அதிகாரம் 70 - மன்னரைச் சேர்ந்தொழுகல்

திருக்குறள்
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 70
மன்னரைச் சேர்ந்தொழுகல்

691. அமைச்சருடன் நெருக்கம்

"என்ன புலவரே, சௌக்கியமா இருக்கீங்களா?" என்றது தொலைபேசியின் மறுபுறத்திலிருந்து வந்த குரல்.

தமிழறிஞர் வேதாசலம் அதிர்ச்சியில் ஒருகணம் பதைபதைத்து விட்டார்.

"என்னையா நீங்களேஃபோன் பண்றீங்க? உங்க செயலர்கிட்ட சொல்லி ஃபோன் பண்ணி இருந்தீங்கன்னா நான் உங்களை வந்து சந்திச்சிருப்பேனே!" என்றார் வேதாசலம் பதட்டத்துடன்.

"பரவாயில்லை. உங்களை செயலர் மூலமா கூப்பிடாம நானே கூப்பிடறேன்னு வச்சுக்கங்களேன்! இன்னிக்கு சாயந்திரம் நாலு மணிக்கு என்னை அலுவலகத்தில வந்து பாருங்க."

ஃபோனை வைத்து விட்டார் அமைச்சர் சுப்பு.

"பல வருஷங்களுக்கு முன்னே ஒரு வீட்டுமனை வாங்கினதாச் சொன்னீங்களே, அதை வித்துட்டீங்களா, இன்னும்  வச்சிருக்கீங்களா?" என்றார் சுப்பு.

'எப்போதோ பேச்சு வாக்கில் சொன்னதை னைவு வைத்துக் கொண்டு இப்போது ஏன் கேட்கிறார்?' என்று நினைத்துக் கொண்ட வேதாசலம், "இருக்கு!" என்றார்.

"அது இப்ப என்ன விலைக்குப் போகும்?"

"தெரியலையே! பத்துப் பதினைஞ்சு லட்சத்துக்குப் போகலாம். ஏன் கேக்கறீங்க?"

"அதை ஒத்தர் ரெண்டு கோடி ரூபாய்க்கு வங்கிக்கறதாச் சொன்னா கொடுப்பீங்களா?" என்றார் சுப்பு சிரித்துக் கொண்டே.

"அது எப்படி ஐயா?" என்றார் வேதாசலம் குழப்பத்துடன்.

"எப்படியோ! அதை ரெண்டு கோடி ரூபாய்க்கு வித்துட்டு நான் சொல்ற ஒரு பங்களாவை ரெண்டு கோடி ரூபாய்க்கு வாங்கறீங்க. உண்மையில அதோட மதிப்பு அஞ்சு கோடி ரூபா. ஆனா அதோட சொந்தக்காரரு எனக்காக அதை உங்களுக்கு ரெண்டு கோடி ரூபாய்க்கு விக்கறாரு!" என்றார் சுப்பு.

சுப்பு என்ன சொல்ல வருகிறார் என்பது வேதாசலத்துக்குப் புரிய ஆரம்பித்தது.

"அப்புறம்?" என்றார் வேதாசலம், தயக்கத்துடன்

"அப்புறம் என்ன? அந்த வீட்டை எனக்கு வாடகைக்கு விட்டுடறீங்க. உங்களுக்கு ரொக்கமா முப்பது லட்சம் கிடைக்க ஏற்பாடு செஞ்சுடறேன். அப்புறம் பின்னால நான் எப்ப சொல்றேனோ அப்ப அதை நான் சொல்ற ஆளுக்கு ரிஜிஸ்தர் பண்ணிக் கொடுத்துடணும்!"

"நல்ல விஷயம்தானே! முப்பது லட்ச ரூபா சுளையாக் கிடைக்கும். உங்க பேர்ல வாங்கப் போற வீட்டை அவரு கேக்கறப்ப அவர் சொல்றவங்க பேருக்கு ரிஜிஸ்தர் பண்ணிக் கொடுத்துடலாமே! இதில நமக்கென்ன பிரச்னை?" என்றாள் வேதாசலத்தின் மனைவி கமலா.

"அவரு என்னைத் தனக்கு பினாமியாப் பயன்படுத்தப் பாக்கறாரு. நாளைக்கு அவர் மேல ஏதாவது கேஸ் வந்தா நானும் இல்ல மாட்டிப்பேன்? தற்செயலா அவரோட தொடர்பு கிடைச்சது. அரசியல் தலைவரோட பழக்கம் நமக்குப் பயனுள்ளதா இருக்கும்னு நினைச்சுப் பழகினேன். என்னை அறியாம ரொம்ப நெருக்கமாயிட்டேனோ என்னவோ தெரியல, என்னை பினாமியா வச்சுக்கலாம்னு அவர் நினைக்கிற அளவுக்குப் போயிடுச்சு!"

"அவருக்கு என்ன பதில் சொன்னீங்க?"

"வேணாங்க, எனக்கு பயமா இருக்குன்னு சொல்லிட்டேன். அவரும் என்னோட பயத்தைப்  புரிஞ்சுக்கிட்டாரு. என் மேல கோபமோ வருத்தமோ படலேன்னு நினைக்கிறேன். இனிமே அவர்கிட்ட ஜாக்கிரதையாப் பழகணும். அவர் கூப்பிட்டா மட்டும் போய் அளவோட பேசிட்டு வரணும். நெருப்போட பழகற மாதிரி இல்ல எச்சரிக்கையா இருக்க வேண்டி இருக்கு!" என்றார் வேதாசலம், பதைபதைப்பு இன்னும் நீங்காதவராக.

குறள் 691:
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.

பொருள்:
மனம் மாறுபடும் இயல்புடைய ஆட்சியாளரைச் சார்ந்து பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வது போல் அதிகமாக நெருங்கி விடாமலும், அதிகமாக நீங்கி விடாமலும் இருக்க வேண்டும்.

692. புதிய முதலமைச்சர்!

ஆதிமூலம் தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்து விட்டார்.

முதலமைச்சர் பதவியிலிருந்து உடனே விலகப் போவதாகவும், சிறிது காலத்துக்குப் பின் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் விலகப் போவதாகவும் அவர் அறிவித்தார்.

தனக்குப் பிறகு முதல்வர் பொறுப்பை ஏற்கப் போவது யார் என்பதைக் கட்சியின் உயர்மட்டக் குழு தீர்மானிக்கும் என்று அவர் அறிவித்தார். 

இருபது உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு என்பது ஆதிமூலத்தின் விருப்பத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடிதான் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

முதலமைச்சராக யார் நியமிக்கப்படுவார் என்பது பற்றிப் பல பெயர்கள் அடிபட்டன. 

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக, இரண்டு வருடங்களுக்கு முன்பே முதல் முறையாக அமைச்சரான பூவரசன் கட்சியின் அடுத்த முதல்வராக இருப்பார், சட்டமன்ற உறுப்பினர்களால் அவர் முறையாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று உயர்மட்டக் குழு அறிவித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

"என்ன இது, மூத்த அமைச்சர்கள் நாம இத்தனை பேர் இருக்கோம்! நம்ம எல்லாரையும் ஒதுக்கிட்டு தலைவர் பூவரசனைத் தேர்ந்தெடுத்திருக்காரு?" என்று பொருமினார் ஒரு மூத்த அமைச்சர்.

"நாம என்ன செய்ய முடியும்? அவரை மீறிக் கட்சியில எதுவும் நடக்காது. கட்சித் தலைவர் பதவியிலேந்து அவர் விலகிப்பறம் அந்தப் பதவியாவது நம்ம யாருக்காவது கிடைக்குதான்னு பாக்கலாம். தலைவர் விலகினப்பறம் கட்சி நம்ம கையிலதானே இருக்கும்? அப்ப பூவரசனைத் தூக்கியடிக்க நம்மால முடியாதா என்ன?" என்றார் மற்றொரு மூத்த அமைச்சர்.

"என்ன பூவரசா! சாதிச்சுட்டியே! தலைவர் எப்படி உன்னைத் தேர்ந்தெடுத்தாரு?" என்றான் பூவரசனின் நண்பன் அருள்.

"நான் இருபது வருஷமா அரசியல்ல இருக்கேன். மாவட்டச் செயலாளரா இருந்திருக்கேன். ரெண்டு வருஷமா அமைச்சரா இருக்கேன்.. தலைவர்கிட்ட நெருங்கிப் பழகற வாய்ப்பு கிடைச்சப்பவே தலைவரைப் பத்திப் புரிஞ்சுக்கிட்டேன். தலைவர் எல்லாரையும் சந்தேகப்படறவரு. தன்னைச் சுற்றி இருக்கற எல்லாரும் தன்னைக் கவிழ்த்துடுவாங்கன்னு சந்தேகப்படறவரு. தானே எப்பவும் அதிகாரத்தில இருக்கணும்னு நினைக்கிறவரு. இப்ப கூட உடல்நிலை சரியில்லாததால ஓய்வில இருக்கணும்னு மருத்துவர்கள் சொன்னதாலதான் அவர் பதவி விலகறாரு. அவரோட நம்பிக்கையைப் பெறணும்னா பதவிக்கு ஆசைப்படக் கூடாதுன்னு ரொம்ப நாள் முன்னாடியே தெரிஞ்சுக்கிட்டேன். ரெண்டு தடவை அவர் எனக்கு அமைச்சர் பதவி கொடுத்தப்ப வேண்டாம்னு சொல்லிட்டேன். நான் அமைச்சர் பதவியில ஆசை உள்ளவன்னு அவர் நினச்சாலே, என்னிக்காவது ஒருநாள் நான் அவரைக் கவுத்துடுவேன்னு சந்தேகப்படற ஆளு அவரு! அதனாலதான் ரெண்டு தடவை அமைச்சர் பதவியை வேண்டாம்னு சொல்லிட்டேன். மூணாவது தடவை அவர் வற்புறுத்திக் கேட்டப்ப ஒத்துக்கிட்டேன். இப்ப அவரே என்னை முதல்வரா ஆக்கி இருக்காரு!" என்றான் பூவரசன்.

"அது சரி. அவர் அரசில்லேந்து விலகினப்பறம் புதுசா வர கட்சித் தலைவர் உன்னை முதல்வர் பதவியிலேந்து தூக்கப் பாப்பாரே!"

"நான் சொன்னதை நீ சரியாப் புரிஞ்சுக்கல. பதவி ஆசை இல்லாதவன் மாதிரி நான் நடிக்கல. அந்த ஆசை எனக்கு வேண்டாம், தலைவருக்கு விசுவாசியா இருந்தாப் போதும்னு நினைச்சு என் மனசைப் பக்குவப்படுத்திக்கிட்டேன். அதனால, நாளைக்கே என் பதவி போனாலும் நான் வருத்தப்பட மாட்டேன்!" என்றான் பூவரசன்.

குறள் 692:
மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும்.

பொருள்:
ஆட்சியாளருடன் பழகுபவர் ஆட்சியாளர் எவற்றை விரும்புகிறாரோ அவற்றை விரும்பாமல் இருப்பது, அவருக்கு ஆட்சியாளரிடமிருந்து நிலைத்த செல்வத்தைப் பெற்றுக் கொடுக்கும்.

ஒரு நாள் தவறாமல் தன்னை அழைத்துப் பேசும் முதலமைச்சர் இரண்டு நாட்களாகத் தன்னை அழைக்கவில்லை என்பதை அமைச்சர் பூபதி மூன்றாம் நாள்தான் உணர்ந்தார்.

எப்படி இதை உணராமல் போனோம்? இரண்டு நாட்களாகத் தன் அமைச்சகத்தில் சில முக்கியமான பணிகளில் மூழ்கி இருந்ததால் இதை கவனிக்கத் தவறி விட்டோம் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டார் பூபதி.

முதலமைச்சரின் செயலரைத் தொலைபேசியில் அழைத்துத் தான் முதல்வரைச் சந்திக்க நேரம் ஒதுக்கும்படி கேட்டார் பூபதி.

"சார்! முதல்வர் இப்ப ரொம்ப பிசியா இருக்காரு. யாருக்கும் நேரம் கொடுக்க வேண்டாம்னு சொல்லிட்டாரு!" என்றார் முதல்வரின் செயலர்.

"பொதுவா சொல்லி இருப்பாரு. நான் அவரைச் சந்திக்க விரும்பறேன்னு சொல்லுங்க. கண்டிப்பா நேரம் ஒதுக்குவாரு!"

சற்றுத் தயங்கிய செயலர், "மன்னிக்கணும் சார்! குறிப்பா நீங்க நேரம் கேட்டா, கொடுக்க வேண்டாம்னு சொல்லி இருக்காரு!" என்றார்.

ன்று மாலை கட்சி அலுவலகத்துக்குச் சென்ற பூபதி அங்கே கட்சித் தலைவரைச் சந்தித்தார்.

"என்ன ஐயா பிரச்னை? ஏன் முதல்வர் என்னைச் சந்திக்க மாட்டேங்கறாரு?" என்றார் பூபதி.

"உங்க அமைச்சகத்தோட செயல்பாடு பற்றி முதல்வருக்கு ஏதோ புகார் வந்திருக்கு. அவர் துறைச் செயலாளரைக் கூப்பிட்டு விசாரிச்சிருக்காரு. துறைச் செயலாளரோட ஆலோசனையை ஏத்துக்காம நீங்க முடிவெடுத்ததா அவர் சொல்லி இருக்காரு. நீங்க எடுத்த முடிவால அரசுக்குக் கெட்ட பேர் ஏற்பட்டிருக்கு. அதனாலதான் முதல்வர் கோபமா இருக்காரு!" என்றார் கட்சித் தலைவர்.

"ஓ! அந்தப் பாலம் விஷயமா? வேலை சீக்கிரம் நடக்கணுங்கறதுக்காக அந்தப் பாலம் தொடர்பான ஒப்பந்தத்தோட நிபந்தனைகளைக் கொஞ்சம் தளர்த்தினேன். அதனால வேலை சீக்கிரம் முடிஞ்சு அந்தப் பாலத்தைத் திறந்துட்டமே! நல்லதுதானே நடந்திருக்கு?" என்றார் பூபதி.

"நீங்க எந்த நோக்கத்தோட செஞ்சீங்களோ, தெரியாது. ஆனா ஒப்பந்தத்தோட நிபந்தனைகளை நீங்க தளர்த்தினது அந்த ஒப்பந்ததாரருக்கு சலுகை காட்டத்தான்னு புகார் எழுந்திருக்கு. அதனால அந்தப் பாலத்தோட வேலைகள் சரியா நடந்திருக்காதுன்னு மக்கள் மத்தியில ஒரு சந்தேகம் வந்திருக்கு..."

"இதெல்லாம் எதிர்க் கட்கள் கிளப்பி விடுகிற புரளி..." என்றார் பூபதி, தலைவரை இடைமறித்து.

"துறைச் செயலாளரோட ஆலோசனைக்கு எதிரா நீங்க செயல்படறதுக்கு முன்னே முதல்வர்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கணும் இல்ல? அவர்கிட்ட நெருக்கமா இருந்தும் நீங்க இதை அவர்கிட்ட சொல்லாதது அவருக்கு உங்க மேல சந்தேகத்தை ஏற்படுத்தாதா?"

"நான் முதல்வர்கிட்ட இதை நேரடியாப் பேசி விளக்கினா அவர் புரிஞ்சுப்பாரு."

"உங்களுக்கு முதல்வரைப் பத்தித் தெரியும். அவர் ஒத்தர் மேலே வச்சிருக்கற நம்பிக்கை குறையும்படி ஏதாவது நடந்தா திரும்பவும் அவருக்கு நம்பிக்கை ஏற்படுத்தறது கஷ்டம்."

"இன்னிக்கு ராத்திரி நான் முதல்வரை அவர் வீட்டில பார்த்துப் பேசி அவர்கிட்ட எல்லாத்தையும் விளக்கமா சொல்லிப் புரிய வைக்கறேன்!" என்றார் பூபதி நம்பிக்கையுடன்.

"அதுக்கு அவசியம் இல்லேன்னு நினைக்கறேன். முதல்வர் உங்களை அமைச்சரவையிலேந்து நீக்கிட்டாரு. எல்லா டிவி சேனல்லேயும் இப்ப அந்தச் செய்திதான் ஓடிக்கிட்டிருக்கு!" என்ற தலைவர், பூபதி பார்ப்பதற்காகத் தன் அறையிலிருந்த டிவியை ரிமோட் மூலம் இயங்கச் செய்தார்.

குறள் 693:
போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.

பொருள்:
அரசரைச் சார்ந்திருப்பவர் தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால் கடுமையான தவறுகள் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும், அரசருக்கு ஐயம் ஏற்பட்டபின், அரசரைத் தெளிவித்தல் எவர்க்கும் இயலாத செயல்.

693. என்ன தவறு செய்து விட்டேன்?

ஒரு நாள் தவறாமல் தன்னை அழைத்துப் பேசும் முதலமைச்சர் இரண்டு நாட்களாகத் தன்னை அழைக்கவில்லை என்பதை அமைச்சர் பூபதி மூன்றாம் நாள்தான் உணர்ந்தார்.

எப்படி இதை உணராமல் போனோம்? இரண்டு நாட்களாகத் தன் அமைச்சகத்தில் சில முக்கியமான பணிகளில் மூழ்கி இருந்ததால் இதை கவனிக்கத் தவறி விட்டோம் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டார் பூபதி.

முதலமைச்சரின் செயலரைத் தொலைபேசியில் அழைத்துத் தான் முதல்வரைச் சந்திக்க நேரம் ஒதுக்கும்படி கேட்டார் பூபதி.

"சார்! முதல்வர் இப்ப ரொம்ப பிசியா இருக்காரு. யாருக்கும் நேரம் கொடுக்க வேண்டாம்னு சொல்லிட்டாரு!" என்றார் முதல்வரின் செயலர்.

"பொதுவா சொல்லி இருப்பாரு. நான் அவரைச் சந்திக்க விரும்பறேன்னு சொல்லுங்க. கண்டிப்பா நேரம் ஒதுக்குவாரு!"

சற்றுத் தயங்கிய செயலர், "மன்னிக்கணும் சார்! குறிப்பா நீங்க நேரம் கேட்டா, கொடுக்க வேண்டாம்னு சொல்லி இருக்காரு!" என்றார்.

ன்று மாலை கட்சி அலுவலகத்துக்குச் சென்ற பூபதி அங்கே கட்சித் தலைவரைச் சந்தித்தார்.

"என்ன ஐயா பிரச்னை? ஏன் முதல்வர் என்னைச் சந்திக்க மாட்டேங்கறாரு?" என்றார் பூபதி.

"உங்க அமைச்சகத்தோட செயல்பாடு பற்றி முதல்வருக்கு ஏதோ புகார் வந்திருக்கு. அவர் துறைச் செயலாளரைக் கூப்பிட்டு விசாரிச்சிருக்காரு. துறைச் செயலாளரோட ஆலோசனையை ஏத்துக்காம நீங்க முடிவெடுத்ததா அவர் சொல்லி இருக்காரு. நீங்க எடுத்த முடிவால அரசுக்குக் கெட்ட பேர் ஏற்பட்டிருக்கு. அதனாலதான் முதல்வர் கோபமா இருக்காரு!" என்றார் கட்சித் தலைவர்.

"ஓ! அந்தப் பாலம் விஷயமா? வேலை சீக்கிரம் நடக்கணுங்கறதுக்காக அந்தப் பாலம் தொடர்பான ஒப்பந்தத்தோட நிபந்தனைகளைக் கொஞ்சம் தளர்த்தினேன். அதனால வேலை சீக்கிரம் முடிஞ்சு அந்தப் பாலத்தைத் திறந்துட்டமே! நல்லதுதானே நடந்திருக்கு?" என்றார் பூபதி.

"நீங்க எந்த நோக்கத்தோட செஞ்சீங்களோ, தெரியாது. ஆனா ஒப்பந்தத்தோட நிபந்தனைகளை நீங்க தளர்த்தினது அந்த ஒப்பந்ததாரருக்கு சலுகை காட்டத்தான்னு புகார் எழுந்திருக்கு. அதனால அந்தப் பாலத்தோட வேலைகள் சரியா நடந்திருக்காதுன்னு மக்கள் மத்தியில ஒரு சந்தேகம் வந்திருக்கு..."

"இதெல்லாம் எதிர்க் கட்கள் கிளப்பி விடுகிற புரளி..." என்றார் பூபதி, தலைவரை இடைமறித்து.

"துறைச் செயலாளரோட ஆலோசனைக்கு எதிரா நீங்க செயல்படறதுக்கு முன்னே முதல்வர்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கணும் இல்ல? அவர்கிட்ட நெருக்கமா இருந்தும் நீங்க இதை அவர்கிட்ட சொல்லாதது அவருக்கு உங்க மேல சந்தேகத்தை ஏற்படுத்தாதா?"

"நான் முதல்வர்கிட்ட இதை நேரடியாப் பேசி விளக்கினா அவர் புரிஞ்சுப்பாரு."

"உங்களுக்கு முதல்வரைப் பத்தித் தெரியும். அவர் ஒத்தர் மேலே வச்சிருக்கற நம்பிக்கை குறையும்படி ஏதாவது நடந்தா திரும்பவும் அவருக்கு நம்பிக்கை ஏற்படுத்தறது கஷ்டம்."

"இன்னிக்கு ராத்திரி நான் முதல்வரை அவர் வீட்டில பார்த்துப் பேசி அவர்கிட்ட எல்லாத்தையும் விளக்கமா சொல்லிப் புரிய வைக்கறேன்!" என்றார் பூபதி நம்பிக்கையுடன்.

"அதுக்கு அவசியம் இல்லேன்னு நினைக்கறேன். முதல்வர் உங்களை அமைச்சரவையிலேந்து நீக்கிட்டாரு. எல்லா டிவி சேனல்லேயும் இப்ப அந்தச் செய்திதான் ஓடிக்கிட்டிருக்கு!" என்ற தலைவர், பூபதி பார்ப்பதற்காகத் தன் அறையிலிருந்த டிவியை ரிமோட் மூலம் இயங்கச் செய்தார்.

குறள் 693:
போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.

பொருள்:
அரசரைச் சார்ந்திருப்பவர் தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால் கடுமையான தவறுகள் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும், அரசருக்கு ஐயம் ஏற்பட்டபின், அரசரைத் தெளிவித்தல் எவர்க்கும் இயலாத செயல்.

694. மூர்த்திக்குப் புரியவில்லை!

"கோவிலுக்குக் குடமுழுக்கு பண்றது நல்ல விஷயம்தானே? இது மாதிரி நல்ல காரியங்களுக்கு உதவறதில எனக்கு சந்தோஷம்தான்!"

காசி கூறியதைக் கேட்டதும் மூர்த்திக்கு மிகுந்த உற்சாகம் ஏற்பட்டது.

 'நாம் செய்யப் போற வேலை எதிர்பார்த்ததை விட சுலபமாகவே முடிந்து விடும் போலிருக்கிறதே!" என்று நினைத்துக் கொண்டான் அவன்.

தன் பக்கத்தில் அமர்ந்திருந்த ராமசாமியைப் பார்த்தான். அவர் முகமும் மலர்ந்திருந்தது. அங்கே அமர்ந்திருந்த கோவில் குடமுழுக்குக் குழுவின் ஒன்பது உறுப்பினர்களுமே காசியின் பேச்சைக் கேட்டு உற்சாகமடைந்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டான் அவன்..

கோவிலுக்குக் குடமுழுக்கு செய்யத் தீர்மானித்து அதற்காக ஒன்பது பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து, குடமுழுக்குக்கான செலவுகளுக்காக ஊரில் அனைவரிடமும் நன்கொடை கேட்டுப் பெறத் தீர்மானித்து, முதலில் ஊர்ப் பெரியவரான காசியைப் பார்க்க வந்தனர். துவக்கத்திலேயே அவர் உதவுவதாகக் கூறியது உற்சாகம் அளிக்காதா என்ன?

சற்று நேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்த பிறகு, மூர்த்தி ராமசாமியைப் பார்த்தான். அவர் தலையசைத்ததும், "ஐயா! அப்ப நாங்க கிளம்பறோம்!" என்றடியே தன் கையிலிருந்த துணிப்பையிலிருந்து ஒரு புதிய நோட்டுப் புத்தகத்தை எடுத்து அதைக் காசியிடம் நீட்டினான்

"கடையில புதுசா நோட்டு வாங்கி, சாமி சந்நிதியில வச்சு எடுத்துக்கிட்டு வந்திருக்கோம். முதல் ஆளா உங்க பேரை எழுதித் தொகையை எழுதிடுங்க. நீங்க எப்ப சொல்றீங்களோ அப்ப வந்து பணத்தை வாங்கிக்கறோம்!" என்றான் மூர்த்தி.

காசி அவன் நீட்டிய நோட்டுப் புத்தகத்தை வாங்கிக் கொள்ளாமலேயே, "இருக்கட்டும். அப்புறம் எழுதிக்கலாம். என் பேரைத்தான் முதல்ல எழுதணும்னு இல்ல. மத்தவங்ககிட்ட வசூலிச்சுக்கங்க. நான் அப்புறம் தரேன்!" என்றார் சற்று இறுக்கத்துடன்.

"இல்லீங்கையா! உங்க பேருதான் முதல்ல வரணும்னு விருப்பபடறோம். பேரை எழுதித் தொகையை மட்டும்..."

கையை ஆட்டி மூர்த்தியை இடைமறித்த காசி, "இருக்கட்டும் தம்பி! இந்த வருஷம் விளைச்சல் எப்படி இருக்குன்னு தெரியல. அதையெல்லாம் பாத்துட்டுதான் முடிவு செய்யணும். நீங்க போயிட்டு அப்புறம் வாங்களேன்!" என்று சொல்லி விட்டு எழுந்து விட்டார்.

மூர்த்தி குழப்பத்துடன் எழுந்து நிற்க அனைவரும் எழுந்து வெளியேறத் தயாராயினர்.

காசியின் வீட்டை விட்டு வெளியே வந்ததும், மூர்த்தி ராமசாமியிடம், "என்னண்ணே! முதல்ல அவ்வளவு உற்சாகமாப் பேசினவரு ஏன் திடீர்னு வேற மாதிரி பேசினாரு?" என்றான்.

ராமசாமி அவனுக்கு பதில் சொல்லாமல் மற்ற உறுப்பினர்களைப் பார்த்து, "நீங்கள்ளாம் வீட்டுக்குப் போயிட்டு சாயந்திரம் மூர்த்தி வீட்டுக்கு வந்துடுங்க. மேற்கொண்டு செய்ய வேண்டியதைப் பத்தி அப்ப பேசலாம்!" என்றார்.

அவர்கள் சென்றதும், ராமசாமி மூர்த்தியிடம், "வா! நடந்துக்கிட்டே பேசலாம்!" என்றார்.

சற்று நேரம் நடந்ததும்,"மூர்த்தி! நீயும் நானும் முன்னால உக்காந்திருந்தோம். மத்த ஏழு பேரும் நமக்குப் பின்னால உக்காந்திருந்தாங்க. பின்னால உக்காந்திருந்தவங்க என்ன செஞ்சாங்கன்னு நீ கவனிக்கல!" என்றார் ராமசாமி.

"சும்மாதானே உக்காந்துக்கிட்டிருந்தாங்க?" என்றான் மூர்த்தி.

"சும்மா உக்காந்துக்கிட்டிருந்திருந்தாங்கன்னா எல்லாம் நல்லபடியாப் போயிருக்கும். காசி ஒரு பெரிய தொகையை எழுதி இருப்பாரு, ஏன் பணத்தைக் கூடக் கொடுத்திருப்பாரு!"

"அப்படீன்னா?"

"கடைசியா உக்காந்திருந்த சுப்புவும் மணியும் தங்களுக்குள்ள ஏதோ ரகசியமாப் பேசிக்கிட்டு சிரிச்சுக்கிட்டிருந்தாங்க. அவங்களுக்கு முன்னால உக்காந்திருந்த குணாவும், கருணாகரனும் அவங்களைத் திரும்பிப் பார்த்தைக் கூட நான் கவனிச்சேன். நான் திரும்பிப் பார்த்து அவங்களை அடக்கலாமான்னு நினைச்சேன். ஆனா அப்படி செஞ்சா அவங்க செய்யறதைக் காசியோட கவனத்துக்குக் கொண்டு வர மாதிரி இருக்கும்னு நினைச்சுப் பேசாம இருந்துட்டேன். காசிகிட்ட மும்முரமாப் பேசிக்கிட்டிருந்ததால நீ இதை கவனிக்கல. ஆனா காசி அதை கவனிச்சுட்டாரு!"

"அப்படியா? நான் கவனிக்கல. ஆனா அது அவ்வளவு பெரிய குத்தமா என்ன?" என்றான் மூர்த்தி.

"மூர்த்தி! பெரியவங்க, அதிகாரத்தில இருக்கறவங்க, பணக்காரங்க, பெரிய மனுஷங்க இவங்ககிட்டல்லாம் பேசறப்ப ரொம்ப கவனமா இருக்கணும். இவங்கள்ளாம் ரொம்ப... இங்கிலீஷ்ல ஒரு வார்த்தை இருக்கே, அது என்ன. ம்..ம்.. ஆங்.. சென்சிடிவ். இவங்கள்ளாம் ரொம்ப சென்சிடிவானவங்க. அவங்க முன்னால மத்தவங்க அமைதியா. அடக்கமா இருக்கணும்னு எதிர்பார்ப்பாங்க. இந்த ரெண்டு பேரும் இப்படி ரகசியம் பேசிச் சிரிச்சதைப் பார்த்ததும் காசிக்கு எரிச்சல் வந்திருக்கும். அதனாலதான் பணம் கொடுக்கத் தயாரா இருந்தவரு மனசை மாத்திக்கிட்டாரு. ரெண்டு மூணு நாள் கழிச்சு நீயும் நானும் அவரைத் தனியாப் போய்ப் பார்த்து சுப்புவும், மணியும் அப்படி நடந்துக்கிட்டதுக்கு அவர்கிட்ட மன்னிப்பு கேட்டுப்போம். அப்ப சமாதானமாயிடுவாருன்னு நினைக்கிறேன். இன்னிக்கு சாயந்திரம் எல்லாரும் உன் வீட்டில கூடறப்ப இப்படியெல்லாம் நடந்துக்கக் கூடாதுன்னு அவங்க ரெண்டு பேருக்கும் புத்தி சொல்லணும்!" என்றார் ராமசாமி.

குறள் 694:
செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து.

பொருள்:
ஆற்றல் வாய்ந்த பெரியவர்கள் முன்னே, மற்றவர்கள் காதுக்குள் பேசுவதையும், அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதையும் தவிர்த்து, அடக்கமெனும் பண்பைக் காத்திடல் வேண்டும்.

695. அமைச்சரின் உதவியாளர்

"என்னோட உதவியாளர் ஒத்தர் ஓய்வு பெறப் போறாரு. அவருக்கு பதிலா இன்னொரு உதவியாளரை நான் நியமிக்கணும். உங்க உதவியாளர்கள் ரெண்டு பேருமே திறமையானவங்கன்னு கேள்விப்பட்டேன். அவங்கள்ள ஒருத்தரை நீங்க எனக்குக் கொடுக்கணும்!"என்றார் முதலமைச்சர் செல்வன் சிரித்தபடி.

அமைச்சர் அன்புமொழி, "இந்தத் தலைமைச் செயலகத்திலேயே எவ்வளவோ திறமையான ஊழியர்கள் இருக்காங்களே செல்வன்! ஏன் என்னோட உதவியாளர்கள்ள ஒருத்தர் வேணும்னு கேக்கறீங்க?" என்றார்.

செல்வனும், அன்புமொழியும் இளம் வயதிலிருந்தே கட்சியில் இணைந்து பணியாற்றியவர்கள் என்பதால் அவர்களுக்குள் நெருக்கமும் இணக்கமும் உண்டு. 

செல்வனின் தலைமைப் பண்பைச் சிறு வயதிலிருந்தே பார்த்து வந்த அன்புமொழி அவரைத் தன் தலைவராக ஏற்றுக் கொண்டு விட்டார். செல்வனும் அன்புமொழியிடம் நட்புடன் இருந்ததுடன் கட்சியிலும், அமைச்சரவையிலும் அவருக்கு உரிய மரியாதையைக் கொடுத்து வந்தார்.

"உங்களோட உதவியாளர்கள் ரெண்டு பேரும்தான் இருக்கறதிலேயே சிறந்தவங்கன்னு எல்லா அதிகாரிகளும் சொல்றாங்க. உங்களோட பயிற்சிதான் அதுக்குக் காரணம்னும் சொல்றாங்க!"

"அப்படி இருக்கும்போது எங்கிட்டேந்து ஒத்தரை எடுத்துக்கிறீங்களே, இது நியாயமா?" என்றார் அன்புமொழி சிரித்தபடி.

"அதனால என்ன? வேற ஒத்தரை உதவியாளரா எடுத்துக்கிட்டு சில மாசங்களிலேயே அவரைச் சிறந்தவரா ஆக்கிடுவீங்களே நீங்க!"

"சரி. அப்படீன்னா, முருகனை எடுத்துக்கங்க!" என்றார் அன்புமொழி.

"உங்க உதவியாளர்கள் முருகன், பாபு ரெண்டு பேரில பாபுதான் அதிகத் திறமையானவர்னு கேள்விப்பட்டேன். அதிகத் திறமையானவரை நீங்க வச்சுக்க நினைக்கிறது நியாயம்தான். நான் முருகனையே எடுத்துக்கறேன்!" என்றார் செல்வன்.

"இல்லை செல்வன். பாபு அதிகத் திறமையானவர்தான். ஆனா முதலமைச்சரா இருக்கற உங்களுக்கு உதவியாளரா இருக்க பாபுவை விட முருகன்தான் அதிகப் பொருத்தமானவர்!" என்றார் அருள்மொழி.

"எதனால அப்படிச் சொல்றீங்க?"

"இப்ப நான் என் அறைக்குப் போய் உங்களுக்கு ஃபோன் செஞ்சுட்டு இணைப்பைத் துண்டிக்காம இருக்கேன். என் அறையில நடக்கற பேச்சுக்களை நீங்க ஃபோன்ல கேளுங்க. நான் அப்புறம் திரும்ப வந்து உங்ககிட்ட பேசறேன்" என்று சொல்லி எழுந்து சென்றார் அன்புமொழி.

சில நிமிடங்களுக்குப் பிறகு முதலமைச்சரின் அறைக்குத் திரும்பி வந்த அன்புமொழி, "என்ன செல்வன், இப்ப புரிஞ்சுதா, முருகன்தான் உங்களுக்குப் பொருத்தமானவரா இருப்பார்னு நான் ஏன் சொன்னேன்னு?" என்றார் சிரித்தபடி.

"புரிஞ்சுது அன்புமொழி! உங்க அறைக்குப் போனதும் நீங்க முதல்ல முருகனைக் கூப்பிட்டீங்க. நீங்க என்னைப் பாத்துட்டு வந்தது அவருக்குத் தெரியும். ஆனா அவர் உங்ககிட்ட எதுவும் கேக்கல. நீங்க சொன்ன வேலையை மட்டும் கேட்டுக்கிட்டு வெளியில போயிட்டாரு. அப்புறம் பாபுவைக் கூப்பிட்டீங்க. அவரு உள்ளே வந்ததுமே, 'முதல்வர் அறைக்குப் போனீங்களே சார், ஏதாவது முக்கியமான விஷயமா?'ன்னு கேட்டாரு. நீங்க ஒண்ணும் இல்லேன்னு சொல்லீட்டீங்க. அப்புறம் கூட, அறையை விட்டுப் போறப்ப, 'முதல்வர் ஏதாவது தகவல் சொன்னாரா' சார்?ன்னு கேட்டாரு. விஷயங்களைத் தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வம் உள்ளவரா இருப்பார் போல இருக்கு. அதனாலதான் அவரை நீங்க பரிந்துரைக்கலேன்னு நினைக்கறேன், சரியா?" என்றார் முதலமைச்சர்."

ஆம் என்று தலையாட்டிய அன்புமொழி, "நான் யாருகிட்டயாவது தனியாப் பேசினா நன் என்ன பேசினேன்னு தெரிஞ்சுக்க பாபு எப்பவுமே ஆர்வமா இருப்பாரு, பல சமயம் தன்னோட ஆவலை அடக்க முடியாம எங்கிட்டயே கேப்பாரு! ஆனா முருகன் அப்படி இல்லை. நானாகச் சொன்னால் ஒழிய எதையும் கேட்டுத் தெரிஞ்சுக்க முயல மாட்டாரு. நீங்க ஒரு முக்கியப் பொறுப்பில இருக்கறதால உங்க உதவியாளருக்கு இருக்க வேண்டிய குணம் முருகன்கிட்ட இருக்குன்னு நினைக்கிறேன்!" என்றார்.

"நீங்க நல்லா யோசிச்சுதான் சொல்லி இருக்கீங்க. பாபு மாதிரி இருக்கறவங்க ஆர்வம் மிகுதியால ஒட்டுக் கேட்கறதைக் கூடச் செய்யலாம் இல்ல?"

"வாய்ப்பு இருக்கு. ஆனா இதுவரையில அப்படி செஞ்சதில்லைன்னு நினைக்கிறேன். நீங்க சொன்னதால இனிமே நான் இன்னும் அதிக எச்சரிக்கையா இருக்கணும்!உங்களுக்கென்ன, அதிர்ஷ்டக்காரர்! ஒரு நல்ல உதவியாளர் கிடைக்கப் போறாரு!" என்றார் அன்புமொழி சிரித்துக் கொண்டே.

குறள் 695:
எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.

பொருள்:
ஆட்சியாளர் பிறருடன் ரகசியம் பேசம்போது அதை ஒட்டுக் கேட்கவும் கூடாது; அது என்னவென்று வினவவும் கூடாது. அவர்களே அதுபற்றிச் சொன்னால் மட்டுமே கேட்டுக் கொள்ள வேண்டும்.

696. அரசரின் சம்மதம்

"நாட்டில் கடும் பஞ்சம் நிலவுகிறது. மக்கள் உணவில்லாமல் தவிக்கிறார்கள். இதைத் தாங்கள் அரசரிடம் எடுத்துக் கூறிப் பசியால் வாடும் மக்களுக்கு உதவி கிடைக்கச் செய்ய வேண்டும்!" என்றார் தனாதிகாரி.

"அதைத்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அரசாங்கத்தின் உணவு தானியக் கிடங்குகளிலிருந்து உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். ஆனால் மக்களுக்கு இலவசமாக எதையும் வழங்குவது அரசருக்குப் பிடிக்காது. மன்னரிடம் எப்படிச் சொல்லிப் புரிய வைப்பதென்றே தெரியவில்லை!" என்றார் அமைச்சர்.

"மழை பெய்தால்தான் நிலைமை மேம்படும். மழை வருவதற்கான அறிகுறிகளே தென்படவில்லையே!" என்றார் தனாதிகாரி கவலையுடன்.

அமைச்சரின் முகம் சட்டென்று மலர்ந்தது. "எனக்கு ஒரு யோசனை பிறந்திருக்கிறது!" என்றார் அவர்.

"நாட்டின் பல பகுதிகளிலும் அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்து விட்டீர்கள். மழை வரும் வரை அன்னதானம் தொடரும் என்றும் மன்னர் அறிவித்து விட்டார். இதை எப்படிச் சாதித்தீர்கள் அமைச்சரே?" என்றார் தனாதிகாரி வியப்புடன்.

"நம் அரசருக்கு தர்மசிந்தனை கிடையாது. நீங்கள் என் நம்பிக்கைக்குரியவர் என்பதால் உங்களிடம் நான் இதை வெளிப்படையாகச் சொல்கிறேன். ஆனால் அரசருக்கு ஆன்மீகம், சோதிடம் போன்றவற்றில் நம்பிக்கை உண்டு. நாட்டில் ஒரு பீடை நிலவுவதாகவும், தொடர்ந்து அன்னதானம் செய்தால்தான் அந்தப் பீடை நீங்கி நாட்டில் மழை பொழிந்து சுபீட்சம் ஏற்பட்டு அரசாங்கப் பெட்டகத்தில் பணம் வந்து நிறையும் என்றும் ஒரு புகழ் பெற்ற சோதிடரைக் கொண்டு அரசரிடம் சொல்ல வைத்தேன்" என்றார் அமைச்சர்.

"சோதிடர் எப்படி இதற்கு ஒப்புக் கொண்டார்?""

"நாட்டுக்கு நன்மை பயக்கும் என்பதால் சோதிடர் இதற்கு ஒப்புக் கொண்டார். அதுவும் அவர் சொன்னது பொய் இல்லையே! பசியால் வாடும் மக்களுக்கு உணவளித்தாலே அது பீடை நீங்குவதுதானே! அரசர் இதற்கு உடனே ஏற்பாடு செய்து விட்டார். 

"அரசாங்கம் மட்டும் அன்னதானத்துக்குப் பணம், தானியங்கள் கொடுத்து உதவினால் போதாது, வசதி படைத்தவர்கள், வியாபாரிகள், பெருந்தனக்காரர்கள் ஆகியோரும் இதற்குப் பணம் கொடுத்து உதவினால்தான் அன்னதானத்தைத் தொடர்ச்சியாகவும், பெரிய அளவிலும் நடத்த முடியும் என்று நான் அரசரிடம் கூறினேன். அவர் அதை ஏற்றுக் கொண்டு பொருள் படைத்தவர்கள் அனைவரும் இந்த அன்னதானத்துக்கு உதவ வேண்டும் என்று அறிவிப்புச் செய்து விட்டார்.

"அதனால் ஓரளவுக்கு வசதி உள்ளவர்கள் கூட அன்னதானத்துக்குப் பணம், பொருட்கள், தானியங்கள் கொடுத்து உதவுகிறார்கள். நிலைமை சரியாகும் வரை பசியால் வாடும் ஏழைகளுக்கு ஒருவேளை உணவாவது வழங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்து விட்டோம் என்ற திருப்தி எனக்கு இருக்கிறது. 

"நீங்கள் அன்று மழை வருவதற்கான அறிகுறிகளே தென்படவில்லையே என்று கூறியதைக் கேட்டதும்தான் எனக்கு இந்த யோசனை தோன்றியது. அதானால் உங்களுக்குத்தான் நான் நன்றி கூற வேண்டும்!

தானாதிகாரியைக் கனிவுடன் பார்த்துச் சிரித்தார் அமைச்சர்.

குறள் 696:
குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.

பொருள்:
ஆட்சியாளருக்கு எதையேனும் சொல்ல விரும்பினால், ஆட்சியாளரின் அப்போதைய மனநிலையை அறிந்து தான் சொல்லக் கருதிய செய்திக்கு ஏற்ற சமயத்தையும் எண்ணி ஆட்சியாளருக்கு வெறுப்புத் தராததும், வேண்டியதும் ஆகிய காரியத்தை அவர் விரும்புமாறு சொல்ல வேண்டும்.

697. அமுதவல்லி

"நல்லது அமைச்சரே! நாட்டில் குற்றம் செய்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கி, அதன் மூலம் நாட்டில் குற்றச் செயல்கள் குறைக்கப்பட்டுள்ளன என்று நீங்களும் காவல் தலைவரும் கூறியதைக் கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள முக்கியக் குற்றவாளிகள் பற்றிய நிகழ்வுகள் ஏதேனும் உண்டா?" என்றார் அரசர் பத்மபத்ரன்

"அப்படி எதுவும் இல்லை அரசே! தங்கள் ஆணைப்படி சிறையில் உள்ள அனைவருக்கும் நல்ல உணவு அளிக்கப்பட்டு, மருத்துவர்களைக் கொண்டு அவர்கள் உடல்நலம் பேணப்படுகிறது. ஒரு சிலர் வயதானதாலோ, நோய்வாய்ப்பட்டோ இறந்தால் அவர்கள் உறவினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு இறந்தவர்களுக்கான இறுதிச் சடங்குகள் சிறப்பாகச் செய்யப்படுகின்றன. தங்கள் ஆட்சியில் எல்லாமே சிறப்பாகத்தான் நடக்கின்றன, அரசே!" என்றார் அமைச்சர்.

அரசர் சற்று நேரம் மௌனமாக இருந்து விட்டு, "வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் யாரேனும் இருக்கிறார்களா?" என்றார்.

"அரசே! வீட்டுச் சிறையில் யாரையும் வைக்கும் நடைமுறை நம் நாட்டில் இல்லை. தங்கள் தந்தைர் காலத்திலிருந்தே இந்த நிலைதானே இருந்து வருகிறது?" என்றார் அமைச்சர்.

ரசரைப் பார்த்து விட்டு வெளியே வந்ததும், "அமைச்சரே! அரசர் வீட்டுச் சிறையில் இருப்பவர்கள் பற்றிக் கேட்டதற்கு இல்லை என்று சொல்லி விட்டீர்களே!" என்றார் காவல் தலைவர், அமைச்சரிடம்.

"ஆமாம். ஏன் நீங்கள் யாரையாவது வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறீர்களா என்ன?" என்றார் அமைச்சர் வியப்புடன்.

"அமைச்சரே! அமுதவல்லி..."

"காவல் தலைவரே! அமுதவல்லியை நாம் வீட்டுச் சிறையில் வைக்கவில்லை. பத்ம்பத்ரரின் தந்தை துங்கபத்ரர் அரசராக இருந்தபோது அவர் விருப்பப்படி அமுதவல்லி தன் வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருந்து கொண்டு தன் வாழ்க்கையை நடத்துவதற்கான வசதிகளைச் செய்து கொடுத்திருக்கிறோம். அவ்வளவுதான்!" என்றார் அமைச்சர்.

"அமைச்சரே! அமுதவல்லி துங்கபத்ரரின் காதலி..."

"காவல் தலைவரே! தன் ரகசியக் காதல் தன் மகனுக்கோ மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கோ தெரியக் கூடாது என்பதற்காகத்தான் துங்கபத்ரர் இப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்தார். அமுதவல்லியை யாரும் சந்திக்காமல் இருக்கவும், அமுதவல்லியே யாரிடமும் இது பற்றிப் பேசாமல் இருக்கவும்தான் இந்த ஏற்பாடு. உங்கள் வீட்டிலும், என் வீட்டிலும் பாதுகாப்புக்காகக் காவலர்கள் இருப்பதைப் போல்தான் அமுதவல்லியின் வீட்டிலும் இருக்கிறார்கள். அமுதவல்லியின் ஆயுட்காலம் வரை இது தொடர வேண்டும் என்பதும், நம் இருவரைத் தவிர வேறு யாருக்கும் இது பற்றித் தெரியக் கூடாது என்பதும் துங்கபத்ரரின் விருப்பம்! இது உங்களுக்கு நினைவிருக்கிறது அல்லவா?" என்றார் அமைச்சர்.

"ஆனால் அரசர் இது பற்றிக் கேட்டதைப் பார்த்தால் அவருக்கு இது பற்றித் தெரிந்திருக்கும் போல் இருக்கிறதே!"

"அரசர் தெரிந்து கேட்டாரோ, ஊகத்தில் கேட்டாரோ எனக்குத் தெரியாது. ஆனால் நம் அரசரைப் பொருத்தவரை இது அவருக்குத் தேவையற்ற விஷயம், எந்த விதத்திலும் பயனற்ற விஷயமும் கூட அதனால்தான் அவர் குறிப்பிட்டுக் கேட்ட பிறகும் நான் அப்படிச் சொன்னேன். நான் சொன்னது உண்மைதானே! நாம் யாரையும் வீட்டுச் சிறையில் வைக்கவில்லையே! சிலருடைய வீடுகளுக்குப் பாதுகாப்பு அளித்திருக்கிறோம், அவ்வளவுதானே!" என்றார் அமைச்சர் சிரித்தபடி.

குறள் 697:
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.

பொருள்:
அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்ட போதிலும் சொல்லாமல் விட வேண்டும்.

698. கதிரவனுக்குப் புரியவில்லை!

"என்ன தலைவரே இது? கரிகாலன் என்னை திடீர்னு அமைச்சர் பதவியிலேந்து நீக்கி இருக்கான். நான் எந்தத் தப்பும் செய்யலியே!" என்றார் கதிரவன், கட்சித் தலைவர் நலங்கிள்ளியிடம்.

"அமைச்சர்களை நீக்கறது முதலமைச்சரோட உரிமை!" என்றார் நலங்கிள்ளி.

"அது சரிதான். ஆனா நான் ஒரு சீனியர் அமைச்சர். கட்சியிலேயும் அவனை விட சீனியர். வயசிலேயும் பெரியவன். அந்த மரியாதைக்காகவாவது என்ன பிரச்னைன்னு எங்கிட்ட கேட்டிருக்கணும் இல்ல?"

"நீங்க சீனியரா இருக்கறதுதான் பிரச்னை!" என்றார் நலங்கிள்ளி.

"என்ன சொல்றீங்க?"

இதற்கு பதில் சொல்ல நலங்கிள்ளி யத்தனித்தபோது, அவருடைய கைபேசி ஒலித்தது.

"முதல்வர்தான் கூப்பிடறாரு!" என்ற நலங்கிள்ளி, தொலைபேசியில், "சொல்லுங்க தம்பி!" என்றார்.

மறுமுனையியில் முதல்வர் ஏதோ சொல்ல, "சரி. அப்படியே செஞ்சுடலாம். எங்கிட்ட விட்டுடுங்க. நான் பாத்துக்கறேன்!" என்று கூறி உரையாடலை முடித்தார்.

"நான் கரிகாலன்கிட்ட பேசினதை கவனிச்சீங்களா?" என்றார் நலங்கிள்ளி கதிரவனிடம்.

"நீங்க எதைப் பத்திப் பேசினீங்கன்னு எனக்குத் தெரியலியே!"

"நான் அதைக் கேக்கல. நான் முதல்வர்கிட்ட எப்படிப் பேசினேன்னு கவனிச்சீங்களா? அவர் முதல்வர் ஆறதுக்கு முன்னால அவர்கிட்ட நான் எப்படிப் பேசுவேன்னு கவனிச்சிருப்பீங்களே! அவரைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு, வா, போன்னுதான் பேசுவேன். ஏன், ஆரம்ப காலத்தில அவரை வாடா போடான்னு கூடப் பேசி இருக்கேன். ஆனா இப்ப அவர் முதல்வர் ஆயிட்டாரு. அவர் பதவிக்கான மரியாதையைக் கொடுத்துத்தானே அவர்கிட்ட பேசணும்!"

"அப்படின்னா..?" என்றார் கதிரவன் புரிந்தது போல்.

"நீங்க மூத்த தலைவர்தான். ஆனா கரிகாலன் முதல்வர் ஆனப்பறம், அவரோட அமைச்சரவையில ஒரு அமைச்சரா இருந்துக்கிட்டு நீங்க அவரை வா, போன்னு பேசி இருக்கீங்க, மத்தவங்க முன்னால கூட! மத்தவங்ககிட்ட முதல்வரைப் பத்திப் பேசறப்ப அவன், இவன்னு பேசி இருக்கீங்க. ஏன், இப்ப எங்கிட்டபேசறப்ப கூட அப்படித்தானே பேசினீங்க? பதவியில இருக்கறவங்ககிட்ட உரிமையோடயோ, நெருக்கத்தோடயோ பேசினா அதை அவங்க விரும்ப மாட்டாங்க. நீங்க அப்படிப் பேசினது பிடிக்காமதான் முதல்வர் உங்களைத் தூக்கிட்டாரு. கொஞ்ச நாள் கழிச்சு மறுபடி ஒரு வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கலாம். அப்பவாவது பார்த்து நடந்துக்கங்க!" என்றார் நலங்கிள்ளி.

குறள் 698:
இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்.

பொருள்:
ஆட்சியாளருடன் பழகும்போது இவர் என்னைக் காட்டிலும் வயதில் சிறியவர், இவர் உறவால் எனக்கு இன்ன முறை வேண்டும் என்று எண்ணாமல், ஆட்சியாளர் இருக்கும் பதவியை எண்ணி அவருடன் பழக வேண்டும்.

699. நம் ஊர்ப் பையன்!

"அப்ரூவல் விஷயமா அமைச்சரைப் பாக்கப் போனேனா, பாத்தா அங்கே நம்ம மாணிக்கம்தான் அமைச்சரோட தனிச் செயலரா இருக்கான்!" என்றார் முருகப்பன்.

"எந்த மாணிக்கம்?" என்றார் அவர் அண்ணன் கணேசன்.

"நம்ம ஊர்ப் பையன்தான். கதிரேசனோட பையன்!"

"ஓ, அவனா? ஐ ஏ எஸ் படிச்சுட்டு அரசு அதிகாரியா இருக்கான்னு சொன்னாங்களே, அவனா? என்ன சொன்னான்?"

"ஃபைலைப் பாத்துட்டு அமைச்சர்கிட்ட பேசறேன்னு சொல்லி இருக்கான். நான் விசாரிச்சதில அவன் அமைச்சருக்கு ரொம்ப நெருக்கமானவனாம். அமைச்சரே முதல்வர்கிட்ட கேட்டு அவனைத் தன்னோட தனிச் செயலரா நியமிக்க வச்சிருக்காராம்!" என்றார் முருகப்பன் உற்சாகத்துடன்.

"அவ்வளவு நெருக்கமானவனா? அப்ப நம்ம வேலை சுலபமா முடிஞ்சுடும்னு சொல்லு!" என்று தம்பியின் உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டார் கணேசன்

"என்னப்பா இப்படிச் சொல்ற?" என்றார் முருகப்பன் அதிர்ச்சியுடன்.

"ஆமாங்க. உங்க அப்ளிகேஷனைப் பார்த்தேன். விதிமுறைப்படி அதுக்கு நாங்க அங்கீகாரம் கொடுக்க முடியாதே!" என்றார் அமைச்சரின் தனிச் செயலர் மாணிக்கம்.

"அதான் கீழேந்து எல்லா நிலைகளிலேயும் ரெகமெண்ட் பண்ணி இருக்காங்களே!" என்ற முருகப்பன், "இதுக்கெல்லாம் நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்போம்னு உன்னால புரிஞ்சுக்க முடியுமே!" என்றார் சற்றுத் தாழ்ந்த குரலில், கண்ணைச் சிமிட்டியபடி.

"விதிமுறைகளுக்கு உட்படாத எதையும் அமைச்சர் அங்கீகரிஃக மாட்டார்!" என்றார் மாணிக்கம் சுருக்கமாக.

"என்னப்பா இது? நீ அமைச்சருக்கு நெருக்கமானவன், நீ சொன்னா அமைச்சர் மறுக்க மாட்டார்னு கேள்விப்பட்டிருக்கேன். நீ நம்ம ஊர்க்காரன். எங்களுக்கு உதவி செய்யக் கூடாதா?"

"ஐயா! அமைச்சர் என் மேல நம்பிக்கை வச்சுத்தான் என்னைத் தனிச் செயலரா வச்சுக்கிட்டிருக்காரு. அவர் எல்லாம் விதிமுறைகள்படி நடக்கணும்னு நினைக்கிறவரு. அவரோட விருப்பத்துக்கு மாறான எதையும் நான் செய்ய மாட்டேன். என்னை மன்னிச்சுடுங்க!" என்றார் மாணிக்கம்.

குறள் 699:
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.

பொருள்:
சலனம் அற்ற அறிவை உடையவர்கள், தாம் ஆட்சியாளரால் நெருக்கமானவர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் என்று எண்ணி, ஆட்சியாளர் விரும்பாதவற்றைச் செய்ய மாட்டார்.

700. இது எப்படி நடந்தது?

நிறுவனத்தின் உரிமையாளர் வேதமுத்துவின் அழைப்பின் பேரில் அவர் அறைக்கு நிறுவன மேலாளர் சுந்தரம் சென்றபோது, வேதமுத்து மிகவும் கோபமாக இருந்தார்.

சுந்தரம் எப்போது தன் அறைக்கு வந்தாலும் முதலில் அவரை உட்காரச் சொல்லும் பழக்கம் உள்ள வேதமுத்து அன்று தான் இருந்த கோபமான மனநிலையில் சுந்தரத்தை உட்காரக் கூடச் சொல்லாமல் அவர் உள்ளே நுழைந்ததுமே கோபமாகப் பேச ஆரம்பித்தார்.

"என்ன சுந்தரம், உங்களை நம்பித்தானே நான் கம்பெனியை ஒப்படைச்சிருக்கேன்! நீங்களே இப்படிச் செய்யலாமா?"

"எதை சார் சொல்றீங்க?" என்றார் சுந்தரம் பதட்டத்துடன்.

"ராம் என்டர்ப்ரைசஸ் பணம் கொடுக்க ரொம்ப லேட் பண்றாங்க, அதோட நாம அனுப்பின பொருளோட தரம் சரியில்லேன்னு பில் தொகையிலேந்து அவங்க இஷ்டத்துக்குக் குறைச்சுக்கிறாங்க. அதனல அவங்களுக்கு இனிமே சப்ளை பண்ண வேண்டாம்னு சொன்னேன். ஆனா மறுபடி அவங்களுக்கு சப்ளை பண்ணி இருக்கீங்களே!"

"சார்! அவங்க கேட்டப்ப நான் சப்ளை பண்ண முடியாதுன்னு சொல்லிட்டேன். ஆனா, நேத்திக்கு நான் லீவ்ல இருந்தப்ப சப்ளை ஆகி இருக்கு. நீங்கதான் சப்ளை பண்ணச் சொல்லி இருப்பீங்கன்னு நினைச்சேன். நீங்க ஆஃபீசுக்கு வந்த்ததும் உங்ககிட்ட இது பத்திக் கேக்கணும்னு நினைச்சேன், அதுக்குள்ள நீங்களே என்னைக் கூப்பிட்டுட்டீங்க!" என்றார் சுந்தரம்.

ஒரு கணம் யோசித்த வேதமுத்து பியூனை அழைத்து, "குமாரை வரச் சொல்லு!" என்றார்.

உள்ளே வந்த குமார் வேதமுத்துவுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்து, "என்ன பெரியப்பா, எதுக்குக் கூப்பிட்டீங்க?" என்றான்.

"முதல்ல எழுந்திரு. மானேஜர் நின்னுக்கிட்டிருக்காரு. நீ பாட்டுக்கு வந்து உக்காந்துட்ட?" என்று குமாரைக் கடிந்து கொண்ட வேதமுத்து, சுந்தரத்தைப் பார்த்து, "சுந்தரம், நீங்க உக்காருங்க. எனக்கு இருந்த பதட்டத்தில உங்களை உக்காரச் சொல்லவே மறந்துட்டேன். ஐ ஆம் சாரி!" என்றார்.

"பரவாயில்லை சார்!" என்றபடியே சுந்தரம் அமர்ந்து கொள்ள, குமார் அதிர்ச்சியுடன் எழுந்து நின்று, "என்ன பெரியப்பா இது?" என்றான்.

"முதல்ல, என்னைப் பெரியப்பான்னு கூப்பிடறதை நிறுத்து. இது ஆஃபீஸ். நீ இங்கே வேலை செய்யற. சுந்தரம் உனக்கு மேலதிகாரி. மற்ற ஊழியர்கள் உன்னோட சக ஊழியர்கள். ஆனா நீ என்னோட சொந்தக்காரன்கற உரிமையில இங்கே எல்லாரையும் அதிகாரம் பண்றேன்னு கேள்விப்பட்டேன். உங்கிட்ட சொல்லி உன்னைக் கண்டிக்கணும்னு நினைச்சேன். அதுக்குள்ள நீ இன்னொரு பெரிய தப்பு பண்ணி இருக்க!" என்றார் வேதமுத்து கோபம் குறையாமல்.

"இல்லை பெரியப்பா...இல்லை, சார்...நான்..."

"ராம் என்டர்பிரைசஸுக்கு சப்ளை பண்ணக் கூடாதுன்னு மானேஜர் சொல்லி இருக்காரு. அவர் அப்படிச் சொன்னதே என்னோட முடிவுப்படிதான். நேத்திக்கு அவர் லீவ்ல இருந்தப்ப அவங்களுக்கு டெலிவரி போயிருக்கு. டெலிவரி கொடுக்கச் சொன்னது நீதானே?"

"அவங்க ஃபோன்ல கெஞ்சிக் கேட்டாங்க. அதான் சரின்னு சொன்னேன்!"

"அப்படிச் சொல்ல உனக்கு யாருக்கு அதிகாரம் கொடுத்தது? சரி, அவங்களுக்கு சப்ளை பண்ண வேண்டாம்னு மானேஜர் சொல்லி இருக்கார்னு மற்ற ஊழியர்கள் உங்கிட்ட சொல்லி இருப்பாங்களே!"

குமார் மௌனமாகத் தலையாட்டினான்.

"மானேஜர் சப்ளை பண்ணக் கூடாதுன்னு தெரிஞ்சும், நீ அவர் சொன்னதுக்கு எதிரா முடிவு எடுத்திருக்க. நீ என் சொந்தக்காரன்னு தெரிஞ்சதால மற்ற ஊழியர்கள் நீ சொன்னதை மறுக்க முடியாம சப்ளை பண்ணி இருக்காங்க!... நீ இங்கே தொடர்ந்து வேலை செய்யணும்னா மற்ற ஊழியர்கள் மாதிரி உன்னோட பொறுப்பு, லிமிட் எல்லாத்தையும் தெரிஞ்சு நடந்துக்க. இல்லேன்னா நீ வேற வேலை பாத்துக்கலாம்!" என்றார் வேதமுத்து.

"என்னை மன்னிச்சுடுங்க சார்! இனிமே நான் இப்படி நடந்துக்க மாட்டேன்!" என்றான் குமார், தாழ்ந்த குரலில். 

குறள் 700:
பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.

பொருள்:
ஆட்சியாளருடன் நமக்கு நீண்ட நாள் பழக்கம் உண்டு என்று எண்ணித் தீய செயல்களைச் செய்யும் மன உரிமை ஒருவருக்குக் கெடுதியையே தரும்.

அதிகாரம் 71 - குறிப்பறிதல்
அதிகாரம் 69 - தூது

                                                                                                                                          அறத்துப்பால்                                               காமத்துப்பால்   

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...