

சம்பந்தத்துக்கு ஜிவ்வென்று கோபம் வந்து விட்டது.

"ஒரு மணி நேரமா இதை விளக்கி இருக்கேன். இப்ப வந்து ஆரம்பத்தில சொன்ன விஷயத்திலேயே சந்தேகம் கேக்கற! மறுபடி முதல்லேந்து ஆரம்பிச்சு, ஒரு மணி நேரம் விளக்கணுமா? அதுக்கு அடுத்த வகுப்பு எடுக்க வேண்டிய பேராசிரியர் அனுமதி கொடுப்பாரான்னு முதல்ல கேட்டுக்க!"

"இல்லை சார்! அப்பவே கேக்க நினைச்சேன். உங்க லெக்சரின்போது குறுக்கே கேள்வி கேட்கக் கூடாது, முடிஞ்சப்பறம்தான் கேக்கணும்னு நீங்க சொல்லி இருக்கீங்க. அதனாலதான் இப்ப கேட்டேன்" என்றான் குணசீலன், சற்று பயந்த குரலில்.

"அதுக்காக? அடிப்படையான விஷயத்தைப் பத்தி, எல்லாம் முடிஞ்சப்பறமா கேக்கறது? புத்தகத்தைப் படி. புரியும்!" என்று சம்பந்தம் சொல்லிக் கொண்டிருந்தபோதே, வகுப்பு நேரம் முடிந்ததற்கான மணி அடித்தது.

சம்பந்தம் எழுந்து வெளியே போய் விட்டார்.

"புரொஃபசர் சம்பந்தம்! நீங்க நிறையப் படிச்சிருக்கீங்க. ரிஸர்ச் பேப்பர்ஸ் பப்ளிஷ் பண்ணி இருக்கீங்க. நிறைய அனுபவம் உள்ளவர். ஆனா, உங்க மாணவரகள் ஒரு விஷயம் சொல்றாங்க!" என்றார் கல்லூரி முதல்வர்.

"என்ன சொல்றாங்க?"

"நீங்க நடத்தின பாடத்தில மாணவர்கள் சந்தேகம் கேட்டா, அதை நீங்க விளக்க மாட்டேங்கறீங்களாமே!"

"முட்டாள்தனமான சந்தேகங்களையெல்லாம் விளக்க முடியாது சார்"

"மன்னிக்கணும் புரொஃபசர். ஆசிரியர் தொழில்ல இருக்கிற நமக்கு மாணவர்கள் புரிஞ்சுக்கற விதத்தில சொல்லிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு உண்டு. மாணவர்கள் சந்தேகம் கேட்டா, அதை விளக்க வேண்டிய பொறுப்பும் உண்டு."

"எல்லா மணவர்களுக்கும் எல்லா விஷயங்களும் புரியும்னு சொல்ல முடியாது. மாணவர்களோட எந்தக் கேள்விக்கு பதில் சொல்றதுங்கறதை ஆசிரியர்தான் முடிவு செய்யணும்னு நினைக்கறேன்" என்றார்  சம்பந்தம்

'உங்களோட குறையை ஒத்துக்கவே மாட்டீங்க. அப்புறம் எங்கே அதை சரி செய்யப் போறீங்க?' என்று நினைத்த முதல்வர், பேச்சை மாற்ற விரும்பி, "ஆமாம். ரொம்ப நாளா உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும்னு நினைப்பேன். நீங்க எப்பவும் முழுக்கை சட்டைதான் போடுவீங்களா? உங்களை வெளியில எங்கேயாவது பாக்கறப்ப கூட, நீங்க முழுக்கை சட்டைதான் போட்டுக்கிட்டிருக்கீங்க!" என்றார்.

சம்பந்தம் இலேசாகச் சிரித்தார். தலைப்பு மாறியது அவருக்கு நிம்மதி அளித்திருக்க வேண்டும்!

"அது ஒண்ணுமில்ல சார்! சின்ன வயசில பட்டாசு வெடிக்கறப்ப, என் கையில ஒரு வாணம் பட்டு தீக்காயம் ஏற்பட்டது. அந்த வடு கொஞ்சம் பெரிசா, பழுப்பு நிறத்தில தனியாத் தெரியும். அது வெளியில தெரியாம இருக்கத்தான் முழுக்கை சட்டை போடற பழக்கத்தை வச்சுக்கிட்டிருக்கேன்!"

தன் உடலில் இருக்கும் சிறு குறையைப் பெரிதாக நினைத்து முழுக்கை சட்டை போடுவதன் மூலம் அதை மறைக்கத் தெரிந்த சம்பந்தத்துக்கு, தான் கற்பிப்பதில் உள்ள குறையை ஏற்றுக் கொண்டு. அதைச் சரி செய்யத் தெரியவில்லையே!' என்று நினைத்துக் கொண்டார் முதல்வர்.

குறள் 846:
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.

பொருள்: 
தம்மிடம் உள்ள குற்றத்தை அறிந்து அதைப் போக்காதவர், ஆடையால் தம் உடலை மட்டும் மறைப்பது அறிவின்மை.

847. தொழிலதிபரின் ஆலோசனை 

"சொந்தத் தொழில் செய்யறதுன்னு முடிவு செஞ்சுட்ட. எனக்குத் தெரிஞ்ச ஒரு தொழிலதிபர் இருக்காரு. அவர்கிட்ட உன்னை அழைச்சுக்கிட்டுப் போறேன். அவரு பல தொழில்கள் செஞ்சு கஷ்டப்பட்டுப் பல விஷயங்களைப் புரிஞ்சுக்கிட்டு வெற்றி அடைஞ்சவரு. அவர் ரொம்ப பிசியானவரு. ஆனா எனக்கு நேரம் கொடுப்பாரு. அவர்கிட்ட ஆலோசனை கேட்டுக்கறது உனக்குப் பயனுள்ளதா இருக்கும்!" என்றான் தனஞ்சயன்.

"நான் செய்யப் போற பிசினஸ் பத்தி ஒத்தரு பயிற்சி வகுப்பு நடத்தி இருக்காரு. அவர் சொல்லிக் கொடுத விஷயங்களை வச்சுக்கிட்டுத்தானே நான் தொழில் ஆரம்பக்கப் போறேன்! இதுல இன்னொருத்தர் யோசனை எதுக்கு?" என்றான் ராம்குமார்.

"டேய் முட்டாள்! யாரோ ஒருத்தன் சொந்தத் தொழில் தொடங்கப் பயிற்சி கொடுக்கறதாச் சொல்லி, ஏகப்பட்ட கட்டணம் வாங்கிக்கிட்டு, அம்பது பேரை உக்கார வச்சு, வகுப்பு எடுக்கற மாதிரி சொல்லிக் கொடுத்திருக்கான். அதை வச்சுக்கிட்டு நீ தொழில் ஆரம்பிக்கத் துணிஞ்சுட்ட! அனுபவம் உள்ள ஒத்தர்கிட்ட உன்னை அழைச்சுக்கிட்டுப் போறேன்னு சொல்றேன். அவர் ஆலோசனைகள் உனக்குப் பயனுள்ளதா இருக்கும். அதைக் கேட்டுக்கறதில உனக்கு என்ன கஷ்டம்?" என்றான் தனஞ்சயன், கோபத்துடன்.

"சரி. நீ சொல்றதுக்காக வரேன்!" என்றான் ராம்குமார், தான்  நண்பனுக்கு ஏதோ உதவி செய்வது போல்.

அடுத்த நாளே, தொழிலதிபர் ஆனந்தனை இருவரும் சென்று பார்த்தனர். 

"தம்பி! தொழில் ஆரம்பிக்கற எண்ணம் வந்துட்டா, அது ஒரு போதை மாதிரிதான். ஆர்வம் அதிகமா இருக்கும். அந்த அதீத ஆர்வமே அறிவைச் செயல்படாம செஞ்சுடும். நாம செய்யறதெல்லாம் சரியா இருக்கும்னு குருட்டுத்தனமா நம்ப வைக்கும். நான் பல தொழில்கள் செஞ்சு பார்த்து, எல்லாத்திலேயும் தோல்வி அடைஞ்சு, அப்புறம் ஒரு இடத்தில வேலைக்குப் போய், மூணு வருஷம் வேலை பார்த்து, அந்தத் தொழிலைப் பத்தி எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு, அப்புறம் அதை ஆரம்பிச்சேன். அதுதான் எனக்கு வெற்றியைக் கொடுத்தது. அதனால, எங்கிட்ட யார் ஆலோசனே கேட்டாலும், தெரியாத தொழில்ல இறங்காதீங்கன்னுதான் சொல்லுவேன். செய்ய நினைக்கிற தொழிலைப் பத்தி நல்லாத் தெரிஞ்சுக்கிட்டு அதில இறங்கினாதான் வெற்றி கிடைக்கும்" என்றார் ஆனந்தன்

"ஏண்டா, நீ தொழில் ஆரம்பிக்கப் போறேன்னு சொன்னப்பவே, உன்னை ஆனந்தன் சார்கிட்ட அழைச்சுக்கிட்டுப் போனேன். தெரியாத தொழில்ல இறங்காதேன்னு அவர் சொன்னது அவரோட அனுபவத்தின் அடிப்படையில. ஆனா, நீ அவர் சொனதைக் காதில போட்டுக்காம தொழில்ல இறங்கின. இப்ப எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கற!" என்றான் தனஞ்சயன்.

"இந்தப் பயிற்சியை நடத்தினவர் இந்தத் தொழில்ல யாருமே தோல்வி அடைய முடியாதுன்னு சொன்னாரு. அதை நம்பித்தான் இதில இறங்கினேன்" என்றான் ராம்குமார், சோர்வுடன்.

"காசு வாங்கிக்கிட்டுப் பயிற்சி கொடுக்கறவன் சொன்னதை அப்படியே நம்பின. ஆனா அனுபவப்பட்ட ஒத்தர் தன்னோட பிசியான நேரத்திலேயும், உனக்காக அரை மணி நேரம் ஒதுக்கித் தன்னோட அனுபவத்தின் அடிப்படையில சொன்ன உண்மையான ஆலோசனையைப் பத்தி யோசிச்சுக் கூடப் பாக்காம தூக்கிப் போட்டுட்ட. உன்னை விடப் பெரிய முட்டாள் இருக்க முடியுமா?" என்றான் தனஞ்சயன், கோபத்துடனும், வருத்தத்துடனும்.

குறள் 847:
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.

பொருள்: 
பெறுதற்கு அரிய அறிவுரையைப் பெற்றாலும், அதை உள் வாங்கிக் கொள்ளாமல் வெளியே விடுபவன் அறியாமையால் தனக்குத் தானே துன்பத்தை விளைவித்துக் கொள்வான்.

848. பாஸ்கரின் முடிவுகள்

"அவன் சின்ன வயசிலேந்தே அப்படித்தான். தனக்காவும் தெரியாது. மத்தவங்க சொன்னாலும் கேட்டுக்க மாட்டான்!" என்றாள் அன்னம், தன் மருமகள் கமலியிடம்.

பொதுவாக, ஒரு தாய் தன் மகனைப் பற்றிக் குறை கூறித் தன் மருமகளிடம் பேச மாட்டாள் என்றாலும், தன் மகன் பாஸ்கர் இப்படி இருக்கிறானே என்ற ஆதங்கத்தால் அன்னம் அப்படிப் பேசினாள்.

ள்ளிப் படிப்பு முடித்ததும், பாஸ்கரின் கணக்கு ஆசிரியர், "பாஸ்கர்! உனக்குக் கணக்கு நல்லா வருது. நீ எஞ்சினியரிங் படிச்சிருக்கலாம். ஆனா நீ அதுக்கு அப்ளை பண்ணவே இல்லை. பி. எஸ்.சி மேத்ஸ் அல்லது பி.காம் படி!" என்றார்.

கணக்கு ஆசிரியர் சொன்னதை, பாஸ்கர் தன் வீட்டில் வந்து சொன்னதும், "உன் அப்பா இல்லை. உன்னை எஞ்சினியரிங் படிக்க வைக்க எனக்கு வசதி இல்ல. அவர் சொன்னபடி பி.எஸ்சியோ, பி.காமோ படியேன்!" என்றாள் அன்னம். பாஸ்கரின் தந்தை அவன் பள்ளிப் படிப்பை முடிப்பதற்கு ஒரு வருடம் முன்பு இறந்து விட்டார்.

"அவர் சொன்னாக்க? நான் பி.ஏ. லிடரேசர்தான் படிக்கப் போறேன்!" என்றான் பாஸ்கர்.

ஆங்கில இலக்கியத்தில் அவனுக்கு ஆர்வம் இருக்கிறதா என்று சில நண்பர்கள் அவனிடம் கேட்டபோது, "ஆர்வங்கறது நாமா வளர்த்துக்கறதுதான்!" என்றான் பாஸ்கர் அலட்சியமாக.

ஆனால் ஆங்கில இலக்கியத்தில் அவனுக்கு ஆர்வம் ஏற்படவும் இல்லை. அந்தப் படிப்பு அவனுக்குக் கைகொடுக்கவும் இல்லை.

பட்டப்படிப்பு முடித்த பின், சற்றே நீண்ட போரட்டத்துக்குப் பிறகு, ஏதோ ஒரு வேலையைத் தேடிக் கொண்டான் பாஸ்கர்.

பாஸ்கருக்கும், கமலிக்கும் தங்கள் மகன் சித்தார்த்தைப் பள்ளியில் சேர்ப்பது பற்றி விவாதம் ஏற்பட்டபோதுதான், அன்னம் இவ்வாறு சொன்னாள்.

தங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு நல்ல பள்ளியில் தங்கள் மகனைச் சேர்க்கலாம் என்று கமலி கருதினாள். ஆனால். ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள, புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ஒரு பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்றான் பாஸ்கர். அது இன்னும் சிறந்த பள்ளி என்பது அவன் வாதம்.

பள்ளி பஸ் வந்து அழைத்துச் செல்லும் என்பதால், தூரம் ஒரு பிரச்னை இல்லை என்றான் பாஸ்கர்.

பாஸ்கரின் நண்பன் சுகுமார் கூட, "டேய்! அவ்வளவு தூரத்தில இருக்கற     ஸ்கூல்ல சேக்கறது நல்லது இல்ல. அதோட அந்த ஸ்கூல்ல இன்னும் கட்டடங்கள் கூட முழுசாக் கட்டல. அந்த ஸ்கூல் டெவலப் ஆகவே ரெண்டு மூணு வருஷம் ஆகும்னு சொல்றாங்க"! என்றான்.

ஆனால் பாஸ்கர் கேட்கவில்லை. சுகுமார் சென்றதும், "இவன் எல்லாம் எனக்கு யோசனை சொல்ல வந்துட்டான். இவனோட பையனை நான் சொல்ற ஸகூல்ல சேப்பானா?" என்றான் பாஸ்கர்.

பாஸ்கர் பிடிவாதமாக சித்தார்த்தை அந்தப் பள்ளியில் சேர்த்தான். பஸ் ஏற்பாடு செய்யச் சில நாட்கள் ஆகும் என்று பள்ளி நிர்வகம் தெரிவித்திருந்ததால், பாஸ்கரோ, கமலியோ சில நாட்களுக்கு சித்தார்த்தைப் பள்ளியில் கொண்டு விட்டு வந்தார்கள். இருவருமே வேலைக்குச் சென்றதால், இருவருக்குமே நேரத்துக்கு அலுலகத்துக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

ஒரு மாதம் கழித்து, அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து அதிக மாணவர்கள் இல்லாததால், அங்கே பஸ் வராது என்று பள்ளியில் சொல்லி விட்டார்கள்.

"இந்த ஸ்கூல் டெவலப் ஆக ரெண்டு மூணு வருஷம் ஆகும்னு உங்க நண்பர் அப்பவே சொன்னாரு. நீங்க கேக்கல!" என்றாள், கமலி குற்றம் சாட்டும் தொனியில்.

"பரவாயில்லை! ஆட்டோ ஏற்பாடு செஞ்சுடலாம்" என்றான் பாஸ்கர், ஆட்டோக்காரர் யாரேனும் இதற்கு முன்வருவாரா, முன்வந்தாலும்  அவர் கேட்கும் கட்டணத்தைத் தன்னால் கொடுக்க முடியுமா என்று யோசித்தபடியே.

குறள் 848:
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்.

பொருள்: 
சுயபுத்தியும் இல்லாமல், பிறர் சொல்லும் அறிவுரையைக் கேட்டு நடக்காமலும் இருப்பவனுக்கு, அந்த நிலை அவன் வாழ்நாள் முழுதும் அவனை விட்டு நீங்காத நோயாகும்.

849. கிரடிட் கார்ட்

ஓட்டலில் உணவருந்திய பின் பில்ல்லுக்குப் பணம் கொடுக்க தாமோதரன் பர்சைத் திறந்தபோது, அதில் பல கிரடிட் கார்டுகள் இருந்ததை மணி பார்த்தான்.

"என்னடா, இவ்வளவு கிரடிட் கார்டு வச்சிருக்க?" என்றான் மணி.

"ஆமாம். தினம் பத்து பாங்க்லேந்து ஃபோன் பண்ணி கிரடிட் கார்டு வாங்கச் சொல்றாங்க. சரின்னு சிலதை வாங்கிக்கிட்டேன். பார்த்தா, பத்து கார்டு சேர்ந்து போச்சு. இதோட போதும்னு நிறுத்திட்டேன்!"

ஓட்டலிலிருந்து கிளம்பி இருவரும் மணியின் வீட்டுக்கு வந்தனர்.

"இவன் மணி. கல்கத்தால ஒரு பெரிய கம்பெனியில ஃபைனான்ஸ் மானேஜரா இருக்கான்!" என்று தன் மனைவிக்கு நண்பனை அறிமுகப்படுத்திய தாமோதரன், நண்பனைத் தன் அறைக்கு அழைத்துக் கொண்டு போனேன்.

சற்று நேரம் பொதுவாகப் பேசிய பின், மணி, "டேய்!  இவ்வளவு கிரடிட் கார்டெல்லாம் வச்சுக்காதே. உன்னை அறியாமலே அதிகமா செலவு பண்ணி பிரச்னை ஆயிடும்" என்றான்.

"டேய் மணி! நான் ஒரு பிசினஸ்மேன். சில சமயம் வாடிக்கையாளர்களோட எங்கேயாவது போகறப்ப, நிறைய செலவழிக்க வேண்டி இருக்கு. கார்டு இருந்தா சௌகரியமா இருக்கு."

"அதுக்கு ஒரு கிரடிட் கார்டு போதுமே. வேணும்னா ரெண்டு வச்சுக்க. அதுக்கு மேல வச்சுக்கறது டேஞ்ஜர்!"

"டேஞ்ஜரா?" என்று பெரிதாகச் சிரித்த தாமோதரன், "ஆமாம். நீ எத்தனை கார்டு வச்சிருக்கே?" என்றான்.

"ரெண்டு. ஆனா ஒண்ணைத்தான் அதிகம் பயன்படுத்தறேன்" என்றான் மணி.

"அதனாலதான் உனக்குத் தெரியல! நான் என்ன செய்வேன் தெரியுமா? ஒரு கார்டில பணம் கட்ட வேண்டிய சமயத்தில, அதில உள்ள கடன் பாக்கியை பாலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மூலமா இன்னொரு கார்டுக்கு மாத்திடுவேன். அதை ஆறு மாசத்திலேயோ, ஒரு வருஷத்திலேயோ கொஞ்சம் கொஞ்சமா கட்டிக்கலாம். ஒரு பர்ஸன்ட்தான் வட்டி போடுவாங்க!"

"ப்ராசஸிங் சார்ஜுன்னு ஒண்ணு போடுவாங்களே?"

"ஆமாம். அது ஐநூறோ. ஆயிரமோ கோடுவாங்க. அதை நான் பொருட்படுத்தறதில!" என்றான் தாமோதரன், அலட்சியமாக.

"இதுல ரெண்டு மூணு விஷயம் இருக்கு. உன்னோட கடன் நிலுவைத் தொகை கொஞ்சம் கொஞ்சமா அதிகரிச்சுக்கிட்டே போகும். ப்ராசஸிங் சார்ஜ், வட்டின்னே ஏகப்பட்ட பணம் போகும். நீ நிறைய கார்டு வேற வச்சிருக்கறதால, இன்னொரு கார்டில வாங்கலாம்னு இறங்குவே. சில மாதங்கள்ள கடன் தொகை கட்டுக்கடங்காம போயிடும். வட்டியா வேற ஏகப்பட்ட பணம் கொடுத்துக்கிட்டிருப்ப. ஒண்ணு அல்லது ரெண்டு கார்ட் வச்சுக்கிட்டாதான் கிரடிட் கார்டை கட்டுப்பாட்டோட பயன்படுத்த முடியும்!"

"மணி! நீ சம்பளம் வாங்கறவன். உனக்கு நிலையான வருமானம்தான். எனக்கு அப்படி இல்ல. திடீர்னு ஒரு பெரிய தொகை வரும். அப்ப எல்லா கிரடிட் கார்ட் தொகைகளையும் ஒரே நேரத்தில அடைச்சுடுவேன்!"

"நிலையான வருமானம் இல்லாதப்பதான், இன்னும் கவனமா இருக்கணும். நீ சொல்ற மாதிரி, உனக்கு திடீர்னு நிறைய பணம் வரலாம். அது மாதிரி சில சமயம் பணம் வரதுக்கு தாமதாமானா, கேஷ் ஃப்ளோ இல்லாம கூட இருக்கும். எங்க கம்பெனி ஒரு பெரிய கம்பெனின்னாலும், அங்கேயே இதெல்லாம் நடக்குதே! அதனாலதான் ஜாக்கிரதையா இருந்துக்கச் சொல்றேன்!" என்றான் மணி.

மணி சென்றதும், "பெரிய கம்பெனியில ஃபைனான்ஸ் மானேஜரா இருக்கான். ஆனா கிரடிட் கார்டுகளை எப்படி புத்திசாலித்தனமாப் பயன்படுத்தறதுன்னு தெரியல. இந்த லட்சணத்தில எனக்கு வேற அட்வைஸ் பண்றான்!" என்றான் தாமோதரன், தன் மனைவியிடம்.

"அவர் என்ன சொன்னார்னு எனக்குத் தெரியாது. ஆனா, ரெண்டு மூணு மாசமா நான் கவனிக்கிற ஒரு விஷயத்தை சொல்றேன். நீங்க மாசா மாசம் கிரடிட் கார்டுக்குக் கட்டற தொகை அதிகமாகிக்கிட்டே போகுது. அதனால, வீட்டுச் செலவுக்குக் கொடுக்கற பணத்தைக் கூடக் குறைச்சுட்டீங்க. சரி, கடனையெல்லாம் அடைச்சுக்கிட்டிருக்கீங்க போலருக்குன்னு நினைச்சேன். ஆனா, கிரடிட் கார்ட் பில்லையெல்லாம் பாத்தா மாசா மாசம் கடன் பாக்கி அதிகமாகிக்கிட்டே போகுது. கிரடிட் கார்ட் பயன்படுத்தறதை நிறுத்துங்க. இல்லேன்னா, இது எங்கே போய் முடியும்னே தெரியல!" என்றாள் அவன் மனைவி.

'அவன்தான் அறிவில்லாம பேசிட்டுப் போறான்னா, நீயுமா?' என்று நினைத்துக் கொண்டான் தாமோதரன்.

குறள் 849:
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.

பொருள்: 
அறிவற்றவனுக்கு அறிவு காட்ட முயல்பவன் அறிவற்றவனால் அறிவற்றவனாய் எண்ணப்படுவான்; அறிவற்றவன் தான் அறிந்ததையே அறிவாக எண்ணுவான்.

850. நீக்கப்பட்ட காணொளிகள்

"மக்கள் இவ்வளவு முட்டாள்களா இருப்பாங்கன்னு என்னால நம்பவே முடியல!" என்றான் சுதீஷ்.

"எதைச் சொல்றீங்க?" என்றாள் அவன் மனைவி கல்பனா.

"கொரோனான்னு ஒரு புரளியை யாரோ கிளப்பி விட்டு, உலகம் முழுக்க மக்கள் அதை நம்பிக்கிட்டிருக்காங்களே, அதைச் சொல்றேன்."

"என்ன இப்படிச் சொல்றீங்க? ஒவ்வொரு நாட்டிலேயும், தினம் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படறாங்கனு செய்தி வருதே, அதெல்லாம் புரளியா?"

"ஜுரம், இருமல் எல்லாம் எப்பவும் இருக்கறதுதான். இப்ப திடீர்னு அதுக்கு கொரோனான்னு ஒரு பேர் வச்சு பயமுறுத்தி, எல்லாரையும் ஆஸ்பத்திரியில படுக்க வச்சு, ஊரடங்குன்னு சொல்லி, எல்லாரையும் வீட்டுக்குள்ள சிறை வச்சு, என்னென்னவெல்லாம் செய்யறாங்க பாரு!"

"வெளியில யார்கிட்டயாவது இப்படிப் பேசாதீங்க. உங்களைப் பைத்தியம்னு சொல்லிடுவாங்க!" என்றாள் கல்பனா.

"நீ இப்படிச் சொன்னதும் எனக்கு ஒரு யோசனை வந்திருக்கு. இதைப் பத்தி நான் பேசி வீடியோ எடுத்து, யூடியூபில போடப் போறேன்!" என்றான் சுதீஷ்.

"'கொரோனா ஒரு புரளி. அது ஒரு சாதாரண ஜுரம்தான். அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏகப்பட்ட பணம் செலவழித்து ஆக்ஸிஜன் சிலிண்டர் வாங்கி மூக்கில் வைத்துக் கொள்ளாதீர்கள். காற்றோட்டமான இடத்தில் போய் நின்று காற்றை சுவாசியுங்கள். அல்லது வீட்டில் ஜன்னல் கதவுகளைத் திறந்து வைத்தாலே காற்று வரும். காற்றில் ஆக்ஸஜன் இல்லையா என்ன?' என்றெல்லாம் சுதீஷ் பேசிய காணொளிகள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவின. அவன் கருத்தை ஒரு சிலர் ஆதரித்தாலும், பெரும்பாலோர் அவன் கருத்துக்களைக் கண்டித்துப் பதிவுகளை வெளியிட்டனர்.

கொரோனா பற்றி மக்களிடம் தவறான கருத்துக்களைப் பரப்பும் சுதீஷைக் கைது 'செய்ய வேண்டும் என்று ஒரு சில அரசியல்வாதிகள் அறிக்கைகள் வெளியிட்டனர்.

"ஏன் உங்க வீடியோவையெல்லாம் எடுத்துட்டீங்க?" என்றாள் கல்பனா.

"நான் சொன்ன விஷயங்களுக்கு வந்த எதிர்வினைகளைப் பாத்தப்ப, இந்த உலகமே எனக்கு எதிராத் திரும்பிட்ட மாதிரி இருந்தது. தப்பு பண்ணிட்டோம்னு நினைச்சுதான், எதுக்கு இந்த வம்புன்னு வீடியோக்களை டிலீட் பண்ணிட்டேன்!" என்றான் சுதீஷ். 

குறள் 850:
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.

பொருள்: 
உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.
             அறத்துப்பால்                                               காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...