அதிகாரம் 73 - அவையஞ்சாமை

திருக்குறள்
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 73
அவையஞ்சாமை

 721. தேதியை மாற்றியது ஏன்?

ஒரு பொது நிகழ்ச்சியில் ராம்குமார் செல்வரத்தினத்தைச் சந்தித்தான்.

செல்வரத்தினம் 'அசோசியேஷன் ஆஃப் ஃபினான்ஷியல் புரொஃபஷனல்ஸ்' என்ற பெயர் கொண்ட நிதித்துறை வல்லுனர்களுக்கான ஒரு கூட்டமைப்பின் செயலர்.

ஒரு பெரிய நிறுவனத்தின் நிதித்துறையில் ஒரு மூத்த அதிகாரியாக இருந்த ராம்குமார் நிதித்துறை சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை சில பொருளாதாரப் பத்திரிகைகளில் எழுதி இருக்கிறான் என்பதை அறிந்ததும் செல்வரத்தினம், "அப்படீன்னா, எங்க அசோசியேஷன்ல நீங்க வந்து ஏதாவது ஒரு தலைப்பில பேசலாமே!" என்றார்.

"உங்க அசோசியேஷன் உறுப்பினர்கள் எல்லாரும் இந்தத் துறையில நிறைய அனுபவம் உள்ளவங்களா இருப்பாங்க. அவங்ககிட்ட நான் எதைப் பத்திப் பேச முடியும்?" என்றான் ராம்குமார்.

"உங்களுக்கு பிராக்டிகல் நாலட்ஜ் இருக்கு. அகாடமிக்காகவும் ஆய்வுக் கட்டுரைகள் எல்லாம் எழுதி இருக்கீங்க. நிச்சயமா உங்களால பல பயனுள்ள விஷயங்களைப் பகிர்ந்துக்க முடியும்!" என்று செல்வரத்தினம் உறுதியாகக் கூறியதும், ராம்குமார் தயக்கத்துடன் ஒப்புக் கொண்டான்.

"அடுத்த வாரத்தில ஒரு தேதியை நிர்ணயிச்சு ரெண்டு நாள்ள உங்களுக்கு ஃபோன் பண்றேன். தயாரா இருங்க!" என்றார் செல்வரத்தினம்.

"என்ன தலைப்பில பேசணும்?"

ஒரு நிமிஷம் யோசித்த செல்வரத்தினம், "இப்ப நிதி நிறுவனங்கள் தொடர்பா நிறைய மாறுதல்கள் செஞ்சு புதுசா ஒரு சட்டம் கொண்டு வந்திருக்காங்களே அதைப் பத்திப் பேசுங்களேன்."

"சரி" என்று தலையாட்டிய ராம்குமார், "உங்க உறுப்பினர்கள் பற்றி ஒரு புரொஃபைலை எனக்கு அனுப்ப முடியுமா? அவங்க பின்னணி பத்தித் தெரிஞ்சா அதுக்கு ஏத்தாப்பல என் பேச்சைத் தயார் செஞ்சுப்பேன்" என்றான்.

"வேற ஒரு நோக்கத்துக்காக அப்படிப்பட்ட ஒரு புரொஃபைல் தயார் பண்ணினேன். அதை உங்களுக்கு மின்னஞ்சல்ல அனுப்பிடறேன்" என்றார் செல்வரத்தினம்.

ரண்டு நாட்களுக்குப் பிறகு செல்வரத்தினம் ராம்குமரைத் தொலைபேசியில் அழைத்து, அவன் பேச வேண்டிய தேதியைத் தெரிவித்தார்.

"சார், தேதியை ஒரு வாரம் தள்ளிப்போட முடியுமா?" என்றான் ராம்குமார்.

"ஏன்?"

"என் ஆஃபீஸ்ல ஒரு முக்கியமான வேலை வந்துடுச்சு. அடுத்த வாரம் முழுக்க எனக்கு நிறைய வேலை இருக்கும்."

"சரி. நான் இன்னும் கூட்டத்தோட தேதியை உறுப்பினர்களுக்கு அறிவிக்கல. 14-ஆம் தேதிக்கு பதிலா 21-ஆம் தேதி வச்சுக்கலாமா?" என்றார் செல்வரத்தினம்.

"சரி சார்!" என்றான் ராம்குமார்.

"ராம்குமார்! உங்க பேச்சு ரொம்பப் பிரமாதமா அமைஞ்சு போச்சு. எல்லாரும் ரொம்பப் பாராட்டினாங்க" என்றார் செல்வரத்தினம் தொலைபேசியில்.

"நன்றி சார். நான் பேசி முடிச்சப்புறம் அரங்கத்திலேயே பல பேர் எங்கிட்ட வந்து தங்களோட பாராட்டுகளைத் தெரிவிச்சங்க. இந்த வாய்ப்புக்கு நான் உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்."

"ஆமாம். ஏன் தேதியை ஒரு வாரம் தள்ளிப் போடச் சொன்னீங்க?" என்றார் செல்வரத்தினம் திடீரென்று.

"அதான் சொன்னேனே சார்..."

"ஆஃபீஸ்ல திடீர்னு வேலை வந்துடுச்சுன்னு சொன்னீங்க. அது காரணமா இருக்காதுன்னு நான் னைக்கிறேன். போன வாரம் தற்செயலா உங்க ஆஃபீஸ் பக்கம் போனப்ப உங்களைப் பாக்கலாம்னு உங்க ஆஃபீசுக்குப் போனேன். நீங்க லீவுன்னு சொன்னாங்க. ஆஃபீஸ்ல முக்கியமான வேலை இருக்கச்சே எப்படி லீவு போட முடியும்? சொல்லுங்க!"

"நீங்க அனுப்பின உங்க அசோசியேஷன் உறுப்பினர்களோட புரொஃபைலைப் பார்த்தேன். உங்க உறுப்பினர்கள்ள சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ், காஸ்ட் அக்கவுன்டன்ட்ஸ் எல்லாம் இருக்காங்க. அவங்கள்ள பல பேருக்கு நிதி நிறுவனங்கள் பற்றின சட்டத்தில அறிவிக்கப்பட்டிருக்கிற மாறுதல்கள் பற்றி நல்லாவே தெரிஞ்சிருக்கும். அதனால நான் அந்த சட்டத்தைப் பத்தி சொல்ற விஷயங்கள்ள ஒரு சின்ன தப்பு இருந்தா கூட அவங்க கண்டுபிடிச்சுடுவாங்க. அதனாலதான் ஒரு சின்னப் பிழை கூட இல்லாம பேசணும், அதுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்துக்கிட்டு என் பேச்சைத் தயாரிக்கணும்னு நினைச்சேன்!" என்றான் ராம்குமார், சற்று சங்கடத்துடன்.

"ஏதோ நமக்குத் தெரிஞ்ச அளவில பேசிட்டுப் போகலாம்னு நினைக்காம, ஒரு சின்ன தப்பு கூட வரக் கூடாதுங்கறதுக்காக நேரம் எடுத்துக்கிட்டு விரிவா உங்க பேச்சை தயார் பண்ணி இருக்கீங்க. நீங்க ஆஃபீசுக்கு லீவு போட்டது கூட இந்தப் பேச்சைத் தயாரிக்கறதுக்காகத்தான் இருக்கும்னு நினைக்கிறேன். உங்களோட சின்சியரிடி, கமிட்மென்ட் இதையெல்லாம் நான் ரொம்பப் பாராட்டறேன்" என்றார் செல்வரத்தினம், உண்மையான உணர்வுடன்.

குறள் 721:
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.

பொருள்:
சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவையிலிருப்போரின் வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின் பிழை நேருமாறு பேச மாட்டார்கள்.

722. கற்றவர் அவையில்...

"அந்த கோச்சிங் இன்ஸ்டிட்யூட்ல வேலைக்காக இன்டர்வியூவுக்குப் போயிட்டு வந்தியே, என்ன ஆச்சு?" என்றான் மணவாளன், தன் நண்பன் யோகியிடம்.

"அங்கே வகுப்பு நடத்தற சீனியர்கள் மாணவர்கள் மாதிரி வகுப்பில உக்காந்திருப்பாங்களாம். அவங்களுக்கு நான் கிளாஸ் எடுக்கணுமாம்!" என்றான் யோகி எரிச்சலுடன்.

"எடுக்க வேண்டியதுதானே?"

"சரி, எடுக்கலாம்னுதான் முயற்சி செஞ்சேன். ஆனா அந்தப் பெரிசுங்கள்ளாம் வகுப்பில உக்காந்துக்கிட்டு, அவங்க ஏதோ மாணவர்கள் மாதிரி சந்தேகம் கேக்கறது, விளக்கினா, 'புரியல. மறுபடி விளக்க முடியுமா?' ன்னு கேக்கறது இப்படியெல்லாம் பண்ணி என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணினாங்க. போங்கடா, நீங்களும், உங்க வேலையும்னுட்டு வந்துட்டேன்!"

"அப்படியா?" என்றான் மணவாளன் யோசித்தபடி

"நீ யோசிக்கறதைப் பாத்தா, நீயும் போய் முயற்சி பண்ணலாமான்னு யோசிக்கற மாதிரி இருக்கே?" என்றான் யோகி.

"ஆமாம். முயற்சி பண்ணிப் பாக்கலாம்னு நினைக்கறேன்!" என்றான் மணவாளன்.

"'யாம் பெற்ற துன்பம் பெற வேண்டாம் இந்த வையகம்'னுதான் நான் நினைக்கறேன். நீயே போய் மாட்டிக்க விரும்பினா நான் என்ன பண்றது?"

"கங்கிராசுலேஷன்ஸ் மிஸ்டர் மணவாளன். எங்க தேர்வாளர்கள் உங்களைத் தேர்ந்தெடுத்திருக்காங்க!" என்றார் கோச்சிங் நிறுவனத்தின் இயக்குனர்.

"நன்றி சார்!" என்றான் மணவாளன்.

"இங்கே ஆசிரியர்களா இருக்கறவங்க சிறந்த கல்வி அறிவு உள்ளவங்களா இருக்கணும்னு நாங்க நினைக்கறோம். அதனாலதான் இங்கே வேலைக்குச் சேர விரும்பறவங்களை எங்க சீனியர் ஃபெகல்டி உறுப்பினர்களுக்கு வகுப்பு எடுக்கணும்னு சொல்றோம். 

"வகுப்பில உக்காந்திருக்கற சீனியர் ஆசிரியர்கள் அதிகக் கல்வி அறிவு உள்ளவங்கங்கறதால சில கூர்மையான கேள்விகளைக் கேப்பாங்க. அதோட வகுப்பு நடத்தறவர் சொல்றது சராசரிக்குக் கீழான மாணவர்களுக்கும் புரியுமான்னு பாப்பாங்க. அது மாதிரி மாணவர்களுக்கு எந்த விதமான சந்தேகங்கள் வரும்னு  அவங்க நிலையிலே இருந்து யோசிச்சுக் கேள்வி கேப்பாங்க. 

"இந்தச் சவால்களையெல்லாம் வெற்றிகரமா சமாளிச்சு வகுப்பு எடுக்கறவங்களைத்தான் நாங்க தேர்ந்தெடுப்போம். அது மாதிரி வெற்றி பெறுகிறவங்க ரொம்பக் கொஞ்சம்தான். அதில நீங்க ஒத்தரா இருக்கீங்க. கல்வி கற்றவர்கள் பல பேர் இருக்காங்க. ஆனா அவங்களுக்குள்ள சிறந்தவர்கள்ள நீங்களும் ஒத்தர்னு நீங்க பெருமைப்படலாம்!" 

இயக்குனர் கூறியதைக் கேட்டபோது மணவாளனுக்குப் பெருமையாக இருந்தது.

குறள் 722:
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.

பொருள்:
கற்றவர் முன், தாம் கற்றவற்றை, அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்ல வல்லவர் கற்றவர்களுக்குள் நன்கு கற்றவர் என்று மதித்துச் சொல்லப்படுவார்.

723. பாதியில் முடிந்த பேச்சு!

"இன்று நம் சங்கத்தின் ஆண்டுவிழாக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருப்பவரைப் பற்றி நான் எந்த ஒரு அறிமுகமும் செய்யத் தேவையில்லை. நீங்கள் அனைவரையும் அவரை நன்கு அறிவீர்கள்!" என்று கூறி அமர்ந்தார் மன்றத்தின் செயலாளர்.

பேச்சாளர் எழுந்து ஒலிபெருக்கியின் முன் வந்து நின்றார். முகத்தில் ஒரு சிரிப்பை வரவழைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

ஒரு சில விநாடிகளிலேயே அவருடைய பேச்சில் தடுமாற்றம் ஏற்பட்டது. கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டார். 

மறுபடியும் ஒரு புன்னகையை வரவழைத்துக் கொண்டு பேச்சைத் தொடர்ந்தார் அவர். அடுத்த சில விநாடிகளில் மீண்டும் அவருடைய பேச்சில் தடுமாற்றம் ஏற்பட்டது.

இரண்டு நிமிடங்களில் தன் பேச்சை முடித்துக் கொண்டு அமர்ந்தார் அவர்.

"மேஜர் சண்முகம் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரால் நீண்ட நேரம் பேச முடியவில்லை. இன்னொரு சந்தர்ப்பத்தில் அவர் நம்மிடையே விரிவாகப் பேசுவார்!" என்று அறிவித்தார் செயலாளர்.

அவையில் அமர்ந்திருந்த தனராஜ் தன் பக்கத்தில் அமர்ந்திருந்த தன் நண்பன் பாபுவிடம், "செகரட்டரி சமாளிக்கறாரு. மைக் முன்னே வந்து நின்னதும் மேஜர் நர்வஸ் ஆயிட்டாரு. சமாளிச்சுப் பாத்தாரு முடியல, பாவம்!" என்றான்.

"என்னப்பா இது? கார்கில் போரில ரொம்ப வீரமாப் போராடித் தன் உயிரைப் பத்திக் கவலைப்படாம பல தீரச் செயல்களைச் செஞ்சவரு. அரசாங்கத்தில அவருக்கு நிறைய விருதுகள் எல்லாம் கொடுத்திருக்காங்க. அப்படிப்பட்ட வீரர் நமக்கு முன்னால பேச பயப்படறாருன்னா ஆச்சரியமா இருக்கே!" என்றான் பாபு.

"என்ன செய்யறது. பத்து பேருக்கு முன்னால மேடையில நின்னு பேசற தைரியம் சில பேருக்குத்தான் வரும்!" என்றான் தனராஜ்.

குறள் 723:
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.

பொருள்:
பகைவர் உள்ள போர்க்களத்தில் மரணத்துக்கு அஞ்சாமல் சென்று போரிடத் துணிந்தவர் உலகத்தில் பலர் உண்டு, கற்றவரின் அவைக்களத்தில் பேச வல்லவர் சிலரே.

பேராசிரியர் மருதமுத்துவைத் தன் அறைக்கு அழைத்தார் கல்லூரியில் அவன் பணி செய்யும் துறையின் தலைவரான கருணாகரன்.

724. சொன்னபடி ஏன் செய்யவில்லை?

"மருதமுத்து! இந்தச் சின்ன வயசில இப்படி ஒரு நேஷனல் செமினார்ல பேச உங்களுக்கு வாய்ப்புக் கிடைச்சிருக்கறது பெரிய விஷயம். இதுக்குக் காரணம் உங்களோட பிரேக்த்ரூ ரிஸர்ச்தான். செமினார் நம்ம கல்லூரியில நடந்தாலும் பல பெரிய கல்லூரிகளிலேந்து பேராசிரியர்கள் வருவாங்க. சில பேரு தங்களோட அறிவையும், அனுபவத்தையும் பயன்படுத்தி கண்டபடி கேள்விகள் கேட்டு செமினார்ல பேசறவங்களைக் குழப்பி மட்டம் தட்டறதுக்காகவே வருவாங்க. கேள்விகளைக் கடைசியில வச்சுக்க சொல்லி நான் முன்னாலேயே அறிவிச்சுடறேன். ஆனாலும் சில பேர் நீங்க பேசும்போது குறுக்கிட்டுக் கேள்வி கேட்கத்தான் செய்வாங்க. நீங்க பேசும்போது அப்படி யாராவது கேள்வி கேட்டா, கேள்விகளுக்குக் கடைசியில பதில் சொல்றதா சொல்லிடுங்க. கடைசியில நேரம் இல்லேன்னு சொல்லி நான் செமினாரை முடிச்சுடறேன். சரியா?" என்றார் கருணாகரன்.

மருதமுத்து தலையாட்டினார்.

"நான் அவ்வளவு தூரம் சொல்லியும் நீங்க ஏன் கேள்விகளை அனுமதிச்சீங்க? அதைத் தவிர சில பேராசிரியர்களை மேடைக்கு அழைச்சு அவங்க சொல்ல வந்த விஷயத்தை விளக்க வேறு சொன்னீங்க!" என்றார் கருணாகரன், சற்றுக் கோபத்துடன்.

"சார்! அவங்க கேள்வி கேட்டதால சில விஷயங்களை என்னால இன்னும் தெளிவா விளக்க முடிஞ்சது. நிறையப் படிச்ச அனுபவம் உள்ளவங்க மேடையேறிப் பேசி தாங்க சொல்ல வந்த விஷயங்களை விளக்கினதால என்னால புதுசா பல விஷயங்களைத் தெரிஞ்சுக்க முடிஞ்சுது!" என்றான் கருணாகரன்.

"நான் சொன்ன முறையைப் பின்பற்றலையேங்கறதுக்காகத்தான் கேட்டேன். ஆனா நீங்க சொல்ற காரணங்கள் சரியாத்தான் இருக்கு. செமினார் முடிஞ்சதும் எல்லாருமே திருப்தியா இருந்த மாதிரிதான் இருந்தது. நீங்களும் உங்களைப் பத்தின ஒரு நல்ல மதிப்பை எல்லார் மனசிலேயும் உருவாக்கிட்டீங்க. பாராட்டுக்கள்!" என்றார் கருணாகரன் புன்னகையுடன்.

குறள் 724:
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.

பொருள்:
கற்றவரின் முன் தான் கற்றவற்றை அவருடைய மனதில் பதியுமாறு சொல்லி, அதிகம் கற்றவரிடமிருந்து மேலும் கற்க வேண்டும்.

725. முதியவர் கூறிய அறிவுரை

"அப்பாடா! ஒரு வழியாக இந்தக் கருத்தரங்கு முடிந்ததே!' என்ற நிம்மதியுடன் கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டான் சற்குரு.

சற்குரு மேடையிலிருந்து இறங்கியதும் சிலர் அவன் கையைப் பிடித்து, "நல்லா இருந்தது!" என்றனர். ஆனால் அவை ஒப்புக்குக் கூறப்பட்ட வார்த்தைகளாக அவனுக்குத் தோன்றின.

கூட்டம் சிறிது கலைந்ததும் அவன் நண்பன் குலசேகரன் அவன் அருகில் வந்து. "உன் பிரசன்டேஷன் நல்லாத்தான் இருந்தது. ஆனா சில பேர் கண்டபடி கேள்வி கேட்டு உன்னைக் குழப்பிட்டாங்க!" என்றான்.

"ரொம்ப கஷ்டப்பட்டு என் பேச்சைத் தயாரிச்சுக்கிட்டு வந்தேன். ஒரு சின்னத் தப்புக் கூட வரக் கூடாதுன்னு ரொம்ப கவனமா இருந்தேன். ஆனா சில பேரு பொருத்தமில்லாத கேள்விகள் எல்லாம் கேட்டாங்க. சில கேள்விகளுக்கெல்லாம் எனக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியல. கடைசியில பாத்தா, என் பிரசன்டேஷன் முழுமையாக இல்லாத மாதிரி ஒரு இம்ப்ரஷன் ஏற்பட்டுடுச்சு. அதான் எனக்கு வருத்தமா இருக்கு" என்றான் சற்குரு சற்று வருத்தத்துடன்.

சற்றுத் தொலைவிலிருந்து அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு முதியவர் சற்குருவின் அருகில் வந்து, "உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா நான் ஒண்ணு சொல்லலாமா?" என்றார்.

"நிச்சயமா சார்!" என்றான் சற்குரு.

"வாங்க, இங்கேயே ஒரு ஓரமா உக்காந்து பேசலாம்!" என்றார் அவர்.

மூவரும் அமர்ந்ததும், "நான் ஒரு சாதாண மனுஷன்தான். நிறைய கூட்டங்களுக்கும், கருத்தரங்கங்களுக்கும் போறவன் என்கிற முறையில நான் கவனிச்ச விஷயங்கள் அடிப்படையில சில கருத்துக்களைச் சொல்றேன். இன்னிக்கு உங்களோட பிரசன்டேஷன் ரொம்ப அற்புதமா இருந்தது. பொதுவா இது மாதிரி கருத்தரங்களுக்கெல்லாம் பேச்சாளரைக் கேள்வி கேட்டு மடக்கறதுக்குன்னே சில பேர் வருவாங்க. அப்படிப்பட்ட சில பேர்தான் இன்னிக்கு உங்களைக் கேள்விகள் கேட்டுக் குழப்பப் பாத்தாங்க. பல கேள்விகளுக்கு நீங்க சரியாத்தான் பதில் சொன்னீங்க. ஆனா அவங்க தர்க்கரீதியா சில கேள்விகள் கேட்டு உங்களை மடக்கினாங்க. நீங்க அதுக்கெல்லாம் தர்க்கரீதியா பதில் சொல்லாம, நீங்க சொன்னதை விளக்கிச் சொல்ற பதில் சொன்னீங்க. அதனால நீங்க அவங்களோட கேள்விகளுக்கு சரியா பதில் சொல்லலைங்கற மாதிரி ஒரு இம்ப்ரஷன் உண்டாயிடுச்சு. ஏன், உங்களுக்கே நீங்க சொன்ன பதில்கள் திருப்தியா இருந்திருக்காதே" என்றார் அவர்.

"ஆமாம்."

"மதக் கோட்பாடுகள் பற்றின விவாதங்கள்ள சங்கரர், ராமானுஜர் மாதிரி சில மதத் தலைவர்கள் மாற்று மதத் தலைவர்களைத் தோற்கடிச்சதாப் படிச்சிருக்கோம். தங்களோட மதக் கோட்பாடுகளை விளக்கறதோட, தர்க்கத்தையும் பயன்படுத்தித்தான் அவங்க விவாதங்கள்ள ஜெயிச்சிருக்காங்க. அதனால, இது போன்ற கருத்தரங்கள்ள வெற்றிகரமாச் செயல்படணும்னா, நீங்க பேசற விஷயத்தைப் பத்தின நுணுக்கமான அறிவைத் தவிர, தர்க்கரீதியான அணுகுமுறையைப் பயன்படுத்தவும் நீங்க தெரிஞ்சுக்கணும். அனுபவமுள்ள பேச்சாளர்கள் பங்கு பெறுகிற கருத்தரங்கள்ள அவங்க எப்படி தர்க்க அறிவைப் பயன்படுத்திக் கேள்வி கேக்கறவங்களோட வாயை அடைக்கறாங்கங்கறதைப் பாத்துக் கத்துக்கிட்டீங்கன்னா அந்தத் திறமை உங்களுக்கும் வந்துடும். உங்ககிட்ட நிறைய விஷயம் இருக்கு. வாழ்த்துக்கள்!"

சற்குருவின் கையைப் பிடித்துக் குலுக்கி விட்டு விடைபெற்றார் அவர்.

குறள் 725:
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.

பொருள்:
அவையில் பேசும்போழுது குறுக்கீடுகளுக்கு அஞ்சாமல் மறுமொழி சொல்வதற்கு ஏற்ற வகையில் இலக்கணமும், தருக்கமெனப்படும் அளவைத் திறமும் கற்றிருக்க வேண்டும்.

726. படிக்கப்பட்ட கட்டுரை

"விஞ்ஞானி ராஜன் அவர்களுடைய ஆராய்ச்சிக் கட்டுரை 'லெகஸி ஆஃப் நியூட்டன்' என்ற சர்வதேச விஞ்ஞானப் பத்திரிகையில வெளியாகி இருப்பது உங்களுக்குத் தெரியும். தன் ஆராய்ச்சி பற்றி அவர் இப்போது நம்மிடையே பேசுவார்" என்று அறிவித்தார் கூட்டத்துக்குத் தலைமை வகித்த டாக்டர் நம்பி.

மேடையில் அமர்ந்திருந்த ராஜன் நம்பியின் காதில் ஏதோ சொன்னார்.

அதற்குப் பிறகு மீண்டும் ஒலிபெருக்கிக்கு வந்த நம்பி, "நிகழ்ச்சியில் ஒரு சிறிய மாற்றம். ராஜன் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவருடைய ஆராய்ச்சிக் கட்டுரையை அவருடைய உதவி விஞ்ஞானி செல்லப்பா வாசிப்பார்" என்று அறிவித்தார்.

அவையில் அமர்ந்திருந்த செல்லப்பா எழுந்து மேடைக்கு வர, ராஜன் தன் கையிலிருந்த கட்டுரைத் தாள்களை அவரிடம் கொடுத்து விட்டு மேடையிலிருந்து கீழே இறங்கப் போனார்.

"நீங்க ஏன் கீழே போறீங்க? நீங்க மேடையிலேயே இருங்க!" என்று அவரைத் தடுக்க முயன்றார் நம்பி.

'பவாயில்லை' என்பது போல் கையசைத்து விட்டுக் கீழே போய் உட்கார்ந்து கொண்டார் ராஜன்.

"உங்க உதவிக்கு ரொம்ப நன்றி செல்லப்பா. கட்டுரையை நல்லா படிச்சீங்க!" என்றார் ராஜன், தன் அறையில் அமர்ந்தபடி

"இவ்வளவு அருமையா ஒரு ஆராய்ச்சி பண்ணி அதைச் சிறப்பா எழுதி இருக்கீங்க. நீங்களே படிச்சிருந்தீங்கன்ன நல்லா இருந்திருக்குமே!" என்றார் செல்லப்பா.

"என்னோட பலவீனம் உங்களுக்குத் தெரியுமே செல்லப்பா! என்னால ஒரு சபை முன்னால நின்னு பேச முடியாது. ஒண்ணு ரெண்டு தடவை முயற்சி செஞ்சு சரியா வரலேங்கறதால இனிமே அந்த முயற்சியே வேண்டாம்னு விட்டுட்டேன். என்னோட பலவீனத்தை உங்ககிட்ட மட்டும்தான் சொல்லி இருக்கேன். அதை ரகசியமா வச்சுக்கறதுக்கு நன்றி!" என்றார் ராஜன்.

"மேடையிலேயாவது உக்காந்திருக்கலாமே சார்? ஏன் கீழே இறங்கிப் போயிட்டீங்க?"

"அவையில பல பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் உக்காந்திருக்காங்க. அவங்க  யாராவது என் கட்டுரையில ஏதாவது குற்றம் கண்டுபிடிச்சு என் முகத்தைப் பாத்தா, மேடையில உக்காந்துக்கிட்டு அவங்க பார்வையை என்னால எப்படித் தாங்கிக்க முடியும்?" என்றார் ராஜன்.

'அறிஞர்கள் முகத்தைப் பார்த்துப் பேச இவர் இவ்வளவு பயப்படுகிறாரே! இவர் இவ்வளவு படித்திருந்து என்ன பயன்?' என்று நினைத்தபோது, நிறையப் படித்தவர், அறிவாளி, ஆராய்ச்சியாளர் என்றெல்லாம் ராஜனை எப்போதுமே பெரும் மதிப்புடனேயே பார்த்து வந்திருக்கும் செல்லப்பாவுக்கு முதல்முறையாக அவர் மீது ஒரு பரிதாபம் ஏற்பட்டது.

குறள் 726:
வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.

பொருள்:
நெஞ்சுறுதி இல்லாதவர்க்கு வாளால் என்ன பயன்? அறிவுத்திறம் மிக்க அவை கண்டு பயப்படுபவர்க்கு அவர்களுடைய நூலறிவால் என்ன பயன்?

727. "கத்துக்குட்டி"

தமிழில் பல இலக்கியங்களைப் படித்து, பத்திரிகைகளில் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதி, சில ஆய்வு நூல்களையும் எழுதி வெளியிட்டிருந்த தமிழ் அறிஞர் வாஞ்சிநாதனுக்கு ஒரு பட்டிமன்றதில் பேச வாய்ப்பு வந்தபோது, முதலில் அவர் அதை ஏற்றுக் கொள்ளத் தயங்கினார்.

அவருடைய நண்பர் நமச்சிவாயம்தான் அவரை வற்புறுத்தி அந்த வாய்ப்பை ஏற்கச் செய்தார்.

"அந்தப் பட்டிமன்றத்தில பேசறவங்களிலேயே, பட்டிமன்றத் தலைவர் உட்பட, எல்லாரையும் விட பெரிய அறிஞர் நீங்கதான். மத்தவங்களுக்கு உங்க அளவுக்கு நூலறிவோ, புலமையோ இல்லை. நீங்க இவ்வளவு படிச்சுட்டுக் குடத்தில இட்ட விளக்கு மாதிரி இருக்கீங்க. உங்க பெருமையை உணர்ந்த யாரோ உங்களுக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்திருக்காங்க. இதைப் பயன்படுத்திக்கங்க!" என்றார் நமச்சிவாயம்.

பட்டிமன்றத்தில் தன் அணியின் மூன்றாவது பேச்சாளராகக் களம் இறங்கினார் வாஞ்சிநாதன்.

ஒலிபெருக்கி முன் போய் நின்று அவையைப் பார்த்ததுமே வாஞ்சிநாதனுக்குப் பதட்டம் ஏற்பட்டு விட்டது. என்ன பேசுவதென்றே தெரியவில்லை. முந்தைய பேச்சாளர்கள் பேசியபோது அவர்களுக்கு எப்படி பதிலளிப்பது என்றெல்லாம் மனதில் உருவாக்கி வைத்திருந்த சிந்தனைகள் திடீரென்று நினைவிலிருந்து மறைந்து விட்டன.

பேச வேண்டுமே என்பதற்காக ஏதோ சொன்னார். சொற்கள் கோர்வையாக வரவில்லை. ஓரிரு வாக்கியங்கள் பேசியதும் தன் நேரம் முடிந்திருக்குமோ என்ற நம்பிக்கையில் நடுவரைப் பார்த்தார். 'பேசுங்கள்' என்று சைகை காட்டுவது போல் தலையசைத்தார் நடுவர்.

என்ன பேசினோம் என்பதைப் பற்றித் தனக்கே ஒரு தெளிவில்லாமல் ஏதோ பேசித் தன் நேரம் முடியும் முன்பே பேச்சை முடித்துக் கொண்டார் வாஞ்சிநாதன்.

தன் இருக்கையில் போய் அமர்ந்ததும் தன் அணித்தலைவரையும் மற்ற இரு பேச்சாளரர்களையும் பார்த்தார். வாஞ்சிநாதன் அவர்கள் முகம் கடுகடுவென்று இருந்தது. எதிரணிப் பேச்சாளர்களைப் பார்த்தார். அவர்கள் அவரைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தது போல் இருந்தது.

நிகழ்ச்சி முடிந்ததும் அவருடைய அணிதலைவரோ, மற்ற பேச்சாளர்களோ அவரிடம் எதுவும் பேசவில்லை. நடுவர் மட்டும் அவரிடம் ஏதோ சொல்ல வந்து விட்டுப் பிறகு சொல்லாமலே இருந்து விட்டார்.

அரங்கை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தபோது, 'எல்லாரும் நல்ல பேச்சாளர்கள்தான், ஆனா ஒரு ஆளு மட்டும் கத்துக்குட்டி போல இருக்கு!" என்று யாரோ கேலியாகப் பேசிக் கொண்டது வாஞ்சிநாதனின் காதில் விழுந்தது.

தான் இத்தனை நூல்களைப் படித்தது, இவ்வளவு ஆராய்ச்சிகள் செய்தது எல்லாம் இப்படி ஒரு பட்டத்தை வாங்கத்தானா என்று நினைத்தபோது அந்த நிலையிலும் வாஞ்சிநாதனுக்குச் சிரிப்பு வந்தது.

குறள் 727:
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்.

பொருள்:
அவை நடுவில் பேசப் பயப்படுகிறவன், என்னதான் அரிய நூல்களைப் படித்திருந்தாலும் அந்த நூல்கள் அனைத்தும் போர்க்களத்தில் ஒரு பேடியின் கையில் உள்ள கூர்மையான வாளைப் போலவே பயனற்றவையாகி விடும்.

728. புதிய முயற்சிக்கு நிதி உதவி

புதிய தொழில் முயற்சிகளுக்கு நிதி உதவி செய்வதற்கான நேர்காணலில் நிதி உதவி செய்பவர்கள் சார்பாக ஐந்து பேர் மேடையில் அமர்ந்திருந்தனர். வெளிப்படைத்தன்மையைக் காட்டுவதற்காக அந்த நேர்காணல் ஒரு அரங்கில் பொதுமக்களைக் கொண்ட பார்வையாளர்கள் முன் நடைபெற்றது.

தாங்கள் சேர்ந்து உருவாக்கிய ஒரு புதுமையான பொருளைத் தயாரிக்கும் தொழிலைத் தொடங்க நிதி உதவி கேட்டு திலீப்பும், வருணும் அங்கே வந்திருந்தார்கள். 

விண்ணப்பதாரர்கள் தங்கள் தயாரிப்பு பற்றி ஆங்கிலத்தில்தான் விளக்க வேண்டும். திலீப்புக்கு நன்கு ஆங்கிலம் தெரியும் என்பதால் அவர்கள் உருவாக்கிய தயாரிப்பு பற்றி திலீப் விளக்குவான் என்று முடிவு செய்யப்பட்டது.

தீலீப் மற்றவர்கள் முன் பேசத் தயங்குபவன் என்பதால் தைரியமாகப் பேசும்படி வருண் அவனிடம் பலமுறை கூறி இருந்தான்.

வரிசைப்படி அவர்கள் முறை எட்டாவதாக இருந்தது.

முதல் ஐந்தாறு பேர் பேசியதைக் கேட்ட பிறகு வருண் உற்சாகமாக, "டேய் திலீப்! நம்ம தயாரிப்பு அளவுக்கு சிறப்பா வேற எதுவுமே இல்லடா. அதனால நம்ம பிரசன்டேஷனுக்கப்புறம், நம்மைத்தான் தேர்ந்தெடுப்பாங்க. நீ மட்டும் தைரியமா பேசினா போதும்!" என்றான்.

தான் எப்படிப் பேசப் போகிறோம் என்ற பயத்திலேயே இருந்த திலீப் பதில் பேசவில்லை.

அவர்கள் முறை வந்தபோது திலீப் பேச ஆரம்பித்தான். எவ்வளவோ தயார் செய்திருந்தும் கோர்வையாகப் பேசாமல், தட்டுத் தடுமாறித் தெளிவின்றிப் பேசினான். வருண் குறுக்கிட்டு ஓரிரு விஷயங்களை விளக்க முயன்றபோது, ஒருவர்தான் பேச வேண்டும் என்று சொல்லி அவனை அடக்கி விட்டார்கள்.

திலீப் பேசி முடித்ததும், "என்னடா இப்படி சொதப்பிட்ட?" என்றான் வருண்.

"நான் என்ன செய்யறது? என்னால கோர்வையாப் பேச முடியல. ஒரு பாயின்ட் சொல்றப்பதான், இதுக்கு முன்னால அந்த இன்னொரு பாயின்ட்டைச் சொல்லி இருக்கணுமேன்னு தோணுது. அதை இப்ப எப்படி கொண்டு வதுன்னு தெரியல!" என்றான் திலீப்.

"ஏன் சரியாப் பேச முடியலேன்னு எங்கிட்ட நல்லா விளக்கிப் பேசற! நம்மகிட்ட நல்ல ஒரு தயாரிப்பு இருந்தும் அதைப் பத்தி சரியா விளக்க முடியாததால நாம இந்த வாய்ப்பை இழக்கப் போறோம்!" என்றான் திலீப் ஆற்றாமையுடன்.

குறள் 728:
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.

பொருள்:
அறிவுடையோர் நிறைந்த அவையில், அவர்கள் மனத்தில் பதியும் அளவுக்குக் கருத்துக்களைச் சொல்ல இயலாதவர், என்னதான் நூல்களைக் கற்றிருந்தாலும் பயனற்றவரே.

729. புத்தக வெளியீட்டு விழா

பேராசிரியர் சுந்தரத்தின் நூல் வெளியீட்டு விழா நாவலர் பத்மராஜன் தலைமையில் நடந்தது. 'நாவலர்' என்பது அவருடைய பேச்சுத் திறமைக்காக அவருக்கு வழங்கப்பட்ட பட்டம்.

விழாவுக்கு வந்திருந்த பத்திரிகை நிருபர் கணேசன் தன் அருகில் அமர்ந்திருந்த தன் நண்பன் மனோவிடம், "பேராசிரியர் சுந்தரம் பெரிய அறிஞர், ஆராய்ச்சியாளர். அவரோட நூலை வெளியிடறதுக்கு இந்த ஞானசூனியத்தைக் கூப்பிட்டிருக்காங்க பாரு!" என்றான்.

"என்னப்பா இது? பத்மராஜன் எவ்வளவு புகழ் பெற்ற பேச்சாளர்! அவரைப் போய் ஞானசூனியம்னு சொல்லிட்ட?" என்றான் மனோ சிரித்துக் கொண்டே.

"மேடையில பேசிப் பெயர் வாங்கிட்டா பெரிய அறிவாளி ஆகிட முடியுமா? விஷயமே இல்லாம எதையாவது பேசி, பார்வையாளர்களைச் சிரிக்க வச்சே புகழ் பெற்ற பேச்சாளர் ஆயிட்டார் பத்மராஜன். சுந்தரம் பக்கத்தில உக்காரக் கூட அவருக்கு அருகதை கிடையாது. அவரை வச்சு சுந்தரத்தோட புத்தகத்தை வெளியிட வச்சிருக்காங்களே இந்தப் புத்தக வெளியீட்டாளர்கள், அவங்களைச் சொல்லணும்!"

விழா துவங்கியது.

புத்தகத்தை வெளியிட்டு நாவலர் பத்மராஜன் பேசினார். அவர் பேச்சை ரசித்து அவையில் அவ்வப்போது சிரிப்பலைகளும், கைதட்டல்களும் எழுந்தன.

பத்மராஜன் பேசி முடித்ததம், "சுந்தரத்தோட புத்தகத்தைப் புரட்டிக் கூடப் பாத்திருக்க மாட்டாரு. ஆனா ஏதோ பேசி ஒப்பேத்திட்டாரு!" என்றான் கணேசன்.

"அவர் பேச்சுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு இருந்தது, கவனிச்ச இல்ல?" என்றான் மனோ.

"இப்போது நூலாசிரியர் சுந்தரம் அவர்கள் தன் புத்தகத்தைப் பற்றிச் சில வார்த்தைகள் பேசுவார்!" என்று கூட்டத் தலைவர் அறிவித்தார்.

ஒலிபெருக்கியின் முன் வந்து நின்ற சுந்தரம் என்ன பேசுவதென்று தெரியாமல் சில விநாடிகள் மௌனமாக இருந்து விட்டுப் பிறகு, "முதலில் அனைவருக்கும் நன்றி" என்றார். பிறகு ஒரு இடத்தில் நிற்க முடியாதவர் போல் கால்களை மாற்றி மாற்றி அசைத்து விட்டு, "இந்த நூலை நான் எழுதக் காரணம்..." என்று ஆரம்பித்தார்.

அதற்குள் பார்வையாளர்களில் பலர் அவர் பேச்சில் கவனம் இழந்து தங்களுக்குள் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். சுந்தரம் உடலை அசைத்துக் கொண்டே பேசிய வார்த்தைகள் அவையில் பலருக்கும் எட்டவில்லை.

"என்ன சொல்றார்னே புரியலியே!" என்றான் கணேசன் மனோவிடம்.

ஓரிரு நிமிடங்களில் தன் பேச்சை முடித்துக் கொண்டு அமர்ந்து விட்டார் சுந்தரம்.

"சுந்தரம், பத்மராஜன் இவர்களில் யார் அறிவாளின்னு இந்த அவையில கேட்டா, அநேகமா எல்லாருமே பத்மராஜன்தான் அறிவாளின்னு சொல்லுவாங்க. ஆனா, அதுக்காக அவங்களைக் குற்றம் சொல்ல முடியாது!" என்றான் கணேசன் வருத்தத்துடன்.

குறள் 729:
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்.

பொருள்:
நூல்களைக் கற்றிந்த போதிலும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரை விடக் கடைப்பட்டவர் என்றே கருதப்படுவர்.

730. கம்பன் ஏமாந்தான்!

தலைமை ஆசிரியர் அழைக்கிறார் என்றதும் அவர் அறைக்குச் சென்றார் தமிழாசிரியர் கண்ணப்பன்.

"உக்காருங்க கண்ணப்பன்! உங்களை நினைச்சா எனக்குப் பெருமையா இருக்கு!" என்றார் தலைமையாசிரியர் வைத்திலிங்கம்.

"எதனால சார்?"என்றார் கண்ணப்பன், புரியாமல்.

"என் அனுபவத்தில நான் எத்தனையோ தமிழாசிரியர்ளைப் பாத்திருக்கேன். ஆனா உங்களை மாதிரி இலக்கிய ஆர்வம், புலமை, பொருள் விளக்கற அழகு இதெல்லாம் சேர்ந்த ஒத்தரை நான் பார்த்ததில்லை!"

"எப்படி சார் சொல்றீங்க?" என்றார் கண்ணப்பன் நெளிந்தபடி.

"போன வாரம் பத்தாம் வகுப்புக்கு நீங்க கம்ப ராமாயணப் பாடம் எடுக்கறப்ப அந்தப் பக்கம் வந்துக்கிட்டு இருந்த என் காதில அது விழுந்தது. சுவாரசியமா இருக்கேன்னு கொஞ்ச நேரம் கேக்கலாம்னு நின்னேன். உங்க வகுப்பு முடியற வரையில என்னால அங்கேந்து நகர முடியல!"

"தெரியாது சார்! நீங்க வெளியில நின்னு கேட்டுக்கிட்டிருங்கீன்னு தெரிஞ்சிருந்தா என்னால பாடமே எடுத்திருக்க முடியாது." 

கண்ணப்பன் சொன்னதைக் காதில் போட்டுக் கொள்ளாதது போல் வைத்திலிங்கம் தொடர்ந்தார்.

"மாணவர்களுக்குப் பரீட்சைக்கு மார்க் வாங்கற அளவுக்கு சொல்லிக் கொடுத்தா போதும்னு நினைக்காம அவ்வளவு ஈடுபாட்டோட சொல்லிக் கொடுத்தது உங்களோட இலக்கிய ஆர்வத்தையும், புலமையையும் காட்டுது."

"நன்றி சார்! இதைச் சொல்லத்தான் கூப்பிட்டீங்களா?" என்று எழுந்து செல்ல யத்தனித்தார் கண்ணப்பன்.

"இல்லை, உக்காருங்க. நம் ஊரில அடுத்த மாசம் கம்பன் விழா நடத்தறாங்க இல்ல?"

"ஆமாம். அறிவிப்பைப் பார்த்தேன்."

"அதில உங்களை ஒரு பேச்சாளரா சேர்க்கச் சொல்லி விழா நடத்தறவங்ககிட்ட கேட்டேன். அவங்களும் ஒத்துக்கிட்டாங்க!" என்றார் வைத்திலிங்கம் பெருமிதத்துடன்.

"சார்!" என்றார் கண்ணப்பன் திகைப்புடன்.

"உங்க வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே தெரிஞ்சிருக்கிற உங்க பெருமை  இப்ப இந்த ஊருக்குத் தெரியும். அப்புறம் காலப்போக்கில இந்த உலகத்துக்கே தெரியும். எவ்வளவு சீக்கிரமே நீங்க பாபுலர் ஆகப் போறீங்க, பாருங்க!"

"சார், வேண்டாம் சார்."

"என்ன வேண்டாம். புகழ் வேண்டாமா?"

"இல்லை சார். என்னால பொது மேடையில எல்லாம் பேச முடியாது. நாலு பேர் முன்னால பேசவே கூச்சப்படறவன் நான்."

"கவலைப்படாதீங்க. பேச ஆரம்பிச்சீங்கன்னா கூச்சம் எல்லாம் பறந்துடும். வகுப்பில மாணவர்கள் முன்னால பேசலையா?"

"அது வேற சார். அவங்க எனக்குக் கட்டுப்படறவங்க. நான் அதட்டினா பயப்படறவங்க. அவங்க முன்னால பேசறது வேற. ஒரு சபை முன்னால பேசறது வேற. நம்ம பள்ளிக்கூடத்திலேயே எல்லா மாணவர்களையும் கூட்டி வச்சு என்னைப் பேசச் சொன்னீங்கன்னா அது கூட என்னால முடியாது!"

கண்ணப்பன் பேச்சில் தெரிந்த பரிதாபமும், கெஞ்சலும் வைத்திலிங்கத்துக்கு அதிர்ச்சியாக இருந்தன.

"என்ன சார் இது? அன்னிக்கு அவ்வளவு அருமையா உணர்ச்சிகளோட பேசி நடிக்கற மாதிரி வகுப்பு எடுத்தீங்க? இப்படிச் சொல்றீங்களே! நான் வேற விழாக் குழுவினர்கிட்ட சொல்லி உங்க பேரை சேத்துட்டேனே!"

"உங்களை ஏமாற்றமடையச் செஞ்சதுக்கு என்னை மன்னிச்சுடுங்க சார். நீங்க அவங்ககிட்ட சொல்லி என் பெயரை எடுத்துடச் சொல்லுங்க!" என்றபடியே எழுந்தார் கண்ணப்பன்.

"ஏமாற்றமடைஞ்சது நான் மட்டும் இல்ல, கம்பனும்தான்! நீங்க மட்டும் அன்னிக்கு வகுப்பில பேசின மாதிரி பொதுமேடையில பேசியிருந்தா அது கம்பனுக்கு எவ்வளவு பெருமை சேத்திருக்கும்!" என்றார் வைத்திலிங்கம் பெருமூச்சுடன்.

குறள் 730:
உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.

பொருள்:
அவைக்கு அஞ்சித் தாம் கற்றவைற்றைக் (கேட்பவர் மனத்தில்) பதியுமாறு சொல்ல முடியாதவர், உயிரோடு வாழ்ந்தாலும் இறந்தவர்க்கு ஒப்பாவர்.


             அறத்துப்பால்                                               காமத்துப்பால்   

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...