அதிகாரம் 74 - நாடு

திருக்குறள்
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 74
நாடு

731. புதிய மன்னர்!

தந்தையின் மரணத்துக்குப் பிறகு அரசனாகப் பொறுப்பேற்றுக் கொண்டான் மகேந்திரன்.

"அரசே! உங்கள் தந்தையைப் போல் நீங்களும் நல்லாட்சி தர வேண்டும்!" என்று வாழ்த்தினார் அமைச்சர்.

"உங்களைப் போன்ற  அறிஞர்களின் ஆலோசனையுடன் என்னால் இயன்றதைச் செய்வேன்!" என்ற மகேந்திரன், தொடர்ந்து "அமைச்சரே! இத்தனை நாட்களாக அரண்மனையிலேயே இருந்து விட்டேன். நம் நாட்டைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. எனவே முதலில் நம் நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணம் மேற்கொண்டு நம் நாட்டைப் பற்றியும், அதில் வாழும் மக்கள் பற்றியும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்" என்றான்.

"தங்கள் விருப்பப்படி தங்கள் பயணத்துக்கு உடனே ஏற்பாடு செய்கிறேன் அரசே!" என்றார் அமைச்சர்.

ரு மாதம் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அரண்மனைக்குத் திரும்பினான் மகேந்திரன்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அமைச்சரை அழைத்தான்.

"அமைச்சரே! நம் நாட்டைச் சுற்றிப் பார்த்ததில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் பசுமையான வயல்கள். நல்ல விளைச்சலால் உணவுப் பஞ்சம் இல்லை. மக்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள், செல்வச் செழிப்புடனும் இருக்கிறார்கள். ஆயினும்..."

"என்ன அரசே!".

"பல இடங்களில் தரிசு நிலங்களைப் பார்த்தேன். அங்கிருந்த மக்களைக் கேட்டதற்கு, கிடைக்கும் விளைச்சல் போதும் என்பதால் அவற்றைப் பயன்படுத்தவில்லை என்றனர். மக்கள் தொகை பெருகும்போது அதிக விளைபொருள் தேவைப்படும் அல்லவா? எனவே தரிசு நிலங்களைப் பயன்படுத்தத் திட்டம் வகுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நிலம் இல்லாதவர்களுக்கு அவற்றை அளித்து அந்த நிலங்களைப் பண்படுத்தி விளைய வைக்க அவர்களுக்குப் பொருள் உதவியும் செய்யலாம் அல்லவா?" என்றான் மகேந்திரன்.

"நல்ல யோசனை அரசே! உடனே செயல்படுத்துகிறேன்" என்றார் அமைச்சர்.

"இரண்டாவதாக, பெரும்பாலான மக்கள் கல்வி அறிவில்லாதவர்களாக இருக்கிறார்கள். கல்விதான் ஒருவரைத் தகுதி உள்ளவராக ஆக்கும். எல்லா ஊர்களிலும் கல்விக் கூடங்களை ஏற்படுத்தி அனைவரும் கல்வி  கற்பதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்."

"நிச்சயம் செய்ய வேண்டும் அரசே! நானே இது பற்றித் தங்கள் தந்தையிடம் கூறி இருக்கிறேன். இதற்கு அதிக நிதி தேவைப்படும் என்பதால் இதைச் செயல்படுத்தவில்லை. இதை உடனே செயல்படுத்த ஏற்பாடு செய்கிறேன். செய்து முடிக்கச் சிறிது காலம் பிடிக்கும்!" என்றார் அமைச்சர்.

"தாங்கள் கூறுவது எனக்குப் புரிகிறது. அரசாங்கக் கருவூலத்திலிருந்து இதற்காக எவ்வளவு பொருள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். நான் மூன்றாவதாகச் சொல்ல விரும்பிய விஷயம் பொருள் ஈட்டுவது பற்றித்தான்!"

"சொல்லுங்கள் அரசே!"

"நம் நாட்டு மக்கள் வசதியாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் செல்வம் நிலையானதல்ல. அது தேய்ந்து கொண்டே இருக்கும் தன்மை உடையது. செல்வத்தைப் பெருக்கிக் கொண்டே இருந்தால்தான் அது குறையாமல் இருக்கும். எனவே நாட்டின் செல்வத்தைப் பெருக்கும் வகையில் மக்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபடத் திட்டம் வகுத்து மக்களைத் தொழில்கள் செய்ய ஊக்குவிக்க வேண்டும். நாம் தயாரிக்கும் பொருட்களைப் பிற நாடுகளுக்கு வர்த்தகம் செய்து நாம் நிறையப் பொருள் ஈட்டலாமே!"

"அரசே! ஆலோசனைகள் கூற வேண்டியது அமைச்சரின் கடமை. ஆனால் நீங்கள் என் பொறுப்பையும் நிறைவேற்றி விட்டீர்கள். உங்கள் யோசனைகளை விரைவாகச் செயல்படுத்தி நம் நாட்டைச் சிறந்து விளங்கச் செய்ய வேண்டும் என்ற உங்கள் நோக்கம் நிறைவேற்றுவதற்கான எல்லா முயற்சிகளையும் முழு வேகத்தில் துவக்குகிறேன்!" என்றார் அமைச்சர்.

குறள் 731:
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு..

பொருள்: 
குறையாத விளைபொருளும், தக்க அறிஞரும், கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.

732. தேச விரோதி!

தேசவிரோதக் குற்றம் சாட்டப்பட்ட பரதன் கைது செய்யப்பட்டு அரசவைக்கு அழைத்து வரப்பட்டான்.

கைது செய்யப்பட்டவன் செய்த குற்றங்களைக் காவலர் தலைவர் படித்துக் காட்டினார்.

"இந்த அவையின் முன் நிறுத்தப்பட்டிருக்கும் பரதன் என்ற இந்த இளைஞன் தன் ஊரில் ஒரு இணை அரசாங்கத்தை நடத்தி வந்திருக்கிறான். அந்த கிராம மக்களும் இவன் பேச்சைக் கேட்டு நம் நாட்டு விதிகளுக்குப் புறம்பான செயல்களைச் செய்து வந்திருக்கின்றனர். அதனால் அவன் தேசவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டிருக்கிறான்."

"பரதா! நீ ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?" என்றார் அரசர்.

"அரசே! என்னை தேசவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாகக் காவலர் தலைவர் கூறி இருக்கிறார். நான் தேசத்துரோகி என்றால் தாங்களும் தேசத்துரோகிதான்!" என்றான் பரதன்.

அவையில் சலசலப்பு ஏற்பட்டது. பரதனைப் பிடித்துக் கொண்டிருந்த காவலர் அவனை இன்னும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு மன்னர் என்ன கூறப் போகிறார் என்று மன்னரைப் பார்த்தார்.

மன்னர் சிரித்தபடி, "சொல்லு பரதா! நான் செய்த தேசத்துரோகக் குற்றம் என்ன?" என்றார்.

"அரசே! தாங்கள் முடிசூட்டிக் கொண்ட பிறகு அரண்மனையின் உப்பரிகையில் நின்று ஆற்றிய உரையைக் கேட்ட மக்களில் நானும் ஒருவன். அப்போது தாங்கள் கூறியவை தங்களுக்கு நினைவில் இருக்கும் என்று நம்புகிறேன்!" 

'என்ன இவன் மன்னர் என்ற மரியாதை இல்லாமல் தனக்குச் சமமான ஒருவருடன் பேசுவது போல் பேசுகிறானே!' என்று அவையில் இருந்த அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்திருக்க, மன்னர் சிரித்துக் கொண்டே, "நினைவிருக்கிறது பரதரே! ஆயினும் அதைத் தங்கள் வாயால் கேட்க விரும்புகிறேன்!" என்றார்.

மன்னர் அவனை 'பரதரே!' என்று மரியாதையாக விளித்துப் பேசியது மன்னர் பரதன் மீது கடும் கோபத்தில் இருப்பதையும், அவர் அவனுக்குக் கடுமையான தண்டனை அளிக்கப் போவதையும் காட்டுவதாகப் பலரும் நினைத்தனர்.

"அரசே! நம் நாடு செல்வச் செழிப்புடன் விளங்க வேண்டும். மற்ற நாடுகளில் வசிப்பவர்கள் கூட நம் நாட்டின் வளத்தைப் பற்றிக் கேள்வியுற்று இங்கே வந்து வசிக்க விரும்ப வேண்டும், குற்றங்கள், நோய்கள் போன்ற தீமைகள் முழுவதுமாக ஒழிக்கப்பட வேண்டும், இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக நம் நாட்டில் உள்ள நிலவளத்தை முழுவதுமாகப் பயன்படுத்தி நம் தேவைக்கு அதிகமாக விளைபொருட்களை விளைவித்து மிகுதியைப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பொருள் ஈட்ட வேண்டும், இவற்றை நிறைவேற்றுவதுதான் என் லட்சியம் என்று தாங்கள் கூறினீர்கள்!" என்றான் பரதன்.

"ஆமாம், கூறினேன். இதைத்தான் தேசவிரோதச் செயல் என்று கூறுகிறாயா?"

":தாங்கள் கூறிய இதே விஷயங்களை என் கிராமத்தில் நிறைவேற்ற நான் செய்த முயற்சிகளைத்தானே தேசத்துரோகம் என்று கூறிக் காவலர்கள் என்னைக் கைது செய்திருக்கிறார்கள்!"

அரசர் காவலர் தலைவரைப் பார்த்தார்.

"அரசே! இவன் ஊர் மக்களை விவசாயத்தை விட்டு விட்டு வேறு தொழில் செய்யும்படி தூண்டி இருக்கிறான். ஊருக்குப் பொதுவாக இருக்கும் நிலங்களை அரசு அதிகாரியின் அனுமதியின்றி ஆக்கிரமிக்கும்படி ஊர் மக்களைத் தூண்டி இருக்கிறான். அனுமதியின்றிக் கால்வாய்களை அமைத்து ஆற்று நீரைத் திசை மாற்றி இருக்கிறான். ஊரில் நடக்கும் குற்றங்களை ஊர் மக்களே விசாரிக்கும் அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறான். இது போன்ற தகாத செயல்களைத் தன் ஊரில் செய்த்து மட்டுமின்றி பக்கத்து ஊர்களில் உள்ள மக்களையும் இதுபோல் செய்யத் தூண்டி இருக்கிறான்!" என்றார் காவலர் தலைவர்.

"என் சக தேசத்துரோகி பரதர் என்ன செய்திருப்பார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆயினும் அதை அவர் வாயாலேயே சொல்லக் கேட்க விரும்புகிறேன்!" என்றார் அரசர் புன்முறுவல் மாறாமல்.

பரதன் சற்று வியப்புடன் அரசரைப் பார்த்து விட்டுப் பிறகு துணிவு பெற்றவனாகப் பேசத் தொடங்கினான், 

"அரசே! எங்கள் ஊரில் விளைநிலங்கள் சில தரிசாகக் கிடக்கின்றன. அவை பொதுநிலம் என்பதால் அவை பண்படுத்தப்படாமல் கிடக்கின்றன. அவற்றைப் பயன்படுத்த அனுமதி கேட்டு அரசு அதிகாரிகளை அணுகினேன். ஆனால் அவர்கள் அனுமதி கொடுக்கவில்லை. அதனால் அவற்றை ஊர் மக்கள் தாங்களே பண்படுத்திப் பயிர் செய்து அரசாங்கத்துக்கு உரிய வரியைச் செலுத்தி விட்டு மிகுதியுள்ள விளைச்சல் வருமானத்தை ஊருக்குப் பொதுவாக வைத்துக் கொள்ளலாம் என்று ஊர் மக்களிடம் கூறினேன். 

"இந்த வேலையில் ஈடுபடுபவர்களுக்கான கூலியைத் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து கொடுக்கச் சில செல்வந்தர்கள் முன் வந்தனர். அவர்கள் செலவழித்த பணத்துக்கு ஈடாக விளைச்சலில் ஒரு பகுதியை அவர்களுக்குக் கொடுப்பதாக ஏற்பாடு. இதனால் ஊரும் வளம் பெறும், அரசாங்த்துக்கும் வரி வருமானம் கிடைக்கும். 

"ஊரில் உள்ள ஆற்றுநீரைச் சரியாகப் பயன்படுத்த முடியாததால் அவற்றில் வரும் நீர் வீணாகிறது. ஒருசில பெருநிலக்காரர்கள் தங்கள் நிலத்துக்கு மட்டும் நீர் வரும்படி கால்வாய்களை வெட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றை ஊரில் பலருக்கும் பயன்படும்படி மாற்றி அமைத்தோம். 

"ஊரில் உள்ள அனைவரும் விவசாயத்திலேயே ஈடுபடுவதை மாற்றித் திறமையும், முனைப்பும் உள்ள சிலரை வேறு தொழில்கள், வியாபாரங்களில் ஈடுபடும்படி ஊக்குவித்தேன். 

"ஊரில் நடக்கும் குற்றங்களை ஊர்ப் பெரியவர்களே விசாரித்து, குற்றம் செய்தவர்களைச் சிறைக்கு அனுப்பாமல் அவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்துவதற்கான ஒரு அமைப்பை ஊரில் உருவாக்கினோம். 

"எங்கள் ஊரில் நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் பலனளிப்பதைப் பார்த்து பக்கத்து ஊர்க்காரர்கள் சிலர் தாங்களும் இதேபோல் செயல்பட உதவும்படி எங்களை அணுகினர். அவர்களை எங்கள் ஊருக்கு வரவழைத்து நாங்கள் செயதவற்றை அவர்களுக்குக் காட்டினோம். அந்தத் திட்டங்களை அவர்கள் தங்கள் கிராமங்களிலும் செயல்படுத்த முனைந்திருக்கிறார்கள்!"

"இப்படியே போய்க் கொண்டிருந்தால் இதுபோல் எல்லா ஊர்க்காரர்களும் செய்ய ஆரம்பிப்பார்கள். அப்புறம் நாடே வளம் பெற்றதாக ஆகி விடாதா? எவ்வளவு பெரிய தேசத்துரோகச் செயல் இது!" என்றார் அரசர்.

அனைவரும் குழப்பத்துடன் அரசரைப் பார்க்க, அரசர் அமைச்சரைப் பார்த்து, "அமைச்சரே! உங்களுக்கு உதவியாளராக அறிவும், திறமையும் கொண்ட ஒரு நபர் வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தீர்களே, இந்த பரதனை விடச் சிறந்த மனிதர் உங்களுக்குக் கிடைக்க மாட்டார்!" என்றார்.

மன்னரின் சமிக்ஞையைப் புரிந்து கொண்டு பரதனைப் பிணைத்திருந்த சங்கிலிகளைக் காவலர்கள் விடுவித்தனர்.

குறள் 732:
பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.

பொருள்: 
மிக்க பொருள்வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.

733. அரசரின் பெருமிதம்!

"அரசே! சங்க நாட்டிலிருந்து தினமும் பலர் நம் நாட்டுத் தென் எல்லையைத் தாண்டி நம் நாட்டுக்குள் வந்தவண்ணம் இருக்கிறார்கள். நம் வீரர்கள் அவர்களை அங்கேயே முகாம்கள் அமைத்துத் தங்க வைத்திருக்கிறார்கள். தொடர்ந்து மக்கள் வந்து கொண்டே இருப்பது கவலை அளிக்கிறது" என்றார் அமைச்சர்.

"என்ன செய்யலாம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?" என்றார் அரசர்.

"சங்க நாட்டில் இன வெறியர்கள் சிறுபான்மை இன மக்களைப் படுகொலை செய்து வருகிறார்கள். சங்க நாட்டு அரசர் ராஜபத்மரும்  இனவெறியர்களைக் கட்டுப்படுத்தாமல் அவர்கள் நிகழ்த்தும் வன்முறைச் செயல்களுக்குத்  துணை போகிறார். எனவே அச்சுறுத்தலுக்குள்ளான சிறுபான்மை இனத்தினர் நம் நாட்டில் அடைகலம் புகுவதில் வியப்பில்லை. தாங்கள் அனுமதி அளித்தால் எல்லைப்பகுதியில் உள்ள முகாம்களில் இருப்பவர்களை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று அங்கே தங்க வைக்க ஏற்பாடு செய்யலாம். அங்கே உள்ள சத்திரங்களில் அவர்களுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்யலாம். அதற்கான செலவுக்கு அரண்மனைப் பொக்கிஷத்திலிருந்து நிதி அளிக்கத் தாங்கள் அனுமதிக்க வேண்டும்!" என்றார் அமைச்சர் சற்றுத் தயக்கத்துடன்.

"அப்படியே செய்யுங்கள். ஆனால் அதற்கு அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன்!" என்றார் அரசர் சிரித்துக் கொண்டே.

"ஏன் அரசே? சங்க நாட்டில் இனப்படுகொலை தடுக்கப்பட்டு விரைவிலேயே அமைதி திரும்பி விடும் என்று எதிர்பார்க்கிறீர்களா?" என்றார் அமைச்சர் குழப்பத்துடன்.

"ராஜபத்மன் அரசனாக இருக்கும் வரையில் அந்த நாட்டில் அமைதி ஏற்பட வாய்ப்பு இல்லை. நான் நம் நாட்டு மக்களின் இயல்பை வைத்துச் சொல்கிறேன்!"

அரசர் சொன்னது புரியமல் அமைச்சர் அகன்றார்.

"அரசே! சங்க நாட்டு அகதிகளை நாம் குடியமர்த்தி அவர்களுக்கு உணவளிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. நம் நாட்டு மக்களே  எல்லைப்புறத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் அகதிகள் குடி இருக்கத் கொட்டகைகள் அமைத்துக் கொடுத்து அவர்களுக்கு உணவளித்தும் வருகிறார்கள். இதைத்தான் தாங்கள் எதிர்பார்த்தீர்களா?" என்றார் அமைச்சர்.

"ஆமாம். வந்தாரை வாழ வைக்கும் நாடு என்பது நம் நாட்டைப் பற்றி நாமே பெருமையாகக் கூறிக் கொள்ளும் சொற்றொடர் இல்லை. போர், நோய், இயற்கை நிகழ்வுகள் போன்ற பல்வேறு காரணங்களால் பிற நாடுகளிலிருந்து  பல்வேறு காலங்களில் இங்கே வந்து அடைக்கலம் புகுந்து நம் நாட்டில் ஐக்கியமாகி விட்ட மக்கள் நன்றியுடன் நமக்கு அளித்திருக்கும் பட்டம் இது!" என்றார் அரசர் பெருமுதத்துடன்.

"ஆனால் மக்களால் எவ்வளவு நாள்  இவ்வாறு செய்ய முடியும்?"

"நம் மக்கள் பாலைப் போன்றவர்கள். எவ்வளவு நீரை உற்றினாலும் உள்வாங்கிக் கொள்வார்கள். ஆயினும் மக்கள் மீதான சுமையைக் குறைக்க நாம் உதவ வேண்டும். கொட்டகைகளில் தங்கி இருக்கும் மக்களுக்கு உணவளிக்க அரசு தானியக் கிடங்கிலிருந்து தானியங்கள் கொடுத்து உதவுவோம்."

"செய்யலாம் அரசே! ஆனால் எனக்கு இன்னொரு கவலை இருக்கிறது!" என்றார் அமைச்சர். 

"உங்கள் கவலை என்னவென்று எனக்குப் புரிகிறது அமைச்சரே! ஒன்று நிகழுமோ என்று கவலைப்படுவதை விட அது நிகழும்போது எதிர்கொள்வதுதான் சிறப்பாக இருக்கும்!" என்றார் அரசர்.

"அரசே! நம் நாட்டு மக்கள் சங்க நாட்டு அகதிகளுக்கு உதவி வருவதால் அவர்களுக்கு அதிக பொருட்செலவு ஏற்படுகிறது. அதனால் அவர்களால் வரிகளைச் சரியாகச் செலுத்த முடியாது. நம் வரி வருமானம் குறைந்து விடும் என்ற கவலை எனக்கு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு வரி வசூலும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. மக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரிகளை வழக்கம் போல் செலுத்தி இருக்கிறார்கள். இது எனக்கு வியப்பாக இருக்கிறது!" என்றார் அமைச்சர்.

"எனக்கு வியப்பாக இல்லை அமைச்சரே! நம் நாட்டு மக்களின் உதவும் குணம், அவர்கள் தியாக மனப்பான்மை, அரசாங்கத்துக்குச் செலுத்த வண்டிய வரிகளை முறையாகச் செலுத்தினால்தான் அரசாங்கத்தால் சிறப்பாக இயங்க முடியும் என்ற உணர்வினால் உருவான கடமை உணர்வு ஆகிய இயல்புகள் பற்றிய என் கணிப்பு தவறாகவில்லை. நம் நாட்டு மக்களைப் பற்றி எனக்குப் பெருமையாக இருக்கிறது!" என்றார் அரசர். 

குறள் 733:
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு.

பொருள்: 
போர், இயற்கை அழிவு ஆகியவற்றால் மக்கள் பிற நாடுகளில் இருந்து வந்தால் அந்த பாரத்தையும் தாங்கும்; தன் அரசிற்குத் தான் தரவேண்டிய வரியையும் மகிழ்வோடு தரும்; இதுவே நாடு.

734. ஐந்து அமைச்சர்கள்!

தர்மபிரகாஷ் அந்த நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தன் அரசின் அமைச்சர்களை நியமித்தார். ஆனால் முக்கியமான ஐந்து துறைகளுக்கு அவர் அமைச்சர்களை உடனே நியமிக்கவில்லை. இது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

"முக்கியமான துறைகளான நிதி, மருத்துவம், விவசாயம் மற்றும் உணவு உற்பத்தி, பாதுகாப்பு, வெளியுறவு ஆகிய ஐந்து துறைகளுக்கு நீங்கள் ஏன் அமைச்சர்களை நியமிக்கவில்லை?" என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, "விரைவிலேயே நியமித்து விடுவேன்!" என்றார் தர்மபிரகாஷ், சிரித்துக் கொண்டே.

அடுத்த சில நாட்களுக்கு தர்மபிரகாஷை அவர் கட்சியைச் சேர்ந்த சில தலைவர்களும், வேறு சிலரும் சந்தித்துப் பேசினர். அவர்கள் அனைவருமே தர்மபிரகாஷால் அழைக்கப்பட்டவர்கள் என்று கூறப்பட்டது. அமைச்சர் பதவியை எதிர்பார்த்திருந்த கட்சித் தலைவர்கள் பலருக்கு அழைப்புக் கிடைக்கவில்லை.

ஒரு வாரம் கழித்து அந்த ஐந்து துறைகளுக்குமான அமைச்சர்களின் பெயர்களை அறிவித்தார் தர்மபிரகாஷ். ஐந்து பேரில் இரண்டு பேர் கட்சிக்காரர்கள், மற்ற மூன்று பேரும் குறிப்பிட்ட துறைகளில் நிபுணர்கள்.

மைச்சரவைக் கூட்டம் அதிபர் தர்மபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

அமைச்சர்களை வாழ்த்தி வரவேற்றபின் தர்மபிரகாஷ் கூறினார்:

"நாம் தேர்தல் அறிக்கையில் பல வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கோம். அதையெல்லாம் நிறைவேற்ற வண்டியது முக்கியம்தான். ஆனா அதைவிட முக்கியமா நாம் செய்ய வேண்டிய மூணு விஷயங்கள் இருக்கு. இந்த மூணு விஷயத்தையும் நாம் குறிப்பா நம் தேர்தல் வக்குறுதிகளாக் கொடுக்கல. ஆனா இவற்றை நிறைவேற்றினாலே மற்ற வாக்குறுதிகளை நிறைவேற்றின மாதிரிதான். ஏன்னா, இந்த மூணும் நாட்டு மக்களுக்குத் தேவையான அடிப்படையான விஷயங்கள்!"

தர்மபிரகாஷ் பேச்சை நிறுத்தி விட்டு அனைவரையும் பார்த்தார். பிறகு தொடர்ந்து பேசினார்.

"எல்லாருக்கும் அடிப்படையான ரெண்டு விஷயங்கள் உணவு, உடல்நலம். பட்டினி, நோய் இந்த இரண்டு கேடுகளும் நாட்டில இல்லாம செய்யறதுதான் எந்த ஒரு அரசாங்கத்துக்கும் முதல் குறிக்கோளா இருக்கணும். ஆனா இதைச் செய்யறது சுலபம் இல்லை. ஆழமா சிந்திச்சு முறையாத் திட்டம் போட்டுச் செயல்பட்டாத்தான் ஓரளவுக்காவது இதை நிறைவேற்ற முடியும். 

"நம் பதவிக்காலமான நாலு வருஷத்துக்குள்ள எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு இந்தப் பணியை செஞ்சு முடிக்கணும். அதனாலதான் உணவு உற்பத்தி, மருத்துவம் இவற்றில் நிறைய அறிவும் அனுபவமும் உள்ள நிபுணர்கள் சில பேரை அழைச்சு அவங்ககிட்ட என் எதிர்பார்ப்புகளைப் பற்றிச் சொல்லி அவற்றை அவங்க எப்படி நிறைவேற்றுவாங்கன்னு அவங்ககிட்ட கேட்டு அவங்க சொன்ன பதிலை வைச்சு, அவங்களுக்குள்ள சிறந்தவங்கன்னு நான் கருதின நபர்களை விவசாயம் மற்றும் உணவு மற்றும் மருத்துவத் துறைகளுக்கு அமைச்சர்களா நியமிச்சேன். எல்லாத்துக்கும் நிதிதானே அடிப்படை? அதனாலதான் நிதி அமைச்சரா ஒரு பொருளாதார நிபுணரை நியமிச்சிருக்கேன்!"

"மூணு விஷயம்னு சொன்னீங்களே! பசி, நோய் இரண்டும் இல்லாத நிலையை உருவாக்கணும்னு சொன்னீங்க. அந்த மூணாவது விஷயம் என்ன?" என்றார் ஒரு மூத்த அமைச்சர்.

"நம் மக்களைப் பாதுகாப்பா இருக்க வைக்கறதுதான். நம் எதிரி நாடுகள்கிட்டேந்து நமக்கு அச்சுறுத்தல் இல்லாம பாத்துக்கணும். அதுக்கு உலக நாடுகள் எல்லாவற்றோடும் நாம நட்பா இருக்கற சூழ்நிலையை உருவாக்கணும். கூடியவரையிலும் எல்லா நாடுகளோடயும் நட்பா இருந்து நம் அண்டை நாடுகள்கிட்ட ஏதாவது பிரச்னைகள் ஏற்பட்டா கூட, அவற்றைப் பேசித் தீர்க்க வகை செய்யணும். அதையும் மீறி போர் ஏற்படற சூழ்நிலை ஏற்பட்டா, பல நாடுகள் நமக்கு ஆதரவா இருக்கற நிலையை உருவாக்கணும். அதுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் திறமையானவரா, சிறப்பா செயல்படறவரா இருக்ணும். அப்படிப் போர் வந்தா நமக்கு எதிராப் போர் தொடுக்கற நாட்டை முறியடிக்கத் தேவையான படை வலிமையும், ஆயுத வலிமையும் நமக்கு இருக்கணும். அதற்கு நமக்கு ஒரு திறமையுள்ள பாதுகாப்பு அமைச்சர் இருக்கணும்!"

ஒரு நிமிடம் மௌனமாக அனைவரையும் பர்த்த தர்மபிரகாஷ், "இந்த மூணு விஷயங்களுக்காக சிறப்பான கவனம் செலுத்த ஐந்து அமைச்சர்கள் இருந்தாலும் இந்த மூணு விஷயங்களையும் நிறைவேற்றுவதில் நம் எல்லாருக்குமே பொறுப்பு உண்டு. அதனாலதான் இதைப் பற்றி உங்க எல்லார்கிட்டயும் விளக்கமாச் சொன்னேன்!" என்றார். 

குறள் 734:
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.

பொருள்: 
பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு ஆகும்.

735. நாடு, அதை நாடு!

அரசவைக்கு வந்த கபிலரை மரியாதையுடன் வரவேற்றான் அரசன்.

"கபிலர் பெருமானே! தங்களைப் போன்ற ஒரு அறிஞர் எங்கள் நாட்டுக்கு வருகை தந்திருப்பது நாங்கள் செய்த புண்ணியம்!" என்றான் அரசன்.

"அதெல்லாம் எதுவும் இல்லை அரசே! நான் ஒவ்வொரு நாடாகச் சென்று கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாட்டிலும் சில மாதங்கள் தங்கி அந்த நாடு பற்றி அறிந்து கொள்வதே என் பணி" என்றார் கபிலர்.

"தாங்கள் விரும்பும் வரை இந்த நாட்டில் எங்கே வேண்டுமானாலும் தங்கலாம். தங்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து தரச் சொல்லி இருக்கிறேன். நீங்கள் எங்கே வேண்டுமானாலும் சென்று வரலாம். அதற்கான பயண ஏற்பாடுகளைச் செய்து தர அரண்மனை ஊழியர் ஒருவர் உங்களுடனேயே இருப்பார்!" என்றான் அரசன்.

சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அரசனைச் சந்திக்க அரண்மனைக்கு வந்தார் கபிலர்.

"என்ன கபிலரே! நாட்டைச் சுற்றிப் பார்த்தீர்களா? எங்கள் நாட்டைப் பற்றி என்ன அறிந்து கொண்டீர்கள்? அடுத்து எந்த நாட்டுக்குச் செல்ல விரும்புகிறீர்கள்?" என்றான் அரசன்.

"அரசே! நான் உங்கள் நாட்டிலேயே தொடர்ந்து வசிக்க விரும்புகிறேன். நீங்கள் அனுமதி அளித்தால் என் மீதமுள்ள வாழ்நாட்களை உங்கள் நாட்டிலேயே கழிக்க விரும்புகிறேன்!" என்றார் கபிலர்.

"அது என் பாக்கியம் அறிஞரே! தாங்கள் இந்த நாட்டிலேயே நிரந்தரமாகத் தங்க வேண்டுமென்று நானே தங்களைக் கேட்டுக் கொள்ள நினைத்தேன். ஆனால் தாங்கள் ஒரு நாட்டுக்குச் சென்று அங்கே சில மாதங்கள் தங்கி அந்த நாட்டைப் பற்றி அறிந்து கொண்டு விட்டுப் பிறகு இன்னொரு நாட்டுக்குச் செல்வது என்ற பழக்கம் உள்ளவர் என்று கூறியதால்தான் அவ்வாறு கேட்கவில்லை. இப்போது தாங்களே இங்கே நிரந்தரமாகத் தங்க விரும்புவது எனக்குப் பெருமகிழ்ச்சி அளிக்கிறது."

"அரசே! என்னை அறிஞர் என்று சிலர் கூறுகிறார்கள். உண்மையில் நான் கற்றது சிறிதளவே. ஆயினும் நான் கற்றறிந்ததை வேறு சிலருக்கு எடுத்துச் சொல்லி அவர்கள் மூலம் அதைப் பல நாடுகளிலும் உள்ள மக்களுக்கும் பரப்ப விரும்புகிறேன். இந்தப் பணியைச் செய்ய எனக்கு ஒரு அமைதியான இடம் வேண்டும். 

"நான் பிறந்த நாட்டில் அரசருக்கு நெருக்கமாக இருந்த பலரே அவருக்கு எதிராகச் சதி புரிந்து வந்தார்கள். அரசர் அதை உணராமல் இருந்தார். அந்த நாட்டில் நிலையான அரசாட்சி இருக்காது என்பதால் அமைதியான ஒரு இடத்தைத் தேடி இன்னொரு நாட்டுக்குச் சென்றேன். 

"நான் என் சொந்த நாட்டை விட்டு வெளியேறிய சிறிது காலத்திற்கெல்லாம் நான் எதிர்பார்த்தபடியே அரசரைக் கவிழ்த்து வேறொருவர் ஆட்சிக்கு வந்து விட்டார். அவராலும் நிலையாக ஆள முடியாது என்பதால் அங்கே குழப்பம் நீடிக்கிறது.

"நான் குடிபுகுந்த நாட்டில் அரசர் வலுவாக இருந்தாலும், நாட்டில் பல்வேறு குழுக்கள் இருந்தன.அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அதனால் அங்கு அமைதி இல்லாத சூழ்நிலை நிலவியது.

"எனவே அந்த நாட்டை விட்டு வெளியேறி இன்னொரு நாட்டுக்கு வந்தேன். அங்கே குற்றங்கள் அதிகமாக இருந்தன. குற்றவாளிகளைப் பிடித்து தண்டனை கொடுப்பதே அரசரின் முக்கியமான பணியாக இருந்தது.

"அதன் பிறகு உங்கள் நாட்டுக்கு வந்தேன். உங்கள் நாட்டில் நிலைமை எப்படி இருக்கும் என்று தெரியாததால்தான் இங்கே சில நாட்கள் மட்டுமே தங்கப் போவதாக உங்களிடம் கூறினேன்.

"ஆனால் மற்ற நாடுகளில் நான் பார்த்த நிலைமைகள் இங்கு இல்லை. நீங்கள் வலுவாக இருக்கிறீர்கள். நாட்டு மக்களிடையே ஒற்றுமை நிலவுகிறது. நாட்டில் குற்றங்கள் அதிகம் இல்லை. சில மாதங்கள் உங்கள் நாட்டைச் சுற்றிப் பார்த்து இவற்றை அறிந்து கொண்டதால்தான் இங்கேயே நிரந்தமாகத் தங்கி என் கல்விப்பணியைத் தொடங்க முடிவு செய்திருக்கிறேன்."

"கபிலரே! தாங்கள் இங்கேயே வசிக்க முடிவு செய்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றால், தாங்கள் இங்கே கல்விப்பணியைத் துவக்கப் போவது எனக்குப் பெருமிதத்தை அளிக்கிறது. தங்களுக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் செய்து தர ஏற்பாடு செய்கிறேன். எங்கள் நாட்டை நாடி வந்ததன் மூலம் தாங்கள் என்னையும் இந்த நாட்டு மக்களையும் பெருமைப்படுத்தி விட்டீர்கள்!" என்றான் அரசன் பெருமிதத்துடன்,

குறள் 735:
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லத நாடு.

பொருள்: 
முரண்பட்ட கருத்துக்கள் கொண்ட பல்வேறு குழுக்கள், கூட இருந்தே குழி பறிக்கும் உட்பகை, அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கும் குற்றம் புரிவோர் ஆகியோர் இல்லாது இருப்பதே நாடு.

736. பகைவரும் நண்பராகலாம்!

பல ஆண்டுகளாக சாலிய நாட்டுடன் பகை உணர்வு கொண்டிருந்த சுந்தர நாட்டு மன்னன் கலிவரதன் திடீரென்று சமாதானத்தை விரும்பி சாலிய நாட்டு மன்னன் மகிழ்வாணனுக்கு தூது அனுப்பினான்.

கலிவரதனின் சமாதானக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மகிழ்வாணன் கலிவரதனைத் தன் நாட்டுக்கு விருந்தாளியாக வரும்படி அழைத்தான்.

தன் நாட்டுக்கு விருந்தாளியாக வந்த கலிவரதனுக்கு மிகவும் சிறப்பான வரவேற்பளித்த மகிழ்வாணன் கலிவரதனைத் தன் நாட்டின் பல பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று காட்டினான்.

"மகிழ்வாணரே! தங்களைச் சந்தித்து நம் பிரச்னைகளைப் பேசித் தீர்க்கத்தான் நான் தங்கள் அழைப்பை ஏற்றுத் தங்கள் நாட்டுக்கு வந்தேன். ஆனால் தாங்கள் என்னைத் தங்கள் நாடு முழுவதற்கும் சுற்றுப்பயணம் அழைத்துச் சென்று விட்டீர்களே!" என்றான் கலிவரதன் மகிழ்ச்சியுடன்.

மகிழ்வாணன் புன்னகை செய்தபடி, "எங்கள் நாடு எப்படி இருக்கிறது கலிவரதரே!" என்றான்.

"மிகவும் வளமாக இருக்கிறது. மக்களிடையே உற்சாகத்தைப் பார்க்க முடிகிறது. விவசாயமும், தொழில்களும் சிறப்பாக நடந்து வருவதாகத் தோன்றுகிறது!" என்ற கலிவரதனின் முகம் சட்டென்று வாடியது.

"என்ன ஆயிற்று கலிவரதரே!"

"இல்லை மகிழ்வாணரே! என் நாட்டின் நிலையை நினைத்துப் பார்த்தேன். அடிக்கடி நிகழும் போர்களால் எங்கள் நாடு சீரழிந்திருக்கிறது. மக்களிடையே வறுமை மிகுந்திருக்கிறது. ஆனால் நீங்களும்தானே போர்களில் ஈடுபட்டு வந்திருக்கிறீர்கள்? உங்கள் நாட்டில் போரினால் பாதிப்பு ஏற்படவில்லையா?"

"ஏற்பட்டது. ஆனால் அவற்றைச் சரிசெய்து விட்டோம். நாங்கள் போரைத் தவிர்க்கவே விரும்புகிறோம். உங்கள் நாட்டைத் தவிர வேறு எந்த நாட்டுடனும் போர் செய்யும் அவசியம் எங்களுக்கு ஏற்படவில்லை!" என்று கூறி கலிவரதனின் முகத்தைப் பார்த்தான் மகிழ்வாணன்.

"புரிகிறது. ஆனால் நாங்கள் எங்கள் அண்டை நாடுகள்பலவற்றுடனும் போரில் ஈடுபட்டு வந்திருக்கிறோம். அடிக்கடி நடக்கும் போர்களால் எங்கள் நாடு சீரழிந்து வருவதை உணர்ந்துதான் இனியாகிலும் போரைத் தவிர்க்க வேண்டும் என்று சமாதான முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கி இருக்கிறேன்!" என்றான் மகிழ்வாணன். அவன் குரலில் அவமான உணர்ச்சி தொனித்தது.

"கடந்த காலத்தில் என்ன நிகழ்ந்திருந்தாலும் இனி போரைத் தவிர்க்க வேண்டும் என்ற முடிவுக்கு நீங்கள் வந்ததற்கு உங்களைப் பாராட்டுகிறேன். துணிச்சலுடனும், மனத் தெளிவுடனும் இந்த முடிவை எடுத்ததற்காக நீங்கள் பெருமைப்பட வேண்டும். நீங்கள் என் நண்பர் ஆகி விட்டது குறித்து நானும் பெருமைப்படுகிறேன்!" என்றான் மகிழ்வாணன், கலிவரதனின் தோள்களை நட்புடன் பற்றியபடி. 

குறள் 736:
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை.

பொருள்: 
பகைவரால் கேடு ஏற்படாததாய், கேடு ஏற்பட்டபோதும், வளம் குன்றாததாய் உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.

737. மழைவளமும் மண்வளமும்

சாந்தவி தன் மகன் அனந்தனுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது அவளைக் காண வந்த கருவேலர், உள்ளே நுழையும்போதே "அன்னையே! தங்கள் மகன் அரியணை ஏறும் காலம் வந்து விட்டது!" என்று கூறிக் கொண்டே வந்தார்.

"என்ன சொல்கிறீர்கள் கருவேலரே! என் மைத்துனர் மருதர் மனம் மாறி இளவரசனான என் மகன்தான் அரியணை ஏற வேண்டும் என்று முடிவு செய்து அவனுக்கு அழைப்பு விடுத்திருக்கிறாரா என்ன?" என்றாள் சாந்தவி.

"மருதனாவது மனம் மாறுவதாவது? பதவி வெறி பிடித்து இளவரசரைக் கொலை செய்ய முயன்றவன்தானே அந்தக் கருநாகம்?" என்றார் கருவேலர் கோபத்துடன்.

"அரசராக இருந்த என் கணவர் மறைந்ததும், அனந்தன் சிறுவன் என்பதால் அவன் அரியணை ஏறும் வயது வரும் வரை தான் தற்காலிக அரசராக இருப்பதாகக் கூறிப் பதவியேற்ற என் கணவரின் தம்பி மருதர் என் மகன் அனந்தனை நயவஞ்சகமாகக் கொல்ல முயன்றபோது, தாங்கள் அந்த முயற்சியை முறியடித்து எங்கள் இருவரையும் நாட்டின் எல்லைப்புறத்தில் இருக்கும் இந்தப் பகுதிக்கு அழைத்து வந்து எங்களை இங்கே ரகசியமாக வைத்துப் பதுகாத்து வருகிறீர்கள். இந்த நிலையில் என் மகன் அரியணை ஏறும் காலம் வந்து விட்டது என்று திடீரென்று கூறினால் நான் என்ன புரிந்து கொள்வது?" என்றாள் சாந்தவி.

"அன்னையே! இந்தப் பகுதி நம் நாட்டின் ஒரு பகுதி என்றாலும் மருதன் முறையற்ற விதத்தில் அரியணை ஏறினான் என்பதால் இங்குள்ள மக்கள் மருதனை மன்னராக ஏற்றுக் கொள்ளத் தயாராயில்லை. ஆரம்ப முதலே அவர்கள் மருதனை எதிர்த்து வந்திருக்கிறார்கள். இந்தப் பகுதியில் மருதனின் படை வீரர்கள் எவரும் நுழைய இப்பகுதி மக்கள் அனுமதிக்கவில்லை. 

"அது மட்டுமல்ல. மருதனின் அரசுக்கு வரி கட்ட மறுத்து உள்ளூரிலேயே சிலர் வரி வசூலித்து இந்தப் பகுதி மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றி வருகிறார்கள். அதாவது இந்தப் பகுதி மருதனின் ஆட்சிக்கு உட்படாத ஒரு தனி நாடாகவே இருந்து வந்திருக்கிறது. 

"இளவரசர் இங்கே இருப்பதை அறிந்து கொண்ட இப்பகுதி மக்கள் சிலர் இந்தப் பகுதிக்கு அரசராக நம் அனந்தனே முடிசூட்டிக் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறார்கள்! இதை இங்குள்ள எல்லா மக்களும் ஒருமனதாக ஏற்றுக் கொள்வார்கள் என்று அவர்கள் உறுதிபடக் கூறுகிறார்கள் "

சாந்தவி ஒரு நிடம் கண்ணை மூடிக் கொண்டு யோசிப்பது போல் இருந்தாள்.

"என்ன அன்னையே! இந்த நாட்டையே ஆள வேண்டிய அரசகுமாரன் அனந்தன் இந்தச் சிறுபகுதிக்கு அரசனாக இருக்க வேண்டுமா என்று யோசிக்கிறீர்களா?" என்றார் கருவேலர்.

"இல்லை கருவேலரே! இந்தப் பகுதி எவ்வளவு உயர்வானது! இந்தப் பகுதியில் மழை பருவம் தவறாமல் பெய்து இந்த மண்ணை வளமாக்குகிறது. மறுபுறம் எங்கும் நிறைந்திருக்கும் நிலத்தடி நீர் ஊற்றாகப் பெருகி வளம் சேர்க்கிறது. அடர்ந்த மலைப்பகுதி, அதிலிருந்து பெருகி வரும் ஆறு என்று இயற்கையின் செல்லப் பிள்ளை போல் அல்லவா விளங்குகிறது இந்தப் பகுதி! ஒருபுறம் மலைகள், இருபறம்  காடுகள், இன்னொரு புறம் ஆறு என்று நாற்புறமும் அரண்கள் கொண்ட பகுதி அல்லவா இது? இதை ஒரு நாடாக அறிவித்து அதற்கு என் மகன் அரசனாகப் போவதை நினைத்தால் எனக்குப் புளகாங்கிதம் ஏற்படுகிறது. இந்தப் பகுதி மக்களுக்கு எங்கள் மீது இருக்கும் அன்பை எண்ணிக் கண்ணை மூடி அவர்களுக்கு நன்றி செலுத்தினேன். உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள். சிறிய நாடாக இருந்தாலும் சிறந்த நாடான இதற்கு என் மகனை அரசனாக்க நீங்கள் செய்த முயற்சிகளுக்கு நான் என்றும் கடமைப்பட்டிருப்பேன்!" என்றாள் சாந்தவி.

குறள் 737:
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.

பொருள்: 
ஊற்றும் மழையும் ஆகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்.

738. ஐந்து கேள்விகள்

புருஷோத்தமன் அந்த நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவரது நான்காண்டுப் பதவிக்காலம் முடியும் தறுவாயில், அடுத்து வரப் போகும் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்தார். 

அவருடைய நான்காண்டு ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம். சீரழிந்தது. புருஷோத்தமனுக்கு நெருக்கமான சில தொழிலதிபர்களின் அசுர வளர்ச்சியைத் தவிர நாட்டில் வேறெந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை.

ஆயினும் புருஷோத்தமன்தான் மீண்டும் வெற்றி பெற்று இரண்டாம் முறையும் அதிபராவார் என்று ஊடகங்கள் கணித்தன. பெரும்பாலான ஊடகங்கள் பருஷோத்தமனின் கட்டுப்பாட்டில் இருந்தன என்பது வேறு விஷயம்!

புருஷோத்தமனுக்கு எதிராகக் களமிறங்கினார் கேசவ்!

'கேசவ் ஒரு விளையாட்டுப் பிள்ளை. ஐந்து வயதுக் குழந்தைக்கு இருக்கும் அறிவு கூட அவருக்கு இல்லை. அவரால் எப்படிப் புருஷோத்தமனை வெல்ல முடியும்?' என்று ஊடகங்கள் எள்ளி நகையாடின.

கேசவ் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை அறிவித்தார்.

"ஒரு ஐந்து வயதுச் சிறுவனின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு இத்தனை ஊடகவியலாளர்கள் வந்திருப்பதற்கு நன்றி!" என்று துவங்கினார் கேசவ்.

"மக்கள் செல்வாக்குப் பெற்றிருக்கும் புருஷோத்தமனை எதிர்க்க உங்களிடம் என்ன ஆயுதம் இருக்கிறது?" என்றார் ஒரு ஊடகவியலாளர்.

"என்னிடம் ஆயுதங்கள் இல்லை. அரசின் பாதுகாப்புப் படையினர் என்னைப் பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்தித்தான் இந்த அரங்குக்குள் அனுமதித்தார்கள்!" என்று இரண்டு கைகளையும் தூக்கிக் காட்டினார் கேசவ்.

இலேசான சிரிப்பு எழுந்தது.

"ஊடகவியலாளர்களே! நீங்கள் என்னிடம் பல கேள்விகளைக் கேட்கக் காத்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். உங்கள் கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொல்கிறேன். ஆனால் அதற்குப் பிறகு நான் கேட்கும் சில கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும். இப்போது நீங்கள் என்னிடம் கேள்விகளைக் கேட்கலாம்!" என்றார் கேசவ்.

அடுத்த ஒரு மணி நேரத்துக்கு ஊடகவியலாளர்கள் கேசவைக் கேள்விகளால் துடைத்தெடுத்தனர். பல கேள்விகள் அவரைக் கேலி செய்வதாகவும், அவமானப்படுத்துவதாகவும் இருந்தன. ஆனால் அத்தனை கேள்விகளுக்கும் அவர் அமைதியாகப் புன்னகை மாறாமல் பதில் கூறினார்.

மேலும் கேட்க ஏதும் கேள்விகள் இல்லாத நிலை ஏற்பட்டபோது ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்பதை நிறுத்திக் கொண்டனர்.

"நீங்கள் எங்களிடம் ஏதோ கேள்விகள் கேட்கப் போவதாகச் சொன்னீர்களே!" என்றார் ஒரு ஊடகவியலாளர்.

"ஆமாம். ஆனால் கேள்விகள் உங்களுக்கல்ல. இந்த நாட்டை நான்கு ஆண்டுகளாக ஆண்டு வரும் அதிபருக்கு! இந்தக் கேள்விகளை நான் பலமுறை எழுப்பியும் அவர் இதற்கு பதில் சொல்லவில்லை. என்னை விளையாட்டுப் பிள்ளை என்று எள்ளி நகையாடினார். உங்களில் பலரும் கூட என்னை எள்ளி நகையாடி மகிழ்ந்தீர்கள். இப்போது உங்கள் மூலம் நம் நாட்டு அதிபரிடம் நான் ஐந்து கேள்விகள் கேட்கப் போகிறேன்.

"1. கடந்த நான்கு ஆண்டுகளாக நம் நாட்டின் வளர்ச்சி குன்றி, வேலையின்மை அதிகரித்து லட்சக் கணக்கான மக்கள் ஏழ்மைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு உங்கள் ஆட்சிதான் பொறுப்பு. இதைச் சரி செய்ய என்ன செய்யப் போகிறீர்கள்?

"2. நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு சரியாகப் பராமரிக்கப்படவில்லை. நோய்கள் அதிகரித்து விட்டன. நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கப் போதுமான மருத்துவமனைகள் இல்லை. இந்த நிலை ஏற்படக் காரணம் என்ன? இதற்கு உங்கள் தீர்வு என்ன?

"3. விவசாயிகள் ஏழைகளாகி வருகிறார்கள். விளைபொருட்களுக்குச் சரியான விலை கிடைக்காததால் விவசாயம் சீரழிந்து வருகிறது. விவசாயிகளின் வருமானம் குறைந்து, அவர்கள் கடனாளிகளாகி, அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்தப் பிரச்னையை நீங்கள் ஏன் கண்டு கொள்ளாமலேயே இருக்கிறீர்கள்?"

"4. நாட்டின் பாதுகாப்பில் நீங்கள் அக்கறை காட்டவில்லை. அதனால் நம் அண்டை நாடுகள் துணிவு பெற்று நம் எல்லைப் பகுதிகளில் அடிக்கடி ஊடுருவி நம் வீரர்களைத் தாக்குகிறார்கள். அந்தத் தாக்குதல்களில் சில வீரர்கள் உயிரிழந்து விட்டார்கள். நாட்டின் பாதுகாப்பில் நீங்கள் கவனம் செலுத்தாதது ஏன்?

"5. இது போன்ற பல பிரச்னைகளால் மக்களின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் மகிழ்ச்சியாக வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய நிலையை ஏற்படுத்திய நீங்கள் எந்த அடிப்படையில் மீண்டும் நான்காண்டுகளுக்குப் பதவியில் தொடர விரும்புகிறீர்கள்?"

சில கணங்கள் மௌனத்துக்குப் பின், ஒரு ஊடகவியலாளர், "குற்றம் சொல்வதும், குறை காண்பதும் எல்லோருக்கும் எளிது. இந்தப் ரச்னைகளுக்கு உங்களிடம் தீர்வு இருக்கிறதா?" என்றார் 

"இருக்கிறது. என் தேர்தல் அறிக்கையே இந்த ஐந்து பிரச்னைகள் பற்றியும் அவற்றுக்கு நான் எவ்வாறு தீர்வு காணப் போகிறேன் என்பதை மையப்படுத்திதான் உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்போதே உங்கள் முன் என் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறேன்!" என்ற கேசவ் மேஜை மீதிருந்த அட்டைப் பெட்டியைக் கத்தரிக் கோலால் வெட்டித் திறந்து அதற்குள் இருந்த  தேர்தல் அறிக்கைப் புத்தகங்களை வெளியே எடுத்து அனைவருக்கும் விநியோகித்தார்.

குறள் 738:
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.

பொருள்: 
நோயில்லாமை, செல்வம், நல்ல விளைச்சல், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.

739. விக்கிரமசிங்கனின் வருத்தம்!

"என்ன மன்னா, மேகல நாட்டுக்குச் சென்று வந்தாயே! உன் வெளிநாட்டுப் பயணம் எப்படி இருந்தது?" என்றார் ராஜகுரு.

"நன்றாக இருந்தது குருவே!" என்றான் மன்னன் விக்கிரமசிங்கன்.

"உன்னிடம் ஒரு சோர்வு தெரிகிறதே! பயணக் களைப்பா? அல்லது உன்னை அவர்கள் சரியாக நடத்தவில்லையா?"

"இல்லை குருவே! உபசாரமெல்லாம் மிகச் சிறப்பாகத்தான் இருந்தது. மன்னர் பரகாலர் என்னிடம் மிக அன்பாகப் பழகினார். பயணக் களைப்பும் இல்லை!"

"பின்னே, உன் சோர்வுக்குக் காரணம்?"

"ஒன்றுமில்லை அரசே! மேகல நாட்டின் இயற்கை வளங்களைப் பார்த்து நான் பிரமிப்படைந்தேன். மலைகள், காடுகள், ஆறுகள், குளங்கள் என்று நாட்டில் எத்தனை வளங்கள்! எங்கு பார்த்தாலும் பசுமை! 

"நம் நாடோ வறண்ட பூமி. மலைகள் காடுகள் ஏதும் இல்லாத சமவெளி. மழை பெய்வதும் குறைவு. ஒரே ஒரு ஆறுதான் ஓடுகிறது. மழை பெய்தால்தான் அதில் நீரோட்டம் இருக்கும் 

"நாம் மிகவும் சிரப்பட்டு நீர்நிலைகளை உருவாக்கி இருக்கிறோம். நிலத்தடி நீரை அதிகம் பயன்படுத்த வேண்டிய தேவை இருந்தும் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் கீழே சென்று விடாமல் பாதுகாக்கப் பல திட்டங்களை வகுத்திருக்கிறோம். வறண்ட நிலத்தில் வளரும் பயிர்களை அதிகம் பயிர் செய்து உண்கிறோம். அதிக அளவில் கைத்தொழில் செய்து பல பொருட்களை உருவாக்கிப் பிற நாடுகளுக்கு விற்றுப் பொருள் ஈட்டுகிறோம். 

"மேகல நாட்டைப் போல் நமக்கு இயற்கை வளங்கள் வாய்க்கவில்லையே, நாம் இவ்வளவு முயற்சிகள் செய்து வளங்களை உருவாக்க வேண்டி இருந்ததே என்பதை நினைத்தபோது மனதில் வருத்தமும் ஏக்கமும் ஏற்பட்டது. அதன் காரணமாக என் முகத்தில் வெளிப்பட்ட சோர்வுதான் அது!"

"மன்னா! இத்தகைய சிந்தனை வருவது இயற்கைதான். ஆனால் இப்படி நினைத்துப் பார். ஒருவன் பிறக்கும்போதே செல்வந்தனாகப் பிறக்கிறான். இன்னொருவன் வறியவனாகப் பிறந்து, தன் முயற்சியால் செல்வந்தனாகிறான். அவன் தன்னை நினைத்துப் பெருமைப்பட அல்லவா வேண்டும்?" என்றார் ராஜகுரு.

"தாங்கள் சொல்வது சரிதான். ஆயினும் வறியவனாகப் பிறந்து தன் முயற்சியால் செல்வம் சேர்த்த ஒருவனுக்கு செல்வந்தவனாகப் பிறந்தவனைப் பார்க்கும்போது, 'இவனைப் போல் நான் ஒரு செல்வந்தனாகப் பிறந்திருந்தால் இவ்வளவு கடினமாக உழைத்துச் செல்வம் சேர்க்க வேண்டி இருக்க வேண்டி இருந்திருக்காதே!' என்ற சிந்தனை ஏற்படுவது இயல்புதானே!" என்றான் விக்கிரமசிங்கன், வறண்ட புன்னகையுடன். 

குறள் 739:
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.

பொருள்: 
முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடி முயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல.

740. பாருக்குள்ளே நல்ல நாடு!

"வாருங்கள் புலவரே! எங்கே நீண்ட காலமாகத் தங்களைக் காணவில்லை?" என்று புலவர்  அரிமேயரை வரவேற்றான் அரசன் இடும்பவர்மன்.

"ஒரு பயணக்குழுவுடன் சேர்ந்து நாடு முழுவதும் சுற்றிப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதனால்தான் தங்களைக் காண வர முடியவில்லை. இப்போது கூட இன்னொரு பயணத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தேன். தாங்கள் என்னை அழைத்து வர ஆள் அனுப்பியதால் பயணத்தைத் தள்ளி வைத்து விட்டு வந்தேன்" என்றார் அரிமேயர்.

"என்ன திடீரென்று தங்களுக்குப் பயண வேட்கை ஏற்பட்டு விட்டது?" என்றான் அரசன் சிரித்தபடியே.

"இரண்டு காரணங்கள் அரசே! ஒன்று எல்லா வளங்களும் நிறைந்த இந்த நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று பார்த்து, சிறந்த மனிதர்களாக விளங்கும் நம் மக்களைச் சந்தித்து உரையாடுவதில் எனக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி. இரண்டாவது காரணம் நான் வியாபாரத்தில் இறங்கி இருக்கிறேன். அதன் காரணமாகவும் பல இடங்களுக்கும் செல்ல வேண்டி இருக்கிறது!" என்றார் அரிமேயர்.

"ஓ, பாடல் எழுதும் புலவர் இப்போது பண்டம் விற்கும் வணிகராகவும் மாறி விட்டாரா? நல்லது! நான் தங்களை அழைத்ததற்குக் காரணம் தங்கள் பாடலைக் கேட்கத்தான். தாங்கள் எழுதும் பாடல்களைக் கேட்பதில் எனக்குப் பெரிதும் விருப்பம் என்பது தாங்கள் அறிந்ததுதானே! பாடல் ஏதாவது எழுதிக் கொண்டு வந்திருக்கிறீர்களா? இல்லாவிட்டால் சற்று நேரம் எடுத்துக் கொண்டு எழுதுங்கள். நான் காத்திருக்கிறேன்" என்றான் இடும்பவர்மன்.

புலவர் சற்றுத் தயங்கி விட்டு, "அரசே! இந்த நாடு எல்லா வளங்ளையும், சிறப்புகளையும் பெற்று எவ்வாறு பாருக்குள்ளேயே சிறந்த நாடாக விளங்குகிறது என்பது பற்றியும், அதற்கு அரசராக விளங்கும் உங்களைப் பற்றியும் நான் எத்தனையோ பாடல்கள் எழுதி இருக்கிறேனே!" என்றார்.

"ஆமாம். அவற்றையெல்லாம் ரசித்ததால்தானே மேலும் பாடல்களை உங்களிடம் கேட்க விரும்புகிறேன்! நீங்கள் ஓரிரண்டு ஆண்டுகளாக அரண்மனைப் பக்கம் வராதது எனக்கு மிகவும் ஏமாற்றத்தை அளித்ததால்தான் உங்களை அழைத்து வர ஆள் அனுப்பினேன். நீங்கள் விரும்பினால் அரண்மனையில் சில நாட்கள் தங்கி இருந்து கூடப் பாடல்கள் எழுதலாம்."

"மன்னிக்க வேண்டும் அரசே! என்னால் இப்போதெல்லாம் பாடல் எழுத முடியவில்லை. பாடல் எழுதும் திறமை என்னை விட்டுப் போய் விட்டது என்று நினைக்கிறேன்!" என்றார் புலவர், தடுமாற்றம் நிரம்பிய குரலில்.

"என்ன சொல்கிறீர்கள் புலவரே? திறமை எப்படி மறையும்? கற்பனை வறண்டு போகுமா என்ன?" என்றான் இடும்பவர்மன் வியப்புடன்.

"வறண்டுதான் போய் விட்டது மன்னரே! நான் கவிதை எழுதுவதை நிறுத்தி விட்டு வியாபாரத்தில் இறங்கியதற்குக் காரணமே இதுதான்!"

அரசன் சற்று நேரம் அமைதியாக இருந்து விட்டு, "சரி புலவரே! நீங்கள் இப்படிச் சொல்வது எனக்கு ஏமாற்றமாக இருக்கிறது. பரவாயில்லை. சென்று வாருங்கள். உங்கள் கற்பனை வளம் மீண்டும் பெருக்கெடுத்து வரும்போது பாடலுடன் வாருங்கள். உங்களுக்காக இந்த அரண்மனைக் கதவுகள் திறந்தே இருக்கும். உங்களை வெறும் கையுடன் அனுப்ப விரும்பவில்லை. நான் கொடுக்கும் பொற்காசுகளைப் பெற்றுச் செல்லுங்கள்!" என்றபடியே தனாதிகாரியைப் பார்த்தான் அரசன்.

தனாதிகாரி பொற்காசுகளை எடுத்து வர எழுந்தபோதே, "மன்னிக்க வேண்டும் மன்னரே! பாடல் புனையாமல் பரிசு பெற விரும்பவில்லை. தாங்கள் கூறியபடி என் கற்பனை மீண்டும் வளமடைந்தால் அப்போது பாடலுடன் வந்து பரிசு வாங்கிக் கொள்கிறேன்!" என்று சொல்லி அரசனிடம் விடைபெற்றர் அரிமேயர்.

"ஏன் உங்கள் கற்பனை வற்றி விட்டதாக மன்னரிடம் பொய் கூறினீர்கள்?" என்றாள் புலவரின் மனைவி, அரண்மனையில் நடந்ததை அவர் அவளிடம் கூறியதைக் கேட்டபின்

"கொடுங்கோல் ஆட்சி நடத்தும் இந்த மன்னனைப் புகழ்ந்து பாட நான் விரும்பவில்லை!" என்றார் அரிமேயர்.

"முன்பு பாடி இருக்கிறீர்களே! அதனால்தானே மன்னர் உங்களைக் கூப்பிட்டு அனுப்பினார்?"

"உண்மைதான். அப்போது அவன் பட்டத்ததுக்கு வந்த புதிது. தந்தையைப் போல் மகனும் நன்றாக ஆட்சி செய்வான் என்று நினைத்துப் பாடினேன். இப்போது அவன் செய்யும் மோசமான ஆட்சியில் நாட்டு மக்கள் அனைவரும் பரிதவித்துக் கொண்டிருக்கும்போது என்னால் எப்படி அவனைப் புகழ்ந்து பாட முடியும்?" என்றார் அரிமேயர் கோபத்துடன்.

"பாருக்குள்ளே நல்ல நாடு என்று இந்த நாட்டைப் புகழ்வீர்களே, இந்த நாட்டைப் புகழ்ந்தாவது ஒரு பாடல் எழுதிப் பரிசு வாங்கிக் கொண்டு வந்திருக்கலாம்!" என்றாள் மனைவி வருத்தத்துடன்.

"இந்த நாடு எல்லா வளங்களும் கொண்டதுதான். ஆனால் ஒரு மோசமான அரசனைக் கொண்டிருப்பதால் அந்த வளங்கள் இருப்பது கூடப் பயன்ற்றதாகி விட்டதே!" என்றார் அரிமேயர் வருத்தத்துடன்.

குறள் 740:
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.

பொருள்: 
ஒரு நாடு நல்ல அரசனைக் கொண்டிராவிட்டால், முன்பு குறிப்பிட்ட எல்லா நன்மைகளும் அமைந்திருந்தாலும் அவற்றால் பயன் இல்லாமல் போகும்.

அதிகாரம் 75 - அரண்
அதிகாரம் 73 -அவையஞ்சாமை

 அறத்துப்பால்                                               காமத்துப்பால்   

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...