அதிகாரம் 63 - இடுக்கண் அழியாமை (துன்பத்தினால் அழிந்து போகாமல் இருத்தல்)

திருக்குறள்
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 63
இடுக்கண் அழியாமை
(துன்பத்தினால் அழிந்து போகாமல் இருத்தல்)

621. ஞாயிற்றுக்கிழமை பேப்பர்!

பரமுவின் தந்தை சிவம் இறந்தபோது பலரும் வந்து ஆறுதல் சொன்னார்கள்.

""மன உறுதி உள்ளவர்."

"என்ன பிரச்னை வந்தாலும் தைரியமா எதிர்கொள்வார்."

"ரொம்ப நகைச்சுவை உணர்வு உள்ளவர்."

இது போன்று சிவத்தைப் பற்றிப் பல கருத்துக்கள் கூறப்பட்டன.

சிவம் இறந்து சில நாட்களுக்குப் பிறகு, பரமு தன் தாய் உமாவிடம் கேட்டான்.

"ஏம்மா, அப்பா ரொம்ப மன உறுதி உள்ளவர், எதுக்கும் கலங்க மாட்டார்னெல்லாம் பல பேர் சொல்றாங்களே, அதெல்லாம் உண்மையா, இல்ல இறந்து போனவரைப் பத்தி ஒப்புக்காகச் சொல்ற உபசார வார்த்தைகளா?"

"ஏன் அப்படிக் கேக்கற? உனக்குத் தெரியாதா உன் அப்பாவைப் பத்தி?" என்றாள் உமா.

"அப்பா பொதுவா சிரிச்சுப் பேசிக்கிட்டுத்தான் இருப்பாரு. ஆனா ஏதாவது பிரச்னை வந்தா ரூமுக்குள்ள போக் கதவைத் தாழ்ப்பாள் போட்டுப்பாரு. அரைமணி நேரம் கழிச்சுத்தான் வருவாரு. அதனால அப்பாவுக்குக்  கஷ்டங்களைத் தாங்கற மனநிலையோ, பிரச்னைகளை எதிர்கொள்கிற மனநிலையோ கிடையாதுன்னுதான் நான் நினைச்சுக்கிட்டிருக்கேன்!"

"அது சரிதான். ஆனா  அரை மணி நேரம் கழிச்சு ரூம்லேந்து வெளியில வந்தப்பறம் அவரு எப்படி இருப்பாருன்னு கவனிச்சிருக்கியா?"

"அப்ப தெளிவாயிடுவாரு. முகத்தில சிரிப்பு கூட இருக்கும்."

"அது எப்படின்னு யோசிச்சியா?"

"ரூம்ல போய் அழுதுட்டு வருவாருன்னு நினைக்கிறேன். மனம் விட்டு அழுததும் கொஞ்சம் தெளிவு வருமோ என்னவோ!"

"பரமு! நீ ரெசிடென்ஷியல் ஸ்கூல்ல படிச்சதால வீட்டில அதிகமா இருந்ததில்ல. அதனால உன் அப்பாவைப் பத்தி நீ அதிகமாத் தெரிஞ்சுக்கல. சரி, உன் அப்பா உன்னை எந்த மாதிரிப் புத்தகங்கள் எல்லாம் படிக்கச் சொல்லிச் சொல்லுவாரு?"

"நகைச்சுவைப் புத்தகங்களைப் படிக்கச் சொல்லுவாரு. ஆனா அவர் சொன்ன பி ஜி வோட்ஹவுஸ், கல்கி, தேவன், அப்புசாமி கதைகள் இதெல்லாம் படிக்கறதில எனக்கு ஆர்வம் இல்ல. நான் கிரைம் திரில்லர்ஸ்தான் படிப்பேன். ஆனா அப்பா என்னை வற்புறுத்தினது இல்ல. ஆமாம், இதை ஏன் இப்ப கேக்கற?"

"உன் அப்பா நகைச்சுவை உணர்வு உள்ளவர்னு இதிலேந்து உனக்குப் புரியலியா?"

"இருக்கலாம். ஆனா அவரால கஷ்டங்களைத் தாங்க முடியலேங்கறது உண்மைதானே!" என்றான் பரமு.

"அவர் அந்த ரூமுக்குள்ள போய் என்ன செய்வார்னு உன்னால புரிஞ்சுக்க முடியலியா?"

"ஏதாவது படிப்பாரா? ஆனா புத்தக அலமாரி முன்னறையிலதானே இருக்கு? அந்த ரும்ல ஒரு சின்ன மேஜையும் நாற்காலியும்தானே இருக்கு!"

வாசலில் ஏதோ குரல் கேட்டது.

"சரி. நீ போய் அந்த ரும்ல அந்த மேஜையோட இழுப்பறையில என்ன இருக்குன்னு பாத்துட்டு வா. பழைய பேப்பர் வாங்கறவர் வந்திருக்காரு. நான் போய் பழைய பேப்பரை எடுத்துக் கொடுத்துட்டு வந்துடறேன்" என்று கூறி விட்டு முன்னறைக்குச் சென்றாள்.

உமா திரும்பி வந்தபோது, பரமு ஒரு நீண்ட நோட்டுப் புத்தகத்தைப் பிரித்துப் படித்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் சிரிப்பு வழிந்து கொண்டிருந்தது.

"என்ன?" என்றாள் உமா.

"எல்லாம் ரொம்பப் பிரமாதமான நகைச்சுவை கார்ட்டூன்கள். பாத்தா சிரிப்பு வராம இருக்காது. எத்தனை தடவை பாத்தாலும் புதுசாப் பாக்கற மாதிரி சிரிப்பு வரும்னு நினைக்கிறேன். அப்பா இதை எல்லாம் பாக்கத்தான் இந்த ரூமுக்கு வருவாரா?" என்றான் பரமு.

"ஆமாம். மனசுக்கு வருத்தமா ஏதாவது நடந்தா உங்கப்பா இங்கே வந்து உக்காந்து இந்த கார்ட்டூன்களப் பாத்து சிரிச்சு அரை மணி நேரத்தில தன் மூடை மாத்திப்பாரு, இதையெல்லாம் பார்த்து சிரிச்சுட்டு வந்தா எந்தக் கஷ்டம் வந்தாலும் பூன்னு ஊதித் தள்ளிடலாங்கற மாதிரி ஒரு தைரியம் வரும்னு அவர் நிறைய தடவை எங்கிட்ட சொல்லி இருக்காரு."

"அம்மா, எப்பவும் போல, கத்திரிக்கோலால கட் பண்ணின பேப்பரையெல்லாம் எடுத்து வச்சுட்டேன். மீதி பேப்பர்களை மட்டும் எடை போடறேன்!" என்று வாயிற்புறத்திலிருந்து பழைய பேப்பர் வாங்குபவரின் குரல் கேட்டது.

"உன் அப்பா செஞ்ச வேலைதான் இது. ஞாயிற்றுக்கிழமை பேப்பர்ல வர எல்லா நகைச்சுவை கார்ட்டூன்களையும் கத்திரிக்கோலால வெட்டி இது மாதிரி நோட்டில ஒட்டி வச்சுடுவாரு!" என்றாள் உமா சிரித்தபடி.

குறள் 621:
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.

பொருள்:
துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அந்தத் துன்பத்தைக் கடந்து மேலே செல்ல உதவுவது அதைப் போன்று வேறு எதுவும் இல்லை.

622. விபத்துக்குப் பின்...

தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்தபோது ரத்தினத்துக்கு விபத்து ஏற்பட்டு விட்டதாகத் தொலைபேசியில் செய்தி வந்ததும் ரத்தினத்தின் மனைவி கல்பனா துடித்துப் போனாள். 

தன்னை அறியாமல் அவள் தன் மார்பில் கைவைத்தபோது இதயம் வேகமாகத் துடிப்பதை உணர்ந்தாள். இதயம் வேகமாகத் துடித்துச் சிதறி விடுமோ என்று ஒரு கணம் தோன்றியது. 

பள்ளிக்குச் சென்றிருந்த தன் மகனையும், மகளையும் பற்றிய நினைவு உடனே வந்தது. கணவனுக்கு விபத்து ஏற்பட்டிருக்கும் நிலையில் தன் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டிய கூடுதல் பொறுப்பு தனக்கு இருப்பதை உடனே உணர்ந்தவளாகத் தன் மனதைத் தேற்றிக் கொண்டாள்.

விபத்து என்னவோ நடந்து விட்டது. அடிபட்ட தன் கணவன் நன்கு குணமாக வேண்டுமென்று கடவுளிடம் வேண்டிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தாள்.

கல்பனா மருத்துவமனைக்குச் சென்றபோது, பதட்டத்தையும், கவலையையும் மீறி அவளிடம் ஒரு நிதானம் இருப்பதை மருத்துவமனையில் இருந்த ரத்தினத்தின் சக ஊழியர்கள் கவனித்தனர்.

மருத்துவமனையில் ரத்தினம் ஒரு மாதம் சிகிச்சை பெற்றான். விபத்து ரத்தினத்தின் கவனக்குறைவால் ஏற்பட்டதாகக் கூறிய அவனுடைய நிறுவனம் மருத்துவமனைக்கான செலவுகளை மட்டும் மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக் கொள்ள முன்வந்தது.

ஒரு மாதம் கழித்து ரத்தினம் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டபோது, ரத்தினத்துக்கு ஒரு கால் ஊனமாகி இருந்தது. 

ரத்தினம் தொடர்ந்து வேலை பார்க்க முடியாது என்ற நிலையில் அவனுடைய  நிறுவனத்திலிருந்து நஷ்ட ஈடு என்று ஒரு சிறிய தொகை கொடுத்தார்கள். நிறுவனம் அவனுக்கு நஷ்டடு எதுவும் கொடுக்க வேண்டியதில்லை என்றும் கருணை அடிப்படையில் தாங்கள் அந்தத் தொகையை வழங்குவதாகவும் நிறுவனம் தெரிவித்தது.

ருத்துவமனையிலிருந்து ரத்தினம் வீட்டுக்கு வந்து இரண்டு தினங்களுக்குப் பிறகு நிறுவனத்தின் தொழிற்சங்கத் தலைவர் அவர்கள் வீட்டுக்கு வந்தார்.

"கம்பெனியில நஷ்ட ஈடு கொடுக்கணும். ஆனா கொடுக்க மாட்டேங்கறாங்க. உன் மனைவிக்கு வேணும்னா வேலை கொடுக்கறதா சொல்றாங்க. நாம லேபர் கமிஷன்ல முறையிட்டா அவங்க நஷ்ட ஈடு வழங்க வாய்ப்பு இருக்கு" என்றார் தொழிற்சங்கத் தலைவர்.

"அப்படியே செஞ்சுடலாம்" என்றான் ரத்தினம்.

"அண்ணே! ஒருவேளை லேபர் கமிஷனுக்குப் போய் அவங்க நஷ்ட ஈடு கொடுக்கலேன்னா அப்பவும் கம்பெனியில எனக்கு வேலை கொடுப்பாங்களா?" என்றாள் கல்பனா, தொழிற்சங்கத் தலைவரிடம்.

"அது எப்படிக் கொடுப்பாங்க? அவங்க மேல வழக்குப் போட்டப்பறம் அவங்க நம்மை எதிரியாத்தானே பார்ப்பாங்க?" என்றான் ரத்தினம் மனைவியைப் பார்த்து.

"அப்படின்னா, அவங்களோட ஆஃபரை ஏத்துக்கிட்டு நான் வேலைக்குப் போறதுதானே நமக்கு நல்லது?" என்றாள் கல்பனா.

"என்ன பேசற கல்பனா? நஷ்ட ஈடு கொடுக்க வேண்டியது கம்பெனியோட பொறுப்பு. அதைத் தட்டிக் கழிச்சுட்டு பிச்சை போடற மாதிரி அவங்க உனக்கு வேலை கொடுக்கறதா சொல்றாங்க. அதை ஏத்துக்கணுங்கறியா?" என்றான் ரத்தினம் கோபமாக.

"ரத்தினம்! உன் மனைவி சொல்றது சரிதான்னு நினைக்கிறேன். விபத்துக்குக் காரணம்  உன்னோட கவனக்குறைவுதான்னு கம்பெனியில சொன்னா அப்படி இல்லேன்னு நாம நிரூபிக்கறது கஷ்டம். கம்பெனி உன்னோட மருத்துவமனைச் செலவை ஏத்துக்கிட்டு நஷ்ட ஈடுன்னு ஒரு தொகையையும் கொடுத்திருக்கு. அதனால லேபர் கமிஷன்ல கம்பெனிக்கு சாதகமாக் கூட முடிவு செய்யலாம். அதனால உன் மனைவி சொல்றபடி கம்பெனி கொடுக்கற வேலையை அவங்க ஏத்துக்கட்டும்!"

"கல்பனா படிச்சிருக்கா. அவளுக்கு எங்கேயாவது நல்ல வேலை கிடைக்கும். கம்பெனி போடற பிச்சையை நாம ஏத்துக்கணுமா?" என்றான் ரத்தினம் பிடிவாதமாக

கல்பனாவிடமிருந்து ஒரு விம்மல் வெளிப்பட்டது.

"உங்களுக்கு விபத்து ஏற்பட்ட அடுத்த நாளிலேந்தே குடும்பத்தைக் காப்பாத்தணுமேங்கற கவலையில நிறைய இடத்தில வேலைக்கு முயற்சி செஞ்சேன். எங்கேயுமே வேலை கிடைக்கல. எல்லாருமே, நான் படிச்சு நிறைய வருஷம் ஆயிடுச்சு, படிப்பு மட்டும் போதாது, அனுபவமும் வேணும்னு சொன்னாங்க. இனிமே வீட்டு வேலை அல்லது சமைய வேலைக்குத்தான் முயற்சி செய்யணும்னு நினைச்சுக்கிட்டிருக்கப்ப இப்படி ஒரு வாய்ப்பு வந்திருக்கு. இதையும் விட்டுடணுமா? லேபர் கமிஷன்ல உங்களுக்கு நட ஈடு கொடுக்கலேன்னா நாம என்ன செய்யறது? அப்படியே நஷ்ட ஈடு கொடுத்தாலும் அதை வச்சு நம்ம மீதி வாழ்க்கையை ஓட்ட முடியுமா?"

விம்மலுக்கிடையே இதைச் சொல்லி முடித்ததும் கல்பனா அழுது கொண்டே உள்ளே சென்றாள்.

"ரத்தினம்! இவ்வளவு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டப்பவும் உன் மனைவி மனசு உடைஞ்சு போகாம உங்க குடும்பத்தோட எதிர்காலத்தை நினைச்சுச் செயல்பட்டிருக்காங்க. இப்படிப்பட்ட ஒரு மனைவி கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்!" என்றார் தொழிற்சங்கத் தலைவர்.

குறள் 623:
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.

பொருள்:
துன்பம் வரும்போது அதற்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்.

623. துன்பம் நேர்கையில்....

"அப்பா எப்படி இருக்காரு?" என்றான் சம்பத்.

"நல்லா நடமாடிக்கிட்டிருந்தவருக்கு திடீர்னு ஹார்ட் அட்டாக் வந்து அஞ்சாறு நாள் ஆஸ்பத்திரியில இருந்துட்டு வீட்டுக்கு வந்திருக்காரு. ரெண்டு மூணு மாசம் பெட் ரெஸ்ட்ல இருக்கணும்னு டாக்டர் சொல்லி இருக்காரு"  என்றான் பாஸ்கர்.

"இந்த சந்தர்ப்பத்திலேயா இப்படி நடக்கணும்?" 

பாஸ்கர் சிரித்தபடியே, "நான் சஸ்பென்ஷன்ல இருந்ததாலதான் அப்பாவை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுக்கிட்டுப் போக முடிஞ்சது. இல்லேன்னா கம்பெனியில லீவு, பர்மிஷன் எல்லாம் கேட்டு வாங்கறது கஷ்டமாத்தானே இருந்திருக்கும்!" என்றான்.

"உன்னால எப்படி எப்படி சிரிக்க முடியுதுன்னு தெரியல! மானேஜர் தான் பண்ணின தப்பை மறைக்க உன்னை பலி வாங்கிட்டாருன்னு கம்பெனியில எல்லாருக்குமே தெரியும். எல்லாருமே உன் மேல இரக்கமாவும் மானேஜர் மேல கோபமாவும்தான் இருக்காங்க" என்றான் சம்பத் தொடர்ந்து.

"பாக்கலாம். விசாரணையில உண்மை தெரியும், என் மேல தப்பு இல்லேன்னு தெரிஞ்சு என்னை வேலையில சேத்துப்பாங்கன்னு நினைக்கிறேன். ஆனா அதுக்கு ரெண்டு மூணு மாசம் ஆகலாம்."

"அதுவரையிலேயும் எப்படி சமாளிப்ப? அப்பாவோட மருத்துவச் செலவு வேற இருக்கு!"

"ஆமாம். என்ன செய்யறது? அப்பா ஒரு பார்ட் டைம் வேலைக்குப் போய் கொஞ்சம் சம்பாதிச்சுக்கிட்டிருந்தாரு. அந்த வருமானம் போனதோட, எனக்கு சஸ்பென்ஷன்ல பாதி சம்பளம்தான் கொடுப்பாங்க. கடுமையானபண நெருக்கடிதான்!" என்றான் பாஸ்கர் இயல்பாக.

"என்னவோ யாரோட கஷ்டத்தையோ சொல்ற மாதிரி சொல்ற! எனக்கு இந்த மாதிரி கஷ்டமெல்லாம் வந்தா ஆடிப் போயிருப்பேன். நீயானா ரொம்ப அமைதியா இருக்க. சாரி. என்னால உனக்கு அதிகமா உதவி பண்ண முடியாது. ஏதாவது சின்னத் தொகைதான் கடனாக் கொடுக்க முடியும்" என்றான் சம்பத் சங்கடத்துடன்.

"நீ இப்படிச் சொன்னதே போதும்டா! இப்போதைக்கு சமாளிச்சுக்கிட்டிருக்கேன். கொஞ்ச நாள்ள எல்லாம் சரியாயிடும்னு நினைக்கிறேன்" என்றான் பாஸ்கர்.

"ஆஸ்பத்திரி செலவுக்கெல்லாம் என்ன செஞ்சே? மெடிகல் இன்ஷ்யூரன்ஸ் இருந்ததா?"

"அதெல்லாம் எதுவும் இல்ல. கம்பெனியோட மெடிகல் வெல்ஃபேர் ஸ்கீம்ல கொஞ்சம் பணம் வரலாம். அது கூட இப்ப நான் சஸ்பென்ஷன்ல இருக்கறப்ப அப்ளை பண்ண முடியாது. மறுபடி வேலையில சேர்ந்தாதான் முடியும். என் மனைவிக்கு கல்யாணத்தில போட்ட நகை கொஞ்சம் இருந்தது. நமக்கு உதவத்தான் அடகுக் கடைகள் நிறைய இருக்கே! அதனால சமாளிச்சேன். இதுவரையிலேயும் சமாளிச்சாச்சு. நாளைக்கு என்ன பண்ணப் போறேன்னு தெரியாது. ஆனா ஏதாவது வழி கிடைக்கும்னு நம்பிக்கை இருக்கு!" என்றான் பாஸ்கர்.

"எனக்கு இந்த மாதிரி கஷ்டம் வந்தா எப்படி சமாளிப்பேன்னு நினைக்கவே பிரமிப்பா இருக்கு  நீ இப்படி எல்லாத்தையும் அமைதியா எதிர்கொள்றதைப் பாக்கறப்ப உன்னைப் பாத்து இந்த குணத்தை நானும் கொஞ்சமாவது வளர்த்துக்கணும்னு நினைக்கிறேன்!" என்றான் சம்பத் நெகிழ்ச்சியுடன்.

குறள் 623:
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.

பொருள்:
வெள்ளம் போல் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவுடையவன், தன் மனத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே அத்துன்பம் அழியும்.

624. இங்கே டிவி ரிப்பேர் செய்யப்படும்!

ஒரு பிரபல வீட்டுப் பொருட்கள் விற்பனை நிலையத்தின் சர்வீஸ் பிரிவில் தொலைக்காட்சிப் பெட்டிகள் பழுது பார்க்கும் டெக்னீஷியனாக இருந்த நந்தகோபாலுக்கு திடீரென்று வேலை போய் விட்டது.

தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பழுது பார்ப்பது லாபகரமாக இல்லை என்பதால் அந்தச் சேவையை அந்த நிறுவனம் நிறுத்தி விட்டது.  அதனால் அவனுக்கு அங்கே பணி இல்லை என்று கூறி விட்டனர்.

அவனோடு பணி புரிந்த அன்பு, சதீஷ் என்ற இன்னும் இரண்டு டெக்னீஷியன்களுக்கும் வேலை போய்விட்டது.

நந்தகோபாலுக்கு அது ஒரு பெரிய அடிதான். அது போன்ற வேலை ஒரு பெரிய நிறுவனத்தில் கிடைப்பது  கடினம். சிறிய நிறுவங்களில் வேலை கிடைக்கலாம். அங்கே சம்பளம் குறைவாக இருக்கும் என்பதுடன் வேலை நிரந்தரமாக இருக்கும் என்று சொல்ல முடியாது.

சதீஷ், அன்பு இருவருடனும் பேசினான் நந்தகோபால்.

"நாம மூணு  பேரும் சேர்ந்து ஒரு எலக்ட்ரானிக்ஸ் சர்வீஸ் சென்டர் ஆரம்பிச்சா என்ன?" என்றான் நந்தகோபால்.

"என்ன விளையாடறியா? அதுக்கு முதலீடு வேண்டாமா?" என்றான் சதீஷ்.

"என் வீட்டு முன் அறையைப் பயன்படுத்திக்கலாம். ஜன்னல்ல ஒரு போர்டு வச்சுட்டா தெருவில போறவங்களால பார்க்க முடியும். வாடகை வீடுதான். ஆனா வீட்டுக்காரர்கிட்ட பேசி சம்மதம் வாங்கிடறேன்" என்றான் நந்தகோபால்.

"மத்த முதலீடெல்லாம்?" என்றான் அன்பு .

"நம்ம கடையில இருக்கற சில முக்கியமான உபகரணங்களை நாம குறைஞ்ச விலைக்குக் கேட்டு வாங்கலாம். நிறைய ஸ்பேர்ஸ் வாங்கி வச்சிருக்காங்க. அதையெல்லாம் வெளியில விக்க முடியாது. நாம அதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா வாங்கிக்கறோம்னு சொன்னா மானேஜர் ஒத்துப்பாரு. அதோட நம்ம கடையில டி வி மத்த பொருட்கள் வாங்கினவங்களோட அட்ரஸ் ஃபோன் நம்பர் எல்லாம் வாங்கி வச்சுக்கிட்டா அவங்களை நாம தொடர்பு கொண்டு ஏதாவது பிரச்னைன்னா நம்மைக் கூப்பிடச் சொல்லலாம்."

"நான் வரலப்பா. நான் வேற ஏதாவது வேலை தேடிக்கறேன்" என்று ஒதுங்கிக் கொண்டான் சதீஷ்.

அன்பு மட்டும் சற்று யோசித்து விட்டு, "நந்து! என்னால முதலீடு எதுவும் செய்ய முடியாது. ஆனா உன்னோட சேர்ந்து ஒர்க் பண்றேன். வருமானத்தைப் பொருத்து எனக்கு எவ்வளவு கொடுக்க முடியுமோ கொடு. ஆனா நல்ல வேலை ஏதாவது கிடைச்சா போயிடுவேன். நமக்கு சரியா வருமானம் வராட்டாலும் போயிடுவேன்!" என்றான்.

ந்தகோபால் தன் சர்வீஸ் மையத்தைத் துவங்கி இரண்டு மாதங்கள் ஆகி விட்டன. 

முதல் மாதம் அதிகம் பிசினஸ் கிடைக்கவில்லை. ஆனால் இரண்டாம் மாதம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. 

இன்னும் ஓரிரு மாதங்களில் தொடர்ச்சியாக நல்ல வருமானம் வர ஆரம்பித்து விடும் என்று நந்தகோபாலுக்கு நம்பிக்கை வந்தபோதுதான் அந்த இடி விழுந்தது.

கொரானா காரணமாக ஏற்பட்ட ஊரடங்கு!

"அவ்வளவுதான்! இனிமே நம்மால எழுந்திருக்கவே முடியாது!" என்றான் அன்பு விரக்தியுடன்.

"பார்க்கலாம்!" என்றான் நந்தகோபால்.

"என்னத்தைப் பாக்கறது? என்ன நம்பிக்கையில இருக்க நீ?" என்றான் அன்பு சற்று எரிச்சலுடன்.

"அன்பு! இப்ப லாக்டவுன். எல்லாரும் விட்டிலதான் இருப்பாங்க. டிவி அதிகம் பாப்பாங்க. அதனால அதிகமா டிவிகளுக்கு சர்வீஸ் தேவைப்படும். ரிப்பேர் பண்ணாமப் போட்டு வச்சிருந்த டிவியைக் கூட எடுத்து ரிப்பேர் பண்ணி வச்சுப்பாங்க. லாக்டவுன்ல பெரிய கடையெல்லாம் மூடி இருப்பாங்க. அதனால நம்மை மாதிரி சின்ன ஆட்களுக்கு வாய்ப்பு நிறையக் கிடைக்கும்!" என்றான் நந்தகோபால். 

அன்பு அவனைச் சற்று வியப்புடன் பார்த்தான்.

நந்தகோபால் சொன்னபடியே வாய்ப்புகள் வந்தன.

ஒரு சிறு பெட்டியில் உபகரணங்ளை எடுத்துக் கொண்டு போய்  விடுகளுக்கே சென்று டிவிகளைப் பழுது பார்த்தார்கள்.

சில வாரங்களுக்குப் பிறகு உதிரி பாகங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இவர்கள் வேலை பார்த்த கடையின் நிர்வாகிக்கு ஃபோன் செய்து கேட்டபோது, ஊரடங்கு காலத்தில் கடையைத் திறந்து உதிரி பாகங்களை எடுத்துக் கொடுக்க முடியாது என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார்.

"மொத்தத்தையும் யார்கிட்டேயாவது வித்திருப்பேன். நீங்க கொஞ்சம் கொஞ்சமா வாங்கிக்கிறதாச் சொன்னீங்க. உங்க மேல பரிதாபப்பட்டு  ஒத்துக்கிட்டேன். இப்ப லாக்டவுன்னால உங்களுக்கும் விக்க முடியல, மொத்தமாகவும் விக்க முடியல. எல்லாம் உள்ளே மாட்டிக்கிட்டிருக்கு. நஷ்டமாயிடுச்சுன்னு முதலாளி என்னைத்தான் திட்டப் போறாரு!" என்றார் அவர்.

என்ன செய்வதென்று தெரியாமல் இரண்டு நாட்கள் தவித்தார்கள். டிவி பழுது பார்க்க வேண்டும் என்று கேட்டிருந்தவர்கள் ஃபோன் செய்து ஏன் தாமதமாகிறது என்று கேட்டனர்.

"சார்! லாக் டவுன்னால ஸ்பேர்ஸ் கிடைக்கல. ரெண்டு நாள் டயம் கொடுங்க!" என்றான் நந்தகோபால்.

"ஏதோ சமாளிச்சிக்கிட்டிருக்கோம்னு பாத்தா, புதுசா புதுசா பிரச்னை வந்துக்கிட்டிருக்கே!" என்று அலுத்துக் கொண்டான் அன்பு.

தங்கள் பழைய கடை நிர்வாகிக்கு மீண்டும் ஃபோன் செய்தான் நந்தகோபால்.

 "சார்! எங்க மேல நம்பிக்கை வச்சு கடை சாவியைக் கொடுங்க. எங்களுக்கு வேணுங்கற ஸ்பேர்ஸை எடுத்துக்கிட்டு அரை மணி நேரத்தில சாவியை உங்ககிட்ட திருப்பிக் கொடுத்துடறேன். நாங்க சொன்னபடி எல்லா ஸ்பேர்ஸையும் அஞ்சாறு மாசத்தில வாங்கிக்கிட்டு பணத்தைக் கொடுத்துடறோம். உங்களுக்கு நஷ்டம் எதுவும் வராது" என்றான் அன்பு.

சற்றுத் தயங்கிய நிர்வாகி, பிறகு "சரி!" என்றார்.

ரடங்கு ஏற்படுத்தப்பட்டு ஆறு மாதங்கள் ஆகி விட்டன.

"பரவாயில்ல. லாக் டவுன்ல ஆறு மாசத்தை சமாளிச்சுட்டோம். இனிமே எல்லாம் சரியாயிடும்னு நினைக்கிறேன்!" என்றான் அன்பு.

ரு வீட்டிலிருந்து ஒரு டிவியைப் பழுது பார்க்க தங்கள் சர்வீஸ் மையத்துக்கு அன்பு எடுத்துச் சென்று கொண்டிருந்தபோது அவனை ஒரு போலீஸ்காரர் வழிமறித்தார்.

"எங்கேந்து டிவியைத் திருடிக்கிட்டுப் போற?" என்றார் அவர்.

"திருடிட்டுப் போகலை சார்! ரிப்பேர் பண்ண  எடுத்துக்கிட்டுப் போறேன்1" என்றான் அன்பு.

"அது இன்னும் மோசம்! லாக்டவுன்ல கடையைத் திறந்து வச்சுக்கிட்டு ரிப்பேர் பண்றியா? ஸ்டேஷனுக்கு வா!" என்று கூறி அவனைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார் அவர்.

அன்பு ஃபோன் செய்த பிறகு காவல் நிலையத்துக்கு வந்தான் நந்தகோபால்.

போலீஸ்காரரிடம் நந்தகோபால் தங்கள் நிலையை விளக்கிச் சொன்னான்.

"சார்! பொதுவா வீட்டுக்குப் போய்த்தான் நாங்க ரிப்பேர் பண்ணுவோம். இந்த ஒரு தடவைதான் சர்வீஸ் சென்ட்டருக்கு எடுத்துக்கிட்டு வர வேண்டியதாயிடுச்சு. சர்வீஸ் சென்ட்டர்ங்கறது என்னோட வீடுதான். கதவை மூடிக்கிட்டு உள்ளேதான் வேலை செய்வோம்."

"ஏம்ப்பா ஒத்தன் ரோடில மாட்டிக்கிட்டான். இப்ப நீயா வந்து வண்டில ஏறி இருக்கே! ரெண்டு பேருமே ஆறு மாசம் உள்ள போகப் போறீங்க. இன்ஸ்பெக்டர் வரட்டும்!" என்றார் போலீஸ்காரர்.

இன்ஸ்பெக்டர் வந்து விசாரித்தார்.

நந்தகோபால் சொன்னதைக் கேட்டு விட்டு, "லாக் டவுன் விதிகளைப் பின்பற்றித்தான் ஆகணும். இது மாதிரி டிவியை ஸ்கூட்டர்ல வச்சுக்கிட்டு ரோட்டில அலையாதீங்க!" என்று சொல்லி அவர்களை விட்டு விட்டார் இன்ஸ்பெக்டர்.

காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தபோது, "என்ன அன்பு? ஏதாவது பிரச்னை வந்தா நீ ரொம்ப சோர்வடைஞ்சுடுவ. இன்னிக்கு ரொம்ப அமைதியா இருக்கியே!" என்றான் நந்தகோபால்.

"அதான் பாத்துக்கிட்டிருக்கேனே! எவ்வளவோ பிரச்னை வந்தது. ஆனா நீ கலங்கல. பிரச்னைதான் உன்னைக் கண்டு பயந்து ஓடிக்கிட்டிருக்கு. அதனால நானும் இனிமே பயப்படப் போறதில்ல!" என்றான் அன்பு.

அதற்குள் உள்ளிருந்து வேகமாக வந்த ஒரு போலீஸ்காரர், "இன்ஸ்பெக்டர் உங்களைக் கூப்பிடறாரு!" என்றார் நந்தகோபாலைப் பார்த்து.

"சொல்லி வாய் மூடல. அதுக்குள்ள இன்னொரு பிரச்னையா?" என்ற அன்பு, "நீ மட்டும் போய் என்னன்னு கேட்டுக்கிட்டு வா!" என்றான்.

சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்த நந்தகோபால், "இன்ஸ்பெக்டர் வீட்டிலேயே டிவி ரிப்பேரா இருக்காம். இந்த லாக்டவுன் சமயத்தில ரிப்பேர் பண்ண ஆளே கிடைக்கலையாம். அதனால அதை ரிப்பேர் பண்ணச் சொல்றாரு. அதோட வேற போலீஸ் அதிகாரிகளுக்கும் டிவி ரப்பேர் பண்ணணும்னா நம்மை சிபாரிசு செய்யறேன்னு சொல்லி இருக்காரு" என்று சொல்லி நிறுத்தி விட்டு, அன்புவின் முகத்தில் இருந்த கேள்விக்குறியைப் பார்த்து விட்டு, "நம்ம ரிப்பேர் சார்ஜ் எவ்வளவோ அதைக் கொடுத்துடறேன்னு சொன்னாரு!" என்றான் சிரித்தபடி. 

குறள் 624:
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.

பொருள்:
தடைகள் உள்ள இடங்களிலும் வண்டியை இழுத்துச் செல்லும் காளையைப் போல் மனம் தளராமல் செல்ல வல்லவனுக்கு வந்த துன்பமே துன்பப்படும்.

625. "சிக்" சீதாராமன்!

குருமூர்த்திக்கு ரத்தக் கொதிப்பு அதிகமாக இருந்ததால் அவர் இரண்டு மூன்று நாட்கள் மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற வேண்டும் என்று அவருடைய மருத்துவர் வலியுறுத்தியதன் பேரில்  அந்தத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அந்த மருத்துவமனையில் தனி அறை கிடைக்காததால் குருமூர்த்தி இரண்டு பேர் இருக்கும் அறையில் அனுமதிக்கப்பட  வேண்டி இருந்தது. அவருக்குப் பக்கத்துப் படுக்கையில் இருந்த சீதாராமனுடன் அறிமுகப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

"என்ன உடம்பு உங்களுக்கு?" என்றார் குருமூர்த்தி.

"இப்ப நெஞ்சில சளி இருக்கிற பிரச்னை!" என்றார் சீதாராமன்

"இப்பன்னா?"

சீதாராமன் இலேசாகச் சிரித்தார்.

"எனக்கு அப்பப்ப ஏதாவது பிரச்னை வந்துக்கிட்டுத்தான் இருக்கும். அதனால அடிக்கடி மருத்துவமனையில வந்து படுத்துக்கிட்டுத்தான் இருப்பேன்!"

சொல்லி முடிக்கும்போதே அவருக்கு இருமல் வந்து பல விநாடிகள் தொடர்ந்து இருமினார்.

"மன்னிச்சுக்கங்க. உங்ககிட்ட பேச்சுக் கொடுத்து இருமலை வரவழைச்சுட்டேன்" என்றார குருமூர்த்தி குற்ற உணர்வுடன்.

"அதெல்லாம் ஒண்ணுமில்ல. அப்படிப் பாத்தா நான் வாழ்க்கை முழுக்க பேசாமதான் இருந்திருக்கணும். அப்புறம் எனக்கு வாழ்க்கையே இருந்திருக்காதே?"

"சின்ன வயசிலேந்தே இந்த பிரச்னை இருக்கா உங்களுக்கு?"

"பிறந்ததிலேந்தே இருக்கு. என் அப்பா அம்மா வசதி இல்லாதவங்கதான். ஆனா அவங்க சளைக்காம என்னை அடிக்கடி அரசாங்க மருத்துவமனைக்கு அழைச்சுக்கிட்டுப் போய் மருத்துவம் பாத்தாங்க. சரியாகும். அப்புறம் திரும்ப வரும். இருமல், சளி, காய்ச்சல்னு மாறி மாறி ஏதாவது ஒண்ணு வந்துக்கிட்டே இருக்கும். அன்னிலேந்து இன்னி வரைக்கும் அப்படித்தான்!"

"ரொம்ப கஷ்டமா இருந்திருக்குமே!"

"ஆமாம். என்னைப் பள்ளிக் கூடத்துக்கு அனுப்பலாமான்னே கொஞ்சம் யோசிச்சாங்க. அப்புறம் தயக்கத்தோட அனுப்பினாங்க. பள்ளிக்கூடத்தில மத்த மாணவர்கள்கிட்டே இருந்து என்னைக் கொஞ்சம் தள்ளித்தான் உக்கார வைப்பாங்க. உடம்ப சரியில்லாம போறதால பல நாள் பள்ளிக்கூடம் போக முடியாது. ஆனா நான் கஷ்டப்பட்டு நல்லாப் படிச்சேன்.

"ஹை ஸ்கூல் போனதும் அங்கே இருந்த தலைமை ஆசிரியர் எங்கிட்ட ரொம்ப அக்கறை எடுத்துக்கிட்டு என்னை ஊக்குவிச்சாரு. எஸ் எஸ் எல் சி படிக்கறப்ப குறைஞ்சபட்ச அட்டெண்டன்ஸ் இல்லாட்டா பரீட்சை எழுத முடியாது. ஆனா அவரு எனக்கு நிறைய நாள் அட்டெண்டன்ஸ் போட்டு என்னைப் பரீட்சை எழுத வச்சாரு.

"அப்புறம் கல்லூரிப் படிப்பு. நிறைய மார்க் வாங்கினதால ஸ்காலர்ஷிப் கிடைச்சது. கல்லூரியில சில பேரு என்னை 'சிக் சீதாராமன்'னு சொல்லுவாங்க. தாங்க படிச்ச ஆங்கிலத்தைப் பயன்படுத்தணுங்கற ஆர்வம்! நான் கல்லூரியில படிக்கறப்ப எங்கப்பா இறந்துட்டாரு. ஆனா எப்படியோ தொடர்ந்து படிச்சு பி காம் பட்டம் வாங்கிட்டேன்.

"வேலை கிடைச்சது. ஆனா அடிக்கடி லீவ் போட்டதால தொடர்ந்து வேலையில நீடிக்க முடியல. மூணு வேலை மாறினப்பறம் நாலாவதா ஒரு நிறுவனத்தில அக்கவுன்டட்டா சேர்ந்தேன். அந்த முதலாளி என் நிலைமையைப் புரிஞ்சுக்கிட்டு எனக்கு நிறைய ஆதரவு கொடுத்தாரு. சம்பளத்தோட நிறைய லீவு கொடுத்தாரு.

"சொன்னா நம்ப மாட்டீங்க. அந்தக் காலத்தில ஃபோன்ங்கறது சில பெரிய பணக்காரங்க வீட்டிலதான் இருக்கும். ஆனா என் முதலாளி என் வீட்டில ஃபோன் வச்சுக் கொடுத்து நான் வீட்டில இருந்துக்கிட்டே ஆஃபீஸ்ல இருக்கறவங்களோட ஃபோன்ல பேசி வேலை செய்ய ஏற்பாடு செஞ்சாரு. 'ஒர்க் ஃப்ரம் ஹோம்'ங்கற கான்ஸப்ட் வரதுக்கு முன்னாலேயே 'ஒர்க் ஃப்ரம் ஹோம்' பண்ணினவன் நான் ஒருத்தனாத்தான் இருப்பேன்!"

சீதாராமன் சிரித்தார். எங்கே அவருக்கு மறுபடி இருமல் வந்து விடுமோ என்று பய;ந்து கொண்டே அவரைப் பார்த்தார் குருமூர்த்தி.

"உங்க குடும்பத்தில எத்தனை பேரு?" என்றார் குருமூர்த்தி தயக்கத்துடன்.

"புரியுது! எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சான்னு கேக்க வரீங்க! நான் கல்யாணம் வேண்டாம்னுதான் இருந்தேன். நான் இருந்த நிலைமையைச் சொல்லி யார்கிட்டேயும் பெண் கேக்க என் அம்மாவும் தயங்கினாங்க. ஆனா எங்களுக்குத் தெரிஞ்ச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் என்னைக் கல்யாணம் செஞ்சுக்க முன் வந்தா. உங்களை மாதிரி ஒத்தருக்குத்தான் கண்டிப்பா ஒரு துணை வேணும்னு அவ எங்கிட்ட சொன்னபோது எனக்கு அழுகை வந்துடுச்சு!"

சீதாராமனின் குரல் கம்மியது. அவர் அழுது, அது மீண்டும் இருமலைக் கிளப்பி விட்டு விடுமோ என்ற பயத்தில், குருமூர்த்தி, "எவ்வளவு பரந்த மனசு அவங்களுக்கு! அழாதீங்க. இது நினைச்சு நினைச்சு சந்தோஷப்பட வேண்டிய விஷயம் இல்லையா?"

"ஆமாம். ஆனா அவ இப்ப இல்லையே! ஒரு பையனைப் பெத்துக் கொடுத்துட்டு என்னை விட்டுப் போயிட்டாளே! அதை நினைச்சாதான் அழுகை வருது. என் மனைவிக்கு முன்னாலேயே என் அம்மாவும் போயிட்டாங்க. நானே உடம்பு சரியால்லாத ஆளா தனியா இருந்துக்கிட்டு என் பையனை வளர்த்து ஆளாக்க நான் பட்ட பாடு!"

"உங்க பையன் என்ன பண்றாரு?"

"டாட்டா குரூப்பில நல்ல வேலையில இருக்கான். லட்சக் கணக்கா சம்பாதிக்கறான். சின்ன வயசிலேந்து எனக்கு அரசாங்க மருத்துவமனைதான். என் பையன் வேலைக்குப் போனப்பறம்தான் தனியார் மருத்துவமனை!" என்று சிரித்தார் சீதாராமன்.

"கேக்கவே எனக்கு ரொம்ப திகைப்பா இருக்கு. சின்ன அசௌகரியங்களுக்கே ரொம்ப அப்செட் ற ஆளு நான். நீங்க இவ்வளவு கஷ்டங்களையும் தாங்கிக்கிட்டு சிரிச்சுக்கிட்டிருக்கீங்க!" என்றார் குருமூர்த்தி.

"வாழ்க்கையில எனக்குக் கஷ்டம் வரப்பல்லாம் வாழ்க்கையில எனக்குக் கிடைச்ச அதிர்ஷ்டங்களை நினைச்சு சந்தோஷப்படுவேன். என் பெற்றோர்களோட அன்பு, என் உடல்நிலையையும் மீறி என்னால நல்லாப் படிக்க முடிஞ்சது, எனக்கு உதவி செஞ்ச தலைமை ஆசிரியர், என் முதலாளி,  என்னைத் தேடி வந்த அதிர்ஷ்டம் மாதிரி வந்த என் மனைவி, என் மேல ரொம்ப அன்பும் அக்கறையுமா இருக்கற என் மகன்... வாழ்க்கையில இவ்வளவு அதிர்ஷ்டங்கள் இருக்கறப்ப, ஏன் கஷ்டங்களை நினைச்சு வருத்தப்படணும்?" என்றார் "சிக்" சீதாராமன் புன்சிரிப்புடன்.

"எந்தக் கஷ்டமும் உங்களை எதுவும் செய்யாது  சார்! நீங்க ரொம்ப ஆரோக்கியமா நீண்டநாள் சந்தோஷமா இருப்பீங்க. உங்களை சந்திச்சது வாழ்க்கையில எனக்குக் கிடைச்ச அதிர்ஷ்டம்!" என்றார் குருமூர்த்தி நெகிழ்ச்சியுடன்.

அப்போது அறைக்குள் வந்த குருமூர்த்தியின் மகன், "அப்பா! தனி அறை ஒண்ணு காலியாகி இருக்காம். அங்கே போயிடலாம்!" என்றான்.

"வேணாண்டா! நான் இங்கேயே இருக்கேன்!" என்றார் குருமூர்த்தி, சீதாராமனைப் பார்த்துச் சிரித்தபடி.

குறள் 625:
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.

பொருள்:
விடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும்.

626. காந்திமதியின் கவலை!

காந்திமதி வைரவனைக் கைப்பிடித்தபோது அவன் ஒரு சிறிய நிறுவனத்தில் உதவியாளனாக இருந்தான்.

சுமாரான சம்பளம்தான். இந்தச் சம்பளத்தில் இருவர் வாழ்க்கை நடத்த முடியும். குழந்தைகள் பிறந்து விட்டால் எப்படிச் சமாளிப்பது என்று காந்திமதி கவலைப்பட்டாள்.

ஆனல் வைரவன் அது பற்றியெல்லாம் யோசித்தது போல் தெரியவில்லை.

 காந்திமதி தன் கவலையை வைரவனிடம் தெரிவித்தபோது, "இப்ப நாம ரெண்டு பேருதானே இருக்கோம்? வர வருமானம் நம்ம ரெண்டு பேருக்குப் போதும். எதிர்காலத்தில வரக் கூடிய பிரச்னைகளைப் பத்தி இப்பவே ஏன் நினைச்சுக் கவலைப்படணும்?" என்றான்.

அவர்களுக்குக் குழந்தைகள் பிறந்த சமயத்தில் வைரவனுக்குப் பதவி உயர்வு கிடைத்து அவன் சம்பளம் உயர்ந்திருந்தது. அதனால் அப்போதும் அவர்களுக்குப் பிரச்னை எழவில்லை.

வைரவனை அவன் முதலாளிக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டதால் நிறுவனத்தில் அவன் நிலையும் அவன் வருமானமும் உயர்ந்து கொண்டே வந்தன.

அவர்கள் மகனும், மகளும் கல்லூரியில் சேர்ந்தபோது வைரவனின் பொருளாதார நிலை நன்றாகவே உயர்ந்திருந்தது. அவர்கள் மகன் மற்றும் மகளின் கல்லூரி நண்பர்கள் "உனக்கென்ன நீ பணக்கார வீட்டுப் பிள்ளை!" என்று அவர்களிடம் சொல்லும் அளவுக்கு!

வசதி பெருகும்போது அவர்கள் செலவும் பெருகிக் கொண்டே வந்தது. வீட்டுக்கு விலை உயர்ந்த வீட்டு உபயோகப் பொருட்கள், மகனுக்கு அதிக விலையில் பைக், மகளுக்கு ஸ்கூட்டர் என்று தாராளமாகச் செலவழித்தான் வைரவன்.

"இப்படி வர பணம் எல்லாத்தையும் செலவழிக்கிறீங்களே, நாளைக்கு நமக்குன்னு நாலு காசு சேர்த்து வைக்க வேண்டாமா?" என்றாள் காந்திமதி.

வைரவன் அது பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

மகன் மகள் இருவரும் படித்து முடித்து நல்ல வேலைக்குப் போய் அவர்குக்குத் திருமணமும் ஆகி விட்டது. திருமணங்களுக்கும் நிறையச் செலவழித்தான் வைரவன்.

"படிச்சுப் படிச்சு சொன்னேன். நீங்க கேக்கல!" என்றாள் காந்திமதி.

"இப்ப என்ன ஆயிடுச்சு. நல்லாத்தானே இருக்கோம்?" என்றான் வைரவன்.

"நல்லா இருக்கோமா? எவ்வளவோ சம்பாதிச்சீங்க. ஆனா ஒரு வீடு கூட வாங்கல. பையனுக்கும், பெண்ணுக்கும் நிறைய செலவழிச்சீங்க. அவங்க ரெண்டு பேரும் இப்ப எங்கேயோ தூரத்து ஊர்ல இருக்காங்க. அப்பா அம்மா எப்படி இருக்காங்கங்கற கவலை அவங்களுக்கு இல்ல. பையன் நமக்குப் பணம் எதுவும் அனுப்பறதில்ல. பொண்ணுக்கு அவ குடும்பத்தைப் பத்தி மட்டும்தான் நினைவிருக்கு. நீங்க ரிடயர் ஆயிட்டீங்க. உங்களுக்கு பென்ஷன் கிடையாது. உங்க பி எஃப் பணத்தை பாங்க்ல போட்டு அதில வர வட்டியில நாம வாழ வேண்டி இருக்கு. வீட்டு வாடகை, மற்ற செலவுகள் எல்லாம் அதிகமாகிக்கிட்டே இருக்கு. பாங்க்ல கொடுக்கற வட்டி குறைஞ்சுக்கிட்டே இருக்கு. இப்படியே போனா இந்தப் பணம் எத்தனை நாளைக்கு வரும்னே தெரியல!" என்று பொரிந்து தள்ளினாள் காந்திமதி.

"நமக்கு நிறைய வருமானம் இருந்தபோது நல்லா வாழ்ந்தோம். இப்ப வருமானம் இல்லேன்னா அதுக்கேத்தாப்பல வசதியைக் குறைச்சுப்போம். இனிமே வரக் கூடிய பிரச்னைகளைப் பத்தி இப்பவே ஏன் கவலைப்படணும்? " என்றான் வைரவன் அமைதியான குரலில்.

குறள் 626:
அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர்.

பொருள்:
செல்வம் வந்தபோது இதைப் பெற்றோமே என்று பற்றுக் கொண்டு காத்தறியாதவர் வறுமை வரும்போது இழந்தோமே என்று அல்லல்படுவரோ?

627. அம்மாவின் உடல்நிலை

அம்மா உடல்நிலை சரியில்லாமல் படுத்துக் கொண்டிருந்தார். இரண்டு வருடங்களாகப் படுத்துக் கொண்டுதான் இருக்கிறார்- சில நாட்கள் மருத்துவமனையில், சில நாட்கள் வீட்டில் என்று.

அப்பா பெரும்பாலும் அம்மாவின் அருகில் அமர்ந்து கொண்டிருப்பார். பல சமயம் இருவரும் பேசிக் கொண்டிருப்பார்கள். அப்படி என்னதான் பேசுவார்களோ தெரியவில்லை!

நானும் சாருவும் வீட்டில் இருக்கும்போது சில நிமிடங்களுக்கு மேல் பேச எங்களிடம் விஷயம் இருப்பதில்லை. அந்த இரண்டு மூன்று நிமிடங்களிலும், வீட்டு உபயோகப் பொருள் பழுதானது, ஏ சியின் குளிர்ச்சி போதாமல் இருப்பது, எங்கள் குழந்தைகளின் பள்ளிப் பிரச்னைகள் இவை பற்றித்தான் இருக்கும்.

இரண்டு மூன்று நிமிடங்களுக்கு மேல் பேசும் அளவுக்குப் பிரச்னைகள் இல்லை என்பது எங்கள் இருவருக்குமே ஆறுதலான விஷயம்!

"எப்படிம்மா இருக்கே?" என்றேன் அம்மாவிடம்.

அம்மா பலவீனமாகத் தலையை ஆட்டினார்.

"எப்பவும் மாதிரிதான், கொஞ்ச நேரம் அமைதியா, கொஞ்ச நேரம் வலியோடன்னு மாத்தி மாத்தி!" என்றார் அப்பா.

அப்பாவிடம் கண் ஜாடை காட்டி அவரைத் தனியாக அழைத்தேன்.

அப்பா என்னைத் தொடர்ந்து என் அறைக்கு வந்தார்.

"ஏம்ப்பா, அம்மாவுக்கு உடம்பு முடியல. நீ பாட்டுக்கு அவங்க பக்கத்தில உக்காந்து பேசிக்கிட்டே இருக்கியே!" என்றேன் நான்.

"நான் அவ பக்கத்தில உக்காந்து பேசிக்கிட்டிருக்கறது அவளுக்கு சந்தோஷமா இருக்கு. அவ வலியைக் கொஞ்சம் மறக்க உதவியா இருக்கு" என்றார் அப்பா.

"எப்படிப்பா இவ்வளவு உடம்புப் பிரச்னைகளோட அம்மா உங்கிட்ட சிரிச்சுப் பேசிக்கிட்டிருக்காங்க?" என்ன் நான் வியப்புடன்.

"உன் அம்மா எப்பவுமே அப்படித்தான். ஏதாவது சின்ன பிரச்னை வந்தாகூட நான் சுணுங்கிப் போயிடுவேன். உங்கம்மாதான் எனக்கு தைரியம் சொல்லுவா. வீட்டில யாருக்காவது உடம்பு சரியில்லேன்னா நான் உடனே கவலைப்பட ஆரம்பிச்சுடுவேன். ஆனா, உங்கம்மா 'உடம்புன்னு ஒண்ணு இருந்தா வியாதின்னு ஒண்ணு வரத்தான் செய்யும். டி வி, மிக்ஸி இதெல்லாம் ரிப்பேர் ஆகறதில்லையா? சில சமயம் சின்ன ரிப்பேரா இருக்கும், சில சமயம் பெரிய ரிப்பேரா இருக்கும், சில சமயம் ரிப்பேரே பண்ண முடியாது'ன்னு சொல்லிட்டுச் சிரிப்பா. 

"எனக்கு வேலையில பிரச்னைகள், குடும்பப் பிரச்னைகள், பணப் பிரச்னைகள் வந்தாலும் அப்படித்தான் சொல்லுவா. 'தினமும் ஸ்கூட்டர்ல ஆஃபீஸ் போறீங்களே, நிக்காம நேரேயா போறீங்க? அங்கங்கே சிக்னல்ல நின்னுதானே போறீங்க! சில சமயம் டயர் பஞ்சர் ஆகுது, இல்ல ஸ்கூட்டர் நின்னு போயிடுச்சுன்னு அதை எங்கேயாவது விட்டுட்டு பஸ்ல போறீங்க. இயல்பா நடக்கற விஷயங்களை நாம ஏத்துக்கணுங்க. இயல்பா விஷயங்கள் நடக்கலேன்னாதான் கவலைப்படணும்.' இது மாதிரி ஏதாவது சொல்லுவா.

"ஆரம்பத்தில எல்லாம் அவ சொல்றது எனக்கு எரிச்சலா இருக்கும். 'நீ வீட்டில உக்காந்துக் கிட்டு ரொம்ப சுலபமாப் பேசற, அனுபவிக்கிறவனுக்குத்தானே கஷ்டம் தெரியும்?'னு எரிச்சலோட பதில் சொல்லுவேன். 

"ஆனா போகப் போக அவ சொன்னதோட உண்மை புரிஞ்சு என்னை நானே மாத்திக்கிட்டேன். அப்புறம் பிரச்னைகளை சந்திக்கறது சுலபமா இருந்தது. உங்கம்மாவுக்கு இவ்வளவு உடல்நலப் பிரச்னைகள் இருக்கறப்பவும் அவளால சிரிச்சுக்கிட்டு இயல்பா இருக்க முடியுதுன்னா அது கஷ்டங்கள் வரது இயல்பான விஷயங்கறதை அவ உணர்ந்து ஏத்துக்கற அவளோட இந்த மனப்பான்மையாலதான்!"

அம்மா என்னிடம் கூட இது போல் பலமுறை சொல்லி இருக்கிறார். ஆனால் நான் அவற்றைப் பொருட்படுத்தியதில்லை. இப்போது அப்பா சொன்ன பிறகுதான் அம்மா எனக்குப் புகட்ட விரும்பிய  விஷயங்களின் முக்கியத்துவம் புரிய ஆரம்பித்தது.

"நான் அம்மாகிட்ட நிறையக் கத்துக்கணும்ப்பா. நானும் இனிமே கொஞ்ச நேரமாவது அம்மா பக்கத்தில உக்காந்து கிட்டு அவங்ககிட்ட பேசி, அவங்க பேசறதையும் கேக்கறேன்!" என்றேன் நான்.

"சீக்கிரமா செய்ய ஆரம்பி. அதிக காலம் இல்லேன்னு நினைக்கிறேன்!" என்றார் அப்பா. 

குறள் 627:
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்.

பொருள்:
துன்பம் என்பது உயிருக்கும் உடலுக்கும் இயல்பானதே என்பதை உணர்ந்த பெரியோர், துன்பம் வரும் போது அதனைத் துன்பமாகவே கருத மாட்டார்கள்.

628. கைவிட்டுப் போன வீடு!

கல்லூரியில் படிக்கும்போதே பரந்தாமனுக்கு அவன் நண்பர்கள் சாமியார் என்று பெயர் வைத்து விட்டார்கள்.

"ஏண்டா சிகரெட், தண்ணிதான் கிடையாது. சினிமாவுக்குக் கூடவா வர மாட்டே?" என்றான் அவன் நண்பன் அண்ணாமலை.

"போனவாரம்தானே போயிட்டு வந்தோம்?"

"நாங்கள்ளாம் சினிமாவுக்குப் போய் ஒரு வாரம் ஆயிடுச்சேன்னு நினைக்கிறோம். நீ என்னடான்னா ஒரு வாரம் முன்னாலதானே போயிட்டு வந்தோங்கற! கல்யாணமாவது பண்ணிப்பியா, இல்லை, நிரந்தரமாவே சாமியாராத்தான் இருக்கப் போறியா?"

பரந்தாமன் கல்யாணம் செய்து கொண்டான்.

ஆரம்பத்தில் அவன் மனைவி சரசுவும் அவன் சாமியார் மாதிரி இருக்கிறானே என்று நினைத்தாள். ஆனால் காலப்போக்கில் தன் கணவன் வாழ்க்கையின் சுகங்களை அளவோடு ரசிப்பவன், அதிகம் ஆசைப்படாதவன் என்று புரிந்து கொண்டாள்.

ஆயினும், அவளுடைய தேவைகளையும், விருப்பங்களையும் பரந்தாமன் நிறைவேற்றி வந்ததால், சரசு மகிழ்ச்சியாகத்தான் இருந்தாள்.

"என்னங்க இந்த வீடு உங்க பூர்வீக சொத்து. இதை உங்களுக்கு இல்லேன்னு சொல்லிட்டாங்களே, இது அநியாயமா இல்ல?" என்றாள் சரசு.

"என்ன செய்யறது? என் அப்பாவுக்குப் பூர்வீகமா வந்ததுதான் இந்த வீடு. அப்பாவுக்கப்பறம் எனக்கு சொந்தமா இருந்தது. என் அப்பாவோட சித்தப்பா இந்த வீடு தனக்குத்தான் சொந்தம்னு போட்ட கேஸ்ல எத்தனையோ வருஷம் கழிச்சு இப்ப அவருக்கு சாதகமா தீர்ப்பு வந்திருக்கு!" என்றான் பரந்தாமன்.

"இப்ப இந்த வீட்டை விட்டு நாம எங்க போறது? உங்க சம்பளத்தில வாடகை கொடுத்து கட்டுப்படியாகுமா? பிள்ளைங்க படிப்பு வேற இருக்கு!" என்றாள் சரசு கவலையுடன்.

"இத்தனை வருஷமா இந்த வீட்டை அனுபவிச்சோம். இப்ப இது நம்மோடது இல்லேன்னதும் விட்டுட்டுப் போக வேண்டியதுதான். என் வருமானத்துக்குள்ள வாடகை கொடுத்துக்கிட்டு வாழறது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். தாங்கிக்கத்தான் வேணும்!"

'உங்களால முடியும். என்னால முடியுமான்னு தெரியல'
 என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டள் சரசு.

குறள் 628:
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.

பொருள்:
இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிக் கொள்பவன் துன்பத்தினால் வருந்த மாட்டான்.

629. துளசிப் பிரசாதம்!

"'கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை' ன்னு ஔவையார் சொன்னது எவ்வளவு உண்மை!" என்றேன் நான்.

"அப்படியா?" என்றான் அழகேசன்.

"உனக்கென்ன தெரியும் வறுமையைப் பத்தி? நீ பணக்கார வீட்டுப் பிள்ளை. பன்னீர்ல குளிச்சுட்டு பால்சோறு சாப்பிடறவன்!"

"இல்லையே! நான் பச்சைத் தண்ணியிலதான் குளிக்கிறேன். உன்னை மாதிரியே சோறும் குழம்பும்தான் சாப்பிடறேன். உன் டிஃபன் பாக்ஸ்ல இருக்கற மாதிரி மிளகாப்பொடி தடவின இட்லிதான் என் டிஃபன் பாக்ஸ்லயும் இருக்கு!" என்றான் அழகேசன் சிரித்தபடி.

"நீ பேசுவடா! என்னை மாதிரி காசுக்குக் கஷ்டப்படற குடும்பத்தில பொறந்திருந்தாத்தானே உனக்கு வறுமையைப் பத்தித் தெரியும்?  காலணா, அரையணாவுக்குக் கூட என் அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டுப்பாங்க தெரியுமா?"

"எங்கப்பா அம்மா கூட எத்தனையோ விஷயங்களுக்காகச் சண்டை போட்டுப்பாங்க!"

"எதுக்கு? காரை எடுத்துக்கிட்டு பீச்சுக்குப் போகறதா, இல்லை சினிமா டிராமாவுக்குப் போகறதாங்கறதுக்காகவா?" என்றேன் நான் ஆத்திரத்துடன்.

அழகேசன் கோபப்படவில்லை. என் நகைச்சுவையை ரசிப்பது போல் சிரித்து விட்டுப் போய் விட்டான்.

வாதத்தில் வென்று விட்டதாக நான் பெருமையாக உணர்ந்தாலும், அழகேசனிடம் நான் வீம்புக்காகப் பேசுவதாக எனக்குள் தோன்றிய எண்ணத்தை என்னால் உணர முடிந்தது.

அப்போது நாங்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தோம். பணம் என்பது வாழ்க்கையில் எப்போதுமே ஒரு பிரச்னையாக இருக்காது என்ற நிலையிலிருந்த குடும்பத்தில் பிறந்த அழகேசனுக்கும், தினசரி வாழ்க்கைக்காகப் போராடும் குடும்பத்தில் பிறந்த எனக்கும் எதனாலோ ஒரு நட்பு ஏற்பட்டு விட்டது.

ஆயினும் அழகேசனின் செல்வநிலையையும், என் வறிய நிலையையும் ஒப்பிட்டுப் பொறாமை கொண்டு அவனிடம்  என் பொறாமையை வெளிப்படுத்தும் விதத்தில் அவ்வப்போது பேசி என் ஆற்றாமையைத் தீர்த்துக் கொள்வேன் நான்.

அழகேசன் வசதிகளை அனுபவிக்கும் நிலையில் இருந்தாலும் அவன் அவற்றை அனுபவிப்பதில் அதிக ஈடுபாடில்லாமல் என் போன்ற நண்பர்களுடன் பழகுவதையே அதிகம் விரும்பினான் என்பது அப்போதே என் உள்மனதுக்குப் புரிந்திருக்க வேண்டும். ஆயினும் மேலோங்கி நின்ற என் பொறாமை அவ்வப்போது வெளிப்பட்டு வந்தது. 

ஆனால் அவன் என் பேச்சால் காயப்படாமல் என்னிடம் தொடர்ந்து காட்டிய அன்பு காலப்போக்கில் என் மனதையும் மாற்றி அவனிடம் இயல்பாகப் பழக வைத்து விட்டது.

காலம் என்பது ஒரு சமன் செய்யும் கருவி என்று சொல்வார்கள். எங்கள் இருவர் விஷயத்திலும் காலம் அதைத்தான் செய்தது.

படித்து, நல்ல வேலையில் சேர்ந்து, பணம் சம்பாதித்து நான் ஒரு வசதியான நிலைக்கு வந்து விட்டேன்.

ஆனால் அழகேசன் நிலை தலைகீழாக மாறி விட்டது. அவன் படிப்பை முடிக்குமுன்பே அவன் தந்தையின் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் அவர் எல்லாவற்றையும் இழந்து சாதாரண நிலைக்கு வந்து விட்டார்.

அழகேசனுக்கு நல்ல வேலை கிடைக்கவில்லை. குறைந்த சம்பளத்தில்  வேலை பார்த்துக் கொண்டு ஏதோ ஒரு வகையில் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தான்.

எனக்கும் அழகேசனுக்கும் இடையிலான நட்பு அப்படியேதான்இருந்தது.

அவன் வசதியாக இருந்தபோது அவனிடம் பொறாமையுடன் இருந்த குற்ற உணர்வு எனக்கு இருந்தாலும், எங்கள் நிலை மாறியபோதும், அவனுடன் தொடர்ந்து நட்புடன் இருப்பதில் எனக்கு ஒரு பெருமையும், திருப்தியும் இருந்தது.

வசதியாக வாழ்ந்து விட்டு இப்போது ஒரு சாதாரண நிலைக்கு வந்து விட்டது பற்றி வருத்தம் இல்லையா என்று ஒருமுறை அழகேசனிடம் நான் கேட்டேன்.

"எனக்கு அப்படி ஒண்ணும் தெரியல. நமக்கு எது கிடைக்குதோ அதை அப்படியே ஏத்துக்கறதுதான் என்னோட பழக்கம். தினமும் கோவிலுக்குப் போவேன்னு உனக்குத் தெரியுமே. கோவில்ல துளசி கொடுப்பாங்க. சில சமயம் துளசி புதுசா, பச்சையா இருக்கும், வாயில போட்டாலே விறுவிறுன்னு இருக்கும். சில நாள் துளசி  வாடி இருக்கும். கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் சாப்பிடணும். ஆனா பிரசாதம்னு நினைச்சு அதை அப்படியே ஏத்துக்கறோம் இல்ல, அது மாதிரிதான் வாழ்க்கையில நமக்கு நடக்கற விஷயங்களும். சின்ன வயசிலேயே என் அம்மா எனக்கு இதைச் சொல்லிப் புரிய வச்சிருக்காங்க. அதனாலதான் என்னால எல்லாத்தையும் இயல்பா எடுத்துக்க முடியுதுன்னு நினைக்கிறேன்!" என்றான் அழகேசன்.

இப்படிப்பட்ட மனப்பான்மை கொண்டவனிடம் ஒரு காலத்தில் பொறாமை கொண்டு இருந்திருக்கிறேனே என்பதை நினைத்து அவமானமாக உணர்ந்தேன்.

குறள் 629:
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.

பொருள்:
இன்பம் வந்த காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவர் துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தால் வருந்த மாட்டார்.

630. அனுபவம் இனிமை?

"எனக்கு மாதவன் மட்டும்தான் போட்டி. மத்தவங்களைப் பத்தி எனக்குக் கவலையில்லை!" என்றான் விவேக்.

"ஏண்டா நாம இருபது பேரு ஒரே நேரத்தில இந்த கம்பெனியில மனேஜ்மென்ட் டிரெய்னியா சேர்ந்திருக்கோம். மாதவனை  மட்டும் ஏன் போட்டின்னு நினைக்கற?" என்றான் அவன் நண்பன் மூர்த்தி.

"போட்டியாளன் என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில ரைவல்னு சொல்லுவாங்க. ரைவல்னா எதிரின்னும் ஒரு பொருள் இருக்கு. விவேக் மாதவனைத் தன்னோட ரைவலா நினைக்கறான் - போட்டியாளனாகவும், எதிரியாகவும்! " என்றான் மது என்ற இன்னொரு நண்பன்.

"ஆனா உனக்கு ஏன் அவன் மேல இவ்வளவு வெறுப்புன்னு எனக்குப் புரியல!" என்றான் மோகன்.

நண்பர்கள் பேசுவதை விவேக் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.

வசதியான குடும்பத்தில் பிறந்து, சிறந்த கல்வி நிறுவனங்களில் படித்து, கோச்சிங் போன்ற கூடுதல் உதவிகளையும் பெற்றுச் சிறந்த மாணவனாக உருவாகிப் படிப்பை முடித்தவன் விவேக். 

அந்த நிறுவனத்தில் மனேஜ்மென்ட் டிரெயினியாகச் சேர நூற்றுக் கணக்கானோர் விண்ணப்பித்திருந்த நிலையில், வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இருபது பேரில் விவேக்கும் ஒருவன்.

தேர்ந்தெடுக்கப்பட்ட இருபது பேரில் தானே சிறந்தவன் என்ற எண்ணம் விவேக்குக்கு உண்டு. அவனுடைய பொருளாதார வசதி, கல்வி வசதியால் வளர்ந்திருந்த அறிவுத் திறன் ஆகியவற்றால் அந்த இருபது பேரில் பலர் அவனால் ஈர்க்கப்பட்டு அவனைத் தங்களுக்குள் சிறந்தவனாக ஏற்றுக் கொண்டது போல் நடந்து கொண்டனர்.

ஆயினும் அந்த இருபது பேரில் ஒருவனாகத் தேர்வு செய்யப்பட்ட மாதவனிடம் துவக்கத்திலிருந்தே விவேக்குக்கு ஒரு விரோத மனப்பான்மை உருவாயிற்று. 

மாதவன் ஏழ்மையான, சமூகத்தில் கீழ்நிலையிலிருந்த ஒரு குடும்பத்திலிருந்து வந்தவன். அரசுப் பள்ளியில் படித்த அவன் தன் கடுமையான உழைப்பால் சிறப்பாகப் படித்து, கல்லூரிப் படிப்பையும் சிறப்பாக முடித்து, அந்தப் புகழ் பெற்ற நிறுவனத்தில் ஒரு மானேஜ்மென்ட் டிரெயினியாகவும் தேர்வு பெற்று விட்டான்.

பயிற்சியின்போது, இருபது பேரும்  நிறுவனத்தின் விடுதியில் தங்கி இருந்ததால் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமாகினர்.

சாதாரணக் குடும்பத்திலிருந்து வந்தவன் என்பதால் மாதவனைச் சற்று இளக்காரமாகவே பார்த்தான் விவேக்.

விடுதியில் இருந்த காலத்தில், ஒருநாள் இரவு உணவுக்குப் பிறகு, தங்கள் பள்ளிப் பருவம் பற்றியும், சிறுவயது வாழ்க்கை பற்றியும் அனைவரும் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர்.

அனைவர் கூறியதையும் புன்சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான் மாதவன்.

மாதவனின் முறை வந்தது.

"இப்போது திரு மாதவன் அவர்கள் தங்கள் சிறுவயது வாழ்க்கை பற்றிப் பகிர்ந்து கொள்வார்கள்!" என்றான் விவேக் கேலியாக.

மாதவன் புன்னகை மாறாமல்  தன் அனுபவங்கள் பற்றிப் பேச ஆரம்பித்தான்.

கெட்ட நெடி வீசும் ஒரு கழிவுநீர்க் கால்வாயின் அருகே, சுகாதாரமற்ற சூழலில் ஒரு குடிசையில் தன் பெற்றோர் மற்றும் நான்கு சகோதர சகோதரிகளுடன் தான் வாழ்ந்த வாழ்க்கை, பல நாட்கள் சரியான உணவில்லாமல் இருந்தது, மதிய உணவுக்காகவே பள்ளியில் சேர்ந்தது, தாய்க்கு அவ்வப்போது உடல்நிலை சரியில்லாமல் போய் அரசு மருத்துவமனையில் சேர்க்க நேர்ந்தது, தன் சமூகப் பின்னணி மற்றும் வறுமை காரணமாகப் பள்ளியிலும், கல்லூரியிலும், மற்ற இடங்களிலும் தான் சந்தித்த அவமானங்கள் என்று பல விஷயங்களையும் பற்றி ஏதோ கதை செல்வது போல் சொல்லி முடித்தான் மாதவன்.

"எப்படிடா உன்னோட துன்பமான அனுபவங்களை இப்படி சிரிச்சுக்கிட்டே சொல்ற?" என்றான் மது.

"தெரியல. எங்க அப்பா, அம்மா, சகோதர சகோதரிகளோட சந்தோஷமா இருக்கறதாத்தான் எப்பவுமே நினைச்சுக்கிட்டிருந்தேன். சரியான சாப்பாடு இல்லாம பசியோட இருக்கும்போது வருத்தமாத்தான் இருக்கும். ஆனா அப்புறம் சாப்பாடு கிடைச்சு சாப்பிடறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும். எங்க அப்பா அம்மா தங்களோட வறுமையைப் பத்திக் கவலைப்படல. சிரிச்சுப் பேசிக்கிட்டு சந்தோஷமாத்தான் இருந்தாங்க. அவங்க சந்தோஷமா இருந்ததால நானும் கஷ்டங்களைப் பத்தி நினைக்காம சந்தோஷமா இருந்தேன்னு நினைக்கிறேன்!" என்றான் மாதவன்.

விவேக் தன் இருக்கையிலிருந்து எழுந்து வந்து மாதவனை அணைத்துக் கொண்டு. "நீதாண்டா கிரேட்!" என்றான் உண்மையான உணர்வுடன்.

குறள் 630:
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.

பொருள்: ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக் கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத் தக்க சிறப்பு அவனுக்கு ஏற்படும்.


அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...