அதிகாரம் 97 - மானம்

திருக்குறள்
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 97
மானம்

961. வேலை கிடைக்க ஒரு வழி

"இன்டர்வியூவுக்குப் போயிட்டு வந்தியே, என்ன ஆச்சு?" என்றார் மோகனரங்கன், தன் மகன் வாசுவிடம்.

"இன்டர்வியூ நல்லாத்தான் பண்ணி இருக்கேன். ரெண்டு மூணு வாரத்தில ரிசல்ட் தெரியும்" என்றான் வாசு.

"அவன் படிப்பை முடிச்சு ஆறு மாசம் ஆச்சு. இது மட்டும் எத்தனையோ இன்டர்வியூவுக்குப் போயிட்டு வந்துட்டான். ஆனா, வேலை கிடைக்க மாட்டேங்குதே!" என்றாள் மோகனரங்கத்தின் மனைவி கல்யாணி.

"கிடைக்கும்!" என்றார் மோகனரங்கம்.

"இந்த ஊரிலேயே பெரிய குடும்பம் நம்மோடது. உங்க அப்பாவும் சரி, நீங்களும் சரி, ஊர்ல எத்தனேயோ பேருக்கு கணக்குப் பார்க்காம காசு, பணம், நெல்லு, அரிசின்னு வாரிக் கொடுத்திருக்கீங்க.  நம்மகிட்ட உதவி கேட்டு வந்தவங்கல்லாம்  இப்ப வசதியா வாழறாங்க. ஆனா, நாம நொடிச்சுப் போயிட்டோம்!" என்று புலம்பினாள் கல்யாணி.

"அதுக்கு என்ன செய்யணுங்கற? நாம யாருக்கு உதவி செஞ்சோமோ, அவங்ககிட்டே எல்லாம் போய்ப் பிச்சை கேக்கணுங்கறியா?" என்றார் மோகனரங்கம்.

"இந்தப் பையனுக்கு ஒரு வேலை கிடைச்சா, நம்ம கஷ்டம் கொஞ்சமாவது விடியும்னு பாக்கறேன். ஆனா, கிடைக்க மாட்டேங்குதே!" என்றாள் கல்யாணி, ஆதங்கத்துடன்

"அப்பா! என் நண்பன் ஒரு விஷயம் சொன்னான். நான் இன்டர்வியூவுக்குப் போயிட்டு வந்தேனே, அந்த கம்பெனியில நம்ம ஊர்க்காரர் ஒத்தர் டைரக்டரா இருக்காராம்!" என்றான் வாசு.

"யாரு?" என்றார் மோகனரங்கம்.

"கார்த்திகேயன். அவங்க அப்பா பேரு தர்மலிங்கம்னு சொன்னாங்க."

"ஓ, தர்மலிங்கம் பையனா? பாவம்! தர்மலிங்கம் சின்ன வயசிலேயே செத்துப் போயிட்டாரு. அவர் மனைவி தன்னோட ஒரு வயசுக் குழந்தையை வச்சுக்கிட்டு ரொம்ப கஷ்டப்பட்டாங்க. எப்படியோ அந்தப் பையன் படிச்சு முடிச்சு வேலை கிடைச்சு, தன் அம்மாவை அழைச்சுக்கிட்டு இந்த ஊரை விட்டுப் போயிட்டான். அவன் ஒரு பெரிய பதவியில இருக்கான்னு கேக்க சந்தோஷமா இருக்கு!"

"அவர் சிபாரிசு பண்ணினா, வேலை கண்டிப்பாக் கிடைக்கும். அது ரொம்ப நல்ல கம்பெனி. அதில வேலை கிடைச்சா, வாழ்க்கையில செட்டில் ஆயிடலாம். உங்களுக்கு அவரைத் தெரியும் இல்ல, அப்பா?" என்றான் வாசு, தயக்கத்துடன்.

"அவங்க குடும்பம் கஷ்டப்பட்டதா உங்கப்பா சொன்னாரே, அந்தப் பையனோட படிப்புக்கு உதவி செஞ்சது உங்கப்பாதான்! பள்ளிக்கூடத்தில சேக்கறதிலேந்து, காலேஜ் ஃபீஸ் கட்டற வரையிலேயும், முழுக்க முழுக்க உதவினவரு உங்கப்பாதான்!" என்றாள் கல்யாணி.

"அப்புறம் என்னப்பா? நீங்க சென்னைக்குப் போய் கார்த்திகேயனைப் பார்த்து, அவரோட கம்பெனியில  நான் இன்டர்வியூவுக்குப் போயிட்டு வந்திருக்கேன்னு சொன்னாப் போதுமே!" என்றான் வாசு, உற்சாகத்துடன்.

"சொன்னாப் போதும்தான். ஆனா, உங்க அப்பா சொல்ல மாட்டாரு!" என்றாள் கல்யாணி.

"நாம ஒத்தருக்கு உதவி செஞ்சிருக்கோங்கறதுக்காக, அவங்ககிட்ட போய் பதிலுக்கு ஒரு உதவி கேக்கறதைப் போல அவமானமான விஷயம் எதுவும் இல்ல. உனக்கு அந்த வேலை அதுவா கிடைச்சா கிடைக்கட்டும். இல்லேன்னா, வேற வேலைக்கு முயற்சி பண்ணு!" என்றார் மோகனரங்கம், உறுதியான குரலில்.

குறள் 961:
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.

பொருள்: 
கட்டாயமாகச் செய்து தீர வேண்டிய செயல்கள் என்றாலும் கூட, அவற்றால் தனது பெருமை குறையுமானால், அந்தச் செயல்களைத் தவிர்த்திடல் வேண்டும்.

962. புதிய வாய்ப்புகள்!

"இப்பல்லாம் குளோப் டிவியில நடக்கற பட்டிமன்றங்கள்ள உனக்குக் கண்டிப்பா ஒரு இடம் உண்டுன்னு ஆயிடுச்சு. வாழ்த்துக்கள் குமரன்!" என்றார் குமரன் பணி புரிந்த நிறுவனத்தின் பொது மேலாளர்.

"ரொம்ப நன்றி சார்!" என்றான் குமரன்.

"இனிமே நீ இது மாதிரி நிகழ்ச்சிகளுக்குப் போகணும்னா, உனக்கு லீவ் கொடுக்கணும்னு சொல்லி இருக்கேன்."

"ரொம்ப நன்றி சார்!" என்றான் குமரன், திரும்பவும். 

ன்று குமரன் அலுவலகத்தில் இருந்தபோது, அவனைப் பொது மேலாளர் அழைப்பதாக, பியூன் வந்து அழைத்தான்.

பொது மேலாளர் அறைக்குச் சென்றதும், அங்கே அமர்ந்திருந்த ஒருவரைக் குமரனுக்கு அறிமுகம் செய்து வைத்தார் பொது மேலாளர்.

"குமரன்! இவர் வினோத்குமார். நம்ம கம்பெனியோட மார்க்கெடிங் கன்சல்டன்ட். இவர் உங்கிட்ட ஏதோ சொல்ற விரும்பறார். கேளு!" என்றார் பொது மேலாளர்.

"மிஸ்டர் குமரன்! உங்க நிகழ்ச்சிகளை நான் பார்த்திருக்கேன். நீங்க நல்லாப் பேசறீங்க!" என்றார் வினோத்குமார்.

"நன்றி சார்!"

"இப்ப, நீங்க நம்ம கம்பெனிக்கு ஒரு அஸெட் ஆயிட்டீங்க. நீங்க பிரபலமா இருக்கறது நம்ம கம்பெனிகு நல்ல பப்ளிசிடியைக் கொடுத்திருக்கு. அதனால, உங்களுக்கு இன்னும் நிறைய சந்தர்ப்பங்கள் கிடைச்சு, உங்களுக்கு இன்னும் அதிகப் புகழ் கிடைக்கணும்னு கம்பெனி விரும்புது. அதனால, வேற சில தொலைக்காட்சிககள்ள நடக்கற சில  நிகழ்ச்சிகள்ள உங்களுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுக்க நான் முயற்சி செஞ்சேன்!" என்றார் வினோத்குமார்.

"நான் சொல்லித்தான் அவர் இதை செஞ்சாரு!" என்றார் பொது மேலாளர்.

"ஆனா, அவங்க நீங்க ரொம்ப சீரியசானவர்னும், அது மாதிரி நிகழ்ச்சிகளுக்கு நீங்க சரியா வர மாட்டீங்கன்னும் சொல்லிட்டாங்க."

"சார்! நான் சீரியசானவனாங்கறது எனக்குத் தெரியாது. ஆனா, பட்டிமன்றத்தில நகைச்சுவை இல்லாம பேச முடியாது. நானும் எனக்குத் தெரிஞ்ச அளவுக்கு நகைச்சுவையாப் பேசறேன். மக்களும் அதை ரசிக்கறாங்க. நீங்க எந்த நிகழ்ச்சியைப் பத்தி சொல்றீங்கன்னு எனக்குத் தெரியல!" என்றான் குமரன்.

"நீங்க சீரியசானவர்னா, உங்களுக்கு நகைச்சுவை உணர்வு இல்லைன்னு அர்த்தம் இல்ல. பட்டிமன்றங்கள்ள, நீங்க நகைச்சுவையாப் பேசறீங்க, அதை மக்கள் ரசிக்கறாங்கங்கறது உண்மைதான். ஆனா, இதில உங்களுக்கு ஒரு சாசுரேஷன் வந்துடுச்சு. வருஷத்துக்கு நாலைஞ்சு தடவை உங்களைக் கூப்பிடறாங்க. அவ்வளவுதான். அதுக்குத்தான், உங்களை வேற நிகழ்ச்சிகள்ள பங்கேற்க வைக்க முயற்சி செய்யறோம்" என்றார் பொது மேலாளர்.

"என்ன மாதிரி நிகழ்ச்சிகள் சார்!"

"'ஊர் சிரிக்குது!' மாதிரி நிகழ்ச்சிகள்."

"சார்! அது மாதிரி நிகழ்ச்சிகள் எனக்குச் சரியா வராது சார்!"

"அந்த நிகழ்ச்சியை நடத்தறவங்களும் எங்கிட்ட அப்படித்தான் சொன்னாங்க. உங்களுக்குக் கொஞ்சம் டிரெயினிங் கொடுத்தா சரியாயிடும்" என்றார் வினோத்குமார்.

"எதுக்கு சார்!"

"குமரன்! அந்த நிகழ்ச்சியில நீ கலந்துக்கிட்டா, வாராவாரம் டிவியில வருவே. நிறையப் பணம் கிடைக்கும். அதை விட, உனக்கு எவ்வளவு புகழ் வரும்னு நினைச்சுப் பாரு. நீ ஆஃபீசுக்கே வர வேண்டாம். உன்னோட சம்பளம் மாசாமாசம் உன்னோட அக்கவுன்ட்டுக்கு வந்துடும். இன்க்ரிமென்ட் ஆடோமாடிக்கா வரும். புரொமோஷன் எல்லாம் சீக்கிரமே வரும். இவ்வளவு புகழோட இருக்கற நீ, எங்க கம்பெனியில வேலை செய்யறேங்கற பெருமை மட்டும் எங்களுக்குப் போதும். உன் ஃபோட்டோவை நம் கம்பெனி விளம்பரங்கள்ள பயன்படுத்திப்போம். அவ்வளவுதான். மிஸ்டர் வினோத் ரெண்டு மூணு மாசத்தில உனக்கு டிரெயினிங் கொடுத்து, உன்னை அவங்க செலக்ட் பண்ற மாதிரி தயார் செஞ்சுடுவார். என்ன சொல்ற?" என்றார் பொது மேலாளர்.

"சார்! எங்கப்பா ஒரு தமிழறிஞர். அவரைப் பார்த்துதான் எனக்குத் தமிழ்ல ஆர்வம் வந்தது. பட்டிமன்ற நிகழ்ச்சிகள்ள கலந்துக்கற வாய்ப்பு கிடைச்சது.  குளோப் தொலைக்காட்சியில வாய்ப்புக் கிடைச்சதும், எனக்குப் பேரும் புகழும் கிடைச்சது. நீங்க சொல்ற மாதிரி, வருஷத்துக்கு நாலைஞ்சு தடவைதான் வாய்ப்புக் கிடைக்குதுன்னாலும், எனக்கு அதில ஒரு திருப்தி இருக்கு. என் பேச்சை ரசிக்கிறவங்க, என் மேல நல்ல மதிப்பு வச்சிருக்காங்க. நீங்க சொல்ற 'ஊர் சிரிக்குது' நிகழ்ச்சியை நான் பார்த்திருக்கேன். அதை நிறைய பேர் பார்க்கறாங்கறது உண்மையாக இருக்கலாம். ஆனா, எனக்கு அது ஒரு தரக் குறைவான நிகழ்ச்சியாத் தோணுது. அதுல நான் கலந்துக்கிட்டா, எனக்கு அதிகப் பணமும், புகழும் கிடைக்கலாம். ஆனா, அந்த மாதிரிப் புகழை நான் விரும்பல. 'இவனோட அப்பா ஒரு தமிழறிஞர், ஆனா, இவன் இப்படிப்பட்ட மட்டமான நிகழ்ச்சிகள்ள கலந்துக்கறானே!'ன்னு யாரும் நினைக்கறதை நான் விரும்பல. என்னை மன்னிச்சுடுங்க சார்!" என்றான் குமரன்.

குறள் 962:
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.

பொருள்: 
புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தேடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்ய மாட்டார்.

963. உயர்ந்த இடத்தில் இருந்தபோது...

"தலைசிறந்த தொழில் அதிபர்கள்ள ஒத்தரா இருந்த நீங்க, இன்னிக்கு இவ்வளவு கீழே வந்ததுக்கு என்ன காரணம்னு நினைக்கிறீங்க?" என்றார் மதன்மோகன்.

"சார்! இது நான் உங்களோட நடத்தற மூணாவது மீட்டிங். இந்த பாயின்ட்டை நாம ஏற்கெனவே விரிவா விவாதிச்சுட்டோம். இப்ப நீங்க தீர்மானிக்க வேண்டியது, என் நிறுவனத்தை மறுபடி மேலே கொண்டு வருவதற்கான என்னோட திட்டத்துக்கு நீங்க உதவப் போறீங்களாங்கறதுதான்!" என்றார் முத்துகிருஷ்ணன்.

"சரி. அடுத்த வாரம் வாங்க. மறுபடி பேசலாம்."

"மன்னிச்சுக்கங்க சார்! உங்களுக்கு இன்னும் ஏதாவது விளக்கங்கள் வேணும்னா சொல்லுங்க. அதையெல்லாம் கொடுக்கறேன். ஆனா, திரும்பத் திரும்ப உங்களை வந்து பார்க்கறதை நான் விரும்பல. உங்களுக்கு வேற என்ன விவரம் வேணும்னாலும் என்னோட கன்சல்டன்ட்கிட்ட சொல்லுங்க. நான் வரேன்!" என்று கூறிக் கிளம்பினார் முத்துகிருஷ்ணன்.

சிறிது நேரம் கழித்து, முத்துகிருஷ்ணனின் கன்சல்டன்ட் ஹரிபாபுவிடமிருந்து மதன்மோகனுக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது? 

"என்ன சார், மீட்டிங் எப்படிப் போச்சு?" என்றார் ஹரிபாபு.

"என்ன சார் இது? மனுஷன் நொடிச்சுப் போயிருக்காரு. அவருக்கு உதவி செய்ய யாருமே தயாரா இல்ல. நீங்க ரெஃபர் பண்ணினதால, நான் அவரோட ரிவைவல் புராஜக்டுக்கு உதவி செய்யறதைப் பத்திப் பரிசீலனை செய்யலாம்னு நினைச்சேன். ஆனா, அவர் இவ்வளவு திமிராப் பேசறாரு!" என்றார் மதன்மோகன், கோபத்துடன்.

"சார். தப்பா நினைச்சுக்காதீங்க! அது திமிர் இல்லை. எந்த நிலைமையிலும் தன்னோட கௌரவம் பாதிக்கப்படக் கூடாதுன்னு நினைக்கிறாரு. அவ்வளவுதான். அவர் மூணு தடவை உங்களை சந்திச்சு விளக்கமாப் பேசிட்டாரு. நீங்க மறுபடியும் வரச் சொன்னதை அவர் விரும்பல அவ்வளவுதான்!" என்றார் ஹரிபாபு.

"பண உதவி கேக்கறவங்க பணிஞ்சுதான் போகணும். அவரு உச்சத்தில இருந்தப்ப எப்படி இருந்தாரோ, அப்படியேதான் இப்பவும் இருக்கணும்னா முடியுமா?"

"சார்! அவரு உச்சத்தில இருந்தப்ப, நீங்க அவரைப் பார்த்ததில்ல. அதனால, அப்ப அவர் எவ்வளவு பணிவா இருந்தார்னு உங்களுக்குத் தெரியாது. அவரோட பணிவைப் பார்த்து, அவரை சாதாரணமா நினைச்சவங்க எத்தனையோ பேரு. ஒரு தடவை, பாங்க்ல போய் கியூவில நின்னுருக்காரு. மானேஜர் பார்த்துட்டு ஓடி வந்து, 'நீங்க ஏன் சார் கியூவில நிக்கறீங்க? என்னோட கேபினுக்கு வந்திருந்தா, உங்களுக்கு வேண்டியதை நான் செஞ்சு கொடுத்திருப்பேனே' ன்னு சொல்லி இருக்காரு. அதுக்கு இவரு, 'என் வேலைக்காக உங்க அறைக்குள்ள வந்து உங்க வேலையைக் கெடுக்கறது எப்படி நியாயமா இருக்கும்?' னு சிரிச்சுக்கிட்டே சொன்னாராம்.

"ஏன், நான் அவருக்கு அறிமுகமானப்ப, நான் ஒரு சாதாரண ஆளாத்தான் இருந்தேன். நான் என் கன்சல்டன்ட் தொழிலை ஆரம்பிச்ச புதுசு. அவரைப் பார்க்க முடியுமான்னு பயந்துகிட்டேதான் அவர் ஆஃபீசுக்குப் போனேன். முன்பின் தெரியாத என்னைக் கொஞ்சம் கூடக் காக்க வைக்காம, தன் அறைக்குக் கூப்பிட்டுப் பேசினாரு. நான் என் தொழிலைப் பத்தி சொன்னப்ப, 'இப்ப எனக்கு கன்சல்டன்ட் உதவி தேவைப்படல. தேவைப்பட்டா உங்களைக் கூப்பிடறேன்'னு சொன்னாரு. அது மாதிரியே, ரெண்டு வருஷம் கழிச்சு ஒரு புது புராஜக்ட் ஆரம்பிக்கறப்ப, ஞாபகம் வச்சுக்கிட்டு என்னைக் கூப்பிட்டாரு.

"அவர் உயர்ந்த நிலையில இருந்தப்ப, எந்த அளவுக்குப் பணிவா இருந்தாரோ, அந்த அளவுக்கு இப்ப தன்மானத்தோட இருக்காரு. அவருக்கு உதவறதா வேண்டாமாங்கறதை நீங்க முடிவு செஞ்சு எங்கிட்ட சொல்லுங்க."

மதன்மோகனின் பதிலை எதிர்பார்க்காமல் ஃபோனை வைத்து விட்டார் ஹரிபாபு.

குறள் 963:
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.

பொருள்:
உயர்ந்த நிலை வரும்போது அடக்க உணர்வும், நிலை தாழ்ந்து விட்டால், அப்போது உயர்வான மான உணர்வும் இருக்க வேண்டும்.

964. கோவில் திருவிழா

அந்த ஊரில் யாருமே சொக்கலிங்கத்தைப் பெயர் சொல்லிக் குறிப்பிட மாட்டார்கள் பண்ணையார் என்றுதான் சொல்வார்கள்.

அந்த அளவுக்கு அந்த ஊர் மக்களிடையே அவருக்குப் பெரும் மதிப்பும் மரியாதையும் இருந்தன.

இத்தனைக்கும், பண்ணையார் என்று சொல்லும் அளவுக்கு அவர் அதிக நிலம் வைத்திருந்தவர் அல்ல. ஓரளவுக்கு வசதியானவர், அவ்வளவுதான்.

சொக்கலிங்கத்துக்குப் பரம்பரையாக இருந்த பெருமையைத் தவிர, அவருடைய பண்பான அணுகுமுறையும் அவருக்கு மதிப்பைத் தேடித் தந்தது. அவர் யாரையும் கீழானவராக நினைத்ததில்லை, யாரையும் மரியாதைக் குறைவாக நடத்தியதும் இல்லை.

"மனுஷன்னா இப்படி இருக்கணும்யா! நாலு காசு சம்பாதிச்சுட்டு, ரெண்டு சென்ட் நிலம் வாங்கினவங்கள்ளாம், பெரிய ஜமீன்தார் மாதிரி பந்தா பண்றாங்க. இவர் எப்படி இருக்காரு பாருங்க!" என்று ஊரில் பலரும் தங்களுக்குள் பேசிக் கொள்வது உண்டு.

ந்த ஊருக்குப் பக்கத்து ஊரில் இருந்த கனகம் என்ற பெண்மணி கொலை செய்யப்பட்ட செய்தி, அந்த ஊரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

"அந்தப் பொண்ணு ஒரு மாதிரியாம்! அவளோட தொடர்பு வச்சிருந்த யாரோ ஒத்தர்தான் அவளைக் கொன்னிருப்பாங்கன்னு பேசிக்கறாங்க!" என்ற பேச்சு ஊர்மக்களிடையே எழுந்தது.

கொலை நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் சொக்கலிங்கத்தைக் கைது செய்தனர்.

ஆயினும், அடுத்த சில வாரங்களில், உண்மையான கொலையாளி கண்டுபிடிக்கப்பட்டு, சொக்கலிங்கம் விடுதலை செய்யப்பட்டார். 

வீட்டுக்கு வந்த சொக்கலிங்கம், பல நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

"உங்களைப் பார்க்க கோவில் தர்மகர்த்தா வந்திருக்காரு" என்றாள் சொக்கலிங்கத்தின் மனைவி.

"வாங்க! உக்காருங்க" என்று தர்மகர்த்தாவை வரவேற்றார் சொக்கலிங்கம்.

தர்மகர்த்தா உட்காரவில்லை.

"உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்" என்றார்.

"சொல்லுங்க!"

"அடுத்த வாரம் கோவில் திருவிழா வருது."

கோவில் திருவிழாவின்போது, சொக்கலிங்கதத்துக்கு முதல் மரியாதை தருவது வழக்கம். அதைச் சொல்லத்தான் வந்திருக்கிறார் போலிருக்கிறது. 

"இந்த சந்தர்ப்பத்தில, நான் முதல் மரியாதை வாங்கிக்கறது சரியா இருக்குமான்னு தெரியல!" என்றார் சொக்கலிங்கம், தயக்கத்துடன்.

"இந்த வருஷம் சுந்தரமூர்த்திக்கு முதல் மரியாதை கொடுக்கறதுன்னு கமிட்டியில முடிவு செஞ்சுட்டாங்க. நான் சொல்ல வந்தது வேற விஷயம்!"

"என்ன? என்றார் சொக்கலிங்கம், அதிர்ச்சியுடன்.

"கொலையில உங்களுக்குத் தொடர்பு இல்லேன்னாலும், அந்தப் பொண்ணோட உங்களுக்குத் தொடர்பு இருந்த விஷயம் தெரிஞ்சதால, ஊர்மக்கள் ரொம்ப அதிர்ச்சியில இருக்காங்க. இந்த நிலைமையில, உங்களைப் பொது இடத்தில பார்த்தா, மக்கள் எப்படி நடந்துப்பாங்கன்னு தெரியாது. அதனல, நீங்க திருவிழாவில கலந்துக்காம, வீட்டில இருக்கறதுதான் நல்லதுன்னு உங்ககிட்ட சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்."

சொக்கலிங்கத்தின் பதிலை எதிர்பாராமல், தர்மகர்த்தா வெளியே நடந்தார். 

குறள் 964:
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.

பொருள்: 
உயர்ந்த நிலையில் இருந்தவர், தன் நிலை தாழ்ந்தால், தலையிலிருந்து உதிர்ந்த முடியைப்  போன்றவர் ஆவார்.

965. வெள்ளையால் வந்த கறை!

அந்த அரசு அலுவலகத்தில் ஒரு உதவியாளராக இருந்த ரமணன் மீது அந்த அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள் எல்லோருக்கும் ஒரு மதிப்பும் மரியாதையும் உண்டு. அவருடைய உயரதிகாரிகள் கூட அவரிடம் அதிக மரியாதையுடன்தான் பேசுவார்கள்.

இதற்குக் காரணங்கள் இரண்டு. 

ஒன்று அந்த அலுவலகத்தின் விதிகள் மற்றும் நடைமுறைகள் பற்றி ரமணனுக்கு இருந்த ஆழ்ந்த அறிவு. அந்த அலுவலகத்தின் தலைமை அதிகாரியின் அறையை ஒட்டி இருந்த ஒரு பழைய அறையில், ஒரு அலமாரி முழுவதும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அலுவலக விதிமுறைகள், சட்டங்கள், நடைமுறைகள் பற்றிய புத்தகங்கள், கையேடுகள் ஆகியவற்றில் இருக்கும் அத்தனை விஷயங்களும் அவர் மூளைக்குள் பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தன.

யார் எந்த விஷயத்தைப் பற்றிக் கேட்டாலும், டக்கென்று பதில் சொல்வார் ரமணன். சிக்கலான விஷயங்களை எப்படி அணுகுவது என்று யோசனை சொல்லுவார். சில சமயம், அவருடைய மேலதிகாரிகள் அவரிடம் சந்தேகம் கேட்டு விளக்கம் பெற்றபின், அவர் சொன்தைச் சரிபார்க்க, சட்டப் புத்தகங்களைப் பார்ப்பார்கள். அவர் கூறியது ஒருமுறை கூடத் தவறாகப் போனதில்லை.

இரண்டாவது காரணம், அவருடைய நேர்மை. பணிகளை முடித்துக் கொடுக்கப் பொதுமக்களிடமிருந்து லஞ்சம் பெறுவது ஒரு வழக்கமாக இருந்த அந்த அலுவலகத்தில், ரமணன் மட்டும் யாரிடமும் லஞ்சம் பெற்றதில்லை. அவரிடம் வரும் விண்ணப்பங்கள் சட்டப்படி சரியாக இருந்தால், அவற்றை ஏற்றுக் கொள்ளலாம் என்று குறிப்பெழுதுவார். விதிகளுக்குப் புறம்பாக இருந்தால், அதைக் குறிப்பிட்டு எழுதி விடுவார்.

சில விண்ணப்பதாரர்கள், அவரைத் தங்களுக்குச் சாதகமாகக் குறிப்பு எழுதும்படி செய்ய எவ்வளவோ முயன்றும், அவர் தன் நிலையை மாற்றிக் கொண்டதில்லை. இறுதியில், விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பம் ரமணனிடம் போய் விடக் கூடாது என்று கடவுளை வேண்டிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்பட்டது.

மணனின் வீட்டுக்கு வந்திருந்த அவருடைய சக ஊழியர் நாதன், "என்ன சார்! வீட்டுக்கு வெள்ளையடிச்சு ரொம்ப வருஷம் ஆகி இருக்கும் போல இருக்கே!" என்றார்.

"ஆமாம். என் மனைவி கூட சொல்லிக்கிட்டிருக்கா. அதுக்கு நிறைய செலவாகுமே! எப்ப முடியுமோ தெரியல!" என்றார் ரமணன்.

"நீங்க எப்ப வெள்ளை அடிக்கறதானாலும், தண்டபாணியை விட்டு அடிக்கச் சொல்லுங்க. அவர்தான் குறைஞ்ச கட்டணத்துக்கு நல்லா அடிச்சுக் கொடுப்பாரு."

"அவர் நம்ம ஆஃபீஸ்ல அடிக்கடி அப்ளிகேஷன் போட்டுக்கிட்டே இருப்பாரே! அவரை விட்டு செய்யச் சொன்னா, சரியா இருக்குமா?"

"அவர் என்ன சும்மாவா அடிக்கப் போறாரு? காசு வாங்கிக்கிட்டுத்தானே அடிக்கப் போறாரு! நமக்குக் கொஞ்சம் குறைஞ்ச கட்டணத்தில அடிச்சுக் கொடுப்பாரு. அவ்வளவுதான்! நம்ம ஆஃபீஸ்ல இருக்கற எல்லார் வீட்டுக்கும் அவர்தான் வெள்ளை அடிக்கறாரு" என்றார் நாதன்.

"என்ன சார்! நாங்கள்ளாம் ஏதோ அஞ்சு பத்துன்னு வாங்கறோம். நீங்க மொத்தமா வாங்கறீங்க போல இருக்கே!" என்றான் சுந்தர் என்ற சக ஊழியன். 

"என்னப்பா சொல்ற?" என்றார் ரமணன், புரியாமல்.

"கான்டிராக்டர் தண்டபாணியை வச்சு உங்க வீட்டுக்கு வெள்ளை அடிச்சுட்டீங்களே, அதைச் சொல்றேன்!"

"தப்பாப் பேசாதே! பணம் கொடுத்துத்தான் அடிக்கச் சொன்னேன்" என்றார் ரமணன், கோபத்துடன்.

"கொடுத்திருப்பீங்க. அம்பதாயிரம் ரூபா வேலைக்கு ஐயாயிரம் ரூபாய் கொடுத்திருப்பீங்க!"

ரமணன் பதில் சொல்வதற்குள், அவரை அவர் மேலதிகாரி அழைப்பதாக பியூன் வந்து சொல்ல, மேலதிகாரியின் அறைக்குச் சென்றார் ரமணன்.

"ரமணன்! உங்ககிட்ட ஒரு அப்ளிகேஷன் அனுப்பி இருக்கேன்.அதுக்கு ஃபேவரபிளா நோட் போட்டுடுங்க!" என்றார் மேலதிகாரி.

"ரூல்ஸ்படி எல்லாம் சரியா இருந்தா, போட்டுடறேன்."

"ரூல்ஸ்படி எல்லாம் சரியா இருந்தா, நான் ஏன் இதை உங்ககிட்ட சொல்றேன்? நீங்க பணமா வாங்க மாட்டீங்க, பொருளாவோ, சேவையாவோதான் வாங்குவீங்க போல இருக்கு! அவர் உங்களுக்கு ஏதாவது செய்யணும்னா சொல்லுங்க. செஞ்சு கொடுத்துடுவாரு, தண்டபாணி உங்க வீட்டுக்கு வெள்ளை அடிச்சுக் கொடுத்த மாதிரி!" என்று சொல்லிச் சிரித்தார் மேலதிகாரி.

அவருக்குச் சூடாக பதில் சொல்ல வேண்டும் என்று எழுந்த எண்ணத்தை அடக்கிக் கொண்ட ரமணன், அமைதியாகத் தன் இருக்கைக்குத் திரும்பினார்.

குறள் 965:
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.

பொருள்: 
குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும், ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால், தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்.

966. தணிகாசலம் போட்ட கணக்கு!

"என்ன தலைவரே இது, அந்த வீரய்யா உங்களைப் பத்தி எவ்வளவு கேவலமாப் பேசி இருக்காரு? அவரோட கூட்டணி வச்சுக்கலாம்னு சொல்றீங்களே!" என்றார் அ.கெ.மு. கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் செல்வமணி.

"இங்க பாருங்க. இந்தத் தேர்தல் நமக்கு ரொம்ப முக்கியம். போன தேர்தல்ல நாம தோத்து ஆட்சியை இழந்துட்டோம். இந்தத் தேர்தல்லேயும் தோத்துட்டோம்னா, நம்ம கட்சி காணாமலே போயிடும், கருத்துக் கணிப்புகள் எல்லாம் ஆளும் கட்சிக்கும் நமக்கும் கடுமையான போட்டி இருக்கும்னு சொல்லுது. வீரய்யாவோட கட்சிக்கு அஞ்சு சதவீதம் ஓட்டு இருக்கு. அதனால அவரோட கூட்டு சேர்ந்தா, நாம கண்டிப்பா ஜெயிச்சுடலாம்!" என்றார் பொதுச் செயலாளர் தணிகாசலம்.

"வீரய்யா உங்க மேல ஊழல் புகார் எல்லாம் சொல்லி இருக்காரு. உங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்து சிறைக்கு அனுப்பறதுதான் தன்னோட வாழ்க்கை லட்சியம்னு சொல்லி இருக்காரு. அவரோட போய் எப்படிக் கூட்டு வச்சுக்க முடியும்?" என்றார் செல்வமணி, கோபத்துடன்.

"அப்படிச் சொல்லிட்டு, நம்மோட கூட்டு வச்சுக்கிட்டது ஏன்னு சொல்ல வேண்டியது அவரோட பிரச்னை. நம்மைப் பொருத்தவரை. நாம ரொம்பப் பெருந்தன்மையா நடந்துக்கிட்டதாக் காட்டிப்போம்!" என்றார் தணிகாசலம்.

தணிகாசலத்தின் அ.கெ.மு. கட்சிக்கும், வீரய்யாவின் வெ.கெ.மு. கட்சிக்கும் கூட்டணி ஏற்பட்டது. வெ.கெ.மு. கட்சிக்கு அவர்கள் பலத்துக்குப் பொருந்தாத விதத்தில் அதிக இடங்களை அ.கெ.மு. விட்டுக் கொடுத்தது.

"யாருக்கு எவ்வளவு இடம் என்பது முக்கியமில்லை. இந்தக் கூட்டணி எல்லா இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எங்கள் ஒரே நோக்கம்!" என்றார் தணிகாசலம்.

தேர்தல் முடிவுகள் வந்து விட்டன.

"வெ.கெ.மு.வோட கூட்டு வச்சுக்கறதுக்கு முன்னால, நமக்கும் ஆளும் கட்சிக்கும் சமமான அளவு ஆதரவு இருக்கறதா கருத்துக் கணிப்புகள் சொல்லிச்சு. வெ.கெ.மு.வோட அஞ்சு சதவீதம் ஓட்டுக்களும் சேர்ந்தா, நாம ஆளும் கட்சியை விட அஞ்சு சதவீதம் அதிக ஓட்டு வாங்கி ஜெயிச்சிருக்கணும். ஆனா, அஞ்சு சதவீத ஓட்டு குறைவா வாங்கித் தோத்திருக்கோம். அப்படின்னா, நாம பத்து சதவீத ஓட்டை இழந்திருக்கோம்னு அர்த்தம்!" என்றார் செல்வமணி.

தணிகாசலம் மௌனமாக இருந்தார்.

"ஆனா, நீங்க சொன்ன ஒரு விஷயம் நடக்கப் போகுது!"

"என்ன?" என்றார் தணிகாசலம்.

"இந்தத் தேர்தல்ல தோத்துட்டா, நம்ம கட்சி காணாமப் போயிடும்னு சொன்னீங்க இல்ல, அது!" என்றார் செல்வமணி.

குறள் 966:
புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை.

பொருள்: 
தன்னை இகழ்கின்றவரின் பின் சென்று பணிந்து நிற்கும் நிலை, ஒருவனுக்குப் புகழும் தராது, அவனை தேவருலகிலும் செலுத்தாது, வேறு பயன் என்ன?
"எங்கே போயிட்டு வரீங்க?" என்றாள் சரசு.

967. வேண்டாம் இந்த வேலை!

"நல்ல விஷயமாத்தான்!" என்றான் கதிரேசன், சிரித்துக் கொண்டே.

"என்ன நல்ல விஷயம்?"

"சொல்றேன்."

ஆயினும், அடுத்த இரண்டு நாட்களுக்குக் கதிரேசன் அந்த நல்ல விஷயம் எது என்று சொல்லவில்லை. 

இரண்டு நாட்களுக்குப் பிறகு, வெளியே எங்கோ போய் விட்டு வந்து, சரசுவிடம் குடும்பச் செலவுக்குப் பணம் கொடுத்தான் கதிரேசன்.

"பணம் ஏதுங்க?" என்றாள் சரசு.

"நாளையிலேந்து வேலைக்குப் போகப் போறேன்!"

"அப்படியா?" என்று மகிழ்ச்சியுடன் கூறிய சரசு, "வேலைக்குப் போனா, மாசம் முடிஞ்சதும்தானே சம்பளம் கொடுப்பாங்க! வேலைக்குப் போறதுக்கு முன்னாலேயே எப்படி சம்பளம் கொடுப்பாங்க?" என்றாள், வியப்புடன்.

"நமக்குத் தெரிஞ்சவங்களா இருந்தா, சொந்தக்காரங்களா இருந்தா, கொடுக்க மாட்டாங்களா?"

"சொந்தக்காரங்களா?"

"நம்ம பரந்தாமன் கம்பெனியிலதான் நான் வேலைக்குப் போகப் போறேன்!"

"எந்தப் பரந்தாமன்?" என்று கேட்ட சரசு, உடனே எந்தப் பரந்தாமன் என்று புரிந்து கொண்டவளாக, "அவன் கம்பெனியிலேயா?" என்றாள், அதிர்ச்சியுடன்.

த்து ஆண்டுகளுக்கு முன் சரசு கதிரேசனைத் திருமணம் செய்து கொண்டதும், அவர்கள் அவனுடைய கிராமத்து வீட்டில்தான் குடித்தனம் நடத்தினர்.

அது கதிரேசனின் தந்தை கணபதி வியாபாரத்தில் ஈட்டிய பணத்தில் வாங்கிய வீடு.

சரசுவின் திருமணத்துக்குச்குச் சில ஆண்டுகள் முன்பிருந்தே, கணபதியின் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட ஆரம்பித்திருந்தது. சமீபத்தில்தான் தந்தையுடன் வியாபாரத்தில் இணைந்திருந்த கதிரேசன், வியாபாரத்தை மேம்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தான்.

ஆனால், திடீரென்று கணபதி இறந்து விட்டார்

கணபதி இறந்ததும், வியாபாரத்துக்காக அவருக்குக் கடன் கொடுத்திருந்தவர்கள் கதிரேசனை நெருக்க ஆரம்பித்தனர்.

கணபதிக்குக் கடன் கொடுத்திருந்தவர்களில் முக்கியமானவர் கணபதியின் ஒன்று விட்ட சகோதரர் பூமிநாதன்.. 

கதிரேசன் பூமிநாதன் வீட்டுக்குச் சென்றான்.

"சித்தப்பா! அப்பா இறந்துட்டாரு. நான் வியாபாரத்தை மேம்படுத்த முயற்சி செஞ்சுக்கிட்டிருக்கேன். மத்த கடன்கார்கள்கிட்ட எல்லாம் பேசிட்டேன். அவங்க ஆறு மாசம் டைம் கொடுத்திருக்காங்க. நீங்களும் கொஞ்சம் பொறுத்துக்கிட்டீங்கன்னா, உங்க கடனைக் கொஞ்சம் கொஞ்சமாத் திருப்பிக் கொடுத்துடுவேன்!" என்றான் கதிரேசன்.

பூமிநாதன் பதில் சொல்வதற்குள் அருகிலிருந்த அவருடைய மகன் பரந்தாமன், "யாருடா சித்தப்பா? உங்கப்பா என்ன எங்கப்பாவோட கூடப் பொறந்தவரா? உறவை எல்லாம் சொல்லிக்கிட்டு வராதே! மரியாதையாக் கடனைத் திருப்பிக் கொடுக்கப் பாரு. இல்லேன்னா, கோர்ட்ல கேஸ் போட்டுப் பணத்தை வாங்கிடுவோம்!" என்றான்.

"பரந்தாமா! நான் உன்னை விட வயசில பெரியவன். கொஞ்சம் மரியாதையாப் பேசு" என்றான் கதிரேசன், பொறுமையுடன்.

"கடன் வாங்கிட்டு அதைத் திருப்பிக் கொடுக்க முடியாதவனுக்கு என்னடா மரியாதை வேண்டிக் கிடக்கு?" என்றான் பரந்தாமன்.

"பரந்தாமா! சும்மா இரு. நான் பேசிக்கறேன்" என்ற பூமிநாதனை, "நீங்க சும்மா இருங்கப்பா! உங்களுக்குக் கடன் கொடுக்கத்தான் தெரியும், கொடுத்த கடனைத் திருப்பி வாங்கத் தெரியாது" என்று அடக்கிய பரந்தாமன், "இங்கே பாரு கதிரேசா! உங்கப்பனை நம்பித்தான் எங்கப்பா கடன் கொடுத்தாரு. அவன் போய்ச் சேர்ந்தப்புறம், உன்னை நம்பி நாங்க காத்துக்கிட்டிருக்க முடியாது. இன்னும் ரெண்டு வாரத்துக்குள்ள கடனை வட்டியோட செட்டில் பண்ணலேன்னா, கோர்ட்ல கேஸ் போட்டுடுவேன்!" என்றான்.

தன்னை மட்டுமின்றித் தன் தந்தையையும் அவமரியாதையாகப் பேசியவனிடம் தொடர்ந்து பேசுவதில் பயனில்லை என்று உணர்ந்து, கதிரேசன் மௌனமாக வெளியேறினான்.

பரந்தாமனின் வீட்டிலிருந்து கதிரேசன் வெளியே வந்தபோது, அந்தத் தெருவில் இருந்தர்களில் பலர் பரந்தமனின் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தபோது, பரந்தாமன் உரத்த குரலில் தன்னையும் தன் தந்தையையும் மரியாதைக் குறைவாகப் கத்திப் பேசியது அவர்கள் காதில் விழுந்திருக்கும் என்ற உணர்வு கதிரேசனை மேலும் அவமானமாக உணரச் செய்தது.

வேறு வழியில்லாமல், வீட்டை விற்று, எல்லாக் கடன்களையும் அடைத்து விட்டு ஊரை விட்டே வெளியேறி விட்டான் கதிரேசன்.

அதற்குப் பிறகு, அருகிலிருந்த நகரத்தில் குடியேறி, ஒரு நிலையான வேலை கிடைக்காமல், பத்து வருடங்களாகப் பல வேலைகளில் இருந்து அல்லல் பட்டுக் கொண்டிருந்தான் கதிரேசன்.

"நீ நினைக்கிறது எனக்குப் புரியுது சரசு. பரந்தாமன் என்னை அவமானப்படுத்தினவன்தான். ஆனா, நாம இப்ப இருக்கற நிலைமையில எனக்கு வேற வழி தெரியல. அவன் இந்த ஊர்ல ஒரு கம்பெனி வச்சு நடத்திக்கிட்டிருக்கான்னு கேள்விப்பட்டு அவனைப் போய்ப் பார்த்தேன். அவன் எனக்கு ஒரு வேலை போட்டுக் கொடுத்து, ஒரு மாசச் சம்பளத்தை அட்வான்சாகவும் கொடுத்திருக்கான்" என்றான் கதிரேசன், சங்கடத்துடன்.

ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்டு யோசித்த சரசு, "நான் ஒண்ணு சொன்னா கேட்பீங்களா?" என்றாள்.

"சொல்லு சரசு!"

"உங்களுக்கு வேலை கிடைக்காம, நமக்கு வருமானம் இல்லாம, நாம பட்டினி கிடந்து செத்தாலும் பரவாயில்ல. ஆனா, இந்த வேலை உங்களுக்கு வேண்டாம். இப்பவே போய் அவன் கொடுத்த அட்வான்சைத் திருப்பிக் கொடுத்துட்டு வந்துடுங்க!" என்றாள் சரசு, உறுதியான குரலில்.

குறள் 967:
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.

பொருள்: 
மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர் வாழ்வதை விட, அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது.

968. அரசனைக் காப்பாற்றியவர்கள்

"பத்து நாட்கள் கழித்துக் கண் விழித்திருக்கிறார் அரசர். அவர் கண் விழிக்கவே மாட்டாரோ என்று நான் அஞ்சிக் கொண்டிருந்தேன்" என்றான் பரஞ்சோதி.

"எல்லாம் நம் வைத்தியரின் கைவண்ணம்தான்" என்றான் வீரவல்லபன்.

அரசருக்கு அருகில் இருந்து அவரை கவனித்துக் கொண்டிருந்த பணிப்பெண் மேகலை, அறைக்கு வெளியில் வந்து, "அரசர் ஏதோ கேட்கிறார். வருகிறீர்களா?" என்றாள்.

இருவரும் விரைந்து, அரசன் படுத்திருந்த அறைக்கு ஓடினர்.

அவர்களைப் பார்த்துப் புன்னகைத்த அரசன் ராஜகம்பீரன், அவர்களை அருகில் வருமாறு சைகை செய்தான்.

"என்னுடைய விசுவாசமான ஊழியர்களான உங்களைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இது என்ன இடம்? நான் எப்படி இங்கே வந்தேன்?" என்றான் அரசன்.

எதிரி நாட்டுடனான போரில், ராஜகம்பீரனின் படைகள் தோற்றதும், போரில் படுகாயம் அடைந்த ராஜகம்பீரன் எதிரி மன்னனால் சிறைப்பிடிக்கப்படாமல், அவனுடைய விசுவாச ஊழியர்கள் சிலர் அவனைக் காப்பாற்றித் தப்புவித்து, ஒரு ரகசிய இடத்துக்குக் கொண்டு வந்து வைத்திருப்பதை அவர்கள் விளக்கினர்.

"போரில் ஏற்பட்ட காயங்களால் மயக்கமடைந்திருந்த தங்களை ஒரு பத்திரமான இடத்துக்கு அழைத்து வந்து, வைத்தியரை வைத்துத் தங்களுக்குச் சிகிச்சை அளித்து வருகிறோம். பத்து நாட்களுக்குப் பிறகு, இன்றுதான் தாங்கள் கண் விழித்திருக்கிறீர்கள்" என்று விளக்கினான் பரஞ்சோதி.

ராஜகம்பீரன் கண்களை மூடிக் கொண்டான். மீண்டும் கண்களைத் திறந்தபோது, அவனிடம் ஒரு சோர்வு இருந்தது.

"வைத்தியர் எங்கே?" என்றான் அரசன்.

"இன்னும் சற்று நேரத்தில் வருவார்" என்ற பரஞ்சோதி, "அரசே! தங்களுக்கு ஏற்பட்டிருந்த காயங்களின் தீவிரத் தன்மையைப் பார்த்தபோது, எங்களுக்கு மிகவம் கவலை ஏற்பட்டது. ஆனால், தங்களைப் பிழைக்க வைக்க முடியும் என்பதில் வைத்தியர் உறுதியாக இருந்தார். அவர் சொன்னது போலவே, தாங்களும் கண் விழித்து எங்கள் வயிற்றில் பாலை வைத்து விட்டீர்கள்" என்றான் .

"உங்கள் வைத்தியரின் பெருமையை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அவருடைய சிகிச்சை சிறப்பாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை ஆனால், இறந்து போகாமல் இருப்பதற்கான மருந்தை, நான் முன்பே உட்கொண்டிருக்கிறேன் போலிருக்கிறது!"

"என்ன சொல்கிறீர்கள், அரசே?"

"போரில் தோற்றவுடன், போர்க்களத்திலேயே என் உயிர் போயிருக்க வேண்டும். அவ்வாறு போக விடாமல், பலத்த காயங்களுடன் நான் என் உயிரைப் பிடித்துக் கொண்டிருந்திருக்கிறேன் என்றால், போரில் தோற்ற அவமானத்தை விட, உயிர் வாழும் விருப்பம் என்னிடம் அதிகமாக இருந்திருக்க வேண்டும் என்பதுதானே பொருள்!" என்றான் ராஜகம்பீரன், கசப்புணர்வுடன்.

குறள் 968:
மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து.

பொருள்: 
மானம் அழிய நேர்ந்தபோது இறந்து போகாமல், இந்த உடம்பைக் காத்து வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்து ஆகுமோ?

969. வழக்கறிஞரின் யோசனை!

அமெரிக்காவில் இருக்கும் தன் மகன் முரளிக்கு ஃபோன் செய்தாள் சியாமளா.

"முரளி, உங்கப்பாவுக்கு பிசினஸில கொஞ்சம் நஷ்டம் வந்துடுச்சு. அவருக்குப் பொருள் சப்ளை பண்ணினவங்களுக்குக் கொடுக்க வேண்டிய பாக்கியைக் கொடுக்க முடியல. நீ கொஞ்சம் பணம் அனுப்பினா நல்லா இருக்கும்" என்றாள்.

"எவ்வளவு?" என்றான் முரளி.

சியாமளா தயங்கிக் கொண்டே,"பத்து லட்ச ரூபாய்!" என்றாள். 

"பத்து லட்சமா? மை காட்! என்னம்மா நினைச்சுக்கிட்டிருக்கே? பத்து லட்ச ரூபாய்க்கு  நான் எங்கே போவேன்?" என்றான் முரளி, கோபத்துடன். 

"பன்னண்டாயிரம் டாலர் உன்னால புரட்ட முடியாதா?"

"டாலர் கணக்கெல்லாம் போடாதே அம்மா! எனக்குப் பன்னண்டாயிரம் டாலர்னா, உங்களுக்குப் பன்னண்டாயிரம் ரூபாய் மாதிரின்னு நினைச்சுக்கிட்டிருக்கீங்களா?"

"முரளி! நான் அப்பா பேசறேன். நான் பொருட்கள் சப்ளை பண்ணின ஒரு பெரிய கஸ்டமர் திடீர்னு ஏதோ பிரச்னையில மாட்டிக்கிட்டார். அவரோட பாங்க் அக்கவுன்ட்டை எல்லாம் முடக்கிட்டாங்க. அவர்கிட்டே இருந்து எனக்கு வர வேண்டிய பெரிய தொகை முடங்கிப் போச்சு. ஆனா என்னோட சப்ளையர்களுக்கு நான் பணம் கொடுத்துத்தானே ஆகணும்? நீ இப்ப எனக்குப் பணம் கொடுத்தா, நான் ஒரு வருஷத்தில அதை உனக்குத் திருப்பிக் கொடுத்துடுவேன்" என்றார் ரமணன்.

"அப்பா! இந்த பிசினஸ் எல்லாம் உங்களுக்கு வேண்டாம், உங்க ரெண்டு பேரோட குடும்பச் செலவுக்கு நான் பணம் அனுப்பறேன், நீங்க ரெண்டு பேரும் ஜாலியா லைஃபை எஞ்ஜாய் பண்ணுங்கன்னு நான் உங்களுக்கு எத்தனையோ தடவை சொல்லி இருக்கேன்!"

"அதெல்லாம் இருக்கட்டும். இப்ப இந்தப் பிரச்னையைத் தீர்க்கணும் இல்ல? நான் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்கணுங்கறது எனக்கு ரொம்ப முக்கியம்!"

"ஆனந்த்னு எனக்கு ஒரு லாயர் ஃபிரண்ட் இருக்கான். அவனை உங்களை வந்து பாக்கச் சொல்றேன். அவன் உங்க பிரச்னைக்கு ஒரு தீர்வு கொடுப்பான்" என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டான் முரளி.

றுநாள் ரமணனின் அலுவலகத்துக்கு வந்த ஆனந்த், அவரிடம் விவரங்களைக் கேட்டுக் கொண்டு விட்டு, "சப்ளையர்ஸ் எல்லாம் அன்செக்யூர்ட் கிரடிடார்ஸ். அவங்களால உங்க எந்தச் சொத்தையும் தொட முடியாது. அதோட, உங்க பேர்ல சொத்து எதுவும் இல்ல. உங்க வீடு பரம்பரை சொத்து. அதில உங்க பையனுக்கு உரிமை உண்டு. அதனால, அதையும் அட்டாச் பண்ண முடியாது. சப்ளையர்ஸ் உங்க மேல கேஸ் போடட்டும். அதெல்லாம் விசாரிச்சுத் தீர்ப்பு வரப் பல வருஷங்கள் ஆகும். கேஸை எப்படி இழுத்தடிக்கறதுங்கறது எனக்குத் தெரியும். அப்படியே சீக்கிரம் தீர்ப்பு வந்தாலும், உங்ககிட்ட பணம், சொத்து எதுவும் இல்லைன்னு சொல்லி ஐபி கொடுத்துடலாம்!" என்றான் ஆனந்த்.

"ஐபி கொடுக்கறதா?" என்றார் ரமணன், அதிர்ச்சியுடன்

"ஆமாம். எத்தனையோ பேரு ஐபி கொடுத்துட்டுக் கவலை இல்லாம சுத்திக்கிட்டிருக்காங்க. கவலைப்படாதீங்க. நான் பாத்துக்கறேன்.. உங்களுக்கு வர வேண்டிய பணம் வராததால, உங்களால சப்ளையர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுடுச்சுன்னு எல்லா  சப்ளையர்களுக்கும் ஒரு லெட்டர் அனுப்பிடலாம். நான் லெட்டர் டிராஃப்ட் பண்ணி நாளைக்கு எடுத்துக்கிட்டு வரேன்!" என்று சொல்லி விட்டுக் கிளம்பினான் ஆனந்த்.

டுத்த நாள் காலை எட்டு மணிக்கு ஆனந்துக்கு முரளியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

"என்னடா இந்த நேரத்தில ஃபோன் பண்ற? இப்ப அங்கே ராத்திரி பதினோரு மணியா இருக்குமே!" என்றான் ஆனந்த்.

"இன்னிக்கு நீ என் அப்பாவைப் பார்க்கப் போறதா இருந்த இல்ல? அங்கே போக வேண்டாம். என் அப்பா இறந்துட்டாரு" என்றான் முரளி.

"ஐயையோ! எப்ப? எப்படி?"

"தெரியல. தூக்கத்திலேயே இறந்துட்டாரு. அவருக்கு எந்த ஹெல்த் பிராப்ளமும் இல்ல. அதனாலதான், அவர் திடீர்னு இறந்தது ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. கடன்காரர்களுக்குப் பணத்தைக் கொடுக்க முடியலியேன்னு நேத்து பூரா புலம்பிக்கிட்டிருந்தாராம். அந்த அவமான உணர்ச்சியே அவரைக் கொன்னிருக்கும்னு அம்மா சொல்றாங்க. விஷயம் தெரியாம நீ அங்கே போகக் கூடாதுன்னுதான் உனக்கு ஃபோன் பண்ணினேன்" என்று கூறி உரையாடலை முடித்தான் முரளி. 

குறள் 969:
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.

பொருள்: 
தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர், மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டு விடுவர்.

970. விவசாயிக்குச் சிலை

அந்தச் சிறிய ஊரில் பஸ் நின்றதும் இறங்கினேன்.

அந்த ஊர்ப் பள்ளிக்கூடத்தை இன்ஸ்பெக்ட் செய்ய வேண்டிய அதிகாரி நான்.

பள்ளி எங்கே இருக்கிறது என்று விசாரித்தபோது,"நேரா போனீங்கன்னா, பராங்குசம் சிலை வரும். அங்கே இடது பக்கம் திரும்பணும்" என்றார் எனக்கு வழி சொன்னவர்.

'பராங்குசம் என்று ஒரு அரசியல் தலைவர் இருக்கிறாரா என்ன? கேள்விப்பட்டதே இல்லையே!' என்று நினைத்துக் கொண்டே, பள்ளிக்கூடத்துக்குச் சென்றேன்.

பள்ளிக்கூடத்தில் என் வேலை முடிந்ததும், தலைமை ஆசிரியரிடம், "இங்கே பராங்குசம்னு ஒத்தருக்கு சிலை வச்சிருக்காங்களே, அவர் என்ன இந்தப் பக்கத்தைச் சேர்ந்த அரசியல் தலைவரா" என்று தயங்கிக் கொண்டே கேட்டேன். ஒருவேளை அவர், "பராங்குசத்தைத் தெரியாதா உங்களுக்கு?" என்று கேட்டு, என்னைப் பொது அறிவு இல்லாதவன் என்று உணர வைத்து விடுவாரோ என்ற பயம் எனக்கு இருந்தது.

"இல்லை சார்! அவர் இந்த ஊரைச் சேர்ந்த ஒரு விவசாயி" என்றார் தலைமை ஆசிரியர்.

"விவசாயியா? அவருக்கு ஏன் சிலை வச்சிருக்காங்க. விவசாயத்தில புதுமையா ஏதாவது செஞ்சாரா?"

"அதெல்லாம் இல்லை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில இந்த ஜில்லாவோட கலெக்டரா இருந்தவர் ரொம்பக் கொடூரமானவர். வரி வசூலிக்கறில ரொம்ப கடுமையா இருப்பாரு. ஆனா வரி அதிகமா இருந்ததால, பல விவசாயிகளால வரியைக் கட்ட முடியல. அதனால, வரி கட்டாதவங்களோட நிலங்களை ஜப்தி பண்ணச் சொல்லி கலெக்டர் உத்தரவு போட்டுட்டாரு. ஜப்திக்கான தேதியையும் அறிவிச்சுட்டாங்க.

"ஜப்தி பண்றதுக்கு முதல் நாள் ராத்திரி பராங்குசம் தன்னோட வயலுக்குப் போனாரு. அடுத்த நாள் காலையில அவர் தன்னோட நிலத்திலேயே இறந்து கிடந்தாரு. பூச்சி மருந்தைக் குடிச்சிருந்தாருன்னு தெரிஞ்சது."

"என்ன சார் இது? ஒத்தர் தற்கொலை செஞ்சுக்கிட்டார்ங்கறதுக்காக அவருக்குச் சிலை வைப்பாங்களா? தற்கொலை செஞ்சுக்கறது கோழைத்தனம் இல்லையா?" என்றான் நான், வியப்புடன்.

"ஊர்க்காரங்க அப்படி நினைக்கல. ஒரு விவசாயிக்கு அவரோட நிலம் ஜப்தி செய்யப்படறது பெரிய அவமானம். ஜப்தி நோட்டீஸ் வந்த எல்லா விவசாயிகளுமே இந்த அவமான உணர்வோடதான் இருந்தாங்க. ஆனா, இப்படி ஒரு அவமானம் நேர்ந்தப்பறம் உயிர் வாழக் கூடாதுன்னு பராங்குசம் நினைச்சிருக்காரு. அவரோட தன்மான உணர்வை இந்த ஊர்க்காரங்க பெரிசா நினைக்கறாங்க. அது மட்டும் இல்ல. அவரோட தற்கொலையால அரசாங்கம் ஜப்தி நடவடிக்கையை நிறுத்தினதோட இல்லாம, வரி அதிகமா இருக்கறதை உணர்ந்து வரியைக் குறைச்சுட்டாங்க. அந்த நன்றி உணர்வுக்காகவும்தான் சிலை வச்சாங்கன்னு வச்சுக்கலாம்" என்றார் தலைமை ஆசிரியர்.

குறள் 970:
இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.

பொருள்: 
தனக்கு இகழ்ச்சி வரும்போது உயிர் வாழாத மானம் மிக்க மனிதரின் புகழ் வடிவைப் பெரியோர் தொழுது பாராட்டுவர்.
             அறத்துப்பால்                                               காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...