அதிகாரம் 95 - மருந்து

 

திருக்குறள்
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 95
மருந்து

941. நாடி துடிக்குது, துடிக்குது!

என் அப்பாவுக்கு நாட்டு வைத்தியத்தில் மிகுந்த நம்பிக்கை உண்டு. 

எங்கள் குடும்பத்தில் யாருக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும், அவர் நாட்டு வைத்தியரை எங்கள் வீட்டுக்கு வரவழைத்து விடுவார். ஆங்கில மருத்துவரிடம் செல்வது என்பது எப்போதாவதுதான்.

அதிர்ஷ்டவசமாக, எங்கள் குடும்பத்தில் யாருக்கும் பெரிய அளவில் உடல்நலக் கோளாறு ஏற்பட்டதில்லை.

எங்களுக்கு அவ்வப்போது ஏற்பட்ட சளி, இருமல், காய்ச்சல், செரிமானக் கோளாறுகள் ஆகியவை நாட்டு வைத்தியர் கொடுத்த சூரணங்கள் மூலம் சரியாகி விட்டது குறித்து என் அப்பாவுக்குப் பெருமை உண்டு. ஆயினும், அவை மருந்து இல்லாமலே குணமாகி இருக்கக் கூடிய சிறு உடல்நிலைக் கோளாறுகள்தான் என்பது நான் உள்ளிட்ட மற்ற குடும்ப உறுப்பினர்களின் கருத்து!

எந்த உடல்நிலைக் கோளாறு என்றாலும், நாட்டு வைத்தியர் உள்ளங்கைக்குக் கீழே உள்ள மணிக்கட்டுப் பகுதியில் தன் விரல்களை வைத்து நாடியைப் பரிசோதிப்பார்.

"நாடியைப் பார்த்து என்ன கண்டுபிடிப்பீங்க வைத்தியரே?" என்று நான் ஒருமுறை அவரைக் கேட்டேன்.

"தம்பி! நம் உடம்பு பஞ்சபூதங்களால ஆனது. பஞ்சபூதங்கள்னா தெரியும் இல்லையா?" என்றார் வைத்தியர்.

"ஓ, தெரியுமே! நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்" என்று பள்ளியில் படித்தை ஒப்பித்தேன்.

"கரெக்ட். நிலம்னா, நிலத்தில் உள்ள மண், கனிமங்கள் எல்லாம் அடக்கம். உடம்புங்கறதே பல கனிமங்களால ஆனதுதானே? ஆகாயம்கறது வெற்றிடம் அல்லது இடைவெளி. இந்த ரெண்டையும் விட்டுட்டா, மீதமுள்ள மூணு பூதங்களான காற்று, வெப்பம், நீர் இவற்றோட அளவைக் காட்ட, நம்ம உடம்பில வாதம், பித்தம், கபம்னு மூணு நாடி ஓடுது. வாத நாடி உடம்பில இருக்கற காற்றோட அளவைக் காட்டும். பித்த நாடி உடம்பில உள்ள வெப்ப அளவைக் காட்டும். கப நாடி உடம்பில உள்ள நீர் அளவைக் காட்டும். இந்த அளவுகள் கூடுவதோ, குறைவதோதான் நம் உடம்பில ஏற்படற பிரச்னைகளுக்குக் காரணம். உதாரணமா, கபம் அதிகமா இருந்தா, சளி பிடிக்கும். மணிக்கட்டில தெரியற நாடியோட ஓட்ட அளவை வச்சு, உடம்பில என்ன  பிரச்னைன்னு கண்டுபிடிச்சு, அதைச் சரி செய்ய மருந்து கொடுக்கிறோம்" என்று விளக்கினார் அவர்.

பள்ளியில் படித்த விஞ்ஞானப் பாடங்களால் சில கருத்துக்களை உருவாக்கிக் கொண்டிருந்த எனக்கு அவருடைய விளக்கம் ஏற்புடையதாகத் தெரியவில்லை.

திடீரென்று அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்து விட்டது. நாங்கள் பயந்து விட்டோம். அவரைப் பக்கத்து ஊரில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, ஒரு வாடகைக் கார் ஏற்பாடு செய்தோம்.

வாடகைக் கார் வருவதற்குள், விஷயம் தெரிந்து நாட்டு வைத்தியர் வந்து விட்டார். அவர் அப்பாவின் நாடியைப் பரிசோதித்து விட்டு, "வாத நாடித் துடிப்பு அதிகமா இருக்கு. வாயுப் பிரச்னைதான். கவலைப்படத் தேவையில்லை. ஆனா, நீங்க ஆஸ்பத்திரிக்கு அழைச்சுக்கிட்டுப் போகப் போறதால, நான் சூரணம் எதுவும் கொடுக்கல" என்று கூறி விட்டுக் கிளம்பினார்.

அரசு மருத்துவமனையில், அப்பாவுக்கு ஈ.சி.ஜி எடுத்தார்கள். ரத்த அழுத்தத்தையும் சோதித்தனர்.

"பிளட் பிரஷர் நார்மலா இருக்கு. ஈ சி ஜி யும் நார்மலாத்தான் இருக்கு. கேஸ் பிரச்னையாலேயும் சில சமயம் நெஞ்சு வலி வரும். கேஸ் பிரச்னைக்கு மாத்திரை எழுதித் தரேன். சாப்பிடுங்க. சரியாயிடும்!" என்றார் அரசு மருத்துவர். 

குறள் 941:
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.

பொருள்: 
வாதம் (காற்று), பித்தம் (வெப்பம்), சிலேத்துமம் (நீர்) என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும், குறைந்தாலும் நோய் உண்டாகும்.

942. மூன்று நாள் பயணம்

நெருங்கிய உறவினர்கள் எட்டு பேர் மூன்று நாள் பயணமாக, வெவ்வேறு ஊர்களில் இருக்கும் சில கோவில்களுக்குச் சென்று வரத் தீர்மானித்தனர். ஒரு வேனை ஏற்பாடு செய்து, அதில் பயணம் மேற்கொண்டனர். 

பயணம் தொடங்குவதற்கு முன், சீதாராமன், தன் சகோதரன் ரமணியிடம், "நாமெல்லாம் ஆரோக்கியமாத்தான் இருக்கோம். ஆனா, ராமசாமி அண்ணனும், ஜானகி அண்ணியும் வயசானவங்க. அவங்களுக்கு உடல்நலப் பிரச்னை எதுவும் இல்லாம இருக்கணுமேனுதான் கவலையா இருக்கு!" என்றான்  .

"அதான் மாத்திரையெல்லாம் எடுத்துக்கிட்டிருக்கோமே!" என்றான் ரமணி.

"வழியில சாப்பிட நிறைய ஸ்நாக்ஸ் செஞ்சு எடுத்துக்கிட்டு வந்திருக்கோம். அதனால, வெளியில எந்தத் தின்பண்டமும் வாங்க வேண்டாம். நல்ல ஓட்டலாப் பார்த்து சாப்பிட்டா, பிரச்னை எதுவும் இருக்காது" என்றான் விஸ்வநாதன்.

கார் கிளம்பி இரண்டு மணி நேரம் ஆவதற்குள்ளேயே, "எங்காவது டாய்லட் இருந்தா நிறுத்துங்க" என்றாள் விஸ்வநாதனின் மனைவி அகிலா.

"தண்ணி அதிகம் குடிக்காதேன்னு சொன்னேன் இல்ல?" என்றான் விஸ்வநாதன், எரிச்சலுடன்.

"உளறாதீங்க. எனக்கு வயத்தைக் கலக்குது!" என்றாள் அகிலா, விஸ்வநாதன் காதில், ரகசியமாக.

ற்றுநேரம் கழித்து, முறுக்கு, தட்டை போன்ற தின்பண்டங்களை விநியோகிக்க ஆரம்பித்தாள் ரமணியின் மனைவி மாலா.

"இப்பவே எதுக்கு ஸ்நாக்ஸை வெளியே எடுக்கற? மூணு நாளைக்கு வச்சுக்கணும்!" என்றபடியே, முறுக்கு, தட்டை ஒவ்வொன்றிலும் இரண்டிரண்டு எடுத்துக் கொண்டான் ரமணி.

"லஞ்ச் சாப்பிட இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கே! அதுவரையில பசி தாங்கணும் இல்ல?" என்ற சீதாராமன், "அந்த வாழைப்பழத்தை எடு!" என்றான், தன் மனைவி விமலாவிடம்.

யணம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, "அப்பாடா! ஒருவழியா பயணம் முடிஞ்சுது. வீட்டுக்குப் போய் ரெண்டு நாளைக்குப் படுத்துத் தூங்கணும் போல அவ்வளவு அலுப்பா இருக்கு!" என்றான் ரமணி.

"எனக்கு வயிறு சரியாகவே ரெண்டு நாள் ஆகும் போல இருக்கு. நாளைக்கு எப்படி ஆஃபீசுக்குப் போகப் போறேன்னே தெரியல!" என்றான் விஸ்வநாதன்.

முதலில், ராமசாமியையும், அவர் மனைவி ஜானகியையும் அவர்கள் வீட்டில்  இறக்கி விட்டனர்.

அவர் வீட்டிலிருந்து வேன் கிளம்பியதும், "ஒண்ணு கவனிச்சியா? நம்ம எல்லாருக்குமே வயிற்று வலி, தலை சுற்றல், இருமல் மாதிரி ஏதாவது பிரச்னை வந்தது" என்றான் விஸ்வநாதன்.

"அதுதான் எடுத்துக்கிட்டுப் போன எல்லா மாத்திரையும் தீர்ந்துடுச்சே! அது போதாம, ரெண்டு மூணு இடத்தில ஃபார்மசியில வேற வாங்கினமே!" என்றான் ரமணி.

"நான் சொல்ல வந்தது அது இல்ல. நம்ம எல்லாருக்கும் பிரச்னை வந்தது. ஆனா, ராமசாமி அண்ணனுக்கும், ஜானகி அண்ணிக்கும் எந்த பிரச்னையும் வரலை. அவங்களுக்கு மருந்தோ மாத்திரையோ தேவைப்படலை, கவனிச்சீங்களா?" என்றான் விஸ்வநான், எல்லோரையும் பார்த்து.

"அதுதான் எனக்கு ஆச்சரியமா இருக்கு. அவங்கதான் அதிகம் வயசானவங்கங்கறதால, அவங்களுக்குத்தான் ஏதாவது உடல்நலப் பிரச்னை வருமோன்னு, கிளம்பறதுக்கு முன்னால நான் உங்ககிட்ட எல்லாம் சொல்லிக்கிட்டிருந்தேன்" என்றான் விஸ்வநாதன்.

"அது மட்டும் இல்ல. நம்ம எல்லாரையும் விட ராமசாமி அண்ணன்தான் ரொம்ப எனர்ஜடிக்கா இருந்தாரு. மீதி எல்லாருக்கும் சில சமயமாவது அலுப்பும். சோர்வும் இருந்தது. ஆனா, அண்ணனுக்குக் கொஞ்சம் கூட சோர்வு வரலை. இன்னும் ரெண்டு நாளைக்குப் பயணம் இருந்தா கூட, அவரு சமாளிப்பாரு போல இருக்கு!" என்றாள் அகிலா.

"நான் ஒண்ணு கவனிச்சேன். அதை நீங்கள்ளாம் கவனிச்சீங்களான்னு தெரியல!" என்றாள் விமலா.

"என்ன அது?" என்பது போல், மற்ற அனைவரும் விமலாவைப் பார்த்தனர்.

"அவங்க ரெண்டு பேரும் மருந்து மாத்திரை எதுவும் எடுத்துகலைன்னு சொன்னீங்களே!அவங்க ஸ்நாக்ஸ் கூட எடுத்துக்கலைங்கறதை கவனிச்சீங்களா? ஒரு தடவை கொஞ்சமாவது எடுத்துக்கங்கன்னு அவர்கிட்ட சொன்னேன். அவரு 'பசிக்கலையேம்மா'ன்னு சிரிச்சுக்கிட்டே சொல்லிட்டு, நான் சொன்னதுக்காகக் கொஞ்சம் எடுத்து வாயில போட்டுக்கிட்டாரு. அண்ணியும் அப்படித்தான். அது மட்டும் இல்லை. நேத்து அவரு லஞ்ச் சாப்பிடலை. கவனிச்சீங்களா?" என்றாள் விமலா.

"ஆமாம். வயிறு சரியில்லை போல இருக்குன்னு நான் நினைச்சேன்" என்றாள் மாலா.

"அது இல்ல. அதுக்குக் காரணம் வேற. நேத்திக்கு நாம கொஞ்சம் முன்னாலேயே லஞ்ச் சாப்பிட்டுட்டோம். ஏன் லஞ்ச் சாப்பிடலைன்னு நான் அவர்கிட்ட கேட்டப்ப, 'காலையில சாப்பிட்ட டிஃபனே இன்னும் செரிக்கலியே அம்மா! அதுக்குள்ள எப்படி சாப்பாடு சாப்பிடறது?'ன்னு சொன்னாரு. அண்ணி மட்டும் கொஞ்சமா சாப்பிட்டாங்க."

"இப்ப புரியுது, அண்ணனுக்கும், அண்ணிக்கும் ஏன் மருந்து மாத்திரை எல்லாம் தேவைப்படலேன்னு!" என்றான் சீதாராமன்.

குறள் 942:
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.

பொருள்: 
உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து உணவு அருந்துபவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை.

943. கல்யாண சமையல் சாதம்!

"முகூர்த்தம் பத்து மணிக்குள்ள முடிஞ்சுடும். அதனால, சீக்கிரமே சாப்பிட வேண்டி இருக்கும். காலையில ஏழு மணிக்கே கல்யாண மண்டபத்துக்குப் போயிட்டா, ஏழு மணிக்கே டிஃபன் சாப்பிட்டுடலாம். அப்புறம், பதினோரு மணிக்கு சாப்பாடு சாப்பிட்டுட்டு, வீட்டுக்குக் கிளம்பிடலாம்" என்றான் சந்தானம்.

"ஏழு மணிக்குக் கல்யாண மண்டபத்தில இருக்கறதுன்னா, வீட்டை விட்டு அஞ்சரை மணிக்கே கிளம்பணும். முடியற காரியமா அது? காலையில காப்பி மட்டும் குடிச்சுட்டு, பத்து மணிக்கு முகூர்த்தம் முடிஞ்சதும் சாப்பாடே சாப்பிட்டுடலாமே!" என்றாள் அவன் மனைவி யசோதா. 

"கல்யாண வீட்டில டிஃபன்தான் ரொம்ப நல்லா இருக்கும். இட்லி, வடை, ஸ்வீட்,  பொங்கல், தோசைன்னு நிறைய அயிட்டம் இருக்கும். அதை மிஸ் பண்ண முடியுமா?"

ன்னதான் சீக்கிரம் கிளம்பினாலும், அவர்கள் கல்யாண மண்டபத்துக்குப் போய்ச் சேர எட்டு மணிக்கு மேல் ஆகி விட்டது.

சந்தானம் எதிர்பார்த்தது போலவே, காலைச் சிற்றுண்டியில் பல அயிட்டங்கள் இருந்தன. ஒவ்வொன்றிலும் சிறிதளவே உட்கொண்டபோதும், இருவருக்குமே காலைச் சிற்றுண்டி கனமானதாக அமைந்து விட்டது.

"இப்பவே மணி எட்டரை ஆகுது. சாப்பிட்டுட்டுப் போகணும்னா, காத்துக்கிட்டிருந்து பன்னண்டு மணிக்கு மேலதான் சாப்பிட முடியும். அப்பவும், கொஞ்சமா எதையாவது கொறிச்சுட்டுத்தான் வர முடியும்!" என்றாள் யசோதா.

"பார்க்கலாம்!" என்றான் சந்தானம்.

முகூர்த்தம் முடிந்ததும், இருவரும் மண்டபத்திலேயே அமர்ந்திருந்தனர். பலர் சாப்பாட்டு அறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்குத் தெரிந்தவர்கள் அவர்களையும் சாப்பிட அழைத்தபோது, 'பசி இல்லை, சற்று நேரம் கழித்து வருகிறோம்' என்று சொல்லி விட்டனர்.

அடிக்கடி கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சந்தானம், "மணி பத்தே முக்கால் ஆகுது. நிறைய பேர் சாப்பிட்டுட்டுப் போயிட்டாங்க. ரொம்ப லேட்டாப் போனா, எல்லாம் ஆறிப் போய் நல்லா இருக்காது. நாமளும் போய் சாப்பிட்டுட்டு வந்துடலாம்" என்று எழுந்தான்.

"டிஃபன் சாப்பிட்டு ரெண்டு மணி நேரம்தானே ஆகுது! அதுக்குள்ள எப்படி சாப்பிட முடியும்? எனக்கு இன்னும் வயிறு நிறைஞ்சேதான் இருக்கு. நீங்க வேணும்னா போய் சாப்பிட்டுட்டு வாங்க" என்றாள் யசோதா.

"சரி" என்று கிளம்பிய சந்தானத்திடம், "கொஞ்சமா சாப்பிட்டுட்டு வாங்க!" என்றாள் யசோதா.

அரை மணி நேரம் கழித்து சாப்பாட்டு அறையிலிருந்து வெளியே வந்த சந்தானம், "சாப்பாடு ரொம்ப நல்லா இருந்தது. நிறையவே சாப்பிட்டுட்டேன். நீயும் வேணும்னா, கொஞ்சம் சாப்பிட்டுட்டு வரியா?" என்றான் யசோதாவிடம்.

"ஐயையோ! என்னால முடியாது!" என்றாள் யசோதா.

"அப்படின்னா, வீட்டுக்குப் போகலாமா?"

"போகலாம். நான சாப்பிடப் போறதில்லை!" என்றாள் யசோதா உறுதியாக.

ன்று மாலை யசோதா, "என்னங்க! எனக்கு இப்ப கூடப் பசி இல்ல. ராத்திரி நான் ரெண்டு வாழைப்பழம் மட்டும்தான் சாப்பிடப் போறேன். உங்களுக்கு ஏதாவது வேணுமா?" என்றாள்.

"இட்லி மாவு இருக்குல்ல? ஏழெட்டு இட்லி வார்த்து வச்சுடு. சட்னி மட்டும் அரைச்சுடு. சாம்பார் வைக்க வேண்டாம். அதான் இட்லிப்பொடி வேற இருக்கே!" என்றான் சந்தானம்.

"காலையிலேந்து காய்ச்சல், டாக்டர். பேதி வேற ஆகுது" என்றாள் யசோதா, டாக்டரிடம்.

சந்தானத்தின் உடலைப் பரிசோதித்த டாக்டர், "வயிறு கல்லு மாதிரி இருக்கே! செரிமானப் பிரச்னைதான். அதனாலதான் ஜுரமும் வந்திருக்கு! ஏதாவது ஹெவியா சாப்பிட்டீங்களா?" என்றார்.

"இல்லை டாக்டர். வழக்கமான சாப்பாடுதான்!" என்றான் சந்தானம், யசோதாவைப் பார்த்தபடி.

"கவனமா இருங்க. சாப்பாட்டில கட்டுப்பாடா இருந்தாதான், உடம்பு ஆரோக்கியமா இருக்கும், நீண்ட காலம் நோய் இல்லாம வாழ முடியும்" என்றார் டாக்டர்.

குறள் 943:
அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

பொருள்: 
முன்பு உண்டது சீரணமாகி விட்டது தெரிந்து, அடுத்து உண்பதைத் தேவையான அளவு அறிந்து உண்க; அப்படி அளவாக உண்பதே, இந்த உடம்பைப் பெற்றவன், அதை நெடுங்காலம் கொண்டு செல்லும் வழி.

944. குழந்தையின் பிடிவாதம்!

"பிடிவாதம் பிடிக்காம சாப்பிட்டுடு. இல்லேன்னா, பூதம் வந்து தூக்கிக்கிட்டுப் போயிடும்!" என்று தன் மூன்று வயதுப் பேரன் சந்தீப்பை மிரட்டினாள் ருக்மிணி.

"சாப்பாட்டை பூதமே தூக்கிக்கிட்டுப் போகட்டும். எனக்கு வேண்டாம்!" என்றான் சந்தீப்.

அருகில் அமர்ந்து  கவனித்துக் கொண்டிருந்த ருக்மிணயின் கணவர் மணிகண்டன், "என் பேரன் எவ்வளவு புத்திசாலி! பூதம் அவனைத் தூக்கிக்கிட்டுப் போயிடும்னு நீ மிரட்டினா, அதை, பூதம் சாப்பாட்டைத் தூக்கிக்கிட்டுப் போயிடும்னு அர்த்தப்படுத்தி, உன்னை எப்படி மடக்கிட்டான் பாரு!" என்றார் சிரித்தபடியே.

"தாத்தாவோட குணம் பேரனுக்குக் கொஞ்சமாவது வராம இருக்குமா? இவனைச் சாப்பிட வைக்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கேன்! எனக்கு உதவி செய்யாட்டாலும், கேலி பண்ணாமலாவது இருக்கலாம் இல்ல?"

"ருக்மிணி! குழந்தைக்குப் பசியில்லேன்னு நினைக்கிறேன். நீ வலுக்கட்டாயமாத் திணிச்சா, அவன் எப்படி சாப்பிடுவான்?"

"பசி இல்லாம எப்படி இருக்கும்? மணி ஒண்ணு ஆச்சே!"

"அது சரிதான். ஆனா, காலையிலேந்து குழந்தைக்கு என்னென்ன கொடுத்தேன்னு நினைச்சுப் பாரு. எழுந்தவுடனே பால், அப்புறம் எட்டு மணிக்கு பிஸ்கட், ஒன்பது மணிக்கு இட்லி, பதினோரு மணிக்கு வாழைப்பழம், பன்னிரண்டு மணிக்கு ஜூஸ் இப்படிக் கொடுத்துக்கிட்டே இருந்தா, குழந்தைக்கு எப்படிப் பசிக்கும்? முதல்ல சாப்பிட்டது ஜீரணமாக நேரம் கொடுத்துட்டுப் பசி எடுக்கற நேரத்திலதான் மறுபடி ஏதாவது கொடுக்கணும். அதுவும், எளிதா ஜீரணம் ஆகிற மாதிரி பார்த்துக் கொடுக்கணும்" என்றார் மணிகண்டன்.

"அதெல்லாம் பெரியவங்களுக்கு. சின்னக் குழந்தை நல்லா சாப்பிட்டாதான், வேகமா வளரும்!" என்றாள் ருக்மிணி.

"நான் சொல்லி, நீ எங்கே கேக்கப் போற?" என்றார் மணிகண்டன், பெருமூச்சுடன்.

"ரெண்டு மூணு நாளாவே, இப்படித்தான் சாப்பிடாம பிடிவாதம் பிடிக்கிறான். சாயந்திரம் டாக்டர்கிட்டே போயிட்டு வந்துடலாம்."

"டாக்டர்கிட்ட போற அளவுக்கு எதுவும் இல்லையே! அரை மணி நேரம் கழிச்சுக் கொடுத்துப் பாரு. சாப்பிடுவான்."

"சாப்பாடு ஊட்டற எனக்குத்தானே தெரியும்! சாயந்திரம் இவனோட அப்பா அம்மா ஆஃபீஸ்லேந்து வரதுக்குள்ள, சீக்கிரமே டாக்டர்கிட்ட போயிட்டு வந்துடலாம்!" என்றாள் ருக்மிணி.

"குழந்தை நல்லாத்தான் இருக்கான். உடம்பில எதுவும் பிரச்னை இல்லை" என்றார் டாக்டர்.

"சாப்பிடவே மாட்டேங்கறான் டாக்டர்!" என்றாள் ருக்மிணி.

"எந்தெந்த நேரத்தில, என்னென்ன கொடுத்தீங்கன்னு சொல்லுங்க."

ருக்மிணி தயக்கத்துடன் கணவரின் முகத்தைப் பார்த்து விட்டு, காலையிலிருந்து எத்தனை மணிக்கு என்னென்ன கொடுத்தாள் என்பதைச் சொன்னாள்.

"குழந்தை நல்லா வளரணுங்கற எண்ணத்தில, அடிக்கடி ஏதாவது சத்துள்ள உணவுகளைக் கொடுக்கணும்னு நிறைய பேர் நினைக்கிறாங்க. ஆனா, குழந்தையோட ஜீரண சக்தின்னு ஒண்ணு இருக்குல்ல? ஒரு தடவை ஏதாவது சாப்பிட்டா, அது ஜீரணம் ஆக நேரம் கொடுத்துட்டுப் பசி எடுக்கற நேரத்திலதான் மறுபடி எதையும் சாப்பிடணும். அதுவும், உடம்புக்கு ஒத்துப் போற உணவாப் பாத்துதான் சாப்பிடணும். பெரியவங்களானாலும், குழந்தைகளானாலும் இதே விதிதான்!" என்றார் டாக்டர்.

டாக்டரின் அறையிலிருந்து வெளியே வந்ததும், "டாக்டர் சொன்னதைக் கேட்டப்ப, இதுக்கு முன்னால வேற ஒத்தர் சொன்ன மாதிரியே இருந்தது இல்ல?" என்றார் மணிகண்டன்.

"நீங்க சொன்னதைத்தான் டாக்டரும் சொன்னார்னு சொல்லிக் காட்ட வேண்டாம்!" என்றாள் ருக்மிணி, கோபத்துடன்.

"ஐயையோ! நான் அப்படிச் சொல்லல. திருவள்ளுவரும் இதையேதான் சொல்லி இருக்கார்னு சொல்ல வந்தேன்!" என்றார் மணிகண்டன்.

குறள் 944:
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.

பொருள்: 
உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு. உடலுக்கு ஒத்து வரக் கூடிய உணவை அருந்த வேண்டும்.

945. விருந்துண்ண வந்தவர்

"நீங்க பாட்டுக்கு உங்க பாஸை சாப்பிடக் கூப்பிட்டுட்டீங்க. அவருக்கு ஏத்தாப்பல என்ன சமைக்கறதுன்னே தெரியலையே!" என்றாள் சங்கீதா.

"நீ வழக்கமா சமைக்கிற மாதிரி சமை. அவர் ரொம்ப சிம்ப்பிளானவர்தான்" என்றான் முகில்.

"பொதுவா, நான் யார் வீட்டுக்கும் சாப்பிடப் போறதில்லை. முகில் ரொம்ப வற்புறுத்தினார்னு வந்தேன்" என்றார் முகிலின் மேலதிகாரி சண்முகநாதன், அவர்கள் விட்டுக்கு வந்தவுடனேயே.

"நான் சமைச்சதெல்லாம் உங்களுக்குப் பிடிக்குமோ என்னவோ தெரியல" என்றாள் சங்கீதா, தயக்கத்துடன்.

"கவலைப்படாதீங்க. என் மனைவி இறந்தப்புறம், நானேதான் சமைச்சு சாப்பிடறேன். என்னை விட மோசமா சமைக்கிறவங்க இந்த உலகத்திலேயே யாரும் இருக்க முடியாது. என் சமையலையே சாப்பிடறவன், உங்க சமையலை சாப்பிட மாட்டேனா?" என்றார் சண்முகநாதன், சிரித்தபடி.

"சார் சும்மா சொல்றாரு. அவர் பிரமாதமா சமைப்பாரு. அவர் ஆஃபீசுக்கு எடுத்துட்டு வர சாப்பாட்டை நான் சாப்பிட்டுப் பாத்திருக்கேன்!" என்றான் முகில்.

"ஏற்கெனவே, என் சமையல் அவருக்குப் பிடிக்குமோன்னு நான் பயந்துக்கிட்டிக்கேன். அவரே பிரமாதமா சமைப்பார்னு சொல்றீங்க. எனக்கு இன்னும் அதிக பயமா இருக்கு" என்றாள் சங்கீதா.

"நான் கொண்டு வர சாப்பாட்டை முகில் ருசி பார்த்த மாதிரி, முகில் கொண்டு வர சாப்பாட்டையும் நான் ருசி பாத்திருக்கேன். நீங்க சமைச்ச அயிட்டங்கள் எல்லாம் பிரமாதம்!" என்றார் சண்முகநாதன்.

ஆனால், சங்கீதா பரிமாறும்போது, ஒவ்வொரு அயிட்டமாக என்ன என்று கேட்டுக் கொண்டு, ஒரு சிலவற்றை வேண்டாமென்று மறுத்து விட்டார் சண்முகநாதன். மற்ற உணவு வகைகளையும் குறைவாகவே உண்டார்.

சாப்பிட்டு முடித்ததும், "நிஜமாகவே உங்களுக்கு என் சமையல் பிடிக்கலேன்னு நினைக்கிறேன். சில அயிட்டங்களை வேண்டாம்னுட்டீங்க. மற்ற அயிட்டங்களையும் கொஞ்சம் கொஞ்சம்தான் சாப்பீட்டீங்க" என்றாள் சங்கீதா, வருத்தத்துடன்.

"இல்லம்மா. உங்க சமையல் அருமையா இருந்தது. சில உணவு வகைகள், சில காய்கறிகள் என் உடம்புக்கு ஒத்துக்காதுன்னு என்னோட அனுபவத்தில நான் கண்டறிஞ்சிருக்கேன். அதனால. அதையெல்லாம் தவிர்த்துடுவேன். அதைத் தவிர, பொதுவாகவே நான் சாப்பிடற அளவைக் குறைச்சுட்டேன். வயசாகிக்கிட்டிருக்குல்ல? கடவுள் புண்ணியத்தில, இதுவரை உடல்நலப் பிரச்னை எதுவும் இல்லாம இருக்கேன்" என்றார் சண்முகநாதன், சிரித்தபடி.

"சார் அடுத்த மாசம் ரிடயர் ஆகப் போறாரு!" என்றான் முகில்.

"அப்படியா? உங்களுக்கு அறுபது வயசு ஆயிடுச்சா?" என்றாள் சங்கீதா, வியப்புடன்.

"எங்க கம்பெனியில ரிடயர்மென்ட் வயசுன்னு எதுவும் கிடையாதும்மா. யாரும் எவ்வளவு வயசு வரையிலேயும் வேலை செய்யலாம். நான்தான்  வேலை செஞ்சது போதும்னு ரிடயர் ஆகறேன். அடுத்த மாசம் எனக்கு எழுபது வயசு முடியப் போகுதே!" என்றார் சண்முகநாதன், சிரித்தபடி.

குறள் 945:
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

பொருள்: 
தன் உடலுக்கு ஒத்து வரக் கூடிய உணவை அளவு மீறாமல், மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.

946. அண்ணன் அப்படி, தம்பி இப்படி!

"உன் அண்ணன் ஒல்லியா, சுறுசுறுப்பா இருக்காரு. ஏதாவது செஞ்சுக்கிட்டே இருக்காரு. எப்பவும் உற்சாகமா இருக்காரு. நீ பொத்தப் பூசணிக்கா மாதிரி இருக்க. எப்பவும் சோஃபாவில உக்காந்துக்கிட்டு, டல்லா இருக்க. எழுந்திருக்கக் கூடக் கஷ்டப்படற. ஏண்டா இப்படி?" என்றான் அனிலின் நண்பன் நாகு.

"சில பேரோட உடம்பு வாகு அப்படி. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?" என்றான் அனில்.

அனிலின் அம்மா தங்கம் ஒரு தட்டில் இனிப்பு, சமோசா, காராபூந்தி ஆகியவற்றை வைத்து எடுத்து வந்து, நாகுவிடம் கொடுத்தாள்.

"எனக்கு இல்லையாம்மா?" என்றான் அனில்.

"ஏண்டா, நீ இப்பதானே இட்லி சாப்பிட்ட?" என்றாள் தங்கம், கடிந்து கொள்ளும் குரலில்

"அதனால என்ன? என் நண்பன் வீட்டுக்கு வந்திருக்கான். அவனோட சேர்ந்து நான் ஸ்நாக்ஸ் சாப்பிடக் கூடாதா?" என்றான் அனில்.

தங்கம் ஏதோ முணுமுணுத்துக் கொண்டே உள்ளே சென்று, இன்னொரு தட்டில் சிற்றுண்டிகளை வைத்து எடுத்து வந்து, அனிலிடம் கொடுத்தாள்.

"என்னம்மா, இவ்வளவு கொஞ்சமா வச்சிருக்க?" என்றான் அனில், காராபூந்தியை எடுத்து வாயில் போட்டபடியே.

"நேத்திக்கெல்லாம் வயிற்று வலின்னு சொல்லிக்கிட்டிருந்த! இதையெல்லாம் நீ சாப்பிடவே கூடாது. அதனாலதான் உனக்கு இட்லி செஞ்சு கொடுத்தேன்."

"வயிற்று வலி வந்தது நேத்திக்கும்மா. இன்னிக்கு என்ன வந்தது?"

அப்போது, வெளியே போவதற்காக உடையணிந்து உள்ளிருந்து வந்த அனிலின் அண்ணன் சுபாஷ், நாகுவைப் பார்த்துச் சிரித்து விட்டு, "அம்மா! நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன். இன்னிக்கு ராத்திரி எனக்கு சாப்பாடு வேண்டாம்" என்றான்.

"ஏண்டா?" என்றாள் தங்கம்.

"அசோசியேஷன் மீட்டிங் இருக்கு. அங்கே ஸ்வீட், காரம், காப்பி, ஐஸ்கிரீம்னு ஏதாவது கொடுப்பாங்க. அதுக்கப்பறம், ராத்திரி சாப்பிட்டா ஹெவி ஆயிடும்."

"அது எப்படிடா போதும்? ராத்திரி வீட்டுக்கு வந்து ரெண்டு இட்லியாவது சாப்பிடு!" என்றாள் தங்கம்.

"வேண்டாம்மா! அப்படி நீ எனக்காக இட்லி செஞ்சு வச்சா, என்னால அதை நாளைக்குக் காலையிலதான் சாப்பிட முடியும்!" என்று கூறி விட்டு வெளியே சென்றான் சுபாஷ்.

'அண்ணன் ஏன் இப்படி சுறுசுறுப்பா, உற்சாகமா இருக்காரு, தம்பி ஏன் இப்படி சக்தியோ சுறுசுறுப்போ இல்லாம வியாதி வந்தவன் மாதிரி இருக்கான்னு இப்பதானே புரியுது!' என்று நினைத்துக் கொண்டான் நாகு.

குறள் 946:
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.

பொருள்: 
குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைத்து நிற்பது போல், அதிகம் உண்பவனிடத்தில் நோய் நிற்கும்.

947. சதீஷின் மனக்குறை!

"நீ ஒரு டாக்டரா இருந்து எனக்கு எந்தப் பயனும் இல்லடா!" என்றான் சதீஷ்.

"ஏண்டா அப்படிச் சொல்ற?" என்றான் டாக்டர் வடிவேல்.

"பின்னே, உங்கிட்ட ஓசியில வைத்தியம் பார்த்துக்கற வாய்ப்பே எனக்கு வரலியே!"

"இப்படி ஒரு விபரீத ஆசையா உனக்கு? எல்லாரும் நோய் இல்லாம வாழணும்னுதானே ஆசைப்படுவாங்க!"

"அது இருக்கட்டும். நாளைக்கு என் வீட்டுக்கு வரே இல்லை?" என்றான் சதீஷ்.

"நாளைக்கு கிளினிக்குக்கு விடுமுறைதான். அதனால வரேன். நீயும் ரொம்ப நாளா கூப்பிட்டுக்கிட்டிருக்க. ஆனா, நீ ஒரு பேச்சிலர். தனியா இருக்க. உன் வீட்டுக்கு வந்து என்ன ஆகப் போகுதுன்னு தெரியல! காப்பியாவது போட்டுக் கொடுப்பியா?" என்றான் வடிவேல்.

றுநாள் சதீஷ் வீட்டுக்குச் சென்ற வடிவேலை வரவேற்று அமர வைத்த சதீஷ், "இரு. காப்பி போட்டு எடுத்துக்கிட்டு வரேன்!" என்று சமையலறைக்குள் சென்றான்.

உடனேயே, கையில் ஐந்தாறு டப்பாக்களுடன் திரும்பி வந்த சதீஷ், டப்பாக்களை மேஜையின் மீது வைத்து விட்டு, "எது வேணும்னா எடுத்துக்க!" என்று சொல்லி விட்டுப் போனான்.

ஒவ்வொரு டப்பாவாகத் திறந்து பார்த்தான் வடிவேல். முறுக்கு, தட்டை, மிக்ஸ்சர், கடலை மிட்டாய், மைசூர் பாகு ஆகியவை அவற்றில் இருந்தன.

டப்பாக்களை மூடி வைத்தான் வடிவேல்.

சற்று நேரத்தில், இரண்டு கோப்பைகளில் காப்பியுடன் வந்தான் சதீஷ்.

"என்ன, ஸ்நாக்ஸ் எதுவும் எடுத்துக்கலையா?" என்றான் சதீஷ்.

"நான் வருவேன்னுட்டா இதையெல்லாம் வாங்கி வச்சிருக்க?" என்றான் வடிவேல்.

"சேச்சே! நீ என்ன உன்னை அவ்வளவு பெரிய வி ஐ பின்னு நினைச்சுக்கிட்டிருக்கியா? இதெல்லாம் நான் தினசரி கொரிக்கறத்துக்காக வாங்கி வச்சது. உள்ளே இன்னும் ரெண்டு மூணு டப்பா இருக்கு!"

"இதையெல்லாம் தினம் சாப்பிடுவியா? எப்ப சாப்பிடுவ, சாப்பாட்டுக்கு முந்தியா, அப்புறமா?"

"சாப்பாட்டுக்கு முந்தி அப்புறம்னெல்லாம் கணக்கா சாப்பிடறதுக்கு, இதெல்லாம் நீ கொடுக்கிற மாத்திரையா என்ன? எப்ப வேணும்னா சாப்பிடுவேன். போர் அடிச்சா சாப்பிடுவேன். ரொம்ப உற்சாகமா இருந்தா சாப்பிடுவேன். டிவி பாத்துக்கிட்டே சாப்பிடுவேன், புத்தகம் படிச்சுக்கிட்டே சாப்பிடுவேன், கம்ப்யூட்டர்ல வேலை செய்யறச்சே சாப்பிடுவேன்..."

"நிறுத்து, நிறுத்து. நல்லவேளை, தூங்கும்போது சாப்பிட முடியாது. அது கடவுள் நமக்குக் கொடுத்த கிஃப்ட்தான்!"

"என்னடா சொல்ற? என்னை மாதிரி தனியா இருக்கறவங்க, போர் அடிச்சா, ஏதாவது நொறுக்குத் தீனி தின்னுக்கிட்டுத்தான் இருப்பாங்க. அதனால என்ன ஆயிடப் போகுது?" என்றான் சதீஷ்.

"நேத்திக்கு நீ சொன்ன இல்ல. எங்கிட்ட ஓசியில வைத்தியம் பார்த்துக்கற வாய்ப்பு உனக்குக் கிடைக்கலேன்னு? நீ இது மாதிரி கட்டுப்பாடு இல்லாம, பசி இருக்கா இல்லையான்னெல்லாம் பார்க்காம, நினைச்சபோதெல்லாம்  நொறுக்குத் தீனி தின்னுக்கிட்டிருந்தா, உனக்கு அந்த வாய்ப்பு நிறையவே கிடைக்கும்! நீ என் கிளினிக்குக்கு அடிக்கடி வர வேண்டிய நிலை ஏற்படும் - என்னப் பார்க்க இல்ல, உனக்கு வர நோய்களுக்கு வைத்தியம் பார்த்துக்க!" என்றான் வடிவேல்.

குறள் 947:
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.

பொருள்: 
பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும், அதிகம் உண்டால், நோய்களும் அளவின்றி வரும்.

948. இரத்தப் பரிசோதனை

"எத்தனை நாளா ஜுரம் இருக்கு?" என்றார் டாக்டர்.

"மூணு நாளா" என்றான் மதன்.

"சரி, பிளட் டெஸ்ட் எடுத்துடலாம். இப்போதைக்கு ஒரு மாத்திரை எழுதித் தரேன். அதை ரெண்டு நாளைக்கு சாப்பிடுங்க" என்ற டாக்டர், இரத்தப் பரிசோதனை, மாத்திரை ஆகியவற்றுக்கான பிரிஸ்கிரிப்ஷனை எழுதிக் கொடுத்தார்.

"பிளட் டெஸ்ட் ரிபோர்ட் வந்ததும் என்னை வந்து பாருங்க. சுலபமா ஜீரணமாகிற உணவுகளை மட்டும் சாப்பிடுங்க. வெளியில எங்கேயும் சாப்பிடாதீங்க. ரெண்டு நாள் ஓய்வில இருக்கறது நல்லது" என்று அறிவுரை கூறி, மதனை அனுப்பி வைத்தார் டாக்டர்.

ரண்டு நாட்களுக்குப் பிறகு, இரத்தப் பரிசோதனை அறிக்கையுடன் டாக்டரிடம் வந்த மதன், "டாக்டர்! நீங்க கொடுத்த மாத்திரையை சாப்பிட்டதில, இப்ப ஜுரம் சரியாயிடுச்சு. இப்ப நான் நார்மல் ஆயிட்டேன்!" என்றான், உற்சாகத்துடன்.

"நல்லது!" என்று புன்னகையுடன் கூறிய டாக்டர், இரத்தப் பரிசோதனை அறிக்கையைப் படித்துப் பார்த்து விட்டு, "லிவர்ல இன்ஃபெக்‌ஷன் ஆகி இருக்கு. அதுக்கு ஒரு மாத்திரை எழுதித் தரேன். அதை மூணு நாளைக்கு சாப்பிட்டுட்டு, அப்புறம் என்னை வந்து பாருங்க. முதல்ல கொடுத்த மாத்திரையை இனிமே சாப்பிட வேண்டாம்" என்றார்.

"வேற மாத்திரை எதுக்கு டாக்டர்? அதான் நீங்க முதல்ல கொடுத்த மாத்திரையிலேயே, உடம்பு பூரணமா குணமாயிடுச்சே! வேணும்னா, அந்த மாத்திரையையே இன்னும் ரெண்டு நாளைக்கு சாப்பிடறேனே!"

"ஜுரம் வரதுக்குப் பல காரணங்கள் இருக்கு. சாதாரண ஜுரம்னா, ரெண்டு மூணு நாள்ள சரியாயிடும். மருந்து எதுவும் இல்லாம கூட குணமாயிடும். ஆனா, வேற காரணங்களால ஜுரம் வந்தா, அந்தக் காரணத்தைக் கண்டுபிடிச்சு, அதைப் போக்க சரியான மருந்து கொடுக்கணும். காரணத்தைக் கண்டுபிடிக்கத்தான் பிளட் டெஸ்ட். இப்ப பிளட் டெஸ்ட் ரிபோர்ட்லேந்து, லிவர் இன்ஃபெக்‌ஷன்னு தெரிஞ்சு போச்சு. இப்ப, அந்த இன்ஃபக்‌ஷனைப் போக்க மருந்து கொடுக்கணும். உங்களுக்கு ஜுரம் சரியாயிட்டாலும், இன்ஃபெக்‌ஷன் இருக்கறதல, மறுபடி ஜுரமோ வேற பிரச்னைகளோ வரலாம். முதல்ல கொடுத்த மாத்திரை என்ன பிரச்னைன்னு தெரியாதபோது, ஜுரத்தைத் தணிக்கறதுக்காகக் கொடுத்தது. இப்ப காரணம் தெரிஞ்சதும், அதுக்கு ஏத்த மருந்தைத்தானே கொடுக்கணும்?" என்றார், டாக்டர் மதனிடம் பிரிஸ்கிரிப்ஷனை நீட்டியபடி.

குறள் 948:
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

பொருள்: 
நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணத்தை ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்குப் பொருந்தும்படியாக மருத்துவம் செய்ய வேண்டும்.

949. அறுவை சிகிச்சை

பவித்ரா ஒரு பிரபல மருத்துவமனையின் பூரண உடல்நலப் பரிசோதனைத் திட்டத்தின் கீழ் உடல்நலப் பரிசோதனை செய்து கொண்டபோது, அவளுடைய கருப்பைக்குள் சிறு கட்டிகள் உருவாகி இருந்ததால், அவளுடைய கருப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என்று அந்த மருத்துவமனையின் ஒரு மருத்துவர் ஆலோசனை கூறினார்.

"எப்ப ஆபரேஷன் செய்யணும் டாக்டர்?" என்றான் பவித்ராவின் கணவன் சேகர்.

"எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம். அடுத்த வாரம் கூட ஒரு தேதி வச்சுக்கிட்டு, சர்ஜரிக்கான முன்னேற்பாடுகளை இன்னிக்கே ஆரம்பிச்சுடலாம்" என்றார் மருத்துவர்.

"நாங்க யோசிச்சு சொல்றோம்!" என்று கூறி விட்டு, அவரிடம் விடைபெற்றான் சேகர்.

மருத்துவமனையிலிருந்து வெளியே வந்ததும், "ஆபரேஷன் செய்யணும்னா, செஞ்சுக்கத்தானே வேணும்? இதில யோசிக்க என்ன இருக்கு?" என்றாள் பவித்ரா.

"நம்ம குடும்ப டாக்டர் சந்திராகிட்ட ஆலோசனை கேட்டுட்டு, அப்புறம் முடிவு செய்யலாமே!" என்றான் சேகர்.

வித்ராவின் மருத்துவப் பரிசோதனை அறிக்கையை முழுமையாகப் படித்துப் பார்த்த டாக்டர் சந்திரா, "கருப்பையில ஃபைபிராயிட்ங்கற கட்டிகள் உருவாகறது பலருக்கும் ஏற்படற பிரச்னைதான். இந்தப் பிரச்னை இருக்கறவங்களோட கருப்பையை அறுவை சிகிச்சை மூலம் எடுக்கறதும் ஒரு சாதாரண நடைமுறையா ஆயிடுச்சு" என்றார்.

"அப்படின்னா, ஆபரேஷன் செஞ்சுடலாம்னு சொல்றீங்களா?" என்றான் சேகர்.

"நான் அப்படிச் சொல்லல. பொதுவான நடைமுறையைச் சொன்னேன். ஆனா, உங்க மனைவி விஷயத்தில, இந்த ஆபரேஷனை இப்பவே செய்ய வேண்டியது அவசியம் இல்லேன்னு நினைக்கிறேன்."

"ஏன் டாக்டர்?" என்றாள் பவித்ரா.

"ஸ்கேன்ல பாக்கறப்ப, உங்களுக்கு ஃபைபிராயிட் இப்பதான் உருவாக ஆரம்பிச்சிருக்குன்னு தெரியுது. உங்க வயசை வச்சுப் பாக்கும்போது, உங்களுக்கு மெனோபாஸ் வர நேரம் இது. மெனோபாஸ் வந்தப்புறம், இந்தக் கட்டிகள் வளருவது நின்று போகலாம். அதுக்குள்ள, மருந்துகள் கொடுத்து இந்தக் கட்டிகளைக் கரைக்க முயற்சி செய்யலாம். அப்படி செஞ்சா, ஆபரேஷனே தேவையில்லைங்கற நிலைமை ஏற்படலாம். அப்படி இல்லாம, கட்டிகளோட வளர்ச்சி அதிகமாச்சுன்னா, அப்ப ஆபரேஷன் செஞ்சுக்கலாம். ஆறு மாசம் கழிச்சு முடிவு செஞ்சுக்கலாம்னு நினைக்கிறேன். ஆபரேஷன் செய்யாட்டாலும், ரெண்டு மூணு வருஷத்துக்கு பிரச்னை எதுவும் வர வாய்ப்பு இல்லை."

"அந்த ஆஸ்பத்திரியில, உடனே ஆபரேஷன் செய்யணும்னு சொன்னாங்களே!"

"இன்னொரு டாக்டர் சொன்னதைப் பத்தி, நான் எதுவும் சொல்லக் கூடாது. ஆனா, நீங்க ஆபரேஷனுக்கு சரின்னு சொல்லி இருந்தாலும், அவங்க உடனே ஆபரேஷனை வச்சுக்கிட்டிருக்க மாட்டாங்க!"

"ஏன் டாக்டர்?"

"ஏன்னா, நீங்க ரொம்ப அனீமிக்கா இருக்கீங்க. உங்க ஹீமோகுளோபின் அளவு ரொம்ப குறைச்சலா இருக்கு. முதல்ல உங்க ஹீமோகுளோபின் அளவை அதிகரிச்சுட்டு, அப்புறம்தான் ஆபரேஷன் செய்ய முடியும். அதுக்கே ரெண்டு மூணு மாசம் ஆயிடுமே! அதனால, நான் எழுதிக் கொடுக்கிற மாத்திரைகளை சாப்பிடுங்க. ஆறு மாசம் கழிச்சு, மறுபடி ஸ்கேன் எடுத்துப் பார்ப்போம். அதுக்குள்ள, உங்க ஹீமோகுளோபின் அளவும் அதிகரிச்சிருக்கும். ஆபரேஷன் தேவைன்னா, அப்ப வச்சுக்கலாம்" என்றார் டாக்டர் சந்திரா.

குறள் 949:
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.

பொருள்: 
மருத்துவம் கற்றவர் நோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவம் செய்வதற்குரிய நேரம் ஆகியவற்றை எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும்.

950. சாதாரண ஜுரம்!

"மூணு நாள் ஆகியும், ஜுரம் குறையல. அதனால, நீங்க அட்மிட் ஆயிடறது நல்லது. டிரிப்ஸ் ஏத்தினா, மாத்திரையை விட வேகமா பலன் கிடைக்கும். என்ன மாதிரி ஜுரம்ங்கறதைக் கண்டுபிடிக்க, பிளட் டெஸ்ட் எடுத்துப் பார்த்துடலாம்" என்றார் டாக்டர்.

"சரி சார். அட்மிட் ஆகிக்கறேன்!" என்றான் ராகவ்.

அட்மிட் ஆனதும், மனைவி கௌரிக்கு ஃபோன் செய்து, விஷயத்தைச் சொன்னான் ராகவ்.

"சாப்பாட்டுக்கு என்ன செய்வீங்க? வீட்டிலேந்து கொடுத்தனுப்பலாம்னா, ஆள் யாரும் இல்லை. அத்தையை வீட்டில தனியா விட்டுட்டு, என்னாலயும் வர முடியாது" என்றாள் கௌரி.

"ஆஸ்பத்திரியிலேயே கான்ட்டீன் இருக்கு. இங்கேயே கொண்டு வந்து கொடுத்துடுவாங்க. இங்கேயே சாப்பிட்டுக்கறேன்."

ராகவுக்கு இரத்தப் பரிசோதனை செய்தார்கள். அவன் மணிக்கட்டில் ஊசி குத்திக் குழாய் மூலம் ஏதோ திரவத்தை ஏற்றினார்கள். அதுதான் மருந்து போலும்! ஆனால், பார்ப்பதற்குத் தண்ணீர் மாதிரிதான் இருந்தது.

மணிக்கட்டில் மருந்தை ஏற்றி விட்டு, அவனைத் தனியாக விட்டு விட்டு, எல்லோரும் போய் விட்டாலும், அடிக்கடி யாராவது அறைக்குள் வந்து அவனுடைய உடல் வெப்பநிலை, இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு ஆகியவற்றை அளந்து, அளவுகளை அவன் படுக்க வைக்கப்பட்டிருந்த கட்டிலின் கால்மாட்டில்  தொங்கிய அட்டையில் குறித்து விட்டுப் போனார்கள்.

இரண்டு மூன்று முறை அவன் கழிவறைக்குச் செல்ல வேண்டி இருந்தபோது, கட்டிலுக்கு அருகே பொருத்தப்பட்டிருந்த பொத்தனை அழுத்தினான். உள்ளே வந்த நர்ஸ் அவன் மணிக்கிட்டில் செருகி இருந்த ஊசியை அகற்றி, அவனுக்குத் தற்காலிகமாக விடுதலை அளித்தாள். 

அவன் திரும்ப வந்து படுத்துக் கொண்டு பொத்தானை அழுத்தியதும், மீண்டும் அவன் மணிக்கட்டில் ஊசியைச் செருகி விட்டுப் போனாள்.

ரவு எட்டு மணிக்குப் புதிதாக வந்த நர்ஸ், "ஆரானும் ராத்திரி உங்களுக்குத் துணையா இருக்கப் போறது?" என்றாள், அதட்டும் குரலில்.

"ஆரும் இல்லை" என்று பதிலளித்த ராகவ், மனதுக்குள், 'நான் என்ன சின்னக் குழந்தையா, துணைக்கு யாராவது இருக்க வேண்டும் என்பதற்கு?' என்று நினைத்துக் கொண்டான்.

"ராத்திரியில கண்டிப்பா ஒத்தர் கூட இருக்கணும். இது ஆஸ்பத்திரி ரூலாக்கும்!" என்றாள் நர்ஸ்.

'இல்லாவிட்டால் என்னை டிஸ்சார்ஜ் செய்து விடுவீர்களாக்கும்?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட ராகவ், கௌரிக்கு ஃபோன் செய்து விஷயத்தைச் சொன்னான்.

"இப்படிச் சொல்லுவாங்கன்னு எனக்குத் தெரியும். அதனாலதான், உங்க தங்கைக்கு ஃபோன் பண்ணி, நம்ம வீட்டுக்கு வரச் சொல்லி இருக்கேன். அவ இங்கே இருந்து, அத்தையைப் பார்த்துப்பா. நான் வரேன் அங்கே!" என்றாள் கௌரி, ஏதோ உல்லாசப் பயணத்துக்குக் கிளம்புவது போன்ற உற்சாகத்துடன்.

இரவு சுமார் ஒன்பதரை மணிக்கு, மருத்துவமனைக்கு கௌரி வந்தாள். அதற்குள், நர்ஸ் இரண்டு மூன்று முறை அறைக்கு வந்து, "ஆரும் வரலியா?" என்று கவலையுடன் விசாரித்து விட்டுப் போய்விட்டாள்.

டுத்த நாள் காலை ஆறு மணிக்கு, ராகவின் அறைக்கு காப்பி வந்தது.

"உனக்கு வேணுமா?" என்றான் ராகவ், கௌரியிடம்.

கௌரி பதில் சொல்வதற்குள், "பேஷன்ட்டுக்கு மட்டும்தான் நாங்க கொடுப்போம். கெஸ்ட்டுக்கு வேணும்னா, எக்ஸ்ட்ரா பே பண்ணணும்!" என்றான் காப்பி கொண்டு வந்த கான்ட்டீன் பையன், அவசரமாக.

"வேண்டாம். நான் வீட்டுக்குப் போய்க் குடிச்சுக்கறேன்!" என்றாள் கௌரி.

சற்று நேரத்தில், கௌரி வீட்டுக்குக் கிளம்ப யத்தனித்தபோது, அங்கே வந்த நர்ஸ், "அவரோட பிளட் டெஸ்ட் ரிபோர்ட் வந்துடுச்சு. டாக்டரைப் பாத்துட்டுப் போயிடுங்க!" என்றாள், கௌரியிடம்.

"ரிபோர்ட் என்ன சொல்லுது - மலேரியாவா, டெங்குவா?" என்றான் ராகவ்.

நர்ஸ் அவனை முறைத்துப் பார்த்து விட்டு, "அதை டாக்டர் சொல்லும்" என்று சொல்லி விட்டுப் போனாள்.

எட்டு மணிக்கு, ராகவுக்குக் காலைச் சிற்றுண்டி வந்தது. ஆனால், அதுவரை டாக்டர் வரவில்லை.

"உங்களுக்கு வேணுமா? நூற்றைம்பது ரூபா ஆகும்!" என்றான் கான்ட்டீன் பையன், கௌரியைப் பார்த்து.

"வேண்டாம். இப்ப நான் கிளம்பிடுவேன்!" என்றாள் கௌரி, கைக்கடிகாரத்தைக் கவலையுடன் பார்த்தபடியே.

ராகவ் காலைச் சிற்றுண்டி அருந்திக் கொண்டிருதபோது, "ராத்திரி பூரா தூக்கமே வரல. இந்தக் குறுகலான பெஞ்ச்சில, புரண்டு கூடப் படுக்க முடியல. முதுகெல்லாம் வலிக்குது. இவ்வளவு நேரம் ஆச்சு. டாக்டர் இன்னும் வரல. நான் இன்னும் காப்பி கூடக் குடிக்கல. காலையில ஆறு மணிக்கெல்லாம் காப்பி குடிச்சுப் பழகியாச்சு. இவ்வளவு நேரம் காப்பி குடிக்காம இருக்கறது ஒரு மாதிரியா இருக்கு!" என்றாள் கௌரி.

"காப்பி கொண்டு வரச் சொல்லட்டுமா? எவ்வளவு கேக்கறாங்களோ, கொடுத்துடலாம்!" என்றான் ராகவ்.

"வேண்டாம், வேண்டாம். தண்ணியா காப்பி கொடுத்துட்டு, அதுக்கு அம்பது அறுபதுன்னு கறந்துடுவாங்க. ஏற்கெனவே உங்களுக்கான ஆஸ்பத்திரி செலவு வேற ஆட்டோ மீட்டர் மாதிரி நிமிஷத்துக்கு நிமிஷம் ஏறிக்கிட்டிருக்கு!" என்றாள் கௌரி, ராகவைக் குற்றம் சாட்டுவது போல்.

ராகவ் அவள் கூறியதைப் பொருட்படுத்தாமல், சிற்றுண்டியை ரசித்து உண்பதில் கவனத்தைச் செலுத்தினான்.

ஒன்பதரை மணிக்கு டாக்டர் வந்தார். கட்டிலின் கால் பகுதியில் தொங்க விடப்பட்டிருந்த ரிபோர்ட்டை வேகமாகப் படித்து விட்டு, "உங்க பிளட் டெஸ்ட் ரிபோர்ட் வந்துடுச்சு. ஒண்ணும் இல்ல, சாதாரண ஜுரம்தான் ஆனா, மாத்திரைக்குக் கட்டுப்படாம இருந்திருக்கு. மாத்திரை ரத்தத்தில கலந்தாதான் வேலை செய்யும். ஆனா, நீங்க சாப்பிட்ட மாத்திரைகளை உங்க உடம்பு ரிஜக்ட் பண்ணிடுச்சு போல இருக்கு. இப்ப டிரிப்ஸ் ஏத்தும்போது, மருந்து நேரா ரத்தத்தில கலந்துடும். அதனால மருந்து வேலை செஞ்சு, ஜுரம் கொஞ்சம் குறைஞ்சிருக்கு. ஆனா, இன்னும் ரெண்டு நாளைக்கு டிரிப்ஸ் ஏத்தணும். நாளைக்கு சாயந்திரம்தான் உங்களை டிஸ்சார்ஜ் பண்ண முடியும்னு நினைக்கறேன்" என்று சொல்லி விட்டுப் போனார்.

"இதைக் கேக்கறதுக்குத்தானா இத்தனை நேரம் உட்கார்ந்திருந்தேன்! பசி வயித்தைக் கிள்ளுது. காலையிலேந்து காப்பி கூடக் குடிக்கல!" என்று எரிச்சலுடன் கூறியபடியே, வீட்டுக்குக் கிளம்பினாள் கௌரி.

"வீட்டுக்குப் போய் சாப்பிட்டுட்டு, ரெஸ்ட் எடுத்துக்க. இன்னிக்கு ராத்திரி வேற வரணும் இல்ல?" என்றான் ராகவ்.

அவனை முறைத்து விட்டுப் போனாள் கௌரி.

ஆனால் அன்றிரவு, கௌரி, தான் வீட்டில் இருந்து கொண்டு, ராகவின் தங்கை பத்மாவை மருத்துவமனைக்கு அனுப்பி விட்டாள்.

கௌரியைப் போல் இல்லாமல், பத்மா, அன்று இரவு பால், மறுநாள் காலை காப்பி, சிற்றுண்டி என்று எல்லாவற்றையும் வாங்கி அருந்தி விட்டுத்தான் போனாள்.

'கௌரிக்கு விஷயம் தெரிந்தால், குய்யோ முறையோ என்று கத்துவாள், பாவம்!' என்று நினைத்துக் கொண்டான் ராகவ்.

டுத்த நாள் மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீட்டுக்கு வந்தான் ராகவ்.

"மூணு நாள் ஆஸ்பத்திரி வாசம், உங்களைப் பார்த்துக்க டாக்டர், நர்ஸ்கள்னு ஒரு படை, டிரிப்ஸ் ஏத்த பாட்டில் பாட்டிலா மருந்துகள், ராத்திரி கூட இருக்க ரெண்டு பேர், எல்லாத்துக்கும் மேல ஆயிரக்கணக்கில பில்! ஒரு சாதாரண ஜுரத்துக்கு இவ்வளவா!" என்று அலுத்துக் கொண்டாள் கௌரி.

"நீயே இவ்வளவு அலுத்துக்கறியே, இந்த பில்லுக்கான பணத்தில பெரும்பாலான தொகையைக் கொடுக்கப் போற இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிக்காரன் எவ்வளவு அலுத்துப்பான்!" என்றான் ராகவ்.

குறள் 950:
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து.

பொருள்: 
நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிலிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது.
             அறத்துப்பால்                                               காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...