Saturday, September 18, 2021

516. தலைவரிடமிருந்து ஒரு அழைப்பு!

த மு க கட்சித்தலைவர் செல்வேந்திரன் பொதுக்கூட்ட மேடைக்குக் காரில் வந்து கொண்டிருந்தபோது, சற்றுத் தொலைவிலிருந்தே மேடையில் பேசிக் கொண்டிருந்தவரின் பேச்சு அவர் காதில் விழுந்தது.

"காரைக் கொஞ்சம் ஓரமா நிறுத்தச் சொல்லு" என்றார் செல்வேந்திரன், முன் இருக்கையீல் ஓட்டுநருக்கு அருகே அமர்ந்திருந்த மாவட்டச் செயலாளர் பழனியிடம்.

கார் ஓரமாக நிறுத்தப்பட்டது. காரில் அமர்ந்தபடியே ஒலிபெருக்கியின் மூலம் வந்து கொண்டிருந்த பேச்சை ஆர்வத்துடன் கவனித்துக் கேட்ட செல்வேந்திரன், ஐந்து நிமிடங்கள் கழித்து,"இப்ப போகலாம்!" என்றார்.

"எதுக்கையா காரை நிறுத்தச் சொன்னீங்க?" என்றான் பழனி.

"பேசிக்கிட்டிருக்கறது யாரு?" என்றார் செல்வேந்திரன்.

"பூமணின்னு ஒரு இளைஞன். ரொம்ப ஆர்வம் உள்ள தொண்டன். படிச்ச பையன்" என்ற பழனி, "அவன் பேச்சைக் கேக்கறதுக்கா காரை நிறுத்தச் சொன்னீங்க?" என்றான் சற்று வியப்புடன்.

"ஆமாம். அவன் பேச்சு நல்லா இருந்தது. நாம அங்கே போனதும் அவன் பேச்சை நிறுத்திடுவான் இல்ல? அதான் கொஞ்ச நேரம் நின்னு அவன் பேச்சைக் கேட்டேன்."

பொதுக்கூட்டம் முடிந்ததும் செல்வேந்திரனிடம் பூமணியை அறிமுகப்படுத்தி வைத்தான் பழனி.

"நல்லா பேசற தம்பி!" என்றார் செல்வேந்திரன் சுருக்கமாக.

சில மாதங்களுக்குப் பிறகு வந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் பரிந்துரை செய்யப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல் செல்வேந்திரனிடம் வந்தபோது, பூமணியை ஒரு வேட்பாளராக மாவட்டச் செயலாளர் பழனி பரிந்துரைத்திருந்ததைப் பார்த்து விட்டு, "யார் இந்தப் பூமணி?" என்றார் செல்வேந்திரன்.

"ஐயா! நம் மாவட்டத்தில நடந்த பொதுக்கூட்டத்தில அவன் பேச்சை நீங்க கேட்டுட்டு நல்லா இருக்குன்னு சொன்னீங்களே! புதுமுகங்களுக்கு வாய்ப்புக் கொடுக்கணும்னு நீங்க சொன்னதால, இந்தத் தொகுதியில அவனை நிக்க வச்சா நல்லா இருக்கும்னு நினைச்சேன்" என்றான் பழனி.

ஒரு நிமிடம் யோசனை செய்த செல்வேந்திரன், "இப்ப வேண்டாம், பழனி. வேற சந்தர்ப்பத்தில பார்க்கலாம்" என்றார்.

அன்று பூமணியின் பேச்சைக் கேட்டுப் பாராட்டிய தலைவர் அதற்குள் அவனை மறந்து விட்டாரே என்று நினைத்துக் கொண்டார் பழனி.

"உனக்கு சீட்டு கொடுக்கணும்னுதான் நான் சொன்னேன். ஆனா தலைவர் ஒத்துக்கல" என்று பழனி பூமணியிடம் சொன்னபோது, பூமணிக்கு ஏமாற்றமாக இருந்தது.

சட்டமன்றத் தேர்தலில் த மு க வெற்றி பெறவில்லை. ஆனால் கணிசமான இடங்களைப் பிடித்து வலுவான எதிர்க்கட்சியாக வந்தது.

சில மாதங்கள் கழித்து, பூமணியைத் தலைவர் பார்க்க விரும்புவதாகக் கட்சியின் தலைமையகத்திலிருந்து பழனி மூலம் செய்தி அனுப்பப்பட்டது.

"தலைவர் என்னை எதுக்கு வரச் சொல்லி இருக்காரு?" என்றான் பூமணி வியப்புடன்.

"தலைவருக்கு உன் பேச்சு புடிச்சிருந்தது. கட்சியோட பேச்சாளர்கள்ள ஒருத்தரா உன்னை நியமிச்சு, மாநிலம் முழுக்க கட்சிக் கூட்டங்கள்ள பேச உனக்கு வாய்ப்பு கொடுக்கப் போறாருன்னு நினைக்கிறேன். அது ஒரு நல்ல வாய்ப்பு. இதை மனசில வச்சுக்கிட்டுத்தான் உனக்கு சட்டமன்றத்தில சீட்டு கொடுக்கலேன்னு நினைக்கிறேன். தலைவர் எப்பவுமே வித்தியாசமா யோசிப்பாரு. அவரு எப்ப எந்த முடிவு எடுப்பாருன்னு யாராலயும் ஊகிக்க முடியாது. ஆனா ஒத்தர்கிட்ட இருக்கற திறமையை அடையாளம் கண்டு அவருக்குச் சரியான வாய்ப்பு கொடுக்கறதில அவருக்கு நிகர் அவர்தான்!" என்றான் பழனி.

"வா, பூமணி. அன்னிக்கு உன் பேச்சைக் கேட்டேன். ரொம்ப அருமையாப் பேசின. ஆனா நீ பொருளாதரம் பத்தியும், தேசத்தோட பாதுகாப்பு பத்தியும் பேசின. அது சாதாரண மக்கள்கிட்ட எடுபடாது. சட்டமன்றத் தேர்தல்ல உனக்கு சீட் கொடுக்கச் சொல்லி பழனி சிபாரிசு செஞ்சாரு. ஆனா தேர்தல்ல மக்கள்கிட்ட பிரசாரம் பண்ணி வெற்றி பெறுவது கடினமான விஷயம். உனக்கு அது சரியா வராதுன்னுதான் உனக்கு சீட் கொடுக்கல. தேசிய அளவிலான பிரச்னைகளைப் பேச நம்ம கட்சியில சரியான நபர் இல்லேங்கற குறை எனக்கு ரொம்ப நாளா உண்டு. இப்ப வரப் போற மாநிலங்களவைத் தேர்தல்ல நம்ம கட்சிக்கு ஒரு இடம் உறுதியாக் கிடைக்கும். அதுக்குப் பல மூத்த தலைவர்கள் போட்டி போடறாங்க. ஆனா அந்த சீட்டை உனக்குக் கொடுக்க முடிவு செஞ்சிருக்கேன். உன்னுடைய சிறப்பான பேச்சு மாநிலங்களவையில் ஓங்கி ஒலித்து நம் கட்சிக்குப் பெருமை சேர்க்கட்டும்!" என்றார் செல்வேந்திரன்.  

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 52
 தெரிந்து வினையாடல்

குறள் 516:
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.

பொருள்:
செயலாற்ற வல்லவனைத் தேர்ந்து, செய்யப்பட வேண்டிய செயலையும் ஆராய்ந்து, காலம் உணர்ந்து அதைச் செயல்படுத்த வேண்டும்.
 அறத்துப்பால்                                                                              காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1061. ஏன் உதவி கேட்கவில்லை?

"இன்னும் ஒரு வாரத்தில ஆபரேஷன் பண்ணணும்!" என்றார் டாக்டர். "முடிவு பண்ணிட்டுச் சொல்லுங்க!" டாக்டரின் அறையிலிருந்து வெளியே...