அதிகாரம் 102 - நாணுடைமை

திருக்குறள்
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 102
நாணுடைமை

1011. நிமிர்ந்து நில்!

வெங்கடாசலம் கோபமாகக் கத்திக் கொண்டிருக்க, அவர் முன்னால் அவர் மகன் ராமு தலை குனிந்து நின்று கொண்டிருந்தான்.

அம்மாவின் புடவைத் தலைப்பைப் பிடித்தபடி, சற்று சுவாரசியத்துடனும், சற்று பயத்துடனும், தன் அப்பா தன் அண்ணனைத் திட்டுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பத்து வயதுச் சிறுவன் முரளி, "அப்பா எதுக்கும்மா அண்ணனைத் திட்டறாரு?" என்றான், தன் அம்மாவிடம், சற்றே ரகசியமான குரலில்,

"அப்பா பீரோவில வச்சிருந்த பணத்தை அப்பாவுக்குத் தெரியாம எடுத்துக்கிட்டு, உன் அண்ணன் சினிமாவுக்குப் போயிட்டு வந்திருக்கான். அதான் அப்பா அண்ணனைத் திட்டறாரு" என்றாள் அவன் தாய் அமுதா.

"சினிமாவுக்குப் போறது தப்பா அம்மா?"

"சினிமாவுக்குப் போறது தப்பு இல்லை. அப்பா வச்சிருந்த காசை, அப்பாவுக்குத் தெரியாம எடுத்ததுதான் தப்பு. அது திருட்டு இல்லையா?"

"அண்ணன் ஏம்மா திருடணும்? அப்பாகிட்ட கேட்டிருக்கலாமே!"

"அப்பாகிட்ட கேட்டா அவரு கொடுக்க மாட்டாருன்னு நினைச்சு, அவருக்குத் தெரியாம  எடுத்திருக்கான்."

"அது சரி. அண்ணன் ஏன் தலையைக் குனிஞ்சுக்கிட்டு நிக்கறான்?"

"திருடினது தப்புதானே? தப்பு பண்ணிட்டமேங்கற அவமானத்திலதான் தலைகுனிஞ்சு நிக்கறான்!" என்றாள் அமுதா.

சில விநாடிகள் கழித்து, முரளி ஏதோ நினைவு வந்தவனாக, "ஏம்மா, அன்னிக்கு அக்காவைப் பொண் பார்க்க வரப்ப, அக்கா கூடத் தலையைக் குனிஞ்சுக்கிட்டு இருந்தாளே, அது ஏன்?" என்றான்.

அந்தச் சூழலிலும் அமுதாவுக்குச் சிரிப்பு வந்தது.

"புதுசா யாராவது ஆம்பளையைப் பார்த்தா, ஒரு பொண்ணு வெட்கப்பட்டுத் தலையைக் குனிஞ்சுப்பா. அது பொம்பளைப் பிள்ளைங்களோட குணம். தப்பு செஞ்சுட்டு அதுக்காக வெட்கப்படறது வேற. அது அவமானத்தால வர வெட்கம். நீ ஆம்பளையாப் பொறந்துட்ட. பொம்பளைங்கற மாதிரி வெட்கப்பட வேண்டிய அவசியம் உனக்கு இல்லை. தப்புப் பண்ணினாதான், நீ வெட்கப்படணும். எப்பவுமே எந்தத் தப்பும் பண்ணாம நடந்துக்க! நீ எப்பவுமே தலைகுனிய வேண்டி இருக்காது" என்றாள் அமுதா.

குறள் 1011:
கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.

பொருள்: 
இழிவான செயல்களுக்கு வெட்கப்படுவதே அனைவர்க்கும் பொதுவான நாணம்; அழகிய நெற்றி கொண்ட பெண்களின் இயல்பான வெட்கம் வேறு வகை ஆகும்.

1012. மனிதன் என்பவன்...

மணி அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதம் ஆகி இருந்தது.

இந்த ஒரு மாதத்தில் அவன் அதிகம் நெருக்கமாக இருந்தது, காஷியர் நடராஜனிடம்தான். அவர்தான் அவனிடம் இயல்பாகவும், நகைச்சுவையாகவும் பேசிக் கொண்டிருப்பார்.

அவர் நகைச்சுவையாகப் பேசி வந்ததால், ஒருமுறை மணி அவரிடம், "உங்களுக்கென்ன சார்? செலவுக்குப் பணம் வேணும்னா, கேஷ்லேந்து எடுத்துக்கலாம்!" என்றான் விளையாட்டாக.

நடராஜன் உடனே பதறிப் போய், "விளையாட்டுக்குக் கூட அப்படிச் சொல்லாதே அப்பா! நீ வேலையில சேரறதுக்குக் கொஞ்ச நாள் முன்னாலதான், கேஷியரா இருந்தவர் அப்பப்ப தன் கைச் செலவுக்காக கேஷ்லேந்து பணம் எடுத்து மாட்டிக்கிட்டாரு. அவர் இடத்துக்குத்தான் நான் வந்திருக்கேன்! அதனால, இதைப் பத்தி ஜோக் அடிச்சாக் கூடத் தப்பாப் போயிடும்!" என்றார் மெல்லிய குரலில்.

"சாரி சார்! எனக்குத் தெரியாது. பணம் கையாடல் பண்ணின கேஷியரை வேலையை விட்டு அனுப்பிட்ங்களா சார்?" 

"வேலையை விட்டு அனுப்பறதாவது! அதோ, அந்த டேபிள் முன்னால நின்னு சிரிச்சுப் பேசிக்கிட்டிருக்கானே, அவன்தான் அது!" என்றார் நடராஜன், அந்த நபரைத் தன் கண்ணால் காட்டி.

"மதுசூதனன் சாரா? அவரா அப்படிப் பண்ணினாரு? நம்பவே முடியலியே! அவர் மேல நடவடிக்கை எதுவும் எடுக்கலியா?"

"நம்ம முதலாளி ரொம்ப இரக்க குணம் உள்ளவரு. மதுசூதனன் அவர் கால்ல விழுந்து கெஞ்சினான். அவன் மொத்தமாக் கையாடின பணம் பத்தாயிரம் ரூபாதான் இருக்கும். 'அதை மாசா மாசம் சம்பளத்திலேந்து பிடிச்சுக்கங்க, வேலையை விட்டு அனுப்பிடாதீங்க'ன்னு கெஞ்சினான். அதனால, முதலாளி அவனை கேஷியர் வேலையிலேந்து வேற சீட்டுக்கு மாத்திட்டு, என்னை கேஷியரா போட்டிருக்காரு."

"ஆனா, மதுசூதனன் சார் எல்லார்கிட்டேயும் சிரிச்சுப் பேசிக்கிட்டு ஜாலியா இருக்காரே! எங்கிட்ட கூட நல்லா பேசுவாரு. அவர் எப்படி இப்படி இருக்கார்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு!"

"கொஞ்சம் கூட அவமான உணர்ச்சி இல்லாம, எப்படி சாதாரணமா இருக்கான்னு கேக்கறே, அப்படித்தானே? எல்லா மனுஷங்களுக்கும் ஒரே மாதிரி உடல் அமைப்புதான் இருக்கு. உடை, உணவுப் பழக்கம் எல்லாம் கூட ஒண்ணா இருக்கலாம். ஆனா, தப்புப் பண்ணினா அதுக்காக வெட்கப்படறதுங்கற குணம், நல்ல மனுஷங்ககிட்டதான் இருக்கும்!" என்றார் நடராஜன்.

குறள் 1012:
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.

பொருள்: 
உணவு, உடை இன்னும் பிற சிறப்புகள், எல்லா மனிதர்க்கும் ஒன்றே; நல்ல மனிதர்க்குச் சிறப்பாவது நாண் உடைமையே.

1013. பேச்சில் ஒரு பிழை!

"நம்ம ஆண்டு விழாவுக்கு சிறப்புப் பேச்சாளரா புலவர் லட்சுமணனைக் கூப்பிடலாம்னு கமிட்டியில முடிவு செஞ்சிருக்கோம். உங்களுக்குத்தான் அவரோட நெருக்கமான பழக்கம் உண்டே! நீங்க என்னோட வந்தீங்கன்னா, நாம ரெண்டு பேரும் சேர்ந்து போய் அவரைக் கூப்பிட்டுட்டு வரலாம்" என்றார் சங்கத்தின் தலைவர் நித்யானந்தன்.

"அவர் கொஞ்ச நாளா கூட்டங்கள்ள பேசறது இல்லையே!" என்றார் ஞானசேகரன்.

"ஏன் அப்படி?" என்றார் நித்யானந்தன், வியப்புடன்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த அந்தச் சம்பவத்தை ஞானசேகரன் விவரித்தார்.

"நகரங்களில் சிறந்தது காஞ்சிபுரம். 'நகரேஷு காஞ்சி' என்று ஆதிசங்கரரே கூறி இருக்கிறார்." 

லட்சுமணன் பேசிக் கொண்டிருந்தபோது, அவையிலிருந்து ஒருவர் கையை உயர்த்தினார்.

லட்சுமணன் பேச்சை நிறுத்தி விட்டு அவரைப் பார்த்தார்.

கையை உயர்த்தியவர் எழுந்து நின்று, "நகரேஷு காஞ்சி என்று சொன்னவர் ஆதிசங்கரர் இல்லை, காளிதாசன்.

"நகரேஷு காஞ்சி
நாரிணாம் ரம்பா
புஷ்பேஷு ஜாதி
புருஷேஷு விஷ்ணுஹு.

அதாவது நகரங்களில் சிறந்தது காஞ்சி, பெண்களில் சிறந்தவள் ரம்பை, பூக்களில் சிறந்தது ஜாதிப்பூ, புருஷர்களில் சிறந்தவர் விஷ்ணு என்பது இதன் பொருள்'" என்று ஒரு குட்டிப் பிரசங்கமே செய்து விட்டு அமர்ந்து கொண்டார்.

"மன்னிக்க வேண்டும். நான் இதைச் சொன்னவர் ஆதிசங்கரர் என்று இத்தனை நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். என் தவறைத் திருத்தியதற்கு நன்றி" என்றார் லட்சுமணன்.

அதற்குப் பிறகு, அவர் பேச்சில் சுவாரசியம் சற்றுக் குறைந்து விட்டது. சில நிமிடங்களில், தன் பேச்சை முடித்து விட்டு அமர்ந்து கொண்டார்.

"அதுக்கப்புறம் ரெண்டு மாசமா, அவரை எங்கே பேசக் கூப்பிட்டாலும் ஒப்புக் கொள்றதில்ல" என்றார் ஞானசேகரன்.

"ஏன்?" என்றார் நித்யானந்தன், வியப்புடன்.

"பொது மேடையில ஒரு விஷயத்தைத் தப்பா சொன்னதை வெட்கப்பட வேண்டிய விஷயமா அவர் நினைக்கிறாரு."

"இதில வெட்கப்படறதுக்கு என்ன இருக்கு? அவர் தமிழ்ப் புலவர். தமிழ்ல எதையும் அவர் தப்பா சொல்லலியே! ஒரு சம்ஸ்கிருத செய்யுளை எழுதினவர் பேரைத் தப்பா சொன்னதுக்காக அவர் வெட்கப்படணுமா என்ன?"

"நானும் அவர்கிட்ட இதைத்தான் கேட்டேன். அவர் சொன்னாரு. 'மேடையில பேசும்போது, தவறான கருத்துக்களைப் பேசக் கூடாது. ஒருநாள், டிவியில ஒத்தர் இந்த வரியைச் சொல்லி, அதை ஆதிசங்கரர் சொன்னதாச் சொன்னாரு. அதைத்தான் நான் சொன்னேன். அதை நான் பயன்படுத்தறதுக்கு முன்னால, சம்ஸ்கிருதம் தெரிஞ்ச யார்கிட்டேயாவது கேட்டிருக்கணும், அல்லது ஏதாவது புத்தகத்தைப் பார்த்திருக்கணும். அப்படியெல்லாம் செய்யாம, அதை மேடையில பயன்படுத்தினது தப்பு. அதைத் தப்புன்னு ஒத்தர் சுட்டிக் காட்டினபோது, இவ்வளவு படிச்சிருந்தும், யாரோ சொன்ன கருத்தைச் சரிபார்க்காம பயன்படுத்திட்டதை நினைச்சா, எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு. இந்த வெட்க உணர்விலேந்து நான் மீளக் கொஞ்ச நாள் ஆகும். அது வரையிலும், நான் எங்கேயும் போய்ப் பேசப் போறதில்லை' ன்னு சொன்னாரு" என்றார் ஞானசேகரன்.

"எவ்வளவோ பேரு எவ்வளவோ தப்பான விஷயங்களைப் பேசிட்டு, யாராவது அதைத் தப்புன்னு சுட்டிக் காட்டினா, அப்படியான்னு கேட்டுட்டு, கொஞ்சம் கூட சங்கடப்படாம, அதைக் கடந்து போயிடறாங்க. ஒரு விஷயத்தைத் தப்பா சொன்னதுக்காக வெட்கப்படற இவரை மாதிரி பண்பாளர் இருக்கறது ரொம்ப ஆச்சரியமா இருக்கு" என்றார் நித்யானந்தன்.

குறள் 1013:
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு.

பொருள்: 
எல்லா உயிர்களும், ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக் கொண்டவை, சால்பு என்பது நாணம் என்று சொல்லப்படும் நல்ல பண்பை இருப்பிடமாகக் கொண்டது.

1014. நண்பர் வாங்கிய கடன்

புண்யமூர்த்தி வார்த்தை கொடுத்தால் தவற மாட்டார் என்பது அந்த ஊர் மக்களின் உறுதியான நம்பிக்கை.

யாராவது அவரிடம் உதவி கேட்டு, அவர் செய்கிறேன் என்று சொல்லி விட்டால், அதை எப்படியாவது செய்து விடுவார்.

ஒருமுறை அந்த ஊர் துவக்கப் பள்ளியின் கட்டிடம் பழையதாகி விட்டதால், புதிதாகக் கட்டிடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஊரில் யாரும் அதற்குப் பொருளுதவி செய்ய முன்வராதபோது, புண்யமூர்த்தி புதிய கட்டிடத்துக்கான முழுச் செலவையும் தான் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்.

புண்யமூர்த்தி ஓரளவுக்கு வசதி படைத்தவர்தான் என்றாலும், பெரிய செல்வந்தர் அல்ல. ஒரு நல்லெண்ணத்தில்தான், அவர் அவ்வாறு அறிவித்தார். பள்ளிக் கட்டிடத்துக்கான செலவு அவர் எதிர்பார்த்ததை விட மிக அதிகமாகி விட்டது. ஆயினும், தான் ஒப்புக் கொண்டபடி, கட்டிடத்துக்கான முழுச் செலவையும் அவர் ஏற்றுக் கொண்டார்.

அதன் காரணமாக, புண்யமூர்த்தியின் குடும்பத்தினர் அவர் மீது மிகவும் கோபமடைந்ததாக ஊரில் பேசிக் கொண்டனர்.

'நம்ம பையங்க ரெண்டு பேரும் படிச்சு வேலைக்குப் போயிட்டாங்க. அவங்க வெளியூர்ல இருக்காங்க. அவங்க குழந்தைங்க யாரும் இந்தப் பள்ளிக்கூடத்தில வந்து படிக்கப் போறதில்ல. உங்களுக்கு எதுக்கு இந்த வேலை?" என்று அவர் மனைவி அவரைக் கடிந்து கொண்டாள்.

இதன் விளைவாகவோ என்னவோ, புண்யமூர்த்தியின் சொத்துக்களை அவர் மகன்கள் தங்கள் பெயர்களுக்கு எழுதி வாங்கிக் கொண்டு விட்டனர்.

"உங்களுக்கு இருக்க வீடு இருக்கு. உங்க ரெண்டு பேர் செலவுக்கு நாங்க பணம் கொடுக்கறோம். வேற எந்தச் செலவு வந்தாலும் நாங்க பாத்துக்கறோம்" என்று அவரது இரண்டு மகன்களும் அவருக்கும், அவர் மனைவிக்கும் உறுதி அளித்தனர்.

ந்த ஊரில் இருந்த கோவிந்தசாமி என்ற செல்வந்தர் வட்டிக்குப் பணம் கொடுப்பவர். அவர் சண்முகம் என்ற ஒரு சிறு வியாபாரிக்கு ஐம்பதாயிரம் ரூபாய் கடன் கொடுத்திருந்தார். சண்முகம் புண்யமூர்த்தியின் நண்பர் என்பதால், புண்யமூர்த்தி அந்தக் கடனுக்கு உத்தவாதம் அளித்துக் கையெழுத்திட்டிருந்தார்.

சண்முகத்துக்கு வியாபாரத்துக்காகத் தொடர்ந்து பணம் வேண்டி இருந்ததால், அவர் அசலைத் திருப்பிக் கட்டாமல், மாதாமாதம் வட்டியை மட்டும் கட்டிக் கொண்டிருந்தார். மாதாமாதம் வட்டி வந்து கொண்டிருந்ததால், கோவிந்தசாமியும் அசலைத் திருப்பிக் கேட்கவில்லை. இது பல வருடங்களாக நடந்து வந்தது. 

மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை சண்முகத்திடம் கோவிந்தசாமி புதிதாகக் கடன் பத்திரம் எழுதி வாங்கிக் கொள்வார். அதில் புண்யமூர்த்தியின் கையெழுத்தையும் அவர் தவறாமல் வாங்கிக் கொள்வார்.

திடீரென்று சண்முகம் இறந்து விட்டார். அவர் பணமோ, சொத்தோ சேர்த்து வைக்கவில்லை. அதனால், கோவிந்தசாமியிடம் அவர் வாங்கிய கடனைத் தங்களால் திருப்பிக் கொடுக்க முடியாது என்று சண்முகத்தின் மனைவி கைவிரித்து விட, கோவிந்தசாமி புண்யமூர்த்தியை அணுகினார்.

புண்யமூர்த்தியிடம் பணம் இல்லை. அவர் பணத்தையே கையாள முடியாதபடியான ஒரு ஏற்பாட்டை அவருடைய மகன்கள் செய்திருந்தனர்.

"என்னிடம் பணம் இல்லை. என் மகன்களிடம் கேட்டுப் பார்க்கிறேன்" என்றார் புண்யமூர்த்தி.

யாரோ வாங்கிய கடனை நாம் ஏன் செலுத்த வேண்டும் என்று கூறி, அவருடைய மகன்கள் அவருக்குப் பணம்  மறுத்து விட்டனர்.

"நீ ஒரு பெரிய மனுஷன்னு நினைச்சு, உன்னை நம்பித்தானே ஐயா அந்த சண்முகத்துக்குக் கடன் கொடுத்தேன்? இப்படி ஏமாத்திட்டியே!  நீ எல்லாம் ஒரு பெரிய மனுஷனா?" என்று புண்யமூர்த்தியின் வீட்டு வாசலில் நின்று கத்தி விட்டுப் போனார் கோவிந்தசாமி. 

சொத்து எதுவும் இல்லாத புண்யமூர்த்தியிடமிருந்து தன் கடனை வசூலிக்க முடியாது என்பது கோவிந்தசாமிக்குப் புரிந்து விட்டதால், பலர் காதுகளிலும் விழும்படி புண்யமூர்த்தியை அவமானமாகப்  பேசித் தன் கோபத்தைத் தீர்த்துக் கொண்டார் அவர்.

"புண்யமூர்த்தி இப்பல்லாம் வீட்டை விட்டு வெளியிலேயே வரதில்லையாமே!"

"எப்படி வருவாரு? ஷ்யூரிட்டி கையெழுத்துப் போட்டுட்டு கடனைக் கட்ட முடியலியேங்கற கூச்சம் அவருக்கு!"

"கடன் வாங்கினவரு யாரோ ஒத்தரு. இவர் பாவம், நண்பர்ங்கறதுக்காக ஷ்யூரிட்டி கையெழுத்துப் போட்டாரு. சண்முகம் உயிரோட இருந்திருந்தா, கடனைக் கட்டி இருப்பாரு. இதுவரைக்கும் கோவிந்தசாமிக்கு அசலைப் போல ரெண்டு பங்கு வட்டி வந்திருக்கும். அதனால, அவருக்கு ஒண்ணும் பெரிய நஷ்டம்னு சொல்ல முடியாது. ஆனா, இந்த நல்ல மனுஷன் தான் ஏதோ தப்புப் பண்ணிடதா நினைச்சு வெளியில வரவே சங்கடப்படறாரு!"

"கடன் வாங்கினவங்களே பல பேரு கடனைத் திருப்பிக் கொடுக்கறதைப் பத்திக் கவலைப்படாம சுத்திக்கிட்டிருக்காங்க. இவர் என்னன்னா, நண்பருக்காக ஷ்யூரிட்டி கையெழுத்துப் போட்டதால வந்த கடனைக் கட்ட முடியலியேன்னு அவமானப்பட்டுக்கிட்டிருக்காரு. இப்படியும் மனுஷங்க இருக்காங்க!" 

குறள் 1014:
அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை

பொருள்: 
சான்றோர்க்கு நாணுடைமை அணிகலம் அன்றோ, அந்த அணிகலம் இல்லையானால், பெருமிதமாக நடக்கும் நடை ஒரு நோய் அன்றோ?

1015. சாரதி சொன்ன கதை

"நம்ம கம்பெனியில அதிகாரிகளுக்கெல்லாம் ஏதாவது பார்ட்டி இருந்துக்கிட்டே இருக்கும். ஆனா, நம்மை மாதிரி கீழ்நிலை ஊழியர்களுக்கு அது மாதிரி வாய்ப்பு கிடைக்கறதில்லை. அதனால, நாம அஞ்சாறு மாசத்துக்கு ஒரு தடவை ஏதாவது ஒரு ஹோட்டல்ல ஒரு பார்ட்டி வச்சுப்போம்" என்று அந்த நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் சொன்ன யோசனையின்படி, சில வருடங்களாக அது போன்ற ஒரு பார்ட்டி நடந்து வந்தது.

அப்படி நடந்த ஒரு பார்ட்டிதான் அது.

"என்ன சார்! நாங்க சின்னப் பசங்க எல்லாம் ஜாலியாப் பேசிக்கிட்டிருக்கோம். உங்களை மாதிரி சீனியர்கள் எல்லாம் அமைதியா இருக்கீங்களே!" என்றான் நிதீஷ்.

"நாங்க பேசற பழங்கதை எல்லாம் உங்களுக்குப் பிடிக்காதே!" என்ற சாரதி, "பல வருஷங்களுக்கு முன்னால நம்ம ஆஃபீஸ்ல நடந்த ஒரு சுவாரசியமான விஷயத்தை சொல்றேன்!" என்றார், தொடர்ந்து.

"சொல்லுங்க சார்!" என்று இளைஞர்கள் உற்சாகப்படுத்த, சாரதி சொல்ல ஆரம்பித்தார்.

"நான், சுகுமாரன், கமலக்கண்ணன் எல்லாம் வேலைக்குச் சேர்ந்த புதுசு அது. அப்ப வேலையில இருந்த பல பேர் ரிடயர் ஆயிட்டாங்க. இப்ப, நாங்க மூணு பேர்தான் இருக்கோம். ஹேமான்னு ஒரு பொண்ணு பிராஞ்ச் மானேஜரோட செகரட்டரியா இருந்தா.

"இப்ப எதுக்கு அது?" என்றார் சுகுமாரன். ஆனால், சாரதி அதைப் பொருட்படுத்தாமல், தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார்.

"பிராஞ்ச் மானேஜருக்கு ஹேமா மேல ஒரு கண்ணு. அவளை அடிக்கடி தன்னோட ரூமுக்குக் கூப்பிட்டு ரொம்ப நேரம் லெட்டர் டிக்டேட் பண்ணுவாரு. அவ்வளவு நேரம் லெட்டர் டிக்டேட் பண்றதுக்கு எதுவும் இல்ல. தான் லெட்டர் டிக்டேட் பண்றப்ப, தன் ரூம் பக்கமே யாரும் வரக் கூடாதுன்னு பியூன்கிட்ட ஸ்டிரிக்டா சொல்லிட்டாரு. அதனால, அவர் லெட்டர்தான் டிக்டேட் பண்ணினாராங்கறதை நீங்களே தீர்மானிச்சுக்கலாம்!"

சாரதி கண்ணைச் சிமிட்டிக் கொண்டு சிரிக்க, இளைஞர்கள் உற்சாகத்துடன் சிரித்தபடியே, தொடர்ந்து கேட்க ஆவலாக இருந்தனர்.

"ஆனா, அந்த ஹேமாவுக்கு எங்களோட வேலை செஞ்சுக்கிட்டிருந்த கார்த்திக் மேல காதல். ஹேமா மானேஜர் அறையில இல்லாதப்பல்லாம், அவளும், கார்த்திக்கும் ஒண்ணா உக்காந்து சிரிச்சுப் பேசிக்கிட்டிருப்பாங்க."

"அப்புறம் எப்ப சார் லெட்டர் எல்லாம் டைப் பண்ணுவாங்க?" என்று ஒருவன் கேட்க, கொல்லென்று சிரிப்பு எழுந்தது.

"மானேஜர் ரூமுக்குள்ள ஹேமா மணிக்கணக்கா இருந்தாலும், ஒரு நாளைக்கு நாலைஞ்சு லெட்டருக்கு மேல அவ டைப் பண்ண வேண்டி இருக்காது. அது அரைமணி நேர வேலைதான். இதிலேந்தே, மானேஜர் அவளுக்கு எவ்வளவு லெட்டர்கள் டிக்டேட் பண்ணி இருப்பார்னு தெரிஞ்சுக்கலாம்!" என்று சாரதி சொல்ல, மீண்டும் சிரிப்பு எழுந்தது.

"சொல்லுங்க சார்!" என்றான் ஒரு இளைஞன், கதை கேட்கும் ஆவலில்.

"ஹேமாவும், கார்த்திக்கும் காதலிச்சது மானேஜருக்குத் தெரிய வந்ததா சார்?" என்றான் மற்றொருவன்.

"அதுக்குத்தானே வரேன், கிளைமாக்சே அதுதானே!" என்ற பீடிகையுடன் தொடர்ந்தார் சாரதி.

"ஒருநாள் மானேஜர் எதுக்கோ ரிகார்ட் ரூமுக்குள்ள போயிருக்காரு. அந்த ரூம் ரொம்ப இருட்டா இருக்கும். அவர் லைட்டை ஆன் பண்ணி இருக்காரு. அங்கே ஹேமாவும், கார்த்திக்கும் கட்டிப் புடிச்சுக்கிட்டு இருந்திருக்காங்க. மானேஜர் உடனே 'எல்லாரும் வாங்க' ன்னு கூச்சல் போட, எல்லாரும் ஓடிப் போய்ப் பார்த்தோம்.

"அங்கே ஹேமாவும், கார்த்திக்கும் அரைகுறை ஆடையோட நின்னுக்கிட்டிருந்தாங்க. எல்லாரும் பதறிப் போய் உடனே அங்கே ஓடிப் போனதால, அவங்க ரெண்டு பேருக்கும் தங்களோட உடைகளைச் சரிபண்ணிக்கக் கூட நேரம் இல்லை."

"அப்புறம்?"

"அப்புறம் என்ன? மானேஜர் கார்த்திக்கை வேலையை விட்டு அனுப்பிட்டாரு. ஹேமா அதுக்கப்புறம் ஆஃபீசுக்கே வரலை. தபாலிலேயே ராஜினாமாக் கடிதத்தை அனுப்பிட்டா!"

"அடப்பாவமே!" என்றான் ஒருவன், பரிதாபத்துடன்.

"என்ன சாரதி இது? கொஞ்சம் கூடக் கூச்சம் இல்லாம, இந்தக் கதையை எல்லார்கிட்டேயும் சொல்லிக்கிட்டிருக்கே?" என்றார் சுகுமாரன், கோபத்துடன்.

"இதில எனக்கென்ன கூச்சம்? நானா தப்பு பண்ணினேன்?" என்றார் சாரதி.

"அன்னிக்கு அந்த சம்பவத்தைப் பார்த்தப்ப, எனக்கு எவ்வளவு அவமானமா இருந்தது தெரியுமா? நம்மோட வேலை செய்யற ஒத்தன் இப்படிப் பண்ணிட்டானேன்னு நினைச்சு, நான் பல நாள் அவமானமா உணர்ந்திருக்கேன். இவ்வளவு வருஷம் கழிச்சு இதை நீ ஞாபகப்படுத்தறப்ப, இப்பவும் நான் அவமானமா உணரறேன். நீ ஏதோ இதை ஒரு பெருமை மாதிரி எல்லார்கிட்டேயும் சொல்லிக்கிட்டிருக்க! சாரி, நான் கிளம்பறேன். இந்த மனநிலையில என்னால இங்க தொடர்ந்து இருக்க முடியாது" என்று எல்லோரையும் பார்த்துக் கூறி விட்டு, அங்கிருந்து வெளியேறினார் சுகுமாரன்.

குறள் 1015:
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு.

பொருள்: 
தமக்கு வரும் பழிக்கு மட்டும் அன்றி, பிறர்க்கு வரும் பழிக்கும் வெட்கப்படுவோர், நாணம் வாழும் இடம் என்று உலகத்தவர் கூறுவர்.

1016. வேண்டாம் பதவி உயர்வு!

"இத்தனை நாளா, இந்த கம்பெனியில ஒரு கிளார்க்கா இருந்துட்ட. இப்ப உனக்குப் பதவி உயர்வு கொடுத்து, உன்னை ஒரு அதிகாரியா ஆக்கி இருக்கேன். ஒரு அதிகாரிக்கு உரிய பொறுப்போட நடந்துக்கணும்" என்றார் சுந்தர் என்டர்பிரைசஸ் முதலாளி சோமசுந்தரம்.

"நிச்சயமா சார்!" என்றான் ரத்னகுமார்.

"மூத்த அதிகாரி தனசேகர் உன்னோட வேலைகளைப் பத்தி விளக்கி, உனக்குப் பயிற்சி கொடுப்பார். அவர் சொல்றபடி நடந்துக்க."

"என்னப்பா, எல்லாரும் பதவி உயர்வு வேணும்னு ஆசைப்படுவாங்க. நீ என்னன்னா, பதவி உயர்வு கிடைச்ச ஒரு மாசத்துக்குள்ள, இந்தப் பதவி உயர்வு வேண்டாம், பழையபடி கிளார்க்காவே இருக்கேன்னு சொல்றியே!" என்றார் சோமசுந்தரம்.

"இல்லை சார்! என்னால இந்தப் பொறுப்பை சரியா நிறைவேற்ற முடியும்னு எனக்குத் தோணல. கிளார்க்கா இருக்கறதே எனக்குத் திருப்தியா இருக்கு" என்றான் ரத்னகுமார்.

"உன் இஷ்டம்!"

"முட்டாளாடா நீ? கிடைச்ச புரொமோஷனை வேண்டாம்னுட்டு வந்திருக்க. பதவி உயர்வோட, அதிக சம்பளம், அதிகாரம், கௌரவம் எல்லாம் வருமே!" என்றான் ரத்னகுமாரின் நண்பன் சதானந்த்.

"எல்லாம் வரும். அதோட, தப்பான காரியங்களைப் பண்றமேங்கற அவமான உணர்வும் வரும். அதோட என்னால வாழ முடியாது!"

"ஏன் அவமான உணர்வு வரணும்?"

"இத்தனை நாளா, ஒரு கிளார்க்கா, ஆஃபீஸ்ல உக்காந்து வேலை செஞ்சுக்கிட்டிருந்தேன். அதிகாரின்னா, என்னென்ன வேலைகள் செய்யணும்னு என்னோட சீனியர் எனக்குப் பயிற்சி கொடுத்தப்பத்தான் தெரிஞ்சுது."

"அப்படி என்ன வேலைகள்? ரொம்பக் கஷ்டமான வேலைகளா?"

"அரசாங்க அதிகாரிகளைப் பல விஷயங்களுக்காக அடிக்கடி பார்க்கணும், அவங்களுக்கு லஞ்சம் கொடுத்து, எங்களுக்கு வேண்டியதைச் செய்ய வைக்கணும். எங்ககிட்ட பொருட்கள் வாங்கற கம்பெனிகள்ள இருக்கற மூத்த அதிகாரிகளுக்கு, அவங்க ஆர்டர் கொடுத்ததுக்காக, கமிஷன்ங்கற பேரில, ரகசியமா லஞ்சம் கொடுக்கணும்!"

"லஞ்சம் வாங்கறவங்கதானேடா அவமானப்படணும்? உனக்கு என்ன அவமானம் வந்தது?"

"என்னடா இப்படிச் சொல்ற? சட்டத்துக்கும், நியாயத்துக்கும் விரோதமான எந்தச் செயலைச் செய்யறதுக்கும் வெட்கப்பட வேண்டாமா? வெட்கமோ, கூச்சமோ இல்லாம, என்னால அப்படிப்பட்ட காரியங்களைச் செய்ய முடியாது."

"சரி. என்ன செய்யப் போற? ஆயுசு முழுக்க கிளார்க்காவே இருக்கப் போறியா?" என்றான் சதானந்த்.

"இல்லை. சீக்கிரமே வேற ஒரு வேலையைத் தேடிக்கப் போறேன் - இது மாதிரி சங்கடங்கள் இல்லாத வேலையை" என்றான் ரத்னகுமார்.

குறள் 1016:
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்

பொருள்: 
பெரியவர்கள் தனக்குப் பாதுகாப்பாக நாணத்தைக் கொள்வாரே அல்லாமல், இந்தப் பெரிய உலகத்தைக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.

1017. வேலை போய் விடுமோ?

எப்போதோ ஒருமுறை ஒரு திருமணத்தில் சந்தித்த தனது தூரத்து உறவினர் கோவர்த்தனன் தன் வீட்டுக்கு வந்தது, பகீரதனுக்கு வியப்பாக இருந்தது.

ஒரு வேலை விஷயமாக அந்தப் பகுதிக்கு வந்ததாகவும், பகீரதன் வீடு அங்கே இருப்பதால், அவனைப் பார்க்கலாம் என்று எண்ணி, ஒரு உறவினரிடம் அவன் விலாசத்தை வாங்கிக் கொண்டு, அவனைப் பார்க்க வந்ததாகவும் கூறினார் கோவர்த்தனன்.

சற்று நேரம் பொதுவாகப் பேசிய பிறகு, பகீரதனின் வேலையைப் பற்றிப் பேச ஆரம்பித்தார் கோவர்த்தனன்

"இருபது வருஷமா இந்த நிறுவனத்தில வேலை செய்யறீங்க. உங்க முதலாளிக்கு நீங்க நெருக்கமானவர், அப்படித்தானே?" என்றார் அவர்.

"இருபது வருஷமா வேலை செய்யறேன். உண்மையா உழைக்கிறேன். அதனால, அவர் என் மேல நம்பிக்கை வச்சிருக்காரு. நெருக்கமானவர்னு சொல்ல முடியாது" என்றார் பகீரதன்.

"அப்ப ரொம்ப நல்லதாப் போச்சு. நீங்க உங்க முதலாளிக்கு நெருக்கமானவரா இருப்பீங்களோன்னு நினைச்சேன்!"

"நல்லதாப் போச்சுன்னு ஏன் சொல்றீங்க? நெருக்கமா இருந்தா தப்பா என்ன?" என்றான் பகீரதன்.

"நீங்க அவருக்கு நெருக்கமானவரா இருந்தா, நான் சொல்லப் போறதைக் கேட்க உங்களுக்கு சங்கடமா இருக்கலாம்!" என்று பீடிகை போட்டார் கோவர்த்தனன்.

"என்ன சொல்லப் போறீங்க?"

நான் வெளிப்படையாச் சொல்லிடறேன். நான் ஒரு தொழில் ஆலோசசகர். என்னோட ஸ்பெஷலைசேஷன் பிசினஸ் இன்டலிஜன்ஸ். கம்பெனிகளுக்கு மார்க்கெட் பத்தியும், அவங்களோட போட்டியாளர்கள் பற்றியும் விவரம் சேகரிச்சுக் கொடுப்பேன்" என்றார் கோவர்த்தனன்.

அவர் மேலே என்ன சொல்லப் போகிறார் என்று அறிய விரும்பி, பகீரதன் மௌனமாக இருந்தான்.

"நான் இப்ப சந்தோஷ் இண்டஸ்ட்ரீசுக்கு ஆலோசகரா இருக்கேன்!" என்றார்.

"அவங்க எங்க போட்டியாளராச்சே!" என்றான் பகீரதன்.

"ஆமாம். உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். அவங்க ரொம்ப வேகமா வளர்ந்துக்கிட்டிருக்காங்க. உங்க வாடிக்கையாளர்கள் சில பேர் அவங்க நிறுவனத்துக்கு மாறிட்டாங்க" என்றார் கோவர்த்தனன்.

"சார்! நீங்க நான் வேலை செய்யற நிறுவனத்தோட போட்டி நிறுவனத்தோட ஆலோசகர். அதனால, இதைப் பத்தி நாம பேச வேண்டாமே! வேற ஏதாவது விஷயம் இருந்தா சொல்லுங்க!" என்றான் பகீரதன், சற்றே கடுமையான குரலில்.

"இருங்க. நான் சொல்லி முடிச்சுடறேன். சந்தோஷ் இண்டஸ்ட்ரீசோட போட்டியைச் சமாளிக்க முடியாம உங்க கம்பெனி திணறிக்கிட்டிருக்கிறது உங்களுக்குத் தெரியும். உங்க கம்பெனியால ரொம்ப நாள் தாக்குப் பிடிக்க முடியாது. எப்படியும், ரெண்டு மூணு வருஷத்தில உங்க கம்பெனியை மூட வேண்டிய நிலை ஏற்படும். அப்ப, உங்களுக்கு வேலை போயிடும். அப்புறம் என்ன செய்யறதுன்னு யோசிச்சீங்களா?"

"அந்த நிலைமை வந்தா, நான் சமாளிச்சுக்கறேன். நீங்க வேற ஏதாவது விஷயத்தைப் பத்திப் பேசறதுன்னா பேசுங்க. இல்லாட்டா..."

"கிளம்புங்கங்கறீங்க! கிளம்பத்தான் போறேன். உங்களுக்கு ஒரு ஆஃபர் கொடுத்துட்டுக் கிளம்பறேன். உங்க கம்பெனி பத்தி சில விவரங்கள் சந்தோஷ் இண்டஸ்ட்ரீசுக்கு வேணும். அந்த விவரங்களை நீங்க என் மூலமா கொடுத்தா போதும். இன்னும் ஆறு மாசத்தில, சந்தோஷ் இண்டஸ்ட்ரீஸ்ல உங்களை ஒரு உயர்ந்த பதவியில, நீங்க இப்ப வாங்கற சம்பளத்தைப் போல ரெண்டு மடங்கு சம்பளம் கொடுத்து, வேலையில எடுத்துப் பாங்க. இந்த ஆறு மாசத்திலேயும், நீங்க கொடுக்கற தகவல்களுக்காக, உங்களுக்குத் தனியாப் பணம் வாங்கிக் கொடுத்துடறேன். எல்லாம் என் மூலமா நடக்கறதால, உங்க மேல யாருக்கும் சந்தேகம் வராது. என்ன சொல்றீங்க?" என்றார் கோவர்த்தனன்.

"வீட்டுக்கு வந்த விருந்தாளியை மதிக்கணுங்கறதுக்காக இவ்வளவு நேரம் பொறுமையா இருந்தேன். தயவு செஞ்சு கிளம்புங்க,. இனிமே இங்கே வராதீங்க!" என்றான் பகீரதன், கோபத்தை அடக்கிக் கொண்டு.

"உங்க கம்பெனியை மூடப் போறது நிச்சயம். அப்புறம் உங்க குடும்பத்தை எப்படிக் காப்பாத்துவீங்கன்னு யோசிச்சுப் பாருங்க!" என்று கூறியபடியே எழுந்தார் கோவர்த்தனன்.

"நீங்க சொல்றபடியே என் கம்பெனியை மூடி, எனக்கு வேலை போய், நாங்க எல்லாரும் பட்டினி கிடந்து செத்தாலும் பரவாயில்லை. நீங்க சொல்ற மானங்கெட்ட வேலையை நான் எப்பவும் செய்ய மாட்டேன். கழுத்தைப் புடிச்சுத் தள்றதுக்கு முன்னால, நீங்களே வெளியிலே போயிடுங்க!" என்றான் பகீரதன், கோபத்துடன்.

குறள் 1017:
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.

பொருள்: 
நாணத்தை தமக்குரிய பண்பாகக் கொள்பவர், நாணத்தால் உயிரை விடுவர், உயிரைக் காக்கும் பொருட்டாக, நாணத்தை விட மாட்டார்.

1018. வேண்டாம் இந்த ஆர்டர்!

ஒரு சிறு தொழிலை நடத்திக் கொண்டிருந்த ராகவன், ஆர்டர் கேட்பதற்காக அந்த நிறுவனத்துக்குச் சென்றான்.

நிறுவனத்தின் உரிமையாளர் மூர்த்தியைச் சந்தித்துப் பேசினான். அவர் அவனுக்கு ஆர்டர் கொடுப்பதாக ஒப்புக் கொண்டார்.

மூர்த்தியைப் பார்த்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ராகவன் மனதில் ஆர்டர் கிடைத்த மகிழ்ச்சி இல்லை. மனதை ஏதோ ஒன்று உறுத்திக் கொண்டிருந்தது.

தன் அலுவலகத்துக்குத் திரும்பியதும்தான், ராகவனுக்குத் தன் மனதை உறுத்திக் கொண்டிருந்த விஷயம் என்னவென்று புரிந்தது.

மூர்த்தியை இதற்கு முன்பு எங்கோ பார்த்திருக்கிறோம் என்ற உணர்வுதான் அந்த உறுத்தலுக்குக் காரணம்.

மூர்த்தியின் நிறுவனம் பற்றி சமீபத்தில் யாரோ சொன்ன பிறகுதான், ராகவனுக்கு அந்த நிறுவனம் பற்றித் தெரிய வந்தது. அதற்குப் பிறகுதான், அவன் அவரைப் பார்க்கப் போனான். அப்படி இருக்கும்போது, அவரை இதற்கு முன் எங்கே பார்த்திருக்க முடியும்?

தன் நண்பன் பொன்ராஜுக்கு ஃபோன் செய்தான் ராகவன். பொன்ராஜ் தகவல்கள் சேகரிப்பதில் நிபுணன்.

"மூர்த்தின்னு ஒத்தர், மூர்த்தி இண்டஸ்ட்ரீஸ்னு ஒரு கம்பெனி நடத்திக்கிட்டிருக்காரு. அவரைப் பத்திக் கொஞ்சம் விசாரிச்சு சொல்லேன்!"என்றான் ராகவன்.

அன்று மாலையே, பொன்ராஜ் ராகவனுக்கு ஃபோன் செய்தான்.

"டேய்! மூர்த்தி யாரு தெரியுமா? ரெண்டு வருஷம் முன்னால ஒரு அரசு அதிகாரி ஒரு கான்டிராக்டரை ஓட்டல்ல சந்திச்சு, அஞ்சு லட்சம் ரூபா லஞ்சம் வாங்கினப்ப, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அவரைப் பிடிச்சாங்களே, ஞாபகம் இருக்கா?" என்றான் பொன்ராஜ்.

"ஆமாம். ஞாபகம் இருக்கு. அவர் பேரு கணேசமூர்த்தின்னு ஞாபகம்."

"அவரேதான். தன் பேர்ல ரெண்டாவது பாதியான மூர்த்திங்கறதை வச்சுக்கிட்டுத் தொழில் பண்ணிக்கிட்டிருக்காரு போலருக்கு!"

"நீ சொன்னப்புறம்தான் எனக்கு ஞாபகம் வருது. அப்ப, அவர் ஃபோட்டோ டிவியில வந்தது. அப்பதான் பாத்திருக்கேன். அடப்பாவி மனுஷா!" 

"அவர் பாவியா இருந்தா உனக்கென்ன? தன்னோட சொந்த கம்பெனியில ஆர்டர் கொடுக்க, உங்கிட்ட லஞ்சம் கேக்க மாட்டார்னு நினைக்கறேன்! நீ அவரோட ஆர்டரை செஞ்சு கொடுத்துட்டுப் பணத்தை வாங்கிக்கிட்டுப் போய்க்கிட்டே இரு!" என்றான் பொன்ராஜ்.

"இல்லைடா! அப்ப அவரோட வீடியோ தமழ்நாடு முழுக்கப் பரவிடுச்சு. கையும் களவுமா மாட்டிக்கிட்டாரு. வேலையை விட்டு நீக்கிட்டாங்க. கேஸ் கூட நடந்துக்கிட்டிருக்குன்னு நினைக்கறேன். அதுக்கப்புறமும், கொஞ்சம் கூட அவமான உணர்ச்சி இல்லாம ஒரு தொழிலை நடத்திக்கிட்டிருக்காருன்னா, அவர்கிட்ட நேர்மையோ, பண்போ இருக்காது. அப்படிப்பட்ட மனுஷனோட நான் எந்த வியாபாரத் தொடர்பும் வச்சுக்க விரும்பல" என்றான் ராகவன்.

குறள் 1018:
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.

பொருள்: 
வெட்கப்படவேண்டிய அளவுக்குப் பழிக்கு ஆளானவர்கள், அதற்காக வெட்கப்படாமல் இருந்தால் அவர்களை விட்டு அறநெறி வெட்கப்பட்டு அகன்று விட்டதாகக் கருத வேண்டும்.


1019. இரண்டாவது தவறு

கட்சியின் பெண் நிர்வாகி ஒருவருடன் நவநீதன் அந்தரங்க உறவில் ஈடுபட்டிருந்ததைக் காட்டிய அந்தக் காணொளி சமூகத் தளங்களில் பரவியதும். பல்வேறு தரப்பினரிடையேயும் அது பெரும் அதிர்ச்சியையும், அருவருப்பையும் ஏற்படுத்தியது.

"இவனோட அப்பா ஒரு ஒழுக்கமான மனுஷர். அவர் பணக்காரரோ, பெரிய பதவியில இருந்தவரோ இல்ல. ஆனா, அவரோட, நேர்மை, நல்லொழுக்கம், பண்பான நடத்தை இதுக்காகவெல்லாம் அவரை ஊர்ல எல்லாரும் மதிச்சாங்க. அவருக்குப் பிள்ளையாப் பிறந்தவன் இப்படியா நடந்துப்பான்?" என்பது பலரின் விமரிசனமாக இருந்தது.

"அது ஒரு போலியான காணொளி," "அது மார்ஃபிங் செய்யப்பட்டது," "அதில் இருப்பது நான் இல்லை" போன்ற நவநீதனின் விளக்கங்களை யாரும் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.

கட்சித் தலைமையின் அறிவுரைப்படி, சில மாதங்கள் எந்தச் செயல்பாட்டிலும் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தான் நவநீதன்.

ஆயினும், சில மாதங்களுக்குப் பிறகு வந்த சட்டமன்றத் தேர்தலில், நவநீதன் ஒரு வேட்பாளராக அறிவிக்கப்பட்டான்.

"ரொம்ப நாள் கழிச்சு என்னைப் பார்க்க வந்திருக்கே. என்ன விஷயம்?" என்றான் நவநீதனின் நண்பன் செல்வம்.

நண்பனின் பேச்சில் எப்போதும் இருக்கும் நட்புணர்வு இல்லை என்பதை கவனித்த நவநீதன், "சாரி! அரசியல்ல ஈடுபட்டப்புறம், உன்னை மாதிரி நல்ல நண்பர்களோட தொடர்பு விட்டுப் போயிடுச்சு. என்னோட தப்புதான். மன்னிச்சுடு" என்றான்.

"இப்ப நீ அரசியல்ல இருக்கியா, இல்லையா?"

"தேர்தல்ல நான் தோத்தப்புறம், கட்சித் தலைமை என்னை ஒதுக்கிடுச்சு. அரசியல்ல இனிமே எனக்கு எதிர்காலம் கிடையாதுன்னு நினைக்கிறேன்."

"பிசினஸ் பண்ணிக்கிட்டிருந்தியே, இனிமே அதில கவனம் செலுத்து."

"இல்லைடா. நான் பண்ணின தப்பால, என் பிசினசும் போயிடுச்சு. பழைய வாடிக்கையாளர்கள் எல்லாம் என்னைப் பார்க்கக் கூட மாட்டேங்கறாங்க. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல!"

"பணம் ஏதாவது சேத்து வச்சிருக்கியா?"

"சேர்த்து வச்சிருந்த பணத்தை எல்லாம் தேர்தல்ல எனக்கு சீட் வாங்கவும், தேர்தல் பிரசாரத்துக்காகவும் செலவழிச்சேன். இப்ப எல்லாம் போச்சு. நான் பண்ணின தப்பு இந்த அளவுக்கு என் வாழ்க்கையைச் சீரழிக்கும்னு நினைக்கல."

"எந்தத் தப்பு?"

"என்னடா ஒண்ணும் தெரியாதவன் மாதிரி கேக்கற?"

"நீ பண்ணினது ரெண்டு தப்பு. அதனாலதான் இந்த பாதிப்புக்குக் காரணம் எந்தத் தப்புன்னு கேட்டேன்! முதல் தப்பு, அந்தப் பெண்ணோட உறவு வச்சுக்கிட்டது. அந்தத் தப்பால, உன் பேர் மட்டும்தான் கெட்டுப் போச்சு. அப்பவே நீ ஒதுங்கிப் போயிருந்தேன்னா, உனக்கு இந்த அளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது. உன் ரெண்டாவது தப்புதான் உன்னோட இந்த நிலைமைக்குக் காரணம்?"

"ரெண்டாவது தப்புன்னு எதைச் சொல்ற? தேர்தல்ல நின்னதையா"

"ஆமாம். தப்புப் பண்ணிட்டு முதல்ல நீ ஒதுங்கி இருந்த. ஆனா நீ தேர்தல்ல நின்னது, தப்பு செஞ்சதைப் பத்தி உனக்கு அவமான உணர்ச்சியே இல்லைங்கற எண்ணத்தை எல்லார் மனசிலேயும் உருவாக்கிடுச்சு. நீ தேர்தல்ல தோத்ததுக்கு அதுதான் காரணம், உன் பிசினஸ் வாடிக்கையாளர்கள் உன்னை விட்டு விலகிப் போனதுக்கும் அதுதான் காரணம்" என்றான் செல்வம்.

குறள் 1019:
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை.

பொருள்: 
ஒருவன் ஒழுக்கம் கெட்டால், அவன் குடும்பப் பிறப்பு கெடும்; அவனே நாணம் இல்லாது நின்றால் அவன் நலம் எல்லாம் கெடும்.

1020. அதிகாரம் செய்தவன்!

தீபாவளிக்காக உடைகள் வாங்க நாங்கள் அந்தக் கடைக்குப் போனபோது, அங்கே கூட்டம் அதிகமாக இருந்தது. கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள், விற்பனையாளரின் கவனத்தைப் பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது.

தன் மனைவியுடன் வந்திருந்த ஒரு மனிதர் மட்டும் கடை ஊழியர்களை அதிகாரம் செய்து கொண்டு, தன்னை முதலில் கவனிக்க வேண்டும் என்று சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு வழியாக, உடைகளை வாங்கிக் கொண்டு காருக்கு வந்தோம்.

காரில் வரும்போது என் கணவரிடம், "நாம இவ்வளவு பேர் பொறுமையாக் காத்துக்கிட்டிருந்தோம். ஒத்தர் மட்டும் அதிகாரம் பண்ணி சண்டை போட்டுக்கிட்டிருந்தாரே! இப்படியா நடந்துப்பாங்க?" என்றேன்.

"அவன் அப்படித்தான் நடந்துப்பான்!" என்றார் என் கணவர்.

"அவரை உங்களுக்குத் தெரியுமா?"

"எனக்கு மட்டும் இல்ல, இந்த ஊர்ல பல பேருக்குத் தெரியும். ஊர் முழுக்கக் கடன் வாங்கிட்டு, இன்சால்வன்சி கொடுத்து எல்லாரையும் ஏமாத்தினவனாச்சே அவன்!"

"அப்படியா? இன்சால்வன்சி கொடுத்தவர்னா, எப்படி இந்த மாதிரி கடைக்கு வந்து, ஆயிரக்கணக்கா பணம் கொடுத்து, உடைகள் வாங்கிக்கிட்டுப் போறாரு?"

"அவன்தான் இன்சால்வன்ட். அவன் மனைவிகிட்ட நிறையப் பணம் இருக்கே!"

"அப்படின்னா, அந்தப் பணத்தை வச்சு அவர் தன்னோட கடன்களைத் தீர்த்திருக்கலாமே!"

"இவ்வளவு அப்பாவியாவா இருப்ப? திட்டம் போட்டுத்தான் பணம், சொத்து எல்லாம் மனைவி பேர்ல இருக்கற மாதிரி செஞ்சு, தன்கிட்ட பணமோ, சொத்தோ இல்லைன்னு சொல்லிக் கடன்காரன்களை ஏமாத்தி இன்சால்வன்ட் கொடுத்தான் அவன்!"

"அடப்பாவி! இப்படி எல்லாமா பண்ணுவாங்க! வாங்கின கடனைக் கொடுக்க முடியலையேங்கற அவமான உணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாம, இப்படி நடமாடிக்கிட்டிருக்காரு. இதில, தன்னைத்தான் முதல்ல கவனிக்கணும்னு அதிகாரம் வேற!" என்றேன் நான், வெறுப்புடன்.

"இந்த கார்ல ஒரு பொம்மை கட்டி வச்சிருக்கு இல்ல? கார் ஓடறப்ப அது ஆடுதே, அதுக்கு உயிர் இருக்குன்னு அர்த்தமா என்ன? இவனை மாதிரி ஆட்கள் எல்லாம் உலகத்தில நடமாடறதும் அப்படித்தான்! ஒரு மனுஷனுக்கு மானம் போனப்புறம், அவன் வாழ்க்கையில என்ன மீதி இருக்கும்?" என்றார் என் கணவர்.

குறள் 1020:
நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று.

பொருள்: 
மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது.
             அறத்துப்பால்                                               காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...