Tuesday, September 7, 2021

511. முதல்வர் செல்லும் வழி

"இது வீட்டிலேந்து தலைமைச் செயலகத்துக்குப் போற வழி. இது கட்சி அலுவலகத்துக்குப் போற வழி. நீங்க அப்ரூவல் கொடுத்தப்பறம் அந்த வழிகளை கிளியர் பண்ணிடுவோம்" என்றார் பாதுகாப்பு அதிகாரி.

"கிளியர் பண்றதுன்னா?" என்றார் முதல்வர் தமிழ்மணி. அவர் அன்றுதான் முதல்வராகப் பதவி ஏற்றுக் கொண்டிருந்தார்.

"சாலையை ஒழுங்குபடுத்துவோம்."

"ஒழுங்குபடுத்தறதுன்னா, பழுது பார்க்கறதா?"

"சில இடங்களில பழுது பார்க்க வேண்டி இருக்கலாம். அதைத் தவிர சில சாலைகளில் இருக்கிற நடைபாதைக் கடைகளை அப்புறப்படுத்திடுவோம்" என்றார் பாதுகாப்பு அதிகாரி, சற்றுத் தயக்கத்துடன்.

"சரி. இதில எங்கெங்கெல்லாம் நடைபாதைக் கடை வருதுன்னு காட்டுங்க!" என்றார் தமிழ்மணி.

பாதுகாப்பு அதிகாரி வரைபடத்தில் சில இடங்களைக் காட்டினார்.

"சரி. வேற வழியாப் போக முடியுமா, நடைபாதைக் கடைகள் இல்லாத சாலைகள் வழியா?"

"போகலாம் சார். ஆனா மூணு கிலோமீட்டர் அதிகம் ஆகும்" என்றார் பாதுகாப்பு அதிகாரி.

தமிழ்மணி யோசனை செய்வது போல் சில விநாடிகள் மௌனம் காத்தார்.

அவர் அருகிலிருந்த முதல்வரின் தனிச் செயலர், "சார்! நடைபாதைக் கடைகளை அகற்றுவதற்காக திட்டம் போட்டு ஒரு கமர்ஷியல் காம்ப்ளக்ஸ் கட்டி அதில அந்தக் கடைகளுக்கு இடம் கொடுக்கிற திட்டம் இருக்கு" என்றார்.

"தெரியும். தலைவர் அமைச்சரவையில நகர்ப்புறத் துறை அமைச்சரா இருந்தப்ப நான் போட்ட திட்டம்தான் அது. அப்புறம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, நம்ம திட்டங்கறதால அவங்க அதைக் கிடப்பில போட்டுட்டாங்க!" என்றார் தமிழ்மணி.

"இப்ப நாம அதை விரைவா நிறைவேற்றிடலாமே சார்!"

"நிறைவேற்றிடலாம். ஆனா அதுக்கு ரெண்டு வருஷமாவது ஆகும். நடைபாதையில கடை வச்சிருக்கறவங்களை இப்ப அங்கேருந்து வெளியேற்றினா அதுவரையிலும் அவங்க என்ன செய்வாங்க? வேண்டாம். அவங்களுக்கு எந்த பாதிப்பும் வேண்டாம்" என்று தனிச் செயலரிடம் கூறிய தமிழ்மணி, பாதுகாப்பு அதிகாரியைப் பார்த்து, "அந்த இன்னொரு வழியிலேயே போற மாதிரி ஏற்பாடு செஞ்சுடுங்க. ஆனா அங்கேயும் ஒரு கடையைக் கூட அப்புறப்படுத்தக் கூடாது, யாருக்கும் எந்த பாதிப்பும் வரக் கூடாது!" என்றார்.

"செய்யலாம் சார்" என்றார் பாதுகாப்பு அதிகாரி 

"சார்! அரசாங்கத்தோட பொருளாதார நிலை மோசமா இருக்கறதால செலவுகளைக் குறைச்சு சிக்கனமா இருக்கறதா சொல்லி இருக்கீங்க..." என்றார் தனிச் செயலர் தயக்கத்துடன்.

"நான் போகும்போது பாதுகாப்பு வாகனங்கள் வேற வரும். மூணு கிலோமீட்டர் அதிகமான வழியில போறதால பெட்ரோல், டீசல் செலவு கணிசமா அதிகமாகும்னு சொல்றீங்க! அதுதானே?" என்றார் தமிழ்மணி.

"ஆமாம் சார்! அதோட ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் இதைக் குற்றம் சொல்லிப் பேசுவாங்க."

"அவங்க பேசினாலும், பேசாட்டாலும், செலவு அதிகரிக்குங்கறது உண்மைதானே?" என்ற தமிழ்மணி, பாதுகாப்பு அதிகாரியைப் பார்த்து, "பாதுகாப்பு வாகனங்கள் எவ்வளவு வரும்?" என்றார்.

"ஒன்பது."

"ஒன்பதுங்கறது அதிர்ஷ்ட எண்ணா? அதை ஆறாக் குறைச்சுடுங்க. பெட்ரோல் செலவு முன்னை விட இன்னும் குறைவாகவே ஆகும்!" என்றார் தமிழ்மணி சிரித்துக் கொண்டே.

"செய்யலாம் சார்! ஆனா..." என்று இழுத்தார் பாதுகாப்பு அதிகாரி.

"பாதுகாப்பு முக்கியம்தான். ஒன்பது வாகனங்களுக்கு பதிலா பன்னிரண்டு வாகனங்கள் இருந்தா இன்னும் அதிகப் பாதுகாப்பு இருக்கும்தான்! ஒன்பது வாகனங்கள் கொடுக்கற பாதுகாப்பு போதும்னு நினைக்கிறோம் இல்ல? அதை இன்னும் கொஞ்சம் மாத்தி ஆறு வாகனங்கள் கொடுக்கிற பாதுகாப்பு போதும்னு நினைப்போம்,. அவ்வளவுதான்!" என்றார் முதல்வர் தமிழ்மணி.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 52
 தெரிந்து வினையாடல்
குறள் 511
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.

பொருள்:
ஒரு செயலின் நன்மை தீமை இரண்டையும் ஆராய்ந்து எது நன்மையோ அதையே செய்ய வேண்டும்.
                                                                         குறள் 510
                                                                                                                                                அறத்துப்பால்                                                     காமத்துப்பால்

No comments:

Post a Comment

1061. ஏன் உதவி கேட்கவில்லை?

"இன்னும் ஒரு வாரத்தில ஆபரேஷன் பண்ணணும்!" என்றார் டாக்டர். "முடிவு பண்ணிட்டுச் சொல்லுங்க!" டாக்டரின் அறையிலிருந்து வெளியே...