அதிகாரம் 107 - இரவச்சம் (யாசித்தலுக்கு அஞ்சுதல்)

திருக்குறள்
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 107
இரவச்சம (யாசித்தலுக்கு அஞ்சுதல்)

1061. ஏன் உதவி கேட்கவில்லை?

"இன்னும் ஒரு வாரத்தில ஆபரேஷன் பண்ணணும்!" என்றார் டாக்டர். "முடிவு பண்ணிட்டுச் சொல்லுங்க!"

டாக்டரின் அறையிலிருந்து வெளியே வந்ததும், "என்னங்க இப்படிச் சொல்றாரு?" என்றாள் சுகுணா.

"ஏற்கெனவே நமக்குத் தெரிஞ்சதுதானே? ஸ்கேன் எடுத்துப் பார்த்து ஏற்கெனவே ஒரு டாக்டர் சொன்னதை சரிபார்க்கத்தானே இவர்கிட்ட வந்தோம்?" என்றான் மோகன்ராஜ்.

"அது சரி. பணத்துக்கு எங்கே போறது?"

"வீட்டில போய்ப் பேசலாம்" என்றான் மோகன்ராஜ்.

வீட்டுக்குச் சென்றதும், தன்னிடம் ரொக்கமாக இருக்கும் பணம், வங்கியில் இருந்த வைப்புத் தொகைகளை எடுத்தால் கிடைக்கக் கூடிய பணம், அலுவலகத்தில் கிடைக்கும் குறைந்த காலக் கடன் எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தபோது, சமாளித்து விடலாம் என்று தோன்றியது.

"அப்படியும் போதலேன்னா, உன்னோட சங்கிலியை அடகு வச்சுக் கடன் வாங்கிக்கலாம்!" என்றான் மோகன்ராஜ்.

"ஏங்க, இப்படி எல்லாத்தையும் துடைச்சு எடுக்கணுமா? உங்க பாம்பே சித்தப்பாகிட்டக் கேக்கலாம் இல்ல?" என்றாள் சுகுணா.

"வேண்டாம்!" என்றான் மோகன்ராஜ், சுருக்கமாக.

சுகுணாவுக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. நெருங்கிய உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து பார்த்து, நலம் விசாரித்து விட்டுப் போனார்கள். ஒருவர் கூட, 'எவ்வளவு செலவாயிற்று?' 'பணத்துக்கு என்ன செய்தீர்கள்?' 'பணம் ஏதாவது வேண்டுமா?' போன்ற கேள்விகளைக் கேட்கவில்லை.

ஐந்தாறு நாட்களில், சுகுணா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி விட்டாள்.

"பணம் சரியா இருந்ததா? தேவைப்பட்டா, நகையை வச்சுக் கடன் வாங்கலாம்னு சொன்னீங்களே!" என்றாள் சுகுணா.

"ஆஸ்பத்திரியிலேந்து கிளம்பறப்ப, என் பர்ஸ் காலியா இருந்தது. உன்னை வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வர, டாக்சிக்குப் பணம் வேணுமே! ஏடிஎம்ல எடுத்தேன். அக்கவுன்ட்ல 500 ரூபாதான் இருந்தது. அது டாக்சிக்கு சரியாப் போச்சு. எனக்கே ஆச்சரியமா இருக்கு. நாம புரட்டின பணம் ரொம்ப கரெக்டா இருந்தது!" என்றான் மோகன்ராஜ், சிரித்துக் கொண்டே.

ன்று இரவு, மும்பையிலிருந்து மோகன்ராஜின் சித்தப்பா வைத்திலிங்கம் ஃபோன் செய்தார். "ஏண்டா, சுகுணாவுக்கு ஆபரேஷன் ஆச்சாமே, எங்கிட்ட சொல்லவே இல்லையே! முரளியோட ஃபோன்ல பேசினப்ப, அவன்தான் சொன்னான்" என்றார்.

"இன்னிக்குத்தான் ஆஸ்பத்திரியிலேந்து வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வந்தேன், சித்தப்பா. நாளைக்கு சொல்லலாம்னு நினைச்சேன். இது மாதிரி ஆபரேஷன்லாம் இப்ப ரொம்ப சாதாரணமா ஆயிடுச்சு. முன்னாலேயே சொன்னா, நீங்க கவலைப்படுவீங்களேன்னுதான் சொல்லலை" என்றான் மோகன்ராஜ்.

"அது சரி. ஆபரேஷனுக்கு நிறைய செலவாகி இருக்குமே! எங்கிட்ட கேட்டிருந்தா, நான் உதவி செஞ்சிருப்பேன் இல்ல? அப்பா மாதிரின்னு சொல்லுவ. ஆனா, எங்கிட்ட உதவி கேக்க மாட்ட, இல்ல?" என்றார் வைத்திலிங்கம், சற்றுக் கோபத்துடன்.

"எப்ப உதவி தேவைப்பட்டாலும் செய்யறதுக்குத் தயாரா இருக்கற உங்களை மாதிரி ஒத்தர் இருக்கறது எனக்குப் பெரிய பலம் சித்தப்பா. தேவைப்பட்டா, கண்டிப்பா கேக்கறேன்" என்ற மோகன்ராஜ், 'ஆனா, உங்களை மாதிரி ஒத்தர்கிட்ட கூட உதவி கேக்காம வாழணுங்கறதுதான் என்னோட லட்சியம்!' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.

குறள் 1061:
கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்.

பொருள்: 
உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண் போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமல் இருப்பதே கோடி மடங்கு நல்லதாகும்.

1062. கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்!

செல்வகுமார் தன் மனைவி கோமதியுடன் காரில் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது, வழக்கம் போல் காரில் பழைய திரைப்படப் பாடல்களைப் போட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார்.

'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்
அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்
பிரிவென்னும் கடலிலே மூழ்க வேண்டும்...'

செல்வகுமார் இசை ஒலிப்பை நிறுத்தினார்.

"ஏன் நிறுத்திட்டீங்க? உங்களுக்குத்தான் பழைய பாட்டு கேக்கறதுன்னா, ரொம்பப் பிடிக்குமே!" என்றாள் கோமதி.

"பிடிக்கும்தான். ஆனா இந்தப் பாட்டு, கடவுளுக்கே சாபம் கொடுக்கற மாதிரி இருக்கு. எனக்கு அந்த வரிகளைக் கேட்கக் கஷ்டமா இருக்கு. கண்ணதாசன் ஏன் இப்படி எழுதினார்னு தெரியல" என்றார் செல்வகுமார்.

து காலை நேரம் என்பதால், அவர்கள் கோவிலில் நுழையும்போது அதிகக் கூட்டம் இல்லை. அவர்களுக்கு நல்ல தரிசனம் கிடைத்தது. நிதானமாக, ஒவ்வொரு சன்னிதியாக நின்று தரிசித்து விட்டு வந்தனர்.

கோவிலில் பிரசாதம் வேறு கிடைத்தது. சர்க்கரைப் பொங்கல். நிறையவே கொடுத்தார்கள். பிரசாதத்தை ருசித்து உண்டு விட்டுக் கைகழுவிக் கொண்டு வெளியே வந்தனர்.

அப்போது கோவிலுக்குள் அதிகம் பேர் நுழைய ஆரம்பித்திருந்தனர். கோவில் வாசலில் இருந்த பிச்சைக்காரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருந்தது.

கோவிலுக்கு வந்த பக்தர்களை விடக் கோவில் வாசலில் குவிந்திருந்த பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. 

பலர் வரிசையில் அமர்ந்து பிச்சை கேட்டுக் கொண்டிருக்க, சிலர் அங்கும் இங்கும் நடந்தபடி கோவிலுக்குள் நுழைபவர்களிடமும், தரிசனம் முடித்து விட்டு வருபவர்களிடமும் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தனர்.

"நாம உள்ளே நுழையறப்ப ஒண்ணு ரெண்டு பிச்சைக்காரங்கதான் இருந்தாங்க. இப்ப, இவ்வளவு பேரு வந்துட்டாங்களே! அவங்களுக்கும் வேலை நேரம் இருக்கு போலருக்கு!" என்றாள் கோமதி, விளையாட்டாக.

செல்வகுமார் தன்னிடம் இருந்த சில்லறைக் காசுகளையும், பத்து ரூபாய்த் தாள்களையும் சிலருக்குப் போட்டு விட்டு விறுவிறுவென்று காரை நோக்கி நடந்தார். 

அவர் சிலருக்குப் பிச்சை அளித்ததைக் கண்ட மற்ற பிச்சைக்காரர்கள் அவர் பின்னே ஓடி வந்தனர். அவர் காரில் அமர்ந்த பிறகும், காரின் ஜன்னல் கண்ணாடிகளைத் தட்டினர்.

செல்வகுமார் காரைக் கிளப்பினார்.

"கையில இருந்த காசை எல்லாம் பிச்சைக்காரங்களுக்குப் போட்டுட்டீங்க போலருக்கே!" என்றாள் கோமதி.

"ஆமாம். சில பேருக்குத்தான் போட முடிஞ்சுது. எல்லாருக்கும் போடற அளவுக்கு எங்கிட்ட பணம் இல்லையேன்னு வருத்தமா இருக்கு" என்றார் செல்வகுமார்.

"நீங்க சொல்றது வேடிக்கையா இருக்கு. உலகத்தில இருக்கற எல்லாப் பிச்சைக்காரங்களுக்கும், உங்களால பிச்சை போட முடியுமா? அப்படியே போட்டாலும், தினமும் போட முடியுமா? இதெல்லாம் கடவுளோட படைப்பு. அதை நம்மால மாத்த முடியாது."

சட்டென்று காரை நிறுத்தினார் செல்வகுமார்.

"என்ன ஆச்சு?" என்றாள் கோமதி, பதற்றத்துடன்.

"ஒண்ணுமில்ல" என்றபடியே மீண்டும் காரைக் கிளப்பிய செல்வகுமார், "இதெல்லாம் கடவுளோட படைப்புன்னு நீ சொன்னதைக் கேட்டதும், கொஞ்சம் அதிர்ச்சி ஆயிடுச்சு. உண்மைதான். கடவுள் இருக்கிற கோவில் வாசலிலேயே, இவ்வளவு பிச்சைக்காரங்க. கோவிலுக்குள்ள சக்கரைப் பொங்கல், புளியோதரைன்னு பிரசாத விநியோகம்! இத்தனை பேர் பிச்சை எடுக்க வேண்டிய நிலைமையைக் கடவுள் ஏன் ஏற்படுத்தினார்?"

கோமதி மௌனமாக இருந்தாள்.

"ஒரு அரசாங்கம் சரியா செயல்படலேன்னா, தேர்தல்ல அந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பிட்டு, வேற அரசாங்கத்தைக் கொண்டு வரோம். உலகத்தில சில பேர் பிச்சை எடுத்துத்தான் வாழணுங்கற நிலையை ஏற்படுத்தின கடவுளுக்கு என்ன தண்டனை கொடுக்கறது? தெருத்தெருவா அலையற பிச்சைக்காரங்க மாதிரி, அவரும் இந்த உலகத்தில திரியற நிலைமை வரணும். அதுதான் அவருக்கான தண்டனை!"

சற்று நேரம் முன்பு 'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்' என்ற திரைப்படப் பாடலைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அதை நிறுத்திய கணவரா இப்படிப் பேசுகிறார் என்று வியந்தாள் கோமதி.

குறள் 1062:
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.

பொருள்: 
உலகில் சிலர் இரந்து (பிச்சை எடுத்து) உயிர் வாழ வேண்டிய நிலையை உலகத்தைப் படைத்தவன் ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.

1063. வித்யாவின் முடிவு!

இன்டர்வியூவுக்குப் போய் விட்டுத் திரும்பிய பாஸ்கரின் முகத்தைப் பார்த்தே, முடிவைப் புரிந்து கொண்டாள் அவன் மனைவி வித்யா.

பாஸ்கர் உடை மாற்றிக் கொண்டு முன்னறையில் வந்து அமர்ந்ததும், "என்ன ஆச்சு? ரொம்ப நம்பிக்கையா இருந்தீங்களே!" என்றாள் வித்யா.

"வேலை கொடுக்கறேன்னு சொன்னாங்க. ஆனா, சம்பளம் ரொம்பக் குறைச்சலாக் கொடுக்கறதா சொன்னாங்க. வேண்டாம்னுட்டேன்!"

"எவ்வளவு கொடுக்கறதா சொன்னாங்க?"

பாஸ்கர் தொகையைக் குறிப்பிட்டதும், "நீங்க முன்ன வாங்கின சம்பளத்தை விடக் கொஞ்சம்தானே குறைவு? ஒத்துக்கிட்டிருக்கலாமே!" என்றாள் வித்யா, ஆற்றாமையுடன்.

"என்ன பேசற நீ? முன்னே வாங்கின சம்பளத்தை விடக் குறைஞ்ச சம்பளத்துக்குப் போறது அவமானம் இல்லையா? அதை நான் ஒத்துக்கிட்டிருந்தா, அப்புறம் வேலையில சேர்ந்தப்புறம், என்னை யாரு மதிப்பாங்க?" என்றான் பாஸ்கர், கோபத்துடன்.

"உங்களுக்கு வேலை போய் ஏழெட்டு மாசம் ஆயிடுச்சு. நீங்க இன்னும் வேற வேலையில சேராம இருக்கறது எனக்குக் கவலையா இருக்கு!"

"நீ கவலைப்படறதுக்கு என்ன இருக்கு? அதுதான் குடும்பம் நடத்தறத்துக்கு வேண்டிய எல்லா ஏற்பாடும் நான் பண்ணிட்டேனே! வேலை எங்கே போகுது? இது இல்லேன்னா, வேற வேலை கிடைச்சுட்டுப் போகுது!" என்றான் பாஸ்கர், அலட்சியமாக.

"என்னது, நீ வேலைக்குப் போகப் போறியா?" என்றான் பாஸ்கர், அதிர்ச்சியுடன்.

"ஆமாம், நாளைக்கு வேலையில சேரணும்!" என்றாள் வித்யா.

"இவ்வளவு குறைஞ்ச சம்பளத்தில, நீ வேலைக்குப் போக வேண்டிய அவசியம் என்ன இருக்கு?"

"என்னோட தகுதிக்கு, சம்பளம் இவ்வளவுதான் கிடைக்கும். குடும்பத்தில யாராவது ஒருத்தர் சம்பாதிக்கணும் இல்ல?"

பாஸ்கர் மௌனமாக இருந்தான்.

"உங்களுக்கு வேலை போனதும், நம்மால வீட்டு வாடகை கொடுக்க முடியாதுங்கறதால, நாம குடியிருந்த வீட்டைக் காலி பண்ணிட்டுக் காலியா இருந்த உங்க நண்பர் வீட்டுக்கு வந்துட்டோம். என்னோட அண்ணன் மளிகைக் கடை வச்சிருக்கறதால, மாசாமாசம் மளிகைச் சாமான்களை அனுப்பிடறாரு. மத்த செலவுகளுக்கும் யார்கிட்டயாவது பணம் வாங்கிக்கிட்டிருக்கீங்க. அதில கடன் எவ்வளவு, இனாமா எவ்வளவுன்னு எனக்குத் தெரியல. உங்களுக்கு இது எப்படி இருக்கோ தெரியல, எனக்கு அவமானமா இருக்கு. நீங்க ஒரு வேலைக்குப் போற வரையிலும், நான் என்னால முடிஞ்சதை சம்பாதிக்கணும்னு நினைக்கறேன்!" என்றாள் வித்யா, உறுதியுடன்.

குறள் 1063:
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்.

பொருள்: 
இல்லாமையால் வரும் துன்பத்தை (உழைத்துப் போக்காது) பிச்சை எடுத்துப் போக்கிக் கொள்ளலாம் என்று எண்ணும் கொடுமையிலும் கொடுமை வேறு இல்லை.

1064. நண்பனைத் தேடிச் சென்றபோது...

டெல்லியிலிருந்து வந்திருந்த தன் கல்லூரி நண்பன் நீலகண்டனை நீண்ட நாட்கள் கழித்துச் சந்தித்த மகிழ்ச்சியில் இருந்தான் மகேஷ்.

ஒருவரை ஒருவர் நலம் விசாரித்த பிறகு, "சென்னையில இருக்கிகிற நம் நண்பர்களைப் பாக்கணும்!" என்றான் நீலகண்டன். 

"கண்டிப்பா!" என்ற மகேஷ், தன் தொலைபேசி எண் டயரியைப் பிரித்து, ஒவ்வொரு நண்பனின் தொலைபேசி எண்ணையும் அழைத்தான். நான்கு பேர்களுடன் தொடர்பு கிடைத்தது. நீலகண்டன் அவர்களுடன் உரையாடினான்.

"ரகுவுக்கும், கணேஷுக்கும் வீட்டில ஃபோன் இல்ல. அவங்களை ஆஃபீஸ் நம்பர்ல கூப்பிட முடியாது. சாயந்திரம், வீட்டில போய்ப் பார்க்கலாம். அவங்களுக்கும் சர்ப்ரைஸா இருக்கும்!" என்றான் மகேஷ்.

"ஜனாவைக் கூப்பிடலியே!" என்றான் நீலகண்டன்.

"கூப்பிட்டேன். அவன் வீட்டு நம்பர் கிடைக்கல. அது ஒர்க் பண்ணல போல இருக்கு. அவன் ஆஃபீஸ் நம்பர் எங்கிட்ட இல்ல. ஆனா, அட்ரஸ் தெரியும். நேரிலயே போய்ப் பாத்துடலாம்."

"அவன் சொந்தமா பிசினஸ் பண்றான் இல்ல?"

"ஆமாம். எப்பவுமே பிசியா இருப்பான். ஆளைப் பிடிக்கவே முடியாது. அதனால, நான் அவனைத் தொந்தரவு பண்றதில்ல. அவனே அப்பப்ப ஃபோன் பண்ணுவான். ஆனா, ரெண்டு மூணு மாசமா அவன்கிட்டேந்து ஃபோன் வரலை. நானே பண்ணணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். ஆனா, இப்ப பண்ணினா, அவன் நம்பர் கிடைக்கல."

"சரி. இப்பவே, அவனை ஆஃபீஸ்ல போய்ப் பாத்துடலாம்" என்றான் நீலகண்டன்.

இருவரும் ஜனா என்று அழைக்கப்பட்ட ஜனார்த்தனின் நிறுவனம் இருந்த இடத்துக்குப் போனபோது, அந்த இடத்தில் வேறொரு நிறுவனத்தின் போர்டு காணப்பட்டது. விசாரித்ததில், ஜனார்த்தனம் அந்த இடத்தைக் காலி செய்து விட்டதாகவும், அலுவலகத்தைத் தன் வீட்டுக்கு மாற்றி விட்டதாகவும் தெரிந்தது.

"ஆஃபீஸ் வச்சுக்கற அளவுக்கு அவன் வீட்டில இடம் கிடையாதே. போய்ப் பாக்கலாம்!" என்றான் மகேஷ்.

னா வீட்டில் இருந்தான். ஆனால், அங்கே அலுவலகம் என்று எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை.

நீலகண்டனும், ஜனாவும் சற்று நேரம் உரையாடிய பிறகு, "என்னடா, ஆஃபீஸை வீட்டுக்கு மாத்திட்டதா சொன்னாங்க? இங்கே, ஆஃபீஸ் எதுவும் இல்லையே!" என்றான் மகேஷ்.

"ஆஃபீஸ் ஏது? பிசினஸையே மூடியாச்சு!"

"என்னடா சொல்ற? உன் ஆஃபீஸ் இருந்த இடத்தில கேட்டப்ப, ஆஃபீசை வீட்டுக்கு மாத்திட்டதாத்தானே சொன்னாங்க?" என்றான் மகேஷ், அதிர்ச்சியுடன்.

"காலி பண்ணும்போது, நான் அவங்ககிட்ட அப்படித்தான் சொல்லிட்டு வந்தேன். அதைத்தான் அவங்க உங்கிட்ட சொல்லி இருக்காங்க!"

"என்னடா ஆச்சு?"

"திடீர்னு வியாபாரத்தில ஒரு பெரிய பிரச்னை. எங்கிட்ட பொருட்களை வாங்கிக்கிட்டிருந்த ஒரு பெரிய கஸ்டமர் திடீர்னு திவாலாயிட்டாரு. எனக்கு அவர்கிட்டேந்து வர வேண்டிய பணம் மொத்தமா முடங்கிப் போச்சு. ஆனா, நான் என்னோட சப்ளையர்களுக்கும் மத்தவங்களுக்கும் பணம் கொடுக்க வேண்டி இருந்தது. அதனால வாடகைக்கு எடுத்திருந்த ஆஃபீசைக் காலி பண்ணிட்டு, அதுக்குக் கொடுத்திருந்த அட்வான்சை வாங்கிக் கொஞ்சம் கடனை அடைச்சேன். வேலை செஞ்சவங்களுக்கெல்லாம் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்து செட்டில் பண்ணிட்டு, பிசினசை மூடிட்டேன். என்னோட கார், என் மனைவியோட நகைகள் எல்லாத்தையும் வித்துட்டேன். இந்த வீட்டையும் வித்தாச்சு. இன்னும் ஒரு மாசத்தில ஹேண்ட் ஓவர் பண்ணணும். வாடகைக்கு வீடு பாத்துக்கிட்டிருக்கேன். அநேகமா எல்லாக் கடனையும் அடைச்சுட்டேன்!" என்று சொல்லிச் சிரித்தான் ஜனார்த்தனம்.

"எங்க யார்கிட்டேயும் சொல்லவே இல்லையே! சொல்லி இருந்தா, எங்களால முடிஞ்ச உதவியைப் பண்ணி இருப்போம் இல்ல?" என்றான் மகேஷ்.

"நிச்சயமாப் பண்ணி இருப்பீங்க. அதனாலதான் சொல்லல!"

"என்னடா சொல்ற?"

"உன்னை மாதிரி நண்பர்கள்கிட்ட உதவி கேட்டிருந்தா, நீங்கள்ளாம் கண்டிப்பா உதவி செஞ்சிருப்பீங்க. அதை வச்சு, என்னோட பிரச்னைகளை சுலபமா சமாளிச்சிருப்பேன். ஆனா, யார்கிடேயும் உதவி கேக்கக் கூடாதுன்னுதான் யார்கிட்டேயும், என் நிலைமையை சொல்லல."

"இப்ப என்ன செய்யப் போற?"

"வேலை தேடிக்கிட்டிருக்கேன். எந்த வேலை கிடைச்சாலும் சேர்ந்துட வேண்டியதுதான்" என்று ஜனார்த்தனன் சொல்லிக் கொண்டிருந்தபோதே, அவன் மனைவி ஒரு தட்டில் காப்பிக் கோப்பைகளையும், முகத்தில் புன்னகையையும் ஏந்தியபடி உள்ளிருந்து வந்தாள்.

குறள் 1064:
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு.

பொருள்: 
ஏதும் இல்லாமல் வறுமை உற்றபோதும், பிறரிடம் சென்று பிச்சை கேட்கச் சம்மதியாத மன அடக்கம், எல்லா உலகும் சேர்ந்தாலும் ஈடாகாத பெருமையை உடையது.

1065. புழுங்கலரிசிக் கஞ்சி!

"இன்னிக்கு ஒரு இன்ஸ்டிட்யூட்டில வரச் சொல்லி இருக்காங்க, போய்ப் பாத்துட்டு வரேன்!" என்று கிளம்பினான் சபரி.

'நீங்களும்தான் இது மாதிரி அடிக்கடி போய்ப் பார்த்துட்டு வரீங்க. ஆனா, வேலை கிடைக்க மாட்டேங்குதே!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட மைதிலி, "ம்" என்றாள், பலவீனமான குரலில்.

மாலையில் சபரி வீட்டுக்குள் நுழைந்தபோது, அவன் முகம் உற்சாகமாக இருந்தது.

"என்ன, வேலை கிடைச்சுடுச்சா?" என்றாள் மைதிலி ஆவலுடன்.

"கிடைச்ச மாதிரிதான். இன்டர்வியூ முடிஞ்சப்புறம், ரெண்டு மணி நேரம் வகுப்பு எடுக்கச் சொன்னாங்க. நான் தயார் பண்ணிக்காட்டாலும், எடுத்தேன். வகுப்பு முடிஞ்சதும் மாணவர்கள்கிட்ட கருத்துக் கேட்டிருக்காங்க. அவங்க நல்லபடியா சொன்னதால, 'அடுத்து வாரம் புது பேட்ச் ஆரம்பிக்கப் போறோம். அப்ப உங்களைக் கூப்பிடறோம்'னு சொன்னாங்க. இன்னிக்கு வகுப்பு எடுத்ததுக்கு ரெண்டாயிரம் ரூபாய் கொடுத்தாங்க!"

"பரவாயில்லையே! இந்த வேலை நிரந்தரமா இருக்கும் இல்ல?"

"இருக்கும்னுதான் நினைக்கிறேன். நான் வேலை செஞ்சுக்கிட்டிருந்த கம்பெனியை திடீர்னு மூடினப்புறம், என்னென்னவோ முயற்சி பண்ணிப் பாத்துட்டு, வேற வேலை கிடைக்காததல, இது மாதிரி இன்ஸ்டிட்யூட்கள்ள, மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க ஆரம்பிச்சேன். ஆனா, நிரந்தர வருமானம் இல்ல. இப்பதான் ஒரு நல்ல இன்ஸ்டிட்யூட் அமைஞ்சிருக்கு."

"சரி. பணம் கொடுத்தாங்களே, அதை என்ன செய்யப் போறீங்க?" என்றாள் மைதிலி.

 "வீட்டுக்கு சாமான் வாங்கணும் இல்ல? வரும்போது கடையில சொல்லிட்டு வந்திருக்கேன். கொஞ்ச நேரத்தில வந்துடும்" என்றான் சபரி.

சற்று நேரத்தில் கடையிலிருந்து பொருட்கள் வந்தன.

பொருட்களை வாங்கி உள்ளே வைத்த மைதிலி, "காய்கறியே இல்லையே, என்ன சமைக்கிறது?" என்றாள்.

சற்று யோசித்த சபரி, "புழுங்கரிசியை வச்சு கஞ்சி வச்சுடு. நாளைக்குக் காலையில காய்கறி வாங்கி சமைச்சுக்கலாம்!" என்றான்.

"புழுங்கரிசிக் கஞ்சியில மோர் ஊத்தி சாப்பிட்டாத்தான் நல்லா இருக்கும். வீட்டில மோர் இல்லையே!"

"மோர் இல்லாட்டா என்ன? தண்ணி ஊத்திக் குடிக்கலாம்!"

"அது நல்லாவா இருக்கும்?" என்றாள் மைதிலி.

"நீ செஞ்சா பிரமாதமாத்தான் இருக்கும்!" என்ற சபரி, 'கஞ்சியின் ருசி எப்படி இருந்தாலும், இத்தனை நாட்களாக எவ்வளவு கஷ்டப்பட்டபோதும், யாரிடமும் உதவி கேட்பதில்லை என்று உறுதியாக இருந்து, இன்று நான் சம்பாதித்த பணத்தில் வாங்கிய அரிசியில் செய்யப்பட்ட கஞ்சியைக் குடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்!' என்று தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

குறள் 1065:
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில்.

பொருள்: 
நீரே மிகுதியாக இருக்கச் சமைக்கப்பட்ட கஞ்சியே என்றாலும், உழைத்த வரவில் உண்பதைக் காட்டிலும் மேலான மகிழ்ச்சி இல்லை.

1066. மாட்டுக்காக...

"நாம பட்டினி கிடந்துடலாம். பசுமாடு பட்டினி கிடக்கறதைப் பார்த்தாத்தான் பரிதாபமா இருக்கு!" என்றாள் செண்பகம்.

"அப்பப்ப ஏதாவது தீனி கொடுத்துக்கிட்டுத்தானே இருக்கோம்! ஏன், மாடு கத்திச்சா என்ன?" என்று கேட்டான் பழனி.

"அது ஏன் கத்துது? அதுக்கு நம்ம நிலைமை நல்லாத் தெரியும் போலருக்கு. அது பொறுமையா, அமைதியாத்தான் இருக்கு. எனக்குத்தான் அது மூஞ்சியைப் பார்த்தா, அது பசியால வாடற மாதிரி இருக்கு."

"வீட்டில பருத்திக் கொட்டை இருக்கு இல்ல?"

"இருக்கு. சாயந்திரம் கொடுக்கறதுக்காக வச்சிருக்கேன். ஆமாம், ஊர்ல நம்மை மாதிரி கஷ்டப்படறவங்க நிறைய பேர் இருக்காங்க இல்ல?" என்றாள் செண்பகம்.

"ஆமாம், மழை பெய்யல, விளைச்சல் இல்லேன்னா, எல்லாருக்கும்தானே கஷ்டம்?"

"ஆனா, அவங்க யாரும் நம்மை மாதிரி பட்டினி கிடக்கல. கடனை உடனை வாங்கி, ஓரளவுக்காவது நல்லா சாப்பிட்டுக்கிட்டுத்தான் இருக்காங்க. நீங்க மட்டும்தான் யார்கிட்டேயும் எந்த உதவியும் கேக்ககக் கூடாதுன்னு பிடிவாதமா இருக்கீங்க!"

"என்ன செய்யறது? நான் அப்படியே இருந்து பழகிட்டேன்!"

"மத்தவங்ககிட்ட இனாமா எதையும் கேக்கறதுதான் தப்பு. கடன் கேக்கலாம் இல்ல? உங்களை நம்பிக் கடன் கொடுக்க, இந்த ஊர்ல எத்தனையோ பேர் இருக்காங்களே!"

"இருக்காங்க. கடன் வாங்கலாம். நாளைக்கு நமக்கு ஒரு இடத்திலேந்து பணம் வரப் போகுதுன்னு நிச்சயமாத் தெரிஞ்சா, அதை நம்பிக் கடன் வாங்கலாம். அப்படி ஒரு நிச்சயமில்லாத நிலைமையில, கடன் கேட்டாலும் அது பிச்சை கேக்கற மாதிரிதான்!" என்றான் பழனி.

"என்னவோ, நீங்களும், உங்க கொள்கையும். நம்ம மாட்டுக்கு அரை வயத்துக்குத் தீனி போடறமேங்கற ஆத்தாமை எனக்கு ரொம்ப இருக்கு!" என்றாள் செண்பகம்.

"இதோ வரேன்!" என்று வெளியே கிளம்பினான் பழனி.

ரண்டு மணி நேரம் கழித்துத் திரும்பிய பழனியின் தலையில் ஒரு புல்கட்டு இருந்தது.

"எங்கே போயிட்டு வரீங்க, இந்த வெயில்ல?" என்றாள் செண்பகம்.

"எல்லா இடத்திலேயும் அலைஞ்சு திரிஞ்சு, அங்கங்கே இருக்கற புல்லை வெட்டி சேகரிச்சுக் கொண்டு வந்திருக்கேன். இதை மாட்டுக்குக் கொஞ்சம் கொஞ்சமா கொடு!" என்றான் பழனி.

'யார்கிட்டேயாவது கடன் வாங்கி ,மாட்டுக்குப் பருத்திக் கொட்டை வாங்கிட்டு வரப் போறீங்களோன்னு நினைச்சேன். நீங்களாவது மாறறதாவது!' என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள் செண்பகம்.

குறள் 1066:
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்.

பொருள்: 
பசுவிற்குத் தண்ணீர் வேண்டும் என்று பிறரிடம் பிச்சையாகக் கேட்டாலும், அதுவும் பிச்சையாதலால், நம் நாவிற்கு அதைவிடக் கேவலம் வேறு இல்லை.

1067. சோமநாதனின் முடிவு

"இத்தனை வருஷமா, யார்கிட்டேயும் உதவி கேட்கக் கூடாதுன்னு வைராக்கியமா இருந்தேன். இப்ப அந்த வைராக்கியத்தைக் கைவிட வேண்டி இருக்கும் போல இருக்கு!" என்றான் குமார், சோர்வுடன். 

"ஆமாம். சஞ்சய்க்கு ஒரு நல்ல காலேஜில இடம் கிடைச்சிருக்கறப்ப, எப்படியாவது கஷ்டப்பட்டு ஃபீஸ் கட்டி, அவனை அந்த காலேஜில சேர்க்க வேண்டாமா?" என்றார் குமாரின் தந்தை சோமநாதன். தொடர்ந்து, "யார்கிட்ட உதவி கேக்கறதா இருக்க?" என்றார்.

"சாமிநாதன்கிட்டதான். நமக்கு அவரை விட்டா யாரு இருக்காங்க?"

"சாமிநாதன் வசதியானவன்தான். ஆனா, எப்பவுமே இல்லைப் பாட்டுப் பாடறவன். நூறு ரூபா கேட்டாக் கூட, 'ஐயையோ! அரை மணி நேரம் முன்னால வந்திருக்கக் கூடாது? இப்பதான் ஒத்தர் டொனேஷன் கேட்டாருன்னு, கையில இருந்த நூறு ரூபாயைக் கொடுத்துட்டேன். இப்ப, எங்கிட்ட எதுவுமே இல்லையே'ம்பான். அவன்கிட்ட போயா கேக்கப் போற?"

"உங்களுக்கு எப்படிப்பா தெரியும்?"

"நான் அனுபவப்பட்டிருக்கேனே! தயவு செஞ்சு. அவன்கிட்ட மட்டும் போய் உதவி கேக்காதே!"

"எனக்கு அவரை விட்டா வேற யாரையும் தெரியாதே!"

"நான் சொன்னா கேக்க மாட்ட. சரி, நீ எப்ப அவனைப் போய்ப் பாக்கப் போற?" என்றார் சோமநாதன்.

"நாளைக்கு சனிக்கிழமை. எனக்கு லீவு. அவரும் வீட்டில இருப்பாரு. அதனால, நாளைக் காலையில போகலாம்னு இருக்கேன். எதுக்குக் கேக்கறீங்க?" என்றான் குமார்.

"சும்மாதான்!"

ன்று இரவு அலுவலகத்திலிருந்து குமார் வீட்டுக்கு வந்தபோது, சோமநாதன் வீட்டில் இல்லை.

"அப்பா எங்கே போயிருக்காரு?" என்றான் குமார், தன் மனைவி கோகிலாவிடம்.

"எங்கேன்னு தெரியல. வெளியில போயிட்டு வரேன்னு சாயந்திரம் கிளம்பிப் போனாரு" என்றாள் கோகிலா.

சற்று நேரம் கழித்து வீட்டுக்கு வந்த சோமநாதன், குமாரிடம் "இந்தா!" என்று ஒரு செக்கை நீட்டினார்.

"என்னப்பா இது?"

"பாரு!" 

"என் பேருக்கு ரெண்டு லட்ச ரூபாய்க்கு செக்! யார் கொடுத்தாங்க?" என்றான் குமார், வியப்புடனும், மகிழ்ச்சியுடனும்.

"உன் சித்தப்பாதான்!"

"எப்படிப்பா? நீங்கதான் அவரோட பேசறதே இல்லையே!"

"ஒரு மனஸ்தாபத்தினால பேசாம இருந்தேன். நீ சாமிநாதன்கிட்ட போய் உதவி கேக்கப் போறன்னு சொன்னதும், நீ அவன்கிட்ட உதவி கேட்டு ஏமாந்து வரதை விட, நான் கௌரவம் பாக்காம, என் தம்பிகிட்ட போய்க் கேட்கலாம்னு முடிவு பண்ணினேன். அண்ணன் இறங்கி வந்து, நம்மகிட்ட பேசி, உதவி கேட்டுட்டாரேங்கற சந்தோஷத்தில, என் தம்பி உடனே செக் எழுதிக் கொடுத்துட்டான். எப்ப முடியுமோ அப்ப திருப்பிக் கொடுத்தா போதும்னு சொல்லிட்டான்!" என்றார் சோமநாதன்.

"ஏம்ப்பா, நான் சாமிநாதன்கிட்ட கேக்கற வரையிலும் பொறுத்திருக்கலாமே! அதுக்குள்ள, ஏன் நீங்க உங்க கௌரவத்தை விட்டுக் கொடுத்து, சித்தப்பாகிட்ட உதவி கேட்டீங்க?"

"வச்சுக்கிட்டே இல்லேன்னு சொல்றவன்கிட்ட போய் உதவி கேட்டுட்டு, வெறும் கையோட திரும்பி வரதை விட, என் சொந்தத் தம்பிகிட்ட என் கௌரவத்தை விட்டுக் கொடுத்து உதவி கேட்டது ஒண்ணும் தப்பு இல்ல!" என்றார் சோமநாதன், உறுதியாக.

குறள் 1067:
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று.

பொருள்: 
இரந்து கேட்பதானால், உள்ளதை ஒளிப்பவரிடத்தில் சென்று இரக்க வேண்டாம் என்று இரப்பவர் எல்லோரையும் இரந்து வேண்டுகின்றேன்.

1068. கல்யாண மண்டபம்

"இல்லையென்போர் இருக்கையிலே,
இருப்பவர்கள் இல்லையென்பார்!"

தொலைக்காட்சியில் ஒலித்த இந்தப் பாடல் வரிகளைக் கேட்டதும், "எவ்வளவு எளிமையா, அழகா எழுதிட்டார் வாலி!" என்றான் குபேந்திரன், பெருமூச்சுடன்.

"ஆமாண்டா! நான் உங்கிட்ட எப்ப கடன் கேட்டாலும், நீ இல்லேன்னுதானே சொல்ற!" என்றான் அவன் நண்பன் தன்ராஜ்.

"விளையாடேதாடா! நான் ரொம்ப மன வருத்தத்தில இருக்கேன்!"

"சாரி! ஏதாவது பிரச்னையா? என்ன ஆச்சு?"

"எனக்கு ஒண்ணும் இல்ல. இன்னிக்கு, எங்க ஆஃபீஸ்ல ஒரு சம்பவம் நடந்தது. அதை நினைச்சாத்தான், மனசு ரொம்ப வருத்தமா இருக்கு!"

"என்ன நடந்தது?"

"என்னோட முதலாளி ஒரு கஞ்சப் பிரபு, ஈவு இரக்கமே இல்லாதவர்னு சொல்லி இருக்கேன் இல்ல?"

"ஆமாம்."

"எங்க ஆஃபீஸ்ல சண்முகம்னு ஒத்தர் இருக்காரு. அவரோட பெண்ணுக்குக் கல்யாணம். கல்யாணச் செலவுக்காக, அவர் பி எஃப் லோன் அப்ளை பண்ணி இருக்காரு. அது கொஞ்ச நாள்ள வந்துடும். அதுக்குள்ள, அவர் புக் பண்ணி இருக்கிற கல்யாண மண்டபத்தில இன்னும் ரெண்டு நாளைக்குள்ள அம்பதாயிரம் ரூபா கட்டச் சொல்றாங்களாம். கட்டலேன்னா, புக்கிங்கை கேன்சல் பண்ணி, வேற யாருக்காவது கொடுத்துடுவேன்னு மிரட்டறாங்களாம். அதனால, அம்பதாயிரம் ரூபாய் கடன் கேட்டு அவர் எங்க முதலாளிகிட்ட கெஞ்சினாரு. பி எஃப் லோன் வந்ததும் திருப்பிக் கொடுத்துடறேன், வட்டி கூடக் கொடுத்துடறேன்னு கெஞ்சினாரு. ஆனா, எங்க முதலாளி பிடிவாதமா முடியாதுன்னுட்டாரு."

"உன் முதலாளிகிட்ட பணம் இல்லையோ என்னவோ?"

"நீ வேற. எங்க கம்பெனியில தினம் லட்சக்கணக்கா ரொக்கம் புழங்கும். அம்பதாயிரம் ரூபாயெல்லாம் ஒரு பொருட்டே இல்ல. அதுவும் பத்து நாளைக்குள்ள திருப்பிக் கொடுத்துடப் போறாரு! ஆனா, தன்கிட்ட பணமே இல்லைன்னு சாதிச்சுட்டாரு எங்க முதலாளி. பணம் கட்டலேன்னா, மண்டபம் புக் பண்ணினதை அவங்க கேன்சல் பண்ணி, வேற யாருக்காவது கொடுத்துட்டா என்ன செய்யறதுன்னு சண்முகம் பதறறதைப் பாத்து எங்க எல்லாருக்கும் பாவமா இருந்தது. ஆனா, எங்க முதலாளிக்கு அப்படி இல்லையே!" என்றான் குபேந்திரன்.

குறள் 1068:
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.

பொருள்: 
இரத்தல் என்னும் காவல் இல்லாத மரக்கலம், உள்ளதை ஒளித்து வைக்கும் தன்மையாகிய வன்னிலம் (பாறை) தாக்கினால் உடைந்து விடும்.

1069. அதனினும் கொடிது

"எனக்கு மனசை ரொம்ப கஷ்டப்படுத்தற விஷயம் எது தெரியுமா?" என்றான் பரந்தாமன்.

"எனக்கு எப்படித் தெரியும்?" என்றான் அவன் நண்பன் கணேசன்.

"என்னோட இத்தனை வருஷம் பழகி இருக்கியே, அதை வச்சு சொல்ல முடியாதா?"

"ம்.. இரு, யோசிச்சுப் பாக்கறேன். பொதுவா, மத்தவங்க கஷ்டப்படறதைப் பார்த்தா, உனக்கு வருத்தமா இருக்கும்."

"சரிதான். ஆனா, அதிலேயும், குறிப்பா ஒரு விஷயம், எனக்கு ரொம்ப மனக் கஷ்டத்தைக் கொடுக்கும்."

"என்ன அது?"

"ஒத்தர் ரொம்ப கஷ்டமான நிலையில, இன்னொருத்தர்கிட்ட போய் உதவி கேக்கறதைப் பார்த்தா, எனக்கு மனசே உடைஞ்சுடும்."

"பிச்சை எடுக்கறவங்களை சொல்றியா?"

"பிச்சை எடுக்கறது மட்டும் இல்ல, ஒத்தர் இன்னொருத்தரை அணுகி எந்த ஒரு உதவி கேக்கறதையும்தான் சொல்றேன். அப்படி உதவி கேக்கறப்ப, அவங்க எந்த அளவுக்குக் கூனிக் குறுகிப் போயிருப்பாங்கன்னு பாக்கறப்ப, இவங்களுக்கு ஏன் இப்படிப்பட்ட நிலைமை ஏற்படணும்னு தோணும்!"

கணேசன் மௌனமாக இருந்தான்.

"ஏண்டா, நான் சொல்றது தப்பா? நீ என்ன நினைக்கற?" என்றான் பரந்தாமன்.

"தப்பு இல்லை. அதை விட மோசமான நிலையில இருக்கறவங்க சில பேரைப் பத்தி யோசிச்சுக்கிட்டிருந்தேன்!"

"ஒத்தர் கூனிக் குறுகி இன்னொத்தர்கிட்ட உதவி கேக்கறதை விடக் கொடுமை வேற என்ன இருக்க முடியும்?" என்றான் பரந்தாமன்.

"அப்படி ஒத்தர் உதவி கேக்கறப்ப, அவரோட நிலைமையைக் கொஞ்சம் கூட உணராம, அவங்களுக்கு உதவி செய்யற நிலைமையில இருந்துக்கிட்டு, 'முடியாது' ன்னு சொல்றாங்களே, அந்தக் கொடுமைதான் எனக்கு இன்னும் அதிக சங்கடத்தைக் கொடுக்கும்!" என்றான் பரந்தாமன்.

குறள் 1069:
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.

பொருள்: 
பிறரிடம் போய்ப் பிச்சை ஏற்று நிற்கும் கொடுமையை எண்ணினால், என் உள்ளம் உருகும். இக்கொடுமையைப் பார்த்த பிறகும், இல்லை என்று மறைப்பவர் கொடுமையை எண்ணினால், உருகும் உள்ளமும் இல்லாது அழிந்து விடும்.

1070. அறைக்கு வெளியே கேட்ட உரையாடல்

எம் எஸ் ஏஜன்சீஸின் பங்குதாரர்களான மூர்த்தியும், சிவாவும் தங்கள் வாடிக்கையாளரான செல்வி இண்டஸ்ட்ரீஸீன் உரிமையாளர் சண்முகசுந்தரத்தைப் பார்க்க, அவருடைய அறைக்கு வெளியே காத்திருந்தனர். 

அந்த அறைக்கு வெளியே, பாதி உயரத்துக்கு மட்டுமே தடுப்பு அமைக்கப்பட்டிருந்ததால், உள்ளே இருப்பவர்கள் பேசிக் கொண்டது, வெளியில் அமர்ந்திருந்த இருவருக்கும் கேட்டது.

"சார்! இந்த ஒரு தடவை மட்டும் உதவி செய்யுங்க சார்!"

"அடுத்த மாசச் சம்பளத்தை இப்பவே கேக்கற. இன்னிக்கு தேதி 10தான் ஆகுது. அடுத்த மாசச் சம்பளத்துக்கு இன்னும் 20 நாளைக்கு மேல இருக்கு."

"போன மாசம் சில எதிர்பாராத செலவுகள் வந்துடுச்சு சார். அதுக்காகக் கொஞ்சம் கடன் வாங்கினேன். இந்த மாசச் சம்பளத்தில பாதிக்கு மேல அந்தக் கடனை அடைக்கவே போயிடுச்சு. இந்த மாசம் இன்னும் 20 நாளை ஓட்டியாகணும். வீட்டில சாப்பாட்டுக்கு அரிசி கூட இல்ல. பொண்டாட்டி குழந்தைகளைக் காப்பாத்தியாகணும் சார். இதுவரையில, கம்பெனியில நான் எந்தக் கடனும் கேட்டதில்லை. இந்த ஒரு தடவைதான் கேக்கறேன். நான் கேட்டதில பாதி கொடுத்தீங்கன்னா கூடப் போதும், சம்பளம் வர வரையில சமாளிச்சுடுவேன்! இந்த உதவியை நான் என்னிக்கும் மறக்க மாட்டேன் சார்!"

"அதான் முடியாதுன்னு சொல்லிட்டேன் இல்ல? என் டயத்தை வேஸ்ட் பண்ணாதே! வெளியில என்னைப் பாக்க சில பேர் காத்துக்கிட்டிருக்காங்க. அவங்க டயத்தையும் சேர்த்து வீணாக்கற நீ! முதல்ல இடத்தைக் காலி பண்ணு!"

கோபமாக ஒலித்த இந்த வார்த்தைகளுக்குப் பிறகு, உரிமையாளரின் அறையிலிருந்து, உதவி கேட்ட அந்த ஊழியர் வெளியே வந்தார். அவர் நடக்க முடியாமல் நடந்து வந்ததைப் பார்த்தபோது, எந்த நிமிடமும் மயங்கிக் கீழே விழுந்து விடுவாரோ என்ற அச்சம் மூர்த்திக்கும், சிவாவுக்கும் ஏற்பட்டது.

ண்முகசுந்தரத்தைப் பார்த்துப் பேசி விட்டு, மூர்த்தியும் சிவாவும் காரில் தங்கள் அலுவலகத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

"சண்முகசுந்தரத்துக்கிட்ட உதவி கேட்டு, அவர் இல்லேன்னு சொன்னப்பறம் வெளியில வந்த அந்த ஊழியரைப் பார்த்ததும், ஒரு நிமிஷம் பயந்துட்டேன். அவரைப் பார்த்தா, கீழே விழுந்து உயிரை விட்டுடுவார் போல இருந்தது. பாவம், அந்த அளவுக்கு சோர்ந்து போயிருந்தார். பாவம், முதலாளி உதவி செய்வார்னு ரொம்ப நம்பிக்கிட்டிருந்தார் போலருக்கு!" என்றான் சிவா.

"ஆமாம். எனக்கும் அப்படித்தான் இருந்தது. ஆனா, சண்முகசுந்தரத்துக்கிட்ட எந்த ஒரு சோ்வும் இல்லேயே! அவரு நம்மோட நல்லாத்தானே பேசிக்கிட்டிருந்தாரு?" என்றான் மூர்த்தி.

"சண்முகசுந்தரம் ஏன் சோர்வா இருக்கணும்? எனக்குப் புரியல!" என்றான் சிவா.

"எனக்கும்தான்- தான் கேட்ட உதவி கிடைக்கலேன்னதும், உதவி கேட்டவருக்கு உயிரே போயிடறது போல இருக்கற மாதிரி, உதவி செய்ய மாட்டேன்னு சொல்றவருக்கும் ஏன் இருக்க மாட்டேங்குதுன்னு!"

குறள் 1070:
கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்.

பொருள்: 
இல்லை என்று சொல்வதைக் கேட்ட உடனேயே பிச்சை எடுப்பவரிடமிருந்து போய் விடும் உயிர், இல்லை என்று சொல்பவர்க்கு மட்டும் போகாமல் எங்கே போய் ஒளிந்து கொள்கிறது?
             அறத்துப்பால்                                               காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...