அதிகாரம் 80 - நட்பாராய்தல்

திருக்குறள்
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 80
நட்பாராய்தல்

791. அம்மா சொன்ன பொய்! 

"ரகு இல்லையா?" என்றான் ஆதி.

"இல்லை. அவன் பெரியப்பா வீட்டுக்குப் போயிருக்கான்" என்றாள் ரகுவின் அம்மா மரகதம்.

"இப்ப வந்துடுவான் இல்ல?" என்றபடியே சோஃபாவில் உட்காரப் போனான் ஆதி.

"இல்லை. அவன் பெரியப்பாவோட யாரையோ பாக்கப் போகப் போறதா சொன்னான். சாயந்திரம்தான் வருவான்."

"அப்படியா?" என்ற ஆதி ஏமாற்றத்துடன் வெளியே போகத் திரும்பினான். "என்னோட சினிமாவுக்கு வரதா சொல்லி இருந்தானே?" என்றான் தொடர்ந்து.

"சினிமா எங்கே போகுது? இது முதல் வாரம்தானே? அடுத்த ஞாயிற்றுக்க்கிழமை போய்க்கங்க. டிக்கட்டும் சுலபமாக் கிடைக்கும்!" என்றாள் மரகதம் சிரித்தபடி.

"அடுத்த வாரம் இந்தப் படம் இருக்குமோ, தூக்கிடுவாங்களோ!"

"அப்படி ஒரு வாரத்திலேயே தியேட்டரை விட்டு ஓடிடும்னா அந்தப் படத்தைப் பாக்காம இருக்கிறதே நல்லதாச்சே!" 

தன் நகைச்சுவைப் பேச்சைத் தானே ரசித்து மரகதம் பெரிதாகச் சிரித்தாள். ஆதி எதுவும் பேசாமல் வெளியேறினான்.

ற்று நேரத்துக்கெல்லாம் அவசரமாக வீட்டுக்குள் நுழைந்த ரகு, "ஆதி இன்னும் வரல? சினிமாவுக்குக் கிளம்ப நேரமாயிடுச்சே!" என்றான்.

"வந்தான். நீ உன் பெரியப்பா விட்டுக்குப் போயிருக்கே, சாயந்திரம்தான் வருவேன்னு சொல்லி அனுப்பிட்டேன்!" என்றாள் மரகதம்.

"ஏம்மா? சினிமாவுக்குப் போகப் போறோம்னு சொன்னேன் இல்ல?"

"ஒரு ஞாயிற்றுக்கிழமை தவறாம ரெண்டு பேரும் சினிமாவுக்குப் போயிடறீங்க. சில சமயம் வார நாள்ள கூட எங்கிட்ட சொல்லாமயே ஆஃபீஸ்லேந்து நேரா அவனோட ஈவினிங் ஷோக்குப் போயிடற. நான் ராத்திரி பத்து மணிக்கும் நீ வரலியேன்னு தவிச்சுக்கிட்டு உக்காந்துக்கிட்டிருக்கேன். சினிமா பாக்கறதுக்குன்னு ஒரு சிநேகமா? உலகத்தில வேற விஷயமே இல்லை?" என்றாள் மரகதம் கோபத்துடன்.

"வாரத்தில ரெண்டு மூணு சினிமா பாத்தா ஒண்ணும் ஆயிடாதும்மா. எங்கிட்ட வேற கெட்ட பழக்கம் எதுவும் கிடையாது!"

"இதுவரையிலும் இல்ல. இனிமே வராதுன்னு எப்படிச் சொல்ல முடியும், ஆதி மாதிரி நண்பர்கள் இருக்கறச்சே?"

"அம்மா! ஆதிக்கு சிகரெட் பழக்கம் இருக்கறது உண்மைதான். அது உனக்கு எப்படித் தெரிஞ்சதுன்னு தெரியல. ஆனா நான் அதையெல்லாம் பழக்கிக்க மாட்டேன்."

"ஓ, அவனுக்கு சிகரெட் பழக்கம் இருக்கா? அது எனக்குத் தெரியாது. ஆனா ஒண்ணு தெரியும். ஆதி ஏதாவது சொன்னா உன்னால மாட்டேன்னு சொல்ல முடியாது. ஒருநாள் கூட அவன் சினிமாவுக்குக் கூப்பிட்டு நீ போகாம இருந்ததில்லையே! அவன் கூப்பிட்டாங்கறதுக்காக உனக்கு இஷ்டமில்லாதப்ப கூட நீ அவனோட போனதை நான் கவனிச்சிருக்கேன். அதனலதான் அவனோட நீ சிநேகம் வச்சிக்கறது ஆபத்தானதுன்னு நினைக்கிறேன். இது மாதிரி மோசமான நட்பிலேந்து  விடுபட முடியாது. நான் பாத்திருக்கேனே!" என்றாள் மரகதம் பெருமூச்சுடன்.

"என்ன பாத்திருக்க? உனக்கு மோசமான சிநேகிதிகள் யாராவது இருந்தாங்களா என்ன?" என்றான் ரகு, கேலியான குரலில்.

"எனக்கு இல்லடா, உங்கப்பாவுக்கு! நல்லா சம்பாதிச்சு நல்லா வாழ்ந்துக்கிட்டிருந்த அவருக்கு ராஜுன்னு ஒரு நண்பன் வந்து வாய்ச்சான், உனக்கு இந்த ஆதி வந்து வாய்ச்ச மாதிரி! அவருக்கு சூதாட்டத்தைப் பழக்கி விட்டு, அவரோட சொத்தையெல்லாம் அழிச்சுட்டான். தான் போற வழி தப்புன்னு அவர் கொஞ்ச நாளிலேயே புரிஞ்சுக்கிட்டு அவங்கிட்டேந்து விலகி இருக்க முயற்சி செஞ்சாரு. ஆனா அவனோட நட்பை அவரால விட முடியல, அவன் வந்து கூப்பிடறப்ப போகாமயும் இருக்க முடிஞ்சதில்ல. ராஜுவோட சிநேகிதத்தால குடும்பத்தையே அழிச்சுட்டேனேன்னு கடைசி வரையிலேயும் நொந்துக்கிட்டேதான் வாழ்ந்தாரு அவரு!" மரகதத்தின் குரல் கம்மியது.

"அம்மா அது வேற..." என்று ஆரம்பித்தான் ரகு.

"வேற மாதிரி இருந்தாலும் இதுவும் அதுதான்! அடிக்கடி சினிமா பாக்கறது பெரிய விஷயம் இல்ல. அதை நீ மாத்திக்க முடியும். ஆனா ஆதி வந்து கூப்பிடறப்ப, உன்னால போகாம இருக்க முடியலியே! அதுதான் ரொம்ப ஆபத்தான விஷயம். இன்னும் ரெண்டு மூணு வாரத்துக்கு ஆதி கண்ணில படாம இரு. நல்ல வேளையா நம்  வீட்டில ஃபோன் வசதி இல்லை. அதனால அவனால உன்னைத் தொடர்பு கொள்ள முடியாது. அப்புறம் அவனே ஒதுங்கிடுவான். அதுதான் உனக்கு நல்லது! எனக்கு நீ செய்யற உதவியும் கூட!" என்றாள் மரகதம்.

குறள் 791:
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.

பொருள்: 
நட்பை ஏற்படுத்திக் கொண்ட பிறகு, அதிலிருந்து விடுதலை இல்லை, ஆகையால், ஆராயாமல் நட்புச் செய்வது போல் கெடுதியானது வேறு இல்லை.

792. புதிதாகக் கிடைத்த நட்பு!

சிறு வயது முதலே, மனோகருக்கு நெருக்கமான நண்பர்கள் என்று யாரும்  இருந்ததில்லை. பள்ளி, கல்லூரி நட்புகள் எல்லாம் விரைவிலேயே தேய்ந்து மறைந்து விட்டன. 

வேலை பார்த்த இடத்திலும் நீண்டகால நட்பு எ துவும் ஏற்படவில்லை.

அதனால்தானோ என்னவோ, ரவியின் நட்பு கிடைத்ததும் அவனிடம் மிகவும் நெருங்கிப் பழக ஆரம்பித்து விட்டான் மனோகர்.

ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துப் பேசிய ரவியை, "வீட்டுக்கு வரீங்களா?" என்று ஒரு மரியாதைக்கு மனோகர் அழைத்தபோது, "வரியான்னு கூப்பிட்டா வருவேன். மரியாதை கொடுத்து வரீங்களான்னு கேட்டா எப்படி வருவேன்?" என்று ரவி சிரித்துக் கொண்டே கூறியபோது, அவன் தனக்கு நெருக்கமாகி விட்டதாக மனோகர் உணர்ந்தான்.

ஆனால், எதனாலோ மாதவிக்கு ரவியைப் பிடிக்கவில்லை.

அவன் முதல் தடவை வீட்டுக்கு வந்தபோதே, "எங்கே பிடிச்சீங்க இவரை?" என்றாள் மனோகரிடம்.

"ஏன் அப்படிக் கேக்கற?" என்றான் மனோகர்.

"எனக்கு என்னவோ அவரைப் பிடிக்கல. இன்னிக்கு வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வந்ததோட போதும், இனிமே அவரோட பழகாதீங்க!"

மனோகர் மௌனமாக இருந்தான்.

ஆனால் சில நாட்களுக்குப் பிறகு, ரவி அவர்கள் இருவரையும் தங்கள் வீட்டுகு வரச் சொல்லிக் கூப்பிட்டதால், இருவரும் ரவியின் வீட்டுக்குச் சென்றனர். 

திரும்பி வந்ததும், "நான் நினைச்சது சரியாப் போச்சு. ரவியோட மனைவி நிர்மலா சந்தோஷமாவே இல்லை. எங்கிட்ட அவங்க சரியா கூடப் பேசல. ரவிகிட்ட ஏதோ தப்பு இருக்கு!" என்றாள் மாதவி.

மனோகர் பதில் சொல்லவில்லை. 

அதற்குப் பிறகு ரவி அவர்கள் வீட்டுக்கு வரவில்லை. ஒருவேளை மனோகர் ரவியை வெளியே எங்காவது சந்திக்கிறானோ என்னவோ! ஆனால் இதைப் பற்றி மனோகரிடம் கேட்க மாதவி விரும்பவில்லை. தானே எதற்கு ரவியைப் பற்றி மனோகருக்கு நினைவு படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

ருநாள் ரவி இரவில் மிகவும் தாமதமாக வீட்டுக்கு வந்தான்.

"ஏன் இவ்வளவு லேட்? எனக்கு ரொம்ப கவலையாயிடுச்சு!" என்று மனோகரிடம் மாதவி கேட்டபோதே, அவனிடமிருந்து மது வாடை வருவதை கவனித்தாள்.

"குடிச்சிருக்கீங்களா?" என்றாள் மாதவி அதிர்ச்சியுடன். "இத்தனை வருஷமா உங்களுக்கு இந்தப் பழக்கமே இருந்ததில்லையே?"

மனோகர் மௌனமாக இருந்தான்.

"ரவியோட சேர்ந்துதானே குடிச்சீங்க?" என்றாள் சட்டென்று.

மனோகர் பதில் சொல்லவில்லை.

"அன்னிக்கு அவர் வீட்டுக்குப் போனப்ப அவர் மனைவியோட சோகத்தைப் பார்த்தப்பவே இது மாதிரி ஏதாவது இருக்கும்னு நினைச்சேன். இப்ப உங்களுக்கும் பழக்கி வச்சுட்டாரா? நான் சொல்றதைக் கேளுங்க. மறுபடி அவரைப் பாக்காதீங்க. அவரோட பழகாட்டா உங்களுக்கு இந்தப் பழக்கமெல்லாம் வராது. இதுவே முதலும் கடைசியாகவும் இருக்கட்டும்!" என்றாள் மாதவி, கெஞ்சும் குரலில்.

ஆனால் அது முதலாக மட்டும்தான் இருந்தது, மனோகருக்கு ரவியுடனான நட்பும், குடிப்பழக்கமும் தொடர்ந்தன. 

மாதவி பலமுறை சொல்லிப் பார்த்து விட்டு ஓய்ந்து விட்டாள். 

சில மாதங்கள் கழித்து மனோகரின் குடிப்பழக்கத்தால் குடும்ப்ப் பொருளாதராம் பாதிக்கப்படுவதைப் பற்றி அவள் கவலைப்பட வேண்டி இருந்தது. ஒரு சில வருடங்களுக்குப் பிறகு  மனோகரின் உடல்நிலை பற்றியும் கவலைப்பட வேண்டி இருந்தது.

"குடல் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கும்மா. இப்ப டிரீட்மென்ட் கொடுத்து அனுப்பறோம். இந்தப் பழக்கம் தொடர்ந்தா உயிருக்கே ஆபத்து. ஜாக்கிரதையாப் பாத்துக்கங்க!" என்றார் டாக்டர்.

திடீரென்று ஒருநாள் மனோகர் ஏற்படுத்திக் கொண்ட நட்பு சில வருஷங்களில் அவன் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டதே என்று நினைத்தபோது, பெருகி வந்த துயரம் மாதவியின் தொண்டையை அடைத்தது.

குறள் 792:
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்..

பொருள்: 
திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும்.


793. நல்லவரா, கெட்டவரா?

"உன்னோட சினேகிதம் எல்லாம் சரியில்ல. பார்த்து நடந்துக்க!" என்றார் சிவப்பிரகாசம், தன் மகன் முருகேஷிடம்.

"ஏங்க, அவன் வளர்ந்த பையன். அவனுக்குத் தெரியாதா? அவனுக்குப் போய் உபதேசம் பண்ணிக்கிட்டிருக்கீங்க!" என்றாள் அவர் மனைவி செண்பகம்.

"ஏன், பெரியவனாயிட்டான்னா, பெத்தவங்க அவனுக்கு புத்தி சொல்லக் கூடாதா? காலம் காலமா பெரியவங்க சொல்லிட்டுப் போனதைத்தான் நான் அவனுக்குச் சொல்றேன். இதையெல்லாம் நம்மை மாதிரி பெரியவங்க சின்னவங்களுக்குச் சொல்லலேன்னா, அவங்களுக்கு எப்படித் தெரியும்?"

"பரவாயில்ல, சொல்லுங்கப்பா. என்னோட எந்த நண்பனைப் பத்தி நீங்க சொல்றீங்க?" என்றான் முருகேஷ்.

"நீ வேலைக்குப் போக ஆரம்பிச்சப்பறம், நண்பர்கள்னு நாலைஞ்சு பேரை வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வந்திருக்கே. அவங்க யாருமே சரியில்ல!ம என்றார் சிவப்பிரகாசம்.

"சரியில்லேன்னா?"

"அவங்க நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவங்களா எனக்குத் தெரியல. அது எப்படி எனக்குத் தெரியும்னு கேக்காதே! அவங்க பேச்சு, நடந்துக்குற முறை இதையெல்லாம் வச்சு சொல்றேன்!"

"அப்பா! அவங்கள்ளாம் ஏழ்மையான குடும்பத்தைச் சேந்தவங்க. அதனால அவங்க நாகரீகமா இல்லாதவங்க மாதிரி தெரியலாம். அதுக்காக அவங்களையெல்லாம் தப்பானவங்கன்னு முடிவு கட்டிட முடியுமா?" என்றான் முருகேஷ்.

"அவங்க தப்பானவங்கன்னு நான் சொல்லல. ஒத்தரோட நட்பு வச்சுக்கறதுக்கு முன்னால, அவரோட குடும்பப் பின்னணி, குணம், தன்னைச் சுத்தி இருக்கறவங்ககிட்ட அவர் எப்படி நடந்துக்கிறாரு இதையெல்லாம் பாக்கணும்! இது நான் சொல்றதில்ல. பெரியவங்க சொல்லி இருக்காங்க" என்றார் சிவப்பிரகாசம்.

"அப்பா! பெரியவங்க சொல்றதையெல்லாம் நாம அப்படியே பின்பற்றுவது இல்ல. சில விஷயங்களைக் காலத்துக்கு ஏத்தவாறு மாத்திக்கிறோம், சிலவற்றைத் தப்புன்னு உணர்ந்து மாத்திக்கறோம். குடும்பப் பின்னணியைப் பாக்கறது சரின்னு நான் நினைக்கல. ஆனா மத்த விஷயங்களை ஒத்துக்கறேன். அவங்க குணம், அவங்களைச் சுத்தி இருக்கிறவங்ககிட்ட அவங்க நடந்துக்கற விதம் இதையெல்லாம் பார்க்கணும்னு நான் ஒத்துக்கறேன். இதில ஏதாவது எனக்கு தப்பாத் தெரிஞ்சா, நான் அவங்க நட்பை முறிச்சுப்பேன்!" என்று சொல்லி விட்டுக் கிளம்பினான் முருகேஷ்.

"இந்தக் காலத்துப் பிள்ளைங்கள்ளாம் தங்களுக்கு எல்லாம் தெரியும்னு நினைச்சுக்கறாங்க. பெரியவங்க சொல்றதையே கேள்வி கேக்கறாங்க!" என்று சலித்துக் கொண்டார் சிலப்பிரகாசம்.

"எனக்கென்னவோ முருகேஷ் நல்லா தெளிவா யோசிக்கிறான்னுதான் தோணுது!" என்றாள் செண்பகம்.

"என்னப்பா, உங்க நண்பர் கருணாகரனை அவர் கம்பெனியில ஏதோ மோசடி செஞ்சுட்டார்னு கைது செஞ்சுட்டாங்களாமே!" என்றான் முருகேஷ்.

"ஆமாம். அவனை நல்லவன்னு நினைச்சுத்தான் இத்தனை நாள் பழகினேன். அவன் இப்படிப் பண்ணுவான்னு எதிர்பாக்கல!" என்றார் சிவப்பிரகாசம்.

"இப்படிப்பட்ட மோசமான ஆளை எப்படி உங்க நண்பாரா வச்சுக்கிட்டீங்க? அன்னிக்கு முருகேஷுக்கு உபதேசம் பண்ணினீங்களே, கருணாகரனோட நட்பு வச்சுக்கறதுக்கு முன்னால, நீங்க அவர் குடும்ப்ப் பின்னணி, குணம் இதையெல்லாம் பாக்கலியா?" என்றாள் செண்பகம், கேலியான குரலில்.

சிவப்பிரகாசம் அடிபட்டவர் போல் மனைவியைப் பார்த்தார்.

"என்னம்மா இது? அவர் குடும்பப் பின்னணி எல்லாம் நல்லாத்தான் இருந்திருக்கும். நல்ல குடும்பத்தில பிறந்தவங்க தப்பு பண்றதில்லையா? அவர் தப்பு பண்ணி இருக்கலாம். ஆனா அப்பாவுக்கு எந்தக் கெடுதலும் பண்ணலியே! அப்பாவுக்கு நல்ல நண்பராத்தானே இருந்திருக்காரு?" என்றான் முருகேஷ்.

தனக்கு ஆதரவாகப் பேசிய மகனை வியப்புடன் பார்த்த சிவப்பிரகாசம், அன்று செண்பகம் சொன்னது போல் முருகேஷ்  தெளிவாகத்தான் சிந்திக்கிறான் என்று நினைத்துக் கொண்டார். 

குறள் 793:
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு..

பொருள்: 
ஒருவனது குணம், குடும்பப் பிறப்பு, குற்றம், குறையாத சுற்றம் ஆகியவற்றை அறிந்து நட்புக் கொள்க.


794. விலக்கிக் கொள்ளப்பட்ட டெண்டர்!

"ஏன் சார் கடைசி நிமிஷத்தில டெண்டரை வித்டிரா பண்ணச் சொல்றீங்க? நாமதான் குறைவா கோட் பண்ணி இருக்கோம்னு நினைக்கிறேன். நமக்குத்தான் ஆர்டர் கிடைக்கும்" என்றார் மானேஜர் பலராமன்.

"நாம வித்டிரா பண்ணினா, அடுத்தாப்பல யாருக்கு ஆர்டர் கிடைக்கும்னு நினைக்கிறீங்க?"என்றார் மானேஜிங் டைரக்டர் சிவராம்.

"அநேகமா பூர்ணிமா இண்டஸ்டிரீஸுக்குக் கிடைக்காலாம். அவங்க பெரிய க்ரூப். ஆனா அவங்களை பீட் பண்ணி நாம ஜெயிச்சா, நமக்கு அது ஒரு பெரிய கிரடிட் ஆச்சே!"

"இல்லை. வித்டிரா பண்ணிடுங்க, வேற எத்தனையோ டெண்டர்கள் இருக்கு! பாத்துக்கலாம்"  என்றார் சிவராம் சுருக்கமாக.

பலராமன் புரியாமல் சிவராமைப் பார்த்தார்.

சிவராமின் நிறுவனம் டெண்டரை விலக்கிக் கொண்ட பிறகு, டெண்டர்கள் திறந்து பார்க்கப்பட்டதும், பூர்ணிமா இண்டஸ்ட்ரீஸின் டெண்டர் தொகை  எல்லாவற்றுக்குள்ளும் குறைவாக இருந்ததால் அவர்களுக்கு ஆர்டர் வழங்கப்பட்டது.

"பூர்ணிமா இண்டஸ்ட்ரீஸோட சேர்மன் மதுசூதனன் எனக்கு ஃபோன் பண்ணினாரு!" என்றார் சிவராம்.

"அப்படியா? ஆச்சரியமா இருக்கே! அவரு ரொம்ப பிசியானவர், அவரைப் பாக்க அப்பாயின்ட்மென்ட் கிடைக்கறது கஷ்டம்னு சொல்லுவாங்களே!" என்றார் பலராமன்.

"நாம டெண்டரை விலக்கிக்கிட்டது அவருக்குக்  கொஞ்சம் ஆச்சரியமா இருந்திருக்கும்னு நினைக்கிறேன். அதனால நாம எவ்வளவு கோட் பண்ணினோம் ஏன் விலக்கிக்கிட்டோம்னு கேட்டாரு. நாம கோட் பண்ணின தொகையைச் சொன்னதும், அப்படின்னா உங்களுக்குத்தான் டெண்டர் கிடைச்சிருக்கும், ஏன் விலக்கிக்கிட்டீங்கன்னு கேட்டாரு" என்று சொல்லி நிறுத்தினார் சிவராம்.

"நீங்க என்ன சொன்னீங்க?" என்றார் பலராமன், காரணத்தைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில்.

"நான் அவர்கிட்ட சொன்னது இருக்கட்டும். காரணத்தை உங்ககிட்ட சொல்றேன். நான் டெண்டரை விலக்கிக்கச் சொன்ன காரணம் மதுசூதனனோட தொடர்பு ஏற்படுத்திக்கணும்னுதான். நாம கடைசி நிமிஷத்தில டெண்டரை விலக்கிக்கிட்டா, அது ஏன்னு தெரிஞ்சுக்க அவர் முயற்சி செய்வாரு, அப்ப அவரோட தொடர்பு ஏற்படுத்திக்கலாம்னு நினைச்சேன். ஆனா அவரே ஃபோன் பண்ணுவார்னு எதிர்பாக்கல!" என்றார் சிவராம்.

"அவரோட எதுக்கு சார் தொடர்பு ஏற்படுத்திக்கணும்? அவங்க நம்ம காம்பெடிடர் ஆச்சே?" என்றார் பலராம்.

"அவங்க பெரிய நிறுவனம். நாலைஞ்சு தலைமுறையா இருக்காங்க. நல்ல பேரோட கௌரவமா இருக்காங்க. நம்மளோடது ரொம்ப சின்ன நிறுவனம். நமக்கும் அவங்களுக்கும் போட்டின்னு சொல்ல முடியாது. எப்பவாவது இது மாதிரி சில டெண்டர்கள்ள போட்டி வரலாம். மத்தபடி அவங்க மார்க்கெட் வேற, நம்ம மார்க்கெட் வேற. 

"மதுசூனன் ஒரு நல்ல தொழில் பரம்பரையில வந்தவர். அதோட, அவர் ஒரு நேர்மையான மனிதர். ஒரு தடவை, ஒரு அமைச்சரோட உதவியாலதான் அவருக்கு ஒரு அரசாங்க ஆர்டர் கிடைச்சதுன்னு ஒரு பத்திரிகையில செய்தி போட்டாங்க. 

"அமைச்சர் அந்தப் பத்திரிகை மேல வழக்குப் போடப் போறதாச் சொன்னதும், அந்தப் பத்திரிகை ஆதாரம் இல்லாம அந்தச் செய்தியைப் போட்டுட்டதாச் சொல்லி மன்னிப்பு கேட்டுது. ஆனா மதுசூதனன் அந்த ஆர்டரை வேண்டாம்னுட்டாரு. 

"முதலமைச்சர், சில பெரிய தொழிலதிபர்கள் உட்பட பல பேர் சொல்லியும் அவர் தன் முடிவை மாத்திக்கல. இப்படி ஒரு குற்றச்சாட்டு வந்தப்பறம், அந்த ஆர்டரை எடுத்து செய்ய விரும்பலன்னு சொல்லிட்டாரு. அதனால  தன் கம்பெனிக்குக் கிடைக்க வேண்டிய லாபம் கைவிட்டுப் போனதைப் பத்திக் கூட அவர் கவலைப்படல. 

"பழிக்கு அஞ்சற ஒரு நல்ல மனிதரோட நட்பு கிடைக்கட்டும்னுதான் இந்த டெண்டர்லேந்து விலகச் சொன்னேன். அதனால நமக்குக் கிடைக்கக் கூடிய லாபம் கைநழுவிப் போனதைப் பத்தி நான் கவலைப்படல!" என்றார் சிவராம்.

"ஒரு விதத்தில நீங்களும் மதுசூதனன் மாதிரிதான் சார் நடந்துக்கிட்டிருக்கீங்க! அவரு பழிக்கு அஞ்சி, கிடைச்ச ஆர்டரை விட்டாரு. நீங்க அவரோட நட்புக்காக, கிடைக்க வேண்டிய ஆர்டரை விட்டுட்டீங்க! ஆனா, அவர் உங்ககிட்ட ஃபோன்ல பேசினதால அவரோட நட்பு உங்களுக்குக் கிடைக்கும்னு என்ன நிச்சயம்?" என்றார் பலராமன்.

"அவரு என்னை நாளைக்கு அவர் வீட்டுக்கு டின்னருக்குக் கூப்பிடிருக்காரே! என் மனைவியையும் அழைச்சுக்கிட்டு வரச் சொல்லி இருக்காரே!" என்றார் சிவராம், உற்சாகத்துடன்.

குறள் 794:
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.

பொருள்: 
நல்ல குடியில் பிறந்து, தன்மீது சொல்லப்படும் பழிக்கு அஞ்சுபவனின் நட்பை விலை கொடுத்தாவது கொள்ள வேண்டும்.

795. வேண்டாம் இந்த நட்பு!

"நாம ஒத்தர்கிட்ட உதவி கேட்டா, முடிஞ்சா நமக்கு உதவி செய்யணும், இல்லேன்னா முடியாதுன்னு சொல்லணும். 

"அதை விட்டுட்டு, எனக்கு உபதேசம் பண்றான். உபதேசம் பண்ண இவன் யாரு? என் அப்பாவா, அண்ணனா? அவனோட உபதேசத்தை நான் கேக்கலேங்கறதுக்காக என்னைக் கண்டபடி பேசிட்டான், அதுவும் அவன் மனைவி முன்னாலேயே! அவமானத்தில எனக்கு அழுகையே வந்துடும் போல ஆயிடுச்சு" என்றான் செண்பகராமன், ஆத்திரத்துடன்.

சொல்லும்போதே, அவன் தொண்டை அடைத்துக் கொண்டது. 

"'யாரைச் சொல்றீங்க? என்ன நடந்தது?" என்றாள் அவன் மனைவி மஞ்சுளா.

"எல்லாம் என் நண்பன் அமுதனைப் பத்தித்தான். அமுதன்னு பேரை வச்சுக்கிட்டு விஷத்தைக் கக்கிட்டான். அவனை என் நண்பன்னு சொல்லிக்கவே எனக்கு அவமானமா இருக்கு. இதோட அவன் நட்புக்குத் தலை முழுகிட்டேன்."

"என்ன நடந்தது"

"இந்த கிரிப்டோ கரன்சின்னெல்லாம் சொல்றாங்க இல்ல?"

"ஆமாம். நான் கேள்விப்படிருக்கேன். ஆனா, அது என்னன்னு புரியல. ஏதாவது வெளிநாட்டு கரன்சியா?"

"வெளிநாட்டு கரன்சியெல்லாம் இல்ல. பிட்காயின் தெரியுமா?"

"பேர்தான் தெரியும். ஆனா பாத்ததில்ல. கோல்ட் காயின்தான் பாத்திருக்கேன்!" என்றாள் மஞ்சுளா.

"அதைப் பாக்க முடியாது. அதையெல்லாம் வர்ச்சுவல் கரன்சிம்பாங்க. அதாவது இல்லாத ஒண்ணை இருக்கற மாதிரி வச்சுக்கறது!"

"இல்லாததை இருக்கற மாதிரி வச்சுக்கிட்டு என்ன பண்றது?" என்றாள் மஞ்சுளா, அப்பாவித்தனமாக.

"பிட்காயின், லூனா, இன்னும் சில கிரிப்டோகரன்சி எல்லாம் இருக்கு. எல்லாமே வர்ச்சுவல் கரன்சிதான். ரிலயன்ஸ், மாருதி மாதிரி கம்பெனி ஷேர்களையெல்லாம் பங்குச் சந்தையில வாங்கி விக்கற மாதிரி, கிர்ப்டோகரன்சிக்கும் ஒரு எக்ஸ்சேஞ்ச் இருக்கு. அதுல இதையெல்லாம் வாங்கி வித்தா நல்ல லாபம் வரும்."

"'யாருக்கு?"

செண்பகராமன் மஞ்சுளாவை முறைத்துப் பார்த்தான். மனைவிக்குத் தெரியாத ஒரு விஷயத்தை அவளுக்கு விளக்கும் உற்சாகத்தில், சற்றே மறக்கப்பட்டிருந்த கோபமும், வருத்தமும் மீண்டும் மேலெழுந்தன.

'இவள் தெரியாமல் கேட்கிறாளா, அல்லது என்னைக் கிண்டல் செய்கிறாளா?'

"எல்லாருக்கும்தான். ஆனா சில சமயம் லாபம் வரும், சில சமயம் நஷ்டம் வரும். ஸ்டாக் மார்க்கெட்ல வர மாதிரிதான்."

"ஏங்க, ஸ்டாக் மார்க்கெட்ல ஒரு கம்பெனிக்கு நல்ல லாபம் வந்தா, அதோட விலை ஏறும். நஷ்டம் வந்தாலோ, அல்லது லாபம் குறைஞ்சாலோ விலை இறங்கும். இந்த வர்ச்சுவல் கரன்சி விலையெல்லாம் எப்படி ஏறி இறங்கும்?"

"அமுதன் கேக்கற மாதிரியே நீயும் கேக்கறியே! நீ நினைக்கிற மாதிரி ஸ்டாக் மார்க்கெட்ல விலை ஏறுவது, இறங்குவதெல்லாம் ஒரு கம்பெனியோட லாப நஷ்டத்தை மட்டும் வச்சு இல்ல. டிமாண்ட், சப்ளைன்னெல்லாம் இருக்கு. பொருளாதாரம் படிச்சிருந்தாதான் அதெல்லாம் புரியும்!"

"அது சரிதான். நான் படிக்கல. ஆனா நீங்க கூட ஃபிசிக்ஸ்தானே படிச்சிருக்கீங்க? பொருளாதாரம் படிக்கலியே! அது இருக்கட்டும். நான் கேட்ட மாதிரிதான் அமுதனும் கேட்டார்னு சொன்னீங்க. அவர் எதுக்கு இப்படிக் கேட்டாரு? உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன நடந்ததுன்னு நீங்க சொல்லவே இல்லையே!" என்றாள் மஞ்சுளா.

"கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்ல முதலீடு பண்ணினா நல்ல லாபம் கிடைக்கும்னு தோணிச்சு. முதலடு செய்ய எங்கிட்ட பணம் இல்ல. அவகிட்ட இருபத்தையாயிரம் ரூபாய் கடன் கேட்டேன். அதுக்குத்தான் இப்படியெல்லாம் கேட்டு, எனக்கு உபதேசம் பண்ணி, ஏதாவது மியூசுவல் ஃபண்ட்ல எஸ் ஐ பி மாதிரி மாசம் ஆயிரம் ரூபா போட்டாக் கூட, அதிக ரிஸ்க் இல்லாம ஓரளவு லாபம் வர வாய்ப்பு இருக்குன்னு எனக்கு உபதேசம் பண்றான். 

"அதைச் சொல்ல இவன் எதுக்கு? அதுதான் டிவியில தோனி கூட சொல்றாரே! பணம் கொடுக்காட்டாக் கூடப் பரவாயில்ல, என்னை பொறுப்பில்லாதவன், ஒரு விஷயத்தில ஈடுபடறதுக்கு முன்னால கொஞ்சம் கூட யோசனை பண்ணாம கண்ணை மூடிக்கிட்டு பள்ளத்தில விழற அவசரக் குடுக்கைன்னெல்லாம் சொல்லி என்னைக்  கண்டபடி திட்டிட்டான். 

"நம்மகிட்ட சிரிச்சுப் பேசிக்கிட்டிருந்த ஒரு நண்பன் இப்படியெல்லாம் பேசினது எனக்கு எவ்வளவு அதிர்ச்சியா இருந்தது தெரியுமா? இன்னும் அஞ்சு நிமிஷம் அங்கே இருந்திருந்தேன்னா அழுதே இருப்பேன். 'போடா, உனக்கும், எனக்கும் நடுவில இனிமே எந்தப் பேச்சும் இல்லே'ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்."

நடந்ததை மனைவியிடம் பகிர்ந்து கொண்ட பிறகு, மனச்சுமை சற்றே குறைந்தது போல் இருந்தது செண்பகராமனுக்கு.

"என்னங்க! கிரிப்டோகரன்சி சந்தையில பெரிய வீழ்ச்சியாமே! எல்லா கரன்சியும் ரொம்ப விலை குறைஞ்சுடுச்சாமே! நீங்க சொன்னீங்களே லூனாவோ, ஏதோ ஒண்ணு, அதோட விலை பூஜ்யத்துக்கிட்ட வந்துடுச்சாமே! டிவியில சொன்னாங்க!" என்றாள் மஞ்சுளா.

செண்பகராமன் மௌனமாக இருந்தேன்.

"அன்னிக்கு நீங்க சொன்னபோதே நினைச்சேன், உங்க நண்பர் உங்களோட நன்மைக்காகத்தான் உங்ககிட்ட அப்படிப் பேசி இருப்பாருன்னு. கடுமையாப் பேசினாதான், நீங்க இதில இறங்காம இருப்பீங்கன்னு நினைச்சுக் கூட அப்படிப் பேசி இருக்கலாம். ஆனா, அன்னிக்கு நீங்க அவர் மேல கோபமா இருந்தப்ப, நான் எதுவும் சொல்ல விரும்பல. அவர் சொன்ன மாதிரியே நடந்திருக்கு. நீங்க முதலீடு பண்ணி இருந்தா, உங்களுக்குப் பெரிய நஷ்டம் வந்திருக்கும். மறுபடி அதோட விலைகள்ளாம் ஏறுமான்னு தெரியாது. 

"வேணுங்கறவங்கதான் அழ அழச் சொல்லுவாங்கன்னு ஒரு பழமொழி இருக்கு. நமக்கு நல்லது நினைக்கிறவங்கதான் நாம மனசு வருத்தப்பட்டாலும் பரவாயில்லேன்னு நினைச்சு நம்ம நன்மைக்காக நம்மகிட்ட கடுமையாப் பேசுவாங்க. அமுதன் மாதிரி ஒரு நண்பர் உங்களுக்கு மட்டும் இல்ல, எல்லாருக்குமே வேணும். இந்த ரெண்டு மாசத்தில உங்க நண்பர் உங்களுக்கு நிறைய தடவை ஃபோன் பண்ணினாரு. நீங்க ஃபோனை எடுக்கல. நீங்களே ஃபோன் பண்ணி அவர்கிட்ட பேசி பழையபடி நட்போட இருங்க."

மஞ்சுளா கணவனின் முகத்தைப் பார்த்தாள். செண்பகராமன் மௌனமாக இருந்தான். 

குறள் 795:
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.

பொருள்: 
நாம் தவறு செய்ய முற்படும்போது நம் மனம் நோகச் சொல்லித் தடுத்தும்,தவறைக் கண்டித்தும்,உலக வழக்கினை அறிந்து செயல்படும் ஆற்றலைப் பெற்றும் உள்ளவரை அறிந்து அவர் நட்பைக் கொள்க.

796.முத்துசாமியின் 'டைம்லைன்'

"என்னடா இது? கம்பெனியிலே சீ ஈ ஓவா இருந்தப்ப இது மாதிரி சார்ட் எல்லாம் பயன்படுத்தி இருப்பே. இப்ப ரிடயர் ஆனப்பறமும் ஏதோ சார்ட் எல்லாம் போட்டுக்கிட்டிருக்கே!" என்றார் சாம்பசிவம்,

ஒரு தாளில் பென்சிலால் ஏதோ மும்முரமாக வரைந்து கொண்டிருந்த முத்துசாமி, சந்தடி இல்லாமல் பின்னால் வந்து நின்ற தன் நண்பனை அப்போதுதான் கவனித்தவராக பேப்பரைக் கீழே வைத்து விட்டு, "வாடா! இப்படித்தான் பூனை மாதிரி சத்தமில்லாம பின்னால வந்து நின்னு என்னை பயமுறுத்தறதா?" என்றார், சிரித்துக் கொண்டே.

"எவ்வளவோ பெரிய சவால்களையெல்லாம் கொஞ்சம் கூட பயப்படாம சமாளிச்ச உன்னை யாராவது பயமுறுத்த முடியுமா என்ன? ஆனாலும், அறைக் கதவைத் திறந்து வச்சுக்கிட்டு, வாசலுக்கு முதுகைக் காட்டிக்கிட்டு உக்காந்துக்கிட்டிருந்தா, என்னை மாதிரி அப்பாவிக்கெல்லாம் கூட கொஞ்சம் பயமுறுத்திப் பாக்கலாமேன்னுதான் தோணும்!"

"நீயா அப்பாவி? உன்னைப் பாத்து எத்தனை பேரு 'அடப்பாவி!'ன்னு அலறி இருக்காங்கன்னு எனக்குத்தானே தெரியும்? காத்து வரதுக்காக் கதவைத் திறந்து வச்சிருக்கேன். கதவுப் பக்கம் பாத்து உக்காந்தா கிளேர் அடிக்கும். அதனாலதான் முதுகைக் காட்டிக்கிட்டு உக்காந்திருக்கேன். போதுமா?"

"கம்பெனி மீட்டிங்ல எல்லாம் பேசற மாதிரி, முக்கியமான கேள்வியை விட்டுட்டு மற்றதுக்கெல்லாம் பதில் சொல்ற! என்னவோ வரைஞ்சிக்கிட்டிருக்கியே என்னifனு கேட்டேன்."

"அதுவா? என் வாழ்க்கையோட டைம்லைனைப் போட்டுக்கிட்டிருக்கேன்!"

"பிசினஸ்ல பயன்படுத்தற டூலையெல்லாம் சொந்த வாழ்க்கையில பயன்படுத்தற! எங்கே காட்டு" என்று முத்துசாமியின் கையிலிருந்த தாளை வாங்கிப் பார்த்தார் சாம்பசிவம்.

சற்று நேரம் அதை உற்றுப் பார்த்தபின், "உன் வாழ்க்கையைப் பல கட்டங்களாப் பிரிச்சு ஒவ்வொண்ணுக்கும் ஒரு லேபில் கொடுத்திருக்கே, 'ஆரம்ப அனுபவம்,' 'இயல்பான முன்னேற்றம்,' 'சவால்கள் நிறைந்த முன்னேற்றம்,' 'சோதனை மேல் சோதனை,' இன்னும் சில லேபில்கள். எதுக்கு இது?" என்றார்.

"சும்மாதான்! கம்பெனியில முந்தின வருஷ செயல்பாடுகளை ரிவியூ பண்ற மாதிரி, இதுவரையிலுமான என் வாழ்க்கையைப் பத்தி ஒரு ரிவியூ. ஆனா கம்பெனியில ரிவியூ அடிப்படையில எதிர்காலத்தில நம் செயல்பாடுகளை மாத்திக்கலாம். ஆனா என் வாழ்க்கையில அப்படிச் செய்ய முடியாது. மீதி இருக்கிறது செயல்பாடுகள் இல்லாத வாழ்க்கைதானே? இது ஒரு போஸ்ட்மார்ட்டம்னு சொல்லலாம், அவ்வளவுதான்!" என்றார் முத்துசாமி.

முத்துசாமி பேசுவதைக் கேட்டுக் கொண்டே சார்ட்டைப் பார்த்துக் கொண்டிருந்த சாம்பசிவம், "இது என்ன? ஒவ்வொரு கட்டத்துக்கும் மார்க் போடற மாதிரி ஏதோ போட்டிருக்கியே!" என்றார்.

"ஆமாம். அது மதிப்பெண் மாதிரி ஒரு குறியீடுதான். டைம்லைன்ல இருக்கிற ஒவ்வொரு கட்டமும் எனக்கு எந்த விதத்தில வாழ்க்கையில எந்த அளவுக்குப் பயனுள்ளதா இருந்ததுங்கறதுக்கான மதிப்பெண் அது."

"சோதனை மேல் சோதனைங்கற கால கட்டத்துக்குத்தான் அதிகமா மார்க் கொடுத்திருக்கே! அது எப்படி உன் வாழ்க்கையில அதிகப் பயனுள்ள காலமா இருந்திருக்கும்?" என்றார் சாம்பசிவம் வியப்புடன்.

"நான் பல சவால்களையும், தோல்விகளையும், துன்பங்களையும் அனுபவிச்ச காலம் அது. அப்ப எனக்கு ஏராளமான நண்பர்கள் இருந்தாங்க. அவங்க எல்லாருமே எங்கிட்ட அன்பும், அக்கறையும் கொண்டவங்கன்னு நான் நம்பின காலம் அது. 

"ஆனா, என்னோட சோதனைக் காலத்தின்போதுதான், எந்தெந்த நண்பர்கள் எங்கிட்ட உண்மையான அக்கறை கொண்டிருந்தாங்க, எந்தெந்த நண்பர்கள் போலியா நட்பு பாராட்டிட்டு, எனக்கு கஷ்டம் வந்தப்ப எங்கிட்டேந்து ஒதுங்க ஆரம்பிச்சாங்கன்னு எனக்குப் புரிஞ்சது. 

"என்னோட ரொம்ப நெருக்கமா இருந்ததா நான் நினைச்ச சில நண்பர்கள் எங்கிட்டேந்து விலகிப் போனாங்க. நான் அதிகம் நெருக்கம் இல்லைன்னு நினைச்ச சில நண்பர்கள் எனக்கு ஆதரவா என் பக்கத்தில நின்னபோது, அவங்க எங்கிட்ட எவ்வளவு அன்போடயும் அக்கறையோடயும் இருந்தாங்கங்கறதை அத்தனை காலமா புரிஞ்சுக்காம இருந்தது எனக்கு வெட்கமாகக் கூட இருந்தது.

 "என் உண்மையான நண்பர்கள் யாருங்கறதை எனக்குப் புரிய வச்சதை விட எனக்கு அதிகப் பயனுள்ள விஷயம் வேற எதுவா இருக்க முடியும்? அதனாலதான் அந்தக் காலத்தை அதிகப் பயனுள்ளதா நினைச்சு அதுக்கு அதிக மார்க் கொடுத்திருக்கேன். உன்னை மாதிரி உண்மையான நண்பர்களை அன்னிக்குத்தான் என்னால அடையாளம் காண முடிஞ்சது. அதைக் கண்டுபிடிக்க எனக்கு உதவினதே அந்த சோதனைக் காலம்தானே!"

உணர்ச்சிப் பெருக்கில், முத்துசாமி தன் நண்பனின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

குறள் 796:
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.

பொருள்: 
தீமை வந்தால் அதிலும் ஒரு நன்மை உண்டு. அந்தத் தீமைதான் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் கருவியாகிறது.

797.நண்பனின் கோபம்!

"உங்கிட்ட எவ்வளவோ நல்ல விஷயம் இருக்கு. ஆனா ஒரே ஒரு வேண்டாத விஷயமும் இருக்கு!" என்று நாகராஜனுக்கு நெருங்கியவர்கள் சிலர் அவனிடம் பலமுறை கூறி இருக்கிறார்கள்.

அவர்கள் குறிப்பிட்டது முரளியுடன் அவனுக்கு இருந்த நட்பைப் பற்றி.

அவன் மனைவி கமலா கூடக் கேட்டாள். "உங்களுக்கு இப்படிப்பட்ட சிநேகம் தேவைதானா?"

"ஏன் எல்லாரும் இப்படிச் சொல்றீங்கன்னே தெரியல! அவனுக்கு நான் ஏதோ ஒரு உதவி செஞ்சேன். அதுலேந்து அவன் எங்கிட்ட நட்பா இருக்கான். நானும் பதிலுக்கு அவனோட நட்பா இருக்கேன். இதில என்ன தப்பு?" என்றான் நாகராஜன், சற்று கோபத்துடன்.

"அவர் தன்னை ஒரு பெரிய புத்திசாலின்னு நினைச்சுக்கிட்டு உங்களுக்கு நிறைய யோசனை சொல்றாரு. நீங்களும் அவர் பேச்சைக் கேட்டு சில காரியங்கள்ள இறங்கறீங்க. அதெல்லாம் தோல்வியிலதானே முடியுது?"

"முரளிக்கு சொந்தத் தொழில் செய்யணும்னு ஆர்வம் உண்டு. அவன் வேலையில இருந்தாலும், சைடில ஏதாவது சின்னதா தொழில் செஞ்சுக்கிட்டிருப்பான். சில முயற்சிகள்ள என்னையும் சேந்துக்க சொல்வான். அவன் சொன்னததைக்  கேட்டு சில தொழில்கள்ள ஈடுபட்டதால எனக்குக் கொஞ்சம் நஷ்டம் ஏற்பட்டிருக்குங்கறது உண்மைதான். அதுக்காக அவனை எப்படிக் குத்தம் சொல்ல முடியும்?"

"சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க! காளான் வளக்கறதிலேந்து, ஈமுக் கோழிப் பண்ணையில முதலீடு செய்யற வரைக்கும் என்ன விளம்பரம் வந்தாலும் அத்தனையிலேயும் முதலீடு பண்ணலாம்னு உங்களுக்கு அவரு யோசனை சொல்லி இருக்காரு. எத்தனையோ வியாபார விளம்பரம் வரும். அத்தனையையும் நம்பறாருன்னா, அவரு யோசிக்கிறதே இல்லேன்னுதானே அர்த்தம்? நல்ல வேளை எல்லாத்திலேய்ம் முதலீடு பண்ண அவர்கிட்ட பணம் இல்ல. நீங்களும் சிலதிலதான் முதலீடு பண்ணினீங்க. எல்லாமே நஷ்டம்தான். எத்தனை பணம் போயிருக்கும்னு நினைச்சுப் பாத்தீங்களா? ஏதோ நீங்க நிறைய சம்பாதிக்கிறீங்க. அதனால அந்த இழப்பெல்லாம் உங்களுக்குப் பெரிசாத் தோணல!" என்றாள் கமலா.

நாகராஜன் பதில் சொல்லவில்லை.

முரளியின் ஆலோசனைகளைக் கேட்பது தனக்கு இழப்புகளைத்தான் ஏற்படுத்தும் என்பதை நாகராஜனே காலப்போக்கில் உணர ஆரம்பித்து அவன் ஆலோசனைகளைப் புறக்கணிக்க ஆரம்பித்தான்.

"பெரிய பண்ணை வச்சிருக்காங்க. ஒரு லட்சம் முதலீடு செஞ்சா, மாசா மாசம் பத்தாயிரம் ரூபா வருமானம் வரும்னு உத்தரவாதம் கொடுக்கறாங்க. சின்ன முதலீடு, பெரிய லாபம்!" என்றான் முரளி.

"அவ்வளவு பெரிய பண்ணை வச்சிருக்கறவங்க எதுக்கு மத்தவங்களை முதலீடு செய்யச் சொல்றாங்க? அவங்களுக்கு அத்தனை வருமானம் வருமா, சொன்னபடி பத்தாயிரம் ரூபா கொடுக்க முடியுமா இதெல்லாம் எப்படித் தெரியும்?" என்றான் நாகராஜன்.

"வீடியோ போட்டிருக்காங்க பாரு. 100 ஏக்கர் பண்ணை. தென்னை, வாழை, காய்கறிகள், பழங்கள்னு நிறைய பயிர்கள் இருக்கு. தினமும் வியாபாரம் நடக்கும், லட்சக்கணக்கில ரொக்கமாவே வருமானம் வரும். சொன்னபடி நிச்சயமாக் கொடுத்துடுவாங்க. எங்கிட்ட ஒரு லட்ச ரூபா இல்ல. இருந்தா நானே முதலீடு பண்ணிடுவேன். நீ அம்பதாயிரம் கொடுத்தா ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு லட்சம் முதலீடு பண்ணலாம்!" என்றான் முரளி.

"என்னை விடுப்பா! நான் இனிமேயும் நஷ்டப்படத் தயாராயில்ல!" என்றான் நாகராஜன்.

"இனிமேயும்னா? என்னால ஏற்கெனவே உனக்கு நிறைய நஷ்டம் ஆயிட்ட மாதிரி பேசற!" என்றான் முரளி. சற்றுக் கோபத்துடன்.

"இல்லையா பின்னே?"

"உன்னோட நன்மைக்காக சில பிசினஸ் ஐடியாக்களை அப்பப்ப உங்கிட்ட சொல்லி இருக்கேன். பிசினஸ்னா ரிஸ்க் இருக்கத்தான் செய்யும். நான் ஏதோ உனக்குக் கெடுதல் செஞ்சுட்ட மாதிரி பேசற! உன்னோட நட்பு வச்சுக்கிட்டதே தப்பு!" என்று சொன்னபடியே கோபமாக எழுந்து வெளியேறினான் முரளி.

உள்ளிருந்து அவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த கமலா வெளியே வந்து, "கோவிச்சுக்கிட்டுப் போறாரே! மறுபடி வருவாரா, இல்ல, ஒரேயடியா நட்பை முறிச்சுப்பாரா?" என்றாள்.

"ஒருவேளை அவன் அப்படி செஞ்சா, அவன் மூலமா முதல் தடவையா லாபம் வந்ததா நினைச்சுக்க வேண்டியதுதான்!" என்றான் நாகராஜன் சிரித்தபடியே.

குறள் 797:
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.

பொருள்: 
ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது,அறிவில்லாதவருடன் செய்து கொண்ட நட்பைக் கைவிடுதலாகும்.

798.வீட்டுக்கு வந்த நண்பன்

நீண்ட நாட்களுக்குப் பிறகு எதிர்பாராமல் தன் வீட்டுக்கு வந்த தன் நண்பன் ஆனந்தைப் பார்த்ததும்,  ரகுவுக்கு வியப்பையும் மீறி ஒருவித சோர்வு ஏற்பட்டது.

"வா!" என்றான் ரகு, உற்சாகமில்லாமல்.

 இதுவே ஆறு மாதங்களுக்கு முன்பென்றால், நண்பனை "வாடா!" என்று அழைத்து அவன் கையைப் பிடித்து உள்ளே அழைத்து வந்திருப்பான்.

வீட்டுக்கு வந்த நணபனை "உட்கார்!" என்று சொல்லக் கூட ரகுவுக்கு மனமில்லை. ஆனந்த் தானே உட்கார்ந்தான்.

"நடக்கக் கூடாததெல்லாம் நடந்துடுச்சு. நல்ல வேளையா எல்லாம் நல்லபடியா முடிஞ்சுடுச்சு!" என்றான் ஆனந்த்.

நல்லபடியாக முடிந்து விட்டதா? 

அலுவலகத்தில் யாரோ செய்த மோசடிக்கான பழி தன் மேல் விழுந்து கைது செய்யப்பட்டு ஜாமீன் கிடைக்காமல் மூன்று மாதம் சிறையில் இருந்து விட்டு, ஆறு மாதங்கள் பணி இடைநீக்கத்துக்குப் பின் போலீஸ் விசாரணையில் உண்மைக் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்ட பின் தன் மீது சமத்தப்பட்ட குற்றச்சாட்டு விலக்கிக் கொள்ளப்பட்டு தான் மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டதை நல்லபடியாக முடிந்து விட்டது என்று கடந்து போக முடியுமா?

சற்று நேரம் ஏதோ பேசிக் கொண்டிருந்து விட்டு ஆனந்த் கிளம்பினான்.

கிளம்பும் சமயத்தில், "உன் மனைவி எங்கே? எங்கேயாவது வெளியில போயிருக்காங்களா என்ன?" என்றான் ஆனந்த்.

"உள்ளே ஏதாவது வேலையா இருப்பா" என்றான் ராமு சுருக்கமாக.

ஆனந்த் கிளம்பிச் சென்றதும்,உள்ளிருந்து வந்த ரகுவின் மனைவி சாந்தா, "எங்கே அவரு? போயிட்டாரா? உங்களுக்கு சோதனையான காலத்தில நமக்கு அதிகம் பழக்கமில்லாத சில பேர் கூட வந்து நமக்கு ஆறுதல் சொன்னாங்க? நண்பன்னு சொல்லிட்டு இத்தனை வருஷமா பழகின இவரு எட்டிக் கூடப் பாக்கல. ஒரு ஃபோன் பண்ணிக் கூட  ஆறுதல் சொல்லல. இப்ப, எல்லாம் சரியானப்பறம், மறுபடி வந்து ஒட்டிக்கப் பாக்கறாரு. அதனாலதான் வீட்டுக்கு வந்தவருக்கு ஒரு காப்பி கூடக் கொடுக்காம நான் உள்ளேயே இருந்துட்டேன். அவர் மூஞ்சியைப் பாக்கவே எனக்குப் பிடிக்கல?" என்றாள், கோபம் கொப்பளிக்கும் குரலில்.

"நான் மட்டும் அவன் மூஞ்சியை இனிமே ஏன் பாக்கப் போறேன்? நான் அவங்கிட்ட அலட்சியமா நடந்துக்கிட்டது, நீ உள்ளேயிருந்து வெளியே வராமல் இருந்தது இதையெல்லாம் வச்சே அவனுக்குப் புரிஞ்சிருக்கும் அவன் கூட இனிமே நான் நட்பு வச்சுக்க மாட்டேன்னு. அவனை விடு. நடந்ததையெல்லாம் நினைச்சா எனக்கு மனசு ஆறல, எனக்கு இப்படி ஒரு அநியாயம் நடந்துடுச்சேன்னு" என்றான் ரகு.

"இதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மறக்கப் பாக்கணுங்க. முயற்சி செஞ்சா கொஞ்ச நாள்ள இந்த அனுபவத்தோட நினைவெல்லாம் தேஞ்சு போயிடும்.  ஆனந்த் மாதிரி ஆட்களோட நட்பை உதறின மாதிரி, இது மாதிரி அனுபவங்களோட நினைவையும் விட்டொழிச்சாத்தான் நம்மால சந்தோஷமா இருக்க முடியும்" என்றாள் சாந்தா.

குறள் 798:
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.

பொருள்: 
ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்க வேண்டும், அதுபோல், துன்பம் வந்த போது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும்.


799.கண் மூடும் வேளையிலும்!

புருஷோத்தமன் படுத்த படுக்கையாகி இரண்டு மாதங்கள் ஆகி விட்டன. 

ஒரு மாதம் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பிறகு, "இனிமே எந்த முன்னேற்றமும் ஏற்படாது. வீட்டுக்கு அழைச்சுக்கிட்டுப் போயிடுங்க. எவ்வளவு நாள்இருப்பார்னு சொல்ல முடியாது" என்று மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர்.

பருஷோத்தமனை வீட்டுக்கு அழைத்து வந்த பிறகு, அவர் மனைவி சரஸ்வதி அவர் படுக்க வைக்கப்பட்டிருந்த கட்டிலுக்கு அருகிலேயே அமர்ந்திருந்தாள்.

புருஷோத்தமன் பெரும்பாலும் நினைவில்லாமல்தான் இருப்பார். அவ்வப்போது கண் விழிப்பார். கண் விழித்த பின், சில மணி நேரம் நல்ல நினைவுடன் மனைவியிடம் பேசிக் கொண்டிருப்பார். 

அவர்கள் திருமண வாழ்க்கை, குடும்ப நிகழ்வுகள் என்று பலவற்றைப் பற்றி நினைவு கூர்ந்து பேசுவார். அப்போதெல்லாம் அவர் முகத்தில் ஒரு மலர்ச்சி தெரியும்.

திருமணமாகிச் சிறிது காலத்துக்கெல்லாம், புருஷோத்தமன், தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு சொந்தத் தொழில் துவக்கினார். 

புருஷோத்தமனின் தாய், அவருடைய நண்பர்கள் சிலர், சரஸ்வதி உட்படப் பலர் எச்சரித்தும், புருஷோத்தமன் துணிச்சலாகச் சொந்தத் தொழில் முயற்சியில் இறங்கினார்.

அனைவரும் எச்சரித்தபடியே, இரண்டு மூன்று வருடங்களுக்கு புருஷோத்தமன் பல சோதனைகளைச் சந்தித்தார். சேமிப்பு அத்தனையும் கரைந்து விட்டது. 

குடும்பச் செலவுக்கே பணம் போதாத நிலை ஏற்பட்டது. ஆனால் யாரிடமும் கடன் கேட்பதில்லை என்று புருஷோத்தமன் உறுதியாக இருந்தார்.

கணவனும் மனைவியும் எப்படியோ பல்லைக் கடித்துக் கொணடு நிலைமையைச் சமாளித்தார்கள்.

பிறகு சிறிது சிறிதாக நிலை மாறி, அவர் தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டு, ஓரிரு வருடங்களில் தொழில் பெரிதாக வளர்ந்து விட்டது, வசதியான வாழ்க்கையும் அமைந்தது.

அந்த நாட்களைப் பற்றிப் பேசும்போது, புருஷோத்தமனிடம் வருத்தம் இருக்காது, பெருமிதம்தான் இருக்கும். பெரும் சவால்களைச் சமாளித்து வெற்றி அடைந்து விட்ட பெருமிதம்!

சில சமயம், அவர்கள் மகன் முகுந்தனும் அருகில் அமர்ந்து தன் தந்தை கூறுவற்றைக் கேட்டுக் கொண்டிருப்பான். 

புருஷோத்தமன் ஒரு விஷயத்தைப் பற்றி நினைவுகூரும்போது, அது பற்றிய விவரங்களை சரஸ்வதி விவரமாக மகனிடம் கூறுவாள். புருஷோத்தமன் அவள் கூறுவதை ரசித்துக் கேட்டுத் தலையாட்டி மகிழ்வார்.

ருநாள், புருஷோத்தமன் தன் தொழில் முயற்சியின்போது ஏற்பட்ட சவால்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென்று அவர் முகத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. 

முகத்தில் இருந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் மறைந்து, சோகமும், ஏமாற்றமும் குடிகொண்டன. "ரமணி, ரமணி" என்று முணுமுணுத்து விட்டுப் பிறகு கண்களை மூடிக் கொண்டார்.

"யாரும்மா ரமணி?" என்றான், அருகில் அமர்ந்து தந்தை பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த முகுந்தன்.

"ரமணின்னு உன் அப்பாவுக்கு ஒரு நண்பர் இருந்தார். அவரைத் தன்னோட நெருங்கின நண்பன்னு உன் அப்பா நினைச்சாரு. ரமணி அடிக்கடி நம் வீட்டுக்கு வருவாரு. அப்பாவும் அவரும் ரொம்ப நேரம் பேசிக்கிட்டிருப்பாங்க. ஆனா உன் அப்பா கஷ்டமான நிலையில இருந்தப்ப, அவர் நம்ம வீட்டுப் பக்கமே வரல. அப்ப ஃபோன் எல்லாம் கிடையாது.

"ஒருநாள் உன் அப்பா ரமணியைப் பாக்க அவர் வீட்டுக்குப் போயிருந்தாரு. தன்னோட கஷ்டங்களைப் பத்தி நண்பன்கிட்ட பேசினா ஆறுதலா இருக்கும்னு நினைச்சுத்தான் போனாரு. 

"அப்பா அவர் வீட்டுக்குப் போனப்ப, ரமணி வீட்டில இல்லேன்னு அவர் மனைவி அப்பாகிட்ட சொன்னாங்க. ஆனா உங்கப்பா வந்ததைப் பாத்ததும் முன் அறையிலிருந்த ரமணி அவசரமா எழுந்து உள்ளே போனதை உன் அப்பா பாத்துட்டாரு. 

"தான் ஏதோ கடன் கேக்கப் போறோம்னு நினைச்சுத்தான் ரமணி அப்படிப் பண்ணி இருப்பார்னு உன் அப்பாவுக்குப் புரிஞ்சுடுச்சு. 

"தனக்கு நெருக்கமா இருந்த நண்பன்கிட்ட, தன்னோட கவலைகளைச் சொல்லி ஆறுதல் தேடலாம்னு வந்தப்ப அந்த நண்பன் அப்படி நடந்துக்கிட்டது உன் அப்பாவுக்குப் பெரிய அதிர்ச்சியா அமைஞ்சுடுச்சு. 

"இத்தனை வருஷமா, எத்தனையோ தடவை உங்கப்பா எங்கிட்ட இதைச் சொல்லி மாய்ஞ்சு போயிருக்காரு. அதை மறந்துடுங்கன்னு நான் எத்தனையோ தடவை சொல்லி இருக்கேன். 

"இப்ப திடீர்னு அது அவருக்கு ஞாபகம் வந்து தொலைச்சிருக்கு! பாரேன், சந்தோஷமாப் பேசிக்கிட்டிருந்தவரோட முகம் ஒரு நொடியில எப்படி மாறிப் போயிடுச்சுன்னு!"

மகனிடம் விவரங்களைக் கூறி விட்டு, சரஸ்வதி கணவனின் முகத்தைப் பார்த்தாள். சற்றுமுன் மலர்ந்திருந்த முகத்தில் ஒரு வாட்டம் வந்து குடிபுகுந்திருந்தது. 

புருஷோத்தமனின் கண்கள் மூடி இருந்ததால், ரமணியைப் பற்றி சரஸ்வதி மகனிடம் கூறியதை அவர் கேட்டாரா அல்லது நினைவு இழந்து விட்டாரா என்று சரஸ்வதிக்குத் தெரியவில்லை.

ஆனால் அதற்குப் பிறகு புருஷோத்தமன் கண்களைத் திறக்கவே இல்லை. 

குறள் 799:
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்.

பொருள்: 
கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பைப் பற்றி, எமன் உயிரை எடுத்துச் செல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை அது வருத்தும்.

800. பெற்றதும், விட்டதும்

"உங்களுக்குத்தான் நாகராஜனைப் பிடிக்கலியே, பின்னே ஏன் அவரோட நட்பை விட மாட்டேங்கறீங்க?" என்றாள் சாரதா.

"எனக்கு நாகராஜனைப் பிடிக்கலேங்கறது சரியில்ல. அவன் குணத்துக்கும் என் குணத்துக்கும் ஒத்து வராது. அவ்வளவுதான். நான் எல்லா விஷயத்திலேயும் நேர்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கணும்னு நினைக்கிறவன். அவன் சின்ன விஷங்களுக்குக் கூடக் குறுக்கு வழியைத் தேடறவன். எலக்டிரிக் டிரெயினுக்கு டிக்கட் வாங்க கியூவில நாலு பேர் நிப்பாங்க. கியூவில நின்னு டிக்கட் வாங்க ரெண்டு மூணு நிமிஷம் ஆகும். ஆனா அவன் கியூவில முதல்ல நிக்கறவர்கிட்ட பணத்தைக் கொடுத்து தனக்கும் சேரர்த்து டிக்கட் வாங்கச் சொல்லுவான். ஏண்டா இப்படிப் பண்றேன்னு கேட்டா, 'கியூ எல்லாம் முட்டாள்களுக்குத்தான். புத்திசாலிகள்வேற வழியை யோசிக்கணும்'னு பெரிய வியூக வகுப்பாளர் மாதிரி பேசுவான். அவன் கூட நான் எங்கேயாவது போகறப்ப இப்படியெல்லாம் அவன் செய்யறதை என்னால ஏத்துக்க முடியறது இல்ல!" என்று விளக்கினான் சங்கர்.

"அப்ப அவரோட நட்பை விட்டொழிக்க வேண்டியதுதானே?"

"அதுக்கு சந்தர்ப்பம் பாத்துக்கிட்டிருக்கேன். அது அநேகமா கிடைச்சுடுச்சுன்னு நினைக்கறேன்" என்ற சங்கர், "எனக்கு ஒரு வேலை இருக்கு. கொஞ்சம் வெளியில போயிட்டு வந்துடறேன்" என்று மனைவியிடம் சொல்லி விட்டுக் கிளம்பினான்.

இரண்டு மணி நேரம் கழித்து வீட்டுக்குத் திரும்பிய சங்கரைப் பார்த்து, "எங்கே போயிட்டு வந்தீங்க?" என்றாள் சாரதா.

"மாசிலாமணின்னு ஒரு தொழிலதிபர் இருக்காரு. அவரு ஒரு பண்புள்ள மனிதர். என் நண்பன் தண்டபாணிக்கு அவர் தூரத்து உறவு. அவர்கிட்ட நட்பு ஏற்படுத்திக்கணும்னு நினைச்சேன். அதுக்கான வாய்ப்பு கிடைக்கல" என்றான் சங்கர்.

"ஏன், தண்டபாணி மூலமா அவரை சந்திச்சிருக்கலாமே!" என்றாள் சாரதா.

"தண்டபாணிக்கு அவர் தூரத்து உறவுதாங்கறதால, அவனே அவரை சாதாரணமாப் போய்ப் பாக்கத் தயங்குவான். அப்படியே அவனோட போய் அவரை ஒரு தடவை நான் பார்த்தாலும், அவர்கிட்ட நெருக்கமா ஆக முடியாதே?"

"அதனால?"

"தற்செயலா ஒரு சந்தர்ப்பம் கிடைச்சது. அவரு ராஜாஜிகிட்ட ரொம்ப மதிப்பு வச்சிருக்கறவர். ராஜாஜி எழுதின கட்டுரைகளைத் தொகுத்து 'சத்யமேவ ஜயதே'ன்னு புத்தகமாப் போட்டிருக்காங்க."

"ஆமாம், உங்ககிட்ட கூட  அந்தப் புத்தகங்கள் ரெண்டு மூணு பகுதியா இருக்கு போலருக்கே!"

"ஆமாம். அதோட நாலு பகுதியும் எங்கிட்ட இருக்கு. ஆனா மாசிலாமணிக்கு ஒரு வால்யூம் கிடைக்கலையாம். ஒரு திருமணத்தில அவரு இதை யார்கிட்டயோ சொல்லிக்கிட்டிருந்ததை தண்டபாணி கேட்டிருக்கான். அதை அவன் எங்கிட்ட சொன்னான். அந்த வால்யூம் எங்கிட்ட இருக்குன்னு சொல்லி, அதை அவங்கிட்ட கொடுத்து, மாசிலாமணி கிட்ட கொடுக்கச் சொன்னேன். அவன் அதைக் கொடுத்ததும், அவரு என்னைப் பாக்கணும்னு சொல்லி இருக்காரு. இப்ப அவரைத்தான் பாத்துப் பேசிட்டு வந்தேன். 'நம்ம ரெண்டு பேருக்கும் ஒத்த கருத்துக்கள் நிறைய இருக்கு. அதனால நாம அடிக்கடி சந்திச்சுப் பேசலாம்னு' அவரு சொன்னாரு. அதனால அவரோட நட்பு கிடைக்கணுங்கற என்னோட விருப்பம் நிறைவேறிடுச்சு!"

"பரவாயில்லையே!"

"அதோட இன்னொரு விஷயம். நாகராஜனோட நட்பை விட்டொழிக்கணும்னு நீ சொல்லிக்கிட்டிருப்ப இல்ல?"

"ஆமாம். அதுக்கு ஏதோ சந்தர்ப்பம் கிடைச்சிருக்குன்னு சொன்னீங்களே!"

"ஆமாம். அவன் எங்கிட்ட பத்தாயிரம் ரூபாய் கடன் கேட்டான். அதை அவனுக்கு கூகுள் பே-ல அனுப்பிட்டேன்"

"என்னங்க இது? அவரு குறுக்கு வழியில போறவருன்னு நீங்கதானே சொன்னீங்க? அவரு பணத்தை ஒழுங்கா திருப்பித் தருவாரா?"

"கண்டிப்பாத் திருப்பித் தர மட்டான்! ஏன்னா, அவன் வேற சில நண்பர்கள் கிட்ட ஆயிரம், ரெண்டாயிரம்னு வாங்கினதையே திருப்பித் தரல. அவங்க ஃபோன் பண்ணினா, ஃபோனைக் கூட எடுக்கறதில்லையாம்!" என்றன் சங்கர், சிரித்தபடி.

"பின்னே ஏன் அவருக்குப் பணம் கொடுத்தீங்க?" என்றாள் சரதா, சற்றுக் கோபத்துடன்.

"இனிமே அவன் என்னைப் பாக்க வர மாட்டான். ஃபோன் கூடப் பண்ண மாட்டான். அவன் நட்பை விட்டொழிக்க இதை விட சிறந்த வழி வேற என்ன இருக்க முடியும்?"

"அதுக்காக பத்தாயிரம் ரூபா நஷ்டப்படணுமா?"

"நான் என்னோட புத்தகங்களை யாருக்கும் இரவல் கூடக் கொடுக்க மாட்டேன்னு உனக்குத் தெரியும். ஆனா மாசிலாமணியோட நட்பைப் பெறணுங்கறதுக்காக, நானே வலுவில ஒரு புத்தகத்தைக் கொடுத்து, அதன் மூலமா அவர் நட்பைத் தேடிக்கிட்டேன். அதே மாதிரி, நாகராஜனோட நட்பை விட்டொழிக்க, பத்தாயிரம் ரூபா போனாலும் பரவாயில்லேன்னு அவனுக்குக் கடன் கொடுத்தேன். ஒண்ணு நமக்குக் கிடைக்கறதுக்கு நாம ஒரு விலை கொடுக்கிற மாதிரி, ஒண்ணை விட்டொழிக்கவும் சில சமயம் நாம ஒரு விலை கொடுக்க வேண்டி இருக்கு!" என்றான் நாகராஜன். 

குறள் 800:
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.

பொருள்: 
குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ள வேண்டும், ஒத்த பண்பு இல்லாதவருடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிட வேண்டும்.

அதிகாரம் 81 - பழைமை
அதிகாரம் 79 - நட்பு

 அறத்துப்பால்                                               காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...