Friday, September 10, 2021

513. மன்னரின் தேர்வு

"அமைச்சரே! நம் தனாதிகாரி வயது மூப்பு காரணமாக ஓய்வு பெற விரும்புகிறார். புதிதாக ஒருவரை அந்தப் பதவியில் நியமிக்க வேண்டும். நீங்கள் யாரைப் பரிந்துரை செய்கிறீர்கள்?" என்றார் மன்னர் கீர்த்திவர்மன்.

"அரசே! பொதுவாக ஒரு பெரிய செல்வந்தரை இந்தப் பதவிக்கு நியமிப்பதுதான் வழக்கமாக இருந்திருக்கிறது. ஆனால் தகுதி அடிப்படையில் ஒருவரை நியமிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். தாங்கள் இதை ஏற்றுக் கொண்டால் குறிப்பிட்ட சில தகுதிகளின் அடிப்படையில் ஒருவரை நியமிக்கலாம்" என்றார் அமைச்சர்.

"என்ன அந்தத் தகுதிகள்?"

"அரசே! தனாதிகாரியாக இருப்பவருக்கு சிறந்த அறிவுத்திறன் இருக்க வேண்டும். மக்களிடம் வரி வசூலிக்கும் பொறுப்பு அவருக்கு இருக்கிறது. கருணை அடிப்படையில் சிலருக்கு வரி விலக்கு அளிக்க அவருக்கு அதிகாரம் இருக்கிறது. எனவே யாரிடம் கடுமையாக நடந்து கொள்வது, யாரிடம் கருணை காட்டுவது என்பது பற்றிய தெளிவு அவரிடம் இருக்க வேண்டும். அத்துடன் பெருமளவில் நிதியைக் கையாள்வதால், அவர் பொருளாசை அற்றவராகவும் இருக்க வேண்டும்."

"சரி. அத்தகைய தகுதி உள்ளவரை எப்படிக் கண்டறிவது?"

"நம் அரண்மனையில் பணி புரிவர்களில் இந்த இயல்புகள் உள்ள சிலரை நான் அடையாளம் கண்டு அவர்களில் மூன்று பேரைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அந்த மூன்று பேரில் ஒருவரை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்."

"சரி. நாம் இருவரும் சேர்ந்தே ஒருவரைத் தேர்ந்தெடுப்போம். அந்த மூவரையும் வரச் சொல்லுங்கள்" என்றார் அரசர்.

மூவரையும் அழைத்துப் பேசியபின், "அமைச்சரே! மூவருமே எளிமையான குடும்பத்திலிருந்து வந்தவர்களாக இருக்கிறார்களே!" என்றார் மன்னர்.

"அதுதான் துவக்கத்திலேயே சொன்னேன் அரசே! தனாதிகாரியாக ஒரு செல்வந்தரை நியமிப்பதுதான் நடைமுறை, ஆனால் தகுதி அடிப்படையில் நியமிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று..." என்றார் அமைச்சர் தயக்கத்துடன்.

"உங்கள் யோசனையைத்தான் நான் ஏற்றுக் கொண்டு விட்டேனே அமைச்சரே! எப்போதும் இருப்பது போல் இல்லாமல் இந்த முறை தனாதிகாரி ஒரு எளிய குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கப்போகிறார் என்பதைக் குறிப்பிட்டேன். அவ்வளவுதான். மூன்றாவதாக வந்த நபர் சிறந்த தேர்வாக இருப்பார் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"

"என் தேர்வும் அவர்தான் மன்னரே!" என்றார் மகிழ்ச்சியுடன்.

"அப்படியானால் அவரையே நியமித்து விடலாம். இந்தப் பதவியை எதிர்பார்த்திருந்த சில செல்வந்தர்கள் ஏமாந்து போவார்கள்! அதற்கு என்ன செய்வது?" என்றார் மன்னர் சிரித்துக் கொண்டே.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 52
 தெரிந்து வினையாடல்
குறள் 513 
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.

பொருள்:
அன்பு, அறிவு, தெளிவுடன் கூடிய செயல்திறன், அவா இல்லாமை ஆகிய நான்கு பண்புகளும் சிறப்பாக அமைந்தவரையே  தேர்வு செய்ய வேண்டும்.
                                                                         குறள் 512                                                                          
                                                                                                                                                அறத்துப்பால்                                                     காமத்துப்பால்

No comments:

Post a Comment

1062. கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்!

செல்வகுமார் தன் மனைவி கோமதியுடன் காரில் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது வழக்கம் போல் காரில் பழைய திரைப்படப் பாடல்களைப் போட்டுக் கேட்டுக்...