அதிகாரம் 94 - சூது

திருக்குறள்
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 94
சூது

931. ஆடத் தெரிந்தவர் யாரோ!

"நீ இவ்வளவு அருமையா சீட்டாடற. காசு வச்சு ஆடினா, நிறைய சம்பாதிக்கலாண்டா!" என்றான் ராகவ்.

"அதெல்லாம் எனக்கு வேண்டாம். ஒரு விளையாட்டா ஆடறேன், அவ்வளவுதான். பணம் வச்சு ஆடறது சூதாட்டம் இல்லையா?" என்றான் வினோத்.

"என்னை மாதிரி ஆளுங்கள்ளாம் கிளப்புக்குப் போய், ஆடத் தெரியாம ஆடிப் பணத்தை விட்டுட்டு வரோம். ஆனா நல்லா ஆடத் தெரிஞ்ச நீ, பணம் சம்பாதிக்கற வாய்ப்பை நழுவ விட்டுக்கிட்டிருக்க."

வினோத் பதில் சொல்லவில்லை.

"நான் ஒண்ணு சொல்றேன். ஒரு நாளைக்கு என்னோட கிளப்புக்கு வா. ஒரு ஆட்டம் ஆடிப் பாரு. பத்து ரூபா வச்சுக் கூட ஆடலாம். ஜெயிக்கறியான்னு பாரு. ஜெயிக்கலேன்னா அதோட விட்டுடு. ஆனா, நீ கண்டிப்பா ஜெயிப்பே. ஜெயிச்சதுக்கு அப்புறம், தொடர்ந்து விளையாடறதும், விளையாடாம இருக்கறதும் உன் இஷ்டம்!"

வினோத் சற்றுத் தயங்கி விட்டு, "சரி" என்றான்.

பத்து ரூபாய் வைத்து ஆடி வினோத் ஜெயித்து விட்டான்  பிறகு நூறு ரூபாய் வைத்து ஆடி, அதிலும் ஜெயித்து விட்டான்.

"எங்கே வினோத்? இன்னுமா ஆஃபீஸ்லேந்து வரலே?" என்றார் ஊரிலிருந்து வந்திருந்த வினோதின் தந்தை அருணாசலம். 

அவர் இப்படிக் கேட்டதும், வினோதின் மனைவி சியாமளாவுக்கு அழுகை வெடித்து வந்தது.

"என்னத்தைச் சொல்றது? நல்லா இருந்த மனுஷன் திடீர்னு தினம் கிளப்புக்குப் போய் சீட்டாட ஆரம்பிச்சுட்டாரு. நான் வேண்டாம்னு சொன்னேன். கவலைப்படாதே, நிறையப் பணம் வரும்னு சொன்னாரு. ஆனா, பணம் போய்க்கிட்டுத்தான் இருக்கு. ஒவ்வொரு மாசமும், சம்பளத்தில பாதிக்கு மேல சீட்டாட்டத்திலேயே போயிடுது. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல!" என்றாள் சியாமளா, அழுகையினூடே.

குறள் 931:
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.

பொருள்: 
வெற்றியே பெறுவதானாலும், சூதாட்டத்தை விரும்பக் கூடாது, பெற்ற வெற்றியும், தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுங்கினாற் போன்றது.

932. இனிமேல் லாபம்தான்!

'சட்டபூர்வமான வழியில் ஆன்லைனில் தினமும் ஆயிரக்கணக்கில் சம்பாதியுங்கள்!'

இந்த விளம்பரத்தைப் பார்த்து விட்டு, அதில் கொடுக்கப்பட்டிருந்த தொலைபேசி எண்ணுக்கு ஃபோன் செய்தான் மகேந்திரன்.

தொலைபேசியில் பேசியவர், அவன் பெயர், தொலைபேசி எண் ஆகியவற்றைக் குறித்துக் கொண்டு, "வர சனிக்கிழமை சாயந்திரம் 6 மணிக்கு இலவச அறிமுகக் கூட்டம் நடத்தறோம். அங்கே விவரங்கள் சொல்றோம்" என்றார்.

லவச அறிமுகக் கூட்டத்துக்கு அவன் சென்றபோது, கூட்டம் நடந்த ஹால் நிரம்பி வழிந்தது.

கூட்டத்தை ஏற்பாடு செய்தவர் திட்டம் பற்றி விளக்கினார்.

"உங்கள்ள சில பேர் ஸ்டாக் மார்க்கெட் டிரேடிங் பண்ணி இருப்பீங்க. ஸ்டாக் மார்க்கெட்ல பெரும்பாலும் லாபம் கிடைக்காது. ஒரு பங்கை வாங்கிட்டு, அது விலை குறைஞ்சுட்டா, மறுபடி பழைய விலை வரதுக்குப் பல மாசங்கள், பல வருஷங்கள் கூடக் காத்துக்கிட்டிருப்பாங்க. 

"சில சமயம், பழைய விலை வரவே வராது. வாங்கின பங்கை விக்க முடியாம, பணம் முடங்கிப் போய், வேற பங்கை வாங்கவும் பணம் இல்லாம, நொந்து போய் இருப்பதுதான் பல பேரோட கதை. 

"ஆனா, கமாடிடிஸ் மார்க்கெட் அப்படி இல்லை. ஒரு டிரேடிலயே ஆயிரம் ரெண்டாயிரம்னு லாபம் பார்க்கலாம். சில சமயம் நஷ்டம் வரும். ஆனா, ஒட்டுமொத்தமா நிறைய லாபம் வர வாய்ப்பு இருக்கு. 

"அதோட, கமாடிடி மார்க்கெட் ராத்திரி பதினொன்றரை வரைக்கும் உண்டு. சாயந்திரம் ஆறு மணிக்கு மேலதான் மார்க்கெட் சூடு பிடிக்கும். அதனால, வேலைக்குப் போறவங்க கூட டிரேட் பண்ணலாம். 

"எங்க ஆஃபீஸ்ல நிறைய டர்மினல்ஸ் வச்சிருக்கோம். எங்க ஆபரேட்டர் மூலமா, ஒவ்வொரு டர்மினலிலேயும் ஏழெட்டு பேரு ஒரே நேரத்தில டிரேட் பண்ணலாம். நாங்க சில ரெகமெண்டேஷன்கள் கொடுப்போம். உங்க விருப்பபடியும் நீங்க டிரேட் பண்ணலாம். 

"ஆரம்பத்தில, பத்தாயிரம் ரூபா முதலீடு இருந்தா போதும். நீங்க சம்பாதிக்கிற லாபத்தை, வாராவாரம் சனிக்கிழமை உங்க பாங்க் அக்கவுன்ட்டுக்கு அனுப்பிடுவோம். 

"அக்கவுன்ட் ஓபன் பண்றவங்க இங்கேயே ஃபார்ம் ஃபில் அப் பண்ணிக் கொடுத்துட்டு, ஐடி புரூஃப் மத்த விவரங்களையெல்லாம் திங்கட்கிழமை அன்னிக்கு எங்க ஆஃபீஸ்ல கொண்டு கொடுத்தா, உங்க அக்கவுன்ட் ஓபன் ஆயிடும். அடுத்த நாளிலேந்தே நீங்க டிரேட் பண்ணலாம்."

அவர் கூறியவற்றால் ஈர்க்கப்பட்டு, மகேந்திரன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பிக் கொடுத்தான்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர்கள் அலுவலகத்துக்குச் சென்று டிரேடிங்கைத் துவக்கினான். முதல்நாளே, அவனுக்கு இரண்டாயிரம் ரூபாய் லாபம் கிடைத்தது.

"ஏங்க, ஏற்கெனவே ரெண்டு லட்சம் ரூபாய்க்கு மேல நஷ்டமாயிடுச்சு. இதோட விட்டுடுங்க. வேலைக்குப் போய் சம்பாதிக்கிறீங்க. இந்த கமாடிடி டிரேடிங் எல்லாம் எதுக்கு?" என்றாள் மகேந்திரனின் மனைவி வனிதா.  

"முதல் நாளே ரெண்டாயிரம் ரூபாய் சம்பாதிச்சேன். அது மாதிரி ஒவ்வொரு நாளும் சம்பாதிக்க முடியுமே! நடுவில சில டிரேட்ஸ் எல்லாம் நஷ்டமாயிடுச்சு. குறைஞ்ச நஷ்டத்திலேயே வெளியே வந்திருக்கணும். நஷ்டம் மாறி லாபம் வரும்னு காத்திருந்தது தப்பாப் போச்சு. இப்பதான் சில உத்திகளை எல்லாம் புரிஞ்சுக்கிட்டிருக்கேன். இனிமே நஷ்டத்தைக் குறைச்சு லாபம் வர மாதிரி செயல்படுவேன்!" என்றான் மகேந்திரன்.

'இவருக்கு எப்படிப் புரிய வைப்பது!' என்ற கவலையுடன் தன் கணவனைப் பார்த்தாள் வனிதா.

குறள் 932:
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.

பொருள்: 
ஒரு பொருள் பெற்று நூறு மடங்கு பொருளை இழந்து விடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ?

933. மூணு சீட்டு மகேஷ்

"மூணு சீட்டில மகேஷை அடிச்சுக்கறதுக்கு ஆளே கிடையாதுன்னு என் நண்பர்கள் சொல்லுவாங்க!" என்றான் மகேஷ், பெருமையுடன்.

"விளையாடறது சீட்டாட்டம். இதில பெருமை வேறயா?" என்றாள் அவன் மனைவி மங்கை.

இருவருக்கும் சமீபத்தில்தான் திருமணமாகி இருந்தது.

"பெருமை இல்லாம? சீட்டாட்டத்தில இதுவரைக்கும் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சிருக்கேன்!" என்றான் மகேஷ்.

"அடேயப்பா! அவ்வளவா? சரி. இது மட்டும் எப்படியோ! இனிமே, நீங்க சீட்டாடக் கூடாது" என்றாள் மங்கை.

மகேஷுக்கு இது பிடிக்கவில்லை. ஆயினும், மனைவியின் மனம் நோகக் கூடாது என்பதால் பேசாமல் இருந்தான்.

லுவலகத்தில் சில நண்பர்கள் அவர்களுக்குத் தெரிந்த ஒரு இடத்தில் சீட்டாட்டம் நடப்பது பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். அன்று மாலை அலுவலகம் முடிந்ததும், சிலர் அந்த இடத்துக்குக் கிளம்பினர். ஒரு நண்பன் மகேஷையும் அழைத்தான். மகேஷ் தயக்கத்துடன் அவர்களுடன் சென்றான்.

சில நண்பர்கள் சீட்டாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால் மகேஷ் ஆட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்தான்.

"என்ன மகேஷ்! உனக்கு சீட்டாடத் தெரியாதா?" என்றான் ஒரு நண்பன்.

"தெரியாதா? நான் ஆடினேன்னா, உங்க எல்லாருக்கும் நஷ்டம்தான் வரும்!" என்றான் மகேஷ்.

"அப்படிப்பட்ட கில்லாடி ஆட்டக்காரனா இருந்தா, ஆட வேண்டியதுதானே?" என்றான் இன்னொரு நண்பன்.

"வேண்டாம். என் மனைவிக்குப் பிடிக்காது."

"எங்க வீட்டில எல்லாம் என்ன எங்களுக்கு ஆரத்தி எடுத்தா சீட்டாட அனுப்பறாங்க? எந்த ஒரு ஆணும் சில காரியங்களை மனைவிக்குத் தெரியாமதான் செய்யணும். அதில சீட்டாடறதும் ஒண்ணு. நீதான் பிரமாதமா ஆடுவேங்கற. நிறைய சம்பாதிச்சு உன் மனைவி கையில கொடுத்தா, கோவிச்சுக்கவா போறாங்க?" என்றான் ஒரு நண்பன்.

மகேஷ் தயக்கத்துடன் ஆட்டத்தில் இறங்கினான். அன்று அவனுக்கு முன்னூறு ரூபாய் லாபம் கிடைத்தது.

"சும்மா ஜம்பம் அடிச்சுக்கறேன்னு நினைச்சோம். உண்மையாகவே நீ நல்லாத்தான் ஆடற!" என்றனர் அவன் நண்பர்கள்.

அதற்குப் பிறகு, வாரத்தில் இரண்டு மூன்று நாட்களாவது சீட்டாடி விட்டு, வீட்டுக்கு தாமதமாகச் செல்ல ஆரம்பித்தான் மகேஷ். ஆஃபீசில் வேலை அதிகம் என்று மங்கையிடம் கூறினான்.

"ஏன் இந்த மாசம் இவ்வளவு குறைச்சலாப் பணம் கொடுக்கறீங்க?" என்றாள் மங்கை.

"கொஞ்சம் கடன் வாங்கி இருக்கேன். அதை அடைக்கிற வரை இவ்வளவுதான் கொடுக்க முடியும்" என்றான் மகேஷ்.

"கடனா? எதுக்கு?" என்றாள் மங்கை, அதிர்ச்சியுடன்.

மகேஷ் பதில் பேசாமல் இருந்தான்.

"சொல்லுங்க!" என்றாள் மங்கை.

"மங்கை! சாயந்தர நேரங்கள்ள உனக்குத் தெரியாம சீட்டாடிட்டு வரேன்."

"ஆஃபீஸ்ல வேலைன்னு நீங்க சொன்னபோது எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. ஏதோ தில்லுமுல்லு பண்றீங்கன்னு நினைச்சேன். சரி, நீங்கதான் சீட்டாட்டத்தில புலியாச்சே! சீட்டாட்டத்தில நீங்க நிறைய சம்பாதிச்சிருக்கணுமே!"

"கடந்த காலத்தில சீட்டாட்டத்தில நான் சம்பாதிச்சிருக்கேங்கறதால, எனக்குத் திறமை இருக்குங்கற நம்பிக்கையிலதான் விளையாட ஆரம்பிச்சேன்.  ஆரம்பத்தில லாபம் வந்தது. அப்புறம் நஷ்டம் வர ஆரம்பிச்சுது. மறுபடி லாபம் வரும்னு நினைச்சுக் கடன் வாங்கி ஆடினேன். ஆனா, நஷ்டம் அதிகமாகிக்கிட்டேதான் இருந்தது. ஒரு கட்டத்தில போதும்னு நிறுத்திட்டேன். ஆனா, வாங்கின கடனை அடைக்கணும்."

"அந்த மட்டும் நிறுத்தினீங்களே! அதுவே பெரிய விஷயம்தான். ஆமாம் எவ்வளவு கடன் வாங்கி இருக்கீங்க?"

மகேஷ் தயங்கியபடியே, "ஒரு லட்சத்துக்கு மேல போயிடுச்சு. வட்டி வேற கட்டணும். ஐ ஆம் சாரி" என்றான்.

"சீட்டாட்டத்தில ஐம்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சதாப் பெருமையா சொல்லிக்கிட்டிருந்தீங்க. இப்ப அந்த ஐம்பதாயிரம் ரூபாய் போனதோட இல்லாம, அதுக்கும் மேல ஒரு லட்ச ரூபாய் நஷ்டம் ஆகி இருக்கு. இனிமேலாவது 'என்னை எல்லாரும் மூணு சீட்டு மகேஷ்னு சொல்லுவாங்க, நான் சீட்டாடியே ஐம்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சிருக்கேன்' அப்படின்னெல்லாம் பெருமை பேசாம இருங்க!" என்றாள் மங்கை, கடுமையான குரலில்.

குறள் 933:
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.

பொருள்: 
சூதாட்டத்தில் பெற்ற லாபத்தை ஓயாமல் சொல்லிச் சூதாடினால், உள்ள பொருளும், அதனால் வரும் லாபமும் அடுத்தவர் வசம் போய் விடும்.

934. மூதாட்டியின் சோகம்

அந்த வீட்டுக்குள் நுழைந்த அபிராமி, "அம்மா" என்று அழைத்தாள்.

உள்ளிருந்து வெளியே வந்த மூதாட்டி, "யாரு?" என்றாள்.

"என்னைத் தெரியலியா அம்மா? நான்தான் அபிராமி. உங்க வீட்டில குடி இருந்தேனே!" என்றாள் அபிராமி.

"ஓ, அபிராமியா? வா, வா! எத்தனை வருஷம் ஆச்சு, உன்னைப் பார்த்து!" என்றுபடியே, அபிராமியை அணைத்துக் கொள்ள முயன்றாள் மூதாட்டி.

அதற்குள், அபிராமி மூதாட்டியின் காலில் விழுந்து விட்டாள்.

"என்னம்மா இது? எதுக்கு என் கால்ல விழற?" என்றாள் மூதாட்டி, பதறியபடி.

"உங்க வீட்டில வாடகைக்குக் குடியிருந்த எங்க மேல எவ்வளவு அன்பு காட்டினீங்க! என் புருஷனுக்குச் சரியான வேலை இல்லாம கஷ்டப்பட்ட அந்தக் காலத்தில, எத்தனையோ தடவை எங்களால நேரத்தில வாடகை கொடுக்க முடியாதபோது, 'பவாயில்ல, பணம் வந்தப்புறம் கொடுங்க'ன்னு எவ்வளவு பெருந்தன்மையா நடந்துக்கிட்டீங்க! அதோட. எங்களுக்குச் சரியான சாப்பாடு இல்லேன்னு புரிஞ்சுக்கிட்டு, எத்தனையோ தடவை எங்களுக்குச் சாப்பிட ஏதாவது கொடுத்து உதவி இருக்கீங்க. நீங்க தெய்வம் மாதிரிம்மா!" என்றாள் அபிராமி, உணர்ச்சிப் பெருக்குடன்.

"அதெல்லாம் இருக்கட்டும். முதல்ல உக்காரு. இப்ப எப்படி இருக்கீங்க எல்லாரும்?" என்றாள் மூதாட்டி, பரிவுடன்.

"உங்க புண்ணியத்தில இப்ப நல்லா இருக்கோம்மா. அவரு ஒரு நல்ல வேலையில இருக்காரு. எங்க பையனை நல்ல ஸ்கூல்ல சேர்த்திருக்கோம்."

"ரொம்ப சந்தோஷமா இருக்கு அபிராமி!"

"அது சரி. உங்க பையன் எப்படி இருக்காரு? அவருக்குக் கல்யாணம் ஆயிடுச்சா? நாங்க குடியிருந்த போர்ஷன் வேற மாதிரி இருக்கே! இடிச்சுக் கட்டி இருக்கீங்களா?" என்றாள் அபிராமி.

"நீங்க வறுமையில இருந்த காலத்தைப் பத்தி சொன்னே. அதை விட மோசமான ஒரு நிலையில நாங்க இருக்கோம்மா!" என்றாள் மூதாட்டி, பெருமூச்சுடன்.

"என்னம்மா சொல்றீங்க?" என்றாள் அபிராமி, அதிர்ச்சியுடன்.

"என் பையனைப் பத்திக் கேட்டியே! அவன் படிச்சு முடிச்சுட்டு ஒரு நல்ல வேலைக்குப் போனான். கல்யாணமும் ஆச்சு. ஆனா, அவனுக்குப் பாழாப்போன சூதாட்டப் பழக்கம் வந்ததால, நிறையப் பணம் போனதோட, அவன் வேலையும் போச்சு. அவன் மனைவியும் அவனை விட்டுட்டுப் போயிட்டா. இப்ப அவனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருக்கா. சூதாட்டத்தில அவனுக்கு ஏற்பட்ட கடனைத் தீர்க்க, நீங்க குடியிருந்த போர்ஷனை வித்துட்டோம். அதில வந்த பணத்தில கடனைத் தீர்த்தப்புறம், மீதி இருந்த பணத்தை பாங்க்ல போட்டு, அதில வர வட்டியை வச்சுக் குடும்பத்தை நடத்திக்கிட்டிருக்கேன். இப்ப சூதாடப் பணம் இல்லை, கடனும் வாங்க முடியலைங்கறதால, என் பையன் பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கான். நான் செத்துப் போனப்புறம், இந்த வீட்டை வித்தோ, அடமானம் வச்சோ சூதாடி, மீதி இருக்கிற வாழ்க்கைய அழிச்சுக்கப் போறான்!"

குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள் மூதாட்டி.

"அழாதீங்கம்மா! உங்களுக்கு இருக்கற நல்ல மனசுக்கு அப்படி எதுவும் ஆகாது!" என்று கூறி, மூதாட்டியின் கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினாள் அபிராமி.

குறள் 934:
சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்.

பொருள்: 
ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி, அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைப் போல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.

935. வங்கிக் கடன்

"முன்னெல்லாம் ஸ்டாக் மார்க்கெட் வியாபாரம் ரொம்ப கஷ்டம். புரோக்கர்கிட்ட ஆர்டர் கொடுக்கணும். அவர் வாங்கினாரா, என்ன விலைக்கு வாங்கினார்னு அன்னிக்கு சாயந்திரம்தான் தெரியும். நாம வாங்கின பங்கோட சர்ட்டிஃபிகேட் நம்ம கைக்கு வர மூணு நாள் ஆகும். அப்புறம், அந்தப் பங்கோட விலை ஏறுதான்னு தினம் பேப்பரைப் பார்த்துக்கிட்டே இருக்கணும். விலை ஏறி இருக்குன்னு பார்த்துட்டு விக்கச் சொன்னா, அன்னிக்கு விலை குறைஞ்சிருக்கும்! இது மாதிரி பல பிரச்னைகள் இருந்த அந்தக் காலத்திலேந்தே நான் ஸ்டாக் மார்க்கெட் வியாபாரத்தில ஈடுபட்டிருக்கேனாக்கும்!" என்றார் மகேசன், பெருமையுடன்.

"லாபம் சம்பாதிச்சிருக்கியா?" என்றார் அவர் நண்பர் உமாபதி.

"லாபமும் வரும், நஷ்டமும் வரும். கணக்குப் பாக்கல. கூட்டிக் கழிச்சுப் பர்த்தா, நஷ்டம்தான் வந்திருக்கும்னு வச்சுக்கயேன்!"

"உனக்கு வேற தொழில் இருக்கு. அதில நல்ல வருமானம் வருது. சொத்து பத்தெல்லாம் இருக்கு. உனக்கு ஏம்ப்பா இந்த சூதாட்டம்?"

"அப்படி யோசிச்சு இதை விட்டுடலாம்னு நினைச்சப்பதான், ஆன்லைன் டிரேடிங் வந்தது. இருந்த இடத்திலேயே ஒரு கம்ப்யூட்டரையும், இன்டர்னெட் கனெக்‌ஷனையும் வச்சுக்கிட்டு, அப்பப்ப மாறுகிற விலை நிலவரத்தை வச்சு, எந்தப் பங்கையும் வாங்கலாம், விக்கலாம். இவ்வளவு வசதி இருக்கும்போது, இதை விட மனசில்லை. இவ்வளவு வருஷ அனுபவத்தில, நான் நிறையக் கத்துக்கிட்டிருக்கேனே! டெக்னிகல் அனாலிசிஸ் மாதிரி பல உத்திகளை வேற கத்துக்கிட்டிருக்கேன். முடிவெடுக்க உதவற சில சாஃப்ட்வேர் எல்லாம் வச்சிருக்கேன். அதனால, லாபகரமா செயல்பட முடியுங்கற உறுதியான நம்பிக்கையில, இப்ப ஆன்லைன் டிரேடிங் பண்ணிக்கிட்டிருக்கேன்."

"ஆன்லைன் டிரேடிங் வந்து பல வருஷமாச்சேப்பா! அதில லாபம் வருதா?" என்றார் உமாபதி.

"உமாபதி! நான் இன்னும் முயற்சி பண்ணிக்கிட்டுதான் இருக்கேன். ஒரு நாள் லாபம் வந்தா, அடுத்த நாள் பெரிய நஷ்டம் வந்துடுது. அதைச் சரி செய்யறதுக்குள்ள பல நாள் ஆயிடுது. ஆனா, நிச்சயம் பெரிய லாபம் சம்பாதிப்பேன்."

"அது சரி. இத்தனை நாளா இல்லாம, வியாபாரத்துக்காக பாங்க்ல கடன் வாங்கி இருக்கியே, எதுக்கு?" என்றார் உமாபதி.

"அதுவா? வியாபாரத்திலே இருந்து கொஞ்சம் பணத்தை எடுத்து ஸ்டாக் மார்க்கெட்ல போட்டேன். ரெண்டு மூணு வாரத்துக்குள்ள திரும்ப எடுத்துடலாம்னு பார்த்தேன். ஆனா, நான் வாங்கின பங்குகளோட விலை குறைஞ்சுட்டதாலே, அதையெல்லாம் விற்க முடியல. ஆனா, வியாபாரம் நடக்கணுமே! அதுக்காகத்தான் பாங்க்ல கடன் வாங்கினேன். பங்குகள் விலை ஏறினதும், அதையெல்லாம் வித்துட்டு, பாங்க் கடனை அடைச்சுடுவேன்!" என்றார் மகேசன்.

"மகேசா! நீ தப்புப் பண்ணிக்கிட்டிருக்கேன்னு நினைக்கிறேன். கடன் வாங்கக் கூடாதுன்னு இவ்வளவு வருஷம் உறுதியா இருந்த உன்னை, உன் ஸ்டாக்  ஸ்டாக் மார்க்கெட் ஈடுபாடு கடன் வாங்க வச்சுடுச்சு. இப்படியே போனா, கடன் அதிகமாகி, நல்லா நடந்துக்கிட்டிருக்கிற உன் வியாபாரத்துக்கும் பாதிப்பு வரும். நீ உன் ஸ்டாக் மார்க்கெட் வியாபாரத்தை நிறுத்தறதுதான் நல்லதுன்னு எனக்குத் தோணுது!" என்றார் உமாபதி.

ஆனால், மகேசன் தன் அறிவுரையைக் கேட்பார் என்ற நம்பிக்கை உமாபதிக்கு இல்லை.

குறள் 935:
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.

பொருள்: 
சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் பெருமையாகக் கருதிக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆகி விடுவார்.

936. நோய் வருமோ?

இரவு பதினோரு மணிக்கு வாயிற்கதவு தட்டப்பட்டது. அப்போதுதான் வேலைகளை முடித்து விட்டுப் படுக்கைக்குச் சென்ற புவனா, சோர்வுடன் நடந்து வந்து கதவைத் திறந்தாள். 

உள்ளே நுழைந்த ரகுராமனிடம், அவளிடம் இருந்ததை விடவும் அதிகச் சோர்வு தெரிந்தது.

"இன்னிக்கு எவ்வளவு விட்டீங்க?" என்றாள் புவனா.

"முதல்ல உள்ளே வர வழி விடு!" என்று அவளைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான் ரகுராமன்.

"எட்டு மணிக்கு வந்து சாப்பிட்டுட்டு, அப்புறம் உங்க சீட்டாட்டத்தைத் தொடர்ந்திருக்கலாம், இல்ல?"

ரகுராமன் பதில் பேசாமல் குளியலறைக்குச் சென்று முகத்தைக் கழுவிக் கொண்டு, நேரே படுக்கைக்குச் சென்றான்.

"சாப்பிடலையா?"

"பசிக்கல!"

"சீட்டாடற நேரம் முழுக்க வெத்தலையை மென்னுக்கிட்டே இருந்தா, எப்படிப் பசிக்கும்?" என்றபடியே சமையலறைக்குச் சென்ற புவனா, "பாதி நாள் நீங்க சாப்பிடாததால, அந்தச் சாப்பாட்டை மீதி வச்சு, அடுத்த நாள் நான் சாப்பிட வேண்டி இருக்கு. உங்களுக்குச் சாப்பாடு எடுத்து வைக்காமலேயே இருக்கலாம். ஆனா, அதுக்கு எனக்கு மனசு வரமாட்டேங்குதே!" என்று முணுமுணுத்தது ரகுராமனின் காதில் விழுந்ததா என்று தெரியவில்லை.

"அல்சர்!" என்ற டாக்டர், "ஏன் நேரத்துக்கு சாப்பிடறதில்லையா?" என்றார் ரகுராமனிடம்.

"சாப்பிடறேனே!" என்றான் ரகுராமன்.

"எங்கே? எப்பப் பார்த்தாலும் வெத்தலையை மென்னுட்டுப் பல நாள் சாப்பாடே வேண்டாம்னுடறாரு!" என்றாள் புவனா.

"சாப்பாட்டுக்கப்பறம் வெத்தலை போடலாம். வெத்தலையே சாப்பாடா இருக்க முடியாது. இனிமேலாவது ஜாக்கிரதையா இருங்க. அல்சர் முத்திப் போச்சுன்னா, ஆபரேஷன் பண்ணி எடுக்க வேண்டி இருக்கும்!" என்று எச்சரித்தார் டாக்டர்.

"நான் பாத்துக்கறேன் டாக்டர்!" என்றாள் புவனா.

வீட்டுக்கு வந்ததும், "ஐ ஆம் சாரி! என்னால உனக்குக் கஷ்டம்!" என்றான் ரகுராமன்.

"என்னோட கஷ்டத்தை விடுங்க. அது எப்பவுமே இருக்கறதுதானே! நீங்களாவது சூதாடிக்கிட்டு சந்தோஷமா இருந்தீங்க. உங்களுக்கும் அல்சர் வந்திருக்கு. ஆனா அதை விடப் பெரிய நோய் ரெண்டு பேருக்குமே வரப் போகுதுன்னு நினைக்கிறேன்!" என்றாள் புவனா.

"என்ன நோய் அது? அது ஏன் நமக்கு வரணும்?"

"பசி நோய்! அது யாருக்கு வேணும்னா வரலாமே! நீங்க வீட்டுச் செலவுக்குப் பணம் கொடுக்கறதில்ல. டாக்டருக்குப் பணம் கொடுக்கக் கூடப் பக்கத்து வீட்டில கடன் வாங்கிக்கிட்டுதான் வந்தேன். வீட்டுச் சாமானெல்லாம் கடையில கடனுக்குத்தான் வாங்கிக்கிட்டிருந்தேன். ரெண்டு மாசமா பணம் கொடுக்காததால, கடைக்காரர் இனிமே கடனுக்குப் பொருட்கள் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு. உங்களுக்காவது சீட்டாடற இடத்தில, யாராவது வெத்தலை வாங்கிக் கொடுப்பாங்க. நான் என்ன செய்யப் போறேன்னு தெரியல!"

அதற்கு மேல் துக்கத்தை அடக்க முடியாமல், புவனா அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.

குறள் 936:
அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்.

பொருள்: 
சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப்பட்டவர், வயிறு நிறைய உணவும் உண்ணாதவராகிப் பல துன்பப்பட்டு வருந்துவார்.

937. பண்பான கணவன்

கவிதாவுக்குத் திருமணமானபோது. அவள் கணவன் முத்துசாமி வேலை எதற்கும் போகவில்லை.

"நிறைய சொத்து இருக்கு. அவன் எதுக்கு வேலைக்குப் போகணும்?" என்றாள் முத்துசாமியின் தாய் சுந்தரவல்லி, கவிதாவின் தந்தையிடம்.

தன் பெண் வசதியான இடத்தில்தானே வாழ்க்கைப் படுகிறாள், மாப்பிள்ளைக்கு வேலை இல்லாவிட்டால் என்ன என்று நினைத்துக் கவிதாவின் தந்தை அவளை முத்துசாமிக்குத் திருமணம் செய்து வைத்தார்.

கணவன் வேலைக்குப் போகவில்லையே என்ற குறை திருணத்துக்கு முன் கவிதாவிடம் இருந்தாலும், திருமணத்துக்குப் பின் முத்துசாமி அவளிடம் காட்டிய அன்பும், மற்றவர்களிடம் அவன் காட்டிய பண்பும் கவிதாவின் குறையைப் போக்கித் தன் கணவனைப் பற்றி அவளைப் பெருமை கொள்ள வைத்தன.

ஆனால் பத்து வருடங்களுக்குப் பிறகு, முத்துசாமியிடம் ஒரு மாறுதல் ஏற்பட்டது.

"ஆம்பளைன்னா வேலைக்குப் போய் சம்பாதிக்கணும். இப்படியா வீட்டில உக்காந்திருப்ப?" என்று முத்துசாமியின் நண்பன் ஒருவன் அவனிடம் கேட்டான்.

"எனக்கு எங்க அப்பா விட்டுட்டுப் போன சொத்து இருக்கு. அதில வர வருமானத்தில, நான் வசதியாவே வாழ்ந்துக்கிட்டிருக்கேன். அதனால, நான் வேலைக்குப் போகல. அதோட. இந்த வயசில நான் எந்த வேலைக்குப் போக முடியும்?" என்றான் முத்துசாமி.

"வேலைக்குப் போகாட்டா என்ன? சம்பாதிக்க எத்தனையோ வழி இருக்கே! நான் உன்னை ஒரு இடத்துக்கு அழைச்சுக்கிட்டுப் போறேன். அதைப் பார்த்துட்டு நீ முடிவு பண்ணு!" என்றான் நண்பன்.

முத்துசாமியை அந்த நண்பன் அழைத்துச் சென்றது பக்கத்து ஊரிலிருந்த ஒரு சீட்டாடும் இடத்துக்கு. 

ஒரு பெரிய வீட்டில், பல அறைகளில், பல குழுக்களாக, அங்கே சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். சமையலுக்கு ஆள் வைத்து, சீட்டாடுபவர்களுக்கு காப்பி, சிற்றுண்டி என்று தயார் செய்து கொடுத்து, அதை ஒரு நிறுவனம் போல் நடத்திக் கொண்டிருந்தார்கள்.

சிலர் அங்கேயே ஒரு அறையில் இரண்டு மூன்று நாட்கள் தங்கித் தொடர்ந்து சீட்டாடுவார்கள் என்று விளக்கினான் நண்பன்.

"என்னை எதுக்கு இங்கே அழைச்சுக்கிட்டு வந்தே? நான் காசு வச்சு விளையாடறதில்லேன்னு உனக்குத் தெரியுமே!" என்றான் முத்துசாமி, சற்றுக் கோபத்துடன்.

"தெரியும். ஆனா உன்னோட சீட்டாட்டத் திறமையும் எனக்குத் தெரியும். நீயெல்லாம் காசு வச்சு விளையாடினா, சும்மா பணத்தை அள்ளலாம்!"

"வேண்டாம். வா, போகலாம்!" என்று கிளம்ப முயன்றான் முத்துசாமி.

"வந்ததுக்கு ஒரு ஆட்டம் ஆடிட்டுப் போகலாம். நீ காசு வச்சு ஆட வேண்டாம். நான் காசு வைக்கறேன். நீ எனக்காக ஆடு. ஜெயிச்சா, எனக்கு லாபம். தோத்தா, எனக்குத்தான் நஷ்டம். சரியா?" என்றான் நண்பன்.

அரை மனதுடன் ஆட உட்கார்ந்த முத்துசாமி, தொடர்ந்து ஐந்தாறு ஆட்டங்கள் ஆடினான். ஒட்டுமொத்தமாக ஐநூறு ரூபாய் லாபம் கிடைத்தது.

"பாத்தியா?  கொஞ்ச நேரம் ஆடினதுக்கே ஐநூறு ரூபா கிடைச்சிருக்கு. உன் திறமைக்கு, நீ தொடர்ந்து ஆடினா, உன்னை யாராலும் அடிச்சுக்க முடியாது!" என்றான் நண்பன்.

"சரி. நானே காசு வச்சு ஆடிப் பாக்கறேன்!" என்றான் முத்துசாமி.

அதற்குப் பிறகு, பல சமயங்களில் முத்துசாமி தொடர்ந்து நான்கைந்து நாட்கள் வீட்டுக்கு வருவதில்லை. சீட்டாட்டம் நடக்கும் இடத்திலேயே தங்கியிருந்து, தொடர்ந்து சீட்டாடிக் கொண்டே இருந்தான்.

கவிதா எவ்வளவோ சொல்லியும், முத்துசாமி தன் சீட்டாட்டப் பழக்கத்தை விடவில்லை. முத்துசாமியின் தாய் சுந்தரவல்லி சில ஆண்டுகளுக்கு முன்பு காலமாகி விட்டதால், அவனைக் கேட்பதற்கு வேறு எவரும் இல்லை.

"ஏங்க, நில அடமான பாங்க்ல கடன் வாங்கினீங்களா?" என்றாள் கவிதா.

"ஆமாம். அதுக்கு என்ன?" என்றான் முத்துசாமி.

"அங்கேந்து ஜப்தி நோட்டீஸ் வந்திருக்கு!"

முத்துசாமி அதிர்ச்சியுடன் நோட்டீசை வாங்கிப் படித்தான்.

"சீட்டாட்டத்தில உங்களுக்கு நிறையப் பணம் போயிடுச்சுன்னு ஊரில பேசிக்கிட்டப்ப நான் நம்பல. இப்படி நிலத்தை அடமானம் வச்சுக் கடன் வாங்கி, அதை அடைக்க முடியாத அளவுக்கா பணத்தை இழந்திருக்கிறீங்க?"

முத்துசாமி பதில் பேசாமல் இருந்தான்.

"நான் சொல்றதைக் கேளுங்க. உங்க முன்னோர்கள் விட்டுட்டுப் போன சொத்தை சீட்டாட்டத்தில இழந்துடாதீங்க. இதோட  நிறுத்திக்கங்க. இல்லேன்னா, மொத்த சொத்தும் போயிடும்."

கவிதா பேசி முடிக்கும் முன்பே, அவள் கன்னத்தில் பளாரென்று அறைந்தான் முத்துசாமி.

"நீ யாருடி எனக்கு புத்தி சொல்றதுக்கு? உன் அப்பனோட சொத்தையா நான் இழந்துட்டேன்? இது என் அப்பனோட சொத்துதானே? அதைப் பத்தி உனக்கு என்ன?"

கவிதா அதிர்ச்சியுடன் கணவனைப் பார்த்தாள். 

பத்து ஆண்டுத் திருமண வாழ்க்கையில், தன்னைக் கடிந்து கூடப் பேசாத கணவன், தன் கன்னத்தில் அறைந்து, தரக் குறைவாகப் பேசுவதை அவளால் நம்ப முடியவில்லை.

சீட்டாட்டம் அவன் முன்னோர்கள் வைத்து விட்டுப் போயிருந்த சொத்தை மட்டும் அழிக்கவில்லை, அவனுடைய பண்பையும் சிதைத்து விட்டது என்ற உணர்வு அவளுக்கு வலியை ஏற்படுத்தியது.

குறள் 937:
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.

பொருள்: 
சூதாடும் இடத்திலேயே ஒருவர் தமது காலத்தைக் கழிப்பாரேயானால், அது அவருடைய மூதாதையர் தேடி வைத்த சொத்துகளையும், அவரது இயல்பான  நற்பண்பையும் கெடுத்து விடும்.

938. அக்கா கேட்ட உதவி

கடைக்குப் போய் விட்டு வந்த லட்சுமி, "உங்க அக்கா வந்திருந்தாங்க போலிருக்கே! தெருக்கோடியில பார்த்தேன்" என்றாள், தன் கணவன் ரமணனிடம்.

"ம்..." என்றான் ரமணன்.

"ரொம்ப வருத்தமா இருந்தாங்க. அவங்க பையனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட நாளைக்குத்தான் கடைசி நாளாம். பத்தாயிரம் ரூபா வேணுமாம். நீங்க இல்லேன்னுட்டீங்களாம்."

"ஆமாம்."

"உங்க அக்காதானே! அதுவும் பையனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டறதுக்காகக் கேட்டிருக்காங்க. எங்கேயாவது புரட்டிக் கொடுத்திருக்கலாம் இல்ல?"

"எங்கே புரட்டறது? நம்ம நிலைமையே மோசமாத்தானே இருக்கு!" என்றான் ரமணன், எரிச்சலுடன்.

"நிறைய சம்பாதிக்கிறீங்கன்னு பேரு. வர பணம்லாம் எங்கே போகுதுன்னே தெரியல. கேட்டா, விலைவாசி எல்லாம் உயர்ந்துகிட்டே போகுது, வாங்கற சம்பளம் போதலைன்னு சொல்றீங்க!"

"சரி. நான் கோவிலுக்குப் போயிட்டு வரேன்!" என்று கிளம்பினான் ரமணன்.

"இப்பல்லாம் தினம் கோவிலுக்குப் போறீங்க. வரதுக்கு லேட் ஆகுது. அவ்வளவு நேரம் என்ன செய்யறீங்க?"

"கோவில்ல ஒத்தர் கதை சொல்றாரு. அதைக் கேட்டுட்டு வருவேன். நீயும் வரியா?" என்றான் ரமணன்.

"நானும் வந்துட்டா, நம்ம பொண்ணை யார் பாத்துக்கறது? இப்ப அவ டியூஷன்லேந்து வந்துடுவாளே!" என்றாள் லட்சுமி.

வழக்கம்போல் நண்பன் வீட்டுக்குச் சீட்டாடச் சென்று விட்டுர ஐயாயிரம் ரூபாய் தோற்று விட்டுச் சோர்வுடன் வீட்டுக்குத் திரும்பியபோது, 'சே! என்ன இப்படி ஆயிட்டேன்! மனைவிகிட்ட கோயிலுக்குப் போறேன்னு பொய் சொல்லிட்டு, சீட்டாடிட்டு வரேன். நான் தூக்கி வளர்த்த என் அக்கா பையனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டப் பணம் வேணும்னு அக்கா கேட்டப்ப, கையில பணம் இருந்தும், சீட்டாடப் பணம் வேணுமேங்கறதுக்காகக் கொஞ்சம் கூட இரக்கமில்லாம பணம் இல்லைன்னு சொல்லிட்டேன்!' என்று தன்னையே நொந்து கொண்டான் ரமணன்.

'இன்னிக்கு விட்ட ஐயாயிரம் ரூபாயை நாளைக்கு எப்படியாவது ஜெயிச்சுடணும்!' என்ற எண்ணம் உடனேயே அவன் மனதில் எழுந்தது.

குறள் 938:
பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.

பொருள்: 
பொருளைப் பறித்துப் பொய்யனாக ஆக்கி, அருள் நெஞ்சத்தையும் மாற்றித், துன்ப இருளில் ஒருவனை உழலச் செய்வது சூது.

939. கசங்கிய சட்டை!
"
சார் ரொம்ப நல்லா கிளாஸ் எடுப்பாரு. ஆனா கொஞ்ச நாளா என்னவோ டல்லா இருக்காரு!"

கல்லூரிப் பேராசிரியர் சுசீந்தரனின் மாணவர்கள் அவரைப் பற்றிப் பேசிக் கொண்டது இது.

கல்லூரி முதல்வர் அழைத்ததால், அவர் அறைக்குச் சென்றார் சுசீந்தரன்.

"பல்கலைக் கழகத்தின் பாடத்திட்ட சீரமைப்புக் குழுவின் உறுப்பினர் பதவியிலேந்து உங்களை நீக்கி இருக்கறதா பல்லைக்கழகத்திலேந்து கடிதம் வந்திருக்கு. உங்க பங்களிப்பு திருப்திகரமா இல்லைன்னு காரணம் சொல்லி இருக்காங்க. யூ ஆர் ஸச் எ கிரேட் ஸ்காலர்! உங்களைப் பத்தி அவங்க இப்படிச் சொல்றது எனக்கு ஆச்சரியமா இருக்கு. நீங்க அந்தக் குழுவோட பல அமர்வுகளுக்குப் போகவே இல்லையாமே?" என்றார் கல்லூரி முதல்வர்.

சுசீந்திரன் மௌன்னமாக இருந்தார்.

"எனக்குத் தெரியல. உங்ககிட்ட ஏதோ பிரச்னை இருக்குன்னு நினைக்கிறேன்.  நம்ம கல்லூரியிலேயே மாணவர்களால அதிகம் விரும்பப்பட்ட பேராசிரியரா நீங்க இருந்தீங்க. ஆனா, கொஞ்ச நாளா உங்களைப் பத்தி மாணவர்கள்கிட்டேந்து நிறைய புகார்கள் வருது. நீங்க சரியா வகுப்பு எடுக்கறதில்லை, மாணவர்கள் சந்தேகம் கேட்டா, அவங்க மேல எரிஞ்சு விழறீங்கன்னெல்லாம் புகார்கள் வருது. என்ன ஆச்சு உங்களுக்கு?" என்றார் கல்லூரி முதல்வர்.

"ஏதோ ஒண்ணு ரெண்டு தடவை உடம்பு சரியில்லாம இருந்தப்ப அப்படி நடந்துக்கிட்டிருப்பேன். இனிமே இப்படி நடக்காம பாத்துக்கறேன்!" என்றார் சுசீந்திரன்.

ஆயினும், சுசீந்திரன் மீது புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. சில மாதங்களில், சுசீந்திரன் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.

"உங்களுக்கு வேலை போய் மூணு மாசம் ஆகப் போகுது. நீங்க குடும்பச் செலவுக்காகக் கொடுத்த பணத்தில சேர்த்து வச்சதை வச்சு நான் இத்தனை நாள் குடும்பத்தை ஓட்டிட்டேன். நம்ம பையனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டணும். இன்னும் நிறைய செலவு இருக்கு. பணத்துக்கு என்ன செய்யப் போறீங்க?" என்றாள் சுசீந்திரனின் மனைவி மல்லிகா.

"பார்க்கலாம். டியூஷன் எடுக்கலாமான்னு பாக்கறேன்" என்றார் சுசீந்தரன்.

"ஏங்க, நீங்க எவ்வளவு படிச்சவரு! உங்களுக்கு எவ்வளவு பேரும் புகழும் இருந்தது! நல்ல வேலை, நல்ல சம்பளம். வசதியா வாழ்ந்துக்கிட்டிருந்தோம். இப்ப எல்லாம் போயிடுச்சு. வருமானத்துக்கு டியூஷன் எடுக்கப் போறதா நீங்க சொல்றதைக் கேட்க எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. உங்களுக்கு வேற வேலை கிடைக்காதா?" என்றாள் மல்லிகா, ஆற்றாமையுடன்.

"ஒரு இடத்தில வேலை போனப்புறம் இன்னொரு இடத்தில வேலை கிடைக்கிறது சுலபம் இல்லை. பாக்கலாம். சரி. நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்" என்று கிளம்பினார் சுசீந்திரன்.

"சாப்பிட்டுட்டுப் போங்க. காலையிலேந்து நீங்க எதுவும் சாப்பிடலியே!"

"எனக்கு சாப்பிடணும்னே தோணல. வந்தப்புறம் சாப்பிட்டுக்கிறேன்."

"இருங்க. உங்க சட்டை கசங்கி இருக்கு. வேற நல்ல சட்டை போட்டுக்கிட்டுப் போங்க!"

"சூதாட்டத்தால பணம் போனதோட இல்லாம, அந்தக் கவலையினால என் வேலையில கவனம்  செலுத்தாம இருந்ததால, என்னோட வேலை, எனக்கு இருந்த நல்ல பேரு, சேர்த்து வச்சிருந்த பணம் எல்லாம் போயிடுச்சு. இனிமே, கசங்கின சட்டை போட்டுக்கிட்டுப் போனா என்ன?" என்றார் சுசீந்திரன், விரக்தியுடன்.

குறள் 939:
உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்.

பொருள்: 
சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் ஒதுங்கும்.

940. மனோகர் எங்கே?

சிவராமன் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார்

சிவராமனைப் பார்க்க வந்த பக்கத்து வீட்டுக்காரர் ராஜபாண்டியனிடம், "இந்த மூச்சுத் திணறல் அடிக்கடி வருது. இந்தத் தடவை கொஞ்சம் அதிகமா இருந்ததால, ஆஸ்பத்திரிக்கு அழைச்சுக்கிட்டுப் போனோம். நல்லவேளை சரியாயிடுச்சு" என்றாள் சிவராமனின் மருமகள் வள்ளி.

"இப்ப எப்படி சார் இருக்கீங்க?" என்று சிவராமனிடம் கேட்டார் ராஜபாண்டியன்..

"இப்ப பரவாயில்லை. ஆனா அந்த மூச்சுத் திணறல் வந்து கஷ்டப்படறப்ப, உயிர் போயிட்டா பரவாயில்லேன்னு தோணுது! எனக்கும் எண்பது வயசு ஆயிடுச்சு இல்ல? சீக்கிரம் போய்ச் சேந்துட்டா எல்லாருக்குமே நல்லது!" என்றார் சிவராமன்.

"அப்படியெல்லாம் சொல்லாதீங்க. இந்தக் காலத்தில எத்தனையோ பேர் 90, 95 வயசுக்கு மேலே எல்லாம் இருக்காங்க. நீங்க நூறு வயசு இருப்பீங்க!" என்றார் ராஜபாண்டியன்..

இப்படி யாராவது சொல்வார்கள் என்பதற்காகவே, தன் மாமனார் தான் இறந்து விட வேண்டும் என்று விரும்புவதாகச் சொல்வதைப் பலமுறை கேட்டிருந்த வள்ளி, தனக்குள் சிரித்துக் கொண்டாள். 

ராஜபாண்டியன் சொன்னதைக் கேட்டதும் சிவராமன் முகத்தில் தெரிந்த மலர்ச்சியை கவனித்த வள்ளி, "பாவம்! உயிர் மேல் அத்தனை ஆசை! ஒருவேளை, என் வயதான காலத்தில் நானும் இப்படித்தான் இருப்பேனோ, என்னவோ!' என்று நினைத்துக் கொண்டாள்.

"மனோகர் இன்னும் வரலியா?" என்றார் ராஜபாண்டியன், வள்ளியிடம்.

"வர நேரம்தான்'" என்று அவருக்கு பதில் சொல்லி விட்டுத் தன் முகத்தை அவர் பார்த்து விடக் கூடாதே என்பதற்காகச் செய்ய வேண்டிய வேலை திடீரென்று நினைவுக்கு வந்தது போல் சமையலறைக்குள் சென்றாள் வள்ளி.

அன்று மாலை, தன் தந்தையை மருத்துவமனையிலிருந்து அழைத்து வர வேண்டும் என்ற பொறுப்பு இல்லாமல், வள்ளி பார்த்துக் கொள்வாள் என்ற அலட்சியத்தில், வழக்கம் போல், அலுவலகம் முடிந்ததும் சீட்டாடும் இடத்துக்குப் போய் விட்ட கணவனை நினைத்து அழுவதா, ஆத்திரப்படுவதா என்று வள்ளிக்குத் தெரியவில்லை.

ரவில் வீடு திரும்பிய மனோகருக்கு உணவு பரிமாறும்போது, "இன்னிக்கும் நஷ்டம்தானே?" என்றாள் வள்ளி.

மனோகர் பதில் சொல்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

"தினம் சீட்டாட்டத்தில காசு போய்க்கிட்டே இருக்கே, அதை விட்டு ஒழிச்சுடலாம் இல்ல?" 

"அதெப்படி? விட்ட காசை எடுக்க வேண்டாமா? ஜெயிச்சாலாவது, போதும்னு விட்டுட்டு வந்துடலாம். தோத்தா, மறுபடி ஜெயிக்கற வரையில ஆடிக்கிட்டுத்தான் இருக்கணும்!" என்றான் மனோகர்.

குறள் 940:
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.

பொருள்: 
துன்பத்தை அனுபவிக்கும் போதெல்லாம், இந்த உடம்பின் மேல் உயிருக்குக் காதல் பெருகுவது போல, சூதாடிப் பொருளை இழந்து துன்பப்படும் போதெல்லாம், சூதாட்டத்தின் மேல் ஆசை பெருகும்.
             அறத்துப்பால்                                               காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...