அதிகாரம் 68 - வினை செயல்வகை

திருக்குறள்
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 68
வினை செயல்வகை

671. துணை நகரம்

முதல்வர் தலைமையில் கூடிய அமைச்சரவையில் தலைநகருக்கு அருகில் உள்ள ஒரு ஊரில் ஒரு துணைநகரம் அமைப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

"நமக்கு முன்னால எவ்வளவோ பிரச்னைகள் இருக்கு. துணைநகரம் பற்றி இப்ப எதுக்கு சிந்திக்கணும்?" என்றார் மூத்த அமைச்சர் கார்வண்ணன்.

"நல்ல கேள்வி. ஒரு செயல்ல இறங்கறதுக்கு முன்னால அந்தச் செயல் அவசியம்தானான்னு தீர்மானிக்க வேண்டியது முக்கியம். அதனாலதான் துணைநகரம் அமைக்கறது பற்றி ஆராய ஒரு வல்லுனர் குழுவை அமைச்சோம். வல்லுனர் குழு துணைநகரம் அவசியமா, அது ஏன் அவசியம், அதை அமைக்கறதால என்ன நன்மைகள் கிடைக்கும், அமைக்கலேன்னா என்ன பிரச்னைகள் வரும் என்கிற கேள்விகள்ள ஆரம்பிச்சு, எந்த இடத்தில அமைக்கறது, எப்படி அமைக்கறது, அதற்கான படிகள் என்ன, ஒவ்வொரு படியிலும் என்ன சவால்கள் இருக்குங்கற மாதிரி பல கேள்விகளை ஆராய்ஞ்சு ஒரு விரிவான அறிக்கை கொடுத்திருக்கு. அந்த அறிக்கையோட முக்கிய அம்சங்களைத் திட்ட அமைச்சர் சுருக்கமா ஒரு அறிக்கையாத் தயாரிச்சு உங்க எல்லாருக்கும் கொடுத்திருக்காரு. நீங்க எல்லாரும் அதைப் படிச்சுப் பாத்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்!" என்ற முதல்வர் தன் பேச்சை நிறுத்தி விட்டு அனைவர் முகத்தையும் பார்த்தார்.

கார்வண்ணன் அப்போதுதான் அந்த அறிக்கை தன் கோப்பில் இருக்கிறதா என்று தேடத் துவங்கினார்.

"சரி. சில பேரு படிச்சிருக்க மாட்டீங்க. இப்ப திட்ட அமைச்சர் அதைச் சுருக்கமா உங்களுக்கு எடுத்துச் சொல்லுவார்" என்றார் முதல்வர்

துணைநகரம் பற்றிய அறிக்கையின் சாராம்சத்தைத் திட்ட அமைச்சர் விளக்கிக் கூறிய பிறகு, அது பற்றி நீண்ட நேரம் விவாதம் நடந்தது. பிறகு, துணைநகரம் அமைப்பது என்பதை அமைச்சரவை கொள்கை அளவில் ஏற்றுக் கொள்வதாக முடிவு செய்யப்பட்டது.

"சரி. அப்ப இந்த அமைச்சரவைக் கூட்டத்தை நிறைவு செய்யலாம்னு நினைக்கிறேன்!" என்றார் முதல்வர்.

"சார்! ஒரு நிமிஷம்!" என்றார் திட்ட அமைச்சர்.

"சொல்லுங்க!" என்றார் முதல்வர்.

"ஒரு முடிவை எடுத்தப்பறம் அந்த முடிவைச் செயல்படுத்தறதுக்கான செயல்பாட்டை உடனே துவங்கணும்னு நினைக்கிறேன்!" என்றார் திட்ட அமைச்சர் தயக்கத்துடன்.

கார்வண்ணன் பெரிதாகச் சிரித்து விட்டு, "தம்பி! நீங்க படிச்சவர், இளைஞர்ங்றதுக்காக முதல்வர் உங்களுக்கு இந்த முக்கியமான துறையைக் கொடுத்திருக்காரு. அரசாங்கம் எப்படிச் செயல்படும்னு உங்களுக்குத் தெரியல. ஒரு முடிவை அறிவிச்சவுடனேயே அதைச் செயல்படுத்தற வேலைகளை ஆரம்பிச்சுட முடியாது. நாம இந்தக் கொள்கை முடிவை அறிச்சவுடனேயே பல முனைகளிலேந்து எதிர்ப்பெல்லாம் கிளம்பும். அதையெல்லாம் சரி பண்ணிட்டு அப்புறம்தான் வேலைகளை ஆரம்பிக்க முடியும்!" என்றார்.

"இல்லை அண்ணே! தம்பி சொல்றதுதான் சரி. நாம எவ்வளவோ விஷயங்களை அறிவிச்சுட்டு அதை உடனே செயல்படுத்தாததால, நாளடைவில பல பிரச்னைகள் ஏற்பட்டு, அதுக்கப்பறம் அறிவிச்ச சில விஷயங்களைக் கைவிட வேண்டி நேர்ந்திருக்கு. ஒரு விஷயத்தை நல்லா ஆராய்ஞ்சு, அதைச் செய்யறதுன்னு முடிவு செஞ்சப்பறம் உடனே செயல்பாட்டைத் தொடங்கறதுதான் சரி. நாம தேர்ந்தெடுத்திருக்கற ஊரைத் துணை நகரம்னு அறிவிச்சு உடனே அரசாணை பிறப்பிக்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டதுன்னு தீர்மானத்தில சேர்த்து நாளைக்கே அரசாணை வெளியிட்டுடுங்க. அந்த ஆணை வெளி வந்துடுச்சுன்னா அப்பறம் மற்ற பணிகளைத் திட்ட அமைச்சகம் உடனே துவங்கிடும்!" என்றார் முதல்வர் திட்ட அமைச்சரைப் பார்த்துப் புன்னகை செய்தபடியே.  

குறள் 671:
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.

பொருள்:
ஓர் ஆலோசனையின் முடிவு, செயலைச் செய்யும் துணிவைப் பெறுவதே, பெற்ற அத்துணிவைச் செயலாக்கக் காலம் தாழ்த்தினால் அது தீமையாகும்.

672. அமைச்சரின் துணிவு!

"அமைச்சரே! இளவரசனுக்காகத் தனி மாளிகை கட்டும் பணி எந்த அளவில் இருக்கிறது?"

"இன்னும் அதற்கான பணி துவங்கவில்லை அரசே!"

"ஏன்?"

"அதற்குத் தேவையான நிதி தற்போது இல்லை. நிதி நிலை மேம்பட்டதும் அந்தப் பணி துவங்கப்பட்டு விடும்!"

"அமைச்சரே! மாளிகை கட்டுவதற்காக தனாதிகாரி நிதி ஒதுக்கி இருந்தும், நீங்கள் அதை அதற்காகப் பயன்படுத்தவில்லை என்று அவர் கூறுகிறாரே!"

"ஆம் அரசே! அந்த நிதியை வேறொரு நோக்கத்துக்காகப் பயன்படுத்தச் சொல்லி விட்டேன்!"

"எந்த நோக்கத்துக்காக?"

"அரசே! ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் வருணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதன் கரையில் வசிக்கும் மக்களுக்கு உயிர்ச்சேதமும், உடமைச் சேதமும் ஏற்படுகிறது. ஒரு தடுப்பணை கட்டினால் மழை நீரைத் தேக்கி வெள்ளம் வராமல் தடுப்பதுடன் விவசாய உற்பத்தியையும் அதிகரிக்க முடியும்!"

"ஆமாம். இந்தத் திட்டம் கடந்த சில ஆண்டுகளாகவே நம் கவனத்தில் இருக்கிறது. ஆனால் அதற்கான போதுமான நிதி ஆதாரம் இல்லை என்பதால் அந்தத் திட்டம் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. நீங்கள் சொல்வதைப் பார்த்தால்..."

"நீங்கள் நினைப்பது சரிதான் அரசே! இப்போது நம் நிதி ஆதாரம் மேம்பட்டிருக்கிறது. ஆனால் இப்போது இளவரசருக்கான மாளிகை கட்டப் பணம் ஒதுக்கினால் இந்தத் தடுப்பணைக்குத் தேவையான நிதி இருக்காது. அதனால்தான் மாளிகை கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியைத் தடுப்பணை கட்டுவதற்காகப் பயன்படுத்திக் கொண்டேன் - அது அவசரமானதும், முக்கியமானதும் என்பதால்."

"அமைச்சரே! இளவரசனுக்குத் திருமணம் நடக்கப் போகிறது. அவனுக்குத் தனி மாளிகை இருக்க வேண்டியது அவசிம் அல்லவா?"

"அவசியம்தான் அரசே. ஆனால் அவசரம் இல்லை என்பதைத் தாங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்! தனி மாளிகை கட்டப்படும் வரையில் அரண்மனையில் தான் தற்போது வசிக்கும் பகுதியிலேயே திருமணத்துக்குப் பிறகும் சிறிது காலம் வசிப்பதை இளவரசர் வசதிக் குறைவாக நினைக்க மாட்டார் என்று கருதுகிறேன்! நான் அவரிடம் இது பற்றிப் பேசியபோது, தடுப்பணை கட்ட வேண்டியதுதான் முக்கியம் என்று இளவரசரே என்னிடம் கூறினார்!"

"அமைச்சரே! உங்களுக்குத் துணிவு அதிகம்தான், மன்னர் குடும்பத்தின் வசதியை விட மக்கள் நலன் முக்கியம் என்று நினைத்துச் செயல்பட்டிருக்கறீர்களே! இந்தத் துணிவு எங்கிருந்து வந்தது?"

"மக்கள் நலனே முக்கியம் என்று கருதி அரசாட்சி செய்யும் மன்னரிடம் அமைச்சராக இருக்கும் பேறு கிடைத்ததன் விளைவாக வந்தது அரசே!"

குறள் 672:
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.

பொருள்:
காலம் தாழ்த்தி செய்யத் தக்கவற்றைக் காலம் தாழ்ந்தே செய்ய வேண்டும், காலம் தாழ்த்தாமல் விரைந்து செய்யவேண்டிய செயல்களைச் செய்யக் காலம் தாழ்த்தக் கூடாது.

673. "நிறைவேற்றப்படாத" வாக்குறுதி

"நம்ம தேர்தல் வாக்குறுதிகள் எல்லாத்தையுமே நிறைவேற்றிட்டோம்!" என்றார் 'மக்கள் நலன் கட்சி'யின் தலைவர் முத்தையன் பெருமையுடன்.

"ஒண்ணைத் தவிர!" என்றார் முதலமைச்சர் அறிவொளி.

"என்னங்க நீங்க? எதிர்க்கட்சித் தலைவர் மாதிரி பேசறீங்க! நாம கொடுத்த 237  வாக்குறுதிகள்ள 236-ஐ நிறைவேற்றிட்டோம். இதுவரையில யாருமே செய்யாத சாதனை இது. எதிர்க்கட்சிக்காரங்க பேசறதுக்கு எதுவும் இல்லாம வாயடைச்சுப் போய் நிக்கறாங்க. ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்ற நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டீங்கங்கறதை நாங்க எல்லாரும் பக்கத்தில இருந்து பார்த்திருக்கோம். நிறைவேற்றக் கடினமான வாக்குறுதிகளைக் கூட எப்படியோ கஷ்டப்பட்டு நிறைவேற்றிட்டீங்க. இதுக்காக உங்களுக்குப் பாராட்டு விழா நடத்த அரசியல் சார்பு இல்லாத சில அமைப்புகள்  முயற்சி எடுத்துக்கிட்டிருக்காங்க. நீங்க என்னன்னா ஒரு கோரிக்கையை மட்டும் நிறைவேற்றலையேன்னு வருத்தப்பட்டுக்கிட்டிருக்கீங்க!"

"இல்லை தலைவரே! பதவிக்கு வந்தா இந்த 237 வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்னு தேர்தல் பிரசாரத்தில சொன்னோம் இல்ல? அதன்படி நடந்துக்க வேண்டாமா?"

"எல்லா வாக்குறுதிகளையுமே நிறைவேற்ற முடியுங்கற நம்பிக்கையிலதான் கொடுக்கறோம். சிலதை நிறைவேற்ற முடியாம போறது  நடக்கறதுதான். ஆனா ஒரு வாக்குறுதியைத் தவிர மற்ற எல்லாவற்றையும் நிறைவேற்றின முதலமைச்சர் உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை. ஒன்றிய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் மாநில அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கணும்னு நாம சட்டசபையில தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பிட்டோம். அவங்க அரசியல் காரணங்களுக்காக அந்தத் தீர்மானத்துக்கு அங்கீகாரம் கொடுக்காம அதைக் கிடப்பில போட்டிருக்காங்க. மக்களுக்கு இது நல்லாவே தெரியும். அதனால உங்க மேல தப்பு இல்லைன்னு அவங்க புரிஞ்சுப்பாங்க."

"ஆனா எனக்கு மனசு சமாதானம் ஆகல. அதை நிறைவேற்ற ஏதாவது வழி கண்டுபிடிக்கணும். அதான் யோசிச்சுக்கிட்டிருக்கேன்!" என்றார் முதல்வர்.

சில மாதங்களுக்குப் பிறகு, ஒரு புலனாய்வுப் பத்திரிகையில் 'நான் சொல்லும் ரகசியம்' என்ற பகுதியில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.

"மத்தியில் ஆளும் கட்சியான 'ஒரே தேசம் கட்சி'க்கு மாநில சட்டப் பேரவையில் ஒரு உறுப்பினர் கூட இல்லை. அப்படி இருக்க சமீபத்தில் நடைபெற்ற மாநிலங்கள் அவைக்கான தேர்தலில் அந்தக் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றது எப்படி? நம் நிருபர்கள் சேகரித்த ரகசியத் தகவல்கள் இவை.

"சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ஐந்து  மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், சட்ட மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆளும் கட்சியான 'மக்கள் நலன் கட்சி'க்கு மூன்று இடங்களும், எதிர்க்கட்சிகளுக்கு இரண்டு உறுப்பினர்களும் கிடைத்திருக்க வேண்டும். 

"ஆனால் இரண்டு எதிர்பாராத விஷயங்கள் நடந்தன. 'மக்கள் நலன் கட்சி'யின் கூட்டணிக் கட்சியான 'மக்கள் உரிமைக் கட்சி' தங்களுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் சீட் வேண்டும் என்று கேட்டு, 'மக்கள் நலன் கட்சி' அதற்கு ஒப்புக் கொள்ளாததால் தங்கள் கட்சியைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் வாக்களிக்க மாட்டார்கள் என்று அறிவித்தது.

"இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் சார்பாக மூன்றாவது வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடிவு செய்யப்பட்டு அந்த இடம் 'ஒரே தேசம் கட்சி'க்கு ஒதுக்கப்பட்டது. 'மக்கள் உரிமைக் கட்சி' உறுப்பினர்கள் நான்கு பேர் வாக்களிக்காததால் 'ஒரே தேசம் கட்சி' வேட்பாளர் ஒரு வாக்கு அதிகம் பெற்று வெற்றி பெற்று விட்டார், எதிர்பாராத இந்தத் தோல்வியால் 'மக்கள் நலன் கட்சி' பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது. 

"'மக்கள் உரிமைக் கட்சி' ஆளும் கட்சிக் கூட்டணியிலிருந்து எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு மாறுமா, இதனால் மாநிலத்தில் பெரும் அரசியல் மாற்றங்கள் நிகழுமா போன்ற கேள்விகள் அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளன."

"என்னங்க இப்படி ஆயிடுச்சு? ஏன் 'மக்கள் உரிமைக் கட்சி'க்காரங்க திடீர்னு இப்படி நடந்துக்கறாங்க?" என்றார் முத்தையன் கவலையுடன்.

"கொஞ்சம் பொறுமையா இருங்க. கிளைமாக்ஸ் இனிமேதான் இருக்கு!" என்றார் அறிவொளி சிரித்தபடி.

ரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஒன்றிய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் மாநில அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 10 சதவீத இடங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற மாநில அரசின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக ஒன்றிய அரசு அறிவித்தது.

'முதல்வர் 237-ஆவது தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றிச் சாதனை படைத்து விட்டார். மாநிலங்களவைத் தேர்தலில் நாங்கள் கேட்டுக் கொண்டபடி எங்களுக்கு ஒரு இடம் வழங்கவில்லை என்பதால் நாங்கள் தேர்தலில் வாக்களிக்காமல் இருந்தது எங்கள் எதிர்ப்பைக் காட்டத்தான். அது முடிந்து போன விஷயம். முதல்வரை நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம். 'மக்கள் நலன் கட்சி'யுடனான எங்கள் கூட்டணி என்றும் தொடரும் கூட்டணி!" என்று 'மக்கள் உரிமைக் கட்சி' அறிக்கை வெளியிட்டது.

"இதெல்லாம் உங்க ஏற்பாடுதானா?" என்றார் முத்தையன் வியப்புடன்.

"என்ன செய்யறது?  ஒரு செயலை நிறைவேற்ற இயல்பான வழிகள் பயன் தரலேன்னா புதுசா ஒரு வழியைக் கண்டறியத்தான் வேணும். நமக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் கிடைக்காம போனாலும் 'ஒரே தேசம் கட்சி'க்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் கிடைக்க வகை செஞ்சு நமக்கு வேண்டியதை அவங்ககிட்ட கேட்டுப் பெற்று நாம் செய்ய வேண்டியதைச் செஞ்சு முடிச்சுட்டோம் இல்ல?" என்றார் அறிவொளி திருப்தியுடன்.

குறள் 673:
ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.

பொருள்:
இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும். இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும்.

674. விட்ட குறை, தொட்ட குறை!

குமரன் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களில் ஒருவரான சண்முகத்திடமிருந்து அந்தக் கோரிக்கை வந்தபோது அதைக் கண்டிப்பாக நிறைவேற்றுவதாக குமரன் இண்டஸ்டிரீஸின் உரிமையாளரான குமரன் கூறி இருந்தார்.

குமரன் இண்டஸ்டிரீஸ் ஒரு ரசாயனப் பொருளைத் தயாரித்து வந்தது. அது கமர்ஷயல் கிரேடு எனப்படும் வணிகத் தரத்தில் தயாரிக்கப்பட்டு வந்தது.

அந்த ரசாயனப் பொருளைப் பயன்படுத்தி வேறோரு ரசாயனப் பொருளைத் தயாரித்து வந்தார் சண்முகம்.

தான் இன்னொரு ரசாயனப் பொருளைத் தயாரிக்கப் போவதாகவும் அதற்கு குமரன் இண்டஸ்டிரீஸ் தற்போது தயாரித்து வரும் கமர்ஷியல் கிரேடை விட இன்னும் உயர்வான லேபரட்டரி கிரேட் என்னும் ஆய்வுக்கூடத் தரத்தில் அதே ரசாயனப் பொருளைத் தயாரித்து அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டிருந்தார்.

ஏற்கெனவே தங்களிடம் வாங்கும் வணிகத்தர ரசாயனப் பொருளைத் தவிர ஆய்வுக்கூடத் தரத்திலான புதிய தயாரிப்பையும் சண்முகம் கூடுதலாக வாங்குவார் என்பதால் அவருடைய கோரிக்கை குமரன் இண்டஸ்டிரீஸுக்கும் லாபகரமானதுதான். அத்துடன் இந்த ஆய்வுக்கூடத் தர ரசாயனப் பொருளை  தயாரிப்பை வேறு புதிய வாடிக்கையாளர்களுக்கும் விற்பனை செய்ய முடியும்.

ஆயினும் ஆய்வுக்கூடத் தரப் பொருளைத் தயாரிக்கக் கூடுதலாக சில தயாரிப்பு உபகரணங்கள் வாங்க வேண்டும் என்பதுடன் அரசாங்கத்திடம் அனுமதியும் பெற வேண்டும்.

தங்கள் வாடிக்கையாளரின் கோரிக்கையை ஏற்கும் விதத்திலும், தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் ஆய்வுக்கூடத் தரப் பொருளைத் தயாரிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதில் குமரன் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

தற்போது ஆய்வுக்கூடத் தரப் பொருளை வேறொரு நிறுவனத்திலிருந்து வாங்குவதாகவும், குமரன் இண்டஸ்டிரீஸ் தயாரிப்பைத் தொடங்கியவுடன் அவர்களிடம் வாங்கிக் கொள்வதாகவும் சண்முகம் கூறினார்.

சில காரணங்களால் அரசாங்கத்தின் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. குமரன் அரசின் உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினால் அனுமதி கிடைக்கும் என்று குமரன் இண்டஸ்டிரீஸ் நிர்வாகி அவரிடம் கூறினார்.

குமரன் அரசின் உயர் அதிகாரி ஒருவரைச் சந்தித்துப் பேசினார். ஆனால் அவரிடமிருந்து உறுதியான பதில் எதுவும் வரவில்லை.

அரசின் மேல்நிலையில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்று குமரன் புரிந்து கொண்டார். இன்னும் சில முறை சென்று இன்னும் சில அதிகாரிகளைப் பார்த்துப் பேசிச் சில விஷயங்களைச் செய்து முடித்தால் அனுமதி கிடைத்து விடும் என்று அவருக்குத் தோன்றியது. 

ஆனால் ஒருவிதத் தயக்கத்தினாலும், தள்ளிப் போடும் மனப்பான்மையாலும் குமரன் தொடர்ந்து முயற்சி செய்யவில்லை.

"என்ன சார் இப்படிச் சொல்றீங்க? எவ்வளவு வருஷமா நாங்க உங்களுக்கு சப்ளை பண்ணிக்கிட்டிருக்கோம். இனிமே எங்ககிட்ட வாங்க மாட்டேன்னு திடீர்னு சொல்றீங்களே!" என்றார் குமரன்.

"திடீர்னு சொல்லலியே! ஆறு மாசம் முன்னாலேயே சொன்னேன் எனக்கு லேபரட்டரி கிரேடு மெடீரியல் வேணும்னு. இப்போதைக்கு வேற ஒருத்தர்கிட்ட வாங்கிக்கிட்டிருக்கேன், நீங்க தயாரிக்க ஆரம்பச்சவுடனே உங்ககிட்ட வாங்கிக்கறேன்னும் சொன்னேன். ஆனா ஆறு மாசம் ஆகியும் நீங்க இன்னும் கவர்ன்மென்ட் அப்ரூவல் கூட வாங்கலியே!" என்றார் சண்முகம்.

"இல்லை சார்! முயற்சி செஞ்சுக்கிட்டுத்தான் இருக்கோம். அரசாங்கத்தில கொஞ்சம் டிலே பண்றாங்க!"

"இல்லை சார். நான் எனக்குத் தெரிஞ்ச அரசாங்க வட்டாத்தில விசாரிச்சேன். நீங்க அப்ரூவல் வாங்கறதில ஆர்வமே காட்டலேன்னு அவங்க சொல்றாங்க. நீங்க இந்த முயற்சியைக் கைவிட்டுட்டீங்கன்னுதான் எனக்குத் தோணுது."

"இல்லை சார்..."

"சாரி குமரன்! நான் பயன்படுத்தற ரெண்டு கிரேடு பொருட்களையும் ஒரே இடத்தில வாங்கறதுதான் எனக்கு நல்லது. இப்ப ஒருத்தர் ரெண்டு கிரேடையுமே தயாரிக்கறாரு. உங்ககிட்ட கெமிஸ்டா இருந்தவர்தானாமே, தாமோதரன்னு! அவர்கிட்டதான் வாங்கப் போறேன். சாரி. என் தொழிலுக்கு எது நல்லதுன்னு நான் பாக்கணும் இல்ல?" என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டார் சண்முகம்.

தாமோதரனா?

குமரனுக்கு உடலில் சூடு ஏறியது.

அவருடைய நிறுவனத்தில் கெமிஸ்டாகப் பணி செய்து கொண்டிருந்த தாமோதரன் அவர்கள் நிறுவனத் தயாரிப்பின் ஃபார்முலாவை வேறொரு நிறுவனத்துக்கு விற்க முயன்றபோது. அந்த நிறுவனமே அதைக் குமரனிடம் சொல்லி தாமோதரனைக் காட்டிக் கொடுத்தது. உடனே தாமோதரனை வேலையிலிருந்து நீக்கினார் குமரன்.

தாமோதரன் மீது காவல்துறையில் புகார் கொடுத்து அவனைச் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று அவர்கள் நிறுவனத்தின் நிர்வாகி உட்படப் பலர் கூறியபோது, வேலையை விட்டு நீக்குவதே அவனுக்குப் போதுமான தண்டனைதான் என்று விட்டு விட்டார் குமரன்.

தனக்கு துரோகம் செய்தவனை தண்டிக்காமல் விட்டது, தான் துவங்கிய செயலை முடிக்காமல் பாதியில் நிறுத்தியது இரண்டும் ஒன்று சேர்ந்து தன்னைத் தாக்கியிருப்பதை உணர்ந்தார் குமரன்.

குறள் 674:
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்.

பொருள்:
செய்யத் தொடங்கிய செயல், அழிக்கத் தொடங்கிய பகை இவை இரண்டிலும் மிச்சம் இருந்தால் அவை தீயின் மிச்சம் போல வளர்ந்து அழிக்கும் (ஆதலால் எதையும் முழுமையாகச் செய்க.)

675. திருப்புமுனை 

"உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போறேங்கறீங்க!" என்றாள் சுமதி.

"அரசியல் கட்சிகள் நாட்டுக்குத் தேவைதானே? இத்தனை வருஷமா தொழில் செஞ்சு நிறைய சம்பாதிச்சுட்டேன். இன்னும் சம்பாதிச்சுக்கிட்டிருக்கேன்  நாம நல்லா வாழ்ந்துக்கிட்டிருக்கோம். இப்ப நான் கம்பெனிக்குப் போகாமலேயே தொழில் நல்லா நடந்துக்கிட்டிருக்கு. சமூகத்துக்கு ஏதாவது செய்யணும்னு நினைக்கிறேன். அரசியல் கட்சி ஆரம்பிச்சு நல்ல கொள்கைகளையும் திட்டங்களையும் வகுத்துச் செயல்படுத்தினா அது நாட்டுக்கு நல்லதுதானே?" என்றார் கௌரிசங்கர்.

"மேடையில பேசற மாதிரி பேசறீங்க! அரசியல்னாலே அது பதவிக்கும் பணத்துக்கும்தான்னு ஆயிடுச்சு. நீங்க போய் என்ன நல்லது செய்யப் போறீங்க?"

"நீ சொல்றது சரிதான்.அரரசியல்னா பதவி, பணம்னுதான் ஆயிடுச்சு. இதை மாத்தி நல்லது செய்யத்தான்  நான் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போறேன்!"

"என்னவோ செய்யுங்க. உங்களுக்குத் தெரியாததா?" என்றாள் சுமதி.

"என்னங்க, அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போறதாச் சொன்னீங்க! அஞ்சாறு மாசமா நிறைய பேரைக் கூப்பிட்டுப் பேசிக்கிட்டிருக்கீங்க. நிறைய பணம் செலவழிக்கறீங்க. எதுக்குன்னே தெரியல! இப்ப திடீர்னு டிவி சேனல் ஆரம்பிக்கப் போறேன்னு சொல்றீங்க. உங்க திட்டத்தை மாத்திக்கிட்டீங்களா?" என்றாள் சுமதி.

கௌரிசங்கர் பதில் சொல்லாமல் சிரித்தார்.

"நல்ல வேளை! முடிவை மாத்திக்கிட்டீங்களே! டிவி சேனல் நடத்தறது நல்ல தொழிலா இருக்கும். உங்களுக்குத்தான் தொழில் நடத்தற அனுபவம் இருக்கே! நல்ல விஷயம்தான்!" என்றாள் சுமதி..

கௌரிசங்கர் மௌனமாக இருந்தார்.

"வேதாளம் மறுபடி முருங்கை மரத்தில ஏறின மாதிரி மறுபடி ஆரசியல் கட்சி ஆரம்பிக்கற யோசனைக்குப் போயிட்டாங்களா?" என்றாள் சுமதி. 

"அரசியல் கட்சி ஆரம்பிக்கற யோசனையை நான் எப்ப கைவிட்டேன்?" என்றார் கௌரிசங்கள்.

"பின்னே ஏழெட்டு மாசமா வேற ஏதோ செஞ்சுக்கிட்டிருந்தீங்களே! டிவி சேனல் ஆரம்பிக்க அனுமதிக்கு விண்ணப்பிச்சிருக்கீங்க!"

"அனுமதி கிடைச்சாச்சு. மே மாசம் ஒண்ணாம் தேதி அன்னிக்கு டிவி சேனல் ஆரம்பிக்கப் போறேன். அன்னிக்கே அரசியல் கட்சியோட துவக்க விழாவையும் திருச்சியில நடத்தப் போறேன். அது நம்ம டிவி சேனல்ல லைவா ஒளிபரப்பாகும். அதனால என்னோட புதுக் கட்சிக்கும் பப்ளிசிடி கிடைக்கும், டிவி சேனலுக்கும் பப்ளிசிடி கிடைக்கும்!" என்றார் கௌரிசங்கர் உற்சாகமாக.

"எனக்கு நீங்க செய்யறது எதுவுமே புரியல!"

"சுமதி! ஒரு வேலையை செய்யறதுக்கு முன்னால அதைச் சிறப்பா செய்யறதுக்காக நிறைய முன்னேற்பாடுகளைச் செய்யணும். முதல்ல பணம் வேணும். இந்த எட்டு மாசத்தில என் தொழில்கள்ள வர லாபத்திலேந்து கொஞ்சம் கொஞ்சமா எடுத்து ஒரு பெரிய தொகையைச் சேர்த்து வச்சிருக்ககேன்.

"ரெண்டாவது, இது தகவல் தொழில்நுட்ப யுகம். அதனால நம் கட்சிக்கு ஒரு டிவி சேனல் இருந்தா நல்லது. நம்ம கட்சி பத்தின விஷயங்களைப் போடலாம். மத்தவங்க செய்யற விமரிசனங்களுக்கு பதில் கொடுக்கலாம். 

"அதோட இப்பல்லாம் யூடியூப் சேனல்களும் முக்கியம். அதனாலதான் ஊடகத் துறையில இருக்கற சில திறமைசாலிகளை வச்சு சில யூடியுப் சேனல்களை ஆரம்பிச்சிருக்கேன். அந்த சேனல்கள் மூலமாகவும் நம்ம கட்சியை வளர்க்கலாம்.

"மூணாவதா, மே தினத்தன்னிக்கு கட்சியை ஆரம்பிச்சா, உடனே அரசியல் தலைவர்கள் பல பேர் 'இவன் ஒரு முதலாளி, இவனுக்கும் தொழிலாளர் தினத்துக்கும் என்ன சம்பந்தம்?'னு  பேசுவாங்க. அப்ப என்னோட தொழிற்சாலைகள்ள வேலை செய்யற தொழிலாளர்களுக்கு எவ்வளவு நன்மைகள் செஞ்சிருக்கேன்னு விவரமா எடுத்துச் சொல்லி, நமக்கு எதிராகச் சொல்லப்பட்ட விஷயத்தையே நமக்கு ஆதரவான விஷயமா மாத்தி நம்ம கட்சியைப் பத்தி ஒரு நல்ல இமேஜை உருவாக்க முடியும்! அதனாலதான் தொழிலாளர் தினத்தன்னிக்குக் கட்சியை ஆரம்பிக்கறேன்"

"அது சரி. கட்சித் துவக்க விழாவை ஏன் திருச்சியில நடத்தறீங்க? உங்க சொந்த ஊர் மதுரையாச்சே! அங்கே நடத்தலாம் இல்ல?"

"நடத்தலாம். ஆனா திருச்சிக்கு ஒரு சிறப்பு இருக்கு. பல கட்சிகளோட பல முக்கியமான மாநாடுகள் திருச்சியில நடந்திருக்கு. 'திருச்சி ஒரு திருப்பு முனை' ன்னு பல தலைவர்கள் இதுக்கு முன்னால சொல்லி இருக்காங்க. அந்த சென்டிமென்ட்டைப் பயன்படுத்தி, திருச்சியில் இந்தப் புதிய கட்சி துவக்கப்படறது தமிழ்நாட்டு அரசியலில் ஒரு திருப்பு முனைன்னு சொல்லி ஒரு வலுவான பிரசாரத்தை உருவாக்கலாமே! அதுக்குத்தான்!" என்றார் கௌரிசங்கர்.

"புதுசா ஒரு தொழிலை ஆரம்பிகறதுக்கு முன்னால எப்படி திட்டமிடுவீங்கன்னு நான் பாத்திருக்கேன். அரசியல் கட்சியை ஆரம்பிக்கவும் அதே மாதிரி திட்டமிட்டிருக்கீங்க!" என்றாள் சுமதி கணவனைப் பெருமையுடன் பார்த்து.

குறள் 675:
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.

பொருள்:
ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் குறையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

676. தொழிலைத் துவங்கிப் பார்!

"தொழிற்சாலை ஆரம்பிக்க, நம் ஊரை விட்டுட்டு வெளி மாநிலத்தில இருக்கற இந்தச் சின்ன ஊரைத் தேர்ந்தெடுத்திருக்கே! கேட்டா, இங்கதான் முலப்பொருள் கிடைக்குதுன்னு சொன்னே. உன்னோட நானும் வந்து இந்த ஊர்லேயே உக்காந்துக்கிட்டிருக்கேன். ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு. அடிக்கடி எங்கேயோ போயிட்டு வர. அப்பப்ப யாரையாவது அழைச்சுக்கிட்டு வந்து அவங்களோட ரொம்ப நேரம் பேசற. ஆனா இதுவரையிலும் தொழிற்சாலை கட்டடத்துக்கான பிளானைக் கூடத் தயார் பண்ணல! நீ என்ன செய்யறேன்னே எனக்குப் புரியலையே!" என்றான் சந்திரன் தன் நண்பன் கணேசனிடம்.

"தொழிற்சாலை ஆரம்பிக்கறதுக்கு முன்னால நிறைய ஏற்பாடுகள் செய்யணும் இல்ல?" என்றான் கணேசன்.

"அப்ப எதுக்கு என்னையும் உன்னோட கூட்டிக்கிட்டு வந்தே? ஏற்பாடுகளையெல்லாம் செஞ்ச பிறகு என்னை வரச் சொல்லி இருக்கலாமே!"

கணேசன் சந்திரனை முறைத்துப் பார்த்து விட்டு, "டேய்! உன்னை என் பார்ட்னரா இருக்கச் சொன்னேன். பார்ட்னர்னா ஆரம்பத்திலிருந்தே கூட இருக்க வேண்டாமா?" என்றான்.

"நான் இன்னும் பார்ட்னரா இருக்க ஒத்துக்கலையே! இந்தத் தொழிலைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது. நீ சொல்றதால முதலீடு செய்யலாம்தான். ஆனா என் அப்பாதான் பணம் கொடுக்கணும். அவர் கேக்கற கேள்விக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது, நீயே அவர்கிட்ட விளக்கிச் சொல்லுன்னு சொன்னேன். ஆனா நீ அதைச் செய்யாம என்னை நேரா இங்கே அழைச்சுக்கிட்டு வந்துட்டே! நாம இங்கே இருக்கறதுக்கு நீதான் செலவு செய்யறே! நான் எதுவும் செய்யாம உக்காந்துக்கிட்டிருக்கேன். எனக்கு இது ரொம்ப கஷ்டமா இருக்கு!" என்றான் சந்திரன்.

"கவலைப்படாதே! இனிமே உனக்கும் வேலை இருக்கும். இத்தனை நாளா நான் செஞ்சதெல்லாம் டெக்னிகல் விஷயங்கள். அதனால உனக்கு இது எந்த அளவுக்குப் புரியும்னு நினைச்சுதான் உன்னை ஈடுபடுத்தல" என்றான் கணேசன்.

"தொழிற்சாலை ஆரம்பிக்கறதுன்னு முடிவு செய்யறதுக்கு முன்னாலேயே எல்லாத்தையும் ஆய்வு செஞ்சிருப்ப இல்ல?"

"நிச்சயமா! நிறைய ஆய்வெல்லாம் செஞ்சு, நிபுணர்களைக் கலந்தாலோசிச்சு, புராஜக்ட் ரிபோர்ட் தயாரிச்சு, அதை பாங்க்ல கொடுத்து, கடனுக்கான அங்கீகாரம் எல்லாம் கூட வாங்கியாச்சு. தொழிற்சாலைக்கான இடத்தைத் தேர்ந்தெடுத்து அதை வாங்க ஒப்பந்தம் கூடப் போட்டாச்சு."

"அப்புறம் என்ன?"

"நடைமுறையில இதை எப்படிச் செய்யப் போறோம், எல்லாத்தையும் நாமே நேரடியா செய்யறதா, அல்லது சில விஷயங்களை ஒப்பந்த்தக்காரர்கள் மூலமா செய்யறதா,  ஊர் மக்கள்கிட்டேந்து ஏதாவது எதிர்ப்புகள் வருமா, வேற ஏதாவது பிரச்னைகள் வருமா - கிணறு தோண்டறதிலேந்து எலக்டிரிக் லைன் கொண்டு வரது வரை எல்லாத்தையும் எப்படிப் பிரச்னை இல்லாம செய்யறது -, எந்த வகையில செஞ்சா எந்த மாதிரி பலன்கள் கிடைக்கும் இதையெல்லாம் நல்லா ஆராய்ஞ்சு பாத்துட்டுத்தானே வேலையை ஆரம்பிக்கணும்?" என்று விளக்கினான் கணேசன்.

"இதெல்லாம் புராஜக்ட் ரிபோர்ட் தயார் பண்றதுக்கு முன்னாடியே செய்ய வேண்டிய விஷயங்கள் இல்லையா? எல்லாத்தையும் இறுதி செஞ்சப்பறம், வேலையை ஆரம்பிக்கறதுக்கு முன்னால, மறுபடி இதையெல்லாம் செய்யணுமா?" 

"ஒரு பெரிய நிறுவனம் ஆரம்பிக்கப் போற தொழில்னா, நீ சொல்றது சரிதான். ஆனா நாம ரெண்டு பேர் மட்டுமே பார்ட்னரா இருக்கற ஒரு சிறிய நிறுவனம்தானே! ஒரு பெரிய நிபுணர் குழுவை வச்சு நிறையப் பணம் செலவழிச்சு நாம புராஜக்ட் ரிபோர்ட் தயாரிக்கல. அதனால தொழிற்சாலை அமைக்கிற வேலையை ஆரம்பிக்கறதுக்கு முன்னால இதையெல்லாம் சரிபாத்துக்கறது நல்லதுதான். சில பெரிய தொழிற்சாலைகள் எல்லாம் கூட ஆரம்பிச்சப்பறம் பல பிரச்னைகளை சந்திக்கறதைப் பாக்கறோம் இல்ல?"

"அப்படின்னா, ஒருவேளை இதையெல்லாம் சரிபார்த்தப்பறம், இந்தத் தொழிற்சாலையை ஆரம்பிக்கறதில நிறைய பிரச்னைகள் வருங்கற முடிவுக்கு நாம வந்தா?" என்றான் சந்திரன்.

"அப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டா,, இது மட்டும் செலவு செஞ்சதை நஷ்டமா ஏத்துக்கிட்டு, திட்டத்தைக் கைவிட வேண்டியதுதான்!" என்றான் கணேஷ் சிரித்தபடி.

"அதனாலதான்...?" என்று இழுத்தான் சந்திரன்.

"ஆமாம். அதனாலதான் உன்னோட முதலீட்டை அப்புறம் வாங்கிக்கலாம்னு நினைச்சு உங்கப்பாகிட்ட இது பத்திப் பேசல. நஷ்டம் ஏற்பட்டா அது என்னோட போகட்டுமே!" என்ற கணேஷ், தொடர்ந்து, "ஆனா, அப்படி நடக்கல. எல்லாமே நல்லபடியாத்தான் இருக்கு!" என்றான் உற்சாகத்துடன்."

குறள் 676:
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.

பொருள்:
ஒரு செயலை முடிக்கும் வகை, வரக் கூடிய இடையூறுகள், அதைச் செய்து முடித்ததும் கிடைக்கப் போகும் பெரும் பயன் ஆகியவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும்.

677. குழுவில் ஒரு புதிய உறுப்பினர்

"இந்தியாவில இந்த புராஜக்டை நாமதான் முதல்ல செய்யப் போறோம்" என்றான் புராஜெக்ட் மானேஜர் அரவிந்த் பெருமையுடன்.

தொழிலதிபர் குமார் மௌனமாகச் சிரித்தார்.

"நம்ம குமார் சார்தான் தைரியமா இந்த புராஜெக்ட்டை ஆரம்பிச்சிருக்காரு. இவனை புராஜெக்ட் மானேஜராப் போட்டிருக்காரு. இவன் என்னவோ தான்தான் இந்த புராஜெக்டை நிறைவேத்தற மாதிரி பெருமைப்பட்டுக்கிட்டிருக்கான்!" என்று அக்கவுன்ட்ஸ் மானேஜர் சண்முகம் தன் அருகில் அமர்ந்திருந்த அட்மினிஸ்ட்ரேஷன் மானேஜர் சக்திவேலின் காதில் முணுமுணுத்தார்.

"அரவிந்த் சில புராஜெக்ட்களை வெற்றிகரமா நிறைவேற்றின அனுபவம் உள்ளவர்ங்கறதாலதானே குமார் சார் அவரை புராஜெக்ட் மானேஜராப் போட்டிருக்காரு? அவருக்கு அந்தப் பெருமிதம் இருக்கத்தான் செய்யும்!" என்றார் சக்திவேல்.

"சரி. இந்த மீட்டிங் முடியப் போகுது. இந்த புராஜெக்ட் இம்ப்ளிமென்டேஷன் குரூப்ல இப்ப எட்டு பேர் இருக்கோம். இந்தக் குழுவில இன்னொரு உறுப்பினரையும் சேர்த்திருக்கேன். அவரு நாளைக்கு வேலையில சேரறாரு. அவர் அரவிந்தோட இணைஞ்சு வேலை செய்வாரு. இனிமே நடக்கற புராஜெக்ட் குழு கூட்டங்களில் அவரும் கலந்துப்பாரு!" என்றார் குமார்.

குமாரின் இந்த அறிவிப்பு அனைவருக்குமே வியப்பாக இருந்தாலும், அரவிந்துக்கு அதிர்ச்சியாகவும் இருந்தது என்பதை அவனுடைய முகமாற்றத்திலிருந்து தெரிந்தது.

"புராஜெக்ட் வெற்றிகரமா முடிஞ்சு போச்சு. டிரையல் புரொடக்‌ஷன் சிறப்பா வந்திருக்கு. இனிமே கமர்ஷியல் புரொடக்‌ஷன் ஆரம்பிக்க வேண்டியதுதான்! இந்த புராஜெக்ட் செயல்பாட்டுக் குழுவில உறுப்பினர்களா இருந்து சிறப்பாப் பணி செஞ்ச உங்கள் எல்லோருக்கும் என்னோட பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!" என்றார் குமார்.

அனைவரும் மௌனமாகத் தலையசைத்துப் புன்னகைத்தனர்.

குமாரின் அறைக் கதவைத் தட்டி அனுமதி பெற்று அவர் அறைக்குள் நிழைந்தான் அரவிந்த்.

"வாங்க அரவிந்த்! புராஜெக்டை வெற்றிகரமா முடிச்சதுக்கு உங்களைத்தான் சிறப்பாப் பாராட்டணும். எல்லோரும் இருக்கறப்ப உங்களைத் தனியாப் பாராட்டினா நல்லா இருக்காதுங்கறதாலதான் மீட்டிங்கில உங்களைத் தனியாப் பாராட்டல" என்றார் குமார்.

"நன்றி சார்! ஆனா எனக்கு ஒரு வருத்தம் உண்டு!" என்றார் அரவிந்த்.

"அது எனக்குத் தெரியுமே! புராஜெக்ட் மானேஜரா உங்களைப் போட்டுட்டு, நீங்க இன்னொருத்தரோட சேர்ந்துதான் பணியாற்றணும்னு சொன்னா உங்களுக்கு வருத்தமா இருக்குங்கறதை என்னால புரிஞ்சுக்க முடியாதா?"

அப்புறம் ஏன் சார்..." என்று ஆரம்பித்த அரவிந்த், உடனே பேச்சை மாற்றி "சுந்தர் நிறைய விஷயம் தெரிஞ்சவராவும், அனுபவம் உள்ளவராகவும் இருந்ததால அவரோட இணைஞ்சு வேலை செஞ்சது ரொம்ப உற்சாகமாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. இந்த புராஜெக்ட்ல அவரோட பங்களிப்பு ரொம்ப அதிகம். ஆனா எங்க ரெண்டு பேர்ல ஒத்தரை மட்டும் வச்சே நீங்க இந்த புராஜெக்டை முடிச்சிருக்கலாங்கறது என்னோட தனிப்பட்ட கருத்து. தப்பா இருந்தா மன்னிச்சுடுங்க" என்றான்.

"சுந்தரோட பங்களிப்பு அதிகமா இருந்ததா நீங்கதான் இப்ப சொன்னீங்க. இந்த புராஜெக்ட்ல உங்க ரெண்டு பேரோட பங்களிப்பும் இருந்திருக்கு இல்ல? ஒத்தரோட பங்களிப்பு மட்டும் இருந்திருந்தா இந்த புராஜெக்ட் இவ்வளவு சிறப்பா வந்திருக்கும்னு சொல்ல முடியுமா? " என்றார் குமார்.

"நீங்க சொல்றது உண்மையா இருக்கலாம் சார்! ஆனா சுந்தரோட பின்னணி பற்றி நீங்க எங்க யார்கிட்டயும் எதுவுமே சொல்லல. அவரோட பின்னணி பற்றி அவர்கிட்ட யாரும் கேட்கக் கூடாதுன்னும் சொல்லிட்டீங்க. ஏன் சார் அப்படி? அவர் யாரு? அவருக்கு இந்த புராஜெக்டைப் பத்தி எப்படி இவ்வளவு விஷயம் தெரிஞ்சிருக்கு? இதையெல்லாம் நீங்க இப்பவாவது சொல்லாம் இல்லையா?" என்றான் அரவிந்த்.

"அரவிந்த்! இந்தியாவில இந்த புராஜெக்டை நாமதான் முதல்ல செய்யறோம்னு நீங்க அடிக்கடி சொல்லுவீங்க. உங்க பேச்சை நான் மறுத்ததில்ல. ஆனா அது உண்மையில்ல. நமக்கு முன்னால ஏற்கெனவே இந்த புராஜெக்டை செய்ய சில பேர் முயற்சி செஞ்சிருக்காங்க!"

"முயற்சி செஞ்சிருக்காங்க சார்! ஆனா யாரும் செஞ்சு முடிக்கலையே1 அதைத்தான் நான் சொன்னேன்" என்றான் அரவிந்த்.

"ஒரு முயற்சியை ஆரம்பிக்கும்போது எல்லோருமே அதை செஞ்சு முடிக்கப் போறோம்னு நினைச்சுத்தான் ஆரம்பிப்பாங்க. நாமும் அப்படித்தான் ஆரம்பிச்சோம். இதை செஞ்சு முடிச்சப்பறம்தானே நம்மால முடிச்சுட்டோம்னு சொல்லிக்க முடிஞ்சது? பல பேர் இந்த புராஜெக்டை முயற்சி செஞ்சிருந்தாலும், அஞ்சு வருஷம் முன்னால ஒத்தர் ரொம்பக் கடுமையா முயற்சி செஞ்சு கிட்டத்தட்ட செஞ்சு முடிக்கிற நிலைக்கு வந்துட்டாரு. ஆனா கடைசி நிமிஷத்தில ஏற்பட்ட சில எதிர்பாராத சிக்கல்களால அவரால அந்த புராஜெக்டை முடிக்க முடியல. அதானால அவரோட அனுபவத்தைப் பயன்படுத்திக்கலாம்னு நினைச்சேன்!"

"அப்படீன்னா...?"

"ஆமாம். நீங்க நினைக்கிறது சரிதான். சுந்தர்தான் அந்த நபர். நீங்க சில புராஜெக்ட்களை வெற்றிகராமா செஞ்சு முடிச்சதால ஒரு புராஜெக்டை செஞ்சு முடிக்கிற வழிமுறைகள் உங்களுக்குத் தெரியும். சுந்தர் இந்த புராஜெக்டையே செஞ்ச அனுபவம் உள்ளவர்ங்கறதால அவரோட அந்த அனுபவமும் இந்த புராஜெக்டுக்குத் தேவைங்கறதாலதான் அவரையும் நம் டீம்ல இணைஞ்சுக்கச் சொல்லிக் கேட்டுக்கிட்டேன்!" என்றார் குமார். 

குறள் 677:
செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்.

பொருள்:
ஒரு செயலைச் செய்யத் தொடங்குபவன் அதைச் செய்யும் முறை, அச்செயலை இதற்கு முன்பு செய்திருப்பவனின் கருத்து இவற்றை அறிந்து கொள்ள வேண்டும்.

678. கொல்கத்தாவுக்குப் போ!

"சார்! நான் ரிடயர் ஆக இன்னும் ரெண்டு வருஷம்தான் இருக்கு. இப்ப என்னை கொல்கத்தாவுக்கு மாத்தி இருக்கீங்களே!" என்றார் ராமகிருஷ்ணன்.

"என்ன செய்யறது ரமகிருஷ்ணன்! உங்களை மாதிரி சீனியர் ஒத்தரோட தேவை கொல்கத்தா பிராஞ்ச்சுக்கு வேண்டி இருக்கே!" என்றார் நிர்வாக இயக்குனர் தயாளன்.

"என் பெண் காலேஜில படிக்கறா, பையன் ஸ்கூல் முடிக்கப் போறான். என் குடும்பத்தை அங்கே அழைச்சுக்கிட்டுப் போக முடியாது!"

"வயசான காலத்தில ரெண்டு வருஷம் பேச்சிலர் லைஃபை அனுபவிங்க! குடும்பம் இங்கேயே இருக்கட்டும். கொல்கத்தாவில உங்களுக்குத் தங்க ஆஃபீஸ்லேயே ரூம் கொடுத்திருக்கோம். அலவன்ஸ் வேற வரும். அதனால செலவு ஒரு பிரச்னையா இருக்காது!" என்றார் நிர்வாக இயக்குனர்.

"ரிடயர் ஆனப்பறம் என்ன செய்யறதுங்கற கேள்வி எல்லோருக்குமே வரும். ஆனா ரிடயர் ஆனப்பறம் என்ன செய்யணுங்கறதை நான் பல வருஷங்கள் முன்னாலேயே தீர்மானிச்சுட்டேன்!" என்றார் ராமகிருஷ்ணன்.

"என்ன செய்யணும்னு?" என்றார் அவருடைய நண்பர் ராகவன்.

"ஆன்மீகச் சொற்பொழிவு செய்யறதுன்னு!"

"உனக்கு ஆன்மீகத்தில நிறைய ஈடுபாடு இருக்குங்கறது எனக்குத் தெரியுமே! நீ நிறைய ஆன்மீகப் புத்தகங்கள் படிச்சு ஆன்மீக அறிவை வளர்த்துக்கிட்டேங்கறதும் எனக்குத் தெரியும். ஆனா படிச்சதையெல்லாம் வச்சுக்கிட்டு ஆன்மீகச் சொற்பொழிவாளர் ஆயிட முடியுமா?" என்றார் ராகவன்.

"முடியாது. ஒரு நல்ல ஆன்மீக சொற்பொழிவாளர்கிட்ட பயிற்சி எடுத்துக்கிட்டாதான் ஒரு நல்ல சொற்பொழிவாளரா உருவாக முடியும்னு  நினைச்சேன். ஆனா வேலையில இருந்துக்கிட்டே அது மாதிரி பயிற்சி எடுத்துக்க முடியல. ஆஃபீஸ்லேந்து வீட்டுக்கு வந்தப்பறமும் வீட்டு விஷயங்களை கவனிக்கத்தான் நேரம் சரியா இருக்கும். என்ன செய்யறதுன்னு யோசிச்சுக்கிட்டிருந்தப்பதான் என் கம்பெனியில எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்தாங்க!"

"என்ன வாய்ப்பு அது?"

"ரிடயர் ஆறதுக்கு ரெண்டு வருஷம் இருக்கறப்ப என்னை கொல்கத்தாவுக்கு மாத்தினாங்க. முதல்ல அதை ஒரு பிரச்னையா நினைச்சேன். அப்புறம் அதை ஒரு வாய்ப்பாப் பயன்படுத்திக்கிட்டேன்" என்றார் ராமகுருஷணன்.

"எப்படி?"

"பல வருஷங்கள் இங்கே பிரபலமா இருந்த ஒரு ஆன்மீகச் சொற்பொழிவாளர் கொல்கத்தாவில செட்டில் ஆகி இருக்கார்னு கேள்விப்பட்டேன். அவரைப் போய்ப் பார்த்தேன். அவர் எனக்குப் பயிற்சி கொடுக்க ஒத்துக்கிட்டாரு. எனக்கு எப்ப நேரம் கிடைக்குமோ அப்பல்லாம் வரலாம்னு சொன்னாரு. பெங்களூரு மாதிரி பக்கத்தில இருக்கற ஊரா இருந்தா வார இறுதியில எல்லாம் வீட்டுக்கு வந்திருப்பேன். கொல்கத்தா தூரத்தில இருந்ததால அடிக்கடி சென்னைக்கு வர முடியாது. அதனால வார இறுதிகள்ள நிறைய நேரத்தைப் பயிற்சிக்காகப் பயன்படுத்திக்கிட்டேன். இப்ப ரிடயர் ஆகி ஊருக்கு வந்தாச்சு. உடனேயே என்னோட ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்ச்சிகளை ஆரம்பிச்சுடலம்!" என்றார் ராமகிருஷ்ணன் உற்சாகத்துடன்.

குறள் 678:
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.

பொருள்:
ஒரு செயலில் ஈடுபடும்போது, அச்செயலின் தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும்.

679. கேட்காமலே செய்த உதவி! 

"ரெண்டு நாளா உனக்கு ஃபோன் பண்ணிக்கிட்டிருந்தேன். நீ எடுக்கல!" என்றான் ராமசாமி, குற்றம் சாட்டும் தொனியில்.

"சாரி! நீ கேட்ட உதவியை என்னால செய்ய முடியல. முயற்சி செஞ்சுக்கிட்டிருந்தேன். பணம் கிடைச்சப்பறம் ஃபோன் செய்யலாம்னு நினைச்சுதான் உன் ஃபோனை எடுக்கல!" என்றான் மாதவன்.

"நீ ஒரு தடவை கூட இல்லைன்னு சொல்லதில்லையே! உன்னை ரொம்ப நம்பிக்கிட்டிருந்தேன்!" என்றான் ராமசாமி ஏமாற்றத்துடன்.

"இந்த ஒரு தடவை இல்லேன்னு சொல்லும்படி ஆயிடுச்சு. மன்னிச்சுக்க!" என்று கூறி ஃபோனை வைத்தான் மாதவன்.

"அவரு உங்க நண்பர். வியாபாரத்துக்காகத்தானே பணம் கேட்டாரு?  கொடுத்து உதவி இருக்கலாமே!" என்றாள் மாதவனின் மனைவி பாரு.

"பணம் இல்லேன்னுதானே இத்தனை நேரம் அவங்கிட்ட சொல்லிக்கிட்டிருந்தேன்?"

"நீங்கதான் எங்கேயாவது புரட்டிக் கொடுப்பீங்களே, அது மாதிரி செஞ்சிருக்கலாம் இல்ல?"

"புரட்ட முடிஞ்சா புரட்டிக் கொடுத்திருக்க மாட்டேனா? சில சமயம் இப்படித்தான் ஆகும்!" என்று பேச்சை முடித்தான் மாதவன்.

"நீங்க செஞ்ச உதவியை நான் எந்தக் காலத்திலேயும் மறக்க மாட்டேன்!" என்றான் மாணிக்கம்.

"கந்து வட்டிக்கெல்லாம் கடன் வாங்கவே கூடாது. வாங்கினா இப்படித்தான் ஆகும்!" என்றான் மாதவன்.

"நீங்க சொல்றது சரிதான். ஏதோ அவசரத்துக்கு வாங்கிட்டேன். வட்டியெல்லாம் ஒழுங்காத்தான் கட்டிக்கிட்டிருந்தேன். ரெண்டு மாசம் வட்டி கட்டலேன்னதும் எப்படி நெருக்கடி கொடுத்தாங்க! கதி கலங்கிப் போயிட்டேன். பெண்டாட்டி பிள்ளைங்களைக் கூடக் கடத்திடுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். உங்களுக்கும், எனக்கும், வியாபாரத்தில போட்டி, விரோதம் எல்லாம் இருந்தாலும், அதையெல்லாம் பாக்காம யார் மூலமோ விஷயத்தைக் கேள்விப்பட்டு எப்படியோ பணத்தைப் புரட்டிக் கொடுத்து என்னைப் பெரிய ஆபத்திலேந்து காப்பாத்தி இருக்கீங்க. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. நீங்க கொடுத்து உதவின பணத்தை எப்படியாவது திருப்பிக் கொடுத்துடறேன்!" என்றான் மாணிக்கம் மாதவனின் கைகளைப் பற்றிக் கொண்டு.

"எனக்குப் பணத்தைக் கொடுக்கறதுக்காக மறுபடி கந்து வட்டிக்குக் கடன் வாங்காதீங்க!" என்று சிரித்துக் கொண்டே கூறிய மாதவன், "ஆனா நான் உங்ககிட்ட ஒரு உதவியை எதிர்பாக்கறேன்!" என்றான்.

"சொல்லுங்க மாதவன்! எதுவானாலும் செய்யறேன்!"

"என் நண்பன் ஒத்தன் வியாபாரத்துக்காகப் பணம் கேட்டான். எப்பவும் அவனுக்குக் கொடுத்து உதவற நான் இந்த முறை உங்களுக்கு உதவி செய்யணுங்கறதுக்காக அவனுக்குக் கூட உதவல!"

மாதவன் என்ன சொல்லப் போகிறான் என்று எதிர்பார்த்து மாணிக்கம் காத்திருந்தார்.

"நான் உங்களுக்கு உதவி செஞ்சதுக்கான காரணம் நமக்குள்ள இனிமே விரோதம் இருக்கக் கூடாதுங்கறதுக்காகத்தான். தொழில்ல நாம போட்டியாளர்களா இருப்போம். ஆனா தனிப்பட்ட விரோதம் வேண்டாம். அதுதான் நான் உங்ககிட்ட கேட்டுக்கறது!" என்றான் மாதவன்.

"நீங்க இவ்வளவு பெரிய உதவி ஞ்சப்பறமும் நான் உங்ககிட்ட விரோதம் பாராட்டினா நான் மனுஷனே இல்லை. நீங்க சொல்றபடி நாம வியாபாரத்தில போட்டியாளர்களா இருந்தாலும் தனிப்பட்ட முறையில் நண்பர்களாகவே இருக்கலாம்!" என்றான் மாணிக்கம்.

குறள் 679:
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.

பொருள்:
நண்பருக்கு நல்லுதவி செய்வதைக் காட்டிலும் பகைவராயிருப்பவரைத் தம்முடன் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளுதல் விரைந்து செய்யத் தக்கதாகும்.

680. முடிவை மாற்றிக் கொண்ட மன்னன்

"கப்பம் கட்டுவதா? போரிட்டு நாம் அனைவரும் மடிந்து போனாலும் சரி, இன்னொரு நாட்டுக்குக் கப்பம் கட்டுவது என்பதை நினைத்துப் பார்க்கக் கூட முடியாது!" என்றான் ராஜவர்மன்

"அரசே! தாங்கள் கூறுவது சரிதான். ஆனால் நம் நாடு சிறியது. சோளிங்க நாடு நம் மீது படையெடுத்தால் நம் படைகளால் இரண்டு நாட்கள் கூடத் தாக்குப் பிடிக்க முடியாது. சோளிங்க நாட்டுடன் சமாதானமாகப் போனால் நீங்கள் நம் நாட்டின் மன்னராகத் தொடரலாம்!" என்றார் அமைச்சர்.

"சோளிங்க நாட்டுக்குக் கப்பம் கட்டிக் கொண்டு இந்த நாட்டு மன்னன் என்ற பெயரில் அவர்களுடைய அடிமையாக ஆட்சி செய்ய நான் விரும்பவில்லை!" என்றான் ராஜவர்மன்.

"அமைச்சரே! நீங்கள் அன்று சொன்னதுதான் சரி. சோளிங்க நாட்டுடன் சமாதானமாகப் போவதென்று முடிவு செய்து விட்டேன்!" என்றான் ராஜவர்மன்.

"நல்ல முடிவுதான் அரசே! ஆனால் இந்த முடிவுக்கு நீங்கள் வந்ததற்கான காரணத்தை நான் அறிந்து கொள்ளலாமா?" என்றார் அமைச்சர்.

"நிச்சயமாக அமைச்சரே! அன்று உங்களிடம் என் முடிவைக் கூறிய பிறகு, நம் நாட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள நான் மாறுவேடத்தில் நகர்வலம் சென்றேன். பல்வேறு மக்கள் பேசிக் கொண்டதைக் கேட்டேன். நாம் போரில் தோற்று நம் நாடு சோளிங்க நாட்டின் வசம் வந்து விட்டால் அவர்கள் ஆட்சி எவ்வளவு கொடூரமாக இருக்கும் என்பதைப் பற்றிப் பலரும் அச்சமும், கவலையும் கொண்டிருப்பதை அறிந்தேன். 'நாம் வேண்டுமானால் அதிக வரி கொடுத்து விடலாம், அந்தப் பணத்தை வைத்து நம் அரசர் சோளிங்க நாட்டுக்குக் கப்பம் செலுத்தி விட்டு, அவரே நம்மை ஆண்டால் நாம் நிம்மதியாக இருக்கலாமே!' என்று மக்கள் பேசிக் கொண்டதைக் கேட்டபோது, மக்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும், அன்பையும் கண்டு பெருமையாக இருந்தாலும், மக்களுக்கு இத்தகைய அச்சம் இருக்கும்போது எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் சோளிங்க நாட்டின் ஆட்சிக்குக் கீழ் வருவதற்கு நான் அனுமதிக்கக் கூடாது என்று முடிவுக்கு வந்தேன். கப்பம் கட்டுவது இழிவு என்றாலும், நம் மக்களின் நலம் கருதி, அவர்கள் அச்சத்தைக் கருத்தில் கொண்டு, சோளிங்க நாட்டுடன் சமாதானமாகப் போவது என்று முடிவு செய்து விட்டேன்" என்றான் ராஜவர்மன்.

குறள் 680:
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து.

பொருள்:
சிறிய இடத்தில் வாழ்பவர், தம்மிலும் பெரியவர் எதிர்த்து வரும்போது அவரைக் கண்டு தம்மவர் நடுங்குவதற்கு அஞ்சி, பலன் கிடைக்குமானால் அப்பெரியவரைப் பணிந்து ஏற்றுக் கொள்வர்.

அதிகாரம் 69 - தூது
அதிகாரம் 67 - வினைத்திட்பம்

                                                                                                                                           அறத்துப்பால்                                               காமத்துப்பால்   

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...