Sunday, June 16, 2024

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்கள் உரிமைக் கட்சி' என்று ஒரு தனிக் கட்சியை ஆரம்பித்தார் சாந்தகுமார். 

தனிக்கட்சி துவங்கியது பற்றிப் பலரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானாலும், அது பற்றிக் கவலைப்படாமல், மன உறுதியுடன் சாந்தகுமார் தன் கட்சியை நடத்தியதால், மக்கள் உரிமைக் கட்சிக்கு மக்களிடையே ஓரளவு செல்வாக்குக் கிடைத்தது. 

சாந்தகுமார் தன்மானம் உள்ளவர் என்று மதிக்கப்பட்டு,  'தன்மானத் தலைவர்' என்று அழைக்கப்பட்டார்.

கடைசியாக நடந்த சட்டமன்றத் தேர்தலில், மக்கள் உரிமைக் கட்சி பத்து சதவீத வாக்குகளைப் பெற்று, அனைவரையும் வியக்க வைத்தது. அடுத்த தேர்தலில் அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கப் பெரிய கட்சிகள் விரும்பும் என்று ஊடகங்களும், அரசியல் பார்வையாளர்களும் கணித்தனர்.

சாந்தகுமாரின் அரசியல் வளர்ச்சிக்கு இணையாக, அவர் மீது சில புகார்களும், குற்றச்சாட்டுகளும் நிலவி வந்தன. கட்டைப் பஞ்சாயத்து, நில ஆக்கிரமிப்பு, மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற புகார்கள் பரவலாக எழ ஆரம்பித்தன.

அத்தகைய புகார்கள் பற்றி சாந்தகுமாரிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது, அவை தன் கட்சியின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத பிற அரசியல் கட்சிகளால் பரப்பப்படும் பொய்ப் புகார்கள் என்று அவர் பதிலளித்தார்.

சாந்தகுமார் குறி வைக்கப்படுவதாகவும், தேர்தலுக்கு முன் அவர் ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படும்படி வற்புறுத்தப்படுவார் என்றும், 'குருவி' என்ற அரசில் விமரிசகர் கருத்துத் தெரிவித்தார். ஆனால், தன்மானத்தை முக்கியமாகக் கருதும் சாந்தகுமார் அவ்வாறு செய்ய மாட்டார் என்று மற்ற விமரிசகர்கள் கூறினர்.

தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் இருந்தபோது, திடீரென்று சாந்தகுமார் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் வருமானவரிச் சோதனைகள் நடத்தப்பட்டன. கோடிக்கணக்கான ருபாய்களும், பல ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. 

அவற்றை மறுத்த சாந்தகுமார், ஒரு ரூபாய் கூடக் கைப்பற்றப்படவில்லை என்று சாதித்தார். ஆயினும், வருமானவரித் துறை தாங்கள் கைப்பற்றிய தகவல்களையும் ஆவணங்களையும் பிற புலனாய்வு அமைப்புகளிடம் பகிர்ந்து கொண்டதாகத் தவல்கள் வெளியாகின.

விரைவிலேயே, வருமனவரித் துறை மற்றும் பிற புலனாய்வுத் துறைகளிலிருந்து சாந்தகுமார் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். பல்வேறு துறைகளால் திரும்பத் திரும்ப விசாரணைக்கு அழைக்கப்பட்டதால், விசாரணைக்குச் செல்வது என்பது சாந்தகுமாருக்கு ஒரு தினசரி நிகழ்வாகவே ஆகியயது.

ஆரம்பத்தில், விசாரணைக்குச் சென்று விட்டுச் சிரித்த முகத்துடன் வெளியே வந்து ஊடகவியலாளர்களுக்குப் பேட்டி அளித்த சாந்தகுமார், சில நாட்களுக்குப் பிறகு, ஊடகவியலாளர்களைப் பார்ப்பதையே தவிர்த்தார். ஆரம்பத்தில், அவர் முகத்தில் இருந்த மலர்ச்சி அடியோடு மறைந்து விட்டது.

ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும்படி சாந்தகுமாருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகச் செய்திகள் வந்தன.

திடீரென்று ஒருநாள், சாந்தகுமார் தன் கட்சியை ஆளும் கட்சியுடன் இணைப்பதாக அறிவித்தார். கட்சியின் நிர்வாகக் குழுவைக் கூட்டாமலும், எந்தவொரு கட்சி நிர்வாகியுடனும் கலந்து பேசாமலும், அவர் இவ்வாறு அறிவித்தது, அவர் கட்சித் தலைவர்களிடமும், தொண்டர்களிடமும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஆயினும், சாந்தகுமார் தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தார். நாட்டு நலன் கருதியே, தான் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், எந்த ஒரு நிபந்தனையுமின்றி, ஆளும் கட்சியுடன் தன் கட்சியை இணைப்பதாகவும் அவர் கூறினார்.

இது பற்றிக் கருத்துத் தெரிவித்த 'குருவி,' "இப்படி நடக்கும் என்று நான் பல மாதங்கள் முன்பே எழுதினேன். இதை நான் எப்படிக் கணித்தேன் என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள். இது மிகவும் எளிமையான விஷயம். தவறான செயல்களில் ஈடுபடுபவர்கள், எப்போதும் ஒருவித அச்சத்திலேயே இருப்பார்கள். தாங்கள் செய்த தவறுகளின் விளைவாகத் தங்களுக்கு ஏதும் துன்பம் வரும் என்ற நிலை வந்தால், அதிலிருந்து தப்பிக்க, அவர்கள் தங்களையே விற்கவும் தயங்க மாட்டார்கள். இதை நான் கூறவில்லை. திருவள்ளுவரே கூறி இருக்கிறார்!" என்று எழுதினார்.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 108
கயமை (தீய குணம்)

குறள் 1080:
எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து.

பொருள்: 
கயவர், ஒரு துன்பம் வந்தடைந்த காலத்தில், அதற்காகத் தம்மைப் பிறர்க்கு விலையாக விற்று விடுவதற்கு உரியவர் ஆவர். அவர்கள் வேறு எதற்கும் உரியவர் (தகுந்தவர்கள்) அல்லர்.

(பொருட்பால் நிறைவடைந்தது) 
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...